எத்தனையோ எச்சரிப்புகள் வந்து விட்டன - எதுவும் நடக்கவில்லை. பூச்சாண்டி காட்டுகிறார்கள் என்று சில விபரமறியாதவர்கள் சலித்துக் கொள்வார்கள்.
வரலாறு தெரியாதவர்களும் தங்களிடமும் தங்களைச் சுற்றியும் பார்க்கக் கண்ணில்லாதவர்களும்தான் அப்படிக் கூறுவார்கள்.
பாவத்தின் பலனால் உலகம் இன்று அடைந்துள்ள நிலையையும், திருச்சபை அடைந்துள்ள பரிதாபமான சுய அழிவையும் காணாதார் யார்?
இதன் விளைவாக ஒவ்வொரு ஆன்மாவும் பாதிக்கப் பட்டிருப்பதையும் சற்று நமக்குள்ளே ஊன்றிப் பார்த்தால் கண்டுகொள்ள முடியும்.
ஏனென்றால் சுத்திகரிப்பு என்பது ஒவ்வொரு ஆன்மாவிலும்தான் நடக்க வேண்டும். தனி ஆன்மா பாவங்களால் பாதிப்படைந்து தன் ஒளியை இழந்து இருளில் தத்தளிக்கிறது.
உலகத்திலும் திருச்சபையிலும் ஏற்பட்டுள்ள பாவச் சூழ்நிலைகளால் முதன்முதலாகப் பாதிக்கப்படுவது ஆன்மாக்களே! சாத்தானின் சூழ்ச்சிகளுக்கும் சோதனைகளுக்கும் மனிதர்கள் விட்டுக் கொடுத்து, இது வரை கண்டிராத கோர, கொடிய, நாஸ்தீகமான, ஒழுக்கக் கேடான பாவங்களால் உலகம் நிரம்பி வழிகிறது.
இப்பாவங்களைச் செய்கிற ஆன்மாக்களின் பெரும் தொகையால் உலகம் மூடப்பட்டிருக்கிறது. திருச்சபையும் வரலாற்றிலேயே மிகப் பெரிய சாத்தானின் தாக்குதல்களுக்கு உட்பட்டு அதற்காகத் தண்டிக்கப் படுகிறது.
ஆகவே சுத்திகரத் தண்டனை வரவில்லை என்று சொல்வது உண்மையை உணராத நிலைதான். சிறு அளவில் அது ஏற்கெனவே நடந்து கொண்டுதானிருக்கிறது.
ஆனால் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிற பெரிய அளவில் தண்டனை வராமலிருக்க முடியும். அதாவது முன்னறிவிக்கப்பட்ட தண்டனை பிந்தக் கூடும், அல்லது அதன் உக்கிரம் அல்லது வேகம் குறையக் கூடும், அல்லது தண்டனை வராமலே இருக்கக் கூடும்.
ஏனென்றால் எந்தத் தண்டனை பற்றிய அறிவிப்பும் நிபந்தனைக்கு உட்பட்டதே.
அதாவது: ஒரு குறிப்பிட்ட தண்டனை அறிவிக்கப்படுகிறது. அதை செவிமடுத்து மக்கள் ஜெப தவத்தில் ஈடுபட்டால் கடவுள் அந்தத் தண்டனையைப் பிந்திப் போடலாம், அதன் வேகத்தைக் குறைக்கலாம், அல்லது அதை முற்றிலும் தவிர்த்தும் விடலாம்.
இப்படி நடக்கும் போது அறிவிக்கப்பட்ட தண்டனை நடக்க வில்லையே என்று அந்த இரக்கமுள்ள அறிவிப்பைக் குறைப்படுவது எவ்வகையிலும் அறிவுடைமை அல்ல, அது ஆங்காரமே.
பெருவெள்ள அறிவிப்பை மக்கள் ஏற்க வில்லை. பெருவெள்ளம் வந்தது.
நினிவே பட்டணத்தின் அழிவு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் அரசன் முதல் கடைசிக் குடிமகன் வரையிலும் தாங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்று ஜெபத்திலும் தவத்திலும் ஈடுபட்டதால் தண்டனை நிறுத்தப்பட்டது.
இது போலவே இப்பொழுது அறிவிக்கப்படுகிற தண்டனைகளிலிருந்து நாம் காப்பாற்றப்பட வேண்டு மென்று நாம் ஜெபித்து பரித்தியாகங்களைச் செய்தால், நாமும் காப்பாற்றப்பட முடியும்.
நாம் இப்பொழுது தீவிரமாகச் செய்ய வேண்டியது, மாதா பாத்திமாவில் கேட்டுக் கொண்டபடி, ஜெபமும், தவமும், ஜெபமாலையும் செய்து, மாதாவிடம் நம்மை ஒப்புக்கொடுத்து, நிந்தைப் பரிகாரம் செய்வதே.