என் தேவனே என் தேவனே என்னைக் கைவிட்டது ஏன்?

"என் தேவனே என் தேவனே என்னைக் கைவிட்டது ஏன்" என்று வசனித்தீரே சுவாமீ . தேவரீர் சர்வாங்கமும் ஏக காயமாகிச் சிலுவையில் அறையுண்டிருக்கையில், உம்முடைய அர்ச். ஆத்துமம் துக்க சாகரத்தில் அமிழ்ந்தியிருந்து, ஆறுதலும் தேற்றரவுமில்லாமல் சர்வ கஸ்தியையும் அனுபவித்தீரென்று இந்த வாக்கியத்தினால் மனிதருக்கு அறிவிக்கத் திருவுளமானீர்.

மனிதர் தங்கள் மரண சமயத்தில் என்னென்ன சோதனைப்பட்டாலும், எத்தனை கஸ்தி துயர நோக்காடுகளை அனுபவித்தாலும், அவநம்பிக்கையாய் இராதபடிக்கு தேவரீர் அந்த அகோரமான துக்க துயரத்தை அனுபவித்தீரே.

திவ்விய சேசுவே! என் இரட்சணியத்துக்காக தேவரீர் அனுபவித்த கொடூர வேதனைகளை எல்லாம் நினைத்துக்கொண்டு, நான் செய்த பாவங்களை எல்லாம் உமது அளவில்லாத தயவினாலே பொறுத்து, இனிமேல் மோக்ஷத்தை தந்தருளிவீரென்று உமது பேரிலே முழு நம்பிக்கை யாயிருக்கிறேன்.

இவையெல்லாம் தேவரீருடைய அளவறுக்கப் படாத வாதைகளைப் பார்த்து, என்னுடைய வியாதியின் கடினத்தையும், கஸ்தி நோவுகளையும், மரணத்தையும் உமக்குத் தோத்திரமாகப் பொறுமையோடே அனுபவிக்கப் பிரதிக்கினைப் பண்ணுகிறேன். அவைகளை உம்முடைய திருப்பாடுகளோடே கூட என் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கிறேன்.

நரகத்திலே உண்டான பசாசுகள் எல்லாம் வந்து என்னுடைய நம்பிக்கையைக் கெடுக்கத்தக்கதாக எத்தனைப் பிரயாசைப் பட்டாலும், உம்முடைய அளவில்லாத கிருபாகடாட்சத்தினாலே நான் ஒருக்காலும் தத்தளியாமலும், அவநம்பிக்கைப் படாமலும் உம்முடைய மதுரமுள்ள திருக் காயங்களிலே பக்தி சிநேகத்தினாலும், மனஸ்தாப உருக்கத்தினாலும் பிரவேசம் பண்ணி, என்னை இரட்சிக்கத்தக்கதாக இத்தனை பிரயாசைப்பட்ட தேவரீர் பேரிலே மெய்யாகவே முழுமனதோடு மாறாத நம்பிக்கையாயிருப்பேன்.

என் இரக்ஷணியமான சேசுவே! என்னைக் கைவிடாதேயும். என்னை இரட்சியும் என் பட்சமே உம்மையல்லாமல் எனக்கு வேறே அடைமானமில்லை. நீரே எனக்குப் பரகதியின் வழியுமாய் உயிருமாய்த் துணையுமாயிருக்கிறீர் என்று நம்பியிருக்கிறேன். என் பாவங்களையெல்லாம் வெறுத்துவிட்டு முழுமனதோடே உம்மைச் சிநேகிக்கிறேன்.

ஆமென்.