அதிகாரம் 01
1 மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின் மேல் அன்புகூருங்கள், நேர்மையோடு ஆண்டவரைப் பற்றிச் சிந்தியுங்கள்,எளிய உள்ளத்தினராய் அவரைத் தேடுங்கள்.
2 ஏனெனில் அவரைச் சோதிக்காமல் இருக்கிறவர்கள்அவரைக் கண்டடைவார்கள்; அவர் மேல் அவநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அவர் தம்மையே வெளிப்படுத்துகிறார்.
3 நெறி கேடான சிந்தனைகள் மனிதனைக் கடவுளிடமிருந்து பிரிக்கின்றன, அவரது வல்லமை சோதிக்கப்படுமாயின் அது அறிவிலிகளை வெட்கி நாணச் செய்யும்.
4 ஏனெனில் கயமைநிறை ஆன்மாவில் ஞானம் நுழையாது, பாவத்திற்கு அடிமையாகிவிட்ட உடலில் அது குடிகொள்ளாது.
5 நம்மைப் பயிற்றுவிக்கும் பரிசுத்த ஆவி வஞ்சகத்தை விட்டு அகலும்; அறிவற்ற எண்ணங்களை விட்டு விலகும்; அக்கிரமம் அண்மையில் நெருங்கும் போதே விலகி ஒதுங்கும்.
6 ஏனெனில் ஞானம் பரிவு காட்டும் இறை ஆவி, ஆயினும் இறைவனைப் பழிப்பவனது சொற்களை அது பொறுக்காது; கடவுள் அவன் உள்ளுணர்ச்சிகளுக்கும் சாட்சியாவார், அவன் உள்ளத்தை உள்ளவாறு நோக்குபவர் அவரே, அவனது நாக்கு உரைப்பதைக் கேட்கிறார்.
7 ஏனெனில் ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது, அனைத்தையும் சேர்த்திணைக்கும் அது பேசப்படும் சொல் ஒவ்வொன்றையும் அறியும்.
8 ஆதலால் நேர்மையற்றதைப் பேசுபவன் அதன் கவனத்திற்குத் தப்ப மாட்டான், தண்டனை வழங்கும் போது நீதி அவனைத் தப்பவிடாது.
9 ஏனெனில் பொல்லாதவனின் நினைவுகள் பரிசோதிக்கப்படும், அவன் பேசிய சொற்களின் விவரம் ஆண்டவருக்கு எட்டும், அவனுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.
10 ஏனெனில் வைராக்கியமுள்ள இறைவனின் செவி அனைத்தையும் கேட்கிறது, முறைப்பாடுகளின் ஒலியும் அதற்கு மறைவானதன்று.
11 ஆதலால் பயனற்ற முறைப்பாடுகளைப்பற்றி எச்சரிக்கையாயிருங்கள், புறணிப் பேச்சினின்று உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் மறைவாய்ப் பேசிய சொல்லும் தண்டனைக்குத் தப்பாது, பொய் சொல்லும் வாயானது ஆன்மாவைக் கொல்லுகிறது.
12 நெறிதவறிய வாழ்க்கையால் சாவை ஆவலோடு தேடாதீர்கள். உங்கள் சொந்த செயல்களால் அழிவை வருவித்துக் கொள்ளாதீர்கள்.
13 ஏனெனில் சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. வாழ்வோரின் அழிவைக் கண்டு அவர் மகிழ்வாரல்லர்.
14 ஏனெனில் நிலைத்திருக்கும்படிக்கே அனைத்தையும் படைத்தார், உலகில் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை, அழிவு விளைக்கும் நஞ்செதுவும் அவற்றில் இல்லை, கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.
15 நீதி சாகாமையுடைத்து.
16 பொல்லாதவர்களோ தங்கள் சொல்லாலும் செயலாலும் சாவை வரவழைத்தார்கள்;அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள், அதனோடு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள், அவர்கள் அதன் கூட்டாளிகளாய் இருக்கத்தக்கவர்களே.
அதிகாரம் 02
1 தகுந்த யோசனையின்றி அவர்கள் தங்களுக்குள் இவ்வாறு சொல்லிக் கொள்ளுகிறார்கள்: "நம் வாழ்நாள் குறுகியது, கவலை நிறைந்தது; மனிதன் சாவுக்குப்பின் யாதொரு நன்மையும் அடையப் போகிறதில்லை, கீழுலகினின்று யாரும் திரும்பி வந்ததாக நாம் அறியோம்.
2 நாம் பிறந்ததோ தற்செயலாய் நேர்ந்தது, செத்த பிறகு இதற்கு முன் ஒரு போதும் இருந்திராதவர் போல் ஆகிவிடுவோம்; நமது உயிர்மூச்சு வெறும் புகையே, நம் பகுத்தறிவு நமது இதயத் துடிப்புகளின் தீப்பொறியே.
3 அது அவிந்தால், உடல் சாம்பலாய்ப் போகும்; உயிரோ அற்பக் காற்று போல் சிதறிப் போகும்; நமது வாழ்வு கார்மேகத்தின் நிழல் போல் கடந்துபோகும்; கதிரவனின் கதிர்களால் துரத்துப் பட்டு அதன் வெப்பத்தால் தாக்கப்படும் மூடுபனி போல் சிதறிப் போகும்.
4 காலத்தோடு நமது பெயர் மறக்கப்படும், நம் செய்லகளை யாருமே நினைக்கமாட்டார்கள்.
5 ஆம், நமக்குக் குறிக்கப்பட்ட காலம் நிழலைப் போல் கடந்து மறைகிறது, சாவுக்குப் பின் நாம் திரும்பி வருதல் இல்லை, முடிவு முத்திரையிடப்படுகிறது, எவனும் திரும்பி வருதல் இல்லை.
6 ஆதலால், தற்கால நன்மைகைளைத் துய்ப்போம், வாருங்கள்; படைப்புப் பொருட்களை நம் இளமையிலேயே பயன்படுத்திக் கொள்ள விரைவோம்.
7 விலையுயர்ந்த மதுவை நிரம்பப் பருகுவோம், நறுமணத் தைலங்களைப் பூசிக் கொள்வோம், இன்பம் என்னும் மலரைப் பறிக்காமல் விடோம்.
8 வாடிப் போகு முன்பே ரோசா மலர்களால் முடி செய்து அணிவோம், நாம் இன்புறாத இடம் எங்குமே இருக்கலாகாது.
9 நம் காமச் செயல்களை நம்மில் ஒவ்வொருவனும் செய்வானாக, சிற்றின்பத்தின் சுவடுகளை எங்கணும் விட்டுச் செல்வோம், ஏனெனில் இதுவே நம் பங்கு, இதுவே நம் பாகம்.
10 நீதிமானாகிய எளியவனை ஒடுக்குவோம், கைம் பெண்ணைக் கொடுமை செய்வோம், முதியவரின் நரை வயதையும் மதிக்கமாட்டோம்.
11 ஆனால் நமது வலிமையே நீதியின் சட்டமாய் இருக்கட்டும், ஏனெனில் வலிமையற்றது எதுவும் பயனற்றதே.
12 நீதிமானை நாம் மடக்கப் பார்ப்போம், ஏனெனில் அவன் நமக்குத் தொல்லையாய் இருக்கிறான், நம் நடத்தைக்கு அவன் பகையாளியாய் இருக்கிறான், திருச்சட்டத்திற்கு எதிராய் நாம் செய்யும் பாவங்களைக் கண்டிக்கிறான். நமது பயிற்சிக்கு எதிரான பாவங்களை நம் மேல் சுமத்துகிறான்.
13 கடவுளைப் பற்றிய அறிவு தனக்கிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறான், ஆண்டவரின் குழந்தை என்று தன்னைக் கூறிக் கொள்கிறான்.
14 நம் சிந்தனைகளின் நடமாடும் கண்டனவுரையாய் இருக்கிறான்:
15 அவனைக் காண்பதே நமக்குத் தாங்கமுடியாததாய் இருக்கிறது; ஏனெனில் அவன் நடத்தை மற்றவர்களின் நடத்தை போலில்லை, அவனுடைய போக்கே தனிப்பட்டது.
16 ஈனர்கள் என்று நம்மை அவன் எண்ணுகிறான், அசுத்தமானவை என்று நம் நெறிகளை அவன் விலக்குகிறான்; நீதிமான்களின் கடைசி முடிவை ஆவலாய்த் தேடுகிறான், கடவுள் தன் தந்தையென்று சொல்லி இறுமாந்திருக்கிறான்.
17 அவனுடைய சொற்கள் உண்மையா என்று பார்ப்போம், அவன் வாழ்வின் முடிவில் என்ன நடக்குமெனச் சோதித்தறிவோம்.
18 எனெனில், நீதிமான் கடவுளின் மகனாயின், அவனுக்கு அவர் துணை செய்வார், மாற்றார் கையினின்று அவனை விடுவிப்பார்.
19 அவனுடைய சாந்தத்தை அறிந்து கொள்ளவும், பொறுமையைச் சோதித்துப் பார்க்கவும், அவனை நிந்தை வேதனைப்படுத்திப் பார்ப்போம்.
20 வெட்கத்துக்குரிய சாவுக்கு அவனை ஆளாக்குவோம், ஏனெனில், அவன் சொற்படி அவனுக்குத் தான் கடவுளின் துணையிருக்குமே!"
21 பொல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி ஏமாந்து போயினர்; ஏனெனில் அவர்களின் தீய எண்ணமே அவர்களைக் குருடராக்கிவிட்டது.
22 கடவுளின் மறைபொருட்களை அவர்கள் அறியார்கள்; தூய வாழ்விற்குத் கைம்மாறு உண்டு என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை; மாசற்ற ஆன்மாக்களுக்குப் பரிசு கிடைக்கும் என அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
23 ஏனெனில் அழியாமைக்கென்றே கடவுள் மனிதனைப் படைத்தார், தமது காலங்கடந்த தன்மையின் சாயலாகவே அவனை உண்டாக்கினார்.
24 ஆனால் பசாசின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
25 அவன் பக்கம் சேர்கிறவர்கள் அதை நுகர்வார்கள்.
அதிகாரம் 03
1 ஆனால் நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையிலுள்ளன, வேதனை எதுவும் அவர்களைத் தீண்டாது.
2 அறிவிலிகளின் கண்களில் அவர்கள் செத்துப் போனதாகத் தோன்றினர், இம்மையினின்று அவர்கள் பிரிந்தது பெருந்துன்பமாய்க் கருதப்பட்டது,
3 நம்மிடமிருந்து அவர்கள் போனது அவர்களுக்கு அழிவென எண்ணப்பட்டது; ஆனால் அவர்கள் சமாதானத்தில் இருக்கிறார்கள்.
4 ஏனெனில் மனிதர்களுக்கு முன் பாவ வேதனையடைந்திருந்தாலும், அவர்களது நம்பிக்கையோ சாகாமையால் நிரம்பியிருக்கிறது.
5 அற்பத் துன்பமுற்ற பின் அவர்கள் மாபெரும் நன்மையடைவார்கள், கடவுள் அவர்களைப் பரிசோதித்தார், பரிசோதித்துத் தமக்கேற்ற தகுதியுடையவர்கள் எனக் கண்டார்.
6 பொன்னை உலையிலிட்டுச் சோதிப்பது போல் அவர்களை பரிசோதித்தார், தகனப் பலியாக அவர்களை ஏற்றுக்கொண்டார்.
7 கடவுளின் வருகைக் காலத்தில், அவர்கள் சுடரொளி வீசுவார்கள்; நாணற் காட்டில் தீப்பொறிகள் எரிவது போல் ஒளிர்வார்கள்.
8 புறவினத்தாரைத் தீர்ப்பிடுவார்கள், மக்களினங்களை ஆளுவார்கள்; ஆண்டவர் அவர்கள் மேல் என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
9 அவரில் நம்பிக்கை வைக்கிறவர்கள் உண்மையைக் கண்டுபிடிப்பார்கள், விசுவாசம் கொண்டவர்கள் அவரோடு அன்பில் நிலைத்திருப்பார்கள், ஏனெனில் அருளும் இரக்கமும் அவரால் தேர்ந்துகொள்ளப் பட்டவர்களுக்கே உரியவை.
10 பொல்லாதவர்களோ அவர்கள் எண்ணத்திற்குத் தக்கபடி தண்டிக்கப்படுவார்கள்; எனெனில் நீதிமானைப் புறக்கணித்து ஆண்டவரை எதிர்த்தார்கள்.
11 ஞானத்தையும் ஒழுக்கத்தையும் புறக்கணிக்கிறவன் இரங்கத்தக்கவன், அவனது நம்பிக்கை வீணானது, அவனுடைய செயல்கள் பலனற்றவை, அவனுடைய வேலைகள் விழலுக்கிறைத்த நீரே;
12 அவர்களுடைய மனைவியர் அறிவில்லாதவர்கள், அவர்கள் குழந்தைகள் பொல்லாதவர்கள், அவர்களது சந்ததி சாபத்திற்குள்ளானது. கெட்ட பிள்ளைகளைப் பெறுவதை விட மலடியாய் இருப்பதே மேல்.
13 தூய்மையிழக்காதவளும் முறைகேடான சேர்க்கையால் தீட்டுப் படாதவளுமான மலடி பேறுபெற்றவள்; ஆன்மாக்களைக் கடவுள் சந்திக்க வரும் போது, அவள் கைம்மாறு பெற்றுக் கொள்வாள்.
14 தன் கைகளால் முறை தவறிய செயல்களைச் செய்யாமலும், ஆண்டவருக்கு எதிராகப் பொல்லாதவற்றைச் சிந்தியாமலும் இருக்கிற அண்ணகனும் பேறுபெற்றவனே. அவனது பிரமாணிக்கத்திற்காகச் சிறப்பான சலுகை அவனுக்குக் கிடைக்கும்; கடவுளின் திருக்கோயிலில் இனிமை மிக்க பங்கு தரப்படும்.
15 நற்செயல்களின் பலன் மகிமை நிறைந்தது, அறிவின் வேர் ஒரு போதும் காய்ந்து போகாது.
16 விபசாரிகளின் மக்களோ முதுமை வரை வாழ மாட்டார்கள், முறைகேடான சேர்க்கையால் பிறந்த பிள்ளை அழிந்து போகும்.
17 அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்; அவர்களின் முதுமையின் இறுதியில் கூட அவர்களுக்கு மதிப்பு தரப்படமாட்டாது.
18 அவர்கள் இளமையில் இறந்தாலோ, அவர்களுக்கு நம்பிக்கையே இராது, தீர்வையின் நாளில் ஆறுதலும் கிடைக்காது.
19 உள்ளபடியே பொல்லாதவர்களின் முடிவு அச்சத்திற்குரியது.
அதிகாரம் 04
1 அதை விட நன்னெறியில் வாழ்ந்து மக்கட் பேறில்லாதிருப்பதே நலம்! நன்னெறியின் நினைவைச் சாகாமை நிலைநாட்டும். கடவுளாலும் மனிதாராலும் அந்நினைவு அறியப்படும்.
2 அந்நினைவு இருக்கும் போது மனிதர் அதைப் பின்பற்றுகிறார்கள். இல்லாத போதோ அதற்காக ஏங்கித் தவிக்கிறார்கள்; மாசற்ற போர்களில் வெற்றிபெற்ற அந்தச் சால்பு வாகை சூடிக் காலமெல்லாம் பவனி வருகிறது.
