வேறொரு உதாரணம், மிகுந்த உறுத்தலுக்குரிய ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன், கேளுங்கள். கணவன் மனந்திரும்பும்படி மனைவி செபமும், தபமும் செய்த விபரம் அது.
அவள் அரசாட்சி ஸ்தாபகத்தைப் பற்றி ஒரு நாள் பிரசங்கம் கேட்டாள்: ""இதுவே என் ஏக நம்பிக்கை'' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். ஆனால் இதைச் செய்து முடிப்பது எப்படியென்று அவளுக்குப் புலப்பட வில்லை. அவளது கணவன் கத்தோலிக்கனாயிருந்து தவறிப் போனவன். திடீரென்று ஓர் எண்ணம் அவள் உள்ளத்தில் உதித்தது. அவள் பிறந்தநாள் சமீபித்தது. அதைக் கொண்டாடுவதற்காக, அவளது கணவனும் மகள்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். திரு இருதயத்தில் மட்டற்ற நம்பிக்கை வைத்து, இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட மாட்டேன் என்று தீர்மானித்தாள். தனது எண்ணம் நிறைவேறும்படி ஜெபமும், தவமும் செய்து, மெதுவாய்த் தன் கணவனை அணுகி, தன் மட்டிலுள்ள பாசத்திற்கு அத்தாட்சியாக, தான் பிறந்த நாளன்று தங்கள் வீட்டில் திரு இருதய அரசாட்சியை ஸ்தாபிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கெஞ்சினாள். அவளுக்குப் பிரியப்படுவதற்காக, சரி என்று கணவன் சம்மதித்தான்; இது அவளுக்குப் பேராச்சரியமாயிருந்தது. ஆனால் நான் அந்தச் சடங்கு நடக்கும்போது இருக்க மாட்டேன் என்று எச்சரித்து விட்டான். அற்புதத்தின் முதற்பாகம் ஆகிவிட்டது. சேசுநாதர் அரைகுறையாய் ஒன்றும் செய்ய மாட்டார்.
ஸ்தாபகத்துக்குக் குறிக்கப் பட்ட நாள் வந்தது. மிகுந்த சிநேகத்துடன் சடங்கு நடைபெற்றது. தாயும், பிள்ளைகளும் வீட்டெஜமானுடைய ஆத்துமத்துக்காக மன்றாடினார்கள். அவன் மனந்திரும்பினால் பெத்தானியா நண்பருக்குப் பிரமாணிக்கமுள்ள சிநேகிதராயிருக்க வாக்களித்தார்கள். சகலமும் முடிந்த பிறகு, கணவன் ஸ்தாபகம் செய்திருந்த அறைக்குள் நுழைந்து, வேடிக்கையாகப் படத்தை உற்றுப் பார்த்தான் அன்பு பொழியும் ஆண்டவர் அவன் வீட்டு அரசராக அங்கிருந்தார். கண் கூசியதுபோல், கண்களைத் தாழ்த்தி சற்று உலவியபின், மீண்டும் அதைப் பார்த்தான். இந்தத் தடவை அவனது இருதயம் வேகமாய்த் துடிக்கலாயிற்று. இந்த மனச்சலனம் நரம்புக் கோளாறாயிருக்கக் கூடும் என்றெண்ணி, தன் உள்ளத்தில் உதித்த உணர்ச்சிகளைத் தணித்துத் தள்ளிவிட முயன்றான். காற்றோட்டத்தில் இருந்தால் சரியாய்ப் போகும் என்று நினைத்து, அறையை விட்டு வெளியே போனான். ஆனால் காந்த சக்தியால் இழுக்கப்பட்டவனைப்போல், மீண்டும் அறைக்குள் பிரவேசித்துத் தன்னை அறியாமலே படத்தை நோக்கிக் கண்களை உயர்த்தினான். அதோ வெற்றி வீரர், தமது இருதயத்தைக் காட்டி, அவனை அழைத்துக் கொண்டிருந்தார். அவன் கண்களில் நீர் ததும்ப, தனது மனைவியை மெதுவாய்க் கூப்பிட்டு, "இந்த வீட்டுக்குள் யாரை வரவழைத்திருக்கிறீர்கள்? இந்த வீட்டில் யாரோ சில மணி நேரம் இருந்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். நான் அவரைப் பார்க்க வில்லை. ஆனால் அவரை உணர்கிறேன். யாரோ ஒரு புது ஆள் வீட்டில் இருக்கிறார்'' என்று திக்கித் திக்கிச் சொன்னான். தாய் தன் மகள்களைக் கூப்பிட்டாள். தாயும், பிள்ளைகளும் சேர்ந்து தங்கள் விண்ணப்பத்தைப் புதுப்பித்தார்கள். ஜெபத்தின் முடிவில், தகப்பன் அவர்களுக்குப் பின்புறமாக முழந்தாளிட்டிருந்தான். அன்று சாயங்காலமே அவன் பாவசங்கீர்த்தனம் செய்தான். புத்துயிர் பெற்ற இந்த லாசர், தன் குடும்பத்தோடு கூடி, அன்பின் அரசரது இரக்கத்தைப் புகழ்ந்து கொண்டாடினான்.
