அதிகாரம் 01
1 யூதாவின் அரசனாகிய யோவாக்கீமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பபிலோனின் அரசனாகிய நபுக்கோதனசார் யெருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்.
2 ஆண்டவர் யூதாவின் அரசனாகிய யோவாக்கீமையும், கடவுளுடைய கோயிலின் பாத்திரங்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார்; அவனும் அவற்றைச் சென்னார் நாட்டிலுள்ள தன் தெய்வத்தின் கோயிலுக்குக் கொண்டு போய் அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலங்களோடு சேர்த்து வைத்தான்.
3 அப்போது அரசன் தன் அரண்மனையிலிருந்து அண்ணகர்களின் தலைவனாகிய அஸ்பேனேசுக்கு ஒரு கட்டளை கொடுத்தான்: அதன்படி, இஸ்ராயேலருக்குள் அரசகுலத்திலிருந்தும்,
4 உயர்குடியிலிருந்தும், யாதொரு மாசும் இல்லாதவர்களும் அழகுள்ளவர்களும், எல்லா வகை ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் வல்லவர்களும், அரசனின் அரண்மனையில் சேவிக்கும் திறமையுள்ளவர்களுமான இளைஞர் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கல்தேயரின் கலைகளையும் மொழியையும் கற்றுக் கொடுக்கக் கட்டளையிட்டான்.
5 அரசன் தான் உண்ணும் உணவிலும், பருகும் திராட்சை இரசத்திலும் நாடோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான்; இவ்வாறு மூன்றாண்டுகள் வளர்ந்த பின்னர் இறுதியில் அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியக் கொண்டுவரப்படல் வேண்டும், என்றான்.
6 அவர்களுள் யூதாவின் வழிவந்தவர்களான தானியேல், அனனியாஸ், மிசாயேல், அசாரியாஸ் என்பவர்கள் இருந்தார்கள்.
7 அண்ணகரின் தலைவன் தானியேலுக்குப் பல்தசார் என்றும், அனனியாசுக்குச் சித்ராக் என்றும், மிசாயேலுக்கு மிசாக் என்றும், அசாரியாசுக்கு அப்தேநாகோ என்றும் வேறு பெயர் கொடுத்தான்.
8 அரசனது உணவினாலும், அவன் குடிக்கும் திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப் படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே, தம்மைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு அண்ணகரின் தலைவனிடம் அனுமதியும் கேட்டுக்கொண்டார்.
9 கடவுளும் அண்ணகரின் தலைவனிடத்தில் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்;
10 அப்போது அண்ணகரின் தலைவன் தானியேலை நோக்கி, "உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் ஆண்டவனுக்கு நான் அஞ்சுகிறேன்: உங்களைப் போன்ற இளைஞர்களின் முகங்களை விட உங்கள் முகங்கள் களை குன்றியனவாய் இருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய் விடுமே! நீங்கள் அதற்குக் காரணமாவீர்கள்" என்றான்.
11 தானியேல், அனனியாஸ் மிசாயேல், அசாரியாஸ் ஆகியவர்களைக் கண்காணிக்கும்படி அண்ணகரின் தலைவனால் ஏற்படுத்தப்பட்டவனிடம் தானியேல்,
12 ஐயா, தயைகூர்ந்து பத்து நாள்வரைக்கும் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும்; எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டும் கொடுக்கச் சொல்லும்.
13 அதற்குப் பிறகு, எங்கள் முகங்களையும், அரசன் தரும் புலால் உணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் முகங்களையும் ஒப்பிட்டுப் பாரும்; பின்னர் உம் விருப்பபடி உம்முடைய ஊழியர்களாகிய எங்களுக்குச் செய்தருளும் என்றார்.
14 அவர்களுடைய வேண்டுகோளின்படியே அவர்களைப் பத்து நாட்களாகச் சோதித்துப் பார்த்தான்.
15 பத்து நாட்களுக்குப் பிறகோ அரச உணவை உண்டு வந்த இளைஞர் அனைவரையும் விட இவர்கள் முகப்பொலிவோடும் உடல் கட்டோடும் விளங்குவதைக் கண்டான்.
16 ஆதலால் கண்காணிப்பாளான் புலாலுணவுக்கும் திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறியுணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.
17 இந்த நான்கு இளைஞர்களுக்கும் கடவுள் எல்லாக் கலைகளிலும் அறிவிலும், தேர்ச்சியையும் தந்தார்; சிறப்பாகத் தானியேலுக்கு எல்லா காட்சிகளையும் கனவுகளையும் கண்டுபிடிக்கும் ஆற்றலையும் அளித்தார்.
18 அவர்களை அரசனது முன்னிலையில் கொண்டு வரும் நாள் வந்தது; அண்ணகருடைய தலைவன் அவர்களை நபுக்கோதனசாருக்கு முன்பாகக் கொண்டு வந்து விட்டான்.
19 அரசன் அவர்களோடு உரையாடினான்; அப்போது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியாஸ், மிசாயேல், அசாரியாஸ் ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; ஆகவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரிய அமர்த்தப்பட்டனர்.
20 ஞானத்திற்கும் புத்திக்கும் அடுத்தவற்றில் அரசன் அவர்களிடம் விசாரித்தபோதெல்லாம், அவனது அரசில் இருக்கும் எல்லா நிமித்திகர்களையும் மந்திரக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்கள் என்பதைக் கண்டறிந்தான்.
21 இவ்வாறு, கீருஸ் அரசனது முதல் ஆட்சியாண்டு வரை தானியேல் அரண்மனையில் இருந்தார்.
அதிகாரம் 02
1 நபுக்கோதனசாரின் இரண்டாம் ஆட்சியாண்டில், நபுக்கோதனசார் கனவுகள் சிலகண்டான்; அதனால் அவன் உள்ளம் கலங்கினான், உறக்கமின்றித் தவித்தான்.
2 அப்போது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும் படி அறிஞர்களையும் நிமித்திகர்களையும் மந்திரவாதிகளையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான்; அவர்களும் வந்து அரசனுக்கு முன்பாக நின்றார்கள்.
3 அரசன் அவர்களை நோக்கி, "நான் ஒரு கனவு கண்டேன்; அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது; நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்" என்றான்.
4 அப்போது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமாயிக் மொழியில்) "அரசே, நீர் நீடுழி வாழ்க! கண்ட கனவை நீர் உம் ஊழியர்களுக்குச் சொல்லுவீராகில், அதன் பொருளை உமக்கு விளக்குவோம்" என்று கூறினார்கள்.
5 அரசன் கல்தேயருக்குக் கூறிய மறுமொழி இதுவே: "நீங்கள் நான் கண்ட கனவையும், அதன் உட்பொருளையும் எனக்கு அறிவிக்காமற் போனால் சின்னாபின்னமாய்க் கிழிக்கப்படுவீர்கள்; உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்; இது என் திண்ணமான முடிவு.
6 ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் தெரிவிப்பீர்காளகில் வெகுமதிகளும் பரிசுகளும் மிகுந்த மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்; ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும் எனக்குத் தெரிவியுங்கள்."
7 அதற்கு அவர்கள் மறுமொழியாக, "அரசர் கனவைத் தம் அடியார்களுக்குச் சொல்லட்டும்; அப்போது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்" என்றார்கள்.
8 அதற்கு அரசன் கூறினான்: "நான் முடிவு செய்து விட்டேன் என்பதை அறிந்து நீங்கள் காலந்தாழ்த்தப் பார்க்கிறீர்கள்; இது எனக்குத் தெரியாமலில்லை;
9 கனவு இன்னதென்று வெளிப்படுத்த உங்களால் இயலாமற் போனால், அதன் உட்பொருளையும் தெரிவிக்க உங்களால் முடியாதென்றே நான் முடிவு செய்ய வேண்டியுள்ளது; பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்லிக் காலத்தைப் போக்கப் பார்க்கிறீர்கள்; ஆதலால் கனவை நீங்கள் சொல்லுங்கள்; அப்போது தான் அதன் உட்பொருளையும் உங்களால் சொல்லமுடியும் என்பதை நான் அறிந்து கொள்வேன்."
10 கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, "அரசே, நீர் கேட்கின்ற காரியத்தைச் செய்யக்கூடிய மனிதன் இவ்வுலகில் ஒருவனுமில்லை; ஏனெனில் மகிமையும் வல்லமையும் கொண்ட எந்த அரசனும் இத்தகைய காரியத்தை நிமித்திகனிடமாவது மந்திரவாதியிடமாவது கல்தேயனிடமாவது கேட்டது கிடையாது.
11 ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று; தெய்வங்களன்றி வேறெவரும் அதனைத் தெரிவிக்க முடியாது; ஆனால் அற்ப மனிதர்கள் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!" என்று மறுமொழி கூறினார்கள்.
12 அரசன் இதைக் கேட்டுக் கடுங்கோபமும் சீற்றமும் கொண்டான்; பபிலோனில் இருக்கும் எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி ஆணை பிறப்பித்தான்.
13 ஆணை பிறந்தவுடனே ஞானிகளைக் கொலை செய்யத் தேடும் போது தானியேலையும்; அவர் தோழர்களையும் கூடக் கொலைச் செய்யத் தேடினார்கள்.
14 பபிலோனிய ஞானிகளைக் கொலை செய்யப் புறப்பட்டவனும், அரசனுடைய மெய்க்காவலர்களின் தலைவனுமாகிய அரியோக்கிடம் தானியேல் விவேகத்தோடும் எச்சரிக்கையோடும் விசாரித்தார்.
15 இத்துணைக் கொடிய கட்டளையொண்று அரசனிடமிருந்து பிறக்கக் காரணமென்ன என்று அரசனின் அதிகாரம் பெற்றவனைக் கேட்டார்; அப்போது அரியோக்கு என்பவன் தானியேலுக்குக் காரணத்தை விளக்கினான்.
16 உடனே தானியேல் அரசனிடம் போய்க் கனவின் உட்பொருளையும் அரசனுக்கு விளக்கிக் காட்டத் தமக்குத் தவணை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
17 பின்னர் தானியேல் வீட்டுக்குத் திரும்பிப் போய்த் தம் தோழர்களான அனனியாஸ், மிசாயேல், அசாரியாஸ் ஆகியவர்களிடத்தில் செய்தியைக் கூறினார்:
18 கூறி, அவரும், அவருடைய தோழர்களும் பபிலோனிய ஞானிகளோடு கொல்லப்படாதபடிக்கு இந்த மறைபொருளை குறித்து விண்ணகக் கடவுளின் இரக்கத்தை இறைஞ்சிக் கேட்குமாறு அவர்களுக்குச் சொன்னார்.
19 பின்பு இரவில் கண்ட காட்சியொன்றில் தானியேலுக்கு இந்த மறை பொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்போது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.
20 தானியேல் கூறியதாவது: "கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக! ஏனெனில் ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன.
21 நாட்களையும் காலங்களையும் மாற்றுகிறவரும், அரசுகளை வீழ்த்தி வேற்றரசுகளை ஏற்படுத்துகிறவரும் அவரே; ஞானிகளுக்கு ஞானத்தைத் தருகிறவரும், கண்டுணர்வோருக்கு அறிவு கொடுப்பவரும் அவரே.
22 ஆழ்ந்த மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் அவரே; இருளில் உள்ளதை அவர் அறிகிறார், ஒளி அவரோடு இருக்கிறது.
23 எங்கள் தந்தையரின் புகழும் கூறுகிறேன்; ஏனெனில், எனக்கு ஞானமும் திறமையும் தந்தீர், நாங்கள் உம்மிடம் கேட்டதை நீர் இப்போது எனக்கு அறிவித்தீர், அரசனது காரியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தினீர்."
24 பின்பு தானியேல் பபிலோனின் ஞானிகளை அழிக்கும்படி அரசனால் ஏற்படுத்தப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, "நீர் பபிலோனின் ஞானிகளை அழித்தல் வேண்டா; என்னை அரசன் முன்னிலையில் கூட்டிக் கொண்டுபோம்; நான் அரசனது கனவின் உட்பொருளைத் தெளிவாய்த் தெரிவிப்பேன்" என்றார்.
25 அப்போது அரியோக் தானியேலை அரசன் முன்னிலைக்கு விரைந்தழைத்துக் கொண்டுபோய், அரசனிடம், "அரசே, சிறைப்பட்ட யூதா நாட்டினருள் ஒருவனைக் கண்டுபிடித்தேன்; அவன் அரசருடைய கனவின் உட்பொருளைத் தெரிவிப்பானாம்." என்றான்.
26 அரசனோ பல்தசார் என்னும் பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, 'நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு அறிவிக்க உன்னால் கூடுமா?" என்று கேட்டான்.
27 தானியேல் அரசனது முன்னிலையில் சொன்ன மறுமொழி இதுவே: "அரசர் கேட்கிற மறைபொருளை அரசர்க்கு அறிவிக்க ஞானிகளாலும் நிமித்திகர்களாலும் அறிஞர்களாலும் குறிச்சொல்லுகிறவர்களாலும் இயலாது.
28 ஆனால், அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்ற விண்ணகக் கடவுள் கடைசி நாட்களிலே நிகழப்போகிறதை நபுக்கோதனசாராகிய உமக்குத் தெரிவித்திருக்கிறார்; நீர் கண்ட கனவும், நீர் படுத்திருக்கையில் உம் சிந்தையில் தோன்றிய காட்சிகளும் பின் வருமாறு:
29 அரசே, நீர் படுத்திருக்கும் போது இனி மேல் எதிர்காலத்தில் நடக்கப் போவதென்ன என்று நினைக்கத் தொடங்கினீர்: அப்போது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்கப்போகின்றதை உமக்குக் காண்பித்தார்.
30 ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், மனிதர்கள் அனைவரையும் விட எனக்கு மிகுதியான ஞானமிருக்கிறது என்பதால் எனக்கு இந்த மறை பொருட்கள் வெளிப்படுத்தப்படவில்லை; அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும், உம்முடைய இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்து கொள்ளவுமே அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டன.
31 அரசே, நீர் கண்ட காட்சி: பெரிய சிலையொன்றைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை ஒளி மிகுந்ததாய் உமக்கு எதிரே நின்றது; அதன் தோற்றமோ அச்சமூட்டுவதாய் இருந்தது.
32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னாலானது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியாலானவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.
33 கால்கள் இரும்பினாலும், பாதங்களில் ஒரு பகுதி இரும்பாலும், மறுபகுதி களிமண்ணாலும் ஆனவையாய் இருந்தன.
34 நீர் பார்த்துக்கொண்டிருந்த போது, கைகளால் பெயர்க்கப்படாத கல்லொன்று (மலையிலிருந்து) உருண்டு வந்தது; வந்து சிலையின் இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி அவற்றை நொறுக்கிப் போட்டது.
35 அப்போது, அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கிக் கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளமே இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக்கல் பெரிய மலையாய் வளர்ந்து மணணுலகத்தை முழுவதும் நிரப்பிற்று.
36 இதுவே நீர் கண்ட கனவு; அரசே, அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது தெரிவிப்பேன்.
37 நீர் அரசர்க்கரசராய் விளங்குகிறீர்; விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வல்லமை, மகிமை ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார்:
38 எல்லா இடங்களிலுமுள்ள மனிதர்களையும், வயல் வெளி மிருகங்களையும், வானத்துப் பறவைகளையும் உம் கைகளில் அவர் தந்திருக்கிறார்; நீர் அவற்றையெல்லாம் ஆளும்படி செய்துள்ளார்-ஆகவே பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கிறது.
39 உமக்குப் பின் உம்மிலும் கீழ்ப்பட்ட வேறொரு அரசு தோன்றும்; அடுத்து உலகெல்லாம் ஆளும் வெண்கலமான மூன்றாம் அரசு எழும்பும்.
40 நான்காம் அரசு இரும்பைப் போல் இருக்கும்; இரும்பு எப்படி எல்லாவற்றையும் நொறுக்கிச் சின்னா பின்னமாக்குகிறதோ, அப்படியே இது அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கிவிடும்.
41 ஆனால் அச்சிலையின் பாதங்களும் கால் விரல்களும் ஒரு பகுதி குயவனின் களி மண்ணும், மறு பகுதி இரும்புமாயிருப்பதை நீர் கண்டீர். அந்த அரசு பிரிக்கப்படும்; ஆயினும் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டது போலவே இரும்பின் உறுதி அதில் இருக்கும்.
42 கால்களின் விரல்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாய் இருந்தன; அந்த அரசு பாதி வலிமையுற்றதாயும் பாதி வலிமையற்றதாயும் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
43 இரும்பு களிமண்ணோடே கலந்திருப்பதை நீர் கண்டீர்; அவர்களும் மற்ற மனிதர்களுடன் திருமண உறவினால் கலந்திருப்பார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல் அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள்.
44 அந்த அரசுகளின் நாட்களில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; வேற்றினத்துக்கும் தரப்படாது.
45 அது மற்ற அரசுகளையெல்லாம் அழிக்கும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்; கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து வந்து, களிமண்ணையும் இரும்பையும் வெண்கலத்தையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்க்காலத்தில் நிகழப்போவதை மாபெருங் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவு உண்மையானது; அதன் உட்பொருளும் சரியானது."
46 அதைக்கேட்ட அரசன் நபுக்கோதனசார் முகங்குப்புற விழுந்து, தானியேலைப் பணிந்தான்; அவருக்குப் பலி செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
47 மேலும் அரசன் தானியேலை நோக்கி, "நீர் இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியால் மெய்யாகவே உங்கள் கடவுள் தான் தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர், மறைபொருட்களையெல்லாம் வெளிப்படுத்துகிறவர்" என்றான்.
48 பின்பு அரசன் தானியேலுக்கு உயர்ந்த மரியாதைகளைத் தந்து, அவருக்கு அன்பளிப்புகள் பலவும் கொடுத்தான்; பபிலோன் மாநிலம் முழுவதற்கும் ஆளுநராகவும், பபிலோனின் ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் அவரை ஏற்படுத்தினான்.