3 பொல்லாதவர்களின் பெரும் சந்ததி பயனற்றது, அவர்களது வேசித்தனத்தின் நாற்றுகள் ஆழமாய் வேரூன்றுவதில்லை, உறுதியாய்த் தரையில் ஊன்றி நிற்பதுமில்லை.
4 கொஞ்ச காலத்திற்கு அவர்கள் கிளைகள் விட்டாலும், நிலையற்றவர்களாதலால் காற்றால் அலைக் கழிக்கப்படுவர், கடும் புயலின் சீற்றத்தால் வேரோடு பிடுங்கப்படுவர்.
5 வளர்ந்து வயிரமேறுமுன்பே கிளைகள் முறிந்து விடும், அவற்றின் கனிகள் பயனற்றுப் போகும்; உண்பதற்குத் தக்க அளவு அவை பழுக்காததால், ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும்.
6 கடவுள் பரிசோதிக்க வருகிற நாளில், விபசாரத்தில் பிறந்த பிள்ளைகளே தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச் சாட்சிகளாய் நிற்பர்.
7 ஆனால் நீதிமான் காலம் வருமுன்பே இறந்து விட்டாலும், இளைப்பாற்றி அடைவான்.
8 நீண்ட காலம் வாழ்வதால் முதுமைக்கு மதிப்பில்லை, ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.
9 ஆனால் அறிவுடைமையே மனிதனுக்கு நரை திரை, மாசற்ற வாழ்வே பழுத்த முதுமைப் பருவமாம்.
10 கடவுளுக்கு உகந்தவனாயிருந்ததால் அவரது அன்பைப் பெற்றான்; பாவிகள் நடுவில் வாழ்ந்த அவன் அங்கிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டான்.
11 தீமை அவனது அறிவைக் கெடுக்காதிருக்கவும், வஞ்சனை அவனது ஆன்மாவை ஏய்க்காதிருக்கவுமே அவன் இம்மையினின்று அகற்றப்பட்டான்.
12 தீமையின் கவர்ச்சி நன்மையை இருளச்செய்கிறது, இச்சை என்னும் புயல் மாசற்ற மனத்தைக் கெடுத்து விடுகிறது.
13 குறுகிய காலத்தில் நிறைவு பெற்று நீண்ட வாழ்வினை நிறைவு செய்து கொண்டான்.
14 அவனது ஆன்மா ஆண்டவருக்கு உகந்ததாயிருந்தது; ஆதலால் தீமையின் நடுவிலிருந்து அவனை உடனடியாய் எடுத்துக் கொண்டார். ஆயினும் பார்த்திருந்த மக்கள் இதைக் கண்டுபிடிக்கவுமில்லை;
15 கடவுளின் அருளும் இரக்கமும், அவரால் தேர்ந்துகொள்ளப் பட்டவர்களுக்கே உரியவை, தம் பரிசுத்தர்களை அவர் கண்காணிக்கிறார் என்பதை அம்மக்கள் உள்ளத்தில் எண்ணிப் பார்க்கவுமில்லை.
16 இறந்து போன நீதிமான் உயிரோடிருக்கும் பொல்லாதவர்களைக் குற்றவாளிகளாய்த் தீர்ப்பிடுகிறான்; விரைவில் முடிந்து போன (அவனது) இளமைப் பருவம் பொல்லாதவனின் நீண்ட வாழ்வைக் கெட்டதெனக் காட்டுகிறது.
17 பொல்லாதவர்கள் ஞானியின் முடிவைக் காண்பார்கள்; ஆயினும் ஆண்டவர் அவனுக்கு என்ன பரிசு கொடுக்கவிருக்கிறார் எனவும், எதற்காக அவனைப் பாதுகாக்கிறார் எனவும் கண்டுபிடியார்கள்.
18 அவன் முடிவைக் கண்டு அவனை நிந்திப்பார்கள், ஆண்டவரோ அவர்களைப் பார்த்து நகைப்பார்.
19 அதன் பின் அவர்கள் இழிவான பிணமாவார்கள், செத்தவர்கள் நடுவிலும் என்றென்றும் வெறுப்புக்குள்ளாவார்கள்; ஆண்டவர் அவர்களைத் தலைகீழாய் வீழ்த்தி நாவடக்குவார்; அவர்களை அடியோடு ஆட்டி அதிரவைப்பார்; முற்றிலும் அவர்கள் பாழாக்கப்படுவர்; கொடிய வேதனைக்கு ஆளாவர்; அவர்களுடைய பெயர்கூட நிலைக்காமல் அழிந்து போகும்.
20 அவர்களுடைய பாவங்கள் கணக்கெடுக்கப் படும்பொழுது, அஞ்சி நடுநடுங்கிக்கொண்டு வருவார்கள்; அவர்களுடைய அக்கிரமச் செயல்கள் அவர்களுக்கு எதிரே நின்று குற்றஞ்சாட்டும்.
அதிகாரம் 05
1 அப்பொழுது நீதிமான் தன்னைத் துன்புறுத்தியவர்களின் முன்னிலையிலும், தன்னுடைய வேலைகளின் பலனை அற்பமாய் எண்ணியவர்கள் முன்னிலையிலும், மிகுந்த துணிவோடு எழுந்து நிற்பான்.
2 அவர்கள் அவனைக் கண்டு மிகுந்த அச்சத்தால் நடுநடுங்குவர்; எதிர்பாரா வகையில் அவன் மீட்கப்பட்டதை எண்ணி வியப்படைவர்.
3 மனம் வருந்தி ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள், உள்ளத்தில் வேதனையடைந்து பெருமூச்செறிந்து சொல்வார்கள்:
4 இவனையல்லவா நாம் முன்பெல்லாம் ஏளனம் செய்தோம்! வசைமொழிக்கு இலக்காய்ச் செய்தோம்! அறிவிலிகள் நாம்! அவனுடைய வாழ்வை நாம் மடமை என்று எண்ணினோம், அவன் முடிவு இழிவானதென்று நினைத்தோமே!
5 கடவுளின் புதல்வர்களுள் அவனுக்கு இடம் கிடைத்ததெப்படி? பரிசுத்தர்களோடு அவனுக்குப் பங்கு கிடைத்ததெவ்வாறு?
6 உண்மை நெறியை விட்டகன்று நாம் அலைந்து திரிந்தோம், நீதியின் ஒளி நம்மேல் ஒளிராமல் போயிற்று, அறிவுக் கதிரவன் நமக்கு உதயமாகவில்லை!
7 அக்கிரமமும் அழிவும் நிறைந்த வழியில் மனமார நாம் நடந்தோம், பாதையில்லாப் பாலை நிலைங்களில் பயணம் செய்தலைந்தோம், ஆனால் ஆண்டவரின் வழியை நாம் அறிந்தோமில்லை.
8 நமது இறுமாப்பினால் நமக்கு கிடைத்த பலனென்ன? செல்வப் பெருக்கினால் நமக்கு விளைந்த நன்மைதான் என்ன?
9 இவையெல்லாம் நிழலைப் போல் ஒடி மறைந்தன, பறந்தோடும் வதந்தியைப் போல் கடந்து போயின;
10 அலைந்தாடும் நீர்ப்பரப்பில் செல்லும் கலம் போலக் கடந்து போகவே, கடந்து சென்ற சுவடு கூடக் காணப்படவில்லை, அலைகளைக் கிழித்துச் சென்ற பாதையும் புலப்படவில்லை;
11 அல்லது, வானத்தில் பறந்தோடும் பறவை போன்றது: அது கடந்து போன வழி நம் கண்களுக்குத் தெரிவதில்லை; அது இறக்கைகளை அடிக்கும் போது மென்காற்று மோதப்படுகிறது, அது பறந்தோடும் விரைவில் காற்றைத் கிழித்துச் செல்கிறது; இறக்கைகளை அசைத்துக் காற்றைத் தள்ளிப் பறக்கிறது, ஆனால் பறந்து சென்ற பின் போன வழியே புலனாவதில்லை;
12 அல்லது, இலக்கை நோக்கி எய்யப்படும் அம்பைப் போன்றது: அம்பின் பாய்ச்சலால் பிளவுபட்ட காற்று உடனே கூடி விடுகிறது; ஆகவே அது போன வழியை யாரும் காணமுடியாது.
13 நம்முடைய நிலைமையும் அப்படிப்பட்டதே: பிறந்த உடனேயே நாம் இறந்துபட்டோம், நற்பண்பின் அடையாளத்தை நாம் விட்டுச் செல்லவில்லை, நம் தீமையில் நாம் அழிந்துபோனோம்."
14 இவ்வாறு பாவிகள் நரகத்தில் சொல்லிக் கொள்கிறார்கள்.
15 பொல்லாதவர்களின் நம்பிக்கை காற்றிலகப்பட்ட பஞ்சு போன்றது; புயலால் சிதறடிக்கப்பட்ட நுரை போன்றது; காற்றால் விரட்டப்படும் புகை போல் கலைந்தோடிவிடும், ஒரே நாள் விருந்தினனைப் போல் மறக்கப்பட்டு விடும்.
16 நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள், அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது, உன்னதர் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார்.
17 ஆதலால் மகிமையான மணிமுடியையும் அழகான மகுடத்தையும், ஆண்டவர் கையிலிருந்து அவர்கள் பெற்றுக் கொள்வர்; அவருடைய வலக்கை அவர்களை அணைக்கும், அவருடைய கைவன்மை கேடயம் போல் பாதுகாக்கும்.
18 தம் வைராக்கியத்தைப் படைக்கலமாய் அவர் பூண்டு கொள்வார், தம் பகைவர்களைப் பழிவாங்கப் படைப்புகளையும் போர்க்கோலம் பூணச் செய்வார்.
19 நீதியைத் தம் மார்புக் கவசமாய் அணிந்து கொள்வார், நடுவுநிலை தவறாத தீர்மானத்தைத் தலைச்சீராவாகப் போட்டுக்கொள்வார்.
20 ஊடுருவ முடியாத கேடயமாகப் பரிசுத்ததனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.
21 ஆற்றவியலாத தமது சினத்தை வேலாகத் தீட்டிக் கொள்வார், அவரோடு சேர்ந்து உலகெலாம் அறிவிழந்தவர்களை எதிர்த்துப் போரிடும்.
22 மின்னல் படைகள் குறி தவறாமல் பாய்ந்து சென்று அடிக்கும், திட்டமாய் வளைக்கப்பட்ட வில்லினின்று தெறிக்கும் அம்பு போல, மேகங்களினின்று அவை தாவிச் சென்று இலக்கைத் தாக்கும்.
23 கவண் வீசியெறியும் கற்களைப் போல் அவர்கள் மேல் கடுஞ்சினம் நிறைந்த கல்மாரி பொழியப்படும், கடல் நீர் அவர்களைக் கடுமையான சீற்றத்தோடு எதிர்க்கும், ஆறுகளும் இரக்கமின்றி அவர்களைத் தாக்கும்.
24 சூறாவளி அவர்களுக்கு எதிராக எழும்பும்; கடும்புயல் போல் அவர்களைத் தூற்றிச் சிதறடிக்கும்; அக்கிரமம் மண்ணுலகம் முழுவதையும் பாழாக்கும்; தீச்செயல் அரசர்களின் அரியணைகளைக் கவிழ்த்து விடும்.
அதிகாரம் 06
1 உடல் வலிமையினும் ஞானமே சிறந்தது; வல்லவனை விட ஞானி மேலானவன்
2 ஆகையால், அரசர்களே, கேட்டுக் கண்டுபிடியுங்கள்; உலகின் எல்லைகளை ஆள்பவர்களே, கற்றுக் கொள்ளுங்கள்.
3 மக்கள் கூட்டங்களைக் நடத்துபவர்களே, செவிகொடுங்கள்; திரளான மக்களினங்களைக் குறித்துப் பெருமிதங் கொள்பவர்களே, கேளுங்கள்.
4 உங்களுக்கு அதிகாரம் ஆண்டவர் தான் அளித்தார்; உன்னதரிடமிருந்தே நீங்கள் ஆட்சியுரிமை பெற்றீர்கள்; அவர் தான் உங்கள் செயல்களை ஆராய்வார், உங்கள் திட்டங்களைப் பரிசோதிப்பார்.
5 அவருடைய அரசில் அமைச்சர்களாய் இருந்த போது நீங்கள் நேர்மையாகத் தீர்ப்பு வழங்கவில்லை, திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, கடவுளின் திருவுளத்திற்கேற்றபடி நடக்கவுமில்லை.
6 ஆதலால் திடீரென உங்கள் மேல் சினத்தோடு வருவார், ஏனெனில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மேல் கடுமையான தீர்ப்புச் செலுத்தப்படும்.
7 எளியவன் இரக்கம் பெற்று மன்னிக்கப்படலாம், வல்லவர்களோ கடுமையாய்த் தண்டிக்கப்படுவர்.
8 அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சமாட்டார்; எவருடைய பெருமையையும் பொருட்படுத்தமாட்டார்; சிறியோரையும் பெரியோரையும் உண்டாக்கியவர் அவரே, அனைவரையும் சமமாகவே கருதி நடத்துகிறார்.
9 ஆனால் வல்லமை மிக்கவர்களிடம் கடுமையான கணக்குக் கேட்கப்படும்.
10 ஆகையால் மன்னர்களே, நான் சொல்வது உங்களுக்கே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும் வழுவாமல் இருக்கவுமே இவற்றை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11 பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கிறவர்கள் பரிசுத்தர்களாவார்கள்; அவற்றைக் கற்றுக் கொண்டவர்கள் தங்கள் செயல்களுக்கு நியாயம் சொல்லக் கூடும்.
12 ஆதலால், என் சொற்களை ஆவலாய்க் கேளுங்கள், அவற்றைத் தேடுங்கள், உங்களுக்கு அறிவுண்டாகும்.
13 ஞானம் ஒளிமிக்கது, மங்காதது; அதன் மேல் அன்புள்ளவர்கள் எளிதில் அதைக் காண்பார்கள், அதைத் தேடுகிறவர்கள் அதைக் கண்டடைவார்கள்.
14 அதன் மேல் நாட்டமுள்ளவர்களுக்குத் தன்னையே வெளிப்படுத்த முந்திக்கொள்ளும்.
15 அதைத் தேடுவதற்காகக் காலையிலேயே எழுந்திருப்பவனுக்கு அதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமன்று: அது தன் வாயிலருகிலேயே அமர்ந்திருப்பதைக் காண்பான்.
16 ஞானத்தின் மேல் ஒருவன் தன் சிந்தையை நிறுத்தினால் அதுவே அவனுக்கு அறிவின் நிறைவு. அதனை அடைய விழிப்பாயிருப்பவன், விரைவில் கவலைகளினின்று விடுபடுவான்;
17 தன்னை ஏற்கத் தகுதியுள்ளவர்களை ஞானம் சுற்றித் தேடிக் கொண்டு போகிறது; வழியில் அவர்களுக்கு இன்முகத்தோடு தோன்றுகிறது; நினைக்குந்தோறும் அவர்களை எதிர்கொண்டு சந்திக்கிறது.
18 அறிவு பெற வேண்டுமென்னும் உண்மையான ஆவலே ஞானத்தின் தொடக்கமாகும்.
19 அறிவின் மேலுள்ள ஆவலே ஞானத்தின் மேல் வைக்கும் அன்பு; அந்த அன்பானது அதன் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் அடங்கும்; அதன் கட்டளைகளைக் கடைப்பிடித்தல் சாகாமைக்கு உறுதி தரும்.
