செப்டம்பர் மாதம் 12-ம் நாளே கோவா தா ஈரியாவுக்குச் செல்லும் பாதைகள் எல்லாம் மக்கள் கூட்டம்; அன்று இரவை அவர்கள் திறந்த வெளியிலேயே கழித்தனர். மறுநாள் சூரிய உதயத்தில் பார்த்தால் இன்னும் கூட்டம் அதிகரித்து வந்தது.
பெருங்கூட்டமான மக்கள் இக்குழந்தைகளைக் காணும்படி காலையிலேயே அல்யுஸ்திரலுக்குச் சென்றார்கள். ஜெபமாலையும் மாதா பிரார்த்தனையும் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. குழந்தைகள் புறப்பட்டுச் செல்வதே கடினமாயிருந்தது. அல்யுஸ்திரலிலிருந்து கோவா தா ஈரியாவுக்குச் செல்லும் வழியெங்கும் ஜன நெருக்கம்; நடந்து செல்வதே சிரமமாயிருந்தது.
எல்லோரும் குழந்தைகளைக் காணவும், அவர்களுடன் பேசவும் விரும்பினார்கள். கூட்டத்தை நெரித்துக்கொண்டு சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்கள் கூட குழந்தைகள் முன் முழங்காலிட்டு, தங்கள் விண்ணப்பங்களைத் தேவ அன்னைக்குத் தெரிவிக்கும்படி கேட்டனர். மக்களின் துன்பங்களையயல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல் வதுபோல் அவ்விண்ணப்பங்கள் ஒலித்தன.
சிலர் குழந்தைகளைப் பார்ப்பதற்காக மரங்களிலும், வீட்டுச்சுவர்களின் மேலும் ஏறிக் கொண்டனர். சில ஆண்கள் குழந்தைகளுக்குக் கூட்டத்தில் வழி உண்டாக்கிக் கொடுத்து, அழைத்துச் சென்றனர். இதுபற்றி லூஸியா இவ்வாறு எழுதியுள்ளாள்:
“நமதாண்டவர் பாலஸ்தீனா நாட்டில் நடந்து சென்றபோது நிகழ்ந்த அரிய சம்பவங்களை இப்போது நான் புதிய ஏற்பாட்டில் வாசிக்கையில், நான் சிறுமியாயிருந்தபோதே தேவ அன்னையால் அல்யுஸ் திரலிலிருந்து கோவா தா ஈரியாவுக்குச் செல்லும் எளிய தெருக் களிலும், பாதைகளிலும் காணக் கொடுத்துவைத்தவற்றை நினைக்கிறேன். நம் நல்ல போர்த்துக்கீசிய மக்களின் விசுவாசத்தை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, அவருக்கு நன்றி கூறுகிறேன்.
கடவுளின் அன்னையுடன் பேசும் வரம் இரக்கமாய்க் கிடைத்ததற்காக மூன்று குழந்தைகள் முன் தங்களை இவ்வளவு தாழ்த்துகிறார்கள் என்றால், சேசுக்கிறீஸ்துவையே இம்மக்கள் தங்கள் முன் காண்பார்களாயின் என்னதான் செய்ய மாட்டார்கள்... இறுதியாய் நாங்கள் கோவா தா ஈரியாவை அடைந்தோம். அஸின்ஹேரா மரத்தருகில் சென்றோம். அங்கு, மக்கள் கூட்டத்துடன் ஜெபமாலை சொல்ல ஆரம்பித்தேன்.”
அன்றைய கூட்டம் மிகப் பெரிதாக இருந்தது. போர்த்துக்கலின் எல்லாப் பாகங்களிலுமிருந்து திருயாத்ரீகர்கள் வந்திருந்தனர். சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் அங்கு காண முடிந்தது. சுமார் 30,000 பேர் குழுமியிருந்தனர். முப்பது குரு மாணவர்களும், ஐந்தாறு குருக்களும் வந்திருந்தனர்.
