சிலுவைப் பாதை

என் அன்பு பிள்ளைகளே!
அடிப்பதற்கு இழுத்துச் செல்லும் ஆட்டுக்குட்டியைப் போல், உங்கள் முன்னே வாயில்லா பூச்சியாய் வதங்கி நின்று கொண்டிருக்கும் என்னை யாரென்று தெரிகிறதா?  உலகை மீட்க பரமதந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட மானுடமகன் நான். தந்தை எனக்கிட்ட கட்டளைகளை சிரமேற் கொண்டு, நல்லனவற்றை பேசி, நன்மைகள் பல புரிந்த எனக்கு இன்று தீர்ப்பு கூறும் நாள். இவ்வுலக முடிவிலே தீர்ப்பிட வந்த எனக்கு பிலாத்து தீர்ப்பு வழங்கப் போகிறான். அன்று ஓசான்னா பாடி, புகழ்ந்த மனிதர்கள் இன்று ஒழிக!  ஓழிக!  என ஓலமிடும் குரல் உங்கள் காதுகளில் ஒலிக்கின்றதா? “அவனை சிலுவையில் அறையும்!  சிலுவையில் அறையும்!” என சந்தை தடுமாறி கூக்குரல் இடுவது உங்கள் செவிகளில் கேட்கிறதா?  சிலுவை மரணம் ஏற்கும் அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்?  இரவெல்லாம் கசையால் அடித்து, காறி உமிழ்ந்து, குற்றுயிராய் என்னை பிலாத்துவின் அரண்மனைக்கு இழுத்துச் செல்லும் கொடூரக் காட்சியைக் காண என்னுடன் வருகிறீர்களா வாருங்கள்  என் சிலுவைப் பாடுகளை காணுங்கள்.

முதல் நிலை - இயேசு தீர்ப்பிடப்படுகின்றார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்புப் பிள்ளைகளே!
நேற்று இரவு கெஸ்தமனித் தோட்டத்தில் என் ஆன்மா சாவுக்கேதுவான வருத்தமுற்றிருக்கிறது என்று கூறி இரத்த வியர்வையில் மூழ்கி, எனது ஆன்மாவில் நான் அனுபவித்த துக்க துயரத்தை யாரிடம் கூறுவேன்?  முத்தமிட்டு காட்டிக்கொடுத்த யூதாஸ் ஓடிவிட்டான். இரவும், பகலும் என்னோடு இருந்து, உண்டு, உறங்கி வாழ்;ந்துவந்த மற்ற சீடர்கள் எங்கே?  உமக்காக என் உயிரையே கொடுப்பேன் என்ற பேதுரு எங்கே?  இதோ!  தனிமரமாய், அடிகளால் நொறுக்கப்பட்டு, கயிற்றால் இறுகக்கட்டப்பட்டு, கள்வனைப் போல் பிலாத்து முன்னிலையில் நிற்கின்றேனே!  என்ன குற்றம் செய்தேன்?  கொலை செய்தேனா?  கொள்ளை அடித்தேனா?  என்ன குற்றம் செய்தேன்?  இறை அரசை அறிவித்தது குற்றமா?  நோயாளர்களைக் குணப்படுத்தியது குற்றமா?  இறந்தவர்களுக்கு உயிர்கொடுத்தது குற்றமா?  ஏழைகள் மீது இரக்கம் காட்டியது குற்றமா?  நான் தேர்ந்தெடுத்த மக்களால் கைது செய்யப்பட்டு, பொய்ச்சான்றுகளால் குற்றஞ்சாட்டப்பட்டு, அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு பிலாத்துவின் முன் நிற்கின்றேன். நான் குற்றவாளி அல்ல என்று பிலாத்து அறிவான். சிலுவையில் அறையும்!  சிலுவையில் அறையும்!  என்ற மக்களின் கூக்குரல் அவன் காதுகளை செவிடாக்கிவிட்டது. அதிகாரம் அவன் கண்ணை மறைத்து விட்டது. அவன் மனைவி விடுத்த எச்சரிக்கையும் காற்றோடு கலந்துவிட்டது. “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கைகழுவி இவனை சிலுவையில் அறையும் என தீர்ப்பு வழங்கிவிட்டான் பிலாத்து. ஒரு பாவமும் அறியாத நான் சிலுவைமரண தீர்ப்புக்கு ஆளாகிவிட்டேன் இது தர்மமா?  நீதியா?  நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

