சங்கீதங்கள்

அதிகாரம் 01

1 தீயோரின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறு பெற்றோன்.

2 கடவுளுடைய திருச்சட்டத்தில் இன்பம் காண்பவனாய், அதை அல்லும் பகலும் தியானிப்பவனே பேறு பெற்றோன்.

3 வாய்க்கால்களின் ஓரத்தில் நடப்பட்டு, இலைகள் என்றும் உதிர்க்காமல் தக்க பருவத்தில் கனி தரும் மரத்துக்கு அவன் ஒப்பாவான்: அவன் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவான்.

4 தீயவருக்கு அங்ஙனமிராது, ஒரு நாளுமிராது: காற்றோடு காற்றாய்ப் பறக்கும் பதர் போன்றவர்கள் அவர்கள்.

5 நீதித்தீர்ப்பு வரும் போது தீயோர் நிலை குலைந்துபோவர்: நல்லவர்கள் சபையில் பாவிகள் நிலைத்திரார்.

6 நல்லோரின் வழியைக் கடவுள் பாதுகாப்பார்: தீயோரின் வழியோ அழிவுக்கே செல்லும்.

அதிகாரம் 02

1 புறவினத்தார் சீறுவது ஏன்? வேற்றினத்தார் வீணான சூழ்ச்சி செய்வானேன்?

2 மாநில மன்னர்கள் கலகம் விளைக்கிறார்கள்: தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஆண்டவரையும், அவர் அபிஷுகம் செய்த அரசரையும் எதிர்த்துச் சதி செய்கிறார்கள்.

3 அவர்கள் இட்ட தளைகளை இனித் தகர்த்தெறிவோம்: அவர்கள் வைத்த கண்ணிகளை உதறிவிடுவோம்" என்கின்றனர்.

4 வானுலகில் வீற்றிருப்பவரோ இதைப் பார்த்து நகைக்கிறார்: ஆண்டவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.

5 வெகுண்டெழுந்து அவர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறார்: கடுஞ் சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்.

6 சீயோனிலே, என் திருமலை மீதினிலே, நான் அவரை என் அரசராக நிறுவினேன்" என்கிறார்.

7 கடவுள் விடுத்த கட்டளையை நான் பறைசாற்றுவேன்: ஆண்டவர் என்னிடம் கூறியது: "நீர் எம் மகள், இன்று உம்மை ஈன்றெடுத்தோம்.

8 எம்மிடம் கேளும், யாம் உமக்கு மக்களினங்களை உரிமையாக்குவோம்: உலகின் கடை எல்லை வரை உமக்குச் சொந்தமாக்குவோம்.

9 இருப்புக் கோல் கொண்டு அவர்களை நொறுக்குவீர்: குயவனின் கலங்களென அவர்களைத் தவிடு பொடியாக்குவீர்."

10 ஆகவே அரசர்களே, இப்போது உணர்ந்து கொள்ளுங்கள்: மாநிலத்தை ஆள்பவர்களே, அறிந்துகொள்ளுங்கள்.

11 ஆண்டவருக்கு அச்சத்தோடு ஊழியம் செய்யுங்கள்: அவர் முன் அகமகிழுங்கள்.

12 நடுநடுங்கி அவர் முன் தெண்டனிடுங்கள், இல்லையேல் சினந்தெழுவார், நீங்கள் வழியிலேயே அழிவுறுவீர்: அவரது சினமோ விரைவில் கொதித்தெழும்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

அதிகாரம் 03

1 ஆண்டவரே, என்னைத் துன்புறுத்துவோர் பலராயுளர்: எனக்கெதிராய்க் கலகம் விளைப்போர் பலராயுளர்.

2 அவனுக்கெங்கே கடவுள் துணை புரியப்போகிறார்?" என்று என்னை இழித்துரைப்போர் பலராயுளர்.

3 ஆனால், ஆண்டவரே, என்னைக் காப்பவர் நீரே: எனக்குப் பெருமை தருபவர் நீரே; நான் தலை நிமிரத் துணை செய்பவர் நீரே.

4 கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டேன்: தமது புனித மலையிலிருந்து என் குரலுக்குச் செவி சாய்த்தார்.

5 இனி நான் படுத்து உறங்குவேன், விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவாயிருக்கிறார்.

6 என்னை எதிர்க்கச் சூழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் பகைவர்க்கு நான் அஞ்சேன்.

7 ஆண்டவரே எழுந்தருளும்; என் இறைவா, என்னைக் காத்தருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறைகின்றீர்; தீயோரின் பல்லை உடைக்கின்றீர்.

8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்: உம் மக்கள் மீது ஆசி தங்குக.

அதிகாரம் 04

1 இறைவா, என் சார்பாக நின்று நீதியை விளங்க வைப்பவரே, உம்மை நான் கூப்பிடும் போது எனக்குச் செவிசாய்த்தருளும்: நான் இடுக்கண் உற்றபோது எனக்கு ஆறுதல் அளித்தீர்; என் மீதிரங்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.

2 மானிடரே, இன்னும் எவ்வளவு காலம் கல்நெஞ்சராயிருப்பீர்கள்? ஏன் வீணானதை நாடுவீர்கள்? பொய்யானதைத் தேடிச் செல்வீர்கள்?

3 ஆண்டவர் தம் அடியார்களுக்காக வியப்புக்குரியன செய்கிறார், இதை மனத்தில் வையுங்கள்: ஆண்டவரை நான் கூப்பிடும் போது எனக்கு அவர் செவிசாய்க்கிறார்.

4 அச்சமுறுங்கள், பாவத்தை விடுங்கள்: இரவிலும் உள்ளத்தில் இறைவனைத் தியானித்து அமைதியாயிருங்கள்.

5 நேரிய மனத்தேடு பலியிடுங்கள்: கடவுளை நம்புங்கள்.

6 நன்மையானதை நமக்குக் காட்டுபவன் யார்?" என்கின்றனர் பலர்: எங்கள் பக்கமாய் உமது முகத்தைத் திருப்பும், ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்.

7 கோதுமையும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில், மக்கள் அடையும் மகிழ்ச்சியினும் மேலான மகிழ்ச்சி என் இதயத்தில் பொங்கச் செய்தீர்.

8 கலக்கமின்றி நான் இனிப் படுத்துறங்க முடியும்: ஏனெனில், ஆண்டவரே, நான் பாதுகாப்பில் வாழச் செய்கின்றீர்.

அதிகாரம் 05

1 ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்: என் புலம்பலைக் கவனித்தருளும்.

2 என் அரசே, என் இறைவா, என் கூக்குரைலைக் கேட்டருளும்.

3 ஆண்டவரே, உம்மையே வேண்டுகிறேன், காலையில் என் குரலைக் கேட்டருள்வீர்: காலையில் என் மன்றாட்டுகளை உம்மிடம் எடுத்துச் சொல்லி, உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

4 தீமையை விரும்பும் கடவுள் நீர் அல்லீர்: தீயவன் உம்மோடு தங்கமாட்டான்.

5 கெட்டவர்கள் உம் திருமுன் நிற்கமாட்டார்கள்: தீமை செய்யும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர் .

6 பொய் சொல்லும் அனைவரையும் நீர் அழிக்கின்றீர்: கொலை வெறியரை, வஞ்சகரை ஆண்டவர் வெறுக்கின்றார்.

7 நானோ உம் திருவருளின் பெருக்கத்திற்கேற்ப உம் இல்லத்தில் சென்றிடுவேன்: உமது புனித ஆலயத்தில், ஆண்டவரே, உம்மை அஞ்சித் தொழுதிடுவேன்.

8 என் மாற்றாரின் பொருட்டு உம் நீதியைக் காட்டி வழி நடத்தும்: உமது செவ்வையான வழியை எனக்குக் காட்டியருளும்.

9 ஏனென்றால், அவர்கள் நாவில் நேர்மை என்பதில்லை; அவர்கள் இதயத்தில் உள்ளதெல்லாம் வஞ்சகமே: அவர்களுடைய தெண்டை திறந்த கல்லறையாகும்; நாவினால் முகமன் கூறுகின்றனர்.

10 இறைவா, அவர்களைத் தண்டியும்; தங்கள் திட்டங்களாலேயே அவர்கள் அழிவுறைவார்களாக: அவர்கள் செய்த பல தீவினைகளை முன்னிட்டு அவர்களை விரட்டி விடும்; ஏனெனில், உமக்கு எதிராகவே கலகம் செய்தனர்.

11 உம் அடைக்கலம் நாடி வருவோர் அனைவரும் அகமகிழ்வார்களாக என்றென்றும் அக்களிப்பார்களாக: உமது பெயர் மீது அன்பு வைத்தவர்களைப் பாதுகாப்பீராக; அவர்கள் உம்மை நினைத்து மகிழ்ச்சியுறுவார்களாக.

12 ஆண்டவரே, நீதிமானுக்கு உமது ஆசி அளிக்கிறீர்: உமது கருணையை அவனுக்குக் கேடயமாக அளிக்கிறீர்.

அதிகாரம் 06

1 ஆண்டவரே, நீர் சினங்கொண்டு என்னைக் கடிந்துகொள்ளாதீர்: உம் சீற்றத்தில் என்னை ஒறுக்காதீர்.

2 ஆண்டவரே, நான் வலுவற்றவன்; ஆதலால் நீர் எனக்கு இரங்கும்: என் எலும்புகள் நெக்குவிட்டுப் போயின; ஆண்டவரே, என்னைக் குணமாக்கும்.

3 மிகவே கலங்கினதென் ஆன்மா: ஆண்டவரே, ஏன் இன்னும் தயக்கம்?

4 மீண்டும் வாரும் ஆண்டவரே, ஏன் ஆன்மாவை விடுவித்தருளும்: உமது இரக்கத்தால் என்னை மீட்டுக் கொள்ளும்.

5 ஏனெனில், மரணமடைந்தவர்களுள் யார் உம்மை நினைவு கூர்வார்? கீழ் உலகில் யார் உம்மைப் போற்றுவர்?

6 புலம்பலினால் நான் களைத்துப்போனேன்: இரவு தோறும் அழுதழுது கட்டிலில் கண்ணீர் சிந்துகிறேன், என் கண்ணீரால் படுக்கையை நனைக்கிறேன்.

7 வருத்த மிகுதியால் என் கண்கன் மங்கிப்போயின: எதிரிகளால் என் கண்கள் குழி விழுந்து போயின.

8 தீமை செய்வோரே, நீங்கள் அனைவரும் என்னை விட்டகலுங்கள்: ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலைக் கேட்டருளினார்.

9 ஆண்டவர் என் செபத்தைக் கேட்டருளினார்: ஆண்டவர் என் மன்றாட்டை ஏற்றுக்கொண்டார் .

10 என் பகைவர் அனைவரும் வெட்கி, மனங்கலங்கிப் போவார்களாக: வெட்கி விரைவாகப் பின்னடைந்து ஒழிவார்களாக.

அதிகாரம் 07

1 என் இறைவனாம் ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரிடமிருந்தும் எனக்கு மீட்பும் விடுதலையும் அளித்தருளும்.

2 எவனும் சிங்கத்தைப் போல என் உயிரைப் பறித்துக் கொள்ள விடாதேயும்: விடுவிப்பவன் எவனுமின்றி என்னை இழுத்துக் கொண்டு போக விடாதேயும்.

3 என் இறைவனாகிய ஆண்டவரே, இப்படி நான் செய்திருந்தால்: அதாவது, என் கைகளால் அநீதி செய்திருந்தால்,

4 காரணமின்றி எனக்குத் தீங்கிழைத்தவனையே காப்பாற்றிவரும் நான், என் நண்பனுக்குத் தீமை செய்திருந்தேனென்றால்,

5 பகைவன் என்னைத் துரத்திப் பிடித்து என் உயிரை நசுக்கி விடுவானாக: என் பெயரைக் கொடுத்துப் பாழ்படுத்துவனாக.

6 ஆண்டவரே, சினங்கொண்டு நீர் எழும்புவீராக: என்னைத் துன்புறுத்துவோர் சினத்தை எதிர்த்து எழும்புவீராக. என் சார்பாக நீதியை நிலைநாட்ட எழும்புவீராக: அந்த நீதியை வழங்கியவர் நீரேயன்றோ! 7 மக்களினத்தார் உம்மைச் சூழ்ந்துகொள்வார்களாக: அவர்களனைவர் மீதும் உன்னதங்களில் நீர் வீற்றிருப்பீராக.

8 மக்களுக்கு நீதிபதியாயிருப்பவர் ஆண்டவரே: உமது நீதிக்கேற்ப ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும்; எனது மாசின்மைக்கேற்ப எனக்கு நீதி வழங்கும்.

9 தீயவர்களுடைய தீய மனம் ஒழிவதாக: உள்ளத்தையும் உள்ளுறுப்புகளையும் ஆய்ந்தறிபவரே, நீதியுள்ள இறைவனே, நல்லவனை நீர் நிலைநிறுத்தும்.

10 கடவுளே எனக்குக் கேடயம்: நேரிய மனத்தோரைக் காப்பவர் அவரே.

11 நேர்மையுள்ள நீதிபதியாய் உள்ளார் கடவுள்: நாள்தோறும் சினங்கொள்ளும் இறைவன் அவர்.

12 பாவிகள் மனந்திரும்பாவிட்டால் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி எய்யத் தொடங்குவார்.

13 சாவுக்குரிய ஆயுதங்களை அவர்களுக்கு ஆயத்தம் செய்வார்: தம் அம்புகளை அனல் கக்கச் செய்வார்.

14 பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கிறான்: தீவினையைக் கருவாய்க் கொண்டிருக்கிறான், வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறான்.

15 குழியைப் பறிக்கிறான், அதை ஆழமாக்குகிறான்: தான் பறித்த குழியில் தானே விழுகிறான்.

16 அவன் செய்த தீமை அவன் தலைமேலேயே வந்து விழும்: அவன் செய்த கொடுமை அவன் மேலேயே படும்.

17 நானோவெனில் ஆண்டவருடைய நீதியை நினைத்து அவரைப் புகழ்வேன்: உன்னதரான ஆண்டவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.

அதிகாரம் 08

1 ஆண்டவரே, எம் ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு வியப்புக்குரியது! நீர் உம் மகிமையை வானங்களுக்கு மேலாக விளங்கச் செய்தீர்.

2 உம் எதிரிகள் பின்னடையுமாறு, சிறுவர்களின் வாயும் உம்மை புகழ்ந்தேத்தச் செய்தீர்: எதிரியையும் பகைவனையும் ஒடுக்கவே இங்ஙனம் செய்தீர்.

3 உம்முடைய வானங்களை உம் படைப்புகளை, நீர் அமைத்த நிலவை, விண்மீன்களைக் காணும் போது,

4 மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்க அவன் யார்? அவனைப்பற்றி அக்கறை கொள்ள அவன் யார் என்று சொல்லத் தோன்றுகிறது!

5 வானதூதரை விட அவனைச் சிறிது தாழ்ந்தவனாகப் படைத்தீர்: மாண்பையும் பெருமையையும் அவனுக்கு முடியாகச் சூட்டினீர்.

6 உம் படைப்புகள் அனைத்தின்மீதும் அவனுக்கு அதிகாரம் தந்தீர்: அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

7 ஆடுமாடுகள், வயல் வெளியில் உலவும் விலங்குகள் அனைத்தும், அவனுக்குப் பணியச் செய்தீர்;

8 வானத்துப் பறவைகள், கடலில் வாழும் மீன்கள், அதில் நீந்தும் அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

9 ஆண்டவரே, எம் ஆண்டவரே, உலகெங்கும் உமது பெயர் எவ்வளவு வியப்புக்குரியது!

அதிகாரம் 09

1 ஆண்டவரே, என் முழு உள்ளத்துடன் உம்மைப் புகழுவேன்: உம் வியத்தகு செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

2 உன்னதமானவரே, உம்மை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: உம் பெயருக்குப் புகழ் பாடுவேன்.

3 ஏனென்றால், என் எதிரிகள் பின்னடைந்து போயினர்: உம் திருமுன்னே தடுமாறி ஒழிந்து போயினர்.

4 ஏனெனில், நீர் என் வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்க முன்வந்தீர்: நேர்மையுள்ள நீதிபதியாய் உம் அரியணையில் அமர்ந்தீர்.

5 புற இனத்தாரை அதட்டினீர், தீயோரை அழித்துவிட்டீர்: அவர்களுடைய பெயரையே அடியோடு எடுத்துவிட்டீர்.

6 எதிரிகளின் நகரங்களைத் தரைமட்டமாக்கினீர், அவர்கள் தொலைந்து போயினர், தலையெடுக்காமல் ஒழிந்தே போயினர்: அவர்களுடைய நினைவே இல்லாமற் போய்விட்டது.

7 ஆண்டவரோ என்றும் தம் அரியணையில் அமர்ந்துள்ளார்: நீதி வழங்கத் தம் அரியணையை நிறுவியுள்ளார்.

8 அவர் தாமே உலகினர்க்கெல்லாம் நீதியுடன் தீர்ப்புக் கூறுவார்: நேர்மையோடு மக்களனைவர்க்கும் நீதி வழங்குவார்.

9 ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் அடைக்கலமாயிருப்பார்: இடுக்கண் நேரும் போதெல்லாம் ஏற்ற சரண் அவரே.

10 உம் பெயரை அறிந்தோர் உம்மீது நம்பிக்கை கொள்வர்: உம்மைத் தேடுவோரை நீர் கைநெகிழ்வதில்லை, ஆண்டவரே.

11 சீயோனில் உறையும் ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: மக்களினங்களிடையே அவருடைய அருஞ் செயல்களை அறிவியுங்கள்.

12 இரத்தப் பழிவாங்கும் அவர் அவர்களை நினைவில் கொண்டுள்ளார்: எளியோரின் கூக்குரலைக் கேட்க மறவார்.

13 ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்: மரண வாயிலிலிருந்து என்னைக் கைதூக்கிவிடுபவரே, என் எதிரிகளின் கையில் நான் படும் துன்பத்தைப் பாரும்.

14 அப்போது சீயோன் நகர வாயில்களில் நான் உம் புகழ்ச்சிகளைச் சாற்றுவேன்: நீர் எனக்களித்த உதவியை நினைத்து அக்களிப்பேன்.

15 புறவினத்தார் தாங்கள் வெட்டிய குழியில் தாங்களே விழுந்தனர்: அவர்கள் மறைவாக வைத்த கண்ணியில் அவர்களுடைய கால்களே சிக்கிக்கொண்டன.

16 ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தினார், நீதி வழங்கினார்: தான் செய்த செயல்களிலேயே பாவியானவன் அகப்பட்டுக் கொண்டான்.

17 பாவிகள் கீழுலகுக்குப் போய் ஒழிவார்களாக: கடவுளை மறக்கும் புற இனத்தார் அனைவரும் அங்ஙனமே ஒழிவார்களாக.

18 ஏழைகளை இறுதி வரை மறந்து போகமாட்டார் ஆண்டவர்: எளியோர் அவர் மேல் கொண்ட நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது.

19 ஆண்டவரே எழுந்தருளும், மனிதனின் கை ஒங்கவிடாதேயும்: உம் திருமுன் புற இனத்தார் எல்லாருக்கும் தீர்ப்பு வழங்கப்படட்டும்.

20 ஆண்டவரே அவர்கள் அனைவரையும் திகிலுறச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்று அவர்கள் உணரட்டும்.

21 ஆண்டவரே, ஏன் தொலைவிலுள்ளீர்? நெருக்கடியான வேளையில் ஏன் ஒளிந்து கொள்கிறீர்?

22 தீயோர் செருக்குற, எளியவரோ அவதிப்படுகிறார்கள்: அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளில் எளியோர் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்.

23 தன் தீய நாட்டத்தைப்பற்றி பாவியானவன் பெருமை கொள்கிறான்: பேராசைக்காரன் ஆண்டவரைப் பழிக்கிறான், புறக்கணிக்கிறான்.

24 கடவுளே இல்லை, எங்கே பழிவாங்கப்போகிறார்!" என்று தீயவன் செருக்குடன் சொல்கிறான்: இதுவே அவன் நினைவாயிருக்கிறது.

25 அவன் செய்யும் முயற்சிகள் எபபோதும் வெற்றிகரமாக முடிகின்றன: உம் தீர்ப்புகள் அவன் மனத்திற்குச் சிறிதும் எட்டாதவை; தன் எதிரிகளையெல்லாம் அவன் புறக்கணிக்கிறான்.

26 யாரும் என்னை அசைக்க முடியாது: தலைமுறை தலைமுறையாக நான் இன்பமாகவே வாழ்வேன்!" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.

27 அவன் பேசுவதெல்லாம் சாபனையும் கபடமும் வஞ்சகமுமே: அவன் நாவில் ஒலிப்பது தீமையும் இன்னலுமே.

28 சிற்றூர்களுக்கருகில் கண்ணி வைத்துப் பதுங்கியிருப்பான், மறைவான இடங்களில் குற்றமற்றவர்களைக் கொலை செய்கிறான்: எளியவர்களுக்குத் தீமை செய்வதிலேயே அவன் கண்ணாயிருக்கிறான்.

29 புதரில் பதுங்கியிருக்கும் சிங்கம்போல அவன் மறைவாகப் பதுங்கிக்கிடந்து, எளியவரைப் பிடிக்கக் கண்ணி வைக்கிறான்: எளியோரைத் தன் வலையில் விழச்செய்து பிடித்துக்கொள்கிறான்.

30 எளியவர் மீது பாய்வதற்காகத் தரை மீது படுத்துப் பதுங்கிக்கிடக்கிறான்: அவனுடைய கொடுமையால் எளியோர் வீழ்ச்சியுறுகின்றனர்.

31 கடவுள் மறந்துவிட்டார், தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்: ஒருகாலும் பார்க்கமாட்டார்" என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.

32 ஆண்டவராகிய இறைவா, எழுந்தருளும், உம் கரத்தை உயர்த்தும்: எளியோரை மறவாதேயும்.

33 கெட்டவர்கள் கடவுளைப் புறக்கணிப்பதேன்? "அவர் பழிவாங்க நினைக்கமாட்டார்" என்று தமக்குள் சொல்லிக் கொள்வதேன்?

34 ஆனால் ஆண்டவரே, நீர் எல்லாம் பார்க்கிறீர்! துன்புறுவோரையும் வேதனைப்படுவோரையும் நீர் கவனித்துக் கொள்கிறீர்: அவர்களை உம்மிடம் ஏற்றுக்கொள்கிறீர்; எளியவன் தன்னை உம்மிடம் ஒப்படைக்கிறான்; அநாதைக்கு நீரே துணை.

35 பாவிகள், தீமை செய்வோர் இவர்களுடைய பலத்தை நொறுக்கிவிடும்: இவர்களுடைய அக்கிரமத்திற்கேற்பப் பழிவாங்கும், அவ்வக்கிரமம் தொலைந்தே போகட்டும்.

36 ஆண்டவர் என்றென்றும் அரசராவார்: அவருடைய நாட்டினின்று புறவினத்தார் ஒழிந்துபோயினர்.

37 அநாதைகளுக்கும் அவதியுறுவோர்க்கும் நீதி வழங்கவும், உலகைச் சார்ந்த மனிதர் இனி அச்சம் விளைவிக்காதிருக்கவும்,

38 தாழ்வுற்றோருடைய மன்றாட்டை ஆண்டவரே, நீர் கேட்டருளினீர்: அவர்களுடைய உள்ளத்திற்கு ஊக்கமளித்து அவர்களுக்குச் செவிசாய்த்தீர்.

அதிகாரம் 10

1 நான் ஆண்டவரிடம் அடைக்கலம் தேடுகிறேன்: "பறவை போல் மலைக்குப் பறந்து செல்.

2 இதோ பாவிகள் வில்லை வளைக்கிறார்கள்; நாணில் அம்பு தொடுக்கிறார்கள்: நேர் மனத்தோர் மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கிறார்கள்;

3 அடிப்படையே தகர்க்கப்படும் போது, நீதிமான் என்ன செய்யமுடியும்?" என்று நீங்கள் என்னிடம் சொல்வானேன்.

4 ஆண்டவர் தம் இருக்கை புனித ஆலயம்: ஆண்டவருடைய அரியனை வானகம்! அவருடைய கண்கள் உற்று நோக்குகின்றன: மனுமக்களை அவை பரிசோதித்துப் பார்க்கின்றன.

5 நீதிமானையும் தீயோனையும் ஆண்டவர் ஊடுருவிப்பார்க்கிறார்: தீமையை விரும்புகின்றவனை அவர் வெறுக்கிறார்.

6 பாவிகள் மீது அவர் நெருப்பு மழையும் கந்தகமும் பொழிவார்: அனல் காற்றே அவர்கள் கதி.

7 ஏனெனில் ஆண்டவர் நீதியுள்ளவர், நீதியை நேசிப்பவர்: நேர்மையுள்ளவர்கள் அவர் முகத்தைக் காண்பார்கள்.

அதிகாரம் 011

1 ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில், உலகில் நல்லவர்களே இல்லாமல் போனார்கள்: மக்களிடையே சொல்லுறுதி என்பது இல்லை.

2 ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய் பேசுகிறான்: வஞ்சக நாவால் இரண்டகம் பேசுகிறான்.

3 வஞ்சக நாவையெல்லாம் ஆண்டவர் வேரோடு பிடுங்கி விடுவாராக: வீம்பு பேசுகிற நாவை அறுத்து விடுவாராக.

4 எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத் திறனே எங்கள் பக்கத் துணை: எங்களுக்குப் பெரியவன் யார்?' என்று சொல்லுகிறவர்களை ஒழித்து விடுவாராக.

5 எளியோர் படும் துன்பத்தின் பொருட்டும், ஏழைகள் விடும் பெருமூச்சின் பொருட்டும் இதோ நான் எழுகிறேன்: பாதுகாப்பு வேண்டுபவனுக்கு அதை அளிப்பேன்' என்கிறார் ஆண்டவர்.

6 ஆண்டவர் தம் சொற்கள் நேர்மையானவை: மண்ணிலிருந்து பிரித்து ஏழு முறை புடமிடப்பட்ட நல்ல வெள்ளி போன்றவை.

7 ஆண்டவரே, நீர் எங்களைக் காத்தருளும்: இந்தத் தலைமுறை மக்களினின்று என்றும் எங்களைக் காப்பாற்றும்.

8 தீயோர் எங்கும் சூழ்ந்துள்ளனர்: அற்ப மனிதர் தலை நிமிர்ந்து நடக்கின்றனர் .

அதிகாரம் 012

1 ஆண்டவரே, எதுவரை என்னை மறந்திருப்பீர்? இறுதி வரை மறந்திடுவீரோ? எது வரை உமது திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொண்டிருப்பீர்?

2 என் வருத்தங்களை எவ்வளவு காலம் எனக்குள்ளேயே தாங்கிக்கொண்டிருப்பேன்? நாள் தோறும் எழுகின்ற மனக்கவலையே எத்தனை நாள் பொறுத்துக்கொண்டிருப்பேன்? எவ்வளவு காலம் என் எதிரி என் மீது வெற்றிகொள்வான்?

3 என் ஆண்டவராகிய இறைவா, என்னைக் கண்ணோக்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.

4 மரண உறக்கத்தில் நான் ஆழ்ந்துவிடாமல் என் கண்களுக்கு உமது ஒளியை வீசும்: 'அவனை மேற்கொண்டேன்' என்று என் எதிரி சொல்ல விடாதேயும்; நான் வீழ்ச்சியுற்றதைக் கண்டு என் எதிரிகளை அக்களிக்க விடாதீர்.

5 உமது இரக்கத்தையே நான் நம்பியிருக்கிறேன் அன்றோ! உம்மிடமிருந்து வரும் உதவியை நினைத்து என் நெஞ்சம் அக்களிப்பதாக: எனக்கு நன்மையே செய்யும் ஆண்டவருக்கு நான் இன்னிசை பாடுவேனாக.

அதிகாரம் 013

1 கடவுள் இல்லை' என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர் முற்றிலும் கெட்டுப் போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை.

2 வானினின்று ஆண்டவர் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாது உண்டா எனப் பார்க்கின்றார்.

3 எல்லாரும் நெறி தவறிப் போயினர், ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை; ஒருவன்கூட இல்லை.

4 தீமை செய்கிறவர்கள் எல்லாரும் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் ஆண்டவரது உதவியை நாடுவதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமட்டார்களா?

5 ஆகவே, அச்சத்தால் நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நீதிமான்களின் தலைமுறையோடு இருக்கிறார்.

6 எளியவன் திட்டத்தைக் கவிழ்த்து விடப் பார்க்கிறார்கள்: ஆனால் ஆண்டவர் அவனுக்கு ஆதரவளிக்கிறார்.

7 சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதோ! ஆண்டவர் தம் மக்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.

அதிகாரம் 014

1 ஆண்டவரே, உம் இல்லத்தில் தங்கி வாழ்வோர் யார்? உமது திருமலையில் குடியிருப்பவர் யார்?

2 மாசற்ற வாழ்க்கை நடத்துபவன், நீதி நியாயத்தைக் கடைப்பிடிப்பவன், இதயத்தில் நேரியவை நினைப்பவன்;

3 நாவால் எப்பழிச்சொல்லும் கூறாதவன், அயலானுக்குத் தீமை செய்யாதவன், பிறரைப் பழித்துரைக்காதவன்;

4 தீயோரை இழிவாகக் கருதுபவன், ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்;

5 தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன், தன் பணத்தை வட்டிக்குக் கொடுக்காதவன், மாசற்றவர்களுக்கு எதிராகக் கைக்கூலி வாங்காதவன்.-- இங்ஙனம் நடப்பவன் என்றென்றும் நிலைத்திடுவான்.

அதிகாரம் 015

1 இறைவா, என்னைப் பாதுகாத்தருளும்: உம்மிடன் நான் அடைக்கலம் புகுந்தேன்.

2 நீரே என் ஆண்டவர்: உம்மையன்றி எனக்கு வேறு நன்மையில்லை" என்று ஆண்டவரிடம் சொன்னேன்.

3 அவருடைய பூமியில் உள்ள புனிதர்கள்பால், எனக்குள்ள மனப்பற்றுதலை எத்துணை வியப்புக்குரியதாக்கினார்!

4 வேறு தெய்வங்களை வழிபடுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக் கொள்கின்றனர்: அவற்றுக்குச் செய்யப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்துகொள்ள மாட்டேன்; அவற்றின் பெயரை முதலாய் நாவால் உச்சரிக்கமாட்டேன்.

5 ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து, அவரே என் கிண்ணம்: எனக்குரியதை எனக்கென வைத்திருப்பவர் நீரே.

6 மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்குப் பங்கு கிடைத்தது: என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியானதாயிற்று.

7 எனக்கு ஆலோசனை கொடுத்த ஆண்டவரை நான் வாழ்த்துவேன்: இரவில் கூட என் இதயம் எனக்கு அறிவுறை கூறுகிறது.

8 ஆண்டவரை நான் எந்நேரமும் என் கண்முன் கொண்டிருக்கிறேன்: அவர் என் வலப்பக்கத்தில் இருப்பதால் நான் அசைவுறேன்.

9 இதனால் என் இதயம் அகமகிழும்; என் உள்ளம் அக்களிக்கும்: என் உடலும் கவலையின்றி இளைப்பாறும்.

10 ஏனெனில், என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிட மாட்டீர்: உம் புனிதர் அழிவு காணவிடமாட்டீர்.

11 வாழ்வுக்குச் செல்லும் வழியை நீர் எனக்குக் காண்பிப்பீர்: உம் திருமுன் எனக்கு நிறை மகிழ்ச்சியையும், உம் வலக்கையில் இடைவிடா இன்பத்தையும் நீர்¢ காட்டுவீர்.

அதிகாரம் 016


1 ஆண்டவரே, நியாமான என் வழக்கைக் கேட்டருளும்; என் கூக்குரலைக் கவனித்தருளும்: வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.

2 நீரே எனக்கு நீதி வழங்கியருளும்: நேர்மையானது எதுவென்று நீரே பார்க்கின்றீர்.

3 என் இதயத்தை நீர் பரிசோதிப்பீராகில், இரவு நேரத்தில் என்னைச் சந்திக்க வருவீராகில், நெருப்பில் என்னைப் புடமிட்டுப் பார்ப்பீராகில் தீமையானது எதையும் என்னிடம் காணமாட்டீர்.

4 பிறர் செய்வதுபோல் என் நாவு தவறானதைப் பேசவில்லை: உம் உதட்டினின்று எழுந்த வார்த்தையின்படி உம் திருச்சட்டம் காட்டிய வழிகளைப் பின்பற்றினேன்.

5 நீர் காட்டிய வழியில் என் காலடிகள் உறுதியாய் நிற்கின்றன: அவ்வழியில் என் நடை பிறழவில்லை.

6 இறைவா, என் மன்றாட்டைக் கேட்டருள்வீர் என்பதால் நான் உம்மைக் கூவியழைக்கிறேன்: எனக்கு செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.

7 வியப்புக்குரிய உமது இரக்கத்தைக் காட்டியருளும்: உம் வலக்கரத்தில் உம்மிடம் அடைக்கலம் புகுவோரை எதிரிகளிடமிருந்து காப்பவர் நீரே.

8 கண்ணின் மணியைப்போல என்னைக் காத்தருளும்: உம் சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக் கொள்ளும்.

9 என்னை ஒடுக்கப் பார்க்கும் பாவிகளிடமிருந்து என்னைக் காத்தருளும்: என் எதிரிகள் கொதித்தெழுந்து என்னை வளைத்துக் கொள்கிறார்கள்.

10 அவர்கள் தங்கள் கல்நெஞ்சில் இரக்கம் சுரக்க விடுவதில்லை: அவர்கள் வாயால் செருக்குடன் பேசுகிறார்கள்.

11 என்னைப் பின்தொடர்ந்து என்னை வளைத்துக் கொள்கிறார்கள்: என்னைத் தரையில் விழத்தாட்டுவதே அவர்கள் நோக்கமாயிருக்கிறது.

12 இரை தேடிச் செல்லும் சிங்கத்துக்கு அவர்கள் ஒப்பானவர்கள்: பதுங்கிக் கிடக்கும் சிங்கக் குட்டிக்கு அவர்கள் நிகரானவர்கள்.

13 ஆண்டவரே, எழுந்தருளும், எதிரே சென்று அவனை விழத்தாட்டும்: உம் வாளைக்கொண்டு என் உயிரைத் தீயோனிடமிருந்து காத்தருளும்.

14 ஆண்டவரே, உம் கைவன்மையால் மனிதரிடமிருந்து என்னைக் காத்தருளும்; இவ்வுலகமே சதமென்று கொள்ளும் மக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்: இம்மை நலன்களால் நீர் அவர்கள் வயிற்றை நிரப்பலாம்! அவர்களுடைய மக்களும் நிறைவடையட்டும்! மீதியாய் இருப்பதைத் தங்கள் மக்களுக்கு விட்டுச் செல்லட்டும்!

15 நானோவெனில், நீதியில் நிலைத்து உம் திருமுகத்தைக் காணவே விரும்புகிறேன்: உமது பிரசன்னத்தால் நிறைவுறுவதொன்றையே நான் விழைகிறேன்.

அதிகாரம் 017


1 என் ஆற்றலாய் உள்ளவரே, ஆண்டவரே, உமக்கு நான் அன்பு செய்கிறேன்.

2 ஆண்டவரே, நீரே என் கற்பாறை, என் அரண், என் மீட்பர்: என் இறைவனாக உள்ளவரே, நான் அடைக்கலம் புகுவதற்கு ஏற்ற கோட்டையாக உள்ளவரே, என் கேடயமும் எனக்கு மீட்பளிக்கும் வலிமையும் என் அடைக்கலமுமாக உள்ளவரே!

3 புகுழ்ச்சிக்குரிய ஆண்டவரை நான் கூவி அழைப்பேன்: என் எதிரிகளினின்று மீட்படைவேன்.

4 சாகடிக்கக் கூடிய பெருவெள்ளம் என்னைச் சூழ்ந்துகொண்டது: ஆபத்துக்குரிய வெள்ளம் என்னை அச்சத்தில் ஆழ்த்தியது.

5 கீழுலகின் தளைகள் என்னைப் பிணைத்துக் கொண்டன: சாவில் கண்ணிகளுள் நான் விழப்போனேன்.

6 துன்ப வேளையில் நான் ஆண்டவரை அழைத்தேன்; என் இறைவனை நோக்கி கூக்குரலிட்டேன்: தம் ஆலயத்தில் நின்று என் குரலை அவர் கேட்டருளினார்; என் கூக்குரல் அவர் செவியில் விழுந்தது.

7 அப்போது பூமி அசைந்தது, அதிர்ந்தது, மலைகளின் அடித்தளம் கிடுகிடுத்தது: ஏனெனில் அவர் கோபம் மூண்டெழுந்தது.

8 அவர் நாசியினின்று கோபப்புகை கிளம்பியது, எரித்து விடும் நெருப்பு அவர் வாயினின்று எழும்பியது: எரிதலும் அவரிடமிருந்து புறப்பட்டது.

9 வானங்களைத் தாழ்த்திக் கொண்டு அவர் இறங்கி வந்தார்: அவர் பாதங்களுக்கடியில் கார்முகில் கவிந்தது.

10 கெரூபிம்களின்மேல் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.

11 இருளைத் தமக்குப் போர்வையாக அணிந்தார்: நீரைத் தாங்கிய இருண்ட மேகங்கள் அவருக்குக் கூடாரம் போலாயிற்று.

12 தம்முன் விளங்கிய ஒளிப்பிழம்பால் எரிதழல்கள் சுடரிட்டன: கல்மழையும் பொழிந்தது.

13 வானத்தினின்று ஆண்டவர் இடி முழங்கச் செய்தார்: உன்னதமானவர் தம் குரலைக் கேட்கச் செய்தார்.

14 அம்புகளை ஏவி அவர்களைச் சிதறடித்தார்: இடிமின்னல் பல விடுத்து அவர்களை கலங்கடித்தார்.

15 ஆண்டவர் விடுத்த கடுஞ்சொல்லால், அவருடைய கோபப் புயலின் வேகத்தால், கடலின் நீரோட்டங்கள் வெளிப்பட்டன: பூவுலகில் அடித்தளங்கள் வெளியாயின.

16 வானினின்று தம் கையை நீட்டி என்னைப் பிடித்துக்கொண்டார்: பெருவெள்ளத்தினின்று என்னைத் தூக்கிவிட்டார்.

17 வலிமைமிக்க என் எதிரினின்று என்னை விடுவித்தார்: என்னைவிட வலிமைமிக்க பகைவர்களிடமிருந்து என்னைக் காத்தார்.

18 என் துன்ப நாளில் அவர்கள் என்னைத் தாக்க வந்தனர்: ஆனால் ஆண்டவர் எனக்கு அடைக்கலமானார்.

19 நெருக்கடி இல்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்: என்மீது அன்பு கூர்ந்ததால் என்னைக் காத்தார்.

20 என்னுடைய நீதி நேர்மைக்கு ஏற்ப எனக்குப் பலனளித்தார்: என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால் எனக்குக் கைம்மாறு செய்தார்.

21 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய வழியில் நடந்தேன்: பாவம் செய்து என் இறைவனை விட்டு அகலவில்லை.

22 அவருடைய கற்பனைகளையெல்லாம் என் கண்முன் கொண்டிருந்தேன்: அவருடைய கட்டளைகளின் வழியை விட்டு நான் அகலவில்லை.

23 அவர் முன்னிலையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்: தவறு செய்யாமல் என்னைக் காத்துக்கொண்டேன்.

24 என்னுடைய நீதி நேர்மைக்கேற்ப எனக்குப் பலன் அளித்தார்: அவர் முன்பாக என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால், எனக்குக் கைம்மாறு செய்தார்.

25 நேர்மையுள்ளவனிடம் நீர் நேர்மையுள்ளவராய் விளங்குகிறீர்: குற்றமற்றவனிடம் நீர் குற்றமற்றவராய் விளங்குகிறீர்.

26 தூய்மையுள்ளவனிடம் நீர் தூய்மையுள்ளவராய் விளங்குகிறீர்: கபடுள்ளவனிடம் நீர் விவேகமுள்ளவராய் நடந்துகொள்கிறீர்.

27 ஏனெனில், சிறுமையுற்ற மக்களுக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: தற்பெருமை கொண்டோரின் பார்வையை நீர் ஒடுக்குகின்றீர்.

28 ஆண்டவரே, நீர் என் விளக்கு சுடர்விட்டு எரியச் செய்கிறீர்: என் இறைவா, நீர் என் இருட்டை வெளிச்சமாக்குகின்றீர்.

29 உம் துணையால் நான் எதிரிகளின் படைகளைத் தாக்குவேன்: என் இறைவனின் துணையால் மதிலையும் தாண்டுவேன்.

30 கடவுள் காட்டும் வழி குற்றமற்றது, ஆண்டவருடைய வாக்குறுதி புடமிடப்பட்டது: அவரிடம் அடைக்கலம் புகுவோரனைவருக்கும் அவரே கேடயம்.

31 ஆண்டவரைத் தவிர வேறு தேவன் யார்? நம் இறைவனைத் தவிர வேறு அடைக்கலம் தரும் பாறை யார் ?

32 வலிமையைக் கச்சையாக எனக்கு அளித்தவர் அவரே: நான் செல்லும் வழியை இடையூறு அற்றதாக ஆக்கியவர் அவரே.

33 மான்களைப் போல என்னை விரைவாக ஓடச் செய்தவர் அவரே: உயர்ந்த இடத்தில் என்னை நிறுத்தியவர் அவரே.

34 என் கைகளைப் போருக்குப் பழக்கியவர் அவரே: வெண்கல வில்லை வளைப்பதற்கு என் புயத்துக்கு உறுதியளித்தவர் அவரே.

35 பாதுகாப்புத் தரும் உம் கேடத்தை நீர் எனக்கு அளித்தீர்: உமது வலக்கரம் என்னை ஆதரித்தது; நீர் என்னிடம் காட்டிய பரிவு நான் மாண்புறச் செய்தது.

36 நான் செல்லும் வழியை நீர் விசாலமாக்கினீர்: என் கால்களும் தளர்வுறவில்லை.

37 என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து பிடித்தேன்: அவர்களைத் தொலைக்கும்வரையில் நான் திரும்பிப் போகவில்லை.

38 அவர்களை நான் வதைத் தொழித்தேன், அவர்கள் எழுந்திருக்கவும் முடியவில்லை: என் காலடிகளில் அவர்கள் மிதிபடலாயினர்.

39 போரிடும் வல்லமையை எனக்குக் கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.

40 என் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தீர்: என்னைப் பகைத்தவர்களைச் சிதறடித்தீர்.

41 அவர்கள் கூவியழைத்தனர்; ஆனால் அவர்களைக் காக்க ஒருவருமில்லை: ஆண்டவரை நோக்கி அவர்கள் கூவினர்; அவரே அதற்குச் செவிகொடுக்கவில்லை.

42 எனவே, காற்றில் பறக்கும் தூசிபோல அவர்களைத் தவிடுபொடியாக்கினேன்: தெருவில் கிடக்கும் புழுதி போல அவர்களை மிதித்து ஒடுக்கினேன்.

43 மக்களின் சச்சரவுகளினின்று என்னை விடுவித்தீர்: நாடுகளுக்கு என்னைத் தலைவனாய் ஆக்கினீர்.

44 நான் அறியாத மக்கள் எனக்கு ஊழியம் செய்தனர்: என்னைப்பற்றிக் கேட்டதும் அவர்கள் கீழ்ப்படிந்தனர்.

45 அந்நியர் வந்து எனக்கு இச்சகம் பேசினர். வேற்றினத்தார் வலிவிழந்தனர்: அச்சத்தோடு தங்கள் கோட்டைகளினின்று வெளியேறினர்.

46 ஆண்டவர் வாழ்க, என் கற்பாறையாகிய அவர் வாழ்த்தப்பெறுவாராக: என் மீட்பரான இறைவன் பெரிதும் புகழப்படுவாராக.

47 என் எதிரிகளை நான் பழிவாங்கச் செய்த இறைவன் அவரே: வேற்றினத்தாரை எனக்கு அடிமைப்படுத்தியவர் அவரே.

48 என் எதிரிகளினின்று நீரே என்னை விடுவித்தீர்: என்னைத் தாக்கியவர்கள் மீது என்னைத் தலைவனாக உயர்த்தினீர், கொடியவனிடமிருந்து என்னை விடுவித்தீர்.

49 ஆதலால் ஆண்டவரே, மக்களிடையே உம்மைப் புகழ்ந்தேத்துவேன்: உமது பெயருக்குப் புகழ்ச்சிப்பா இசைப்பேன்.

50 நீர் ஏற்படுத்திய அரசருக்குப் பெரிய வெற்றிகளை அளித்தவர் நீரே: உம்மால் அபிஷுகமான தாவீதுக்கும் அவர் தலைமுறைக்கும் என்றென்றும் இரக்கம் காட்டியவர் நீரே.

அதிகாரம் 018


1 வானங்கள் கடவுளின் மாட்சிமையைச் சாற்றும்: வான மண்டலம் அவரது கைத்திறனை எடுத்துரைக்கும்.

2 பகல்தோறும் பகல் அதைத் தெரிவிக்கிறது: இரவு தோறும் இரவு அதை அறிவிக்கிறது.

3 அவற்றிற்குச் சொல்லுமில்லை பேச்சுமில்லை: அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

4 எனினும், அவற்றின் குரல் உலகெலாம் கேட்கிறது: அவை விடுக்கும் செய்தி உலகின் எல்லை வரை எட்டுகிறது;

5 அங்கே கடவுள் கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்; மணவறையினின்று புறப்படும் மணமகன் போல அவன் எழுகின்றான்: பந்தய வீரனைப்போல அக்களிப்போடு குறித்த வழியில் விரைகின்றான்.

6 வானத்தின் ஒரு முனையில் எழுந்து மறுமுனை மட்டும் அவன் செல்லுகிறான்: அவனது அனல் படாதது ஒன்றுமில்லை.

7 ஆண்டவரது திருச்சட்டம் சால்புடையது; ஆன்மாவுக்குப் புத்துயிர் ஊட்டுவது: ஆண்டவருடைய கட்டளை உறுதியானது, எளியோருக்கு அறிவூட்டுவது.

8 ஆண்டவருடைய கட்டளைகள் நேரியவை; உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஊட்டுபவை: ஆண்டவரது கற்பனை தூய்மையானது; கண்களுக்கு ஒளியூட்டுவது.

9 ஆண்டவர்மீதுள்ள அச்சம் புனிதமானது; என்றென்றும் நிலைத்திருப்பது: ஆண்டவருடைய தீர்ப்புகள் உண்மையானவை; அவை எல்லாம் நீதியானவை.

10 பொன்னினும் மணியினும் பெரிதும் விரும்பத் தக்கவை: தேனினும் தேனடையினும் இனிமையானவை.

11 உம் ஊழியனும் அவற்றால் பயிற்சி பெறுகிறான்: அவற்றைக் கடைப்பிடிப்பதில் மிக விழிப்பாயிருக்கிறான்.

12 குற்றங்குறைகளை யார் கண்டுணர்வர்? எனவே, மறைவாயுள்ள என் குற்றங்களை நீக்கி என்னைப் புனிதப்படுத்தும்.

13 தற்பெருமையினின்று உம் ஊழியனைக் காத்தருளும்; அது என்னை அடிமைப்படுத்தாதிருப்பதாக: அப்போது நான் குற்றமற்றவனாகி, பெரும் பாவங்களினின்று விடுபட்டுத் தூயவனாவேன்.

14 எனக்கு அடைக்கலமும் என் மீட்பருமான ஆண்டவரே, உம் முன்னிலையில் என் வாய் மொழியும், என் இதயச் சிந்தனையும் உமக்கு உகந்தனவாகட்டும்.

அதிகாரம் 019


1 துன்ப நாளில் ஆண்டவர் உன் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாராக: யாக்கோபின் இறைவனது திருப்பெயர் உன்னைக் காப்பதாக.

2 தம் திருத்தலத்தினின்று உனக்குத் துணை செய்வாராக: சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பாராக.

3 நீ ஒப்புக்கொடுக்கும் பலிகளை எல்லாம் நினைவு கூர்வாராக: நீ அர்ப்பணம் செய்யும் தகனப்பலி அவருக்கு உகந்ததாய் இருப்பதாக.

4 உன் இதயம் விரும்பியதை உனக்கு அருள்வாராக: உன் கருத்தையெல்லாம் நிறைவேற்றுவாராக.

5 உனக்குக் கிடைத்த வெற்றியைக் குறித்து மகிழ்வோமாக: நம் இறைவனின் பெயரால் வெற்றிக் கொடி நாட்டுவோம்; ஆண்டவர் உன் விண்ணப்பங்கள் எல்லாம் நிறைவுறச்செய்வாராக.

6 தாம் அபிஷுகம் செய்தவருக்கு ஆண்டவர் வெற்றி கிடைக்கச் செய்தார்: வெற்றி தரும் தமது வலக்கரத்தின் வன்மையால் தம் புனித வானகத்தினின்று அரசரின் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தார்; இதை நான் அறிவேன்.

7 சிலர் தேர்ப்படையாலும், சிலர் குதிரைப் படையாலும் வலிமை பெறலாம்: நாமோ நம் ஆண்டவராகிய இறைவனின் திருப்பெயரால் வலிமை பெறுகிறோம்.

8 அவர்கள் தடுமாறி விழுந்தார்கள், அழிவுற்றார்கள்: நாமோ இன்றும் நிலையாய் இருக்கிறோம், வீழ்ச்சியுறவில்லை.

9 ஆண்டவரே, அரசருக்கு வெற்றியளித்தருளும்: உம்மைக் கூவி அழைக்கும்போது எங்களுக்குச் செவி சாய்த்தருளும்.

அதிகாரம் 020


1 ஆண்வரே உமது வல்லமையை நினைத்து அரசர் மகிழ்வுறுகிறார்: நீர் தரும் உதவியை நினைத்து எவ்வளவோ அக்களிப்புக் கொள்கின்றார்.

2 அவரது உள்ளத்தின் விருப்பம் நிறைவேறச் செய்தீர்: வாய் திறந்து அவர் உம்மிடம் கேட்டதை நீர் புறக்கணிக்கவில்லை.

3 அவரை எதிர்கொண்டுபோய் நலமிக்க ஆசியை நிரம்ப அளித்தீர்: அவர் தலையில் தூயதங்கத்தாலான முடியைச் சூட்டினீர்.

4 வாழ்வளிக்கும்படி அவர் உம்மிடம் கேட்டார்: நீரும் நீடிய வாழ்வை அவருக்கு அளித்தீர்.

5 உம் துணையால் அவருக்கு கிடைத்தது பெரு மாண்பு: மகத்துவமும் மேன்னையும் அவருக்கு ஆடையாக உடுத்தினீர்.

6 என்றென்றும் அவர் ஆசி மிக்கவராகச் செய்தீர்: உம் திருமுன் மகிழ்ச்சி மிக்கவராய் விளங்கச் செய்தீர்.

7 ஏனெனில், ஆண்டவரில் தான் அரசர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்: உன்னதரின் அருளை முன்னிட்டு அவர் அசைவுறுவதில்லை.

8 உம் எதிரிகள் அனைவரையும் உமது கரம் மேற்கொள்வதாக: உம்மைப் பகைப்பவர்களை உமது வலக்கரம் தேடிப்பிடிப்பதாக.

9 நீர் வெளிப்படும்போது, தீச்சூளையில் போடுவது போல அவர்களைத் தொலைத்துவிடும்: ஆண்டவர் அவர்களைத் தம் சினத்தால் தொலைத்து விடுவாராக; நெருப்பு அவர்களை விழுங்கி விடுவதாக.

10 அவர்கள் சந்ததியை நாட்டினின்று ஒழித்து விடும்: மனிதரிடையே அவர்கள் மக்கள் இல்லாதொழிவார்களாக

11 உமக்குத் தீங்கிழைக்க அவர்கள் திட்டமிட்டாலும், வஞ்சகமாய்ச் சதி செய்தாலும் ஒரு நாளும் வெற்றி காணமாட்டார்கள்.

12 ஏனெனில், அவர்களை நீர் விரட்டியடிப்பீர்: அம்புகளை அவர்கள் முகத்தில் எய்வீர்.

13 ஆண்டவரே, உம் வல்லமையைக் காட்டி எழுந்தருளும்: உம் வலிமையை நாங்கள் பாடிக் கொண்டாடுவோம்.

அதிகாரம் 021


1 என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? என் வேண்டுதலையும் கூக்குரலையும் கேளாமல் ஏன் வெகு தொலைவில் இருக்கின்றீர்?

2 என் இறைவா, பகல் நேரத்தில் கூக்குரலிடுகிறேன், எனக்கு நீர் செவிசாய்க்கவில்லை: இரவிலும் உம்மை அழைக்கிறேன், என்னைக் கவனிக்கவில்லை.

3 இஸ்ராயேலின் பெருமையான நீர் திருத்தலத்தில் உறைகின்றீர்.

4 எங்கள் முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள்: நம்பிக்கை வைத்ததால் அவர்களுக்கு விடுதலையளித்தீர்.

5 உம்மை நோக்கிக் கூவினார்கள், ஈடேற்றம் அடைந்தார்கள்: உம் மீது நம்பிக்கை வைத்தார்கள், ஏமாற்றம் அடையவில்லை.

6 நானோவெனில் மனிதனேயல்ல, புழுவுக்கு ஒப்பானேன்: மனிதரின் நிந்தனைகளுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானேன்.

7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்.

8 ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே, அவர் மீட்கட்டும்: அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும்' என்றார்கள்.

9 நீரோவெனில் என்னைத் தாயின் கருப்பையிலிருந்து வரச்செய்தீர்: தாயின் மடியிலேயே எனக்கு உறுதியான பாதுகாப்பாயிருந்தீர்.

10 பிறப்பிலிருந்தே உமக்குச் சொந்தமானேன்: என் அன்னையின் உதரத்திலிருந்தே நீர் என் கடவுளாயிருக்கிறீர்.

11 என்னை விட்டு வெகு தொலைவில் போய்விடாதேயும், ஏனெனில் துன்புறுகிறேன்: அருகிலேயே இரும், ஏனெனில் வேறு துணை யாருமில்லை.

12 காளைகள் பல என்னைச் சூழ்ந்துகொண்டன: பாசான் நாட்டு எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.

13 இரை தேடி அலைந்து முழங்கும் சிங்கத்தைப் போல, எனக்கு எதிராக வாயைத் திறக்கின்றனர்.

14 தரையில் கொட்டப்பட்ட நீர் போலானேன்; என் எலும்புகள் எல்லாம் நெக்குவிட்டுப் போயின: மெழுகு போல ஆயிற்று என் நெஞ்சம், எனக்குள்ளே அது உருகிப் போய் விட்டது.

15 என் தொண்டையே ஓடுபோல் காய்ந்துவிட்டது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது: கல்லறையின் தூசிக்கு என்னை இழுத்துச் சென்றீர்.