20 சாகாமை ஒருவனைக் கடவுளுக்கு அருகில் கொணர்கிறது;
21 அவ்வாறே ஞானத்தின் மேல் கொள்ளும் ஆவல் முடிவில்லா அரசுக்குக் கூட்டிச் செல்கிறது.
22 ஆதலால், மக்களினங்களை ஆளும் மன்னர்களே, அரியணைகளில் அமர்ந்து செங்கோலோச்ச விரும்பினால், ஞானத்தைப் போற்றுங்கள்; அப்போது என்றென்றும் அரசாள்வீர்கள்.
23 மக்களினங்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களே, நீங்கள் அனைவரும் ஞானத்தின் ஒளியை நேசியுங்கள்.
24 ஞானம் என்றால் என்ன, அது எப்படி உண்டானது என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்வேன்; அதன் மறைபொருட்களை உங்களிடமிருந்து நான் ஒளிக்கமாட்டேன்; அது உண்டாக்கப்பட்டது முதல் அதை ஆராய்ந்து உண்மையினின்றும் பிறழாமல் அதைப் பற்றிய அறிவை உங்களுக்கு முறையாக விளக்கிக் காட்டுவேன்.
25 தொல்லை தரும் பொறாமையை வழித்துணையாய்க் கொள்ளமாட்டேன், ஏனெனில் பொறாமைக்கும் ஞானத்திற்கும் பொருத்தம் இல்லை.
26 ஞானிகளின் கூட்டம் உலகத்திற்கு மீட்பு; அறிவுடைய மன்னன் குடிமக்களுக்கு நீடித்த நல்வாழ்வு.
27 ஆதலால் என் சொற்களால் அறிவு பெறுங்கள், அதனால் உங்களுக்குப் பயன் விளையும்.
அதிகாரம் 07
1 மற்றெல்லாரையும் போலவே நானும் சாகக்கூடிய மனிதன் தான்; மண்ணால் உண்டாக்கப்பட்ட முதல் மனிதனின் வழிவந்தவன் தான்; தாய் வயிற்றிலேயே என் உடலும் உருவாயிற்று.
2 புணர்ச்சி இன்பத்திலும் ஆணொருவனின் வித்தாலும் கருவாகி, இரத்தம் உறைந்து பத்து மாதங்களில் நான் உருவானேன்.
3 நான் பிறந்ததும் எல்லாரையும் போல் மூச்சு விட்டேன், அவர்களைப் போலவே நானும் நிலத்தில் கிடந்தேன், பிள்ளைகள் எல்லாம் அழுவது போல முதலில் நானுந்தான் அழுதேன்.
4 துணிகளால் போர்த்தி அக்கறையோடு என்னை வளர்த்தார்கள்;
5 அரசர்களுள் எவரும் வேறு வகையில் வாழ்வைத் தொடங்கவில்லை.
6 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், இறப்பும் அனைவர்க்கும் ஒரு தன்மைத்தே.
7 ஆகையால் நான் மன்றாடிக் கேட்டேன், எனக்கு அறிவு வழங்கப்பட்டது; கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், ஞான உணர்வு எனக்குக் கிடைத்தது;
8 செங்கோல்கள், அரியணைகளினும் மேலாக அதை மதித்தேன், அதனோடு ஒப்பிட்டால் செல்வப் பெருக்கு ஒன்றுமேயில்லை எனக் கருதினேன்.
9 விலையுயர்ந்த மாணிக்கத்தையும் நான் அதற்கு ஒப்பிடவில்லை; ஏனெனில் பொன்னெல்லாம் அதன் முன் சிறு மணல் தான்; வெள்ளியும் அதனோடு ஒப்பிட்டால் களிமண் தான்.
10 உடல் நலம், அழகு இவற்றினும் மிகுதியாய் அதன் மேல் அன்பு கொண்டேன், ஒளியை விட அதுவே சிறந்ததென்று தேர்ந்து கொண்டேன், ஏனெனில் அதனுடைய சுடர் என்றென்றைக்கும் குன்றாது.
11 அதனுடன் எனக்கு எல்லா நன்மைகளும் கிடைத்தன, அதன் கையால் அளவற்ற செல்வம் உண்டாயிற்று.
12 அவற்றையெல்லாம் நான் துய்த்து இன்பம் கண்டேன், ஏனெனில் ஞானமே அவற்றை நடத்தி வந்தது, ஆயினும் அதுவே அவற்றின் தாய் என்பதை அறியாதிருந்தேன்.
13 கபடின்றி நான் அதைக் கற்றேன், தாராளமாய்ப் பிறருக்கு வழங்குகிறேன்; அதனால் உண்டாகும் நன்மைகளை நான் மறைக்கிறதில்லை.
14 ஞானம் மனிதர்க்குக் குன்றாத கருவூலம்; அதைப் பெறுகிறவர்கள் கடவுளின் நட்பைப் பெறுவார்கள்; ஏனெனில் அதன் படிப்பினையின் கொடைகளால் அவருக்கு உகந்தவர்களாகிறார்கள்.
15 அறிவுடைமைக்கேற்பப் பேசவும், பெற்றுக் கொண்ட வரங்களுக்கேற்பச் சிந்திக்கவும் கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஞானத்திற்கும் அவர் தான் வழிகாட்டி; ஞானிகளையும் அவரே திருத்துகிறவர்.
16 அறிவுத்திறன்கள் தொழிற்திறமைகள் அனைத்தும் போலவே, நாமும் நம் சொற்களும் அவர் கைகளில் தான் இருக்கிறோம்.
17 உலகில் உண்டானவற்றின் உண்மையான அறிவை எனக்குக் கொடுத்தவர் அவரே; உலகின் அமைப்பையும், மூலப்பொருட்களின் ஆற்றலையும் நான் அறியச் செய்தவரும் அவரே.
18 காலத்தின் தொடக்கம், மையம், முடிவு முதலியவற்றையும், கதிரவனின் அண்மை சேய்மையால் உண்டாகும் மாற்றங்களையும், பருவகாலங்களின் மாறுபாடுகளையும்,
19 ஆண்டுகளின் ஓட்டத்தையும் விண்மீன்களின் கூட்டங்களையும்,
20 விலங்கினத்தின் இயல்புகளையும், காட்டு மிருகங்களின் குணங்களையும், ஆவிகளின் வலிமையையும், மனிதரின் எண்ணங்களையும், செடி வகைகளையும், வேர்களின் பண்புகளையும் கற்பித்தவர் அவரே.
21 இன்னும் நான் மறைபொருளாய் இருக்கிறதையும் வெளிப்படையாய் இருக்கிறதையும் கற்றறிந்தேன்; ஏனெனில் எல்லாவற்றையும் உருவாக்கிய ஞானமே எனக்குக் கற்றுத் கொடுத்தது.
22 ஞானத்தில் குடிகொண்டுள்ள ஆவி அறிவுடையது; பரிசுத்தமானது, ஒரு தனித்தன்மைத்து, பல்வகை செயல்வன்மை வாய்ந்தது, நுண்மையானது; இயக்குமாற்றல் வாய்ந்தது, தெளிவுமிக்கது, மாசுபடாதது; திண்ணமானது, இனிமையானது, நன்மையை விரும்புவது; கூர்மையானது, எதிர்க்க முடியாதது;
23 நன்மை செய்வது, மனிதர் மேல் பரிவுள்ளது; நிலைபெயராதது, அசையாதது, கவலையில்லாதது; எல்லாம் வல்லது, எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.
24 ஞானம் அசைவுகளிலெல்லாம் மிக விரைவானது. அதன் தூய்மையின் காரணத்தால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது, எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.
25 அது கடவுளுடைய வல்லமையின் ஆவி; எல்லாம் வல்லவரது மகிமையொளியின் தூய சுடர்; ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது.
26 அது முடிவில்லா ஒளியின் எதிரொளி, கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி; அவருடைய நன்மைத் தனத்தின் சாயல்.
27 அது தனித்து நிற்பினும், அனைத்தையும் செய்ய வல்லது; தான் மாறாமல் நிலைத்திருந்து, அனைத்தையும் புதுப்பிக்கிறது; ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்த ஆன்மாக்களில் நுழைந்து, அவர்களைக் கடவுளின் நண்பர்களாகவும் இறைவாக்கினர்களாகவும் ஆக்குகிறது.
28 ஞானத்தோடு வாழ்கிறவனுக்கு அன்பு செய்வதை விட வேறெவனுக்கும் கடவுள் மிகுதியாய் அன்பு செய்வதில்லை.
29 ஏனெனில் ஞானம் கதிரவனை விட அழகுவாய்ந்தது, விண்மீன் கூட்டங்களை விடச் சிறப்பு மிக்கது, ஒளியோடு ஒப்பிட்டால் ஞானமே மேலானது.
30 ஏனெனில் ஒளிக்குப் பின் இருள் சூழ்கிறது, ஆனால், தீமை ஒரு போதும் ஞானத்தை மேற்கொள்ளாது.
அதிகாரம் 08
1 ஞானம் மண்ணுலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரை தன்னுடைய ஆற்றலைக் காட்டுகிறது; அனைத்தையும் இனிதாய் ஒழுங்கு படுத்துகிறது.
2 என் இளமை முதல் அதன் மேல் நான் அன்பு வைத்தேன், தேடினேன்: அதை என் வாழ்க்கைத் துணை ஆக்கிக்கொள்ள விழைந்தேன்: அதனுடைய அழகில் என்னையே பறிகொடுத்து விட்டேன்.
3 கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் மேன்மையான பிறப்பின் மகிமையை மிகுதிப்படுத்துகிறது; ஆதலால் அனைத்துலக ஆண்டவர் அதன் மேல் அன்புகூர்கிறார்.
4 ஆம், கடவுளைப்பற்றிய அறிவுக்கு இட்டுச் செல்வது ஞானமே; அவருடைய வேலைகளைத் தேர்ந்தெடுப்பதும் அதுவே.
5 மிகுந்த செல்வம் வாழ்வில் விரும்பத்தக்க உடைமையாயின், அனைத்தையும் ஆக்கும் ஞானத்தை விட விலையுயர்ந்தது என்ன?
6 அறிவு வேலைத்திறன் மிக்கது ஆயின், அனைத்தையும் உருவாக்கும் கலைஞனான ஞானத்தினும் சிறந்தவர் யார்?
7 எவனாவது நீதியின் மேல் அன்புகூர்வானாயின், அதன் ( ஞானத்தின் ) செயல்கள் நற்பண்புகளாய் மிளிரும்: அது ( ஞானம் ) தன்னடக்கம், விவேகம், நீதியுடைமை, துணிவு ஆகியவற்றைக் கற்பிக்கிறது; இவற்றினும் வாழ்க்கையில் பயனுள்ளவை மனிதனுக்கு வேறொன்றும் கிடையாது.
8 பரந்த அனுபவம் பெற ஒருவன் விரும்புவானாயின், ஞானம் இறந்த காலத்தை அறியும், எதிர்காலத்தைக் கணிக்கும், சொல் நயங்களும் புதிர்களின் விடைகளும் அதற்குத் தெரியும்; நிகழ்வதற்கு முன்பே அடையாளங்களையும் அற்புதங்களையும், பருவங்களையும் காலங்களையும் பற்றிய அறிவு அதற்குண்டு.
9 ஆகையால், ஞானத்தை என் வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக் கொள்ள நான் முடிவு செய்தேன்; எனெனில் வளமான வாழ்வில் அது எனக்கு நல்லறிவூட்டும் என்றும், கவலைகளிலும் துயரத்திலும் ஊக்கந்தரும் என்றும் நான் அறிவேன்.
10 அதை முன்னிட்டு மக்கள் நடுவில் நான் மகிமையடைவேன், இளைஞனாயினும் முதியோர் முன் எனக்கு மதிப்பு இருக்கும்.
11 நீதி வழங்கும் போது எனது அறிவின் நுட்பம் காணப்படும்; ஆள்வோர் என்னைக் கண்டு வியப்பில் ஆழ்வர்; தலைவர்கள் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
12 நான் பேசாமலிருந்தால், நான் பேசும்படி எதிர்பார்ப்பார்கள்; நான் பேசும் போது அக்கறையாய்ச் செவிமடுப்பார்கள்; நீண்ட நேரம் நான் உரையாற்றினால், தங்கள் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டிருப்பார்கள்.
13 மேலும் ஞானத்தினால் எனக்குச் சாகாமை கிட்டும்; எனக்குப் பின் வருகிறவர்களுக்கு என்னைப் பற்றிய நீடித்த நினைவை விட்டுச் செல்வேன்.
14 மக்களினங்களை ஆட்சி செய்வேன்; நாடுகள் எனக்குக் கீழ்ப்பட்டிருக்கும்.
15 கொடிய மன்னர்கள் கூட என்னைப்பற்றிக் கேள்வியுற்று நடுங்குவர்; மக்கள் நடுவில் இனியனாகவும் போரில் வீரனாகவும் இருப்பேன்.
16 வீட்டிற்கு வந்தால், ஞானத்தோடு அமைதியாய் இளைப்பாறுவேன்; அதனுடைய தோழமையில் வெறுப்புக்குரியது ஒன்றுமில்லை; அதனுடன் நடத்தும் வாழ்க்கையில் துன்பமே இல்லை; எல்லாம் இன்பமும் மகிழ்ச்சியுமே.
17 இவற்றையெல்லாம் உள்ளத்தில் சிந்திக்கையில், மனத்தில் இவற்றைப் பற்றி எண்ணும் போது- அதாவது, ஞானத்தின் உறவால் சாகாமை கிட்டுமென்றும்,
18 அதனுடன் கொள்ளும் நட்பில் தூய இன்பமுண்டென்றும், அதன் செயல்களால் குன்றாத செல்வம் கொழிக்குமென்றும், அதனுடைய தோழமையில் அறிவாற்றல் பெருகுமென்றும், அதனோடு செய்யும் உரையாடலால் பெரும் புகழ் கிடைக்குமென்றும்- இவற்றையெல்லாம் நான் நினைத்துப் பார்த்து, அதை என்னுடன் சேர்த்துக் கொள்ள எங்கும் தேடிப்போனேன்.
19 குழந்தையாய் இருந்த போதே நல்ல இயல்பினனாய் இருந்தேன்; நல்ல உள்ளம் எனக்குப் பங்காய் அமைந்தது.
20 இல்லை- நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலுக்குள் புகுந்தேன்.
21 ஆனால், கடவுள் அருள் கூர்ந்தாலொழிய, ஞானம் எனக்குக் கிட்டாதெனக் கண்டேன்- அது யாருடைய கொடையென்று அறிதலே நுண்ணறிவுக்கோர் அறிகுறியன்றோ- ஆகவே, ஆண்டவரை அணுகி மன்றாடி என் முழு உள்ளத்தோடு அவரைக் கெஞ்சி வேண்டினேன்.
அதிகாரம் 09
1 என் மூதாதையரின் இறைவா, இரக்கத்தின் ஆண்டவரே, உம் வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர் நீரே.
2 உமது ஞானத்தால் மனிதனை உருவாக்கி, நீர் உண்டாக்கிய படைப்புகளின் மேல் ஆட்சி செலுத்தவும்,
3 தூய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும், நேர்மையான உள்ளத்தோடு நீதி வழங்கவும் ஏற்படுத்தினீர்.