ஜெபம்
சிலுவை தீர்ப்புக்கு ஆட்பட்ட எங்கள் தெய்வமே!  குற்றவாளிகள் பலர் தப்பினாலும், நிரபராதி ஒருவன் தண்டிக்கப்படக்கூடாது. தன்னிடம் உள்ள குற்றத்தைக் காணாது அடுத்தவர் மீது குற்றம் கண்டுபிடித்து அகம் மகிழும் உலகம் இது. ஒரு விரலை நீட்டி மற்றவரை குற்றஞ்சாட்டும் பொழுது மற்ற மூன்று விரல்களும் தன்னை நோக்கி இருப்பதை யாரும் உணர்வதில்லை. இன்று குடும்பத்தில், நாட்டில், ஊரில், உலகத்தில் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் எங்கும் சமாதானம் அமைதி மகிழ்ச்சி அற்றுப்போய்விட்டது. அமைதியின் தெய்வமே! பிலாத்துவைப் போல் அநீதிக்குப் பணியாமல் உண்மைக்குப் பயந்து யாரும் யாருக்கும் தீர்ப்பிடாமல் வாழும் உள்ளத்தை எங்களுக்குத் தருமாறு உம்மை வேண்டுகிறோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

இரண்டாம் நிலை - இயேசு சிலுவை சுமத்தப்படுகிறார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்புப் பிள்ளைகளே! பிலாத்துவின் தீர்ப்பினால் அக்கிரமத்திற்கும் அநீதிக்கும் வெற்றி கிடைத்துவிட்டது. எப்போது என்னை ஒழிப்போம் என்று காத்திருந்த கூட்டம் இதோ கொலைவெறியோடு என்னை இழுத்துச்சென்று கல்தூணிலே கட்டி கசையால் அடிக்கின்றது. யூதர்களின் அரசனே!  இதோ உனக்கு கிரீடம் என முள்முடியை என் தலையில் வைத்து அழுத்தி காறி உமிழ்ந்து செந்நிற அங்கியை அணிவித்து ஆர்ப்பரித்தது. எட்டுப்பேர் சுமக்கக் கூடிய கரடு முரடான மரத்திலே செய்யப்பட்ட சிலுவையை தூக்கி வந்து இதோ என் தோள்மேல் வைத்து வெற்றி முழக்கமிடுகின்றனர். இரத்தம் ஆறாய்ப் பெருக உடலெல்லாம் இரணமாகி நெருப்பிலிட்ட புழு போல் உடலும் உள்ளமும் துடிதுடிக்க நான்படும் வேதனை தந்தையே உமக்குத் தெரிகிறதா!  என் சித்தப்படி அல்ல உன் சித்தத்தை நிறைவேற்ற இந்தப்; பாரச் சிலுவையை சுமந்து செல்கின்றேன்.

“சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள்” என அரவணைத்த எனக்கு அன்பு மகனே!  மகளே!  நீ தரும் பரிசு இதுதானா?  உங்கள் கடுஞ்சொற்களால் எத்தனை உள்ளங்களை துடிக்க வைக்கிறீர்கள் அதுதான் என் தலையில் உள்ள முள்முடி. உடலாலும் உள்ளத்தாலும் எத்தனை இழிவான செயல்களைச் செய்து உங்களை கலங்கப்படுத்தி வருகின்றீர்கள். அதுதான் என் உடலில் உள்ள கசையடிகள். நீங்கள் செய்கின்ற பாவங்கள்தான் என் தோளில் உள்ள பாரச்சிலுவை. என் சிலுவை பாரத்தை குறைக்க மாட்டீர்களா?  என் உடல் வேதனையை குறைக்க மாட்டீர்களா?

ஜெபம்
கருணை நிறைந்த இயேசுவே!  உம் வேதனைக்கெல்லாம் காரணம் யூதர்கள் மட்டும் அல்ல நாங்களும்தான் என்பதை உணர்கின்றோம். பாவச்செயல்களை செய்யாதிருக்கும் உள்ளத்தை எங்களுக்குத் தருமாறு உம்மிடம் வேண்டுகிறோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

மூன்றாம் நிலை - இயேசு முதன்முறை தரையில் விழுகின்றார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்புப் பிள்ளைகளே!
என் அவல நிலையைப் பார்த்தீர்களா?  தலையிலிருந்து வழிகின்ற இரத்தம் என் கண்களை மறைக்கின்றது. செல்லும் பாதை தெரியவில்லை. பாரச்சிலுவை தோளை அழுத்த உடல் காயங்கள் ஓரடி எடுத்துவைக்க முடியாமல் வேதனைப்படுத்த கால்கள் தடுமாறி விழுந்துவிட்டேன். கை கொடுத்து தூக்கிவிட கருணைமிக்கோர் ஒருவரும் இல்லை. உதவிக்காக ஏங்குகிறது என் உள்ளம். பாரமான வண்டியை இழுக்க முடியாமல் கீழே விழுந்த காளைகளை சாட்டையால் அடித்து துன்புறுத்தும் வண்டிக்காரன் போல் உதவி இன்றி தவிக்கும் என்னை வீரர்கள் அடிமேல் அடியடித்து துன்புறுத்துவதைப் பார்த்தீர்களா?  நான் எழுந்து நடக்க உன் கரத்தை நீட்டி உதவி செய்ய மாட்டாயா?

