அதிகாரம் 01
1 அபாக்கூக் என்னும் இறைவாக்கினர் கண்ட காட்சி.
2 ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பேன், நீரும் செவி சாய்க்காமல் இருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு நான் "என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள்!" என்று கதறுவேன், நீரும் என்னை மீட்காமல் இருப்பீர்?
3 ஏன் நான் அக்கிரமத்தையும் கொடுமையையும் பார்க்கும்படி நீர் செய்கிறீர்? கொள்ளையும் கொடுமையும் என் கண் முன் இருக்கின்றன, பூசல் எழும்புகின்றது, எங்குமே போட்டி!
4 ஆதலால் திருச்சட்டம் வலிமையிழந்தது, நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை; ஏனெனில் கொடியவர்கள் நேர்மையுள்ளவர்களை மேற்கொள்ளுகின்றனர், ஆகவே நீதி நெறிபிறழ்ந்து காணப்படுகிறது.
5 கண்களைத் திறந்து புறவினத்தார் நடுவில் பாருங்கள்; பார்த்து வியப்பும் ஆச்சரியமும் அடையுங்கள்; ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நாம் ஒன்று செய்யப்போகிறோம், அதைக் கேள்விப்பட்டால் எவனும் நம்பமாட்டான்.
6 இதோ, தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கவர, உலகின் ஒரு முனை முதல் மறு முனை வரை ஓடித்திரிகிற கொடுமையும் விரைவும் கொண்ட இனத்தாரான கல்தேயர்களை நாம் எழுப்பப் போகிறோம்.
7 அவர்கள் அச்சமும் திகிலும் உண்டாக்குகிறவர்கள், அவர்களின் நீதியும் பெருமையும் அவர்களிடமிருந்தே வருகின்றது;
8 வேங்கையை விட அவர்கள் குதிரைகள் விரைவாய் ஓடுகின்றன, மாலை வேளையில் திரியும் ஓநாய்களினும் கொடியவை; அவர்களுடைய குதிரை வீரர்கள் பாய்கின்றனர், இரையின் மேல் விரைந்து பாயும் கழுகைப் போலப் பறக்கின்றனர்.
9 அவர்கள் அனைவரும் கொள்ளையடிக்கவே வருகின்றனர், அவர்கள் முகம் தீக்காற்றைப் போல வெப்பத்தை வீசுகிறது, கடற்கரை மணல் போலக் கணக்கற்றவர்களைச் சிறைப்படுத்துகின்றனர்.
10 அரசர்களை அவர்கள் ஏளனம் செய்கிறார்கள், தலைவர்களை எள்ளி நகையாடுகிறார்கள்; அரண்களையெல்லாம் பார்த்துச் சிரிக்கிறார்கள், மண் மேடுகளை எழுப்பி அவற்றைப் பிடிக்கிறார்கள்.
11 புயற்காற்று திசை மாறிப் போய் விடுகிறது, தங்கள் வலிமையைக் கடவுளாய்க் கருதுகிறவர்கள் பாவிகள்.
12 ஆண்டவரே, என் இறைவா, என் பரிசுத்தரே, தொன்றுதொட்டே நீர் இருக்கிறீர் அன்றோ? நாங்கள் சாவைக் காணமாட்டோம். ஆண்டவரே, அவர்களை எங்கள் மேல் தண்டனைத் தீர்ப்பாய் வைத்தீர், புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் நீர் அவர்களை ஆக்கினீர்.
13 உம்முடைய தூய கண்கள் தீமையைக் காணக் கூசுகின்றன, நீர் கொடுமையைப் பார்க்கத் தாங்காதவர்; தீமை செய்பவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்? தன்னிலும் நேர்மையானவனைப் பொல்லாதவன் ஒருவன் விழுங்கும் போது நீர் பேசாமல் இருப்பதெப்படி?
14 மனிதர்களை நீர் கடல் மீன்களைப் போலும், ஆளுநன் இல்லாத ஊர்வனவற்றைப் போலும் நடத்துகிறீர்.