16 ஏனெனில், பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன; பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது: என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்.

17 என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்: அவர்களோ என்னை முறைத்துப் பார்க்கிறார்கள், பார்த்து அக்களிக்கிறார்கள்.

18 என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்: என் உடை மீது சீட்டுப் போடுகிறார்கள்.

19 ஆனால், நீரோ ஆண்டவரே, என்னை விட்டுத்தொலைவில் போய் விடாதேயும்: எனக்குத் துணையான நீர் எனக்கு உதவிபுரிய விரைந்து வாரும்.

20 என் ஆன்மாவை வாளுக்கு இரையாகாமல் விடுவியும்: நாயின் கையிலிருந்து என் உயிரைக் காத்தருளும்.

21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்: காட்டு மாடுகளின் கொம்புகளினின்று ஏழை என்னைக் காத்தருளும்.

22 நானோ உம் நாமத்தை என் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன்: சபை நடுவே உம்மை இவ்வாறு போற்றுவேன்:

23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் சந்ததியே, நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சுங்கள்!'

24 அவரும் எளியவனின் மன்றாட்டைப் புறக்கணித்ததில்லை, வெறுப்போடு தள்ளினதில்லை: அவனிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக்கொண்டதுமில்லை; அவன் அவரை நோக்கிக் கூவுகையில் அவனுக்குச் செவிசாய்த்தார்.

25 பேரவையில் உம்மை நான் புகழும் வரம் உம்மிடமிருந்தே எனக்குண்டு: அவருக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

26 எளியோர் உண்பர், நிறைவு பெறுவர்; ஆண்டவரைத் தேடுவோர் அவரைப் புகழ்வர்: 'உங்களுடைய நெஞ்சங்கள் என்றென்றும் வாழ்க!' என்பர்.

27 பூவுலகின் கடையெல்லைகளில் உள்ளவர்கள் அனைவருமே இதை நினைத்து ஆண்டவரிடம் திரும்புவார்கள்: உலகின் மக்களினங்களெல்லாம் அவர் திரு முன் விழுந்து வணங்குவார்கள்.

28 ஏனெனில், ஆண்டவருடையதே அரசு: நாடுகள் அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துபவர் அவரே.

29 தரையினுள் துஞ்சுவோர் யாவரும் அவரை மட்டுமே ஆராதிப்பர்: கல்லறைக்குச் செல்லுகிற யாவரும் அவர் முன் தலை வணங்குவர்.

30 நான் அவருக்காகவே வாழ்வேன்: என் சந்ததியார் அவருக்கே ஊழியம் செய்வர்.

31 வரப்போகிற தலைமுறையினருக்கு ஆண்டவரைக் குறித்துத் தெரிவிப்பார்கள்: பிறக்கப் போகும் மாந்தர்க்கு அவருடைய நீதியைக் குறித்து, 'இதெல்லாம் ஆண்டவருடைய செயல்' என்று அறிவிப்பார்கள்.

அதிகாரம் 022


1 என் ஆயன் ஆண்டவர்: எனக்கென்ன குறைவு!

2 பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார்.

3 என் களைப்பை ஆற்ற நீர் அருவிக்கு என்னை அழைத்துச் செல்கின்றார்; எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார்: தம் திருப்பெயரின் பொருட்டு என்னைத் தம் நேரிய வழியில் செலுத்துகின்றார்.

4 இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், தீமையானதெதற்கும் அஞ்சேன்: ஏனெனில், நீர் என்னோடு இருக்கின்றீர்; உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன.

5 என் எதிரிகள் காண, நீர் எனக்கு விருந்தொன்றைத் தயாரிக்கின்றீர்: என் தலைக்கு எண்ணெய் பூசினீர்; என் கிண்ணம் நிரம்பி வழிகின்றது.

6 கருணையும் அருளும் என்னைத் தொடரும்; என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும்: ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன்; ஊழி ஊழிக்காலமும் குடியிருப்பேன்.

அதிகாரம் 023


1 மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன: பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே.

2 ஏனென்றால், கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே: ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே.

3 ஆண்டவரது மலை மீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?

4 மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன், பயனற்றதில் மனத்தை செலுத்தாதவன்: தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன் .

5 இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்: இவனே தன்னைக் காக்கும் ஆண்டவரிடம் மீட்பு அடைவான்.

6 இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே: யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே.

7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்!

8 மாட்சி மிகு மன்னர் இவர் யாரோ?' 'வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்: போரில் வல்லவரான ஆண்டவரே இவர்!'

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்!

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?' சோனைகளின் ஆண்டவரே இவர்: மாட்சிமிகு மன்னர் இவரே!'

அதிகாரம் 024


1 ஆண்டவரே, என் இறைவா, உம்மை நோக்கி உன் உள்ளம் தாவுகின்றது.

2 உம் மீது நம்பிக்கை வைக்கிறேன்; நான் ஏமாற்றம் அயை விடாதேயும்: என் எதிரிகள் என் நிலையைக் கண்டு அக்களிக்க விடாதேயும்.

3 ஏனெனில், உம்மை நம்பும் எவரும் வெட்கிப்போகார்: கண் மூடித்தனமாய் வாக்குறுதி தவறுவோரே வெட்கிப் போவார்.

4 ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் காட்டியருளும்: உம் நெறிகளை எனக்குக் கற்பித்தருளும்.

5 உம் உண்மை என்னும் நெறியில் என்னை நடத்தி எனக்கு அறிவு புகட்டியருளும்: என் மீட்பாரம் இறைவன் நீரே, என்றும் உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

6 ஆண்டவரே, உம் இரக்கப் பெருக்கத்தை நினைவுகூரும்: ஆதி கால முதல் உள்ள உம் அருளன்பை மறவாதேயும்.

7 இளமையில் நான் செய்த பாவங்களையும் குற்றங்களையும் நினையாதேயும்: உம் அருள் அன்பிற்கேற்ப என்னை நினைவு கூரும், உமது அருள் நன்மையின் பொருட்டென்னை மறவாதேயும்.

8 அண்டவர் நல்லவர், நேர்மையுள்ளவர்: ஆகவே, பாவிகளுக்கு நல்வழி கற்பிப்பார்.

9 நீதி நெறியில் எளியோரை நடத்துவார்: எளியோர்க்குத் தம் வழியைக் கற்பிப்பார்.

10 ஆண்டவருடைய உடன்படிக்கையையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய வழிகள் எல்லாம் அருளும் உண்மையும் கொண்டவை.

11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் பாவத்தை மன்னிப்பீர்: பெரிது நான் செய்த பாவம்.

12 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் யார்? தான் தேர்ந்துகொள்ள வேண்டிய வழியை அவனுக்குக் கற்பிப்பார்.

13 நலன்கள் மிக்கவனாய் அவன் வாழ்வான்: அவனுடைய வழிவந்தோர் மாநிலத்தை உரிமையாக்கிக் கொள்வர்.

14 தமக்கு அஞ்சி நடப்போரிடம் ஆண்டவர் அன்புறவு கொண்டுள்ளார்: தமது உடன்படிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

15 என் கண்கள் எந்தாளும் ஆண்டவரை நோக்கித் திரும்பியுள்ளன: ஏனெனில் கண்ணியில் விழாமல் என் அடிகளை அவர் காத்துக்கொள்வார்.

16 ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்கு அருள் கூரும்: ஏனெனில், நான் துணையற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்.

17 என் இதயத்தின் கலக்கத்தைத் தணித்தருளும்: என் கவலைகளினின்று என்னை விடுவித்தருளும்.

18 என் துன்ப துயரத்தைக் கண்ணோக்கும்: என் குற்றங்கள் அனைத்தையும் மன்னியும்.

19 என் எதிரிகளைப் பாரும்; அவர்கள் மிகப்பலர்: கடும் பகைகொண்டு என்னை வெறுக்கின்றனர்.

20 என் உயிரைக் காத்து என்னை விடுவியும்: உம்மிடம் அடைக்கலம் புகுந்த நான் தலைகுனிய விடாதேயும்.

21 மாசின்மையும் நேர்மையும் எனக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்; ஏனெனில் ஆண்டவரே, உம்மை நான் நம்பியுள்ளேன்: இறைவா, இஸ்ராயேலர் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவித்தருளும்.

அதிகாரம் 025


1 ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும், ஏனெனில் என் நடத்தை மாசற்றது: ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தேன், என் மனம் தளர்ச்சியுறவில்லை.

2 ஆண்டவரே, என்னை ஆராய்ந்து சோதித்துப் பாரும்: என் மனத்தையும் இதயத்தையும் துருவிப்பாரும்.

3 உமது அருளன்பு என் மனக்கண்முன் உள்ளது: நீர் காட்டிய உண்மைப் பாதையில் நான் நடக்கிறேன்.

4 தீயவர்களோடு நான் அமர்வதில்லை: வஞ்சக மனத்தினரோடு நான் சேர்வதில்லை.

5 தீமை செய்வோரின் கூட்டத்தை நான் வெறுக்கிறேன்: அக்கிரமிகளோடு நான் அமர்வதில்லை.

6 ஆண்டவரே, நான் மாசற்ற மனத்தோடு என் கைகளைக் கழுவி,

7 உமது புகழை அனைவருக்கும் வெளிப்படுத்தி, உமது அற்புதச்செயல்கள் அனைத்தையும் எடுத்து உரைப்பவனாய் உமது பீடத்தை வலம் வருகிறேன்.

8 ஆண்டவரே, நீர் வாழும் உமது கூடார இல்லத்தின் மீது பற்றுதல் கொண்டேன்: உமது மாட்சிமை தங்கும் உமது கூடாரத்தைப் பெரிதும் விரும்பினேன்.

9 என்னைப் பாவிகளோடு சேர்த்து உன் ஆன்மாவை எடுத்து விடாதேயும்: இரத்த வெறியர்களோடு என் உயிரை எடுத்துக் கொள்ளதேயும்.

10 அவர்களுடைய கைகள் அக்கிரமம் நிரம்பியவை: அவர்கள் வலக்கரம் கைக்கூலி நிறைய வாங்குபவை.

11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்ளுகிறேன்: என் மீது இரக்கம் வைத்து என்னை மீட்டுக் கொள்ளும்.

12 நான் நடப்பது நேரிய பாதையாகும்: சபையில் நான் ஆண்டவரை வாழ்த்துவேன்.

அதிகாரம் 026


1 ஆண்டவரே என் ஒளி, ஆண்டவரே என் மீட்பு: நான் யாருக்கு அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் வாழ்வுக்கு அடைக்கலம், யாருக்கு நான் நடுங்கவேண்டும்?

2 என் பகைவர்களும் எதிரிகளுமாகிய தீயோர் என்னை விழுங்க வருவது போல் என்னைத் தாக்கும் போது, அவர்களே தடுமாறி விழுந்து போயினர்,

3 எனக்கெதிராய் அவர்கள் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் கலங்காது: எனக்கெதிராய்ப் போரெழுந்தாலும் நான் நம்பிக்கையோடிருப்பேன்.

4 ஆண்டவரிடம் நான் வேண்டுவது ஒன்றே, நான் விரும்புவதும் ஒன்றே: ஆண்டவருடைய இல்லத்தில் நான் வாழ்நாள் முழுவதும் குடியிருக்கவேண்டும்; ஆண்டவருடைய இனிமையை நான் சுவைக்கவேண்டும்; அவரது ஆலயத்தை நான் பார்க்கவேண்டும்.

5 கேடு வரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்: தம் கூடாரத்தின் உட்புறத்தில் என்னை ஒளித்து வைப்பார்; உயர்ந்ததொரு பாறையில் என்னைத்தூக்கி வைப்பார்.

6 இப்போது என்னைச் சூழ்ந்து நிற்கும் எதிரிகள் மேல் வெற்றி கொண்டவனாய்த் தலைநிமிர்ந்து நடப்பேன்; அவருடைய கூடாரத்தில் அக்களிப்பு ஆரவாரத்துடன் பலிகளைச் சமர்பிப்பேன்: ஆண்டவருக்கு இன்னிசை பாடுவேன், புகழ் இசைப்பேன்.

7 ஆண்டவரே, நானும்மை நோக்கி எழுப்பும் குரலைக் கேட்டருளும்: என் மீது அருள் கூரும், என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

8 என் உள்ளம் உம்மேடு உரையாடுகிறது; உம்மை நான் பார்க்க விரும்புகிறேன்: ஆண்டவரே, நீர் எனக்கு இன்முகம் காட்டவேண்டுமென விழைகிறேன்.

9 உம் முகத்தை எனக்கு மறைத்துக் கொள்ளாதேயும்: நீரே எனக்குத் துணை, என்னைத் தள்ளிவிடாதேயும்: என் மீட்பராகிய இறைவா, என்னைக் கைவிடாதேயும்.

10 என் தாயும் தந்தையும் கைவிட்டாலும், ஆண்டவர் என்னை ஏற்றுக் கொள்வார்.

11 ஆண்டவரே, உம் வழியை எனக்குக் கற்பித்தருளும்: என் எதிரிகளின் பொருட்டு நேரிய வழியில் என்னை நடத்திச் செல்லும்.

12 என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை விட்டுவிடாதேயும்: ஏனெனில், பொய்ச்சாட்சி சொல்வோரும், கொடுமை செய்ய விரும்புவோரும் எனக்கெதிராய்க் கிளம்பினார்கள்.

13 நனோ வாழ்வோருடைய நாட்டில், ஆண்டவருடைய நலன்களைக் காண்போனென நம்புகிறேன்.

14 ஆண்டவரை எதிர்பார்த்து வல்லவனாயிரு: உன் உள்ளம் திடம் கொள்வதாக, ஆண்டவரை எதிர்பார்த்திரு.

அதிகாரம் 027


1 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்; என் பாறை அரணே! என் குரல் உமது செவியில் விழுவதாக! என் குரலுக்கு நீர் செவிசாய்க்கவில்லையேல், படுகுழியில் செல்வோருக்கு ஒப்பாவேன் நான்.

2 உம்மை நோக்கி நான் கூவுகையில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளும்: உமது ஆலயத் தூயகத்தை நோக்கி என் கைகளை நான் உயர்த்தும் போது, என் குரலைக் கேட்டருளும்.

3 பாவிகளோடு என்னை ஒழித்துவிடாதேயும்; தீமை செய்பவர்களோடு என்னைத் தொலைத்து விடாதேயும்: அவர்கள் அயலாரோடு சமாதானப் பேச்சு நிகழ்த்துவார்கள்; ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருப்பவை தீய எண்ணங்களே.

4 அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குக் கூலி கொடும்; அவர்களுடைய செயல்களின் தீமைக்கு ஏற்றவாறு அவர்களைத் தண்டியும்: அவர்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பலனளியும்; தங்கள் செயல்களின் பயனை அவர்கள் அடையச் செய்யும்.

5 ஏனெனில், ஆண்டவருடைய செயல்களை அவர்கள் கவனிப்பதில்லை, அவருடைய கைவேலையை நினைப்பதில்லை: எனவே, ஆண்டவர் அவர்களை ஒழித்து விடுவாராக, மீளவும் எழும்பாதபடி செய்வாராக.

6 ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக: ஏனெனில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளினார்.

7 ஆண்டவர் என் வலிமையும் கேடயமுமாயிருக்கிறார்; என் இதயம் அவர் மீது நம்பிக்கை கொண்டது: எனக்குதவி கிடைத்தது; ஆகவே, என் இதயம் அக்களிக்கின்றது, இன்னிசை பாடி அவரைப் புகழ்கின்றேன்.

8 ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமை ஆவார்: தம்மால் அபிஷுகம் பெற்றவருக்கு மீட்புத்தரும் பாதுகாப்பும் அவரே.

9 ஆண்டவரே, உம் மக்களைக் காத்தருளும், உம் உரிமைப் பொருளான அவர்களுக்கு ஆசி அளித்தருளும்: மேய்ப்பனாக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக் கொள்ளும்.

அதிகாரம் 028


1 வானோர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: மாட்சியும் வல்லமையும் ஆண்டவருக்குரியதென வாழ்த்துங்கள்.

2 ஆண்டவரது பெயருக்கு உரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: அவருடைய திருமன்றத்தில் அவரை வழிபடுங்கள்.

3 நீர்த்திரள்களின் மீது ஆண்டவரின் குரல் ஒலிக்கின்றது, மகத்துவமிக்க ஆண்டவர் பேரிடி முழங்குகின்றார்: நீர்ப்பரப்பின் மீது ஆண்டவர் விளங்குகின்றார்.

4 ஆண்டவருடைய குரல் வலிமை வாய்ந்தது, அவருடைய குரல் மாட்சிமை மிக்கது,

5 ஆண்டவருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறது: லீபான் மலையின் கேதுரு மரங்களை ஆண்டவர் பெயர்த்தெறிகிறார்.

6 லீபான் மலையை அவர் கன்றுக்குட்டி போல் துள்ளச் செய்கிறார்: சாயியோன் மலையை இளம் காட்டெருது போல் துள்ளி விழச் செய்கிறார்.

7 ஆண்டவருடைய குரல் நெருப்புத் தழலை எழச்செய்கிறது.

8 ஆண்டவருடைய குரல் பாலைவனத்தை அதிரச் செய்கிறது: காதோஷ் பாலைவெளியை அதிரச் செய்கிறது.

9 ஆண்டவருடைய குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகிறது; காடுகளை அழித்து வெறுமை ஆக்குகிறது: அவரது ஆலயத்தில் எல்லாரும், 'போற்றி! போற்றி!' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

10 வெள்ளப்பெருக்கின் மீது விளங்குகின்றார் ஆண்டவர்: என்றென்றும் அரசரென வீற்றிருப்பார் ஆண்டவர்.

11 ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமையைத் தந்தருள்வார்: அமைதியளித்து அவர்களுக்கு ஆசியளிப்பார்.

அதிகாரம் 029


1 ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்; ஏனெனில், நீர் எனக்கு விடுதலையளித்தீர்: என் எதிரிகள் என்னைக் கண்டு மகிழ்வுற விடவில்லை.

2 ஆண்டவராகிய என் இறைவா, உம்மை நோக்கிக் கூவினேன்: எனக்கு நலம் அளித்தீர்.

3 ஆண்டவரே, கீழுலகினின்று என் ஆன்மாவை வெளியேற்றினீர்: பாதாளப் படுகுழிக்குச் செல்பவர்களிடையினின்று என்னைக் காத்தீர்.

4 புனிதர்களே, ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவர் எத்துணை பரிசுத்தர் என்பதை நினைத்துப் போற்றுங்கள்.

5 ஏனெனில், அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுமட்டுமே, அவரது தயவோ வாழ் நாள் முழுவதும் நீடிக்கும்: மாலையில் அழுகை என்றால், காலையில் உண்டாவது அக்களிப்பு!

6 எந்நாளும் அசைவுறேன்' என்று மன உறுதியோடு சொன்னேன்.

7 ஆண்டவரே, நீர் உம் தயவு காட்டிய போது எனக்குப் பெருமையும் வலிமையும் தந்தீர்: ஆனால் உமது முகத்தை நீர் மறைத்துக் கொண்ட போது கலக்கமுற்றேன்.

8 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்: என் இறைவனின் இரக்கத்தை நான் மன்றாடுகிறேன் .

9 நான் உயிரிழப்பதால் கிடைக்கும் பயன் என்ன? நான் குழியில் இறங்குவதால் பயன் என்ன? தூசியானது உம்மைப் போற்றுமா? அல்லது உமது வாக்குறுதியைப் புகழ்ந்தேத்துமா?' என்று வேண்டுகிறேன்.

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாய்த்தருளும், என்மீதிரங்கும்: ஆண்டவரே, எனக்குத் துணைசெய்யும்.

11 என் அழுகையைக் களிநடனமாக மாற்றினீர்: என் சாக்குத் துணியைக் களைந்து விட்டு, மகிழ்ச்சி உடையால் என்னை உடுத்தினீர்.

12 இதனால், என் ஆன்மா மவுனத்தைக் கலைத்து உம்மைப் புகழ்ந்து பாடும்: ஆண்டவராகிய என் இறைவா, என்றென்றும் உம்மைப் போற்றுவேன்.

அதிகாரம் 030


1 ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன், நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்: உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.

2 என் பக்கம் செவிசாய்த்தருளும், என்னை விடுவிக்க விரைந்தருளும்; எனக்கு அடைக்கலந்தரும் பாறையாயிரும்: கோட்டை போலிருந்து என்னைக் காப்பாற்றும்.

3 ஏனெனில், நீர் எனக்குக் கற்கோட்டையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்: உம் பெயரின் பொருட்டு என்னை வழி நடத்தியருள்வீர், நல்வழி காட்டுவீர்.

4 என்னைப் பிடிக்க மறைவாக விரித்துள்ள கண்ணியினின்று என்னைத் தப்புவித்தருள்வீர்: ஏனெனில், நீர் எனக்கு அடைக்கலமாயுள்ளீர்.

5 உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்: ஆண்டவரே, வார்த்தையில் தவறாத இறைவா, நீர் என்னை மீட்டருள்வீர்.

6 வெறும் சிலைகளை வணங்குகிறவர்களை நீர் வெறுக்கிறீர்: நானோ ஆண்டவரில் நம்பிக்கை வைக்கிறேன்.

7 உம் அருளன்பை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: ஏனெனில், துயர் மிக்க என் நிலையப் பார்த்து என் நெருக்கடியில் எனக்கு உதவி செய்தீர்.

8 எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை: எதிரியின் நெருக்கடியில்லாத இடத்தில் என்னை நிலை நிறுத்தினீர்.

9 ஆண்டவரே, என் மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நான் துன்ப நெருக்கடியில் அகப்பட்டிருக்கிறேன்: என் கண்கள் வருத்தத்தால் பலவீனமடைகின்றன, என் உயிரும் உடலும் அப்படியே.

10 வருத்ததிலேயே என் வாழ்நாள் கடந்துசெல்கின்றது; பெருமூச்சு விடுதலே என் வாழ்க்கையாயிருக்கின்றது: துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது, என் எலும்புகளும் தேய்ந்து போகின்றன.

11 என் எதிரிகள் அனைவருடையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்; என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்: எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவனானேன்; வெளியே என்னைக் காண்கின்றவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்.

12 இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்: உடைந்துபோன மட்கலத்தைப் போலானேன்.

13 பலர் என்னை இழித்துப் பேசுவது என்காதில் விழுந்தது; எப்பக்கமும் அச்சம் என்னைச் சூழ்கிறது: பலரும் எனக்கெதிராய்ச் சதிசெய்து என் உயிரைப் பறிக்க எண்ணினர்.

14 ஆனால் ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்: 'நீரே என் கடவுள்' என்றேன்.

15 என் கதி உம் கையில் உள்ளது: என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் என்னை விடுவித்தருளும்.

16 கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்: உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்.

17 ஆண்டவரே, உம்மைக் கூவியழைத்தேன், நான் ஏமாற்றமடைய விடாதேயும்: தீயோர் ஏமாற்றமடைவார்களாக, கீழுலகில் விழுந்து வாயடைத்துப் போவார்களாக.

18 பொய் சொல்லும் வாய் பேச்சற்றுப் போவதாக: செருக்கும் புறக்கணிப்பும் கொண்டு நீதிமானுக்கு எதிராக ஆணவச் சொல் பேசும் நாவு அசைவற்றுப் போவதாக.

19 ஆண்டவரே, உம்மை அஞ்சுவோர்க்கு நீர் சேர்த்து வைத்திருக்கும் அருள் எத்துணை மிக்கது!

20 உம்மை நாடி வருவோர்க்கு அனைவர் முன்னிலையிலும் நீர் காட்டும் அருள் எத்துணை மிகுதியானது! எதிரிகளுடைய சதிகளினின்று உம்முடைய திருமுகத்தின் ஆதரவால் அவர்களைப் பாதுகாக்கின்றீர்: தீ நாவுகளுடைய பேச்சுக்கு இரையாகாதபடி அவர்களை உம் கூடாரத்தில் ஒளித்துக் காக்கின்றீர்.

21 ஆண்டவர் வாழ்த்துப் பெறுவாராக: ஏனெனில், அரண்கொண்ட நகரத்தில் என் மீது தம் வியப்புக்குரிய இரக்கத்தைக் காட்டியுள்ளார்.

22 நானோ, "உம் திருமுன்னிலையிலிருந்து தள்ளிவிடப்பட்டேன்!" என்று அச்சம் மேலிட்டவனாய்ச் சொல்லலானேன்: நீரோ என் வேண்டுதலின் குரலைக் கேட்கலானீர்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட போது எனக்குச் செவிகொடுத்தீர்.

23 ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அன்பு காட்டுங்கள்: விசுவாசமுள்ளவர்களை ஆண்டவர் பாதுகாக்கிறார்; செருக்குற்று நடப்பவர்களுக்கு அவர் நிறைவான தண்டனை அளிக்கின்றார்.

24 ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே, மனத்திடன் கொள்ளுங்கள்: உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்.

அதிகாரம் 031


1 எவன் பாவம் போக்கப்பட்டதோ அவன் பேறு பெற்றவன்: எவன் பாவம் மறைக்கப்பட்டதோ அவனும் பேறு பெற்றவன்.

2 ஆண்டவர் எவன் மேல் பாவத்தைச் சுமத்தவில்லையோ அவன் பேறு பெற்றவன்: யாருள்ளத்தில் வஞ்சகம் இல்லையோ அவனும் பேறுபெற்றவன்.

3 என் பாவத்தை வெளியிடாது இருந்த வரையில் என் உடல் தளர்வுற்றது: ஓயாத என் பெருமூச்சுகளிடையே அது மெலிவுற்றது.

4 இரவும் பகலும் என்மேலே உம் கரம் ஓங்கி நின்றது: கோடை வறட்சி போல என் வலிமை வறண்டு போயிற்று.

5 என் பாவத்தை நான் உமக்கு வெளியிட்டேன்; என் குற்றத்தை நான் உம் திருமுன் மறைத்தேனில்லை: "ஆண்டவரிடம் என் பாவத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்றேன்; நீரும் என் குற்றத்தை மன்னித்தீர்.

6 இதனால் நல்லவர் யாவரும் உம்மை நோக்கி வேண்டுவர்: நெருக்கடியான வேளையில் அவர்கள் உம்மை மன்றாடுவார்கள். வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தாலும் அவர்களை நெருங்காது.

7 ஆண்டவரே, நீர் எனக்கு அடைக்கலமாய் உள்ளீர், இன்னல்கள் அனைத்தினின்றும் என்னைக் காத்தருள்வீர்: உம் மீட்பால் வரும் மகிழ்வாலே என்னை அணைக்கின்றீர்."

8 நான் உனக்கு அறிவு புகட்டுவேன், நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்: உனக்கறிவு தருவேன், உன்மேல் என் பார்வையைத் திருப்புவேன்" என்றீர்.

9 அறிவில்லாக் குதிரை போலும் கழுதை போலும் இருக்காதீர்: கடிவாளத்தால் அவற்றை அடக்க வேண்டும் அன்றோ! இல்லையெனில் நீங்கள் அவற்றை நெருங்க முடியாது.

10 பாவியின் துன்பங்கள் பல: ஆண்டவரை நம்புவோரை அவர்தம் இரக்கம் என்றென்றும் சூழ்ந்திடும்.

11 ஆண்டவரில் மகிழ்ந்திடுவீர், நீதிமான்களே களிகூர்ந்திடுவீர்: நேர்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவரில் அக்களித்திடுவீர்.

அதிகாரம் 032


1 நீதிமான்களே, ஆண்டவரில் அகமகிழுங்கள்: நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே.

2 யாழினால் ஆண்டவரைப் புகழுங்கள்: பத்து நரம்பு வீணையால் அவரது புகழ் பாடுங்கள்.

3 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்: மகிழ்ச்சிக் குரலில் நன்றாகப் பாடுங்கள்.

4 ஏனெனில், ஆண்டவருடைய வார்த்தை நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் உண்மையானவை.

5 நீதியும் நேர்மையும் அவர் விரும்புகிறார்: அவருடைய அருளால் பூமி நிறைந்துள்ளது.

6 ஆண்டவருடைய வார்த்தையால் வானங்கள் உண்டாயின: அவரது சொல்லால் வான் அணிகள் எல்லாம் உருவாயின.

7 குடத்தில் தண்ணீர் எடுப்பது போல் அவர் கடல் நீரை ஒன்றுசேர்க்கிறார்: பாத்திரங்களில் தண்ணீரை வைப்பது போல் ஆழ்கடலை அடைத்து வைத்திருக்கிறார்.

8 பூவுலகெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சுவதாக: அதில் வாழ்வோரெல்லாரும் அவருக்கு அஞ்சுவார்களாக.

9 ஏனெனில், அவர் ஒரு வார்த்தை சொல்லவே, எல்லாம் உண்டாயின: அவர் கட்டளையிடவே அவை உருவாயின.

10 மக்கள் இனங்களின் திட்டங்களை ஆண்டவர் சிதறடிக்கிறார்: மக்களின் எண்ணங்களைப் பயனற்றவை ஆக்குகிறார்.

11 ஆண்டவருடைய திட்டங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்: அவருடைய எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.

12 ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொள்ளும் மக்கள் இனம் பேறு பெற்றது: தமது உரிமைப் பொருளாக அவர் தேர்ந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர்கள்.

13 வானுலகிலிருந்து ஆண்டவர் பார்க்கிறார்: ஆதாமின் மக்கள் எல்லாரையும் பார்க்கிறார்.

14 பூவில் வாழ்வோர் அனைவரையும், அவர் தம் உறைவிடத்தினின்று நோக்குகிறார்.

15 அனைவருடைய நெஞ்சங்களையும் உருவாக்கின அவர், அவர்கள் செய்வதையெல்லாம் கவனிக்கிறார்.

16 அரசன் வெற்றி பெறுவது பெரிய சேனையினால் அன்று: போர் வீரன் தன்னைக் காத்துக் கொள்வது மிகுந்த வன்மையினால் அன்று.

17 குதிரைகளால் வெற்றி பெறுவது நிச்சயமன்று: அவற்றின் வலிமை பாதுகாப்பு தரும் என்பது உறுதியன்று.

18 இதோ தமக்கு அஞ்சுபவர்களை ஆண்டவர் பார்க்கிறார்: தமது அருளை நம்புவோரை அவர் கண் நோக்குகிறார்.

19 அவர்களைச் சாவினின்று விடுவிக்கவும், பஞ்ச காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுக்கவுமே அவர் பார்க்கிறார்.

20 நம் ஆன்மா ஆண்டவருக்காகக் காத்திருக்கின்றது: அவரே நமக்கு உதவியும் கேடயமுமாயிருக்கிறார்.

21 அவரில் நம் உள்ளம் மகிழ்கின்றது: அவருடைய திருப்பெயரில் நம்பிக்கை வைக்கிறோம்.

22 ஆண்டவரே, உம் இரக்கம் எம்மீது இருப்பதாக: நாங்கள் உம்மை நம்பியிருக்கும் அளவுக்கு உம் இரக்கமும் இருப்பதாக.

அதிகாரம் 033


1 ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்.

2 என் ஆன்மா ஆண்டவரில் பெருமைகொள்ளும்: சிறுமையுற்றோர் இதைக் கேட்டு அக்களிப்பார்களாக.

3 என்னோடு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்: எல்லோரும் சேர்ந்து அவரது பெயரைப் புகழ்ந்தேத்துவோம்.

4 நான் ஆண்டவரைத் தேடினேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: எல்லாவித அச்சத்தினின்றும் என்னை விடுவித்தார்.

5 அவரை நோக்குங்கள், மகிழ்ச்சி அடைவீர்கள்: வெட்கத்தால் தலைகுனிய மாட்டீர்கள்.

6 இதோ! திக்கற்றவன் கூவியழைக்க, ஆண்டவர் அவன் குரலைக் கேட்டார்: எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார்.

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரைச் சுற்றி, அவருடைய தூதர் பாளையம் இறங்கிக் காத்திடுவார்.

8 ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் தஞ்சம் புகுவோன் பேறு பெற்றவன்.

9 ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அஞ்சுங்கள்: ஏனெனில், அவருக்கு அஞ்சுவோருக்கு எதுவும் குறைவுபடாது.

10 வலிமையுற்றோர் வறிஞராய்ப் பசியுற்றார்; ஆண்டவரைத் தேடுவோர்க்கோ எந்த நன்மையும் குறைவுபடாது.

11 வாரீர் மக்களே, நான் சொல்வதைக் கேளீர்: உங்களுக்குத் தேவ பயத்தைக் கற்பிப்பேன்.

12 வாழ்க்கை மீது பற்றுதல் கொண்டுள்ளவன் யார்? நலன்களைத் துய்க்க நீடிய வாழ்வை விரும்பும் மனிதன் யார்?

13 உன் நாவை நீ தீமையினின்றி காத்திடு: வஞ்சக மொழி பேச வாயெடுக்காதிரு.

14 தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு.

15 ஆண்டவருடைய கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவருடைய செவிகள் அவர்களது குரலைக் கேட்கின்றன.

16 ஆண்டவருடைய முகம் தீயோரை எதிர்த்து நிற்கின்றது: ஆண்டவர் பூமியிலிருந்து அவர்களுடைய நினைவையே எடுத்து விடுவார்.

17 நீதிமான்கள் கூக்குரலிட்டனர்; ஆண்டவர் அவர்களுக்குச் செவி சாய்த்தார்: எல்லாத் துன்பங்களினின்றும் விடுவித்தார்.

18 உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலேயே உள்ளார் ஆண்டவர்: மனம் நைந்தவர்களைக் காத்தருள்வார்.

19 நீதிமானின் துயரங்கள் பல: ஆனால் அவயைனைத்தினின்றும் ஆண்டவர் அவனைக் கடைத்தேற்றுவார்.

20 அவர்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுவார்: அவற்றில் ஒன்று முதலாய் நொறுங்காது.

21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்: நீதிமான்களைப் பகைப்பவர்களோ தண்டனைக்குள்ளாவர்கள்.

22 தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கிறார்: அவரிடம் அடைக்கலம் புகுபவன் எவனும் தண்டனையடையான்.

அதிகாரம் 034


1 ஆண்டவரே, என்னோடு வழக்காடுபவனுடன் நீர் வழக்குத் தொடுத்தருளும்: என்னைத் தாக்குபவன் மீது நீரே போர் தொடுத்தருளும்.

2 கேடயத்தையும் பரிசையையும் உம் கையில் எடுத்துக் கொள்ளும்: எனக்குத் துணையாக எழுந்தருளும்.

3 உம் கையில் ஈட்டியை ஓங்கி என்னைத் துண்புறுத்துவோரை வழிமறித்தருளும்: 'உன் பாதுகாப்பு நாமே' என்று என்னிடம் சொல்லியருளும்.

4 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஏமாற்றமடைவார்களாக, வெட்கமுறுவார்களாக: எனக்குத் தீமை செய்ய நினைப்போர் பின்னடைவார்களாக, நாணித் தலை குனிவார்களாக.

5 ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டிச் செல்ல, அவர்கள் காற்றில் பறக்கும் பதர் போலாவார்களாக.

6 ஆண்டவருடைய தூதர் அவர்களைத் துரத்திச் செல்ல, அவர்கள் செல்லும் வழி இருள் மிக்கதும் வழுக்கலுமாயிருப்பதாக.

7 ஏனெனில், காரணம் எதுவுமின்றி எனக்கு அவர்கள் கண்ணி வைத்தார்கள்: காரணமின்றி அவர்கள் என் உயிரை வாங்கப் படுகுழி வெட்டினார்கள்.

8 எதிர்பாராத அழிவு அவர்களுக்கு வருவதாக, அவர்கள் விரித்த வலையில் அவர்களே பிடிபடுவார்களாக: அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுவார்களாக.

9 என் உள்ளமோ ஆண்டவரில் அக்களிப்புக்கொள்ளும்: அவர் அருளிய மீட்பை நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்.

10 எனக்குள்ள வலிமையெல்லாம்: 'ஆண்டவரே உமக்கு இணை யார்? வலிமை மிக்கவனிடமிருந்து எளியவனை விடுவிக்கும் உமக்கு, கொள்ளையடிப்பவனிடமிருந்து துயருற்றவனையும் ஏழையையும் காக்கும் உமக்கு இணை யார்?' என்கிறது.

11 வன்னெஞ்சச் காட்சிகள் எழுந்தனர்: என்ன வென்றும் அறியாத காரியங்களைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர்.

12 நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமையே செய்தனர்: என் நெஞ்சம் ஆழ்துயரில் அமிழ்ந்தச் செய்தனர்.

13 நனோ அவர்கள் நோயுற்றிருக்கையில் சாக்குத்துணி அணிந்து, நோன்பிருந்து என்னை வாட்டிக் கொண்டேன்: என்னுள்ளே வெகுவாய்ச் செபம் செய்தேன்.

14 அவனை என் நண்பன், என் சகோதரன் போல் நினைத்துத் துயர் கொண்டேன்: தன் தாயை நினைத்துத் துயருறுபவன் போல் துயர் கொண்டு அலைந்தேன்.

15 ஆனால் நான் தளர்ச்சியுற்றபோது அவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்தனர்: எதிர்பாராத நேரத்தில் எனக்கெதிராய் ஒன்று கூடி என் மேல் பாய்ந்தார்கள்.

16 ஓயாமல் என் மேல் பழி சுமத்தினார்கள்; சோதனைக்குள்ளாக்கினார்கள்; ஏளனத்துக்கு உட்படுத்தினார்கள்: பல்லைக் கடித்து கொண்டு என் மீது விழுந்தார்கள்.

17 ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? கர்ஜனை செய்து தாக்குவோரிடமிருந்து, சிங்கங்களிடமிருந்து என் உயிரைக் காத்தருளும்.

18 பெருங்கூட்டத்தில் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: திரளான பெருமக்களிடையே உம்மைப் புகழ்வேன்.

19 வஞ்சகரான என் எதிரிகள் என் மீது வெற்றி கொண்டு மகிழ விடாதேயும்: காரணமின்றி என்னைப் பகைப்பவர் கண் சிமிட்ட விடாதேயும்.

20 அவர்கள் பேசுவது அமைதிப் பேச்சன்று: நாட்டில் அமைதியுடன் வாழ்வோருக்கு, வஞ்சகமாய்க் கெடுதி செய்வதே அவர்கள் நினைவெல்லாம்.

21 என்னை எதிர்த்து அவர்கள் தம் வாயை அகலத் திறக்கின்றனர்: 'ஆ, ஆ, எங்கள் கண்ணாலேயே பார்த்தோமே' என்கின்றனர்.

22 ஆண்டவரே, நீர் இதைப் பார்த்தீரன்றோ: பேசாமலிராதேயும் ஆண்டவரே, என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்.

23 என் இறைவா, என் ஆண்டவரே, என் வழக்கைத் தீர்க்க எழுந்து வாரும்: எனக்குப் பாதுகாப்பளிக்க விழித்தெழும்.

24 ஆண்டவரே, உம் நீதிக்கேற்ப என் வழக்கைத் தீர்த்தருளும்: என் இறைவா, அவர்கள் என் மேல் வெற்றி கொண்டு மகிழ்ச்சியுற விடாதேயும்.

25 ஆ, ஆ, நாம் விரும்பியது போலாயிற்று' என்று அவர்கள் தம் உள்ளத்தில் நினைக்கவிடாதேயும்: 'அவனை விழுங்கி விட்டோம்' என்று அவர்கள் சொல்ல விடாதேயும்.

26 எனக்கு நேர்ந்த இடர்களை நினைத்து மகிழ்ச்சியுறும் அவர்களனைவரும், ஒன்றாய்க் கலங்கி வெட்கமுறுவார்களாக.

27 எனக்கு எதிராகத் தலைதூக்குபவர்கள், வெட்கமும் மானக்கேடும் அடைவார்களாக; எனக்குச் சார்பாய்ப் பேசுபவர்கள் அக்களித்து அகமகிழ்வார்களாக: 'தம் ஊழியனின் நலத்தைக் காக்கும் ஆண்டவரது பெருமை விளங்கட்டும்' என்று எப்பொதும் சொல்வார்களாக.

28 என் நாவோ உமது நீதியை எடுத்துரைக்கும்: உமது புகழை என்றென்றும் பாடும்.

அதிகாரம் 035


1 தீமையானது பாவியின் மனத்தைத் தூண்டுகிறது: அவன் மனக்கண் முன் இறை அச்சம் என்பதே இல்லை.

2 தன் குற்றம் வெளியாகாது, வெறுப்புக்குள்ளாகாது என்று நினைத்து வீண் நம்பிக்கை கொள்கிறான்.

3 அவன் பேசுவதெல்லாம் கொடுமையும் வஞ்சகமுமே: நல்லறிவு கொண்டு நன்மை செய்வதை நிறுத்தி விட்டான்.

4 தூங்கும் போது கூட அவன் நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் அக்கிரமமே: நெறிகெட்ட வழியில் அவன் நடக்கிறான்; தீய வழியை விட்டு அவன் விலகுவதில்லை.

5 ஆண்டவரே, உமது அருளன்பு வானங்கள் வரைக்கும் உயர்ந்துள்ளது: உமது சொல்லுறுதி மேகங்களையே எட்டுகிறது.

6 உம்முடைய நீதி மிக உயர்ந்த மலைகள் போல உயர்ந்துள்ளன; உம் நியாயத் தீர்ப்புகள் அடி காணாத கடல் போல் ஆழ்ந்துள்ளன: ஆண்டவரே, மனிதர்களையும் விலங்குகளையும் நீர் காப்பாற்றுகிறீர்.

7 இறைவா, உமதருள் எவ்வளவு உயிர்மதிப்புள்ளது! மனுமக்கள் உம் இறக்கைகளின் நிழலில் வந்து அடைக்கலம் புகுகின்றனர்.

8 உமது வீட்டில் உள்ள செழுமையால் அவர்கள் நிறைவு கொள்கின்றனர்: உம் பேரின்ப நீரோடையில் அவர்களது தாகத்தைத் தணிக்கின்றீர்.

9 ஏனெனில், உயிர்தரும் ஊற்று உம்மிடமே உள்ளது: உமது ஒளியிலே நாங்கள் ஒளி காண்போம்.

10 உம்மை வணங்குபவர்களுக்கு உமது இரக்கத்தையும், செம்மையான நெஞ்சினர்க்கு உமது நேர்மையையும் காண்பித்தருளும் .

11 செருக்குள்ளவன் என்னை நசுக்க விடாதேயும்: பாவியின் கையில் நான் அகப்பட விடாதேயும்.

12 தீமை செய்தவர்கள் இதோ அழிந்து போயினர், வீழ்த்தப்பட்டார்கள்: அவர்கள் மீண்டும் எழப்போவதில்லை.

அதிகாரம் 036


1 தீமை செய்பவர்களைக் கண் எரிச்சல் கொள்ளாதே: அக்கிரமம் செய்வோரைப் பார்த்துப் பொறாமைப் படாதே.

2 ஏனென்றால், அவர்கள் விரைவில் புல்லைப் போல் உலர்ந்து போவார்கள்: புற்பூண்டுகளைப் போல வாடிப் போவார்கள்.

3 ஆண்டவர் மீது நம்பிக்கை வை, நன்மை செய்: புனித நாட்டில் எவ்விதக் கவலையின்றி இருப்பாய்.

4 ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு: அப்போது உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார்.

5 உன் வாழ்வின் முடிவை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவர் பேரில் நம்பிக்கை வைத்திரு: அவரே எல்லாம் செய்வார்.

6 உனது நேர்மை ஒளிபோல எழும்பச் செய்வார்: உனது மாசின்மை பட்டப்பகல் போல விளங்கச் செய்வார்.

7 ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.

8 கோபத்தை விட்டு விடு; சினத்தைக் கைவிடு: எரிச்சல்படாதே; அதுவே பாவத்திற்கு வழியாகும்.

9 ஏனென்றால், தீமை செய்வோர் நாசமாவார்கள்: ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.

10 இன்னும் சிறிதுகாலம்; தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்: அவன் இருந்த இடத்தைத் தேடுவாய்; ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான்.

11 சாந்தமுள்ளோர் புனித நாட்டை உரிமைப்படுத்திக் கொள்வார்கள்: அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர்.

12 நீதிமானுக்கு விரோதமாகப் பாவி சதித்திட்டமிடுகிறான்: அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான்.

13 ஆண்டவரோ அவனைப் பார்த்து நகைக்கிறார்: அவனது அழிவுக்காலம் நெருங்குவதை அவர் காண்கிறார்.

14 ஏழை எளியவரை விழத்தாட்டி, நேரிய பாதையில் நடப்பவர்களைத் தொலைக்க, தீயோர் பட்டயத்தை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகிறார்கள்.

15 ஆனால் அவர்களது பட்டயம் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் ஒடிந்து போகும்.

16 தீயோருடைய திரளான செல்வத்தை விட, நல்லவருடைய சிறிதளவு பொருள் மேலானது.

17 ஏனெனில், பாவிகளின் வலிமை நிலைகுலைந்து போகும்: ஆண்டவர் நீதிமான்களை நிலை நிறுத்துவார்.

18 நீதிமான்களுடைய வாழ்நாட்களைக் குறித்து ஆண்டவர் கருத்தாய் இருக்கிறார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றென்றும் நிற்கும்.

19 அழிவின் காலத்தில் அவர்கள் வெட்கிப் போக மாட்டார்கள்: பஞ்ச காலத்திலோ அவர்கள் நிறைவு கொள்வார்கள்.

20 ஆனால் தீயோர் அழிவுறுவர்; ஆண்டவருடைய எதிரிகள் செழிப்பான புல்வெளி உலர்வது போல் ஒழிந்துபோவர்: புகை போல் மறைந்தொழிவர்.

21 தீயோர் கடன் வாங்கினால், திருப்பிக் கொடுப்பதில்லை: நல்லவரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.

22 ஆண்டவர் யாருக்குத் தம் ஆசியை அருள்கிறாரோ அவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: யாரைச் சபிக்கிறாரோ அவர்கள் அழிந்து போவார்.

23 ஒருவனுடைய வாழ்வின் நெறி உறுதி பெறுவது ஆண்டவராலே: அவனுடைய வாழ்வை அவர் உகந்ததென ஏற்கிறார்.

24 அப்போது அவன் கீழே விழுந்தாலும் அப்படியே குப்புறக் கிடக்கமாட்டான்: ஏனெனில் ஆண்டவர் அவனது கையைத் தாங்கிக் கொள்கிறார்.

25 இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ முதிர் பருவம் அடைந்துள்ளேன்: நல்லவன் கைவிடப்பட்டதை நான் எந்நாளும் கண்டதில்லை; அவனுடைய மக்கள் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.

26 எப்போதும் அவன் இரக்கப்படுகிறான், கடன் கொடுக்கிறான்: ஆகவே அவன் மக்கள் ஆசி பெறுவர்.

27 தீமையை விலக்கு, நன்மை செய்: அப்போது என்றென்றும் வாழ்வாய்.

28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர்.

29 நல்லவர்களோ புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: என்றென்றும் அதில் வாழ்வர்.

30 நீதிமானின் வாயிலிருந்து ஞானம் வெளிப்படும்: அவனது நாவு நேரியதை எடுத்துரைக்கும்.

31 கடவுளுடைய திருச்சட்டம் அவன் நெஞ்சில் பதிந்துள்ளது: அவனுடைய பாதங்கள் தடுமாறுவதில்லை.

32 தீயவன் நீதிமான் மேலேயே கண்ணாயிருக்கிறான்: அவனைக் கொன்றுவிடப் பார்க்கிறான்.

33 ஆனால் ஆண்டவர் அவனைத் தீயவனின் கையில் சிக்கவிட மாட்டார்: நியாயத் தீர்ப்பு நிகழும் போது தண்டனைகளாக விட மாட்டார்.

34 ஆண்டவர் மீது நம்பிக்கை வை; அவர் காட்டிய வழியில் நட: அப்போது நீ புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி உன்னை உயர்த்துவார்; தீயோர் அழிவுறுவதைப் பார்த்து மகிழ்வாய்.

35 தீயவன் செருக்கித் திரிவதை நான் பார்த்தேன்: செழித்தோங்கும் கேதுரு மரம் போல் சிறந்தோங்குவதைக் கண்டேன்.

36 அவ்வழியே மீண்டும் சென்றேன்; அவன் இருக்கிற இடம் தெரியவில்லை: தேடிப் பார்த்தேன், காணவில்லை.

37 நல்லவனைக் கவனித்துப் பார்; நீதிமானை எண்ணிப் பார்: அமைதியை விரும்புகிறவனுக்கு சந்ததியிராமல் போகாது.

38 பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும்.

39 நல்லவர்களுக்கு ஈடேற்றம் ஆண்டவரிடமிருந்தே வரும்: துன்ப வேளையில் அவர்களுக்குப் புகலிடம் அவரே.

40 ஆண்டவர் அவர்களுக்குத் துணை நின்று விடுதலையளிக்கிறார்; தீயோரின் கையினின்று விடுவித்துக் காப்பாற்றுகிறார்: ஏனெனில், அவர்கள் அவரிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.

அதிகாரம் 037


1 ஆண்டவரே, நீர் சினம் கொண்டு என்னைக் கடிந்து கொள்ளாதேயும்: சீற்றங் கொண்டு என்னைத் தண்டியாதேயும்.

2 ஏனெனில், உம் அம்புகள் என் மேல் பாய்ந்தன: உம் திருக் கரத்தின் தண்டனையும் என் மேல் விழுந்தது.

3 நீர் சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை: என் பாவத்தால் என் எலும்புகளெல்லாம் நெக்குவிட்டுப் போயின.

4 என் குற்றங்கள் என் தலைக்கு மேல் பெருகி எழுந்தன: பெரும் சுமைபோல் என்னை மிகவே நசுக்குகின்றன.

5 என் காயங்கள் அழுகி நாற்றம் எடுக்கின்றன: இதற்கு என் அறியாமையே காரணம்.

6 தலை குனிந்து மிகத் தளர்வடைந்து, நாளெல்லாம் துயரத்தில் மூழ்கி வாழ்கிறேன்.

7 என் இடுப்பெல்லாம் வீங்கி நலிவடைந்துள்ளது: என் உடலில் நலமான உறுப்பெதுவுமே இல்லை.

8 நலிவடைந்து நான் மிக நொறுங்குண்டேன்: என் நெஞ்சம் ஏங்கியதால் நான் தேம்பி அழலானேன்.

9 ஆண்டவரே, என் விருப்பம் எல்லாம் நீர் அறிந்துள்ளீர்: என் புலம்பலை நீர் அறியாமலில்லை.

10 என் நெஞ்சம் துடிக்கிறது: பலங்குன்றிப் போனேன், என் கண் பார்வையே மங்கிப் போனது.

11 என் நண்பர், என் தோழர் எல்லாருமே என் துன்ப நேரத்தில் தொலைவில் நின்றார்கள்: என் உறவினரும் என்னை அணுகவில்லை.

12 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்: எனக்குத் தீமை செய்ய விரும்புவோர், கேடு வருமென அச்சுறுத்துகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.

13 யானோவெனில் செவிடன் போல் கேளாமல் இருக்கிறேன்: ஊமை போல் வாய் திறவாமல் நிற்கிறேன்.

14 கேள்வியற்ற மனிதன் போல் ஆனேன்: பேச்சற்றவனுக்கு நிகரானேன்.

15 ஆண்டவரே, என் நம்பிக்கை எல்லாம் உம்மீதே வைத்திருக்கிறேன்: ஆண்டவராகிய என் இறைவா, என் மன்றாட்டை நீர் கேட்டருள்வீர்.

16 என் அடி சறுக்கும் போது, என்னைப் பார்த்து மகிழ்ச்சியுற விடாதீர்: எனக்கெதிராய் பெருமை கொள்ள விடாதீர்" என்று வேண்டுகிறேன்.

17 சறுக்கி விழும் றிலையில் இருக்கிறேன்; என் வருத்தம் எந்நேரமும் என் கண் முன்னே இருக்கின்றது.

18 என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்: நான் செய்த பாவத்தினிமித்தம் நான் பெரிதும் கவலையுற்றிருக்கிறேன்.

19 காரணமின்றி என்னை எதிர்ப்பவர்கள் வலிமை மிக்கவர்கள்: அநியாயமாய் என்னைப் பகைப்பவர் பலராயுளர்!

20 நன்மைக்குத் தீமை செய்பவர் பலர்: நான் நன்மையைக் கடைப்பிடிப்பதால் என்னைத் தாக்குபவர் பலர்.

21 ஆண்டவரே, என்னைக் கைவிடாதேயும்: என் இறைவா, எனக்கு வெகு தொலைவிலிராதேயும்.

22 எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்: ஆண்டவரே, என் மீட்பரே, விரைந்து வாரும்.

அதிகாரம் 038


1 நாவினால் பாவம் செய்யாதவாறு என் போக்கைக் கவனித்துக் கொள்வேன்: தீயவன் என் எதிரில் இருக்கும் வரையில் என் வாய்க்குக் கடிவாளம் இடுவேன்" என்றேன்.

2 வாய் பேசாது வாளா இருந்தேன்; பயனொன்றும் இல்லை: என் துயரமோ மீண்டும் கிளர்ந்தெழுந்தது.

3 என் உள்ளம் என் அகத்தே எரிச்சல் கொண்டது: நினைக்க நினைக்கப் பற்றி எரிந்தது, அப்போது என் நா பேசியதாவது.

4 ஆண்டவரே, என் வாழ்வின் முடியையும் என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்.

5 எவ்வளவு நிலையற்றது என் வாழ்வு' இதை அறிவேனாக.

6 இதோ! என் வாழ்நாள் இரண்டொரு கைமுழம் போல இருக்கச் செய்தீர்: உம்முன்னே என் வாழ்க்கை ஒன்றுமேயில்லை; எம் மனிதனும் ஒரு சிறு மூச்சுப் போல் இருக்கின்றான்.

7 வெறும் நிழலைப் போல கடந்து போகிறான் எம்மனிதனும்; அவன் கலக்கப்படுவதெல்லாம் வீணே: பொருளைச் சேர்க்கிறான், ஆனால் யார் அதை அடைவர் என அறியான்.

8 ஆகவே ஆண்டவரே, நான் எதிர்பார்ப்பது என்ன? உம்மிடமே என் நம்பிக்கையெல்லாம்!

9 என் தீவினைகள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்: மூடரின் நிந்தைக்கு என்னை ஆளாக்காதேயும்.

10 பேசாமலிருந்தேன், வாய் திறக்கவில்லை: ஏனெனில், எனக்கு நிகழ்ந்ததெல்லாம் உம்மாலேயே!

11 நீரெனக்கு அனுப்பிய வாதையை என்னிடமிருந்து அகற்றிவிடும்: உமது கரத்தின் தாகுதலால் நான் நிலை குலைந்து போகிறேன்.

12 குற்றத்தின் பொருட்டே நீர் ஒருவனைத் தண்டிக்கிறீர்: அவன் விரும்பும் பொருளையெல்லாம் அரிப்பது போல அழித்து விடுகிறீர்; மனிதன் ஒரு சிறு மூச்சேயன்றோ!

