அதிகாரம் 01
1 முப்பதாம் ஆண்டின் நான்காம் மாதத்தில் ஐந்தாம் நாள் நான் கேபார் நதியருகில் சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும் போது, வானங்கள் திறக்க, கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டேன்.
2 யோவாக்கீம் அசரனுடைய சிறைவாசத்தின் ஐந்தாம் ஆண்டு அது; அந்த ஐந்தாம் நாளிலே,
3 கல்தேயர் நாட்டிலுள்ள கேபார் நதியருகில் இருந்த பூசி என்ற அர்ச்சகரின் மகனாகிய எசேக்கியேலின் மீது ஆண்டவரின் வார்த்தையும் கரமும் இறங்கிற்று.
4 நான் கண்ட காட்சியாவது: இதோ வடக்கிலிருந்து புயல் காற்றெழும்பிற்று; அப்போது பெரியதொரு மேகத்தையும், அதன் நடுவில் நெருப்பினுள்ளிருந்து துலங்கி மின்னிய ஒரு வகை வெண்கலத்தின் உருவத்தையும் கண்டேன்.
5 அதன் நடுவில் நான்கு மிருகங்களின் சாயல் காணப்பட்டது; அவற்றின் உருவமோ மனித சாயலாய் இருந்தன.
6 அவற்றுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.
7 அவற்றின் கால்கள் நேரானவை; உள்ளங்கால்கள் கன்றுக் குட்டியின் உள்ளங்கால்களைப் போல் இருந்தன; அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல மின்னின.
8 அவற்றின் நான்கு பக்கங்களிலும் இறக்கைகளின் கீழ் மனித கைகள் இருந்தன. மிருகங்களுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.
9 அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளோடு ஒட்டியிருந்தன. நடக்கும் போது திரும்பிப் பாராமல் ஒவ்வொன்றும் தன் தன் திசையில் நேர்முகமாகவே நடக்கும்.
10 அவை நான்கிற்கும் முன் பக்கத்தில் மனித முகமும், வலப்புறத்தில் சிங்க முகமும், இடப்புறத்தில் எருது முகமும், பின் பக்கத்தில் கழுகு முகமும் இருந்தன.
11 அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, இறக்கைகள் உயர்ந்து விரிந்திருந்தன. அவை ஒவ்வொன்றின் இறக்கைகள் நான்கில் இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன, மற்ற இரண்டும் அவற்றின் உடலை மூடிக்கொண்டிருந்தன.
12 அவை ஒவ்வொன்றும் நேர்த்திசையிலேயே நடந்தன. எங்கே போகவேண்டுமென ஆவி அவற்றை ஏவுமோ, அங்கே அவை போகும்; போகும் போது அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டா.
13 அம் மிருகங்கள் மத்தியில் பார்ப்பதற்கு நெருப்புப் பற்றி யெரியும் கரியைப் போலும், கொழுந்து விட்டெரியும் விளக்கைப் போலும் ஒன்று தோன்றியது; அவற்றின் நடுவில் அக்கினிச் சுவாலை ஒடித் திரிந்தது; அதிலிருந்து மின்னல் புறப்பட்டது.
14 ஆம் மிருகங்கள் மின்னல் வெட்டுவது போல முன்னும் பின்னும் போவதும் வருவதுமாய் இருந்தன.
15 நான் அம் மிருகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை ஒவ்வொன்றின் அருகிலும் பூமியில் ஒரு சக்கரம் தென்பட்டது; அவற்றுக்கும் நன்னான்கு முகங்கள் இருந்தன.
16 சக்கரங்களின் உருவமும் அவற்றின் வேலைப்பாடும் கடல் நீரைப் போல நீல வண்ணமாய் இருந்தன; அவை நான்கும் ஒரே வடிவமுள்ளவையாய்க் காணப்பட்டன. சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றின. இவ்வாறு அவற்றின் அமைப்பும் வேலைப்பாடும் இருந்தன.
17 அவை ஒடுகையில் நான்கு பக்கங்களிலும் ஒடும்; ஒடும் போது அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டா.
18 அந்தச் சக்கரங்கள் மிகுந்த பரப்பளவும், பார்வைக்கு அச்சந்தரும் தன்மையும், உயரமும் கொண்டிருந்தன; சக்கரங்கள் நான்கிலும், சுற்றிலும் கண்கள் நிறைந்திருந்தன.
19 மிருகங்கள் நடக்கும்போது, சக்கரங்களும் அவற்றின் அருகிலே ஒடும். மிருகங்கள் பூமியினின்று மேலே எழும்புகையில் சக்கரங்களும் மேலே எழும்பும்.
20 எங்கே போக வேண்டுமென ஆவி அவற்றை ஏவுமோ, அங்கே அவை போகும்; சக்கரங்களும் அவற்றைத் தொடர்ந்து போயின; ஏனெனில் மிருகங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.
21 மிருகங்கள் போகையில் சக்கரங்களும் போயின. அவை நிற்கையில் இவையும் நின்றன; அவை பூமியினின்று மேலே எழும்புகையில் சக்கரங்களும் அவற்றோடு மேலே எழுந்தன; ஏனெனில் மிருகங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.
22 மிருகங்களின் தலைமேல் மேக மண்டலம் போல் ஒன்று படர்ந்திருந்தது, அது பார்ப்பதற்குப் பயங்கரமாய்ச் சுடர் வீசி மின்னும் பளிங்கு போல் இருந்தது.
23 அம் மண்டலத்தின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக் கொன்று எதிராக நிமிர்ந்து நின்றன; மிருகம் ஒவ்வொன்றும் தன் இறக்கைகள் இரண்டினால் தன் உடலை மூடிக் கொண்டிருந்தது.
24 அவை நடக்கும்போது அவற்றின் இறக்கைகளால் ஏற்பட்ட ஒலியைக் கேட்டால், பெருக்கெடுத்து ஒடிவரும் தண்ணீரின் இரைச்சல் போலும், எல்லாம் வல்லவரின் குரலொலி போலும், திரண்டு செல்லும் சேனைகளின் ஆரவாரம் போலும் இருக்கும்; அவை நிற்கும் போது தங்கள் இறக்கைகளைத் தாழ்த்தி விடும்.
25 அவற்றின் தலை மீது படர்ந்து நின்ற மேக மண்டலத்தில் குரலொலி கேட்டது; மிருகங்கள் நிற்கும் போது இறக்கைகளைத் தளர விடும்.
26 அவற்றின் தலை மீதிருந்த மண்டலத்தின் மேல் மரகதத்தால் ஆன அரியணை போல் ஒன்று தென்பட்டது; அந்த அரியணையில் மனிதனைப் போன்ற உருவம் ஒன்று வீற்றிருந்தது.
27 அவர் உடலின் உள்ளும் புறமும் சுற்றிலும் தீயொளி போல மின்னிய ஒருவித வெண்கலத்தின் உருவத்தைக் கண்டேன்; இடுப்பிலிருந்து மேலும் கீழும் சுற்றிலும் நெருப்பு மயமாய் ஒளிரும் பிரகாசத்தைக் கண்டேன்.
28 அரியணையைச் சூழ்ந்திருந்த ஒளி மழைக்காலத்தில் மேகத்தில் தோன்றும் வானவில்லைப் போல் இருந்தது. ஆண்டவரது மாட்சியினுடைய சாயலின் காட்சி இவ்வாறு தோன்றிற்று; நான் அதைப் பார்த்த போது முகங்குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவரின் பேசுங்குரல் கேட்டேன்.
அதிகாரம் 02
1 அந்தக் குரல் என்னிடம், "மனிதா, எழுந்து நில்; உன்னோடு பேசுவோம்" என்றது.
2 இவ்வாறு அவர் என்னிடம் சொன்னவுடனே, ஆவி என்னுள் புகுந்து என்னை என் கால்களின் மேல் நிலைநிறுத்திற்று; என்னிடம் பேசியவரின் குரல் கேட்டது.
3 அவர் என்னிடம் கூறியது: "மனிதா, எம்மை விட்டு அகன்று போன கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்களிடம் உன்னை நாம் அனுப்புகிறோம். அவர்களும் அவர்களின் தந்தையரும் இந்நாள் வரை எம் உடன்படிக்கையை மீறினார்கள்.
4 நாம் யாரிடத்தில் உன்னை அனுப்புகிறோமோ அவர்கள் விவேகமற்றவர்கள்; முரட்டுத்தனம் உள்ளவர்கள். நீ போய் அவர்களிடத்தில், 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்.
5 நீ சொல்வதை அவர்கள் கேட்பார்களோ, கேட்டுப் பாவஞ் செய்யாமல் இருப்பார்களோ, தெரியாது; ஆயினும், தங்கள் நடுவில் இறைவாக்கினர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை அந்தக் கலகக்காரர்கள் அறிந்து கொள்ளட்டும்.
6 மனிதா, நீ அவர்களுக்கு அஞ்சாதே. தேள்களைப் போன்ற கொடியவர்கள் நடுவில் வாழ்ந்தாலும், அவர்கள் விசுவாசமற்றவர்களாயும் கலகக்காரராயும் இருந்தாலும், அவர்கள் வார்த்தைக்கு அஞ்சாதே; அவர்கள் சொல்லுக்கோ, அவர்களின் கடுகடுப்பான முகத்துக்கோ அஞ்சி விடாதே; அவர்களோ கலகக்காரர்கள்.
7 அவர்கள் நீ சொல்வதைக் கேட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எம் வார்த்தைகளை அவர்களுக்கு நீ கூறு; ஏனெனில் அவர்கள் கலகக்காரர்கள்.
8 மனிதா, அந்தக் கலகக்காரரைப் போல் நீயும் கலகக்காரனாய் இராதே; நாம் உனக்குச் சொல்வதைக் கேள்: உன் வாயைத் திறந்து உனக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைப் புசி."
9 அப்போது ஒலைச்சுருள் பிடித்திருந்த கையொன்று கண்டேன். அந்தக் கை ஒலைச்சுருளை என் முன் நீட்டிற்று; அந்தச் சுருளின் உள்ளும் புறமும் எழுதியிருக்கக் கண்டேன்; அதில் முறைப்பாடுகளும் புலம்பல்களும் சாபங்களும் எழுதியிருந்தன.
அதிகாரம் 03
1 அவர் மறுபடியும் என்னிடம், "மனிதா, உனக்குத் தரப்படுவதைப் புசி; இந்த ஒலைச்சுருளைப் புசி; புசித்த பின் இஸ்ராயேல் மக்களிடம் போய்ப் பேசு" என்றார்.
2 அவ்வாறே நான் என் வாயைத் திறந்தேன்; அவர் அந்த ஒலைச்சுருளை எனக்குப் புசிக்கத் தந்தார்.
3 பின்னர் என்னிடம்: "மனிதா, நாம் உனக்குக் கொடுக்கும் இந்த ஒலைச்சுருளை உண்டு உன் வயிற்றை நிரப்பு" என்றார். நானும் அவ்வாறே அதை உண்டேன்; அது என் வாய்க்குத் தேனைப் போலத் தித்தித்தது.
4 மீண்டும் அவர் என்னைப் பார்த்து, "மனிதா, நீ இஸ்ராயேல் வீட்டாரிடம் போய் எம் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்.
5 ஏனெனில் நீ அறியாத சொற்களையோ கண்டுபிடியாத மொழியையோ பேசுகிற மக்களிடம் நாம் உன்னை அனுப்பவில்லை; இஸ்ராயேல் மக்களிடமே உன்னை அனுப்புகிறோம்.
6 விளங்காத பேச்சும், தெரியாத மொழியும் பேசுகின்ற மக்களிடத்தில் உன்னை அனுப்பவில்லை; அத்தகைய மக்களிடமே உன்னை அனுப்பினாலும், அவர்களாவது நீ சொல்வதைக் கேட்பார்களே!
7 ஆனால் இஸ்ராயேலர் நாம் சொல்வதைக் கேட்பதில்லை; ஆகவே நீ சொல்வதையும் கேட்க மாட்டார்கள்; ஏனெனில் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் முரட்டுக் குணமும் கல் நெஞ்சமும் உள்ளவர்கள்.
8 இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்தை விடவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றியை விடவும் கடினமானதாய் இருக்கச் செய்தோம்.
9 உன் முகத்தை வச்சிரம் போலவும், கல்லை விடக் கெட்டியானதாகவும் ஆக்கினோம்; அவர்கள் கலகக்காரராய் இருக்கிறார்களென்று நீ அவர்களுக்கு அஞ்சி விடாதே; அவர்கள் முகத்தைப் பார்த்துப் பயப்படாதே" என்று கூறினார்.
10 இன்னும் தொடர்ந்து, "மனிதா, நாம் உன்னிடம் சொல்லும் வார்த்தைகளையெல்லாம் நீ செவி கொடுத்துக் கேட்டு, உன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்.
11 சிறைப்பட்டிருக்கும் உன் இனத்தாரிடம் சென்று பேசு: 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்; அதை அவர்கள் கேட்கிறார்களா, கேட்க மறுக்கிறார்களா என்பது பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்றார்.
12 அப்போது, ஆவி என்மீதிறங்கிற்று; அதிக அதிர்ச்சியுடன் என்பின்னால் கேட்ட ஒரு குரலொலி, "தமது இருப்பிடத்தில் இலங்கிய ஆண்டவரின் மாட்சி வாழ்த்தப்படுவதாக!" என்று சொல்லிற்று.
13 தங்கள் இறக்கைகளை ஒன்றோடொன்று அடித்துக் கொண்ட மிருகங்களின் சத்தமும், அவற்றின் பின் ஒடிவந்த சக்கரங்களின் சத்தமும், பேரதிர்ச்சியின் சத்தமும் கேட்டன.
14 பின்னும் ஆவி என்னைத் தூக்கி உயர எழுப்பிற்று; நானோ மனக்கசப்பும் உள்ளக் கொதிப்பும் நிறைந்தவனாய்ச் சென்றேன்; ஆயினும் ஆண்டவரின் கரம் என் மேலிருந்து என்னைப் பலப்படுத்திற்று.
15 பின்பு கேபார் நதியருகில் தெல் அபிப் (புதிய தானியக் குவியல்) என்னுமிடத்தில் வசித்துக் கொண்டிருந்த சிறைப்பட்டவர்களிடம் வந்தேன்; அவர்கள் குடியிருந்த இடத்தில் நானும் அவர்கள் நடுவில் ஏழு நாட்கள் மதிமயங்கியவன் போல் உட்கார்ந்திருந்தேன்.
16 ஏழு நாட்களுக்குப் பிறகு ஆண்டவரின் வாக்கு என்னிடம் வந்தது:
17 மனிதா, இஸ்ராயேல் வீட்டார்க்கு உன்னைச் சாமக் காவலனாக வைத்திருக்கின்றோம். நீ நம் வாயினின்று புறப்படும் வார்த்தையைக் கேட்டு அதனை எம் பெயரால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்.
18 தீயவன் ஒருவனிடம், 'நீ கண்டிப்பாய்ச் சாவாய்' என்று நாம் சொல்ல, நீ அவனுக்கு எச்சரிக்கை செய்யாமலும், அவன் தன் தீய வழியினின்று திருந்தி வாழ்வு பெறும்படி நீ அவனிடம் அறிவிக்காமலும் விடுவாயாகில், அந்தத் தீயவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; அவனது இரத்தப் பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
19 அதற்கு மாறாக, நீ அந்தத் தீயவனுக்கு எச்சரிக்கை செய்தும், அவன் தன் அக்கிரமத்துக்காக மனம் வருந்தாமலும், தீய வழியினின்று திரும்பாமலும் இருந்தானாயின், அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் உன்னையே நீ காத்துக் கொள்வாய்.
20 அவ்வாறே, நீதிமான் ஒருவன் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமத்தைச் செய்வானாயின், நாம் அவன் வழியில் இடறலை வைத்து அவனை விழச் செய்யும் போது, அவன் சாவான்; நீ அவனுக்கு எச்சரிக்கை செய்யாவிடில், அவன் தன் பாவத்திலேயே சாவான்; அவன் செய்த புண்ணியங்களை எண்ணிப்பார்க்க மாட்டோம்; ஆனால் அவனது இரத்தப்பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
21 ஆனால் நீதிமான் ஒருவனைப் பாவஞ் செய்யாதிருக்கும்படி நீ எச்சரித்து, அவனும் பாவம் செய்யாதிருப்பானாயின், அவன் கண்டிப்பாய் வாழ்வான்; அவன் வாழ்வது உன் எச்சரிக்கையின் காரணத்தால் தான்; நீயும் உன்னையே காத்துக் கொண்டவனாவாய்."
22 மறுபடியும் ஆண்டவரின் கரம் என்மேல் இருந்தது. அவர் என்னை நோக்கி, "நீ எழுந்து சமவெளியான இடத்துக்குப் போ; அங்கே உன்னோடு பேசுவோம்" என்றார்.
23 அவ்வாறே நான் எழுந்து சமவெளியான இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்: இதோ, கேபார் நதியருகில் எனக்குத் தோன்றிய மகிமைக்கு இணையாக, ஆண்டவரின் மகிமை அங்கேயும் காணப்பட்டது; நானோ முகங்குப்புற விழுந்தேன்.
24 மீண்டும் ஆவி என்னுள் புகுந்து என்னைக் காலூன்றி நிற்கச் செய்தது; செய்த பின் என்னைப் பார்த்து சொன்னார்: "நீ போய் உன் வீட்டினுள் உன்னை அடைத்துக்கொள்.
25 மனிதா, இதோ இந்தச் சங்கிலிகள் உனக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளன; இவற்றால் நீ கட்டப்படுவாய்; மக்களின் நடுவில் உன்னால் போகமுடியாது.
26 உன் நாக்கை மேல் வாயோடு நாம் ஒட்டிவிடுவோம்; ஆதலின் நீ ஊமையாவாய்; நீ அவர்களைக் கடிந்து பேச முடியாது; ஏனெனில் அவர்களோ கலகக்காரர்கள்.
27 ஆயினும் நாம் உன்னோடு பேசும் போது, உன் வாயைத் திறப்போம்; அப்பொழுது நீ அவர்களிடம், 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்வாய். கேட்கிறவன் கேட்கட்டும்; கேட்க மறுப்பவன் மறுக்கட்டும்; ஏனெனில் அவர்களோ கலகக்காரர்கள்.
அதிகாரம் 04
1 "மனிதா, செங்கல் ஒன்றை எடுத்து உன் முன் வைத்து அதில் யெருசலேம் பட்டணத்தின் படத்தை வரை.
2 அதனைச் சுற்றி முற்றுகையிட்டாற் போலக் கோட்டை கொத்தளங்களை எழுப்பி, சுற்றிலும் படை வீரர்களையும், போர் இயந்திரங்களையும் வை.
3 அதன் பின், ஒர் இருப்புத் தகட்டினால் உனக்கும் பட்டணத்துக்கும் இடையில் சுவர் போல் எழுப்பி, நீ அதற்கு எதிரில் உட்கார்ந்து முற்றுகையிட்டுக்கொண்டிரு; இது இஸ்ராயேல் வீட்டாருக்கு ஒர் அடையாளம்.
4 நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து, இஸ்ராயேல் வீட்டாரின் தண்டனையை உன்மேல் சுமந்து கொள்; நீ அதன் மேல் படுத்திருக்கும் நாளளவும் அவர்களின் அக்கிரமங்களைச் சுமப்பாய்.
5 அவர்களுடைய அக்கிரமங்களின் ஆண்டுக் கணக்கிற்குப் பதிலாக நாள் கணக்கிட்டு முந்நூற்றுத் தொண்ணுறு நாள் உனக்குக் கொடுத்தோம்; அத்தனை நாட்களுக்கு நீ அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.
6 இதெல்லாம் செய்த பின், மறுபடியும் நீ உன் வலப்பக்கமாய்ப் படுத்து யூதா வீட்டாரின் அக்கிரமத்தை நாற்பது நான் சுமப்பாய்; ஒரு நாள் ஒர் ஆண்டினைக் குறிக்கிறது.
7 யெருசலேமின் முற்றுகைக்கு நேராகத் திரும்பி, இரண்டு கைகளையும் விரித்தவாறு நின்று, அதற்கு எதிராய் இறைவாக்கு உரைப்பாய்.
8 இதோ, நாம் உன்னைக் கயிறுகளால் கட்டியுள்ளோம்; உன் முற்றுகை நாட்கள் முடியும் வரை நீ அப்பக்கமும் இப்பக்கமும் புரள முடியாது.
9 கோதுமை, வாற்கோதுமை, பெரும் பயறு, சிறு பயறு, தினை, சாமை இவற்றை வாங்கி ஒரு பானையில் வைத்துக் கொள்; நீ படுத்திருக்கும் அந்த முந்நூற்றுத் தொண்ணுறு நாளளவும், அவற்றிலிருந்து செய்த அப்பத்தைச் சாப்பிடு.
10 நாளொன்றுக்கு இருபது ஷூக்கெல் எடையுள்ள உணவே சாப்பிடுவாய்; அதையும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உண்ண வேண்டும்.
11 தண்ணீரையும் அளவு பார்த்தே குடிக்க வேண்டும். ஹீன் என்னும் படியில் ஆறிலொரு பங்கை ஒரு நாளைக்கு ஒரு முறை குடி.
12 அவற்றை வாற்கோதுமை அப்பம் போலச் சுட்டுச் சாப்பிடு; மனிதா மலத்தின் வறட்டிகளைப் பயன்படுத்தி அவர்கள் கண் முன் அந்த அப்பத்தைச் சுட வேண்டும்.
13 இவ்வாறு தான் இஸ்ராயேல் மக்கள் நம்மால் துரத்தப்பட்டு எந்த மக்கள் மத்தியில் வாழ்வார்களோ, அந்த மக்கள் நடுவில் தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள்" என்று ஆண்டவர் சொன்னார்.
14 அப்போது நான், "ஆண்டவராகிய இறைவா, என் சிறு வயது முதல் இன்று வரை என் ஆன்மா தீட்டுப்பட்டதில்லையே! தானாய்ச் செத்ததையோ, மற்ற மிருகங்களால் கொலையுண்டதையோ நான் சாப்பிட்டதே இல்லை; தீட்டுப்பட்ட இறைச்சி என் வாய்க்குள் போனதில்லை" என்றேன்.
