"ஆண்டவரே, நான் என்ன செய்யும்படி விரும்புகிறீர்?'' (அப்.நட.9:6).
"என் இஷ்டம் போல் செய்ய விட்டுவிடு'' (அர்ச். மார்கரீத் மரியம்மாளுக்கு ஆண்டவர் சொன்னது).
இன்று சாயந்திரம் நீங்கள் துவக்கப் போகிற தியானம் சாதாரண தியானங்களில் ஒன்றல்ல. இது அப்போஸ்தலர்களுக்கு உரியது. ஆதலால் சிருஷ்டிகள் என்ற முறையில் உங்களுடைய கடைசி முடிவு என்னவென்பதைப் பற்றியோ, அல்லது நித்தியத்தைப் பற்றியோ, நரகத்தைப் பற்றியோ உங்களுக்கு ஒன்றும் சொல்லப் போவதில்லை. திவ்ய இஸ்பிரீத்துசாந்துவின் விசேஷ ஏவுதலால் ஒரு விசேஷ கருத்துக்காக இங்கு கூடியிருக்கிறீர்கள். நமது ஆண்டவருக்கு முன்னோடிகளாயிருந்து, அவரது வழிகளை ஆயத்தம் செய்யத் தகுதி யுள்ளவர்களாகவும், திரு இருதய அப்போஸ்தலர்களின் அலுவலைப் பயின்றுகொள்வதற்காகவுமே இங்கு வந்திருக்கிறீர்கள். ஸ்நாபக அருளப்பரைப் போல் நீங்களும் அன்பின் அரசருக்கு வழியைச் செப்பனிட வேண்டும்; இதற்காக முதன்முதல், ""அவர் வளரும்படி'' நீங்கள் குறுகிச் சிறியவர்களாகி மறைந்து போவது எவ்விதமென்று படித்தறிவது அவசியம். இவ்வாறு செய்வதால், ஜீவியத் தண்ணீர் சுரக்கும் ஊற்றாவீர்கள். அப்போது, மற்றவர்களின் ஆத்துமங்கள் பலன் கொடுக்கச் செய்வதும், அவர்களை நித்திய ஜீவியத்துக்கு உயர்த்துவதும் உங்கள் அலுவல் ஆகும்.
உங்கள் மனதைக் கவர்ந்துகொண்டிருக்கக் கூடிய ஆயிரக் கணக்கான அற்ப விருப்பங்களையெல்லாம் அறவே அகற்றி விட்டு, சகலத்தையும் நிதானித்து மதிப்பதில் சாதாரணமாயுள்ள மனித முறையைக் களைந்து விட வேண்டியது முதன்மையான காரியம். இது மிகக் கடினமான வேலையாயிற்றே என்று கலங்க வேண்டாம். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்கிற வரப்பிரசாதத்தோடு உங்கள் நல்ல மனது ஒன்றித்திருக்குமேயாகில், வரப்பிரசாதமே இந்த வேலையை உங்களுக்குச் செய்து கொடுக்கும்.