இந்தச் சம்பவங்கள் நமக்கு வியப்பும், ஆச்சரியமுமாயிருக்கின்றன; ஆயினும் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்? இவை சாமான்யமானவையல்ல என்று நமக்குத் தோன்றினும், சேசுநாதர் தமது திரு இருதய அப்போஸ்தலருக்கும், சிநேகிதருக்கும் செய்த வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலன்றி வேறென்ன?
"மிகவும் கடினமான இருதயங்களும் இளகச் செய்வேன்; அவர்களது குடும்பங்களில் சமாதானத்தை ஸ்தாபிப்பேன். அவர்களுடைய முயற்சிகளையெல்லாம் ஆசீர்வதிப்பேன். அவர்கள் அந்தஸ்திற்கேற்ற வரங்களையெல்லாம் அளிப்பேன். என் இருதயத்தைக் கொண்டு அரசு புரிவேன்''...... என்று அவர்தாமே வாக்களித்திருக்கிறார் அல்லவா? ஆதலால், இத்தகைய வாக்குத்தத்தங்களும், இன்னும் வேறு பெரிய வாக்குத் தத்தங்களும் செய்த பின்னர், சேசுவின் திரு இருதய வீடுகளில், அவருக்குச் சொந்தமான இல்லங்களில் அற்புதங்கள் நடைபெறாமல் போகுமானால், இது போன்ற ஏமாற்றம் வேறொன்றும் கிடையாது என்பேன். ஆனால் இந்த ஏமாற்றம் இருக்காது. ஏனென்றால் கடவுள் உண்மையுள்ளவர். அவர் நமது நம்பிக்கைக்கு முழுவதும் உரியவர்; சேசுநாதரோ கடவுளாயிருக்கிறார்.
ஆதலால், உங்களது வீடுகளில் சேசுநாதரை அரசராகவும், நண்பராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் அரசர்; கோழையான பிலாத்துவிடம் உன்னத மகத்துவத்துடன் அவரே இப்படிச் சொன் னார். ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தேசமும், அவரது இராஜ ரீகத்தை அங்கீகரித்துப் மகிமைப்படுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவர் சிருஷ்டிப்பின் உரிமையாலும், இரட்சணிய உரிமையாலும் அரசாராயிருக்கிறார். ""சேசு நசரேன் இராஜா!'' இதன் நிமித்தம் நீ இதைச் செய்யும்படி கேட்கிறார். இன்னும் பரிகார முயற்சியாகவும் அவரது திரு இருதயத்துக்கு ஆறுதலாகவும் உன்னிடம் இதைக் கேட்கிறார். செல்வந்தர்களோ, ஏழைகளோ, இரு வகுப்பையும் சேர்ந்த கணக்கற்ற வீடுகளின் வாசலருகில் அவர் நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். அவரது சிரசில் முள்முடி இருக் கிறது, அவரது தலைமயிர் இராக்காலப் பனியால் நனைந்திருக்கிறது; உலகில் அவருக்கு எதிராக எழும்பியிருக்கும் புயலிலிருந்து பதுங்கு மிடம் தேடி, அவர்கள் வீட்டில் தம்மை ஏற்றுக்கொள்ளக் கேட்கிறார். சட்டசபைகளிலிருந்தும், நீதிமன்றங்களில் இருந்தும் அவரைத் துரத்தி விட்டார்கள். பள்ளிக்கூடங்களில் அவரை நீக்கி விட்டதுமல்லாமல், சில சமயங்களில் அவரது ஆலயங்களில் இருந்தும் கூட அவரை அகற்றி விட்டார்கள். பயணத்தால் ஆடை கறைபட்டு, கஸ்தியடைந்து, ஆதரிப்பாரின்றி, அவமானங்கள் நிறைந்து, நன்றிகெட்ட துரோகிகள் அவர்மீது பொழியும் வசைச் சொற்களால் நிந்தையடைந்து, தன்னந் தனியே பிச்சைக்காரனைப் போல் அவர் அலைந்து திரிவதைப் பார். அவருக்குச் செவிகொடு: காயப்பட்ட கரத்தால் அவர் உன் கதவைத் தட்டி, ""நான் சேசுநாதர், பயப்படாதே, சிநேகத்தின் அரசர் நான், கதவைத் திற'' என்று கூப்பிட்டுச் சொல்கிறார்.