15 அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "அப்படியானால் மனிதா மலத்தின் வறட்டிகளுக்குப் பதிலாக மாட்டுச் சாணத்தின் வறட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கிறோம்; அவற்றைக் கொண்டு உன் அப்பத்தைச் சுடுவாயாக" என்றார்.
16 மேலும் தொடர்ந்தார்: "மனிதா, யெருசலேமில் அப்பத்தின் சேமிப்பைக் குறையச் செய்வோம்; மக்கள் அப்பத்தை நிறை பார்த்துக் கவலையோடு சாப்பிடுவர்; தண்ணீரை அளவு பார்த்து அச்சத்தோடு குடிப்பர்;
17 அப்பமும் தண்ணீரும் குறைந்து போக, ஒவ்வொருவரும் திகிலடைந்து தங்கள் அக்கிரமத்திலே வாடிப் போவார்கள்.
அதிகாரம் 05
1 மனிதா, மயிரை மழிக்கும் அளவுக்குக் கருக்கான வாளையெடுத்து, அதனால் உன் தலையையும் தாடியையும் மழித்துக் கொண்டு, அந்த மயிரைத் தராசில் இட்டு நிறுத்துப் பங்கிடு.
2 அவற்றில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாட்கள் முடியும் போது நடுப்பட்டணத்தில் நெருப்பினால் சுட்டெரி; மூன்றில் மற்றொரு பங்கைப் பட்டணத்தைச் சுற்றிலும் கத்தியால் வெட்டிச் சிதைப்பாய்; மூன்றில் இன்னுமொரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு; நாம் கையிலேந்திய வாளுடன் அவர்களைப் பின் தொடர்வோம்.
3 அவற்றில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனையில் முடிந்து வை.
4 பிறகு, இவற்றில் கொஞ்சம் எடுத்துத் தீயிலிட்டுச் சுட்டெரிப்பாய்; இதினின்று இஸ்ராயேல் வீட்டாருக்கு எதிராக அக்கினி புறப்படும்."
5 ஆண்டவராகிய இறைவன் அருளிய வாக்கு: "புறவினத்தார்க்கும் மற்ற மக்களுக்கும் நடுவில் நாம் நிலைநாட்டிய யெருசலேம் பட்டணம் இதுவே.
6 புறவினத்தாரை விட மிகுதியாய் இவர்கள் எம் ஒழுங்குச் சட்டங்களை அவமதித்து அக்கிரமிகளானார்கள்; தங்களைச் சுற்றிலுமுள்ள பட்டணத்தாரை விட அதிகமாய் இவர்கள் எம் கட்டளைகளை மீறினார்கள்; எம் சட்டதிட்டங்களைக் காலால் மிதித்தார்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவே இல்லை."
7 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உங்களைச் சுற்றியுள்ள மக்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் நம் கட்டளைகளை எதிர்த்தீர்கள்; நம்முடைய நீதியையும் அனுசரிக்கவில்லை; உங்களைச் சுற்றியுள்ள மக்களுடைய நீதி முறைமைகளின்படி கூட நீங்கள் நடக்கவில்லை.
8 ஆகவே ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: இதோ, நாமே உங்களுக்கு எதிராக இருப்போம்; புறவினத்தார் பார்க்க உங்கள் நடுவில் இருந்து நாமே உங்களைத் தீர்ப்பிடுவோம்;
9 நீங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், நாம் இதுவரையில் செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான காரியத்தை இப்பொழுது செய்யப் போகிறோம்.
10 (அதாவது) உங்களுள் தகப்பன் மகனையும், மகன் தகப்பனையும் பிடுங்கித் தின்பார்கள்; உங்கள் நடுவில் நாம் எழுந்து நின்று தீர்ப்பிட்டு நாற்றிசையிலும் உங்களனைவரையும் சிதறடிப்போம்.
11 உங்களுடைய அக்கிரமங்களாலும், உங்களுடைய குற்றங்களாலும் நமது பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினதால் உங்களைத் தவிடு பொடியாக்குவோம்; கிருபைக் கண்ணோக்க மாட்டோம்; இரக்கமும் காட்ட மாட்டோம்; எம் உயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
12 உங்களில் மூன்றிலொரு பங்கு பெருவாரிக் காய்ச்சலாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்; மூன்றில் மற்றொரு பங்கு வாளால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் இறுதியான பங்கு எப்பக்கங்களிலும் சிதறுண்டு போவார்கள்; அவர்களையும் விடாமல் வாளோடு பின்தொடர்வோம்.
13 இவ்வாறு நமது கோபம் நிறைவேறும்; நமது ஆத்திரம் அவர்கள் மீது தீரும்படி செய்து, கோபத்தை ஆற்றிக் கொள்வோம்; நமது கோபம் அவர்கள் மீது நிறைவேறுகையில், ஆண்டவராகிய நாம் வைராக்கியத்தோடு பேசினோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
14 இவ் வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைத் தரைமட்டமாக்குவோம்; உன்னைச் சுற்றியுள்ள யாவருடைய நிந்தைக்கும் உன்னை உட்படுத்துவோம்.
15 கோபத்தின் வேகத்தால் கொடிய தண்டனைகளை நாம் உனக்குக் கொடுத்துத் தண்டித்துத் திருத்தி, நீதி செலுத்த வரும் போது, உன்னைச் சுற்றியுள்ள மக்கள் உன்னை அவமானப்படுத்தி நிந்திப்பார்கள்; அவர்கள் உன்னைப் பார்க்கும் போது நீ கடவுளின் கோபத்திற்கு இலக்காக இருக்கிறாய் எனக் கண்டு கலங்கி நிற்பார்கள்.
16 உங்களை அடியோடு அழிக்கும்படி கொடிய பஞ்சமாகிய அழிவின் அம்பை உங்கள் மீது எய்து சிதறடிப்போம்; நீங்கள் பட்டினியால் சாகும்படி அப்பத்தின் சேமிப்பாகிய உங்கள் ஊன்று கோலை நாம் முறித்துப் போடுவோம்; ஆண்டவராகிய நாம் இதை முன்னே சொல்லுகிறோம்.
17 உங்கள் பிள்ளைகளைக் கொன்றெழிக்கப் பஞ்சத்தையும், கொடிய மிருகங்களையும் பெருவாரிக் காய்ச்சலையும் உங்கள் மேல் அனுப்புவோம்; எங்கும் இரத்த வெள்ளம் புரண்டோடும்; வாளாலே வெட்டுண்டு நீங்கள் சாவீர்கள்; ஆண்டவராகிய நாம் இதைச் சொல்லுகிறோம்."
அதிகாரம் 06
1 ஆண்டவரின் வாக்கு என்னிடம் உரைத்தது:
2 மனிதா, இஸ்ராயேல் நாட்டின் மலைகளுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குக் கூறு:
3 இஸ்ராயேல் நாட்டு மலைகளே, ஆண்டவராகிய இறைவன் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் பாறைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாமே உங்கள் மேல் வாளை வரச்செய்வோம், உயர்ந்த உங்கள் கொடுமுடிகளை அழிப்போம்.
4 உங்கள்மேல் கட்டப்பட்ட பீடங்களைப் பாழாக்குவோம்; கற்கூம்புகளை உடைத்தெறிவோம், உங்கள் நடுவில் கொலைசெய்யப்படுவோரை உங்கள் சிலைகளின் முன் எறிவோம்.
5 இஸ்ராயேல் மக்களுள் இறைந்தவர்களின் உடல்களை உங்கள் சிலைகளின் முன்பு போடுவோம்; அவர்களுடைய எலும்புகளை உங்கள் பீடங்களைச் சுற்றிலும் சிதறச் செய்வோம்.
6 நீங்கள் குடியிருக்கும் எல்லா நாடுகளிலும் நகரங்கள் பாழாகும்; சிலைகளுக்கென நீங்கள் எழுப்பிய கோயில்களும் பீடங்களும் பலிமேடைகளும் உங்கள் கற்கூம்புகளும் இடிந்து தகர்ந்து தரைமட்டமாகும்; உங்கள் வேலைப்பாடுகள் யாவும் தவிடுபொடியாகும்.
7 உங்கள் நடுவில் கொலை நடக்கும்; அப்போது நாமே உங்கள் ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8 பல நாடுகளுக்கு நாம் உங்களைச் சிதறடிக்கும் போது பிற நாட்டவரின் வாளுக்குத் தப்பினவர்களை மீதியாக விட்டு வைப்போம்.
9 பிற நாட்டவரால் சிறைப்படுத்தப்பட்டு உங்களுள் உயிர் தப்பியவர்கள் நம்மை நினைத்துக்கொள்வார்கள்; ஏனெனில் நம்மை விட்டுச் சிலைகளைப் பின்தொடர்ந்து விபசாரம் செய்தவர்களின் கண்களும் இதயமும் வருந்தும்படி செய்தோம்; தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், கட்டிக்கொண்ட பாவங்கள் யாவற்றுக்காகவும், மனம் வருந்தித் தங்களைத் தாங்களே வெறுப்பார்கள்.
10 இத்தீங்குகளை எல்லாம் செய்வோம் என ஆண்டவராகிய நாம் கூறியது பொய்யாகாது என்பதை அவர்கள் அபபொழுது அறிவார்கள்."
11 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ உன் கையைத் தட்டி காலால் தரையை உதைத்துச் சொல்: 'அந்தோ! இஸ்ராயேல் வீட்டார் தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும் வாளாலும் பசியாலும் கொள்ளை நோயாலும் சாவார்கள்.
12 யெருசலேம் பட்டணத்திற்குத் தெலைவில் இருப்பவன் கொள்ளை நோய்க்கு இரையாவான்; அதனருகில் உள்ளவன் வாளால் சாவான்; முற்றுகையிடப்பட்ட ஏனையோர் பஞ்சத்தால் மடிவார்கள்; இவ்வாறு அவர்கள் மேலுள்ள நம் கோபம் தணியும்.
13 உங்கள் சிலைகளுக்கு நறுமணத் தூபங்காட்டிய இடங்களிலும், தழைத்து நிற்கும் எல்லாக் கருங்காலி மரத்தினடியிலும், அடர்ந்த தழையால் பச்சையாயிருக்கும் எல்லா மரத்தின் கீழும், மலைகளின் சிகரங்களிலும், உயர்ந்த மேடுகளிலும், பலி பீடங்களைச் சுற்றிலும், உங்கள் சிலைகளின் நடுவிலும் உங்களுள் கொலையுண்டவர்கள் சிதறிக் கிடக்கும் போது, நாமே உங்கள் ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
14 நாம் அவர்களுக்கு எதிராய் நம் கரத்தை நீட்டுவோம், தெப்லாத்தா என்னும் பாலை நிலம் முதல் அவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களையும் நாட்டையும் பாழாக்குவோம். அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
அதிகாரம் 07
1 ஆண்டவருடைய வாக்கு என்னிடம் வந்தது:
2 மனிதா, இஸ்ராயேல் நாட்டைக்குறித்து ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ முடிவு! நாட்டின் நாற்றிசையிலும் முடிவு வருகிறது!
3 இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நம் கோபத்தை உன் மீது அனுப்புவோம்; உன் நடத்தைக்கு ஒத்தபடி உன்னை தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களையெல்லாம் உன் மீது சுமத்துவோம்;
4 நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உனக்குத் தயைகூர மாட்டோம். ஆனால் உன் நடத்தைக்கேற்ற தண்டனையை உன் மீது வரச்செய்வோம்; உன்னுடைய அக்கிரமங்கள் உன் நடுவிலேயே இருக்கும்; அப்போது நாமே உன் ஆண்டவர் என்பதை அறிவாய்.
5 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தீங்கு வருகிறது! இதோ, தீங்கு வருகிறது!
6 முடிவு வருகிறது, வருகிறது முடிவு! உனக்கு எதிராக எழுந்து வருகிறது, இதோ வந்து விட்டது!
7 இஸ்ராயேல் நாட்டில் வாழும் உன் மீது வேதனை வருகிறது; பழிவாங்கும் நாள் வந்துவிட்டது; மலைகளின் மகிழ்ச்சிக்குரிய நாள் கடந்து போயிற்று.
8 விரைவில் இப்பொழுதே நம் கோபத்தை உன் மேல் சுமத்துவோம்; நமது சினத்தை உன் மீது தீர்த்துக் கொள்வோம்; உன் நடத்தைக்குத் தக்கவாறு உன்னைத் தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களின் பலனை உன் மீது வரச் செய்வோம்.
9 நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உன்மேல் தயைகூர மாட்டோம்; உன் நடத்தையின் பலனை உன் மீது சுமத்துவோம்; உன் அக்கிரமங்கள் உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும். அப்போது ஆண்டவராகிய நாமே உன்னைத் தண்டிக்கிறவர் என்பதை அறிவாய்.
10 இதோ, அந்த நாள்! இதோ, வந்துவிட்டது! உன் வேதனை தொடங்கிவிட்டது; உன்னை அடிக்கும் தடி பூத்து விட்டது. உன் அகந்தையும் வளர்ந்திருக்கிறது.
11 அக்கிரமம் கொடுங்கோலாக மலர்ந்துள்ளது; அவர்களிலும், அவர்களின் இனத்திலும், அவர்களுடைய மகிமையிலும் ஒன்றும் விடப்படாது; யாவும் அழிந்துபோம்;
12 காலம் வருகிறது; அந்த நாள் அருகில் உள்ளது; வாங்குகிறவன் மகிழாமலும், விற்கிறவன் வருந்தாமலும் இருப்பானாக; ஏனெனில் எல்லாரும் கோபத்துக்கு ஆளானார்கள்;
13 விற்கிறவன் விற்ற உடைமையைத் திரும்பி அடையமாட்டான்; ஏனெனில் இப்போது வாழ்கிறவர்களின் காலத்திலேயே அது நடக்கும்; எல்லாரையும் பற்றிச் சொல்லப்பட்ட இந்த இறைவாக்கு வீணாகாது; எந்த மனிதனும் தன்னுடைய தீய வாழ்வில் அமைதி காணமுடியாது.
14 எக்காளம் ஊதுவர்; எல்லாரும் தயாராய் இருப்பர்; ஆனால் சண்டைக்குப் போகிறவன் எவனுமில்லை. ஏனெனில் மக்கள் அனைவர் மேலும் நாம் கோபமாய் இருக்கிறோம்.
15 இஸ்ராயேலரின் பாவங்கள்: "வெளியில் வாளும், உள்ளே கொள்ளை நோயும் பஞ்சமும் உண்டாகும்; வயல் வெளியிலுள்ளவன் வாளுக்கு இரையாவான்; பட்டணத்தில் இருப்பவனோ பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்.
16 தப்பி ஒடுகிறவர்கள் பிழைப்பார்கள்; ஆயினும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் அக்கிரமத்துக்காக மனம் வருந்தி, கணவாய்களிலுள்ள மாடப்புறாக்களைப் போல் மலைகளின் மேல் நிற்பார்கள்.
17 அப்போது கைகள் எல்லாம் பலனற்றுப்போகும்; முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப் போலத் தத்தளிக்கும்.
18 அஞ்சி நடுங்கி அனைவரும் மயிராடைகளை உடுத்திக் கொள்வார்கள்; எல்லாரும் வெட்கி நாணுவர்; தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்வார்கள்.
19 அவர்களுடைய வெள்ளி வெளியே எறியப்படும்; தங்கம் அவர்களுக்கு வெறுப்புள்ளதாகும்; ஆண்டவருடைய கோபத்தின் நாளில் அவர்களை விடுவிக்க அவர்களிடமிருக்கும் வெள்ளியாலும் தங்கத்தாலும் இயலாது; அவர்கள் தங்கள் உள்ளத்தைத் திருப்தியாக்குவதுமில்லை; தங்கள் வயிற்றை நிரப்புவதுமில்லை. ஏனெனில் அவர்களின் அக்கிரமத்தினால் அவர்களது செல்வமே அவர்களுக்கு இடறலாய் அமைந்தது.
20 தங்கள் அணிகலன்களைப் பார்த்து அவர்கள் அகந்தை கொண்டார்கள்; அவற்றைக் கொண்டு தங்கள் அக்கிரமத்தின் படிமங்களையும் சிலைகளின் உருவங்களையும் செய்தார்கள்; ஆகையால் பொன்னையும் வெள்ளியையும் அவர்களுக்கு வெறுப்புள்ளதாக்குவோம்.
21 அதை அந்நியர் கொள்ளையடிக்கச் செய்வோம்; அக்கிரமிகளான உலகத்தார் சூறையாடக் கொடுப்போம்; அவர்கள் அதைத் தாழ்வான காரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.
22 அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்; அவர்கள் நம்முடைய கோயிலின் அந்தரங்கமான இடத்தை அசுத்தப் படுத்துவார்கள்; கள்ளர்களும் அதனுள் நுழைந்து அதனைப் பங்கப் படுத்துவார்கள்.
23 நீ ஒரு சங்கிலியைச் செய்துகொள்: நாடு முழுவதும் இரத்தப்பழியால் நிறைந்துள்ளது; நகரெங்கும் அக்கிரமம் நிரம்பியுள்ளது.
24 ஆகையால் புறவினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவோம்; அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்; வலிமையுள்ளவர்களின் அகங்காரம் அடங்கும்; இவர்களின் பரிசுத்த இடங்களை அவர்கள் உரிமையாக்கிக் கொள்வார்.
25 முற்றுகையின் நெருக்கடி மிகுதியாகும் போது, நம் மக்கள் சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனால் அதைக் கண்டடைய மாட்டார்கள்.
26 அழிவுக்கு மேல் அழிவு உண்டாகும்; துயரச் செய்தியைத் தெடர்ந்து துயரச் செய்தி கிடைக்கும்; இறைவாக்கினரின் காட்சியை நாடுவார்கள்; ஆனால் குருக்களிடமிருந்து வேதமும், மூப்பர்களிடமிருந்து நல்லாலோசனையும் ஒழிந்து போயின.
27 அரசன் வருந்தி அழுவான்; இளவரசன் திகைத்து நிற்பான்; குடிமக்கள் தைரியமற்றுப் போவார்கள்; நாம் அவரவர் நடத்தைக்குத் தக்கவாறு நீதியாய்த் தீர்ப்பிட்டு அதற்கேற்பத் தண்டிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
அதிகாரம் 08
1 ஆறாம் ஆண்டில் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள், நான் என் வீட்டில் யூதாவின் மூப்பர்களோடு உட்கார்ந்திருந்த போது ஆண்டவராகிய இறைவனின் கரம் அங்கே என் மேல் இறங்கிற்று.
2 நான் அப்பொழுது ஒரு காட்சி கண்டேன்; அக்கினி மயம் போன்ற சாயலையுடைய ஒருவரைக் கண்டேன்; அவர் இடுப்புத் துவக்கி கீழெல்லாம் அக்கினியாயும், இடுப்புத் துவக்கி மேலெலாம் ஒளியாய்த் துலங்கி மின்னும் வெண்கலம் போன்றும் இருந்தது.
3 கையைப் போலத் தேன்றிய ஒன்றை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்தார்; அப்போது ஆவி என்னைத் தூக்கி, பூமிக்கும் வானத்துக்கும் நடுவில் நிறுத்தி, பரவசத்தில் யெருசலேமுக்குக் கொண்டு போய்க் கடவுளின் முன்னிலையில் கோபம் வருவிக்கும் சிலை இருக்கின்ற வடதிசைக்கு எதிரில் உள்ள உள்வாயிலின் முற்றத்தில் என்னை விட்டார்.
4 இதோ, அங்கேயும் இஸ்ராயேல் ஆண்டவருடைய மகிமை, முன்னொரு நாள் நான் சமவெளியில் கண்ட காட்சியில் தோன்றியது போலவே காணப்பட்டது.
5 அவர் என்னிடம், "மனிதா, உன் கண்களை உயர்த்தி வடக்கே பார்" என்றார். நான் என் கண்களை உயர்த்தி வடக்கே நோக்க, இதோ, பலிபீடத்தின் வாயிலுக்கு வடக்கேயிருந்த முற்றத்தில் கோபமூட்டும் அந்தச் சிலை தென்பட்டது.
6 அப்போது அவர் என்னிடம், "மனிதா, அவர்கள் செய்வதைப் பார்க்கிறாயா? நமது திருத்தலத்தினின்று நம்மைத் துரத்துவதற்காக இஸ்ராயேல் வீட்டார் செய்கிற மாபெரும் அக்கிரமத்தைக் காண்கிறாயா? இதிலும் பெரிய அக்கிரமத்தைப் பார்க்கப்போகிறாய்" என்றார்.
7 பின்பு அவர் கோயில் மண்டப வாயிலுக்குக் கொண்டு போனார்; அங்கே சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.
8 அவர் "மனிதா, நீ சுவரிலே ஒரு துவாரமிடு" என்று எனக்குச் சொன்னார். நான் சுவரிலே துவாரமிடும் போது அங்கே ஒரு வாயிற் படியைக் கண்டேன்.
9 நீ உள்ளே நுழைந்து அங்கே அவர்கள் செய்கிற கொடிய அக்கிரமங்களைப் பார்" என்றார்.
10 நான் உள்ளே நுழைந்து பார்க்கும் போது எல்லா விதமான ஊர்ந்து செல்லும் உயிரினங்கள், வெறுப்புக்குரிய மிருகங்கள் ஆகியவற்றின் சாயலான படிமங்களையும், இஸ்ராயேல் மக்கள் செய்து வைத்த எல்லாச் சிலைகளையும் கண்டேன்; அவை சுவரைச் சுற்றிலும் வரையப்பட்டிருந்தன.
11 அவற்றின் முன் இஸ்ராயேல் மக்களின் மூப்பர் எழுபது பேரும் நின்று கொண்டிருந்தனர்; அவர்களின் நடுவில் சாப்பானின் மகனாகிய யேசோனியாசும் நின்று கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் தூபக்கலசத்தைப் பிடித்திருந்தார்கள்; அதினின்று நறுமணப் புகை மிகுதியாய் எழும்பிற்று.