13 ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீருக்குப் பாராமுகமாயிராதேயும். உம் முன்னிலையில் நான் அந்நியனாயுள்ளேன்: என் முன்னோர் அனைவர் போல நானும் வழிப்போக்கனே.

14 நான் போய் விடு முன்பே, உலகிலிருந்து மறையு முன்பே, உம் கோபப் பார்வையை என்னிடமிருந்து திருப்பி, நான் அமைதியிலேயே உயிர் வாழச் செய்யும்.'

அதிகாரம் 039


1 நம்பினேன், ஆண்டவரை நம்பினேன், அவர் என் பக்கமாய்க் குனிந்து, என் கூக்குரலைக் கேட்டருளினார்.

2 அழிவு தரும் குழியினின்றும் சதுப்பு நிலச் சேற்றினின்றும் அவர் என்னைத் தூக்கிவிட்டார்; உறுதியான பாறையின் மீது என் காலடிகளை நிறுத்தினார், நடக்க எனக்கு உறுதி தந்தார்.

3 புதியதோர் பாடலை, நம் இறைவனைப்¢ புகழும் பாடல் ஒன்றை என் நாவினின்று எழச் செய்தார்: பலரும் இதைப்பார்த்து அச்சம் கொள்வார்; ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.

4 தன் நம்பிக்கையெல்லாம் ஆண்டவர் மீது வைத்தவனே பேறு பெற்றவன்: சிலைகளை வழிபடுவோரைப் பின்பற்றாதவன், பொய்யானவற்றில் மனத்தைச் செலுத்தாதவன்- இவனே பேறு பெற்றவன்.

5 ஆண்டவரே, என் இறைவனே, வியத்தகு செயல்கள் பல நீர் செய்தீர்; எங்கள் பால் உமக்குள்ள எண்ணங்களில் உமக்கு நிகர் எவருமில்லை. அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில், அவை எண்ணிலடங்கா.

6 பலியும் காணிக்கையும் நீர் விரும்பவில்லை ஆனால் என் செவிகளை நீர் திறந்துவிட்டீர்: தகனப் பலியும் பாவம் போக்கும் பலிப்பொருளும் நீர் கேட்கவில்லை.

7 அப்போது நான் சொன்னது: "இதோ வருகிறேன், ஏட்டுச் சுருளில் என்னைக் குறித்து.

8 என் இறைவா, உம் திருவுளத்தின்படி நடப்பதே எனக்கின்பம் உம் திருச்சட்டத்தை என் உள்ளத்தில் கொண்டிருக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது".

9 மக்கட் பேரவையில் உம் நீதியை வெளிப்படுத்தினேன்: இதோ! நான் என் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே, இதை நீர் அறிவீர்.

10 உமது நீதியின் தன்மையை என் இதயத்துள் ஒளித்து வைக்கவில்லை; உமது சொல்லுறுதியைப் பற்றியும்,. உமது அருள் துணையைப் பற்றியும் வெளிப்படையாய்ப் பேசினேன். உமது அருளைப் பற்றியும் உமது வாக்குறுதியைப் பற்றியும் பேரவையில் பேசாமல் ஒளித்து வைக்கவில்லை.

11 நீரோ ஆண்டவரே, உமது இரக்கப் பெருக்கை எனக்குக் காட்ட மறக்காதேயும் உமது அருளும் உறுதி வாக்கும் என்னை என்றும் பாதுகாப்பனவாக.

12 எண்ணிக்கையிலடங்காத் தீமைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன நான் பார்த்தறிய முடியாத அளவுக்கு என் குற்றங்கள் என்னை வளைத்துக் கொண்டன, என் தலை மயிர்களைக் காட்டிலும் அவை மிகுதியானவை. என் நெஞ்சமோ அதனால் சோர்வடைந்து போயிற்று.

13 ஆண்டவரே, என்னை விடுவிக்க அருள் கூர்வீராக, ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக.

14 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் நாணி நிலை குலைவார்களாக, எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர் வெட்கத்தால் தலை குனிந்துப் பின்னடைவார்களாக.

15 ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.

16 உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட் துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி! என்று எந்நேரமும் வாழ்த்துவாராக.

17 நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்: இறைவன் என்மேல் அக்கறை கொண்டுள்ளார். எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே: ஆண்டவரே, தாமதியாதேயும்.

அதிகாரம் 040


1 ஏழை எளியவனைக் குறித்து கவலை உள்ளவன் பேறு பெற்றவன்: துன்ப நாளில் ஆண்டவர் அவனுக்கு மீட்பளிப்பார்.

2 ஆண்டவர் அவனைக் காத்துக்கொள்வார். நீண்ட ஆயுளை அவனுக்கு அளிப்பார். உலகில் அவனுக்கு நற்பெயர் அளிப்பார், பகைவரின் விருப்பத்திற்கு அவனைக் கையளிக்க மாட்டார்.

3 அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கையில், ஆண்டவர் அவனுக்குத் துணை செய்வார்.

4 ஆண்டவரே, என் மீது இரக்கம் வையும், என்னைக் குணப்படுத்தும்,. உமக்கெதிராய்ப் பாவம் செய்தேன்' என்று நான் வேண்டுகிறேன்.

5 என் எதிரிகள் என்னைப் பற்றித் தீயது பேசுகின்றனர். என்று அவன் செத்தொழிவான்? அவன் பெயர் என்று ஒழிந்துபோகும்? என்கின்றனர்.

6 என்னைப் பார்க்க வருபவன் பேசுவதோ இனிய சொற்கள். ஆனால் அவன் நெஞ்சம் நினைப்பதோ வஞ்சகம், வெளியிற் போனதும் அதைக் காட்டி விடுகிறான்.

7 என்னைப் பகைப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி எனக்கெதிராய் முறுமுறுக்கின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்.

8 பேய்ப் பிணியொன்று அவனைப் பீடித்திருக்கிறது. படுத்த படுக்கையிலிருந்து ,இனி அவன் எழும்ப மாட்டான் என்கின்றனர்.

9 நான் நம்பியிருந்த நண்பன், என்னோடு உணவு கொண்ட அந்த நண்பனுங் கூட, என்னை மிதிக்கக் காலைத் தூக்குகிறான்.

10 நீரோ ஆண்டவரோ, என்மீது இரக்கம் வையும். நோயிலிருந்து நான் எழுந்திருக்கச் செய்யும்; அப்போது வஞ்சகம் தீர்த்துக் கொள்வேன்.

11 என் எதிரி என் மேல் வெற்றிக் கொண்டு மகிழ்ச்சி கொள்ளா விட்டால், உமது அருள் எனக்குண்டென்று அறிந்து கொள்வேன்.

12 தீமை எனக்கெதுவும் நேராதபடி காத்துக்கொள்வீர். என்றென்றும் உம் முன்னிலையில் என்னை நிறுத்தி வைப்பீர்.

13 இஸ்ராயேலின் இறைவனாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக. என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக! ஆமென், ஆமென்.

அதிகாரம் 041


1 கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல், இறைவா, என் நெஞ்சம் உம்மை ஆர்வத்துடன் நாடிச் செல்கிறது.

2 இறைவன் மீது, உயிருள்ள இறைவன் மீது என் உள்ளம் தாகங்கொண்டது. என்று சொல்வேன்? இறைவனின் முகத்தை என்று காண்பேன்?

3 உன் இறைவன் எங்கே?" என்று அவர்கள் நாளும் என்னிடம் சொல்லும் போது, என் கண்ணீரே எனக்கு இரவும் பகலும் உணவாயிற்று.

4 மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு இறைவனின் இல்லத்திற்குச் சென்றேனே! அக்களிப்பும் புகழ் இசையும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும் போது என் உள்ளம் உருகுகிறது.

5 நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்? இறைவன் மீது நம்பிக்கை வை. என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் கடவுளை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.

6 என் அகத்தே என் உள்ளம் தளர்ச்சியுறுகிறது. ஆகவே யோர்தான் நாட்டினின்றும், ஹெர்மோன், மீசார் மலைகளிலிருந்தும் உம்மை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.

7 உம் நீர் வீழ்ச்சிகளின் இரைச்சலால் ஆழம் ஆழத்தை அழைக்கிறது. உம் அலைகள், கடற்திரைகள் எல்லாம் என் மேல் விழுந்தன.

8 பகற்பொழுதில் ஆண்டவர் எனக்கு அருள் புரிவாராக: இரவிலும் இறைவனுக்கு இன்னிசை பாடுவேன், உயிர் தரும் இறைவனைப் புகழ்வேன்.

9 என் பாறை அரணாயிருப்பவரே, ஏன் என்னை மறந்தீர்? என் எதிரியால் நொறுங்குண்டவனாய் வருத்தமுற்று நான் அலைவானேன்?' என்று இறைவனிடம் கூறுவேன்.

10 என் எதிரிகள் என்னைப் பழித்துரைக்கும் போதும், 'உன் இறைவன் எங்கே?' என்று நாளும் கூறும் போதும், என் எலும்புகள் நொறுங்குண்டு போகின்றன.

11 என் நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகின்றாய்? இறைவன்மீது நம்பிக்கை வை: என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் கடவுளை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.

அதிகாரம் 042


1 இறைவா, புனிதமற்ற மனிதர்க்கு எதிராக என் நியாய வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்கும்: தீயவனும் வஞ்சகனுமான மனிதனிடமிருந்த என்னை விடுவிப்பீராக.

2 ஏனெனில், இறைவா, நீரே என் வலிமை; ஏன் என்னைத் தள்ளிவிட்டீர்? பகைவனால் துன்புற்றவனாய் நான் துயருடன் அலைவானேன்?

3 உமது ஒளியை வீசியருளும், உமது உண்மையைக் காட்டியருளும்: அவையே என்னை வழி நடத்தி உமது புனித மலைக்கும் உறைவிடத்துக்கும் கொண்டு சேர்க்கும்.

4 இறைவனின் பீடத்துக்குச் செல்வேன்; எனக்கு அகமகிழ்வும் அக்களிப்பும் தரும் இறைவனிடம் செல்வேன்: இறைவா, என் இறைவா, வீணை கொண்டு உமக்குப் புகழ்பாடுவேன்.

5 என் நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்? இறைவன் மீது நம்பிக்கை வை: என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் இறைவனை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.

அதிகாரம் 043


1 இறைவா, நாங்கள் எம் செவியாலே கேள்வியுற்றோம்; எங்கள் முன்னோர் எங்களுக்கு எடுத்துரைத்தனர்: முற்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நாளில் நீர் செய்த செயலை எங்களுக்கு எடுத்துரைத்தனர்.

2 நீர் உம் வல்லமையால் புற இனத்தாரை விரட்டி எங்கள் முன்னோரை நிலைபெறச் செய்தீர்: பல நாடுகளை ஒடுக்கி அவர்கள் ஓங்கச் செய்தீர்.

3 எங்கள் முன்னோர் நாட்டைக் கைப்பற்றியது தங்கள் வாளின் வலிமையால் அன்று, அவர்களுக்கு மீட்பு கிடைத்தது தங்கள் கைவன்மையால் அன்று: உமது வலக்கரமும் உமது புயப்பலமும், உம் முகத்தினின்று எழுந்த பேரொளியுமே அவர்களுக்குத் துணை நின்றது; ஏனெனின், நீர் அவர்கள் மீது அன்பு கூர்ந்தீர்.

4 நீரே என் அரசர், நீரே என் இறைவன்: யாக்கோபின் இனத்தாருக்கு வெற்றி அளித்தவர் நீரே.

5 எங்கள் எதிரிகளை உம் துணையால் விரட்டியடித்தோம்: எங்களை எதிர்த்து நின்றவர்களை உமது பெயரால் நசுக்கி விட்டோம்.

6 என் வில்லின் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை: எனக்கு மீட்பளித்தது என் வாள் அன்று.

7 எதிரிகளினின்று எமக்கு மீட்பளித்தவர் நீரே: எங்கள் பகைவர்களைச் சிதறடித்தவர் நீரே.

8 எந்நாளும் கடவுளை நினைத்துப் பெருமை கொண்டோம்: உமது பெயரை எந்நேரமும் போற்றிப் புகழ்ந்தோம்.

9 இப்போதோ நீர் எங்களைப் புறக்கணித்து விட்டீர்; எங்களைக் கலங்கடித்தீர்: கடவுளே, நீர் எங்கள் சேனையோடு புறப்பட்டு வரவில்லை.

10 எங்கள் எதிரிகள் முன் நாங்கள் பின்னடையச் செய்தீர்: எங்கள் பகைவர்கள் எங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.

11 கொல்லப்படும் ஆடுகள் போல எங்களைக் கையளித்தீர்: புற இனத்தாரிடையே எங்களைச் சிதறடித்தீர்.

12 விலை எதுவுமின்றி உம் மக்களை விற்று விட்டீர்: அவர்களை விற்றதால் உமக்குக் கிடைத்த பயனோ ஒன்றுமில்லை.

13 எங்கள் அயலாருடைய நிந்தனைக்கு நீர் எங்களை ஆளாக்கினீர்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்துக்கும் பழிப்புக்கும் எங்களை உட்படுத்தினீர்.

14 புற இனத்தாரிடையே எங்களை ஒரு பழிச் சொல்லாக்கினீர்: மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைக்கின்றனர்.

15 எனக்குற்ற மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது: வெட்கம் என்னை முகங்கவிழச் செய்கின்றது.

16 என்னை நிந்தித்துத் தூற்றுபவன் பேசுவதைக் கேட்கும் போது, என் எதிரியையும் பகைவனையும் நான் பார்க்கும் போது வெட்கிப் போகிறேன்.

17 நாங்களும்மை மறக்காவிடினும் உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்கள் மீது வந்து விழுந்தன.

18 எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை: நீர் காட்டிய வழியினின்று விலகி நாங்கள் அடியெடுத்து வைக்கவில்லை.

19 எனினும் துயர் மிக்க இடத்தில் எங்களை நொறுக்கி விட்டீர்: எங்கள் மீது இருள் கவியச் செய்தீர்.

20 இறைவன் பெயரை நாங்கள் மறந்திருந்தால், வேறு தெய்வங்களை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டிருந்தால்,

21 இது கடவுளுக்குத் தெரியாமலா போகும்? உள்ளத்தின் ஆழத்தை அவர் அறிந்தவரன்றோ!

22 எனினும் நாளெல்லாம் உமக்காக நாங்கள் கொல்லப்படுகிறோம்; கசாப்புக்குச் செல்லும் ஆடுகளெனக் கருதப்படுகிறோம்.

23 ஆண்டவரே, துயிலெழும், ஏன் உறங்குகிறீர்? விழித்தெழும், எங்களை ஒருபோதும் தள்ளி விடாதேயும்.

24 ஏன் உமது முகத்தை மறைத்துக் கொள்கிறீர்? நாங்கள் உறும் சிறுமையையும் துன்ப நிலையையும் ஏன் மறந்துவிட்டீர்?

25 நாங்கள் முகங்குப்புற விழுந்து விட்டோம்: தரையோடு தரையாய்க் கிடக்கிறோம்.

26 எங்களுக்குத் துணை செய்ய எழுந்தருளும்: உமது இரக்கத்தை முன்னிட்டு விடுதலையளித்தருளும்.

அதிகாரம் 044


1 இனிய கருத்தொன்றைப் பேச என் நெஞ்சம் துடிக்கிறது, என் பாடலை நான் அரசரிடம் கூறுகிறேன்: தயங்காமல் எழுதுவோனின் எழுது கோல் போலுள்ளது என் நாவு

2 மனுமக்கள் அனைவரிலும் நீர் எழில் மிக்கவர்; உம் பேச்சில் அருள் விளங்கும்: ஆகவே கடவுள் உம்மை என்றென்றும் ஆசீர்வதித்தார்.

3 வீரம் மிகுந்தவரே, உம் பட்டயத்தை இடையில் செருகிக்கொள்ளும்: அதுவே உமக்கு மாண்பும் எழிலும் தரும்.

4 உண்மைக்காவும் நீதிக்காவும் போரிடக் கிளம்பி வாரும்: வலக்கரம் உம் அரிய செயல்களை விளங்கச் செய்வதாக.

5 உம் அம்புகள் கூர்மையானவை, மக்கள் உமக்குப் பணிகின்றனர்: அரசரின் எதிரிகள் கதிகலங்கி வீழ்கின்றனர்.

6 இறைவா, உமது அரியணை என்றென்றும் உள்ளது: உமது ஆட்சிச் செங்கோல் நேரியது.

7 நீதியை விரும்புகின்றீர், அக்கிரமத்தை வெறுக்கின்றீர்: ஆகவே கடவுள், உம் கடவுள் உம் தோழர்களை விட மேலாக உம்மை மகிழ்ச்சித் தைலத்தால் அபிஷுகம் செய்தார்.

8 நீர் அணிந்துள்ள ஆடைகளில் வெள்ளைப் போளம், சந்தனம், இலவங்கத்தின் நறுமணம் வீசுகின்றது: தந்த மாளிகையினின்று எழும் யாழின் ஓசை உமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது.

9 அரசிளம் பெண்கள் உம்மை எதிர்கொண்டு வரவேற்கின்றனர்: ஒபீர் தங்க அணிகள் அணிந்து உம் அரசி உம் வலப்புறம் நிற்கிறார்.

10 மகளே, நான் சொல்வது கேள். நினைத்துப் பார், இதற்குச் செவிசாய்: உன் இனத்தாரையும் வீட்டாரையும் மறந்து விடு.

11 அரசர் உன் பேரழிலை விரும்புவார். அவரே உன் தலைவர், அவருக்குத் தலை வணங்கு.

12 தீர் நாட்டு மக்கள் காணிக்கைகள் ஏந்தி வருகின்றனர். மக்களுள் செல்வர் உம் தயவை நாடி வருகின்றனர்.

13 அரசனின் மகள் எழில் மிக்கவளாய் இதோ வருகின்றாள்: பொன் இழை ஆடையை அவள் அணிந்துள்ளாள்.

14 பன்னிற ஆடையை அணிந்தவளாய் அவள் அரசரிடம் அழைத்து வரப்படுகின்றாள்: இளத்தோழியரும் அவளோடு உம்மிடம் வருகின்றனர்.

15 மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்: அரச மாளிகையில் அவர்கள் இதோ நுழைகின்றனர்.

16 உன் முன்னோருக்குப் பதிலாக உனக்குப் புதல்வர்கள் இருப்பர்: மாநிலமனைத்திற்கும் அவர்களை நீ தலைவர்களாக்குவாய்.

17 தலைமுறை தலைமுறையாய் உமது பெயரை நான் நினைவு கூர்வேன், என்றென்றும் மக்களினத்தார் உம்மைக் கொண்டாடுவர்.

அதிகாரம் 045


1 கடவுள் நம் அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார்: நெருக்கடி நேரத்தில் நமக்கு உறுதுணையென நன்கு காட்டியுள்ளார்.

2 ஆகவே வையமே புரண்டாலும் நாம் அசைய மாட்டோம்: மலைகள் கடல் நடுவிலே விழுந்தாலும் அச்சமில்லை.

3 கடல் அலைகள் கொந்தளித்து எழுந்தாலும், அவற்றின் கொந்தளிப்பால் மலைகள் தடுமாறினாலும், வான் படைகளின் ஆண்டவர் நம்மோடிருக்கிறார்: யாக்கோபின் இறைவன் நமக்கு அரணாய் உள்ளார்.

4 நீரோடைகள் இறைவனின் நகருக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன: உன்னதரின் புனித மிக்க கூடாரத்துக்கு மகிழ்ச்சி தருகின்றன.

5 அதன் நடுவே கடவுள் இருக்கின்றார், ஆகவே அது அசைவுறாது: வைகறையில் கடவுள் அதற்குத் துணை செய்வார்.

6 புறவினத்தார் கொதித்தெழுந்தனர்; அரசுகள் கலக்கமுற்றன: அவர் தம் குரல் முழங்கிற்று, பூமி தளர்ச்சியுற்றது.

7 வான் படைகளின் ஆண்டவர் நம்மோடிருக்கிறார்: யாக்கோபின் இறைவன் நமக்கு அரணாய் உள்ளார்.

8 வாருங்கள், வந்து ஆண்டவர்தம் செயல்களைப் பாருங்கள்: பூமி மீது அவர் வியத்தகு செயல்களைச் செய்துள்ளார்.

9 உலகின் கடையெல்லை வரை அவர் போர்களுக்கு முடிவு தருகிறார்: அம்புகளை நொறுக்கி விடுகிறார், ஈட்டிகளை முறித்தெறிகிறார், கேடயங்களை நெருப்புக்கு இரையாக்குகிறார்.

10 அமைதியுடனிருந்து, நான் கடவுள் என்று உணர்ந்து கொள்ளுங்கள்: புறவினத்தாரிடையிலும், மாநில மீதும் உன்னதர் நானே என்று அறிந்து கொள்ளுங்கள்".

11 வான் படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்: யாக்கோபின் இறைவன் நமக்கு அரணாய் உள்ளார்.

அதிகாரம் 046


1 மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்: அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ் பாடி ஆர்ப்பரியுங்கள்.

2 ஏனெனில், ஆண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர்: உலகுக்கெல்லாம் பேரரசர்.

3 மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்: நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.

4 நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்: தாம் அன்பு செய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.

5 மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார்: எக்காளம் முழங்க ஆண்டவர் எழுந்தருளுகிறார்.

6 பாடுங்கள், இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.

7 ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்: அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்.

8 நாடுகள் அனைத்தின் மீதும் இறைவன் ஆட்சி புரிகின்றார். தம் புனித அரியணை மீது இறைவன் வீற்றிருக்கின்றார்.

9 ஆபிரகாமின் இறைவனுடைய மக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்: ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவனுக்குரியவர்கள்; அவரே மிக உன்னதமானவர்.

அதிகாரம் 047


1 ஆண்டவர் மகத்துவமிக்கவர்: நம் இறைவனின் நகரில் மிகுந்த புகழ்ச்சிக்குரியவர்.

2 அவர் தம் மலை புனிதமானது, புகழ்மிக்கது, உலகனைத்திற்கும் மகிழ்ச்சியாய் விளங்குவது சீயோன் மலை வட கோடியில் உள்ளது; பேரரசரின் நகரம் அதுவே.

3 அதன் கொத்தளங்களில் கடவுள் உறைகின்றார்: அசைக்க முடியாத பாதுகாப்பாய் விளங்குகின்றார்.

4 இதோ! அரசர் அனைவரும் கூடினர்: ஒன்றுபடத் தாக்கினர்.

5 பார்த்தவுடனே திகைத்துப் போயினர்: கலக்கமுற்றனர், ஓட்டம் பிடித்தனர்.

6 அங்கேயே அச்சம் அவர்களை ஆட்கொண்டது: பேறுகால வேதனை போல் அவர்களுக்குத் துன்பம் உண்டாயிற்று.

7 தார்சிஸ் நாட்டுக்குச் செல்லும் கப்பல்களைக் கீழ்த்திசைக் காற்று தாக்கும் போது உண்டாகும் அச்சத்தைப் போன்றது அது.

8 நாங்கள் கேள்வியுற்றது போலவே இருக்கக் கண்டோம், வான் படைகளுக்கு ஆண்டவராயுள்ளவரது நகரில் நிகழக்கண்டோம்: நம் இறைவனின் நகரில் கண்டோம், கடவுள் அதை என்றென்றைக்கும் நிலை நிறுத்துகிறார்.

9 இறைவா, உம் இரக்கத்தைத் தியானித்தோம்: உம் ஆலயத்தில் அதைச் சிந்தனை செய்தோம்.

10 இறைவா, உமது பெயரைப்போலவே உமது புகழும் பூமியின் கடையெல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கரம் நீதியால் நிரம்பியுள்ளது.

11 சீயோன் மலை அகமகிழ்வதாக: உமது நீதித் தீர்ப்புகளை நினைத்து யூதாவின் நகரங்கள் களி கூர்வதாக.

12 சீயோனைச் சுற்றிச் செல்லுங்கள்; அதனைச் சுற்றிப் பாருங்கள்: அதன் கொத்தளங்களை எண்ணிப் பாருங்கள்.

13 அதன் மதில் அரண்களை உற்றுப் பாருங்கள்; அதன் கோட்டைகளை ஆய்ந்து பாருங்கள்: அப்போது இனி வரும் தலைமுறையை நேக்கிச் சொல்வீர்கள்:

14 கடவுள் எவ்வளவு மேலானவர்! என்றென்றும் முடிவில்லாக் காலத்துக்கும் அவரே நம் கடவுள்: அவரே நம்மை வழி நடத்துவார்' என்பீர்கள்.

அதிகாரம் 048


1 மக்கள் இனங்களே, நீங்களனைவரும் நான் சொல்வதற்குச் செவிசாயுங்கள்: புவி மீது வாழ்வோரே, நீங்களனைவரும் இதற்குச் செவி கொடுங்கள்.

2 தாழ்ந்தோர் உயர்ந்தோர் பணக்காரர் ஏழைகள், நீங்கள் அனைவரும் இதற்குச் செவி கொடுங்கள்.

3 என் வாய் ஞானத்தை உரைக்கும்: என் உள்ளத்தின் தியானத்தால் அறிவு எழும்.

4 உவமை மொழிக்கு நான் செவிசாய்ப்பேன்: சுரமண்டலத்தின் இன்னிசைக்குப் பொருந்த என் மறைபொருளைக் கூறுவேன்.

5 துன்ப மிகு நாளில் நான் அஞ்ச வேண்டுவதேன்? என்னைத் துன்புறுத்துவோர் செய்யும் அக்கிரமம் என்னைச் சூழும் போது, நான் ஏன் அஞ்ச வேண்டும்?

6 தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைப்போருக்கும், தம் செல்வப் பெருக்கை நினைத்துப் பெருமைப் படுவோருக்கும், நான் அஞ்ச வேண்டுவதேன்?

7 தன்னைத்தானே விடுவித்துக் கொள்பவன் ஒருவனுமில்லை; தன் மீட்புக்குரிய விலையைக் கடவுளுக்குத் தர யாராலும் இயலாது.

8 அந்த மீட்புக்குரிய விலை மிக உயர்ந்தது.

9 சாவைக் காணாததும் என்றென்றும் நீடிப்பதுமான வாழ்வை வாங்கிக்கொள்ள, எத்தொகையும் போதவே போதாது.

10 ஞானிகள் கூட இறப்பதைக் காணலாம்; அப்படியே ஞானமற்றவர்களும் அறிவீனர்களும் இறந்தொழிவதைக் காணலாம்: தம் செல்வத்தை அந்நியருக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.

11 கல்லறைகளே அவர்களுக்கு நிலையான இல்லங்கள்; தலைமுறையாக அவர்களுக்கு உள்ள குடியிருப்புகள் அவையே: தங்கள் பெயரில் எவ்வளவு நில புலம் கொண்டிருந்தாலும் இதுவே அவர்கள் கதி.

12 ஏனெனில், தன் செல்வ நிலையில் மனிதன் நிலைத்திருப்பதில்லை; செத்தொழியும் விலங்குகளுக்கு அவன் ஒப்பாவான்.

13 மூடத்தனமான நம்பிக்கையுள்ளவர்கள் கதி இதுவே: தங்களுக்குக் கிடைத்த செல்வத்தில் மகிழ்ச்சி கொள்பவர்கள் கதி இதுவே.

14 கீழுலகில் அவர்கள் ஆடுகளைப் போல அடைபடுவர்: சாவே அவர்களுக்கு மேய்ப்பன். நீதிமான்கள் அவர்கள் மேல் தோற்றம் மறைந்தொழியும், கீழுலகே அவர்கள் இருப்பிடமாகும்.

15 எனினும், கடவுள் என்னைக் கீழுலகினின்று விடுவிப்பார்: என்னை அவர் ஏற்றுக் கொள்வார்.

16 ஒருவன் பணக்காரனானால் அவனைக் கண்டு அஞ்சவேண்டாம்: அவன் குடும்பச் செல்வம் பெருகினால் அஞ்சவேண்டாம்.

17 அவன் சாகும் பொழுது தன்னோடு எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை: அவளுடைய சொத்து அவனோடு போவதில்லை.

18 நிம்மதியான வாழ்வு உனக்குக் கிடைத்ததென பிறர் புகழ்வர்" என்று வாழ்நாளில் அவன் தன்னைப் பாராட்டிக் கொண்டாலும்,

19 தன் முன்னோர்கள் போன இடத்திற்கே அவனும் போவான்: அவர்கள் எந்நாளும் ஒளியைக் காணப்போவதில்லை.

20 ஏனெனில், செல்வம் கொண்டு வாழ்பவன் தன் நிலையை அறியாவிடில், செத்தொழியும் விலங்குகளுக்கு ஒப்பாவான்.

அதிகாரம் 049


1 ஆண்டவராகிய இறைவன் பேசலானார்; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையுள்ள பூவுலகைத் தீர்ப்புக்கு அழைக்கலானார்.

2 எழில் மிக்க சீயோனிலிருந்து கடவுள் ஒளி வீசி எழுந்தார்.

3 இதோ நம் இறைவன் வருகின்றார், மவுனமாயிரார்: எரி நெருப்பு அவர் முன் செல்ல, புயற்காற்று அவரைப் புடை சூழ எழுகின்றார்.

4 மேலுள்ள வானங்களையும் இப்பூவுலகையும் அழைக்கின்றார்: தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்க அழைகின்றார்.

5 பலிகளினால் என்னுடன் உடன்படிக்கை செய்து கொண்ட என் புனிதர்களை ஒன்று கூட்டுங்கள்' என்கிறார்.

6 வானங்கள் அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுளே நீதிபதியாய் வருகின்றார்.

7 என் மக்களே, எனக்குச் செவி கொடுங்கள், இதோ நான் பேசுகிறேன்: இஸ்ராயேலே கேள், உனக்கெதிராய் நான் சான்று பகர்வேன்: 'நானே கடவுள், உன் கடவுள் நானே.'

8 நீ இடும் பலிகளைக் குறித்து உன்னைக் கண்டிக்கவில்லை: ஏனெனில், உன் தகனப் பலிகள் எந்நேரமும் என் கண் முன்னே இருக்கின்றன.

9 உன் வீட்டில் உள்ள காளைமாட்டையா நான் கேட்கிறேன்? உன் மந்தையிலுள்ள ஆடுகளையா நான் கேட்கிறேன்?

10 காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் எனக்கே சொந்தம்: என் மலைகளில் மேயும் பல்லாயிரம் மிருகங்களும் என்னுடையவை.

11 வானில் உலவும் பறவைகளையெல்லாம் நான் அறிவேன்; வயல்வெளியில் மேய்வனவும் எனக்குத் தெரியும்.

12 எனக்குப் பசியெடுத்தால் உன்னிடமா சொல்வேன்? பூவுலகும் அதில் உள்ளதனைத்தும் என்னுடையது தானே!

13 எருதுகளின் சதையையா நான் உண்பேன்? செம்மறிகளின் இரசத்தையா நான் குடிப்பேன்?

14 இறை புகழ்ச்சி எனும் பலியை ஆண்டவருக்குச் செலுத்து: உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்து.

15 துன்பநாளில் என்னைக் கூப்பிடு: உன்னை விடுவிப்பேன், நீ என்னை மேன்மைப்படுத்துவாய்.

16 பாவிகளுக்கோ கடவுள் கூறுகிறார்: 'என் கட்டளைகளை நீ ஏன் எடுத்துரைக்கிறாய்? என் உடன்படிக்கையைப் பற்றி நீ ஏன் பேசவேண்டும்?

17 ஒழுக்கத்தைப் பகைப்பவன் அன்றோ நீ? என் வார்த்தையைப் புறக்கணித்தவன் அன்றோ நீ?

18 திருடனைப் பார்த்தால் அவன் பின்னே ஓடுகிறாய்: விபசாரிகளோடு உறவு கொள்கிறாய்.

19 நீ வாய்திறந்தால் வெளிப்படுவது தீமையே: உன் நாவிலிருந்து புறப்படுவது வஞ்சகமே.

20 கூட்டத்தில் உட்கார்ந்து நீ பேசுவதெல்லாம் உன் சகோதரனுக்கெதிராக உன் சொந்த சகோதரனை நிந்தைக்குள்ளாக்குகிறாய்!

21 இப்படியெல்லாம் நீ செய்ய நான் வாளாவிருப்பதா? நானும் உன்னைப் போலென்று நினைத்தாயா? உன்னைக் கண்டித்து நீ செய்ததையெல்லாம் எடுத்துச் சொல்கிறேன், பார்!

22 கடவுளை நினையாதவர்களே, நீங்கள் இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்கள் உயிரைப் பறிப்பேன்: என் கையில் வந்து விழும் போது உங்களைக் காப்பவர் யாரும் இரார்!

23 இறை புகழ்ச்சி என்னும் பலி இடுபவனே எனக்கு மதிப்புக் கொடுப்பவன்: நேர்மையோடு நடப்பவனுக்கு இறைவன் தரும் மீட்பைக் காட்டுவேன்'.

அதிகாரம் 050


1 இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்: உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்குறைகளைப் போக்கிவிடும்.

2 நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்: என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும்.

3 என் குற்றங்குறைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்: நான் செய்த பாவம் எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது.

4 உமக்கெதிராக மட்டுமே பாவம் செய்தேன்; உம் திரு முன்னிலையிலேயே செய்தேன்: உமது தீர்ப்பில் உம் நீதி விளங்குகின்றது, உமது நியாய வாக்கினில் உம் நேர்மை துலங்குகின்றது.

5 இதோ, குற்றமுள்ள நிலையில் நான் பிறந்தேன்: பாவ நிலையிலேயே என் அன்னை என்னைக் கருத்தரித்தாள்.

6 இதோ! இதயத்தின் நேர்மையைக் கண்டு நீர் பெரிதும் மகிழ்கின்றீர்: இதயத்தின் உள்ளிருந்தே எனக்கு மெய்ஞானம் புகட்டுகின்றீர்.

7 ஈஸ்ஸோப் புல்லால் என் மேல் தெளிந்தருளும், நான் தூய்மையாவேன்: நீர் என்னைக் கழுவியருளும், வெண் பனியிலும் வெண்மையாவேன்.

8 அகமகிழ்வும் அக்களிப்பும் என் செவியில் விழச்செய்யும்: நொறுங்குண்ட எலும்புகளும் அக்களிப்படையும்.

9 என் பாவங்களினின்றும் உம் திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளும்: என் குற்றங்களையெல்லாம் போக்கி விடும்.

10 தூயதோர் உள்ளத்தை, இறைவா, நீர் என்னகத்தே உருவாக்கும்: உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்.

11 உம் திருமுன்னிருந்து என்னைத் தள்ளி விடாதேயும், உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும்.

12 உமது மீட்பால் வரும் மகிழ்ச்சியை எனக்களித்தருளும்; உமது பெருந்தன்மையான மனப்பான்மையில் என்னை உறுதிப்படுத்தும்.

13 தீயவர்களுக்கு உம் வழிகளை நான் புகட்டுவேன்: பாவிகள் உம்மிடம் திரும்பி வருவர்.

14 இறைவா, என் மீட்பரான இறைவா, இரத்தப் பழிக்குரிய தண்டனையினின்று விடுவித்தருளும்: உமது நீதியைக் கண்டு என் நாவு ஆர்ப்பரிக்கும்.

15 ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்து விடும்: என் வாய் உமது புகழ்ச்சியை எடுத்துரைக்கும்.

16 ஏனெனில்,பலிகளில் நீர் இன்பம் கொள்வதில்லை: தகனப் பலி கொடுத்தாலும் அதை நீர் ஏற்பதில்லை.

17 இறைவா, நான் உமக்குச் செலுத்த வேண்டிய பலி நொறுங்கிய உள்ளமே: தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் புறக்கணிப்பதில்லை.

18 உம் நன்மைத் தனத்திற்கேற்ப, ஆண்டவரே, சீயோனுக்குக் கருணை காட்டும்: யெருசலேமின் மதில்களை மீளவும் எழுப்புவீராக.

19 அப்போது முறையான பலிகளையும் காணிக்கைகளையும் தகனப் பலிகளையும் ஏற்றுக்கொள்வீர்: அப்போது உமது பீடத்தில் இளங் காளைகளைப் பலியாய் ஒப்புக்கொடுப்பர்.

அதிகாரம் 051


1 தீமை செய்வதில் வல்லவனே, தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?

2 எந்நேரமும் தீமையானதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்: சதி செய்பவனே, உன் நா கூரிய கத்தி போன்றது.

3 நன்மை செய்வதை விடத் தீமை செய்யவே நீ விரும்புகிறாய்: நீதியானதைப் பேசுவதை விடப் பொய் பேசுவதையே விரும்புகிறாய்.

4 கபடமுள்ள நாவே, நீ தீமை விளைவிக்கும் பேச்சை எப்போதும் விரும்புகிறாய்.

5 ஆகவே கடவுள் உன்னைத் தொலைத்து விடுவார்; என்றென்றும் உன்னை அகற்றிவிடுவார்: கூடாரத்தினின்று உன்னை வெளியேற்றுவார், வாழ்வோர் பூமியினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார்.

6 நீதிமான்கள் இதைப் பார்த்து அச்சமுறுவர்: அப்போது அவனைப் பார்த்து நகைத்திடுவர்.

7 இதோ கடவுளைத் தன் அடைக்கலமாகக் கொள்ளாத மனிதன்! தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை நம்பி வாழ்ந்தவன், செய்த அக்கிரமத்தைக் குறித்துப் பெருமை பாராட்டியவன்" என்று நகைப்பர்.

8 நானோ செழித்து வளரும் ஒலிவ மரத்தைப் போல் இறைவன் இல்லத்தில் விளங்குகிறேன்: கடவுளுடைய இரக்கத்தை என்றென்றும் நம்பியுள்ளேன்.

9 இப்படி எனக்குச் செய்ததால் உம்மை என்றென்றும் போற்றுவேன்: உமது திருப்பெயர் நன்மையானது; அதை உம் புனிதர் முன்னிலையில் சாற்றுவேன்.

அதிகாரம் 052


1 கடவுள் இல்லை" என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர்கள் முற்றிலும் கெட்டுப்போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர், நன்மை செய்பவன் எவனுமில்லை.

2 வானினின்று கடவுள் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாவது உண்டா எனப் பார்க்கின்றார்.

3 எல்லாரும் நெறி தவறிப் போயினர்; ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை, ஒருவன் கூட இல்லை.

4 தீமை செய்கிறவர்கள் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் கடவுளின் பெயரைக் கூவி அழைப்பதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமாட்டார்களா?

5 அச்சம் கொள்ளத் தேவையில்லாத இடத்தில் இவர்கள் அச்சத்தால் நடுநடுங்கினார்கள்; ஏனெனில், என்னைத் தாக்கினவர்களின் எலும்புகளை இறைவன் நொறுக்கிவிட்டார்: அவர்கள் சிதறுண்டு போயினர்; ஏனெனில் கடவுள் அவர்களை விரட்டிவிட்டார்.

6 சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதே! கடவுள் தம் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் போது யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.

அதிகாரம் 053


1 இறைவா உம் பெயரின் வல்லமையால் என்னைக் காத்தருளும்: உமது வல்லமையால் எனக்கு நீதி வழங்கும்.

2 இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

3 ஏனெனில், செருக்குற்றோர் என்னை எதிர்தெழுந்தார்கள்; கொடியவர்கள் உயிரைப் பறிக்கத் தேடினார்கள்: கடவுள் அவர்கள் தங்கள் கண்முன் கொள்ளவில்லை.

4 இதோ! கடவுள் எனக்குத் துணைபுரிகிறார்: ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாயிருக்கிறார்.

5 என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையே அவர்கள் மேல் விழச்செய்யும்: உம் வாக்குறுதிக்கேற்ப அவர்களை அழித்து விடும்.

6 மன மகிழ்வோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன், ஏனெனில், அது நல்லது.

7 எல்லாவிதத் துன்பத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். என் எதிரிகள் சிதறுண்டு போனதை வெற்றிக் களிப்போடு நோக்கினேன்.

அதிகாரம் 054


1 இறைவா, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் விண்ணப்பத்தின் மட்டில் பாராமுகமாயிராதேயும்.

2 என் செபத்தை ஏற்றுக்கொண்டு, நான் கேட்பதைத் தந்தருளும்.

3 எனக்குற்ற துயரத்தால் நான் கலங்குகிறேன்: எதிரியின் குரலும், பாவியின் இரைச்சலும் கேட்டு நான் பெரிதும் அவதியுறுகிறேன். அவர்கள் எனக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்: வெகுண்டெழுந்து என்னைத் தாக்குகின்றனர்.

4 என் இதயமோ எனக்குள் கலக்கம் அடைந்துள்ளது. சாவானோ என்ற அச்சம் என்னை மேற்கொண்டுள்ளது.

5 அச்சமும் திகிலும் என்னை மேற்கொண்டன: நடுக்கம் என்னை முற்றிலும் ஆட்கொண்டது.

6 புறாவைப்போல் எனக்குச் சிறகுகள் இல்லையே! இருந்தால் பறந்து போய் அமைதியடைந்திருப்பேனே!" என்று சொல்லிக் கொண்டேன்.

7 வெகு தொலைவு போயிருப்பேன்: பாலை வெளியில் தங்கியிருப்பேன்.

8 புயலினின்றும் பெருங் காற்றினின்றும் வெகு விரைவில் புகலிடம் தேடியிருப்பேன்.

9 ஆண்டவரே, அவர்களுடைய மொழிகளைக் கலங்கடித்து, குழப்பம் உண்டாகச் செய்யும்: ஏனெனில், நகரத்தில் வன்முறையும் கலகமும் காண்கிறேன்.

10 இரவும் பகலும் அவைகள் அதன் மதில்களைச் சுற்றி வருகின்றன. அதன் நடுவே தீச் செயல்களும் அடக்கு முறையும் தான் உள்ளன.

11 அதன் நடுவே சதிச் செயல்களும் உள்ளன. தீமையும் வஞ்சகமும் அதன் தெருக்களை விட்டுப் போகவேயில்லை.

12 என் எதிரி என்னை நிந்தித்திருந்தால் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்: என்னைப் பகைத்தவன் எனக்கு எதிராய்க் கிளர்ந்து எழுந்தால், அவனிடமிருந்து தப்பியோடி ஒளிந்திருப்பேன்.

13 ஆனால் என் தோழன் நீயே! என் நண்பனும் என் உயிர்த்தோழனுமான நீயே என்னை எதிர்த்தாய்!

14 உன்னோடு இனிய நட்புறவு கொண்டிருந்தேனே! விழாக் கூட்டத்தில் இறைவனின் இல்லத்தில் நாம் ஒன்றாய் இருந்தோமே!

15 மரணம் அவர்கள் மேல் வந்து விழுவதாக; உயிரோடு அவர்கள் கீழுலகுக்குச் செல்வார்களாக: ஏனெனில், அக்கிரமம் அவர்கள் இல்லங்களில் அவர்களிடையே இருக்கின்றது.

16 நானோவெனில் கடவுளை நோக்கிக் கூவுவேன்; ஆண்டவர் என்னை மீட்டுக் கொள்வார்.

17 காலையிலும் மாலையிலும் நண்பகலிலும் புலம்புகிறேன்; பெருமூச்சு விடுகிறேன்: அவர் என் குரலுக்குச் செவிசாய்ப்பார்.

18 எனக்கெதிராய் உள்ளவர் பலராயினர்: என்னைத் துன்புறுத்தும் இவர்கள் கையினின்று அவர் என் ஆன்மாவை மீட்டு, அமைதி நிலவும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்.

19 என்றென்றும் ஆட்சி செய்பவரான கடவுள் எனக்குச் செவிசாய்த்து அவர்களை ஒடுக்கி விடுவார்: ஏனெனில், அவர்கள் மனமாற்றம் அடையார், கடவுளுக்கு அஞ்சார்.

20 ஒவ்வொருவனும் தனக்கு அறிமுகமானவர்களுக்கெதிராகக் கை நீட்டுகின்றான்: தான் செய்த உடன்படிக்கையை மீறுகின்றான்.

21 அவன் பேச்சு வெண்ணெயை விட மிருதுவாயுள்ளது: அவன் நெஞ்சமோ போர் மனம் படைத்தது. அவன் சொற்கள் எண்ணெயை விட இனிமையாயுள்ளது: ஆனால் ஓங்கிய வாள் போன்றவை.

22 ஆண்டவர் மீது உன் கவலையைப் போட்டு விடு, அவர் உன்னை ஆதரிப்பார்: நீதிமான் என்றும் நிலைகலங்க விடமாட்டார்.

23 இறைவா, நீர் அவர்களை அழிவுப் பாதாளத்தில் விழச்செய்வீர்; இரத்த வெறியர்களும் வஞ்சகர்களும் தம் வாழ்நாளில் பாதியும் காணமாட்டார்கள்: நானோவெனில், ஆண்டவரே, உம்மையே நம்புகிறேன்.

அதிகாரம் 055


1 இறைவா, என்மீது இரக்கம் வையும்: மனிதர் என்னை நசுக்கி விடுகின்றனர்; இடைவிடாமல் என்னைத் தாக்கித் துன்புறுத்துகின்றனர்.

2 என் எதிரிகள் என்னை எந்நேரமும் நசுக்கப் பார்க்கின்றனர்: எனக்கெதிராய்ப் போரிடுபவர் திரளாய் உள்ளனர்.

3 உன்னதமானவரே, அச்சமென்னை ஆட்கொள்ளும் நாளில் நான் உம்மீது நம்பிக்கை வைப்பேன்: இறைவனின் வாக்குறுதியை நான் போற்றிப் புகழ்கிறேன்.

4 இறைவன்மீது நம்பிக்கை வைக்கிறேன், அச்சமெனக்கில்லை: அற்ப மனிதன் எனக்கு என்ன செய்வான்?

5 நாள் முழுவதும் என் பேச்சைத் திரித்துக் கூறுகின்றனர்: அவர்கள் எண்ணங்களெல்லாம் எனக்கெதிராய்த் தீங்கிழைக்கவே தேடுகின்றன.

6 ஒன்று கூடி கண்ணி வைக்கின்றனர்; நான் போவதையும் வருவதையும் கவனிக்கின்றனர்: என் உயிருக்கு உலை வைக்கின்றனர்.

7 அவர்கள் செய்யும் தீமையின் பொருட்டு அவர்களைத் தப்ப விடாதீர்: இறைவா, உம் சினம் கொதித்தெழ, மக்கள் இனங்களை விழத்தாட்டுவீராக.

8 நான் இங்கும் அங்கும் அலைவதை நீர் பார்த்துக் கொண்டு தானிருக்கிறீர். என் கண்ணீர்களை நீர் உம் தோற் பையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; உம்முடைய நூலிலும் அவற்றை நீர் எழுதி வைக்கவில்லையா!

9 நான் உம்மை எந்நேரத்தில் கூவியழைத்தாலும் என் எதிரிகள் பின்னடைந்து போவர்: கடவுள் என் சார்பாய் உள்ளார்; இதை நான் நன்கறிவேன்.

10 இறைவனின் வாக்குறுதியை நான் புகழ்ந்தேத்துகிறேன்: ஆண்டவருடைய வார்த்தையைப் புகழுகிறேன்.

11 இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறேன், அச்சமெனக்கில்லை: மனிதன் எனக்கு என்ன செய்வான்?

12 இறைவனே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்ற வேண்டுமல்லவா? நன்றிப் பலிகளை உமக்குச் செலுத்துவேன்.

13 ஏனெனில், சாவினின்று என் உயிரைக் காத்தீர்; சறுக்கி விழாதபடி என் அடிகளைக் காத்தீர்: வாழ்வோரின் ஒளியிலே இறைவனின் முன்னிலையில் நான் நடக்கச் செய்தீர்.

அதிகாரம் 056


1 என் மீதிரங்கும் இறைவா, என் மீதிரங்கும்; உம்மிடமே என் ஆன்மா அடைக்கலம் புகுகிறது: கொடுமையெல்லாம் தீரும் வரையில் உம் சிறகுகளின் நிழலில் நான் அடைக்கலம் புகுகிறேன்.

2 உன்னதரான இறைவனை நோக்கிக் கூவுகிறேன்: எனக்கு நன்மை புரியும் இறைவனை நாடுகிறேன்.

3 வானினின்று எனக்கு உதவி புரிந்து மீட்பளிப்பாராக; என்னைத் துன்புறுத்துவோரைக் கேட்டுக்கு ஆளாக்குவாராக: தமது அருளும் சொல்லுறுதியும் எனக்குத் துணைபுரியச் செய்வாராக.

4 மனுமக்களை ஆத்திரத்துடன் விழுங்கும் சிங்கங்களின் நடுவில் நான் கிடக்கிறேன்: ஈட்டியும் அம்பும் போல் உள்ளன அவைகளுடைய பற்கள்; கூரிய வாள் போன்றது அவைகளுடைய நாவு

5 இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.

6 நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்: என் உள்ளம் பெரிதும் தவிக்கலாயிற்று. நான் போகும் வழியில் எனக்குக் குழியை வெட்டியுள்ளனர்: அதில் அவர்களே விழுவார்களாக.

7 உறுதி கொண்டுள்ளது என் உள்ளம்: இறைவா, உறுதி கொண்டுள்ளது என் உள்ளம் இன்னிசை பாடுவேன்: புகழ் இசைப்பேன்.

8 என் நெஞ்சே விழித்தெழு; வீணையே, யாழே, விழித்தெழுங்கள்: பொழுது விடியச் செய்வேன்.

9 ஆண்டவரே, உம்மை மக்களிடையே புகழ்வேன்: மக்களினத்தாரிடையே உமக்குப் புகழ் பாடுவேன்.

10 ஏனெனில், உயர்ந்துள்ளது வானமட்டும் உமதிரக்கம்: மேகங்கள் மட்டும் உயர்ந்துள்ளது உமது சொல்லுறுதி.

11 இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.

அதிகாரம் 057


1 அதிகாரம் படைத்தவர்களே, நீங்கள் மெய்யாகவா நீதித் தீர்ப்புகளை வழங்குகிறீர்கள்? மனுமக்களே, நீங்கள் நியாயமாகவா தீர்ப்புக் கூறுகிறீர்கள்?

2 மாறாக நீங்கள் மனமாரக் கேடு செய்கிறீர்கள்: பூவுலகில் அநீதி புரிவதே உங்கள் வேலையாயுள்ளது.

3 தீயவர்கள் தாயின் வயிற்றிலிருந்தே நெறி தவறிச் செல்கின்றனர்: பொய்யர்கள் பிறப்பிலிருந்தே வழிதவறிச் செல்கின்றனர்.

4 பாம்பின் நஞ்சு போன்றது அவர்களிடத்திலுள்ள நஞ்சு: தன் காதை அடைத்துக் கொள்ளும் செவிட்டு விரியன் பாம்பின் நஞ்சை போன்றது அவர்கள் உள்ளத்திலுள்ள நஞ்சு.

5 பாம்பாட்டியின் குரலை அது கேட்க விரும்புவதில்லை: திறமையுடன் அவன் மகுடி ஊதினாலும் அதன் செவியில் விழுவதில்லை.

6 கடவுளே, அவர்கள் வாயிலுள்ள பற்களை உடைத்தெறியும்: ஆண்டவரே, அந்தச் சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை நொறுக்கி விடும்.

7 ஓடி மறைந்து விடும் தண்ணீர் போல அவர்கள் சிதறிப் போவார்களாக: தங்கள் அம்புகளை அவர்கள் தொடுக்கும் போது அவை கூர்மையற்றுப் போகட்டும்.

8 கரைந்து ஓடுகிற நத்தையைப் போல் அவர்கள் உருகிப் போவார்களாக: தாயின் வயிற்றிலேயே பிறக்காமல் சிதைந்தழியும் கருவைப் போல ஒழிவார்களாக.

9 அடுப்பில் போட்டு எரிவதற்கு முன்பே, பச்சையாயிருக்கும் போதே, சுழற்காற்றினால், அடிபட்டுப் போகும் முட்புதர் போல் ஆவார்களாக.

10 இப்படி நீர் பழிவாங்குவதைக் காணும் போது, நீதிமான் அகமகிழ்வான் தீயவரின் இரத்தத்தில் தன் பாதங்களைக் கழுவுவான்.

11 அப்போது மனிதர்கள்: "உண்மையிலேயே நீதிமானுக்குக் கைம்மாறு உண்டு. மெய்யாகவே பூவுலகில் நீதி வழங்கும் கடவுள் இருக்கிறார்" என்று சொல்வார்கள்.

அதிகாரம் 058


1 என் இறைவா, என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்: எனக்கெதிராய் எழும்புவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளிப்பளித்தருளும்.

2 தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: இரத்த வெறியர்களிடமிருந்து என்னைக் காத்தருளும்.

3 இதோ! அவர்கள் என் உயிருக்கு உலை வைக்கிறார்கள்; வலியோர் எனக்கெதிராய்ச் சதி செய்கிறார்கள்; ஆண்டவரே, என்னிடம் தீவினையோ, பாவமோ இல்லை.

4 என்னிடம் குற்றமில்லாதிருந்தும் என்னை எதிர்க்க விரைகின்றனர், என்னைத் தாக்குகின்றனர்: விழித்தெழும், எனக்குத் துணைசெய்யும், என் நிலையைப் பாரும்.

5 ஏனெனில், படைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் இறைவன் நீரே! விழித்தெழும், புற இனத்தார் அனைவரையும் தண்டிக்க வந்தருளும்: எனக்குச் சதி செய்பவர்கள் யார் மீதும் இரக்கம் காட்டாதேயும்.

6 மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்; நாய்களைப் போல் ஊளையிடுகின்றனர்: ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.

7 இதோ அவர்கள் வாயிலிருந்து புறப்படுவது திமிரான பேச்சு, அவர்கள் உதடு உரைப்பது பழிச் சொற்களே: 'யார் இப்பேச்சைக் கேட்கப் போகிறார்கள்?' என்கின்றனர்.

8 ஆனால், ஆண்டவரே, நீர் அவைகளைப் பார்த்து நகைக்கிறீர்: புற இனத்தார் அனைவரையும் ஏளனம் செய்கின்றீர்.

9 எனக்கு வலிமையானவரே, உம்மையே நோக்கியுள்ளேன்: ஏனெனில் இறைவா, நீர் என் பாதுகாப்பு அரண்.

10 என் இறைவனே, என்மீது இரங்குபவர்: என் எதிரிகள்மீது வெற்றிகொண்டு மகிழ எனக்கு அருள்வாராக.

11 என் மக்களுக்கு அவர்கள் இடறலாகாதபடி இறைவனே, அவர்களைக் கொன்றுவிடும்; உமது வலிமையால் அவர்களைக் கலங்கடித்து விடும்: எங்கள் கேடயமாகிய ஆண்டவரே, அவர்களைத் தாழ்த்திவிடும்.