49 ஆனால் தானியேலின் வேண்டுகோளின்படி சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்கள் பபிலோன் மாநிலத்தின் காரியங்களைப் பார்த்துக் கொள்ளும்படி ஏற்படுத்தப்பட்டனர்; தானியேலோ அரசனது அவையிலேயே இருந்து வந்தார்.
அதிகாரம் 03
1 நபுக்கோதனசார் அரசன் அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான பொற்சிலையொன்றைச் செய்வித்து, அதைப் பபிலோன் மாநிலத்திலிருந்த தூரா என்னும் சமவெளியில் நாட்டி வைத்தான்.
2 பின்பு, மாநிலத் தலைவர்களையும் அதிகாரிகளையும் ஆளுநர்களையும் ஆலோசனைக் குழுவினர்களையும் நிதிப்பொறுப்பாளர்களையும் நீதிபதிகளையும் குற்ற விசாரணைக்காரர்களையும், மாநிலங்களின் மற்றெல்லா அலுவலர்களையும் நபுக்கோதனசார் அரசன் தான் நிறுத்திய படிமத்தின் பிரதிட்டைக்கு வரும்படி கட்டளை அனுப்பினான்.
3 அவ்வாறே மாநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் ஆளுநர்களும் ஆலோசனைக் குழுவினர்களும் நிதிப் பொறுப்பாளர்களும் நீதிபதிகளும் குற்ற விசாரணைக்காரர்களும், மாநிலங்களின் மற்றறெல்லா அலுவலர்களும் மன்னன் நபுக்கோதனசார் நாட்டிய படிமத்தின் பிரதிட்டைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்; நபுக்கோதனசார் நிறுத்திய சிலையின் முன்னால் நின்றார்கள்.
4 கட்டியக்காரன் உரத்த சத்தமாய்க் கூவி, "இதனால் மக்களனைவருக்கும், எல்லா இனத்தவர்க்கும் மொழியினர்க்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்:
5 எக்காளம், நாகசுரம், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியிலே, நீங்கள் தாழ விழுந்து, நபுக்கோதனசார் அரசன் நிறுத்திய பொற்சிலையைப் பணிதல் வேண்டும்.
6 எவனாகிலும் தாழ விழுந்து பணியவில்லையெனில் அவன் அந்நேரமே தீச்சூளையில் போடப்படுவான்" என்றான்.
7 ஆகையால், எக்காளம், நாசுகரம் கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடனே, எல்லா மொழியினரும் தாழ விழுந்து மன்னன் நபுக்கோதனசார் நிறுத்திய சிலையைப் பணிந்து தொழுதார்கள்.
8 உடனே, அப்பொழுது கல்தேயர் சிலர் அணுகி வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள்.
9 மன்னன் நபுக்கோதனசாரிடம் அவர்கள் கூறினர்: "அரசே, நீர் நீடுழி வாழ்க!
10 அரசே, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழ விழுந்து பொற்சிலையைப் பணிய வேண்டும் என்றொரு கட்டளை பிறப்பித்தீர்;
11 எவனாகிலும் தாழ விழுந்து பணியாமற் போனால் அவன் எரிகிற தீச்சூளையில் போடப்படுவான் என்றும் நீர் ஆணை விடுத்தீர்.
12 ஆனால் அரசே, பபிலோன் மாநிலத்தின் காரியங்களைக் கண்காணிக்கும்படி நீர் ஏற்படுத்திய சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்னும் யூதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் உமது கட்டளையை அவமதித்து, உம் தெய்வங்களை வணங்காமல், நீர் நாட்டி வைத்த பொற்சிலையைப் பணியாமலிருக்கிறார்கள்."
13 அப்போது நபுக்கோதனசார் கடுஞ்சினங் கொண்டு, சித்ராக்கையும் மிசாக்கையும் அப்தேநாகோவையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டான்; உடனே அவர்கள் அரசன் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர்.
14 நபுக்கோதனசார் அவர்களை நோக்கி, "சித்ராக், மிசாக், அப்தேநாகோ, நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்காமலும், நான் நாட்டிய பொற்சிலையைப் பணியாமலும் இருந்தது உண்மை தானா?
15 இப்போதாவது, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் போது, நீங்கள் தாழவிழுந்து நான் செய்த சிலையைப் பணியத் தயாராயிருக்கிறீர்களா? பணியா விட்டால் அந்த நொடியிலே எரிகிற தீச்சூளையில் போடப்படுவீர்கள்; உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய கடவுள் யார் இருக்கிறார்?" என்றான்.
16 அதற்குச் சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்கள் மன்னன் நபுக்கோதனசாரை நோக்கி, "இதைப்பற்றி உமக்கு மறுமொழி சொல்ல எங்களுக்குக் கடமையில்லை.
17 ஏனெனில், அரசே, நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகிற தீச்சூளையினின்றும் உம் கைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி மீட்க வல்லவர்.
18 அப்படியே அவருக்கு மனமில்லாமற்போயினும் உம்முடைய தெய்வங்களுக்குப் பணிபுரியோம், நீர் நாட்டிய பொற்சிலையைப் பணிய மாட்டோம்; இதெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கட்டும், அரசே" என்றார்கள்.
19 அப்போது மன்னன் நபுக்கோதனசாருக்கு கடுஞ்சின மூண்டது; கடுகடுப்பான முகத்தோடு சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களைப் பார்த்தான்; சாதாரணமாய்ச் சூடாக்குவதை விடத் தீச்சூளையை ஏழு மடங்கு மிகுதியாய்ச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.
20 பின்பு சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்களின் கால்களைக் கட்டி, அவர்களை அந்த எரிகிற சூளையில் போடும்படி தன் படைவீரர்களுள் மிகுந்த உடல் வலிமையுள்ளவர்களுக்குக் கட்டளையிட்டான்.
21 உடனே அந்த மனிதர்களை அவர்களுடைய மேற்போர்வையோடும் தலைப்பாகையோடும் மிதியடிகளோடும் ஆடைகளோடும் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டி எரிகிற தீச்சூளையின் நடுவில் போட்டார்கள்.
22 ஏனெனில் அரசனின் கட்டளையை உடனடியாய் நிறைவேற்ற வேண்டியிருந்தது; தீச்சூளையோ மிக வெப்பமாய் இருந்தது; ஆகையால் சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியோரைத் தீச்சூளையில் எரிவதற்குத் தூக்கிச் சென்றவர்களை அந்தத் தீப்பிழம்பு சுட்டெரித்துச் சாகடித்தது.
23 சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற தீச்சூளையின் நடுவில் விழுந்தார்கள்.
24 தீச்சூளையின் நடுவில் அசாரியாஸ் பாடிய பாடல்: ஆனால் அவர்கள் கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டும், ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டும் தீச்சூளையின் நடுவில் உலாவிக்கொண்டிருந்தார்கள்.
25 அப்போது அசாரியாஸ் எழுந்து நின்று நெருப்பின் நடுவில் வாய் விட்டு வேண்டிக் கொண்டார்; அவர் சொல்லிய செபம் இதுவே:
26 எங்கள் தந்தையரின் இறைவனாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக! உமது திருப்பெயர் என்றென்றும் புகழப்படுக! அதற்கு மகிமை உண்டாகுக!
27 ஏனெனில், நீர் எங்களுக்குச் செய்தவற்றிலெல்லாம் நீதியுள்ளவராய் இருக்கிறீர்; உம் செயல்கள் அனைத்தும் மெய்யானவை, உம் நெறிமுறைகள் நேர்மையானவை; உம் தீர்மானங்கள் உண்மையுள்ளவை.
28 எங்கள் மேலும் எங்கள் தந்தையரின் திருநகரமாகிய யெருசலேமின் மேலும் நீர் வரச்செய்த அனைத்திலும் உம்முடைய தீர்ப்புகள் உண்மையானவை; ஏனெனில் எங்கள் பாவங்களை முன்னிட்டே நீர் உண்மையோடும் நீதியோடும் எங்கள்மேல் அவற்றையெல்லாம் வரச்செய்தீர்.
29 ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம். உம்மை விட்டகன்று நீதிக்கொவ்வாமல் நடந்தோம், எல்லாவற்றிலும் துரோகம் செய்தோம்.
30 நாங்கள் உம் கட்டளைகளுக்குச் செவி சாய்க்கவில்லை, அவற்றைக் கடைப்பிடிக்கவுமில்லை; நாங்கள் நன்றாய் இருக்கும்படி நீர் கட்டளையிட்டவற்றை நாங்கள் செய்யவுமில்லை.
31 ஆகையால் நீர் எங்களுக்கு அனுப்பினவை யாவும், எங்களுக்கு நீர் செய்தவை அனைத்துமே நீதி நியாயத்தின்படியே நீர் செய்திருக்கிறீர்.
32 அக்கிரமிகளும் கொடியவர்களும் அநீதர்களுமான எங்கள் எதிரிகள் கையில் எங்களை விட்டு விட்டீர்; உலகிலேயே மிகக் கொடியவனான அநீத அரசனிடம் நீர் எங்களைக் கையளித்து விட்டீர்.
33 ஆனால் இப்பொழுதோ நாங்கள் வாய் திறக்கவும் இயலாது; உம் அடியார்களும், உம்மைப் பணிகிறவர்களும் நகைப்புக்கும் வெட்கத்திற்கும் உள்ளானார்கள்.
34 உம் திருப்பெயரை முன்னிட்டு என்றென்றைக்கும் எங்களைக் கைவிட்டு விடாதீர்; உமது உடன்படிக்கை வீணாய்ப் போக விடாதீர்.
35 உம்முடைய அன்பர் ஆபிரகாமைப் பற்றியும், உம் ஊழியர் ஈசாக் என்பவரைப் பற்றியும், உம்முடைய பரிசுத்தனாகிய இஸ்ராயேலைப் பற்றியும் எங்களை விட்டு உம் இரக்கத்தை நீக்காதீர்.
36 ஏனெனில், நீர் அவர்களுடைய வித்தினை வானத்து விண்மீன்கள் போலும், கடலோரத்து மணலைப் போலும் பெருகப் பண்ணுவதாக வாக்குறுதி செய்தீரே!
37 ஆண்டவரே, நாங்கள் மற்றெந்த இனத்தாரையும் விட எண்ணிக்கையில் குறைந்து போனோம்; எங்கள் பாவங்களின் காரணத்தால் இன்று இவ்வுலகிலேயே மிகவும் தாழ்வடைந்து விட்டோம்.
38 இப்பொழுதோ எங்களுக்கு அரசனில்லை, இறைவாக்கினரோ தலைவரோ யாருமில்லை; தகனப்பலியில்லை, எவ்வகைப் பலியுமில்லை; காணிக்கையோ தூபமோ கிடையாது; உமது முன்னிலையில் முதற் கனிகளைப் படைக்கவோ, உமது இரக்கத்தைப் பெறவோ இடமே கிடையாது.
39 ஆயினும் வருந்துகின்ற உள்ளத்தோடும், தாழ்மையான சிந்தையோடும் உள்ள எங்களை ஏற்றருளும்;
40 செம்மறிக் கடாக்களையும் எருதுகளையும் முற்றிலும் எரித்துச் செலுத்தப்படும் தகனப் பலியைப் போலவும், பல்லாயிரம் கொழுத்த செம்மறிப்புருவைகளின் பலியைப் போலவும் எங்களுடைய பலி உமக்கு உகந்ததாய் இருக்கும்படி இன்றைக்கு உம் முன்னிலையில் எழும்புவதாக! ஏனெனில் உம்மை நம்பினோர்க்குக் கலக்கமில்லை.
41 இப்பொழுது நாங்கள் உம்மை முழு உள்ளத்தோடு பின்பற்றுகிறோம், உமக்கு அஞ்சி, உமது முகத்தை நாடுகிறோம்.
42 எங்களை அவமானத்துக்கும் உள்ளாக்காதீர், உமது பரிவுக்கேற்பவும், இரக்கப் பெருக்கத்தின்படியும் எங்களை நடத்தியருளும்.
43 ஆண்டவேர, உம் வியத்தகு செயல்களால் எங்களை மீட்டு உமது திருப்பெயருக்கு மகிமை தேடித் தந்தருளும்.
44 உம் அடியார்களுக்குத் துன்பம் கொடுக்கும் அனைவரும் அவமானத்திற்கு ஆளாவார்களாக! அவர்கள் ஆற்றில் எல்லாம் இழந்து தாழ்த்தப்படுவார்களாக! அவர்களது வல்லமையும் நொறுக்கப்படுவதாக!
45 நீர் ஒருவரே இறைவானாகிய ஆண்டவரென்பதையும், இவ்வுலகம் முழுவதிலும் மகிமையுள்ளவர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்களாக!"
46 இது இவ்வாறிருக்க, அவர்களைத் தீச்சூளையில் போட்டவர்களான அரசனுடைய ஊழியர்கள் சூளையின் மணலில் நிலக்கீல், குங்கிலியம், சணற்கூளம், விறகுச் சுள்ளிகள் ஆகியவற்றை ஓயாமல் இட்டு தீ வளர்த்துக் கொண்டே இருந்தார்கள்.
47 தீயானது சூளைக்கு மேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று;
48 அது வெளியிலும் தாவிச் சூளையின் அருகில் நின்றிருந்த கல்தேயர்களைப் பொசுக்கி விட்டது.
49 ஆண்டவருடைய தூதரோ அசாரியாசோடும், அவருடைய தோழர்களோடும் சூளைக்குள் இறங்கி, தீக்கொழுந்தைச் சூளையினின்றும் வெளியே செல்லச் செய்தார்;
50 மேலும் சூளையின் நடுவில் குளிர்ந்த காற்று வீசும்படி செய்தார்; ஆகவே நெருப்பு அவர்களைத் தொடவே இல்லை; அவர்கள் கொஞ்சமும் வருத்தமோ துன்பமோ அடையவில்லை.
51 இளைஞர் மூவரின் பாடல்: அப்பொழுது அந்த மூவரும் ஒரு வாய்ப்பட அந்தச் சூளையிலேயே கடவுளைப் போற்றி வாழ்த்திப் புகழ்ந்தனர்; அவர்கள் பாடிய புகழ்ப்பண் இதுவே:
52 எங்கள் தந்தையரின் இறைவனாகிய ஆண்டவரே, நீர் புகழ் பெறுவீராக! என்றென்றும் நீர் போற்றப்படவும், உயர்த்தப்படவும் தகுதியுள்ளவர். உமது மகிமையுள்ள திருப்பெயர் புகழப்படுவதாக! என்றென்றும் போற்றப்படவும் உயர்த்தப்படவும் கடவதாக!
53 உமது மகிமையுள்ள பரிசுத்த கோயிலில் நீர் புகழப்படுவீராக! என்றென்றும், எல்லாருக்கும் மேலாக வாழ்த்தும் மகிமையும் பெறுவீராக!
54 உமது அரசின் அரியணையில்மேல் நீர் புகழப்படுவீராக! என்றென்றும் வாழ்த்தும் உயர்ச்சியும் பெறுவீராக!
55 கெருபீம்கள் மேல் அமர்ந்து பாதாளத்தைக் காண்கிறவரே, நீர் புகழப்படுவீராக! என்றென்றும் போற்றுதலும் உயர்ச்சியும் பெறுவீராக!
56 வானகத்திலே நீர் புகழப்படுவீராக! என்றென்றும் வாழ்த்தும் மகிமையும் பெறுவீராக!
57 ஆண்டவருடைய எல்லாப் படைப்புகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
58 ஆண்டவருடைய தூதர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
59 வான மண்டலங்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
60 வான மண்டலத்திற்கும் மேலிருக்கும் நீர் நிலைகளே, நீங்கள் அனைவரும்
61 ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்: ஆண்டவருடைய வல்லமைகளே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
62 கதிரவனே, நிலவே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
63 விண்மீன்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
64 மழையே, பனியே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
65 காற்றுகளே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
66 தீயே, வெப்பமே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
67 குளிரே, வெயிலே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
68 பனித்திவலைகளே, மூடுபனியே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
69 உறைபனியே, குளிரே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
70 பனிமலையே, பனிக்கட்டிகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
71 இரவே, பகலே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
72 ஒளியே, இருளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
73 மின்னல்களே, மேகங்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
74 நிலவுலகம் ஆண்டவரைப் புகழ்வதாக! என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துவதாக!
75 மலைகளே, குன்றுகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
76 தரையில் தளிர்ப்பவையே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
77 நீரூற்றுகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
78 கடல்களே, ஆறுகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
79 திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
80 வானத்துப் பறவைகளே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும்
81 அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்: மிருகங்களே, ஆடுமாடுகளே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
82 மணமக்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
83 இஸ்ராயேல் ஆண்டவரைப் புகழ்வதாக! என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துவதாக!
84 ஆண்டவரின் அர்ச்சகர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
85 ஆண்டவரின் ஊழியர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
86 நீதிமான்களின் உள்ளங்களே, ஆன்மாக்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
87 இதயத்தில் தூய்மையும் தாழ்ச்சியும் உள்ளவர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
88 அனானியாசே, அசாரியாசே, மிசாயேலே, ஆண்டவரைப் புகழுங்கள். என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள். ஏனெனில் அவர் நம்மைப் பாதாளத்தினின்று மீட்டார், சாவின் பிடியிலிருந்து நம்மை விடுவித்தார்; கொழுந்து விட்டெரியும் தீச் சூளையின் வெந்தணலிலிருந்து நம்மை மீட்டு, நெருப்பின் நடுவிலிருந்து காத்தார்.
89 ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள், ஏனெனில் அவர் நல்லவர், அவருடைய இரக்கம் என்றென்றும் நீடிக்கிறது.
90 இறையடியார்களே, தேவர்க்கெல்லாம் இறைவனான ஆண்டவரைப் புகழுங்கள், அவரை வாழ்த்திப் போற்றுங்கள், ஏனெனில் அவருடைய இரக்கம் என்றென்றும் நீடிக்கிறது."
