இந்தப் புத்தகத்தில் உள்ளவையெல்லாம் சங். மத்தேயு சுவாமி பேசினார். அவர் அதை எழுதவில்லை என்பதை நீங்கள் முதன்முதல் அறிந்திருக்க வேண்டும். மத்தேயோ சுவாமி சொன்ன போதகங் களைக் கேட்டுக் கொண்டிருந்த துறவிகள், குருக்கள், கன்னியர்கள், விசுவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிரியப்பட்டதைத் தங்கள் சொந்தப் பயனை முன்னிட்டு குறித்து வைத்திருந்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல, இந்தக் குறிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாய், ஓர் ஆளிட மிருந்து மற்றவர்கள் கைக்குச் சென்று, பகிரங்கமாகிக் கடைசியாய் அச்சில் பதிக்கப் பெற்றன. இது சுவாமியாருக்குத் தெரியாமலே நடந்து வந்தது. இந்த வெளியீடுகளுக்கெல்லாம் மூல காரணம் என்ன வென்று பின்வரும் உதாரணம் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டும்.
சங். மத்தேயோ சுவாமியார் இடைவிடாது செய்து வந்த வேலையால் களைத்து பலவீனப்பட்டு சற்று இளைப்பாறும்படி 1917-ம் ஆண்டில் பார-லே-மோனியாவுக்குப் போனார். அவர் தாமே அதைப் ""பரிசுத்த ஸ்தலம்'' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அங்கே போய் இளைப்பாறலாம் என்று அவர் நினைத்தது தப்பித மாயிற்று. அங்கு எப்போதும் திருயாத்ரீகர்கள் உண்டு. அவர்கள் அவரது பலவீனத்தைக் கவனியாமல், விடுதி, வீதி, கோவில் என்று அவரை எங்கே பார்த்தாலும் சூழ்ந்து கொள்வார்கள். அவர் ஓய்வெடுக்க ட்ராப்பிஸ்ட் மடத்திற்குப் போவது நல்லதென்று ஒரு குருவானவர் சொன்னார். அந்த மடத்தில் தமக்கு ஒருவரும் பழக்க மில்லையாதலால் அமைதியாய் இளைப்பாறலாமென்ற பூரண நம்பிக்கையுடன், சுவாமி மத்தேயோ இரண்டு வாரத்துக்கு அங்கே தங்க மடத்துச் சிரேஷ்டரிடம் அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினார். மறு தபாலிலேயே அனுமதியும் வந்து விட்டது. இவர் நினைத்துப் போன அமைதி மூன்று மணி நேரம்தான் நீடித்தது! ஏனெனில் அவர் அங்கு போய்ச் சேர்ந்த அன்று சாயந்தரமே, சிரேஷ்டர் மெதுவாய் வந்து, நயந்து பேசி, ஒரு நாளைக்கு எத்தனை தடவை, எத்தனை மணிக்கு அங்குள்ள எண்பது சந்நியாசிகளுக்கும் அவரால் பிரசங்கம் செய்ய முடியும் என்று அவரைக் கேட்டார். அவர், ""எனக்குக் களைப் பாயிருக்கிறது. தவிரவும் நான் கொஞ்ச நாள் அமைதியாயிருந்து ஜெபிக்க வேண்டும்'' என்று சொல்ல, ""அது பிரச்சினையில்லை, நீங்கள் சத்தமாய்த் தியானம் செய்தால் போதும், நாங்கள் அதிகம் கேட்கவில்லை'' என்று சிரேஷ்டர் பதிலளித்தார்! சுவாமியாருக்கு உண்டான பிரமிப்பை நாமே ஊகித்துக்கொள்ளலாம். இது முடியாது என்று அவர் சொல்ல முடியவில்லை. எல்லோரும் விரும்பிக் கேட்ட தால் அன்று சாயந்தரமே ஒரு வகையான ஞான ஒடுக்கம் ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. அவர்தாமே பின்னால் சொன்னபடி ட்ராப்பிஸ்ட் சபையார் வைத்த பொறியில் அகப்பட்டுக் கொண்டார் ("ட்ராப்' என்ற ஆங்கில வார்த்தைக்குப் பொறி என்றுதான் அர்த்தம்!)