12 பாவமே அவர்கள் பேசும் சொற்கள், பாவமே அவர்கள் நாவினின்றெழும் பேச்சு: தங்கள் தற்பெருமையிலும் பேசும் சாபனைகளிலும் பொய் வார்த்தைகளிலும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வார்களாக.

13 சினங்கொண்டு அவர்களை அழித்து விடும்; இனி அவர்கள் இராதபடி ஒழித்து விடும்: யாக்கோபின் இனத்தாரிடையிலும் பூவுலகெங்கும் ஆள்பவர் கடவுளே என்று அனைவரும் அறிவார்களாக.

14 மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்: நாய்களைப் போல் உறுமுகின்றனர், ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.

15 இரையைத் தேடி அலைகின்றனர்: உணவு கிடைக்காவிட்டால் ஊளையிடுகின்றனர்.

16 நானோ உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவேன்: காலை தோறும் உமது இரக்கத்தை நினைத்து அக்களிப்பேன். ஏனெனில், நீரே எனக்கு அரணாயிருக்கிறீர். நெருக்கிடையான வேளையில் எனக்கு அடைக்கலமாயிருக்கிறீர்.

17 எனக்கு வலிமையானவரே, உமக்குப் புகழ் பாடுவேன்: ஏனெனில் இறைவனே, நீரே எனக்குப் பாதுகாப்பு அரண்; என் இறைவனே, என் மீது இரங்குபவர் நீரே!

அதிகாரம் 059


1 இறைவா, நீர் எங்களைப் புறக்கணித்தீர்; எங்களைச் சிதறடித்தீர்; எங்கள் மீது சினம் கொண்டீர்: மீண்டும் எங்களுக்கு வாழ்வளித்தருளும்.

2 நாட்டை அதிரச் செய்தீர். அது பிளவுண்டு போகச் செய்தீர். அதன் வெடிப்புகளைச் சரிப்படுத்தும் ஏனெனில், அது ஆட்டங் கொள்கிறது.

3 கொடுமைகள் பல உம் மக்கள் மீது விழச் செய்தீர்: மயக்கமுற்று விழச் செய்யும் மது பானத்தை நாங்கள் குடிக்கச் செய்தீர்.

4 உமக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு வெற்றிக் கொடி நாட்டினீர். அம்புகளினின்று தப்பச் செய்தீர்.

5 உம்முடைய அன்புக்குகந்தவர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணைசெய்யும். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

6 தம் திருத்தலத்தில் இறைவன் கூறினர்: "அக்களிப்பிடையே சிக்கேமைக் கூறுபடுத்துவேன்; சூக்கோத் பள்ளத்தாக்கை அளவெடுத்துப் பிரிப்பேன்.

7 கிலேயாத் நாடும் என்னுடையதே, மனாசே நாடும் என்னுடையதே எப்பிராயிம் எனக்குத் தலைச்சீரா, யூதா என்னுடைய செங்கோல்!

8 மோவாபு எனக்கும் பாதங் கழுவும் பாத்திரம், ஏதோமின் மீது என் மிதியடியை எறிவேன். பிலிஸ்தேயாவின் மீது வெற்றிக்கொள்வேன்."

9 அரண் கொண்ட நகரத்துள் என்னை அழைத்துச் செல்பவர் யார்? ஏதோமுக்கு என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?

10 இறைவனே நீர்தாம் அன்றோ: ஆனால் எங்களைக் கைவிட்டீரே! இறைவனே, நீரும் இனி எங்கள் படைகளோடு செல்லப்போவதில்லையே

11 என் எதிரியை மேற்கொள்ள எனக்கு உதவியளித்தருளும்: ஏனெனில், மனிதன் தரும் உதவி வீண்.

12 கடவுள் துணையால் வீரத்துடன் போராடுவோம்: நம் எதிரிகளை அவரே நசுக்கி விடுவார்.

அதிகாரம் 060


1 இறைவா, என் குரலைக் கேட்டருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

2 பூமியின் கடை எல்லைகளினின்றும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் ஏனெனில், என் நெஞ்சம் தளர்வுற்றது: நீர் என்னைக் கற்பாறையின் மீது நிறுத்தி எனக்குச் சாந்தியளிப்பீர்.

3 ஏனெனில், நீர் என் அடைக்கலமாய் உள்ளீர் விரோதிகளுக்கு எதிராக எனக்கொரு வலிமையான கோபுரமாய் இருக்கிறீர்.

4 நான் உமது கூடாரத்தில் என்றும் குடியிருப்பேனாக: உம் சிறகுகளின் ஆதரவில் அடைக்கலம் புகுவேனாக.

5 என் இறைவா, நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: உம்முடைய பெயரை வணங்குவோருக்குரிய உரிமைப்பேற்றை எனக்கு அளித்தீர்.

6 அரசனுக்கு நீடிய ஆயுளை அளித்தருளும்: அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்.

7 கடவுள் திருமுன் அவர் என்றும் அரசாள்வாராக: அவரைப் பாதுகாக்க உமது அருளையும் தவறாச் சொல்லையும் அனுப்பியருளும்.

8 இங்ஙனம் உமது பெயரை என்றும் புகழ்ந்து பாடுவேன்: நான் செய்த பொருத்தனைகளை எந்நாளும் செலுத்துவேன்.

அதிகாரம் 061


1 கடவுளிடம் தான் என் ஆன்மா சாந்தி கொள்கிறது. அவரிடமிருந்தே எனக்கு மீட்பு வருகிறது.

2 அவர் ஒருவரே எனக்கு மீட்பும் அரணும் அடைக்கலமுமாயிருக்கிறார். எந்நாளும் நான் அசைவுறேன்.

3 எவ்வளவு காலம் நீங்கள் ஒருவனுக்குத் தீமை செய்ய நினைப்பீர்கள்? சாய்ந்திருக்கும் மதில் போலவும், இடிந்திருக்கும் சுவர் போலவும் உள்ள ஒருவனை விழத்தாட்ட நீங்கள் எப்போதுமே நினைப்பீர்களா?

4 நான் இருக்கும் உன்னத இடத்திலிருந்து என்னைத் தள்ளி விட அவர்கள் உண்மையாகவே சதி செய்கிறார்கள்: பொய் சொல்வதில் இன்பம் காண்கிறார்கள். உதட்டால் பேசுவது ஆசி மொழிகள் உள்ளத்தால் நினைப்பது சாபமொழி.

5 நெஞ்சே, கடவுளிடம் மட்டுமே சாந்தி கொள். ஏனெனில், நான் எதிர்பார்ப்பது அவரிடமிருந்தே வருகிறது.

6 அவர் ஒருவரே எனக்கு மீட்பும் அரணும் அடைக்கலமுமாயிருக்கிறார். நான் அசைவுறேன்.

7 கடவுளிடம் உள்ளது என் மீட்பும் மகிமையும். எனக்கு வலிமை தரும் அரணும் என் அடைக்கலமும் இறைவனே.

8 நாட்டு மக்களே, எந்நாளும் அவர் மீது நம்பிக்கை வையுங்கள்; உங்கள் உள்ளத்தை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்: கடவுளே நமக்கு அடைக்கலம்.

9 மனுமக்கள் அனைவரும் ஒரு சிறு மூச்சே: மனிதர்கள் வெறும் மாயை தான். தராசில் வைத்தால் அவர்கள் கனம் மேலே தான் செல்லும். எல்லாரும் சேர்ந்தாலும் ஒரு மூச்சை விட இலேசானவர்களே!

10 கொடுமை செய்வதில் நம்பிக்கை வைக்க வேண்டாம்; பொருளைப் பறிப்பதில் வீண் பெருமை கொள்ள வேண்டாம்: உங்கள் செல்வம் பெருகினால், அதற்கு உங்கள் உள்ளத்தைப் பறிகொடுக்க வேண்டாம்.

11 இது ஒன்றைக் கடவுள் மொழிந்தார், திரும்பத் திரும்ப நான் அதைக் கேட்டிருக்கிறேன்; கடவுளைச் சார்ந்தது வல்லமை.

12 ஆண்டவரே, உம்மைச் சார்ந்தது அருள்: ஏனெனில், நீர் ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பீர்.

அதிகாரம் 062


1 இறைவா, என் இறைவா, ஆர்வமுடன் உம்மை நாடுகிறேன்: நீரினின்றி வறண்டு கிடக்கும் நிலம் நீரை நோக்கியிருப்பது போல் என் உள்ளம் உம்மீது வேட்கை கொண்டுள்ளது; என் உடலும் உம்மை ஆசிக்கிறது.

2 உமது திருத்தலத்தில் உமது பிரசன்னத்தை நோக்குகிறேன்: உமது வல்லமையையும் மாட்சியையும் நான் காண விழைகிறேன்.

3 வாழ்க்கையை விட உமது அருள் எவ்வளவோ மேலானது: என் நாவும் உம்மைப் புகழ்ந்தேத்தும்.

4 இங்ஙனம் என் வாழ்நாளில் உம்மை வாழ்த்துவேன்: உமது பெயரைச் சொல்லி உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துவேன்.

5 செழுமையும் கொழுமையும் பெறுவது போல் என் உள்ளம் நிறைவுபெறும்; என் வாயில் மகிழ்ச்சி ஒலிக்கும்; என் நாவில் புகழ்ச்சி எழும்.

6 படுக்கையிலும் நான் உம்மை நினைத்துக் கொண்டிருப்பேன்: இரவுச் சாமங்களில் உம்மைத் தியானிப்பேன்.

7 ஏனெனில், நீர் எனக்கு உதவியாயுள்ளீர்; உம் சிறகுகளின் நிழலில் நான் அக்களிக்கின்றேன்.

8 என் ஆன்மா உறுதியாக உம்மைப் பற்றிக் கொண்டது. உமது வலக்கரம் எனக்கு ஆதரமாயுள்ளது.

9 என் ஆன்மாவை அழித்திடத் தேடுகிறவர்கள் பாதாளத்திற்குச் செல்வார்கள்;

10 கத்திக்கு அவர்கள் இரையாவர்: நரிகளுக்கு உணவாவர்.

11 அரசனோ கடவுளை நினைத்து மகிழ்வுறுவார்; கடவுள் பெயரைச் சொல்லி ஆணையிடுவோர் அனைவரும் புகழ் பெறுவர்: தீயவை பேசுவோரின் வாய் அடைப்படும்.

அதிகாரம் 063


1 இறைவா, என் குரலைக் கேட்டருளும். என் முறைப்பாடுகளுக்குச் செவிசாய்த்தருளும்: என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும்.

2 தீயவருடைய கூட்டத்தினின்று எனக்குப் பாதுகாப்பளித்தருளும்: தீமை செய்பவர் அமளியினின்று என்னைக் காத்தருளும்.

3 அவர்கள் தம் நாக்குகளைப் பட்டயத்தைப் போல் கூர்மைப் படுத்துகிறார்கள்: நஞ்சுள்ள சொற்களை அம்பு போல் எய்கிறார்கள்.

4 பதுங்கிடங்களிலிருந்து கொண்டு மாசற்றவர்களைக் காயப்படுத்தவும், எவ்வச்சமுமின்றி அவர்களை எதிர்பாராமல் வதைக்கவுமே இப்படிச் செய்கிறார்கள்.

5 தீமை செய்ய மன உறுதி கொள்ளுகிறார்கள்; மறைவாகக் கண்ணிகளை வைப்பததற்குச் சதித் திட்டம் செய்கிறார்கள்: "நம்மை யார் பார்க்க முடியும்" என்று சொல்லி கொள்ளுகிறார்கள்.

6 தீங்குகளையே நினைக்கிறார்கள்; அப்படி நினைத்த எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்ளுகிறார்கள்: ஒவ்வொருவனுடைய நெஞ்சும் இதயமும் ஆழம் அறிய முடியாதவை.

7 ஆனால் இறைவன் தம் அம்புகளை அவர்கள் மீது ஏவுகிறார்: திடீரென அவர்கள் காயப்பட்டு விழுவர்.

8 அவர்களுடைய நாவே அவர்களுக்கு நாசம் விளைவிக்கிறது: அவர்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் தலையை அசைக்கிறார்கள்.

9 அனைவரும் அச்சத்தோடு ஆண்டவருடைய செயலைப் புகழ்வார்கள். அவருடைய செயலை உணர்ந்து கொள்ளுவார்கள்.

10 நீதிமான் ஆண்டவரிடத்தில் அகமகிழ்கிறான்; அவரிடத்தில் அடைக்கலம் புகுகிறான்: நேரிய மனத்தோர் அனைவரும் பெருமை பாராட்டுகிறார்கள்.

அதிகாரம் 064


1 சீயோனில், இறைவா, உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே: உமக்¢கு அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் தகுதியே.

2 மன்றாட்டுகளுக்குச் செவிசாய்ப்பவரே, பாவங்களினிமித்தம் மனிதன் ஒவ்வொருவனும் உம்மிடம் வந்தாக வேண்டும்.

3 நாங்கள் செய்த பாவங்கள் எங்கள் மீது பெரும் சுமையாயுள்ளன: நீரோ அவற்றை மன்னிக்கின்றீர்.

4 நீர் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ளும் மனிதன் பேறு பெற்றவன்: உம் ஆலய முற்றங்களில் அவன் உறைந்திடுவான்.உமது இல்லத்தில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோமாக: உமது ஆலயத்தின் புனிதம் எமக்கு நிறைவளிப்பதாக.

5 எம் மீட்பாராகிய இறைவா, வியத்தகு அருங்குறிகளால் உமது நீதி நேர்மையைக் காட்டி எம் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறீர்; உலகின் கடையெல்லைகளில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் நீரே நம்பிக்கை: தொலைவிலுள்ள தீவுகளில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கை.

6 உமது வல்லமையால் மலைகளுக்கு உறுதியளிக்கின்றீர்; வல்லமையை உம் இடைக்கச்சையாகக் கொண்டுள்ளீர்.

7 கடலின் இரைச்சலை அடக்குகின்றீர்: அலைகளின் இரைச்சலையும் நாடுகளின் கொந்தளிப்பையும் அடக்குகின்றீர்.

8 உலகின் கடையெல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் உம் அருங்குறிகளைக் கண்டு அஞ்சுவார்கள்: கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையில் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டுகிறீர்.

9 மண்ணுலகைத் தேடி வந்தீர், அதற்கு நிறைய மழையைக் கொடுத்தீர்: அதற்கு நிறை வளம் தந்தீர். கடவுளின் ஆறு கரை புரண்டோடியது; தானியங்கள் நிரம்ப விளையச் செய்தீர்: விளையச் செய்ததோ இவ்வாறு.

10 படைசால்களில் தண்ணீர் ஓடச் செய்தீர்; மண் கட்டிகளைப் பரம்படித்து மழையால் அதை மிருதுவாக்கினீர்: முளைத்து வரும் விதையை ஆசீர்வதித்தீர்.

11 ஆண்டு முழுவதையும் உமது கருணையால் நிரப்பினீர்: நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துகிறது.

12 பாலைவெளியின் மேய்ச்சல் நிலம் கொழுமை கொண்டு விளங்குகிறது. குன்றுகளைச் சூழ்ந்து அக்களிப்பு காணப்படுகிறது.

13 மேய்ச்சல்களில் ஆடு மாடுகள் நிரம்பியிருக்கின்றன; கணவாய்களில் தானியங்கள் மிகுந்துள்ளன: இவையெல்லாம் அக்களிப்புடன் பாடல்கள் இசைக்கின்றன.

அதிகாரம் 065


1 மாநிலத்தாரே, நீங்களனைவரும் ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள்.

2 அவருடைய பெயரின் மாட்சிமையைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழ் எங்கும் விளங்கச் செய்யுங்கள்.

3 இறைவனை நோக்கி, "உம் செயல்கள் எத்துணை மலைப்புக்குரியவை உமது மேலான வல்லமையின் பொருட்டு உம் எதிரிகள் உம்மிடம் இச்சகம் பேசிப் பணிகிறார்கள்.

4 மாநிலமனைத்தும் உம்மை வணங்கி உமக்குப் புகழ் பாடுவதாக: உமது பெயரின் புகழைப் பாடுவதாக" என்று சொல்லுங்கள்.

5 வாருங்கள், கடவுளுடைய செயல்களைப் பாருங்கள்: மனிதர்களிடையே அவர் செய்தவை மலைப்புக்குரியவையே!

6 கடலை அவர் கட்டாந் தரையாக்கினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தனர்: ஆகவே, அவரை நினைத்து மகிழ்வோம்.

7 தம் வல்லமையால் அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துகின்றார்: அவர் கண்கள் மக்கள் இனத்தாரைக் கவனித்து வருகின்றன; கலக்காரர்கள் தலை தூக்காதிருக்கட்டும்.

8 மக்களினத்தாரே, நம் இறைவனுக்கு வாழ்த்துக் கூறுங்கள்: அவரது புகழின் பெருமையைப் பறைசாற்றுங்கள்.

9 நம்மை வாழ வைத்தவர் அவரே: நம்முடைய காலடி தடுமாற அவர் விடவில்லை.

10 இறைவா, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்: வெள்ளியைப் புடமிடுவது போல நீர் எங்களை நெருப்பால் பரிசோதித்தீர்.

11 வலையில் நாங்கள் அகப்படச் செய்தீர்: பெரும் சுமையை எங்கள் முதுகினில் சுமத்தினீர்.

12 அந்நியனுக்கு நாங்கள் பணியச்செய்தீர். நெருப்பிலும் நீரிலும் நாங்கள் நடந்து சென்றோம்: ஆனால், பரந்த நாட்டுக்கு எங்களைக் கொண்டு வந்தீர்.

13 தகனப் பலிகளைச் செலுத்த உம் இல்லத்தில் நுழைவேன்: என் பொருந்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.

14 துன்ப வேளையில் வாய் திறந்து நான் சொன்னது போல், நான் செய்த பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.

15 கொழுத்த ஆடுகளையும், ஆட்டுக் கிடாய்களையும் தகனப் பலியாய்த் தருவேன்: காளை மாடுகளோடு செம்மறிக் கிடாக்களையும் பலியிடுவேன்.

16 கடவுளுக்கு அஞ்சுவோரே வாருங்கள், வந்து கேளுங்கள்: எனக்கு எத்துணை நன்மை அவர் செய்துள்ளார் எனக் கூறுவேன்.

17 வாய் திறந்து அவரையே நான் கூவியழைத்தேன், என் நாவோல அவரது புகழைச் சொன்னேன்.

18 தீமை செய்ய என்னுள்ளத்தில் சிந்தித்திருந்தால், என் கூக்குரலை அவர் கேட்டிருக்க மாட்டார் அன்றோ!

19 ஆனால், இறைவன் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: என் வேண்டுதலின் குரலுக்குச் செவிசாய்த்தார்.

20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் இரக்கத்தை என்னிடமிருந்து எடுத்து விடாத இறைவன் போற்றி!

அதிகாரம் 066


1 கடவுள் நம்மீது இரங்கி, நமக்கு ஆசி அளிப்பாராக: நம்மீது தம் திருமுக ஒளியை வீசுவாராக.

2 அப்போது உலகம் உமது வழியை அறிந்து கொள்ளும்: மக்களினங்கள் எல்லாம் உமது மீட்பை உணரும்.

3 இறைவா, மக்களினங்களின் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக: மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக.

4 நீதியோடு மக்களை ஆள்கின்றீர், உலகத்து மக்களினங்கள் மீது ஆட்சி செலுத்துகின்றீர் என்று நாடுகள் அனைத்தும் மகிழ்ந்து கூறட்டும்.

5 இறைவா, மக்களினங்கள் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக: மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக.

6 பூமி தன் பலனைத் தந்தது: கடவுள் நமக்கு ஆசி அளித்தார்.

7 கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக: மாநிலத்தின் கடையெல்லை வரை மக்கள் அவருக்கு அஞ்சுவார்களாக.

அதிகாரம் 067


1 எழுகின்றார் இறைவன், சிதறுண்டு போகிறார்கள் அவர் எதிரிகள்: அவரைப் பகைத்தவர்கள் அவர் திருமுன் நிற்காமல் ஓடிப்போகிறார்கள்.

2 புகையானது சிதறுவது போல், அவர்கள் சிதறிப் போகட்டும்: அணலில் மெழுகு உருகுவது போல், தீயோர் கடவுள் திருமுன் மடிந்தொழிவர்.

3 நீதிமான்களோ மகிழ்வுறுவர், கடவுள் திருமுன் அக்களிப்பர். மகிழ்ச்சியால் இன்பம் கொள்வர்.

4 இறைவனுக்கு இன்னிசை பாடுங்கள், அவரது பெயருக்குப் புகழ் பாடுங்கள்: பாலைவெளியின் வழியாய்ப் பவனி செல்லும் அவருக்குப் பாதையை ஆயத்தப் படுத்துங்கள். ஆண்டவர் என்பது அவரது திருப்பெயர்: அவர் முன்னிலையில் அக்களிப்புறுங்கள்.

5 தம் புனித இல்லத்தில் உறையும் இறைவன் அநாதைகளுக்குத் தந்தை: விதவைகளுக்குப் பாதுகாவல்.

6 கைவிடப்பட்டவர்க்குக் கடவுள் இல்லமொன்றை ஆயத்தப்படுத்துகிறார், சிறைப் பட்டவர்களை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்: எதிர்த்து எழுபவர்களோ வறண்ட நிலத்தில் வாழ்வார்கள்.

7 இறைவா, நீர் உம் மக்களுக்கு முன் நடந்து சென்ற போது, பாலை வெளியின் வழியாய் நடந்த போது.

8 பூமி நடுங்கிற்று, வானங்கள் கடவுளைக் கண்டு பனி மழை பெய்தன: இஸ்ராயேலின் கடவுளைக் கண்டு சீனாய் அதிர்ந்தது.

9 இறைவனே, உம் உரிமையான நாட்டின் மீது நிரம்ப மழை பொழியச் செய்தீர்: சாரமற்றுப் போன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.

10 உம்முடைய மந்தையான மக்கள் அதில் குடியிருந்தனர்: இறைவனே, உமது அருளால், நீர் ஏழைகளுக்கென்று அதைத் தயார் செய்தீர்.

11 ஆண்டவர் ஒரு செய்தி கூறுகிறார்: அந்த மகிழ்ச்சிச் செய்தியை உரைப்பவர் கூட்டம் பெரிதாயிற்று.

12 சேனைகளை நடத்தும் அரசர்கள் ஓடுகின்றனர், புறங்காட்டி ஓடுகின்றனர்!" வீட்டில் குடியிருப்பவர்கள் கொள்ளைப் பொருள்களைப் பிகிர்ந்துகொள்ளுகின்றனர்.

13 ஆட்டுக்கிடைகளுக்கிடையே நீங்கள் இளைப்பாறிய போது, புறாவின் சிறகுகள் வெள்ளிப் போல் மிளிர்ந்தன; அதன் இறக்கைகள் பொன் போல் மின்னின. எல்லாம் வல்லவர் அங்கு அரசர்களைச் சிதறடித்த போது,

14 சால்மோன் மலையில் உறைபனி பெய்தது.

15 பாசானின் மலைகள் மிக உயர்ந்தவை: பாசானின் மலைகள் செங்குத்தானவை.

16 செங்குத்தான மலைகளே, கடவுள் குடியிருக்கத் திருவுளம் கொண்ட மலையை நீங்கள் ஏன் பொறாமையோடு நோக்குகிறீர்கள்? அம்மலையில் அன்றோ என்றும் குடியிருக்க ஆண்டவர் திருவுளம் கொண்டார்.

17 கடவுளுடைய தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம், சீனாயிலிருந்து புறப்பட்டு ஆண்டவர் திருத்தலத்திற்கு எழுந்தருளி வந்தார்.

18 உயர்ந்த மலை மீது ஏறினீர், சிறைப்படுத்தியவர்களை அழைத்துச் சென்றீர்; மானிடரை நீர் கொடையாகப் பெற்றீர்: ஆண்டவராகிய கடவுளோடு குடியிருக்க விரும்பாதவர்களையும் நீர் பெற்றுக் கொண்டீர்.

19 ஒவ்வொரு நாளும் ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக: நம் மீட்பாராகிய கடவுள் நம் சுமைகளைத் தாங்கிக் கொள்கின்றார்.

20 நம் கடவுள் நமக்கு மீட்பருளும் கடவுள்: சாவினின்று தப்பச் செய்பவர் ஆண்டவராகிய கடவுள்.

21 தம் எதிரிகளின் தலைகளைக் கடவுள் நிச்சயமாய் நொறுக்குகிறார்: பாவ வழியில் நடப்பவர்களின் தலையை உடைத்து விடுகிறார்.

22 பாசானிலிருந்து மீட்டுக்கொள்வேன்: கடலின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொள்வேன்.

23 அப்போது எதிரிகளின் இரத்தத்தில் உன் காலடியைக் கழுவுவாய்: உன் நாய்களுக்கு அவர்கள் இரையாவர்" என்றார் ஆண்டவர்.

24 இறைவா, நீர் பவனியாய்ச் செல்லுவதை மக்கள் அனைவரும் காண்பர். என் கடவுளும் அரசருமானவர் திருத்தலத்திற்குப் பவனியாய்ச் செல்வதை அவர்கள் காண்பர்.

25 இதோ! பாடகர்கள் முன்நடக்கின்றனர்; யாழ் வாசிப்பவர் இறுதியில் வருகின்றனர்: நடுவில் பெண்கள் தம்புரா மீட்டுகின்றனர்.

26 விழாக் கூட்டங்களில் கடவுளை வாழ்த்துங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் ஆண்டவருக்குப் பாடுங்கள்" என்கின்றனர்.

27 அதோ பெஞ்சமின் எல்லாருக்கும் இளையவன் முன் நடந்து செல்கிறான், யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றனர். சாபுலோன் தலைவர்களும், நெப்தாலின் தலைவர்களும் அங்குள்ளனர்.

28 இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்: எம் சார்பாய்ச் செயலாற்றும் இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்.

29 யெருசலேமிலுள்ள உமது ஆலயத்தை முன்னிட்டு, மன்னர்கள் உமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவார்களாக.

30 நாணல்களிடையே குடியிருக்கும் கொடிய விலங்கை அதட்டும்: காளைகள் கூட்டத்தையும், மக்கள் இனத்தாரின் கன்றுகளையும் அதட்டும்.

31 வெள்ளியைத் திறையாகக் கொண்டு வந்து கட்டித் தலைபணியச் செய்யும். போரிடுவதில் மகிழ்ச்சி கொள்ளும் இனத்தாரைச் சிதறடியும். எகிப்தினின்று பெருமக்கள் வருவார்களாக: எத்தியோப்பிய மக்கள் கடவுளை நோக்கித் தம் கைகளை உயர்த்துவார்களாக.

32 மாநிலத்து அரசுகளே, கடவுளை நினைத்துப் பாருங்கள்; ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: வான்வெளியில், ஆதிகால வானங்களிடையே பவனி செல்லும் ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்.

33 வான்வெளியில் ஆதிகால வானங்களிடையே அவர் பவனி செல்கிறார்: இதோ, அவர் தம் குரலை விடுக்கிறார்; வல்லமையுடன் குரல் விடுக்கிறார்.

34 கடவுள் வல்லவரென்று ஏற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இஸ்ராயேல் மீது அவர் மாண்பு விளங்குகின்றது; அவருடைய வல்லமை மேகங்களில் விளங்குகிறது.

35 தம் திருத்தலத்தினின்று புறப்படும் இறைவன், இஸ்ராயேலின் கடவுள் அச்சத்துக்குரியவர்; வல்லமை அளிப்பவர் அவரே, தம் மக்களுக்கு வல்லமை கொடுப்பவர் அவரே: கடவுள் வாழ்த்தப் பெறுவாராக.

அதிகாரம் 068


1 இறைவா, என்னை மீட்டருளும்: ஏனெனில், வெள்ளம் என் கழுத்து மட்டும் பெருக்கெடுத்துள்ளது.

2 ஆழ்ந்த சேற்றில் அமிழ்ந்திக் கிடக்கிறேன்: கால் ஊன்ற இடமேயில்லை, ஆழ்ந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன்: வெள்ளம் என்னை மூழ்கடிக்கின்றது.

3 கூவிக் கூவி களைத்து விட்டேன்; என்தொண்டையும் வறண்டு போயிற்று: என் இறைவன் துணையை எதிர்த்துப் பார்த்து என் கண்களும் பூத்துப்போயின.

4 காரணமின்றி என்னைப் பகைப்பவர்கள் என் தலையின் முடியை விட அதிகமாயுள்ளனர்; அநியாயமாய் என்னை எதிர்ப்பவர்கள் என்னை விட வலிமை கொண்டுள்ளனர். நான் எடுத்துக் கொள்ளாததைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கின்றனர்.

5 இறைவா, நீர் என் அறிவீனத்தை அறிவீர்: என் பாவங்கள் உமக்கு மறைவாயில்லை.

6 ஆண்டவரே, வான்படைகளின் ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை வைப்பவர்கள் என்னால் ஏமாற்றம் அடைய விடாதேயும். இஸ்ராயேலின் இறைவனே, உம்மைத் தேடுவோர் என்னால் வெட்கமுற விடாதேயும்.

7 ஏனெனில், உம் பொருட்டே நான் நிந்தனையை ஏற்றேன்: உம் பொருட்டே வெட்கத்தால் என் முகம் கவிந்து போயிற்று.

8 என் உறவினர்க்கும் நான் அந்நியனானேன்: என் சகோதரருக்கும் நான் வேற்று மனிதனானேன்.

9 உமது இல்லத்தின் மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்து விட்டது: உம்மை நிந்திப்பவர்களின் நிந்தனைகள் என் மேல் விழலாயின.

10 நோன்பிருந்து என் ஆன்மாவை ஒறுத்தேன்: ஆனால், அதுவும் நிந்தனைக்குரியதாயிற்று.

11 சாக்குத்துணியை என் ஆடையாய் உடுத்தினேன்: ஆனால், அவர்கள் ஏளனத்துக்குள்ளானேன்.

12 நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர். மது உண்பவர்கள் என்னைத் தூற்றுகின்றனர்.

13 ஆனால், ஆண்டவரே, உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு: இறைவா, உமக்கு உகந்த நேரத்தில் உம்மை நோக்கி வேண்டுகிறேன். மிகுதியான உம் நன்மைத் தனத்திற்கு ஏற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உறுதியான உமது அருட்துணைக்கேற்ப எனக்குச் செவிசாய்த்தருளும்.

14 சேற்றில் நான் அமிழ்ந்திப் போகாதபடி என்னை விடுவித்தருளும்; என்னைப் பகைப்பவர்களிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: ஆழ்ந்த வெள்ளத்தினின்று என்னைக் காத்தருளும்.

15 பெருவெள்ளம் என்னை மூழ்கடிக்கவோ, ஆழ்கடல் என்னை விழுங்கிடவோ விடாதேயும்: பாழ்கிணறு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்.

16 உமது அருள் கனிவு மிக்கதாதலின், ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என்னைக் கண்ணோக்கும்.

17 உம் ஊழியனிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்: துன்புறுகிறேனாதலின், இறைவா, விரைவில் என் மன்றாட்டைக் கேட்டருளும்.

18 என்னிடம் அணுகி வந்து என்னை மீட்டருளும்: உம் எதிரிகளின் பொருட்டு எனக்கு விடுதலை அளித்தருளும்.

19 எனக்குற்ற நிந்தனையை நீர் அறிவீர், நான் அடைந்த அவமானத்தையும் ஏமாற்றத்தையும் நீர் அறிவீர்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரும் உம் எதிரிலேயே உள்ளனர்.

20 எனக்குற்ற நிந்தைனையால் என் உள்ளம் உடைந்தது, தளர்வுறலானேன்; எனக்கு இரக்கம் காட்டுபவருண்டோ எனப் பார்த்தேன்: ஒருவருமில்லை. ஆறுதலளிப்பார் உண்டோ எனப் பார்த்தேன்; ஒருவரையும் காணவில்லை.

21 கசந்த பிச்சை எனக்கு உணவாகக் கொடுத்தனர்: என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தனர்.

22 அவர்களுடைய பந்தி அவர்களுக்கு வைத்த கண்ணி போலாவதாக: நண்பர்களுக்கு விரித்த வலை போலாவதாக.

23 பார்வையில்லாதவாறு அவர்கள் கண்கள் இருளடைந்து போகட்டும்: அவர்களுடைய இடுப்புகள் என்றும் தள்ளாடிப் போகட்டும்.

24 உமது கோபாக்கினை அவர்கள் மேல் விழச் செய்யும்: உமது சினத்தின் கணலில் அவர்கள் பிடிபடுவார்களாக.

25 அவர்கள் குடியிருப்புப் பாழ்பட்டுப் போவதாக: அவர்கள் கூடாரங்களில் தங்க எவரும் இல்லாமல் போகட்டும்.

26 ஏனெனில், நீர் வதைத்தவனை அவர்கள் துன்புறுத்துகிறார்கள்; நீர் காயப்படுத்தினவனுடைய வேதனையை அதிகரிக்கிறார்கள்.

27 குற்றத்தின் மேல் குற்றத்தை அவர்கள் மேல் சுமத்தும்: குற்றமற்றவர்களென அவர்கள் தீர்ப்படைய விடாதேயும்.

28 வாழ்வோரின் நூலிலிருந்து அவர்கள் பெயர் எடுபடட்டும்: நீதிமான்களோடு அவர்களுடைய பெயர் எழுதப்பட விடாதேயும்.

29 நானோவெனில் சிறுமையுற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்: இறைவா, உமது அருட்துணை என்னைக் காப்பதாக.

30 புகழ் இசைத்து இறைவனின் பெயரைப் புகழ்வேன்; நன்றி உணர்வோடு அவர் புகழ் சாற்றுவேன்.

31 எருதுப் பலியை விட அது இறைவனுக்கு உகந்ததாகும். கொம்பும் குளம்பும் உள்ள காளையை விட உகந்ததாகும்.

32 எளியோரே, இதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். இறைவனைத் தேடுவோரே, உங்கள் உள்ளம் புத்துயிர் பெறுவதாக.

33 ஏனெனில், ஏழைகளின் குரலை ஆண்டவர் கேட்டருளுகின்றார். சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.

34 வானமும் வையமும் அவரைப் புகழ்வனவாக: கடல்களும் கடல்களில் வாழும் அனைத்துமே அவரைப் புறக்கணிப்பதில்லை.

35 ஏனெனில், கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார் யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அவர்கள் அங்குக் குடியிருப்பர், அதை உரிமையாக்கிக் கொள்வர்.

36 அவருடைய ஊழியர்கள் வழி வந்தோர் அதை உரிமைப்படுத்திக் கொள்வர்; அவர் மீது அன்பு கொள்பவர் அதில் வாழ்வார்கள்.

அதிகாரம் 069


1 இறைவா, என்னை விடுவிக்க அருள்கூர்வீராக: ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக.

2 என் உயிரைப் பறிக்கக் தேடுவார் நாணி நிலைகுலைவார்களாக: எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர், வெட்கத்தால் தலை குணிந்து பின்னடைவார்களாக.

3 ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.

4 உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட்துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி!" என்று எந்நேரமும் வாழ்த்துவாராக.

5 நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்; இறைவா, எனக்குத் துணை செய்யும்: எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே, ஆண்டவரே தாமதியாதேயும்.

அதிகாரம் 070


1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்: எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்.

2 உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும். எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கிறீர்.

4 தீயவனின் கையினின்று, என் இறைவா, என்னை விடுவித்தருளும்: துன்புறுத்தும் கொடியவனின் பிடியினின்று என்னை விடுவித்தருளும்.

5 ஏனெனில், என் இறைவா, நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்: ஆண்டவரே, என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.

6 பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்; தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு: உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கிறேன்.

7 நீர் எனக்கு வலிமை மிக்க துணை, எனவே, பலருக்கு நான் புதுமைப் பிறவி போல் உள்ளேன்.

8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

9 முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்: என் பலம் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.

10 ஏனெனில் என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரை பறிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று கூடிச் சதி செய்கின்றனர்.

11 கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து ஓடி அவனைப் பிடியுங்கள்: அவனை விடுவிக்க ஒருவருமில்லை" என்று பேசிக் கொள்கின்றனர்.

12 இறைவா, என்னை விட்டு வெகு தொலைவில் போகாதேயும்: என் இறைவா, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.

13 என் உயிருக்கு உலைவைப்பவர்கள் ஏமாற்றமடைந்து ஒழிவார்களாக: எனக்குத் தீமை செய்யப் பார்ப்பவர்களை ஏமாற்றமும் வெட்கமும் ஆட்கொள்வதாக.

14 நானோ என்றும் நம்பிக்கையோடிருப்பேன்: ஒவ்வொரு நாளும் மேன் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.

15 உமது அருள் நன்மையை என் நா எடுத்துரைக்கும்; நாள் முழுவதும் உம் அருட்துணையை எடுத்துச் சொல்லும்: உமது அருட்செயல்களுக்கோ கணக்கே இல்லை.

16 இறைவனின் வல்லமையை எடுத்துரைப்பேன்: ஆண்டவரே, உமக்கு மட்டுமே உரிய நீதி நேர்மையைப் புகழ்ந்து உரைப்பேன்.

17 இறைவா, நீர் எனக்கு என் இளமையிலிருந்தே அறிவு புகட்டினீர்: இந்நாள் வரை நான் உமது வியத்தகு செயல்களை வெளிப்படுத்துகிறேன்.

18 முதிர் வயதிலும் நகரை திரை பருவத்திலும் இறைவா, நீர் என்னைக் கைவிடாதேயும்: உமது கைவன்மையை இத்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரையிலும், இனி வரும் தலைமுறைகளுக்கு உம் ஆற்றலை நான் கூறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும்.

19 வானமட்டும் எட்டுகின்ற உமது நீதி நேர்மையை நான் எடுத்துரைக்கும் வரையிலும் இறைவா, நீரென்னைக் கைவிடாதேயும்: அந்த நீதியாலன்றோ அரியன பெரியன நீர் செய்துள்ளீர். இறைவனே, உமக்கு நிகர் யார்?

20 பல கொடும் துன்பங்களுக்கு நான் ஆளாகச் செய்தீர்: மீளவும் நான் உயிர் பெறச் செய்வீர்.

21 பாதாளத்தினின்று என்னை மீளவும் தூக்கிவிடுவீர்: எனக்குள்ள மேன்மையைப் பெருகச் செய்வீர்; மீளவும் என்னைத் தேற்றியருளும்.

22 இறைவா, நானும் வீணை கொண்டு உமது சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்: இஸ்ராயேலின் பரிசுத்தரே, யாழ் கொண்டு உமக்குப் புகழ் பாடுவேன்.

23 நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்: நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்.

24 நாள் முழுவதும் உம் நீதி நேர்மையை என் நா எடுத்துரைக்கும், ஏனெனில், எனக்குக் கெடுதி செய்யப் பார்ப்பவர்கள் ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார்கள்.

அதிகாரம் 071


1 இறைவா, அரசனிடம் உமது நீதி நேர்மை விளங்கச் செய்யும். அரச மகனிடம் உமது நீதித் தன்மை விளங்கச் செய்யும்.

2 நீதியோடு அவர் உம் மக்களை ஆள்வாராக. உம்முடையவரான எளியோரை நேர்மையுடன் நடத்துவாராக.

3 மலைகள் உம் மக்களுக்குச் சமாதானம் தருவனவாக: குன்றுகள் நீதியைக் காப்பனவாக.

4 எளிய மக்களை அவர் காப்பாராக, ஏழைகளின் மக்களை அவர் பாதுகாப்பாராக: கொடியவனை அவர் நொறுக்கி விடுவாராக.

5 கதிரவனைப் போல் அவர் நீடூழி வாழ்வாராக: நிலவைப்போல் தலைமுறை தலைமுறையாய் வாழ்வாராக.

6 புல்வெளியில் விழும் மழை போல் அவர் இருப்பார்: நிலத்தில் பாயும் நீர் போல் அவர் இருப்பார்.

7 அவரது ஆட்சியின் நாளில் நீதி செழித்தோங்குவதாக; சமாதானம் நிலை பெறும் நிலவு இருக்கும் வரையில் சமாதானம் நிலை பெறும்.

8 ஒரு கடலினின்று மறு கடல் வரைக்கும் அவர் அதிகாரம் செலுத்துவார்: நதியினின்று உலகின் எல்லை வரை அவர் ஆள்வார்.

9 அவருடைய எதிரிகள் வந்து அவர் முன் தெண்டனிடுவர்: அவருடைய பகைவர் மண்ணைக் கவ்வுவர்.

10 தார்சிஸ் நாட்டு மன்னர்களும் தீவுகளின் மன்னர்களும் காணிக்கைகள் கொணர்வர்: அராபியா, சாபா நாட்டு வேந்தர்களும் காணிக்கை செலுத்துவர்.

11 மாநிலத்தரசர் அனைவரும் அவரை வணங்குவர்: மக்களினத்தார் அனைவரும் அவருக்கு ஊழியம் செய்வர்.

12 தம்மைக் கூவி அழைக்கும் ஏழைக்கு அவர் விடுதலை தருவார். திக்கற்ற எளியவனை விடுவிப்பார்.

13 ஏழை எளியவர் மீது இரக்கம் கொள்வார். ஏழைகளின் வாழ்வை மலரச் செய்வார்.

14 கொடுமையினின்றும் துன்பத்தினின்றும் அவர்களை விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் முன்னிலையில் விலை மிக்கது.

15 அவர் நீடூழி வாழ்க: சாபா நாட்டுத் தங்கம் அவருக்குக் காணிக்கையாகட்டும். அவருக்காக வேண்டுதல் என்றும் எழும்பும். என்றும் அவருக்கு ஆசி மொழி கிடைக்கும்.

16 நாட்டில் நிரம்பக் கோதுமை விளையட்டும்; உயர்ந்த மலைகளிலும் அதன் விளைச்சல் லீபானைப் போல் விளங்கட்டும். வயல் வெளிப் புல் போல நகர மக்கள் செழிக்கட்டும்.

17 அவரது பெயர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவதாக: கதிரோன் இருக்கும் வரை அவரது பேரும் புகழும் நிலைப்பதாக. அவர் வழியாய்ப் பூவுலக இனத்தார் அனைவரும் ஆசி பெறுவர். மக்கள் இனத்தார் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் எனப் போற்றிப் புகழ்வர்.

18 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி: அவர் ஒருவரே வியத்தகு செயல்களைச் செய்கிறார்.

19 மாட்சியை விளங்கும் அவரது பெயர் என்றென்றும் வாழ்த்துப் பெறுவதாக: வையகம் அனைத்தும் அவர் புகழால் நிரம்புவதாக. ஆமென், ஆமென்.

அதிகாரம் 072


1 நேரிய மனத்தோர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவு நல்லவர்!

2 என் பாதங்களோ தடுமாறலாயின. சறுக்கி விழப் போனேன்.

3 ஏனெனில், தீயவர்களைக் கண்டு, பாவிகளுக்கு வந்த வாழ்வைப் பார்த்துப் பொறாமையுற்றேன்.

4 அவர்களுக்கு வேதனை எதுவுமில்லை, அவர்கள் உடலோ செழுமையும் கொழுமையும் கொண்டுள்ளது.

5 மனிதப் பிறவிகளுக்குள்ள இடுக்கண்கள் அவர்களுக்கு இல்லை: மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.

6 எனவே மணிமாலை போல் செருக்கு அவர்களை அணி செய்கிறது. வன்செயலே அவர்களுக்கு ஆடை போல் இருக்கிறது.

7 அவர்கள் வன்னெஞ்சத்திலிருந்து எழுகிறது அக்கிரமம்: அவர்கள் மனதிலிருந்து மடமைகள் தோன்றுகின்றன

8 நகைக்கின்றனர், அவர்கள் தீமையே பேசுகின்றனர். துன்புறுத்துவோம் என இறுமாப்புடன் அச்சுறுத்துகின்றனர்.

9 வானத்தையே தாக்குகின்றது அவர்களது வாய்ச்சொல். வையகத்தில் பரவுகின்றது அவர்களுடைய பேச்சு.

10 என் மக்களும் அவர்கள் பால் திரும்புகின்றனர்: அவர்கள் செய்வதை எல்லாம் தண்ணீர் குடிப்பது போல் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.

11 எங்ஙனம் அறிவார் கடவுள்? நி15714அறிவென்பது உண்டா உன்னதருக்கு?" என்கின்றனர்.

12 இதோ பாவிகள், இத்தன்மையோர் மனக்குத்தலின்றி, தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.

13 ஆகவே நான் குற்றமின்றி என் உள்ளத்தைக் காத்தது வீண் தானோ? மாசின்றி என் கைகளைக் கழுவியது பயனற்றதோ?

14 ஏனெனில், எந்நாளும் நான் வேதனையுறுகிறேன் நாடோறும் துன்பத்திற்குள்ளாகிறேன்.

15 நானும் அவர்களைப் போல் பேசலாமே" என்று நான் நினைத்திருந்தால், உம் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் வாய்மை தவறியவனாவேன்.

16 ஆகவே இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன், ஆனால் அது பெரிய புதிராயிருந்தது.

17 கடவுளுடைய புனித தலத்தில் நான் நுழைந்ததும், அவர்களுடைய கதி என்ன என்று உணர்ந்தேன்.

18 உண்மையிலேயே நீர் அவர்களைச் சறுக்கலான இடத்தில் நிறுத்துகிறீர். பாதாளத்தில் அவர்களை விழச் செய்கிறீர்.

19 எவ்வளவு விரைவாக அவர்கள் விழுந்தொழிந்தனர்! பேரச்சத்துக்குள்ளாகி அவர்கள் எடுபட்டு மறைந்தனர்!

20 விழித்தெழுபவனின் கனவு போல் அவர்களுக்கு ஆயிற்று. ஆண்டவரே, அப்படியே நீர் எழும் போது அவர்கள் வேடத்தைக் கலைத்து விடுவீர்.

21 என் மனம் கசப்புற்ற வேளையில், என் உள்ளம் குத்துண்ட போது,

22 நான் அறியாமலிருந்தேன்; உணராமல் போனேன் மிருகத்தைப் போல் உம் முன்னிலையில் கிடந்தேன்.

23 எனினும். எந்நேரமும் நான் உம்மோடிருக்கிறேன். நீர் என் வலக் கரத்தைப் பிடித்துத் தாங்குகிறீர்.

24 உமது அறிவுத் திறனைக்கொண்டு என்னை வழி நடத்துவீர் இறுதியில் நான் உமது மகிமையில் பங்கடையச் செய்வீர்.

25 உம்மைத் தவிர எனக்கு வானுலகில் உள்ளவர் யார்? உம்மோடு நான் வாழ்ந்தால் இவ்வுலகில் இன்பம் தருவது எதுவுமில்லையே!

26 என் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. ஆயினும் கடவுளே என் உள்ளத்துக்கு அரண், என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து.

27 உம்மை விட்டு அகல்வோர் இதோ அழிந்தொழிவர். உமக்கு வஞ்சகம் செய்வோர் அனைவரையும் அழித்து விடுவீர்.

28 கடவுளுக்கருகில் வாழ்வது எனக்கு எவ்வளவோ நலம், ஆண்டவராகிய கடவுளிடம் அடைக்கலம் புகுவது எவ்வளவோ நலம். சீயோனின் வாயில்களில் உம் செயல்களனைத்தையும் நான் எடுத்துரைப்பேன்.

அதிகாரம் 073


1 இறைவா, நீர் எங்களை ஏன் என்றென்றைக்கும் தள்ளி விட்டீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள் மேல் உமக்குச் சினம் மூள்வதேன்?

2 ஆதிகால முதல் நீர் நிறுவிய உமது சபையை நினைவு கூர்ந்தருளும்; உம்முடைய உரிமைப் பொருளென மீட்டுக்கொண்ட குலத்தை நினைவு கூர்ந்தருளும் உமது உறைவிடம் அமைந்துள்ள சீயோன் மலையை நினைவு கூர்ந்தருளும்.

3 நெடுங்காலமாய்ப் பாழ்பட்டுக் கிடந்த இடத்தை நோக்கி அடி எடுத்து வையும்: பகைவன் உமது திருத்தலத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டான்.

4 உம் மக்கள் கூடிய தலத்தில் உம்முடைய எதிரிகள் முழக்கமிட்டனர். தங்கள் கொடிகளை அங்கே வெற்றிச் சின்னங்களாக நாட்டினர்.

5 அடர்ந்த சோலையில் கோடாரியைக் கையில் தாங்குபவர்கள் போலாயினர்.

6 இதோ, அவர்கள் கோடாரியும் சம்மட்டியும் கொண்டு, அதன் வாயில்களைத் தகர்ந்தெறிகின்றனர்.

7 உமது திருத்தலத்தைத் தீக்கிரையாக்கினர். மாநிலத்தில் உமது பெயர் விளங்கிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினர்.

8 அவர்கள் அனைவரையும் பூண்டோடு அழித்து விடுவோம், இறைவனின் திருத்தலங்களனைத்தையும் மாநிலமெங்கும் எரித்து விடுவோம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.

9 முன்னைய அருங்குறிகள் எவையும் காணோம், இறைவாக்கினர் எவருமில்லை. இந்நிலை எந்நாள் வரைக்கும் நீடிக்கும் என்று அறிபவன் நம்மிடையே யாருமில்லை.

10 இறைவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? உமது பெயரைப் பகைவன் என்றென்றுமே பழிப்பானோ?

11 உமது கரத்தை ஏன் நீட்டாமலிருக்கிறீர்? ஏன் உம் வலக்கரத்தை மடக்கி வைத்திருக்கிறீர்?

12 ஆதியிலிருந்தே கடவுள் என் அரசராயுள்ளார். மாநிலத்தில் மீட்புத் தருபவர் அவரே.

13 உமது வல்லமையால் கடலைப் பிளந்து விட்டீர். நீரில்வாழ் பறவை நாகங்களின் தலைகளை நசுக்கி விட்டீர்.

14 திமிலங்களின் தலைகளை உடைத்து விட்டீர். கடல் வாழ் விலங்குளுக்கு அவற்றை இரையாகக் கொடுத்தீர்.

15 ஊற்றுகளையும் நீரோடைகளையும் புறப்படச் செய்தீர். பெருக்கெடுத்தோடும் ஆறுகளை வற்றச் செய்தீர்.

16 பகலும் உமதே, இரவும் உமதே, நிலவையும் கதிரவனையும் அமைத்தவர் நீரே.

17 பூமிக்கு எல்லைகளைத் திட்டம் செய்தவர் நீரே. கோடையும் மாரியும் ஏற்படுத்தியவர் நீரே.

18 ஆண்டவரே, பகைவன் உம்மைப் பழித்தான். தீய மக்கள் உமது திருப்பெயரைச் சபித்தனர்; இதை நினைவுகூரும்.

19 உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பருந்துக்கு இரையாக விட்டு விடாதேயும் உம்முடைய எளிய மக்களின் வாழ்வை ஒரு நாளும் மறவாதேயும்.

20 உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும். பூமியின் மறைவிடங்களிலும் வெளியிடங்களிலும் கொடுமை நிறைந்திருக்கிறதே!

21 சிறுமையுற்றவன் ஏமாற்றமடைய விடாதேயும். ஏழை எளியோர் உமது திருப்பெயரைப் புகழ்வாராக.

22 எழுந்தருளும் இறைவனே, உமது வழக்கை நீரே நடத்தும். அறிவிலியால் நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைவு கூரும்.

23 உம்மை எதிர்த்து எழுபவர்களின் அமளி எந்நேரமும் அதிகரிக்கின்றது. உமது எதிரிகள் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்.

அதிகாரம் 074


1 உம்மைப் புகழ்கிறோம் ஆண்டவரே, உம்மைப் போற்றிப் புகழ்கிறோம், உமது பெயரைப் போற்றுகிறோம். உமது வியத்தகு செயல்களை எடுத்துரைக்கிறோம்.

2 நான் குறித்த நாளிலே நீதியின்படி நியாயம் வழங்குவேன்.

3 மாநிலம் தன் குடிகள் அனைவரோடும் அசைவுறலாம். ஆனால் நான் அதன் தூண்களை உறுதிப்படுத்தி உள்ளேன்.

4 இறுமாப்புடையவர்களை நோக்கி, ' செருக்குக் கொள்ள வேண்டாம்' என்கிறேன். நெறிகெட்டவர்களை நோக்கி, 'உங்கள் பலத்தைக் காட்டவேண்டாம்' என்கிறேன்.

5 உன்னதருக்கு எதிராக உங்கள் வல்லமையைக் காட்ட வேண்டாம். கடவுளுக்கு எதிராகச் செருக்குற்றுப் பேச வேண்டாம்.

6 ஏனெனில், இவ்வல்லமை உங்களுக்கு கிழக்கினின்றும், வராது, மேற்கினின்றும் வராது. பாலை வெளியினின்றும் வராது; மலைப்பாங்கினின்றும் வராது.

7 நீதித் தீர்ப்பளிப்பவர் கடவுளே. ஒருவனைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவனை உயர்த்துகின்றார்.

8 ஆண்டவருடைய கையில் துன்பக் கலம் ஒன்றிருக்கிறது: நிறைய நுரை பொங்கும் மது ரசக் கலவை அதில் உள்ளது. அதிலிருந்து இறைவன் ஊற்றுகிறார். உலகிலுள்ள தீயோர் அனைவரும் அதை வண்டல் மட்டும் உறிஞ்சிக் குடிப்பர்.

9 நானோ என்றென்றும் பெரு மகிழ்ச்சி கொள்வேன். யாக்கோபின் கடவுளுக்குப் புகழ்பாடுவேன்.

10 தீயவர்களின் வலிமையை முற்றிலும் முறித்துப் போடுவேன். நீதிமானின் வலிமையோ ஓங்கி நிற்கும்.

அதிகாரம் 075


1 யூதாவில் கடவுளை மக்கள் அறிவர், இஸ்ராயேலினிடையே அவரது பெயர் மாண்பு கொண்டது.

2 சாலேமில் உள்ளது அவரது கூடாரம். சீயோனில் உள்ளது அவரது உறைவிடம்.

3 அங்கே அவர் பளிச்சிடும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலங்களையும் தகர்ந்தெறிந்தார்.

4 வல்லமையுள்ளவரே, மின்னொளியிடையே நீர் எழுந்தீர். என்றுமுள்ள மலைகளின் ஒளியை விட நீர் மாண்புற்றீர்.

5 வலிய நெஞ்சுடையவர்களும் கொள்ளையிடப்பட்டார்கள்; உறக்கத்தில் ஆழ்ந்தார்கள், வலிமையுள்ளவர்கள் அனைவருடைய கைகளும் செயலிழந்தன.

6 யாக்கோபின் இறைவனே, உமது அதட்டலைக் கேட்டு, தேர்களும் குதிரைகளும் மயங்கி விழந்தன.

7 பேரச்சத்துக்குரியவர் நீர்: உமது சினம் கொதித்தெழும் போது உம்மை எதிர்த்து நிற்பவன் யார்?