91 அரசன் புதுமையை ஏற்றுக் கொள்ளுகிறான்: அப்போது மன்னன் நபுக்கோதனசார் வியப்புற்று விரைந்தெழுந்தான்; தன் அமைச்சர்களை நோக்கி, "மூன்று மனிதர்களையல்லவா கட்டி நெருப்பின் நடுவில் எறிந்தோம்?" என்று வினவினான்; அதற்கு அவர்கள், "ஆம், அரசே" என்று விடை தந்தனர்.
92 அதற்கு அவன், "கட்டவிழ்க்கப் பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் இதோ, நான்கு பேர் உலாவுகிறதை நான் காண்கிறேனே! அவர்களுக்கோ ஒருவகைத் துன்பமும் நேரவில்லை; மேலும் நான்காம் பேர்வழியின் சாயல் உம்பருலகத்தார் சாயல் போல் இருக்கிறதே!" என்றான்.
93 அப்போது நபுக்கோதனசார் எரிகிற தீச்சூளையின் வாயிலண்டை வந்து, "உன்னத கடவுளின் ஊழியர்களாகிய சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியோரே, வெளியே வாருங்கள்" என்றான். உடனே சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்கள் தீயின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
94 மாநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் ஆளுநர்களும், அரசனின்
95 ஆலோசனைக்காரர்களும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீயே படாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய மேற்போர்வை தீயாமலும், அவர்களிடத்தில் நெருப்பின் புகை நாற்றம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்: அப்போது நபுக்கோதனசார் உரத்த குரலில் கூவிச் சொன்னான்: "சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களின் கடவுள் புகழப்படுவாரக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்தக் கடவுளையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, அரசனது கட்டளையைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடலைக் கையளித்த தம்முடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டார்.
96 ஆதலால், சித்ராக், மிசாக், அப்தேநாகோ இவர்களின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் கூறுகிற எந்த மக்கள் குலத்தவனும் எந்த இனத்தானும் எந்த மொழியினனும் வாளுக்கு இரையாகி மாண்டு போவான் என்றும், அவனுடைய வீடும் தரையாய் மீட்கும் ஆற்றலுள்ள கடவுள் வேறொருவருமில்லை."
97 பிறகு அரசன், சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்களைப் பபிலோன் மாநிலத்தில் பெருமையளித்து உயர்த்தினான்.
98 கனவில் கிடைத்த எச்சரிக்கையும் நபுக்கோதனசாருக்குப் பைத்தியம் பிடித்தலும்: நபுக்கோதனசார் அரசனாகிய நான் உலகில் எங்கணுமுள்ள எல்லா மக்களுக்கும் இனத்தார்க்கும் மொழியினர்க்கும் அறிவிப்பது: "உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக!
99 உன்னத கடவுள் எனக்காக வியத்தகு அடையாளங்களையும் விந்தைகளையும் செய்தருளினார்; அவற்றை அனைவர்க்கும் வெளிப்படையாய்ச் சொல்லிக்காட்ட விரும்புகிறேன்:
100 அவர் செய்து காட்டிய அடையாளங்கள் எவ்வளவு உயர்ந்தவை! அவர் செய்த விந்தைகள் எவ்வளவு வல்லமை மிக்கவை! அவரது அரசு முடிவில்லாத அரசு, அவருடைய வல்லமை என்றென்றும் இருக்கிறது."
அதிகாரம் 04
1 நபுக்கோதனசாராகிய நான் என் வீட்டில் அமைதியோடும், என் அரண்மனையில் வளமையோடும் இருந்து வந்தேன்.
2 ஒருநாள் கனவு ஒன்று கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; நான் படுத்திருக்கையில் எனக்குண்டான நினைவுகளும், என் மனக் கண்முன் தோன்றிய காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.
3 அப்போது, நான் கண்ட கனவின் உட்பொருளை எனக்கு விளக்கும்படியாகப் பபிலோனிய ஞானிகள் யாவரும் என் முன்னிலையில் வந்து கூட வேண்டும் என்னும் கட்டளையைப் பிறப்பித்தேன்.
4 அவ்வாறே, ஞானிகளும் நிமித்தர்களும் கல்தேயரும் குறிசொல்கிறவர்களும் வந்து கூடினர்; அவர்களோ எனக்கு அதன் உட்பொருளை விளக்க முடியவில்லை.
5 கடைசியாக, என் கடவுளின் திருப்பெயராகிய பல்தசார் என்னும் பெயரைக் கொண்ட தானியேல் வந்தார்; அவரிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி நிறைந்திருந்துள்ளது; நான் கண்ட கனவை அவரிடத்தில் சொன்னேன்:
6 ஞானிகளின் தலைவராகிய பல்தசாரே, பரிசுத்த தெய்வங்களின் ஆவி உம்மிடம் நிறைந்துள்ளது என்றும், எந்த மறைபொளையும் அறிவது உமக்குக் கடினமன்று என்றும் நான் அறிந்திருக்கிறேன்; நான் கண்ட கனவில் தோன்றிய காட்சிகளையும், அவற்றின் உட்பொருளையும் விளக்குக!
7 நான் படுக்கையில் கிடந்தபோது, என் மனக் கண்முன் தோன்றிய காட்சி இதுவே: "இதோ, உலகின் நடுவில் மரமொன்றைக் கண்டேன், அது மிகவும் உயரமானதாய் இருந்தது;
8 அந்த மரம் மிகப் பெரிதாகவும், வலுவுள்ளதாகவும், வானத்தைத் தொடுமளவு உயரமாகவும் வளர்ந்தது; உலகின் எல்லைகளிடமிருந்து கூட அதைப் பார்க்கக் கூடும்.
9 அதன் இலைகள் மிகவும் பசுமையாய் இருந்தன; மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன; அதில் எல்லா உயிர்க்கும் போதிய உணவு இருந்தது. அதன் கீழ் காட்டு மிருகங்கள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன; உயிர்கள் அனைத்தும் அதிலிருந்து உணவு பெற்றன.
10 நான் படுத்திருக்கையில் என் மனக் கண்முன் இந்தக் காட்சிகள் தோன்றியதைக் கண்டேன்; அப்போது, இதோ, காவல் வீரராகிய பரிசுத்தர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார்.
11 அவர் தமது குரலையுயர்த்திக் கூவியது இதுவே: 'இந்த மரத்தை வெட்டுங்கள், கிளைகளைத் தறித்துப் போடுங்கள்; இதன் இலைகளையெல்லாம் பறித்தெறியுங்கள், கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் மிருகங்கள் ஓடிப் போகட்டும், இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.
12 ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவிடுங்கள்; இரும்பும் வெண்கலமுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் இருக்கக்கடவது. வானத்தின் பனியால் நனைந்து கிடக்கட்டும். தரையின் புல்வெளியில் மிருகங்களோடு இருக்கட்டும்.
13 மனித உள்ளமாயிருந்த அவன் உள்ளம் மாறி மிருகத்தின் உள்ளமாய் ஆகக்கடவது, இவ்வாறு காலப் பகுதிகள் ஏழு அவனைக் கடந்து செல்லட்டும்.
14 காவல் வீரர்களின் தீர்ப்புப்படி இது விதிக்கப்பட்டது, பரிசுத்தரின் வாய்மொழியும் விண்ணப்பமும் இதுவே; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும், மனிதருள் தாழ்ந்தவனையும் அதற்குத் தலைவனாக்குகிறார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது.'
15 நபுக்கோதனசார் அரசனாகிய நான் கண்ட கனவு இதுவே; பல்தசாரே, இதன் உட்பொருளை எனக்கு விரைவில் தெரிவியும்; என் நாட்டிலுள்ள ஞானிகளுள் எவராலும் இதற்கு உட்பொருள் கூற இயலவில்லை; நீர் இதைத் தெரிவிக்கக் கூடியவர்; ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உம்மிடத்தில் இருக்கிறது."
16 அப்போது, பல்தசார் என்னும் பெயர் கொண்ட தானியேல் தனக்குள்ளே சில வினாடிகள் பேசாமல் சிந்திக்கத் துவக்கினார்; அவருடைய சிந்தனைகள் அவருக்குக் கலக்கத்தைக் கொடுத்தன; அதைக் கண்ட அரசன் அவரை நோக்கி. "பல்தசார் கனவும் உட்பொருளும் உம்மைக் கலங்க வைக்காதிருக்கட்டும்" என்றான்; பல்தசார் மறுமொழியாக, "என் ஆண்டவனே, அந்தக் கனவு உம்மை வெறுப்போருக்கும், அதன் உட்பொருள் உம் எதிரிகளுக்கும் பலிப்பதாக!
17 நீர் பார்த்த மரம் மிக உயரமானதாகவும் மிகப் பெரிதாகவும், வலுவுள்ளதாகவும், வானத்தைத் தொடுமளவு உயரமாகவும் வளர்ந்து, உலகின் எல்லைகளிலிருந்து கூடப் பார்க்கக் கூடியதாய் இருந்தது;
18 அதன் இலைகள் மிகவும் பசுமையாய் இருந்தன; மரத்தில் கனிகளும் மிகுதியாய் இருந்தன; எல்லா உயிர்க்கும் அதில் போதிய உணவு இருந்தது. அதன் கீழ் காட்டு மிருகங்கள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன.
19 அரசே, அந்த மரம் நீர்தான்; நீர் மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் வளர்ந்தீர்; உமது மகிமை வளர்ந்து வானமட்டும் உயர்ந்தது; உம்முடைய வல்லமை உலகின் எல்லைகள் வரை எட்டிற்று.
20 மேலும் அரசராகிய நீர், காவல் வீரராகிய பரிசுத்தர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததைக் கண்டீர்; அவர், 'இந்த மரத்தை வெட்டி அழித்துப் போடுங்கள், ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டு விடுங்கள், இரும்பும் வெண்கலமுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல் வெளியின் புற்கள் நடுவில் வானத்தின் பனியால் நனைந்து கிடக்கட்டும், காலப்பகுதிகள் ஏழு கடக்கும் மட்டும் அவனுடைய உணவு மிருகங்களின் உணவாய் இருக்கட்டும்' என்று சொன்னதையும் கேட்டீர்.
21 அரசே, அதன் உட்பொருள் இதுவே: இந்தக் கனவு என் ஆண்டவனாகிய அரசன் ¢மேல் உன்னதர் இட்ட தீர்ப்பாகும்:
22 மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர், மிருகங்களோடும் கொடிய விலங்குகளோடும் வாழ்வீர்; மாட்டைப் போல நீர் புல்லை மேய்வீர்; வானத்தின் பனியிலே நனைந்து கிடப்பீர்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும் நீர் அறிந்து கொள்ளும்வரையில், காலப்பகுதிகள் ஏழு கடக்குமட்டும் இவ்வாறு இருக்கும்.
23 ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரம் விடப்பட வேண்டும் என்று பிறந்த கட்டளையின் பொருள்: எல்லா அதிகாரமும் விண்ணிலிருந்து வரவேண்டுமென்பதை நீர் அறிந்து கொண்ட பிறகு உம்முடைய அரசு உமக்கு உரிமையாய் நிலைநிற்கும் என்பதே.
24 ஆகையால், அரசே, என் ஆலோசனைனக்குச் செவிசாயும்; அறச் செயல்களால் உம் பாவங்களையும், ஏழைகளுக்குச் செய்கிற இரக்கச் செயல்களால் உம் அக்கிரமங்களையும் போக்கி விடும்; அப்பொழுது நீர் அமைதியாய் நீடு வாழ்வீர்" என்றார்.
25 இவை யாவும் நபுக்கோதனசார் அரசனுக்கு நேர்ந்தன.
26 பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அரசன் பபிலோன் நகரத்து அரண்மனையின் மேல்மாடத்தில் உலாவிக் கொண்டிருந்தான்.
27 அப்போது அவன், "என் வல்லமையின் ஆற்றலால் அரச குலத்தின் அரண்மனை நகராகவும், என் மகிமையின் சிறப்புக்கொரு சின்னமாகவும் நான் கட்டிய மாநகரன்றோ இந்தப் பபிலோன்!" என்றான்.
28 இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்குமுன்பே வானத்திலிருந்து ஒரு குரலொலி கேட்டது: "நபுக்கோதனசார் அரசனே, உனக்கே இந்தச் சொல்: உன்னுடைய அரசு உன்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
29 மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய், காட்டு மிருகங்களோடு வாழ்வாய்; மாட்டைப் போல நீ புல்லை மேய்வாய்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளாகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும் நீ அறிந்து கொள்ளும் வரையில் காலப் பகுதிகள் ஏழு கடக்குமட்டும் இவ்வாறே இருப்பாய்."
30 அப்பொழுதே இந்த வாக்கு நபுக்கோதனசாருக்குப் பலித்தது; மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான்; மாட்டைப் போலப் புல்லை மேய்ந்தான்; அவனுடைய உடல் வானத்தின் பனியினால் நனைந்தது; அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கின.
31 குறிக்கப்பட்ட நாட்கள் சென்ற பிறகு, நபுக்கோதனசாராகிய நான் என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது; நானோ உன்னதரைப் போற்றினேன்: "என்றென்றும் வாழும் அவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன், ஏனெனில் அவருடைய வல்லமை என்றென்றும் உள்ளது, அவருடைய அரசு தலைமுறை தலைமுறையாய் நிலைநிற்கும்.
32 உலகத்தார் அனைவரும் அவர் முன் ஒன்றுமே இல்லை, வானத்தின் சேனைகள் நடுவிலும், உலகத்துக் குடிமக்கள் நடுவிலும் தம் திருவுளத்தின் படியே அவர் செயலாற்றுகிறார்; அவரது கையைத் தடுக்க வல்லவனோ, 'ஏன் இப்படிச் செய்தீர்?' எனக் கேட்கக் கூடியவனோ இல்லை."
33 அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது; என் அரசின் மேன்மைக்காக மாட்சியும் மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன; என் அமைச்சர்களும் தலைவர்களும் என்னைத் தேடி வந்தார்கள்; எனது அரசில் நான் திரும்பவும் நிலைநாட்டப் பட்டேன்; முன்னை விட மிகுந்த மகிமை எனக்குக் கிடைத்தது.
34 ஆகையால் நபுக்கோதனசாராகிய நான் இப்போது, "விண்ணக அரசரைப் புகழ்கிறேன், அவரை உயர்த்தி மகிமைப் படுத்துகிறேன்; அவருடைய செயல்கள் யாவும் சரியானவை, அவருடைய வழிகள் அனைத்தும் நீதியானவை, இறுமாப்புக் கொண்டவர்களாய் நடப்பவர்களைத் தரைமட்டும் அவர் தாழ்த்த வல்லவர்."
அதிகாரம் 05
1 பல்தசார் என்னும் அரசன் பெருங்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரிய விருந்தொன்று செய்தான்; அந்த ஆயிரம் பேர்களுடன் அவனும் திராட்சை இரசம் குடித்தான்.
2 குடிமயக்கத்தில் இருந்த அவன், அரசனும் அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்காகத் தன் தந்தையாகிய நபுக்கோதனசார் யெருசலேம் கோயிலிலிருந்து கொண்டு வந்த பொன் வெள்ளிப் பாத்திரங்களைக் கொண்டுவரச் சொன்னான்.
3 அவ்வாறே, யெருசலேமிலிருந்த இறைவனின் கோயிலிலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும், அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவியரும் வைப்பாட்டிகளும் அந்தப் பாத்திரங்களில் குடித்தார்கள்;
4 அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக்கொண்டு, பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் இவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
5 திடீரென விளக்குக்கு எதிரில், அரசனது அரண்மனைக் கூடத்துச் சுவரில் மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின. அரசனோ எழுதுகின்ற அந்தக் கையின் மணிக்கட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
6 அப்போது, அரசனின் முகம் மாறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலக்கத்திற்குள்ளாக்கின; அவனது இடுப்பின் கட்டுகள் தளர்ந்தன; அவனுடைய தொடைகள் நடுங்கின.
7 அரசனோ நிமித்திகரையும் கல்தேயரையும் குறிச்சொல்லுகிறவர்களையும் கூட்டிக் கொண்டு வரும்படி கத்தினான்; மன்னன் பபிலோனிய ஞானிகளை நோக்கி. "இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்குச் செம்பட்டாடையும், கழுத்தில் பொற்சங்கிலியும் அணிவித்து என் அரசில் மூன்றாம் அதிகாரியாய் ஏற்படுத்துவேன்" என்றான்.
8 பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்; ஆனால் அந்தச் சொற்களைப் படிக்கவோ, அவற்றின் உட்பொருளை அரசனுக்கு அறிவிக்கவோ அவர்களால் இயலவில்லை.
9 அதைக் கண்ட மன்னன் பல்தசார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பெருங்குடி மக்களும் திகைத்துப் போயினர்.
10 அரசனுக்கும், பெருங்குடி மக்களுக்கும் நேர்ந்ததை அறிந்த அரசி விருந்துக் கூட்டத்திற்குள் வந்து, "அரசே, நீர் நீடூழி வாழ்க! உம்முடைய நினைவுகளின் காரணமாய் நீர் கலங்கவேண்டா; உம் முகம் வேறுபடக் காரணமுமில்லை.
11 பரிசுத்த தெய்வங்களின் ஆவி கொண்ட மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தெய்வங்களுக்கொத்த அறிவொளியும் புத்தியும் ஞானமும் அவனிடத்தில் வெளிப்பட்டு விளங்கின. உம் தந்தையாகிய நபுக்கோதனசார் அரசர் அவனை ஞானிகளுக்கும் நிமித்திகர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்கிறவர்களுக்கும் தலைவனாகக் கூட ஏற்படுத்தினார்; ஆம், அரசே, உம் தந்தை அவ்வாறு செய்தார்.
12 அரசனால் பல்தசார் என்று பெயரிடப்பட்ட அந்தத் தானியேலுக்கு, வியத்தகு விவேகமும் அறிவும் புத்திக் கூர்மையும், கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றலும், சிக்கல்களைத் தீர்க்கும் வல்லமையும் உண்டு; ஆகையால் இப்போது தானியேலைக் கூட்டிக் கொண்டு வந்தால், அவன் விளக்கம் கூறுவான்" என்றாள்.