4 உமது அரியணையருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கருளும்; உம்முடைய ஊழியர்கள் குழுவினின்று என்னைத் தள்ளிவிடாதீர்;
5 எனெனில் நான் உம் ஊழியன், உம் அடியாளிள் மைந்தன், நான் வலுவற்றவன், குறுகிய வாழ்வினன்; சட்டங்கள், நீதி இவைபற்றி மிகச் சிறிதே அறிவேன்;
6 ஏனெனில் மனிதர்களுள் ஒருவன் அறிவு நிறைந்தவனாயிருந்தாலும், நீர் அருளும் ஞானம் அவனிடமில்லையேல், அவன் ஒன்றுமே இல்லை.
7 உம் மக்களின் மன்னனாகவும், உம் புதல்வர் புதல்வியர்க்கு நீதிபதியாகவும் இருக்கும்படி என்னை நீர் தேர்ந்துகொண்டீர்;
8 உமது பரிசுத்த மலைமேல் திருக்கோயில் ஒன்றும், நீர் குடிகொண்டிருக்கும் நகரில் பீடமொன்றும், தொடக்கத்திலிருந்தே நீர் தயாரித்திருக்கும் பரிசுத்த கூடாரத்தின் மாதிரி ஒன்றும் அமைக்கும்படி எனக்கு ஆணை விடுத்தீர்.
9 உம்மிடத்தில் தான் ஞானம் இருக்கிறது; உம் வேலைகள் அதற்குத் தான் தெரியும்; நீர் உலகை உண்டாக்கிய போது அது உம் அருகில் இருந்தது; உம் கண்களுக்கு உகந்தது எதுவென அது அறியும், உம் கட்டளைகளின்படி எது சரியென அதற்குத் தெரியும்.
10 அது என்னுடனிருந்து என்னுடனுழைக்கவும், உமக்குகந்ததை எனக்குக் கற்றுக் கொடுக்கவும், உமது பரிசுத்த வான் வீட்டினின்று அதை அனுப்பியருளும்; உமது மகிமையின் அரியணையினின்று என்னிடம் வரவிடும்.
11 ஏனெனில் அதற்கு எல்லாம் தெரியும்; அனைத்தையும் அது கண்டு பிடிக்கிறது; என் செயல்களில் ஞானத்தோடு என்னை வழி நடத்தும்; தன் மகிமையால் என்னைப் பாதுகாக்கும்.
12 அப்போது தான் என் வேலைகள் உமக்கு ஏற்புடையனவாகும்; அறங்கோணாமல் உம் மக்களுக்கு நீதி வழங்குவேன்; என் தந்தையின் அரியணையில் இருக்கத் தகுதி பெறுவேன்.
13 உள்ளபடியே கடவுளின் திருவுளத்தை அறிபவன் யார்? அல்லது ஆண்டவர் விரும்புவதைக் கண்டுபிடிப்பவன் எவன்?
14 மனிதருடைய எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை;
15 ஏனெனில் அழியக் கூடிய உடல் ஆன்மாவைப் பளுவாக்குகிறது; இந்த மண் குடிசை சிந்தனை நிறைந்த மனத்தை அழுத்துகிறது;
16 உலகில் உள்ளவற்றை அறிவதே நமக்கு மிகக் கடினம்; நம் கண்முன்னிருப்பவற்றைக் கண்டுபிடிப்பதோ மிக அரிது; அப்படியிருக்க, விண்ணிலுள்ளவற்றை ஆராய்பவன் எவன்?
17 நீர் ஞானத்தைத் தராமலும், உன்னதத்திலிருந்து உமது பரிசுத்த ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உமது திருவுளத்தை அறியக் கூடியவன் யார்?
18 இவ்வாறு, உலகோரின் வழிகள் செம்மைப் படுத்தப்பட்டன; உமக்கு உகந்தவை மனிதர்களுக்குக் கற்பிக்கப்பட்டன;
19 ஞானத்தால் அவர்கள் மீட்கப்பட்டனர். ஏனெனில், ஆண்டவரே, தொடக்க முதல் உமக்கு உகந்தவர்களாய் இருந்த அனைவரும், ஞானத்தினால் நலமடைந்தனர்.
அதிகாரம் 10
1 உலகத்தின் தந்தையாய் உருவாக்கப்பட்ட முதல் மனிதன் தனியனாக உண்டாக்கப் பட்டிருந்த போது, ஞானமே அவனைக் காத்து வந்தது.
2 அவனைப் பாவத்தினின்று விடுவித்து, அனைத்தையும் அடக்கியாளும் ஆற்றலையும் தந்தது.
3 ஆனால் அநீதன் தன் ஆத்திரத்தில் ஞானத்தை விட்டகன்ற போது, சினமுற்றுத் தன் தம்பியைக் கொன்றதால் அழிந்துபோனான்.
4 அவனை முன்னிட்டு மண்ணுலகைப் பெருவெள்ளம் மூழ்கடித்த போது, அற்ப மரத்துண்டால் நீதிமானை நடத்தி மறுபடி காத்ததும் ஞானமே.
5 மக்களினங்கள் தீய ஒப்பந்தம் செய்து, குழப்பத்திற்குள்ளான போது, ஞானந்தான் நீதிமானை அறிந்து தேர்ந்தெடுத்து, அவனைக் கடவுள் முன்னிலையில் மாசற்றவனாய்க் காத்து வந்தது; அவன் பிள்ளைப் பாசத்தை வெல்லும் ஆற்றலையும் அவனுக்களித்தது.
6 பொல்லாதவர்கள் அழிந்த போது நீதிமானைக் காப்பாற்றிற்று; அவனும் ஐம்பெரு நகரங்கள் தீக்கிரையான போது, தப்பியோடிப் பிழைத்துக் கொண்டான்.
7 அவர்களுடைய அக்கிரமத்திற்குச் சான்றுகள் இன்னும் உள்ளன: இடைவிடாது புகையெழும்பும் பாழ்வெளி; கனிந்து பழுக்காத காய்களை மட்டும் தரும் மரங்கள்; விசுவசியாத ஆன்மாவின் நினைவுச் சின்னமாய் நிற்கும் உப்புத்தூண்.
8 ஞானத்தைப் பொருட்படுத்தாமல் விலகிச் சென்றதால், அவர்கள் நன்மையைக் கண்டுணர இயலாமற் போனதோடு, தங்கள் அறியாமையின் சின்னங்களையும் மனுக்குலத்திற்கு விட்டுச் சென்றனர்; ஆதலால் அவர்களின் தவறுகள் புலப்படாமல் போகமுடியாது.
9 தனக்கு ஊழியம் செய்தவர்களை ஞானம் இடையூறுகளினின்று விடுவித்தது.
10 உடன் பிறந்தவனின் சினத்திற்கு அஞ்சியோடிய நீதிமானை ஞானம் நேர் வழியில் நடத்திச் சென்றது; கடவுளின் அரசை அவனுக்குக் காண்பித்தது; பரிசுத்தமானவற்றைப் பற்றிய அறிவைத் தந்தது; அவனுடைய வேலைகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கச் செய்தது; அவனது உழைப்பின் பயனைப் பன்மடங்காய்ப் பெருக்கிற்று.
11 கொடியவர்கள் அவனை ஒடுக்கிச் சுரண்டப் பார்த்த போது, அவனுக்கு அருகில் துணை நின்று அவனைச் செல்வந்தனாக்கிற்று.
12 அவனுடைய பகைவர்களிடமிருந்து அவனைப் பாதுகாத்தது; அவர்கள் வீசிய வலைகளில் சிக்காதபடி அவனைத் தடுத்துக் காத்தது; மாபெரும் போராட்டத்தில் அவனுக்கு வெற்றி தந்தது; இவ்வாறு, இறைப்பற்று எல்லாவற்றையும் விட வலிமை மிக்கது என்பதை அவன் அறிந்து கொள்ளச் செய்தது.
13 பணத்திற்கு விற்கப்பட்ட நீதிமானை ஞானம் கைவிடவில்லை; பாவத்தில் விழாமல் அவனைத் தடுத்தாட்கொண்டது. பாதாளச் சிறைக்கு அவனோடு இறங்கிச்சென்றது;
14 அவன் விலங்கிடப்பட்டிருந்த போது, அவனை விட்டு அகலாமல் இருந்து, அரச செங்கோலை அவனுக்குக் கொண்டு வந்தது; கொடிய தலைவர்கள்மேல் அதிகாரம் தந்தது; அவன் மேல் குற்றம் சுமத்தியவர்களைப் பொய்யர்களென எண்பித்தது; முடிவில்லா மகிமையை அவனுக்குக் கொடுத்தது.
15 பரிசுத்த மக்களை- மாசற்ற இனத்தாரை ஞானம் கொடிய மக்களினத்தின் கையினின்று விடுவித்தது;
16 ஆண்டவருடைய ஊழியன் ஒருவனின் உள்ளத்தில் இருந்து கொண்டு அற்புதங்களாலும் அடையாளங்களாலும் கொடிய மன்னரை எதிர்த்து நின்றது:
17 பரிசுத்தர்களுக்கு அவர்கள் உழைப்புக்குக் கைம்மாறு தந்தது; வியப்புக்குரிய நெறியில் அவர்களை நடத்திச் சென்றது; பகல் நேரத்தில் அவர்களுக்குத் தண்ணிழலாகவும், இராவேளையில் விண்மீன் சுடராகவும் இருந்தது.
18 செங்கடலைக் கடந்து அவர்களைக் கூட்டி வந்தது; ஆழ்கடல் வழியாய் அவர்களை நடத்தி வந்தது;
19 அவர்களுடைய பகைவர்களையே கடலில் ஆழ்த்திப் பிறகு கடலின் ஆழத்திலிருந்து வெளியே துப்பிற்று. ஆகையால் நீதிமான்கள் பொல்லாதவர்களின் பொருளை எடுத்துக் கொண்டனர்.
20 அதன்பின், ஆண்டவரே, உமது பரிசுத்த பெயரைப் பாடிப் போற்றினர், வெற்றி பெற்ற உம் கைவன்மையை ஒரு மிக்கப் புகழ்ந்தனர்.
21 ஏனெனில் ஊமைகளின் வாயை ஞானம் திறந்து விட்டது; குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது.
அதிகாரம் 11
1 பரிசுத்த இறைவாக்கினர் ஒருவரின் கைவன்மையால் அவர்களுடைய செயல்களுக்கு ஞானம் வெற்றியளித்தது.
2 மனிதர் வாழாத பாழ்வெளியின் வழியாய்ப் பயணம் செய்தனர், மக்கள் நடமாட்டமற்ற இடங்களில் கூடாரமடித்தனர்.
3 அவர்களுடைய பகைவர்களை எதிர்த்து நின்றனர்; அவர்களை எதிர்த்து வந்தவர்களை வென்று புறங்கண்டனர்.
4 தாகம் எடுத்த போது, அவர்கள் உம்மைக் கூவியழைத்தனர்; செங்குத்தான கற்பாறையிலிருந்து அவர்கள் நீர் பெற்றனர், கெட்டியான கல்லிலிருந்து அவர்கள் தாகம் தணித்துக் கொண்டனர்.
5 பகைவர்கள் எவற்றால் தண்டிக்கப்பட்டார்களோ அவற்றாலேயே இஸ்ராயேல் மக்கள் துன்ப வேளையில் நன்மையடைந்தனர்.
6 நீரில்லாமல் தாகத்தால் வருந்தியிருந்த அம்மக்களுக்குக் கடவுள் தயவுகூர்ந்தார்.
7 குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என்னும் ஆணையைக் கண்டிக்கும்படி இரத்தம் போல் குழம்பிய செந்தண்ணீர் ஓடுகின்ற வற்றாத ஆற்று நீரைப் பகைவர்களுக்குத் தந்து,
8 நம்பிக்கையே இல்லாத போது உம் மக்களுக்கு மிகுதியான தண்ணீர் கொடுத்தீர்.
9 அவர்களுடைய பகைவரை எவ்வாறு தண்டித்தீரென்பதை அவ்வேளையில் அவர்களுக்கு எடுத்த தாகத்தால் காட்டினீர்.
10 அவர்கள் உட்படுத்தப்பட்ட சோதனையெல்லாம் உண்மையில் இரக்கத்தினால் அவர்களுக்குத் தரப்பட்ட கண்டிப்புதான்; ஆயினும் கடவுள் சினங்கொண்டு தீர்ப்பிடும் போது பொல்லாதவர்கள் எவ்வளவு வதைக்கப் படுகிறார்கள் என்பதை அச்சோதனைகளால் அறிந்து கொண்டார்கள்
11 ஏனெனில் தந்தை எச்சரிக்கை செய்வது போல், உம்மவர்களை நீர் சோதித்தீர்; ஆனால், தண்டனை விதிக்கும் கண்டிப்பு மிக்க அரசனைப் போல், மற்றவர்களை நீர் பரிசோதித்தீர்.
12 இஸ்ராயேல் மக்கள் புறப்படு முன்பும் புறப்பட்ட பின்பும் எதிரிகள் ஒரே வகையில் மனம் புழுங்கினர்.
13 இரு மடங்கான துயரம் அவர்களை வாதித்தது; நிகழ்ந்ததை நினைத்து நினைத்து வேதனைக் குரல் எழுப்பினர்.
14 எவ்வாறெனில், தங்களுக்குக் கிடைத்த தண்டனைகளால், பிறருக்கு நன்மை விளைந்தது என்று கேட்ட போது, ஆண்டவரின் செயலை அதில் கண்டனர்.
15 முன்னொரு நாள் மோயீசன் வெளியில் எறியப்படச் செய்தார்கள், பின்னர் அவரையே நகைத்துப் புறக்கணித்துத் தள்ளினார்கள்; ஆனால் இவையெல்லாம் நிகழ்ந்த பின்னர்- நீதிமான்களின் தாகத்தினும் கொடிய தாகத்தை அனுபவித்த பின்னர்- அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
16 அவர்களுடைய பொல்லாத அறிவுகெட்ட எண்ணங்களால் அவர்கள் நெறிதவறிப் பகுத்தறிவில்லாப் பாம்புகளையும், பயனற்ற மிருகங்களையும் வணங்கியதால், அவர்களைத் தண்டித்துப் பழிவாங்கும்படி அறிவில்லா உயிரினங்களின் கூட்டத்தையே அவர்கள் மேல் நீர் ஏவி விட்டீர்;
17 எதைக் கொண்டு ஒருவன் பாவஞ் செய்கிறானே அதைக் கொண்டே அவன் தண்டிக்கப்படுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே அவ்வாறு செய்தீர்.
18 ஏனெனில் உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த உமது எல்லாம் வல்ல கைவன்மைக்கு, கரடிகளின் கூட்டத்தையோ, கொடிய சிங்கங்களையோ,
19 புதிதாய் உண்டாக்கப்பட்டவையும், முன் பின் பார்த்திராத சீற்றம் நிறைந்தவையுமான விலங்குகளையோ, தீயின் வெம்மையை மூச்சாக விடும் மிருகங்களையோ, அடர்ந்த புகைப் படலத்தை ஏப்பமாக விடும் விலங்குகளையோ, கண்களிலிருந்து தீப்பொறிகளைத் தெறிக்கச் செய்யும் மிருகங்களையோ அவர்கள் மேல் ஏவி விடுவது கடினமாய் இருந்ததில்லை.
20 அவற்றால் மனிதர் அழிக்கப்படுவது மட்டுமன்று; அவற்றைப் பார்த்தாலே திகிலுற்றுச் செத்துப் போவார்கள்.
21 ஆனால் அவையும் உமக்குத் தேவையாயிருந்தனவல்ல; அவர்களை வீழ்த்த ஒரே ஒரு மூச்சு போதுமாயிருந்தது; நீதியால் விரட்டியடிக்கப்பட்டு, உமது வல்லமையின் மூச்சினால் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்; ஆயினும் நீர் அனைத்தையும் அளவோடும் கணக்கோடும் நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.
