பரிசுத்த கன்னி மாமரி, தனது இரக்கத்தின் ஆடையான உத்தரியத்தின் வாயிலாக நிகழ்த்திய பல அற்புதங்களில் பின்வரும் நிகழ்வானது மிகச் சிறந்த ஒன்றாகும்.
இப்புதுமையானது 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்திலுள்ள அஸ்தபுலா என்னுமிடத்தில் நிகழ்ந்தது. இருப்புப் பாதையினை கடக்க முயன்ற இளைஞனொருவன் தொடர்வண்டியில் சிக்கி அவனது உடல் இரண்டு துண்டுகளாக்கப்பட்டது.
உடனடியாக இறந்து போக வேண்டிய அந்த மனிதன், அனைவரும் அதிசயிக்க விதத்தில் மிகவும் அற்புதமாக கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் உயிரோடிருந்தான். தன்னை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களிடம் தான் ஒரு கத்தோலிக்கன் என்றும், தன்னை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், தனது உதவிக்கு குருவானவர் ஒருவரை அழைத்து வரும்படியும் வேண்டிக்கொண்டான்.
குருவானவர் வந்து அவனுக்கு நோயில் பூசுதல் அளிக்கும் வரை அவன் சுயநினைவோடும், உயிரோடும் இருந்தான். அவன் தனது கழுத்தில் உத்தரியம் அணிந்திருந்தான்.
நமது தேவதாயார் எண்ணற்ற தனது அன்பிற்குரிய குழந்தைகளின் மரண வேளைகளில் உதவி செய்கின்றார்கள் என்பதனை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன. குறிப்பாக அவ்வான்மாக்களின் இவ்வுலக வாழ்வின் கடைசி நேரத்தில் ஆறுதல் அளித்து இறைவனிடம் மன்னிப்பினை பெற்றுத்தந்து அமைதியாக அவரிடம் கொண்டு சேர்கின்றார்கள்
கடவுளின் படைப்புகளில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பான பரிசுத்த கன்னி மாமரி, இறைவன் தன்னை நிறைத்த இரக்கத்தினை உலகின் அனைத்து ஆன்மாக்களுக்கும் பகிர்த்து அளிக்கின்றார். உத்தரியத்தினை பரிசாக அளித்து, உலகின் மிகச்சிறந்த வாக்குறுதியினை அளித்த அன்னை அதனை நிறைவேற்ற எப்பொழுதும் தவறியதில்லை என்பதனை இதுபோன்ற எண்ணற்ற அற்புதங்கள் பறைசாற்றுகின்றன.
இயேசுவுக்கே புகழ்!!!! மரியாயே வாழ்க!!!!!
நன்றி : சகோ. ஜெரால்ட்