நம்மை அர்ச்சிக்க வேண்டுமென்ற ஆசை நமக்குண்டு. ஆனால், நாமே தெரிந்துகொண்ட வசதியான ஒரு முறையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வதுதான் நமக்கு இயல்பு. அர்ச்சிய சிஷ்டவர்களாக நாம் ஆசிக்கிறோம். ஆனால் நமது சொந்த முறை யில், நமக்குப் பழக்கமான பாதையில் நடந்துகொண்டே அர்ச்சிய சிஷ்டவர்களாக வேண்டுமென்று விரும்புகிறோம். இது சரியல்ல. ஒரே உறுதியாய், தெய்வீக வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வழி சேசுநாதரே. அவரே உண்மையான மனித அவதாரமான ஜீவியமுமாயிருக்கிறார். நமது மனதின் கற்பனைகளும், தீர்மானங் களும் ஞான வெளிச்சம் என்றெண்ணி, அவைகளைக் கொண்டு உத்தமதனம் அடையலாம் என்று சில சமயங்களில் எண்ணினோம். அந்த எண்ணம் நிறைவேறவில்லை, பலிக்கவில்லை. என்ன செய்வது? ""என் இஷ்டம்போல் விட்டுவிடு'' என்று அர்ச். மார்கரீத் மரியம் மாளுக்கு சேசுநாதர் பதிலுரைத்தார். அர்ச். தெரேசம்மாளுக்கு, ""நீ உன் மன விருப்பத்தின்படியல்ல, என் வழியைப் பின்பற்றியே அர்ச்சிய சிஷ்டவள் ஆவாய்'' என்று சொன்னார். ஆதலால், உன் உள்ளத்தைப் பரிசோதனை செய்து, நீ மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர் களால் நேசிக்கப்பட வேண்டுமென்று விரும்பும் சேசுநாதரால் உன் ஆத்துமம் நிரப்பப்படுவதற்குத் தடையாயிருப்பது என்ன, எது எதை அப்புறப்படுத்த வேண்டுமென்று ஆராய்ந்து பார்.
ஆனால் பெரும்பாலும் சுயபிரியத்தால் உண்டாகிற மித மிஞ்சிய பயமின்றி, யாதொரு கலவரமுமின்றி, அமைதியாய் இந்த ஆத்தும சோதனை செய். தன்னை அறிகிற தாழ்ச்சி, சமாதானம் என்ற பலனைக் கொடுக்கும்; அது தனது பயனாக நம்மை நாம் நன்றாக அறியச் செய்து, அதிகத் தெளிவைக் கொடுக்கும்.
சிறுபிள்ளை தன் தாயிடம் சொல்வது போல், ""சேசுவே, பாரும், இதோ ஒரு மாசு, அங்கே ஒரு மரு, வேறொன்று அதோ இருக்கிறது. நான் அறிவதை விட உமக்கு எனது குறைகள் எல்லாம் தெரியும். தேவரீர் அவைகளை முற்றிலும் சரியாய்த் திருத்தக் கூடும்'' என்று சொல். அர்ச். மார்கரீத் மரியம்மாளின் சிரேஷ்டர் அவளுக்கு சேசுநாதர் கொடுத்த அலுவல் தமதென்று காட்டும் அத்தாட்சியாகத் தமக்கு உடல்நலத்தை அளிக்க வேண்டுமென்று கேட்கக் கட்டளை யிட்டபோது, சேசுநாதர் சொன்ன மறுமொழியையே அவர் உனக் கும் சொல்வார்: ""இப்போது நீ என் பராமரிப்பில் ஒப்படைக்கப் பட்டிருப்பதால், என் பராமரிப்புக்குக் கையளித்தவளிடம் உன்னைப் பூரண சுகத்துடன் அனுப்பி வைப்பது என் சித்தம்'' என்று சொல்வார். தியான காலத்தில் இப்போது அவருடைய பராமரிப்பில் முழுவதும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறீர்கள். வியாதிப்பட்டு இங்கு வந்திருக் கிறீர்கள். ஆனால் பயப்பட வேண்டாம். அவர் உங்களைக் குண மாக்குவார். அவருடைய விருப்பப்படி செய்ய விட்டுவிடுவதுதான் உங்கள் கடமை. இது இன்றியமையாத நிபந்தனை என்று மறந்து போக வேண்டாம். நீங்களல்ல, அவரே தெய்வீக வேலையைச் செய்வார். அவர் உங்களிடம் கேட்பதெல்லாம், கீழ்ப்படிதல்தான். அவர் உங்கள் உள்ளத்தை வெறுçமாக்கிச் சுத்தப்படுத்தி, உங்கள் இருதயத்தை விளிம்பு வரை நிரப்பும்படி விட்டுவிடுங்கள். அதன்பின் நீங்கள் தாராளமாய்க் கொடுக்கலாம்.