13 அவ்வாறே, தானியேல் அரசன் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டார்; அரசன் அவரைப் பார்த்து, "என் தந்தையாகிய அரசன் யூதேயாவிலிருந்து சிறைபிடித்து வந்த யூதர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே?
14 உன்னிடத்தில் தெய்வங்களின் ஆவியும், வியத்தகு அறிவும் புத்தியும் ஞானமும் உண்டென உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன்.
15 இப்போது, இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை எனக்குச் சொல்வதற்காக ஞானிகளும் நிமித்திகர்களும் என்முன் வந்தார்கள்; ஆனால் அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை வெளிப்படுத்த முடியவில்லை.
16 மறைபொருளை வெளிப்படுததவும், சிக்கலானவற்றைத் தீர்க்கவும் உன்னால் முடியும் என உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; ஆகையால் நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், செம்பட்டாடையும் கழுத்தில் பொற்சங்கிலியும் உனக்கு அனிவித்து என் அரசில் மூன்றாம் அதிகாரியாய் உன்னை ஏற்படுத்துவேன்" என்றான்.
17 அப்பொழுது தானியேல் அரசனுக்கு மறுமொழியாகக் கூறினார்; "உம்முடைய பரிசுகள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம் வெகுமதிகளை வேறு யாருக்காவது கொடும். ஆனால், அரசே, இந்தச் சொற்களை உமக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை உமக்கு நான் கூறுவேன்.
18 அரசே, மிக உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நபுக்கோதனசாருக்குப் பேரரசையும் மேன்மையையும் சிறப்பையும் மகிமையையும் அளித்தார்.
19 அவருக்கு அளிக்கப்பட்டிருந்த மாட்சிமையின் காரணமாய் எல்லா மக்களும் இனத்தாரும் மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினார்கள்; அவர் எவர்களைக் கொல்ல எண்ணினாரோ அவர்களைக் கொன்றுபோடுவார்; எவர்களைத் தண்டிக்க விரும்பினாரோ அவர்களைத் தண்டிப்பார்; எவர்களை உயர்த்த எண்ணினாரோ அவர்களை உயர்த்துவார்; எவர்களைத் தாழ்த்த விரும்பினாரோ அவர்களைத் தாழ்த்துவார்.
20 ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது; அப்போது அவர் தமது அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்; அவரிடமிருந்து அவருடைய மகிமை எடுக்கப்பட்டது;
21 மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார்; மேலும் அவருடைய இதயம் மிருகங்களின் இதயம் போல் ஆயிற்று; காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்தார்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தமக்கு விருப்பமானவரையே அதன் மேல் ஏற்படுத்துவார் என்பதையும் அறிந்துணருமட்டும், உம் தந்தை மாட்டைப் போலப் புல்லை மேய்ந்து, வானத்தின் பனியிலே நனைந்து கிடந்தார்.
22 அவருடைய மகனாகிய பல்தசாரே, இவற்றையெல்லாம் நீர் அறிந்திருந்தும் உம் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.
23 ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவருடைய கோயிலின் பாத்திரங்களைக் கொண்டு வரச் சொல்லி, நீரும் உம் பெருங்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டிகளும் அவற்றில் திராட்சை இரசம் குடித்தீர்கள்; அது மட்டுமன்று; காணவோ கேட்கவோ உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் இவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள்; ஆனால் தம் கையில் உமது உயிரையும், உம் வழிகளையும் கொண்டிருக்கிற கடவுளை நீர் மகிமைப்படுத்தவில்லை;
24 ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி இந்தச் சொற்களை எழுதுவித்தார்.
25 எழுதப்பட்ட சொற்கள் பின்வருமாறு: மானே, தெக்கெல், பாரெஸ்.
26 இவற்றின் உட்பொருள்: மானே-கடவுள் உமது அரசின் நாட்களை எண்ணி வரையறுத்து முடிவாக்கிவிட்டார்;
27 தெக்கெல்- நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; அப்போது இலேசாயிருந்தீர்;
28 பாரெஸ்- உமது அரசு பிரிக்கப்பட்டு மேத்தியர்க்கும் பேர்சியர்க்கும் கொடுக்கப்பட்டது" என்றார்.
29 அப்பொழுது, அரசனின் கட்டளைப்படி தானியேலுக்குச் செம்பட்டாடை உடுத்தினார்கள்; அவருடைய கழுத்தில் பொற்சங்கலி அணிவித்தார்கள்; மன்னனுடைய அரசில் தானியேல் மூன்றாம் அதிகாரி என்று விளம்பரப் படுத்தினார்கள்.
30 அன்றிரவிலேயே கல்தேய அரசனாகிய பல்தசார் கொலை செய்யப்பட்டான்;
31 மேதியனாகிய தாரியுஸ் என்பவன் தன் அறுபத்திரண்டாம் வயதில் அந்த அரசைத் தனதாக்கிக் கொண்டான்.
அதிகாரம் 06
1 தாரியுஸ் என்பவன் தன் அரசெங்கணும் ஆட்சி நடத்தும்படி நூற்றிருபது மாநிலத்தலைவர்களையும்,
2 இவர்களுக்கு மேல் ஆளுநர் மூவரையும் ஏற்படுத்துவது நலமெனக் கண்டான்; அரசனுக்கு நஷ்டம் வராதபடி அந்த மாநிலத் தலைவர்கள் இவர்களுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்; ஆளுநர் மூவருள் தானியேலும் ஒருவர்.
3 இந்தத் தானியேல் மற்ற ஆளுநர்களையும் மாநிலத் தலைவர்களையும் விட மேம்பட்டு விளங்கினார்; ஏனெனில் கடவுளின் ஆவி சிறப்பான வகையில் அவரிடத்தில் இருந்தது.
4 தன் அரசு முழுமைக்கும் அவரை அதிகாரியாக ஏற்படுத்தலாமென அரசன் நினைத்துக் கொண்டிருந்தான்; ஆதலால் ஆளுநர்களும் மாநிலத் தலைவர்களும் மேற்பார்வையிடும் காரியத்தில் தானியேலின் மீது குற்றம் சாட்டத் தேடினார்கள்; ஆனால் அவர் உண்மையுள்ளவராய் இருந்ததால், அவரிடத்தில் யாதொரு குற்றத்தையும் தவற்றையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
5 அப்போது அந்த மனிதர்கள், "நாம் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளைச் சார்ந்த காரியத்தில் தான் குற்றம் கண்டுபிடிக்க முடியுமே தவிர வேறெதிலும் குற்றம் காண முடியாது" என்றார்கள்.
6 ஆகவே, அந்த ஆளுநர்களும் மாநிலத் தலைவர்களும் அரசனிடம் வந்து வஞ்சகமாய் சொன்னது: "தாரியிஸ் அரசே, நீர் நீடூழி வாழ்க!
7 உமது அரசின் ஆளுநர்களும் அதிகாரிகளும் மாநிலத் தலைவர்களும் அமைச்சர்களும் நாட்டின் முதல்வர்களும் ஒருமனப்பட ஓர் ஆலோசனை கூறுகின்றனர்; அதாவது: முப்பது நாள்வரையில் அரசனாகிய உம்மிடமன்றி வெறெந்தக் கடவுளிடமோ மனிதனிடமோ யாதொரு மன்றாட்டைக் கோருகின்ற எந்த மனிதனும் சிங்கங்களின் குகையில் போடப்படுவான் என்று நீர் ஓர் உறுதியான கட்டளை பிறப்பித்து, அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வாரும்.
8 ஆகையால், அரசே, இப்பொழுதே அந்தக் கட்டளையைப் பிறப்பித்து, ஆணைப்பத்திரத்தில் கையெழுத்திடும்; அப்போது தான் மேதியர், பேர்சியர்களின் சட்டப்படி அதனை மாற்றவோ மீறவோ முடியாது" என்றார்கள்.
9 மன்னன் தாரியுஸ் அவ்வாறே ஆணைப்பத்திரத்தில் கையொப்பமிட்டுச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தான்.
10 தானியேல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்ததை அறிந்து தம் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டின் மேலறையின் பலகணிகள் யெருசலேமின் பக்கமாய்த் திறந்திருந்தன. தமது வழக்கப்படியே நாடோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடிப் புகழ்ந்தார்.
11 வஞ்சகமாய் வந்து உள்ளே பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர்கள், தானியேல் தம் கடவுளை நினைத்துச் செபிப்பதையும் மன்றாடுவதையும் கண்டார்கள்.
12 அப்போது அவர்கள் அரசனிடம் வந்து, அரசனின் சட்டத்தைக் குறிப்பிட்டு, "அரசே, முப்பது நாள்வரையில் அரசனாகிய உம்மிடமன்றி வேறெந்தக் கடவுளிடமோ மனிதனிடமோ யாதொரு மன்றாட்டைக் கோருகின்ற எந்த மனிதனும் சிங்கங்களின் குகைகளில் போடப்படுவான் என்று நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?" என்றார்கள். அதற்கு அரசன், "மேதியர், பேர்சியர்களின் சட்டப்படி நான் பிறப்பித்த கட்டளை நிலையானது, அதை எவரும் மாற்ற முடியாது" என்றான்.
13 உடனே அவர்கள் அரசனை நோக்கி, "சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட யூதர்களுள் ஒருவனான தானியேல் என்பவன் உமது சட்டத்தையும், நீர் பிறப்பித்த கட்டளையையும் பொருட்படுத்தவில்லை; ஆனால் நாடோறும் மூன்று வேளையும் அவன் செபத்தில் ஆழ்ந்திருக்கிறான்" என்றார்கள்.
14 அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி செய்து கொண்டு அன்று மாலை பொழுதிறங்கும் வரையில் அவரைக் காக்க முயற்சி செய்தான்.
15 ஆனால் அந்த மனிதர்கள் அரசனின் எண்ணத்தை அறிந்து கொண்டு, வஞ்சகமாய் வந்து அவனை நோக்கி, "அரசன் ஏற்படுத்திய கட்டளையை மாற்ற முடியாது என்பது மேதியர், பேர்சியர்களின் சட்டம்; அரசே, அதை உமக்கு நினைவூட்டிக் கொள்ளுகிறோம்" என்றனர்.
16 ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி அவர்கள் தானியேலைக் கொண்டு வந்து சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; அப்போது அரசன் தானியேலை நோக்கி, "நீ இடைவிடாமல் வழிபடுகிற உன் கடவுள் உன்னைக் காப்பாராக!" என்றான்.
17 பெரிய கல்லொன்றைக் கொண்டு வந்து குகையின் வாயிலை அடைந்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தினாலும், தன் பெருங்குடி மக்களின் மோதிரங்களாலும் அதில் முத்திரையிட்டான்.
18 அரசன் அரண்மனைக்குத் திரும்பினான்; அன்றிரவு அவன் உண்ணவில்லை; வைப்பாட்டிகளையும் உள்ளே வர விடவில்லை; அவனுக்கு உறக்கமும் பிடிக்கவில்லை.
19 கிழக்கு வெளுக்கும் போது அரசன் எழுந்திருந்து சிங்கங்களின் குகைக்கு விரைந்து சென்றான்.
20 அவன் குகையின் அருகில் வந்ததும், துயரக் குரலில் தானியேலைக் கூப்பிட்டு, "தானியேலே, உயிருள்ள கடவுளின் ஊழியனே, நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னைச் சிங்கங்களினின்று காக்க வல்லவராய் இருந்தாரா?" என்று கேட்டான்.
21 அதற்குத் தானியேல் அரசனிடம், "அரசே, நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார்;
22 அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை; ஏனெனில் அவர் முன்னிலையில் என்னிடம் பரிசுத்தமே காணப்பட்டது; மேலும், அரசே, உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவன்" என்று மறுமொழி கொடுத்தார்.
23 அப்போது அரசன் மிகவும் மனமகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து தூக்கி வெளிப்படுத்தும் படி கட்டளையிட்டான்; அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே எடுத்தார்கள்; அவருக்கு யாதொரு தீங்கும் ஏற்படவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை நம்பினார்.
24 அதன்பிறகு, அரசன் தானியேலைக் குற்றம் சாட்டிய அந்த வஞ்சகர்களைக் கொண்டு வரக் கட்டளையிட்டான்; அவர்களும், அவர்களுடைய மனைவி மக்களும் சிங்கங்களின் குகையிலே போடப்பட்டார்கள்; அவர்கள் குகையில் விழுமுன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப் போட்டன.
25 அப்போது தாரியுஸ் அரசன் நாடெங்கணுமுள்ள எல்லா மக்களுக்கும் இனத்தார்களுக்கும் மொழியினர்களுக்கும் ஓர் அறிக்கை விடுத்தான்: "உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக!
26 என் ஆளுகைக்குட்பட்ட அரசெங்கணுமுள்ள மக்கள் அனைவரும் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்கியிருத்தல் வேண்டும்- இது என் ஆணை: "ஏனெனில் அவரே உயிருள்ள கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கிறார்; அவருடைய அரசு என்றும் அழிவுறாது, அவருடைய ஆட்சிக்கு முடிவிராது.
27 தானியேலைச் சிங்கக் குகையினின்று காப்பாற்றினவர் அவரே; அவரே மீட்பவர், விடுதலை கொடுப்பவர், விண்ணிலும் மண்ணிலும் விந்தைகள் செய்கிறார்."
28 இவ்வாறு, தானியேல் தாரியுசின் ஆட்சிக் காலத்திலும் பேர்சியனாகிய கீருஸ் மன்னனின் ஆட்சிக்காலத்திலும் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்தார்.
அதிகாரம் 07
1 பபிலோனின் அரசனாகிய பல்தசாரின் முதலாண்டில் தானியேல் கனவு ஒன்று கண்டார்; அவர் படுக்கையில் இருக்கும் போது அவரது மனக்கண் முன் காட்சிகள் தோன்றின; பிறகு அவர் அந்தக் கனவை எழுதி வைத்து, அதனைச் சுருங்கச் சொன்னார்:
2 இரவில் நான் கண்ட காட்சி இதுவே: இதோ, வானத்தின் நாற்புறத்துக் காற்றுகளும் மாபெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
3 அப்போது வெவ்வேறு வடிவமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் கடலினின்று மேலெழும்பின.
4 அவற்றுள் முதல் மிருகம் கழுகின் இறக்கைகளையுடைய சிங்கத்தைப் போல் இருந்தது; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டது; மனிதனைப்போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.
5 அடுத்தாற்போல், இதோ முற்றிலும் வேறானதொரு மிருகத்தைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த மிருகம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்று, பற்களிடையில் மூன்று விலாவெலும்புகளை வாயில் கவ்விக் கொண்டிருந்தது. 'எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 இன்னும் நோக்கினேன்: இதோ, வேங்கை போலும் வேறொரு மிருகம் காணப்பட்டது; அதன் மேல் பறவையின் இறக்கைகளைப் போல நான்கு இருந்தன; அந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது.
7 இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் இதோ நான்காம் மிருகம் அச்சத்திற்குரியதாயும் வியப்பூட்டத்தக்கதாயும் மிகுந்த வலிமையுள்ளதாயும் இருக்கக் கண்டேன்; அதற்குப் பெரிய இருப்புப் பற்கள் இருந்தன; அது தான் விழுங்கியது போக மீதியை நொறுக்கிக் கால்களால் மிதித்துப் போடும்; இதற்குமுன் காணப்பட்ட மிருகங்களிலிருந்து இது வேறாகக் காணப்பட்டது; இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.
8 அந்தக்கொம்புகளை நான் கவனித்துப் பாத்துக் கொண்டிருக்கையில், இதோ அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு எழும்பிற்று; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்பு அதற்கிருந்த கொம்புகள் மூன்று பிடுங்கப்பட்டன; இதோ, அந்தக் கொம்பில் மனித கண்களைப் போலக் கண்களும், பெருமையானவற்றைப் பேசும் வாயும் இருந்தன.
9 நான் பார்த்துக் கொண்டிருக்கையில், "அரியணைகள் அமைக்கப்பட்டன, நீண்ட ஆயுளுள்ளவர் ஆங்கமர்ந்தார்; அவருடைய ஆடை பனிபோல வெண்மையாயும், அவரது தலைமயிர் தூய பஞ்சு போலும் இருந்தன. அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும், அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.
10 அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாறு புறப்பட்டது, புறப்பட்டு விரைவாய்ப் பாய்ந்தோடிற்று; ஆயிரமாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள், கோடான கோடிப் பேர் அவர் முன் நின்றார்கள்; அறங்கூறவையும் நீதி வழங்க அமர்ந்தது, நூல்களும் திறந்து வைக்கப்பட்டன.
11 அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் கவனித்துப் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதன் உடல் அழிந்து போயிற்று நெருப்பினால் எரிக்கப்படும்படி போடப்பட்டது.
12 மற்ற மிருகங்களின் வல்லமை பறிக்கப்பட்டது; அவற்றின் வாழ்நாட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்டன.
13 இரவில் நான் கண்ட காட்சியாவது: இதோ, வானத்தின் மேகங்கள் மீது மனுமகனைப் போன்ற ஒருவர் வந்தார்; நீண்ட ஆயுளுள்ளவரின் அருகில் வந்தார், அவர்முன் கொண்டு வரப்பட்டார்.
14 ஆட்சியும் மகிமையும் அரசுரிமையும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா மக்களும் இனத்தாரும் மொழியினரும் அவருக்கு ஊழியம் செய்வர். அவருடைய ஆட்சி என்றென்றும் நீடிக்கும், அதற்கு என்றுமே முடிவிராது; அவருக்கு அளிக்கப்பட்ட அரசுரிமை என்றுமே அழிந்து போகாது.
15 "என் மனம் திகிலுற்றது; தானியேலாகிய நான் அஞ்சி நடுங்கினேன்; என் மணக்கண் முன் தோன்றிய காட்சிகள் என்னைக் கலக்கத்திற்குள்ளாக்கின.
16 அருகில் நின்றிருந்தவர்களுள் ஒருவரை அண்டிப்போய், இவற்றுக்கெல்லாம் பொருள் என்ன என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளையெல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார்:
17 'இந்த நான்கு மிருகங்களும் பூமியில் எழும்பப் போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன.
