அதிகாரம் 01
1 யூதாவின் அரசனாகிய அமோன் என்பவனின் மகன் யோசியாஸ் காலத்தில், எசேக்கியாஸ் மகன் அமாரியாஸ், இவர் மகன் கொதோலியாஸ், இவர் புதல்வன் கூசி, இவர் மைந்தன் செப்போனியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு.
2 நிலப்பரப்பின் மேல் இருக்கும் யாவற்றையும் முற்றிலும் தொலைந்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
3 மனிதனையும் மிருகத்தையும் தொலைத்து விடுவோம், வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் தொலைத்து விடுவோம்: கொடியவர்களைக் கவிழ்த்து வீழ்த்துவோம், மனுக்குலத்தை நிலப்பரப்பில் ஒழித்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
4 யூதாவுக்கும் யெருசலேமின் குடிகள் அனைவர்க்கும் எதிராக நாம் கையை நீட்டுவோம்; பாகாலை நினைப்பூட்டும் அடையாளங்களைக் கூடத் தகர்ப்போம்; சிலைவழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் இவ்விடத்திலிருந்து அழிப்போம்.
5 வான்படைகளுக்கு வீட்டுக் கூரையின் மேல் தலை வணங்கிப் பணிசெய்கிறவர்களையும், ஆண்டவரைப் பணிந்து அவர் பேரால் ஆணையிட்டு மிக்கோம் பேராலும் ஆணையிடுகிறார்களே அவர்களையும்,
6 ஆண்டவரைப் பின்தொடராமல் புறங்காட்டித் திரும்புகிறவர்களையும், ஆண்டவரைத் தேடாமலோ, அவரைப் பற்றி விசாரியாமலோ இருக்கிறவர்களையும் அழித்துவிடுவோம்."
7 இறைவனாகிய ஆண்டவர் முன் மவுனமாயிருங்கள்! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; ஆண்டவர் பலியொன்றை ஏற்பாடு செய்து, தாம் அழைத்தவர்களை அர்ச்சித்திருக்கிறார்.
8 ஆண்டவருடைய பலியின் நாளிலே- "தலைவர்களையும், அரசனுடைய புதல்வர்களையும், அந்நிய ஆடை உடுத்தியுள்ள அனைவரையும் தண்டிப்போம்.
9 அரசனின் அரியணையைச் சூழ்ந்திருப்பவர் அனைவரையும், தங்கள் தலைவனின் வீட்டை அக்கிரமத்தாலும், கொள்ளையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்போம்."
10 ஆண்டவர் கூறுகிறார்: "அந்நாளிலே- மீன் வாயிலிருந்து கூக்குரலும், நகரத்தின் புதுப்பேட்டையிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து பேரிரைச்சலும் கேட்கும்.
11 மக்தேஷ் தொகுதியின் குடிகளே, புலம்புங்கள்; ஏனெனில் வணிகர் யாவரும் அழிந்து போயினர், பணம் பெருத்த மனிதரெல்லாம் மாண்டு போயினர்.
12 அக்காலத்தில், விளக்கேந்தி யெருசலேமை நாம் சோதித்துப் பார்ப்போம்: 'ஆண்டவர் நன்மையும் செய்யார், தீமையும் செய்யார்' என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு வண்டல்கள் மேல் கிடக்கிற மனிதர்களைத் தண்டிப்போம்.
13 அவர்களுடைய உடைமைகள் சூறையாடப்படும், வீடுகள் தரைமட்டமாக்கப்படும்; அவர்கள் தங்களுக்கென வீடுகள் கட்டினாலும் அவற்றில் குடியிருந்து பார்க்கமாட்டார்கள்; திராட்சைத் தோட்டங்களை நட்டுப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடித்துப்பார்க்கமாட்டார்கள்."
14 ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது; அண்மையில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது; ஆண்டவரது நாளின் இரைச்சல் மனக்கசப்பைத் தருகிறது, வீரனும் கலங்கி அலறுகிறான்.