குருக்கள் சற்று உயரமான ஒரு இடத்தில் காட்சி நிகழும் மரத்தை நன்றாகக் காணக்கூடிய வசதியுடன் நின்று கொண்டனர். அவர்களுள் சங். டாக்டர் மனுவேல் நூன் போர்மிகோ என்பவர் ஒருவர். இவர் சிறந்த வேதசாஸ்திர ஆசிரியர். லிஸ்பன் நகர் பேராலய பங்குக்குரு. சான்டாரம் குரு மடத்தில் பாடம் நடத்தி வந்தார். கல்விக்கும், நேர்மைக்கும் போர்த்துக்கல் முழுவதும் பெயர் பெற்றிருந்தார். இவர் இக்காட்சிகளைப் பற்றி உண்மையை ஆய்ந்து கூறும்படி உத்தரவு பெற்று வந்திருந்தார்.
எங்கு திரும்பினாலும் ஒரே மக்கள் திரளாகவே காணப்பட்டது. பகல் மணி பன்னிரண்டு ஆகியது. எங்கும் நிசப்தம்! சில ஜெப முனகல்கள் தவிர ஒரே அமைதி! வானம் முழு நீலமாயிருந்தது. ஒரு சிறு மேகம் கூட காணப்படவில்லை.
ஆனால் சூரியனின் ஒளி மங்கத் தொடங்கியது. ஆகாயம் ஒருவித பொன்னிறத்தில் காணப்பட்டது. ஒளி எவ்வளவு குறைந்து விட்டதென்றால் நட்சத்திரங்கள் கூட தென்பட்டன! ஒவ்வொரு மாதம் 13-ம் தேதியிலும் நிகழ்ந்து வந்த இந்த அதிசயத்தை ஜனக்கும்பல் பார்த்துக் கொண்டேயிருந்தது.
திடீரென மகிழ்ச்சி ஒலிகள் கேட்டன. “அதோ, அதோ!” என்று ஆயிரக் கணக்கான விரல்கள் வானத்தில் எதையோ சுட்டிக் காட்டின. “உனக்குத் தெரியவில்லையா?” “அதோ, அதோ பார்!” “ஆம்! தெரிகிறது! வெண்மேக உருண்டை தெரிகிறது!” இப்படிப் பல பல குரல்கள் ஒலித்தன.
ஒரு உருண்டை வடிவமான வெண்மேகம் கிழக்கிலிருந்து புறப்பட்டு கம்பீரமாக ஆகாயத்தில் நீந்தி கீழே மெதுவாக இறங்கி, மேற்கு நோக்கி வந்தது. அந்த மேகம் குழந்தைகள் மூவரும் இருந்த அஸின்ஹேரா மரத்தின் மீது இறங்கியது. பல ஆயிரம் கண்கள் அதைப் பார்த்தன. ஆனால் வேறு பலர் ஒன்றையும் காணவில்லை.
அதே சமயத்தில் வானத்திலிருந்து மழை பொழிவது போல் வெண்மலர்களும், இதழ்களும் பொழியப்பட்டன. ஆனால் தரையில் விழுமுன் அவை மறைந்து போயின. பலர் தங்கள் தொப்பிகளில் அவற்றைச் சேகரிக்க முயன்றும் ஒன்றும் அகப்படவில்லை.
இந்த மலர் மழை இதற்குப் பிறகும் பல சந்தர்ப்பங்களில் திருயாத்திரை வேளைகளில் இதே போல் பொழியப்பட்டதைத் திருப்பயணிகள் கண்டிருக்கின்றனர். லெயிரியா ஆயரும் தம் கண்ணால் இதனைக் கண்டிருக்கிறார்.
அஸின்ஹேரா மரத்தில் இறங்கிய வெண்மேக உருண்டையில் தேவ அன்னை நம் சிறுவர்களுக்குத் தோன்றினார்கள். அவர்களின் இனிய காட்சியாலும், மதுர மொழியாலும் அம்மூவரும் பரவசமாயினர். இந்த ஐந்தாம் காட்சிதான் மற்ற எல்லாக் காட்சிகளை யும்விட சுருக்கமானதாயிருந்தது.
குழந்தைகளை மிகுந்த அன்புடன் பார்த்து, நம் தேவ அன்னை கூறினார்கள்:
“இந்தப் போர் முடிவடையும்படி தொடர்ந்து ஜெபமாலை சொல்லி வாருங்கள். அக்டோபர் மாதம் நமதாண்டவரும், வியாகுல அன்னையும், கார்மேல் மாதாவும் இங்கு வருவார்கள். உலகத்தை ஆசீர்வதிக்க அர்ச். சூசையப்பர் குழந்தை சேசுவுடன் தோன்றுவார். உங்களுடைய பரித்தியாகங்களால் கடவுள் மகிழ்கிறார். ஆனால் அந்தக் கயிற்றோடு நீங்கள் உறங்குவதை அவர் விரும்பவில்லை. அதைப் பகலில் மட்டும் அணிந்து கொள்ளுங்கள்.”