என் மகனே!  மகளே!
உன் பாவங்களைப் போக்க உனக்கு மீட்பு அளிக்க நான் கீழே விழுந்து எழுகின்றேன். ஆனால் நீயோ பாவச்சேற்றிலே விழுந்து விழுந்து அதிலிருந்து எழ முயற்சிக்காமல் உன்னையே அழித்துக்கொண்டிருக்கிறாயே!  எப்பொழுது எழப்போகிறாய்?

ஜெபம்
அன்பு தெய்வமே!  நாங்கள் செய்த பாவங்களே நீர் தடுமாறி விழக்காரணம் என்பதை உணர்கின்றோம். வேதனைகளில் பாவச் சோதனைகளில் எங்களை காப்பாற்றி இரட்சிக்க வேண்டுமாய் உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

நான்காம் நிலை - இயேசு தம் தாயை சந்திக்கின்றார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்புப் பிள்ளைகளே!
கீழே விழுந்த நான் தட்டுத்தடுமாறி எழுந்து தலை நிமிர்ந்தேன்!  அதோ!  என் அன்புத்தாய்!  பத்துமாதம் சுமந்து பெற்று பாலுட்டி சீராட்டி வளர்த்தவள். கண்களிலே நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்தோட தலைவிரிகோலமாய் நிற்கின்றாள். அம்மா என்றழைக்க உடலில் சக்தி இல்லை. அம்மா!  உன் உதிரத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்தாயே!  உன் மகனின் அவலநிலையைப் பார்த்தாயா?  குழந்தைப் பருவத்திலே கால்தடுக்கி நான் விழுந்த போது பதறி தவித்து ஓடிவந்து தூக்கி மார்போடு அணைத்து தழுவி முத்தமிட்டு என் அழுகையை நிறுத்தினாயே. இதோ!  இன்று உடல் வேதனையால் வெந்து தவிக்கின்றேனே!  ஓடி வந்து அரவணைத்து அன்பு மழையால் ஆறுதல் தர மாட்டாயா?  அன்று பாஸ்கா திருவிழாவில் நான் காணாமல் போய்விட்டதாய் எண்ணி மூன்று நாள்கள் காடுமேடெல்லாம் அலைந்து திரிந்து என்னைக் கண்டவுடன் மகனே!  என்னை விட்டு எங்கே சென்றாய் என்று கதறித் துடித்தாயே!  அந்த உன் அன்பு மகன் இதோ உலகைவிட்டே செல்லப்போகிறேன். ஏனம்மா அப்படிப் பார்க்கின்றாய். “இவ்வளவு கொடுமைகளை நீ அனுபவிப்பாய் என்று தெரிந்திருந்தால் உன்னை பெற்றிருக்கமாட்டேன்” என்று எண்ணுகிறாயா?  அன்று இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற என்னை ஈன்றெடுத்தாய். நான் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற இந்த சிலுவைப்பாடுகளை மனமுவந்து ஏற்றுள்ளேன். அம்மா!  என்று அழைக்க இயலாதவன் எப்படி இவ்வாறெல்லாம் பேசுகிறேன் என்று சிந்திக்கிறீர்களா?  எங்கள் உதடுகள் பேசவில்லை உள்ளங்கள்தான் பேசின. பெற்ற தாய் தன் குழந்தையின் உள்ளத்தை நன்கு அறிவாள் இல்லையா?

என் அன்பு மகனே!  மகளே!
பெற்றெடுத்த உள்ளம் தெய்வம் அல்லவா. உங்கள் பெற்றோரை எவ்வாறு நேசிக்கிறீர்கள்? மதிக்கிறீர்கள்? முதிர் வயதில் அவர்கள் உங்கள் அரவணைப்பில் வாழ்கின்றார்களா? அல்லது முதியோர் இல்லத்தில் பாசத்திற்கு ஏங்கி பரிதவித்து வாழ்கிறார்களா?  உங்களை பெற்று எடுத்து வளர்த்து வாழ்வு தர அவர்கள் பட்டபாடுகளை நினைத்துப்பார்ப்பீர்களா?

ஜெபம்
நேசமுள்ள இயேசுவே! எந்த நேரங்களிலும் எங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பாதுகாக்கும் கடமை உணர்வை எங்களுக்குத் தாரும்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

 ஐந்தாம் நிலை - சிலுவையை சுமக்க சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்புப் பிள்ளைகளே!
தாயை சந்தித்த மகிழ்ச்சி சற்றே உள்ளத்தில் இருந்தாலும் உடலின் தளர்ச்சியால் ஓரடிக் கூட எடுத்துவைக்க முடியவில்லை. ஆறுதல் தேடி அலைகின்றது கண்கள். முன் பின் என்னைப் பார்த்திராத சீரேனே என்ற ஊரைச்சேர்ந்த சீமோன் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருகிறான். ஈரமற்ற யூதர்களின் இதயத்தில் இரக்கம் தோன்றியதா?  இறந்துவிடுவேன் என்ற பயமா?  அல்லது சீமோனையும் துன்புறுத்த எண்ணினார்களோ?  தெரியவில்லை அவனை இழுத்து வந்து நான் சுமந்துவந்த சிலுவையை சுமக்க வைத்து அழைத்துச் செல்கின்றனர். சிறிது நேரம் என் சுமையைத் தாங்கிய சீமோனை நன்றியுடன் நோக்கினேன். காலத்தினால் அவன் செய்த சிறு உதவி காலம் உள்ளவரை நிலைத்திருக்கும் அல்லவா?