8 வானினின்று உமது நீதித் தீர்ப்புக் கேட்கச் செய்தீர்; மாநிலம் அதைக்கேட்டு அச்சமுற்றது, அடங்கிவிட்டது.

9 நீதித் தீர்ப்ளிக்கக் கடவுள் எழுந்த போது, மாநிலத்திலுள்ள எளியோரைக் காக்க அவர் எழுந்த போது, மாநிலம் அச்சமுற்று அடங்கி விட்டது.

10 சீறி எழுந்த ஏதோம் நாட்டினரும் உமது மகிமையை விளங்கச் செய்வர்: ஹேமாத்தில் எஞ்சி நிற்பவர் உமக்கு விழா எடுப்பர்.

11 உங்கள் இறைவனாகிய கடவுளுக்குப் பொருத்தனை செய்து நிறைவேற்றுங்கள். அவரைச் சூழ்ந்துள்ளவர் அனைவரும், அச்சத்துக்குரிய அவருக்குக் காணிக்கை கொண்டு வருவார்களாக.

12 தலைவர்களின் உயிரை எடுத்து விடுபவர் அவரே. மாநிலத்து அரசர்களுக்கு அச்சம் ஊட்டுபவர் அவரே.

அதிகாரம் 076


1 இறைவனை நோக்கி என் குரல் எழும்பிற்று; அவரை நோக்கிக் கூப்பிடுகிறேன். எனக்குச் செவிசாய்க்கும் வண்ணம் கடவுளைக் கூவி அழைக்கிறேன்; என் துன்ப நாளில் நான் ஆண்டவரை நாடுகிறேன்.

2 இராக்காலத்தில் சலிப்பின்றி என் கைகளை அவரை நோக்கி விரித்தேன், என் ஆன்மா ஆறுதல் பெற விரும்பவில்லை.

3 ஆண்டவரை நினைக்கும் போது நான் பெருமூச்சு விடுவிறேன். அவரை எண்ணும் போது என் மனம் சோர்ந்து போகிறது.

4 என் கண் இமைகள் கொட்டாதபடி செய்கின்றீர். கலக்கமுற்றுப் பேசவும் முடியாதவனாயிருக்கிறேன்.

5 கடந்த காலத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். கடந்து சென்ற ஆண்டுகளை சிந்திக்கலானேன்.

6 இரவில் எனக்குள் சிந்தனை செய்கிறேன். எண்ணி எண்ணி என் மனம் ஆராய்கின்றது.

7 ஆண்டவர் என்றென்றும் கைவிட்டு விடுவாரா? இனி ஒருபோதும் இரங்கமாட்டாரா?

8 அவரது கருணை அடியோடு நின்றுவிடுமா? அவர் அளித்த வாக்குறுதி தலைமுறை தலைமுறையாய் அற்றுப் போய்விடுமா?

9 இரக்கங்கொள்ள கடவுள் மறந்துவிட்டாரா? சினத்தில் அவரது அருள் உள்ளம் அடைபட்டு விட்டதா?

10 உன்னதமானவருடைய வலக்கரம் மாறிப் போனது. இதுவே என் துயரம்" என்றேன்.

11 ஆண்டவருடைய செயல்களை நினைத்தேன். ஆதிமுதல் அவர் செய்த வியத்தகு செயல்களை மறக்க மாட்டேன்.

12 உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானம் பண்ணுவேன். உம் அரிய செயல்களில் என் மனத்தைச் செலுத்துவேன்.

13 இறைவா, நீர் காட்டிய வழி புனிதமானது. நம்முடைய இறைவனைப் போல் மகத்துவமுள்ள கடவுள் யார்?

14 அரியன செய்கிற கடவுள் நீரே. மக்களிடையேயில் உமது வல்லமை விளங்கச் செய்தீர்

15 யாக்கோபு, சூசை இவர்களுடைய சந்ததியாகிய உம் மக்களை உமது கரத்தால் மீட்டீர்.

16 இறைவா, கடல் வெள்ளம் உம்மைப் பார்த்தது, உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது. ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.

17 கார்முகில்கள் மழை பொழிந்தன; மேகங்கள் இடி முழங்கின. உம் அம்புகள் பறந்தன.

18 உமது இடி முழக்கம் கடும் புயலில் ஒலித்தது: மின்னல்கள் பாருலகில் ஒளிவீசின; பூமியனைத்தும் நடுங்கி அதிர்ந்தது.

19 கடலின் வழியாக நீர் நடந்து சென்றீர்; வெள்ளத்தினிடையே நீர் வழி காட்டினீர். உமது அடிச்சுவடுகளோ காணப்படவில்லை.

20 மந்தையைப் போல் உம் மக்களை நடத்திச் சென்றீர், மோயீசன், ஆரோன் இவர்களைக் கொண்டு அழைத்துச் சென்றீர்.

அதிகாரம் 077


1 என் மக்களே, என் போதனைக்குச் செவிசாயுங்கள்! நான் கூறும் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

2 உவமைகளால் நான் பேசுவேன். பழங்காலத்து மறைபொருள்களை எடுத்துரைப்பேன்.

3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொன்னவை, இவற்றை உரைப்போம்.

4 அவர்களின் மக்களான உங்களிடமிருந்து அவற்றை மறைக்க மாட்டோம் வரும் தலைமுறைக்கு அவற்றை எடுத்துச் சொல்வோம். ஆண்டவருடைய மாண்பு மிக்க செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அற்புதச் செயல்களையும் கூறுவோம்.

5 யாக்கோபின் இனத்தாருக்குக் கட்டளையொன்று ஏற்படுத்தினார்; இஸ்ராயேல் மக்களுக்குச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். நம் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதை அவர்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பதே அவர் தந்த சட்டம்.

6 இனி வரும் தலைமுறையில் பிறக்கும் மக்கள் அதையறியவும், அவர்களும் தங்கள் மக்களுக்கு அவற்றை அறிவிக்கவும்.

7 கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும், அவருடைய செயல்களை மறவாதிருக்கவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்.

8 தங்கள் முன்னோர்களைப் போல் இவர்களும் எதிர்ப்பு மனமும் அடங்காத்தனமும் கொண்ட தலைமுறையாய் ஆகாதிருக்கவும், நேரிய மனமில்லாத மக்களாய்க் கடவுளுக்குப் பிரமாணிக்கமற்ற உள்ளத்தினராய் இல்லாதிருக்கவும் இப்படி ஒரு சட்டம் தந்தார்.

9 வில் வீரரான எப்பிராயிமின் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர்.

10 கடவுளுடைய உடன்படிக்கையை அவர்கள் காக்கவில்லை. அவரது சட்டத்தின்படி நடக்க அவர்கள் விரும்பவில்லை.

11 அவருடைய செயல்களை அவர்கள் மறந்தனர். தங்கள் கண்முன் அவர் செய்த வியத்தகு செயல்களை அவர்கள் மறந்தனர்.

12 எகிப்து நாட்டில் அவர்கள் முன்னோர்கள் காணப் புதுமைகளை அவர் செய்தார், தானிஸ் சமவெளியில் அவற்றைச் செய்தார்.

13 கடலைப் பிளந்து அவர்களை வழிநடத்தினார். நீர் திரளை அணை போல் நிற்கச் செய்தார்.

14 பகலில் மேகத்தினால் வழிகாட்டினார். இரவு முழுவதும் நெருப்பின் ஒளியினால் வழி நடத்தினார்.

15 பாலைவெளியில் பாறைகளைப் பிளந்தார்; ஆறு போல் நீர் பெருக்கெடுக்கச் செய்தார். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.

16 பாறையினின்று நீரோடை வெளிப்படச் செய்தார். ஆறு போல் அதனைப் பாயச் செய்தார்.

17 அப்படி இருந்தும் அவர்கள் அவருக்கு எதிராய்ப் பாவமே செய்தனர். பாலைவெளியிலே உன்னதமானவரை எதிர்த்தனர்.

18 கடவுளை அவர்கள் பரிசோதிக்கத் துணிந்தனர். தங்கள் இச்சையின்படி உணவு கேட்டனர்.

19 கடவுளை எதிர்த்து, "பாலைவெளியில் கடவுள் நமக்குப் பந்தி படைக்க முடியுமோ?" என்றனர்.

20 இதோ! அவர் பாறையைத் தட்டினார்; தண்ணீர் புறப்பட்டது, வெள்ளம் போல் ஓடியது. இனித் தம் மக்களுக்கு உணவு கொடுக்க அவரால் முடியுமா? இறைச்சி தேடித்தர இயலுமா?" என்றனர்.

21 இதைக் கேட்ட போது ஆண்டவர் சினங்கொண்டெழுந்தார்; யாக்கோபின் இனத்தவருக்கு எதிராக அவரது சினம் நெருப்புப் போல் பற்றியது. இஸ்ராயேலுக்கு எதிராக அவர் சினம் மூண்டெழுந்தது.

22 ஏனெனில், அவர்கள் கடவுளை விசுவாசிக்கவில்லை. அவரது மீட்பின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கவில்லை.

23 ஆனால் அவரோ வானில் உலவும் மேகங்களுக்குக் கட்டளையிட்டார், வானங்களின் கதவுகளைத் திறந்து விட்டார்.

24 உண்பதற்கு மன்னாவை மழை போல் பொழிந்தார், வானத்து உணவை அவர்களுக்கு அளித்தார்.

25 விண்ணோரின் உணவை மனிதன் உண்ணலானான். வேண்டிய அளவுக்கு உணவை அனுப்பினார்.

26 வானினின்று கீழ்த்திசைக் காற்று எழும்பச் செய்தார். தம் வல்லமையால் தெற்கிலிருந்து காற்று வீசச் செய்தார்.

27 தூசி போல் ஏராளமாக இறைச்சியைப் பொழிந்தார். கடல் மணல் போல் எண்ணற்ற பறவைகளை வரவழைத்தார்.

28 அவை அவர்களுடைய பாளையத்தில் வந்து விழுந்தன. அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிக் கிடந்தன.

29 நன்றாக உண்டனர், நிறைவு கொண்டனர். இப்படி அவர்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றினார்.

30 ஆனால் அவர்கள் விருப்பம் முற்றிலும் நிறைவேறு முன்பே, அவர்கள் உண்டது வயிற்றில் இறங்கு முன்பே,

31 கடவுளின் சினம் அவர்களுக்கெதிராய் மூண்டெழுந்தது! அவர்களுள் வலிமை மிக்கவர்களை வதைத்தொழித்தார். இஸ்ராயேலின் இளைஞர்களை மடியச் செய்தார்.

32 எனினும், பாவம் செய்வதை அவர்கள் விடவில்லை. அவர் செய்த புதுமைகளையும் அவர்கள் நம்பவில்லை.

33 ஆகவே, அவர்கள் வாழ்நாள் மூச்சுப் போல் மறையச் செய்தார். அவர்கள் வயது திடீரென முடிவடையச் செய்தார்.

34 அவர்களைச் சாகடித்த போது அவரைத் தேடி ஓடினர். மனந்திரும்பி, கடவுளை நாடினர்.

35 கடவுளே தங்களுக்கு அடைக்கலப் பாறை என்பதை நினைவு கூர்ந்தனர். உன்னத கடவுளே தங்கள் மீட்பரென்பதை நினைவுக்குக் கொணர்ந்தனர்.

36 ஆனால் அவர்களின் வாய் பேசியது வஞ்சகம். அவர்களின் நா எடுத்துரைத்தது பொய்.

37 அவரிடம் அவர்கள் காட்டிய மனம் நேர்மையற்றது. அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார். அவர்களை அழித்து விடவில்லை. பலமுறை தம் கோபத்தை அடக்கிக் கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்கள்மேல் காட்டவில்லை.

39 அவர்கள் வெறும் மனிதரேயென்று அவர் நினைவு கூர்ந்தார். விரைவில் மறையும் மூச்சென நினைவில் கொண்டார்.

40 பாலைவெளியில் எத்தனையோ முறை அவர்கள் அவருக்குச் சினமூட்டினர். எத்தனையோ முறை அவருடைய மனத்தைப் புண்படுத்தினர்.

41 மீளவும் கடவுளைச் சோதித்தனர். இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எரிச்சலூட்டினர்.

42 அவரது கை வன்மையை அவர்கள் மறந்து விட்டனர். எதிரியின் கையினின்று அவர்களை மீட்ட நாளை நினைத்தாரில்லை.

43 எகிப்தில் அவர் அருங்குறிகளைச் செய்த நாளை மறந்தனர். தானிஸ் சமவெளியில் அவர் புதுமைகளைச் செய்த நாளை நினைக்கவில்லை.

44 அந்நாளில் ஆறுகளை இரத்தமாக மாற்றினார். நீரில்லாதபடி ஓடைகளை இரத்த வெள்ளமாக்கினார்.

45 அவர்களை அரித்துத் தின்னும்படி பூச்சிகளை அனுப்பினார், அவர்களைத் துன்புறுத்த தவளைகளை ஏவினார்.

46 அவர்கள் விளைச்சலைக் கம்பளிப் பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்கள் உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.

47 திராட்சைக் கொடிகளைக் கல் மழையால் அழித்தார். ஆலங்கட்டிகளால் அத்தி மரங்களை நாசமாக்கினார்.

48 அவர்களுடைய கால்நடைகளைக் கல் மழைக்கு இரையாக்கினார். அவர்களுடைய ஆடுமாடுகள் இடி மின்னலுக்கு இரையாயின.

49 தம் சினத்தின் கொடுமையை அவர்கள் மேல் காட்டினர்; கோபமும் கொடுமையும் துன்பமும் அவர்கள் மேல் விழச் செய்தார், துன்பம் விளைக்கும் தூதர்களைக் கூட்டமாய் அனுப்பினார்.

50 தம் கோப வெள்ளம் மடை திறந்து ஓடச் செய்தார். சாவினின்று அவர்களை அவர் காக்கவில்லை; கால் நடைகளைக் கொள்ளை நோய்க்குக் கையளித்தார்.

51 எகிப்தில் தலைபேறான ஒவ்வொன்றையும் வதைத்தார்: காம் இனத்தார் இல்லங்களில் தலைச்சன் பிள்ளைகளைச் சாகடித்தார்.

52 ஆடுகளைப் போல் தம் மக்களை நடத்திச் சென்றார்: ஆட்டு மந்தையைப் போல் பாலைவெளியில் அவர்களைக் கூட்டிச் சென்றார்.

53 பாதுகாப்புடன் அவர்களை அழைத்துச் சென்றார்: அவர்கள் அஞ்சவேயில்லை; அவர்களுடைய எதிரிகளைக் கடல் விழுங்கிற்று.

54 தம் புனித நாட்டுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனார்: தம் வலக்கரத்தால் சொந்தமாக்கிக் கொண்ட மலைகளுக்கு அழைத்துச் சென்றார்.

55 அவர்கள் போகுமிடத்தில் இருந்த வேற்றினத்தாரை விரட்டி விட்டார்; அந்நாடுகளை இஸ்ராயேலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்: அந்நாட்டுக் குடியிருப்புகளில் அவர்களை வாழச் செய்தார்.

56 எனினும், அவர்கள் உன்னத கடவுளைச் சோதித்தனர்; அவருக்கு எரிச்சலூட்டினர். அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை.

57 தங்கள் முன்னோர்களைப் போல் அவர்களும் தவறு செய்தனர்; முறை தவறிப் போயினர்: கோணலான அம்பைப் போல குறி பிசகிப் போயினர்.

58 குன்றுகளில் பீடங்கள் கட்டி அவர்கள் சினமூட்டினர்: சிலைகளை வழிபட்டு அவருக்குக் கோபத்தை உண்டாக்கினர்.

59 கடவுள் இதையறிந்து சினந்தெழுந்தார்: இஸ்ராயேலை அறவே புறக்கணித்தார்.

60 சீலோவில் தமக்கிருந்த உறைவிடத்தை அவர் விட்டகன்றார்: மனிதரிடையே அவர் வாழ்ந்து வந்த கூடாரத்தை விட்டுப் போனார்.

61 தம் வலிமையை அடிமைத்தனத்துக்குக் கையளித்தார்: தம் மாட்சியை எதிரியின் கையில் விட்டு விட்டார்.

62 தம் மக்களை வாளுக்கு இரையாகச் செய்தார்; தம் உரிமைச் சொத்தானவர்கள் மீது சினந்தெழுந்தார்.

63 அவர்களுடைய இளைஞர்களை நெருப்பு எரித்து விட்டது: கன்னிப் பெண்களுக்கு திருமண மகிழ்ச்சி கிடைக்கவில்லை.

64 அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்: அவர்களுடைய விதவைகளும் ஒப்பாரி வைக்கவில்லை.

65 ஆண்டவரோ தூக்கத்தினின்று எழுவது போல் விழித்தெழுந்தார்: மது மயக்கம் தெளிந்து எழும் வீரனைப் போல் குதித்தெழுந்தார்.

66 தம் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தார்: என்றென்றும் நிந்தனைக்கு உரியவர்களாக ஆக்கினார்.

67 யோசேப்பின் குடும்பத்தை அவர் புறக்கணித்தார்: எப்பிராயிம் கோத்திரத்தை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

68 யூதாவின் கோத்திரத்தையே அவர் தேர்ந்தெடுத்தார்: சீயோன் மலையையே அவர் நேசித்தார்.

69 வானமட்டும் உயரத் தம் திருத்தலத்தை நிறுவினார்: என்றென்றும் நிலைத்திருக்கும் பூமியைப் போல் அதை ஆக்கினார்.

70 தம் ஊழியன் தாவீதை அவர் தேர்ந்து கொண்டார்; ஆட்டுக் கிடைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.

71 கறவல் ஆடுகளின் பின் திரிந்த அவரை அழைத்துக் கொண்டார்: தம் மக்களான யாக்கோபின் இனத்தாரை, தம் உரிமைச் சொத்தான இஸ்ராயேலை மேய்க்கச் செய்தார்.

72 அவரும் நேர்மையான உள்ளத்தோடு அவர்களை மேய்த்தார்: மிகுந்த கைத்திறனோடு அவர்களை வழி நடத்தினார்.

அதிகாரம் 078


1 இறைவனே புற இனத்தார் உமது சொந்த நாட்டின் மீது படையெடுத்தார்கள்; உமது திருக்கோயிலை தீட்டுப்படுத்தினார்கள்: யெருசலேமைத் தரை மட்டமாக்கினார்கள்.

2 உம் அடியார்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கு இரையாக்கினார்கள்: உம் புனிதர்களின் உடல்களை விலங்குகளுக்கு உணவாகத் தந்தார்கள்.

3 அவர்களுடைய இரத்தத்தை யெருசலேமைச் சுற்றித் தண்ணீர் போல் இறைத்தார்கள்: அவர்களை அடக்கம் செய்வதற்குக் கூட யாருமில்லை.

4 எங்கள் அயலாரின் நிந்தனைக்கு நாங்கள் ஆளானோம்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்திற்கும் நகைப்புக்கும் உள்ளானோம்.

5 ஆண்டவரே, இன்னும் எவ்வளவு காலத்திற்கு? என்றென்றும் சினம் கொள்வீரோ? உமது எரிச்சல் நெருப்புப் போல் எரிந்து கொண்டிருக்குமோ?

6 உம்மை அறியாத புற இனத்தார் மேல் உமது சினம் விழச் செய்யும்: உம்மை வழிபடாத அரசுகள் மேல் உம் கோபத்தைக் காட்டும்.

7 ஏனெனில், அவர்கள் யாக்கோபின் இனத்தாரை அழித்தொழித்தனர்: அவர்கள் குடியிருந்த நாட்டைப் பாழாக்கினர்.

8 முன்னோர்கள் செய்த குற்றங்களை எங்கள் மேல் சுமத்தாதேயும்; உமது இரக்கம் எங்களுக்கு விரைவாகவே கிடைப்பதாக: ஏனெனில், நாங்கள் துயரத்துக்குள்ளானோம்.

9 எங்கள் மீட்பரான இறைவா, உம் திருப்பெயரின் மகிமைக்காக எங்களுக்குத் துணை செய்யும்: உம் பெயரின் பொருட்டு எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு விடுதலையளித்தருளும்.

10 எங்கே அவர்கள் கடவுள்?" என்று புற இனத்தார் ஏன் சொல்லவேண்டும்? உம் ஊழியர்களின் இரத்தம் சிந்தியதற்காக அவர்களை நீர் பழிவாங்கும்: அதை அவர்கள் உணர வேண்டும்; நாங்கள் அதைக் காண வேண்டும்.

11 சிறைப்பட்டவர்களின் பெருமூச்சு உம் காதில் விழுவதாக: சாவுக்குக் குறிக்கப்பட்டவர்களை உமது கரத்தின் வல்லமைக்கேற்ப விடுவித்தருளும்.

12 ஆண்டவரே, எங்கள் அயலார் உமக்குச் செய்த நிந்தனைக்காக, ஏழு மடங்கு தண்டனை அவர்கள்மேல் விழச் செய்யும்.

13 நாங்களோ உம் மக்கள், உமது மேய்ச்சலின் ஆடுகள்; என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ்வோம்: தலைமுறை தலைமுறையாக உமது புகழை எடுத்துரைப்போம்.

அதிகாரம் 079


1 இஸ்ராயேலரின் மேய்ப்பவரே, செவிசாய்த்தருளும்: யோசேப்பை ஆட்டு மந்தையைப் போல் வழி நடத்துபவரே, என் குரல் கேளும். கெருபீம்களின் மேல் வீற்றிருப்பவரே.

2 எப்பிராயீம், பெஞ்சமீன், மனாசே அவர்கள் முன் உம் மாண்பு விளங்கச் செய்யும்; உமது வல்லமையைத் தூண்டி எழுந்தருளும்: எம்மை மீட்க எழுந்து வாரும்.

3 இறைவா, நீர் எங்களுக்கு வாழ்வளித்தருளும்: எங்களுக்கு மீட்புக் கிடைக்க உமது இன் முகம் காட்டியருளும்.

4 படைகளின் இறைவனே, உம் மக்கள் மன்றாடுகையில், செவிகொடாமல் எதுவரை சினம் கொண்டிருப்பீர்?

5 கண்ணீரையே அவர்களுக்கு உணவாக ஊட்டினீர்: பெருகியோடிய கண்ணீரையே அவர்கள் பருகச் செய்தீர்.

6 எங்கள் அயலார்க்கு நாங்கள் சச்சரவின் காரணமாயிருக்கச் செய்தீர்: எங்கள் எதிரிகளின் நகைப்புக்கு இலக்கானோம்.

7 படைகளின் இறைவனே நீர் எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும் எங்களுக்கு மீட்புக் கிடைக்க உமது இன்முகம் காட்டியருளும்.

8 எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றை எடுத்து வந்தீர்: புறவினத்தாரை விரட்டியடித்து அவர்கள் நாட்டில் அதை நட்டு வைத்தீர்.

9 அதற்கேற்ற நிலத்தைப் பண்படுத்தினீர்: அது வேர் விட்டு நாடு முழுவதும்¢ பரவியது.

10 அதன் நிழல் மலைகள் மீது விழலாயிற்று: அதன் கிளைகள் வளர்ந்தோங்கிய கேதுரு மரங்களையும் மூடின.

11 கடல் வரைக்கும் அதன் கொடிகள் படர்ந்தன: அதன் தளிர்கள் ஆறு வரையில் வளர்ந்தோங்கின.

12 பின்னர் ஏன் அதன் மதில் சுவரைத் தகர்த்து விட்டீர்? அவ் வழியாய்ச் செல்வோர் அனைவரும் அதில் பழம் பறிக்க ஏன் விட்டுவிட்டீர்?

13 காட்டுப் பன்றிகள் அதை அழிக்க ஏன் விட்டு விட்டீர்? காட்டு விலங்குகளை ஏன் அங்கேயே மேய விட்டு விட்டீர்?

14 சேனைகளின் இறைவனே, மீளவும் எழுந்து வாரும்; வனினின்று கண்ணோக்கிப் பாரும்: இத் திராட்சைக் கொடியை வந்து பாரும்.

15 உமது வலக்கரத்தால் நீர் நட்டதைப் பாதுகாத்தருளும்: நீர் வலிமைப்படுத்த விரும்பிய இவ்விளஞ் செடியைக் காத்தருளும்.

16 அதை அவர்கள் நெருப்பால் எரித்து விட்டனர்; அதைத் தகர்த்து விட்டனர்: உம் முகத்தின் அச்சத் தோற்றத்தால் அவர்கள் அழிவார்களாக.

17 உம் வலக்கரத்தால் தேர்ந்தெடுத்த ஆளை உம் கைவன்மை காப்பதாக: உமக்கென உறுதிப்படுத்திய மனிதனை அது காப்பதாக.

18 இனி நாங்கள் உம்மை விட்டு அகலோம்: உயிரோடு எங்களை நீர் காத்தருள்வீர்; உமது பெயரை நாங்கள் போற்றுவோம்.

19 ஆண்டவரே, சேனைகளின் இறைவனே, எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும். எங்களுக்கு மீட்புக் கிடைக்க, எங்களுக்கு இன்முகம் காட்டியருளும்.

அதிகாரம் 080


1 நம் துணைவராம் இறைவனுக்கு அக்களிப்போடு புகழ் பாடுங்கள்: யாக்கோபின் இறைவனை நினைத்து ஆர்ப்பரியுங்கள்.

2 வீணை மீட்டுங்கள், முரசு கொட்டுங்கள்; இன்னிசை எழுப்பும் யாழும் சுரமண்டலமும் இசைத்துப் பாடுங்கள்.

3 அமாவாசை, முழுமதி, மற்றும் விழா நாட்களில் எக்காளம் ஊதுங்கள்.

4 இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுத்த ஆணை அது: யாக்கோபின் இறைவன் தந்த கட்டளை அது.

5 எகிப்தை விட்டு வெளியேறிய போது இச்சட்டத்தை அவர் சூசையின் இனத்தவர்க்குத் தந்தார். அறியாத மொழியொன்று என் செவியில் விழுந்தது.

6 சுமையின் கீழ் அவர்கள் நொறுங்காத வண்ணம் அவர்களை விடுவித்தேன்: மண் சுமந்து உழைத்து வந்த அவர்களை விடுவித்தேன்.

7 துன்ப வேளையில் நீ என்னைக் கூவி அழைத்தாய், நான் உனக்கு விடுதலை அளித்தேன்; இடி முழக்கத்தினிடையே மேகத்தினின்று உனக்கு மறுமொழி சொன்னேன்: மெரீபாவின் நீர் ஊற்றண்டையில் உன்னைச் சோதித்தறிந்தேன்.

8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு அறிவுரை கூறுவேன்: இஸ்ராயேலே, நீ எனக்குச் செவிசாய்ப்பாயானால் எவ்வளவோ நலமாயிருக்கும்!

9 வேறு தேவன் எவரும் உனக்கு இருத்தலாகாது: அந்நிய தேவன் யாரையும் நீ வணங்கலாகாது.

10 எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேற்றிய கடவுளாகிய ஆண்டவர் நாமே: உன் வாயைத் திற; அதை நான் நிரப்புவேன்.

11 ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை: இஸ்ராயேலர் எனக்குக் கீழ்ப்படியவில்லை.

12 ஆகவே அவர்கள் இருதயக் கடினத்திற்கே கையளித்தேன்: தங்கள் யோசனையின்படி நடக்க விட்டு விட்டேன்.

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால் எவ்வளவோ நலம்! நான் காட்டிய வழியில் இஸ்ராயேல் நடந்திருந்தால் எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்!

14 அவர்கள் எதிரிகளை உடனுக்குடனே ஒழித்திருப்பேன்: என் கரத்தின் வல்லமை அவர்கள் எதிரிகளைத் தாக்கியிருக்கும்.

15 ஆண்டவரைப் பகைக்கிறவர்கள் அவரிடம் இச்சகம் பேசியிருப்பார்கள்: அவர்களுடைய தண்டனைத் தீர்ப்பு என்றென்றும் நீடித்திருக்கும்.

16 கோதுமையின் கொழுமையால் நான் இஸ்ராயேல் மக்களை உண்பித்திருப்பேன்: காட்டுத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்திருப்பேன்'.

அதிகாரம் 081


1 தேவ சபையிலே இறைவன் எழுந்துள்ளார்: தேவர்கள் இடையில் நின்று விசாரணை நடத்துகிறார்.

2 எது வரை நீங்கள் அநியாயத் தீர்ப்பு வழங்குவீர்கள்? எது வரை நீங்கள் தீயவர்களுக்குச் சாதகமாகப் பேசுவீர்கள்?

3 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நியாயத் தீர்ப்பு கூறுங்கள்: தாழ்வுற்றவனுக்கும் ஏழைக்கும் நீதி வழங்குங்கள்.

4 துன்புற்றவனையும் எளியவனையும் விடுவியுங்கள்: தீயவர் கையினின்று அவனுக்கு விடுதலை அளியுங்கள்' என்கிறார்.

5 அறிவின்றி, உணர்வின்றி அவர்கள் இருட்டில் நடக்கிறார்கள்: அதன் விளைவாக பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைவுறுகின்றன.

6 நீங்கள் தேவர்கள்: அனைவரும் உன்னதரின் மக்கள்.

7 எனினும் மனிதரைப் போல் இறப்பீர்கள்' என்று நான் கூறினேன்: எனினும் பிற தலைவர்களுக்குள் ஒருவனைப் போல் வீழ்ந்து அழிவீர்கள்.

8 இறைவா, எழுந்தருளும், உலகுக்கு நீதி வழங்கும்: ஏனெனில், உலக நாடுகளனைத்தின் மீதும் உரிமையுள்ளவர் நீரே.

அதிகாரம் 082


1 ஆண்டவரே, மௌனமாயிராதேயும்: இறைவனே, பேசாமலிராதேயும், சும்மாயிராதேயும்.

2 ஏனெனில், இதோ உம் எதிரிகள் குதித்தெழுகிறார்கள்; உம்மைப் பகைக்கிறவர்கள் தலைதூக்குகிறார்கள்.

3 உம் மக்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்: நீர் பாதுகாப்பவருக்கு எதிராக ஆலோசனை செய்கிறார்கள்.

4 வாருங்கள் அவர்களை ஒழித்துவிடுவோம்; அவர்கள் இனமே இல்லாதபடி செய்து விடுவோம்: இஸ்ராயேல் என்னும் பெயரையே ஒழித்து விடுவோம்' என்கிறார்கள்.

5 உண்மையாகவே அவர்கள் ஒருமனப்பட்டு சதித்திட்டம் செய்கிறார்கள் உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள்.

6 ஏதோமின் கூடாரத்திலுள்ளவர்கள் இஸ்மாயேல் இனத்தவர்கள், மோவாபித்தர், ஆகாரித்தர்,

7 கேபோல், ஆமோன், அமலேக், பிலிஸ்தியா ஆகியோர் தீர்நாட்டு மக்களுடன் உடன்படிக்கை செய்கிறார்கள்.

8 அசீரியர் கூட அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்: லோத்தின் இனத்தார்க்கு அவர்கள் கைகொடுத்து உதவினார்கள்.

9 மாதியான் நாட்டினருக்கும் சீசோன் நீரோடையருகில் சீசாராவுக்கும், யாபினுக்கும் அன்று நீர் செய்தது போல் செய்வீராக.

10 இவர்கள் எந்தோரில் அழிவையடைந்தனர்: நிலத்துக்கு எருவாயினர்.

11 ஓரேப், சேப் இவர்களுக்கு நிகழ்ந்தது போல, அவர்களுடைய தலைவர்களை அழித்துவிடும்: சேபே, சால்மனாவுக்கு நிகழ்ந்தது போல, அவர்களுடைய தளபதிகளுக்கு நிகழ்வதாக.

12 இறைவனுக்குச் சொந்தமான செழுமை மிக்க நாடுகளை கைப்பற்றிக் கொள்வோம்' என்று அந்தத் தலைவர்கள் கூறினர்.

13 என் இறைவனே, அவர்களைச் சுழல் காற்றில் சிக்கிய துரும்பு போலாக்கி விடும்: காற்றில் பறக்கும் பதர் போலாக்கி விடும்.

14 காட்டை எரித்து விடும் நெருப்புப் போலவும், மலைகளை எரித்து விடும் தீப்போலவும்,

15 நீர் அவர்களை உமது பெருங் காற்றினால் விரட்டியடியும்: உம்முடைய புயல் காற்றினால் அவர்களைக் கலங்கடியும்.

16 மானக் கேட்டால் அவர்கள் முகம் கவிழச் செய்யும்: அப்போது தான் ஆண்டவரே, அவர்கள் உம் நாமத்தைத் தேடுவார்கள்.

17 எந்நாளும் அவர்கள் வெட்கமுற்றுக் கலங்குவார்களாக: நாணமுற்று ஒழிவார்களாக.

18 ஆண்டவர் ' என்னும் பெயர் தாங்கும் உம்மை அறிந்து கொள்வார்களாக: உலகனைத்திற்கும் உன்னதமானவர் நீரேயென்று அவர்கள் தெரிந்து கொள்வார்களாக.

அதிகாரம் 083


1 வான்படைகளின் ஆண்டவரே, உமதில்லம் எத்துணை அருமையாயுள்ளது.

2 என் ஆன்மா ஆண்டவருடைய ஆலயமுற்றங்களை விரும்பித் தேடிச் சோர்ந்து போகின்றது. என் உள்ளமும் உடலும் உயிருள்ள இறைவனை நினைந்து களிகூர்கின்றன.

3 அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கிடைத்தது: சேனைகளின் ஆண்டவரே, என் அரசே, என் இறைவா, உம் பீடங்கள் உள்ள இடத்திலே கிடைத்தது.

4 ஆண்டவரே, உம் இல்லத்தில் வாழ்வோர் பேறு பெற்றோர்: எந்நாளும் உம்மைப் புகழ்வார்கள்.

5 திருயாத்திரை செய்வதிலே நினைவாயிருந்து, உம்மிடம் உதவி பெறுபவன் பெறு பெற்றவன்.

6 வறண்ட பள்ளத்தாக்கில் அவர்கள் செல்லும் போது, அதை அவர்கள் நிரூற்றாகச் செய்வார்கள்: முதல் மழை பெய்ததும் அது உம் ஆசீரால் நிரம்பும்.

7 வலிமை மேல் வலிமை கொண்டு யாத்திரை செய்து, தேவர்களுக்கெல்லாம் இறைவனைச் சீயோனில் தரிசிப்பர்.

8 வான் படைகளின் ஆண்டவரே, என் வேண்டுதலைக் கேட்டருளும்: யாக்கோபின் இறைவனே, என் குரல் உம் செவியில் விழுவதாக.

9 எங்கள் கேடயமாகும் இறைவா, எங்களைக் கண்ணோக்கும்: நீர் அபிஷுகம் செய்தவரின் மேல் உம் பார்வையைத் திருப்பும்.

10 உமது ஆலய முற்றங்களில் ஒரு நாள் இருப்பது, வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உண்மையிலேயே மேலானது.

11 பாவிகளின் கூடாரங்களில் தங்குவதை விட என் இறைவனது இல்லத்தின் வாயிலில் நிற்பதே மேலானது; ஆண்டவராகிய கடவுளே கதிரோனும் கேடயமுமாய் உள்ளார்: அருளும் மாட்சியும் தருபவர் ஆண்டவரே; மாசின்றி நடப்போர்க்கு எந்த நலனையும் மறுக்கமாட்டார்.

12 படைகளின் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை வைத்தவன் பேறு பெற்றோன்.

அதிகாரம் 084


1 ஆண்டவரே, உமது நாட்டின் மீது அருள் கூர்ந்தீர்: யாக்கோபின் இனத்தார் பட்ட துன்பங்களை இன்பமாக மாற்றினீர்.

2 மக்கள் செய்த குற்றத்தை மன்னித்தீர்: அவர்கள் செய்த பாவங்களை எல்லாம் போக்கினீர்.

3 உம்முடைய கடுஞ்சினத்தை எல்லாம் அடக்கிக்கொண்டீர்: உமது வெஞ்சினத்தை நீர் காட்டவில்லை.

4 எம் மீட்பரான இறைவா, எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும்: எங்கள்மீது உமக்கிருந்த வெகுளி நீங்கட்டும்.

5 என்றென்றைக்குமா எங்கள் மேல் நீர் கோபம் காட்டுவீர்? தலைமுறை தலைமுறையாகவா உமது சினம் நீடிக்கும்?

6 எங்களுக்கு நீர் மீளவும் வாழ்வு அளிக்காமலா இருப்பீர்? உம் மக்கள் உம்மை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாமலா இருப்பர்?

7 ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

8 ஆண்டவராகிய இறைவன் சொல்வதென்னவென்று நான் கேட்பேன்: அவர் பேசுவதோ சமாதானமே. தம் மக்களுக்கும் தம் புனிதருக்கும், மனந்திரும்பி அவரிடம் செல்வோருக்கும் அவர் கூறுவது சமாதானமே.

9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு மீட்பு மெய்யாகவே அண்மையில் உள்ளது: அதனால் நம் நாட்டில் அவரது மாட்சிமை குடிகொள்ளும்.

10 இரக்கமும் சொல்லுறுதியும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் அமைதியும் ஒன்றையொன்று அரவணைக்கும்.

11 உண்மை பூமியினின்று முளைத்தெழும். நீதி நேர்மை வானத்தினின்று எட்டிப்பார்க்கும்.

12 நன்மையானதை ஆண்டவர் அருள்வார்: நம் நிலமும் தன் பலனைத் தரும்.

13 நீதி அவருக்கு முன்செல்லும்: மீட்பும் அவரைப் பின்தொடரும்.

அதிகாரம் 085


1 ஆண்டவரே, செவிசாய்த்து என் மன்றாட்டைக் கேட்டருளும்: ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்.

2 நான் உமக்கு அடியான் என்பதால் என்னைக் காப்பாற்றியருளும்: என் இறைவா, உம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற உம் ஊழியனை மீட்டருளும்.

3 ஆண்டவரே, நீரே என் கடவுள், என்மேல் இரக்கமாயிரும்: ஏனெனில், எந்நேரமும் நான் உம்மை நோக்கி அபயக்குரல் எழுப்புகிறேன்.

4 ஆண்டவரே, என் ஆன்மாவை உம்மை நோக்கி எழுப்பினேன்: ஆதலால் உம் ஊழியனுடைய உள்ளத்தை மகிழ்வித்தருளும்.

5 ஏனெனில் ஆண்டவரே, நீர் நல்லவர்; கருணைமிக்கவர்: உம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் மிகுந்த அருளன்பு காட்டுகிறவர்.

6 ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் வேண்டுதலின் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.

7 என் துன்ப நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: நீரும் என் மன்றாட்டைக் கேட்டருள்வீர்.

8 ஆண்டவரே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் எவருமில்லை: உம் செயல்களுக்கு நிகரானவையுமில்லை.

9 ஆண்டவரே, நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம்மை வணங்குவார்கள்: உமது புகழைச் சாற்றுவார்கள்.

10 ஏனெனில், நீர் மகத்துவமுள்ளவர், வியப்புக்குரிய செயல்களைச் செய்பவர்: நீர் ஒருவரே கடவுள்.

11 ஆண்டவரே, உம் உண்மையின்படி நான் நடக்கும் வண்ணம் எனக்கு வழிகாட்டும்: உம் திருப்பெயருக்கு அஞ்சும் வண்ணம் என் நெஞ்சை நடப்பியும்.

12 என் ஆண்டவராகிய இறைவா, என் முழு இருதயத்தோடு உமக்குப் புகழ் பாடுவேன்: உமது திருப்பெயர் என்றென்றும் விளங்கச் செய்வேன்.

13 ஏனெனில், நீர் எனக்குக் காட்டியுள்ள இரக்கம் மிகப் பெரிது: ஆழ்ந்த பாதாளத்திலிருந்து என் ஆத்துமத்தை விடுதலை செய்தீர்.

14 இறைவா, செருக்குற்றோர் எனக்கு எதிராக எழும்பினார்கள்; வலிமையுள்ளோர் ஒன்று கூடி என் உயிருக்குக் கண்ணி வைத்தனர்: அவர்கள் உம்மை மதிப்பதேயில்லை.

15 ஆனால் ஆண்டவரே, நீர் இரக்கமுள்ள கடவுள்; அருள் மிக்கவர், சினந்து கொள்ளத்தாமதிப்பவர்: அளவுகடந்த அருளன்புள்ளவர், சொல் தவறாதவர்.

16 என்மீது உம் கடைக்கண் காட்டி எனக்கு இரங்கியருளும்; உம் ஊழியனுக்கு ஆற்றல் தாரும், உம் அடியாளின் மகனை இரட்சியும்.

17 ஆண்டவரே, நீர் எனக்கு உதவி புரிந்து எனக்கு ஆறுதல் அளித்தபடியால், என்னைப் பகைக்கிறவர்கள் பார்த்து நாணமடையும் வண்ணம், உம் தயவு எனக்குள்ளதென்பதற்கு ஓர் அடையாளம் காட்டியருளும்.

அதிகாரம் 086


1 திருமலை மீது தாம் அமைத்த இல்லத்தின் மேல் ஆண்டவர் பற்றுக் கெண்டிருக்கிறார்.

2 யாக்கோபின் கூடாரங்களை விட சீயோனின் வாயில்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்.

3 இறைவனின் திருநகரே, உன்னைக் குறித்து மாண்புமிக்க செய்திகள் கூறப்படுகின்றன.

4 என்னை வழிபடுபவர்களோடு ராகாபையும் பாபிலோனையும் சேர்த்துக் கொள்வேன்: இதோ பிலிஸ்தேயா, தீர், எத்தியோப்பிய மக்களைக் குறித்து, 'இவர்களும் அங்கே பிறந்தனர்' என்பர்.

5 சீயோனைக் குறித்து, 'இன்னானின்னான் அதிலே பிறந்தான்: உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்தினார்' என்று சொல்லப்படும்.

6 மக்களினங்களைப் பதிவு செய்யும் போது, 'இன்னார் இங்கே பிறந்தனர்' என்று எழுதுவார்.

7 என் ஊற்றுகளெல்லாம் உன்னிடத்திலே உள்ளன' என்று நடனமாடி அனைவரும் பாடுவர்.

அதிகாரம் 087


1 என் ஆண்டவரே, என் இறைவா, பகலில் உம்மை நோக்கி அழைக்கிறேன்: இரவிலும் உம் திருமுன் அழுது புலம்புகிறேன்.

2 என் செபம் உம்மிடம் வரக்கடவது: என் குரலுக்குச் செவி சாய்த்தருளும்.

3 ஏனென்றால், என் ஆன்மா தீமைகளால் நிறைந்துவிட்டது: என் வாழ்க்கை கீழுலகை நெருங்குகிறது.

4 கீழுலகில் இறங்குகிறவர்களில் நானும் ஒருவனாவேன்: வலுவற்ற மனிதனைப் போலானேன்.

5 இறந்தவர்களுள் ஒருவனாய்க் கிடக்கிறேன். கொலையுண்டு கல்லறையில் வைக்கப்பட்டவர்கள் போல் ஆனேன். அவர்களை நீர் நினைப்பதில்லை: உம் அரவணைப்பினின்று அவர்கள் விலகப்பட்டனர்.

6 படுகுழியில் என்னை விட்டுவிட்டீர்: இருளினிடையிலும் பாதாளத்திலும் என்னை வைத்தீர்.

7 உமது சினம் என்மேல் வந்து விழுகின்றது. உமது சினம் என்னும் கடலின் வெள்ளத்தால் என்னை நீர் மூழ்கடிக்கின்றீர்.

8 எனக்கு அறிமுகமானவர்கள் என்னை விட்டு அகலச் செய்தீர்: அவர்களுக்கு என்மீது வெறுப்பு உண்டாகச் செய்தீர். நான் அடைபட்டுக் கிடக்கிறேன்: வெளியேற முடியாமலிருக்கிறேன்.

9 என் கண்கள் துன்பத்தினால் கலங்கிப் பஞ்சடைந்து போயின: ஆண்டவரே, நாள் முழுவதும் உம்மை நோக்கி என் கைகளை நீட்டினேன்.

10 இறந்தோருக்காகவா நீர் அரியன செய்கிறீர்? இறந்தோர் எழுந்து உம்மைப் போற்றுவரோ?

11 கல்லறையில் உமது நன்மைத்தனத்தை எடுத்துரைப்பவர்கள் யார்? கீழ் உலகில் உமது பிரமாணிக்கத்தைப் போற்றுபவர்கள் யார்?

12 இருட்டுலகில் உம் வியத்தகு செயல்கள் வெளிப்படுமா? மறதி நிலவும் அவ்வுலகில் உமது அருள் வெளியாகுமா?

13 ஆண்டவரே, நானோவெனில் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: காலையில் என் வேண்டுதல் உம்மை நோக்கி எழும்புகிறது.

14 ஆண்டவரே, ஏன் என் ஆன்மாவைப் புறக்கணிக்கிறீர்? என்னிடமிருந்து ஏன் உமது திருமுகத்தை மறைத்துக் கொள்கிறீர்?

15 நான் துயர்மிக்கவனாயிருக்கிறேன், என் இளமை முதல் இறந்து கொண்டே இருக்கிறேன்; உம் தண்டைனைகளைத் தாங்கித் தளர்ச்சியடைந்துள்ளேன்.

16 என் மேல் உம் கடுஞ்சினம் வந்து விழுந்தது. உம்முடைய பயங்கரத் தண்டனைகள் என்னை ஒழித்தே விட்டன.

17 அவைகள் நாள் முழுவதும் வெள்ளம் போல் என்னைச் சூழ்ந்து கொண்டு, என்னை ஒரே சமயத்தில் வளைத்துக் கொண்டன.

18 என் நண்பனையும் தோழனையும் என்னிடமிருந்து அகற்றி விட்டீர்: இருளே என் நண்பனாய் உள்ளது.

அதிகாரம் 088


1 ஆண்டவரது அருட்செயல்களை நினைத்து நான் என்றென்றும் பாடுவேன்: உமது சொல்லுறுதியை எல்லாத் தலைமுறைகளுக்கும் என் நாவால் எடுத்துரைப்பேன்.

2 என்றென்றும் உள்ளது எம் அருளன்பு' என்று நீர் கூறினீர்: உமது சொல்லுறுதிக்கு வானகமே அடிதளம்.

3 நான் தேர்ந்தெடுத்தவரோடு உடன்படிக்கை செய்து கொண்டேன், என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டுக் கூறியது.

4 உன் சந்ததியை என்றென்றும் நிலைநாட்டுவேன்; எல்லாத் தலைமுறைகளிலும் உன் அரியணை நிலைக்கச் செய்வேன்'.

5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் போற்றிப் புகழ்கின்றன: வானோர் கூட்டம் உமது சொல்லுறுதியைக் கொண்டாடும்.

6 வானத்தில் உள்ளவர் யார் ஆண்டவருக்கு நிகராகக் கூடும்? விண்ணவருள் யார் ஆண்டவருக்கு இணை?

7 புனிதர்களின் கூட்டத்தில் கடவுள் அச்சத்துக்குரியவர்: அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அச்சத்துக்குரியவர்; மாண்பு மிக்கவர்.

8 ஆண்டவரே, சேனைகளின் இறைவா, உமக்கு நிகர் யார்? ஆண்டவரே, நீர் வல்லமையுள்ளவர்: உமது சொல்லுறுதி உம்மைச் சூழ்ந்துள்ளது.

9 கொந்தளிக்கும் கடலுக்கும் நீர் கட்டளையிடுகிறீர்: பொங்கி எழும் அலைகளை நீர் அடக்குகிறீர்.

10 ராகாப்பை நீர் பிளந்து நசுக்கி விட்டீர்: வன்மை மிக்க உம் கரத்தால் உம் எதிரிகளைச் சிதறடித்தீர்.

11 வானமும் உமதே, வையமும் உமதே: பூவுலகையும் அதிலுள்ள அனைத்தையும் அமைத்தவர் நீரே.

12 வடக்கையும் தெற்கையும் உருவாக்கியவர் நீரே: தாபோர் மலையும் எர்மோன் மலையும் உம் பெயரைக் கேட்டுக் களிகூர்கின்றன.

13 வல்லமை மிக்கது உமது புயம்: வலிமை கொண்டது உமது கரம், ஓங்கியுள்ளது உமது வலக்கரம்!

14 நீதியும் நியாயமுமே உம் அரியணைக்கு அடித்தளம்: அருளும் உண்மையும் உமக்கு முன்செல்லும்.

15 உமது விழா ஆர்ப்பரிப்பில் பங்குபெறுவோர் பேறு பெற்றோர்: ஆண்டவரே, அவர்கள் உம் முகத்தின் ஒளியில் நடக்கின்றனர்.

16 உமது பெயரை நினைத்து என்றும் அகமகிழ்கின்றனர்: உமது நீதியை நினைத்துப் பெருமிதப் படுகின்றனர்.

17 ஏனெனில், அவர்களது வல்லமைக்குச் சிறப்புத் தருபவர் நீர்: உம் தயவால் தான் எங்கள் வலிமை ஓங்கியுள்ளது.

18 நமக்குள்ள கேடயம் ஆண்டவருடையதே: நம் அரசரும் இஸ்ராயேலரின் பரிசுத்தருக்குச் சொந்தமானவரே.

19 ஆதியில், உம் புனிதர்களுக்குக் காட்சி தந்து நீர் சொன்னது: 'வல்லவனுக்கு மணிமுடி சூட்டினேன்; மக்களினின்று ஒருவனை நான் தேர்ந்தெடுத்து மகிமைப்படுத்தினேன்.

20 என் ஊழியன் தாவீதை நான் தேர்ந்தெடுத்தேன்: புனித தைலத்தால் அவரை அபிஷுகம் செய்தேன்.

21 அதனால் என் கைவன்மை என்றும் அவருக்குத் துணை நிற்கச் செய்வேன்: என் புயப்பலம் அவரை ஒடுக்க முடியாது.

22 எதிரி அவரை ஏமாற்ற மாட்டான்: தீயவன் அவரை ஒடுக்க முடியாது.

23 அவருக்கெதிரிலேயே அவருடைய எதிரிகளை நொறுக்கி விடுவேன்: அவருடைய பகைவர்களை வதைத்தொழிப்பேன்.

24 என் சொல்லுறுதியும் என் அருளும் அவரோடிருக்கும்: என் பெயரினால் அவரது வலிமை ஓங்கும்.

25 அவரது செங்கோல் ஓங்கச் செய்வேன்: ஆறுகளின் மேல் அவரது ஆட்சியைப் பரவச் செய்வேன்.

26 நீரே என் தந்தை, என் இறைவன், எனக்கு மீட்பளிக்கும் அரண் என்று என்னை நோக்கிக் கூறுவார்.

27 நானும் அவரை என் தலைப்பேறாக்குவேன்: மண்ணக அரசருள் மாண்பு மிக்கவராக்குவேன்.

28 என்றென்றும் என் அருளன்பை அவர் மேல் பொழிவேன்: அவரோடு நான் செய்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்.

29 அவரது சந்ததி என்றென்றும் வாழச் செய்வேன்: அவரது அரியணை வானங்கள் போல் நீடிக்கச் செய்வேன்.

30 அவருடைய மக்கள் என் சட்டத்தை மீறுவார்களாகில், என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடில்,

31 என் நியமங்களைப் பின்பற்றாவிடில், என் கற்பனைகளின் படி ஒழுகாவிடில்.

32 அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சாட்டையால் அடிப்பேன்; அவர்கள் பாவங்களுக்காகக் கசையால் அடிப்பேன்: அடி கொடுத்து அவர்களைத் திருத்துவேன்.

33 ஆனால் எனது அருளைத் தாவீதிடமிருந்து நீக்கிவிட மாட்டேன்: என் வாக்குறுதியை நான் மீறவே மாட்டேன்.

34 நான் செய்த உடன்படிக்கையை மீற மாட்டேன்: நான் சொன்ன சொல்லை மாற்றமாட்டேன்.

35 என் புனிதத்தை வைத்து ஒரே முறையாய் நான் ஆணையிட்டுச் சொன்னேன்: தாவீதிடம் நான் பொய் சொல்லவே மாட்டேன்.

36 அவரது சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்: அவரது அரியணை கதிரவனை போல் என் முன் என்றும் விளங்கும்.

37 வானத்தில் ஒளிரும் நிலவைப் போல், அவரது அரியணை நிலைத்திருக்கும்.'

38 நீரோ அபிஷுகமானவரைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்: அவர் மீது மிகுந்த சினம் கொண்டீர்.

39 உம் ஊழியனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புறக்கணித்தீர்; அவரது மணிமுடியைத் தரையில் தூக்கி எறிந்தீர்.

40 அவருடைய நகர மதில்களைத் தகர்த்தெறிந்தீர்: கோட்டைக் கொத்தளங்கள் அழிவுற விட்டு விட்டீர்.

41 வழியில் போவோர் வருவோர் அவரைக் கொள்ளையடித்தனர்: அயலாரின் நகைப்புக்கு அவர் இலக்கானார்.

42 எதிரிகளின் வலக்கை ஓங்கச் செய்தீர்: அவரைப் பகைத்தவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியால் துள்ளச் செய்தீர்.

43 அவரது வாளின் முனையை முறித்து விட்டீர்: போரின் போது நீர் ஆதரவு காட்டவில்லை.

44 அவரது மாட்சி மறையச் செய்தீர்: அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர்.

45 அவரது இளமை விரைவில் முடிவடையச் செய்தீர்: அவமானத்தில் அவரை ஆழ்த்தினீர்.

46 எது வரைக்கும் ஆண்டவரே: எந்நாளுமே மறைந்திருப்பீரோ? எதுவரை உமது சினம் நெருப்¢புப் போல் மூண்டெழும்?

47 எவ்வளவு குறுகியது என் வாழ்வு என்பதை நினைவுகூரும்: நீர் படைத்த மனிதர்கள் எவ்வளவு நிலையற்றவர்கள் என்று நினைவுகூரும்.

48 சாவுக்குட்படாமல் வாழ்பவன் யார்? கீழுலகின் பிடியினின்று தன் உயிரை விடுவிப்பவன் யார்?

49 ஆண்டவரே, ஆதிகாலத்தில் நீர் காட்டிய தயவெல்லாம் இப்போதெங்கே? உம் சொல்லுறுதியால் தாவீதுக்கு ஆணையிட்டுச் சொன்ன தயவெல்லாம் எங்கே?

50 ஆண்டவரே, உம் ஊழியர் படும் நிந்தனைகளையெல்லாம் நினைவுகூரும்: புறவினத்தார் காட்டும் பகையும் எதிர்ப்பும் என் நெஞ்சிலே தாங்குகிறேனே!

51 ஆண்டவரே, உம் எதிரிகள் நீர் அபிஷுகம் பண்ணினவரைப் பழிக்கிறார்கள்: அவர் போகுமிடமெல்லாம் அவரைத் தூற்றுகிறார்கள்.

52 என்றென்றும் ஆண்டவர் போற்றி: ஆமென், ஆமென்!

அதிகாரம் 089


1 ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடம்.