தேவ அன்னை இவ்வாறு பேசியபின் லூசியா, மக்கள் அவளிடம் கேட்டுக்கொண்ட விண்ணப்பங்களைக் கூறினாள். அதற்கு நம் அன்னை மறுமொழியாக, “அவர்களில் சிலரைக் குணப்படுத்துவேன். மற்றவர்களை அல்ல. அக்டோபர் மாதம் எல்லோரும் நம்பும்படி ஓர் அற்புதத்தைச் செய்வேன்” என்றார்கள்.
லூஸியாவின் பக்கத்திலிருந்த யாரோ ஒரு சிறுமி லூஸியாவிடம் ஒரு யூ டி கொலோன் பாட்டிலை (வாசனைத் திரவியப் புட்டி) கொடுத்து, அதை மாதாவுக்குக் கொடுக்கும்படி கேட்டாள். லூஸியாவும் அதை வாங்கி மாதாவிடம் நீட்டினாள். அதற்கு நம் அன்னை, “இது பரலோகத்தில் தேவைப்படாது” என்றார்கள்.
இதன்பின் மாதா செல்ல எழுந்தார்கள். லூஸியா கூட்டத்தைப் பார்த்து, “அவர்களைக் காண வேண்டுமானால், அதோ பாருங்கள்” என்று கூறி, “அதோ அவர்கள் போகிறார்கள், மேலே போகிறார்கள்” என்றாள். அந்த வெண்மேகம் எழுந்து வானில் மறைந்தது.
இந்த ஐந்தாம் காட்சியால் குழந்தைகள் மூவரும் அதிக திடம் பெற்றார்கள். மிகுந்த ஆறுதலும் அடைந்தார்கள். மேலும் இரவு உறங்கும்போது அந்தக் கயிற்றை எடுத்து விடும்படி அன்னை கூறியது அவர்களுக்கு உண்மையிலே பெரும் விடுதலைதான். எல்லாவற்றையும் விட பிரான்சிஸுக்கு மகிழ்ச்சியளித்தது என்னவென்றால் அடுத்த மாதம் நமதாண்டவர் தோன்றுவார் என்று அம்மா கூறிய செய்திதான்! “சபாஷ்! ஒரே ஒரு மாதம்தான்! அவரை நான் எப்படி நேசிக்கிறேன்!” என்று மிகவும் குதூகலத்துடன் அவன் கூறினான்.
ஐந்தாம் காட்சியைப் பார்க்க வந்தவர்களில் அதிசங். ஜான் குவாரெஸ்மாவும் ஒருவர். இவர் லெயிரியா மேற்றிராசன அதிசிரேஷ்டர் (N.G.) தேவ அன்னையைக் காண முடியாவிட்டாலும், அவர்களை பூமிக்குக் கொண்டு வந்த மேக இரதத்தை, அந்த வெண் உருண்டை மேகத்தை, அவர் கண்டார்.
அது தமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்று அவர் கருதினார். ஏனெனில் கூட்டத்தில் அநேகருக்கு அந்த மேகம் கூட காணப்படவில்லை. வானிலிருந்து பொழியப்பட்ட வெண் மலர்களையும் இவர் கண்டார். இந்தக் காட்சிகளைக் கண்டதால் தாம் மிக மிக மகிழ்வுற்றதாகவும், கூட்டத்தில் அநேக மக்களும் அவற்றைக் கண்டதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இக்காரியங்களை ஆராய்ந்து கூறும்படி அனுப்பப் பட்டிருந்த சங். டாக்டர் மனுவேல் நூன் போர்மிகோ மேக உருண்டையையோ, மலர்ப் பொழிவையோ காணவில்லை. செப்டம்பர் 13 நண்பகலில் அம்மாபெரும் கூட்டத்துடன் இவரும் நின்றார். சூரிய ஒளி மங்கியதைக் கவனித்தார். ஆனால் அது, கோவா தா ஈரியா கடல்மட்டத்துக்கு மேல் அரை மைல் உயரம் இருந்ததால் ஏற்பட்ட ஆகாய மாற்றம் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்.
தர்மத்தினுடைய கண்ணாடியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.