18 ஆனால் உன்னத கடவுளின் பரிசுத்தர்கள் அரசுரிமை பெறுவார்கள்; அந்த அரசுரிமையை என்றென்றைக்கும், நீடூழி காலங்களுக்கும் கொண்டிருப்பார்கள்.'
19 அதன்பின்னர், மற்ற மிருகங்களினும் வேறானதாகக் காணப்பட்டதும், மிகுந்த அச்சத்திற்குரியதும், இருப்புப்பற்கள், நகங்கள் கொண்டதாய், தான் தின்று நொறுக்கியது போக மீதியைக் கால்களால் மிதித்துப் போட்டதுமான அந்த நான்காம் மிருகத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன்;
20 அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் விழுந்து போக அவற்றினிடத்தில் எழும்பினதும், கண்களும், பெருமையானவற்றைப் பேசும் வாயும் கொண்டிருந்ததும், மற்றவர்களைக் காட்டிலும் பெரியதுமாயிருந்த அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
21 நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதோ அந்தக் கொம்பு பரிசுத்தர்களுக்கு எதிராய்ப் போர் புரிந்து அவர்களை வென்றது;
22 நீண்ட ஆயுளுள்ளவர் வந்து, உன்னதருடைய பரிசுத்தர்களுக்குத் தீர்ப்புச் சொல்லும் வரை போர் நடந்தது; அதன் பின் காலம் வந்தது; அப்போது பரிசுத்தர்கள் அரசுரிமை பெற்றுக் கொண்டார்கள்.
23 அவர் இன்னும் தொடர்ந்து பேசினார்: 'அந்த நான்காம் மிருகம்: உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கிறது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது விழுங்கிவிடும், மிதித்து நொறுக்கிவிடும்; அந்தப் பத்துக் கொம்புகள்:
24 இந்த அரசினின்று பத்து மன்னர்கள் எழும்புவர்; அவர்களுக்குப்பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட இவன் வேறுபட்டவனாய் இருப்பான், அவர்களுள் மூவரைத் தனக்குக் கீழ்ப்படுத்துவான்.
25 அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான், உன்னதரின் பரிசுத்தர்களைத் துன்புறுத்துவான், நாள் கிழமைகளையும் சட்டத்தையும் மாற்றப் பார்ப்பான், அவர்களோ ஒருகாலம், இருகாலம், அரைகாலம் அளவும் அவனுடைய கையில் விடப்படுவர்.
26 ஆனால் அறங்கூறவையம் நீதி வழங்க அமரும், அவனுடைய அரசுரிமை அவனிடமிருந்து பறிக்கப்படும்; முடிவு வரை ஒடுக்கப்பட்டு அழிந்து போகும்.
27 அரசும் அரசுரிமையும், வானத்தின்கீழ் எங்கணுமுள்ள அரசுகளின் மகிமை பெருமையும் உன்னதரின் பரிசுத்தர்களுடைய இனத்தார்க்குத்தரப்படும்; அவர்களுடைய அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு. அரசர்கள் அனைவரும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படிவர்.'
28 இவ்வாறு அவர் விளக்கம் கூறி முடித்தார்; தானியேலாகிய நான் என் நினைவுகளின் காரணமாய் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; ஆயினும் இவற்றை என் மனத்திலேயே வைத்துக்கொண்டேன்."
அதிகாரம் 08
1 முன்பு கண்ட காட்சிக்குப் பிறகு, மன்னன் பல்தசாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் தானியேலாகிய நான் வேறொரு காட்சி கண்டேன்.
2 அந்தக் காட்சியில் நான் கண்டது பின்வருமாறு: ஏலாம் நாட்டிலுள்ள சூசா என்னும் அரண் சூழ்ந்த பட்டணத்தில் நான் இருந்தேன்; அங்கே ஊலாய் ஆற்றை நோக்கியிருக்கும் வாயிலருகே நான் இருந்ததாகக் கண்டேன்.
3 நான் கண்களை உயர்த்திப் பார்த்தேன்; இதோ, ஒரு செம்மறிக்கடா அந்த ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்தது; அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன; இரண்டும் நீளமான கொம்புகள்; ஆயினும் அவற்றுள் ஒன்று மற்றதை விட நீளமானது; அது வளர்ந்து கொண்டே வந்தது.
4 அந்தச் செம்மறிக்கடா தன் கொம்புகளினால் மேற்கு, வடக்கு, தெற்குப் பக்கங்களில் முட்டுவதைக் கண்டேன்; அதனை எதிர்த்து நிற்க எந்த மிருகத்தாலும் இயலவில்லை; அதனிடமிருந்து (அவற்றைத்) தப்புவிக்கவல்ல யாருமில்லை; அதுவும் தன் விருப்பம் போலச் செய்து பெருமிதம் கொண்டது.
5 நான் அதையே கவனித்துக் கொண்டிருந்தேன்; அந்நேரத்தில் அதோ மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கடா ஒன்று நிலத்தில் கால்பாவாமல் பூமி மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக் கடாவின் கண்களுக்கு இடையில் விந்தையான ஒரு கொம்பிருந்தது.
6 இரண்டு கொம்புகளுள்ளதும், ஆற்றங்கரையில் நின்றிருந்ததுமாக நான் பார்த்த அந்தச் செம்மறிக் கடாவை நோக்கி வெள்ளாட்டுக் கடா முன்னேறி வந்தது; வந்து தன் ஆற்றலையெல்லாம் கூட்டி அதன் மேல் பாய்ந்தது.
7 இவ்வாறு அது செம்மறிக்கடாவை நெருங்கி, அதன் மேல் கடுஞ் சினங்கொண்டு அதைத் தாக்கி, அதன் கொம்புகள் இரண்டையும் முறித்துப் போட்டது; செம்மறிக்கடாவை அதன் வல்லமையினின்று தப்புவிப்பார் யாருமில்லை.
8 அதன்பின்னர் வெள்ளாட்டுக்கடா மிக்கப் பெருமிதம் கொண்டு திரிந்தது; ஆனால் அது வலிமையோடு இருந்த நாட்களில் அந்தப் பெரிய கொம்பு முறிந்து விட்டது; அதனிடத்தில் வேறு நான்கு கொம்புகள் முளைத்து வானத்தின் நான்கு பக்கங்களையும் நோக்கி வளர்ந்தன.
9 அவற்றுள் ஒன்றிலிருந்து சிறிய கொம்பொன்று கிளம்பிற்று; அது தேற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் மகிமையுள்ள நாட்டை நோக்கியும் மிகப் பெரியதாக வளர்ந்தது.
10 அது வானத்தின் சேனை வரை வளர்ந்தது; விண்மீன்களின் சேனைகளுள் சிலவற்றைக் கீழே தள்ளி மிதித்தது.
11 மேலும் அது சேனைகளின் தலைவர் வரைக்கும் தன்னையே உயர்த்தி, அவரிடமிருந்து அன்றாடத் தகனப்பலியைப் பறித்துக் கொண்டு, அவருடைய பரிசுத்த இடத்தையும் பங்கப்படுத்தி அழித்தது.
12 பாவத்தின் காரணமாய் அந்தச் சேனைக்கும், இடைவிடாத தகனப்பலிக்கும் எதிராக அதற்கு வல்லமை தரப்பட்டது; உண்மை மண்ணிலே வீழ்த்தப்பட்டது; அந்தக் கொம்பு முனைந்து முன்னேறிற்று.
13 அப்போது பரிசுத்தர் ஒருவர் பேசுவதைக் கேட்டேன்; வேறொரு பரிசுத்தர் முன்பேசியவரிடம், "இடைவிடாத தகனப்பலியையும் பாழாக்கும் அக்கிரமத்தையும், பரிசுத்த இடமும் அந்தச் சேனையும் காலால் மிதிபடுவதையும் பற்றிய இந்தக் காட்சி எதுவரைக்கும் நீடிக்கும்?" என்றார்.
14 அதற்கு அவர், "இரண்டாயிரத்து முந்நூறு காலை மாலையளவு நீடிக்கும்; அதன் பிறகு பரிசுத்த இடம் தூய்மை நிலையைத் திரும்ப அடையும்" என்றார்.
15 தானியேலாகிய நான் இந்தக் காட்சியின் உட்பொருள் அறியத் தேடுகையில், இதோ மனித சாயலைக் கொண்ட ஒருவர் எனக்கு முன்பாக நின்றார்.
16 அப்பொழுது ஊலாய் ஆற்றின் நடுவில் ஒரு மனிதக் குரல் கேட்டது; அது, "கபிரியேலே, இந்தக் காட்சியை விளக்கிச் சொல்" என்று உரத்த குரலில் சொன்னது.
17 அவர் நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தார்; வரும் போது, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; ஆனால் அவர் என்னை நோக்கி, மனிதா, இந்தக் காட்சி இறுதிக் காலத்தைப் பற்றியது எனத் தெரிந்துகொள்" என்றார்.
18 அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் மயங்கித் தரையில் குப்புற விழுந்து கிடந்தேன்; அவர் என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கச் செய்து, எனக்கு விளக்கினார்:
19 கோபத்தின் முடிவுநாளில் நிகழப்போவதை உனக்குத் தெரிவிப்பேன்; ஏனெனில் காலம் முடிவுறப் போகிறது.
20 நீ கண்ட கொம்புகளுடைய செம்மறிக்கடா மேதியர், பேர்சியர்களின் அரசனைக் குறிக்கிறது;
21 வெள்ளாட்டுக்கடா கிரேக்க அரசனைக் குறிக்கிறது; அதன் கண்களுக்கு நடுவிலிருந்து பெரிய கொம்பு முதல் அரசனாகும்.
22 அது முறிந்து போன பின்பு, அதற்குப் பதிலாக எழும்பிய நான்கு கொம்புகள், அந்த இனத்தாருள் எழும்பப் போகும் நான்கு அரசுகள் என்க; ஆனால் அவனுடைய ஆற்றல் இவற்றுக்கு இராது.
23 அவர்களுடைய ஆட்சி முடிவுற்ற பிறகு, அக்கிரமங்கள் மலிந்து நிறைவுறும் போது, முன்கோபமுள்ளவனும் கூர்மதி கொண்டவனுமாகிய ஓர் அரசன் தோன்றுவான்;
24 அவனுடைய வல்லமை பெருகும், ஆனால் அவனது சொந்த ஆற்றலால் அன்று- அஞ்சத் தக்க வகையில் அழிவு வேலை செய்வான்; செய்யும் செயலிலெல்லாம் வெற்றியே காண்பான், வல்லவர்களையும் பரிசுத்தர்களையும் அழிப்பான்.
25 வஞ்சகம் அவன் கையில் சிறந்த கருவியாய் இருக்கும், அவன் உள்ளம் இறுமாப்பால் நிறைந்திருக்கும்; எதிர்பாராத நேரத்தில் பலரைத் தாக்கிக் கொலைசெய்வான், இறுதியில் தலைவர்க்கெல்லாம் தலைவரை எதிர்ப்பான்; ஆயினும் மனிதன் எவனும் தலையிடாமலே, அவனே அழிந்து ஒழிந்துபோவான்.
26 இதுவரை சொல்லி வந்த காலை மாலைகள் பற்றிய காட்சி உண்மையானது, நீயோ இந்தக் காட்சியை மறைத்து வை; ஏனெனில் பல நாட்களுக்குப் பிறகே இது நடைபெறும்."
27 தானியேலாகிய நானோ சோர்வடைந்து சில நாட்கள் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தேன்; பிறகு எழுந்து அரசனின் அலுவல்களைச் செய்தேன்; ஆயினும் அந்தக் காட்சியினால் இன்னும் திகைப்புற்றிருந்தேன்; அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
அதிகாரம் 09
1 கல்தேயரின் அரசுக்கு மன்னனாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அசுவெருஸ் என்பவனின் மகன் தாரியுஸ் ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
2 அவனுடைய முதல் ஆட்சியாண்டில், தானியேலாகிய நான், யெருசலேமின் அழிவு நிலை முடிவதற்கு எழுபது ஆண்டுகள் செல்ல வேண்டும் என்று எரெமியாஸ் இறைவாக்கினர்க்கு ஆண்டவர் சொல்லிய ஆண்டுக் கணக்கை நூல்களிலிருந்து படித்தறிந்தேன்.
3 நான் உண்ணாமல் நோன்பிருந்து கோணியுடை அணிந்து சாம்பலில் அமர்ந்து, என் முகத்தை என் கடவுளாகிய ஆண்டவர்பால் திருப்பி மன்றாடி வேண்டிக் கொண்டேன்.
4 என் கடவுளாகிய ஆண்டவரிடம் என் பாவங்களை அறிக்கையிட்டு மன்றாடி வேண்டிக் கொண்டேன்: "ஆண்டவரே, உமக்கு அன்பு செய்து, உம்முடைய கட்டளைகளைக் கடைப் பிடிக்கிறவர்களுடன் உடன் படிக்கையைக் காத்து இரக்கம் காட்டுகிறவராகிய அஞ்சத் தக்க மகிமை மிக்க இறைவா, நாங்கள் பாவம் செய்தோம்;
5 அக்கிரமம் புரிந்தோம்; தீநெறியில் நடந்து விலகிப் போனோம்; உம் கட்டளைகளையும் நீதி முறைமைகளையும் விட்டு அகன்று போனோம்.
6 எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், எங்கள் தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் உமது திருப்பெயரால் அறிவுரை கூறிய இறைவாக்கினர்களான உம் ஊழியர்களுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.
7 ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு எதிராகச் செய்த துரோகங்களுக்காக உம்மால் அருகிலோ தொலைவிலோ எல்லா நாடுகட்கும் விரட்டப்பட்டிருக்கும் யூதர்களும், யெருசலேம் குடிகளும், எல்லா இஸ்ராயேலருமாகிய எங்களுக்கு இன்றுள்ளது போலத் தலை கவிழும் வெட்கமே உரியது.
8 ஆம், ஆண்டவரே, வெட்கமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் தந்தையர்களுக்கும் உரியது; ஏனெனில் நாங்கள் உமக்கு எதிராகப் பாவஞ் செய்தோம்.
9 எங்கள் இறைவனும் ஆண்டவருமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு; நாங்களோ உம்மை விட்டு அகன்று போனோம்.
10 இறைவாக்கினர்களாகிய தம் ஊழியர்கள் வாயிலாய் எங்களுக்குக் கொடுத்த தம்முடைய சட்டங்களின் படி நடக்குமாறு சொன்ன எங்கள் இறைவனாகிய ஆண்டவரின் குரலொலியை நாங்கள் கேட்க மறுத்தோம்.
11 இஸ்ராயேலர் யாவரும் உம் நீதி முறைமைகளை மீறி, உம்முடைய சொற்களைக் கேட்காமல் போயினர்; கடவுளின் ஊழியரான மோயீசனின் நூலில் எழுதப்பட்ட சாபக் கேடும் சாபனைகளும் எங்கள் மேல் விழுந்தன; ஏனெனில் நாங்கள் அவருக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.
12 எங்களுக்கும், எங்களை ஆண்டு வந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக அவர் கூறியவற்றை நிறைவேற்றி விட்டார்; ஏனெனில் யெருசலேமுக்கு நிகழ்ந்தது போல வானத்தின் கீழ் வேறெங்கும் நடக்கவில்லை.
13 மோயீசனின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளவாறே, இந்தத் தீங்கெல்லாம் எங்கள் மேல் வந்துற்றது; இருப்பினும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்பி, உமது உண்மையை எண்ணிப் பார்க்கும்படி உமது முகத்தை நாங்கள் தேடவில்லை.
14 ஆகையால் ஆண்டவர் எங்கள் இறுமாப்பைப் பார்த்து அதற்குத் தக்க தண்டனையை எங்களுக்குத் தந்தார்; எங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்து வரும் செயல்களிலெல்லாம் நீதியுள்ளவர்; அவருடைய சொற்களைக் கேட்டு நடக்கத் தவறினோமே!
15 அப்படியிருக்க, ஆண்டவரே, உம் மக்களை ஆற்றல் மிக்க கையால் எகிப்து நாட்டிலிருந்து மீட்டு, இந்நாள் வரை நாங்கள் காணுமாறு உமக்குப் பேரும் புகழும் தேடிக்கொண்ட எங்கள் இறைவனே, நாங்களோ உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம், அக்கிரமம் புரிந்தோம்.
16 ஆனால் ஆண்டவரே, உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உம் சினம் யெருசலேமாகிய உமது நகரத்தையும், உமது பரிசுத்த மலையையும் விட்டு விலகுவதாக! ஏனெனில் எங்கள் பாவங்களுக்காகவும், எங்கள் தந்தையரின் அக்கிரமங்களுக்காகவும் யெருசலேமும் உம் மக்களும் சுற்றுப் புறத்தினர் யாவருக்கும் முன்பாக நிந்தையாகி விட்டனர்.
17 ஆகையால், எங்கள் இறைவா, இப்பொழுது உம் அடியானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அவனுடைய மன்றாட்டைக் கேட்டருளும்; பாழாய்க் கிடக்கிற உமது பரிசுத்த இடத்தின் மேல் உமது முகம் உம்மை முன்னிட்டே ஒளிர்வதாக!
18 என் இறைவனே, உமது செவிசாய்த்துக் கேட்டருளும்; உம் கண்களைத் திறந்து எங்கள் துயரத்தையும், உமது திருப்பெயர் தாங்கிய நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நன்மைத்தனத்தை நம்பாமல், உமது இரக்கப் பெருக்கத்தையே நம்பி எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் செலுத்துகிறோம்.
19 ஆண்டவரே, கேளும்; ஆண்டவரே, மன்னித்தருளும்; ஆண்டவரே, செவிமடுத்துச் செயலாற்றும்; என் இறைவா, உமக்காகவே கேட்கிறேன், காலந்தாழ்த்தேயும்; ஏனெனில் இது உமது நகரம், இவர்கள் உம் மக்கள்; உம் திருப்பெயரைத் தாங்கியுள்ளனர்."