என் மகனே!  மகளே! 
தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என எண்ணாது நம்மைச் சுற்றியுள்ளோரின் சுமைகளைப் பாருங்கள். வறுமை, நோய் ; முதுமை தனிமை, ஏழ்மை என்ற எத்தனை எத்தனை சுமைகளோடு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்?  அவர்கள் சுமைகளை நீங்கள் இறக்கி வைக்க உதவக்கூடாதா?  பசித்தவனுக்கு உணவு கொடுங்கள் தாகமுற்றவனுக்கு தண்ணீர் கொடுங்கள் ஆடையில்லாதவனுக்கு ஆடை கொடுங்கள். ஏழைகளின் முகமலர்ச்சியில் இறைவனைக் காணுங்கள். நியாயத்தீர்ப்பு நாளிலே என்னருகே அமரும் பாக்கியம் பெறுவீர்கள். கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

ஜெபம்
இரக்கம் மிகுந்த இயேசுவே!  பிறருடைய இன்பங்களிலே பங்கேற்கா விட்டாலும் துன்பங்களிலே துணைநிற்கும் நல்ல உள்ளத்தை எங்களுக்குத் தாரும்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

ஆறாம் நிலை - வெரோனிக்கா இயேசுவின் முகத்தைத் துடைக்கின்றாள்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்புப் பிள்ளைகளே!
என் கண்கள் பஞ்சடைந்து விட்டன. கால்கள் துவண்டுவிட்டன. இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது கொல்கொதா மலை? பார்வையற்றோருக்கு பார்வை கொடுத்தேன். முடவர்களை நடக்க வைத்தேன். ஊமைகளைப் பேச வைத்தேன். இதோ எனக்கு இழைக்கப்படும் கோரக் கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போரில் என்னால் பயன் பெற்றவர் எத்தனையோ பேர் இருப்பார்கள் இல்லையா? அவர்கள் ஒருவருக்காவது எனக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்படவில்லை. போர் வீரர்களிடம் அச்சமா?  தந்தையே இந்தத் துன்பக்கிண்ணம் எப்போது என்னை விட்டு நீங்கும். அதோ!  ஓடோடி வருகின்றாள் ஒரு பெண் வீரரெல்லாம் தடுத்து நிறுத்திய போதும் உதறி தள்ளி என் முன்னே கண்களில் நீர் வடிய கலங்கி நிற்கின்றாள். அருள் ஒளி வீசும் உம் திருமுகம் எங்கே?  கருணை பொழியும் உம் கண்களின் ஒளி எங்கே?  இரக்கமற்ற கொடியவர்கள் காறி உமிழ்ந்ததனாலும் வியர்வையாலும் இரத்தத்தாலும் கறைபடிந்து பொலிவிழந்ததோ என எண்ணி தான் கையில் கொண்டுவந்த துண்டினால் என் முகத்தை துடைத்து எனக்கு ஆறுதல் வழங்குகிறாள். அவளுக்குப் பரிசாக என் முகத்தை அத்துண்டிலே பதியவைத்து ஆசிவழங்கினேன். அவள் பெயர் என்றும் நிலைத்திருக்கும் அல்லவா?

என் மகனே!  மகளே!
உங்கள் கண்முன்னே எத்தனையோ கொடுமைகள் நடக்கின்றனவே ஏன் நீங்கள் அதைக் கேட்பதில்லை. பாலியல் பலாத்காரத்திற்கு உட்படும் சிறுமிகள், பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு விபச்சாரம் செய்வோர், கணவன் மனைவிக்குச் செய்யும் துரோகம், மனைவி கணவனுக்குச் செய்யும் துரோகம், புற்றீசல் போல் மலிந்து கிடக்கும் பாவங்களுக்கு எதிராக ஏன் குரல் எழுப்புவதில்லை நீங்கள்?  அச்சமா?  நமக்கேன் என்ற எண்ணமா?  உனக்கு உன் குடும்பத்தில் யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வாய்?