12 அப்போது ஆண்டவர், "மனிதா, இஸ்ராயேலின் மூப்பர்கள் இருளிலே தத்தம் அறைகளில் மறைவாகச் செய்கிறதை நீ கண்கூடாய்க் கண்டாயன்றோ? அவர்கள், 'ஆண்டவர் எங்களைப் பார்க்கிறார் அல்லர், ஆண்டவர் நாட்டினைக் கைவிட்டு விட்டார்' என்கிறார்கள் அல்லவா?" என்றார்.
13 அவரே தொடர்ந்து: "நீ கொஞ்சம் திரும்பி பார்; இதை விடப் பெரிய அக்கிரமம் இவர்கள் செய்வதைக் காண்பாய்" என்றார்.
14 அப்பொழுது ஆண்டவர் கோயிலின் வடக்கு வாயிலின் வழியாய் என்னைக் கூட்டிக் கொண்டு போனார்; ஆங்கே அதோனீஸ் சிலையின் முன்பாக அழுது கொண்டிருந்த பெண்களைக் கண்டேன்.
15 அப்போது அவர், "மனிதா, பார்த்தாயா? இன்னும் இதனை விடப் பெரிய அக்கிரமத்தைக் காண்பாய்" என்றார்.
16 அவர் என்னைக் கோயிலின் மூலதானத்தினுள் கூட்டிச் சென்றார்; கோயிலின் வாயிற்படியில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் ஏறத்தாழ இருபத்தைந்து பேர் இருந்தனர்; அவர்கள் முதுகைக் கோயிலுக்கும், முகத்தைக் கீழ்த்திசைக்கும் திருப்பி வைத்துக் கொண்டு கிழக்கில் தோன்றிய கதிரவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
17 அவர் என்னை நோக்கி: "மனிதா, இவர்கள் செய்கிறதைப் பார்த்தாயா? யூதாவின் குலத்தினர் இங்கே செய்யும் அக்கிரமங்கள் அற்பமானவையோ? தங்கள் அக்கிரமத்தால் நாடு முழுவதையும் நிரப்பி நமது கோபத்தை மூட்டுகிறார்களே! இதோ, திராட்சைக் கொடியை எடுத்து முத்தி செய்கிறார்கள், பார்.
18 ஆகையால் நாமும் அவர்களைக் கோபத்தோடேயே நடத்துவோம்; நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டாது. நாம் அவர்கள் மீது தயை கூர மாட்டோம்; அவர்கள் எவ்வளவு தான் உரத்த குரலில் கூவி அழைத்தாலும் நாம் செவிசாய்க்க மாட்டோம்" என்றார்.
அதிகாரம் 09
1 பின்னர் அவர் என் காதுகளில் உரக்கக் கூவி, "நகரத்தின் கொலைஞர்களே, இங்கே வாருங்கள், உங்கள் கையில் கொலைக் கருவியை ஏந்திவாருங்கள்" என்று சொன்னார்.
2 இதோ, ஆறு கொலைஞர்கள் தத்தம் கைகளில் கொலைக் கருவியைப் பிடித்துக் கொண்டு, வடதிசையை நோக்கியிருக்கும் உயர்ந்த வாயிலின் வழியாய் வந்தார்கள்; அவர்களோடு கூடச் சணல் நூலாடையணிந்து, எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த மனிதன் ஒருவன் இருந்தான்; இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றார்கள்.
3 அப்பொழுது, இஸ்ராயேலின் ஆண்டவருடைய மகிமை கெருபீன் மேலிருந்து எழும்பி வீட்டின் வாயிற்படிக்கு வந்து நின்றது; சணல் நூலாடையணிந்து, இடையில் மைக்கூடு வைத்திருந்த மனிதனை ஆண்டவர் அழைத்தார்.
4 ஆண்டவர் அவனிடம், "நீ நகரமெல்லாம்- யெருசலேம் பட்டணம் முழுவதும் சுற்றி வந்து, அங்குச் செய்யப்படுகிற எல்லா அக்கிரமங்களுக்காகவும் வருந்திப் பெருமூச்சு விடுகிறவர்களின் நெற்றியில் அடையாளம் இடு" என்றார்.
5 நான் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்றவர்களிடம்: "நீங்கள் இவன் பின்னாலேயே பட்டணமெங்கும் போய் வெட்டுங்கள்; ஒருவரையும் தப்ப விடாதீர்கள்; மனமிரங்க வேண்டாம்.
6 கிழவர்களையும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று வீழ்த்துங்கள். ஆனால் எச்சசரிக்கை! நெற்றியில் அடையாளத்தைத் தாங்கியுள்ளவர்களைத் தொடாதீர்கள்; நமது பரிசுத்த இடத்திலிருந்தே இவ்வேலையைத் தொடங்குங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் கோயிலுக்கு முன் இருந்த கிழவர்களை முதலில் வெட்டத் தொடங்கினார்கள்.
7 பின்பு அவர் அவர்களை நோக்கி, "கொலையுண்டவர்களின் உடலால் முற்றத்தை நிரப்பிக் கோயிலை அசுத்தப்படுத்துங்கள், புறப்பட்டுப் போய், பட்டணத்திலுள்ளவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
8 எல்லாரையும் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த போது, நான் மட்டும் தனியாய் இருந்தேன்; அப்போது நான் முகங்குப்புற விழுந்து உரத்த குரலில், "ஐயோ, ஆண்டவராகிய இறைவா! உமது கோபத்தை யெருசலேமில் நிறைவேற்றி இஸ்ராயேலில் மீதியாய் விடப்பட்ட எல்லாரையுங் கூட அழிப்பீரோ?" என்று கத்தினேன்.
9 அவர் என்னைப்பார்த்து, "இஸ்ராயேல், யூதா வீட்டாரின் அக்கிரமம் நிரம்ப மிகுந்துவிட்டது; நாடு இரத்தப் பழியால் நிறைந்துள்ளது; பட்டணத்தில் அநீதி நிரம்பியுள்ளது; ஏனெனில் அவர்கள் 'ஆண்டவர் எங்களைக் காண்கிறார் அல்லர், ஆண்டவர் நாட்டினைக் கைவிட்டு விட்டார்' என்று சொல்லத் துணிந்தார்கள் அன்றோ!
10 ஆகையால் நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டாது; நாம் அவர்கள் மீது தயை கூர மாட்டோம்: ஆனால் அவர்களுடைய செயல்களின் பலனை அவர்கள் தலை மேல் வரச் செய்வோம்" என்றார்.
11 அப்பொழுது, இதோ சணல் நூலாடை அணிந்து, இடையில் மைக்கூடு வைத்திருந்த மனிதன் வந்து, "நீர் எனக்குக் கட்டனையிட்டவாறே செய்து முடித்தேன்" என்றான்.
அதிகாரம் 10
1 பின்னர் நான் ஒரு காட்சி கண்டேன்: கெருபீம்களின் தலை மீதிருந்த மண்டலத்தில் நீலமணியாலிழைத்த அரியணையின் உருவம் போல் ஒன்று தென்பட்டது.
2 அப்போது ஆண்டவர் சணல் நூலாடை அணிந்திருந்தவனிடம், "கெருபீம்களுக்குக் கீழே இருக்கும் சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபீம்களின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கைநிறைய வாரிப் பட்டணத்தின் மீது வீசு" என்றார். அவ்வாறே அவன் செய்தான்; நான் கண்டேன்.
3 அவன் உள்ளே நுழையும் போது, கெருபீம்கள் கோயிலின் வலப்புறத்தில் நின்று கொண்டிருந்தன; அப்போது மேகம் ஒன்று உள் முற்றத்தை மூடிக்கொண்டது.
4 ஆண்டவரின் மகிமை கெருபீம்கள் மேலிருந்து எழும்பி கோயிலின் வாயிற்படிக்கு வந்தது; ஆலயம் முழுதும் மேகம் நிறைந்திருந்தது. கோயிலோ ஆண்டவரது மகிமையின் பேரொளியால் நிரம்பிற்று.
5 கெருபீம்களுடைய இறக்கைகளின் இரைச்சல் வெளி முற்றம் வரையில் கேட்டது; அது எல்லாம் வல்லவர் பேசுங் குரல் போல் இருந்தது.
6 சணல் நூலாடை அணிந்தவனுக்கு, "நீ கெருபீம்களின் நடுவிலுள்ள சக்கரங்களிடையிலிருக்கும் அக்கினியை எடு" என்று கட்டளையிட்டவுடனே, அவன் போய்ச் சக்கரங்களின் அருகில் நின்றான்.
7 அந்நேரத்தில் ஒரு கெருபீம் தன் கையை நீட்டிக் கெருபீம்களின் நடுவில் உள்ள நெருப்பை எடுத்து, சணல் நூலாடை அணிந்திருந்தவன் கையில் கொடுக்க, அவன் அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
8 அப்போது கெருபீம்களுடைய இறக்கைகளின் கீழ் மனிதனின் கைச் சாயல் காணப்பட்டது.
9 இதோ, கெருபீம்களின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன்; ஒவ்வொரு கெருபீம் அருகில் ஒரு சக்கரம் இருந்தது; ஒவ்வொன்றுக்கும் (கெருபீம்) அருகில் தனித்தனிச் சக்கரம் இருந்தது; சக்கரங்கள் பளிங்கு போல மின்னின;
10 அவை நான்கும் ஒரே வடிவாய் இருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றிற்று.
11 அவை ஒடும்போது நாற்றிசையிலும் ஒடும்; ஒடும் போது அங்குமிங்கும் திரும்ப மாட்டா; ஒரு சக்கரம் ஒடும் இடத்திற்கே மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் ஒடின.
12 அவை முழுவதும், கழுத்து, கை, இறக்கைகள், சக்கரங்களின் வட்டங்கள் யாவும் கண்களால் நிறைந்து இருந்தன; சக்கரத்தைச் சுற்றிலும் அவ்வாறே நிறைந்திருந்தது.
13 சூழல் சக்கரங்கள்" என்பது அவற்றின் பெயர் எனக் கேட்டறிந்தேன்.
14 ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது கெருபீம் முகமும், இரண்டாவது மனிதா முகமும், மூன்றாவது சிங்க முகமும், நான்காவது கழுகு முகமும் இருந்தன.
15 கெருபீம்கள் மேலே உயர்ந்தன; கேபார் நதியருகில் நான் கண்ட மிருகங்கள் இவைகளே.
16 கெருபீம்கள் நடக்கும் போது சக்கரங்களும் அவற்றின் அருகில் ஒடும்; பூமியில் மேலெழும்பக் கெருபீம்கள் தங்கள் இறக்கைகளை விரிக்கும் போதோ, சக்கரங்கள் அவற்றின் அருகிலேயே இருந்தன.
17 அவை நிற்கும் போது இவையும் நிற்கும்; அவை மேலே எழும்பும் போது இவையும் மேலே எழும்பும்; ஏனெனில் மிருகங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
18 ஆண்டவரின் மகிமை கோயிலின் வாயிற்படியை விட்டுக் கெருபீம்கள் மேல் வந்து நின்றது.
19 நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கெருபீம்கள் தங்கள் இறைக்கைகளை விரித்துப் பூமியை விட்டு மேலெழும்பின; அவை புறப்படுகையில் சக்கரங்களும் அவற்றுடன் புறப்பட்டன; ஆண்டவருடைய கோயிலின் கீழ்த்திசை வாயிற்படியில் வந்து நின்றன; இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை அவற்றின் மேல் இருந்தது.
20 கேபார் நதியருகில் இஸ்ராயேலின் கடவுளுக்குக் கீழே அன்று நான் கண்ட மிருகங்கள் இவையே; அவற்றுக்குக் கெருபீம்கள் என்பது பெயர் என அறிந்து கொண்டேன்.
21 அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன; இறக்கைகளின் கீழ் மனித கையின் சாயல் தென்பட்டது.
22 இவற்றின் முகச்சாயல், நான் கேபார் நதியருகில் கண்டதைப் போலவே இருந்தது. அவை ஒவ்வொன்றும் நேராகச் சென்றன.
அதிகாரம் 11
1 மீண்டும் ஆவி என்னைத் தூக்கி ஆண்டவருடைய கோயிலின் கிழக்கு வாயிலுக்குக் கொண்டு வந்து, கதிரவன் தோன்றும் திசையை நோக்கியிருக்கும் வாயிலில் நிறுத்திற்று; அங்கே வாயிலின் முற்றத்திலே இருபத்தைந்து பேரைப் பார்த்தேன்; அவர்களின் நடுவில் மக்களின் தலைவர்களான ஆஜுர் மகனாகிய யெசோனியாசையும், பனாயியாஸ் மகனாகிய பெல்தியாசையும் கண்டேன்.
2 அப்போது ஆண்டவர், "மனிதா இந்தப் பட்டணத்தில் அக்கிரமம் செய்பவர்களும், தீய ஆலோசனை தருபவர்களும் இவர்கள் தான்.
3 இவர்கள், 'நம்முடைய வீடுகள் கட்டி வெகுநாட்கள் ஆகவில்லையா? இந்த நகரந்தான் அண்டா, நாம் அதிலுள்ள இறைச்சி' என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
4 ஆகையால், மனிதா, அவர்களைக் குறித்து நீ இறைவாக்குக் கூறு" என்று என்னிடம் சொன்னார்.
5 அப்போது ஆண்டவருடைய ஆவி வேகத்தோடு இறங்கிற்று; அவர் எனக்குச் சொன்னார்: "நீ பேசு; ஆண்டவர் சொல்லுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, இவ்வாறு தான் நீங்கள் பேசினீர்கள். உங்கள் மனத்திலுள்ள நினைவுகள் நமக்குத் தெரியுமே!
6 நீங்கள் இப்பட்டணத்தில் பலரைக் கொலைசெய்தீர்கள்; அதன் தெருக்களைக் கொலையுண்டவர்களின் உடல்களால் நிரப்பினீர்கள்.
7 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் சொல்லுகிறார்: உங்களால் கொல்லப்பட்டுப் பட்டணத்தின் தெருக்களில் போடப்பட்டவர்கள் தான் இறைச்சியாய் இருக்கிறார்கள்; பட்டணந் தான் அண்டா. நாம் அதன் நடுவிலிருந்து உங்களைத் துரத்துவோம்.
8 நீங்கள் வாளுக்கு அஞ்சினீர்கள்; நாமோ உங்கள் மீது வாளையே வரச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்.
9 நாம் உங்களைப் பட்டணத்தினின்று துரத்தியடித்து, மாற்றார் கைகளில் ஒப்புவித்து உங்கள் மீது நீதி செலுத்துவோம்.
10 வாளால் வெட்டுண்டு மடிவீர்கள்; இஸ்ராயேல் நாட்டின் எல்லையில் உங்களைத் தீர்ப்பிடுவோம்; அப்போது தான் நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
11 இந்த நகரம் உங்களுக்கு அண்டாவாகவோ, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாகவே இருக்கமாட்டீர்கள்; இஸ்ராயேல் நாட்டின் எல்லையிலேயே உங்களுக்கு நீதி வழங்கப்படும்.
12 அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்; ஏனெனில் நீங்கள் நம் கட்டளைகளின்படி நடக்கவில்லை; நம் நீதிச் சட்டங்களைக்கடைப் பிடிக்கவில்லை; அதற்கு மாறாக, உங்களைச் சுற்றியுள்ள புறவினத்தாரின் சட்டங்களின் படி நடந்தீர்கள்."
13 நான் இன்னும் இறைவாக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பனாயியாஸ் மகனாகிய பெல்தியாஸ் செத்து வீழ்ந்தான். அதைக் கண்ட நான் முகங்குப்புற விழுந்து உரதக்குரலில், "ஐயோ, ஆண்டவராகிய இறைவனே! இஸ்ராயேல் மக்களில் மீதியாய் இருப்பவர்களையும் நீர் முற்றிலும் அழிக்கப் போகிறீரோ?" என்று கதறினேன்.
14 அப்போது ஆண்டவர் எனக்குச் சொன்னார்:
15 மனிதா, உன் சகோதரர்கள், ஆம், நெருங்கிய உறவினர், இஸ்ராயேல் வீட்டார் அனைவருமாகிய இவர்களைக் காட்டித்தான், 'அவர்கள் ஆண்டவரை விட்டுத் தொலைவில் போய் விட்டார்கள்; எங்களுக்குத் தான் இந்த நாடு உரிமையாய்க் கொடுக்கப்பட்டது' என்று யெருசலேமில் மக்களுக்குச் சொல்கிறார்கள்.
16 இவர்களைக் குறித்து நீ சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களைப் புறவினத்தார் நடுவில் வாழும்படி அனுப்பியிருந்தாலும், தூர நாட்டுக்குத் துரத்தி விட்டிருந்தாலும் அவர்கள் போய் வாழ்கின்ற இடத்தில் நாம் அவர்களுக்குச் சிறிது காலத்திற்காகவாவது பரிசுத்த தலம் போல் இருந்தோம்.'
17 ஆகையால், 'சிதறடிக்கப்பட்ட நாட்டிலிருந்து நாம் உங்களை ஒன்றுசேர்ப்போம், புறவினத்தார் நடுவிலிருந்து உங்களைக் கூட்டி வருவோம், இஸ்ராயேல் நாட்டை உங்களுக்குக் கொடுப்போம் என்கிறார் ஆண்டவர்' என்று நீ சொல்.
18 அவர்கள் அங்கு வந்து அருவருப்பான சிலைகளையும் இழிந்த செயல்களையும் அதிலிருந்து அகற்றுவார்கள்.
19 நாம் அவர்களுக்கு ஒரு மனப்பட்ட இதயத்தை அருளுவோம்; அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியை ஊட்டுவோம்; கல்லான இதயத்தைக் எடுத்து விட்டு உணர்ச்சியுள்ள இதயத்தைக் கொடுப்போம்.
20 அப்போது அவர்கள் நம் கட்டளைகளின்படி நடப்பார்கள்; நம் நீதிச்சட்டங்களைக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் நமக்கு மக்களாகவும், நாம் அவர்களுக்குக் கடவுளாகவும் இருப்போம்.
21 ஆனால் யாருடைய உள்ளம் அருவருப்பான சிலைகளையும், இழிந்த செயல்களையும் பின்பற்றுகிறதோ அவர்கள் குற்றத்தை அவர்கள் தலை மீதே சுமத்துவோம், என்கிறார் ஆண்டவர்."
22 அப்போது கெருபீம்கள் தங்கள் இறக்கைகளை விரித்து மேலே எழும்ப, சக்கரங்களும் அவற்றுடன் எழும்பின; இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை அவற்றின் மீது இருந்தது.
23 பிறகு ஆண்டவரின் மகிமை பட்டணத்தின் நடுவிலிருந்து எழும்பி வெளியேறிக் கீழ்த்திசையிலுள்ள மலை மீது வந்து நின்றது.
24 அப்போது ஆண்டவரின் ஆவி பரவசத்தில் இருந்த என்னைத் தூக்கி கல்தேயாவில் சிறைப்பட்டு இருந்தவர்கள் நடுவில் தேவ ஆவியினால் கொண்டு போய் விட்டது.
25 ஆண்டவர் எனக்கு அருளிய காட்சிகள் அனைத்தையும் சிறைப்பட்டவர்களுக்குச் சொன்னேன்.
அதிகாரம் 12
1 ஆண்டவரின் வாக்கு எனக்குக் கூறியது:
2 மனிதா குழப்பக்காரர்கள் நடுவில் நீ வாழ்கிறாய்; கண்ணிருந்தும் அவர்கள் காண்பதில்லை; காதிருந்தும் அவர்கள் கேட்பதில்லை; அவர்களோ அடங்காத மக்கள்.
3 ஆனால் மனிதா, நீ வெளிநாட்டுக்கு அடிமையாய்ப் போகிறவனுக்குரிய பொருட்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் பார்க்கும்படி பட்டப் பகலில் புறப்படு; உன் உறைவிடத்தை விட்டு வேறோர் இடத்திற்குப் போக வெளிப்படையாய்ப் புறப்பட்டுப் போ. கலக்காரராய் இருப்பினும் அவர்கள் ஒருவேளை அதைக் கண்டுணர்வார்கள்.
4 அடிமையாய் வெளிநாட்டுக்குப் போகிறவன் போல் அவர்கள் பார்க்கும் படி உன் பொருட்களை பகல் வேளையில் எடுத்து வை; தன் நாட்டை விட்டுப் பிற நாட்டுக்குப் போகிறவன் போல் அவர்கள் காணும்படி மாலை வேளையில் புறப்படு.
5 அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நீ உன் வீட்டுச் சுவரில் வழி உண்டாக்கி, அதன் வழியாய் வெளியேறு.
6 அவர்கள் பார்க்கும்படி உன் மூட்டையை எடுத்துத் தோளின் மேல் வைத்துக் கொண்டு வெளியே இருளில் தூக்கிக்கொண்டு போ; தரையைக் காணாதபடி உன் முகத்தை மூடிக்கொள்; ஏனெனில் இஸ்ராயேல் மக்களுக்கு உன்னை ஒர் அடையாளமாக வைத்திருக்கிறோம்."
7 நான் ஆண்டவரின் கட்டளைப்படியே செய்தேன்; அடிமையாய் வெளிநாடு செல்பவனைப் போல் என் பொருட்களை வெளியில் எடுத்து வைத்தேன்; மாலை வேளையில் என் கையால் சுவரில் துவாரமிட்டு, இருளில் அதன் வழியாய் வெளியேறி, எல்லாரும் பார்க்க என் மூட்டையைத் தூக்கிக் கொண்டு போனேன்.
8 காலையில் ஆண்டவர் என்னிடம் பேசினார்:
9 மனிதா, கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்கள் உன்னை நோக்கி, ' நீ செய்கிறது என்ன?' என்று கேட்க வில்லையா?
10 அவர்களுக்கு நீ சொல்லவேண்டிய மறுமொழி இதுவே: 'ஆண்டவராகிய இறைவன் சொல்லுகிறார்: இந்த இறைவாக்கு யெருசலேமின் அதிபதியையும், அதில் வாழும் இஸ்ராயேல் மக்களையும் பற்றியது ஆகும்.'