15 அவர்கள் மற்றவர்களையெல்லாம் தூண்டிலால் பிடிக்கிறார்கள், வலையால் வாரி இழுக்கிறார்கள்; தங்கள் பறியில் கூட்டிச் சேர்க்கிறார்கள், அகமகிழ்ந்து அக்களிக்கிறார்கள்.
16 ஆதலால் தங்கள் வலைக்குப் பலி செலுத்துகிறார்கள்; பறிக்குத் தூபம் காட்டுகிறார்கள்; ஏனெனில் அவற்றால் அவர்கள் இன்ப வாழ்வு பெறுகிறார்கள், அறுசுவை உண்டியும் அவற்றால் கிடைக்கிறது.
17 அப்படியானால், அவர்கள் தங்கள் வலையிலிருப்பதை விடாமல் கொட்டி, மக்களினங்களை இரக்கமின்றி எந்நாளும் கொன்று குவிப்பார்களோ?
அதிகாரம் 02
1 நான் சாமக் காவலனாய் நிற்பேன், காவற் கோட்டை மேல் இருந்து காவல் புரிவேன்; எனக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என்றும், என் முறையீட்டுக்கு என்ன விடை தருவார் என்றும் பார்ப்பதற்காகக் காத்திருப்பேன்.
2 ஆண்டவர் எனக்களித்த மறுமொழி இதுவே: "காட்சியை எழுதிவை; விரைவாய்ப் படிக்கும்படி பலகைகளில் தெளிவாய் எழுது.
3 இன்னும் குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி காத்திருக்கிறது, ஆயினும் முடிவை நோக்கி விரைந்து போகிறது, பொய்யாகாது; காலந்தாழ்த்துவதாகத் தெரிந்தால், எதிர்பார்த்திரு; அது நிறைவேறியே தீரும், தவணை மீறாது.
4 இதோ, விசுவசியாதவன் நேர்மையான உள்ளத்தினன் அல்லன், ஆனால் நீதிமான் தன் விசுவாசத்தினால் வாழ்வான்.
5 செல்வம் நம்ப முடியாதது, இறுமாப்புக் கொண்டவன் நிலைத்திருக்கமாட்டான்; அவனது பேராசை பாதாளத்தைப்போலப் பரந்து விரிந்தது, சாவைப்போல் அவனும் போதுமென்று அமைவதில்லை. எல்லா நாட்டினரையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்ளுகிறான், மக்களினங்களையெல்லாம் தன்னிடம் கூட்டிக் கொள்ளுகிறான்.
6 இவர்கள் அனைவரும் அவன் மேல் வசைப்பாடல்களும், வஞ்சப் புகழ்ச்சியாய் ஏளன மொழிகளும் புனைவார்களன்றோ? அவர்கள் இவ்வாறு சொல்வார்கள்: தன்னுடையன அல்லாதவற்றைத் தனக்கெனக் குவித்து அடைமானங்களைத் தன் மேல் சுமத்திக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்குச் செய்வான்?
7 உனக்குக் கடன் தந்தவர்கள் திடீரென எழும்பமாட்டார்களோ? உன்னை அலைக்கழிப்பவர்கள் விழித்தெழமாட்டார்களோ? அப்பொழுது அவர்களுக்கு நீ கொள்ளைப் பொருளாவாய்!
8 நீ பலநாட்டு மக்களைச் சூறையாடினபடியால், மக்களினங்களுள் எஞ்சினோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர்; ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தி, நாட்டுக்கும் நகரத்திற்கும், அதில் வாழ்வோர் அனைவருக்கும் கொடுமைகள் செய்தாய்.
9 தீமையின் பிடிக்கு எட்டாதிருக்க வேண்டித் தன் கூட்டை மிக உயரத்தில் வைப்பதற்காகத் தன் வீட்டுக்கென அநியாய வருமானம் தேடுபவனுக்கு ஐயோ கேடு!
10 உன் வீட்டுக்கு மானக்கேட்டையே வருவித்தாய், மக்களினங்கள் பலவற்றை அழித்தமையால் உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.