15 கடுஞ்சினத்தின் நாளாம் அந்த நாளே, மனத்துயரும் வேதனையும் நிறைந்த நாளாம்; பேரழிவும் பெருநாசமும் கொணரும் அந்நாள், இருட்டும் காரிருளும் சூழ்ந்த நாளாம், கார்முகிலும் அடரிருளும் படரும் அந்நாள்,
16 அரண் சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும், எதிராக எக்காளமும் போர்முரசும் கேட்கும் நாளே.
17 வேதனையை மனிதர்கள் மேல் வரச்செய்வோம், குருடர்களைப் போல் அவர்கள் தடுமாறுவர்; ஏனெனில் ஆண்டவர்க்கு எதிராகப் பாவஞ்செய்தனர்; அவர்களுடைய குருதி புழுதியைப் போலக் கொட்டப்படும், சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.
18 ஆண்டவருடைய கோபத்தின் நாளிலே, அவர்களின் வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றமாட்டா; அவருடைய ஆத்திரத்தின் கோபத்தீயால் உலகமெலாம் அழிக்கப்படும்; மண்ணுலகின் குடிமக்கள் அனைவரையும் திடீரென முற்றிலும் அழித்துப் போடுவார்.
அதிகாரம் 02
1 மானங்கெட்ட இனமே, ஒன்றுகூடுங்கள்.
2 காற்றில் பறக்கும் பதரைப் போல நீங்கள் அடித்துப் போகப்படு முன்பே, ஆண்டவருடைய கடுமையான கோபம் உங்கள் மேல் வந்து விழுமுன்பே, ஆண்டவருடைய கோபத்தின் நாள் உங்கள் மேல் வருமுன்பே கூடிவாருங்கள்.
3 நாட்டிலிருக்கும் எளியோரே, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையைத் தேடுங்கள், தாழ்ச்சியைத் தேடுங்கள்; ஆண்டவருடைய கோபத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கலாம்.
4 காசா பாலைநிலமாக்கப்படும், அஸ்காலோன் பாழ்வெளியாகும்; அசோத்து பட்டப் பகலில் தாக்கப்படும், அக்காரோன் வேரோடு வீழ்த்தப்படும்.
5 கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கிரேத்தியர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பிலிஸ்தியருடைய நாடாகிய கானானே, ஆண்டவரின் வாக்கு உனக்கு எதிராய் உள்ளது; குடியிருக்க ஒருவன் கூட இராதபடி நாம் உன்னைப் பாழாக்குவோம்.
6 இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையர்களின் இளைப்பாறுமிடமாகவும், ஆடுகளின் மேய்ச்சல் நிலமாகவும் இருக்கும்.
7 அந்தக் கடற்கரையானது யூதாவின் வீட்டாருள் எஞ்சியிருப்பவர்களின் உரிமைச் சொத்தாகும், அங்கே தங்கள் கால்நடைகளை மேய்ப்பார்கள். அஸ்காலோன் வீட்டில் மாலையில் உறங்குவார்கள்; ஏனெனில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்களை நினைவு கூர்ந்து முன்னைய நன்னிலைக்குக் கொணர்வார்.
8 நம் மக்களைப் பழித்து, அவர்களுடைய நாட்டெல்லைகளுக்கு எதிராக வீறாப்புப் பேசிய மோவாபின் வசை மொழிகளையும், அம்மோன் மக்களின் பழிப்புரைகளையும் நாம் கேட்டோம்.
9 ஆதலால் மோவாப் சோதோமைப் போலும், அம்மோன் மக்கள் கொமோராவைப் போலும் ஆவார்கள். காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளங்கள் நிறைந்துள்ள பாழ்வெளியாகவும் என்றென்றும் இருக்கும். நம் மக்களில் எஞ்சினோர் அவர்களைக் கொள்ளையடிப்பர், நம் மக்களில் தப்பினோர் அவர்களை உரிமையாக்கிக் கொள்வர்; நம் உயிர் மேல் ஆணையாகச் சொல்லுகிறோம்" என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர்.