ஜெபம்
அக்கிரமத்திற்கு குரல் கொடுத்த அன்பு இயேசுவே! அக்கிரமங்களைத் தட்டிக்கேட்கும் அஞ்சா நெஞ்சத்தை எங்களுக்குத் தாரும்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

ஏழாம் நிலை - இயேசு இரண்டாம் முறை கீழே விழுகின்றார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்பு பிள்ளைகளே!
சுட்டெரிக்கும் வெயில், சோர்ந்து விழும் கை கால்கள் விழுந்து எழுந்து கரடுமுரடான கல்வாரி மலையை நோக்கி தவழ்ந்து செல்கின்றேன். என்னால் ஓரடிக்கூட எடுத்து வைக்க முடியவில்லை. பாதங்களில் கல்லும் முள்ளும் குத்தி இரத்தம் வழிகிறது. அம்மா என் வேதனையை தாங்க முடியவில்லை விழுந்து விட்டேன் தாயே என்னால் எழ முடியவில்லை. கொடிய யூதர்கள் கொடூரமாய் என்னை அடிக்கிறார்களே!  என்ன செய்வேன்!  என்ன செய்வேன்!
என் மகனே!  என் மகளே!

நான் இவ்வாறு வேதனைகள் அனுபவிக்க யார் காரணம்?  மாசற்ற என் திருச்சபை இன்று கார் மேகங்களால் சூழப்பெற்று கறை படிந்து விட்டதே அந்த காரணமா?  புனிதமாய் கருதப்பட்ட துறவு வாழ்க்கை நாகரிக போர்வையில் தன்னை மறைத்துக் கொண்டு தடம் மாறி கொண்டிக்கின்றதே அந்த காரணமா?  ஏழ்மையிலும் எளிமையிலும் வாழ்ந்தவன் நான். உங்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றது?  எனக்காக உலக வாழ்க்கையை அர்ப்பணித்த நீங்கள் என்னை பின் தொடர்ந்து வரக்கூடாதா?  நான் விரும்பும் பணிகளை நீங்கள் செய்வதில்லை. என்னை வருத்தும் வேதனைகள் போதாதா?  எப்பொழுது சிலுவையை இறக்கப் போகிறீர்கள்?

ஜெபம்
இயேசுவே!  நாங்கள் தடம்மாறி தவறி விழும்பொழுதெல்லாம் எம் மனதிற்கு விளக்காய் உம் வார்த்தைகளையும், எம் காயத்திற்கு மருந்தாய் உம் ஆவியையும் அனுப்பி எம்மை தூக்கி நிறுத்தும். உம்மை கீழே விழவைக்கும் பாவங்களை நாங்கள் செய்யாதிருக்கும் துறவு வாழ்க்கையின் தூய்மையை உணர்ந்து வாழ வரம் தாரும்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

எட்டாம் நிலை - இயேசு எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகின்றார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்பு பிள்ளைகளே!
இது என்ன அழுகை சத்தம்?  எருசலேம் பெண்கள் என் இழிநிலை கண்டு கண்ணீரும் கம்பலையுமாய் அழுது கொண்டு வருகின்றனரா?  பெண்கள் இரக்கக் குணம் உடையவர்கள் அல்லவா? பூவினும் மென்மையான இதயம் படைத்தவர்கள் அல்லவா?  அதனால் தான் நான் படும் பாடுகளை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை போலும். பெரும்பாடுள்ள பெண்ணை குணமாக்கியது, பல்லாயிரம் பேருக்கு உணவு அளித்தது, விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்னை கயவர்களிடமிருந்து காப்பாற்றியது, உடல் ஊனமுற்ற பெண்ணை குணப்படுத்தியது பேதுரு மாமியாரை குணப்படுத்தியது, தொழுநோயாளிகளை குணப்படுத்தியது இறந்து போன சிறுமியை உயிர்ப்பித்தது போன்ற எனது செயல்களை நேரில் கண்டவர்கள் அல்லவா அவர்கள். நீதிமான் ஒருவருக்கு அநீதியாக தீர்ப்பிடப்பட்டுள்ளதை எண்ணி மார்பில் அடித்துக்கொண்டு அழுகின்றனர். என் தாயிடம் கூட பேசாத நான் அவர்களுக்கு ஆறுதல் கூறாமல் இருக்க முடியவில்லை. எருசலேம் பெண்களே! எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் பச்சை மரத்திற்கு இந்த நிலை என்றால் பட்டமரத்திற்கு?

என் அன்புச் சகோதரிகளே?
கருவிலேயே உங்கள் குழந்தைகளுக்கு கல்லறை கட்டும் இழி நிலைக்காக அழுங்கள். வரதட்சனை கொடுமையால் எரிக்கப்படும் இளம் பெண்களுக்காக அழுங்கள். வரதட்சனை கொடுக்க முடியாமல் திருமணம் ஆகாது முதிர் கன்னிகளாக வாழும் பெண்களுக்காக அழுங்கள். நாகரிகம் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகனுக்காக, மகளுக்காக அழுங்கள். பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக இருக்காதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு பாவச்செயலும் என் இதயத்தை கிழித்து வேதனைப்படுத்துகிறது என்பதை மறவாதீர்கள். நான் வேண்டுவது பரிதாபக் கண்ணீர் அல்ல மனமாற்றக் கண்ணீர்.

