தேவமாதா மனுக்குலத்தின் இரட்சகரின் தாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட மங்கள செய்தியை கபிரியேல் சம்மனசானவர், அவர்களுக்கு அறிவித்த அந்த கணம்... (வேளை) மனித வரலாற்றிலே மிக முக்கியமான நேரமாகும்.
தேவதாயின் Fiat - "ஆம்"- அப்படியே ஆகட்டும் என்ற வார்த்தையினால் சர்வேசுரனின் மெசியாவைப்பற்றிய வாக்குறுதி நிறைவேற இருந்தது; மோட்சவாசல் மீண்டும் திறக்கப்பட இருந்தது! பரிசுத்த கன்னிமரியாயை இந்த உந்நதமான நேரத்தில் மகிமைப்படுத்தும் விதமாக நாம் "Angelus" என்ற திரிகால ஜெபத்தை காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளில் ஜெபிக்கின்றோம்.
கபிரியேல் சம்மனசு, தேவமாதாவுக்குச் சொன்ன மங்களம், அதற்கு தேவமாதா அளித்த பதில், கிறிஸ்து நாதரின் பிறப்பு ஆகிய இம்மூன்றும் அடங்கிய வாக்கியங்களுக்கிடையே ஒரு "அருள் நிறை" மந்திரத்தைச் சொல்லி, பின்பு "Alma Redemptoris Mater" என்ற மாதா கீதத்தின் முடிவு ஜெபத்துடன் நிறைவுறுகிறது திரிகால ஜெபம்.
சாதாரணமாக முழந்தால்படியிட்டு சொல்லப்படும் இச்செபம், சனிக்கிழமை மாலையும், ஞாயிறன்றும் நின்றுகொண்டும், "Et verbum caro factum est... வார்த்தையானது மாம்சமாகி..." என்றவாக்கியத்தின் போது ஒற்றை முழந்தாளிட்டு சொல்ல வேண்டும்.
அச்சமயத்தில் தேவாலயமணியானது, 3 முறை அடித்த பின்பு, சிறிது இடைவெளி விட்டு மொத்தம் 9முறை அதாவது 3 மும்முறை அடிக்கப்படும், மேலே சொல்லப் பட்ட மூன்று வாக்கியங்கள், ஒவ்வொரு மூன்று மணி சப்தம் கேட்கும் போதும் ஒன்று ஒன்றாகச் சொல்லி இடையில் "அருள் நிறை..."மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பாஸ்கு காலத்திலோ, இச்செபத்திற்குப் பதிலாக "Regina Coeli... பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களிகூரும்...” என்ற ஜெபத்தை நின்று கொண்டு சொல்ல வேண்டும்.
இசெபம் கி.பி. 900-ம் ஆண்டுகளில் துறவற மடங்களில் பழக்கத்திற்கு வந்து, பல மாற்றங்களைக் கண்டு, இன்று நாம் ஜெபிக்கும் இந்த வடிவத்திற்கு 1560-ம் ஆண்டில் வந்தது.
வரலாறு! பக்தியோடு திரிகால ஜெபம் செய்வது எவ்வளவு பயனுள்ளது. தீமைகளிலிருந்து நம்மைக் காக்கிறது என்பதை விளக்கும் ஒரு கதை "ஞானோபதேச பொக்கிஷக் கதைகள்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2-வது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, ஜெர்மானியர்கள் ஊடுருவியிருந்த பெல்ஜியம் நாட்டின் வைய்மெஸ் என்ற நகரை குண்டுகள் வீசி தாக்குமாறு ஒரு அமெரிக்கப் படைஅதிகாரி அனுப்பப்பட்டார். அதனை நிறைவேற்ற அவர் முனையும் போது, அந்த நகரிலிருந்து திரிகால ஜெபத்திற்கான மணியோசையைக் கேட்டார்.
பக்தியுள்ள கத்தோலிக்கரான அவர் குண்டு போடுவதை நிறுத்தி, திரிகாலஜெபத்தை பக்தியோடு சொல்லலானார். அப்போது, அவரது மனதில் நாஸ்திக நாஸிக்கள் அந்நகரில் இருந்தால் எப்படி இத்தகைய ஜெபத்திற்கான மணியடிக்க விட்டிருப்பார்கள்? எனவே அவர்கள் அந்நகரை விட்டு வெளியேறி விட்டார்கள். பகைவர்கள் வெளியேறிவிட்ட நகரில் குண்டு போடுவது எவ்வளவு மடத்தனம் என்ற நினைவு மனதில் திடீரெனத் தோன்ற குண்டு போடாமல் சென்றார். ஆனால் அந்த மணி இறந்தவரைப் புதைக்கும் வெட்டியான் அடித்த துக்கமணி என்பதையும், ஜெர்மானியர் அதன் பின்னரே நகரைவிட்டு வெளியேறினர் என்பதையும் அவர் அறியவில்லை! எப்படியோ அன்று அந்நகர் குண்டு வீச்சிலிருந்து தப்பியது!
எனவே சாத்தானை வெற்றி கொண்ட இரட்சகரின் திருப்பிறப்பையும், அவரது மீட்பின் இரகசியங்களையும், தேவமாதாவின் அன்பையும் நமக்கு நினைவூட்டும் திரிகால ஜெபத்தை பக்தியுடன் சொல்வோமாக. குடும்பத்தில் பிள்ளைகளுக்கும் கற்றுத்தந்து ஜெபிக்கத் தூண்டுவோமாக!
Society of St. Pius X