கலாத்தியதேசமானது சின்ன ஆசியாவின் வடபுறத்திலிருந்த தேசமாம்.
அதிலே அர்ச். சின்னப்பர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, புறஜாதியாரில் அநேகருக்கு ஞானஸ்நானங்கொடுத்து, அநேக சபைகளை ஏற்படுத்தியிருந்தார்.
அந்தச் சபையார்கள் மனந்திரும்பின துவக்கத்திலே வெகு பக்தி சுறுசுறுப்புள்ளவர்களாயிருந்து, வேதத்திற்காக அநேக துன்பதுரிதங்களை மிகுந்த தைரியத்தோடே பட்டு அநுபவித்தார்கள்.
ஆனால் அர்ச். சின்னப்பர் அவர்களைவிட்டு அப்பாலே போனபின், முன் யூதர்களாயிருந்து மனந்திரும்பின சிலர் அவர்களிடத்திலே நுழைந்து, சுவிசேஷத்தோடேகூடப் பழைய ஏற்பாட்டில் கற்பிக்கப்பட்ட விருத்தசேதன முதலான சடங்குகளையும் அநுசரிக்கவேண்டும் என்று சொல்லி, அவர்களை மிகவும் கலக்கினதுந்தவிர, அவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்த அர்ச். சின்னப்பர் அப்போஸ்தலர்களுடைய சீஷனேயன்றி அப்போஸ்தலரல்ல என்றும், அப்போஸ்தலர்கள் போதிக்கிறபடி அவர் போதிக்கிறதில்லை என்றும், பலவிதமாய் அவர்பேரில் குறைபேசினதினாலே அச்சபையார் அந்தக் கள்ளப்போதகர்களுடைய பேச்சை நம்பி, விருத்தசேதன முதலான பழைய ஏற்பாட்டின் சடங்குகளை அநுசரிக்கத் துவக்கியிருந்தார்கள்.
அர்ச். சின்னப்பர் இவைகளையெல்லாம் கேள்விப்பட்டு, அவர்களை மறுபடியுஞ் சுவிசேஷத்தின் நன்னெறியிலே திருப்பத்தக்கதாகக் கர்த்தர் அவதாரத்துக்குப்பின் சுமார் 55-ம் வருஷத்தில் எபேசு நகரத்திலிருந்து இந்த நிருபத்தை எழுதி, அந்தக் கள்ளப்போதகர்களுடைய பொய்ப் போதகங்களை மிகுந்த திறமையோடு மறுத்து, தாம் மற்ற அப்போஸ்தலர்களிலும் அற்பமல்லவென்று ஒப்பிக்கிறார்.
பின்னும் பழைய ஏற்பாட்டின் சடங்குகள் ஈடேற்றத்துக்கு அவசியமும், பிரயோசனமும் உள்ளவைகளல்லவென்று பற்பல வேத உதாரணங்களால் ஒப்பித்து, நல்லொழுக்கத்துக்கடுத்த சில புத்திமதிகளையுஞ் சொல்லி நிருபத்தை முடிக்கிறார்.
இந்த நிருபம் உரோமாபுரியாருக்கு எழுதிய நிருபத்துக்கு ஒப்பாகவும், அதன் சுருக்கம்போலவும் இருக்கிறது.