11 சுவரிலிருக்கும் கற்களும் உன்னைக் குற்றம் சாட்டும், கட்டடத்தின் விட்டம் அதனை எதிரொலிக்கும்.
12 இரத்தப் பழியினால் பட்டணத்தைக் கட்டி, அக்கிரமத்தால் நகரத்தை நிலைநாட்டுபவனுக்கு ஐயோ கேடு!
13 இதோ, மக்களின் கடின வேலை நெருப்புக்கு இரையாவதும், மக்களினங்களின் உழைப்பு வீணாய்ப் போவதும் சேனைகளின் ஆண்டவரது திருவுளமன்றோ?
14 தண்ணீர் கடலை நிரப்பியிருப்பது போல் ஆண்டவருடைய மகிமையைப் பற்றிய அறிவு மண்ணுலகை நிரப்பும்.
15 தன் அயலானுக்கு நஞ்சைக் குடிக்கக் கொடுத்து, அவனது அவமானத்தைப் பார்ப்பதற்காகக் குடிவெறியேறும் வரை குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு!
16 மகிமையால் நிரப்பப்படாமல் நீ நிந்தையால் தான் நிரப்பப்படுவாய். நீயும் குடி, குடி வெறியில் தள்ளாடு; ஆண்டவரின் வலக்கையிலுள்ள கிண்ணம் உன்னிடம் வரும், அப்போது மானக்கேடு உன் மகிமையை மூடி மறைக்கும்.
17 நீ லீபானுக்குச் செய்த கொடுமை உன்னையே தாக்கும்; திகிலுற்ற மிருகங்களை நீ செய்த படுகொலையும் அவ்வாறே செய்யும்; ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தி, நாட்டுக்கும் நகருக்கும், அதில் வாழ்வோர் அனைவருக்கும் கொடுமைகள் செய்தாய்.
18 சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த பொய்ப் படிமத்தாலும் பயனென்ன? ஆயினும் தான் செய்த ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே சிற்பி நம்பிக்கை வைக்கிறான்.
19 மரக்கட்டையிடம் 'விழித்துப் பாரும்' என்றும், ஊமைக் கல்லிடம் 'எழுந்திரும்' என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வாக்குரைக்க முடியுமோ? இதோ, பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருப்பினும் உள்ளுக்குள் கொஞ்சமும் உயிரில்லையே!
20 ஆனால் ஆண்டவர் தம் பரிசுத்த கோயிலில் இருக்கிறார், அவர் திருமுன் உலகெலாம் மவுனம் காக்கட்டும்.
அதிகாரம் 03
1 இறைவாக்கினர் அபாக்கூக் என்பவரின் மன்றாட்டு; புலம்பல்களுக்குரிய பண்ணில் பாடுக:
2 ஆண்டவரே, உமது புகழைப்பற்றிக் கேள்விப்பட்டேன், ஆண்டவரே, உம் செயல்களைக் கண்டு அஞ்சுகிறேன். காலப்போக்கில் அவற்றை மீண்டும் செய்யும், காலப்போக்கில் அவற்றை அனைவரும் அறியச் செய்யும்; கோபத்திலும் இரக்கத்தை நினைவுகூரும்.
3 தேமானிலிருந்து கடவுள் வருகிறார், பாரான் மலையிலிருந்து பரிசுத்தர் வருகிறார்; அவருடைய மகிமை வானத்தை மூடியுள்ளது, அவர் புகழால் மண்ணுலகம் நிறைந்துள்ளது.
4 அவருடைய பேரொளி பகலைப் போல் இருக்கிறது, அவர் கையினின்று ஒளிக்கதிர்கள் வெளிப்படுகின்றன, அவை அவரது வல்லமையைப் போர்த்தியுள்ளன.
5 அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் வருகிறது; அவருடைய அடிச்சுவடுகளில் காய்ச்சல் தொடர்கிறது.