22 மிகுந்த ஆற்றலைக் காட்ட உம்மால் எப்போதும் இயலும்; உமது கைவன்மையை எதிர்த்து நிற்க வல்லவன் யார்?
23 உள்ளபடியே, தராசுத் தட்டில் நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் மிகச் சிறிய துரும்பு போலும், நிலத்தில் விழும் காலைப்பனி நீர்த்துளியைப் போலும் உம் முன்னிலையில் இந்த உலக முழுவதும் இருக்கிறது.
24 அனைவர்க்கும் நீர் இரக்கம் காட்டுகிறீர்; ஏனெனில் உம்மால் எல்லாம் செய்ய இயலும்; மனிதர்கள் மனம் வருந்துவதற்கு வாய்ப்பளிக்கவே அவர்கள் பாவங்களைப் பார்த்தும் பாராமல் இருக்கிறீர்.
25 ஆம் நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் அன்பு கூருகிறீர்; படைத்தவற்றுள் எதையும் நீர் அருவருத்துத் தள்ளுகிறதில்லை; எனெனில் நீர் எதையேனும் வெறுத்துப் பகைத்திருந்தால், அதை உண்டாக்கியிருக்கவே மாட்டீர்.
26 உமக்குத் திருவுளமில்லாமல் இருந்திருந்தால், எது தான் அழியாமல் நிலைத்திருக்கக்கூடும்? உம்மால் அழைக்கப் படாதிருந்தால், எதுதான் காப்பாற்றப்படக் கூடும்?
27 உயிரினங்கள் மேல் அன்புள்ளவரே, நீர் எல்லாவற்றையும் காத்து வருகிறீர்; ஏனெனில் யாவும் உம்முடையவையே!
அதிகாரம் 12
1 உமது சாகாத உயிர் மூச்சு அனைத்திலும் இருக்கிறது;
2 ஆகையால், மீறுகிறவர்களை நீர் சிறிது சிறிதாய்க் கண்டிக்கிறீர்; அவர்கள் எந்தக் காரியங்களில் பாவம் செய்கிறார்களோ அந்தக் காரியங்களை நினைவுபடுத்தி எச்சரிக்கை செய்கிறீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையினின்று விடுபடவும், உம்மில் தங்கள் நம்பிக்கையை வைக்கவுமே நீர் இவ்வாறு செய்கிறீர்.
3 உம்முடைய பரிசுத்த நாட்டில் வாழ்ந்த பண்டைக் குடிமக்களை
4 அவர்களுடைய அருவருப்புக்குரிய செயல்கள், மந்திரவாதங்கள், அக்கிரமம் நிறைந்த வழிபாட்டு முறைகளுக்காகவும்,
5 இரக்கமின்றிக் குழந்தைகளை அவர்கள் கொன்றதாலும், மனித சதையையும் இரத்தத்தையும் விருந்தாக உண்டதாலும், மனமார அவர்களை நீர் வெறுத்தீர்; அருவருப்பான சடங்குகளால் தீட்சை பெற்றவர்களையும்,
6 எதிர்க்க முடியாத குழந்தைகளைக் கொலை செய்த பெற்றோர்களையும், எங்கள் தந்தையரின் கைகளால் அழிக்கத் திருவுளங்கொண்டீர்;
7 உலகின் நாடுகளிலெல்லாம் உமக்கு மிகப்பிடித்தமான இந்நாடு கடவுளின் குழந்தைகளாகிய தகுதிவாய்ந்த குடியேற்ற மக்களை வரவேற்க வேண்டுமென்றே நீர் இவ்வாறு செய்தீர்.
8 ஆனால், இப்பாவிகளும் மனிதர்களே ஆதலால், அவர்களை அளவோடே தண்டித்து, உமது படையின் முன்னோடிகளாக மலைக்குளவிகளை அனுப்பி அவர்களைக் கொஞ்சங் கொஞ்சமாய் அழிக்கச் செய்தீர்.
9 எனினும், போர்க்களத்தில் பொல்லாதவர்களை நீதிமான்களின் கைகளில் விட்டுவிடவோ, அச்சத்திற்குரிய கொடிய விலங்குகளால் அல்லது உமது சொல்லால் ஒரே நொடியில் அழிக்கவோ உம்மால் முடியாமற் போய்விடாது.
10 அவர்கள் பிறவியிலேயே தீயவர்கள் என்றும், தீய பண்பு அவர்கள் இரத்தத்திலேயே ஊறிவிட்டது என்றும், அவர்களுடைய மனப்பான்மை ஒருபோதும் மாறாது என்றும் உமக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், படிப்படியாய் அவர்களைத் தண்டித்து அவர்கள் மனந்திரும்புவதற்கு வாய்ப்புக் கொடுத்தீர்.
11 ஏனெனில் அவர்கள் தொடக்கத்திலிருந்தே சாபனைக்குட்பட்ட மக்களாய் இருந்து வந்தனர். யாருக்கும் அஞ்சிக்கொண்டு நீர் அவர்களை அவர்கள் பாவங்களுக்காகத் தண்டிக்காமல் விடவில்லை.
12 என்ன செய்தீர்?" என்று உம்மைக் கேட்கக்கூடியவன் யார்? அல்லது உமது தீர்ப்பை எதிர்ப்பவன் எவன்? நீர் உண்டாக்கிய மக்களினங்களை நீரே அழித்தால் அதற்காக உம்மேல் குற்றம் சுமத்துகிறவன் யார்? அக்கிரமிகளின் சார்பாக உமக்கெதிராய்க் எழுந்து உம்மைப் பழிவாங்கும் துணிவு யாருக்கிருக்கிறது?
13 ஏனெனில் அனைவரையும் அக்கறையாய்க் காப்பாற்றுவதற்கு உம்மைத் தவிர வேறு கடவுளில்லை; நீதியான தீர்ப்பளித்தீர் என்பதை நீர் எவருக்கும் விளக்கிக் காட்ட உமக்குக் கடமை இல்லை.
14 நீர் தண்டித்தவர்களைக் குறித்து உம்முன் வந்து உம்மைக் கேட்க எந்த அரசனாலும் மன்னனாலும் முடியாது.
15 நீர் நீதியுள்ளவர், அனைத்தையும் நீதியோடு ஆளுகிறீர்; குற்றமற்றவனைத் தண்டிப்பது உம் வல்லமைக்குத் தகாதென நீர் அறிந்திருக்கிறீர்.
16 ஏனெனில் உமது ஆற்றல் தான் நீதியின் ஊற்று; அனைத்தின் மீதும் உமக்கிருக்கும் அரசுரிமை அனைத்தையும் நீர் இரக்கத்தோடு நடத்தச் செய்கிறது.
17 உமது வல்லமையின் நிறைவை நம்பாதவர்களுக்கு நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; உம்மை அறியாதவர்களின் ஆணவத்தை அடக்குகிறீர்.
18 நீர் ஆற்றலில் இணையற்றவராயிருப்பதால், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை நடத்துகிறீர்; ஏனெனில் விருப்பமான போது செயலாற்ற உமக்கு வல்லமை இருக்கிறது.
19 நீதிமான் ஈர நெஞ்சத்தினனாய் இருக்க வேண்டும் என்று இவற்றால் உம் மக்களுக்கு அறிவுறுத்தினீர். உம்முடைய மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில், பாவங்களுக்குத் தவஞ் செய்யக் காலங் கொடுக்கிறீர்.
20 உம் ஊழியர்களின் பகைவர்களுக்கும், அதுவும் அவர்கள் கொலைத் தண்டனைக்குரியவர்களாய் இருந்தும், தங்கள் தீய நெறியை விட்டு விடக் காலமும் வாய்ப்பும் தந்து, இத்துணைக் கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்திருக்க,
21 உம்முடைய புதல்வர்கள் மேல் மட்டும் எத்துணைக் கவனத்தோடும், அளவோடும் தீர்ப்புச் செலுத்தினீர்! இவர்களின் தந்தையர்க்குத் தான் நல்ல வாக்குறுதிகள் நிறைந்த ஆணைகளையும் ஒப்பந்தங்களையும் செய்தீரன்றோ?
22 ஆதலால் நீர் எங்களைத் தண்டித்துத் திருத்தும் போது எங்கள் பகைவர்களைப் பத்தாயிரம் மடங்கு கடுமையாய்த் தண்டிக்கிறீர்; நாங்கள் தீர்ப்பு வழங்கும் போது உம்முடைய நன்மைத் தனத்தைச் சிந்தித்துப் பார்க்கவும், நாங்கள் தீர்ப்பிடப்படும் போது இரக்கத்தை எதிர்பார்க்கவுமே நீர் இவ்வாறு செய்கிறீர்.
23 ஆதலால் மடமையிலும் அக்கிரமத்திலும் வாழ்க்கை நடத்தியவர்களை அவர்கள் வணங்கிய அருவருப்புக்குரிய பொருட்களாலேயே வதைத்துத் துன்புறுத்தினீர்.
24 ஏனெனில், தவறான வழிகளில் அவர்கள் நெடுந் தொலைவு சென்று, நிந்தைக்குரிய மிருகங்களைத் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டனர்; அறிவில்லாத குழந்தைகளைப் போல் அவர்கள் ஏமாந்து போயினர்.
25 ஆகவே, அறிவில்லாக் குழந்தைகளை ஏளனஞ் செய்வது போல், அவர்களையும் ஏளனம் செய்ய உம் தீர்ப்பை அனுப்பினீர்.
26 ஆனால், ஏளனத்துக்குரிய தண்டனைகளால் திருந்தாதவர்கள், தக்க வகையில் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக வேண்டியிருந்தது.
27 எவ்வாறெனில், தாங்கள் தெய்வங்களாய் எண்ணின மிருகங்களே அவர்களை வதைத்தன; அவற்றாலேயே துன்புற்று எரிச்சலுற்றனர்; இதைப் பார்த்து முன்பு தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே இப்பொழுது உண்மையான கடவுள் என அறிந்து கொண்டனர். ஆதலால் தான், மிகவும் கொடிய தொருதண்டனை அவர்களுக்கு விதிக்கப் பட்டது.
அதிகாரம் 13
1 ஆம், கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே மடையர்கள்; கண்ணுக்கு புலனாகும் நன்மைகளைக் கண்டு இருக்கின்றவரை அறிந்துகொள்ள இயலாதவர்களாயினர்; கைவினைகளில் கவனம் செலுத்தி கைவினைஞரை அறிந்து கொள்ளாமல் போயினர்.
2 அதற்கு மாறாக, தீயோ காற்றோ சூறாவளியோ, விண்மீன் கூட்டமோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோ தான் உலகத்தை ஆளுகின்ற தெய்வங்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
3 இந்தப் பொருட்களின் அழகில் மயங்கி இவற்றைத் தெய்வங்கள் என எண்ணினார்களாயின், இவற்றையெல்லாம் ஆளுகிறவர் இவற்றினும் எவ்வளவோ மேலானவர் என்பதை அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் அழகின் ஊற்றே அவற்றை உண்டாக்கினார்.
4 அவற்றின் வல்லமையையும் ஆற்றலையும் கண்டு மனிதர் வியப்பில் ஆழ்கிறார்கள் எனில், அவற்றையெல்லாம் ஆக்கியவர் அவற்றினும் எவ்வளவோ வல்லமையுள்ளவர் என்பதை அவற்றால் அறியட்டும்.
5 ஏனெனில் படைப்புகளின் பெருமையையும் அழகையும் கண்டு அவற்றைப் படைத்தவரைக் கண்டறியலாம்.
6 ஆயினும் அந்த மனிதர்கள் மேல் அவ்வளவு குற்றம் இல்லையெனலாம்; ஏனெனில் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க முயலும் போது ஒருவேளை அவர்கள் தவறியிருக்கலாம்.
7 அவருடைய படைப்புகளின் நடுவில் வாழும் போது அவரைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களுக்குப் புலனாவதையே நம்பிவிடுகிறார்கள்; கண்ணுக்குப் புலனாகிறவை அவ்வளவு அழகாயிருக்கின்றன.
8 இருப்பினும் இவர்களும் சாக்குப் போக்குச் சொல்ல இடமில்லை.
9 ஏனெனில், உலகத்தைப் பற்றி ஆராய்ந்தறியும் அளவுக்கு அவர்களுக்கு அறிவாற்றல் இருக்கும் போது, இவற்றுக்கொல்லாம் ஆண்டவரை எளிதில் கண்டறிய அவர்கள் தவறிவிட்டதெப்படி?
10 ஆனால், பொன் வெள்ளியால் திறமையாய் உருவாக்கப்பட்டு மனிதரின் கைகளால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுக்கும், மிருகங்களின் சாயலான உருவங்களுக்கும், அல்லது பண்டை நாளில் கையால் செதுக்கப்பட்ட பயனற்றதொரு கல்லுக்கும் "தெய்வங்கள்" எனப் பெயரிட்டு உயிரற்ற பொருட்கள்மீது தங்கள் நம்பிக்கையை வைக்கிற மனிதர்கள் மிகவும் இரங்கத்தக்கவர்கள்!
11 திறமைவாய்ந்த வேலைக்காரன் ஒருவன் பொருத்தமான மரமொன்றை வெட்டுகிறான்; அதன் மேற்பட்டைகளையெல்லாம் திறமையாய் உரிக்கிறான்; பிறகு மிகுந்த கைத்திறமையோடு அதைக் கொண்டு வாழ்க்கையில் தனக்குப் பயன்படும் ஒரு பொருளைச் செய்கிறான்;
12 வேலை செய்து மீதியான மரத்தை அடுப்பெரிக்கவும் சமையல் செய்யவும் பயன்படுத்துகிறான்.
13 ஆயினும் அவற்றுள் ஒன்றுக்கும் உதவாததும் கோணலும் முட்டு முடிச்சுகளும் நிறைந்த மரத்துண்டையெடுத்து, ஓய்வுநேரத்தில் அதைக் கவனமாய்ச் செதுக்கிக் கலைத்திறனோடு அதை இழைத்து அதிலிருந்து மனிதனின் சாயல் ஒன்றை உருவாக்குகிறான்;
14 அல்லது, தாழ்ந்த ஒரு மிருகத்தைப் போலச் செய்து அதற்குச் சிவப்பு வண்ணம் அடித்து மேற்பரப்பைச் சிவப்பாக்கி, அதன் மேலுள்ள கறைகளையெல்லாம் வண்ணத்தால் மறைக்கிறான்;
15 பிறகு, அதற்குப் பொருத்தமான ஒரு மாடம் செய்து, அதில் அந்தச் சிலையை வைத்து ஆணியால் பொருத்துகிறான்.
16 இவ்வாறு, அது விழுந்துவிடாதபடி அக்கறையெடுத்துக்கொள்கிறான்; ஏனெனில் தனக்குத்தானே உதவி செய்து கொள்ள அந்தச் சிலையால் இயலாது என்பது அவனுக்குத் தெரியும்; அது வெறும் சிலைதான்; ஆகவே அதற்கு உதவி தேவை.
17 தன் உடைமைகளுக்காகவும் திருமணத்திற்காகவும், தன் குழந்தைகளுக்காகவும் வேண்டிக் கொள்ளும் போது, உயிரற்ற ஒரு பொருளைப் பார்த்துப் பேச அவனுக்கு வெட்கமாய் இருப்பதே இல்லை.
