1. மாதாவுக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்து
முதல் சனிக்கிழமை பக்தியை அனுசரிக்கும்போது நாம் விசேஷமாய்க் கவனிக்க வேண்டியது: அதை எதற்காக, யாருக்காகச் செய்கிறோம் என்ற கருத்தாகும். நம் மரண வேளையில் மோட்சத்திற்குச் செல்ல தேவைப்படும் சகல வரப்பிரசாதங்களையும் தந்து உதவுவதாக மாதா கூறியிருக்கிறார்கள். பரிகாரப் பக்தியைப் பக்தியுடன் செய்யும்படி நம்மைத் தூண்டுவதற்காக அப்படி வாக்களித்திருக்கிறார்கள்.
ஆகவே இந்த ஆத்தும லாபத்திற்காக முதல்சனி பக்தியை நாம் அனுசரிப்பது நியாயமானதே. ஆயினும் நல்ல மரணத்தை நாம் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே இதை அனுசரிப்பதை விட, நம் அன்புள்ள அன்னைக்கு ஏற்பட்டுள்ள நிந்தை அவமான துரோகங்களுக்கு நம் அன்பினால் ஈடு செய்யும் நோக்கத்துடன் அனுசரிப்பதே மேலானது. நம் லாபத்தைக் கருதி மாதாவுக்குப் பரிகாரம் செய்வதை விட மாதாவின் ஆறுதலுக்காக முதல் முக்கியமாக அதைச் செய்ய வேண்டும். நம்மையல்ல, நம் தாயை நினைத்துச் செய்யும் பரிகாரமே உத்தமமான பரிகாரம்.
முதல் சனி பரிகாரப் பக்திக்கென நாம் செய்யும் பாவசங்கீர்த்தனம், ஜெபமாலை, நற்கருணை உட்கொள்ளுதல், கால்மணி நேரம் மாதாவுடன் தங்கியிருத்தல் ஆகியவற்றை நிறைவேற்றும்போது, நம் நோக்கமும் கருத்தும்: “மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரமாக, அத்திரு இருதயத்தை நேசித்து, அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்காக” என்றபடி இருக்க வேண்டும். இக்கருத்து ஒரு பொதுவான முறையிலேனும் அவற்றைச் செய்யும்போது நம்மிடம் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்படி பொதுவாகக் கூட இக்கருத்து இல்லாமல் அவற்றைச் செய்வதால் என்ன பலன்? அவை வெறுமனே இருக்கும். வீணாகப் போகும்.
விசேஷ குறிப்பு:
கத்தோலிக்கர் அநேகர் எல்லாப் பக்தி முயற்சிகளையும் ஜெபங்களையும் சொல்வார்கள். ஆனால் உள்ளத்தில் எந்தக் கருத்தும் இல்லாமல் இருப்பார்கள். ஜெபமாலை, காலை மாலை ஜெபங்கள், திரிகால ஜெபம், பாவசங்கீர்த்தனம் செய்தல், தியானித்தல், கோவிலுக்குச் செல்லுதல் என்று பற்பல ஞான முயற்சிகளையும் மனதில் ஒரு கருத்தும் இல்லாமல், அதனால் பக்தியும் இல்லாமல் செய்வார்கள், அவை அத்தனையும் வீணாகின்றன என்பதை அறிந்தால் எவ்வளவு வருத்தப் படுவார்கள்!
கருத்தும் பக்தி உருக்கமும் இல்லாமல் செய்யப்படும் ஞான முயற்சிகள் வெறும் கூடு. உள்ளே ஒன்றுமில்லாத செல்லரித்த கூடு என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போமாக. கருத்தூன்றி செபிக்காவிட்டால் கண்ட பராக்குகளும் வரும். மனம் கட்டுக்கடங்காமல் புறத்தில் அலையும். ஆகவே நாம் சொல்வது ஒரு அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளமோ, ஒரு அருள்நிறை மந்திரமோ ஒரு ஜெபமாலையோ எதுவாயிருந்தாலும், அதைக் கருத்துடன் பக்தி உருக்கத்துடன் சொல்லக் கவனமாயிருப்போமாக.