10 அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பலன் இதுவே; ஏனெனில் சேனைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் வசை கூறினார்கள், வீறு பேசினார்கள்.
11 ஆண்டவர் அவர்களுக்கு அச்சம் தருபவராய் இருப்பார்; மாநிலத்தின் எல்லாத் தெய்வங்களையும் அழித்துப் போடுவார்; மனிதர் அனைவரும் தத்தம் நாட்டில் அவரையே வணங்குவர், புறவினத்தாரின் தீவுகள் அனைத்தும் அவ்வாறே வணங்கும்.
12 எத்தியோப்பியர்களே, நீங்களுந்தான் நமது வாளால் கொல்லப்படுவீர்கள்.
13 வடதிசைக்கு எதிராகத் தம் கையை உயர்த்தி ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்; நினிவே நகரத்தைப் பாலை நிலம் போல வறண்ட வெளியாக்கிப் பாழாக்குவார்.
14 அதன் நடுவில் கால்நடைகள் கிடைகொள்ளும், காட்டு மிருகங்கள் யாவும் படுத்துக்கிடக்கும்; அதன் தூண் தலைப்புகளில் கூகையும் சாக்குருவியும் இராத் தங்கும், பலகணிகளில் ஆந்தைகள் அலறும்; கதவுகளின் மேல் காக்கைகள் இருந்து கரையும், கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.
15 நானே இருக்கிறேன், எனக்கு நிகர் யாருமில்லை" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அச்சமின்றி இருந்து வந்ததும், அக்களித்து ஆர்ப்பரித்ததுமான நகரம் இதுதானோ? எவ்வளவோ இப்பொழுது பாழாயிற்றே! கொடிய மிருகங்களின் இருப்பிடமாய்விட்டது; அதனைக் கடந்து போகிறவன் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.
அதிகாரம் 03
1 கலகஞ்செய்து தீட்டுப்பட்டவளும், கொடிய நகரமுமாகிய சீயோன் மகளுக்கு ஐயோ கேடு!
2 நாம் சொல்வதை அவள் கேட்பதுமில்லை, நமது திருத்தத்தை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர் மேல் அவள் நம்பிக்கை வைக்கிறதில்லை, தன் கடவுளை அண்டி வருகிறதுமில்லை.
3 அந்நகரில் இருக்கும் அதன் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்களைப் போல்வர்; அதன் நீதிபதிகள், மாலை வேளையில் அலைந்து திரிந்து கிடைக்கும் இரையைக் காலை வரை வைக்காத ஓநாய்கள் போல்வர்.
4 அதன் தீர்க்கதரிசிகள் தற்பெருமை பேசுகிறவர்கள், பிரமாணிக்கமற்ற மனிதர்கள்; அதன் அர்ச்சகர்கள் புனிதமானதைப் பங்கப்படுத்துகின்றனர், திருச்சட்டத்தை மீறி நடக்கின்றார்கள்.
5 அதன் நடுவில் குடிகொண்டிருக்கும் ஆண்டவர் நேர்மையுள்ளவர், அவர் தீங்கு ஏதும் செய்கிறதில்லை; காலை தோறும் அவர் தம் நீதியை வெளிப்படுத்துகிறார், வைகறை தோறும் அது தவறாமல் வெளிப்படும்; ஆனால் நேர்மையற்றவனுக்கு வெட்கமே கிடையாது.
6 புறவினத்தாரை நாம் நாசம் செய்தோம், அவர்களுடைய காவல் கோட்டைகளைத் தகர்த்தோம்; அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினோம், அவற்றில் நடந்து செல்பவன் எவனுமில்லை; எவனும் இராதபடி, யாரும் வாழாதபடி அவர்களுடைய நகரங்கள் பாழ்வெளியாயின.
