நாம் சந்திக்கும் பாத்திரம் ஒரு பெண்.
இவரைப் பற்றித் திருமறை நூல் ஏதும் பேசவில்லை, நற்செய்தியாளர்கள் வாய்திறக்கவில்லை! ஆனால் பரம்பரைச் செய்திகளும் காலம் காலமாய் புழங்கி வந்த கதைகளும் இவருக்குத் தனி உலகமே படைத்து விட்டன.
இந்தப் பெண்மணியின் கருணைச் செயல் ஆறாம் தலத்திலே இடம் பெற்றுவிட்டது. மாசு மறுவற்ற இயேசுவின் திருமுகம் வியர்வை, இரத்தம் முதலியவற்றால் களங்கப் பட்டுக் கிடக்கிறது. படைவீரர்களுக்குப் பயந்து எவரும் இயேசுவை நெருங்க வில்லை. அப்போது, எவருக்கும் அஞ்சாமல் எவரையும் சட்டை செய்யாமல் வருகிறாள் ஓரு பெண். தன் கைக்குட்டையால் அவரின் திருமுகத்தைத் துடைக்கிறாள். சீமோனின் உதவிக்குப் பின் இயேசுவுக்குக் கிடைக்கும் அடுத்த உதவி இதுதான்.
இக்கைக் குட்டையில் அவர் திருமுகம் பதிந்துவிட்டதாகவும் அதுவே அவரின் மூலப் படம் என்றும் கூறுவர். அதற்குப் பிறகு அது போன்ற பல போலிகள் உலவினவாம். அதனால் ‘மூலப் படம்’ என்ற பொருளில் இலத்தீன் மொழியில் ‘veron icon’ என வழங்கலாயிற்று. இதுவே நாளடைவில், வெரோனிக்கா என அப்பெண்ணுக்கும் பெயராயிற்று! இப்பெண்ணைப் பற்றிய கதைகள் நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. இத்தாலியில் வழங்கும் கதை :
பேரரசன் திபேரியுசுவின் அழைப்பின் பேரில் இப்பெண்மணி உரோமை நகருக்கு வந்தாராம். இத்திருச் சீலையைக் கொண்டு, அங்கே அவனுடைய நோயைக் குணப்படுத்தினாராம். புனிதர்கள் பேதுருவும் பவுலடிகளும் வாழ்ந்த காலத்திலேயே இவரும் உரோமையில் வாழ்ந்தாராம். தம் கடைசிக் காலத்தில் இத்திருச் சீலையைப் பாப்பரசர் கிளமெண்ட் அவர்களுக்கும் அவர் வழித்தோன்றல்களுக்கும் விட்டுச் சென்றாராம். இன்றும் இத்திருச் சீலை உரோமை புனித பேதுரு பேராலயத்தில் உள்ளதாம். தவக்காலத்தில் மட்டும் மக்கள் வணக்கத்துக்கு வைக்கப்படுகிறதாம்.
பிரான்சில் வேறு வகையான கதை வழங்குகிறது. நற்செய்திகள் குறிப்பிடும் சக்கேயுவை இவர் மணந்துகொண்டாராம். இருவரும் பிறகு உரோமை நகர் சென்றுவிட்டார்களாம். பின்னர் இருவரும் பிரான்சு வந்தார்களாம்! அமாதூர் என்ற பெயரில் இவர் துறவியாகிவிட, அப்பெண்மணி மர்சியால் என்பவருடன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டாராம். மத்தேயு நற்செய்தி (9: 20-22) குறிப்பிடும் பெரும்போக்குள்ள பெண்ணாக இவர் இருக்கக் கூடும் என்றொரு கருத்தும் உண்டு!
இக்கதைகள் எப்படி இருந்தாலும் ஆறாம் தலம் குறிப்பிடும் இப்பெண்மணியும் பிலாத்துவின் குணத்துக்கு எதிர் குணம் கொண்டவராகத் தெரிகிறார். கோழை மனம் படைத்த அவனோ யூத குருக்களின் மிரட்டல்களுக்கு அஞ்சுகிறான், எங்கே தன் பதவிக்கு வேட்டு வைக்கப் படுமோ என நடுங்குகிறான். இப்பெண்மணியோ அத்தனை கூட்டத்திலும் படைவீரர்களுக்கு நடுவிலும் அச்சமின்றி இயேசுவுக்குப் பணிவிடை செய்கிறார்.; எத்தகைய எதிர்ப்புக்கு ஆளானாலும் நாமும் இவர் போல இயேசுவுக்குச் சார்பாகச் செயல்படுகிறோமா? செயல்படுவோமா?
இங்கே நாம் மூவகைப் பாத்திரங்களைச் சந்தித்தோம். எப்படி நாம் இருக்கக் கூடாது, செயல் படக் கூடாது, இயேசுவைக் கைவிடக் கூடாது என்பதற்குப் பிலாத்து பாத்திரம் நல்ல எடுத்துக்காட்டு. மாறாக, இயேசுவைப் பின்பற்ற வேண்டிய முறையையும் அவரை அன்பு செய்ய, அவருக்குப் பணியாற்ற எத்தகைய எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய திடத்தையும் மற்ற இரு பாத்திரங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். பிறகென்ன, சீமோனைப் போல சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின் தொடர்வோம், எவர்க்கும் அஞ்சாது வேரோணிக்காவைப் போல் அவர்க்கு அன்பு செய்வோம்.
எனவே, இத்தவக் காலத்தில் இப் பாத்திரங்களைப் பற்றிச் சிந்திப்போமே, சிந்தித்துச் செயல் படுவோமே!
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பாடுகளின் பாதையிலே வெரோனிக்கா
Posted by
Christopher