கோவா நோக்கிச் செல்வது ஏறக்குறைய முடியாததாயிருந்தது! அத்தனை மக்கள் கூட்டம்! ஒரு இடம் பாக்கியில்லாமல் ரோடு முழுவதும் கும்பல்! ஒரு திடமுள்ள மனிதன் ஜஸிந்தாவைத் தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வழி உண்டாக்கியபடி நடந்தான். மார்ட்டோ, லூஸியா, பிரான்சிஸ் மூவரும் அம்மனிதன் பின்னால் நடந்து சென்றார்கள்.
மழை! ஒரே மழை! 13-ம் தேதி காலையிலிருந்தே அடைமழை பெய்து கொண்டிருந்தது! ஏறக்குறைய எல்லோரும் காலணிகளைக் கழற்றிக் கையில் தூக்கிக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தனர். மழை இவ்வளவு அதிகம் பெய்தாலும், அதற்குச் சற்றும் பின் வாங்காமல் கூட்டம் பெருகிக் கொண்டேயிருந்தது.
கடும் காற்றும் சில்லென்று வீசியது. காற்றாடி இயந்திரங்களின் முரட்டுத் துணிகள் எல்லாம் கிழிந்து தொங்கின. வானம் முழங்கிக் கொண்டேயிருந்தது. மின்னல் வெட்டியது. நடைபெறவிருக்கும் மாபெரும் அற்புதத்தைக் காண இம்மக்களை விசுவாசத்தில் தயாரித்து திடப்படுத்துவது போல இப்பெரும் சோதனை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
மிகுந்த சிரமத்தோடு குழந்தைகள் கோவா தா ஈரியா நிலப் பரப்பை அடைந்தார்கள். அங்கே கண் எட்டுமட்டும் ஒரே ஜனக் கூட்டம்! எங்கும் விரித்த குடைகள், நனைந்த மனிதர்கள்! தரை எங்கும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிலருக்குக் கரண்டை, முழங்கால் வரை தண்ணீர்! தொப்புத் தொப்பலாய் நனைந்த ஆடைகள்! குளிர்! எந்த விதமான செளகரியமும் அங்கு இல்லை. இந்தக் கொட்டும் மழையில் அங்கு வந்திருந்த கூட்டம் குறைந்தது 70,000 (எழுபதாயிரம்!) ஆனால் இன்னும் கூட்டம் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.
நாஸ்திகரும், திருச்சபை எதிரிகளும் ஆங்காங்கே கூட்டமாக நின்றனர். மோட்டார் வாகனங்களுக்குள்ளே அநேக தனவந்தர் மழை படாமல் இருந்தனர். பத்திரிகைச் செய்தியாளர் ஏராளம்! போர்த்துக்கலின் ஏறக்குறைய எல்லாப் பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தனர். போட்டோ படம் எடுக்க காமிராக்களுடன் ஏராளமான பேர் நின்றார்கள். சில குருக்களும் காணப்பட்டனர்.
“தேவதாயைக் கண்ட குழந்தைகளுக்கு வழிவிடுங்கள்” என்று கூறியபடி ஜஸிந்தாவைத் தூக்கி வைத்திருந்த மனிதன் கூட்டத்தில் வழி கண்டுபிடித்து முன்னால் நடந்து கொண்டிருந்தான். அந்த அஸின்ஹேரா மரத்தடிக்கு குழந்தைகள் மூவரும் வந்து சேர்ந்தனர்.
அம்மரத்தைப் பூக்களாலும், வண்ணத் தாள்களாலும் மரிய கொரேய்ரா என்ற பெண் அலங்கரித்து வைத்திருந்தாள். ஒலிம்பியா இன்னொரு பாதை வழியே அவர்களுக்கு முன்பே அம்மரத்தடியில் வந்து காத்திருந்தாள்.
எங்கும் மழையின் இரைச்சலும், அதற்கு மேல் எழும்பி வந்த ஜெபமாலை சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன. எல்லார் மனங்களும், கண்களும் அஸின்ஹேரா மரத்தையும், அதனருகில் இருந்த மூன்று குழந்தைகளையும் நோக்கியிருந்தன.
அஸின்ஹேரா மரத்தருகே முந்திய இரவு முதல் ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு குரு லூஸியாவிடம் தேவ அன்னை வரும் நேரம் எது என்று கேட்டார். “நடுப்பகல்” என்று லூஸியா பதிலளித்தாள். அவர் தன் பைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, “நடுப்பகலாகிறது. தேவதாய் பொய் கூற மாட்டார்கள். பார்ப்போம்” என்றார்.