11 தொடர்ந்து சொல்: 'நான் உங்களுக்கு ஒர் அடையாளம்; நான் செய்தது போலவே அவர்களுக்குச் செய்யப் படும்; அடிமைகளாய் ஊரூராய்ச் செல்லும் சிறைக்கைதிகளாய் இருப்பார்கள்.'
12 அவர்கள் நடுவில் வாழும் அதிபதி தன் தோள் மீது மூட்டையைத் தூக்கிக் கொண்டு இருளிலே வெளியேறுவான்; அவனை வெளியேற்றச் சுவரில் துவாரமிடுவார்கள்; பூமியைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.
13 அவன் நமது கண்ணியில் சிக்கும்படி அவன் மீது வலையை வீசுவோம்; அவனைப் பிடித்துக் கல்தேயர் நாட்டிலுள்ள பபிலோனுக்குக் கொண்டு போவோம்; ஆனால் அதனையும் அவன் பார்க்காமலே சாவான்.
14 அவனைச் சூழ்ந்துள்ளவர்களையும், அவனுடைய மெய்க்காப்பாளர்களையும் இராணுவங்களையும் நாற்றிசையிலும் சிதறடிப்போம்; அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வோம்.
15 பல நாடுகளிலும் புறவினத்தார் நடுவில் அவர்களைச் சிதறடிக்கும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
16 அவர்கள் வந்து சேரும் மக்களிடத்தில் தங்கள் அக்கிரமங்கள் யாவற்றையும் விவரமாய் அறிவிக்கும்படி அவர்களுள் சிலரை வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளை நோய்க்கும் ஆளாக்காமல் காப்பாற்றுவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
17 தொடர்ந்து ஆண்டவர் என்னிடம் கூறினார்:
18 மனிதா, நீ அச்சத்தோடு அப்பத்தை உண்டு, நடுக்கத்தோடும் கலக்கத்தோடும் தண்ணீரைப் பருகு.
19 அப்போது மக்களை நோக்கிக் கூறு: இஸ்ராயேல் நாட்டு யெருசலேம் மக்களைப் பற்றி ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இவர்கள் அச்சத்தோடு அப்பத்தை உண்டு திகிலோடு தண்ணீர் குடிப்பார்கள்; ஏனெனில் இந்த நாட்டு மக்களின் அக்கிரமத்தின் காரணமாக இவை யாவும் குறைந்து போகும்; நாடும் பாழாய்ப் போகும்.
20 அவர்கள் இப்பொழுது வசிக்கும் பட்டணங்கள் பாலைவனமாய் மாறிப் போகும்; நாடும் காடாகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
21 மறுபடியும் ஆண்டவர் எனக்குச் சொன்னது:
22 மனிதா, 'காட்சியெல்லாம் வீண், அவை நிறைவேற நாளாகும்' என்று இஸ்ராயேல் மக்கள் நடுவில் ஒரு பழமொழி ஏன் வழங்கி வருகிறது?
23 ஆகையால் அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தப் பழமொழிக்கு நாம் ஒரு முடிவு காண்போம்; இனி அதை இஸ்ராயேல் மக்கள் வழங்கமாட்டார்கள்.' காட்சிகள் யாவும் றிறைவேறும் நாள் அருகில் இருக்கிறது என்று சொல்.
24 ஏனெனில், இஸ்ராயேல் மக்கள் நடுவில் இனிப்பொய்க் காட்சிகளும் சிலேடையான இறைவாக்கும் இல்லாமற் போகும்.
25 ஆண்டவராகிய நாம் விரும்பும் வார்த்தையை நாமே பேசுவோம்; நாம் சொல்லும் வார்த்தை யாவும் தாமதமின்றி நிறைவேறும்; கோபத்தை மூட்டுகிற மூர்க்கர்களே, உங்கள் நாட்களில் நாம் சொன்ன வார்த்தையை உங்கள் நாளிலேயே நிறைவேற்றுவோம், என்கிறார் ஆண்டவர்."
26 திரும்பவும் ஆண்டவர் என்னை நோக்கி,
27 மனிதா, 'இவன் கண்ட காட்சி நிறைவேற நாள் சொல்லும், எதிர்காலத்தைக் குறித்தே இவன் இறைவாக்கு உரைக்கிறான்' என்று இஸ்ராயேல் மக்கள் சொல்லுகிறார்கள்.
28 ஆகையால், நீ அவர்களுக்கு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது வார்த்தை ஒன்றாகிலும் இனித் தாமதியாது; நாம் சொன்ன வாக்கு நிறைவேறும் என்கிறார் ஆண்டவராகிய இறைவன், என்று சொல்" என்றார்.
அதிகாரம் 13
1 ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, தங்கள் மனம் போல் இறைவாக்கு சொல்லத் துணிகிற இஸ்ராயேலின் தீர்க்கதரிசிகளுக்கு நீ சொல்ல வேண்டியது இதுவே: ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்:
3 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஒரு காட்சியையும் காணாமல் தங்கள் மனத்தின் உற்சாகத்தையே நாடும் மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு!
4 இஸ்ராயேல், உன் தீக்கதரிசிகள் பாலைநிலைத்தில் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள்.
5 ஆண்டவருடைய நாளில் போரில் நிலைநிற்கும் படி நீங்கள் பகைவனுக்கு எதிர்த்து நின்றதுமில்லை; இஸ்ராயேல் வீட்டார்க்காகச் சுவர் எழுப்பியதுமில்லை.
6 அவர்கள் போலிக் காட்சிகளைக் கண்டு பொய் வாக்குகளைச் சொன்னார்கள்; ஆண்டவர் தங்களை அனுப்பாதிருந்தாலும், 'ஆண்டவர் சொன்னார்' என்று சொல்லி, தாங்கள் உரைத்த வாக்கு நிறைவேறும் என்று சாதிக்கவும் முற்பட்டார்கள்.
7 நீங்கள் கண்டது போலிக் காட்சியே அல்லவா? நீங்கள் கூறியது பொய்வாக்கு அன்றோ? நாம் உங்களிடம் பேசாதிருக்க, நீங்கள் 'ஆண்டவர் சொன்னார்' என்று எவ்வாறு சொல்லலாம்?"
8 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீங்கள் போலிக் காட்சிகளைக் கண்டு, பொய் வாக்கைச் சொல்லியபடியால், இதோ நாமே உங்களுக்கு எதிராய் வருகிறோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
9 போலிக் காட்சியைக் கண்டு, பொய் வாக்கைப் பிதற்றும் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நமது கை ஒங்கும்; அவர்கள் நம் மக்களின் சங்கத்தில் இருக்க மாட்டார்கள்; இஸ்ராயேல் வீட்டாரின் அட்டவணையிலும் அவர்களுக்கு இடமிருக்காது; இஸ்ராயேல் நாட்டுக்குள் அவர்கள் நுழையவே மாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்.
10 சமாதானம் இல்லாதிருந்தும், 'சமாதானம் உண்டு' என்று சொல்லி நம் மக்களை அவர்கள் ஏமாற்றினார்கள்; நம் மக்கள் சுவரெழுப்பும் போது இவர்கள் உறுதியற்ற சாந்தை அதற்குப் பூசினார்கள்.
11 சாரமில்லாச் சாந்தைப் பூசுகிறவர்களிடம், 'அந்தச் சாந்து இடிந்து விழுந்துபோம்' என்று சொல்; ஏனெனில் அடாத மழை பெய்யும்; கல்மாரி மழை பெய்யச் செய்வோம்; கடும் புயல் காற்று எழும்பச் செய்வோம்.
12 அந்தச் சுவர் விழும் போது, 'நீங்கள் பூசிய சாந்து எங்கே?' என்று உங்களைக் கேட்க மாட்டார்களா?
13 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது சீற்றத்தில் பெரும் புயல்காற்று எழும்பச் செய்வோம்; நமது கோபத்தில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும் மழை பெய்யும்; நமது சினத்தில் அனைத்தையும் அழிக்கக்கூடிய பெருங்கற்கள் விழும்.
14 அப்பொழுது நீங்கள் சாரமில்லாச் சாந்தினால் பூசிய சுவர் இடிந்து தரைமட்டமாகும்; அதன் அடிப்படை பூமியினின்று வெளியாக்கப்படும்; சுவர் விழ, நீங்களும் அதனோடு விழுந்து மடிவீர்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
15 சுவர் மேலும், அதில் சாரமற்ற சாந்தைப் பூசியவர்கள் மேலும் இவ்வாறு நமது கோபத்தைத் தீர்த்துக் கொண்டு, 'சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசியவர்களுமில்லை,
16 அதாவது யெருசலேமைக் குறித்து இறைவாக்குரைத்து, சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று காட்சி கண்டதாகச் சாதித்த தீர்க்கதரிசிகளுமில்லை' என்று உங்களுக்கு உரைப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
17 "மனிதா, தங்கள் மனம் போலத் தீர்க்கதரிசனம் சொல்லும் உன் இனத்துப் பெண்களுக்கு விரோதமாய் உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை:
18 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஆன்மாக்களை வேட்டையாட வேண்டி எல்லாக் கைளிலும் காப்பு கட்டி, ஒவ்வொருவருடைய உயரத்திற்கும் ஏற்ப தலைகளுக்கு முக்காடு செய்யும் தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு! எம் மக்களின் ஆன்மாக்களை வேட்டையாடி, மற்றவர்களின் ஆன்மாக்களை உங்கள் பயன்கருதி நீங்கள் காத்துக்கொள்வீர்களோ?
19 பொய்களைக் கேட்டு நம்பும் எம் மக்களிடம் பொய்களைச் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியவர்களைச் சாகடித்து, உயிரோடிருக்கத் தகாதவர்களை உயிரோடு காத்தீர்கள்; இவ்வாறு, கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும், ஒருசில அப்பத் துண்டுகளுக்காகவும் நம் மக்கள் நடுவில் நம்மைப் பரிசுத்தமற்றவராய் ஆக்கினீர்கள்.
20 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் சொல்லுகிறார்: இதோ, பறவைகளைப் போல் ஆன்மாக்களை வேட்டையாடிப் பிடிக்கும்படி நீங்கள் கைகளில் கட்டியிருக்கும் (மந்திரக்) காப்புகளுக்கு எதிராய் எழும்பி, அவற்றை உங்கள் கைகளிலிருந்து பிய்த்தெறிவோம்; நீங்கள் வேட்டை பிடித்திருக்கும் ஆன்மாக்களை (பறவைகளைப் போல்) விடுதலை செய்வோம்.
21 உங்கள் முக்காடுகளையும் நாம் கிழித்தெறிவோம்; உங்கள் கைகளினின்று நம் மக்களை விடுவிப்போம்; இனி அவர்கள் உங்களுக்கு இரையாக இருக்கமாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
22 நாம் புண்படுத்தாத நீதிமானின் உள்ளத்தை நீங்கள் வஞ்சகமாய்ப் புண்படுத்தினீர்கள்; தீயவனையோ, அவன் தன் தீய நெறியை விட்டுத் திரும்பி தன்னைக் காத்துக் கொள்ளாதவாறு ஊக்குவித்தீர்கள்;
23 ஆகையால் இனி நீங்கள் போலிக் காட்சிகளைக் காணவுமாட்டீர்கள்; சகுன சாத்திரம் சொல்லவும் போவதில்லை; உங்கள் கைகளினின்று நம் மக்களை நாம் விடுவிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்."
அதிகாரம் 14
1 அப்பொழுது இஸ்ராயேல் மூப்பர்களுள் சிலர் என்னிடம் வந்து, என் முன் உட்கார்ந்தார்கள்.
2 அந்நேரத்தில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
3 மனிதா, இந்த மனிதர்கள் அருவருப்பான சிலைகளின் பற்றைத் தங்கள் உள்ளத்தில் கொண்டிருக்கிறார்கள்; தங்களுக்கு இடறலாய் உள்ள அக்கிரமத்தைத் தங்கள் கண்முன் வைத்திருக்கிறார்கள்; இவர்கள் நம்மிடம் வந்து கேள்வி கேட்டு மறுமொழி பெற நாம் விடுவோமா?
4 ஆகையால், நீ அவர்களோடு பேசி அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாருள் சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து தனக்கு இடறலாய் இருக்கும் அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்திருக்கும் எவனாவது இறைவாக்கினரிடம் வந்து, அவர் வழியாய் நம்மைக் கேள்வி கேட்டால், ஆண்டவாராகிய நாமே அவனுடைய எண்ணற்ற சிலைவழி பாட்டுச் செயல்களுக்கேற்ப மறுமொழி அளிப்போம்.
5 சிலைகளினால் என்னை விட்டு விலகிப் போயிருக்கும் இஸ்ராயேல் வீட்டாரின் உள்ளங்களை இவ்வாறு நாம் மடக்கிப் பிடிப்போம்.
6 ஆகையால் நீ இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மனந்திரும்புங்கள்; சிலைகளை வெறுத்துத் திரும்புங்கள். நீங்கள் செய்யும் அருவருப்பானவற்றையெல்லாம் விட்டு, உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.
7 ஏனெனில் இஸ்ராயேல் குலத்தினன் ஒருவனோ, இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழும் அந்நியன் ஒருவனோ நம்மை விட்டகன்று, சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து, தனக்கு இடறலாயுள்ள அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்துக் கொண்டே நம்முடைய இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாய் நம்மிடம் கேள்வி கேட்டால், ஆண்டவராகிய நாமே அவனுக்கு மறுமொழி அளிப்போம்.
8 அத்தகைய மனிதனுக்கு விரோதமாய் நம் முகத்தைத் திருப்பி, அவனை மற்றவர்களுக்கு அடையாளமாகவும் பழமொழியாகவும் வைப்போம்; நம் மக்களின் நடுவிலிருந்தே அவனைக் கிள்ளியெறிவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
9 இறைவாக்கினன் ஒருவன் தவறாக ஒன்றைச் சொல்வானாயின் ஆண்டவராகிய நாமே அவனைத் தவறச் செய்தோம்; அவனுக்கு எதிராய் நமது கரத்தை நீட்டி, இஸ்ராயேல் மக்களின் நடுவிலிருந்து அவனை அழிப்போம்.
10 அவரவர் தத்தம் தண்டனையை ஏற்பார்கள்; இறைவாக்கினனுக்கும், இறைவாக்கினனைக் கேட்டு விசாரித்தவனுக்கும் ஒரே வகையான தண்டனையே தரப்படும்.
11 இவ்வாறு, இஸ்ராயேல் மக்கள் இனி நம்மை விட்டுப் பிரியாமலும், தங்கள் அக்கிரமங்களால் அசுத்தப்படாமலும் இருப்பார்கள்; அப்போது அவர்கள் நம் மக்களாகவும், நாம் அவர்களின் கடவுளாகவும் இருப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
12 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
13 மனிதா, ஒரு நாடு நமக்கு விரோதமாய் நடந்து பாவஞ் செய்தால், கோதுமை சேமிப்பாகிய அதன் ஊன்று கோலை முறித்து, பஞ்சத்தை அனுப்பி அந்நாட்டிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் நாசமாக்குவதற்காக, அதற்கு விரோதமாய் நாம் நமது கரத்தை நீட்டும் போது,
14 நோவே, தானெல், யோபு ஆகிய மூவர் அங்கிருந்தால், தங்கள் நீதியினால் தங்கள் உயிரை மட்டுமே காத்துக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 நாடு முழுவதும் கொடிய மிருகங்களைச் சுற்ற விட்டு, அவை நாட்டைப் பாழாக்கி வர, அந்த மிருகங்களின் காரணமாய் அந்நாட்டில் யாரும் நடமாட முடியாதிருந்தாலும்,
16 அந்த மூவரும் அதிலிருந்தால்- நம் உயிர் மேல் ஆணை!- அவர்கள் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள்; ஆனால் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தப்புவிக்க அவர்களால் முடியாது; நாடும் பாலைநிலமாய்ப் போகும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
17 அல்லது அந்த நாட்டின் மீது வாளை வரச்செய்து, 'வாளே, நீ நாடெல்லாம் ஊடுருவிப் போய், மனிதர்களையும், மிருகங்களையும் வெட்டி வீழ்த்து' என்று நாம் ஏவினாலும்,
18 அந்த மூவரும் அதிலிருந்தால் - நாம் உயிர்மேல் ஆணை!- அவர்கள் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள்; தங்கள் புதல்வர், புதல்வியரைத் தப்புவிக்க அவர்களால் முடியாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
19 அல்லது நாம் அந்த நாட்டில் கொள்ளை நோயை அனுப்பி, நம் கோபத்தின் ஆத்திரத்தையும் அதன் மீது கொட்டி, இரத்தப் பழிவாங்கி மனிதரையும் மிருகங்களையும் அழித்தாலும்,
20 நோவே, தானெல், யோபு இவர்கள் அந்த நாட்டிலிருந்தால்- நம் உயிர் மேல் ஆணை!- தங்கள் நீதியினால் தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வார்கள்; தங்கள் புதல்வர், புதல்வியரைத் தப்புவிக்க அவர்களால் முடியாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
21 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அவ்வாறே நம்முடைய நான்கு பொல்லாத ஆக்கினைகளான வாள், பஞ்சம், கொடிய மிருகங்கள், கொள்ளை நோய் இவற்றை, மனிதர்களையும் மிருகங்களையும் அழிக்கும்படி யெருசலேமின் மீது அனுப்பும் போது,
22 தங்கள் புதல்வர், புதல்வியரை வெளியில் கூட்டிக் கொண்டு, அந்த ஆக்கினைகளுக்குத் தப்புகிறவர்கள் சிலர் இருந்தால், இதோ அவர்கள் உங்களிடம் வருகிறார்கள்; நீங்கள் அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் காணும் போது, நாம் யெருசலேமின் மேல் தீங்கையும் இன்னும் பல அழிவுகளையும் வரச் செய்தோம் என்ற உங்கள் துயரம் ஆற்றப்படும்.
23 நீங்கள் அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் காணும் போது உங்கள் துயரம் ஆற்றப்படும்; நாம் அதில் செய்தவற்றையெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்பதை அப்போது அறிவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 15
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, காட்டிலுள்ள மற்றெல்லாச் செடிகளையும் விடத் திராட்சைக் கொடி மட்டும் எவ்வகையில் சிறந்தது?
3 அதிலிருந்து வேலைப்பாட்டுக்கென மரம் எடுக்கப்படுகிறதா? எதேனும் சாமானை மாட்டித் தொங்க விடும் முளையேனும் அதனால் செய்ய முடியுமா?
4 இதோ, நெருப்புக்கிரையாக அது போடப்படும்; அதன் இரு முனைகளும் சுட்டெரிக்கப்பட்ட பின், அதன் நடுத்தண்டு வெந்து சாம்பலான பின், அது எதற்காவது பயன்படுமா?
5 அது நெருப்புக்கிரையாகு முன்பே ஒன்றுக்கும் பயன்படவில்லை! நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டு, வெந்து சாம்பலான பிறகுதானா பயன்படப் போகிறது?
6 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: காட்டு மரங்களுக்குள்ளே ஒன்றான திராட்சைக் கொடியை நெருப்புக்கு இரையாக நாம் போட்டது போல, யெருசலேம் மக்களையும் தீக்கிரையாக்குவோம்.
7 நமது முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவோம்; அவர்கள் நெருப்பிலிருந்து தப்பித்தாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்காமல் விடாது. நாம் நமது முகத்தை அவர்களுக்கு எதிராய்த் திருப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8 அவர்களின் நாட்டை நாம் பாழாக்குவோம், ஏனெனில், அவர்கள் நமக்குத் துரோகம் செய்தார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 16
1 மீண்டும் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, யெருசலேமுக்கு அதன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டிப் பேசு.
3 ஆண்டவராகிய இறைவன் யெருசலேமுக்குக் கூறுகிறார்: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே; உன் தந்தை ஒர் அமோரியன்; உன் தாய் ஒரு கெத்தியாள்.
4 நீ பிறந்த விவரம் இதுவே: நீ பிறந்த அன்று இன்னும் உன் தொப்புள்கொடி அறுக்கப்படவில்லை; நீ தண்ணீரால் சுத்தமாகக் கழுவப்படவில்லை; உப்பால் தேய்க்கப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவுமில்லை.
5 உன்மீது இரக்கப்பட்டு இக்காரியங்களில் எதையும் உனக்குச் செய்வாரில்லை; ஆனால் நீ வெளியிலே எறியப்பட்டாய்; பிறந்த நாளிலேயே நீ வெறுத்து ஒதுக்கப்பட்டாய்.
6 அவ்வழியாய்க் கடந்து போன நாமோ நீ உன் இரத்தத்தில் மிதிபடுவதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னிடம், 'பிழைத்திரு, வயல் வெளியில் வளரும் செடிபோல வளர்க' என்று சொன்னோம்.
7 நீயும் தேறி வளர்ந்தாய்; பெரியவளாகி ஆபரணங்களை அணிந்தாய். உன் கொங்கைகள் பருத்து வந்தன; கூந்தல் அடர்ந்து வளர்ந்தது; ஆனால் நீ அப்போது ஆடையின்றி நாணி நின்றாய்.
8 அவ்வழியாய்க் கடந்துபோன நாமோ உன்னருகில் வந்து, நீ பருவ மங்கையாய் இருப்பதைக் கண்டு, நமது ஆடையை உன்மேல் விரித்து, உன் நிருவாணத்தை மூடினோம்; பிறகு உனக்கு நாம் ஆணையிட்டு உன்னுடன் உடன்படிக்கை செய்தோம்; நீயோ நம்முடையவள் ஆனாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
9 நாம் உன்னைத் தண்ணீரால் கழுவி, இரத்தக் கறையை உன்னிடமிருந்து போக்கி, உனக்கு எண்ணெய் பூசினோம்.
10 சித்திரத் தையலாடையால் உன்னை உடுத்தி, சிவந்த செருப்புகளை அணிவித்து, மெல்லிய ஆடைகளால் மூடி, பட்டாடைகளையும் உனக்கு அளித்தோம்.
11 விலையுயர்ந்த அணிகலன்களால் உன்னை அழகு செய்து, கைக்குக் காப்புகளும், கழுத்துக்குப் பொற் சங்கிலியும் பூட்டினோம் .