20 இவ்வாறு நான் சொல்லி வேண்டிக் கொண்டு, என் பாவங்களையும், என் இனத்தாராகிய இஸ்ராயேல் மக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, என் கடவுளின் பரிசுத்த மலைக்காக என் விண்ணப்பங்களை என் கடவுள் முன்னிலையில் செலுத்தி,
21 இவ்வாறு நான் செபம் செய்து கொண்டிருக்கையில், முதற் காட்சியில் நான் கண்ட கபிரியேல் என்பவர் அதோ, விரைவாய்ப் பறந்து வந்து மாலைப்பலி வேளையில் என்னைத் தொட்டார்;
22 அவர் என்னிடம் சொன்னது பின்வருமாறு: "தானியேலே, உனக்குக் கற்பிக்கவும், தெளிவுண்டாக்கவும் நான் புறப்பட்டு வந்தேன்.
23 நீ செபம் செய்யத் தொடங்கிய போதே கட்டளை பிறந்தது; நான் அதை உனக்குத் தெரிவிக்க வந்தேன்; ஏனெனில் நீ மிகுதியான அன்புக்குரியவன்; ஆதலால் நான் சொல்வதைக் கவனித்துக் காட்சியின் உட்பொருளை உணர்ந்துகொள்:
24 மீறுதல் முடிவுறவும், பாவம் அழிவுறவும், அக்கிரமம் பரிகரிக்கப்படவும், முடிவில்லா நீதி வரவும், காட்சியும் இறைவாக்கும் நிறைவேறவும், பரிசுத்தர்களுள் பரிசுத்தர் அபிஷுகம் பெறவும் உன் இனத்தார் மேலும், உன் பரிசுத்த நகர் மேலும் எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
25 ஆகவே, நீ அறிந்து மனத்தில் வைக்க வேண்டியது: யெருசலேம் திரும்பக் கட்டப்படும்படி கட்டளை பிறந்தது முதல், தலைவராக அபிஷுகம் செய்யப்பட்டவர் வரும் வரையில் ஏழு வாரங்கள் ஆகும்; பின்பு அறுபத்திரண்டு வாரங்களில் தெருக்களும் மதில்களும் கால நெருக்கடியில் திரும்பவும் கட்டப்படும்;
26 அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பிறகு, அபிஷுகம் செய்யப்பட்டவர் குற்றமற்றவராயிருந்தும் தொலைக்கப்படுவார்; வரப்போகும் தலைவனது மக்களினம் நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் அழிக்கும்; அவனுடைய முடிவு பேரழிவாகும்; இறுதிவரை போர் நடக்கும்; இதுவே குறிக்கப்பட்ட அழிவு
27 ஒரு வாரத்திற்கு அவன் பலரோடு உடன்படிக்கை செய்வான், பாதி வாரத்திற்குப் பலியையும் காணிக்கையையும் நிறுத்தி விடுவான்; திருக்கோயிலில் அருவருக்கத்தக்கது இருக்கும், அந்த அருவருப்பு இறுதி வரையில், பாழாக்குபவனுக்குக் குறிக்கப்பட்ட அழிவு வரையில் நிலைநிற்கும்."
அதிகாரம் 10
1 பேர்சியரின் மன்னனாகிய கீருசின் மூன்றாம் ஆட்சியாண்டில் பல்தசார் என்று பெயரிடப்பட்டிருந்த தானியேலுக்கு ஓர் இறைவாக்கு அறிவிக்கப்பட்டது; அதுவோ பெரும் போராட்டத்தைப் பற்றியதோர் உண்மை வாக்கு; அவர் அந்த வாக்கைக் கண்டுபிடித்தார், அந்தக் காட்சியும் அவருக்கு விளங்கிற்று.
2 அந்நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரங்களாக அழுது கொண்டிருந்தேன்;
3 அந்த மூன்று வார முழுவதும் நான் சுவையான உணவு கொள்ளவில்லை; இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை; என் தலையில் எண்ணெய் கூடத் தடவிக் கொள்ளவில்லை.
4 முதல் மாதத்தில் இருபத்து நான்காம் நாள் நான் திக்ரிஸ் என்னும் பெரிய ஆற்றின் அருகில் இருந்தேன்.
5 என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்: இதோ மெல்லிய பட்டாடை உடுத்திக் கொண்டு தம் இடையில் மிகத் தூய்மையான தங்கக் கச்சை கட்டியிருந்த ஒருவரைக் கண்டேன்.
6 அவருடைய உடல் பளிங்கு போல் இருந்தது, அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப் போலிருந்தது; கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலம் போலும், அவர் பேசிய வார்த்தைகளின் ஒலி மக்கட் கூட்டத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.
7 தானியேலாகிய நான் மட்டுமே அந்தக் காட்சியைக் கண்டேன்; என்னிடமிருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை; ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று மறைவிடத்தில் ஒளிந்து கொள்ள ஓட்டமெடுத்தார்கள்.
8 தனித்துவிடப் பட்ட நான் மட்டும் இந்தப் பெரிய காட்சியைக் கண்டேன்; என் உடலெல்லாம் தளர்ந்து விட்டது; ஒளிவிடும் என் முகத்தோற்றம் அஞ்சத் தக்க வகையில் மாறிப் போயிற்று; என் உடலில் வலுவே இல்லாது போயிற்று.
9 அப்போது அவருடைய சொற்கள் என்காதில் விழுந்தன; அவற்றைக் கேட்டதும் முகங்குப்புறத் தரையில் விழுந்து அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன்.
10 அப்பொழுது இதோ, கையொன்று என்னைத் தொட்டது; நடுங்கிக் கொண்டிருந்த என்னை, கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி எழுந்து நிற்கச் செய்தது.
11 அவர் என்னை நோக்கி, "மிகவும் அன்புக்குரிய தானியேலே, நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்; காலூன்றி நில்; ஏனெனில் உன்னிடந்தான் நான் அனுப்பப்பட்டேன்" என்றார்; இந்த வார்த்தையை அவர் எனக்குச் சொல்லும் போது, நடுக்கத்தோடு நான் எழுந்து நின்றேன.
12 அப்போது அவர் என்னைப் பார்த்துக் கூறினார்: "தானியேலே, அஞ்சவேண்டாம். புரிந்துகொள்ள வேண்டும் என்னும் உள்ளத்தோடு உன் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் தாழ்த்திக்கொள்ளத் தொடங்கிய நாள் முதல் உன் மன்றாட்டு கேட்கப்பட்டது; உன் மன்றாட்டுக்கேற்பவே நான் வந்தேன்.
13 பேர்சிய அரசின் தலைவன் இருபத்தொரு நாள் வரைக்கும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனால் முதன்மையான தலைவர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்கு உதவி செய்ய வந்தார்; ஆகவே அவரை அங்கேயே பேர்சிய அரசின் தலைவனிடம் விட்டுவிட்டு,
14 உன் இனத்தார்க்கு இறுதிநாட்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை உனக்கு விளக்குவதற்காக நான் உன்னிடம் வந்தேன்; ஏனெனில் இந்தக் காட்சி நிறைவேற இன்னும் நாட்கள் பல ஆகும்."
15 அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொல்லும் போது, நான் தலை கவிழ்ந்து பேசாமல் தரையை நோக்கிக் கொண்டிருந்தேன்.
16 அப்போது இதோ, மனிதச் சாயலைக் கொண்ட ஒருவர் என் உதடுகளைத் தொட்டார்; நானும் வாய் திறந்து பேசி, எனக்கெதிரில் நின்றவரை நோக்கி, "ஐயா, இந்தக் காட்சியின் காரணமாய் என் உடல் தளர்வுற்றது; முற்றிலும் வலுவற்றுப்போனேன்.
17 தங்கள் ஊழியனாகிய நான் தங்களோடு உரையாடுவதெப்படி? ஏனெனில் என்னில் கொஞ்சமும் வலுவில்லை; என் மூச்சும் அடைத்துள்ளது" என்றேன்.
18 அப்பொழுது, மனித சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு உறுதிப்படுத்தி, "மிகுந்த அன்புக்குரியவனே, அஞ்சாதே;
19 உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு தைரியமாயிரு" என்றான். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் தைரியமுண்டாயிற்று. அப்பொழுது நான், "ஐயா பேசட்டும், என்னை உறுதிப்படுத்தினீர்" என்றேன்.
20 அப்போது அவர் கூறினார்: "உன்னிடம் நான் வந்த காரணம் இன்னதென உனக்குத் தெரியுமா? ஆனால்¢ இப்பொழுது பேர்சிய தலைவனோடு போர் தொடுக்கத் திரும்பிப் போகிறேன்; நான் அவனை முறியடித்த பின், கிரேக்க நாட்டுத் தலைவன் வருவான்.
21 ஆனால் உண்மையின் நூலில் எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன்; இதிலெல்லாம் உங்கள் தலைவராகிய மிக்கேலைத் தவிர வேறெவரும் எனக்கு உதவியாக வரவில்லை.
அதிகாரம் 11
1 ஆனால் நானோ, மேதியனான தாரியுசின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் உறுதிப் படுத்தவும் அவனுக்கு அருகில் இருந்தேன். இப்போது நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்:
2 அவனை எதிர்த்துப் போர்புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும்; அவ்வாறே உடன்படிக்கை செய்துகொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
3 பிறகு, வல்லமை மிக்க அரசன் ஒருவன் எழும்பி, மிகுதியான ஆற்றலோடு அரசு செலுத்தித் தான் விரும்பியதை எல்லாம் செய்வான்.
4 அவன் எழும்பும் போதே அவனுடைய அரசு அழிந்து போகும்; வானத்தின் நாற்றிசையிலும் அது பிரிக்கப்படும்; ஆயினும் அது அவனுடைய சந்ததியாருக்குத் தரப்படாது; அவனது ஆட்சிகாலத்திலிருந்த வல்லமையும் அதற்கு இராது. ஏனெனில் அவர்கள் தவிர மற்றவர்களுக்கு அவனுடைய அரசு பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்படும்.
5 பின்பு, தென்றிசை மன்னன் வலிமை பெறுவான்; ஆயினும் அவனுடைய தலைவர்களுள் ஒருவன் அவனை விட வலிமை பெற்று ஆட்சி செய்வான்; அவனது அரசும் மிகப் பெரியதாய் விளங்கும்.
6 சில ஆண்டுகள் சென்ற பின் அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்வார்கள்; தென்றிசை அரசனின் மகள் வடதிசை மன்னனுடன் சமாதானம் செய்துகொள்ள வருவாள்; ஆனால் அவளுடைய வலிமை நிலைநிற்காது; அவனுடைய சந்ததியும் நிலைத்திருக்காது; ஆனால் அவளும், அவளை அழைத்து வந்தவர்களும், அவளுடைய பிள்ளையும், அவளுடைய கணவனும் கைவிடப்படுவார்கள்.
7 அந்நாட்களில், அவளுடைய வேர்களிலிருந்து ஒரு தளிர் கிளம்பும்; அவன் பெரும்படையுடன் வந்து, வடதிசை மன்னனின் கோட்டைக்குள் புகுந்து அவர்களை முறியடித்து மேற்கொள்வான்.
8 அவர்களுடைய தெய்வங்களையும் சிலைகளையும், விலையயுர்ந்த வெள்ளி, பொன் பாத்திரங்களையும் எகிப்துக்குக் கொண்டு போவான்; சில காலத்திற்கு வட திசை மன்னன் மேல் படையெடுக்காமல் இருப்பான்.
9 பின்பு வடநாட்டு மன்னன் தென்னாட்டு அரசனது நாட்டின் மேல் படையெடுத்து வந்து, இறுதியாகத் தன் நாட்டுக்குத் திரும்புவான்.
10 பிறகு, அவனுடைய மக்கள் எழும்பித் திரளான சேனையைச் சேர்த்துக்கொண்டு வருவார்கள்; அவர்களுள் ஒருவன் பெருவெள்ளம் போலத் திடீரெனப் பாய்ந்து வந்து மீண்டும் தென்னவனின் கோட்டை வரைக்கும் போய்ப் போரிடுவான்.
11 அப்போது தென்றிசை அரசன் வெகுண்டெழுந்து புறப்பட்டுப் போய் வட திசை மன்னனோடு சண்டை செய்வான்; வடநாட்டான் பெரிய சேனையைத் திரட்டியிருந்தும், அச்சேனைப் பகைவன் கையில் அகப்படும்.
12 அச்சேனையைச் சிறை பிடித்ததால் தென்னவன் உள்ளம் இறுமாப்புக் கொள்ளும்; பல்லாயிரம் பேரை வீழ்த்துவான்; ஆயினும் அவன் முழு வெற்றி அடையமாட்டான்.
13 ஏனெனனில் வடதிசை மன்னன் முன்னதை விடப் பெரிய சேனையைத் திரும்பவும் திரட்டுவான்; சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் பெரிய சேனையோடும், மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.
14 அக்காலங்களில் தென்றிசை அரசனுக்கு எதிராகப் பலர் எழும்புவர்; உன் சொந்த இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் காட்சியை நிறைவேற்றும்படி எழும்புவார்கள்; ஆனால் அவர்கள் வீழ்ச்சியுறுவார்கள்.
15 வடதிசை அரசன் வந்து முற்றுகையிட்டு அரணால் சூழ்ந்த நகரங்களைக் கைப்பற்றுவான்; தென்றிசை மன்னனின் படைகள் எதிர்க்க வலிமையற்றுப்போம்; அவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்க்க முடியாது நிற்பார்கள்; ஏனெனில் அவர்களுக்கும் வலிமையிராது.
16 வடதிசை அரசன் அசனுக்கு எதிராய் வந்து தன் மனம் போலச்செய்வான்; அவனுக்கு முன்பாக நிற்பவன் எவனுமில்லை; அழகான நாட்டுக்குள் நுழைந்து அதைப் பாழாக்குவான்.
17 அவனுடைய நாட்டையும் கட்டியாள வேண்டுமென்பது அவன் எண்ணம்; ஆகவே அவனோடு நட்பு கொண்டாடுவதுபோல நடித்து, அவனை வஞ்சகமாய் ஒழித்துக்கட்டும்படி தன் புதல்வியருள் ஒருத்தியை அவனுக்குக் கொடுப்பான்; ஆனால் அவன் நினைத்தது நிறைவேறாது; அந்த நாடும் அவனுக்குச் சொந்தமாகாது.
18 பிறகு, அவன் தன் எண்ணத்தைத் தீவுகள் மேல் திருப்பி, அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்; ஆனால் படைத்தலைவன் ஒருவன் அவன் திமிரை அடக்குவான்; அடக்கி அவன் திமிர் அவனுக்கே கேடு விளைவிக்கும்படி செய்வான்.
19 ஆகையால் அவன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பி விட முடிவுச் செய்வான்; ஆனால் அங்கே ஆபத்தில் அகப்பட்டு வீழ்ந்தழிவான்.
20 அவனுக்குப் பிறகு மிகக் கொடியவனும், அரசில் தண்டல்காரனை அனுப்புவோனுமான ஒருவன் எழும்புவான்; அவன் கோபத்தினாலோ போர் முனையினாலோ அன்றிச் சில நாட்களுக்குள் மடிவான்.
21 "அவனது இடத்தில் ஈனன் ஒருவன் எழும்புவான்; அவனுக்கு அரச சிறப்பு தரப்படாது; ஆனால் எதிர்பாராத நேரத்தில் வந்து வஞ்சகமாய் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.
22 அவனை எதிர்த்துப் போர்புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும்; அவ்வாறே உடன்படிக்கை செய்துகொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
23 உடன்படிக்கை செய்துகொண்ட பிறகும் அந்தக் கயவன் வஞ்சகமாய் நடந்து கொள்வான்; அவன் குடிகள் சிலராயிருந்தும் அவன் வலிமை பெற்று விளங்குவான்.
24 வனமும் செழுமையும் நிறைந்த பட்டணங்களுள் திடீரென நுழைந்து தன் தந்தையர்களும், தந்தையர்க்குத் தந்தையரும் செய்யாததையும் செய்வான்; அவர்களுடைய கொள்ளைப் பொருட்களையும், கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்; அவர்களுடைய அரண்களைப் பிடிக்க வழிகளைத் தேடுவான்; ஆயினும் நிலை கொஞ்ச காலமே நீடிக்கும்.
25 பிறகு அவன் தன் வல்லமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெருஞ் சேனையோடு போவான்; அப்போது தென்றிசை மன்னனும் வலிமை மிக்க பெரும் படையோடு வந்து போர் முனையில் சந்திப்பான்; ஆனால் அவனுக்கு விரோதமாகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால் அவனுடைய படைகள் நிலைத்து நிற்கவில்லை.
26 அவனோடு உணவு உண்டவர்களே அவனை அழிப்பார்கள்; அவனுடைய படை முறியடிக்கப்படும்; பலர் கொலையுண்டு விழுவார்கள்.
27 இரண்டு அரசர்களும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய நினைப்பார்கள்; ஒரே பந்தியில் இருந்து கொண்டே பொய் பேசுவார்கள்; ஆயினும் அது அவர்களுக்குப் பயன்படாது; ஏனெனில், முடிவு இன்னொரு காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
28 வட நாட்டு மன்னன் மிகுதியான பொருட்களோடு தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான்; அவனுடைய உள்ளம் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் இருக்கும்; தீங்குகள் பல செய்த பின்பு தன் நாட்டுக்குத் திரும்புவான்.
29 குறித்த காலத்தில் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்; ஆனால் இம்முறை முந்தின முறையைப் போல் இராது.
30 அவனுக்கு விரோதமாய் உரோமையர்கள் கப்பல்களில் வருவார்கள்; அவனோ தோல்வியடைந்து திரும்பிப்போய்ப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் ஆத்திரங்கொண்டு, நடவடிக்கை எடுப்பான்; திரும்பி வந்து, பரிசுத்த உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள் மேல் கவனத்தைத் திருப்புவான்.
31 அவனுடைய படைவீரர்கள் வந்து திருக்கோயிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி, அன்றாடப் பலியை நிறுத்தி விட்டுப் பாழாக்கும் அருவருப்பை அங்கே நாட்டி வைப்பார்கள்.