அப்போஸ்தலன் ஆசிரியனாயிருப்பது அவசியம். ஆதலால் தேவ ஞானமும், அர்ச்சியசிஷ்டவர்களுடைய சாஸ்திரமும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டவர் தமது தயாளத்தைக் காட்டி, உங்க ளுக்குப் புத்திக்கூர்மை, கல்வியறிவு ஆகிய நாணயங்களை அளித் திருந்தால், அவருக்கு நன்றி கூறி இந்தக் கொடைகளை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்துங்கள். ஆனால் மனித சாஸ்திரத்தில் உங்கள் நம்பிக்கை ஊன்றியிருக்கலாகாது. சகலத்துக்கும் மேலாக, முதன்முதலில் தேவ ஞானத்தைத் தேடுங்கள். அது அர்ச். சின்னப்பர் சொல்வது போல், ""நான் சேசுக்கிறீஸ்துநாதரை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் அறிந்தவனாயிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை'' (1கொரி.2:2) என்றதில் அடங்கி யிருக்கிறது. சேசுநாதரை அறிவது ஒன்றே மெய்யான, பயனுள்ள ஏக அறிவு.
இந்நாட்களில் பற்றுதலுடன் அவரைத் தேடுங்கள். நற்கருணைப் பேழையில் அவரை நாடிப் போங்கள். இவ்விடத்தில் எஜமானர் ஓர் அடி தூரத்தில்தான் இருக்கிறார்; உங்கள் கண்கள் அவரைப் பார்த்தபடி இருக்கட்டும். அவரே ஒளி, உங்கள் இருதயங்கள் அவரது தெய்வீக இருதயத்திற்குச் சமீபமாய்ப் போகட்டும். அவரை அறிவதற்கான விலைமதிக்கப்படாத வரத்தை உங்களுக்குக் கொடுக்கும்படி அவரைக் கேளுங்கள்.
இந்த அறிவின் பயனாக, விசுவாச நோக்கமும், சிநேகப் பற்றுதலும் உண்டாகும்; அநேகர் தேடுகிற வெறும் உணர்ச்சிக்குரிய சிநேகமல்ல, ""மரணத்தைப் போல வல்லபம் பொருந்திய'' சிநேகம், சுய பரித்தியாகத்துக்கு வழியான சிநேகம். நமது சொந்தப் பரிசுத்த தனத்தைச் சார்ந்த விஷயங்களிலும், நமது அப்போஸ்தலத்துவத் திலும், பரித்தியாகக் குணத்தை உண்டுபண்ணுகிற சிநேகம் அது.
சேசுநாதரை உறுதியாய், தத்தளிப்பின்றிச் சிநேகியுங்கள். சகலத்திலும் அவரது திருச்சித்தத்துக்கு ஒத்து நடங்கள். சேசுநாதரைத் தாராளமாய்ச் சிநேகியுங்கள். அப்போதுதான், மற்றவர்களும் அவரை நேசிக்க வேண்டிய வண்ணம் நேசிக்கும்படி தூண்டலாம். நம்பிக்கையுடன் அவரை நேசியுங்கள், அதாவது பின்னிட்டுப் பார்க் காமல், அவரது தயாளத்தில் நம்பிக்கையையும், சிநேகத்தையும் அழித்துப் போடுகிற பயமும், சந்தேகமும் இல்லாமல் நேசியுங்கள்.
சிநேக மயமான சர்வேசுரனிடம் உங்களை ஒப்படையுங்கள். உங்கள் பலவீனத்தில் ஊன்றி நிற்பதை விட, அவரது சிநேகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பீர்கள் என்றால், அவர் உங்களைக் கொண்டு மகத்தான காரியங்களைச் செய்து முடிப்பார். அவர் சேசுநாதர், ஆதலால் கண்ணை மூடிக் கொண்டு அவரை நம்புங்கள். அச்சமின்றி, சந்தேகமின்றி நம்புங்கள். சேசுநாதர் ஒருவரே வாழ்வு என்று நம்புங்கள். அந்த சேசுநாதர் உங்களிடமாய் ஒன்றித்து வாழ்வதே அர்ச்சியசிஷ்டதனம்.