12 மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகான மணிமுடியும் அணிவித்தோம்.
13 இவ்வாறு பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டு, மெல்லிய சித்திரத் தையலாடையையும், பலநிறமுள்ள புடவைகளையும் அணிந்து, தேனும் எண்ணெய்யும் மாவும் உண்டு, மிக்க அழகு வாய்ந்தவளாய், ஒர் அரசியாய் விளங்கினாய்.
14 உன் அழகின் காரணமாய் உன் பெயர் புறவினத்தார் நடுவில் மகிமை பெற்றது; ஏனெனில் நாம் உனக்குக் கொடுத்த மகிமையிலும் அழகிலும் நீ முற்றிலும் நிறைவு பெற்றவளாய் இருந்தாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 நீயோ உன் அழகை நம்பி, உன் மகிமையைப் பாராட்டிக் கொண்டு, விபசாரத்தில் ஈடுபட்டுப் போவார் வருவார்க்கெல்லாம் உன்னைக் கையளித்தாய்.
16 உன் ஆடைகளில் சிலவற்றை எடுத்து, இருபுறமும் தைக்கப்பட்ட மெத்தையைச் செய்து கொண்டு அதன் மேல் நீ வேசித்தனம் செய்தாய்; இதைப் போல் இதுவரையில் நடந்ததுமில்லை; இனி நடக்கப் போவதுமில்லை .
17 நாம் உனக்கு கொடுத்திருந்த பொன், வெள்ளி ஆபரணங்களைக் கொண்டே, நீ ஆண் உருவங்களைச் செய்து அவற்றோடு வேசித்தனம் செய்தாய்.
18 உன் சித்திரத் தையலாடையை எடுத்து, அதைக் கொண்டு அச்சிலைகளை மூடி அவற்றின் முன் நாம் தந்த எண்ணெய், நறுமணப் பொருட்களைப் படைத்தாய்.
19 நாம் உன் சாப்பாட்டுக்கெனக் கொடுத்த அப்பம், மாவு, எண்ணெய், தேன் இவற்றை நீ அவற்றின் முன் உயர்ந்த நறுமணம் வீசும்படி வைத்துப் படைத்தாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
20 நீ நமக்குப் பெற்ற புதல்வர், புதல்வியரை அவற்றுக்கு இரையாகப் பலியிட்டாயே, இது அற்பமான விபசாரமோ?
21 நீ நம் பிள்ளைகளைப் பலியிட்டு, அவற்றுக்கு அர்ப்பணம் செய்து கொடுத்தாய்.
22 இத்துணை அருவருப்பான அக்கிரமங்களையும், விபசாரங்களையும் செய்கையில், உன் இளம் வயதில் நீ நிருவாணமாயும், நாணம் நிறைந்தவளாயும், இரத்தத்தில் மிதிபட்டவளாயும் இருந்த நாட்களை நீ நினைக்கவே இல்லையே!
23 நீ இவ்வளவு அக்கிரமங்களையும் செய்த பிறகு (உனக்கு ஐயோ கேடு! ஐயோ கேடு, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்),
24 வேசிக் குடிலைக் கட்டிக் கொண்டு பொதுவிடங்களில் உன் விபசாரத் தொழிலுக்கு இடம் தயாரித்தாய்.
25 எல்லாத் தெருக்கோடிகளிலும் உன் விபசாரக் கூடங்களைக் கட்டி, உன் மகிமையையும் அழகையும் கெடுத்து, வருவார் போவார்க்கெல்லாம் உன்னைக் கையளித்து, நமக்கு ஆத்திரம் உண்டாகும்படி நீ விபசாரத்தில் மேன் மேலும் உழன்று வந்தாய்.
26 உன் அண்டை நாட்டவரான சதை பெருத்த எகிப்தியரோடு வேசித்தனம் செய்து, நமக்குக் கோபமூட்டும்படி உன் விபசாரத்தை மிகுதியாக்கினாய்.
27 ஆகையால் இதோ நமது கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைத்து, உன்னுடைய முறைகேடான நடத்தையைப் பார்த்து வெட்கப்படும் உன் பகைவார்களான பிலிஸ்தியரின் குமாரத்திகளுக்கு உன்னைக் கையளிப்போம்.
28 அசீரியர்களோடும் நீ வேசித்தனம் செய்தாய்; ஏனெனில் நீ இன்னும் திருப்தி அடையவில்லை; ஆம், நீ அவர்களோடு வேசித்தனம் செய்தும் உனக்குத் திருப்தி உண்டாகவில்லை.
29 ஆகையால் வாணிக நாடாகிய கல்தேயாவோடும் வேசித்தனம் பண்ணினாய்; அப்பொழுதும் நீ திருப்தி அடையவில்லை.
30 நாணமற்ற வேசியின் செயல்களையெல்லாம் செய்த உன் இதயத்தின் காமநோய் தான் என்னே, என்கிறார் ஆண்டவர்.
31 உண்மையாகவே எல்லா வழி முனைகளிலும் உன் வேசிக்குடிலைக் கட்டினாய்; எல்லாப் பொதுவிடங்களிலும் உன் விபசாரக் கூடங்களை ஏற்படுத்தினாய்; மற்ற வேசிகளைப் போலப் பணம் சம்பாதிக்கவும் நீ வேசித்தனம் செய்யவில்லை.
32 வேசியாகிய மனைவியே, சொந்தக் கணவனை விட்டு அந்நியரைச் சேர்க்கிறாயே!
33 மற்ற வேசிகளுக்குப் பணம் கொடுப்பார்கள்; ஆனால் உன் காரியத்தில் அப்படியில்லையே! நாற்றிசையிலு மிருந்து வந்து உன்னுடன் விபசாரஞ் செய்யும்படி உன் காதலர்களுக்கு நீயல்லவோ காணிக்கை கொடுத்து அழைக்கின்றாய்!
34 ஆகவே வேசித்தனத்திலும் நீ மற்ற வேசிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறாய்; வேசித்தனம் செய்ய உன்னைத் தூண்டியவர் யாருமில்லை; நீ பிறர்க்குக் கையூட்டுக் கொடுத்தாய்; பிறர் உனக்குப் பணமேதும் தரவில்லை; இது பெரிய வேறுபாடன்றோ!
35 ஆகையால் வேசியே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:
36 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ உன் காதலரோடு செய்த வேசித்தனத்தால் உன் வெட்கம் வெளியாகி, உன் நிருவாணம் காணப்பட்டதாலும், நீ சிலைகளை வழிபட்டதாலும், அவற்றுக்கு உன் பிள்ளைகளைப் பலியிட்டு இரத்தம் சிந்தியதாலும்,
37 இதோ, நீ இன்பம் அனுபவித்த உன் காதலர் அனைவரையும், நீ விரும்பியவர்கள், வெறுத்தவர்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டுவோம்; அவர்கள் எல்லாரையும் நாற்றிசையிலிருந்தும் கூட்டிச்சேர்த்து உன்னிடம் கொண்டு வந்து அவர்களுக்கு உன் வெட்கத்தைக் காட்டுவோம்; அவர்கள் யாவரும் உன் நிருவாணத்தைக் காண்பார்கள்.
38 விபசாரிகளையும், இரத்தம் சிந்தியவர்களையும் நியாயந் தீர்ப்பது போல் உன்னையும் தீர்ப்பிட்டு, உன் மீது இரத்தப் பழியையும் ஆத்திரத்தையும் சுமத்துவோம்.
39 உன்னை அவர்கள் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உன் குடிலை இடித்து விபசாரக் கூடங்களைத் தரைமட்டமாக்குவார்கள்; பின், உன் ஆடைகளை உரிந்து, உன் ஆபரணங்களை அபகரித்து, உன்னை நிருவாணியாக்கி, வெட்கக் கேடான நிலையில் உன்னை விட்டுப் போவார்கள்.
40 பிறகு உனக்கு விரோதமாக மக்களை எழுப்புவோம்; அவர்கள் உன்னைக் கல்லாலெறிந்து, வாளால் வெட்டுவார்கள்.
41 கடைசியில் அவர்கள் உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, பெண்கள் பலர் முன்னால் உன்னைக் கொடுமையாய்த் தண்டிப்பார்கள்; அதன் பின் உன் வேசித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம்; யாருக்கும் இனி நன்கொடை கொடுக்கமாட்டாய்.
42 அப்போது உன் மீது நாம் கொண்ட கோபமும் ஆத்திரமும் தணியும்; இனி உன் மேல் கோபம் கொள்ளாமல் அமைதியாய் இருப்போம்.
43 நீ உன் இளமையின் நாட்களை நினையாமல் இவற்றையெல்லாம் செய்து நமக்குச் சினம் உண்டாக்கின படியால், உன் தீய நடத்தையின் பலனை உன் தலை மேல் சுமத்தினோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். இந்த அருவருப்பான காரியங்கள் தவிர இன்னும் முறைகேடாகவும் நீ நடந்து கொள்ளவில்லையா?
44 இதோ, பழமொழி கூறும் யாவரும் 'தாயைப்போலப் பிள்ளை' என்னும் பழமொழியை உன்னைக் குறித்துச் சொல்வார்கள்.
45 தன் கணவனையும் பிள்ளைகளையும் வெறுத்துத் தள்ளிய தாயின் மகளல்லவா நீ? தங்கள் கணவன்மார்களையும், பிள்ளைகளையும் வெறுத்துத் தள்ளிய மங்கையரின் சகோதரியல்லவா நீ? உன் தாய் ஒரு கெத்தியாள்தானே? உன் தந்தை ஒர் அமோரியன் அல்லவா?
46 உன் வீட்டுக்கு இடப்பக்கத்தில், தானும், தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் அக்காள் அன்றோ? உன் வலப்பக்கத்தில், தானும், தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை அல்லவா?
47 ஆயினும் அவர்கள் நடந்துகொண்டவாறு நடப்பதில் உனக்குத் திருப்தி ஏற்படவில்லை போலும்! ஏனெனில் சிறிது காலத்தில் அவர்கள் செய்த அக்கிரமங்கள் அவ்வளவு பெரிதல்ல என்னும் படி, நீ உன் செயல்களிலெல்லாம் அவர்களை விடப் பெரிய பாதகியானாய்.
48 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! நீயும், உன் குமாரத்திகளும் செய்ததை உன் சகோதரியாகிய சோதோமும், அவள் குமாரத்திகளும் செய்யத் துணியவில்லையே.
49 உன் சகோதரியாகிய சோதோம் செய்த அக்கிரமம் என்ன? அகங்காரம், போசனப்பிரியம், சோம்பல் இவ்வளவு தானே! அவர்கள் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் உதவி செய்யவில்லை.
50 அவர்கள் தங்களையே உயர்த்திக் கொண்டு, நமது முன்னிலையில் அருவருப்பான அக்கிரமங்களைச் செய்தார்கள்; அவற்றைக் கண்டு நாம் அவர்களைத் தொலைத்தோம்.
51 சமாரியாவும் உன் பாவங்களில் பாதியளவு கூடச் செய்யவில்லையே. நீ அவர்களை விட அதிக அருவருப்பான பாவங்களைச் செய்தபடியால், உன்னைக் காட்டிலும் உன் சகோதரிகள் குற்றமற்றவர்கள் என்று சொல்லலாம் அன்றோ?
52 அப்படியிருக்க, உன் சகோதரிகளை விட நீ தான் பெரிய குற்றவாளி; அதிக அக்கிரமங்களைச் செய்திருக்கிறாய்; உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லும்படி இருக்கிறது; ஆகவே இப்போது உன் நாணத்தையும் வெட்கத்தையும் நீயே தாங்கு; அவர்கள் குற்றமற்றவர்களாய் இருக்கும்படி நீ நடந்ததால் அவமானத்தைத் தாங்கிக்கொள்.
53 சோதோமையும், அதன் குமாரத்திகளையும், சமாரியாவையும், அதன் குமாரத்திகளையும் சிறையினின்று மீட்டு நிலைநிறுத்துவோம்; அப்போது உன்னையும் சிறைமீட்டு (அவர்கள் நடுவில்) நிலைநாட்டுவோம்.
54 ஆனால் நீ அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்படி நீ செய்தவற்றுக்கெல்லாம் வெட்கப்பட்டு, உன் அவமானத்தைச் சுமக்க வேண்டும்.
55 உன் சகோதரிகளாகிய சோதோமும், அதன் குமாரத்திகளும், சமாரியாவும், அதன் குமாரத்திகளும் தங்கள் முந்திய நிலையில் திரும்ப வைக்கப்படுவார்கள்; அப்போது நீயும், உன் குமாரத்திகளுடன் முந்திய சீருக்குத் திரும்பி வருவாய்.
56 நீ அகந்தையுடன் வாழ்ந்த நாளில் உன் அக்கிரமம் வெளியாக்கப்படு முன் உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை நீ பழிக்கவில்லையா?
57 ஆனால் இப்பொழுது அவளைப் போலவே நீயும் ஆகிவிட்டாய்; ஏதோமின் குமாரத்திகள், அவர்களுடைய அண்டை வீட்டார், பிலிஸ்தியரின் குமாரத்திகள், உன்னை அலட்சியம் செய்யும் சுற்றுப்புறத்தார் எல்லார்க்கும் நீ கண்டனத்தின் இலக்கு ஆனாய்;
58 ஆகவே உன் முறைகேட்டுக்கும் அக்கிரமங்களுக்கும் உரிய தண்டனையை இப்பொழுது நீ சுமந்து கொள், என்கிறார் ஆண்டவர்.
59 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: கொடுத்த வாக்கை மீறி உடன்படிக்கையை நீ முறித்தது போலவே, நாமும் உனக்குச் செய்வோம்;
60 ஆயினும், உன் இளமையின் நாட்களில் நாம் உன்னுடன் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து, உன்னுடன் நித்திய உடன்படிக்கை செய்வோம்.
61 உன் தமக்கையரையும் தங்கையரையும் உனக்குக் குமாரத்திகளாக நாம் கொடுக்கும் போது, உன் நடத்தையை நினைத்து அதற்காக நாணி நிற்பாய்; நாம் அவர்களை உனக்குக் கொடுப்பது உன்னுடன் செய்த உடன்படிக்கையின் காரணமாகவன்று.
62 நாம் உன்னோடு உடன்படிக்கை செய்து கொள்வோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்;
63 நீ செய்ததையெல்லாம் நாம் பொறுத்துக் கொள்ளும் காலத்தில், உன் அக்கிரமங்களை நினைத்து வெட்கத்தினால் வாய் பேசாமல் நிற்பாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 17
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, இஸராயேல் வீட்டாருக்கு நீ இந்த விடுகதையையும் உவமையையும் எடுத்துச் சொல்:
3 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பெரிய இறக்கைகளையும் நீண்ட இறகுகளையும், பல வண்ணத் தூவிகளையும் பெரும் உடலையும் கொண்ட பெரிய கழுகு ஒன்று பறந்து வந்தது; அது லீபானுக்கு வந்து ஒரு கேதுரு மரத்தின் நுனிக் கிளையைப் பிடித்தது;
4 அம்மரத்துக் கொழுந்துக் கிளைகளுள் மிக உயரமானதைக் கொய்து, வாணிகன் செய்யும் நாட்டுக்குக் கொண்டு போய் வணிகர்கள் வாழ்ந்த நகரொன்றில் வைத்தது.
5 பின்பு அந்த நாட்டின் விதைகளுள் ஒன்றை எடுத்து வளமான நிலத்தில் இட்டது; நீர் நிறைந்த ஆற்றங்கரை நிலப்பரப்பில் நட்டு வைத்தது;
6 அது துளிர்த்து வளர்ந்து குட்டையான ஒரு படர்ந்த திராட்சைச் செடியாயிற்று; அதன் கிளைகளோ அக்கழுகுக்கு நேராக இருந்தன; ஆனால் வேர்கள் அதன் கீழாக இருந்தன; இவ்வாறு அது திராட்சைச் செடியாகிக் கிளைகளை விட்டுப் பலுகத் தொடங்கிற்று.
7 பெரிய இறக்கைகளையும் நீண்ட இறகுகளையும் நிறைந்த தூவிகளையும் உடைய வேறொரு பெரிய கழுகும் இருந்தது; இதோ, இந்தத் திராட்சைச் செடி தனக்குத் தண்ணீர் பாய்ச்சும்படி தன் வேர்களை அதன் பக்கமாய் ஒடச் செய்து, தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.
8 கிளைகளை விட்டு, கனிகளைக் கொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைச் செடியாய் இருக்கும் பொருட்டு, அது முன்னிருந்த இடத்திலிருந்து பிடுங்கித் தண்ணீர் நிரம்ப உள்ள இடத்தில் நடப்பட்டது.
9 (இப்போது) பேசு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தத் திராட்சைச் செடி செழிக்குமா? யாராவது வந்து அதன் வேர்களைப் பிடுங்கி, கிளைகளை வெட்டினால், ஏற்கனவே துளிர்த்திருந்த கிளைகளும் இலைகளும் எல்லாமே பட்டுப் போகாதோ? அந்தச் செடியை வேரோடு பிடுங்க, மிகுந்த புயபலமும், மக்கள் பலரின் முயற்சியும் தேவையில்லை.
10 இதோ இடம் மாற்றி நடப்பட்டிருக்கிறது; ஆனால் அது செழித்து வளருமா? கீழைக்காற்று அதன் மேல் வீசும் போது செடி முற்றிலும் வாடிவிடாதா? முளைத்திருக்கும் பாத்தியிலேயே உலர்ந்து போகாதோ?"
11 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
12 இவை யாவும் எதைக் குறிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா என்று அந்தக் கலகக்காரர்களைக் கேள். மேலும் அவர்களுக்குச் சொல்: இதோ பபிலோன் அரசன் யெருசலேமுக்கு வந்து, அதன் அரசனையும் பெருங்குடி மக்களையும் சிறை பிடித்துத் தன் நாடாகிய பபிலோனுக்குக் கொண்டு போனான்.
13 இவன் அரச குலத்தான் ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கை செய்து, அவனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான். (பின் நாட்டின் பெருமக்களை நாடுகடத்தினான்.
14 இந்த நாடு வலிமையற்றுப் போனதால் இனித் தலைஎடுக்காது; ஆகவே செய்துகொண்ட உடன்படிக்கையின் படியே நடக்கும் என்று அவன் கருதினான்.)
15 ஆனால் புதிய அரசன், பபிலோன் அரசனுக்கு விரோதமாய்த் தனக்குக் குதிரைகளையும் வீரர்களையும் கொடுத்தனுப்பும்படி எகிப்துக்கு தூதர்களை அனுப்பினான். இவனுக்கு வெற்றி கிடைக்குமா? இப்படிச் செய்தவன் தப்ப முடியுமா? உடன் படிக்கையை மீறிய பின்னும் தப்பிக்க முடியுமா?
16 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்குச் செய்த சத்தியத்தை அசட்டை செய்து, அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இந்தப் புதிய அரசன் அந்த மாமன்னனின் நகராகிய பபிலோன் நடுவிலே சாவான்.
17 அவன், மக்கள் பலரை அழிக்கும்படி படையெடுத்து வந்து மண்மேடுகள் போட்டுக் கொத்தளங்களைக் கட்டும் போது, பார்வோன் பெரிய சேனையோடும் திரளான மக்கட்கூட்டத்தோடும் போரில் உதவி செய்ய வரவே மாட்டான்.
18 யூதா அரசன் தான் செய்த ஆணையை மீறி, உடன்படிக்கையை முறித்தான்; கைமேலடித்து ஆணையிட்டிருந்தும் இப்படிச் செய்தான். ஆதலால் அவன் தப்பிக்கவே மாட்டான்.
19 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! அவன் நமக்குச் செய்த சத்தியத்தை மீறி, நம் உடன்படிக்கையை முறித்தமையால் அவன் பாதகத்தை அவன் தலைமீது வரச் செய்வோம்;
20 அன்றியும் நமது கண்ணியில் சிக்குமாறு அவன் மேல் நாம் வலை வீசிப் பிடித்துப் பபிலோனுக்குக் கொண்டு போய், நமக்கெதிராய்ச் செய்த துரோகத்துக்காக அங்கே நாம் அவனைத் தீர்ப்பிடுவோம்.
21 அவனுடைய வீரர்களுள் தலைமையானவர்கள் வாளுக்கு இரையாகி வீழ்வார்கள்; எஞ்சியிருப்பவர்கள் நாலாபக்கமும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்போது ஆண்டவராகிய நாமே பேசினோம் என்பதை அறிவீர்கள்.
22 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளையொன்றை நாமே எடுப்போம்; அதன் நுனிக் கொப்புகளிலிருந்து இளங்கொழுந்து ஒன்றைக் கொய்து ஒங்கி உயர்ந்த மலை மேல் நாமே நாட்டுவோம்;
23 இஸ்ராயேல் என்னும் உயர்ந்த மலை மீது நாம் அதை நாட்டுவோம்; அது கிளைத்து வளர்ந்து கனிதரும் பெரிய கேதுரு மரமாகும்; பறப்பன யாவும் அதன்கீழ் வந்தடையும்; எல்லா வகையான பறவைகளும் அதன் இலைகளின் நிழலில் வந்து கூடு கட்டும்.
24 ஆண்டவராகிய நாமே ஒங்கி வளர்ந்த மரத்தை எல்லாம் தாழ்த்துவோம்; தாழ்ந்திருக்கும் மரத்தையெல்லாம் ஒங்கச் செய்வோம்; பசுமையான மரத்தை உலரச் செய்வோம்; உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்வோம்; இதை உலகிலுள்ள மரங்களெல்லாம் அறியும்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; சொன்னதை நாம் தவறாமல் செய்வோம்."
அதிகாரம் 18
1 ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது.
2 தந்தையர் திராட்சைக்காய் தின்ன, பிள்ளைகளுக்குப் பல் கூசிற்றாம்' என்னும் பழமொழியை இஸ்ராயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன? ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்!
3 நம் உயிர் மேல் ஆணை! இஸ்ராயேலில் இப்பழமொழி இனி மேல் வழங்கப்படாது.
