உத்தரியம் - அன்னையின் இரக்கத்தின் ஆடை
உத்தரியம் அணிந்துள்ள ஒவ்வொருவரும் புனித சைமன் ஸ்டாக் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அணிந்துள்ள உத்தரியத்தில் காணப்படும் படத்தில் இருந்து (தேவதாயுடன் காணப்படுபவர்) நீங்கள் ஏற்கனவே அவரை அறிந்திருக்கலாம். தேவதாயாரின் மிகவும் பிரியமான, மறக்க முடியாத நண்பர்களில் ஒருவர் புனித சைமன் ஸ்டாக்.
இவருக்குத் தான் நமது தேவதாயார் கி.பி. 1251 ஆம் ஆண்டில் அதி முக்கியத்துவம் வாய்ந்த உத்தரிய வாக்குறுதியினை அளித்தார்கள். அதன்படி, “இந்த உத்தரியத்தினை அணிந்து இறப்பினை எதிர்கொள்ளும் எவரும் நித்திய நெருப்பினுள் (நரகத்தில்) வேதனைப்பட மாட்டார்கள்.” என உறுதி அளித்தார்கள்.
நம்முடைய காலக்கட்டத்தின், மனித அறிவுக்குப் புலப்படாத பரம இரகசியங்களில் ஒன்றும், மிகச் சிறந்ததுமான பரிசுத்த கன்னி மாமரியின் இந்த பரலோக வாக்குறுதியினை பெரும்பாலான கத்தோலிக்கர்கள் முற்றிலும் புறக்கணித்தோ, ஏற்றுக்கொள்ளாமலோ அல்லது முழுவதும் மறந்தே போய் விட்டனர் என்றே கூறவேண்டும்.
பரிசுத்த கன்னி மாமரி மேலும், “உத்தரியத்தினை பக்தியுடனும், விடாமுயற்சியுடனும் எப்பொழுதும் அணிந்திருங்கள். இது என்னுடைய இரக்கத்தின் ஆடை. இதனை நீங்கள் அணிந்திருப்பதன் பொருள் என்னவெனில், நீங்கள் எப்பொழுதும் என்னை குறித்து சிந்திக்கின்றீர்கள். அதக்குப் பதிலாக, நானும் உங்களையே நினைத்துக்கொண்டு, உங்களுக்கான நித்திய வாழ்வினை உறுதி செய்ய உழைத்துக்குக் கொண்டிருக்கின்றேன்.” என மொழிந்தார்கள்.
புகழ் பெற்ற சேசு சபையினைச் சேர்ந்த, புனித மார்க்ரீத் மாரியம்மாளின் ஆன்ம குருவானவருமான புனித கிளாட் தே கொலம்பியர் மிக முக்கியமான கருத்தொன்றினை அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றார். அவர்,” பரிசுத்த கன்னித் தாயாரிடம் நாம் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்தும் பக்தி முயற்சிகள் ஏராளமாய் உள்ளன. அவையனைத்தும் தேவதாயாரை ஒரேவிதமாக மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அதனால் அந்த பக்தி முயற்சிகள் ஒவ்வொன்றும் நமது நித்திய வாழ்வினை நோக்கிய பயணத்தில் நமக்கு ஒவ்வொரு விதமாக உதவுகின்றன. ஆனால் பழுப்பு உத்தரிய பக்தி முயற்சியானது அனைத்திலும் மேலானது என ஒரு கணமும் தாமதிக்காமல் என்னால் கூறமுடியும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர்,” எண்ணிலடங்கா அற்புதங்களின் வாயிலாக உறுதி செய்யப்பட்ட உத்தரியத்தினைப் போன்று வேறு எந்த பக்தி முயற்சியும் இல்லை” என்று பதிவு செய்கின்றார்.
***பாவ வாழ்வில் இருந்து மனம் திரும்பி உத்தரிய மாதாவின் வாயிலாக நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து மரித்த பெண்மணி***
சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரு மிகச் சிறிய பங்கில் வாழும் செபமாலை இயக்கம் நடத்திய ஒரு நாள் செபமாலை தியானத்தின் போது, ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். அவர் அனைத்து பிரசங்கங்களையும் கவனமாக கேட்டு, கேள்வி நேரத்தில் சரியான பதில்களைச் சொல்லி மிகவும் அருமையான முறையில் பங்கெடுத்தார்.