32 உடன்படிக்கையை மீறுகிறவர்களைப் பசப்பு மொழிகளால் தன் பக்கம் ஈர்ப்பான்; ஆனால் தங்கள் கடவுளை அறிந்திருக்கும் மக்கள் திடங்கொண்டு அவருடைய கற்பனைகளின்படி நடப்பார்கள்.
33 மக்களுள் அறிஞரானோர் பலருக்கு அறிவூட்டுவார்கள்; அந்நாட்களில் எழும்பும் கலகத்தில் அவர்கள் வாளாலும் நெருப்பாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்;
34 இவ்வாறு அவர்கள் விழும் போது, அவர்களுக்குச் சொற்ப உதவியே கிடைக்கும்; ஆனால் வேறு பலர் அவர்களை வஞ்சிக்கும்படி அவர்களோடு சேர்ந்துகொள்வார்கள்;
35 அறிஞர்களுள் சிலர் மாபெரும் இக்கட்டுகளுக்கு உட்படுவார்கள்; இவற்றால் அவர்கள் புடம் போடப்படுவது போலக் குறிப்பிட்ட காலம் வரை தூய்மையாக்கப்படுவார்கள்; ஏனெனில் முடிவு வர இன்னும் நாட்கள் உண்டு.
36 அரசன் தன் மனம் போன போக்குப்படியெல்லாம் செய்வான்; அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்; எல்லாத் தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டு தெய்வங்களுக்கெல்லாம் கடவுளானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைக் கக்குவான்; இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை அவன் வாழ்க்கை வளம் பெறும்; ஏனெனில் வகுக்கப்பட்டது நடந்தேற வேண்டும்.
37 அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ, வேறெந்த தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கொல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.
38 அவற்றிற்குப் பதிலாக அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான்; தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை இவன் பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும் விலையுயர்ந்த பொருட்களாலும் மகிமைப்படுத்தி வழிபடுவான்.
39 தன் அரண்களைக் காக்க அந்நிய தெய்வத்தை வழிபடும் இனத்தாரை ஏற்படுத்துவான்; அவனை அரசனாக ஏற்றுக் கொண்டவர்களை மகிமைப்படுத்திப் பல உயர்ந்த பதவிகளையும் மானியங்களையும் அளிப்பான்.
40 "முடிவு காலம் வரும் போது, தென்றிசை மன்னன் அவனோடு போர் புரிவான்; வடதிசை மன்னனும் தேர்ப்படை, குதிரை வீரர்கள், கப்பற்படை ஆகியவற்றுடன் புயல்காற்று போல் அவனை எதிர்த்து வருவான்; அவன் நாடுகளுக்குள் நுழைந்து அழிவு விளைவித்து நடந்து போவான்.
41 பிறகு அவன் மகிமையான நாட்டுக்குள் நுழைவான்; பலர் அழிக்கப்படுவர்; ஆனால் ஏதோம், மேவாப் மக்கள், அம்மோன் மக்களுள் சிறந்தவர்கள் ஆகிய இவர்கள் மட்டுமே தப்பித்துக் கொள்வர்;
42 அவன் மற்ற மாநிலங்கள் மேலும் கை நீட்டுவான்; தவறாமல் எகிப்து நாட்டுக்கும் போய்,
43 ஆங்குள்ள பொன், வெள்ளி முதலிய செல்வங்களையும், விலையுயர்ந்த எல்லாப் பொருட்களையும் கைப்பற்றிக் கொள்வான்; அவன் லீபியா வழியாகவும் எத்தியோப்பியா வழியாகவும் கடந்து போவான்.
44 ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச் செய்யும்: அப்போது அவன் பெரிய சேனையுடன் வந்து பலரைக் கொன்றொழிப்பான்.
45 பிறகு, கடலுக்கும், மகிமை பொருந்திய பரிசுத்த மலைக்கும் இடையில் தன் அரச கூடாரங்களை நாட்டுவான்; ஆயினும் அவன் தன் முடிவைக் காண்பான்; அவனுக்கு உதவி செய்ய ஒருவனும் இரான்.
அதிகாரம் 12
1 "அக்காலத்தில், உன் இனத்தார்க்குக் காவலராக சேனைத் தலைவரான மிக்கேல் எழும்புவார்; மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்; அக்காலத்தில் உன் இனத்தார் தப்பித்துக் கொள்வர்: யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.
2 இறந்து போய் மண்ணில் உறங்குகிற பலருள் சிலர் முடிவில்லா வாழ்வடைவதற்கும், சிலர் முடிவில்லா இழிவுக்கும் நிந்தைக்கும் ஆளாவதற்கும் எழுந்திருப்பார்கள்.
3 ஞானிகள் வானத்தின் ஒளியைப் போலும், பலரை நல்வழியில் திருப்பியவர்கள் விண்மீன்களைப் போலவும் என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் பட்டொளி வீசுவார்கள்.
4 தானியேலே, நீ குறித்த காலம்வரை இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த நூலை முத்திரையிட்டு வை; பலர் அதைப் படிப்பார்கள்; அறிவு பெருகும்."
5 அப்போது தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும், அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைக் கண்டேன்.
6 அப்போது நான், மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்றுத் தண்ணிரின் மேல் நின்ற அந்த மனிதரை நோக்கி, "இந்த விந்தைகள் எப்போது முடிவுக்கு வரும்" என்று கேட்டேன்.
7 அப்போது மெல்லிய பட்டாடை உடுத்தி, ஆற்றின் தண்ணீர் மேல் நின்ற அந்த மனிதர் தம் வலக்கையையும் இடக்கையையும் வானத்துக்கு நேராகத் தூக்கி, "ஒரு காலமும் இரு காலமும் அரைக் காலமும் செல்லும்; பரிசுத்த மக்களின் கூட்டம் சிதறடிக்கப்பட்டு முடிவுறும் போது இவை யாவும் நிறைவேறும்" என்று என்றென்றும் வாழ்கிறவர் பேரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன்.
8 நான் அதைக் கேட்டும் அதன் பொருளை அறியவில்லை; அப்பொழுது அவரைப் பார்த்து, "ஐயா, இவற்றுக்குப் பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டேன்.
9 அதற்கு அவர், "தானியேலே, நீ போகலாம்; குறிக்கப்பட்ட நாள்வரையில் இந்த வார்த்தைகள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும்.
10 பலர் தேர்ந்து கொள்ளப்பட்டு வெண்மையாக்கப்படுவர்; நெருப்பிலிட்டாற் போல்ப் புடம்போடப்படுவர்; தீயவர்கள் தீய நெறியில் நடப்பார்கள்; அவர்கள் அதை உணரவு மாட்டார்கள்; ஆனால் ஞானிகள் உணர்வார்கள்
11 அன்றாடப்பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நாட்டி வைக்கப்படும் காலமுதல், ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணுறு நாள் செல்லும்;
12 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் வரை காத்திருப்பவனே பேறு பெற்றவன்.
13 ஆனால் முடிவு வரும் வரை நீ போய் இரு; ஒருநாள் இளைப்பாற்றி அடைவாய். காலம் முடியும் போது, உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள எழுவாய்" என்றார்.
அதிகாரம் 13
1 பபிலோனின் குடியிருந்தவருள் ஒருவன் யோவாக்கீம் என்பவன்.
2 அவன் எல்சியாவின் மகளும், மிக்க அழகு வாய்ந்தவளும், கடவுளுக்கு அஞ்சி நடந்தவளுமான சூசன்னா என்பவளை மணந்தான்.
3 அவளுடைய பெற்றோர் நீதிமான்களாய் இருந்ததால், தங்கள் மகளை மோயீசனின் திருச்சட்டத்தின்படியே வளர்த்தார்கள்.
4 யோவாக்கீமோ பெருஞ் செல்வம் படைத்தவன்; அவன் வீட்டருகிலேயே அவனுக்கொரு பழத்தோட்டம் இருந்தது; அவன் மற்றெல்லாரையும்விட மதிப்பில் உயாந்தவனாதாலால், யூதர்கள் அவனிடம் வந்துபோவது வழக்கம்.
5 அந்த ஆண்டில் மக்கள் நடுவிலிருந்து முதியவர்கள் இருவர் நீதிபதிகளாய் ஏற்படுத்தப்பட்டார்கள்; அவர்களைக் குறித்து ஆண்டவர், "நீதிபதிகளாய் இருந்து, மக்களை நடத்தும் பொறுப்பேற்ற முதியவர்களால் பபிலோனிலிருந்து அக்கிரமம் கிளம்பிற்று" என்று சொல்லியிருந்தார்.
6 இவர்கள் யோவாக்கீம் வீட்டுக்கு அடிக்கடிப் போவது வழக்கம்; மக்களும் வழக்குகள் இருந்தால், அவர்கள் அனைவரும் அவர்களிடம் போவார்கள்.
7 நண்பகல் வேளையில் மக்கள் யாவரும் போன பிறகு சூசன்னா தன் கணவனுடைய தோட்டத்திற்குள் போய் உலாவுவாள்.
8 இவ்வாறு அவள் நாடோறும் போய் உலாவிக் கொண்டிருப்பதை அந்த முதியவர்கள் கண்டு அவள் மேல் காமங்கொண்டனர்.
9 அவர்கள் மனம் மழுங்கிப் போயிற்று; வானத்தை ஏறெடுத்துப் பார்க்காமலும், நீதி முறைமைகளை நோக்காமலும் தாங்கள் கண்களைத் திருப்பிக் கொண்டனர்.
10 இருவரும் அவள்மேல் அடங்காத காமங்கொண்டார்கள்; ஆயினும் அவர்கள் தங்கள் காம நோயைப் பற்றி ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை;
11 ஏனெனில் அவளை அடைவதற்காகக் கொண்டிருந்த காமவேட்கையை வெளிப்படுத்த வெட்கப்பட்டார்கள்.
12 ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கும்படி ஆவலோடு வாய்ப்புத் தேடுவார்கள்.
13 ஒருநாள், "சாப்பாட்டுக்கு நேரமாயிற்று, வீட்டுக்குப் போவோம்" என்று சொல்லிக் கிளம்பினார்கள். வெளியே போனவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போனார்கள்.
14 ஆனால் இருவரும் திரும்பி வந்து அவ்விடத்தில் சந்தித்தார்கள்; திரும்பியதற்குரிய காரணத்தைச் சொல்லும்படி ஒருவரையொருவர் வற்புறுத்தவே, இருவருடைய தீய ஆசையும் வெளியாயிற்று; ஆதலால் அவளைத் தனிமையில் காணக்கூடிய நேரத்தை இருவருமாகச் சேர்ந்து திட்டம் பண்ணிக் கொண்டார்கள்.
15 ஆகவே, அவர்கள் தகுந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்; ஒருநாள் வழக்கம் போலவே, அன்றும் சூசன்னா தன் பணிப்பெண்கள் இருவரோடு தோட்டத்திற்குள் நுழைந்து, அங்கே குளிக்க விரும்பினாள்; ஏனெனில் வெயில் கொடுமையாக இருந்தது.
16 ஒளிந்து கொண்டு அவளைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவர்களைத் தவிர, வேறு யாரும் அங்கே இல்லை.
17 அவள் பணிப்பெண்களை நோக்கி, "எண்ணெய்யும் தைலமும் எனக்குக் கொண்டு வந்து கொடுத்து விட்டுத் தோட்டத்துக் கதவுகளைச் சாத்திவிட்டுப் போங்கள்; நான் குளிக்கப் போகிறேன்" என்று சென்னாள்.
18 அவள் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்; தோட்டத்தின் கதவுகளைச் சாத்தி விட்டு, அவள் கேட்டவற்றையும் கொணர்ந்து கொடுத்த பின்னர், பின் கதவால் வெளியேறினார்கள்; கிழவர்கள் அங்கே ஒளிந்து கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.
19 பணிப்பெண்கள் வெளியே போனவுடனே, அந்தக் கிழவர்கள் இருவரும் எழுந்து அவளிடம் ஓடிவந்து,
20 இதோ, தோட்டத்தின் கதவுகள் சாத்தப்பட்டுள்ளன; யாரும் பார்க்கவில்லை; உன் மேல் நாங்கள் ஆசை கொண்டுள்ளோம்; ஆகையால் எங்களுக்கு உடன்படு; எங்களோடு சேர்.
21 நீ உடன்படாவிட்டால், உன்னோடு கூட ஓர் இளைஞர் இருந்ததாகவும், அதனால் தான் நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டதாகவும் உனக்கெதிராய் நாங்கள் சாட்சிக் சொல்லுவோம்" என்றார்கள்.
22 சூசன்னா பெருமூச்சு விட்டு, "நான் பெரிய நெருக்கடியில் மாட்டிக்கொண்டேன் இதைச் செய்தால் எனக்குக் கிடைப்பது சாவு; செய்யாவிட்டால், உங்கள் கைகளுக்குத் தப்ப முடியாது.
23 ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவஞ் செய்வதை விட அதைச் செய்யாமல் உங்கள் கைகளில் அகப்படுவது நல்லது" என்றாள்.
24 உடனே சூசன்னா உரத்த குரலில் கூப்பிட்டாள்; கிழவர்களோ அவளுக்கு எதிராகக் கத்திக் கூப்பிட்டார்கள்.
25 அவர்களுள் ஒருவன் தோட்டத்துக்கு வாயிலண்டை ஓடிக் கதவைத் திறந்தான்.
26 தோட்டத்தில் கூக்குரல் கேட்டவுடன் வீட்டு ஊழியர்கள் அவளுக்கு நடந்ததென்ன என்று காணப் பின்புறக் கதவால் ஓடிவந்தார்கள்.
27 கிழவர்கள் தங்கள் கதையைச் சொன்னார்கள்; அதைக் கேட்ட ஊழியர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள்; ஏனெனில் சூசன்னாவைப் பற்றி இத்தகையது ஒன்றும் என்றுமே கேள்விப்பட்டதில்லை.
28 மறுநாள் அவளுடைய கணவனாகிய யோவாக்கீமின் வீட்டுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள்; அவர்களோடு அந்தக் கிழவர்கள் இருவரும் வந்தார்கள்; சூசன்னாவைக் கொலை செய்ய அவளுக்கு விரோதமாய்ச் சதித்திட்டம் போட்டுக் கொண்டு வந்தனர்.
29 இவர்கள் மக்களைப் பார்த்து, "எல்சியாவின் மகளும் யோவாக்கீமின் மனைவியுமாகிய சூசன்னாவை இங்கே கொண்டு வரும்படி ஆள் அனுப்புங்கள்" என்றார்கள்.
30 அவர்கள் உடனே அனுப்பினார்கள்; அவள் தன் பெற்றோர்களோடும் பிள்ளைகளோடும், சுற்றத்தார் அனைவரும் உடன் வந்தாள்.
31 சூசன்னா என்பவளோ மிக்க மென்மையும் தோற்றப்பொலிவும் உள்ளவள்.
32 அவள் தன் முகத்தை முக்காட்டினால் மூடியிருந்ததால், அந்தக் கொடியவர்கள் அவள் முக்காட்டை எடுக்கும்படி கட்டளையிட்டனர்; அப்படியாவது அவள் அழகைப் பருகலாம் என ஏங்கினர்.
33 ஆனால் அவளுடைய உறவினரும், அவளை அறிந்தவர்கள் அனைவரும் அழத்தொடங்கினர்.
34 அப்போது அந்தக் கிழவர்கள் இருவரும் மக்கள் நடுவில் எழுந்து நின்று, தங்கள் கைகளை அவள் தலை மேல் வைத்தனர்.
35 அவளோ அழுது கொண்டு வானத்தை நோக்கினாள்; ஏனெனில் அவளது உள்ளம் ஆணடவர் மேல் நம்பிக்கை கொண்டிருந்தது.
36 அந்தக் கிழவர்கள் பேசினார்கள்: "நாங்கள் தனியாய்த் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது, இவள் இரண்டு தோழியரோடு சோலைக்குள் வந்தாள்; வந்த பின் அதன் கதவுகளைச் சாத்தி விட்டுப் பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாள்.
37 அப்பொழுது அங்கே ஒளிந்திருந்த ஓர் இளைஞன் அவளிடம் வந்து அவளோடு படுத்துக் கொண்டான்.
38 நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்; அந்தக் கெட்ட செயலைப் பார்த்ததும், அவர்களிடம் ஓடிவந்தோம்; அவர்கள் ஒருவரோடொருவர் சேர்ந்திருப்பதைக் கண்டோம்.
39 அவனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களை விட வலுவுள்ளவனாய் இருந்தான்; கதவுகளைத் திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான்.
40 ஆனால் நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யாரென்று கேட்டோம்; இவள் சொல்லவில்லை; இதற்கு நாங்களே சாட்சி."
41 அவர்கள் முதியவர்களாய் இருந்தாலும், மக்களுக்கு நீதி வழங்குவோராய் இருந்தாலும், மக்கள் அவளைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள்.
42 அப்போது சூசன்னா உரத்த குரலில் கூவியழுது, "காலங் கடந்த இறைவா, நீர் மறைபொருட்களை அறிந்தவர்; நிகழுமுன் எல்லாவற்றையும் நீர் அறிவீர்.
43 அவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச்சான்று பகர்ந்தனர் என்பதையும் அறிவீர்; எனக்கு விரோதமாய் அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்னவற்றுள் நான் யாதொன்றையும் செய்யாதிருந்தும், இதோ நான் சாகிறேன்" என்றாள்.
44 ஆண்டவர் அவளுடைய வேண்டுதலைக் கேட்டருளினார்.
45 அவளைக் கொலைக்களத்திற்குக் கொண்டு போகும் போது, தானியேல் என்னும் பெயருள்ள இளைஞனின் பரிசுத்த ஆவியைத் கடவுள் தூண்டிவிட்டார்.
46 அவன் உரத்த குரலில், "இவளுடைய இரத்தப்பழிக்கு நான் பொறுப்பாளியல்லேன்" என்று கத்தினான்.
47 மக்கள் அனைவரும் அவன் பக்கம் திரும்பி, "நீ என்ன சொன்னாய்?" என்றார்கள்.