4 இதோ, ஆன்மாக்கள் அனைத்தும் நமக்கே சொந்தம்; தந்தையின் ஆன்மாவும் நம்முடையதே; மைந்தனின் ஆன்மாவும் நம்முடையதே. பாவஞ்செய்யும் ஆன்மாவே சாகும்.
5 எவனொருவன் நீதிமானாய் இருந்து சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின்- அதாவது,
6 மலைகளின் மேல் படைக்கப் பட்டதை உண்ணாமலும், இஸ்ராயேல் வீட்டின் சிலைகளை நோக்கிப் பாராமலும், அயலான் மனைவியைத் தீண்டாமலும், தீட்டுள்ள பெண்ணோடு சேராமலும்,
7 பிறனை ஒடுக்காமல், கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுத்தும், கொள்ளையிடாமலும், பசித்தவனுக்குத் தன் அப்பத்தைப் பகிர்ந்தளித்தும், ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை கொடுத்தும்,
8 வட்டிக்குப் பணம் கொடாமலும், தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், அக்கிரமத்தில் உட்படாமலும், ஒருவர் ஒருவருக்கு இடையே உண்டான வழக்கை நியாயமாய்த் தீர்த்தும்,
9 நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தும், நாம் வகுத்த முறைமைகளின்படி நடந்தும் வந்தால்- அவனே நீதிமான்; அவன் வாழ்வான் என்பது உறுதி, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
10 ஆனால் இம்மனிதனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் திருடனாகவும், இரத்தம் சிந்துகிறவனாகவும், முன் சொல்லிய குற்றங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்கிறவனாகவும் இருந்தால் -அதாவது,
11 முன் சொல்லிய புண்ணியங்களை எல்லாம் செய்வதை விட்டு, அதற்கு மாறாக, மாலைகளில் படைத்தவற்றைச் சாப்பிட்டும், அயலான் மனைவியைத் தீண்டியும்,
12 சிறுமையும் எளிமையுமான பிறனை ஒடுக்கியும், கொள்ளை அடித்தும், அடைமானத்தைத் திரும்பக் கொடாமலும், சிலைகளை நோக்கிப் பார்த்து அருவருப்பானதைச் செய்தும்,
13 தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்கியும் வந்தால்- அவன் உயிர் வாழ்வானோ? அவன் உயிர் வாழான்; அருவருப்பான அவற்றையெல்லாம் செய்த அவன் சாவான் என்பது உறுதி; அவனது இரத்தப் பழி அவன் மேலேயே இருக்கும்.
14 ஆனால் அவனுக்குப் பிறந்த மகன் தன் தகப்பன் செய்த பாவங்களையெல்லாம் கண்டு பயந்து, அவ்வாறு செய்யாமல்- அதாவது,
15 மலைகளின் மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும், இஸ்ராயேல் வீட்டின் சிலைகளை நோக்கிப் பாராமலும், அயலான் மனைவியைத் தீண்டாமலும்,
16 ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக் கொள்ளாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவனுக்குத் தன் அப்பத்தைப் பகிர்ந்தளித்தும், ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை கொடுத்தும்,
17 ஏழையைத் துன்புறுத்தாமலும், வட்டி வாங்காமலும், தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தும், நாம் வகுத்த முறைமைகளின்படி நடந்தும் வந்தால்- இவன் தன் தகப்பனின் அக்கிரமத்துக்காகச் சாகமாட்டான்; இவன் வாழ்வான் என்பது உறுதி.
18 இவனுடைய தகப்பனோ பிறனைக் கொடுமைப்படுத்தி, சகோதரனைக் கொள்ளையடித்து, தன் இனத்தார் நடுவில் பொல்லாங்கு செய்ததால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலேயே மடிவான்.
19 ஆயினும் நீங்கள், 'தந்தையின் பாவத்தை மைந்தன் ஏன் சுமக்கக் கூடாது?' என்று கேட்கிறீர்கள். மகன் நீதி நியாயத்தைக் கடைப்பிடித்து நமது கட்டளையின்படி நடந்தான்; ஆதலால் அவன் சாகான்.
20 பாவம் செய்யும் ஆன்மாவே சாகும்; மகன் தந்தையின் பாவத்தையும், தந்தை மகனின் பாவத்தையும் சுமக்க மாட்டான்; நீதிமானுடைய நீதி அவன் மீதிருக்கும்; அக்கிரமியின் அக்கிரமம் அவன் மீதிருக்கும்.
21 ஆயினும் அக்கிரமி ஒருவன் தான் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்துத் தள்ளி விட்டு, நம் கற்பனைகளைக் கடைப்பிடித்து, சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின், அவன் உயிர் வாழ்வான் என்பது உறுதி;
22 அவன் சாகான்; அவன் ஏற்கெனவே செய்த தவறுகளை நினைக்கமாட்டோம்; அவன் கடைப்பிடித்த நீதியினால் உயிர் வாழ்வான்.
23 அக்கிரமி சாகவேண்டும் என்பது நம் விருப்பமோ? அவன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்பி உயிர் வாழ வேண்டும் என்பதல்லவா நமது விருப்பம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
24 நீதிமான் ஒருவன் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமியைப் போல் எல்லா வகையான பாவங்களையும் செய்தால், அவன் உயிர் வாழ்வானோ? அவன் ஏற்கெனவே செய்த நீதியான செயல்களில் ஒன்றையும் நாம் நினைக்கமாட்டோம். அவன் செய்த துரோகத்திலும் கட்டிக் கொண்ட பாவத்திலுமே அவன் சாவான்.
25 ஆயினும் நீங்கள், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று சொல்வீர்களோ? இஸ்ராயேல் வீட்டாரே, கேளுங்கள்: நமது வழியா நீதியானதில்லை? நீதியற்ற வழி உங்கள் வழியே அல்லவா?
26 நீதிமான் தன் நீதிநெறியை விட்டு விலகி, அநீதியைச் செய்தால், அதன் காரணமாய்ச் சாவான்; தான் செய்த அநீதியாலேயே சாவான்.
27 தீயவன் தான் நடந்த தீய வழியை விட்டு விலகி நீதி நெறியில் நடந்து, சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்தால், தன்னையே காத்துக் கொள்வான்.
28 தன் நிலையை எண்ணிப் பார்த்து, தான் முன் செய்த அக்கிரமங்களையெல்லாம் விலக்கினதால், அவன் உயிர் வாழ்வான் என்பது உறுதி; அவன் சாகான்.
29 இன்னும் இஸ்ராயேல் வீட்டார், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று சொல்கிறார்கள். இஸ்ராயேல் வீட்டாரே, நமது வழியா நீதியற்ற வழி? உங்கள் வழியே அல்லவா?
30 ஆகையால், இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுள் ஒவ்வொருவனையும் அவனவன் நடத்தைக்குத் தக்கவாறு தீர்ப்பிடுவோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். நீங்கள் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் விட்டு மனந்திரும்புங்கள்; அப்போது நீங்கள் பாவத்தில் விழ இடமிராது.
31 நமக்கு எதிராய் நீங்கள் செய்த துரோகங்களையெல்லாம் தூரமாக எறிந்து விடுங்கள்; புதிய உள்ளத்தையும் புதிய மனத்தையும் உங்களுக்கெனப் படைத்துக் கொள்ளுங்கள்.
32 இஸ்ராயேல் வீட்டாரே,நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவனும் சாக வேண்டும் என நாம் விரும்புவதில்லையே, என்கிறார் ஆண்டவராகிய இறைவன். ஆகவே மனந்திரும்புங்கள்; உயிர் வாழ்வீர்கள்."
அதிகாரம் 19
1 நீயோ இஸ்ராயேலின் தலைவர்களைப் பற்றிப் புலம்பு.
2 அவர்களுக்குச் சொல்: சிங்கங்கள் நடுவில் உன் தாய் ஒரு பெண் சிங்கமாய் விளங்கினாள். இளஞ் சிங்கங்கள் நடுவில் படுத்துறங்கித் தன் குட்டிகளுக்குப் பாலூட்டினாள்.
3 அவன் தன் குட்டிகளுள் ஒன்றை வளர்க்கவே, அது இளஞ்சிங்கமாய் வளர்ந்து இரை தேடப் பழகி, மனிதரைச் சாப்பிடத் தொடங்கிற்று.
4 புறவினத்தார் இதைக் கேள்வியுற்று அதனைத் தங்கள் படுகுழியில் வீழ்த்தி, சங்கிலியால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.
5 தன் எண்ணம் சிதைந்தது என்றும், நம்பிக்கை வீணாயிற்று என்றும் தாய்ச் சிங்கம் கண்டு, தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து வளர்த்து இளஞ் சிங்கமாக்கிற்று.
6 இதுவும் சிங்கங்கள் நடுவிலே நடமாடி, இளஞ் சிங்கமாகி இரை தேடப் பழகி, மனிதரைச் சாப்பிடத் தொடங்கிற்று.
7 அவர்கள் கோட்டைகளைத் தாக்கி, பட்டணங்களைப் பாழாக்கிற்று; அது சீற்றத்தோடு கர்ச்சிக்கும் போது நாடும், நாட்டிலுள்ள யாவும் நடுங்கின.
8 அண்டை நாடுகள் ஒன்று கூடி , எல்லாப் பக்கமும் சூழ்ந்து வந்து தங்கள் வலையை அதன் மேல் வீசி, தங்கள் படுகுழியில் அதனை வீழ்த்தினார்கள்.
9 சங்கிலியால் அதைக் கட்டிக் கூட்டிலடைத்து, பபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள். அதன் குரல் (கர்ச்சனை) இஸ்ராயேல் மலைகளில் கேட்காதிருக்கும்படி அச்சிங்கத்தைச் சிறைக்கூடத்தில் அடைத்தார்கள்.
10 உன் தாய் திராட்சைத் தோட்டத்தில் நீரருகில் நடப்பட்ட ஒரு செழிப்பான திராட்சைக் கொடி போல் இருந்தாள். நீர் வளத்தின் காரணத்தால் கிளைகளும் கனிகளுமாய்த் தழைத்திருந்தாள்.
11 அதன் மிக உறுதியான கிளை அரச செங்கோலாயிற்று; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று; திரளான கிளைகளால் உயர்ந்து தென்பட்டது.
12 ஆனால் அத் திராட்சைக் கொடி ஆத்திரத்தோடு பிடுங்கப்பட்டு மண்ணிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் காய்ந்து போனது, அதன் கனிகள் பறிக்கப்பட்டன; அதன் உறுதியான கிளை உலர்ந்து போனது, நெருப்பால் சுட்டெரிக்கப்பட்டது.
13 இப்போது, நீரற்ற பாலைநிலத்தில் வளமற்ற வனாந்தரத்தில் பிடுங்கி நடப்பட்டுள்ளது.
14 அதன் உயர்ந்த கிளையினின்று நெருப்பு கிளம்பி, கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; இனி அதில் உறுதியான கிளையில்லை, அரசனுக்குச் செங்கோலில்லை. இதுவே புலம்பல், புலம்பலாக பயன்படும் பாடல்.
அதிகாரம் 20
1 ஏழாம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் பத்தாம் நாள் இஸ்ராயேல் மக்களின் மூப்பர் சிலர் ஆண்டவருடைய ஆலோசனையைக் கேட்பதற்காக என் முன் வந்து உட்கார்ந்தார்கள்:
2 அப்போது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
3 மனிதா, இஸ்ராயேலின் மூப்பர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் நம்மிடம் ஆலோசனை கேட்க வருகிறீர்களோ? நம் உயிர் மேல் ஆணை! உங்களுக்கு ஆலோசனை அளிக்கப்படாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
4 நீ அவர்களை விசாரிக்கப் போகிறாயா? மனிதா, நீ அவர்களுக்குத் தீர்ப்புச் சொல்லப் போகிறாயா? அப்படியானால், அவர்கள் தந்தையரின் அருவருப்பான குற்றங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
5 அவர்களிடம் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் இஸ்ராயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் குலத்தார்க்கு நாம் கைநீட்டி ஆணையிட்டு, எகிப்து நாட்டில் அவர்களுக்கு நம்மை வெளிப்படுத்தி, 'ஆண்டவராகிய உங்கள் இறைவன் நாமே' என்று கையுயர்த்தி ஆணையிட்டோம்.
6 அந்நாளில் நாம் அவர்களை எகிப்து நாட்டிலிருந்து வரச் செய்து, அவர்களுக்காக நாம் தெரிந்து கொண்டதும், பாலும் தேனும் பொழிவதும், மற்றெல்லா நாடுகளிலும் தலை சிறந்ததுமான நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று ஆணையிட்டோம்.
7 மேலும் அவர்களைப் பார்த்து, 'உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும்; எகிப்து நாட்டின் சிலைகளால் தீட்டுப்படாதீர்கள்; ஆண்டவராகிய உங்கள் இறைவன் நாமே' என்று சொன்னோம்.
8 அவர்கள் நம் வார்த்தையைக் கேட்க மனமில்லாமல் நமக்கு எதிராக எழுந்தார்கள். அவரவர் தத்தம் கண்களுக்கு விருந்தளித்த அருவருப்பானவற்றை விட்டெறியவுமில்லை; எகிப்து நாட்டின் சிலைகளைத் தள்ளிவிடவுமில்லை; ஆகையால் எகிப்து நாட்டின் நடுவில் நமது ஆத்திரத்தை அவர்கள்மீது காட்டி, நமது கோபத்தைத் தீர்த்துக் கொள்வோம், என்றோம்.
9 எனினும் அவர்கள் நடுவிலிருந்த புறவினத்தார் கண் முன் நமது பெயர் அவசங்கையாகாதிருக்க நாம் கோபத்தைச் செலுத்தவில்லை; ஏனெனில், அந்தப் புறவினத்தார் அறிய, அவர்களை எகிப்து நாட்டிலிருந்து வரச் செய்து நம்மை அவர்களுக்கு வெளிபடுத்தினோம் அன்றோ?
10 ஆகவே நாம் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்து, பாலைநிலத்திற்குக் கூட்டி வந்தோம்.
11 நம் கற்பனைகளையும் நீதி முறைமைகளையும் அவர்களுக்குக் கொடுத்தோம். அவற்றைக் கடைப்பிடிப்பவன் வாழ்வான்.
12 மேலும் அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் ஆண்டவர் நாமே என்பதை அவர்கள் அறியும்படி, நமக்கும் அவர்களுக்கும் அடையாளமாக ஒய்வு நாட்களையும் அவர்களுக்கும் கட்டளையிட்டோம்.
13 ஆனால் இஸ்ராயேல் மக்கள் பாலைநிலத்தில் நமக்கு எதிராக எழும்பி, நம் கட்டளைகளின்படி நடவாமல், மனிதனுக்கு வாழ்வளிக்கும் நம் நீதி முறைமைகளைக் காலால் மிதித்து, ஒய்வு நாட்களையும் மனந்துணிந்து மீறினார்கள்; ஆகவே பாலைநிலத்திலேயே நம் கோபத்தின் வேகத்தை அவர்கள் மேல் காட்டி, அவர்களை அழித்துவிடத் தீர்மானித்தோம்.
14 ஆனால் புறவினத்தார் கண் முன் நமது பெயரின் பரிசுத்தம் குலையாதபடி, அவர்களை நாம் பழிவாங்கவில்லை; ஏனெனில் அந்தப் புறவினத்தார் காண, அவர்களை எகிப்தினின்று புறப்படச் செய்தோம் அன்றோ?
15 அன்றியும், பாலும் தேனும் பொழிவதும், மற்றெல்லா நாடுகளிலும் தலை சிறந்ததுமான நாட்டுக்குள் அவர்களைக் கூட்டிச் செல்ல மாட்டோம் என்று பாலை நிலத்தில் அவர்களுக்கு எதிராய் நம் கையுயர்த்தி ஆணையிட்டோம்;
16 ஏனெனில் அவர்கள் நம் நீதி முறைமைகளைக் காலால் மிதித்து, நம் கட்டளைகளின்படி நடவாமல், ஒய்வு நாளையும் கடைப்பிடிக்காமல் சிலைகளையே பின்பற்றி நடந்தார்கள்.
17 ஆயினும் நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டிற்று; அவர்கள் அனைவரையும் பாலை நிலத்தில் நாம் அழிக்கவோ கொன்றொழிக்கவோ இல்லை.
18 நாம் பாலை நிலத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: உங்கள் தந்தையரின் முறைமைகளின்படி நீங்கள் நடவாமலும், அவர்களுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காமாலும் அவர்களுடைய சிலைகளினால் தீட்டுப்படாமலும் இருங்கள்;
19 ஆண்டவராகிய நாமே உங்கள் இறைவன்; நம் கட்டளைகளின்படி நடந்து, நம் நீதி முறைமைகளைக் கைக்கொண்டு அவற்றைக் கடைப்பிடியுங்கள்.
20 நாமே ஆண்டவராகிய உங்கள் இறைவன் என்று நீங்கள் அறியும்படி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தப்படுத்தி, அவற்றை நமக்கும் உங்களுக்கும் அடையாளமாகக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தோம்.
21 அவர்கள் பிள்ளைகளோ நமக்கு எதிராய்க் கலகம் செய்தார்கள்: நம் கட்டளைகளின்படி நடவாமலும், வாழ்வளிக்கும் நம் நீதி முறைமைகளைக் கடைப்பிடிக்காமலும், ஓய்வு நாட்களை அவசங்கை செய்தும் நமக்குக் கோபத்தை மூட்டினார்கள்; ஆகையால் நமது ஆத்திரத்தை அவர்கள் மேல் காட்டி, பாலை நிலத்தில் நம்முடைய கோபத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்று தீர்மானித்தோம்.
22 ஆயினும் புறவினத்தார் கண் முன் நமது திருப்பெயரின் பரிசுத்தம் குலையாதிருக்க, ஓங்கின கையைத் திருப்பிக் கொண்டோம்; ஏனெனில் அந்தப் புறவினத்தார் காண நாம் அவர்களைப் புறப்படச் செய்தோம் அன்றோ?
23 மறுபடியும் பாலைநிலத்தில் நம் கையுயர்த்தி ஆணையிட்டு, அவர்களைப் புறவினத்தார் நடுவில் சிதறடித்து நாடுகளுக்கெல்லாம் துரத்துவோம் என்று சொன்னோம்;
24 ஏனெனில், நம் நீதி முறைமைகளின்படி செய்யாமல், நம் கட்டளைகளை வெறுத்து நம் ஒய்வு நாட்களை கடைபிடிக்காமல், அவர்கள் கண்கள் அவர்கள் தந்தையரின் சிலைகளையே பின்பற்றின.
25 ஆகையால் நன்மை பயக்காத கற்பனைகளையும், வாழ்வு அளிக்காத நீதி முறைமைகளையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
26 தங்கள் பாவங்களுக்காகத் திகிலடையும்படி, அவர்கள் தங்கள் தலைச்சன் பிள்ளைகளைப் பலியிடச் செய்து, அந்தக் காணிக்கைகளாலேயே அவர்கள் தீட்டுப்படச் செய்தோம்; நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறியும் பொருட்டே அவ்வாறு செய்தோம்.
27 ஆகையால், மனிதா, இஸ்ராயேல் மக்களிடம் பேசி நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் தந்தையர் நம்மைப் புறக்கணித்து நிந்தித்ததோடு, நம்மைப் பழித்துரைக்கவும் தொடங்கினார்கள்.
28 ஏனெனில், நாம் அவர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டுக்கு அவர்களைக் கூட்டி வந்து விட்ட பின், அவர்கள் உயர்ந்த குன்றுகளையும் தழைத்த மரங்களையும் கண்டு, அங்கெல்லாம் தங்கள் பலிகளைச் செலுத்தி நமக்குக் கோபமூட்டும் காணிக்கைகளைப் படைத்து, நறுமணப் புகையினைக் காட்டிப் பானப்பலிகளை வார்த்தார்கள்.
29 (அப்போது நாம் அவர்களை நோக்கி: நீங்கள் போகும் அந்த மேடு என்பது என்ன என்று கேட்டோம்; அதன் காரணமாய் இந்நாள் வரை அவ்விடத்திற்கு மேடு என்ற பெயர் வழங்குகிறது.)
30 ஆகையால் இஸ்ராயேல் மக்ககளுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மெய்யாகவே உங்கள் தந்தையரின் வழியிலேயே நீங்களும் நடந்து அவர்களின் வெறுக்கத்தக்க செயல்களைப் பின் பற்றி, நீங்களும் தீட்டுப்படுவீர்களோ?
31 நீங்கள் பலி ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டுப் பலியாக்கும் போது, இந்நாள் வரை சிலைகளினால் தீட்டுப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். இஸ்ராயேல் வீட்டாரோ, நீங்களா என்னிடத்தில் ஆலோசனை கேட்க வந்தீர்கள்? நம் உயிர்மேல் ஆணை! நாம் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவே மாட்டோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
32 உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆசை- 'மரத்தையும் கல்லையும் வழிபட்டுக் கொண்டு புறவினத்தார், மற்ற நாட்டு மக்கள் இவர்களைப் போலவே இருப்போம்'- என்றும் அந்த ஆசை ஒருகாலும் நிறைவேறாது.
33 நம் உயிர்மேல் ஆணை! பலத்த கையினாலும் ஒங்கிய புயத்தினாலும், வேகத்தோடு வெளிப்படும் கோபத்தோடும் உங்களுக்கு நாமே அரசராய் இருப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
34 பலத்த கையினாலும் ஒங்கிய புயத்தினாலும், வேகத்தோடு வெளிப்படும் கோபத்தோடும் உங்களை வேற்று நாட்டார் நடுவிலிருந்தும், சிதறிக் கிடக்கும் நாடுகளினின்றும் உங்களைக் கூட்டிக் கொண்டு வருவோம்.
35 உங்களை வேற்றினத்தாரின் பாலை நிலத்துக்குக் கொண்டு போய் அங்கே நேருக்கு நேராய் உங்களைத் தீர்ப்பிடுவோம்.
36 எகிப்து நாட்டின் பாலை நிலத்தில் உங்கள் தந்தையரைத் தீர்ப்பிட்டது போலவே உங்களையும் தீர்ப்பிடுவோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
37 உங்களை நமது ஆளுகைக்குப் பணியச் செய்து, உடன் படிக்கையின் கடமைகளுக்குக் கட்டுப் படுத்துவோம்.