நமதன்னையின் உத்தரியத்தின் மகிமைகள் குறித்த தலைப்பில் மக்களுக்கு உத்தரியத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டு, மதியம் ஒரு மணியளவில் அனைவருக்கும் குருவானவர் உத்தரியம் அணிவித்தார். அதில் அந்த பெண்மணியும் அடங்குவார்.
மதியம் ஒன்றேகால் மணியளவில் ஊரே ஒரே களேபரமானது, கோவிலில் துக்கமணி அடித்துள்ளார்கள். என்ன? ஏது? என்று விசாரித்ததில் அந்த பெண்மணி இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். அப்போது குருவானவரின் சமையல்கார பெண்மணி அவர்களிடம் அந்த பெண்மணி குறித்த சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இறந்து போன அந்த பெண்மணி, ஊரில் அனைவருடனும் சண்டை போடுவது, யாருடனும் சண்டை என்றால் அவர்களுக்கு செய்வினை செய்வது என்று இருந்துள்ளார். அனைத்திற்கும் மேலாக தனது மருமகளை ஐந்து ஆண்டுகள் வாழாவெட்டியாக மகனிடம் இருந்து பிரித்து வைத்துள்ளார்கள்.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக, கோவிலில் செபமாலை சொல்லும்போது கடைசி பத்து மணிகளை யாருக்கும் கொடுக்காமல் அவர்கள் சொல்லி வந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, உத்தரியம் அணிந்த அன்று உடனடியாக பகுத்தந்தையிடம் சென்று பாவசங்கீர்த்தனம் செய்துள்ளார்கள். உடனடியாக தனது மருமகளின் வீட்டிற்கு சென்று அவளது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, தனது மகனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கேயே விழுந்து உயிர்விட்டுள்ளர்கள்.
***சிந்தனை***
“எனது உத்தரியம் அணிந்து மரிக்கும் எந்த ஆன்மாவும் நரகத்திற்கு செல்லாது” என்று நமது கார்மேல் அன்னை, தனது அன்பு ஊழியன் 1251, ஜூலை 16 ஆம் நாள் புனித சைமன் ஸ்டாக்கிற்கு வாக்குறுதி அளித்தார்கள். இந்த வாக்குறுதி நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அன்னையின் வாக்குறுதி பொய்க்காது என்று நம்பிய எண்ணற்ற அன்னையின் குழந்தைகள் உத்தரியம் அணிந்து விண்ணக வாழ்வினைப் பெற்றனர்.
உத்தரியம் என்பது பொதுநிலையினரை, கார்மல் அன்னையின் சபையில் சேர்க்க அவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு அடையாளமாகும். இது கார்மல் சபையின் துறவியர்கள் அணியும் அங்கிக்கு ஒப்பாகும். இதனை அணியும் ஒவ்வொருவருக்கும் மரண வேளையில் அன்னை துணையாக வந்து நல்ல பாவ மன்னிப்பு பெறுவதற்கு உதவுவார்கள். அதன்மூலம் அவர்கள் விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்வார்கள்.
ஒவ்வொருநாளும் நமது உத்தரியத்தை பக்தியோடு அணிந்து கொண்டால் நமதன்னை நம்மோடு கூட இருந்து எல்லா பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பார்கள். அனைவரும் உத்தரியம் அணியலாம். இதனை எப்பொழுதும் அணிந்து கொண்டே இருக்க வேண்டும். வேண்டுமென்றால் குளிக்கும் பொது இதனை கழற்றலாம்.
முதன்முறையாக அணியும் பொது அதற்கான செபத்தை குருவானவர் செபித்து அதனை மந்தரித்து அவரது கரங்களால் அணிந்து விடவேண்டும். ஒருமுறை குருவானவர் முன்னிலையில் அணிந்த அன்பர்கள் உத்தரியத்தை புதுப்பிக்கும் வேளையில், மீண்டும் குருவானவர் முன்னிலையில் அணிய வேண்டும் என்று அவசியமில்லை. தாங்களே அன்னையின் முன்னிலையில் புதிய உத்தரியத்தை அணிந்து கொள்ளலாம்.
நாமும் குருவானவரிடம் சென்று உத்தரியம் அணிந்து கொண்டு உத்தரிய அன்னையின் பாதுகாப்பில் வருவோமாக.. ஒவ்வொரு நாளும் அதனை பக்தியுடன் முத்தி செய்து வண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்வோமாக....,
சேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!!!!!
நன்றி : சகோ. ஜெரால்ட்..