அவரோடு வாழுங்கள், அவரோடு ஒன்றித்திருங்கள். இந்தத் தியானத்தின் நோக்கம் இதுதான்.
அவர்தாமே அர்ச். மார்கரீத் மரியம்மாளிடம், ""என் சிநேகத்துக்குச் சகல இருதயங்களையும் இழுத்துக்கொண்டு வருவதில், நீ கீழ்ப்படிதலுள்ள கருவியாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று சொன்னார். மேலும், ""என் தெய்வீக இருதயமானது, மனிதர் மட்டிலும், விசேஷமாய் உன்மட்டிலும், சிநேகத்தால் பொங்கி நிற்கிறது. அதன் சிநேக அக்கினிச் சுவாலையைத் தனக்குள் அடக்கிக் கொள்ள முடியாமல், உன் வழியாக அதை எங்கும் பரப்ப வேண் டியது அவசியம்... உனது தகுதியின்மையையும், அறிவீனத்தையும் பொருட்படுத்தாமல், மகா பெரிய இந்தக் கருத்தை நிறைவேற்று வதற்கு உன்னையே தெரிந்துகொண்டேன். ஏனெனில் இம்முறை யில், எல்லாம் என் வேலையாயிருக்கும். என் இருதயம் வல்லமை யால் நிறைந்திருக்கும் வரை, உனக்கு என் உதவியும் நிறைந்திருக்கும் ... நீ எப்போதும் என் தெய்வீக இருதயத்தின் நேச சீடப் பெண்ணாக இருப்பாய்'' என்று சொல்லியிருக்கிறார்.
இதை வாசிக்கிற அப்போஸ்தலர்களே, பாரே-ல- மோனியாவின் பெரிய அர்ச்சியசிஷ்டவளுடைய அலுவலைத் தொடர்ந்து நடத்துபவர்களே, மதுரமும், உற்சாகமும் நிறைந்த இந்த வார்த் தைகள் உங்களுக்கே சொல்லப்பட்டன என்று எண்ணிக்கொள் ளுங்கள்.
ஆனால் மார்கரீத் மரியம்மாளைப் போல் நீங்கள் ""கீழ்ப்படித லுள்ள கருவிகளா''யிருக்க வேண்டுமானால், நீங்கள் நமது எஜமான ருக்குச் சமீபமாய் நெருங்கி வாழ்ந்து, அவரது இருதயமும் உங்களுடை யதும் ஒரே இருதயமாக வேண்டும். தவறிப்போன நமது நிலைமையில், இது மகா கடினமானது மட்டுமல்ல, அசாத்தியமுமானதால், அவர் தமது ஊழியக்காரியிடமாய்ச் செய்த வண்ணமே, உங்களிடமாகவும் செய்யும்படி அவரைக் கேளுங்கள். உங்கள் இருதயத்தை எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக, ஆராதனைக்குரிய அவரது இருத யத்தை அந்த இடத்தில் வைக்கும்படி சொல்லுங்கள். அவரது தெய்வீக இருதயமும், அகந்தை ஆசாபாசமுள்ள நமது சுபாவமும் ஒன்றித்து உறவாடுவது இயலாத காரியமாயிருப்பதால், அவர் அதைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கிப் போடும்படி சிநேகத்துடன் தைரியமாய் அவரிடம் சொல்லுங்கள். அப்போது, பெரிய அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரைப் போல, ""கிறீஸ்துநாதரே எனக்கு ஜீவன்'' என்று நீங்கள் சொல்லலாம்.