18 வலிமையற்ற பொருளிடம் உடல்நலம் வேண்டுகிறான்; செத்துப்போன ஒன்றை வாழ்வு தரும்படி மன்றாடுகிறான்; ஒன்றுக்கும் உதவாத ஒன்றினிடம் உதவி கோருகிறான்;
19 காலெடுத்து வைக்க முடியாத ஒன்றைப் பார்த்து வழிப்பயணத்தில் துணை நிற்கக் கேட்கிறான். கைகளில் வலுவில்லாத ஒரு பொருளிடம், செல்வம் திரட்டுவதிலும் வேலையிலும் செயல்களிலும் வெற்றியும் ஆற்றலும் தரும்படி கேட்கிறான்.
அதிகாரம் 14
1 மேலும், கடல் பயணம் செய்யக் கருத்துக் கொண்டு பொங்கியெழும் அலைகடலில் செல்லத் தயாராயிருக்கும் ஒருவன், தன்னைத் தாங்கிச் செல்லும் மரக்கலத்தை விட மிக எளிதில் உடைந்து போகக் கூடிய மரக்கட்டையைப் பார்த்து மன்றாடுகிறான்.
2 செல்வம் சேர்க்கவேண்டுமென்னும் ஆசையே அந்தக் கப்பலைச் செய்யத் திட்டம் போட்டது; கப்பலைக் கட்டியவன் அதைத் திறமையோடு கட்டினான்.
3 ஆனால், தந்தை உம் பராமரிப்பு தான் அதைச் சரியான வழியில் ஓட்டுகின்றது; ஏனெனில் கடலில் அதற்கொரு வழியமைத்தீர்; அலைகளினூடே பாதுகாப்பான வழியைக் காட்டினீர்.
4 எவ்வகை இடரினினிறும் உம்மால் காக்க முடியுமெனக் காட்டுகிறீர்; ஆகவே, திறமையற்றவன் கூடக் கடலில் பயனம் செய்யலாம்.
5 உமது ஞானத்தின் செயல்கள் பயனின்றிப் போகக்கூடாது என்பது தான் உமது திருவுளம்; அதை எண்பிக்கவே, மிகச் சிறிய மரத்துண்டினிடம் தங்கள் உயிரையே ஒப்படைக்கும் மனிதர்கள் அலைகடலில் படகு ஓட்டி இடரின்றிக் கரை சேர்கிறார்கள்.
6 பண்டைக்காலத்தில், ஆணவங்கொண்ட அரக்கர்கள் அழிக்கப்பட்ட போதுங் கூட, உலகின் நம்பிக்கை ஒரு படகில் தான் புகலிடம் கண்டது; அந்தப் படகு உம் கையால் செலுத்தப்பட்டுப் புதிய மனுக்குலத்தின் வித்தை உலகில் விட்டுச் சென்றது.
7 நீதியைப் பிறப்பிக்கிற மரம் பேறு பெற்றது.
8 ஆனால் கையால் செய்யப்பட்ட சிலை சபிக்கப்பட்டது; அதைச் செய்தவனும் சபிக்கப்பட்டவன்; அவனோ அவ்வேலையைச் செய்ததற்காக, அதுவோ, அழியக்கூடிய பொருளாயிருந்தும் தெய்வம் எனப் பெயர் பெற்றதற்காக,
9 இறைப் பற்றில்லாதவனையும் அவனது இறைப்பற்றின்மையையும் கடவுள் சமமாகவே வெறுக்கிறார்.
10 ஏனெனில் செய்தவனோடு செய்யப்பட்ட வேலையும் ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.
11 ஆதலால் புறவினத்தாரின் சிலைகள்மேலும் தண்டனைத் தீர்ப்பு விழும்; ஏனெனில் கடவுளின் படைப்புகளில் ஒரு பகுதியாயிருந்தும் அவை அருவருப்பான சிலைகளாயின; மனிதர்களின் ஆன்மாக்களுக்குக் கண்ணிகளாகவும், அறிவிலிகளின் கால்களுக்கு வலையாகவும் ஆயின.
12 சிலைகள் செய்ய எண்ணியதே விபசாரத்தின் தொடக்கமாயிற்று; அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவாயிற்று.
13 அவை தொடக்க முதல் இருந்ததுமில்லை, என்றென்றைக்கும் இருக்கப் போவதுமில்லை.
14 மனிதனின் வீண்பெருமையால் அவை உலகில் இடம் பெற்றன; ஆதலால் அவற்றின் முடிவை விரைவில் காணலாம்.
15 ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கும் தந்தையொருவன் குறுகிய காலத்திற்குள் திடீரெனத் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட தன் மகனின் உருவத்தைச் செய்து, முன்பு செத்தவனாகிய அவனை இப்பொழுது தெய்வமாக வணங்குகிறான்; மறைச் சடங்குகளும் பலிகளும் அதற்குச் செலுத்தும்படி தன்னுடைய ஊழியர்க்கும் சொல்லுகிறான்.
16 பிறகு காலப்போக்கில் இந்தத் தீய வழக்கம் உறுதிப்பட்டு ஒரு சட்டத்தைப் போல் கடைப்பிடிக்கப்பட்டது; மன்னர்கள் பிறப்பித்த கட்டளையின்படி மனிதர்கள் செதுக்கப்பட்ட சிலைகளை வணங்கி வந்தனர்.
17 மேலும் தொலைவில் இருந்தவர்களை மனிதர் நேருக்கு நேராய் வணங்க முடியாததால், தொலைவிலிருந்தே அவர்களுடைய தோற்றத்தைக் கற்பனை செய்து, தொலைவிலிருந்தே அவர்களுடைய தோற்றத்தைக் கற்பனை செய்து, தொலைவிலிருந்தவனை எதிரிலிருப்பவன் போல் அவன்மேல் தாங்கள் காட்டும் ஆர்வத்தால் பாராட்டும் படி, தாங்கள் போற்ற விரும்பிய அந்த அரசனுடைய காணக்கூடிய சாயலொன்றைச் செய்தனர்.
18 அரசனை அறியாதவர்கள் கூட அவனை ஆர்வத்தோடு வணங்குவதற்குச் சிற்பியின் புகழார்வமும் அவர்களைத் தூண்டிற்று.
19 ஏனெனில் அவன் தன்னை ஆள்பவனுக்கு மகிழ்ச்சி தர விரும்பித் தன் திறமையெல்லாம் காட்டி அந்தச் சாயலை உள்ளதற்கு மேல் மிக அழகாய் ஒருவேளை செய்திருப்பான்.
20 அவனது வேலைப்பாட்டின் அழகில் வயப்பட்ட மக்கள் திரள், கொஞ்ச காலத்திற்கு முன் மனிதனாக மதிப்பு தந்த ஒருவனை இப்பொழுது தெய்வமாக வணங்கி வந்தனர்.
21 இதுவே வாழ்வை வீழ்த்தும் படுகுழியாயிற்று; ஏனெனில் கேடுகாலத்திற்கு அல்லது அரசனது அதிகாரத்திற்கு அடிமையாகி கடவுளுக்கே தனிப்பெரும் உரிமையான பெயரை மனிதர் கற்களுக்கும் மரங்களுக்கும் கொடுத்தார்கள்.
22 கடவுளை அறியாததால் இவ்வாறு மனிதர் தவறிப் போனது போதாமல், அறியாமையின் காரணத்தால் பெரும் போராட்டத்தில் வாழ்கிறார்கள்; இத்தகைய பெருந் தீமைகளை அவர்கள் சமாதானம் என்கின்றனர்.
23 ஏனெனில் தங்கள் குழந்தைகளைப் பலியிட்டாலும், அல்லது மறைவான மறைச் சடங்குகளைக் கொண்டாடினாலும், அல்லது விந்தையான வழக்கப்படி களியாட்டங்கள் நடத்தினாலும்,
24 தங்கள் வாழ்க்கையையோ திருமணங்களையோ அவர்கள் ஒருபோதும் தூய்மையாய்க் காப்பதில்லை; மாறாக, ஒருவனையொருவன் பொறாமையால் கொலை செய்கிறான், விபசாரத்தால் ஒருவனுக்கு ஒருவன் துயர் விளைக்கிறான்.
25 எங்கும் புரட்சி, இரத்தம், கொலை, களவு, வஞ்சகம்; ஊழல், பிரமாணிக்கமின்மை, குழப்பம், பொய்யாணை;
26 நன்மை இன்னதென்று உணராத அறிவின் மயக்கம், பிறர் செய்த நன்மைகளை மறத்தல்; ஆன்மாக்களைத் தீட்டுப்படுத்தல், இயல்புக்கு மாறான காமவேட்டை; மணவாழ்வில் தாறுமாறு, விபசாரம், ஒழுக்கக் கேடு முதலியன மலிந்து போயின.
27 ஏனெனில், பெயரைக் கூடச் சொல்லக் கூடாத சிலை வழிபாடு தான் தீமைகளுக்கெல்லாம் துவக்கமும் காரணமும் முடிவுமாகும்.
28 ஏனெனில், அவற்றை வணங்குகிறவர்கள் மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர்களாகிறார்கள்; அல்லது பொய்களை இறைவாக்கு போல் கூறுகிறார்கள்; நேர்மையாய் வாழ்வதில்லை; தாராளமாய்ப் பொய்யாணை இடுகிறார்கள்.
29 உயிரற்ற சிலைகளில் தங்கள் நம்பிக்கையை வைப்பதால் பொய்யாணையிட்டாலும் தங்களுக்குத் தீமை வருமென எண்ணுவதில்லை.
30 ஆனால் இரண்டு காரணங்களை முன்னிட்டு நீதியான தண்டனைகள் அவர்களுக்குக் கிடைக்கும்: ஒன்று: சிலைகளுக்குத் தங்களைத் தொண்டர்களாக்கிக் கடவுளைப்பற்றிக் கீழான எண்ணங்கொண்டனர்; இரண்டு: பரிசுத்தத்தை இகழ்ந்து நீதிக்கு முரணாகவும் வஞ்சகத்தோடும் ஆணையிட்டார்கள்.
31 பொல்லாதவர் எவற்றின் பெயரால் ஆணையிட்டார்களோ அவற்றின் ஆற்றல் அவர்களின் வஞ்சனையைத் தண்டிப்பதில்லை; ஆனால், பாவஞ் செய்கிறவர்களுக்குரிய நீதியான தண்டனையே அவர்களின் வஞ்சனையைத் தண்டிக்கிறது
அதிகாரம் 15
1 நீரோ, எங்கள் இறைவா, பரிவும் உண்மையும் பொறுமையுமுள்ளவர்; இரக்கத்தேடு அனைத்தையும் ஆளுகிறீர்.
2 நாங்கள் பாவம் கட்டிக் கொண்டாலும், நாங்கள் உமக்குத்தான் சொந்தம்; எனெனில் உமது வல்லமையை அறிவோம். ஆனால் நாங்கள் பாவம் கட்டிக்கொள்ள மாட்டோம்; ஏனெனில் உம்மவர்களாகவே நாங்கள் எண்ணப்படுகிறோம் என்பதை அறிவோம்.
3 உம்மை அறிதலே நிறைவான நீதி; உம் வல்லமையை அறிதலோ சாகாமைக்கு ஆணிவேர்.
4 மனிதர்களுடைய திறமையின் தீய நோக்கத்தாலும் எங்களைத் தவறான நெறியில் இழுத்துப் போக முடியவில்லை; வண்ண ஓவியர்களின் பயனற்ற உழைப்போ, பல நிறங்கள் தீட்டிய உருவமோ எங்களைக் கெடுக்கவில்லை.
5 அவற்றின் தோற்றம் அறிவிலிகளுக்குத் தான் ஏக்க மூட்டினது; அவர்கள் தான் செத்துப்போன உருவமொன்றின் உயிரற்ற சாயலை விரும்புகிறார்கள்.
6 அவற்றைச் செய்கிறவர்களும் வணங்குகிறவர்களும், அவற்றுக்கு வழிபாடு செலுத்துகிறவர்களும், தீமையை விரும்புகிறவர்களே; அத்தகைய நம்பிக்கைக்கும் அவர்களுக்கும் பொருத்தமே.
7 குயவன் இளகிய மண்ணைக் பிசைந்து, நமக்குப் பயன்படும் மட்கலங்களை அக்கறையோடு செய்கிறான்; ஒரே மண்ணைக் கொண்டு தான் நல்ல வகையிலும் மாறான வகையிலும் பயன்படுகிற பாண்டங்களைச் செய்கிறான். இவற்றுள் ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன்பட வேண்டுமென மண்ணால் வனையும் குயவனே தீர்மானிக்கிறான்.
8 சிறிது காலத்திற்கு முன்பு மண்ணால் உண்டாக்கப்பட்டுத் தனக்குக் கடனாகத் தரப்பட்ட ஆன்மாவை இன்னும் சிறிது காலத்திற்குள் திருப்பிக் கையளிக்கும்போது, தான் எடுக்கப்பட்ட மண்ணுக்கே திரும்பிப்போகப் போகிற இந்தக் குயவன் வீணாய் உழைத்து அதே மண்ணிலிருந்து ஓர் அற்ப தெய்வத்தை உருவாக்குகிறான்.
9 இவ்வாறிருந்தும், அவன் தான் சாகவேண்டியவனே என்பதையும், தன் வாழ்க்கை மிகக் குறுகியது என்பதையும் எண்ணிப் பார்க்கிறதில்லை; ஆனால், பொன், வெள்ளியால் வேலை செய்பவர்களோடு போட்டியிடுகிறான்; பித்தளையில் வேலை செய்கிறவர்களைப் போல் செய்ய முயல்கிறான்; போலி உருவங்களைச் செய்வது தனக்கு மகிமையென நினைக்கிறான்.
10 அவன் உள்ளமோ வெறும் சாம்பல்தான்; அவனது நம்பிக்கை புழுதியிலும் தாழ்வானது; அவன் வாழ்வு களிமண்ணிலும் ஈனமானது.
11 ஏனெனில் தன்னை உருவாக்கியவரும், தனக்கோர் ஆற்றல்மிக்க ஆன்மாவை அளித்து தனக்குள் உயிருள்ள ஆவியை விட்டவரும் யாரென்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.
12 அவனோ நம் வாழ்வை ஒரு விளையாட்டென்றும், பணம் சேர்க்கக்கூடிய ஒரு திருவிழாச் சந்தையென்றும் நினைக்கிறான், ஒருவன் எவ்வகையிலும்- இழிவான வழியிலுங் கூட பணம் சேர்க்கலாம் என்பது அவனது கருத்து.
13 உடையக் கூடிய பாண்டங்களையும் சிலைகளையும் நிலத்தின் மண்ணால் தான் செய்யும் போது, தான் பாவங் கட்டிக்கொள்கிறதை இந்தமனிதன் மற்றெல்லாரையும் விட மிக நன்றாக அறிந்திருக்கிறான்.
14 உம் மக்களை ஒடுக்கிய பகைவர்கள் அனைவரும், அறியாக் குழந்தையை விட அறிவீனராயும், இரங்கத் தக்கவர்களாயும் இருக்கின்றனர்.
15 ஏனெனில் கண்களால் பார்க்கவோ மூக்கினால் மூச்சு விடவோ காதுகளால் கேட்கவோ விரல்களால் தொட்டுணரவோ கால்களால் நடக்கவோ இயலாத புறவினத்தாரின் சிலைகளையெல்லாம் தெய்வங்கள் என இவர்கள் எண்ணிவந்தனர்;
16 அவற்றைச் செய்தவன் வெறும் மனிதனே; அவற்றை உருவாக்கியவன் உயிரைக் கடனாகப் பெற்றவன்; ஆனால் தன்னையொத்த ஒரு தெய்வத்தை எந்த மனிதனாலும் செய்ய இயலாது.
