தலையான அப்போஸ்தலராகிய அர்ச். இராயப்பர் யூதேயா தேசத்திலுள்ள கலிலேயா நாட்டில் பெத்சாயிதா என்ற நகரத்தில் எபிரேய கோத்திரத்தில் யோனா என்பவரிடத்தில் பிறந்து சீமோன் என்று பெயரிடப்பட்டிருந்தார்.
அவருடைய தமையனாகிற அர்ச். அந்திரேயா என்கிறவர் அர்ச். ஸ்நாபக அருளப்பர் சொன்ன வார்த்தையைக் கொண்டு சேசுநாதர் உலகத்தை இரட்சிக்கிறவர் என்று அறிந்து, தமது தம்பியாகிய சீமோன் என்பவரையும் அவரிடத்தில் அழைத்துக்கொண்டு போனார்.
கர்த்தர் அவரைக் கண்டவுடனே தாம் இனி ஸ்தாபிக்கப்போகிற தமது திருச்சபையாகிய ஞான மாளிகைக்குத் தாமே எப்போதும் காணப்படாத அஸ்திவாரக்கல்லாய் இருந்தாலும், அவரைத் தமது இடமாகக் காணப்படும் அஸ்திவாரக்கல்லாக ஸ்தாபிக்கச் சித்தமாகி, அவர் கொண்டிருந்த சீமோன் என்னும் முந்தின பெயரை மாற்றி கெபாஸ் அதாவது இராய் அல்லது கல் என்று பெயரிட்டார்.
பின்னும் சேசுநாதர் அவரைத் தம்முடைய சீஷனாகச் சேர்த்துக்கொண்ட பின், அர்ச். மத்தேயு 16-ம் அதிகாரம், 16 முதல் 19 வரையிலான வசனங்களில் கண்டிருக்கிறபடி, திவ்விய கர்த்தர் தேவசுதனென்று, இராயப்பர் பிரத்தியட்சமாய் வெளிப்படுத்தின விசுவாச உச்சாரணத்தைக் கேட்டு, கர்த்தர் அவரைப் புகழ்ந்து கொண்டாடி: நீ இராயாயிருக்கிறாய்; இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும் என்று சொல்லி, அவரைத் தமது திருச்சபைக்கு அஸ்திவாரக் கல்லாகவும், அதன்மேல் பூரண அதிகாரமுள்ளவராகவும் நியமித்தார்.
மேலும் திவ்விய கர்த்தர் மரித்து உயிர்த்தபின், அர்ச். அருளப்பர் 21-ம் அதிகாரம் 16-ம், 17-ம் வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடியே, தம்முடைய ஞான மந்தையாகிய திருச்சபையை மேய்க்கும்படி அர்ச். இராயப்பருக்கு அதிகாரங்கொடுத்து அதை அவரிடத்தில் ஒப்புவித்தார்.
அர்ச். இராயப்பர் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்ட திருச்சபையின் ஆளுகையை எப்படி நடத்திவந்தாரென்று அப். நடபடி ஆகமத்தில் கண்டு கொள்ளலாம்.
அப்படியே அவர் சில வருஷகாலம் ஜெருசலேமிலும், சுற்றுப்புறங்களிலும் போய்த் திருச்சபையை விசாரித்துவந்தபின், அந்தியோக்கியாவில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்து 25 வருஷம் திருச்சபையை ஆண்டுநடத்தினார்.
அவ்விடத்தில் இருக்கும்போது கர்த்தர் அவதாரம் 44-ம் வருஷத்தில் தமது முதல் நிருபத்தையும், அவர் உரோமையில் மரணமான வருஷமாகிய 66-ம் வருஷத்தில் தமது இரண்டாம் நிருபத்தையும் எழுதித் தந்தார்.
கடைசியாய் வேத விரோதியாகிய நெரோன் என்னும் கொடிய இராயனால் தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டு வேதசாட்சியானார்.