2. பரிகாரப் பாவசங்கீர்த்தனம்
பாவசங்கீர்த்தனம் ஒரு அரிய கிடைப்பதற்கரிய தேவ திரவிய அனுமானம். நல்ல ஆயத்தத்துடன் செய்யப்படுகிற ஒரு பாவசங்கீர்த்தனம் ஆத்துமத்தின் பாவங்களை நீக்குகிறது, அதை அலங்கரிக்கிறது, தேவ இஷ்டப்பிரசாதத்தைப் பொழிகிறது. அது ஆத்துமத்துக்கு மகிழ்ச்சியளிக்கிறது; இனிமேல் பாவம் செய்யாதிருக்கும் திடனை அளிக்கிறது. இவ்விஷயத்தில் பாவசங்கீர்த்தனமானது ஆத்துமத்தின் மருந்தாக மட்டுமல்ல, திடமளிக்கும் “டானிக்” ஆகவும் இருக்கிறது.
இப்பிந்திய காலங்களில் பசாசின் சூழ்ச்சியால் பாவசங்கீர்த்தனம் என்னும் இத்தேவதிரவிய அனுமானம் திருச்சபையில் ஓரங்கட்டப்படும் என்பதை அறிந்தே நம் தேவ அன்னை, மோட்சம் தரும் முதல் சனி” என்ற திவ்ய பக்தி முயற்சியின் ஒரு நிபந்தனையாக பாவசங்கீர்த்தனத்தைக் குறிப்பிடுகிறார்கள். மாதாவின் கருத்துப்படி அவர்களை நேசிக்கும் பிள்ளைகள் மாதம் ஒரு தடவையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும் என்பது புலனாகிறது. அல்லது முதல் சனி பக்தியின் ஒரு முக்கிய அம்சமாக மாதா பாவசங்கீர்த்தனத்தைச் சொல்லியிருக்க மாட்டார்கள்.
எல்லாப் பாவசங்கீர்த்தனத்தையும் நல்ல முறையில் தயாரித்துச் செய்வதே நம் கடமை. பக்தியற்றதனமாய், பாவங்களை நினையாமலும், தக்க மனஸ்தாபப் படாமலும், இனிமேல் செய்ய மாட்டேன் என்கிற பிரதிக்கினை இன்றியும் ஏனோதானோ என்று அவசர கோலமாய்ப் பாவசங்கீர்த்தனம் செய்யக்கூடாது.
அதோடு நாம் செய்கிற பாவசங்கீர்த்தனம் முதல் சனி பக்தி அனுசரிப்பாக இருந்தால், “மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரமாக இந்தப் பாவசங்கீர்த்தனத்தைச் செய்கிறேன்” என்ற கருத்து ஒருவனிடம் இருக்க வேண்டும்.
இதுபோலவே மற்ற நிபந்தனைகளுக்கும் கருத்து அமைய வேண்டும். இக்கருத்தைக் கொள்ள மறந்து விட்டால் அடுத்த பாவசங்கீர்த்தனத்தை அக்கருத்தோடு செய்ய வேண்டும். ஏனெனில் பரிகாரக் கருத்தோடு முதல்சனி பக்திப் பாவசங்கீர்த்தனம் செய்யப்பட வேண்டியது அவசியம்.
இதற்குக் காரணம் இருக்கிறது. சங். அலோன்சோ, திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட பாத்திமாவின் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்: “பாவசங்கீர்த்தனத்தில் ஒருவன் செய்த பாவங்களுக்காக சர்வேசுரனிடம் மனஸ்தாபப்பட்டு மன்னிப்புக் கேட்க வேண்டிய கடமை எப்போதும் இருக்கிறது. முதல் சனிக் கிழமைப் பாவசங்கீர்த்தனத்தில் ஒருவன் மாதாவிடமும் மனஸ்தாபப்பட்டு மன்னிப்புக் கேட்கிறான்.”
மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரமாக மாதம் ஒரு பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டியதன் பொருள் இதுவே. அதாவது: சேசு நம் இரட்சகர். நாம் இரட்சணியமடைய அவரிடம் மன்னிப்புக் கேட்பது அவசியம். அதேபோல் மாதா நம் இணைஇரட்சகி. ஆகவே மாதாவிடமும் நாம் மன்னிப்புக் கேட்கிறோம். நம் பாவங்களால் நோவது சேசு மட்டுமல்ல, மாதாவும்தான் என்ற இணைமீட்பின் உண்மை இங்கே வெளிச்சமிட்டுக் காட்டப்படுகிறது.
இப்பரிகார பாவசங்கீர்த்தனம் எப்பொழுது செய்யப்பட வேண்டும்?
