லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரையும் நகராட்சித் தலைவர் ஆர்ட்டுரோ கடத்திச் சென்று தன் வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்தார். “மதம்” என்னும் மூட நம்பிக்கையை மீண்டும் இந்த வட்டாரத்தில் தலைதூக்கச் செய்யும் மூவரும் இதோ என் பிடிக்குள் சிக்கியிருக்கிறார்கள்.
இந்த ஏமாற்றுக் குழந்தைகளை நம்பி ஆயிரக்கணக்கில் அங்கு கூடிக் கிடக்கும் முட்டாள்கள் இனி என்ன செய்வார்கள்? கன்னிகையாம்! காட்சியாம்! ஏமாந்த இச்சிறுவர்களைச் செய்கிற சித்திரவதையில் இவர்கள் பயந்து நடுங்கி, தாங்கள் எந்தக் காட்சி யையும் காணவில்லை என்று ஓலமிடும்போது தெரியும் ஆர்ட்டுரோ வெற்றி பெற்றான் என்று! அந்த அறைக்குள்ளேயே அடை பட்டுக் கிடக்கட்டும். பசியும் பயமும் ஏற்பட்டால்தான் வழிக்கு வருவார்கள் என்று ஆர்ட்டுரோ கர்வத்துடன் சொல்லிக் கொண்டார்.
குழந்தைகள் மூவரும் கலங்கிய கண்களுடன் ஒருவரை யயாருவர் பார்த்துக் கொண்டு, என்ன செய்வது, என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தனர். அவ்ரம் நகர கடிகாரங்கள் நடுப்பகல் பன்னிரண்டு மணியை ஒலிக்க ஆரம்பித்தன. பகல் பன்னிரண்டு மணி! அவர்கள் கோவா தா ஈரியாவில் இருக்க வேண்டிய நேரம்! தேவ அன்னை அவர்களை அங்கு இருக்கும்படி கூறியிருந்தார்கள். ஆட்சித் தலைவர் இப்படி ஏமாற்றி விட்டார்! அவர்களால் ஒன்றுமே சிந்திக்கக்கூட இயலவில்லை. கலக்கமும், பயமும் அவர்களிடம் அதிகரித்தன.
பிரான்சிஸ் அங்கு நிலவிய மவுனத்தினூடே, “நம் அம்மா ஒருவேளை இங்கே தோன்றுவார்களோ?” என்றான். ஒருவேளை அப்படி இருக்கக் கூடும்! ஏதாவது அடையாளம் காணப்படுமா? ஒரு வெளிச்சம்? ஒரு குரல்? எதுவும் அங்கு காணப்படவில்லை. நடுப் பகல் தாண்டி விட்டது. ஒரு அறிகுறி கூட இல்லை. மாதாவிட மிருந்து எந்தச் செய்தியும் இல்லை! ஜஸிந்தாவுக்கு அழுகை வந்து விட்டது. அவள் அழுதாள். பிரான்சிஸ் கண்களும் நிரம்பத் தொடங்கின. அவன் லூஸியாவிடம்,
“நாம் கோவா தா ஈரியாவுக்குப் போகாததால் நம் அம்மா வருத்தப்படுவார்கள் என்ன? இனி அவர்கள் வர மாட்டார்களோ? லூஸியா, அவர்கள் வருவார்களா?” என்று தயக்கத்துடன் கேட்டான்.
“ஒன்றும் தெரியவில்லையே” என்ற லூஸியா மீண்டும் சற்று திடத்துடன், “அவர்கள் வருவார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களைப் பார்க்க எப்படி விரும்புகிறேன்!” என்றாள்.
இதைக் கேட்டதிலிருந்து பிரான்சிஸ் திடமடைந்ததாக லூஸியா கூறுகின்றாள். ஜஸிந்தாவால்தான் அழுகையை அடக்க முடியவில்லை. பாவம் ஏழு வயதுதானே! “நம் அம்மா அப்பா இனி நம்மைக் காண மாட்டார்கள். நம்மைப் பற்றி ஒன்றுமே அவர்கள் அறிய மாட்டார்களே” என்றாள் கண்ணீருடன்.
“ஜஸிந்தா, அழாதே. நம் அம்மா கூறியபடி நாம் பாவிகளுக் காக இதை சேசுவுக்கு ஒப்புக்கொடுப்போம்” என்று கூறிய பிரான்சிஸ், உடனே மேலே பார்த்துக்கொண்டு, “என் சேசுவே, இதெல்லாம் உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும் ஏற்கிறேன்” என்றான். உடனே ஜஸிந்தா தன் கண்ணீரை வழித்துக்கொண்டே, “பாப்பரசருக் காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிரான பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறினாள்.
அதிலிருந்து இரவு வரை குழந்தைகள் சற்றுத் திடமாக இருந்தார்கள். இரவு வர வர, ஜஸிந்தாவுக்கு அவள் தாயின் நினைவு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. இராப் பொழுதை அந்த அறை யிலேயே மூவரும் கழித்தனர். வீட்டையும், பெற்றோரையும் விட்டு ஆர்ட்டுரோவின் ஒரு அறையில் அன்று இரவு அவர்கள் அனுபவித்த தனிமை, பயம் இவற்றை அச்சிறு உள்ளங்கள், “நம் அன்னை கூறியபடி சேசுவின் அன்புக்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற் காகவும்” என்று மிகுந்த பொறுமையுடன் ஏற்றிருந்தனர். ஒரு மாதத் திற்கு முன் அவர்கள் கண்ட நரகக் காட்சி, பாவிகளுக்காக எந்தத் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளச் செய்தது.
மறுநாள் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி, காலை பத்து மணிக்கு ஆர்ட்டுரோ அங்கு வந்தார். குழந்தைகளை ஆட்சி மன்றக் கட்டடத் திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு நீண்ட கடுமையான விசாரணை நடந்தது. மூன்று பேரும் அது முடியும்போது மிகவும் களைத்து விட்டனர்.
அவ்விரசாரணையின் முடிவு முன்போலவே தான். அவர்கள் கோவா தா ஈரியாவில் ஓர் ஒளி பொருந்திய அழகிய மாதைக் கண்டனர். அந்தப் பெண் அவர்களிடம் ஒரு இரகசியம் ஒப்படைத்துள்ளாள். அதைச் சொல்ல முடியாது. சிறை, சித்திரவதை, மரணம் எதுவானாலும் அவர்கள் ஏற்பார்களேயன்றி, அந்த இரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டார்கள்!
விசாரிப்பு முடிந்து களைத்துப் போன குழந்தைகளை ஆர்ட்டுரோவின் மனைவி அன்புடன் கவனித்துக் கொண்டது, குழந்தைகளுக்கு ஆறுதலாயிருந்தது. அவர்களுக்குப் பரிவுடன் மதிய உணவளித்தாள் அம்மாது.
இதற்கு நேர்மாறாக, ஆர்ட்டுரோ, அவர்கள் அந்த இரகசியத்தைச் சொல்ல மறுத்ததால், அவர்களை நகரச் சிறைக்குள் மற்றக் கைதிகளுடன் தள்ளும்படி கட்டளையிட்டார். “காட்சி எதுவும் காணவில்லை” என்று அவர்களிடம் எப்படியாவது ஒரு வாக்குமூலம் வாங்கி விட வேண்டும், இந்த மக்களின் பக்தியை மூடத்தனம் என்று காட்டிவிட வேண்டும் என்பது அவரது முடிவு.