2 மலைகள் தோன்றுமுன்பே, பூமியும் உலகும் உண்டாகு முன்பே, ஊழ் ஊழிக்காலமாக இறைவா, நீர் இருக்கிறீர்.

3 மண்ணோடு மண்ணாகும்படி நீர் மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறீர்: "மனுமக்களே மண்ணாகத் திரும்புங்கள்" என்கிறீர்.

4 ஏனெனில், உமக்கு ஆயிரம் ஆண்டுகள் கூட, கடந்து போன நேற்றைய தினத்தைப் போலவும், ஓர் இரவுச் சாமத்தைப் போலவும் உள்ளன.

5 அவர்களை எடுத்து விடுகிறீர். வைகறையில் கண்ட கனவைப் போலவும், செழித்து வளரும் பூண்டைப் போலவும் ஆகிறார்கள்.

6 காலையில் பூக்கிறது, செழித்திருக்கிறது: மாலையிலோ வாடி விடுகிறது.

7 உம் கோபத்தால் நாங்கள் தொலைந்து போனோம்: நீர் கொண்ட சினத்தால் அதிர்ந்து போனோம்.

8 எங்கள் பாவங்கள் எல்லாம் உம் கண்முன் வைத்தீர்: மறைவான எம் பாவங்கள் உம் திருமுகத்தின் ஒளியிலே உள்ளன.

9 உம் கோபத்தில் எங்கள் வாழ்நாளெல்லாம் கடந்து போயிற்று. ஒரு மூச்சுபோல முடிந்து விட்டது எங்கள் வாழ்வு

10 எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகள்; வலிமையுடையோர்க்கு எண்பது; அவற்றில் பெரும் பகுதி வருத்தமும் வீண் கவலையுமே! ஏனெனில், அவை விரைவில் கழிந்து போகின்றன: நாங்களும் அவற்றோடு போய்விடுகிறோம்.

11 உமது கோபத்தின் வல்லமையை உணர்ந்தவன் யார்? உம்மிடம் காட்டவேண்டிய அச்சத்திற்கு ஏற்றபடி உம் கடுஞ்சினத்தை அறிந்தவன் யார்?

12 உள்ளத்தின் ஞானத்தை அடையுமாறு, எங்கள் வாழ்நாளைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்.

13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எவ்வளவு காலம் கோபம் கொள்வீர்? உம் ஊழியர் மீது இரக்கம் வையும்.

14 உம் இரக்கப் பெருக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும்: எம் வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து அகமகிழ்வோம்.

15 எங்களை நீர் தண்டித்த காலத்திற்கும், எங்கள் மீது துன்பங்கள் வந்த காலத்திற்கும் ஏற்றவாறு எங்களை மகிழ்வித்தருளும்.

16 உம் திருச்செயலை உம் அடியார்கள் காண்பார்களாக: அவர்களுடைய மக்களுக்கு உம் மகிமை விளங்குவதாக.

17 நம் ஆண்டவராகிய கடவுள் இன்முகம் காட்டுவாராக: எங்கள் வேலைகளைப் பயனுள்ளவையாக்கும்.

அதிகாரம் 090


1 உன்னதரின் அடைக்கலத்தில் இருப்பவனே, எல்லாம் வல்லவரின் நிழலில் வாழ்பவனே,

2 நீ ஆண்டவரை நோக்கி, "நீரே என் புகலிடம், நீரே என் அரண்: என் இறைவா, நான் உம்மை நம்பியுள்ளேன்" என்று சொல்.

3 ஏனெனில், வேடர்களின் கண்ணிகளினின்றும், கொடிய கொள்ளை நோயினின்றும் உன்னை அவரே விடுவிப்பார்.

4 தம் சிறகுகளால் உன்னைக் காப்பார்; அவருடைய இறக்கைகளுக்கடியில் அடைக்கலம் புகுவாய்; அவருடைய வார்த்தை உனக்குக் கேடயமும் கவசமும்போல் இருக்கும்.

5 இரவின் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.

6 இருளில் உலவும் கொள்ளை நோய், நண்பகலில் துன்புறுத்தும் ஆபத்து எதற்குமே நீ அஞ்ச வேண்டியதில்லை.

7 உன் அருகில் ஆயிரம் விழட்டும், உன் வலப்பக்கத்தில் பத்தாயிரம் விழட்டும்: உன்னை எதுவும் அணுகாது.

8 எனினும் உன் கண்ணாலேயே நீ காண்பாய்: பாவிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை நீயே பார்ப்பாய்.

9 உனக்கோ, ஆண்டவரே உன் புகலிடம்: உன்னதமானவரையே நீ உனக்குப் பாதுகாப்பு அரணாகக் கொண்டாய்.

10 தீமை உன்னை அணுகாது: துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது.

11 ஏனெனில், நீ செல்லும் இடங்களில் எல்லாம், உன்னைக் காக்கும்படி தம் தூதருக்கு உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்.

12 உன் கால் கல்லில் மோதாதபடி, அவர்கள் உன்னைக் கைகளில் தாங்கிக் கொள்வார்கள்.

13 நச்சுப் பாம்பின் மீதும், விரியன் பாம்பின் மீதும் நடந்து செல்வாய்: சிங்கத்தையும் பறவை நாகத்தையுமே மிதித்துப் போடுவாய்.

14 அவன் என்னையே சார்ந்திருப்பதால், அவனை விடுவிப்பேன்.

15 என் பெயரை அறிந்ததால், அவனைக் காப்பாற்றுவேன்; என்னை நோக்கிக் கூப்பிடுவான்; அவன் செபத்தைக் கேட்பேன்: துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்; அவனைத் தப்புவித்து பெருமைப்படுத்துவேன்.

16 நீடிய வாழ்வினால் அவனுக்கு மன நிறைவு தருவேன்: என் மீட்பினை அவனுக்குக் காட்டுவேன்.

அதிகாரம் 091


1 ஆண்டவரைப் புகழ்வது நல்லது: உன்னதமானவரே, உம் திருப்பெயருக்குப் புகழ் பாடுவது நல்லது.

2 காலையில் உம் இரக்கத்தையும், இரவெல்லாம் உம் பிரமாணிக்கத்தையும் எடுத்துரைப்பது நல்லது.

3 பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும் யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது.

4 ஏனெனில் ஆண்டவரே, உம் செயல்களால் எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர். உம் திருக்கரப் படைப்புகளைக் குறித்து நான் அக்களிக்கிறேன்.

5 ஆண்டவரே, உம் செயல்கள் எவ்வளவு மகத்தானவை! உம் நினைவுகள் எவ்வளவு ஆழ்ந்தவை!

6 அறிவீனன் இவற்றை அறிவதில்லை; மூடன் இவற்றை உணர்வதில்லை.

7 பாவிகள் புற்பூண்டுகளைப் போல் தழைத்தாலும், தீமை செய்வோர் அனைவரும் செழித்தோங்கினாலும், நித்திய அழிவுக்குத் தான் குறிக்கப் பட்டுள்ளனர்.

8 நீரோ ஆண்டவரே, என்றுமே உயர்ந்தவர்.

9 ஏனெனில் ஆண்டவரே, இதோ எதிரிகள் ஒழிந்து போவர்; இதோ உம் எதிரிகள் அழிந்துபோவர்: தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டு போவர்.

10 காட்டெருமையின் கொம்பிற்கொத்த வல்லமையை நீர் எனக்கு அளித்தீர்: புனிதமான எண்ணெயை என் மேல் பொழிந்தீர்.

11 அதனால் நான் என் எதிரிகளைப் புறக்கணித்தேன்: என்னை எதிர்த்து எழும் தீயவர்கள் பின் வாங்கினர் என்ற மகிழ்ச்சிச் செய்தி என் செவிகளில் விழுந்தது.

12 நீதிமான் பனையைப் போல் செழித்து வளர்வான்: லீபானின் கேதுரு மரம்போல் ஓங்கி வளர்வான்.

13 ஆண்டவருடைய இல்லத்திலும், நம் கடவுளின் ஆலய முற்றங்களிலும் நடப்பட்ட அவர்கள் செழிப்புற்று விளங்குவர்.

14 அவர்கள் முதிர்வயதிலும் பலனளிப்பர்: செழுமையும் கொழுமையும் கொண்டு விளங்குவர்.

15 என் அடைக்கலப் பாறையாகிய ஆண்டவர் எவ்வளவு நேர்மையுள்ளவர் என்றும், அவரிடத்தில் அநீதி இல்லையென்றும் பறைசாற்றுவர்.

அதிகாரம் 092


1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மகத்துவத்தை அவர் ஆடையாய் உடுத்தியுள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சைப் போல் அணிந்து கொண்டிருக்கிறார்; பூவுலகை அவர் நிலைப்படுத்தினார், அது அசைவுறாது.

2 ஆதியினின்றே உமது அரியணை நிலையாய் உள்ளது. ஆதியினின்றே நீரும் உள்ளீர்.

3 ஆண்டவரே, வெள்ளம் எழும்புகிறது, வெள்ளம் இரைச்சலுடன் எழும்புகிறது; பேரிரைச்சலுடன் எழும்புகிறது.

4 பெரு வெள்ளத்தின் இரைச்சலை விட ஆண்டவர் வலிமை கொண்டவர் கடலின் அலைகளை விட வலிமை உள்ளவர்: உன்னதத்தில் வலிமை பூண்டவர்.

5 உம்முடைய நியமங்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை: ஆண்டவரே, புனிதமே உமது இல்லத்திற்கு ஏற்றது, எந்நாளும் ஏற்றதே.

அதிகாரம் 093


1 ஆண்டவரே, நீர் பழிவாங்கும் இறைவன்: பழி வாங்கும் இறைவனே, உம் மாட்சி விளங்கச் செய்யும்.

2 உலகின் நீதிபதியே எழுந்தருளும்: செருக்குற்றோர்களுக்கு உரிய தண்டனையை விதித்திடுவீர்.

3 ஆண்டவரே, தீயோர் எதுவரையில் பெருமிதம் கொள்வர்? கொடியவர் எதுவரையில் செருக்கித் திரிவர்?

4 எதுவரையில் அவர்கள் ஆணவத்துடன் பேசி வாயாடுவர்? அக்கிரமம் செய்வோர் எதுவரையில் பெருமையடித்துக் கொள்வர் ?

5 ஆண்டவரே, உம் மக்களை அவர்கள் நசுக்குகின்றனர். உம் உரிமைப் பொருளான அவர்களை ஒடுக்குகின்றனர்.

6 விதவையையும் வழிப்போக்கனையும் கொல்லுகின்றனர்: திக்கற்றவர்களைச் சாகடிக்கின்றனர்.

7 ஆண்டவர் இதைப் பார்ப்பதில்லை: யாக்கோபின் இறைவன் இதைக் கவனிப்பதில்லை" என்று சொல்லிக் கொள்கின்றனர்.

8 மக்களிடையே அறிவிலிகளாயிப்பவர்களே, இதை உணர்ந்துகொள்ளுங்கள்: அறிவீனர்களே, உங்களுக்கு என்று ஞானம் பிறக்கும்?

9 செவியைக் கொடுத்தவர் கேளாமலிருப்பாரோ? கண்ணை உருவாக்கினவர் பாராமலிருப்பாரோ?

10 எல்லா நாட்டினருக்கும் அறிவூட்டுபவர் தண்டியாமலிருப்பாரோ? மக்களுக்கு அறிவு தருபவர் வாளாவிருப்பாரோ?

11 மனிதரின் எண்ணங்களை ஆண்டவர் அறிவார்: அவை வீண் எண்ணங்கள் என்று அவருக்குத் தெரியும்.

12 ஆண்டவரே, உம்மால் அறிவு புகட்டப்பெறுபவன் பேறு பெற்றவன்: உமது சட்டத்தைக் கொண்டு நீர் யாருக்குக் கற்பிக்கின்றீரோ அவன் பேறுபெற்றவன்.

13 அப்போது அவன் துன்ப நாளிலும் உம்மிடமிருந்து இளைப்பாற்றி அடைவான். தீயவனுக்கோ இறுதியாய்க் குழி வெட்டப்படும்.

14 ஆண்டவர் தம் மக்களைப் புறக்கணிப்பதில்லை: தம் உரிமைப் பொருளானவர்களைக் கைவிடுவதில்லை.

15 நீதிமான்கள் நீதித் தீர்ப்பையே பெறுவர்: நேரிய மனத்தோர் யாவரும் அதையே பின்பற்றுவர்.

16 எனக்குத் தீமை செய்வோரை எதிர்ப்பது யார்? என் சார்பாய் எழுந்து பேசுவது யார்? தீமை செய்வோரை எதிர்த்து என் சார்பாகப் பேசுவது யார்?

17 ஆண்டவர் எனக்குத் துணை செய்திராவிடில், விரைவாகவே என் ஆன்மா கீழுலகம் சென்றிருக்கும்.

18 இதோ, என் நடை தள்ளாடுகிறது" என்று நான் நினைக்கையில், ஆண்டவரே, உம் அருள் என்னைத் தாங்குகிறது.

19 என் இதயத்தில் கவலைகள் மிகும் வேளையில், உமது ஆறுதல் என் ஆன்மாவை இன்பத்தில் ஆழ்த்துகிறது.

20 அநீதத் தீர்ப்பளிப்பவர்கள் உம்மோடு தொடர்பு கொள்வரோ? சட்டம் என்ற பெயரால் தொல்லை கொடுப்பவரோடு உமக்கு ஏது தொடர்பு?

21 நீதிமான்களின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கின்றனர்: மாசற்றவனின் இரத்தத்தைச் சிந்துகின்றனர்.

22 ஆனால் ஆண்டவர் எனக்கு அசையாத அரண்: என் இறைவன் எனக்கு அடைக்கலப் பாறை.

23 அவர்கள் செய்த தீமை அவர்கள் மேலேயே விழச் செய்வார்; அவர்களுடைய வஞ்சகத்தின் பொருட்டு அவர்களையே அழித்து விடுவார்: ஆண்டவராகிய நம் இறைவன் அவர்களை ஒழித்து விடுவார்.

அதிகாரம் 094


1 வாருங்கள், ஆண்டவர்க்குப் புகழ் பாடுவோம்: மீட்பளிக்கும் பாறையாம் அவருக்கு அக்களிப்புடன் பாடுவோம்.

2 புகழ்ப்பாக்கள் இசைத்துக் கொண்டு அவர் திருமுன் செல்வோம்: இன்னிசைப் பாடல்களுடன் அவர் முன்னிலையில் அகமகிழ்வோம்.

3 ஏனெனில், ஆண்டவர் மகத்துவமிக்க கடவுள்: தேவர் அனைவருக்கும் பேரரசர்.

4 பூமியின் ஆழ்ந்த பகுதிகள் அவர் கையில் உள்ளன. உன்னத மலைகளும் அவருக்கு உரியவையே.

5 கடலும் அவருடையதே, அவரே அதைப் படைத்தவர்: உலர்ந்த தரையும் அவருடையது, அவர் கரங்களே அதை உருவாக்கின.

6 வாருங்கள் ஆராதிப்போம், தெண்டனிடுவோம், வணங்குவோம்: நம்மைப் படைத்த ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம்.

7 அவரே நம் கடவுள், நாமோ அவரால் மேய்க்கப்படும் மக்கள், அவர் அரவணைப்பிலுள்ள மந்தை: இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களா? அக்குரல் கூறுவதாவது:

8 அன்று மெரிபாவிலும் பாலை வெளியில் மாசாவிலும் நிகழ்ந்ததுபோல், உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

9 அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தனர்: என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதனைக்குட்படுத்தினர்.

10 நாற்பது ஆண்டளவாக இற்த மக்களை நான் பொறுத்துக் கொண்டேன்: தவறிழைக்கும் இதயமுள்ள மக்கள் இவர்கள் என் வழிகளை அறியவில்லை.

11 எனவே என் இளைப்பாற்றியை அடைய மாட்டார்கள் என்று, சினமேலீட்டால் சபதம் செய்தேன்".

அதிகாரம் 095


1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.

2 ஆண்டவரைப் பாடுங்கள், அவர் பெயரை வாழ்த்துங்கள்: அவர் தரும் மீட்பை நாடோறும் அறிவியுங்கள்.

3 புற இனத்தாரிடையே அவரது மாட்சிமையை எடுத்துச் சொல்லுங்கள்: மக்கள் அனைவரிடையிலும் அவர்தம் வியத்தகு செயல்களைக் கூறுங்கள்.

4 ஏனெனில், மாண்பு மிக்கவர் ஆண்டவர், மிகு புகழ்ச்சிக்குரியவர்: தெய்வங்கள் அனைத்தையும் விட அச்சத்துக்குரியவர்.

5 ஏனெனில், புற இனத்தார் தெய்வங்களெல்லாம் வெறுமையே: ஆண்டவரோ வானங்களைப் படைத்தவர்.

6 மகத்துவமும் மேன்மையும் அவர்முன் செல்லும்: வல்லமையும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன.

7 மக்கள் இளத்தோரே, ஆண்டவருக்குச் செலுத்துங்கள்: மகிமையும் வல்லமையும் ஆண்டவருக்குச் செலுத்துங்கள்.

8 அவரது பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: பலிப்பொருளை ஏந்தி அவர்தம் ஆலய முற்றங்களில் செல்லுங்கள்.

9 திருவுடை அணிந்து ஆண்டவரை வணங்குங்கள்: மாநிலமே நீ அவர் முன் நடுங்குவாயாக.

10 மாநிலத்தோரே, நீங்கள் புறவினத்தாரிடையே அறிவியுங்கள்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகை அவர் நிலை நிறுத்தியுள்ளார். அது அசைவுறாது: மக்களை அவர் நேர்மையுடன் ஆள்கின்றார்.

11 வானங்கள் மகிழட்டும், பூவுலகம் களிகூரட்டும்: கடலும் அதில் வாழ்வனவும் ஆரவாரம் செய்யட்டும்.

12 வயல் வெளியும் அதில் உள்ள அனைத்தும் ஆர்ப்பரிக்கட்டும்: காட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் அப்போது ஆண்டவர் முன் மகிழ்ச்சியுறும்.

13 ஏனெனில், அவர் வருகின்றார்: பூவுலகை ஆட்சி செய்ய வருகின்றார், பூவுலகை அவர் நீதியுடன் ஆட்சி செய்வார்: மக்களை அவர் தம் சொல்லுறுதியால் ஆள்வார்.

அதிகாரம் 096


1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: பூவுலகு களிகூர்வதாக! தீவுகள் எல்லாம் அகமகிழட்டும்!

2 மேகமும் இருளும் அவரைச் சூழ்ந்துள்ளன: நீதியும் நேர்மையும் அவரது அரியணைக்கு அடிப்படை.

3 அவருக்குமுன் செல்வது நெருப்பு: சுற்றிலுமுள்ள எதிரிகளை அது எரித்து விடுகிறது.

4 அவர் விடுக்கும் மின்னல்கள் பூவுலகுக்கு ஒளி வீசும்: அதைக் கண்டு பூவுலகம் நடுங்குகிறது.

5 பூவுலகனைத்தையும் ஆளும் ஆண்டவர் முன்னே, மலைகள் மெழுகு போல் உருகுகின்றன.

6 வானங்கள் அவரது நீதியை எடுத்துரைக்கின்றன: உலக மக்களனைவரும் அவரது மகிமையைக் காண்கின்றனர்.

7 சிலைகளை வழிபடுவோர், அவற்றில் பெருமை கொள்வோர் யாவரும் அவற்றில் நாணம் அடைகின்றனர்; அவர் முன்னிலையில் தெய்வங்களெல்லாம் குப்புற விழுகின்றன.

8 இதைக்கேட்டு, சீயோன் மகிழ்கின்றது: ஆண்டவரே, உமது தீர்ப்புகளை முன்னிட்டே யூதாவின் நகரங்கள் களிகூர்கின்றன.

9 ஏனெனில் ஆண்டவரே, நீர் பூவுலகனைத்தையுமே ஆளும் உன்னதர்: தெய்வங்களனைத்திற்கும் மேலானவர்.

10 தீமையை வெறுப்பவர்கள் மீது ஆண்டவர் அன்பு கூருகின்றார்: தம் புனிதர்களின் ஆன்மாக்களைக் காக்கின்றார்; தீயவர்களின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.

11 நீதிமானுக்கு ஒளி எழுகின்றது: நேரிய உள்ளத்தவர்க்கு மகிழ்ச்சி பிறக்கின்றது.

12 நீதிமான்களே, ஆண்டவரை நினைந்து அகமகிழுங்கள்: அவரது திருப்பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.

அதிகாரம் 097


1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: வியத்தகு செயல்களை அவர் செய்துள்ளார்; அவரது வலக்கரமும் புனித புயமும் அவருக்கு வெற்றியைக் கொணர்ந்தன.

2 ஆண்டவர் தமது மீட்பை வெளிப்படுத்தினார்: மக்கள் இனத்தார் காணத் தம் நீதியை அறிவித்தார்.

3 தமது நன்மைத் தனத்தையும் இஸ்ராயேல் இனத்தவர் சார்பாய்த் தாம் தந்த சொல்லுறுதியையும் அவர் நினைவுகூர்ந்தார்: மாநிலத்தின் எல்லைகள் யாவும் நம் இறைவன் தந்த மீட்பைக் கண்டன.

4 வையகத்தோரே, நீங்கள் ஆண்டவரை நினைத்து ஆர்ப்பரியுங்கள்: அகமகிழுங்கள், களிகூருங்கள், புகழ் பாடுங்கள்.

5 யாழ் இசைத்து ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: வீணையும் யாழும் இசைத்துப் பாடுங்கள்.

6 எக்காளமும் கொம்பும் ஊதி, ஆண்டவராகிய அரசரின் திருமுன் களிகூருங்கள்.

7 கடலும் அதில் வாழ்வனவும் ஆர்ப்பரிக்கட்டும்: பூவுலகும் அதில் வாழ்வோரும் உளம் பூரிக்கட்டும்.

8 பெருவெள்ளங்கள் கைகொட்டட்டும்: ஆண்டவர் எழுந்தருளும் போது மலைகளும் ஆரவாரம் செய்யட்டும்.

9 ஏனெனில், அவர் வருகின்றார், பூவுலகை ஆட்சி செய்ய வருகின்றார். நீதியுடன் பூவுலகை அவர் ஆள்வார்: மக்களினத்தாரை அவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.

அதிகாரம் 098


1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மக்களினத்தார் நடுங்குகின்றனர்: கெருபீம்கள் மீது அமர்ந்திருக்கின்றார்; பூமியோ அசைவுறுகின்றது.

2 சீயோனில் ஆண்டவர் மாட்சியோடு விளங்குகின்றார்: மக்களனைவர் மீதும் உயர்ந்துள்ளார்.

3 அவர்களனைவரும் மாண்புமிக்க உமது பெயரை, அச்சத்துக்குரிய உமது பெயரைப் போற்றிப் புகழ்வார்களாக: புனிதமானது அத்திருநாமம்.

4 நீதி நேர்மையை நேசிப்பவர் வல்லமையோடு ஆட்சி செய்கின்றார்: நேர்மையானவற்றை நீர் உறுதிப்படுத்தினீர்; யாக்கோபின் இனத்தாரிடையில் நீதி நியாயத்தை வழங்குகிறீர்.

5 நம் ஆண்டவராகிய இறைவனைப் போற்றிப் புகழுங்கள்: அவருடைய கால் மணையில் விழுந்து பணியுங்கள்; அவர் பரிசுத்தர்.

6 மோயீசனும் ஆரோனும் அவர் அமைத்த குருகுலத்தைச் சார்ந்தவர்: அவருடைய பெயரைக் கூவியழைப்பவர்களுள் சாமுவேலும் உள்ளார். ஆண்டவரை அவர்கள் கூவியழைத்தார்கள்: அவர் அவர்களுடைய மன்றாட்டுக்குச் செவி சாய்த்தார்.

7 மேகத் தூணிலிருந்து அவர்களிடம் பேசினார்: அவர் அவர்களுக்குத் தந்த கற்பனைகளையும் கட்டளையையும் அவர்கள் செவியுற்றனர்.

8 ஆண்டவரே, எம் இறைவா, நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; இறைவனே, நீர் அவர்களுக்கு மன்னிப்பளிக்கும் இறைவனாயிருக்கின்றீர். ஆயினும் அவர்களுடைய தீச்செயல்களுக்குப் பழிவாங்கினீர்.

9 நம் ஆண்டவராகிய இறைவனைப் புகழ்ந்து போற்றுங்கள், அவருடைய திருமலையில் வீழ்ந்து பணியுங்கள்: ஏனெனில், நம் இறைவனாகிய ஆண்டவர் பரிசுத்தர்.

அதிகாரம் 099


1 மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் அக்களிப்போடு ஆண்டவரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

2 மகிழ்ச்சியுடன் அவருக்கு ஊழியஞ்செய்யுங்கள்: பெரு மகிழ்ச்சியுடன் அவர் திருமுன் செல்லுங்கள்.

3 ஆண்டவரே கடவுள் என்று அறியுங்கள்: அவரே நம்மை உண்டாக்கினவர். அவருக்கே நாம் சொந்தம்: அவருடைய மக்கள் நாம், அவருடைய மந்தையின் ஆடுகள் நாம்.

4 புகழ்ப்பா இசைத்து அவருடைய வாயிலில் நுழையுங்கள்; இன்னிசையுடன் அவருடைய முற்றங்களில் நில்லுங்கள்: அவரைப் போற்றிப் புகழுங்கள், அவருடைய பெயரை வாழ்த்துங்கள்.

5 ஏனெனில் ஆண்டவர் நல்லர், அவர் இரக்கம் என்றென்றுமுள்ளது: அவருடைய வார்த்தை தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கும்.

அதிகாரம் 100


1 உமது அருளையும், நீதியையும் புகழ்ந்து பாடுவேன்; ஆண்டவரே, உமக்குக் கீதம் இசைப்பேன்.

2 நல்லார் ஒழுகிய நெறியில் நான் நடப்பேன்: என்னிடம் எப்போது வருவீர்? என் நடத்தையில் இதய நேர்மை விளங்கும்: என் இல்லத்திலே நான் மாசற்றவனாய் இருப்பேன்.

3 அநீதியானதெதையும் என் மனத்தில் கொள்ள மாட்டேன்; நெறி பிறழ்ந்தவர்களை நான் வெறுக்கிறேன்: அவர்கள் என்னோடு சேர மாட்டார்கள்.

4 முறை கெட்ட நெஞ்சம் எனக்கு வெகு தொலைவிலிருக்கும்: தீமையானதை நான் ஏற்கவே மாட்டேன்.

5 தன் அயலானுக்கு மறைவில் தீங்கிழைப்பவன் எவனோ. அவனை ஒழிப்பேன்: கர்வ மிக்க பார்வையும், இதயச் செருக்கும் உள்ளவன் எவனோ அவனை நான் பொறுக்க மாட்டேன்.

6 பூமியில் வாழும் விசுவாசிகள் மீது என் பார்வை தங்குகிறது: அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; நல்லார் ஒழுகிய நெறியில் நடப்பவன் எவனோ, அவன் எனக்குப் பணி புரிவான்.

7 வஞ்சக நடத்தையுள்ளவன் என் வீட்டில் குடியிரான்: பொய் செல்பவன் என் கண் முன்னே நிலை குலைந்து போவான்.

8 நாட்டில் வாழும் பாவிகள் அனைவரையும் ஒவ்வொரு நாளுமே அழித்துவிடுவேன்: தீமை இழைப்போர் அனைவரையும் ஆண்டவருடைய நகரினின்று ஒழித்து விடுவேன்.

அதிகாரம் 101


1 ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.

2 இடுக்கண் உற்ற நாளில் உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதேயும்: என் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும்; உம்மைக் கூவியழைக்கும் போது விரைவாக என் வேண்டுதலைக் கேட்டருளும்.

3 ஏனெனில், என் வாழ்நாள் புகை போல் மறைகின்றது: என் எலும்புகள் நெருப்புப் போல் எரிகின்றன.

4 என் இதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலருகின்றது: உணவு உண்ணவும் நான் மறந்து போகிறேன்.

5 நான் வெகுவாய்ப் புலம்புகிறேன்: அதனால் என் எலும்புகள் தோலோடு ஒட்டிக் கொள்கின்றன.

6 பலைவனத்தில் இருக்கும் பெலிக்கானுக்கு நான் ஒப்பானேன்: பாழடைந்த இடத்தில் உலவும் ஆந்தை போலானேன்.

7 கூரைமீது, தனித்தமர்ந்த பறவைப் போல், தூக்கமின்றிப் புலம்புகின்றேன்.

8 என் எதிரிகள் என்னை எந்நேரமும் பழிக்கின்றனர்: என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் என் பெயரைச் சொல்லிச் சபிக்கின்றனர்.

9 சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: நான் குடிக்கும் பானம் என் கண்ணீரோடு கலந்துள்ளது.

10 உமது வெகுளிக்கும் வெஞ்சினத்துக்குமுன் நடுங்குகின்றேன்: ஏனெனில் என்னை வெகுவாய் உயர்த்தினீர், பின்னர் தூக்கி எறிந்து விட்டீர்.

11 என்னுடைய வாழ்நாள் மாலை நிழலுக்கு ஒப்பாயிற்று: நானும் புல்லைப்போல் உலருகின்றேன்.

12 நீரோ ஆண்டவரே, என்றென்றும் நிலைத்துள்ளீர்: உமது பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.

13 நீர் எழுந்து சீயோனுக்கு இரக்கம் காட்டும்: அதன் மீது இரக்கம் காட்ட காலம் வந்தது; இதோ ஏற்ற வேளை வந்துள்ளது.

14 அதன் கற்கள் மீது உம் ஊழியர் பற்றுக் கொண்டுள்ளனர்: அதன் அழிவை நினைத்துத் துயருகின்றனர்.

15 ஆண்டவரே, புற இனத்தார் உமது பெயரைக் கேட்டு அச்சம் கொள்வர்; மாநிலத்து அரசர்கள் அனைவரும் உமது மாட்சிமை கண்டு மருள்வர்.

16 ஆண்டவர் சீயோனை மீளவும் எழுப்பும் போது, நம் மாட்சிமையில் அவர் விளங்கும் போது,

17 எளியோர் செய்யும் செபத்தைத் தள்ளாமல் செவியேற்பார்: அவர்களுடைய வேண்டுதலைப் புறக்கணியார்.

18 பின் வரும் சந்ததிக்கென இதெல்லாம் எழுதப்படட்டும்: உருவாகி வரும் மக்கள் ஆண்டவரைப் புகழ்வார்களாக.

19 சிறைப்பட்டவர்களின் புலம்புதல்களைக் கேட்கவும், சாவுக்கனெ குறிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும்,

20 உன்னதங்களிலுள்ள தம் திருத்தலத்தினின்று ஆண்டவர் தம் பார்வையைத் திருப்பினார்: வானினின்று வையகத்தை நோக்கினார்.

21 இவ்வாறு ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் படி மக்களினங்கள். அரசுகள் அனைத்தும் ஒன்றாய்க் கூடும் போது,

22 ஆண்டவருடைய திருப்பெயர் சீயோனில் போற்றப்படும்: அவருடைய புகழ் யெருசலேமிலும் சாற்றப்படும்.

23 பாதி வழியில் என் பலத்தை எடுத்துவிட்டார்: என் வாழ்நாளைக் குறுக்கி விட்டார்.

24 நானோ வேண்டுதல் செய்தது: "என் இறைவா, என் வாழ்நாளின் பாதியில் என்னை எடுத்து விடாதீர்: உம் காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ!"

25 ஆதியிலே நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்: வானங்கள் உம் கைவேலை. இவையெல்லாம் அழிந்துவிடும், நீரோ நிலைநிற்பீர்: அனைத்துமே ஆடையைப் போல் பழமையடையும், துணிமணி போல் நீர் அவற்றை மாற்றுகிறீர்; அவையும் மாறிப்போம்.

26 நீரோவெனில் ஒரே நிலையாய் உள்ளீர்: உம் காலத்துக்கு முடிவே இல்லை.

27 உம் ஊழியரின் மக்கள் அச்சமின்றி வாழ்வார்கள்: அவர்கள் மக்கள் உம் முன்னே நிலைத்திடுவர்.

அதிகாரம் 102


1 நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: என் அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக!

2 நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே.

3 அவர் உன் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறார்: உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.

4 உன் உயிரை அழிவினின்று மீட்கிறார்: அருளையும் இரக்கத்தையும் உனக்கு முடியாகச் சூட்டுகிறார்.

5 நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபடுத்துகிறார்: கழுகுகளின் இளமையைப் போல் உன் இளமையைப் புதுப்பிக்கிறார்.

6 நீதிமிக்க செயல்களைப் புரிகிறார் ஆண்டவர்: துன்புற்றோர் யாவருக்கும் நீதி வழங்குகிறார்.

7 மோயீசனுக்குத் தம் வழிகளை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குத் தம் செயல்களை விவரிக்கச் செய்தார்.

8 ஆண்டவர் அன்பும் அருளும் மிக்கவர்: சினங்கொள்ளத் தாமதிப்பவர்; சாந்தமுடையவர்.

9 ஓயாமல் கடிந்து கொள்பவரல்லர்; எந்நேரமும் கோபங் காட்டுபவரல்லர்.

10 நம்முடைய பாவங்களுக்கு ஏற்றபடி நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்குத் தக்கபடி நம்மைத் தண்டிப்பதில்லை.

11 ஏனெனில், வானுலகம் பூவுலகிற்கு எவ்வளவு உயர்ந்துள்ளதோ, அவ்வளவுக்கு அவர் தமக்கு அஞ்சி நடப்பவர்களுக்குத் தயவு காண்பிக்கிறார்.

12 கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்குமிடையே எவ்வளவு தொலையுள்ளதோ, அவ்வளவு தொலைவுக்கு அவர் நம் பாவங்களை நம்மிடமிருந்து அகற்றி விடுகிறார்.

13 தந்தை தம் மக்களுக்கு அன்பு காட்டுவது போல, ஆண்டவர் தமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காட்டுகிறார்.

14 ஏனெனில், அவர் நம்முடைய நிலைமையை நன்றாய் அறிந்திருக்கிறார்: நாம் தூசிக்குச் சமம் என்பது அவருக்குத் தெரியாமலில்லை.

15 மனிதனின் வாழ்நாள் புல்லைப் போன்றது: வயல்வெளிப் பூக்களைப் போல் அவன் மலர்கிறான்;

16 காற்றடித்ததும் அது வதங்கி விடுகிறது: இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுகிறது.

17 ஆண்டவருடைய இரக்கமோ அவருக்கு அஞ்சி நடப்போர் மீது என்றென்றும் நிலைநிற்கும்: அவருடைய நீதியோ தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.

18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போர் மேலும், கட்டளைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பின்பற்றுவோர் மேலும் அவர் நீதி நிலைகொள்ளும்.

19 ஆண்டவர் வானுலகில் தமது அரியணையை ஏற்படுத்தினார்: அனைத்தின் மீதும் அவர் ஆட்சி புரிகிறார்.

20 வானதூதர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் ஆண்டவரின் வல்லமையுள்ள தூதர்களே, அவரை வாழ்த்துங்கள்.

21 ஆண்டவருடைய திருவுளப்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, அவரைப் போற்றுங்கள்: அவருடைய சேனைகளே, அவரை வாழ்த்துங்கள்!

22 ஆண்டவருடைய படைப்புகளே, அவருடைய ஆளுகை செல்லுகிற இடமெல்லாம் அவரை வாழ்த்துங்கள்: நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக!

அதிகாரம் 103


1 நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக! ஆண்டவரே, என் இறைவா, நீர் எத்துணை உயர்ந்தவர்!

2 மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கிறீர்: ஒளியை நீர் போர்வையாகக் கொண்டுள்ளீர்; வானத்தை நீர் கூடாரம் போல் விரித்திருக்கிறீர்.

3 வெள்ளத்தின்மேல் உம் உறைவிடத்தை அமைத்திருக்கிறீர்; மேகங்களை நீர் தேராகக் கொண்டிருக்கிறீர்: காற்றை நீர் இறக்கை எனக் கொண்டு செல்கிறீர்.

4 காற்றே உம் தூதர்கள்: எரியும் நெருப்பே உம் ஊழியர்.

5 பூமியை நீர் அடித்தளத்தின்மேல் அமைத்தீர்: அது எந்நாளும் அசையவே அசையாது.

6 கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கிறீர்: வெள்ளப்பெருக்கு மலைகளையும் மூடியிருக்கும்படி செய்தீர்.

7 நீர் கண்டிக்கவே அவை விலகி ஓடின: இடிபோல் நீர் முழங்க அவை அச்சத்தால் மயங்கின.

8 நீர் நியமித்த இடத்தில் மலைகள் உயர்ந்து எழுந்தன: பள்ளத்தாக்குகள் பணிந்து இறங்கின.

9 நீர் குறித்த எல்லையை அவைகள் கடக்காமல் இருக்கச் செய்தீர்: மீளவும் அவை பூமியை மூழ்கடிக்காதபடி இவ்வாறு செய்தீர்.

10 நீரூற்றுகள் ஆறுகளாய்ப் பெருக்கெடுக்கக் கட்டளை இடுகிறீர்: அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர்.

11 வயல்வெளிகளில் வாழும் விலங்குகள் தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுத்தீர்: காட்டுக் கழுதைகள் தங்கள் தாகத்தை அங்கே தான் தீர்த்து கொள்கின்றன.

12 அவற்றினருகே தான் வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன: மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன.

13 தம் உள்ளத்திடத்திலிருந்து மலைகள் மீது நீர் பாயச் செய்கிறீர்: உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது.

14 கால்நடைகள் உண்ணப் புல் முளைக்கச் செய்கிறீர்: மனிதருக்குப் பயன்படப் பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர். இவ்வாறு நிலத்தினின்று மனிதர் உணவுப் பொருள் விளையச் செய்யவும்.

15 மனிதன் மகிழ்ச்சியுற, உள்ளம் மகிழச் செய்யும் திராட்சை இரசம் உண்டாகச் செய்யவும் முடிந்தது: முகத்துக்கு களை தரும் எண்ணெயும், உள்ளத்திற்கு உரம் தரும் உணவையும் அவன் விளையச் செய்கிறான்.

16 ஆண்டவர் நட்ட மரங்களுக்கு நிறைய நீர் கிடைக்கிறது: லீபானில் அவர் நட்ட கேதுரு மரங்கள் செழித்து வளருகின்றன.

17 அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன: தேவதாரு மரங்கள் கொக்குகளின் குடியிருப்பாயிருக்கின்றன.

18 உயர்ந்த மலைகள் மலை ஆடுகளுக்கும், கல் மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம் தருகின்றன.

19 காலத்தைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்: கதிரவன் தான் மறையும் நேரத்தை அறிந்திருக்கிறான்.

20 இருள் படர்ந்து இரவு தோன்றச் செய்கிறீர்: அப்போது காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் நடமாடும்.

21 சிங்கக் குட்டிகள் உணவைத் தேடியலையும்: கடவுளிடமிருந்து தம் உணவை எதிர்பார்க்கும்.

22 காலையில் கதிரவன் எழ, அவை தம் இருப்பிடங்களுக்குப் போய் மறைந்து கொள்கின்றன.

23 அப்போது மனிதன் மாலை மட்டும் வேலை செய்யப் புறப்படுகிறான்.

24 ஆண்டவரே, உம் வேலைப்பாடுகள், எத்தனை, எத்தனை! அனைத்தையும் நீர் ஞானத்தோடு செய்து முடித்தீர்: உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம்.

25 இதோ, பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்: அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.

26 அவற்றில் கப்பல்கள் ஓடுகின்றன; அவற்றில் விளையாடத் திமிலங்களையும் நீர் படைத்தீர்.

27 இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன: தக்க காலத்தில் உணவளிப்பீர் என்று எதிர்பார்க்கின்றன.

28 நீர் கொடுக்க, அவை பெற்றுக்கொள்கின்றன: நீர் உமது கையைத் திறக்க அவை நலன்களால் நிறைவுறுகின்றன.

29 உம் முகத்தை நீர் மறைத்துக் கொண்டால், அவை தத்தளிக்கும். அவற்றின் மூச்சை நீர் நிறுத்தி விட்டால் அவை மடிந்து மறுபடியும் மண்ணாகி விடும்.

30 உமது ஆவியை நீர் அனுப்பினால் அவை படைக்கப்படும்: உலகனைத்தும் புத்துயிர் பெறும்.

31 ஆண்டவருடைய மாட்சிமை என்றென்றும் விளங்குவதாக; தம் படைப்புகளைக் குறித்து ஆண்டவர் மகிழ்வாராக.

32 பூமியின் மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது அதிரும்: மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும்.

33 உயிருள்ள வரை நான் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவேன்: வாழ்நாளெல்லாம் என் இறைவனுக்குப் புகழ் பாடுவேன்.

34 என் புகழுரை அவருக்கு இனியதாய் இருப்பதாக: நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.

35 பாவிகள் பாரினின்று எடுபடுவார்களாக; தீயோர்கள் இனி இல்லாதொழிவார்களாக: நெஞ்சே ஆண்டவரை நீ வாழ்த்துவாயாக!

அதிகாரம் 104


1 அல்லேலூயா! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் திருப்பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: எல்லா இனத்தாரும் அவருடைய செயல்களை அறியச் செய்யுங்கள்.

2 அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்; இசைக் கருவி மீட்டுங்கள்: அவர் செய்த வியத்தகு செயல்களையெல்லாம் பறைசாற்றுங்கள்.

3 அவரது திருப்பெயரை நினைத்துப் பெருமைப்படுங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் உள்ளம் மகிழ்வதாக.

4 ஆண்டவரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்: அவரது திருமுகத்தை என்றும் தேடுங்கள்.

5 ஆண்டவருடைய ஊழியராகிய ஆபிரகாமின் வழித்தோன்றல்களே, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய யாக்கோபின் மக்களே,

6 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்: அவருடைய புதுமைகளையும் அவர் உரைத்த நீதித் தீர்ப்புகளையும் நினைவு கூருங்கள்.

7 ஆண்டவரே நம் கடவுள்: அவர் ஆட்சி உலகெங்கும் பரவியுள்ளது.

8 நம் உடன்படிக்கையை அவர் என்றென்னும் நினைவுகூர்கின்றார்: ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் தாம் அளித்த வாக்குறுதியை அவர் நினைவு கூர்கின்றார்.

9 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையை அவர் மறக்கவில்லை ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையை அவர் மறக்கவில்லை.

10 'கானான் நாட்டை உங்களுக்கு உரிமையாக்குவேன்' என்று சொல்லி,

11 யாக்கோபுக்கு அவர் தந்த உறுதியான நியமத்தை, இஸ்ராயேலுடன் அவர் செய்த நித்திய உடன்படிக்கையை அவர் மறக்கவில்லை.

12 அவர்கள் எண்ணிக்கையில் சிலராயிருந்த போதும், அச்சிலர் அந்நியராக இருந்த போதும்.

13 பற்பல இனத்தாரிடையே அவர்கள் அலைந்த போதும், நாடு நாடாய் அவர்கள் சுற்றித் திரிந்த போதும்.

14 யாரும் அவர்களைத் துன்புறுத்த அவர் விடவில்லை: அவர்களின் பொருட்டு அரசர்களைத் தண்டித்தார்.

15 நான் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்: என் வாக்குரைப்போருக்குத் தீங்கு இழைக்காதீர்கள்" என்றுரைத்தார்.

16 நாட்டில் பஞ்சத்தை வரவழைத்தார்: உணவுப் பொருட்களனைத்தையும் எடுத்து விட்டார்.

17 ஆனால் அதற்கு முன், அடிமையாக விற்கப்பட்ட சூசையை அனுப்பி வைத்தார்.

18 அவருடைய கால்களுக்கோ விலங்குகள் இடப்பட்டன: அவருடைய கழுத்துக்கு இருப்புத்தளை இடப்பட்டது.

19 நாளடைவில் அவர் சொன்னது நிறைவேறியது: ஆண்டவருடைய வார்த்தை உண்மையென எண்பிக்கப்பட்டது.

20 அரசன் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தான்: நாட்டின் மன்னன் அவருக்கு விடுதலையளித்தான்.

21 தன் இல்லத்திற்கு அவரைத் தலைவராக்கினான்: தன் உடைமை அனைத்தின் மீதும் அவருக்கு அதிகாரமளித்தான்.

22 இங்ஙனம் சூசை தன் விருப்பம் போல் அரச அலுவலருக்கு அறிவு புகட்டவும், முதியோருக்கு ஞானத்தைக் கற்பிக்கவும் அரசன் அவரை நியமித்தான்.

23 அதன்பின் இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் நுழைந்தனர்: காம் நாட்டில் யாக்கோபின் இனத்தார் குடியேறினர்.

24 தம் மக்கள் பெரிதும் பெருகச் செய்தார்: எதிரிகளை விட அவர்களை வல்லவர்களாக்கினார்.

25 தம் மக்கள் மீது வெறுப்புண்டாகும் அளவுக்கு எதிரிகளின் மனத்தை மாற்றினார்: தம் ஊழியரிடம் அவர்கள் வஞ்சகம் காட்டச் செய்தார்.

26 அதன் பின் தம் ஊழியன் மோயீசனை அனுப்பினார்: தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.

27 அவர் சொன்ன செயல்களை அடையாளமாகச் செய்தனர்: காமின் நாட்டில் புதுமைகளைப் புரிந்தனர்.

28 அவர் இருளை அனுப்ப எங்கும் இருள் படர்ந்தது: ஆனால் எகிப்தியர் அவரது வார்த்தையை ஏற்கவில்லை.

29 நாட்டின் நீர் நிலைகளை இரத்தமாக மாற்றினார்: அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.

30 நாடெங்கும் தவளைகள் நிரம்பச் செய்தார்: அரச மாளிகையின் உள்ளறைகளுக்கும் அவை போகச் செய்தார்.

31 அவர் ஒரு வார்த்தை சொல்ல, ஈக்கள் படையெடுத்தன: எங்கும் பூச்சிகள் வந்து நிரம்பின.

32 மழைக்குப் பதிலாகக் கல் மழை பெய்யச் செய்தார்: இடியும் மின்னலும் எங்கும் உண்டாயிற்று.

33 அவர்களுடைய திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் முறியச் செய்தார்: மரங்களெல்லாம் சாய்ந்து விழுந்தன.

34 மீளவும் ஒரு வார்த்தை சொன்னார்: வெட்டுக்கிளிகளும் பூச்சிகளும் கணக்கின்றி எழுந்தன.

35 அவை நாட்டிலுள்ள செடி கொடிகளையெல்லாம் அரித்து விட்டன: வயல்களில் விளைந்த விளைச்சல் யாவற்றையும் தின்று விட்டன.

36 நாட்டிலுள்ள முதற் போறான யாவரையும் வதைத்தார்: அவர்கள் ஈன்ற தலைப் பேறான மக்கள் யாவரையும் வதைத்தொழித்தார்.

37 வெள்ளியோடும் பொன்னோடும் அவர்கள் வெளியேறச் செய்தார். அவர்களின் கோத்திரங்களில் வலிமையற்றவர் எவருமில்லை.

38 அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர்கள் அகமகிழ்ந்தனர்: ஏனெனில், அவர்கள் பொருட்டுப் பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

39 அவர்களுக்கு நிழல் தர மேகத்தைப் பரப்பினார்: இரவில் ஒளி தர நெருப்பைத் தந்தார்.

40 அவர்கள் உணவு கோர, காடைகள் வரச் செய்தார்: வானினின்று வந்த உணவால் அவர்களுக்கு நிறைவளித்தார்.

41 அவர் பாறையைப் பிளக்கத் தண்ணீர் புறப்பட்டது: அது பாலைவெளியிலே ஆறு போல் ஓடியது.

42 ஏனெனில், தம்முடைய திருவாக்கை அவர் நினைவு கூர்ந்தார்: தம் ஊழியன் ஆபிரகாமுக்குச் சொன்னதை அவர் மறக்கவில்லை.

43 பெருமகிழ்ச்சியிடையே தம் மக்களை வெளியேற்றினார்: தாம் தேர்ந்தெடுத்தவர்களை அக்களிப்பிடையில் கூட்டிச் சென்றார்.

44 வேற்றினத்தார் நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார். அந்நாட்டினரின் செல்வங்களை அவர்கள் கைப்பற்றச் செய்தார்.

45 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவரது சட்டத்தின்படி ஒழுகவுமே இப்படிச் செய்தார். அல்லேலூயா.

அதிகாரம் 105


1 அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில், அவர் நன்மை மிகுந்தவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.

2 ஆண்டவர் செய்த வல்லமை மிக்க செயல்களை யார் எடுத்துரைக்க இயலும்? அவருடைய புகழனைத்தையும் யார் விளம்ப இயலும்?

3 அவர் தந்த கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் பேறு பெற்றோர்: நீதியானதை எந்நாளும் செய்பவர் பேறு பெற்றோர்.

4 ஆண்டவரே, நீர் உம் மக்களின் மீது காட்டிய கருணைக்கேற்ப என்னை நினைவுகூரும்: உமது உதவியை எனக்குத் தாரும்.

5 அப்போது உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்குள்ள பெரும் பேற்றைக் கண்டு நான் இன்புறுவேன்: உம் மக்களின் மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சியுறுவேன்; உம் உரிமைப் பேறான மக்களோடு நான் பெருமை அடைவேன்.

6 எங்கள் முன்னோர்களைப் போல நாங்களும் பாவம் செய்தோம், அக்கிரமம் செய்தோம்: தீமைகள் புரிந்தோம்.

7 எங்கள் முன்னோர்கள் எகிப்தில் நீர் செய்த அற்புதச் செயல்களை உணரவில்லை; உமது இரக்கப் பெருக்கை அவர்கள் நினைவு கூரவில்லை: மாறாக, உன்னதரை எதிர்த்துச் செங்கடலருகில் கலகம் விளைவித்தனர்.

8 ஆனால் ஆண்டவர் தம் வல்லமையை வெளிப்படுத்த, தம் பெயரின் பொருட்டு அவர்களுக்கு மீட்பளித்தார்.

9 செங்கடலை அதட்டினார், அது உலர்ந்து போயிற்று: பாலை வெளியில் நடப்பது போல் அவர்களைக் கடல் வழியே அழைத்துச் சென்றார்.

10 எதிரியின் கையினின்று அவர்களைக் காத்தார்: பகைவனின் பிடியினின்று அவர்களை விடுவித்தார்.

11 அவர்களுடைய எதிரிகளைக் கடல் வெள்ளம் மூழ்கடித்தது: அவர்களுள் ஒருவன் கூடத் தப்பவில்லை.

12 அப்போது அவர் சொன்ன வாத்தையை நம்பினர்: அவரைப் புகழ்ந்து பாடினர்.

13 ஆனால் அவர் செய்த செயல்களை விரைவிலேயே மறந்து விட்டனர் அவரது திட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.

14 பாலைவெளியில் அவர்கள் தங்கள் இச்சைக்கு இடம் தரலாயினர்: கடவுளை அவர்கள் அங்கே சோதிக்கலாயினர்.

15 அவர்கள் விரும்பியதை அவர்களுக்குத் தந்தார்: ஆனால் கொடிய நோய்க்கு அவர்களை உள்ளாக்கினார்.

16 பாசாறையில் வாழ்ந்த காலத்தில் மோயீசன் மீது பொறாமை கொண்டனர்: ஆண்டவருக்கு உகந்தவரான ஆரோனின் மீதும் பொறாமை கொண்டனர்.

17 பூமி பிளந்து, தாத்தானை விழுங்கியது: அபிரோனின் கூட்டத்தை அப்படியே விழுங்கி விட்டது.

18 அவர்கள் கூட்டத்தின்மீது நெருப்பு வந்து விழுந்தது: தீயோர் அதனால் எரிக்கப்பட்டனர்.

19 ஓரேப் மலையில் கன்றுக்குட்டியை உருவாக்கினர்: பொன்னால் வார்த்த சிலையை வணங்கலாயினர்.

20 புல்மேயும் காளையின் சிலைக்குக் கடவுளின் மாட்சியை ஈடாக்கினர்.

21 தங்களை மீட்டுக்கொண்ட கடவுளை அவர்கள் மறந்தனர்: எகிப்தில் புதுமை செய்தவரை மறந்தனர்.

22 காமின் நாட்டில் நிகழ்ந்த அற்புதங்கள் ஆற்றியவரை, செங்கடலருகே வியப்புக்குரியன செய்தவரை மறந்தனர்.

23 இறைவன் அவர்களை அடியோடு தொலைத்து விட எண்ணினார்: ஆனால் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோயீசன் குறுக்கிட்டார். அவரிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார்: அவர் கொண்ட சினத்தை அமர்த்தலானார்; அவர்களை அழித்து விடாதபடி செய்தார்.

24 அவர்களோ அருமையான நாட்டினுள் செல்ல மறுத்தனர்: அவரது சொல்லை நம்பவில்லை.

25 தங்கள் கூடாரங்களில் இருந்து கொண்டு முறுமுறுக்கலாயினர்: ஆண்டவருக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை.

26 ஓங்கிய கையுடன் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியது; "பாலைவெளியில் உங்களை வீழ்த்துவேன்.

27 உங்கள் சந்ததியை உலகெங்கும் சிதறடிப்பேன்: நாடுகள் தோறும் நீங்கள் சிதறுண்டு போவீர்கள்!"

28 பேல்பேகோரின் வழிபாட்டில் ஈடுபட்டனர்: உயிரற்ற தேவர்களுக்குப் படைத்ததை உண்டனர்.

29 தாங்கள் செய்த அக்கிரமங்களால் ஆண்டவருக்குச் சினமூட்டினர்: கொள்ளைநோய் ஒன்று அவர்களைத் தாக்கியது.

30 பினேஸ் என்பவர் எழுந்தார், பாவத்துக்காகப் பழிவாங்கினார்: கொள்ளை நோய் நின்றது.

31 அது அவருக்குப் புண்ணியமெனக் கருதப்பட்டது: தலைமுறை தலைமுறைக்கும் அது புண்ணியமாக எண்ணப்பட்டது.

32 மெரிபா நீர் நிலையருகில் அவருக்குச் சினமூட்டினர்: அதனால் மோயீசனுக்கும் தீங்கு விளைவிந்தது.

33 அவருக்கு மனக்கசப்பு விளைவித்தனர்: அவரும் யோசனையின்றிப் பேசினார்.

34 புறவினத்தாரை அழிக்கும்படி ஆண்டவர் கட்டளையிட்டார்: ஆனால் அவர்கள் அழிக்கவில்லை.

35 அதோடு அவ்வேற்றினத்தாரோடு சேர்ந்து கொண்டனர்: அவர்கள் செய்த அக்கிரமங்களையே இவர்களும் செய்யலாயினர்.

36 அவர்கள் வழிபட்ட சிலைகளை வணங்கலாயினர்: அவையே அவர்களுக்குக் கண்ணிகள் ஆயின.