38 கலகக்காரரையும், சட்டத்தை மீறுகிறவர்களையும் உங்களிடமிருந்து பிரித்து, அவர்களை அவர்கள் வாழும் நாட்டினின்று புறப்படச் செய்வோம்; ஆயினும் இஸ்ராயேல் நாட்டுக்கு அவர்கள் வரமாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
39 ஆண்டவராகிய இறைவர் கூறுகிறார்: நீங்களோ, இஸ்ராயேல் வீட்டாரே, நாம் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையானால், நீங்கள் ஒவ்வொருவனும் தன் தன் சிலைகளுக்கு இப்பொழுதும் இனி மேலும் வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் காணிக்கைளாலும் சிலைகளாலும் நமது பரிசுத்த பெயரை அவசங்கைப்படுத்த உங்களால் ஒரு போதும் முடியாது.
40 ஆண்டராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த மலையில்- இஸ்ராயேல் நாட்டின் உயர்ந்த மலையாகிய நமது மலையில்- இஸ்ராயேல் வீட்டாரனை வரும் நம்மைச் சேவிப்பார்கள்; ஆம், அங்கே உங்கள் மேல் நாம் விருப்பம் கொள்வோம்; அங்கே உங்கள் காணிக்கைகளையும், கொடைகளில் சிறந்தவற்றையும், உங்கள் பரிசுத்த பலிகளையும் ஏற்றுக் கொள்வோம்.
41 புறவினத்தாரின் நடுவிலிருந்து நாம் உங்களைப் புறப்படப் பண்ணின பின்பும், சிதறுண்டிருந்த நாடுகளினின்று உங்களை ஒன்று சோர்த்த பிறகும், உங்களை நறுமணக் காணிக்கையாக ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு புறவினத்தார் கண் முன் நமது பரிசுத்தத்தை உங்கள் நடுவில் வெளிப்படுத்துவோம்.
42 நாம் உங்கள் தந்தையர்க்குத் தருவதாகக் கையுயர்த்தி ஆணையிட்டு வாக்களித்த இஸ்ராயேல் நாட்டுக்கு உங்களை நாம் கூட்டிக் கொண்டு வரும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
43 அங்கே உங்களுடைய தீய வழிகளையும், நீங்கள் தீட்டுப்படக் காரணமாயிருந்த அக்கிரமங்கள் அனைத்தையும் நினைத்து, நீங்கள் செய்த தீய செயல்களுக்கெல்லாம் உங்களையே நொந்து கொள்வீர்கள்.
44 இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் தீய வழிகளுக்கும், இழிவான செயல்களுக்கும் தக்க தண்டனை தராமல், நமது திருப்பெயரை முன்னிட்டு உங்களுக்கு இவ்வாறு செய்தோம் எனக்காணும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
45 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
46 மனிதா, நீ உன் முகத்தைத் தென் திசைக்குத் திருப்பி, தென் திசைக்கு எதிராகப் பிரசங்கித்து நெகெபில் உள்ள காட்டு நிலத்திற்கு எதிராக இறைவாக்குக் கூறு.
47 நெகெபில் உள்ள காட்டுக்குச் சொல்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் உன்னில் அக்கினியை மூட்டி, உன்னிடத்தில் உள்ள பச்சை மரம், பட்ட மரம் யாவற்றையும் கொளுத்தப்போகிறோம்; கொழுந்து விட்டெரியும் சுவாலை அணைக்கப்படாது; தெற்கு முதல் வடக்கு வரை எல்லா முகங்களும் கருகிப் போகும்.
48 ஆண்டவராகிய நாமே அதைக் கொளுத்தினோம் என்பதை யாவரும் அறிவர்கள்; அதுவோ அவிந்து போகாது."
49 நான் அதைக் கேட்டு, "ஆண்டவராகிய இறைவனே, 'உவமைகளைப் புனைகிறவன் அல்லவா இவன்?' என்று என்னைக் குறித்துச் சொல்லுகிறார்களே" என்று முறையிட்டேன்.
அதிகாரம் 21
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, யெருசலேமுக்கு எதிராக உன் முகத்தை வைத்து, பரிசுத்த இடங்களுக்கும் இஸ்ராயேல் நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரை:
3 இஸ்ராயேல் நாட்டுக்குச் சொல்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் உனக்கு எதிராக எழும்பி, நமது வாளை உறையினின்று உருவி, உன்னிலுள்ள நீதிமானையும் அக்கிரமியையும் கொல்லுவோம்;
4 உன்னிலுள்ள நீதிமானையும் அக்கிரமியையும் நாம் கொல்லப் போவதால், தெற்கு முதல் வடக்கு வரை உள்ள எல்லா மனிதர்களுக்கும் எதிராக நமது வாள் உறையினின்று புறப்படும்.
5 ஆண்டவராகிய நாமே நமது வாளை உறையினின்று உருவினோம், இனி அது உறைக்குள் இடப்படாது என்பதை எல்லோரும் அறிவீர்கள்.
6 நீயோ, மனிதா, பெருமூச்சு விட்டழு; உடைந்த உள்ளத்தோடும் மிகுந்த துயரத்தோடும் பெருமுச்சு விட்டழு.
7 ஏன் பெருமூச்சு விட்டு அழுகின்றாய்?' என அவர்கள் உன்னைக் கேட்டால், நீ சொல்: 'தீய செய்திகளை நான் கேட்டதால் அழுகிறேன்; ஏனெனில், வாள் புறப்படும் போது உள்ளமெல்லாம் உருகும், கைகள் தளரும், புத்தி மயங்கும், நீர் அலம்புவதைப்போலத் தொடைகள் நடுங்கும்; இதோ அது வந்து நிறைவேறியே தீரும்" என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
8 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
9 மனிதா, நீ இறைவாக்குரை: ஆண்டவர் கூறுகிறார்: ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்ட வாள்! துலக்கப்பட்டுள்ள வாள்!
10 படுகொலைக்காக அது கூர்மையாக்கப்பட்டது, மின்னுவதற்கெனத் துலக்கப்பட்டுள்ளது! அது நமக்கு மகிழ்ச்சி தருவதா?அது என் மகனைத் திருத்தும் கோல், அதற்குமுன் நிற்கும் மரம் எதுவுமில்லை.
11 கையாளுவதற்காகவே அதைத் துலக்கக் கொடுத்தோம்; கொலைஞர் கையில் தருவதற்காகவே கூர்மையாக்கப்பட்டது, துலக்கப்பட்டது.
12 மனிதா, நீ அலறிக் கதறு; அந்த வாள் நம் மக்களுக்கு எதிராகவும்,இஸ்ராயேலின் தலைவர்கள் அனைவர்க்கும் எதிராகவும் எழுந்துள்ளது. நம் மக்களுடன் அவர்கள் அனைவரும் வாளுக்கு இரையாவார்கள்; ஆகையால் மாரடித்துக்கொள்.
13 தீர்ப்புச் சொல்லியாயிற்று, அந்த வாள் செங்கோலை முறித்து இனி அதை இல்லாமற்செய்யும், என்கிறார் ஆண்டவர்.
14 நீயோ, மனிதா, கையோடு கைதட்டு, வாள் கொடுமை இரட்டிக்கட்டும்; ஆம் கொல்லப்பட வேண்டியவர்களுக்காக அது மும்முறையாகட்டும். அனைவரையும் கொலை செய்யும் வாள் அதுவே; யாவரையும் நடுங்கச் செய்யும் வாள் அதுவே;
15 அது உள்ளங்களைக் கலங்கச் செய்யும், ஒவ்வொரு வாயிலிலும் பலரை அழித்துப் போடும், அது வெட்டுவதற்காகத் தீட்டப்பட்டது, மின்னும்படி துலக்கப்பட்டது, கொல்லும்படி கூராக்கப்பட்டது.
16 வாளே, கூர்மையான முனையால் வலப்புறமும், இடப்புறமும், உனக்கு மனமுள்ள இடமெல்லாம் வெட்டு.
17 நாமும் கைகொட்டிக் கோபந் தணிவோம், ஆண்டவராகிய நமது வாக்கு இதுவே"
18 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
19 மனிதா, பபிலோன் அரசனின் வாள் வருவதற்காக இரண்டு வழிகள் உண்டாக்கு; அவ்விரண்டு வழிகளும் ஒரே நாட்டிலிருந்து புறப்படும்; ஒரு கைகாட்டியைச் செய்து வை; நகரத்திற்குப் பிரியும் வழியின் துவக்கத்தில் அதைச் செய்து வை.
20 அம்மோனித்தார் நாட்டுப் பட்டணமாகிய ராப்பாத்துக்கும் யூதாவுக்கும் யெருசலேம் கோட்டைக்கும் போகும் வழியைக் குறிப்பிடு.
21 ஏனெனில், பபிலோன் அரசன், இரண்டு வழிகளும் பிரியும் இடத்தில் சகுனம் பார்ப்பதற்காக நிற்கிறான்; அம்புகளைக் கலந்து குலுக்குகிறான், சிலைகளின் ஆலோசனையைக் கேட்கிறான், ஈரலிலே சகுனம் பார்க்கிறான்.
22 அவனுடைய வலக்கையில் யெருசலேமுக்காகத் திருவுளச்சீட்டு விழுகிறது; அவனோ, எவ்விடத்தில் மதில்களையிடிக்கும் கடாக்களை வைக்கலாம், தான் எப்பக்கத்தில் நின்று போருக்கு ஆணை தரலாம், எங்கிருந்து ஆர்ப்பரிக்கலாம், எந்த வாயில்களைத் தாக்கலாம், எவ்விடத்தில் கொத்தளங்களையும் அரண்களையும் கட்டலாம் என்று குறி கேட்டு யோசனை செய்கிறான்.
23 எவ்வளவு தான் ஆணைகள் இடப்பட்டாலும் இது அவர்களுக்கு வீண் சகுனமாகத் தோன்றுகிறது; ஆனால், அரசன் அவர்களைப் பிடிப்பதற்காக ஆலோசனை செய்கிறான்; அவர்களுடைய அக்கிரமங்களை நினைவு படுத்துவான்.
24 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் உங்கள் குற்றத்தை நினைக்கச் செய்வதாலும், உங்கள் செயல்களிலெல்லாம் பாவங்களே காணப்பட்டு உங்கள் அக்கிரமங்கள் வெளியாவதாலும், அவற்றை நமக்கு நினைவுபடுத்துவதாலும், நீங்கள் பிடிபடுவீர்கள்.
25 இஸ்ராயேலின் தலைவனே, விசுவாசமும் பக்தியுமற்றவனே, உன் அக்கிரமத்தைத் தண்டிப்பதற்கெனக் குறிப்பிட்ட நாள் இதோ வந்து விட்டது!
26 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உன் தலைப்பாகையை எடு, மணிமுடியைக் கழற்று; இப்பொழுது இருப்பது போலவே யாவும் இருக்க மாட்டா; தாழ்ந்ததை உயர்த்து, உயர்ந்திருப்பதைத் தாழ்த்து.
27 நாம் யூதாவை அழிப்போம், அழிப்போம், அழிப்போம்; ஆயினும் தீர்ப்பிடுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறதோ, அவர் வரும் வரையில் அதன் அடையாளமே இராது. அவர் வந்த பின் அவருக்கே அதைக் கொடுப்போம்.
28 "மனிதா, நீ இறைவாக்குரைத்துக் கூறு: அம்மோன் மக்கள் சொல்லிய நிந்தையான வார்த்தைகளைப் பற்றி ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ வாள்! வாள் உருவப்பட்டுள்ளது. கொலை செய்யக் கூராக்கப்பட்டுள்ளது. வெட்டி வீழ்த்த துலக்கப்பட்டுள்ளது.
29 உனக்காக வீணான காட்சிகளைக் கண்டு, நல்ல காலம் வருகிறதென்று பொய் சொல்லுகிறார்களே, அதற்குள் இதோ, அக்கிரமிகளின் பிணங்களுடன் நீயும் கொலையுண்டு வீழ்வாய். ஏனெனில் அவர்களின் அக்கிரமங்கள் தண்டிக்கப்படும் நாள் வந்து விட்டது.
30 வாளே, உன் உறைக்குள் திரும்பிப்போ; நீ உண்டாக்கப்பட்ட ஊருக்கே போ; உன் பிறந்த நாட்டில் உன்னைத் தீர்ப்பிடுவோம்.
31 நமது ஆத்திரத்தை உன் மேல் காட்டுவோம்; நமது கோபத்தீயை உன் மேல் கொட்டுவோம்; அழிப்பதில் வல்லவர்களான கொடிய மனிதர் கையில் உன்னை ஒப்படைப்போம்;
32 நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் நாடெல்லாம் சிந்தப்படும்; நீ மறக்கப்படுவாய்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம், என்கிறார் ஆண்டவர்."
அதிகாரம் 22
1 மேலும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, இரத்தத்தைச் சிந்தின யெருசலேமுக்கு நீதி செலுத்த மாட்டாயோ? அதைத் தீர்ப்பிட மாட்டாயோ?
3 அப்படியானால் அதனுடைய அக்கிரமங்களையெல்லாம் எடுத்துக்காட்டி, அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தனக்குத் தண்டனை நாள் விரைவில் வரும்படி, தன் நடுவில் இரத்தத்தைச் சிந்தித் தனக்கு எதிராகச் சிலைகளை உண்டு பண்ணித் தன்னையே தீட்டுப்படுத்திக் கொண்ட பட்டணம் இதுவே.
4 இரத்தத்தைச் சிந்தி, அதனால் குற்றவாளியாகிச் சிலைகளை உண்டு பண்ணி, அதனால் உன்னேயே தீட்டுப்படுத்தி உன் நாட்களைக் குறைத்து, அதனால் உன் கடைசி நாளை நீயே வரவழைத்துக் கொண்டாய்; ஆகையால் உன்னைப் புறவினத்தார்க்கு நிந்தையாகவும், அண்டை நாட்டார்க்குப் பரிகாசமாகவும் ஆக்கினோம்;
5 உனக்கு அருகில் இருப்பவர்களும், தொலைவில் இருப்பவர்களும் பேர் கெட்ட நகரம் என்றும், அமளி நிறைந்த ஊரென்றும் உன்னை இகழ்வார்கள்.
6 இதோ, இஸ்ராயேலின் தலைவர்கள் தத்தம் வல்லமைக்கேற்ப உன் நடுவில் இரத்தம் சிந்துவதே வேலையாய் இருந்தார்கள்.
7 தாய் தந்தையரை உன் நடுவில் அவமதித்தார்கள்; உன்னை நாடி வந்த அந்நியருக்கு இடுக்கண் செய்தார்கள்; உன்னிடமுள்ள கைம்பெண்களையும் அனாதைப் பிள்ளைகளையும் துன்புறுத்தினார்கள்.
8 நீயோ நமது கோயிலை அவசங்கைப்படுத்தி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தம் இழக்கச் செய்தாய்.
9 இரத்தத்தைச் சிந்தும் அக்கிரமிகள் உன்னில் இருக்கிறார்கள்; மலைகளின் மேல் படைக்கப்பட்டதை உண்ணுகிறார்கள்; உன் நடுவில் அக்கிரமம் செய்யத்துணிகிறார்கள்;
10 தங்கள் தந்தையின் நிருவாணத்தை வெளிப்படுத்துகிறவர்களும், தீட்டுப்பட்ட பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னில் உள்ளனர்.
11 ஒருவன் தன் அயலான் மனைவியைக் கெடுக்கிறான்; இன்னொருவன் தன் மருமகளைக் கெடுத்துக் கற்பழிக்கிறான்; மற்றொருவன் சொந்தத் தந்தைக்குப் பிறந்த தன் உடன் பிறந்த சகோதரியை முறைகேடாய்க் கெடுக்கிறான்.
12 உன்னில் பலர் கொலை செய்ய இலஞ்சம் வாங்குகிறார்கள்; நீ வட்டி வாங்குகிறாய்; கொடுத்ததற்கு அதிகமாய்த் திரும்பப் பெறுகிறாய்; பொருளாசையால் அயலானை ஒடுக்குகிறாய்; நம்மை மறந்துவிட்டாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
13 இதோ, உன் பொருளாசையையும், உன் நடுவில் சிந்தப்பட்ட இரத்தத்தையும் கண்டு நாம் கைகளைத் தட்டுகிறோம்.
14 நாம் உன்னைத் தண்டிக்கும் நாட்களில் உன் இதயம் அதைத் தாங்குமோ? உன் கைகள் திடமாக இருக்குமோ? ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; இதைச் செய்தே தீருவோம்.
15 உன்னைப் புறவினத்தார் நடுவில் சிதறடித்து, வேற்று நாடுகளுக்கு விரட்டியடித்து, உன் அக்கிரமத்தை உன்னிடமிருந்து அகற்றுவோம்.
16 வேற்றினத்தார் கண்முன் உன்னால் நமது பரிசுத்தம் குலைந்து போகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்."
17 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
18 மனிதா, இஸ்ராயேல் வீட்டார் நமக்குக் களிம்பாகி விட்டார்கள்; அவர்கள் எல்லாம் நெருப்பில் கிடக்கும் பித்தளை, வெள்ளீயம், இரும்பு, காரீயம் ஆனார்கள்; வெள்ளியின் களிம்பானார்கள்.
19 ஆகையால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் எல்லாரும் களிம்பாகிவிட்டதால், உங்களைவரையும் யெருசலேமில் ஒன்றுசேர்ப்போம்;
20 வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் இவை நெருப்பில் உருக்கப்படுவது போல, நமது கோப அக்கினியால் உங்களை ஒன்று சேர்த்து உருக்குவோம்.
21 நாம் உங்களைக் கூட்டி, நமது கோப அக்கினியால் உங்களைச் சுட்டெரிப்போம்; நீங்கள் யெருசலேமின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.
22 உலையில் வெள்ளி உருக்கப்படுவது போல நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள்; நமது கோபத்தை உங்கள் மேல் காட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்."
23 அன்றியும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
24 மனிதா, அந்த நகருக்குச் சொல்: நீ சுத்தப்படுத்தப்படாத பூமி; ஆண்டவர் உன் மேல் சினங்கொண்டு மழை பொழியவில்லை.
25 பொய் தீர்க்கதரிசிகள் அதன் நடுவில் ஒப்பந்தம் செய்து கொண்டு, கார்ச்சிக்கும் சிங்கம் இரை தேடிப் பிடிப்பது போல், ஆன்மாக்களை விழுங்கினார்கள்; மனிதா உயிர்களைக் குடித்தார்கள்; செல்வத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும் பறித்துக் கொண்டார்கள்; கைம்பெண்களை மிகுதிப்படுத்தினார்கள்.
26 அதனுடைய குருக்கள் நமது சட்டத்தை அவமதித்தார்கள்; பரிசுத்தமானவற்றைத் தீட்டுப்படுத்தினார்கள்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமற்றதற்கும் வேற்றுமை பாராமலும், அசுத்தமானதையும் அசுத்தமற்றதையும் பிரித்துணர்த்தாமலும் இருந்தார்கள்; நமது ஒய்வுநாளைப் பொருட்படுத்தவில்லை; அதனால் அவர்கள் நடுவில் நாம் அவமதிக்கப்பட்டோம்.
27 அதிலுள்ள தலைவர்களோ இரையைக் கவ்வும் ஒநாய்கள் போலத் தங்கள் பொருளாசையால் செல்வம் திரட்டுவதற்காகக் கொலை செய்யவும், ஆன்மாக்களைக் கெடுக்கவும் தயங்கவில்லை.
28 அதனுடைய பொய்த் தீர்க்கதரிசிகள், வெளிப்பூச்சுப் பூசிக் கொண்டு, போலிக்காட்சிகள் கண்டு, பொய்களைச் சொல்லி ஆண்டவர் சொல்லாததை ஆண்டவர் சொன்னதாகக் கூறிப் பிதற்றினார்கள்.
29 மக்களோ பிறர்பொருளைப் பறித்தார்கள்; கொள்ளை அடித்தார்கள்; ஏழைகளையும் எளியவர்களையும் ஒடுக்கினார்கள்; அந்நியரை அநியாயமாய்த் துன்புறுத்தினார்கள்.
30 நமக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நடுவில் சுவர் போல நின்று, நாம் இந்த நாட்டை அழிக்காதபடி தடுக்கக் கூடியவன் ஒருவனைத் தேடினோம்; அப்படிப்பட்டவன் எவனையும் காணோம்.
31 ஆகையால் நமது ஆத்திரத்தை அவர்கள் மேல் காட்டினோம்; நமது கோபாக்கினியால் அவர்களை அழித்தோம்; அவர்கள் குற்றங்களை அவர்கள் மேலேயே சுமத்தினோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 23
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
3 இவர்கள் தங்கள் வாலிய வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னிக் கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
4 அவர்களுள் தமக்கையின் பெயர் ஒல்லா, தங்கையின் பெயர் ஒலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஒல்லா சமாரியாவையும், ஒலியா யெருசலேமையும் குறிக்கின்றன.
5 ஒல்லா என்னுடையவளாய் இருந்தும், விபசாரியானாள்; அசீரியர்கள் மீது காமம் கொண்டாள்;
6 நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள்.
7 அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமங்கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள்.
8 தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டு விடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள்.
9 ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே- அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்.
10 அவர்கள் அவள் ஆடைகளை உரிந்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரை பிடித்துக் கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழமொழிக்காளானாள்.
11 அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும்; தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவள் ஆனாள்.
12 பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசைமூட்டும் அழகு வாலிபர்களுமாய்க் குதிரை மீது ஏறி வந்த வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள்.
13 இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம்.
14 ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயாரின் ஒவியங்களையும் கண்டாள்;
15 அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பபிலோன் நகரத்தாரைப் போல் இடையில் கச்சை கட்டிக் கொண்டும், தலையில் தலைப்பாகை அணிந்தும், படைத்தலைவர்கள் போல் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள்.
16 கண்டதும் அவர்கள் மேல் காமங்கொண்டு, அவர்களிடம் ஜகல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள்.
17 பபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப்படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கெண்டாள்.
18 இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது.