தினமும் அங்கு அவர் இரு பிரசங்கங்கள் ஆற்றினார். இவற் றின் குறிப்புகளைத் துறவிகள் எழுதி வைத்துக்கொண்டு, பல சமயங்களில் அவரோடு அவற்றைக் கலந்து பேசி, குறைவாயிருந்ததைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்; சிறிது காலம் சென்று தாங்களாகவே அந்தக் குறிப்புகளை அச்சிட்டு வெளியிட்டார்கள். ஆறு வருடங் களில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் 30,000 விற்றுத் தீர்ந்தன. ட்ராப் பிஸ்ட் சபையினர் மூன்றாவது, நான்காவது பதிப்பைத் திருத்த விரும் பியபோதுதான் இந்தப் பிரசுரத்தைப் பற்றி மத்தேயோ சுவாமிக்கே தெரிய வந்தது. லயன்ஸ், லெப்புயி, ஓர்லியன்ஸ் என்ற நகரங்களி லுள்ள மினவுதல் மடத்துக் (Visitation convent) கன்னியர்களும் தாங்கள் கேட்ட பிரசங்கங்களை இவ்வாறே குறித்து வைத்து, அச்சிட்டு வெளியிட்டார்கள். இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்விட்ஸர்லாந்து நாட்டிலுள்ள சேசுவின் திரு இருதய அரசாட்சி ஸ்தாபக அப்போஸ்தலர்களுக்கு, அவர் சொன்ன ஞானத் தியானங்களின் குறிப்புகளை ஃப்ரீபர்க் நகரத்திலுள்ள காரியதரிசி அச்சிட்டு வெளியிட்டார்; இவ்வூர் மேற்றிராணியாரோடு அந்த மேற்றிராசனம் முழுவதும் மத்தேயோ சுவாமியார் சுற்றிப் போய்ப் பிரசங்கித்தவைகளின் சாராம்சமும் இவ்வாறே வெளியிடப்பட்டது.
கடைசியாய், பலவாறான இந்தத் துண்டுப் பிரசுரங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து ஒரே புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது; எல்லாக் குறிப்புகளிலும் காணக் கிடந்த முக்கியமான போதகம் திரு இருதய சுவிசேஷமான தேவ சிநேகமாக இருந்ததன் காரணமாக, சகல குறிப்புகளையும் ஒருங்கே சேர்ப்பது தான் நல்லதெனத் தோன்றிற்று. இந்த வேலை லயன்ஸ் நகரத்தின் மினவுதல் சபை மடத்தில், கல்வி அறிவும், பக்தியுமுள்ள ஒரு குரு வானவரின் உதவியைக் கொண்டு செய்து முடிக்கப்பட்டது. இது பிரெஞ்ச் மொழியில், ""அன்பின் அரசரிடம்'' என்ற தலைப்புடன் வெளிவந்தது.
பலரும் இத்தகைய துண்டுப் பிரசுரங்களை வெளியிட ஆவலாயிருந்ததற்குக் காரணமென்ன? இந்தப் புத்தகத்தைப் பதிப் பிக்கும்படி அவர்களைத் தூண்டியது எது? மத்தேயோ சுவாமியாரின் போதகங்களில் உள்ள பின்வரும் காரியங்களே இதற்குக் காரணம்.
முதலாவது, சுவிசேஷ வசனங்களைப் போல், அவரது பிரசங் கங்கள் சிறப்பலங்காரமின்றி, வெகு சாதாரண நடையில் உள்ளன; தேவ வரப்பிரசாத வாய்க்காலாய் உதவுவதற்கு மொழியின் அலங் காரத்தையும், பேச்சின் சிறப்பையும் விட இதுவே ஆயிரம் மடங்கு அதிக நல்லது.
இரண்டாவது, இந்த சிநேக போதகமே காரணம். இது புதிதல்ல, ஆனால் பக்திமான்கள் கூட இதைச் சரியாய்க் கண்டுபிடிப் பதில்லை. இதனாலேயே, "பக்தியுள்ளவர்களுக்குக் குறைவில்லை, ஆனால் உண்மையிலும், எண்ணத்திலும் சிநேகிப்பவர்கள் குறைவா யிருக்கிறார்கள்'' என்று மத்தேயோ சுவாமியாரே சொல்கிறார். இரு தரப்பினருக்கும் வித்தியாசமில்லையென்று யார் சொல்லக்கூடும்? சிநேகத்தை நன்றாய் அறியப்பண்ணி, அதிகமாய் சிநேகிக்கச் செய் வதே சுவாமியாருக்கிருந்த ஏக ஆவல். மேற்றிராசனக் கோவிலில் பெருங்கூட்டமான விசுவாசிகளுக்குப் பிரசங்கித்தாலும், ஒரு மடத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரம் பிரசங்கித்தாலும், அவரது ஏக நோக்கம் அது ஒன்றே. சிறிய புஷ்பமாகிய அர்ச். குழந்தை சேசுவின் தெரேசம்மாள் முத்திப்பேறு பட்டமும், அர்ச்சியசிஷ்ட பட்டமும் அதிசீக்கிரமாய்ப் பெற்றது, ஆறுதலுக்குரிய இந்த போதகத்துக்கு முத்திரை வைத்தது போலாயிற்று.