முதல் சனிக்கிழமையன்று செய்யப்படலாம். அல்லது அதற்கு முந்தி அல்லது பிந்தி செய்யப்படலாம். நற்கருணை வாங்கும்போது ஆத்தும சரீர ஆயத்தத்துடன் இருப்பது அவசியம். முதல் சனிக்கிழமையன்று பாவசங்கீர்த்தனம் செய்யாவிட்டால் அதற்கு ஒரு வாரம் அல்லது 10 நாள் முந்தியோ பிந்தியோ அதைச் செய்வது நடைமுறைக்கு நல்லது. அதற்குப் பிந்தினால் அதன் ஊக்கம் தளர்ந்து போகும் வாய்ப்பு உள்ளது.
3. பரிகார நற்கருணை
பரிகார நற்கருணை என்பதென்ன? நமதாண்டவருக்கும் மாதாவுக்கும் மனிதர்களால் இழைக்கப்படுகிற எண்ணற்ற நிந்தை அவமான துரோக அலட்சியங்களுக்கு ஈடாக நாம் மிகுந்த பக்தி மரியாதை அன்புடன் நற்கருணையில் அவரை உட்கொள்ளுதலேயாகும். இதை இன்னும் அதிக தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்கிறது பாத்திமா தூதனின் 3ம் காட்சி. அதிலே சம்மனசானவர் நற்கருணையுடன் வந்து மூன்று சிறுவர்களுக்கும் அதை வழங்கினார். வழங்கும்போது இப்படிக் கூறினார்:
“நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாதவிதமாய் அவசங்கைப் படுத்தப்படுகிற சேசுகிறீஸ்துவின் திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்காகப் பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்.”
இந்த வாக்கியங்களிலே பரிகார நன்மையின் முக்கியமான காரணம் கூறப்படுகிறது. நமதாண்டவருக்கு மற்ற எந்த வகையிலும் செய்யப்படாத நிந்தையும் துரோகமும் அன்பின் தேவதிரவிய அனுமானமாகிய தேவ நற்கருணையில்தான் செய்யப்படுகின்றன. ஆதலால் அன்பில்லாமல் செய்யப்படுகிற அவற்றிற்கு ஈடாக நாம் மிகுந்த அன்புடன் நற்கருணையை தகுந்த ஆயத்தத்துடன் உட்கொள்ள வேண்டும்.
மேலும் சம்மனசானவர், “உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்” என்று கூறினார். ஏன்? கடவுள் சம்மனசுக்களுக்குக் கடவுளாயில்லையா? மனிதர்களுக்கு மட்டுமா அவர் கடவுளாயிருக்கிறார்?
அதன் கருத்து என்னவென்றால்: மனிதர்கள் நற்கருணையை அவசங்கைப்படுத்துவதுபோல சம்மனசுக்கள் ஒருபோதும் செய்வதில்லை. மேலும் சம்மனசுக்களைப்போல் அரூபிகளாயிருக்கிற பசாசுக்கள் நற்கருணையைப் பகைத்தாலும் அவர்களும் மனிதர்களைப்போல் நற்கருணையை அவசங்கைப்படுத்த முடிவதில்லை. காரணம் அவர்களுக்கு சரீரமில்லை.
சரீரமுள்ள மனிதர்கள் நற்கருணையைப் பழித்து நிந்தித்து அவமானப்படுத்துவதுபோல் பசாசுக்களால் செய்ய முடியாததால் பசாசுக்கள் “நன்றியற்ற” மனிதர்களை அந்தப் பழிப்புச் செயல்களுக்கு ஏவித் தூண்டுகின்றன.
இன்னும் நமதாண்டவர் மனிதர்களைப் போல் மனித அவதாரம் செய்து வந்ததால் அவர் சம்மனசுக்களுக்குக் கடவுளாயிருப்பது போல் மட்டுமல்லாமல் சரீரமுள்ள மனிதர்களுக்கு சிறப்பான முறையில் இரட்சகக் கடவுளாயிருக்கிறார்.
இதனால்தான் பாத்திமா தூதன் “உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்” என்று பிரித்துக் கூறினார். அதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு நம் நற்கருணை ஆண்டவருக்கு மனித உள்ளத்தின் முழு அன்புடனும் பரிகாரம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். முதல் சனி பரிகார நன்மை வாங்கும்போது இதை நாம் மறக்கக்கூடாது.
வசதி இல்லாதவர்கள்.....?