7 'இனிக் கண்டிப்பாய் நமக்கு நீ அஞ்சி நடப்பாய், நமது திருத்தத்தை ஏற்றுக்கொள்வாய்; நாம் அனுப்பிய தண்டனைகளையெல்லாம் நீ மறக்கமாட்டாய்' என்றெல்லாம் நாம் எண்ணியிருந்தோம்; அதற்கு மாறாக, அவர்கள் தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8 ஆதலால், நாம் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு; ஏனெனில் என் தீர்மானம்: மக்களினங்களையும், அரசுகளையும் ஒன்று சேர்த்து நம் ஆத்திரத்தையும், நம் கோபத்தீயின் கொடுமை முழுவதையும் அவர்கள் மேல் கொட்டித் தீர்த்து விடல் ஆகும். ஏனெனில் நம் வைராக்கியமுள்ள கோபத்தீயினால் உலகெல்லாம் அழிந்து போகும்" என்கிறார் ஆண்டவர்.
9 ஆம், அக்காலத்தில் நாம் மக்களினங்களுக்குத் தூய்மையான உதடுகளை அருளுவோம்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுது கொண்டு, தோளோடு தோள் கொடுத்துப் பணிபுரிவர்.
10 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து நம்முடைய அடியார்கள் காணிக்கையுடன் வருவார்கள்; நம் குடிகளுள் சிதறுண்டவர்களின் மக்கள் நமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவர்.
11 நமக்கு எதிராய் நீ எழுந்து செய்த செயல்களை முன்னிட்டு அந்நாளில் நீ அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில் அப்பொழுது உன் நடுவிலிருந்து இறுமாப்பாய்க் களிகூர்ந்திருப்பவர்களை அகற்றிடுவோம்; இனி ஒருபோதும் நம் பரிசுத்த மலையின் மீது பெருமை காட்டிக் கொள்ள மாட்டாய்.
12 ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் நாம் விட்டு வைப்போம்; இஸ்ராயேலில் எஞ்சினோர் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வர்;
13 அவர்கள் தீமை செய்யமாட்டார்கள், பொய் சொல்லவே மாட்டார்கள்; வஞ்சக நாவென்பது அவர்கள் வாயில் இராது; அச்சுறுத்துவார் யாருமின்றி அவர்கள் மந்தை போல மேய்ந்து இளைப்பாறுவார்கள்."
14 சீயோன் மகளே, மகிழ்ச்சியால் ஆர்ப்பரி, இஸ்ராயேலே, ஆரவாரம் செய்; யெருசலேம் மகளே, உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
15 ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ராயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; நீ இனித் தீமைக்கு அஞ்சமாட்டாய்.
16 அந்நாளில் யெருசலேமை நோக்கி, "சீயோனே, அஞ்ச வேண்டா; உன் கைகள் சோர்ந்து தளராதிருக்கட்டும்!
17 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர், வெற்றி தருபவர்; உன் மட்டில் அவர் மகிழ்ச்சியால் அக்களிப்பார், தம் அன்பினால் உன்னைப் புதுப்பிப்பார்; திருவிழா நாளில் செய்வதுபோல், உன்னைக் குறித்து உரக்கப் பாடித் துள்ளுவார்" என்பார்கள்.
18 உன்னிடமிருந்து தீமையை அகற்றிவிட்டோம், அதற்காக நீ இனி நிந்தையுறமாட்டாய்.
19 இதோ, உன்னைக் கொடுமையாய் நடத்தியவர்களை அந்நாளில் நாம் தொலைத்திடுவோம்; நொண்டிகளைக் காப்போம், சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்போம்; அவமானத்தை அடைந்த அவர்கள் உலகெங்கும் பேரும் புகழும் பெறச் செய்வோம்.
20 அக்காலத்தில் உங்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வருவோம், அப்பொழுது உங்களை நாம் ஒன்று கூட்டுவோம்; ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணரும் போது, உலகத்தின் மக்களினங்கள் நடுவிலெல்லாம் பேரும் புகழும் உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம்" என்கிறார் ஆண்டவர்.