ஜெபம்
நாங்கள் பாவத்தில் விழும் போதெல்லாம் உம்மை கசையால் அடித்து காயப்படுத்துக்கின்றோம் என்பதை உணர்ந்து மனஸ்தாபக் கண்ணீர் சிந்தி மனமாற வேண்டுகின்றோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

ஒன்பதாம் நிலை - இயேசு மூன்றாம் முறை தறையில் விழுகின்றார்.

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்பு பிள்ளைகளே!
நான் ஒரு முறை இருமுறை மூன்று முறை மட்டும் விழவில்லை பல முறை விழுந்து விட்டேன். குற்றுயிரும் குலை உயிருமாய் சிதைந்துள்ள உடல் பலவீனத்தால் மட்டும் நான் விழ வில்லை. நீங்கள் செய்யும் ஒவ்வொரு பாவச்செயலாலும் விழுகின்றேன். கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு தந்தை உனக்களித்த பத்துக் கட்டளைகளை கடைபிடிக்காமல் வாழ்கிறீர்களே!  அப்பொழுதெல்லாம் நான் விழுகின்றேன். நாளும் கிழமையும் பார்த்து பிற தெய்வங்களை வழிபடுகின்றீர்களே!  அப்பொழுது நான் விழுகின்றேன். என் தந்தை பெயரால் பொய்யாணை இட்டு, பிறரை சபித்து வாழ்கிறீர்களே! அப்பொழுது விழுகிறேன். தந்தையையும் தாயையும் காப்பாற்றாது அலைகழித்தும், கொலை செய்து கொள்ளையடித்து மாற்றானின் மனைவி மீது மோகம் கொண்டு, பிறரை வஞ்சித்து செல்வம் சேர்த்து மற்றவரை அழ வைத்து நீ சிரித்து வாழ்கின்றாயே அப்பொழுதெல்லாம் நான் விழுகிறேன் என்பதை அறிவாயா?  எப்பொழுது என்னை எழுந்து நிற்கச் செய்யப்போகிறாய்?

ஜெபம்
அன்பு இயேசுவே அகந்தையில் விழுந்து ஆணவச் செயல்களில் நாங்கள் ஈடுபடாமல் நீர் எமக்காக சிந்திய இரத்ததால் பாவக்குழியிலிருந்து எழுந்து உமது அன்பின் அரவணைப்பில் நாங்கள் வாழ நீர் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

பத்தாம் நிலை - இயேசுவின் ஆடைகள் களையப்படுகின்றன.

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்பு பிள்ளைகளே!
விழுந்தும் எழுந்தும் தவழ்ந்தும் இதோ நான் மரிக்கப்போகும் கல்வாரி மலையை அடைந்துவிட்டேன். கொடூர யூதர்களின் அடுத்த செயல் ஆரம்பமாகிவிட்டது. கசையடியால் உண்டான காயங்களோடு ஒட்டிக் காய்ந்திருந்த என் ஆடைகளை உரித்து இழுக்கின்றனர். ஐயோ கசையடி பட்டபோது உண்டான வேதனையை விட இப்பொழுது என் உடலின் சதைகள் கிழிந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறதே!  நான் என்ன செய்வேன்?  அன்பு, அமைதி, கருணை, இரக்கம், இன்பம் என்னும் ஆடைகளை இவ்வுலகிற்கு அளித்த நான் இன்று ஆடையின்றி அவமானச் சின்னமாய் கூனிக் குறுகி நிற்கின்றேன் யாருக்காக?  எருதின் புண் காக்கைக்கு தெரியுமா?  என்னை நிர்வாணமாய் நிற்க வைத்துவிட்டு என் ஆடையை யார் எடுத்துக் கொள்வது என சீட்டு போட்டு பார்க்கிறார்கள். தந்தையே என் வேதனையை கண்ணோக்கிப் பாரும்.

என் சகோதரனே!  சகோதரியே!  உங்கள் உடல் தூய ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?  காமக்களியாட்டங்களால் உங்கள் ஆலயத்தை குப்பைத் தொட்டியாக்கிவிட்டீர்களே!  பெண்களே அரைகுறை ஆடையணிந்து அடுத்தவரின் காமக் கண்ணோட்டத்திற்கு ஆளாகி நிற்கிறீர்களே!  இது அவமானம் இல்லையா?  தகாத உடலுறவு கொண்டு தீராத வியாதிகளை பெற்று உலகினரால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர்களே!  ஏன் இந்த அவலம்?  மனைவியை தவிர மற்றவரை சகோதரியாக, தாயாக, தங்கையாக நோக்குங்கள். பெண்களே, உங்கள் கணவனைத் தவிர மற்ற ஆண்களை தந்தையாக சகோதரனாக எண்ணுங்கள். பார்வை தெளிவுடையதாக இருந்தால் உங்கள் வாழ்க்கை பூஞ்சோலையாய் புனிதமடையும்.

