எபேசு நகரமானது சின்ன ஆசியாவின் பிரதான பட்டணமாம்.
கர்த்தர் அவதாரத்தின் 66-ம் ஆண்டில் அர்ச். சின்னப்பர் உரோமாபுரியில் சிறையிலிருக்கும்போது எபேசியருக்கு இந்த நிருபத்தை எழுதினார்.
மூன்று வருஷமளவும் இரவும் பகலுமாக அவர் மிகுந்த பிரயாசைப்பட்டு ஏற்படுத்திய இந்தச் சபையை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், சேசுக்கிறீஸ்து நாதரைப்பற்றிய உன்னதமான தேவ இரகசியங்களின் அறிவில் அவர்கள் தேறவும் வேண்டுமென்று இதை எழுதினார்.
ஆகையால் அவர் எழுதிய மற்ற நிருபங்களைப் பார்க்கிலும் இந்த நிருபம் அதிக சிறந்த வாக்கியங்களும், உயர்ந்த அர்த்தங்களும் உள்ளதுமாய் மனிதருடைய வாக்குக் கெட்டாததும் சம்மனசுகளுக்குரியதுமாய் இருக்கின்றது.
முதல் மூன்று அதிகாரங்களில் நித்திய அழைத்தலையும், சேசுநாதருடைய மரணத்தினால் உண்டாகிய இரட்சண்யத்தையும், புறஜாதியாருடைய அழைத்தலையும், புறஜாதியார்களுக்காக விசேஷமாய்த் தாம் அப்போஸ்தலராக ஏற்படுத் தப்பட்டிருக்கிறதையும், மற்ற மூன்று அதிகாரங்களில் அவனவன் தன் தன் அந்தஸ்தில் அநுசரிக்கவேண்டிய பிரதான புண்ணிய ஒழுக்கங்களையுங் குறித்துப் பேசுகிறார்.