ஆகஸ்ட் மாதம் 19-ம் நாள் பிற்பகல். காலநிலை மிக நன்றாயிருந்தது. ஆட்சித் தலைமையிடத்தில் அனுபவித்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டது குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது.
அன்று ஜஸிந்தா ஆடு மேய்க்கச் செல்லவில்லை. அவள் அண்ணன் ஜானும், பிரான்சிஸ், லூஸியா ஆகிய மூவரும் மதியம் திரும்பி வெயில் சற்றுத் தாழ்ந்தபிறகு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வாலினோஸ் என்ற இடத்திற்கு வந்தார்கள்.
இந்த வாலினோஸ் மலைச்சாரல் அல்யுஸ் திரலுக்கும்,கோவா தா ஈரியாவுக்கும் நடுவில் உள்ளது. அல்யுஸ்திரலிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் இருக்கும். கபேசோ குன்றின் வடக்குச் சரிவில் அது இருந்தது. அங்கு சில அஸின்ஹேரா வகை தாழ்ந்த ஓக் மரங்களும், ஒலிவ மரங்களும் காணப்பட்டன.
குழந்தைகள் வழக்கம்போல் உற்சாகமாக நேரத்தைக் கழித்தார்கள். ஜெபமாலை, விளையாட்டு, மலைச்சாரலில் சுற்றுதல், இப்படியாக மாலை மணி 4 ஆயிற்று.
திடீரென ஆகாயத்தில் ஒரு மாறுதலை லூஸியா கண்டாள். அது மழையின் அறிகுறி அல்ல. தேவதாயின் காட்சி தோன்றுமுன் காணப்படும் ஒரு வகை ஆகாய இறுக்கம். அவள் பிரான்சிஸைப் பார்த்தாள். அவனும் அதே அடையாளத்தை உணர்ந்தான். ஆம்! தேவ அன்னை தோன்றுவதன் முன்னடையாளம் அதுதான்! ஆனால் ஜஸிந்தா அங்கு இல்லையே!
லூஸியாவும், பிரான்சிஸும் ஜஸிந்தாவை அழைத்து வரும்படி ஜானிடம் கேட்டனர். அவனுக்குப் பதிலாக ஆடுகளைத் தாங்கள் கவனித்துக் கொள்வதாகவும், இவ்வுதவிக்குப் பரிசாக இரண்டு காசுகள் கொடுப்பதாகவும் கூறினர். ஜான் ஒப்புக்கொண்டு ஜஸிந்தாவைக் கூப்பிட விரைந்தான்.
கொஞ்ச நேரம் ஆயிற்று. தேவதாய் வருமுன் காணப்படும் மின்னல் ஒளி வீசியது! அதே சமயம் அவர்களை நோக்கி ஜஸிந்தா ஓடி வந்து கொண்டிருந்தாள். ஓடி வந்து பெருமூச்சுடன் என்ன, என்ன என்று கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தாள்.
அன்னை ஒரு தாழ்ந்த அஸின்ஹேரா மரத்தில் மூவருக்கும் தோன்றினார்கள். அதே கனிவு, அதே அன்பு! குழந்தைகளின் மகிழ்ச்சி நிறைவுக்கு ஓர் அளவில்லை.
“உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் லூஸியா.
“கோவா தா ஈரியாவுக்கு மாதத்தின் 13-ம் நாளில் தொடர்ச்சியாகச் செல்லுங்கள். ஜெபமாலையை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சொல்லி வாருங்கள். கடைசி மாதத்தில் எல்லோரும் நம்பும்படி ஒரு புதுமையைச் செய்வேன்” என்றார்கள் அன்னை.
“கோவா தா ஈரியாவில் மக்கள் போடும் பணத்தை என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்டாள் லூஸியா.
“இரு (சுரூபத்) தட்டுகள் செய்ய வேண்டும். ஒரு தட்டை லூஸியா, ஜஸிந்தா, இன்னும் வேறு இரு சிறுமிகள் வெண்ணுடை தரித்து சுமந்து செல்ல வேண்டும். மற்றொன்றை பிரான்சிஸும், அவனுடன் வேறு மூன்று சிறுவர்களும் வெண்ணுடை அணிந்து சுமந்து வர வேண்டும். இவற்றில் விழும் காணிக்கைப் பணம் ஜெபமாலை மாதா திருநாள் கொண்டாடுவதற்கு. மீதி இருக்கும் பணம் இங்கு கட்டப்பட இருக்கும் ஆலயத்திற்கென இருக்கட்டும்” என்று மாமரி பதிலளித்தார்கள்.
“அம்மா, சில நோயாளிகளை நீங்கள் குணமாக்க வேண்டும்” என்று லூஸியா கேட்டதற்கு, “இவ்வாண்டில் சிலரைக் குணப்படுத்துவேன்” என்றார்கள் அன்னை. மேலும் ஆகஸ்ட் 13-ம் நாள் காட்சி நடை பெறாமல் தடுக்கப்பட்டதால், அக்டோபர் மாத அதிசயம், நடக்க இருந்ததை விட மகத்துவம் குன்றியதாக இருக்கும் என்றும் கூறினார்கள்.
பின் முடிவில், “ஜெபியுங்கள், அதிகமாக ஜெபியுங்கள். பாவிகளுக்காக ஒறுத்தல் முயற்சிகளைச் செய்யுங்கள். ஏனென்றால் தங்களுக்காக ஜெபிக்கவும், ஒறுத்தல் செய்யவும் ஒருவரும் இல்லாததால் அநேக ஆன்மாக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்” என்று கூறி கீழ்த்திசையில் அன்னை மறைந்தார்கள்.
மூன்று குழந்தைகளும் இக்காட்சியின் பரவசத்திலிருந்து விடுபட சற்று நேரம் ஆயிற்று. விடுபட்டதும் அம்மரத்தின் கிளைகளை ஞாபகச் சின்னமாக ஒடித்து எடுத்துக்கொண்டு ஆடுகளுடன் வீடு திரும்பினார்கள்.
அக்கிளைகள் எங்கும் காணாத இனிய நறுமணம் வீசியதை இரண்டு வீட்டாருமே கண்டனர். மரிய ரோஸா இவ்வாசனையை ஒப்புக்கொண்டாலும், தன் மகள் லூஸியாவுக்கு தேவதாய் காட்சி அருள்வதை ஏனோ இன்னும் நம்பாமலேயே இருந்தாள்.
தயையுள்ள கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.