1915-ம் ஆண்டு. கபே சோ பாறைகளுக்கிடையில் ஜாஸியாவும் அவள் தோழிகளும் ஆடு மேய்த்து வந்தாலும் பகல் உணவு அருந்திய பின் சேர்ந்து ஜெபமாலை சொல்வது வழக்கம். ஒருநாள் இவ்வழக்கப்படி, அவர்கள் ஜெபமாலை செய்து கொண்டிருக்கையில், கீழே தாழ்ந்திருந்த பள்ளத்தாக்கின் மேலே, மிக உயரத்திலே ஒரு கம்பீரமான தோற்றம் கிழக்கிலிருந்து மேற்கு முகமாக அசைவதை ஒரு சிறுமி கண்டாள்.
ஏதோ வெள்ளை நிறமான ஒன்று தங்களை நோக்கி வருவதாக மட்டுமே அவர்கள் கண்டனர். அது சிறுமிகளுக்கு நேராக வந்து சில மரங்கள் நின்ற ஓரிடத்தில் அம்மரங்களுக்கு நேரே ஆகாயத்தில் அப்படியே நின்றது. சிறுமிகள் அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். ஒரு சிறுமிலூஸியாவிடம், "அது என்ன?" என்று கேட்டாள். "எனக்கு என்னவென்று தெரியவில்லை" என்றாள் லூஸியா, சிறுமிகள் ஜெபமாலையைத் தொடர்ந்து சொல்லி முடிக்கவும் அது சூரிய வெளிச்சத்தில் காற்றுடன் கலந்து மறைந்து விட்டது.*
* குறிப்பு: போர்த்துக்களில் பிரபல பத்திரிக்கையான "ஓ சேக்கு லோ"வின் ஆசிரியருடைய மகள் மரியதாஸ் ரெயித்தாஸ் என்பவள் ஒரு எழுத்தாளர். பாத்திமா காட்சிகளைப் பற்றி தாம் எதுவும் அறியுமுன்னே கேள்விப்பட்ட ஒரு செய்தியை, பாத்திமா பற்றி ஆராய்ச்சிகள் செய்துள்ள திருவில்லியம் தாமஸ் வால்ஷ் என்பவரிடம் 1946ல் கூறியுள்ளார். அச்செய்தி : "பாத்திமா பகுதியிலுள்ள ஒரு பெண் என்னிடம் இதைச் சொன்னாள். தன் மகளும் வேறு சில சிறுமிகளும் தலையில்லாத ஒரு வெள்ளை மனிதன் ஆகாயத்தில் மிதப்பதைக் கண்டோம் என்று!' என்பதாகும்.
"சுரூபம் போல் ஒரு உருவம் ; வெண்பனியால் செய்யப் பட்டது போலிருந்தது, சூரிய ஒளி பட்டதால், அதனூடே ஊடுருவிப் பார்க்க முடியும் போலிருந்தது. " லூஸியாவின் மனதில் அந்த உருவம் இவ்வாறு பதிந்துள்ளது.
லூஸியா இதைப் பற்றி வீட்டில் எதுவும் பேசவில்லை. ஆனால் மற்றச் சிறுமிகள் வாயிலாக செய்தி வெளியாகி விட்டது. ஜாஸியாவின் வீட்டிற்கும் தெரிந்து விட்டது. ஜாஸியாவின் தாய் மரிய ரோஸா அவளைக் கூப்பிட்டு, "இங்கே பார் லூஸியா, நீ என்னவோ - அது என்னவென்று தெரியவில்லை, அதைக் கண்டாயாமே; என்ன அது?" என்று கேட்டாள். "எனக்கும் அது என்னவென்றே தெரியவில்லையம்மா. யாரோ ஒரு ஆள் போர்வை போர்த்தியது மாதிரி தெரிந்தது. கண்ணும் இல்லை, கையும் இல்லை” என்றாள் லூஸியா.
"பயித்தியக்காரப் பிள்ளைகள்'' என்று எரிச்சலுடன் கூறினாள் மரிய ரோஸா.
ஆனால் அச்சிறுமிகள் அதே தோற்றத்தை அதே இடத்தில் மீண்டும் கண்டனர். 1915-ம் ஆண்டு கோடை காலத்தில் மூன்றாம் முறையாக அதே தோற்றம் அதே இடத்தில் காணப்பட்டது. மீண்டும் செய்திகள் பரவியதால், மரிய ரோசா லூஸியாவிடம் சற்று அழுத்தமாக, "நீ என்ன கண்டாய், லூஸியா? அந்த உருவம் எப்படித் தான் இருந்தது?'' என்று கேட்டாள்.
''அது எப்படி இருந்ததென்று எனக்குச் சொல்லத் தெரிய வில்லையம்மா" என்றாள் லூஸியா.
அண்டை வீட்டார் லூஸியாவை ஒருமாதிரி வேடிக்கை யாகவும், வேதனையளிக்கும் முறையிலும் பார்க்கத் துவக்கினார்கள்.
அவள் சேசு வாங்கியதிலிருந்து ஏற்பட்ட மாற்றம் என அவள் சகோதரிகள் நினைத்தார்கள். சில சமயம் அவள் தன்னை மறந்தது போலிருக்கையில் அவள் சகோதரிகள் கேலியாக, "என்ன விஷயம் லூஸியா? போர்வை போர்த்திய ஆளைப் பார்த்தாயா?" என்பார்கள். லூஸியா பதிலே கூற மாட்டாள். கூறி என்ன, கூறாமலென்ன? அவளுக்கே அது என்னவென்று புரியவில்லையே!