ஜெபம்
எங்களுக்காய் ஆடையிழந்து அவமானச் சின்னமாய் உருகுலைந்த இயேசுவே என் உடல் நீர்; வாழும் இல்லம் என்பதை உணர்ந்து தகாத எண்ணங்களுக்கும்  செயல்களுக்கும் இடம் கொடாத நல்ல மனத்தைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

பதினொன்ராம் நிலை - இயேசுவை சிலுவையில் அறைகின்றார்கள்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்பு பிள்ளைகளே!
இரக்கமற்ற யூதர்கள் எனக்களித்த வேதனையின் இறுதிக்கட்டம். சிலுவை மரத்தினிலே என் கைகளை விரித்து படுக்க வைத்து எனது கைகளிலும் கால்களிலும் கூர்மழுங்கிய ஆணிகளில் அடி மேல் அடி அடித்து துளைத்தபோதும் தங்களது வெறி அடங்காமல் எனது காயங்களைப் பெரிதாக்கி இன்பம் காண்கின்றனர். அங்கங்கள் பிசகி சதை கிழிய மூட்டுகள் முறிய நரம்புகள் தெறிக்க இரத்த நாளங்கள் அறுந்துபோக இரத்தம் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. மூன்று ஆணிகளிலே என் உடல் தொங்கிகொண்டிருக்கின்றது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என் உடல் வேதனையால் துடிக்கிறது. உங்கள் மீது கொண்ட அன்பினால் இந்த கொடூர வேதனையை அனுபவிக்கின்றேன். நீங்கள் செய்த பாவங்களுக்கு நான் பரிகாரப் பழியானேன். கல்நெஞ்சம் கொண்ட யூதர்கள் இதோ இரண்டு கள்வர்களுக்கு இடையே என்னை நிறுத்திவிட்டனர். சிலுவையில் தொங்கும் என்னை பாருங்கள். 

என் மகனே!  மகளே!  மனித உயிர்களுக்கு இன்று மதிப்பில்லை. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் தீவிரவாத தன்மையினால் மனிதர்கள் தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு மாய்ந்து போகின்றனர். மனிதனின் உடலில் ஓடவேண்டிய இரத்தம் வீதிகளிலே ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. அன்று கல்வாரியில் ஓடிய இரத்ததிற்கு பரிகாரமா?  ஏன் இந்த அவலம். மனிதனே மனம் திரும்புவாயா?

ஜெபம்
என் அன்பு இயேசுவே!  அவமானச் சின்னமாய் சிலுவையிலே அறையுண்டு அதை புனிதப்பொருளாக மாற்றினீரே. அந்த திருச்சிலுவையின் மகிமையினால் வல்லமையினால் நாட்டில் நிலவும் தீயச்சக்திகள் அழிந்தொழிய அருள்தாரும் அப்பா.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

பன்னிரெண்டாம் நிலை - இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

என் அன்பு பிள்ளைகளே!
உச்சி வெயில், தாகத்தினால் தவித்து தண்ணீர் தண்ணீர் என்று கேட்கிறேன். புளித்த திராட்சை ரசத்தை கடற்பஞ்சில் தோய்த்து இதோ என் வாயில் வைக்கின்றனர். மற்றவர்களை இவன் காப்பாற்றினானே!  இப்பொழுது தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் என்று ஏளனமாய் கூக்குரல் இடுகின்றனர். அருகில் இருந்த ஒரு கள்வன் நீ மெசியா தானே!  உன்னையும் காப்பாற்றி எங்களையும் காப்பாற்று என்கிறான். மற்றவன் ஒரு குற்றம் செய்யாத இவரை ஏன் பழிக்கின்றாய் என்று கடிந்து, என்னை நோக்கி நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும் என்று கூறுகிறான். கடைசி நேரத்தில் தன் பாவத்தை உணர்ந்த நல்ல கள்வன். இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பான். இதோ சிலுவையின் அடியில் யார் நின்று கொண்டிருப்பது?  என் அன்பு தாய் அல்லவா!  மகனே!  மகனே!  என்று கதறும் குரல் என் காதில் ஒலிக்கின்றது. அருகே என் அன்புச் சீடர் அருளப்பர். அம்மா இவரே உன் மகன் என்று அருளப்பரிடம் ஒப்படைத்துவிட்டேன். சீடரிடம் இவரே உன் தாய் என்று ஒப்படைத்துவிட்டேன். அவருக்கு மட்டுமல்ல என் அன்புத் தாய் உங்கள் அனைவருக்கும் தாய்தான். ஐயோ!  வேதனை தாங்க முடியவில்லை. என் கடவுளே!  என் கடவுளே!  ஏன் என்னை கைவிட்டீர். இதோ உன் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன். என்ற அபயக் குரல் தந்தையின் காதுகளில் ஒலித்துவிட்டது. இதோ என் தந்தை இருகரம் நீட்டி என்னை அழைக்கிறார். நான் என் தந்தையிடம் செல்கின்றேன் எல்லாம் நிறைவேறிற்று.