37 தம் ஆண் மக்களை அச்சிலைகளுக்குப் பலியிடலாயினர்; தம் பெண் மக்களைப் பேய்களுக்குப் பலியிட்டனர்.

38 மாசற்ற இரத்தத்தை இப்படி அவர்கள் சிந்தினர்: தங்கள் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்தினர், கானான் நாட்டுச் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டனர்: நாடு முழுவதும் அந்த இரத்தத்தால் தீட்டுப்பட்டது.

39 தம் செயல்களால் அவர்கள் தீட்டு அடைந்தனர்: தங்கள் அக்கிரமங்களால் வேசித்தனம் செய்தனர்.

40 தம் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டெழுந்தார்: தம் உரிமைப் பொருளான அவர்களை வெறுத்துத் தள்ளினார்.

41 புறவினத்தார் கையில் அவர்களை விட்டுவிட்டார்: அவர்களைப் பகைத்தவர்களே அவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாயினர்.

42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை வாட்டி வதைத்தனர்: அவர்கள் அதிகாரத்தில் அவர்கள் நொறுங்குண்டனர்.

43 எத்தனையோ முறை அவர்களை விடுவித்தார்: அவர்கள் அவருக்கு மனக்கசப்பு உண்டாக்கினர்; அவர்கள் செய்த அக்கிரமங்களின் பொருட்டு வதைக்கப்பட்டனர்.

44 எனினும் அவர் அவர்களின் துன்பங்களைப் பார்த்தார்: அவர்கள் கூக்குரலைக் கேட்டு ஏற்கலானார்.

45 அவர்களுக்கு அருள் கூரும் பொருட்டுத் தம் உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்; தம் அருள் அன்பை நினைத்து இரக்கம் காட்டினார்.

46 அவர்களைச் சிறைப்படுத்தியவர்கள் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்தார்.

47 ஆண்டவரே, எம் இறைவா எங்களை மீட்டருளும்: எல்லா நாடுகளினின்றும் எங்களைக் கூட்டிச் சேர்த்தருளும். அப்போது நாங்கள் உமது பெயரைக் கொண்டாடுவோம்: உமக்குள்ள புகழை நினைத்துப் பெருமைப் படுவோம்.

48 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் என்றென்றும் போற்றி! அல்லேலூயா மக்கள் எல்லாரும் அதற்கு 'ஆமென்' என்பார்களாக.

அதிகாரம் 106


1 ஆண்டவரைப் போற்றுங்கள், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.

2 ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று மீட்கப்பட்டோர், இங்ஙனம் சொல்வார்களாக.

3 கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டவர்களும் இப்படிச் சொல்வார்களாக.

4 பாலை வெளியில் மனிதர் வாழாத இடத்தில் அவர்கள் அலைந்து திரிந்தனர்: குடியிருக்க ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை.

5 பசிகொண்டனர், தாகமுற்றனர்: மனமுடைந்து களைத்துப் போயினர்.

6 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.

7 நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்: குடியிருக்கும் நகரத்தை அவர்கள் அடையச் செய்தார்.

8 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.

9 பசியுற்றவனுக்கு அவர் நிறைவளித்தார்: பட்டினி கிடந்தவனை நன்மையால் நிரப்பினார்.

10 இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்தனர்: விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.

11 ஏனெனில், கடவுளுடைய வாக்குறுதியை ஏற்காமல் அவரை எதிர்த்தனர்: உன்னதரின் திட்டத்தை அவமதித்தனர்.

12 பல துன்பங்களால் அவர்கள் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: தள்ளாடிப் போயினர்; அவர்களுக்குக் கைகொடுக்க ஒருவருமில்லை.

13 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் விடுவித்தார்.

14 இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்த அவர்களை வெளியேற்றினார்: அவர்கள் கட்டுண்டிருந்த விலங்குகளைத் தகர்தெறிந்தார்.

15 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.

16 ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்: இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து விட்டார்.

17 தாங்கள் செய்த அக்கிரமத்தினால் அவர்கள் நோய்களுக்கு உள்ளாயினர்: அவர்களுடைய பாவங்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.

18 எந்த உணவின் மீதும் அவர்கள் மனம் செல்லவில்லை: சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.

19 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.

20 தம் வார்த்தையை விடுத்து அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுத்தார்.

21 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி சொல்வார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.

22 புகழ்ச்சிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக: அக்களிப்போடு அவருடைய செயல்களைச் சாற்றுவார்களாக.

23 அவர்கள் கப்பலேறிக் கடலைக் கடந்து, வியாபாரம் செய்யப் போயிருந்தார்கள்.

24 இவர்களும் ஆண்டவருடைய செயல்களைக் கண்டனர்: கடலில் அவருடைய வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.

25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழுந்தது: கடல் கொந்தளிக்க, அலைகள் கொதித்தெழுந்தன.

26 வானமட்டும் மேலே வீசப்பட்டனர், பாதாளமட்டும் கீழே எறியப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ துன்ப நிலையைக் கண்டுத் தளர்வுற்றது.

27 குடியரைப் போல் தள்ளாடினர், தடுமாறினர்: அவர்கள் திறமையெல்லாம் மறைந்து போயிற்று.

28 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.

29 புயல்காற்றை அவர் இளந்தென்றலாக மாற்றிவிட்டார்: கடல் அலைகளும் ஓய்ந்து விட்டன.

30 அவ்வமைதியைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்: அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.

31 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.

32 மக்களுடைய சபையில் அவரைக் கொண்டாடுவார்களாக: முதியோருடைய கூட்டத்தில் அவரைப் போற்றுவார்களாக.

33 ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்: நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.

34 செழிப்பான நிலத்தை உலர் நிலமாக்கினார்: அங்குக் குடியிருந்தவர்களின் அக்கிரமத்தின் பொருட்டு இப்படிச் செய்தார்.

35 பாலைநிலத்தையோ ஏரியாக மாற்றினார்: வறண்ட நிலத்தை நீரூற்றாக்கினார்.

36 பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்: அவர்கள் அங்கே குடியிருக்க நகரமொன்றை அமைத்தனர்.

37 அங்கே அவர்கள் உழுது விதைத்தனர்: திராட்சை பயிரிட்டனர்; விளைச்சலைப் பெற்றனர்.

38 அவர் ஆசி வழங்கினார், அவர்கள் பெருந்தொகையாய்ப் பலுகினர்: ஆடு மாடுகளையும் அவர்களுக்குக் கணக்கின்றித் தந்தார்.

39 பின்பு அவர்கள் தொகை குறைந்தது: இகழ்ச்சிக்காளாயினர், ஒடுக்கப்பட்டனர், துன்பங்களுக்குள்ளாயினர்.

40 தலைவர்கள் மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, அவர்களை மனிதர் நடமாட்டமில்லாத இடங்களில் அலையச் செய்பவர்,

41 எளியவனைத் துன்ப நிலையினின்று தூக்கி விட்டார்: அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.

42 நேர்மையுள்ளவர்கள் இதைப் பார்க்கின்றனர், பார்த்து மகிழ்கின்றனர்: தீயவர்களோ தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.

43 ஞானமுள்ளவன் இவற்றையெல்லாம் சிந்திக்கட்டும்: ஆண்டவருடைய இரக்கத்தை ஆழ்ந்து சிந்திக்கட்டும்.

அதிகாரம் 107


1 உறுதி கொண்டுள்ளது என் உள்ளம் இறைவா, உறுதி கொண்டுள்ளது என் உள்ளம்: இன்னிசை பாடுவேன் புகழ்ப்பா இசைப்பேன்.

2 என் நெஞ்சே விழித்தெழு; வீணையே, யாழே, விழித்தெழுங்கள்: பொழுது விடியச் செய்வேன்.

3 ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: மக்களினத்தாரிடையே உமக்குப் புகழ் பாடுவேன்.

4 ஏனெனில், வானமட்டும் உயர்ந்துள்ளது உமது இரக்கம்: மேகங்கள் மட்டும் உயர்ந்துள்ளது உம் சொல்வன்மை.

5 இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.

6 உம்முடைய அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கரத்தால் எனக்குத் துணைசெய்யும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

7 தம் திருத்தலத்தில் இறைவன் கூறியது: "அக்களிப்பிடையே சிக்கேமைக் கூறுபடுத்துவேன்; சூக்கோத் பள்ளத்தாக்கை அளவெடுத்துப் பிரிப்பேன்.

8 கிலேயாத் நாடும் என்னுடையதே; மனாசே நாடும் என்னுடையதே: எப்பிராயிம் எனக்குத் தலைச்சீரா, யூதா என்னுடைய செங்கோல்.

9 மோவாபு எனக்குப் பாதங் கழுவும் பாத்திரம்; ஏதோமின் மீது என் மிதியடியை எறிவேன்: பிலிஸ்தியாவின் மீது வெற்றி கொள்வேன்".

10 அரண்கொண்ட நகரத்துள் என்னை அழைத்துச் செல்பவர் யார்? ஏதோமுக்கு என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?

11 எங்களைக் கைவிட்ட இறைவனே, நீர்தாமன்றோ? எங்கள் படைகளோடு வராமலிருக்கும் இறைவா, நீர்தாமன்றோ?

12 என் எதிரியை மேற்கொள்ள எனக்கு உதவியளித்தருளும்: மனிதர் தரும் உதவி வீண்.

13 கடவுள் துணையால் வீரத்துடன் போராடுவோம்: ஏனெனில் நம் எதிரியை அவரே நசுக்கி விடுவார்.

அதிகாரம் 108


1 என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாயிராதீர்.

2 தீயவரும் வஞ்சகரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்: எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசினர்.

3 பகை நிறைந்த சொற்களால் என்னை வாட்டினர்: காரணமெதுவுமின்றி என்னை வதைத்தனர்.

4 நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்: நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.

5 நன்மைக்குப் பதிலாக அவர்களெனக்குத் தீமையே செய்தனர்: அன்புக்குப் பதிலாக அவர்கள் பகைமையே காட்டினர்.

6 அவனுக்கெதிராகத் தீயவனைத் தூண்டிவிடும்: அவனை அவன் குற்றம் சாட்டுவானாக.

7 நியாயம் விசாரிக்கையில் அவன் தண்டனைக்குள்ளாகட்டும்: அவன் செய்யும் வேண்டுகோள் வீணாகட்டும்.

8 அவனுடைய வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனுடைய சொத்தை இன்னொருவன் எடுத்துக் கொள்ளட்டும்.

9 அவனுடைய மக்கள் அனாதைகளாகட்டும்: அவன் மனைவி விதவையாகட்டும்.

10 அவனுடைய மக்கள் நிலையின்றி அலைந்து பிச்சை எடுக்கட்டும்: பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்.

11 கடன் கொடுத்தவன் அவன் சொத்தையெல்லாம் பறித்துக் கொள்ளட்டும்: அவன் உழைப்பின் பயனை அந்நியர்கள் பிடுங்கிக் கொள்ளட்டும்.

12 அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனுமில்லாதிருக்கட்டும்; திக்கற்ற அவன் பிள்ளைகள் மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்.

13 அவன் சந்ததி அடியோடு தொலையட்டும்: இரண்டாம் தலைமுறைக்குள் அவனுடைய பெயர் இல்லாது போகட்டும்.

14 அவனுடைய முன்னோர்களின் பாவங்களை ஆண்டவர் நினைத்துக் கொள்ளட்டும்: அவனுடைய தாய் செய்த பாவம் நீங்காதிருக்கட்டும்.

15 அவைகள் என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்: அவர்களுடைய நினைவை அடியோடு எடுத்து விடட்டும்.

16 ஏனெனில், அவனும் யாருக்கும் இரக்கம் காட்ட நினைக்கவில்லை; எளியவனையும் ஏழையையும் துன்புறுத்தினவன் அவன்: நெஞ்சம் நொறுங்குண்டவனைக் கொன்றொழிக்கத் தேடியவன்.

17 சபிப்பதையே அவன் விரும்பினான்; விரும்பிய அதுவே அவன் மீது விழட்டும்: ஆசி கூறுவதை அவன் விரும்பவில்லை; ஆகவே அது அவனை விட்டகலட்டும்.

18 சாபனையே அவன் தன் ஆடையாக அணியட்டும்: உடலில் தண்ணீர் ஊறுவது போல, எலும்பில் எண்ணெய் தோய்ந்திருப்பது போல சாபனை அவனுக்குள் இறங்கட்டும்.

19 அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்: நாள்தோறும் அவன் கட்டும் கச்சைப் போல் இருக்கட்டும்.

20 என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீமை பேசுவோருக்கும், ஆண்டவர் அளிக்கும் பிரதிபலனாய் இது இருப்பதாக.

21 ஆனால் ஆண்டவராகிய இறைவா, நீர் உமது பெயரின் பொருட்டு என்னை ஆதரியும்: ஏனெனில், கருணை மிக்கது உம் இரக்கம், என்னை மீட்டருளும்.

22 நானோ துயருற்றவன், ஏழ்மை மிக்கவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.

23 மறைந்து போகும் நிழலைப் போல் நான் மறைகின்றேன்: வெட்டுக்கிளியைப் போல நான் காற்றில் அடிபடுகின்றேன்.

24 நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன: என் ஊனுடல் பலமற்று நொந்து போகிறது.

25 நானோ அவர்களுடைய நிந்தனைக்குரியவன் ஆனேன்; என்னைப் பார்க்கிறவர்கள் தலையை அசைக்கிறார்கள்.

26 ஆண்டவரே, என் இறைவா, எனக்குதவியாக வாரும்: உமது இரக்த்திற்கேற்ப என்னை மீட்டுக்கொள்ளும்.

27 இது உம் கைவேலையென்று அவர்கள் அறியட்டும்: ஆண்டவரே, இது உம் செயலென்று அவர்களுக்குத் தெரியட்டும்.

28 அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வதியும்: என்னை எதிர்த்து எழும்பினால் பின்னடைந்து போகட்டும்; உம் ஊழியனோ அகமகிழட்டும்.

29 என்னைக் குற்றம் சாட்டுவோரை மானக்கேடு ஆட்கொள்வதாக: வெட்கம் அவர்களைப் போர்வை போல் போர்த்துவதாக.

30 என் நாவினால் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வேன்: மக்கள் பலரிடையில் அவரைப் போற்றுவேன்.

31 ஏனெனில், ஏழையின் வலப்பக்கம் அவர் நிற்கிறார். குற்றம் சாட்டி அவனை ஒறுப்போரிடமிருந்து அவனைக் காக்க நிற்கிறார்.

அதிகாரம் 109


1 ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: "நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்."

2 வலிமை மிக்க உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார் உம் எதிரிகளிடையே அதிகாரம் செலுத்தும்.

3 புனிதம் சிறப்புற்றோங்க, நீர் உதித்த நாளிலே ஆட்சியுரிமையும் உம்மோடு உதித்தது: விடிவெள்ளி தோன்று முன் பனியைப் போல் உம்மை ஈன்றெடுத்தேன்.

4 மெல்கிசெதேக் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்: சொன்ன சொல்லை மாற்றமாட்டார்.

5 ஆண்டவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: தம் கோபம் மூண்டெழும் நாளில் அரசர்களை நொறுக்குவார்.

6 நாடுகளுக்கு அவர் தீர்ப்பளிப்பார்; எதிரிகளைக் கொன்று குவிப்பார்; உலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.

7 வழியில் உள்ள நீரோடையில் அவர் பருகுவார்: ஆகவே தலை நிமிர்ந்து நடப்பார்.

அதிகாரம் 110


1 அல்லேலூயா! நெஞ்சார ஆண்டவரைப் போற்றிப் புகழ்வேன்: நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன்.

2 ஆண்டவருடைய செயல்கள் மகத்தானவை: அவற்றில் இன்பம் கொள்வோர் அவற்றை உய்த்துணர்வர்.

3 அவருடைய செயல் மகத்துவமும் மாண்பும் மிக்கது. அவருடைய நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.

4 தம் வியத்தகு செயல்கள் என்றும் நினைவில் இருக்கச் செய்தார்: அன்பும் அருளும் மிக்கவர் ஆண்டவர்.

5 தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு ஊட்டினார்: தாம் செய்த உடன்படிக்கையை என்றும் மறவார்.

6 புறவினத்தாரைத் தம் மக்களுக்கு உரிமை யாக்கினார்: இவ்வாறு வல்லமை மிக்க தம் செயல்களைத் தம் மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

7 அவரது திருக்கரச் செயல்கள் நம்பிக்கைக்குரியவை, நேர்மையானவே: அவர் தரும் கட்டளைகள் நிலையானவை.

8 என்றென்றும் நித்தியமும் நிலையாயுள்ளவை: உறுதியும் நேர்மையும் அவற்றின் அடிப்படை.

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கையை என்றென்றும் நிலைக்கச் செய்தார்: அவரது திருப்பெயர் புனிதமானது, வணங்குதற்குரியது.

10 ஆண்டவர் மீதுள்ள அச்சமே ஞானத்தின் தொடக்கம்: அவரை வழிபடுவோர் யாவரும் அறிவுள்ளவர்கள்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

அதிகாரம் 111


1 அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவருடைய கட்டளைகளை நினைத்து அவன் இன்பம் கொள்வான்.

2 அவனுடைய சந்ததி பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் சந்ததி ஆசி பெறும்.

3 செழுமையும் செல்வமும் அவன் இல்லத்தில உலவும். அவனுடைய ஈகை என்றென்றும் நிலைக்கும்.

4 இருளில் ஒளியென அவன் நேர்மையுள்ளவரிடையே விளங்குவான்: கருணை, இரக்கம், நீதி உள்ளவனாய் இருப்பான்.

5 மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.

6 எந்நாளும் அவன் அசைவுறான்: என்றென்றும் அவன் மக்கள் நினைவில் வாழ்வான்.

7 தீமையான செய்தி எதுவும் அவனை வருத்தத்துக்குள்ளாக்காது: அவன் இதயம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து எதையும் தாங்கக் கூடியது.

8 அவன் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவனுக்கு அச்சம் மேலிடாது: தன் எதிரிகிள் சிதறுண்டு போவதை அவன் பார்ப்பான்.

9 ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பான்; அவனது ஈகை என்றும் நிலைத்திருக்கும்: அவனது வலிமை மகிமை பெற்று விளங்கும்.

10 பாவியோ அதைப் பார்த்துச் சினம் கொள்வான்; பல்லைக் கடித்துக் கொண்டு தளர்வுறுவான்: பாவிகள் ஆசையெல்லாம் அழியும்.

அதிகாரம் 112


1 அல்லேலூயா! ஆண்டவர் தம் ஊழியர்களே, அவரைப் போற்றுங்கள்: அவருடைய திருப்பெயரைப் போற்றுங்கள்.

2 ஆண்டவருடைய திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக; இன்றும் என்றும் வாழ்த்தப் பெறுவதாக.

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவருடைய திருப்பெயர் போற்றப்படுவதாக.

4 மக்கள் இனங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்: வானங்களை விட உயர்ந்தது அவரது மாட்சிமை.

5 உன்னதத்தில் வீற்றிருந்து வானத்தையும் வையத்தையும் ஊடுருவிப் பார்க்கும்

6 நம் ஆண்டவராகிய கடவுளைப் போல் வேறு யார் உண்டு!

7 வறியவனைத் தரையிலிருந்து தூக்கி விடுகிறார்; ஏழையைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகிறார்.

8 தலைவர்களிடையே, தம் மக்களை ஆளும் தலைவர்களிடையே அமர்த்துமாறு அவனைக் கைதூக்கி விடுகிறார்.

9 மலடியாய் இருந்தவளை மக்களின் தாயாகும்படி செய்கிறார்: மகிழ்ச்சியுடன் வீட்டில் விளங்கச் செய்கிறார்.

அதிகாரம் 113


1 அல்லேலூயா! இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய போது, கொடிய மக்களிடையினின்று யாக்கோபின் இனத்தார் வெளியேறிய போது,

2 யூதா குலம் அவருக்குத் திருத்தலமாயிற்று: இஸ்ராயேல் அவரது ஆட்சிக்கு உட்பட்டது.

3 கடல் அவரைக் கண்டது; கண்டு பின்வாங்கியது: யோர்தான் திசை திரும்பி ஓடியது.

4 மலைகள் செம்மறிகள் எனத் துள்ளின; குன்றுகள் ஆட்டுக் குட்டிகள் போலக் குதித்தன.

5 கடலே, உனக்கென்ன நடந்தது? ஏன் பின்வாங்கினாய்? யோர்தானே, உன்கென்ன ஆயிற்று? ஏன் திசை திரும்பிச் சென்றாய்?

6 மலைகளே, நீங்கள் ஏன் செம்மறிகள் போலத் துள்ளினீர்கள்? குன்றுகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் குட்டிகளெனக் குதித்தீர்கள்?

7 மாநிலமே, ஆண்டவர் திருமுன் நடுநடுங்கு: யாக்கோபின் இறைவனின் திருமுன் நடுக்கமுறு!

8 கற்பாறையை நீர்க் குளமாக்க வல்லவர் அவர்: பாறையை நீரூற்றாக ஆக்க வல்லவர் அவர்.

9 எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று; அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது.

10 அவர்களுடைய கடவுள் எங்கே?" எனப் புறவினத்தார் சொல்வது ஏன்?

11 நம் இறைவனோ வானுலகில் உள்ளார்: தாம் விரும்பிய யாவும் செய்துள்ளார்.

12 அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே.

13 அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண்கள் உண்டு, பார்ப்பதில்லை.

14 செவிகள் உண்டு, கேட்பதில்லை; நாசி உண்டு, முகர்வதில்லை.

15 கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை; தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை.

16 அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே.

17 இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.

18 ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.

19 ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.

20 ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார்.

21 தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி அளிப்பார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி அளிப்பார்.

22 ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; நீங்களும் உங்கள் மக்களும் வளரச் செய்வார்.

23 ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார்.

24 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மனுமக்களுக்கு அளித்துள்ளார்.

25 இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: கீழுலகம் செல்வோரும் அவரைப் புகழ்வதில்லை.

26 உயிர் வாழும் நாமே ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இன்றும் என்றும் வாழ்த்துகிறோம்.

அதிகாரம் 114


1 அல்லேலூயா! ஆண்டவர் மீது அன்பு வைத்தேன்; ஏனெனில், என் மன்றாட்டின் குரலை அவர் கேட்டருளினார்.

2 ஏனெனில், அவரை நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தருளினார்.

3 மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன; பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.

4 நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: 'ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்' என்று வேண்டினேன்.

5 ஆண்டவர் கருணையும் நீதியுமுள்ளவர்: நம் இறைவன் இரக்கமுள்ளவர்.

6 எளியோரை ஆண்டவர் காக்கின்றார்: துயர் மிக்கவனான எனக்கு மீட்பளித்தார்.

7 நெஞ்சே நீ மீளவும் அமைதிகொள்: ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்.

8 ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.

9 நான் ஆண்டவர் திருமுன் நடந்திடுவேன்: வாழ்வோர் நாட்டில் வாழ்ந்திடுவேன்.

அதிகாரம் 115


1 மிக மிகத் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதுங் கூட நான் ஆண்டவரை நம்பினேன்.

2 எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவனல்லன்' என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்.

3 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்?

4 மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்.

5 ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும், அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

6 ஆண்டவர் தம் அடியாரின் மரணம், அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது.

7 ஆண்டவரே, நான் உம் ஊழியன்; உம் அடியேன்; உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.

8 புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்; ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்.

9 ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும் அவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.

10 ஆண்டவருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், யெருசலேமே, உன் நடுவிலும் ஆண்டவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.

அதிகாரம் 116


1 அல்லேலூயா! மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: மண்ணுலக மக்களே, நீங்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

2 ஏனெனில், நம்மீது அவரது அருளன்பு நிலையாய் உள்ளது: நம்மீது அவர் கொண்டுள்ள பிரமாணிக்கம் என்றும் நிலைத்திருக்கும்.

அதிகாரம் 117


1 அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.

2 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக.

3 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று ஆரோனின் குலத்தார் சாற்றுவார்களாக.

4 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக.

5 துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்: ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலை அளித்தார்.

6 ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? எவன் எனக்கு என்ன செய்ய முடியும்?

7 எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்: சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன்.

8 மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.

9 தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.

10 புறவினத்தார் எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.

11 எப்பக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.

12 தேனீக்களைப் போல் என்னை வளைத்துக் கொண்டனர்; நெருப்பில் அகப்பட்ட முட்களைப் போல் எரிந்தனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.

13 என்னைத் தள்ளினார்கள்; விழத்தாட்டத் தள்ளிப் பார்த்தார்கள்: ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை செய்தார்.

14 ஆண்டவர் என் வலிமையும் திடமுமாய் உள்ளார்: எனக்கு அவர் மீட்பரானார்.

15 நீதிமான்களின் கூடாரங்களில் இதோ மீட்புக்குறித்து மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது.

16 ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலற்றியது.

17 இறந்தொழியன், உயிர் வாழ்வேன்: ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்.

18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்: ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

19 நீதிமான்கள் நுழையும் வாயில்களை திறந்து விடுங்கள்: உள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20 ஆண்டவரது வாயில் இது; இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21 என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: எனக்கு நீர் மீட்பரானதால் உமக்கு நன்றி செலுத்துவேன்.

22 வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று.

23 ஆண்டவர் செயலிது: நம் கண்ணுக்கு வியப்பே!

24 ஆண்டவர் குறித்த நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.

25 ஆண்டவரே மீட்டருளும்: ஆண்டவரே வெற்றியைத் தாரும்.

26 ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்; ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27 ஆண்டவராகிய இறைவனே, நம்மீது ஒளிவீசினார்: மரக் கிளைகளைக் கையிலேந்தி விழாப்பவனி நடத்துங்கள், பீடத்தின் மூலை வரைக்கும் செல்லுங்கள்.

28 என் இறைவன் நீரே, உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்: என் இறைவா, உம்மைப் புகழ்ந்தேத்துகிறேன்.

29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.

அதிகாரம் 118


1 மாசற்ற வழியில் நடப்போர் பேறு பெற்றோர்: ஆண்டவர் தம் திருச்சட்டப்படி நடப்போர் பேறு பெற்றோர்.

2 அவருடைய ஆணைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்: முழு மனத்தோடு அவரைத் தேடுவோர் பேறு பெற்றோர்.

3 அக்கிரமம் செய்யாமல் அவர் காட்டிய நெறியில் நடப்போர் பேறு பெற்றோர்.

4 நீர் உம் கட்டளைகளைத் தந்தீர்: அவற்றை முற்றிலும் கடைப்பிடிக்க வேண்டுமென்றீர்.

5 உம்முடைய நியமங்களை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் நிலைத்திருந்தால் எவ்வளவோ நலம்!

6 உம் கற்பனைகளையெல்லாம் மனத்தில் கொண்டிருந்தால் நான் ஏமாற்றம் அடையேன்!

7 நேரிய உள்ளத்தோடு நான் உம்மைப் போற்றிப் புகழ்வேன்: உம் நீதி மிக்க விதிகளை நான் கற்றுக் கொண்டு போற்றிப் புகழ்வேன்.

8 உம் நியமங்களைக் கடைப்பிடிப்பேன்: என்னை எந்நாளும் கைவிடாதேயும்.

9 இளைஞன் தான் செல்லும் வழியில் புனிதனாய் எங்ஙனம் நடக்க இயலும்? உம் வார்த்தையைக் கடைப்பிடிப்பதால் தான்.

10 முழு மனத்தோடு நான் உம்மைத் தேடுகிறேன்: உம் கற்பனைகளை விட்டுத் தவறிச் செல்ல என்னை விடாதேயும்.

11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12 ஆண்டவரே, நீர் வாழ்த்துக்குரியவர்: எனக்கு உம் நியமங்களைக் கற்பித்தருளும்.

13 நீர் வருவாய் மலர்ந்து வெளிப்படுத்திய முறைமைகளையெல்லாம் என் நாவினால் எடுத்தியம்புகின்றேன்.

14 பெருஞ் செல்வத்தில் மகிழ்ச்சி கொள்வது போல், நான் உம் ஆணைகளைக் குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

15 உம் கட்டளைகளைக் குறித்து நான் தியானிப்பேன்; நீர் காட்டிய நெறியை நான் மனத்தில் இருத்துவேன்.

16 உம் நியமங்களை நினைத்து இன்புறுவேன்: உம் வார்த்தைகளை நான் மறவேன்.

17 உம் வார்த்தைகளை நான் கடைப்பிடித்து வாழும் வண்ணம், உம் ஊழியன் எனக்கு அருள் கூரும்.

18 உமது திருச்சட்டத்தின் வியத்தகு செயல்களை நான் நன்குணரும் வண்ணம், என் கண்களைத் திறந்தருளும்.

19 இம்மையில் நான் வரிப்போக்கனாய் உள்ளேன்: உம் கற்பனைகளை என்னிடமிருந்து மறைத்து வைக்காதேயும்.

20 எந்நேரமும் உம் விதிகளின் மீது ஆசை வைத்திருப்பதால், என்ன உள்ளம் உருகிப் போகின்றது.

21 செருக்குற்றோரைக் கண்டித்தீர்: உம் கற்பனைகளைக் கைவிடுவோர் சபிக்கப்ட்டவரே.

22 நிந்தனைக்கும் புறக்கணிப்புக்கும் நான் ஆளாக விடாதேயும்: ஏனெனில் நீர் தந்த ஆணைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.

23 தலைவர்கள் எனக்கெதிராய் அமர்ந்து பேசினாலும் உம் ஊழியன் உம்முடைய நியமங்களைக் குறித்தே தியானிக்கின்றான்.

24 ஏனெனில், உம் ஆணைகள் எனக்கு இனிமையாயுள்ளன: உம் நியமங்களே எனக்கு ஆலோசனை தருபவை.

25 என் உள்ளம் ஊக்கம் தளர்ந்து சோர்வுற்றது: உம் வார்த்தையின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.

26 என் நெறி முறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்: நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் நியமங்களை எனக்குப் படிப்பித்தருளும்.

27 உம் கட்டளைகள் காட்டும் வழியில் என்னைச் செலுத்தும்: நான் உம் வியப்புக்குரிய செயல்களைத் தியானிப்பேன்.

28 துயர மிகுதியால் என் உள்ளம் கண்ணீர் உகுக்கின்றது: உமது வார்த்தையின்படி என்னை ஊக்குவியும்.

29 தவறான வழியில் என்னை நடக்க விடாதேயும்: உமது திருச்சட்டத்தை எனக்கு அருளும்.

30 உண்மையின் பாதையை நான் தேர்ந்து கொண்டேன்: உம் முறைமைகளை என் கண்முன் கொண்டேன்.

31 உம் ஆணைகளை நான் உறுதியாய்ப் பற்றிக் கொண்டேன்: ஆண்டவரே, நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்.

32 நீர் என் அறிவை விவரிக்கும் போது, உம் கற்பனைகள் காட்டும் வழியில் நான் செல்வேன்.

33 ஆண்டவரே, உம் நியமங்கள் குறிப்பிடும் வழியை எனக்குக் காட்டியருளும்: நான் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பேன்.

34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்குக் கற்பித்தருளும்: அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.

35 உம் கற்பனைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்: அதுவே என் இன்பம்.

36 உம் ஆணைகளின் பால் என் இதயம் திருப்பியருளும்: இம்மைப் பயனை நாட விடாதேயும்.

37 பயனற்றதின் மீது பார்வையைச் செலுத்தாதபடி என் கண்களைத் திருப்பி விடும்: நீர் காட்டும் வழியின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.

38 உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்: உமக்கு அஞ்சி நடப்போர்க்கன்றோ அவ்வாக்குறுதியை அளித்தீர்!

39 நான் அஞ்சும் நிந்தனையெதற்கும் என்னை ஆளாக்காதேயும்; ஏனெனில், உம் முறைமைகள் இனியவை .

40 உம் கட்டளைகளைப் பெரிதும் விரும்பினேன்: உமது நீதியின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.

41 ஆண்டவரே, உம் இரக்கப் பெருக்கத்தை என் மீது பொழிந்தருளும்: உமது வாக்குறுதியின்படி எனக்கு உதவியளித்தருளும்.

42 அப்போது நான் என்னைப் பழிப்போர்க்கு ஏற்ற பதில் கூறுவேன்; ஏனெனில், உம் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை உண்டு.

43 என் வாயினின்று உண்மையை எடுத்து விடாதேயும்: ஏனெனில், உம் முறைமைகளின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்: என்றென்றும் முடிவின்றி அதைக் காப்பேன்.

45 அகன்றதொரு பாதையில் நான் நடப்பேன்: ஏனெனில், உம் கட்டளைகளைப் பற்றி நான் கருத்தாய் இருக்கின்றேன்.

46 உம் ஆணைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்: வெட்கமுற மாட்டேன்.

47 உம் கற்பனைகளில் நான் இன்பம் கொள்வேன்: அவற்றை நேசிக்கிறேன்.

48 உம் கற்பனைகளை நோக்கி என் கைகளைக் கூப்புவேன்: உம் நியமங்களையே நான் தியானிப்பேன்.

49 உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவு கூர்ந்தருளும்: அதனால் எனக்கு நம்பிக்கையளித்தீர்.

50 உம் வாக்கு எனக்கு வாழ்வளிக்கிறது: இந்நினைவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் தரும்.

51 செருக்குற்றோர் என்னை மிகவும் பழிக்கின்றனர்: ஆனால் உம் திருச்சட்டத்தினின்று நான் விலகுவதில்லை.

52 ஆண்டவரே, முற்காலத்தில் நீர் அளித்த தீர்ப்புகளை நான் நினைவுகூர்கிறேன்: அவை எனக்கு ஆறுதலாய் உள்ளன.

53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் பாவிகளைப் பார்க்கும் போது, மிகவே சினம் கொள்கிறேன்.

54 நிலையற்ற நாடாகிய இவ்வுலகில் உம் நியமங்கள் எனக்குப் புகழ்ப் பாக்களாய் உள்ளன.

55 ஆண்டவரே, இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கிறேன்: உமது திருச் சட்டத்தை அனுசரிப்பேன்.

56 நான் இங்ஙனம் வாழ்வது, உமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் தான்.

57 ஆண்டவரே, உம் வார்த்தைகளை அனுசரிப்பதே, என் வாழ்க்கைப் பயன் எனக் கருதினேன்.

58 என் முழுமனத்தோடு உம் திருமுகத்தைப் பார்த்து வேண்டினேன்: உமது வாக்குறுதிக்கேற்ப என் மேல் இரக்கம் வையும்.

59 நான் நடக்கும் வழிகளை நன்கு கவனித்தேன்: உம் ஆணைகளின் பக்கமாய் அடி எடுத்து வைத்தேன்.

60 உம் கற்பனைகளைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை: தாமதம் செய்யவில்லை.

61 பாவிகளின் தளைகள் என்னை இறுக்கின: ஆனால் உம் திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.

62 நீதி வாய்ந்த உம் முறைமைகளைக் குறித்து, நள்ளிரவில் உமது புகழ் பாட எழுகின்றேன்.

63 உமக்கு அஞ்சி நடப்போர் யாவருக்கும் நான் நண்பன்: உம் கட்டளைகளை அனுசரிப்போர்க்குத் தோழன்.

64 ஆண்டவரே, உமது அருளால் பூவுலகு நிறைந்துள்ளது: உம் நியமங்களை எனக்குக் கற்பியும்.

65 ஆண்டவரே, உமது வாக்குறுதிக்கேற்ப, உம் ஊழியனுக்கு நன்மையே புரிந்தீர்.

66 நீதியும் ஞானமும் எனக்குக் கற்பியும்: ஏனெனில், உம் கற்பனைகளின் மீது நம்பிக்கை வைக்கிறேன்.

67 துன்பம் என்னைத் தாக்கும் முன்பு நான் தவறிழைத்தேன்: ஆனல் இப்போது உமது வாக்கின்படி நடக்கிறேன்.

68 நல்லவர் நீர், நன்மையே செய்பவர்: எனக்கு உம் நியமங்களைக் கற்பியும்.

69 ஆணவம் பிடித்தவர்கள் எனக்கெதிராய்ச் சதித் திட்டங்கள் செய்கிறார்கள்: நானோ முழுமனத்துடன் உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன்:

70 அவர்கள் உள்ளம் கனமாகிவிட்டது: நானோ உம் திருச்சட்டத்தை நினைத்து இன்புறுகிறேன்.

71 எனக்குத் துன்பம் விளைந்தது நன்மையே: அதனால் உம் நியமங்களை நான் கற்றுக்கொள்ள முடிந்தது.

72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் விட மேலானது.

73 உம் கைகளே என்னைப் படைத்தன, என்னை உருவாக்கின: உம் கற்பனைகளை நான் கற்றுக் கொள்ள எனக்கு அறிவு புகட்டும்.

74 உமக்கு அஞ்சுவோர் என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்: உமது வார்த்தையை நான் நம்பினதற்காக மகிழ்வர்.

75 ஆண்டவரே, உம் தீர்ப்புகள் நீதியானவை என அறிவேன்: நீர் என்னைத் துன்பத்துக் குள்ளாக்கியது நீதியே.

76 எனக்கு ஆறுதலளிக்க உமது இரக்கம் எனக்குக் கிடைக்கட்டும்: உம் ஊழியனுக்கு வாக்குறுதி தந்தீர் அன்றோ!

77 நான் வாழ்வு பெறும்படி உம் இரக்கப் பெருக்கம் எனக்கு உதவட்டும்: ஏனெனில், உமது திருச்சட்டத்தில் நான் இன்பம் காண்கிறேன்.

78 செருக்குற்றோர் வெட்கிப் போவார்களாக, அவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்துகின்றனர்: நானோ உம் கட்டளைகளைப் பற்றித் தியானம் செய்வேன்.

79 உமக்கு அஞ்சுவோர் என் சர்பாய்த் திரும்புவார்களாக: உம் ஆணைகளைப் பற்றிக் கவலையுறுவோர் என் பக்கம் இருப்பார்களாக.

80 உம் நியமங்களில் என் உள்ளம் முற்றிலும் ஊன்றியிருப்பதாக: நான் வெட்கமுறேன்.

81 உமது உதவி பெறும் ஆவலால் என் உள்ளம் ஏங்குகின்றது: உம் வார்த்தையை நான் நம்பியிருக்கிறேன்.

82 உம் வாக்கீன் மீது கொண்ட ஏக்கத்தால் என் கண்கள் பூத்துப் போயின: எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?

83 புகையினிடையுள்ள தோற்பை போலானேன்: உம் நியமங்களை நான் மறக்கவில்லை.

84 உம் ஊழியனுக்கு இன்னும் உள்ள வாழ்நாள் எத்தனை? என்னைத் துன்புறுத்துவோருக்கு என்று தீர்ப்பளிப்பீர்?

85 உமது திருச்சட்டப்படி நடக்காமல், செருக்குற்றோர் எனக்குக் குழி வெட்டினர்.

86 நீர் தந்த கற்பனைகள் எல்லாம் உறுதியானவை; காரணமின்றி அவர்கள் என்னைத் துன்புறுத்துகின்றனர்: எனக்குத் துணை செய்யும்.

87 என் வாழ்வை இறுதி நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்: நானோ உம் கட்டளைகளைக் கைவிடவில்லை.

88 உமது இரக்கத்திற்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும்: உமது திருவாய் மலர்ந்த ஆணைகளை நான் கடைப்பிடிப்பேன்.

89 ஆண்டவரே, என்றென்றைக்கும் உள்ளது உமது வார்த்தை: வானத்தைப் போல் அது நிலையாயுள்ளது.

90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது சொல்லுறுதி; நீர் உருவாக்கிய பூவுலகு நிலையாய் உள்ளது.

91 நீர் குறித்த விதிகளின்படி அவை எந்நாளும் நிலைத்துள்ளன. ஏனெனில், எல்லாம் உமக்கு ஊழியம் செய்கின்றன.

92 உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால், என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்.

93 உம் கட்டளைகளை நான் எந்நாளும் மறவேன்: ஏனெனில், அவற்றைக் கொண்டு எனக்கு நீர் வாழ்வளித்தீர்.

94 உமக்கே நான் சொந்தம்: என்னைக் காத்தருளும்; ஏனெனில் உம் கட்டளைகளையே நான் நாடினேன்.

95 பாவிகள் என்னைத் தொலைத்துவிடப் பார்க்கிறார்கள்: என் கவனமோ உம் ஆணைகளின் மீதே இருக்கிறது.

96 மேன்மையானதனைத்தின் முடிவையும் நான் பார்த்து விட்டேன்: அளவற்ற மேன்மை வாய்ந்தது உமது கற்பனை.

97 ஆண்டவரே, நான் உமது சட்டத்தை எவ்வளவோ நேசிக்கிறேன்: நாள் முழுவதும் அது என் தியானமாய் உள்ளது.

98 என் எதிரிகளை விட என்னை அறிவுள்ளவன் ஆக்கியது உமது கற்பனை: ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.

99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் அறிவாளியாயிருக்கிறேன்: ஏனென்றால் உம் ஆணைகளையே நான் தியானிக்கிறேன்.

100 முதியோர்களை விட நான் அறிவு பெற்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன்.

101 தீய வழி எதிலும் அடி எடுத்து வைக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்: உம் வார்த்தையின்படி நடப்பதே என் கவலை.

102 உம் விதிகளை விட்டுச் சிறிதேனும் தவறுவதில்லை: ஏனெனில் நீர் எனக்கு அறிவு புகட்டினீர்.

103 உம் வாக்குகள் சுவைக்கு எவ்வளவு இனிமையாயுள்ளன! என் வாய்க்குத் தேனினும் சுவை மிகுந்தவையே.

104 உம் கட்டளைகளால் நான் அறிவுள்ளவனாகின்றேன்: ஆகவே தான் தீமையான பாதை எதையும் நான் வெறுக்கிறேன்.

105 நான் நடக்கவேண்டிய பாதையைக் காட்டும் விளக்கு உம் வார்த்தை: செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே.

106 இதுவே என் சபதம்; இதுவே என் உறுதி: நீதியான உம் முறைமைகளை நான் கடைப்பிடிப்பேன்.

107 ஆண்டவரே மிக மிகத் துன்புறலானேன்: உம் வார்த்தையின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.

108 என் வாயினின்று எழும் இப்புகழ்ச்சிக் காணிக்கையை ஆண்டவரே, ஏற்றுக் கொள்ளும்: உம் முறைமைகளை எனக்குக் கற்பியும்.

109 என் உயிர் எப்போதும் இடர் மிக்கதாய் உள்ளது: ஆனால் உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.

110 பாவிகள் எனக்குக் கண்ணி வைத்தார்கள்: ஆனால் உம் கட்டளைகளினின்று நான் பிறழவில்லை.

111 உம் ஆணைகளே என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து: ஆகவே அவை என் இதயத்துக்கு மகிழ்வளிக்கின்றன.

112 உம் நியமங்களை நிறைவேற்றுவதே என் உள்ளத்துக் கவலை: என்றும், சற்றும் குறைவின்றி நிறைவேற்றுவதே என் கருத்து.

113 நேர்மையற்ற மனத்தோரை நான் வெறுக்கிறேன்: உமது திருச்சட்டத்தின் மீது அன்பு வைக்கிறேன்.

114 நீரே என் பாதுகாப்பு, நீரே என் கேடயம்: உம் வார்த்தையின் மீது நம்பிக்கை வைக்கிறேன்.

115 தீய மனத்தோரே, என்னை விட்டு விலகுங்கள்: என் இறைவனின் கற்பனைகளை நான் அனுசரிப்பேன்.

116 உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு ஆதரவாயிரும், நான் வாழ்வேன்: எனக்குள்ள நம்பிக்கையின் பொருட்டு நான் வாழ்வேன்: எனக்குள்ள நம்பிக்கையின் பொருட்டு நான் வெட்கமுற விடாதேயும்.

117 எனக்குத் துணைசெய்யும், மீட்புப் பெறுவேன்: எந்நாளும் உம் நியமங்களைக் கருத்தில் கொண்டிருப்பேன்.

118 உம் நியமங்களை விட்டு விலகுவோர் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்: அவர்கள் சிந்தனை வஞ்சகமானது.

119 பூவுலகின் பாவிகள் அனைவரையும் நீர் வெறும் கழிவடையாகக் கருதுகிறீர்: ஆகவே நான் உம் நியமங்களை நேசிக்கிறேன்.

120 உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடலும் நடுங்குகின்றது: உம் விதிமுறைகளுக்கு நான் அஞ்சி நடுங்குகிறேன்.

121 நீதியும் நியாயமுமானதையே கடைப்பிடித்தேன்: என்னைத் துன்புறுத்துவோர் கையில் நான் விழ விடாதேயும்.

122 உம் ஊழியனாகிய எனக்கு உறுதுணையாய் இரும்: செருக்குற்றோர் என்னைத் துன்புறுத்த விடாதேயும்.

123 உமது உதவிக்காக ஏங்கி என் கண்கள் பூத்துப் போயின: நீதியுடன் நீர் வாக்களித்ததைப் பெற வேண்டுமென்று ஏங்குகிறேன்.

124 உம் நன்மைத்தனத்திற்கேற்ப உம் ஊழியனாகிய எனக்குத் தயவு காட்டும்: உம் நியமங்களை எனக்குக் கற்பியும்.

125 உம் ஊழியன் நான்; எனக்கு அறிவு புகட்டும்: அப்போது உம் ஆணைகளை அறிந்து கொள்வேன்.

126 ஆண்டவர் செயலாற்றும் நேரம் வந்து விட்டது: உம் சட்டம் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

127 ஆதலால் நான் உம் கற்பனைகளின் மீது அன்பு வைக்கிறேன்: பொன்னையும் மணியையும் விட நேசித்தேன்.

128 ஆகவே உம் கட்டளைகளெல்லாம் நீதியென ஏற்றுக் கொண்டேன்: பொய்யான வழி எதையும் வெறுக்கிறேன்.

129 உம் ஆணைகள் வியப்புக்குரியவை: ஆகவே என் ஆன்மா அவற்றைக் கடைப்பிடிக்கிறது.

130 உம் வார்த்தைகளுக்குத் தரும் விளக்கம் அறிவொளி தருகிறது: அது எளியோர்க்கு அறிவூட்டுகிறது.

131 வாய் திறக்கிறேன், பெருமூச்சு விடுகிறேன்: ஏனெனில், உம் கற்பனைகளை விரும்புகிறேன்.

132 என் மீது உமது பார்வையைத் திருப்பி இரக்கம் வையும்: உம் மீது அன்பு கொள்பவர்களுக்கு இரங்குவது போல என் மீது இரங்கும்.

133 உமது வாக்கின்படி என் நடத்தையை நெறிப்படுத்தும்: தீமையானது எதுவும் என்னை மேற்கொள்ளாது.

134 மனிதர்களால் வரும் நெருக்கடியினின்று என்னை விடுவியும்: உம் கட்டளைகளை நான் கடைப்பிடிப்பேன்.

135 உம் ஊழியன் எனக்கு இன்முகம் காட்டியருளும்: உம் நியமங்களை எனக்குக் கற்பித்தருளும்.

136 உமது திருச்சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.

137 ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்: உமது தீர்ப்பு நேர்மையானது.

138 நீர் தந்த ஆணைகள் நீதியுடன் பொருந்தியவை: அவை முற்றிலும் நம்பத் தக்கவை.

139 உம் திருச்சட்டத்தின் மீது எனக்குள்ள ஆர்வம் என்னை விழுங்குகின்றது: ஏனெனில், உம் எதிரிகள் உம் வார்த்தைகளை மறந்து விடுகின்றனர்.

140 உம் வாக்குறுதி தளர்வுறாததென எண்பிக்கப்பட்டது: உம் ஊழியன் அதைப் பெரிதும் நேசிக்கிறான்.

141 சிறியவன் யான், எம்மதிப்புக்கும் உரியவனல்லேன்: ஆனால் உம் கட்டளைகளை நான் மறப்பதில்லை.

142 உமது நீதி என்றென்றைக்கும் நேர்மையானது: உமது திருச்சட்டம் உறுதியாயுள்ளது.

143 நெருக்கடியும் துன்பமும் என்னைச் சூழ்ந்து கொண்டன: உம் கற்பனைகள் என் இன்பமாய் உள்ளன.

144 உம் ஆணைகள் என்றென்றைக்கும் நேர்மையானவை: எனக்கு அறிவு புகட்டும்; நான் வாழ்வேன்.

145 முழு இதயத்துடன் உம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறேன்; ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: உம் நியமங்களை நான் அனுசரிக்கிறேன்.

146 உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், எனக்கு மீட்பு அளித்தருளும்: உம் ஆணைகளை நான் கடைப்பிடிப்பேன்.

147 வைகறையில் உம்மிடம் வருகிறேன், நீர் உதவுமாறு மன்றாடுகிறேன்: உம் வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.

148 உம் வாக்குகளைத் தியானிப்பதற்காக, நான் இரவுச் சாம நேரங்களில் தூங்காமல் விழித்திருக்கிறேன்.

149 ஆண்டவரே, உமது இரக்கத்திற்கேற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உமது தீர்ப்பின் படி எனக்கு வாழ்வளித்தருளும்.

150 என்னை அநியாயமாகத் துன்புறுத்துவோர் நெருங்கி வருகின்றனர்: அவர்களுக்கும் உமது திருச்சட்டத்திற்கும் வெகு தூரம்.

151 ஆண்டவரே, நீர் அண்மையில் இருக்கிறீர்: உம் கற்பனைகள் எல்லாம் உறுதியானவை.

152 அவற்றை நீர் என்றென்றைக்கும் ஏற்படுத்தினீர் என்று, நீர் தந்த ஆணைகளினின்று முன்பே அறிந்திருக்கிறேன்.

153 என் துன்ப நிலையைப் பார்த்து அதிலிருந்து என்னை விடுவித்தருளும்: ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.

154 என் வழக்கை விசாரித்து என்னைக் காத்தருளும்: உமது வாக்குக்கேற்றபடி எனக்கு வாழ்வளித்தருளும்.

155 பாவிகள் மீட்புக்கு வெகு தொலைவிலுள்ளனர்: ஏனெனில், அவர்கள் உம் நியமங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

156 ஆண்டவரே, உம் இரக்கம் மிகப் பெரிது: உம் முறைகளின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.

157 என்னைத் துன்புறுத்தித் தொல்லைப் படுத்துவோர் பலர்: ஆனால் உம் ஆணைகளை விட்டு நான் தவறுவதில்லை.

158 அக்கிரமம் செய்வோரைப் பார்த்தேன், பெரிதும் வருந்தினேன்: ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.

159 ஆண்டவரே பாரும், நான் உம் கட்டளைகளை நேசிக்கிறேன்: உமது இரக்கத்திற்கேற்ப என்னை உயிரோடு காத்தருளும்.

160 உமது வார்த்தையின் உட்பொருள் உண்மையினின்று வழுவாதது: நீதி வாய்ந்த உம் தீர்ப்புகள் என்றும் நிலைத்திருப்பவை.

161 தலைவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்தினர்: என் இதயம் உம் வார்த்தைகள் மீது அச்சம் கொண்டுள்ளது.

162 திரண்ட பொருள் கிடைத்தவன் மகிழ்வது போல, உமது வாக்குறுதியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

163 அக்கிரமத்தை வெறுத்து ஒதுக்குகிறேன்: உமது திருச்சட்டத்தை நேசிக்கிறேன்.

164 நீதியான தீர்ப்புகளைக் குறித்து ஒரு நாளைக்கு ஏழு முறை உமக்குப் புகழ் பாடுகிறேன்.

165 உமது சட்டத்தை நேசிப்பவர்களுக்கு மிகுதியான அமைதியுண்டு: அவர்களை விழத்தாட்டக் கூடிய தடைகள் இல்லை.

166 ஆண்டவரே, உமது உதவியை நம்பி வாழ்கிறேன்: உம் கற்பனைகளை அனுசரிக்கிறேன்.

167 உம் ஆணைகளை என் உள்ளம் கடைப்பிடிக்கிறது: அவற்றை மிகவும் நேசிக்கிறது.

168 உம் கட்டளைகளையும் கற்பனைகளையும் நான் அனுசரிக்கிறேன்: ஏனெனில், என் நடத்தை உமக்குத் தெரிந்திருக்கிறது.

169 ஆண்டவரே, என் கூக்குரல் உம்மிடம் வருவதாக: உமது வார்த்தைக் கேற்ப எனக்கு அறிவு புகட்டும்.

170 என் செபம் உம்மிடம் வருவதாக: உம் வாக்கின்படி எனக்கு விடுதலையளித்தருளும்.

171 உம் நியமங்களை எனக்கு நீர் கற்பிப்பதால், என் நா உமது புகழைப் பாடும்.

172 உம் வாக்கைக் குறித்து என் நாவு பாடுவதாக: ஏனெனில் உம் கற்பனைகள் எல்லாம் நீதியானவை.

173 உமது திருக்கரம் எனக்குத் துணைசெய்ய வருவதாக: ஏனெனில் உம் கட்டளைகளை நான் விரும்பினேன்.

174 ஆண்டவரே, உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் விரும்புகிறேன்: உமது திருசசட்டத்தில் நான் இன்பம் காண்கிறேன்.

175 வாழ்வு பெற்று நான் உம்மைப் புகழ்வேனாக: உம் விதி முறைமைகள் எனக்குத் துணைபுரிவனவாக.

176 வழி தவறிய ஆட்டைப் போல் நான் அலைந்து திரிகிறேன்; உம் ஊழியனைத் தேடியருளும்: ஏனெனில், உம் கற்பனைகளை நான் மறக்கவில்லை.

அதிகாரம் 119


1 இன்னலுற்ற வேளையில் நான் ஆண்டவரைக் கூவி அழைத்தேன்: அவரும் என் குரலுக்குச் செவிசாய்த்தார்.

2 தீ நாக்கினின்று ஆண்டவரே, என் ஆன்மாவை விடுவியும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.

3 வஞ்சகம் பேசும் நாவே உனக்கு என்ன தான் கிடைக்கும்? என்ன பலன் தான் உனக்குக் கிடைக்கும்?

4 வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன்.

5 ஐயோ, மோசக் நாட்டில் இன்னும் நான் உள்ளேனே! கேதார் இனத்தவர் கூடாரங்களில் நான் கூடியிருக்கிறேனே!

6 வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன்.

7 சமாதானம் என்று நான் பேசிய போது, அவர்கள் போருக்கு என்னை வற்புறுத்தினர்.

அதிகாரம் 120


1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்: "உதவி எனக்கு எங்கிருந்து வரும்?"

2 உதவி எனக்கு ஆண்டவரிடமிருந்தே வரும்: அவரே வானமும் வையமும் படைத்தவர்.

3 உன் கால் இடற விடமாட்டார்: உன்னைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார்.

4 இதோ, இஸ்ராயேலைக் காப்பவர் அயர்வதுமில்லை: உறங்குவதுமில்லை.

5 ஆண்டவர் உன்னைக் காக்கிறார்: ஆண்டவர் உன் வலப்புறத்தில் உன் பாதுகாப்பாயிருக்கிறார்.