அநேக விசுவாசிகளுக்கு முதல் சனிக்கிழமைகளில் பாவசங்கீர்த்தனமோ நற்கருணையோ கிடைக்க வழியில்லாமலிருப்பதைப் பற்றி லூஸியா நமதாண்டவரிடம் கேட்டாள். 1930 மே 29‡ம் தேதி இரவில் லூஸியா ஜெபித்துக் கொண்டிருந்தபோது ஆண்டவர் இதற்குப் பதிலளித்தார். அப்படி முதல் சனிக்கிழமையில் பரிகாரக் கடமைகளைச் செய்ய வசதி இல்லாதபோது, அவற்றைக் குருவானவரின் அனுமதியோடு மறுநாள் முதல் ஞாயிற்றுக்கிழமையில் செய்து அதன் பலனை அடைந்து கொள்ளலாம். நியாயமான காரணமிருந்தால் குருக்கள் அந்த அனுமதியை வழங்கலாம் என்று ஆண்டவர் கூறினார்.
4. பரிகார ஜெபமாலை
முதல் சனி பக்தி முயற்சியின் நிபந்தனைகளில் ஒன்று ஒரு 53 மணி ஜெபமாலை சொல்லப்பட வேண்டும் என்பது. மாதாவுக்கு மிகவும் விருப்பமான ஜெபம் ஜெபமாலையே. பாத்திமாவில் ஆறுதடவை காட்சியருளிய தேவதாய் அதில் ஒவ்வொரு காட்சியிலும் “ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லி வாருங்கள்” என்று கேட்டார்கள்.
ஜெபமாலை சொல்லப்படும்போது மாதா மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆறுதல் அடைகிறார்கள். காரணம், மானிட மீட்பைத் தொடங்கி வைத்த சம்மனசின் வாழ்த்தே ஜெபமாலையாக அமைந்திருப்பதுதான்.
அந்த வாழ்த்து வாயால் சொல்லப்படும்போது நாம் நம் மனதில் நம் இரட்சண்ய திருநிகழ்ச்சிகளைச் சிந்திக்கிறோம். கையில் மந்திரிக்கப்பட்ட ஜெபமாலையைப் பயன்படுத்துகிறோம். ஒரே சமயத்தில் நம் சிந்தனை சொல் செயல் ஆகியவற்றை ஈடுபடுத்துகிற ஜெபமாலையின் சிறப்பு வேறெதிலும் இல்லை. இந்த ஜெபமாலையையும் மாதாவுக்குப் பரிகாரம் செய்யும் கருத்துடன் சொல்ல வேண்டும்.
5. மாதாவுடன் கால் மணி நேரம் செலவிடல்
மாதா தன்னுடன் நம்மை கால் மணி நேரமாவது தங்கியிருக்கும்படி இம்முதல் சனி பக்தியில் கேட்பது ஒரு அதிசயமான விண்ணப்பமாயிருக்கிறது. நாம் நம் தேவமாதாவுடன் அமர்ந்து தாயுடன் பிள்ளை பேசுவதுபோல் அந்யோந்நியமாகப் பேச வேண்டுமென அவர்கள் ஆசிக்கிறார்கள்.
அவர்கள், இப்போது பூமியில் வாழாமல் மோட்சத்தில் வாழ்வதால், தன் பிள்ளைகளைச் சந்தித்துப் பேசுவதற்குக் கூடுதல் ஆசையுள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள்.
சாதாரணமாக அவர்களை சரீரக் கண்களால் நாம் பார்ப்பதில்லை. தெரிந்தெடுக்கப்பட்ட ஆன்மாக்கள் காட்சிகளில் சரீரக் கண்களாலும் பார்த்திருக்கிறார்கள். நாம் ஆத்தும கண்கொண்டே அவர்களை விசுவாச ஒளியில் காண்கிறோம். அப்படி அவர்களைச் சந்திக்கும் போது நாம் எதைப்பற்றிப் பேசுவோம்?
இதற்கும் மாதாவே நமக்குப் பதில் தந்திருக்கிறார்கள். மாதாவுக்கும் நமக்கும் பொதுவான, மிக அவசியமான விஷயங்களைப் பற்றித்தானே பேச முடியும்? அவை என்ன விஷயங்கள்?
நம் இரட்சண்யமே மாதாவுக்கு மிக முக்கியமான விஷயம். அதை சம்பாதிக்க சேசுவும் மாதாவும் நிறைவேற்றிய இரட்சண்ய திருநிகழ்ச்சிகள்தானே ஜெபமாலையின் 15 தேவ இரகசியங்களாக உள்ளன! அவற்றை மாதாவின் முன்பாக அமர்ந்து அவர்களுடன் சேர்ந்து, நாம் சிந்திக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.
கால் மணி நேரம் மாதாவுடன் செலவிடுவது என்பது இதுதான். கால் மணி நேரம் குறைந்த அளவு. அதைக் கூட்டுவதினால் குறை எதுவும் ஏற்படாது; மாறாக மாதாவுக்கும் நமக்கும் அது மன நிறைவாகவும், மேலும் நமக்கு வரப்பிரசாதம் நிரம்பியதாகவுமே இருக்கும்.