ஜெபம்
பிற்பகல் மணி மூன்று, வானம் இருள கோயில் திரைச்சிலை கிழிய, இயேசுவின் தலை சாய்ந்துவிட்டது. எமக்காக பிறந்து, எமக்காக வாழ்ந்து, எமக்காக மரித்த இயேசுவே, இந்த உலகம், உடல், அலகை ஆகியவற்றை எதிர்த்து நிற்க ஆற்றல் தாரும். எங்கள் மரணவேளையில் என் மீது இரக்கமாயிரும். பரகதியில் உம்மோடு வாழ வரம் தாரும்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

பதிமூன்றாம் நிலை - தாயின் மடியிலே இயேசு

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

அன்புடையோர்களே!
பெற்ற தாயின் மடியிலே பிணமாய் கிடக்கிறார் இயேசு!  பெற்ற வயிறு பற்றி எரிகிறது. பிள்ளையின் கோலம் கண்டு மகனே!  பூரண நிலவாய் ஒளிர்ந்த உன் திருமுகம் எங்கே?  கருணை பொழியும் உன் கண்கள் எங்கே?  எளியோர்க்கு உதவிட ஓடிவரும் உன் கால்கள் துவண்டு விட்டதா?  ஏழைகளை அன்போடு அரவணைத்த உன் கரங்கள் ஓய்ந்துவிட்டதா?  இந்தக் கோலத்தைக் காணவா உன்னை பெற்றெடுத்தேன். என் கண்ணே!  என் மணியே!  கண் திறந்து என்னை ஒரு முறை பார்க்க மாட்டாயா?  கதறுகிறார் அன்னை மரியாள். எல்லாம் முடிந்துவிட்டது. அன்னையின் ஏழாவது வியாகுலம் அரங்கேறி விட்டது.

ஜெபம்
அன்னை மரியே!  வியாகுல மாதாவே!
அன்று ஆபேலின் இரத்தம் முதல், இன்று வரை இப்பூமியை நனைத்த அத்தனை மாசற்ற மனிதர்களின் இரத்தத்திற்காய் மனமுருகி உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம். எங்கள் மூதாதையர் செய்த பாவங்களுக்காகவும் நாங்கள் செய்யும் பாவங்களுக்காகவும் எங்களை மன்னியும். நாங்கள் பாவக்குழியில் விழுந்து நித்திய நரகத்திற்குச் செல்லாதிருக்க உமது அன்புத் திருமகனிடம் வேண்டிக்கொள்ளும்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

பதினான்காம் நிலை - இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்.

திவ்விய இயேசுவே!  உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

அன்புடையோர்களே!
இயேசுவின் சீடர்களாய் இருந்த யோசேப்பும் நிக்கேதேமு என்பவரும் தூய வெள்ளைத் துணியால் இயேசுவின் உடலைச் சுற்றி நறுமணப் பொருள்களைத் தூவி, அருகே இருந்த புதிய கல்லறையில் அடக்கம் செய்து, அதன் மேல் ஒரு கல்லை வைத்து மூடிச்சென்றனர்.  “நரிகளுக்கு வளைகள் உண்டு. குருவிகளுக்கு கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்று இதோ தலை சாய்த்து உறங்கிவிட்டார். 

ஜெபம்
நாங்கள் வாழ்வு பெறும் பொருட்டு உமது உயிரை எங்களுக்காக கொடுத்த நல்ல ஆயனே. அன்பின் கட்டளை எமக்கு கொடுத்த இறைவா. அயலாரை அன்பு செய்யும் நல்ல உள்ளத்தை தாரும். பிறருக்காக வாழும் தியாக உள்ளத்தை தாரும். அனாதைகள் ஆதரவற்றோர் நோயுற்றோர் துயருற்றோர் இவர்களை தேடிச்சென்று ஆதரவு கரம் நீட்டும், உள்ள உறுதியை தாரும். எங்கள் நிம்மதியை இவ்வுலகின் மாயைகளில் தேடாமல் உயிருள்ள உமது வார்த்தைகளில் தேட வரம் தாரும். எங்கள் இதயத்தின் எண்ணங்கள் ஏக்கங்கள் விண்ணப்பங்கள் உமது பாதத்தில் வைக்கின்றோம். உமது சித்தம் எங்களது பாக்கியம். உமது சிலுவை பாடுகளில் பங்கேற்ற நாங்கள் நிலையில்லா இவ்வுலக வாழ்வை நாடாமல் நித்திய வாழ்வை நாடிச்செல்ல அருள்புரியும். ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்.

விசயவல்லி திரு இருதய மருத்துவமனை