6 அவர் நின்றால், நிலம் நடுங்குகிறது; அவர் பார்த்தால் மங்களினங்கள் திடுக்கிடுகின்றன. அப்போது, தொன்று தொட்டிருக்கும் மலைகள் சிதறுகின்றன, பண்டுமுதல் அவர் மலரடிகளைத் தாங்கி நின்ற பழங்காலக் குன்றுகள் அமிழ்ந்து போகின்றன.
7 கூஷாவின் கூடாரங்கள் அஞ்சுவதைக் கண்டேன், மாதியான் நாட்டுக் கூடாரங்கள் நடுங்குகின்றன.
8 ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர் மேலும் ஏறி வரும் போது, ஆறுகளின் மீதோ நீர் சினங் கொண்டீர்? ஆறுகள் மேலோ உமது ஆத்திரம் பொங்கிற்று? கடல் மீதோ நீர் சீற்றம் கொண்டீர்?
9 நாணேற்றிய வில்லைக் கையிலேந்துகிறீர், அம்பறாத்தூணியை நீர் அம்புகளால் நிரப்புகிறீர். நிலத்தை ஆறுகளால் கிழிக்கிறீர்.
10 உம்மைப் பார்க்கும் போது மலைகள் நடுங்குகின்றன, பெரும் வெள்ளங்கள் பாய்ந்தோடுகின்றன; ஆழ்கடலானது தன் ஓசையை எழுப்புகிறது, தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.
11 பறந்தோடும் உம் அம்புகளுடைய ஒளியின் முன்னும், மின்னலைப் போலப் பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் எழுந்து வரும் கதிரவனின் ஒளி மறக்கப்படுகிறது; நிலாவும் தன் இருப்பிடத்திலே நின்று விடுகிறது.
12 கோபத்தோடு மண்ணுலகின் மேல் நடந்து போகிறீர், ஆத்திரத்தோடு மக்களினங்களை நசுக்குகிறீர்.
13 உம் மக்களை மீட்கவும், நீர் அபிஷுகம் செய்தவரை மீட்கவும் நீர் புறப்படுகிறீர்; கொடியவனின் வீட்டைத் தரைமட்டமாக்குகிறீர், பாறைவரையில் அதன் அடிப்படையை வெளியே புரட்டுகிறீர்.
14 எளியவனை மறைவாக விழுங்குபவனைப் போல, மகிழ்ச்சியோடு என்னைச் சிதறடிக்கச் சூறாவளி போலப் பாய்ந்து வருகிற அவனுடைய படைவீரர்களின் தலைகளை உம் ஈட்டிகளால் பிளக்குகிறீர்.
15 உம்முடைய குதிரைகளால் பெருங்கடலை, ஆழ்கடலை மிதிக்கிறீர்.
16 நான் கேட்டதும், என் உடலெல்லாம் நடுங்கிற்று, பேரொலி கேட்டு என் உதடுகள் படபடத்தன. என் எலும்புகள் உளுத்துப் போயின, என் கால்கள் தடுமாறின. எங்கள் மேல் படையெடுக்கும் மக்கள் மீது துன்பத்தின் நாள் வரும் வரை அமைதியாய்க் காத்திருக்கிறேன்.
17 அத்திமரங்கள் பூக்காவிட்டாலும், திராட்சைக் கொடிகளில் பழமில்லாவிட்டாலும், ஒலிவமரங்களின் பலன் அற்றுப் போயினும், வயல்களில் விளைச்சல் கிடைக்காவிடினும், கிடையில் ஆடுகள் இல்லாமற் போனாலும், தொழுவங்களில் மாடுகள் இல்லாதிருந்தாலும்,
18 நான் ஆண்டவரில் அக்களிப்பேன், என் மீட்பரான கடவுளில் அகமகிழ்வேன்.
19 ஆண்டவராகிய இறைவனே என் வலிமை, என் கால்களை மான் கால்களைப் போல் அவர் ஆக்குவார், உயரமான இடங்களில் என்னை நடத்திச் செல்வார். பாடகர் தலைவனின் பண்; இசைக்கருவி: நரம்புக் கருவி.