1921-ம் ஆண்டு, லூஸியா போர்ட்டோ என்னுமிடத்தில் உட்பிள்ளையாய்ச் சேர்ந்ததோடு பாத்திமா சம்பவம் முடிந்து விடவில்லை. அதன் பிறகுதான் பாத்திமா பக்தி அதிகரித்து வந்தது.
லெயிரியா மேற்றிராணியார் மிக மிக கவனத்துடனும் விவேகத்துடனும் நடந்து கொண்டார். ஆனால் அவர் பாத்திமாவில் அன்னை காட்சி தந்ததை எந்தக் காரணத்திற்காகவும் மறுக்கவில்லை.
ஒரு தடவை வானத்திலிருந்து மலர் இதழ்கள் மழை போல் கோவா தா ஈரியாவில் பொழியப்படுவதை அவர் நேரில் கண்டார். அதற்காக பாத்திமா பக்தியை உடனடியாகப் பிரகடனப்படுத்தி விடவுமில்லை.
லூஸியா சென்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு கோவா தா ஈரியாவில் உள்ள சிற்றாலயத்தில் ஒரு சாதாரண பூசை வைக்க அனுமதியளித்தார். அதன்பின் அதைச் சுற்றியிருந்த நிலங்களை வாங்கினார்.
அதே ஆண்டு (1921) நவம்பர் மாதம் மழை நீரைத் தேக்கி வைத்து, திருயாத்திரைக்காரர்களுக்கு உதவும்படி செய்ய சில வேலையாட்களை அனுப்பினார்.
அவர்கள் அந்த மலைப்பாங்கான சரல் பூமியில் வெட்டவும், தெள்ளிய பெரும் நீர்ச்சுனை ஒன்று கொப்பளித்துக் கொண்டு பாய்ந்து வருவதைக் கண்ட மேற்றிராணியார் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டார். இந்த நீர்ச்சுனையே இன்று அங்கு வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் பயன் படுகிறது.
1918-ல் பாத்திமாவைப் பரிகசித்த பலர், லிஸ்பன் கர்தினால் உட்பட, தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டனர். அவ்ரம் நகராட்சி மன்றம் பாத்திமா பக்தியை இன்னும் அதிக உக்கிரமாக எதிர்த்தே நின்றது. ஆயினும் அதன் எதிர்ப்பெல்லாம் மேலும் மேலும் மக்களின் விசுவாசத்தையும் பக்தியையும் தூண்டி விடவே பயன்பட்டன.
1922, மார்ச் 6-ம் நாள் கோவா தா ஈரியாவில் கட்டப்பட்டிருந்த சிற்றாலயம் 4 குண்டுகளால் தகர்த்தெறியப்பட்டது. 5வது குண்டு வெடிக்கத் தவறியதால் மாதா சுரூபமும், பீடமும் காப்பாற்றப்பட்டன. இரண்டு மாதம் கழித்து, மே 13-ம் நாள் 60,000 விசுவாசிகள் அங்கு கூடி, அந்த அவசங்கைக்குப் பரிகார முயற்சிகளும் ஜெபங்களும் ஒப்புக்கொடுத்தனர். அரசியல் தடையையும் மீறி அக்கூட்டம் இந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றியது.
1920-ம் ஆண்டு பாத்திமா காட்சிகளைப் பற்றி முடிவு செய்யும் பொறுப்பை ஏற்ற ஆயர் ஜோஸ் ஆல்வெஸ், 10 ஆண்டுகள் தீவிர குழு விசாரணை நடத்தி, தானும் எல்லாவற்றையும் ஆராய்ந்து தெளிந்து 1930-ம் ஆண்டு இறுதிக் காட்சி நாளான அக்டோபர் 13-ம் நாள், பாத்திமா காட்சிகள் உண்மை என்றும், மூன்று சிறுவருக்கு தேவதாய் காட்சி தந்ததை நம்பலாம் என்றும், தேவ அன்னைக்குத் தங்கள் தூய வாழ்வினால் மக்கள் நன்றி கூற வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் விடுத்தார்.
1931-ல் போர்த்துக்கல் மேற்றிராணிமார் அனைவரும் சேர்ந்து பாத்திமா காட்சிகள் உண்மையென ஒப்புக்கொண்டு மாமரிக்கு மகிமை செலுத்தினர். (லெயிரியா ஆயரின் முழுப் பிரகடனத்தை இறுதிக்கால யுகம் புத்தகத்தில் காணலாம்).
பாத்திமாவில் நூற்றுக்கணக்கான புதுமைகள் நிச்சயிக்கப் பட்டுள்ளன. நிச்சயிக்கப்படாத புதுமைகள் ஏராளம் நடைபெறுகின்றன.
காசம், குருடு, செவிடு, புற்று, வாதம் முதலிய பல வகைப்பட்ட நோய்கள் பூரணமாய்க் குணம் பெற்றுள்ளன. இவற்றை விட அங்கு ஆன்மீக அற்புதங்கள் மிக மிக அதிகம்.
பாவிகள் மனந் திரும்புதலும் உடைந்து சிதைந்த குடும்பங்கள் மறுவாழ்வு பெறுதலும், கடினப்பட்ட இருதயங்கள் இளகி, திருச்சபைக்குத் திரும்புதலும் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து வருகின்றன.
வாக்குத்தத்தத்தின் பெட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.