17 அவனோ சாகக்கூடிய மனிதன்; அக்கிரமம் நிறைந்த தன் கைகளால் அவன் செய்வதோ ஓர் உயிரற்ற உருவம்; தான் வணங்குகிற சிலைகளை விட அவன் எவ்வளவோ மேலானவன்; ஏனெனில் அவனுக்கு உயிருண்டு அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.
18 மிகுந்த வெறுப்புக்குரிய விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்; அறிவில்லாத மிருகங்களினும் அவை தாழ்ந்தவை.
19 மிருகங்கள் என்ற அளவிலும் விரும்பிப் பார்க்கக்கூடிய அழகு கூட அவற்றின் தோற்றத்தில் இல்லை; அவற்றைக் கடவுள் மதிக்கவுமில்லை, ஆசீர்வதிக்கவுமில்லை.
அதிகாரம் 16
1 ஆதலால் அந்த மனிதர்கள் அவற்றைப் போன்ற உயிரினங்களாலேயே தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்; மிருகங்களின் பெருங்கூட்டத்தால் வதைக்கப்பட்டார்கள்.
2 இத்தகைய தண்டனைக்குப் பதிலாக நீர் உம் மக்களுக்குப் பரிவே காட்டினீர்; அவர்கள் ஆவலால் விரும்பிய சுவைமிகுந்த காடைகளை அவர்களுக்கு உண்ணக்கொடுத்தீர்.
3 எகிப்தியர் உணவு அருந்த விரும்பிய போதிலும், அவர்கள் மேல் ஏவப்பட்டவை மட்டில் உண்டான அருவருப்பால் அவர்களுக்கு உணவின் மேலிருந்த நாட்டமே அற்றுப்போயிற்று; ஆனால் உம் மக்களோ குறுகிய காலம் வருந்தின பின் வயிறாரப் பல்சுவையுணவை உண்டார்கள்.
4 ஏனெனில் கொடுமை செய்கிறவர்களுக்கு நிறை செய்ய இயலாத பற்றாக்குறை வரவேண்டியிருந்தது; உம் மக்களுக்கோ அவர்களுடைய பகைவர்கள் எவ்வாறு வாதிக்கப்படுகின்றனர் என்று மட்டும் காட்ட வேண்டியிருந்தது
5 உம் மக்கள்மேல் கொடிய விலங்குகள் கடுஞ்சீற்றத்தோடு பாய்ந்த போது, நௌpந்து வந்த நச்சுப் பாம்புகளின் கடியால் அவர்கள் அழிந்துகொண்டிருந்த போது.
6 உமது சினம் இறுதிவரை நீடித்துவிடவில்லை. திருந்துவதற்காகச் சில காலமே அவர்கள் தொல்லையுற்றனர்; பிறகு, உம் திருச்சட்டத்தின் கட்டளையை அவர்களுக்கு நினைவூட்ட மீட்பின் அடையாளமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.
7 அப்போது அதன் பக்கம் திரும்பியவனுக்கு அவன் பார்த்த பொருள் நலந்தரவில்லை, அனைவர்க்கும் மீட்பரான நீரே நலந்தந்தீர்.
8 எந்தத் தீமையிலிருந்தும் விடுவிக்கிறவர் நீரே என்பதை இதனாலும் எங்கள் மாற்றார்க்கு எண்பித்தீர்.
9 அவர்களோ வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும் கடியுண்டு செத்தார்கள்; தங்களைக் குணமாக்கிக் கொள்ள அவர்களுக்கு வழியில்லை; இத்தகைய தண்டனைகள் கிடைத்தல் அவர்களுக்குத் தகும்.
10 ஆனால் நச்சுப் பாம்புகளின் பற்களால் கூட உம் மக்களை வீழ்த்த முடியவில்லை: உமது இரக்கம் அவர்களுக்கு உதவியாய் வந்து குணப்படுத்திற்று.
11 உம் வாக்குகளை அவர்களுக்கு நினைவூட்டவே அவர்கள் அவ்வாறு கடிக்கப்பட்டனர்; ஆனால் உடனே குணமாக்கப்பட்டனர்; ஆழ்ந்த மறதியில் மூழ்கி அவர்கள் உம் பரிவை உணராமல் போய்விடாதபடி இவ்வாறு நடந்தது.
12 பச்சிலையோ மருந்தோ அவர்களுக்கு நலந்தரவில்லை; ஆண்டவரே அனைத்தையும் குணமாக்கும் உம் வார்த்தையே நலந்தந்தது.
13 வாழ்வும் சாவும் உமக்குக் கட்டுப்பட்டவை; மனிதர்களைக் கீழுலுக வாயில் வரை கொண்டு சென்று திரும்பக் கூட்டி வருகிறவர் நீரே.
14 மனிதனோ தன் தீய குணத்தால் சாவை வருவிக்கலாம்; ஆனால் பிரிந்து விட்ட ஆவியை மீண்டும் கொண்டு வரவோ, அடைபட்ட ஆன்மாவை விடுவிக்கவோ அவனால் இயலாது.
15 உமது கையிலிருந்து தப்புவது இயலாத ஒன்று.
16 உம்மை அறிந்துகொள்ள மறுத்துவிட்ட பொல்லாதவர்கள்; உமது கைவன்மையால் வதைக்கப்பட்டார்கள்; வெள்ளப் பெருக்காலும் கல்மழையாலும் கடும்புயலாலும் துன்புறுத்தப்பட்டுத் தீயால் முற்றிலும் எரிக்கப்பட்டனர்.
17 எல்லாவற்றையும் விட நம்பமுடியாதது எதுவென்றால், அனைத்தையும் தணியச் செய்யும் தண்ணீரில் அந்த நெருப்பு அணையாமல் இன்னும் மிகுதியாய் எரிந்தது தான். ஏனெனில் இயற்கை முழுவதுமே நீதிமான்களுக்காகப் போராடுகிறது.
18 அக்கிரமிகளுக்கு எதிராக அனுப்பப்பட்ட உயிர்களை எரித்து விடாதபடிக்கு நெருப்பு தன் அனலைச் சிலவேளைகளில் குறைத்துக் கொண்டது; கடவுளின் தண்டனைத் தீர்ப்புதான் தங்களை விரட்டி வருகிறது என்பதை அவர்கள் கண்டறியவே அவ்வாறு நடந்தது.
19 அக்கிரமம் நிறைந்த நாட்டின் விளைச்சலை அழிக்கவே, மற்றும் சிலவேளைகளில் தண்ணீரின் நடுவிலும் நெருப்பு தன் ஆற்றலினும் மிகுந்த வெப்பத்தோடு எரிந்தது.
20 இவற்றுக்கு முற்றிலும் மாறாக, உம் மக்களுக்கு வானதூதர்களின் உணவைத் தந்து உண்பித்தீர். எவ்வகை இனிமையும் சுவையும் தன்னுள் கொண்ட உணவை அவர்களுடைய உழைப்பில்லாமலேயே விண்ணகத்திலிருந்து அவர்களுக்கு உண்ணத் தந்தீர்.
21 நீர் கொடுத்தருளிய அந்த உணவு உம் பிள்ளைகள் மட்டில் உமக்குள்ள இனிமையைக் காட்டிற்று; ஏனெனில் உண்பவனின் சுவையுணர்வுக்கேற்றவாறு மாறி அவனவன் விரும்பியவாறு சுவை தந்தது.
22 கல்மழையின் போது எரிந்து தூறலில் சுடர்விட்ட நெருப்பு தான் மாற்றாருடைய விளைச்சல்களை அழித்தது என்று அறிந்து கொள்ளவே, பனியும் பனிக்கட்டியும் உருகாமல் தீயின் வெம்மையைத் தாங்கின.
23 ஆனால் அதே நெருப்பு நீதிமான்களை உண்பிக்கும்படிக்குத் தனது இயல்பான வெம்மையையும் மறந்து விட்டது.
24 படைத்தவரான உமக்கு ஊழியம் செய்கிற படைப்புப் பொருள் அக்கிரமிகளைத் தண்டிக்க முனைப்போடு முயல்கிறது; உம்மை நம்பினவர்களுக்குப் பரிவோடு தளர்ந்து கொடுக்கிறது.
25 ஆதலால் தான் அவ்வுணவும் முன்னாளில் தேவைப்பட்டவர்களின் ஆவலுக்கேற்றவாறு உணவாகி அனைவரையும் உண்பிக்க விரும்பிய உம் திருவுளத்தை நிறைவேற்றிற்று.
26 இதைக் கொண்டு ஆண்டவரே, உம் அன்பைப் பெற்ற உம் மக்கள், மனிதனை உண்பிப்பது வயலில் விளைந்தவையன்று, ஆனால் உமது வார்த்தையே உம்மை நம்பினவர்களைக் காப்பாற்றுகிறது என்பதை அறிந்துகொண்டார்கள்.
27 எது நெருப்பினால் அழிக்கப் படவில்லையோ அது கடந்து செல்லும் கதிரவனொளியால் எளிதில் சூடாகி உருகிற்று;
28 கதிரவன் எழுமுன்பே எழுந்து உமக்கு நன்றி கூறவும், வைகறை வேளையில் உம்மைப் பார்த்து மன்றாடவும் வேண்டுமென்று இதனால் உணர்த்தப்பட்டது.
29 ஏனெனில் நன்றி கெட்டவனின் நம்பிக்கை குளிர் காலத்துப் பனி போல் உருகிவிடும்; பயனற்ற தண்ணீர் போல் ஓடி வீணாகும்.
அதிகாரம் 17
1 உம்முடைய தீர்ப்புகள் மிக மேன்மையானவை, சொல்லால் விளக்க முடியாதவை; ஆதலால் தான் கற்றுத் தெளியாத ஆன்மாக்கள் தவறிப் போயின;
2 பொல்லாதவர்கள் பரிசுத்த மக்களினத்தைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்தி விட்டதாக எண்ணியிருந்த போது அவர்கள் தாமே காரிருளின் அடிமைகளாகவும் நீண்ட இரவின் கைதிகளாகவும் தங்கள் வீடுகளில் அடைபட்டு முடிவில்லாப் பராமரிப்புக்குப் புறம்பாக்கப் பட்டவர்களாய்க் கிடந்தார்கள்.
3 மேலும், மறதியென்னும் இருளடர்ந்த திரையின் பின்னால் தங்கள் மறைவான பாவங்களில் மறைந்து கொண்டதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள், அச்சத்தால் கலங்கி நடுநடுங்கியவர்களாய்க் கொடிய காட்சிகளால் திகிலுற்றுச் சிதறுண்டார்கள்.
4 அவர்கள் பதுங்கிக் கிடந்த உள்ளறைகள் கூட அவர்களை அச்சத்தினின்று காப்பாற்றவில்லை: திகிலூட்டும் பேரொலிகள் அவர்களைச் சுற்றிலும் மருட்டின; வாடிய முகங்களோடு தோன்றிய துயர ஆவிகள் தென்பட்டன.
5 நெருப்பின் ஆற்றலாலும் வெளிச்சம் கொடுக்க முடியவில்லை; விண்மீன்களின் ஒளிமிகுந்த சுடர்களாலும் அந்த அச்சந்தரும் இரவின் இருளை நீக்கமுடியவில்லை.
6 தானே பற்றியெரிந்து திகிலுண்டாக்கும் தீயைத் தவிர வேறெதுவும் அவர்கள் முன்னால் தோன்றவில்லை; அவர்களோ திகில்பிடித்துத் தாங்கள் பார்த்தவை பாராதவற்றினும் நடுக்கந்தருபவை என்று நினைத்தனர்.
7 மந்திரவாதிகளின் மாயங்களெல்லாம் நகைப்புக்குரியனவாயின, அவர்கள் பெருமை பாராட்டிய ஞானம் ஏளனத்துக்குள்ளாயிற்று.
8 ஏனெனில் வருந்தி வாடின உள்ளத்தினின்று அச்சத்தையும் திகிலையும் அகற்றுவதாக வாக்களித்தவர்களே நகைப்புக்கிடமான அச்சத்திற்கு ஆளாகி வருந்தினர்.
9 காட்சியேதும் அவர்களுக்குத் திகிலுண்டாக்காமற் போயினும், மிருகங்கள் கடந்து போவதையும் பாம்புகள் சீறுவதையும் கேட்டுத் திகிலுற்று நடுநடுங்கி மாண்டுபோனார்கள்; எவ்வகையிலும் தவிர்க்க முடியாத காற்றைக்கூட ஏறிட்டுப்பார்க்க மறுத்தார்கள்.
10 தீயவன் ஒரு பெரிய கோழை, தானே தனக்கெதிராய்ச் சான்று பகிர்கிறான் மனச்சான்றின் குத்தலுக்கு ஆளாகி இடர்களையெல்லாம் மிகைப்படுத்துகிறான்.
11 இனி, அச்சம் என்பது பகுத்தறிவினிடமிருந்து வரும் உதவிகளைக் கைதுறந்து விடுதலே அன்றி வேறன்று.
12 தன் உள்ளத்தில் நம்பிக்கை அற்றுப் போனதால் தான் படும் வேதனைக்குக் காரணம் யாதென்றறியாமல் இன்னும் மிகுதியான துன்பத்திற்கு ஆளாகிறான்.
13 நிற்க, உண்மையிலேயே வலிமை சிறிதும் இல்லாததும், வலிமையற்ற கீழுலகின் ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான இரவு முழுவதும் அவர்கள் யாவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில்,
14 சிலவேளைகளில் மாபெரும் பேயுருவங்களால் விரட்டப்பட்டனர்; சிலவேளைகளில் அறிவிழந்து உள்ளங்குன்றிப் போயினர்; ஏனெனில் எதிர்பாராத திகில் அவர்களைத் திடீரென ஆட்கொண்டு கலங்க வைத்தது.
15 அங்கிருந்தவன் ஒவ்வொருவனும் கீழே விழுந்தான்; இவ்வாறு இரும்பால் செய்யப்படாத சிறையில் அடைபட்டுக் கிடந்தான்.
16 உழவுத்தொழில் செய்பவனாயினும் இடையனாயினும், பாலைநிலத்தில் பாடுபட்டு வேலை செய்யும் தொழிலாளியாயினும், அதில் அகப்பட்டுத் தவிர்க்க முடியாத இடுக்கண் அடைந்தான்;
17 ஏனெனில் அனைவரும் காரிருள் என்னும் ஒரே சங்கிலியால் கட்டுண்டனர். சீற்றத்தோடு சுழன்று வரும் காற்றின் ஓசையோ, படர்ந்த கிளைகளிலிருந்து வரும் பறவைகளின் இனிய குரலோ, பெருக்கெடுத்துப் பாய்ந்து வரும் வெள்ளத்தின் தாளமோ,
18 பெயர்த்துத் தள்ளப்பட்டு விழும் பாறைகளின் பேரொலியோ, தாவியோடும் தென்படாத விலங்குகளின் ஓட்டமோ, மிக்க கொடிய மிருகங்களின் கர்ச்சனைக் கதறலோ, மலைகளின் பிளவுகளினின்று கேட்கும் எதிரொலியோ, எதுவாயினும் அது அவர்களை அச்சத்தால் அசைய முடியாமற் செய்து விட்டது.