ஜெபமாலை ஒலி எழும்பியது. “அருள் - நிறைந்த - மரியாயே - வாழ்க - கர்த்தர் - உம்முடனே - பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவள் நீரே...” என்று சொல்லும்போதே...
“எல்லோரும் குடைகளை மடக்குங்கள்” என்று சத்தமாகக் கூறினாள் லூஸியா. மழை ஊற்றிக் கொண்டிருக்கிறது. ஆயினும் இந்தப் பத்து வயதுச் சிறுமியின் குரலுக்கு அக்கூட்டம் பணிந்தது. ஒவ்வொருவராக மளமளவென்று குடைகளைச் சுருக்கிவிட்டு, மழையில் நின்று கொண்டிருக்கிறார்கள்!
ஓரிரு நிமிடங்கள் கடந்தன. “என்ன! மதியம் கடந்து போய் விட்டது! ஒன்றையும் காணோம். இதெல்லாம் மனப் பிரமை” என்று முணுமுணுத்தார் அந்தக் குரு. (மரிய கரேய்ரா என்ற பெண் கூறுவது சரியாக இருக்குமானால்) “போங்கள்” என்று சொல்லி, அவர் குழந்தைகளைத் தம் கையால் தள்ள முயன்றார். ஆனால் லூஸியா திடமாக, “போகிறவர்கள் போகட்டும். நான் போக மாட்டேன். நம் அம்மா எங்களை வரும்படி கூறினார்கள். மற்ற நாட்களில் அவர்களைக் கண்டோம். இப்பொழுதும் அவர்களைக் காண்போம்” என்றாள்.
சுற்றி நின்றவர்களில் சிலர் முறுமுறுக்கும் சத்தம் கேட்டது.
திடீரென லூஸியா, “ஜஸிந்தா, முழங்காலிடு. அம்மா வருவது தெரிகிறது. ஒளியைப் பார்க்கிறேன்” என்றாள்.
இதையயல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மரிய ரோஸா தன் மகளிடம், “லூஸியா, நன்றாகப் பாரம்மா. ஏமாந்து விடாதே” என்றாள்.
ஆனால் லூஸியா இதைக் கேட்வில்லை. அவள் ஏற்கெனவே அன்னையின் காட்சியில் மூழ்கியிருந்தாள். அவள் முகம் பரவசமாகி எதையோ உற்றுப் பார்ப்பது தெரிந்தது. அண்ணார்ந்திருந்த அவள் முகத்தில் மழைத்துளிகள் விழுந்தன. பிரான்சிஸ், ஜஸிந்தா இருவரும் அவளுக்கு இரு பக்கத்திலும் அதே போல் பரவசமாகி அன்னையின் காட்சியைத் தரிசித்தனர்.
“அம்மா! உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அன்புடன் கேட்டாள் லூஸியா.
தேவ அன்னை அளவற்ற அன்புடன் பிள்ளைகளைப் பார்த்தார்கள். அவர்களைப் பரவசப்படுத்தும் பார்வை அது. தன் இனிய குரலில்:
“இங்கு என் மகிமைக்கென ஒரு ஆலயம் கட்ட வேண்டும். நானே ஜெபமாலை மாதா. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லி வர வேண்டும். யுத்தம் சீக்கிரம் முடியப் போகிறது. போர்வீரர்களும் வீடு திரும்புவார்கள்” என்று கூறினார்கள்.
லூஸியா தேவ அன்னையிடம், “அம்மா, உங்களிடம் பல உதவிகள் கேட்க வேண்டியிருக்கிறது; சில நோயாளிகளுக்கு சுகம், பாவிகளின் மனந்திரும்புதல், இன்னும் மற்றவைகள்...” என்றாள். மக்கள் அவளிடம் சமர்ப்பித்த விண்ணப்பங்களை இவ்வாறு கூறினாள்.
“சிலவற்றைச் செய்வேன். எல்லாவற்றையுமல்ல. மனிதர்கள் தங்கள் வாழ்வைத் திருத்த வேண்டும். தங்கள் பாவங்களுக்கு அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.”
பின்னும் தொடர்ந்து பேசுகையில் முகம் வாடி மிகத் துயரத்துடன்: “ஏற்கெனவே மிகவும் நொந்து போயிருக்கும் ஆண்டவரை மனிதர்கள் இதற்கு மேலும் நோகச் செய்யக் கூடாது” என்றார்கள்.
இதுவே நமது தேவ அன்னை ஆறாம் காட்சியில் பேசிய கடைசி வார்த்தைகள். முகம் வாடி மிகத் துயரத்துடன் கூறிய வார்த்தைகள்.