எவ்வித சோதனைக்கும் பின்வாங்காத தாராளகுண அத்தாட்சி இந்த மாற்றத்திற்கு அவசியமாயிருக்க வேண்டிய ஆரம்பம். கொஞ்ச மாவது வரையறையின்றி, உங்களை முழுவதும் நமது ஆண்டவ ருக்குக் கையளித்து விடுங்கள்; அவர் உங்களை அர்ச்சித்து, வாழ்வையும், பரிசுத்ததனத்தையும் நீங்கள் விதைக்கும்படி செய்வார்.
நான் உங்களுக்குப் பிரசங்கிக்கிற சிநேக மனப்பான்மை விஷயமாய் மிகவும் தகுதியான ஒரு காரியத்தை இப்போது நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்: சஞ்சலமும், உபத்திரவமும் வருவிக்கக் கூடிய சகலத்தையும் மறந்து அகற்றிவிட்டு, சந்தோஷ அக்களிப்புடன் மகிமையின் அரசருக்கு ஊழியம் செய்யுங்கள். சேசுவின் திரு இருதய வெளிப்படுத்தலின் மகிமையைத் தியானித்துப் பாருங்கள்.
ஆராதனைக்குரிய அந்த இருதயத்தின் உருக்கமான வார்த் தைகள், விண்ணப்பங்கள், வாக்குத்தத்தங்களின்பேரில் அமைதியாய்ச் சந்தோஷமாய் ஆழ்ந்து யோசியுங்கள். அர்ச். மார்கரீத் மரியம்மாளுடைய வாழ்க்கை வரலாற்றைக் கவனமாய் வாசித்து தியானிப்பீர்கள் என்றால், அது உங்களுக்குப் பெரும் உதவியா யிருக்கும். சிறிய புஷ்பத்தின் வாழ்வும் ஆழ்ந்த கருத்துக்களை உண்டு பண்ணக் கூடிய ஞான வாசகமாகும். அவள் சாமர்த்தியத்தில் அறிஞரைப் போலவும், பேசும் விதத்தில் சிறுபிள்ளையைப் போல வும், பிரமிப்புக்குரிய விஷயங்களை விளக்கிக் காட்டி, மனிதர் இன்னும் அமிழ்ந்து பார்க்காத ஆழத்தைத் தொட்டுக் காண்பித்து, அவள் சேசுவின் திரு இருதயத்தைப் பற்றி இரண்டாம் தடவை நமக்கு வெளிப்படுத்துகிறாள். ஜெபமும் தியானமும் செய்கிற இந்நாட்களில் சேசுவின் திரு இருதய வேதபாரகர் என்றழைக்கப் படும் அர்ச். ஜெர்த்துருத்தம்மாள் இயற்றின நூல்களையும் வாசிக் கும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாய், சர்வேசுரனுடைய மட்டற்ற சிநேகத்தையும், இரக்கத்தையும் தெளிவாய் நமக்குத் தெளிவாக்கிக் காட்டுகிற சுவிசேஷத்தைப் படித்து உங்கள் மனதில் பதிய வையுங்கள். சேசுநாதரே உங்கள் புத்தகமும், சுவிசேஷமுமாயிருப்பாராக! ஆயிரக்கணக்கான அற்பக் காரியங்களை வெகுவாய்க் கவனித்து, தியானத்தின் முக்கியப் பொரு ளான சேசுநாதரைப் பற்றிய அறிவையும் ஆலோசனையையும் அலட் சியம் செய்வதால், எத்தனையோ ஞானத் தியானங்கள் பயனற்றுப் போகின்றன, அல்லது அரைகுறையான பலனளிக்கின்றன! சாதாரண ஜெபங்களை அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லி வர வேண்டு மென்று நான் சொல்லத் தேவையில்லை. பிள்ளைகளைப் போன்ற பாசத்துடன், அதிகமாய் நேசிக்க வேண்டுமென்ற ஆவலுடன், சிநேகிக்கப்படாமலிருக்கிற சிநேகத்தை அதிகமாய் நேசிக்கச் செய்ய வேண்டுமென்று ஆசையுடன் ஜெபியுங்கள்.