6 பகலில் வெயில் உனக்குத் தீங்கு இழைக்காது: இரவில் நிலாவும் தீமை ஒன்றும் செய்யாது.

7 ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் உன்னைக் காப்பார்: அவரே உன் ஆன்மாவையும் காப்பவர்.

8 ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார், வரும் போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்.

அதிகாரம் 121


1 ஆண்டவர் தம் இல்லம் செல்வோம்' என்று எனக்குச் சொல்லினர்: நான் பெருமகிழ்ச்சியுற்றேன்.

2 யெருசலேமே, இதோ உன் வாயிலில் வந்து நிற்கின்றோம்.

3 மாநகராய் அமைக்கப்பட்டுள்ளது யெருசலேம்: எல்லாம் இசைவாகப் பொருத்தப்பட்டுள்ள நகர் அது.

4 கோத்திரங்கள் அங்குச் செல்கின்றன, ஆண்டவருடைய கோத்திரங்கள் அங்குச் செல்கின்றன: இஸ்ராயேலின் சட்டப்படி ஆண்டவருடைய திருப்பெயரைப் போற்றச் செல்கின்றன.

5 நீதி இருக்கைகள் அங்கே அமைக்கப்பட்டுள்ளன: தாவீதின் இல்லத்து அரியணைகள் அங்குள்ளன.

6 யெருசலேமில் அமைதி நிலவ வேண்டுங்கள்: 'யெருசலேமே, உன் மீது அன்பு வைத்தவர்களுக்கு எத்துன்பமும் இல்லாதிருப்பதாக.

7 உன் மதில்களுக்குள் அமைதி இருப்பதாக: உன் மாளிகைகள் பாதுகாப்புடன் விளங்குவனவாக.

8 அமைதி உன்னகத்து விளங்குவதாக' என்பேன்: என் சகோதரர், நண்பர் பொருட்டு அவ்வாறு சொல்வேன்.

9 உனக்கு எல்லா நன்மையும் உண்டாக நான் மன்றாடுவேன்: ஆண்டவராகிய நம் இறைவனின் இல்லத்தின் பொருட்டு வேண்டுவேன்.

அதிகாரம் 122


1 வானுலகில் உறைபவரே, உம்மை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்.

2 பணியாட்களின் பார்வை தம் தலைவர்களின் கையைப் பார்த்து நிற்பது போலவும், பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கையைப் பார்த்து நிற்பது போலவும் நம் கண்கள் நம் ஆண்டவராகிய கடவுளையே பார்க்கின்றன: நம் மீது இரக்கம் காட்டும் வரை அவரைப் பார்த்தப்படியே இருக்கும்.

3 எம்மீது இரக்கம் வையும்: ஆண்டவரே, எம் மீது இரக்கம் வையும்: ஏனெனில், அளவுக்கு மேல் நாங்கள் சிறுமையுற்றோம்.

4 சுகமாய் வாழ்வு உள்ளவர் செய்யும் ஏளனத்தாலும், செருக்குற்றோர் காட்டும் இகழ்ச்சியாலும் எங்கள் உள்ளம் சலித்துப் போயிற்று.

அதிகாரம் 123


1 ஆண்டவரே நம் சார்பில் இருந்திராவிடில், இஸ்ராயேலர் இங்ஙனம் திரும்பச் சொல்லட்டும்.

2 ஆண்டவரே நம் சார்பில் இருந்திராவிடில், நம்மை எதிர்த்து ஆட்கள் எழுந்த போது,

3 நம்மீது அவர்கள் சினம் மூண்டெழுந்த போது, உயிரோடு நம்மை விழுங்கியிருப்பர்.

4 அப்போது வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்: வெள்ளப் பெருக்கு நம் மேல் பாய்ந்திருக்கும்.

5 அது நம்மேல் பொங்கி எழுந்து பாய்ந்திருக்கும்.

6 ஆண்டவர் போற்றி: ஏனெனில் அவர் நம்மை எதிரிகளின் பற்களுக்கு இரையாகத் தரவில்லை.

7 வேடர்கள் வைத்த கண்ணியினின்று தப்பிய பறவை போல் நாம் உயிர் தப்பினோம்; கண்ணி அறுந்தது, நாம் பிழைத்தோம்.

8 ஆண்டவர் பெயரால் நமக்கு உதவி உண்டு: விண்ணும் மண்ணும் படைத்தவர் அவரே.

அதிகாரம் 124


1 ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சீயோன் மலை போல் இருக்கிறார்கள்: அது அசைவுறுவதில்லை; என்றுமே நிலைத்திருக்கும்.

2 யெருசலேமைச் சுற்றி மலைகள் உள்ளது போல், இப்போதும் எப்போதுமே ஆண்டவர் தம் மக்களைச் சூழ்ந்துள்ளார்.

3 பாவிகளுடைய அதிகாரம் நீதிமான்கள் மீது செல்லாது: நீதிமான்கள் தீமை செய்யத் தம் கைகளை நீட்ட மாட்டார்கள்.

4 ஆண்டவரே, நல்லோர்க்கும் நேரிய மனத்தோர்க்கும் நன்மை செய்தருளும்.

5 நேர்மையற்ற வழிகளில் செல்வோரை ஆண்டவர் தீயவர்களோடு சேர்த்துவிடுவாராக: இஸ்ராயேலுக்கோ சமாதானம் உண்டாவதாக!

அதிகாரம் 125


1 ஆண்டவர் சீயோனின் அடிமைகளை மீட்டு வந்த போது, நாங்கள் கனவு கண்டவர்கள் போல் இருந்தோம்.

2 அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: 'ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!' என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர்.

3 ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம்.

4 ஆண்டவரே, பாலைநிலத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடுவது போல, எங்கள் நிலைமையை மாற்றிவிடும்.

5 கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்.

6 விதை தெளிக்கச் செல்லும் போது, அழுகையோடு செல்கிறார்கள்: அறுத்த அரிகளைச் சுமந்து வரும் போது பெருமகிழ்ச்சியோடு வருவார்கள்.

அதிகாரம் 126


1 ஆண்டவரே, வீட்டைக் கட்டினாலொழிய, அதைக் கட்டுபவர்களின் உழைப்பெல்லாம் வீணே: ஆண்டவரே நகரைக் காத்தாலொழிய, அதைக் காப்பவன் விழிப்பெல்லாம் வீணே.

2 வருந்தியுழைத்து உணவு கொள்பவர்களே, நீஙகள் விடியற்காலையில் எழுந்திருப்பதும் வீண், வெகு நேரம் தூங்காமல் விழித்திருப்பதும் வீணே: ஏனெனில், அவர் தம் அன்பர்களுக்கு உறக்கத்திலும் நன்மை செய்கிறார்.

3 மக்கட்பேறு ஆண்டவருடைய நன்கொடை: வயிற்றின் கனி ஒரு வெகுமதியே.

4 இளமையில் பிறக்கும் மக்கள் வீரனின் கையில் உள்ள அம்பு போல்.

5 அத்தகைய அம்புகளால் அம்பறாத் தூணியை நிரப்புபவன் பேறுபெற்றவன்: நகர வாயிலில் எதிரிகளோடு வாதாடும் போது அவர்கள் தோல்வி காணமாட்டார்கள்.

அதிகாரம் 127


1 ஆண்டவருக்கு அஞ்சும் நீ பேறு பெற்றறோன்: அவர் காட்டிய வழியில் நடப்பவன் நீ பேறு பெற்றோன்.

2 ஏனெனில், உன் கையால் உழைத்து உன் உணவைக் கொள்வாய்: பேறு பெற்றவனாவாய், எல்லாம் உனக்கு நலமாகும்.

3 கனி தரும் கொடி முந்திரி போல் உன் மனைவி உன் வீட்டின் உட்புறத்தில இருப்பாள்: ஒலிவச் செடிகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழ்ந்திருப்பர்.

4 ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்குக் கிடைக்கும் ஆசி இதுவே..

5 சீயோனிலிருந்து ஆண்டவர் உனக்கு ஆசி பொழிவாராக: உன் வாழ்நாளெல்லாம் யெருசலேமின் செழுமையை நீ காணும்படி உனக்கு ஆசி கூறுவராக.

6 உன் மக்களின் மக்களை நீ காண்பாயாக: இஸ்ராயேல் மக்களுக்குச் சமாதானம் உண்டாவதாக!

அதிகாரம் 128


1 இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர் என்று, இஸ்ராயேல் திரும்பச் சொல்லட்டும்.

2 இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர்: ஆனால் என் மீது வெற்றிக் கொள்ளவில்லை.

3 உழவர் என் முதுகின் மீது உழுதார்கள்: நெடியானவாய் அமைந்தன அந்தப் படைச்சால்கள்,

4 ஆண்டவரோ நீதியுள்ளவர்: தீயோர் சுமத்திய நுகத்தைத் தகர்த்தெறிந்தார்.

5 சீயோனைப் பகைப்பவர்கள் எல்லாரும் சிதறுண்டு பின்னடைவார்களாக!

6 கூரை வேயும் புல் போல் அவர்கள் ஆவார்களாக: பிடுங்குவதற்கு முன்பே உலர்ந்து விடுகிறதன்றோ!

7 அவற்றை அறுவடை செய்வதால் கை நிரம்புமா? அவ்வரிகளைக் கட்டுவதால் மடி நிரம்புமா?

8 அவ்வழியே செல்பவர்கள் அவர்களைப் பார்த்து 'ஆண்டவரின் ஆசி உங்கள் மீது தங்குவதாக' என்றோ, 'ஆண்டவருடைய பெயரால் நாங்கள் உங்களுக்கு ஆசி கூறுகிறோம் ' என்றோ கூற மாட்டார்கள்.

அதிகாரம் 129


1 ஆண்டவரே, அளவிலா வேதனையில் உம்மை நோக்கிக் கூவி அழைக்கிறேன்.

2 ஆண்டவரே, என் கூக்குரலுக்குச் செவி சாய்த்தருளும்: என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.

3 ஆண்டவரே, யான் செய்த பாவங்களை நினைவு கூர்வீராகில், உமக்கு முன் யார் நிற்க முடியும்?

4 வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கிறீர்.

5 ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்: அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.

6 என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது: இரவின் காவலர் உதயத்தை எதிர்நோக்குவதை விட, அதிக ஆர்வமுடன் எதிர் நோக்குகின்றது. காவலர் உதயத்தை எதிர் பார்ப்பதற்கு மேலாக,

7 இஸ்ராயேலர் ஆண்டவரை எதிர்ப்பார்ப்பார்களாக: ஏனெனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துணை பொங்கி வழிகின்றது.

8 இஸ்ராயேலரை அவர் மீட்பார்: அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக் கொள்வார்.

அதிகாரம் 130


1 ஆண்டவரே, என் இதயம் இறுமாப்பு கொள்ளவில்லை என் பார்வை மேட்டிமையோடு விளங்கவில்லை; பெரிய காரியங்களையோ, என் ஆற்றலுக்கு மிஞ்சின காரியங்களையோ நான் தேடவில்லை.

2 மாறாக, தாயின் மடியில் குழந்தையிருப்பது போல என்னுள் என் ஆன்மா அமைதியுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்: குழந்தையைப் போல் என் உள்ளம் அமைதியாய் இருக்கிறது.

3 இஸ்ராயேலே, ஆண்டவர் மீது நம்பிக்கை வை: இன்றும் என்றும் அவரை நம்பு

அதிகாரம் 131


1 ஆண்டவரே, தாவீதின் சார்பாக நினைவு கூர்ந்தருளும்: அவர் ஏற்ற துன்பமனைத்தையும் நினைத்துக் கொள்ளும்.

2 ஆண்டவருக்கு அவர் ஆணையிட்டதையும், யாக்கோபு வழிபட்ட வல்லமையுள்ள இறைவனுக்கு அவர் பொருந்தனை செய்ததையும் நினைத்துக் கொள்ளும்.

3 ஆண்டவருக்கு நான் ஓர் இடம் அமைக்கும் வரை,

4 யாக்கோபு வழிபட்ட வல்லமையுள்ள இறைவனுக்கு உறைவிடம் ஏற்படுத்தும் வரை

5 என் வீட்டில் நான் குடியிருக்கச் செல்வதில்லை: உறங்குவதற்குக் கட்டில் மீது ஏறுவதில்லை, கண்கள் அயர நான் விடுவதில்லை’ என்று அவர் கூறிய சபதத்தை நினைவு கூரும்.

6 இதோ வாக்குறுதிப் பேழை எபராத்தாவில் இருக்கிறதென்று கேள்விப்பட்டோம்: இயார் என்னும் வயல் வெளிகளில் அதனைக் கண்டு கொண்டோம்.

7 செல்வோம் அவருடைய உறைவிடத்திற்கே: பணிவோம் அவரது கால்மணை முன்னே!"

8 எழுந்தருளும் ஆண்டவரே, உமது இருப்பிடத்திற்கு எழுந்தருளும்: உமது மாட்சி விளங்கும் உமது பேழையும் எழுவதாக.

9 உம் குருக்கள் நீதியை உடையாய் அணிவார்களாக: உம் புனிதர்கள் பெருமகிழ்ச்சியுடன் களிகூர்வார்களாக.

10 உம் ஊழியன் தாவீதின் பொருட்டு, நீர் அபிஷுகம் செய்தவரிடமிருந்து உமது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதேயும்.

11 தாவீதிற்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறினார்; அவரது வாக்குறுதி தவறாது: 'உம் வழித் தோன்றல் ஒருவனை உம் அரியணை மீது ஏற்றுவேன்.

12 உம் மக்கள் என் உடன்படிக்கையைக் காத்து நான் தரும் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், அவர்களுடைய மக்களும் என்றென்றுமே உம் அரியணை மீது அமர்வர்' என்றார்.

13 ஏனெனில் ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்: தம்முடைய அரியணையாகக் கொள்ள விரும்பினார்.

14 என்றென்றும் என் இளைப்பாற்றியின் இடம் இதுவே: இங்கே நான் தங்குவேன்; ஏனெனில் இதை நான் விரும்பினேன்,

15 இதில் விளையும் உணவுப் பொருளுக்கு என் ஆசியை வழங்குவேன்: அங்குள்ள ஏழை மக்களுக்கு நிறைய உணவு அளிப்பேன்.

16 அங்குள்ள குருக்களை மீட்பென்னும் ஆடையால் உடுத்துவேன்: அங்குள்ள புனிதர்கள் பெரு மகிழ்ச்சியுடன் அக்களிப்பர்.

17 தாவீதுக்கு அங்கே வல்லமை மிகு சந்ததியை எழுப்புவேன்: நான் அபிஷுகம் செய்தவருக்கு ஒரு விளக்கை ஆயத்தம் செய்வேன்.

18 அவருடைய எதிரிகளுக்கு வெட்கமெனும் ஆடையை உடுத்துவேன்: அவர் தலையின் மீதோ நான் வைக்கும் மணிமகுடம் விளங்கும்.'

அதிகாரம் 132


1 சகோதரர் ஒருமித்து வாழ்வது எத்துணை நல்லது! எத்துணை இனியது!

2 தலையினின்று தாடியில் வழிந்து விழும் விலைமிக்க எண்ணெய் போல், ஆரோனின் தாடியிலும் அவரது ஆடையின் விளிம்பிலும் வழிந்தோடும் எண்ணெய் போல் அது இனிமை மிக்கது!

3 கெர்மோன் மலை மீது பெய்யும் பனி போல, சீயோன் மலையில் விழும் பனி போல இனிமை மிக்கது! ஏனெனில், அங்கே தான் ஆண்டவர் தம் ஆசி வழங்குகிறார்: என்றென்றுமுள்ள வாழ்வை அளிக்கின்றார்.

அதிகாரம் 133


1 ஆண்டவரின் ஊழியர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்: இரவு காலங்களில் ஆண்டவரின் இல்லத்தில் நிற்பவர்களே,

2 திருத்தலத்தில் உங்கள் கைகளை உயர்த்தி ஆண்டவரை வாழ்த்துங்கள்.

3 வானமும் வையமும் படைத்தவரான ஆண்டவர், சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி அளிப்பாராக.

அதிகாரம் 134


1 அல்லேலூயா! ஆண்டவர் தம் திருப்பெயரைப் போற்றுங்கள்: ஆண்டவர் தம் ஊழியர்களே, அதனைப் போற்றுங்கள்!

2 ஆண்டவர் தம் இல்லத்தில் இருப்பவர்களே, நம் இறைவனின் இல்லத்து முற்றங்களில் உள்வர்களே, அவரைப் போற்றுங்கள்!

3 ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்: அவர் திருப்பெயருக்குப் புகழ் பாடுங்கள்; ஏனெனில், அது இனிமை மிக்கது.

4 ஆண்டவர் யாக்கோபைத் தமக்கெனத் தேர்ந்துகொண்டார்; இஸ்ராயேலைத் தம் சொந்த உடைமையாகத் தேர்ந்தெடுத்தார்.

5 ஆண்டவர் உயர்ந்தவர்; தேவர்கள் அனைவரையும் விட நம்மீது அதிகாரம் கொண்டவர்: இதை நான் நன்கறிவேன்.

6 விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் நீர்த்திரளின் ஆழத்திலும், தாம் விரும்பியதையெல்லாம் அவர் செய்கின்றார்.

7 பூமியின் கடையெல்லையினின்று முகில்களை வரவழைக்கின்றார்: மின்னல் மின்னி மழை பெய்யச் செய்கின்றார்; பதுங்கியிருந்த இடத்தினின்று காற்றை வரவழைக்கின்றார்.

8 எகிப்தில் தலைப்பேறான அனைத்தையும் வதைத்தார்: மனிதர்களையும் விலங்குகளையும் வதைத்தார்.

9 எகிப்தே, உன்னிடம் அவர் அருங்குறிகளையும் புதுமைகளையும் செய்தார். பாரவோனுக்கும் அவன் ஊழியருக்கும் எதிராக அவற்றைச் செய்தார்.

10 மக்கள் இனங்கள் பலவற்றை அவர் ஒடுக்கி விட்டார்: வலிமை மிக்க மன்னர்களைக் கொன்று குவித்தார்.

11 அமோறைய மன்னன் செகோனையும், பாசான் மன்னன் ஓக் என்பவனையும், கானான் நாட்டு மன்னர்களையும் அவர் வதைத்தொழித்தார்.

12 அவர்களுடைய நாடுகளை உரிமையாக்கி கொடுத்தார்: தம் மக்கள் இஸ்ராயேலுக்கு உடைமையாகக் கொடுத்தார்.

13 ஆண்டவரே, உமது பெயர் என்றென்றும் நிலைத்துள்ளது: ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக மக்கள் உம்மை நினைவுகூர்வர்.

14 ஆண்டவர் தம் மக்களைக் காக்கிறார்: தம் ஊழியர்மீது இரக்கம் கொள்கிறார்.

15 புறவினத்தாரின் சிலைகள் வெள்ளியும் பொன்னுமே: மனிதர்களின் கைவேலையே.

16 அவற்றிற்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண் உண்டு, பார்ப்பதில்லை.

17 செவி உண்டு, கேட்பதில்லை: வாயில் அவற்றிற்கு மூச்சில்லை.

18 அவற்றைச் செய்தவர்கள் அவற்றிற்கு ஒப்பாகின்றனர்: அவற்றின் மீது நம்பிக்கை வைப்பவர்கள், அவற்றிற்குச் சமமாகின்றனர்.

19 இஸ்ராயேல் இனத்தாரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: ஆரோனின் இனத்தாரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.

20 லேவியின் இனத்தாரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: ஆண்டவருக்கு அஞ்சுவாரே, அவரை வாழ்த்துங்கள்.

21 யெருசலேமில் உறையும் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக; சீயோனின்று அவர் வாழ்த்தப் பெறுவாராக.

அதிகாரம் 135


1 ஆண்டவர் நல்லவர் அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவரது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது.

2 தேவர்களுக்கெல்லாம் தேவனைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

3 ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

4 அரும்பெரும் செயல்கள் புரிந்தவர் அவர் ஒருவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

5 ஞானமுடன் வானங்களை அமைத்தவர் அவரே: அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

6 நீர்த்திரள்மீது நிலத்தை அமைத்தவர் அவரே; அவரைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

7 பேரொளி விளக்குகளை ஏற்படுத்தியவர் அவரே; அவரைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

8 பகலை ஆள்வதற்குப் பகலவனைப் படைத்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

9 இரவை ஆள்வதற்கு நிலவையும் விண்மீன்களையும் ஏற்படுத்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

10 எகிப்தியரின் தலைப்பேறுகளை வீழ்த்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

11 எகிப்தியரிடையிலிருந்து இஸ்ராயேலரை வெளியேற்றியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

12 வலிமையுள்ள கரத்தையும், தம் தோளின் பலத்தையும் காட்டியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

14 அக்கடல் நடுவே இஸ்ராயேலை வழிநடத்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

15 பாரவோனையும் அவன் படைகளையும் செங்கடலில் அமிழ்த்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

16 பாலைவனத்தின் வழியே தம் மக்களை அழைத்துச் சென்றவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

17 பெரிய அரசர்களை வதைத்து வீழ்த்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

18 வல்லமை மிக்க அரசர்களைக் கொன்று குவித்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

19 அமோறைய மன்னன் செகோனைக் கொன்றவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

20 பாசான் நாட்டு மன்னன் ஓக் என்பானை வதைத்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

21 அவர்கள் நாட்டை தம் மக்களுக்கு உரிமையாக்கியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

22 தம் ஊழியரான இஸ்ராயேலுக்கு உரிமையாக்கியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

23 தாழ்வுற்ற நிலையில் நம்மை நினைவுகூர்ந்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

24 நம் எதிரிகளிடமிருந்து நம்மை விடுவித்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

25 உயிரினம் அனைத்திற்கும் உணவூட்டுபவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

26 விண்ணக இறைவனைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

அதிகாரம் 136


1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து சீயோனை நினைத்த போது, நாங்கள் கண்ணீர் சிந்தினோம்.

2 அந்த நாட்டு அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.

3 எங்களைச் சிறையாக்கியவர்கள், நாங்கள் பாடும்படி கேட்டார்கள்; எங்களைத் துன்புறுத்தியவர்கள் மகிழ்ச்சிப்பா இசைக்கச் சொன்னார்கள்: 'சீயோனைப் பற்றிக் கீதங்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுங்கள்' என்றார்கள்.

4 ஆண்டவருடைய பாடலை அந்நிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?

5 யெருசலேமே நானுன்னை மறப்பதாயிருந்தால், என் வலக்கை சூம்பிப் போவதாக.

6 உன்னை நான் நினையாதிருந்தால் என் நாவு மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக: எனக்குள்ள மகிழ்ச்சிக்கெல்லாம் மேலானதாக நான் யெருசலேமைக் கருதாவிடில் எனக்கு இதெல்லாம் நிகழ்வதாக.

7 ஆண்டவரே, ஏதோமின் மக்களுக்கு எதிராக யெருசலேமின் நாளை நினைத்துக்கொள்ளும்: 'தகர்த்தெறியுங்கள், அடியோடு தகர்த்தெறியுங்கள்' என்று அவர்கள் சொன்னார்களே!

8 பாழாக்கும் பாபிலோன் புதல்வியே, நீ எங்களுக்குச் செய்த தீமையை உனக்கே செய்கிறவன் பேறு பெற்றவன்.

9 உன் குழந்தைகளைப் பிடித்துக் கல்லின் மேல் மோதி அடிக்கிறவன் பேறு பெற்றவன்.

அதிகாரம் 137


1 ஆண்டவரே, என் முழு மனத்துடன் உம்மைப் போற்றிப் புகழ்வேன்: ஏனெனில் நான் வாய் திறந்து உம்மிடம் சொன்னதைக் கேட்டருளினீர்; வான் தூதர் முன்னிலையில் உமக்குப் புகழ் பாடுவேன்.

2 உமது புனித ஆலயத்தில் உம்மை ஆராதிப்பேன்; உமது இரக்கத்தையும் சொல்லுறுதியையும் நினைத்து, உமது திருப்பெயரைப் புகழ்வேன்; ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உமது திருப்பெயரையும் உம் வாக்குறுதியையும் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

3 நான் உம்மைக் கூவியழைத்த நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: என் ஆன்மாவுக்கு மேன் மேலும் வலிமை தந்தருளினீர்.

4 ஆண்டவரே, நீர் திருவாய் மலர்ந்தருளிய மொழிகளை உலகின் அரசர் அனைவரும் கேட்டு, உம்மைப் போற்றுவார்கள்.

5 ஆண்டவருடைய மகிமை உண்மையில் உன்னதமானது' என்று அவர்கள் ஆண்டவருடைய வழிகளைப் பற்றிப் புகழ்ந்து பாடுவார்கள்.

6 ஆண்டவர் உண்மையாகவே உன்னதமானவர் எனினும், எளியவரைக் கண்நோக்குகின்றார்: செருக்குற்றோரையோ வெகு தொலைவிலிருந்து காண்கிறார்.

7 நான் துன்பத்திடையே நடந்தாலும் என் உயிரைக் காப்பீர்: என் எதிரிகளின் சினத்துக்கு விரோதமாக உமது கரத்தை நீட்டினீர்; உமது வலக்கரம் என்னைக் காப்பாற்றும்.

8 ஆண்டவர் தாம் தொடங்கிய வேலையை எனக்கெனச் செய்து முடிப்பார்: ஆண்டவரே, உமது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது; உம் படைப்புகளைக் கைவிடாதேயும்.

அதிகாரம் 138


1 ஆண்டவரே, நீர் என்னைப் பரிசோதித்து அறிந்திருக்கிறீர்:

2 நான் அமர்வதும் எழுவதும், என் வாழ்க்கை முழுவதுமே நீர் அறிந்திருக்கிறீர்: என் நினைவுகள் எல்லாம் முன்பிருந்தே உமக்கு வெளிச்சம்.

3 நான் நடப்பதும் படுப்பதும் எல்லாமே நீர் அறிந்துள்ளீர்: நான் செல்லும் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தனவே.

4 என் வாயில் வார்த்தை உருவாகு முன்பே, நீர் எல்லாம் அறிந்திருக்கிறீர்.

5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்: உம் திருக்கரத்தை என் மேல் வைக்கிறீர்.

6 இத்தகைய அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது, உன்னதமானது: அதை நான் புரிந்துகொள்ள முடியாது.

7 உமது ஆவியை விட்டு, நான் எங்கே தொலைவில் போகக் கூடும்? உம்முடைய திருமுன்னிலையை விட்டு, நான் எங்கே ஒளியக்கூடும்?

8 நான் வானகத்துக்குப் பறந்து சென்றால், நீர் அங்கே இருக்கிறீர்! பாதாளத்துக்குச் சென்று படுத்துக் கொண்டாலும் அங்கேயும் இருக்கிறீர்!

9 நான் விடியற்காலையில் சிறகடித்துப் பறந்து சென்ற போதிலும், கடல்களின் கடையெல்லைகளில் வாழ்ந்தாலும்.

10 அங்கேயும் உமது கரம் என்னை நடத்திச் செல்லும்: உமது வலக்கரம் என்னைத் தாங்கி நிற்கும்.

11 இருளாவது என்னை மூடிக்கொள்ளாதோ: ஒளிபோல, இரவும் என்னைச் சூழ்ந்துகொள்ளாதோ' என்று நான் விரும்பினாலும்;

12 இருள் கூட உமக்கு இருட்டாயில்லை, இரவும் உமக்குப் பகலைப் போல வெளிச்சமாயிருக்கிறது: இருளும் உமக்கு ஒளி போலிருக்கும்.

13 ஏனெனில், நீரே என் உள் உறுப்புகளை உண்டாக்கினீர், என் தாயின் கருவில் என்னை உருவாக்கியவர் நீரே.

14 இவ்வளவு வியப்புக்குரிய விதமாய் நீர் என்னைப் படைத்ததை நினைத்து நான் உம்மைப் போற்றுகிறேன்; உம்முடைய செயல்கள் அதிசயமுள்ளவை என்று உம்மைப் புகழ்கிறேன்: என்னை முற்றிலும் நீர் நன்கறிவீர்.

15 என் உடலின் அமைப்பு உமக்குத் தெரியாததன்று; மறைவான விதத்தில் நான் உருவானதையும், பூமியின் ஆழத்தில் நான் உருப்பெற்றதையும் நீர் தெரிந்திருந்தீர்.

16 என் செயல்களை உம் கண்கள் கண்டன, உமது நூலில் எல்லாம் எழுதப்பட்டுள்ளன: எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்தில் நீர் எனக்கு நாட்களைக் குறித்தீர்.

17 இறைவா, உம்முடைய நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!

18 உம் நினைவுகளை அளவிட முற்பட்டால் அவை கடல் மணலிலும் மிகுதியானவையாயுள்ளன. அவற்றை எண்ணி முடித்தாலும் இன்னும் வியப்பில் ஆழ்ந்தவனாய்த் தான் உம் திருமுன் நிற்கிறேன்.

19 இறைவா, நீர் தீயவனை ஒழித்துவிட்டால் எவ்வளவு நலம்! பழிகாரர் உம்மிடமிருந்து ஒழிவார்களாக!

20 ஏனெனில் அவர்கள் வஞ்சகமுடன் உம்மை எதிர்க்கிறார்கள்: உம் எதிரிகள் சதி செய்து தலை தூக்குகிறார்கள்.

21 ஆண்டவரே, உம்மைப் பகைக்கிறவர்களை நானும் பகைக்கிறேன் அன்றோ? உம்மை எதிர்ப்பவர்களை நானும் வெறுக்கிறேன் அன்றோ?

22 முழுமனத்துடன் நான் அவர்களை வெறுக்கிறேன்: அவர்கள் எனக்கு எதிரிகளாயினர்.

23 இறைவா, நீர் என் உள்ளத்தைப் பரிசோதித்து அறியும்: உள் உணர்வுகளை அறிந்தவராய் என்னைச் சோதித்துப் பாரும்.

24 தீய வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்: முன்னோர் காட்டிய வழியில் என்னை நடத்தியருளும்.

அதிகாரம் 139


1 ஆண்டவரே, தீயோனிடமிருந்து என்னை விடுவியும்: கொடுமை செய்வோனிடமிருந்து என்னைக் காத்தருளும்.

2 தம் மனத்தில் தீமையை நினைப்பவர்களிடமிருந்து என்னை விடுவியும்: எந்நாளும் சண்டை சச்சரவுகளைக் கிளப்புவோரிடமிருந்து என்னை காத்தருளும்.

3 அவர்கள் தம் நாவுகளைப் பாம்பின் நாவைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்: அவர்கள் உதட்டின் கீழ் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு.

4 ஆண்டவரே, தீயவன் கையினின்று என்னை மீட்டுக் கொள்ளும், கொடுமை செய்பவனிடமிருந்து என்னைக் காத்தருளும்: அவன் என்னைத் தடுக்கி விழச் செய்யப் பார்க்கிறான்.

5 செருக்குற்றோர் எனக்கு மறைவாகக் கண்ணி வைக்கிறார்கள்: வலை போல் எனக்குக் கண்ணி விரிக்கிறார்கள், வழியோரம் எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள்.

6 நானோ ஆண்டவரை நோக்கி வேண்டுவது, 'நீரே என் இறைவன்': ஆண்டவரே, என் குரலைக் கேட்டருளும், என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

7 ஆண்டவரே, இறைவனே, எனக்கு வல்லமை மிக்க துணையானவரே, போர் நிகழும் நாளில் என் தலைக்குக் கவசமாய் இருப்பவர் நீரே.

8 ஆண்டவரே, தீயவனின் விருப்பப்படி நிகழ விடாதேயும்: அவனுடைய எண்ணங்கள் நிறைவேற விடாதேயும்.

9 என்னைச் சூழ்பவர்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்: அவர்கள் பேசும் தீமை அவர்கள் மேலே விழுவதாக.

10 நெருப்புத் தழல் அவர்கள் மேல் விழுவதாக: மீளவும் எழாதபடி படுகுழியில் தள்ளப்படுவார்களாக.

11 தீ நாக்கு படைத்த மனிதன் உலகில் நெடுநாள் வாழ்வதில்லை: கொடுமை செய்பவன் மீது திடீரெனத் தீமைகள் வந்து விழும்.

12 ஏழைக்கு ஆண்டவர் நீதி வழங்குவார்: எளியவர்களுக்கு நியாயம் கூறுவாரென அறிவேன்.

13 நீதிமான்களோ உமது பெயரைக் கொண்டாடுவர்: நேர்மையுள்ளவர்கள் உம் திரு முன் வாழ்வர் என்பது உறுதி.

அதிகாரம் 140


1 ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கூவுகிறேன்: விரைவாய் எனக்குத் துணை செய்யும்.

2 உம்மை நோக்கி நான் கூப்பிடும் போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்: தூபம் போல் என் மன்றாட்டு உம்மிடம் எழுக; மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்க.

3 ஆண்டவரே, என் நாவுக்குக் காவல் வைத்தருளும்: என் நாவாகிய வாயிலை காத்துக் கொள்ளும்.

4 என்னிதயம் தீமையை நாட விடாதேயும்; பக்கியற்றவனாய் நான் தீவினைகளைச் செய்ய விடாதேயும்: தீவினை செய்யும் மனிதர்களோடு சேர்ந்து இனிய விருந்துண்ண விடாதேயும்.

5 நீதிமான் என்னை வதைக்கட்டும், அது எனக்கு நல்லது; அவன் என்னைத் தண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெய் போல: அந்த எண்ணெயை நான் விரும்பாமலிரேன்; அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுகிறேன்.

6 அவர்களுடைய தலைவர்கள் கல்மலையிலிருந்து கீழே தள்ளுண்டு போகிற போது, என் வார்த்தைகள் எவ்வளவு இனிமையானவையென்று கேட்டறிவார்கள்.

7 விழும் போது மண் பிளந்து சிதறி விடுகிறது போல், அவர்களுடைய எலும்புகள் பாதாளத்தின் வாயிலில் சிதறும்.

8 ஏனெனில், ஆண்டவராகிய இறைவா, என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்; நான் அழிய விடாதேயும்.

9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும்: தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.

10 தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளிலேயே ஒருங்கே வந்து விழுவார்களாக: நானோ பாதுகாப்புடன் செல்வேனாக.

அதிகாரம் 141


1 ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுகிறேன்: பெருங்குரல் எழுப்பி ஆண்டவரை மன்றாடுகிறேன்.

2 எனக்குற்ற நெருக்கடியை அவர் முன்னிலையில் எடுத்துச் சொல்லுகிறேன்: அவர் திருமுன்னே என் கவலையை உரைக்கிறேன்.

3 என்னகத்துள் என் மனம் கவலையுற்றிருந்தது: நீரோ நான் செல்லும் வழியை அறிந்தேயிருக்கிறீர்: நான் செல்லும் வழியில் அவர்கள் கண்ணி வைத்துள்ளனர்.

4 வலப்புறம் என் கண்ணைத் திருப்புகிறேன்; என்னைக் கவனிப்பவர் ஒருவருமில்லை: எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று. என்னைப் பற்றிக் கவலைப்படுபவர் யாருமில்லை.

5 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்: 'நீரே என் அடைக்கலம்; வாழ்வோர் பூமியில் நீரே என் கதி.'

6 என் குரலுக்கு நீர் செவிசாய்த்தருளும்; ஏனெனில் துயர்மிக்கவனானேன்: என்னைத் துன்புறுத்துவோரினின்று எனக்கு விடுதலையளித்தருளும்; ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமை மிக்கவர்கள்.

7 சிறையினின்று என்னை விடுவித்தருளும்; உமது பெயருக்கு நான் நன்றிசெலுத்துவேன்: நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பர்; ஏனெனில் நீரெனக்கு நன்மை செய்கிறீர்.

அதிகாரம் 142


1 ஆண்டவரே, என் செபத்தைக் கேட்டருளும், உமது சொல்லுறுதிக்கேற்ப என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும்: உமது நீதி நேர்மைக்கு ஏற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்.

2 நீதி விசாரணைக்கு அடியேன் என்னை அழைக்காதேயும்; ஏனெனில், வாழ்வோருள் எவனும் உமது திருமுன் நீதிமான் என்று சொல்வதற்கில்லை.

3 எதிரியானவன் என்னைத் துன்புறுத்துகிறவன், என்னை நிலைகுலையச் செய்தான்: என்றோ இறந்தொழிந்தவர்களைப் போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.

4 எனவே, என் உயிர் என்னகத்துள் ஒடுங்கிப் போயிற்று: என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.

5 கடந்த காலத்தை நினைத்துக் கொள்கிறேன், உம் செயல்கள் அனைத்தையும் குறித்து தியானம் செய்கிறேன்: உம் கைவேலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறேன்.

6 உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகிறேன்: வறண்ட நிலம் நீரைத் தேடுவதுபோல், என் ஆன்மா உம்மைத் தேடுகிறது.

7 ஆண்டவரே, விரைவாக என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; ஏனெனில் என் உள்ளம் சோர்ந்துபோகின்றது: என்னிடமிருந்து உம் பார்வையைத் திருப்பிக்கொள்ளாதேயும்; கீழுலகில் செல்வோர்க்கு இணையாய் விடுவேன்.

8 உமதருளை நான் விரைவாய்க் கண்டடையச் செய்யும்: ஏனெனில் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எவ்வழியில் நடப்பதென எனக்கு அறிவித்தருளும்: ஏனெனில் உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.

9 ஆண்டவரே, என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்: உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

10 உம் திருவுளப்படி நடக்க எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில் நீரே என் இறைவன்: நல்லது உமது ஆவி, அது என்னைச் செய்மையான நிலத்தில் நடத்துவதாக.

11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு, எனக்கு வாழ்வளித்தருளும்: உமது கருணையை முன்னிட்டு நெருக்கிடையினின்று என் ஆன்மாவை விடுவித்தருளும்.

12 உமது அருளுக்கேற்ப என் எதிரிகளை அழித்து விடும்: என்னைத் துன்பத்துக்குள்ளாக்குவோர் அனைவரையும் ஒழித்து விடும்; நான் உம் ஊழியன் அன்றோ!

அதிகாரம் 143


1 என் அடைக்கலப் பாறையாகிய ஆண்டவர் போற்றி; போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர்: சண்டையிட என் கைக்குப் பலமளிப்பவர் அவரே.

2 எனக்கு இரக்கம் காட்டுபவர், என் அடைக்கலக்கோட்டை அவரே: எனக்குப் பாதுகாப்பும் விடுதலையும் அளிப்பவர் அவரே. என் கேடயமும் புகலிடமும் அவரே: மக்கள் இனத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே.

3 ஆண்டவரே, நீர் மனிதனைப் பற்றிக் கவலைப்பட அவன் யார்? அவனைப் பற்றி நீர் நினைக்க அவன் யார்?

4 அவன் ஒரு மூச்சுக்கு ஒப்பானவன்: அவன் வாழ்நாள் மறைந்து போகும் நிழலை ஒத்தது.

5 ஆண்டவரே, உம் வானங்களைத் தாழ்த்தும், இறங்கிவாரும்: நீர் மலைகளைத் தொடும், அவைகள் புகையும்.

6 மின்னல் மின்னச் செய்யும், அவர்களைச் சிதறடியும்: உன் அம்புகளை எய்யும், அவர்களைக் கலங்கடியும்.

7 வானினின்று உமது கரத்தை நீட்டியருளும்: பெரு வெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்துக் காத்தருளும்.

8 அவர்கள் பேசுவது பொய்: அவர்கள் செய்யச் சபதமிடுவது வஞ்சகம்.

9 இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடலைப் பாடுவேன்: பத்து நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.

10 மன்னர்களுக்கு வெற்றியளிப்பவர் நீரே: உம் ஊழியன் தாவீதை விடுவித்தவர் நீரே.

11 தீயவரின் வாள்படையினின்று என்னை விடுவித்தருளும்: வேற்றினத்தார் கையினின்று என்கைக் காத்தருளும். அவர்கள் பேசுவது பொய்: அவர்கள் செய்யச் சபதமிடுவது வஞ்சகம்.

12 இளமையுடன் திகழும் எம் மக்கள் வளரும் செடிகள் போல் இருப்பார்களாக: எம் இளங்குமரிகள் செதுக்கப்பட்ட மூலைக்கற்கள் போலவும், ஆலயத் தூண்கள் போலவும் இருப்பார்களாக.

13 எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக: எல்லாவிதத் தானியங்களாலும் நிறைந்திருப்பனவாக. எங்கள் ஆடுகள் ஆயிரம் மடங்கு பலுகட்டும்: எங்கள் வயல்களில் அவைகள் பல்லாயிரமாகப் பெருகட்டும்.

14 எங்கள் மாடுகளும் பலுகட்டும்; எங்கள் நகர மதில்களுக்குச் சேதமோ, எங்களுக்கு நாடு கடத்தப்பட்ட வாழ்வோ இல்லாதிருக்கட்டும்: எங்கள் ஊர்த் தெருக்களில் புலம்பல் இல்லாதிருக்கட்டும்.

15 இந்நலன்களை அடைந்த மக்கள் பேறுபெற்றோர்: ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.

அதிகாரம் 144


1 என் இறைவா, என் அரசே, நான் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்: என்றென்றும் உம் திருப்பெயரைப் வாழ்த்துவேன்.

2 நாள் தோறும் நான் உம்மை வாழ்த்துவேன்: என்றென்றைக்கும் உம் திருப்பெயரைப் புகழ்வேன்.

3 ஆண்டவர் மிக உயர்ந்தவர், மிகுந்த புகழ்ச்சிக்குரியவர்: அவரது மேன்மைக்கு அளவேயில்லை.

4 தலைமுறை தலைமுறையாக மனிதர் உம்முடைய செயல்களை எடுத்துரைப்பர்: தலைமுறை தலைமுறையாக உமது வல்லமையை வெளிப்படுத்துவார்கள்.

5 உம்முடைய மகத்துவத்தின் சொல்லரிய மாட்சிமையைப் பற்றிப் பேசுவர்: உம் வியத்தகு செயல்களை எடுத்துரைப்பர்.

6 அச்சமிகு உம் செயல் வலிமையை எடுத்துச் சொல்வர்: உமது மேன்மையைப் பறைசாற்றுவர்.

7 உமது நன்மைப் பெருக்கின் புகழை வெளிப்படுத்துவர்: உமது நீதியை நினைத்து அக்களிப்பர்.

8 அன்பும் அருளும் உள்ளவர் ஆண்டவர்: சினங் கொள்ளத் தாமதிப்பவர், அருள் உள்ளம் படைத்தவர்.

9 ஆண்டவர் அனைவருக்கும் நன்மை செய்பவர்: தம் படைப்புகள் அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.

10 ஆண்டவரே, உம்முடைய படைப்புகள் யாவும் உம்மைப் புகழுக: உம்முடைய புனிதர்கள் உம்மை வாழ்த்துக.

11 உமது அரசின் மகிமையை அவர்கள் எடுத்துரைப்பார்களாக: உமது ஆற்றலைப் பறைசாற்றுவார்களாக.

12 இவ்வாறு மனுமக்கள் உம் வல்லமையை அறிந்துகொள்வர்: உமது மாண்புமிக்க அரசின் வல்லமையைத் தெரிந்து கொள்வர்.

13 உமது அரசு ஊழிஊழியாக உள்ள அரசு; உம்முடைய ஆட்சி தலைமுறை தலைமுறையாக நிலைத்துள்ளது: ஆண்டவர் தம் வார்த்தைகளிலெல்லாம் உண்மையுள்ளவராயிருக்கிறார்; தம் செயல்களிலும் புனிதமானவர்.

14 விழுந்து நொந்துபோன யாவரையும் ஆண்டவர் தாங்குகிறார்: தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி விடுகிறார்.

15 ஆண்டவரே, எல்லாருடைய கண்களும் உம்மையே நம்பிக்கையுடன் நோக்குகின்றன: எல்லாருக்கும் நீர் தக்க காலத்தில் உணவளிக்கிறீர்.

16 உமது கையைத் திறந்து விடுகிறீர்: உயிருள்ள எதையும் உம் இரக்கத்தினால் நிரப்புகிறீர்.

17 ஆண்டவர் தம் வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்: தம் செயல்களிலெல்லாம் புனிதமானவர்.

18 தம்மைக் கூவியழைக்கும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்: நேர்மையுடன் தம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

19 தமக்கு அஞ்சுகிறவர்களின் ஆசையை நிறைவேற்றுவார்: அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டு மீட்பளிப்பார்.

20 தம்மீது அன்பு செலுத்தும் யாவரையும் ஆண்டவர் காப்பாற்றுகிறார்: தீயோர் யாவரையும் அழித்து விடுவார்.

21 ஆண்டவருடைய புகழ்ச்சியை என் நா எடுத்தியம்புவதாக: மனிதர் யாவரும் என்றென்றும் அவருடைய திருப்பெயரை வாழ்த்துவார்களாக.

அதிகாரம் 145


1 அல்லேலூயா! நெஞ்சே நீ ஆண்டவரைப் புகழ்வாய்.

2 என் வாழ்நாளில் ஆண்டவரைப் புகழ்வேன்: என் உயிருள்ள வரையில் நான் கடவுளுக்குப் புகழ் பாடுவேன்.

3 தலைவர்களிடம் நம்பிக்கை வையாதீர்கள்: மனிதனை நம்ப வேண்டாம்; அவனால் மீட்பு இல்லை.

4 அவனுடைய ஆவி பிரிய, தான் தோன்றிய மண்ணுக்கே திரும்புகிறான்: அப்போது அவன் திட்டங்கள் எல்லாம் பாழாகும்.

5 யாக்கோபின் இறைவன் யாருக்குத் துணை புரிகிறாரோ அவன் பேறுபெற்றவன்: தம் கடவுளாகிய ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பான்.

6 அவரே வானத்தையும் வையத்தையும் கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினார்: அவர் என்றென்றும் சொல் தவறாதவர்.

7 துன்புறுத்தப்படுவோர்க்கு நீதி வழங்குகிறார்: பசியுற்றோர்க்கு உணவளிக்கிறார்; சிறைப்பட்டவர்களை ஆண்டவர் விடுவிக்கிறார்.

8 குருடருடைய கண்களை ஆண்டவர் திறந்து விடுகிறார்; தாழ்த்தப்பட்டவர்களை ஆண்டவர் தூக்கி விடுகிறார்; நீதிமான்கள் மீது ஆண்டவர் அன்பு கூர்கிறார்.

9 அந்நியரை ஆண்டவர் காப்பாற்றுகிறார்; அனாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார்: பாவிகளின் திட்டங்களைக் கலைத்து விடுகிறார்.

10 நித்தியத்துக்கும் ஆண்டவர் அரசாள்வார்: சீயோனே, உன் இறைவன் தலைமுறை தலைமுறையாக ஆள்வார்.

அதிகாரம் 146


1 அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்: ஏனெனில் அவர் இனிமையுள்ளவர்; அவரைப் புகழ்வது தகுமே.

2 ஆண்டவர் யெருசலேமை அமைக்கிறார்: சிதறுண்ட இஸ்ராயேலை ஒன்று சேர்க்கிறார்.

3 உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்குகிறார்: அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

4 விண்மீன்களின் எண்ணிக்கையை வரையறுக்கிறார்: ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.

5 நம் ஆண்டவர் மிக உயர்ந்தவர், வல்லமை மிக்கவர்: அவருடைய ஞானத்துக்கு அளவேயில்லை.

6 தாழ்ந்தவர்களை ஆண்டவர் தூக்கிவிடுகிறார்: கெட்டவர்களைத் தரைமட்டும் தாழ்த்தி விடுகிறார்.

7 நன்றியுணர்வோடு ஆண்டவருக்குப் பாடுங்கள்: யாழ்கொண்டு நம் இறைவனுக்கு இசை எழுப்புங்கள்.

8 வானத்தில் மேகங்கள் கவியச் செய்பவர் அவரே: பூமி மீது மழையைப் பொழிபவர் அவரே. மலைகளில் புல் பூண்டுகள் முளைக்கச் செய்பவர் அவரே: மனிதனுக்குப் பயன்படச் செடி கொடி வளரச் செய்பவர் அவரே.

9 கால்நடைகளுக்கு உணவு அளிப்பவர் அவரே: தம்மை நோக்கிக் கூவும் காக்கை குஞ்சுகளுக்குத் தீனி தருபவர் அவரே.

10 குதிரைகளின் பலத்தைப் பொருட்படுத்துபவர் அல்லர் அவர்: மனிதனின் கால் பலத்தைத் தேடுபவர் அல்லர்.

11 அவருக்கு அஞ்சுவோரே அவருக்கு உகந்தவர்: அவரது நன்மைத் தனத்தை நம்புவோரே அவருக்கு உகந்தவர்.

அதிகாரம் 147


1 யெருசலேமே, உன் ஆண்டவரைப் போற்றுவாய்: சீயோனே, உன் இறைவனைப் புகழ்வாய்.

2 ஏனெனில், அவர் உன் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தினார்: உன்னகத்துள்ள உன் மக்களுக்கு ஆசியளித்தார்.

3 அமைதி நிலவ உன் எல்லைகளைக் காத்தார்: கோதுமை வளத்தால் உனக்கு நிறைவு அளிக்கிறார்.

4 உலகுக்குத் தம் ஆணையை விடுக்கிறார்: விரைந்து செல்கிறது அவருடைய வார்த்தை.

5 வெண் கம்பளி போல் பனி பொழியச் செய்கிறார்: உறை பனியைச் சாம்பல் போல் இறைக்கிறார்.

6 அப்பத்துண்டெனக் கல்மழை பொழிகிறார்: அவர் உண்டாக்கும் குளிரால் தண்ணீர் உறைந்து போகும்.

7 அவர் ஒரு வார்த்தை சொல்ல, உறைந்தது உருகிவிடும்: தம் காற்றை ஏவி விட, உருகிய நீர் ஓடத் தொடங்கும்.

8 யாக்கோபின் இனத்தார்க்குத் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் நியமங்களையும் அறிவித்தார்.

9 வேறெந்த இனத்தார்க்கும் இங்ஙனம் செய்ததில்லை: தம் கட்டளைகளை அவர்களுக்கு வெளியிட்டதில்லை. அல்லேலூயா!

அதிகாரம் 148


1 அல்லேலூயா! வானத்தினின்று ஆண்டவரைப் புகழுங்கள்: உன்னதத்தில் நின்று அவரைப் போற்றுங்கள்.

2 ஆண்டவர் தம் தூதர்களே, அவரைப் புகழுங்கள்: அவருடைய படைகளே, நீங்களெல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

3 கதிரோனே, நிலாவே, அவரைப் புகழுங்கள்: ஒளிவிடும் விண்மீன்களே, எல்லாம் அவரைப் போற்றுங்கள்.

4 உன்னத வானங்களே அவரைப் புகழுங்கள்: வானங்களுக்கு மேலுள்ள நீர்த்திரளே அவரைப் போற்றுங்கள்.

5 படைப்பு எல்லாம் ஆண்டவருடைய பெயரைப் புகழட்டும்: ஏனெனில், அவர் கட்டளையிட எல்லாம் உண்டாயின.

6 அவை என்றென்றும் எக்காலத்தும் நிலைத்திருக்கச் செய்தவர் அவரே: அவர் கொடுத்த கட்டளையை அவை மீறுவதில்லை.

7 புவியில் நின்று ஆண்டவரைப் புகழுங்கள்: கடல் மீன்களும் ஆழத்தில் உள்ளவையும் அவரைப் புகழட்டும்.

8 நெருப்பும் கல்மழையும் வெண்பனியும் மூடுபனியும், அவர் சொற்படி கேட்கும் புயல் காற்றும்,

9 மலைகளும் எல்லாக் குன்றுகளும், பழந்தரும் மரங்களும் கேதுரு மரங்களனைத்தும்,

10 நாட்டு விலங்குகளும் எல்லாக் கால்நடைகளும், ஊர்வன, பறப்பனவும்,

11 உலகத்து அரசர்களும் மக்களனைவரும், தலைவர்கள் உலகத்தின் நீதிபதிகள் அனைவருமே,

12 இளைஞர்கள், இளங்குமரிகள், முதியோர் சிறுவருடன் கூடி ஆண்டவரைப் புகழுங்கள்.

13 படைப்பு எல்லாம் ஆண்டவரைப் புகழட்டும்: ஏனெனில் அவருடைய பெயர் மட்டும் உன்னதமானது; அவருடைய மகத்துவம் வானம் பூமியனைத்தையும் கடந்தது.

14 தம் மக்களை மேன்மைப்படுத்தி வலிமையடையச் செய்தார்: அவர் செய்தது அவர் அடியார்க்குப் பெருமை அளித்தது. அவருடைய புனிதர்கனைவரும் போற்றப்படுக; அவரை அண்மித்துள்ள இஸ்ராயேல் மக்களுக்குப் பெருமை அளித்தது. அல்லேலூயா!

அதிகாரம் 149


1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு படலைப் பாடுங்கள்: புனிதர்கள் சபையில் அவரது புகழ் ஒலிப்பதாக!

2 இஸ்ராயேல் இனத்தார் தம்மைப் படைத்தவரை நினைத்து அகமகிழ்வார்களாக: சீயோன் மக்கள் தம் அரசரை நினைத்துக் களிகூர்வார்களாக.

3 நடனம் செய்து அவரது பெயரைப் புகழ்வார்களாக: தம்புராவும் யாழும் கொண்டு அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக.

4 ஏனெனில் ஆண்டவர் தம் மக்கள் மீது அன்பு கூர்கிறார்: தாழ்ந்தவர்களுக்கு மீட்பளித்து அணி செய்கிறார்.

5 மகிமை பொங்கப் புனிதர்கள் களிகூர்வார்களாக: தம் படுக்கைகளில் மகிழ்ந்து பாடுவார்களாக!

6 அவர்களது நாவில் இறைவனது பெரும் புகழ் ஒலிப்பதாக: இருபுறமும் கருக்குள்ள பட்டயங்களைத் தம் கரங்களில் தாங்குவார்களாக!

7 அவ்வாறு புற இனத்தாரைப் பழிவாங்குவார்களாக: மக்களினத்தாரைக் கண்டிப்பார்களாக!

8 அவர்களுடைய மன்னர்களைச் சிறைப்படுத்துவார்களாக: அவர்களுடைய தலைவர்களுக்கு இருப்பு விலங்கிடுவார்களாக!

9 குறிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்களுக்கு வழங்குவார்களாக: இத்தகைய மகிமை அவர் தம் புனிதர்கள் அனைவர்க்கும் உண்டாகும்.

அதிகாரம் 150


1 அல்லேலூயா! ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: மாண்பு மிக்க வான் தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

2 அவருடைய மாண்பு மிக்க செயல்களை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவரது உன்னத மாட்சியை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

3 எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

4 முரசொலித்து, நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: நரம்பிசைத்து, குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

5 நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: கைத்தாள ஒலி முழுங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

6 உயிருள்ளதெல்லாமே அவரைப் புகழ்ந்தேத்துவதாக. அல்லேலூயா!