"பரிதாபத்திற்குரிய சேசு'' என்று சொல்வார் அர்ச். பிரான்சிஸ் சலேசியார். அவரது சிநேகிதர் என்று சொல்லிக் கொள்கிற நீங்க ளாவது அவர் மட்டில் பரிதாபப்படுங்கள். அவருக்கு அடைக்கலம் கொடுங்கள்; ஏனெனில் மக்கள் திரள் வெறிகொண்டு கற்களை எடுத்து, அவரைப் பின்தொடர்ந்து, ""அவரைக் கொல்லுங்கள், அவர் மரண தண்டனைக்கு உரியவர், அவரைச் சிலுவையில் அறையுங்கள், அவர் எங்கள் மீது ஆட்சி புரிய விட மாட்டோம்'' என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தேவதூஷணமான இந்தக் கூக்குர லுக்கு ஈடாக, நீங்கள் உங்கள் கதவுகளைத் திறந்து வைத்து, ""ஆண்டவரே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். இந்த வீட்டில் தேவரீர் ஆட்சி செலுத்தும்படி உம்மை மன்றாடுகிறோம். நீரே எங்கள் இராஜாவாயிருப்பீராக!'' என்று சொல்லுங்கள். அவர் தெய்வீக உறுதியாய் உன்னிடம் கேட்கிற உபசாரம், உனக்குச் சகலத்திலும் மேலான வரமாயிருக்கும் என்று நிச்சயமாயிரு; உன் நன்மையை உத்தேசித்தே அவர் உன் இல்லத்தில் பிரவேசிக்க விரும்புகிறார்.
உன் வாசற்படியில் கூப்பிட்டுக் கொண்டிருப்பவர் மாபெரும் இணையற்ற ஆறுதல் அளிப்பவர். அவர் உன் கண்ணீரைத் துடைத்து உனது துயரங்களை சாந்தப்படுத்த வேண்டியதில்லையா? இவ்விதம் கேட்பது ஏன்? சில சமயம் இந்தக் கேள்வியே உன் மனப் புண்ணைக் கிளறிவிடக் கூடும். இந்தப் புண்ணை யாரால் ஆற்ற முடியும்? சிருஷ்டிகள் இதை ஆற்றக் கூடுமென்று இன்னுமா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சர்வேசுரனும், மனிதனுமானவர், கஸ்தி நிறைந் தவர், ஆறுதல் அளிக்கும் வரத்தைத் தமக்கென்று வைத்திருக்கிறார்; இது உனக்குத் தெரியுமல்லவா? ஒரு தாய், ஒரு விதவை அல்லது ஒரு மகளுடைய இருதயத்திலுள்ள புண்ணில் தைலம் வார்க்கக் கூடியவர் சேசுநாதரன்றி வேறெவருமில்லை. சரீரத்தின் காயங்களைக் குணப் படுத்துவதற்கு, எவ்வளவோ காலம் சிகிச்சை செய்ய வேண்டியிருக் கிறது. துயரத்தால் பிளந்து போயிருக்கும் இருதயங்களைக் குணப் படுத்த கருணைமிக்க ஸ்தாபகம் ஒன்று இல்லையா? இருக்கிறது. குடும்பத்தில் சேசுவின் திரு இருதய அரசாட்சி ஸ்தாபகம்தான் இது. இருளடர்ந்த வேளைகளில் அவர் மீண்டும் மீண்டும் தட்டிக் கூப்பிடு கிறார். ""தாமதம் செய்யாதே. ஆறுதலற்ற ஆத்துமங்கள் இங்கு உண்டென்று எனக்குத் தெரியும். சீக்கிரம் கதவைத் திற, நான் சேசுநாதர்'' என்று சொல்கிறார்.