அந்தக் கால்மணி நேரத்தில் 15 தேவ இரகசியங்களையும் தியானித்துவிட தேவையில்லை. நம் தேவைப்படி ஒன்றோ அல்லது சிலதோ எடுத்துக்கொள்ளப்படலாம்.
சகோதரி லூஸியா தன் தாய் மரிய ரோஸாவுக்கு எழுதிய (24 ஜூலை 1927) கடிதத்தில் கூறுகிறாள்:
“அம்மா! கடவுளுக்கு மிக விருப்பமானதும் நம் அன்புள்ள பரலோக அன்னை விண்ணப்பித்துள்ளதுமாகிய ஒரு பக்தி முயற்சியை (முதல் சனி பக்தி) நீங்களும் கைக்கொண்டு எனக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அதில் குறிப்பிடுகிற ஒரு பாவசங்கீர்த்தனம் முதல் சனி தவிர்த்த வேறு ஒரு நாளிலும் செய்யப் படலாம். கால் மணி நேரம் மாதாவுடன் செலவிடுவதைப் பற்றி உங்களுக்குச் சிரமம் இருக்கக் கூடும். ஆனால் அது எளிதான ஒன்றுதான். ஜெபமாலை தேவ இரகசியங்களைப் பற்றி சிந்திப்பது யாருக்குக் கஷ்டம்? சம்மனசானவர் மாதாவுக்கு மங்கள வார்த்தை கூறுவதை நினைக்கும்போது மாதாவின் தாழ்ச்சி ஞாபகத்திற்கு வரும். இவ்வளவு பெரிய மகிமைக்கு உயர்த்தப்படுகிற மாதா தன்னை ஆண்டவரின் அடிமை என்று சொல்கிறார்கள். பின் சேசுவின் பாடுகளைப்பற்றி நினைக்கும்போது சேசு பக்கத்தில் மாதா நின்றார்கள். இப்படி புனித நினைவுகளை மிகவும் கனிவுள்ள நம் தாயுடன் இருந்து சிந்திப்பது என்ன கஷ்டம்?... இப்படி நம் பரலோக அன்னைக்கு நீங்கள் ஆறுதலளியுங்கள்...”
பரிகாரம் செய்யும் கருத்து மிக முக்கியம்
1926 பெப்ருவரி மாதம் 15-ம் நாளில் சேசு சகோதரி லூஸியாவுக்கு அளித்த தனிக் காட்சியில், மரியாயின் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்யும் கருத்து இல்லாமல் எத்தனை பக்தி முயற்சிகளைச் செய்தாலும் அவை ஒன்றுமில்லை என்று கூறினார். அவர் சொன்னார்: “சனிக்கிழமை பரிகாரப் பக்தியை அநேக ஆன்மாக்கள் செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் வெகு கொஞ்சப் பேரே அதில் நீடிக்கிறார்கள். அப்படி நீடித்துச் செய்பவர்களும் அதனால் தங்களுக்கு வாக்களிக்கப் பட்ட வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளவே அதைச் செய்கிறார்கள். 5 முதல்சனி பக்தி முயற்சியைச் செய்பவர்கள் மாதாவுக்குப் பரிகாரம் செய்யும் நோக்கத்துடனே அதைச் செய்ய வேண்டும். அப்படி 5 முதல் சனிகளை நன்றாகச் செய்பவர்கள் 15 சனி களை வெதுவெதுப்பாகச் செய்வோரைவிட எனக்கு அதிக பிரியமாயிருக்கிறார்கள்.”
மாதா லூஸியாவிடம்: “நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு” என்று கூறிய இரக்கமுள்ள வார்த்தைகள் நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் பதிந்திருக்க வேண்டும். மாதாவுக்குப் பரிகார அன்பும் ஆறுதலும் அளிப்பது முதற் கடமையான அலுவல் என்று நாம் தீர்மானித்து செயல்படவேண்டும். மாதாவின் பிள்ளைகள், அதிலும் சிறப்பாக “மாதா அப்போஸ்தலர்களாக” இருப்பவர்கள், மாதாவின் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்யும் அலுவலை தங்கள் முதன்மையான அலுவலாக ஏற்று செயல்படுகிறார்களா என்று தங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும்.
எந்தக் கடமையும் பிந்தலாம்; பரிகாரக் கடமையான அலுவல் பிந்தவே கூடாது.