அன்பின் அரசர் - முதல் பதிப்பின் முகவுரை

இந்தப் புத்தகம் முதல் தடவையாக பிரெஞ்ச் மொழியில் வெளிவந்தது. அதைப் பற்றி நாம் அறிய வேண்டிய காரியம் அடுத்த பக்கத்தில் காணப்படுகிறது. அதன் பின் இஸ்பானிய மொழியிலும், ஆங்கிலத்திலும், இதர மொழிகளிலும் முறையே இது பிரசுரிக்கப் பட்டது.

நூலில் உள்ள விஷயங்கள் மெய்யாகவே இருதயத்தைக் கவர்ந்து, நமது ஆண்டவராகிய சேசுநாதர் மட்டில் நம் உள்ளங்களில் அன்பின் தாகத்தை உண்டுபண்ணி, அவருக்காக நமது உயிரையே கையளிப்பதற்கு நம்மை ஏவித் தூண்டக்கூடியவை என்பதில் சந்தேக மில்லை.

ஆதலால், நமது தமிழ்க் கத்தோலிக்கர்களும் இதன் பயனை அடைய வேண்டும் என்ற ஆவல் கொண்டு, இதைத் தமிழில் எழுதித் தரும்படி நமது நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டார். ஆங்கிலப் பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது. கிறீஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதி கொள்ளவும், குருக்கள் தெய்வீக அரசரைப் பற்றிப் போதிக்கவும் இந்நூல் சிறந்த சாதனமாயிருக்கும் என்று நம்புகிறோம். குருக்கள், கன்னியர்கள், இல்லறத்தார் எல்லோரும் ஞான வாசகமாகப் பயன்படுத்துவதற்கு உகந்த நூல் இது.

இதிலுள்ள போதகங்களைப் பிரசங்கித்த சங். மத்தேயோ சுவாமியவர்களே இவ்வருடம் (1939) ஆகஸ்ட் மாதம் நமது நாட்டுக்கு வரப் போகிறார்; ஆதலால் இதை வெளியிடுவதற்கு இது தகுந்த சமயமென்று எண்ணுகிறோம். அன்பின் அரசர், அவரது முயற்சியையும், நமது ஒத்துழைப்பையும் ஆசீர்வதிப்பாராக!

25.7.1939
St. Joseph's Church,
Dindigul.