உன்மீதே பரிதாபப்பட்டு, அவருக்குக் கதவைத் திறந்துவிடு; உனது சிலுவைகளையெல்லாம் சுமப்பதில் உனக்குத் துணைபுரியக் கூடியவரை உள்ளே வரச்சொல். அவர் மனுமக்களின் நண்பர், சுய நலம் பாராட்டாத உண்மையான சிநேகிதர், அவர் ஒருக்காலும் மாற மாட்டார், ஒருக்காலும் உன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டார். அவர் ஒருக்காலும் சாக மாட்டார்; அவருக்கு உன் கதவைத் திற. உனது பெத்தானியாவை அவருக்குத் திறந்து வை. சேசு நண்பர் ""தாமதமாகி விட்டது'' என்று ஒருக்காலும் சொல்ல மாட்டார். அந்த நண்பரை விட்டகன்று, அநேகர் அழுது புலம்புவது எவ்வளவு வருத்தத்திற்குரிய காரியம்! அவரில்லாமல் கண்ணீர் சொரிவது ஆத்துமத்திற்கு நஞ்சாகும்; அவர் இல்லாமல் அவதிப்படுவது மரணத்தின் முன்னுணர்வு. மார்த்தாள் சொன்னபடி, நமது துன்ப வேளையில் அவர் இருந்திருப்பாரானால், பரந்த வனாந்தரத்தின் மத்தியில் தேன்கூட்டையும், பாறைகளிடையே மலர்களையும் கண்டிருப்போம். ஆனால் அவர் நம்மோடு நெருங்கி உறவாட நம்மை அழைக்கிறார் என்று நாம் நம்புவதில்லை. எட்ட நின்று அவரை எட்டிப் பார்க்கிறோம். ஜெனசரேத் ஏரியின் தண்ணீர் மேல் அவர் நடப்பதைக் கண்ட அப்போஸ்தலர்கள் நினைத்தபடி, நாமும் அவரை ஒரு பூதமென்று எண்ணுகிறோம். அவரால் மிகவும் நேசிக்கப்பட்ட சீடனாகிய அருளப்பரோ ""ஆண்டவர்'' என்று உடனே அறிந்துகொண்டார்.
சேசுநாதரை உள்ளபடி நாம் அறிய வேண்டுமானால், அவரோடு நெருங்கி வாழ வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவர் ஒருவரை நன்றாய் அறிந்து நேசிப்பதற்கு அவர்கள் அநுதினம் நெருங்கி உறவாடுவதுதான் காரணம். இப்படியே நம் மூத்த சகோதர ரான சேசுவோடும் நாம் நடந்துகொள்ள வேண்டும். அவர் நம்மை ஆறுதல்படுத்தவும், முக்கியமாய் நமது ஆத்துமத்தை இரட்சிக்கவும் ஆசிக்கிறார். நாம் அர்ச்சியசிஷ்டவர்களாயிருந்தாலும் கூட, நமது இரட்சணிய அலுவலை நிறைவேற்றுவதற்கு இந்த உதவி அவசியம். நீ எண்ணத்திலும் செயலிலும் அவரை உனது இராஜாவாகத் தெரிந்து கொண்டால், தமது வரப்பிரசாதங்களை உன்மேல் ஏராளமாய்ப் பொழிந்தருள்வார்.