48 அவன் அவர்கள் நடுவில் நின்றுக் கொண்டு, "இஸ்ராயேல் மக்களே, வழக்கை விசாரியாமலும், உண்மையை ஆராயாமலும் இஸ்ராயேல் மகள் ஒருத்தியைச் சாவுக்குத் தீர்வையிட நீங்கள் மதியிழந்து போனீர்களா?
49 நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பி வாருங்கள்; ஏனெனில், இந்த மனிதர்கள் அவளுக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள்" என்றான்.
50 ஆகையால் மக்கள் விரைந்து திரும்பி வந்தார்கள்; முதியவர்கள் தானியேலை நோக்கி, "எங்கள் நடுவில் வந்து உட்கார்ந்து உன் கருத்தை எங்களுக்கு விளக்கிச் சொல்; ஏனெனில் முதியோருக்குரிய சிறப்பை உனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார்" என்றார்கள்.
51 தானியேல் அவர்களை நோக்கி, "அவர்கள் இருவரையும் வெவ்வேறிடத்தில் பிரித்து வையுங்கள்; அவர்களை நான் விசாரிக்கிறேன்" என்றான்.
52 அவர்களும் அவ்வாறே வெவ்வேறிடத்திற்கு அகற்றப்பட்டனர். அவர்களுள் ஒருவனைத் தானியேல் கூப்பிட்டு, "அக்கிரமங்களில் முதிர்ந்தவனே, நீ இதற்கு முன் செய்த பழைய பாவங்கள் இப்போது வெளிப்படுகின்றன.
53 மாசற்றவர்களையும் நீதிமான்களையும் கொலை செய்யாதே என்று ஆண்டவர் சொல்லியிருக்க, நீ அநியாயமான தீர்ப்புகளைச் செய்து, மாசற்றவர்களைத் துன்புறுத்திக் கொடியவர்களை விடுதலை செய்தாய்.
54 நிற்க, அவள் பாவஞ் செய்ததைப் பார்த்தேன் என்றாயே, எந்த மரத்தடியில் அவர்கள் ஒன்றாய்ப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாய்? சொல்" என்றான். அதற்கவன், "விளாமரத்தடியில்" என்றான்.
55 அப்போது தானியேல், "நன்றாகப் பொய் சொல்கிறாயே! அது உன் தலை மேல் தான் விழும்; ஏனெனில் இதோ, வானதூதர் கடவுளிடமிருந்து தீர்ப்புப் பெற்று, உன்னை இரண்டாக வெட்டுவார்" என்றான்.
56 அவனைத் தொலைவில் விலக்கி விட்டு, மற்றவனை வரும்படியாகக் கட்டளையிட்டான். அவன் வந்ததும், அவனைப் பார்த்து, "யூதாவுக்கன்று, கானானுக்குப் பிறந்தவன் நீ; அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன் மனத்தைக் கெடுத்து விட்டது.
57 இஸ்ராயேல் பெண்களுக்கு நீங்கள் இருவரும் இப்படித் தான் இது வரை செய்து வந்தீர்கள்; அவர்களும் பயத்தினால் தான் உங்கள் கெட்ட கருத்துக்கு இணங்கினார்கள்; ஆனால் யூதாவின் புதல்வியாகிய இவளால் உங்கள் அக்கிரமத்தைப் பொறுக்க முடியவில்லை.
58 இப்போது கேள்: அவர்கள் எந்த மரத்தடியில் இருந்தார்கள்? சொல்" என்றான்; அதற்கு அவன், "கருவாலி மரத்தடியில்" என்றான்.
59 தானியேல் அவனை நோக்கி, "நீயும் நன்றாய்ப் பொய் சொல்லுகிறாயே! அது உன் தலை மேல் தான் விழும்; ஏனெனில் ஆண்டவருடைய தூதர் உங்களை இரண்டு துண்டாக வெட்டி வீழ்த்தவும், இருவரையும் சாகடிக்கவும் வாளை ஏந்திக் கொண்டு நிற்கிறார்" என்றான்.
60 இதைக்கேட்டு அங்குள்ள மக்கள் அனைவரும், நம்பினவர்களைக் காப்பாற்றும் கடவுளை உரத்த குரலில் வாழ்த்திப் புகழ்ந்தார்கள்.
61 மேலும் அந்தக் கிழவர்கள் இருவருக்கும் எதிராக எழும்பினார்கள். ஏனெனில் அவர்கள் பொய்ச்சான்று சொல்லியதைத் தானியேல் அவர்கள் வாயாலேயே எண்பித்துவிட்டான்,
62 அவர்கள் பிறருக்குத் தர நினைத்திருந்த தண்டனையை அவர்களுக்கே தந்தார்கள்; மோயீசன் திருச்சட்டம் விதித்தபடியே, அவர்களை மக்கள் கொலை செய்தார்கள்; மாசற்ற இரத்தம் அன்று மீட்கப்பட்டது.
63 எல்சியாவும், அவன் மனைவியும், தங்கள் மகளான சூசன்னாவிடம் யாதொரு தீய நடத்தையும் காணப்படாததால், அவருடைய கணவன் யோவாக்கீம் முதலிய உறவினர்களுடன் ஆண்டவரைப் புகழ்ந்தார்கள்.
64 தானியேலுக்கு அன்று முதல் மக்கள் மிகுந்த மதிப்புக் கொடுத்து வரலானார்கள்.
அதிகாரம் 14
1 அஸ்தியாஜேஸ் என்னும் அரசன் தன் மூதாதையர்களோடு சேர்க்கப்பட்டான்; பேர்சியா நாட்டு கீருஸ் மன்னன் அவனது அரசைக் கைப்பற்றிக் கொண்டான்.
2 தானியேல் அரசனோடு நெருங்கிப் பழகினார். அவனுடைய நண்பர்களுக்கும் மேலாகச் சிறப்பு பெற்று வந்தார்.
3 பபிலோனியரிடத்திலே பேல் என்னும் பெயருடைய சிலையொன்று இருந்தது; அதற்கு ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு படி கோதுமை மாவும் நாற்பது ஆடும் ஆறு சால் திராட்சை இரசமும் பலியிடுவார்கள்.
4 அரசனும் அதை வணங்கி வருவான்; அதை வழிபட ஒவ்வொரு நாளும் போவான்; ஆனால் தானியேல் தம் கடவுளை மட்டுமே வழிபடுவார்; அரசன் அவரை நோக்கி, "நீ ஏன் பேலை வழிபடுவதில்லை?" என்று கேட்டான்.
5 அதற்கு அவர் அரசனைப் பார்த்து, "மனிதர் கையினால் செய்யப்பட்ட சிலைகளை நான் வணங்குகிறதில்லை; ஆனால் விண்ணையும் மண்ணையும் படைத்து, உயிர்கள் அனைத்தையும் ஆண்டு வருகிற உயிருள்ள கடவுளை வணங்குகிறேன்" என்றார்.
6 அரசன் அவரை நோக்கி, "பேல் தெய்வம் உனக்கு உயிருள்ள கடவுளாகத் தென்படவில்லையா? அது நாடோறும் எவ்வளவு சாப்பிடுகிறது, எவ்வளவு குடிக்கிறது என்பதெல்லாம் உனக்குத் தெரியாதா?" என்று கேட்டான்.
7 தானியேல் புன்முறுவல் செய்தவராய் அரசனிடம், "அரசே, ஏமாறாதீர்; அது உள்ளே சிலை; அது ஒருபோதும் சாப்பிட முடியாது" என்றார்.
8 அரசன் கோபங்கொண்டு தன் பூசாரிகளைக் கூப்பிட்டு, "அந்தப் பலிகளை புசிப்பது யாரென நீங்கள் எனக்குச் சொல்லாவிட்டால் நீங்கள் சாவீர்கள். ஆனால் அவற்றைப் பேல் தெய்வந்தான் சாப்பிடுகிறது என்பதை நீங்கள் காண்பித்தால் தானியேல் சாவான்; ஏனெனில், அவன் பேல் தெய்வத்திற்கு எதிராய்ப் பழிச்சொல் சொன்னான்" என்றான்.
9 அப்போது தானியேல், "உமது சொற்படியே ஆகட்டும்" என்று அரசனுக்குச் சொன்னார்.
10 பூசாரிகளின் மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் தவிர, பூசாரிகள் மட்டும் மொத்தம் பேலுக்கு எழுபது பேர் இருந்தனர்.
11 அரசன் தானியேலுடன் பேல் தெய்வத்தின் கோயிலுக்கு வந்தான். பேலின் பூசாரிகள் சொன்னார்கள்: "இதோ, நாங்கள் வெளியே போய் விடுகிறோம்; அரசே, நீர் இறைச்சியையும் திராட்சை இரசத்தையும் வைத்து விட்டுக் கதவைச் சாற்றி உமது மோதிரத்தால் முத்திரையிட்டுச் செல்லும். நாளைக் காலை நீர் உள்ளே வந்து பார்க்கும் போது பேல் எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்திருப்பதை நீர் காண்பீர்; அப்படிச் சாப்பிடாதிருந்ததால் நாங்கள் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; சாப்பிட்டிருந்தால், எங்களுக்கு எதிராய்ப் பொய் சொன்ன தானியேல் சாகவேண்டும்."
12 இவ்வாறு அவர்கள் துணிவோடு பேசியதற்குக் காரணம்: மேசைக்கு அடியில் அவர்கள் திருட்டு வழி செய்து வைத்திருந்தனர்; அதன் வழியாய் அவர்கள் உள்ளே வந்து அவற்றைச் சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.
13 அவர்கள் வெளியே போன பிறகு, அரசன் பேல் தெய்வத்தின் முன்னால் உணவுப் பொருட்களை இட்டான்;
14 தானியேல் தம் வேலைக் காரர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் சாம்பல் கொண்டு வந்தார்கள்: அவர்கள் அரசன் முன்னிலையிலேயே கோயில் முழுவதும் சாம்பலைத் தௌ;ளினாற் போலத் தூவினார்கள்; பிறகு இவர்கள் வெளியே வந்து, கதவைப் பூட்டி அரச மோதிரத்தால் முத்திரையிட்டுப் போனார்கள்.
15 பூசாரிகளோ வழக்கம் போலத் தங்கள் மனைவி மக்களோடு உள்ளே வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டுக் குடித்துச் சென்றார்கள்.
16 விடியற்காலையில் அரசன் எழுந்தான்; தானியேலும் உடன் வந்தார்.
17 அரசன், "தானியேலே, முத்திரைகள் சரியாய் இருக்கின்றனவோ?" என்று கேட்க, அவர், "அரசே, சரியாய் இருக்கின்றன" என்றார்.
18 கதவைத் திறந்தவுடனே, அரசன் மேசையைப் பார்த்து விட்டு, "ஓ பேல் தெய்வமே! நீர் உண்மையிலேயே மகத்துவம் உள்ளவர், உம்மிடத்தில் யாதொரு கபடுமில்லை" என்று உரத்த குரலில் கத்தினான்.
19 தானியேல் சிரித்துக் கொண்டே, அதற்கு மேல் உள்ளே போகாதபடி அரசனை நிறுத்தி, "இதோ, தளவரிசையை நோக்குங்கள்; இவை யாருடைய காலடிகள், தெரியுமா?" என்றார்.
20 அரசன், "ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரின் காலடிகளைக் காண்கிறேன்" என்று சொல்லிக் கோபங்கொண்டு, பூசாரிகளையும், அவர்களுடைய மனைவி மக்களையும் பிடித்தான்;
21 அவர்கள், தாங்கள் உள்ளே நுழைந்து மேசையிலிருந்தவற்றைச் சாப்பிட வந்த திருட்டு வழிகளை அவனுக்குக் காட்டினார்கள்.
22 ஆகவே, அரசன் அவர்களைக் கொலை செய்து, பேல் தெய்வத்தைத் தானியேலிடம் கையளித்தான்; அவர் அதையும் அதன் கோயிலையும் தகர்த்தார்.
23 அங்கே ஒரு பெரிய நாகப்பாம்பும் இருந்தது; அதையும் பபிலோனியர் வணங்கி வந்தனர்;
24 அரசன் தானியேலை நோக்கி, "இதோ, இது உயிருள்ள தெய்வமன்று என நீ இப்போது சொல்ல முடியாதே; ஆகையால் இதை வணங்கு" என்றான்.
25 அதற்குத் தானியேல், "கடவுளாகிய ஆண்டவரையே நான் வணங்குகிறேன்; ஏனெனில் அவர் தான் உயிருள்ள கடவுள்; மேலும், அரசே, எனக்கு நீர் அனுமதி கொடுத்தால், கத்தி, தடி இவற்றை எடுக்காமலே, நான் இந்த நாகத்தைக் கொன்று விடுகிறேன்" என்றார்.
26 அதற்கு அரசன், "சரி, அனுமதி தருகிறேன்" என்றான்.
27 தானியேல், கீலும் கொழுப்பும் மயிரும் எடுத்து ஒன்றாய்ச் சேர்த்துச் சமைத்து உருண்டைகளாகத் திரட்டி, அந்தப் பாம்பின் வாயிலிட்டார். அதையுண்டதும் பாம்பு வயிறு வெடித்து இறந்தது; அவர், "நீங்கள் கும்பிட்டு வந்த தெய்வத்தைப் பாருங்கள்" என்று காட்டினார்.
28 பபிலோனியர் இதை அறிந்து மிகவும் சினங்கொண்டு, அரசனுக்கு விரோதமாய்க் கூட்டங் கூடி, "அரசர் யூதராகி விட்டார்; அவர் பேல் தெய்வத்தை அழித்தார், இப்பொழுது நாகத்தையும் கொன்றார்; அதுவுமின்றி நம் பூசாரிகளையும் கொலைசெய்தார்" என்று சொல்லி, அரசனிடத்தில் வந்து,
29 தானியேலை எங்களிடம் கையளியும்; இல்லையேல் உம்மையும் உம் குடும்பத்தாரையும் ஒழித்து விடுவோம்" என்று கூவினார்கள்.
30 அவர்கள் சீற்றத்துடன் தன்னை மருட்டுவதை அரசன் கண்டு, கட்டாயத்தின் பேரில் தானியேலை அவர்களிடம் கையளித்தான்.
31 அவர்களோ தானியேலைக் கொண்டு போய்ச் சிங்கங்களின் குகையில் போட்டார்கள்; அங்கே அவர் ஆறு நாட்கள் இருந்தார்.
32 அந்தக் குகையில் ஏழு சிங்கங்கள் இருந்தன; அவற்றுக்கு நாடோறும் இரண்டு மனித உடல்களும் இரண்டு ஆடுகளும் கொடுப்பது வழக்கம்; தானியேலை அவை தவறாமல் கொன்றுத் தின்னும்படி செய்வதற்காக, அவற்றுக்கு அந்த ஆறு நாட்களும் வழக்கமான உணவு தரப்படவே இல்லை.
33 அக்காலத்தில் யூதேயாவில் ஆபகூக் என்ற இறைவாக்கினர் ஒருவர் இருந்தார்; அவர் கூழ் தயாரித்து ஒரு கலத்தில் எடுத்துக்கொண்டு, உரொட்டித் துண்டுகளும் எடுத்துக்கொண்டு தன் வயலில் அறுக்கிறவர்களுக்குக் கொண்டு போனார்.
34 ஆண்டவருடைய தூதர் ஆபகூக்குக்குத் தோன்றி, "நீ வைத்திருக்கும் உணவைப் பபிலோனில் சிங்கக் குகையில் இருக்கும் தானியேலுக்குக் கொண்டுப் போய்க் கொடு' என்றார்.
35 அதற்கு ஆபகூக், "ஆண்டவனே, பபிலோனை நான் பார்த்ததில்லை, அந்தக் குகையும் எனக்குத் தெரியாதே" என்றார்.
36 அப்போது, ஆண்டவருடைய தூதர், அவர் தலை மயிரைப் பிடித்து, அவரை வாயு வேகத்தில் தூக்கிக் கொண்டு போய்ப் பபிலோனில் குகைக்கு மேலே இறக்கினார்.
37 ஆபகூக் உரக்கக் கூவி, "கடவுளின் ஊழியனாகிய தானியேலே, உனக்குக் கடவுள் அனுப்பிய உணவைப் பெற்றுக்கொள்" என்று சொன்னார்.
38 அப்பொழுது தானியேல், "இறைவா, என்னை நீர் நினைவு கூர்ந்தீரே; உமக்கு அன்பு செய்கிறவர்களை நீர் கைவிடவில்லை" என்றார்.
39 தானியேல் எழுந்து உட்கார்ந்து சாப்பிட்டார்; உடனே ஆண்டவருடைய தூதர் ஆபகூக்கை அவரது இடத்திற்குத் திரும்பவும் கொண்டு சேர்த்தார்.
40 ஏழாம் நாளில், தானியேலைக் குறித்துத் துக்கம் கொண்டாடி அழும்படியாக அரசன் குகைக்கு வந்தான்; வந்து உள்ளே பார்த்தான்; இதோ, தானியேல் சிங்கங்களின் நடுவில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
41 அரசன் பெருங்கூக்குரலிட்டு, "ஆண்டவரே, தானியேலின் இறைவா, நீர் மேன்மையுள்ளவர், உம்மையன்றி வேறு தெய்வமில்லை" என்றான். உடனே சிங்கக் குகையிலிருந்து தானியேலைப் பிடித்து வெளியே தூக்கினான்.
42 பிறகு, அவருடைய அழிவை விரும்பி முயற்சி செய்தவர்களை குகைக்குள்ளே எறிந்தான்; எறிந்த நொடியிலேயே அவன் கண்முன் அவர்கள் விழுங்கப்பட்டார்கள்.
43 அப்போது அரசன், "உலகெங்கணும் உள்ள அனைவரும் தானியேலின் கடவுளுக்கு அஞ்சக்கடவார்கள்: ஏனெனில் சிங்கக் குகையினின்று தானியேலைக் காப்பாற்றினவர் அவரே; அவரே மீட்பர்; மண்ணுலகில் விந்தைகள் செய்கிறார்" என்றான்.