இவ்விரண்டு காட்சிகளிலும் மிகச் சுருக்கமாக, சில வாக்கியங்களில் கூறப்படும் முன்னறிவிப்புகளில் முக்கிய இடம் வகிப்பது ஆன்மாக்களின் சேதத்தைப் பற்றிய அறிவிப்பேயாகும்.
சலேத் காட்சியில் மாதா: 'உரோமாபுரி விசுவாசத்தை இழக்கும்...'' என்றார்கள். திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற பரிசுத்த ஸ்தானம் விசுவாசத்தை இழக்குமென்றால், அந்த உயர்மட்ட விசுவாச மறுதலிப்பு எப்பேர்ப்பட்ட மாபெரும் தேவ துரோகமாகும்! அது எப்பேர்ப்பட்ட ஆத்தும சேதத்தை விளைவிக்க வேண்டும்!
இன்று அந்த விசுவாச இழப்பை நாம் கண்ணாரக் காண்கிறோம். ரோமாபுரி சபைகளுடன் உறவை ஆதரித்ததால் லட்ச லட்சமாய்க் கத்தோலிக்க மக்கள் பதித, பிரிவினை சபைகளில் போய்ச் சேருகின்றனர். மேலும் எம்மதமும் சம்மதம் என்ற தப்பறையை ஆதரித்து வருவதால் ஏராளமான ஆன்மாக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை இழந்து வருகின்றனர்.
இப்படிக் கோடிக்கணக்கான ஆன்மாக்கள் மோட்சத்திற்கு இழக்கப்படுவது மிகப் பெரும் நஷ்டமல்லவா? அவர்களின் இரட்சிப்புக்காக தம் இரத்தமெல்லாம் சிந்தி உயிர் விட்ட நமதாண்டவரும் மாதாவும் எவ்வளவு துயரமடைகிறார்கள்!
பாத்திமாவில் மாதா பல நாடுகள் நிர்மூலமாக்கப்படும் என்று கூறியதிலும் பல நாடுகள்" என்பதை, பல நாடுகளின் ஆன்மாக்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று பாத்திமாபதியின் மேற்றிராணியார் கூறியிருக்கிறார். இதனால் ஆன்மாக்களின் அழிவே மற்ற எந்த அழிவையும் விட அதிக நஷ்டம் என்பது புலனாகிறது.
உலகத் தண்டனைகளான யுத்தம், பஞ்சம், விபத்துக்கள், உயிர்ச் சேதங்கள், நோய்கள் முதலியனவும், வான் கோளங்கள் தடம் புரள்வதும், பூமி அதனால் பாதிக்கப்பட்டு, அளவற்ற சேதங்கள் விளைவதும், ஆன்மாக்கள் இழக்கப்பட்டு நரகத்தில் புதைக்கப்படும் சேதத்தை விடக் குறைந்த சேதமேயாகும்.
சுத்திகரத் தண்டனையால் ஆன்மாக்கள் இழக்கப்படும் நஷ்டத்தின் எதிரொலி போல் உலக அழிவுகள் இருக்கும்.
எப்படியென்றால், கடவுள் எல்லா வழிகளிலும் பாவ மனுக்குலத்தைத் தம் பக்கமாக மனந்திரும்ப முயன்றும் பயனில்லாததால் மட்டுமே தண்டனையை அனுப்புகிறார். தண்டனையை அனுப்புமுன் எச்சரிப்பு அறிவிப்பைச் செய்கிறார். ஆத்தும சம்பந்தமாகவே இந்த எச்சரிப்பு இருக்கும். அதைப் பெற்றுக் கொள்ளும் மனிதர்கள் மனந்திரும்பிவிட்டால் தண்டனை ரத்தாகி விடும் - நினிவேயில் நடந்தது போல!
அவர்கள் மனந்திரும்பாமல் தங்கள் ஆத்துமங்களைச் சேதத்திற்கு உட்படுத்துவார்கள் என்றால் அதன் விளைவாகக் கடும் தண்டனையால் கடவுள் உலகத்தைச் சுத்திகரிப்பார். மனந்திரும்பாத மனிதர்களை அழித்து விடுவார்.
அநேக தீர்க்கதரிசனங்களின்படி உலக ஜனத்தொகையில் பாதிக்கும் கூடுதலாக மக்கள் மாண்டு போவார்கள். மனிதர்கள் எழுப்பிய கைவேலைகளும் நாசமாக்கப்படும்.
இத்தண்டனையின் அழிவு எவ்வளவு பெரிதாயிருக்குமென்றால், ஜூலியாவின் வெளிப்படுத்தலின்படி அந்த உலகளாவிய அழிவிற்குப் பின் "பூமி பாழாகி வெறுமையாய்க் கிடக்கும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் காண்பதற்கு அந்த வெறுமையில் தேடிப் போவான். அவன் இன்னொரு மனிதனைக் கண்டு கொண்டபின் அவர்கள் ஒருவர் ஒருவரை ஒரே இருதயமாயும், ஒரே மனமாயும் நேசிப்பார்கள். அப்படி எஞ்சியவர்களே என் சிறு மந்தையாயிருப்பார்கள்" (Jesus Calls Us. Vol. I, p. 258)
இவ்வாறு, சுத்திகரிப்புத் தண்டனையில் காப்பாற்றப்பட்ட ஆண்டவருடையவும் மாதாவுடையவும் பிள்ளைகள் தான் புதுப்பிக்கப்படும் திருச்சபையைக் கட்டி எழுப்புவார்கள். அவர்களே மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றியை நிலைநாட்டுவார்கள்.
பாத்திமாவில் மாதா வாக்களித்துள்ள சமாதான காலத்தையும் சுகிப்பார்கள். அப்போது திருச்சபை என்றுமில்லா ஒளி பெற்றுத் திகழும். சகல புண்ணியங்களும், கற்பனைகளும் அனுசரிக்கப்படும். மக்களெல்லாரும் திருச்சபையில் உட்படுவார்கள். அதுவே "கடவுளின் இராச்சியம்" உலகில் வருவதாக இருக்கும்.