பாவியானவன் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை, சர்வேசுரனும், அவருடைய திருமாதாவாகிய திவ்விய கன்னிகையும், அவனுடைய காவல் தூதரும், சகல அர்ச்சியசிஷ்டவர்களும், அந்த மனிதன் எவ்வளவு கொடியவனாயிருந்தாலும் அவனை நேசிக்கிறார்கள், அவன் மனந்திரும்பும்படி ஜெபிக்கிறார்கள். உண்மையில் பரலோக சபை முழுவதும் உலகில் வாழும் ஆன்மாக்களின் இரட்சணியத்திற்காக ஏங்கித் தவிக்கிறது என்று சொல்லலாம்.
"ஆனால் அவன் தன் பாவத்தில் மரித்து, கடவுளால் தண்டனைத் தீர்ப்பிடப்பட்டவுடன், பரலோக சபையினர் முழுவதும் மனமுவந்து அந்த நீதியுள்ள தெய்வீகத் தீர்ப்பை ஏற்றுத் தலை வணங்குகின்றனர். இனி, நித்தியத்திற்கும் இந்த சபிக்கப்பட்ட ஆன்மாவின்மீது அவர்கள் மனதில் எந்தக் கருணையுள்ள நினைவும் உண்டாகாது.
அதைவிட மேலாக, அவன் அக்கினிச் சுவாலைகளுக்கு நடுவே தேவ நீதிக்குப் பலியாகியிருப்பதைக் கண்டு அவர்கள் திருப்தியடைவார்கள்! (“உருகின மெழுகைப்போல் அவர்கள் சிதறடிக்கப் படுவார்கள்; கோப அக்கினி அவர்களை உயிருடன் நாசப்படுத்தும். பாவி பழிவாங்கப்பட்டதைப் பார்த்து நீதிமான் சந்தோஷப்படுவான்!” என்கிறார் தாவீதரசர் - சங்.57:7,9).
பரலோகத்திலுள்ள பாக்கியமுள்ள ஆன்மாக்கள் நரகப் பாவியை அருவருத்துத் தள்ளுவார்கள். மோட்சத்திலுள்ள ஒரு தாய் நரகத்திலுள்ள தன் மகனை, தான் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பார்ப்பது போலப் பார்ப்பாள்” என்கிறார் அர்ச். அந்தோனி மரீக்ளாரட். ஆம்! இவ்வுலகத் தன்மையான உறவுகள் உண்டாக்கும் உணர்ச்சிபூர்வமான பாசமும், ஆசாபாசமும் மோட்சத்தில் இருக்கவே முடியாது. சுபாவத்திற்கு மேலான, தெய்வீக நேசத்தில் பங்குபெறுவதே பரலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாக்கியமுள்ள பாகமாக உள்ளது.
இரக்கமே உருவாகியிருக்கிற தேவ அன்னை, நேசிப்பதைத் தவிர வேறு எதுவுமே அறியாத மகா பரிசுத்த திருமாதா, ஓர் ஆத்துமம் நரகத்தில் விழுந்தவுடன் அதை மறந்துவிடுவார்கள் என்பது எவ்வளவு பயங்கரத்துக்குரிய உண்மை! தமது திவ்விய மாதா அழிந்து போன ஒரு மகனைப் பற்றி மனத் துயர் கொள்வதை ஆண்டவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்!!
தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...