19 உலக முழுவதும் பட்டப்பகல் போல் ஒளிபெற்றுத் தனக்குரிய வேலையில் அவனவன் ஈடுபட்டிருக்க,
20 எகிப்தியரை மட்டும் அடர்ந்த காரிருள் படர்ந்து கவிந்துகொண்டது, அவர்களை விழுங்கக் குறிக்கப்பட்ட இருளின் சாயல் அது; ஆயினும் இருளை விட அவர்களே அவர்ளுக்குத் தாங்க முடியாத பெருஞ் சுமையாய் இருந்தார்கள்.
அதிகாரம் 18
1 ஆனால் உம் பரிசுத்தர்களுக்கு மிகுதியான ஒளியிருந்தது; அவர்களுடைய குரலை எகிப்தியர்கள் கேட்டார்கள்; அவர்களின் உருவங்களையோ காணவில்லை. தாங்களுற்ற வேதனைகளை அவர்கள் உறாததால் அவர்களைப் பேறுபெற்றவர்கள் என்று எண்ணினர்.
2 முன்பு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தும், இப்பொழுது உம் பரிசுத்தர்கள் எகிப்தியர்களுக்குத் திருப்பிக் கெடுதியேதும் செய்யாததைத் குறித்து எகிப்தியர்கள் நன்றியுணர்வு காட்டினர். தாங்கள் செய்த தீமைகளுக்காக மன்னிப்பு வேண்டினர்.
3 இருளுக்குப் பதிலாய்த் தீப் பிழம்பான தூண் ஒன்றை அவர்களுக்குத் தந்தீர். முன்பின் அறியாத வழியில் அது அவர்களுக்கு வழி காட்டிற்று; மகிமை பொருந்திய பயணத்திற்கு அத்தூண் வெம்மை தணிந்த கதிரவன் போல் இருந்தது.
4 திருச்சட்டத்தின் அழியாத ஒளி உம் மக்கள் வழியாய் உலகிற்கு அளிக்கப்பட வேண்டியிருந்தது; அவர்களை எகிப்தியர் சிறையில் அடைத்து வைத்ததால், இவர்கள் வெளிச்சம் பெறாமல் இருளில் அடைக்கப்படவேண்டியது நியாயமே.
5 அவர்கள் உம் பரிசுத்தர்களின் குழந்தைகளைக் கொல்லத் தீர்மானித்த போது, ஒரு குழந்தை மட்டும் கைவிடப்பட்டு அதன் பின் காப்பாற்றப்பட்டது; அவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளை மாய்த்துவிட்டீர்; அவர்கள் அனைவரையும் பெருவெள்ளத்தால் ஒருமிக்க மூழ்கடித்துவிட்டீர்.
6 தாங்கள் நம்பிக்கை வைத்திருந்த வாக்குறுதிகளை மெய்யாகவே அறிந்து அவற்றில் துணிவோடு மகிழ்ந்திருக்கும்படிக்கு எங்கள் தந்தையர்க்கு அவ்விரவு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
7 நீதிமான்களின் விடுதலையையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.
8 எங்கள் பகைவர்களைத் தண்டித்த அந்த ஒரே செயலால் எங்களை உம்மிடம் அழைத்து மகிமைப் படுத்தினீர்.
9 நல்லவர்களின் பரிசுத்த மக்கள் மறைவில் பலிகள் தந்தனர்; நன்மைகளாயினும் தீமைகளாயினும் அவற்றைச் சரிநிகராகப் பகிர்ந்துகொள்வோம் என்று சொல்லி, இறைவனது திருச்சட்டத்திற்குப் பரிசுத்தர்கள் உடன்பட்டனர்; தந்தையர்களின் புகழ்ப்பாடல்களைப் பாடிப் போற்றினர்.
10 பகைவர்கள் கதறியழும் குரல்கள் எதிரொலித்தன; தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் புலம்பியழுதது எங்கும் பரவிற்று.
11 அடிமையும் அவன் தலைவனும் ஒரே வகையில் தண்டிக்கப்பட்டனர்; பொதுமக்களும் அரசனும் ஒரே துன்பத்திற்கு ஆளாயினர்.
12 எண்ணிலடங்காத பேர்கள் ஒரே வகைச் சாவுக்குட்பட்டு எல்லாரும் ஒன்றாக மடிந்து கிடந்தனர்; உயிரோடிருந்தவர்களால் செத்து மடிந்தவர்களைப் புதைக்கக் கூட இயலவில்லை; ஒரே நொடியில் அவர்கள் இனத்தாருள் தலைசிறந்தவர்கள் எல்லாரும் மாய்ந்து போனார்கள்.
13 மந்திரவாதிகளின் சொற்களுக்குச் செவிமடுத்து அவர்கள் எதையுமே நம்ப மறுத்துவிட்டாலும், அவர்களுடைய தலைப்பேறுகள் கொல்லப்பட்ட போது, உம் மக்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதை ஏற்றுக்கொண்டனர்.
14 எல்லாம் ஆழ்ந்த அமைதியில் அடங்கியிருக்கையில், இரவு வேளையில் பாதி கடந்தபின் நள்ளிரவு நேரத்தில்,
15 உமது எல்லாம் வல்ல வார்த்தை விண்ணகத்திலுள்ள அரச அரியணையை விட்டுக் கிளம்பி அஞ்சா நெஞ்சம் படைத்த போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் நடுவில் பாய்ந்தது.
16 உமது கண்டிப்பான கட்டளையாகிய கூரிய வாளைக் கையிலேந்தி, வந்து நின்று உலக முழுவதையும் சாவினால் நிரப்பிற்று; மண்ணுலகில் காலூன்றி விண்ணகத்தைத் தொடும்படி நின்றது.
17 அப்போது உடனே திகிலுண்டாக்கும் கனவுக் காட்சிகள் அவர்களைக் கலங்க அடித்தன; எதிர்பாராத பேரச்சங்கள் அவர்களைப் பீடித்து வருத்தின.
18 இங்கொருவனும் அங்கொருவனும் குற்றுயிராய் விழும் போது தாங்கள் மடிவதன் காரணத்தைத் தெரியப்படுத்துவார்கள்.
19 ஏனெனில் தாங்கள் அனுபவித்த வேதனைகளின் காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் சாகாதபடி அவர்கள் முன்பு கண்ட கனவுக் காட்சிகளே அதை அவர்களுக்கு முன்னறிவித்தன.
20 சாவின் துன்பம் நீதிமான்களுக்கும் வந்துற்றது; பாலை நிலத்திலிருந்த மக்கள் கூட்டத்தைக் கொள்ளை நோய் தாக்கிற்று; ஆயினும் உமது சினம் தொடர்ந்து நீடிக்கவில்லை.
21 ஏனெனில் குற்றமற்றவர் ஒருவர் மக்களுக்காகப் பரிந்து பேசி மன்றாட விரைந்தார்; தமது திருப்பணியென்னும் படைக்கலத்தைத் தாங்கி, மன்றாட்டையும் பரிகாரத்திற்கான தூபத்தையும் ஏந்தி, உம் சினத்தைத் தடுத்து நின்று அழிவை முடிவுறச் செய்தார். இதனால் அவர் உம் ஊழியர் என்பதைக் காட்டினார்.
22 உடலின் வலிமையாலோ படைக்கலங்களின் ஆற்றலாலோ, அவர் உமது ஆத்திரத்தைத் தடுத்து நிறுத்தவில்லை; ஆனால் எங்கள் தந்தையர்க்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் நினைவூட்டித் தம் வார்த்தையால் அந்தத் தண்டனைத் தூதனைத் தடுத்து நிறுத்தினார்.
23 செத்தவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஏற்கெனவே ஒரு குவியலாகிக் கொண்டிருக்கும் போது, அவர் குறுக்கிட்டுக் கடுஞ் சினத்தைத் தடுத்து நிறுத்தி உயிரோடிருக்கிறவர்களிடம் போகாமல் செய்து விட்டார்.
24 அவர் அணிந்திருந்த நீண்ட அங்கி உலக முழுவதையும் குறித்து நின்றது; அதிலிருந்த மாணிக்கக் கல்வரிசை நான்கிலும் மூதாதையரின் மகிமையான பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன; அவர் தலையிலிருந்த மணிமகுடத்தில் உமது மாட்சிமிக்கத் திருப்பெயரும் வரையப்பட்டிருந்தது.
25 அழிவு விளைக்கும் தூதன் இவற்றைத் கண்டு அச்சத்தால் பின்வாங்கிக்கொண்டான்; ஏனெனில் உம்முடைய சினத்தினால் அவ்வளவு சோதிக்கப்பட்டதே அவர்களுக்குப் போதுமான தண்டனையாய் இருந்தது.
அதிகாரம் 19
1 பொல்லாதவர்களையே இரக்கமற்ற கடுஞ்சினம் இறுதி வரையில் தாக்கித் துன்புறுத்திற்று; ஏனெனில் அவர்கள் பிறகு என்ன செய்வார்கள் என்பதைக் கடவுள் ஏற்கெனவே அறிந்திருந்தார்;
2 எபிரேயர்களுக்குப் புறப்பட்டுப்போக விடை கொடுத்துவிட்டு, அவர்களை வெளியேறும்படி விரைவு படுத்திய அதே எகிப்தியர் பிறகு தங்கள் மனத்தை மாற்றிக் கொண்டு அவர்களைப் பின்னாலேயே துரத்தி வருவர் என்பதை அறிந்திருந்தார்.
3 எகிப்தியர் தங்களுள் செத்தவர்களின் கல்லறைகளில் புலம்பி, அவர்களுக்காக இன்னும் துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கையிலேயே மற்றொரு மடமையான தீர்மானம் செய்து கொண்டு, முன்பு வெளியேறும்படி யாரை மன்றாடி வற்புறுத்தினார்களோ அவர்களையே தப்பியோடும் அடிமைகளை விரட்டுவது போல் பின்னாலேயே துரத்திக் கொண்டு போனார்கள்.
4 அவர்களுடைய நடத்தைக்குப் பொருத்தமான விதியே அவர்களை இந்த முடிவுக்கு வரும்படி செய்தது; ஏற்கெனவே நடந்ததையெல்லாம் மறக்கச் செய்தது; அவர்களுடைய வேதனைகளில் குறையாயிருந்த தண்டனையை நிறைவு செய்யவே இவ்வாறு நடந்தது.
5 இவ்வாறு உம் மக்கள் வியப்புக்குரிய வகையில் கடலைக் கடந்தனர்; அவர்களின் பகைவர்களோ புதுமையான வகையில் சாவைக் கண்டனர்.
6 உம் பிள்ளைகள் இடையூறின்றிக் காக்கப்படும்படிக்கு உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து படைப்பு முழுவதும் தன் இயல்பில் புதிதாக உருப்பெற்றது.
7 அவர்களது பாசறைக்குக் கார்மேகம் நிழல் கொடுத்தது; முன்பு தண்ணீரிருந்த இடத்தில் இப்பொழுது உலர்ந்த தரை தோன்றிற்று; செங்கடலில் செம்மையான வழியும் மோதியடிக்கும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின.
8 உமது கையால் காப்பாற்றப்பட்டவர்கள் ஓரினமாய் அவ்வழியே கடந்து சென்றனர்; வியப்புக்குரிய விந்தைச் செயல்களைக் கண்டு கொண்டே போயினர்.
9 நல்ல மேய்ச்சலைக் கண்ட குதிரைகளைப் போல் மகிழ்ந்து, ஆட்டுக் குட்டிகளைப் போல் துள்ளிக் கொண்டு தங்களை மீட்ட ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்தார்கள்;
10 தாங்கள் அந்நியராகக் குடியிருந்த நாட்டில் நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்; விலங்கினங்களுக்குப் பதிலாகத் தரையானது கொசுக்களைத் தோற்றுவித்ததையும், ஆறுகளிலிருந்து மீன்களுக்குப் பதிலாகத் தவளைக் கூட்டங்கள் புறப்பட்டதையும் அவர்கள் மறக்கவில்லை.
11 பின்பு சுவையான இறைச்சியுணவு வேண்டுமென அவர்கள் விருப்பங் கொண்டு கேட்ட போது, 'புதியதொரு வகையில் பறவைகள் உண்டாவதை அவர்கள் கண்டார்கள்.
12 அவர்களுடைய விருப்பத்தை நிறைவு செய்யக் கடலிலிருந்து காடைகள் எழுந்து வந்தன! இடியோசையின் பேரடையாளங்கள் முன் செல்ல பாவிகள்மீது தண்டனைகள் விழுந்தன; தாங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நீதியான முறையில் தான் துன்புற்றார்கள்.
13 ஏனெனில் அந்நியர்கள் மீது மிகுதியான வன்மத்தை எகிப்தியர் கொண்டிருந்தார்கள். சோதோம் நகரத்தார் அந்நியர்கள் தங்களிடம் வந்த போது அவர்களுக்கு இடம் கொடுக்க மறுத்தார்கள்; இந்த எகிப்தியரோ தங்களுக்கு நன்மை செய்த விருந்தினரை அடிமைகளாக ஆக்கிவிட்டார்கள்.
14 அதுமட்டுமன்று; முன் சொல்லப்பட்டவர்கள் முதலிலிருந்தே அந்நியர்களிடம் வெறுப்புக் கொண்டிருந்தார்கள்- அதற்காக அவர்களுக்குத் தண்டனை கிடைக்காமற் போகாது-
15 ஆனால் இவர்கள் அப்படியில்லையே: முதலில் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் அந்நியரை ஏற்றுக் கொண்டு விட்டு, அவர்களையும் தங்களைப் போல் சம உரிமையுள்ளவர்களாய் ஆக்கிய பிறகும் கொடிய வேதனைகள் தந்து அவர்களைத் துன்புறுத்தினார்கள்.
16 முன் சொன்னவர்கள் நீதிமானின் கதவருகில் ஆனது போலவே, இவர்களும் கவ்விய காரிருளால் சூழப்பட்டுக் கண்பார்வையை முற்றிலும் இழந்து போய்த் தத்தம் கதவைத் தடவிப் பார்த்து வழி தேட முயன்றனர்.
17 கின்னரத்தில் சுருதிகள் தாங்கள் மாறாமலே இருந்து கொண்டு பண்ணின் இயல்பை மாற்றுவது போலவே, இயற்கையின் ஆற்றல்களும் செய்தன. நிகழ்ந்தவற்றைக் கண்டு இவ்வுண்மையைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
18 நிலத்தில் வாழும் விலங்குகள் நீர்வாழ் விலங்குகளாக மாறின; நீந்தித் திரியும் உயிரினங்கள் நிலத்திற்கு ஏறிவந்தன.
19 தண்ணீரிலும் நெருப்பு தன் இயல்பான ஆற்றலைக் கொண்டிருந்தது; தண்ணீரும் தீயணைக்கும் தன் இயல்பை மறந்து விட்டது.
20 மாறாக, நெருப்புத் தணல் தனக்குள் நுழைந்த உயிரினங்களின் மென்மையான சதையைக் கூடச் சுட்டெரிக்காமல் விட்டு விட்டது; பனிக்கட்டியைப் போல மிக எளிதில் உருகிப் போகும் அந்த விண்ணக உணவையும் நெருப்பு உருக்கவில்லை. ஆம், ஆண்டவரே, எல்லா வகையிலும் உம் மக்களை நீர் மேன்மைப்படுத்தினீர்; மகிமைப்படுத்தினீர்; எக்காலத்திலும் எவ்விடத்திலும் நீர் அவர்களைப் புறக்கணிக்காமல் துணை நின்றீர்.