19 இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
20 காமவெறியர் மேல் அவள் மோகங்கொண்டாள்; அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன.
21 இவ்வாறு எகிப்தியர் உன் இளமார்புளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்."
22 ஆகையால், ஒலிபா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ யார்மேல் காமவெறியால் மோகங் கொண்டாயோ, யாருடன் தெவிட்டும் வரை காமச் செயல் புரிந்தாயோ, இதோ அவர்களை உனக்கு எதிராக எல்லாப் பக்கத்திலும் எழும்பச் செய்வோம்.
23 பபிலோனியரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, ஷோவா, கோவா என்னும் இடங்களில் உள்ளோரையும், அசீரியர்களையும், ஆசை மூட்டும் அழகுள்ள வாலிபர்களாகிய தலைவர்கள், ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோரையும், குதிரை வீரர்களையும் நாம் கூப்பிடுவோம்.
24 அவர்கள் பெரிய கூட்டமாய் வண்டிகளோடும், தேர்ப்படை, காலாட்படைகளோடும் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவார்கள்; மார்க்கவசம், கேடயம், தலைச்சீரா முதலியவற்றை அணிந்து நாற்புறமும் வந்து உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள்; அவர்களுக்கு முன்பாக நாம் உன்னைத் தீர்ப்பிடுவோம்; அவர்கள் தங்கள் சட்டப்படி உன் மேல் தீர்ப்புக் கூறுவார்கள்.
25 நமது ஆத்திரம் உனக்கு எதிராய் இருக்கும்; அவர்கள் உன்னைக் கொடூரமாய் நடத்தி, உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துப் போடுவார்கள்; உன்னில் மீதியாய் இருப்பவர்களை வாளால் வெட்டுவார்கள்: உன் புதல்வர் புதல்வியரைப் பிடித்துக் கொண்டு, உன்னில் எஞ்சியிருப்பவர்களை அக்கினிக்கு இரையாக்குவார்கள்.
26 உன் ஆடைகளை உரிந்து, உன் மகிமையின் அணிகலன்களைப் பறித்துக்கொள்வார்கள்;
27 இவ்வாறு, நீ எகிப்திலிருந்து கொண்டு வந்த வேசித்தனத்தையும் காமவெறியையும் ஒழியச் செய்வோம்; இனி நீ எகிப்தியரை ஏறிட்டும் பாராய்; அவர்களை நினைக்கவும் மாட்டாய்.
28 ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ யாரோடு இன்பம் துய்த்து வெறுப்புற்றாயோ, இதோ அவர்கள் கையிலேயே உன்னை ஒப்படைப்போம்;
29 அவர்கள் உன்னை வெறுப்போடு நடத்தி, உன் உடைமைகள் யாவற்றையும் பறித்துக்கொண்டு, உன்னை ஆடையின்றி நிருவாணமாய் விட்டுவிடுவார்கள்; உன் வேசித்தனத்தின் நிந்தையும் வெட்கக்கேடும் வெளிப்படும்.
30 நீ புறவினத்தாருடைய சிலைகளுக்கு வழிபாடு செலுத்தித் தீட்டுப்பட்டு வேசித்தனம் செய்ததால் அவர்கள் உனக்கு இவற்றைச் செய்வார்கள்,
31 நீ உன் சகோதரியின் வழியைப் பின்பற்றினாய்; ஆகையால் அவள் குடித்த பாத்திரத்தையே உன் கையிலும் வைப்போம்.
32 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் சகோதரி குடித்த பாத்திரத்தையே நீயும் குடிப்பாய், அது அகன்றது, ஆழமானது; நீ பரிகாசத்துக்கும் நகைப்புக்கும் உள்ளாவாய், ஏனெனில் அதில் அதிகம் இருக்கிறது.
33 நீ போதையாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்; துயரமும் அழிவும் கொண்ட பாத்திரமே உன் சகோதரி சமாரியாவின் பாத்திரம்.
34 ஆம், நீ அதைக் குடிப்பாய், முற்றும் குடித்து முடிப்பாய், உன் கூந்தலைப் பிய்த்துக் கொள்வாய், உன் கொங்கைகளைப் பீறிக்கொள்வாய், ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
35 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ நம்மை மறந்து, நம்மைப் புறக்கணித்துத் தள்ளிப் போட்டதால், உன் வேசித்தனத்தையும் காமவெறியையும் நீயே சுமந்துகொள்."
36 ஆண்டவர் மீண்டும் எனக்குச் சொன்னார்: "மனிதா, ஒல்லா, ஒலிபா இவர்களைத் தீர்ப்பிடுவாயா? அப்படியானால் அவர்கள் செய்த அருவருப்பானவற்றை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
37 ஏனெனில் அவர்கள் விபசாரம் செய்தனர்; அவர்கள் கைகள் இரத்தக் கறை படிந்துள்ளன; சிலைகளோடு வேசித்தனம் செய்ததுமல்லாமல், நமக்குப் பெற்ற பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்டார்கள்.
38 அவர்கள் இதற்கு மேலும் செய்தார்கள். அந்நாளில் நமது பரிசுத்த இடத்தைப் பங்கப்படுத்தி, ஒய்வு நாட்களையும் அவசங்கைப் படுத்தினார்கள்.
39 தங்கள் பிள்ளைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டு விட்டு, அப்படியே நமது பரிசுத்த இடத்தினுள் நுழைந்து, அதைப் பங்கப்படுத்தினார்கள்; ஆம் அதனுள் நுழைந்து இத் தீய செயல்களையெல்லாம் நமது வீட்டின் நடுவில் செய்தார்கள்.
40 தூதர்களை அனுப்பித் தொலை நாட்டிலிருந்து ஆண்களை அழைத்துவரச் சொன்னார்கள்; அவர்களும் வந்தார்கள். அவர்களுக்காக நீ குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களால் உன்னை அழகு படுத்தினாய்.
41 அழகான கட்டிலில் உட்கார்ந்தாய்; உன் முன் மேசை ஒன்று வைக்கப்பட்டிருந்தது; அதன் மேல் நமது நறுமணப் பொருட்களையும் எண்ணெய்யையும் வைத்தாய்.
42 அவளோடு சிற்றின்பப் பிரியரான மக்கட் கூட்டம் களியாட்டம் புரிந்தது; பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அந்தப் பெண்களின் கைகளில் வளைகளையும், தலையில் சிறந்து மின்னும் முடியையும் வைத்தார்கள்.
43 விபசாரத்தில் முதிர்ந்தவளைக் குறித்து, அவள் இன்னும் தன் வேசித்தனத்தைத் தொடர்ந்து செய்வாளோ என்று அப்பொழுது கேட்டோம்.
44 ஏனெனில் விலைமாதர்களிடத்தில் போவது போல் அவர்கள் அவளிடம் போனார்கள்; அவ்வாறே வேசிகளான ஒல்லா, ஒலிபா இவர்களிடமும் போனார்கள்.
45 ஆனால் நீதிமான்கள் அவர்களைக் குறித்து விபசாரிகள் என்றும், இரத்தம் சிந்திய பெண்கள் என்றும் தீர்ப்புக் கூறுவார்கள்; ஏனெனில் அவர்கள் விபசாரிகள்தான்; இரத்தக்கறை அவர்கள் கையிலிருக்கிறது."
46 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "அவர்களுக்கு விரோதமாய்ப் பெரும் கும்பலை வரச்செய்து அவர்களை அச்சத்துக்கு உட்படுத்திக் கொள்ளையிட விட்டுவிடு.
47 அந்தக் கும்பல் அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டுவார்கள்; அவர்களுடைய புதல்வர் புதல்வியரைக் கொன்று, வீடுகளைச் சுட்டெரிப்பார்கள்.
48 இவ்வாறு, அவர்களின் வேசித்தனம் நாட்டினின்றே ஒழியச் செய்வோம்; வேசித்தனம் செய்யாமலிருக்க இவர்கள் மற்றப் பெண்களுக்கு ஒர் எச்சரிக்கையாய் இருப்பார்கள்.
49 ஆனால் உங்கள் முறைகேடான பாவம் உங்கள் மேல் தான் சுமத்தப்படும்; சிலைவழிபாட்டுக்குரிய தண்டனை உங்கள் மேலேயே விழும்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்."
அதிகாரம் 24
1 ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பத்தாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, இந்த நாளின் பெயரை- பபிலோன் அரசன் யெருசலேமை முற்றுகையிட்ட நாளாகிய இந்த நாளின் பெயரை எழுது.
3 கலக வீட்டாருக்கு ஒர் உவமையைக் கூறி அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஒரு பானையை அடுப்பில் வை, வைத்து அதில் தண்ணீரை ஊற்று;
4 அதிலே இறைச்சித் துண்டுகளைப் போடு, தொடை, தோள்பகுதி, நல்லவற்றையெல்லாம் போடு, பொறுக்கியெடுத்த எலும்புகளையும் போடு,
5 மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா, விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு, இறைச்சித் துண்டுகளை வேக வை, எலும்புகளையும் அதிலே போடு, அனைத்தையும் பொங்கப் பொங்கக் காய்ச்சு.
6 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இரத்தம் சிந்திய நகருக்கு ஐயோ கேடு! இது ஒரு துருப்பிடித்த பானை, பிடித்த துருவை எடுக்க முடியாத பானை. ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு, அதிலுள்ளவற்றில் வேறுபாடு பார்க்காதே.
7 ஏனெனில், அது சிந்தின இரத்தம் அதன் நடுவில் இருக்கிறது; சுத்தமான பாறையின் மேல் ஊற்றப்பட்டது; மண்ணால் மறைக்கும்படி தரையில் ஊற்றப்படவில்லை.
8 நமது கோபத்தைக் காட்டவும், பழிவாங்கவுமே மண்ணால் மறைக்கப்படாதபடி இரத்தம் சுத்தமான பாறையின் மேல் விழச்செய்தோம்.
9 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இரத்தம் சிந்திய இந்த நகருக்கு ஐயோ கேடு! மிகுதியான விறகுகளை நாமும் குவித்து வைப்போம்.
10 விறகுக் கட்டைகளை அடுக்கு, நெருப்பு மூட்டி இறைச்சியை நன்றாக வேகவை; எல்லாம் ஒன்றாக வேகட்டும், எலும்புகளும் எரிந்து கரையட்டும்.
11 பிறகு பானையை நெருப்பின் மேல் வை, அது நன்றாகச் சூடேறட்டும், செப்பு நன்றாகக் காய்ந்துருகட்டும், அதன் அழுக்கு கரைந்து போகட்டும், பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.
12 நாம் அதைத் தீயிலிட்டதும் வீண்தான்; ஏனெனில் அதில் மிகுந்த துருப்பிடித்திருந்ததால், நெருப்பினாலும் அதைப் போக்க முடியவில்லை.
13 உன்னுடைய அருவருப்பான வேசிச்ததனமே அந்தத் துரு. நாம் உன்னைச் சுத்தப்படுத்த விரும்பியும், நீ உன்னுடைய அசுத்தத்திலிருந்து சுத்தமாகவில்லை; ஆகையால் நமது ஆத்திரம் உன் மேல் கொட்டித் தீருமட்டும் நீ சுத்தமாகவே மாட்டாய்.
14 ஆண்டவராகிய நாமே சொன்னோம்: பழிவாங்கும் நாள் வரத்தான் போகிறது; நாம் அதை நிறைவேற்றியே தீருவோம். அதற்கு நாம் பின்வாங்கவோ, உன்னைத் தப்பவிடவோ, உன்மேல் மனமிரங்கவோ மாட்டோம்; உன் நடத்தைக்கும் அக்கிரமங்களுக்கும் தக்கபடி உனக்குத் தீர்ப்பளிப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
15 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
16 மனிதா, இதோ உன் கண்களுக்கு இன்பந் தருவதை ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறோம்; ஆனால் நீ புலம்பவோ அழவோ கண்ணீர் விடவோ கூடாது; மறைவாய்ப் பெருமூச்சு விடு;
17 ஆனால் சத்தமாய் இழவு கொண்டாடாதே; உன் தலைப்பாகை தலையில் இருக்கட்டும்; செருப்புகளைக் காலில் அணிந்திரு; உன் முகத்தை மூடிக்கொள்ளாதே; இழவு கொண்டாடுகிறவர் உண்ணும் உணவைப் புசிக்காதே."
18 நான் ஊராருடன் பேசினேன்; அன்று மாலை என் மனைவி இறந்து போனாள்; மறுநாட் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்தேன்.
19 அப்போது மக்கள் திரள், "நீர் செய்வதற்கு என்ன பொருள் என எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ" என்று என்னைக் கேட்டார்கள்.
20 அதற்கு நான் சொன்ன விடை இதுவே: "ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
21 இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் நாட்டில் பெருமை மிக்கதும், உங்கள் கண்களுக்கு இன்பந் தருவதும், அழியக்கூடாது என்று உங்கள் இதயம் விரும்பி ஏங்குவதுமான நமது பரிசுத்த இடத்தை நாம் பங்கப்படுத்தப் போகிறோம்; நீங்கள் யெருசலேமில் விட்டு வந்த உங்கள் புதல்வர் புதல்வியர் வாளுக்கு இரையாவார்கள்.
22 அப்பொழுது நீங்களும் நான் செய்தது போலச் செய்வீர்கள்: உங்கள் முகத்தை மூட மாட்டீர்கள்; இழவு நாளில் உண்ணும் உணவைப் புசிக்க மாட்டீர்கள்.
23 உங்கள் தலைப்பாகை தலையிலிருக்கும்; காலில் செருப்பு அணிந்திருப்பீர்கள்; நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள்; ஆனால் உங்கள் அக்கிரமங்களை நினைத்துச் சோர்வுற்று, ஒருவரையொருவர் பார்த்து விம்மித் தவிப்பீர்கள்.
24 இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பான்; அவன் செய்தது போல, காலம் வரும் போது நீங்களும் செய்வீர்கள்; அப்போது ஆண்டவராகிய இறைவன் நாமே என்பதை அறிவீர்கள்.'
25 மனிதா, நாம் என்றைக்கு அவர்களின் வன்மையான கோட்டை, அவர்களுடைய மகிழ்ச்சி, மகிமை, கண்களுக்கினிய காட்சி, உள்ளத்தின் ஆவல், அவர்களுடைய புதல்வர் புதல்வியர் முதலியவரை அவர்களிடமிருந்து எடுத்து விடுவோமா,
26 அன்றைக்கு அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் உன்னிடம் ஒடிவந்து செய்தி சொல்லுவான்;
27 அன்றே உன் வாய் திறக்கப்படும்; தப்பி ஒடி வந்தவனிடம் நீ வாய்திறந்து பேசுவாய்; ஊமையாய் இருக்க மாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பாய்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
அதிகாரம் 25
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குக் கூறு:
3 அவர்களுக்குச் சொல்: அம்மோன் மக்களே, ஆண்டவராகிய இறைவன் சொல்வதைக் கேளுங்கள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த இடம் பங்கப்படுத்தப்பட்ட போதும், இஸ்ராயேல் நாடு பாழாக்கப்பட்ட போதும், யூதா மக்கள் சிறைப்பட்ட போதும், நீங்கள், 'ஆம், அது சரியே!' என்று சொல்லி அக்களித்தீர்கள் .
4 ஆகையால் உங்களைக் கீழ்த்திசையாரின் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உங்கள் நடுவில் தங்கள் பாளையங்களை அமைத்துக் கூடாரங்களை அடிப்பார்கள்; உங்கள் கனிகளை உண்டு, பாலைப் பருகுவார்கள்.
5 இராபா நகரை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனியரின் நகரங்களை மந்தைகளை மடக்கும் கிடைகளாகவும் ஆக்குவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
6 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் கால்தட்டி மனப்பூர்வமாய் மகிழ்ச்சியடைந்தீர்களே!
7 ஆகையால் நமது கரத்தை உங்கள் மீது நீட்டிப் புறவினத்தார்க்கு உங்களைக் கொள்ளைப் பொருளாகக் கையளிப்போம்; உங்களை உலகத்தில் இல்லாதபடி கொன்று பூண்டோடு அழிப்போம்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மோவாபும் செயீரும், 'இதோ யூதா வீட்டாரும் மற்ற நாட்டாரைப் போன்றவர்கள் தான்' என்று சொல்லியபடியால்,
9 மோவாப் நாட்டின் மலைப் பகுதியைத் திறப்போம்; அதன் மகிமையாயுள்ள எல்லைப் புறத்து பட்டணங்களாகிய பேத்தியேசிமோத், பேயேல்மியோன், காரியாத்தாயீம் ஆகியவற்றையும் அழிப்போம்.
10 அம்மோனியரைச் செய்தது போலவே, மோவாப் நாட்டினரையும் கீழ்த்திசையார் கைகளில் உரிமையாக ஒப்படைப்போம்; அவர்களுடைய பெயர் மக்கள் நடுவிலிருந்து அற்றுப் போகும்.
11 மோவாப் மீது நீதி செலுத்தும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
12 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதுமேயர் யூதா வீட்டாரைப் பழி வாங்கக் கருதி அவர்கள் மேல் தங்கள் பகையைத் தீர்த்துக் கொண்ட பெரும் பாதகத்தைக் குறித்து,
13 ஆண்டவராகிய இறைவன் தீர்ப்புக் கூறிச் சொல்லுகிறார்: இதோ இதுமேயா நாட்டுக்கு எதிராக நமது கரத்தை நீட்டுவோம்; அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழித்துக் காடாக்குவோம்; வடக்கில் உள்ள தேமான் முதல் தேதான் வரையுள்ள எல்லா மக்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.
14 நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கெண்டே இதுமேயரைப் பழிவாங்கி அழிப்போம்; அவர்கள் இதுமேயாவில் நமது கோபத்தின்படியும் ஆத்திரத்தின்படியும் செய்து, இதுமேயரைத் தண்டிப்பார்கள்; அப்போது நாம் பழிதீர்ப்பதை இதுமேயா நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 "ஆண்டவராகிய இறைவன் மீண்டும் கூறுகிறார்: பிலிஸ்தியர் தங்கள் பழைய பகைமையை மனத்தில் கொண்டு இஸ்ராயேலரை அழிக்கத்தேடி தங்களால் இயன்றவாறெல்லாம் பழிவாங்கினபடியால்,
16 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அவர்கள் மீது நமது கரத்தை நீட்டி, கெரெதைத்தியர்களைக் கொன்று, கடற்கரை ஊர்களில் உள்ளவர்களையும் அழிப்போம்;
17 கடுமையான தண்டனைகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆத்திரத்தோடு அவர்களைப் பழிவாங்கி நீதிசெலுத்துவோம்; அவ்வாறு அவர்களைப் பழிவாங்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். "
அதிகாரம் 26
1 பதினோராம் ஆண்டில் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, தீர் நகரம் யெருசலேமைக் குறித்து, 'ஆ, ஆ, மக்கள் நிறைந்த நகரத்தின் கதவுகள் உடைபட்டன; அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது குடிகளில்லா நகரமாகும், நானோ மக்களால் நிரப்புவேன்' என்று சொல்லிற்று; அதனால்,
3 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: 'தீர் நகரமே, இதோ நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; கடலலை போலப் புறவினத்தாரை உனக்கெதிராய் எழுப்புவோம்.
4 அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடிப்பார்கள்; இடிந்த மண்ணும் அதில் இராதபடி அகற்றி, வெறும் கற்பாறையாக நாம் ஆக்குவோம்;
5 கடல் நடுவில் அதை வலை காயுமிடமாக்குவோம்; ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; அது புறவினத்தார்க்குக் கொள்ளைப் பொருள் ஆகிவிடும்.
6 வெளியூர்களான அதன் புதல்வியர் வாளுக்கு இரையாகி வீழ்வார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
7 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, அரசர்க்கு அரசனாகிய நபுக்கோதனசார் என்னும் பபிலோன் அரசனை, வடக்கிலிருந்து தீருக்கெதிராய் வரச்செய்வோம்: அவன், குதிரைகளோடும் தேர்களோடும், குதிரை வீரர்களோடும் பெருங் கூட்டத்தோடும், திரளான படைகளோடும் பாய்ந்து வருவான்.
8 வெளியூர்களான உன் புதல்வியரை வாளால் வீழ்த்தி, கொத்தளங்களால் உன்னை வளைத்து, கோட்டைகளால் உன்னைச் சூழ்ந்து, கூரை போலக் கேடயங்கள் தூக்கி உனக்கெதிராய்ப் போர் புரிவான்.
9 மதில் இடிக்கும் எந்திரங்களை எதிரே வைத்து உன் கோபுரங்கள் அனைத்தையும் இடித்து நொறுக்குவான்;
10 அது கிளப்பும் புழுதி உன்னை மூடி மறைக்கும் அளவுக்கு, அவனது குதிரைப்படை பெரிதாய் இருக்கும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவது போல், அவன் உனக்குள் நுழையும் போது, குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் செய்யும் பேரிரைச்சல் உன் மதில்களை அதிரச் செய்யும்.
11 அவன் குதிரைகளின் குளம்புகளால் உன் தெருக்களெல்லாம் மிதிக்கப்படும்; உன் மக்களை வாளால் வெட்டுவான்; உன் பெருந் தூண்கள் தரையில் சாயும்.
12 உன் செல்வத்தைக் கொள்ளையிடுவார்கள், உன் சரக்குகளைப் பறிப்பார்கள், உன் மதில்களை இடிப்பார்கள், அழகிய வீடுகளை அழிப்பார்கள், உன்னிலுள்ள கற்களையும் மரங்களையும் மண்ணையும் தண்ணீரில் எறிவார்கள்.
13 இசை முழக்கத்தை உன்னிடத்தில் ஒயப்பண்ணுவோம், உன் வீணையோசை இனிமேல் கேட்காது.
14 நீ வெறுங் கற்பாறை போல் ஆவாய்; வலைகள் காயும் இடமாய் இருப்பாய்; இனி மீண்டும் கட்டப்படமாட்டாய்; ஏனெனில் ஆண்டவராகிய நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 ஆண்டவராகிய இறைவன் தீர் நகருக்குக் கூறுகிறார்: நீ வீழ்ச்சியுற்று, உன் மக்கள் கொன்று குவிக்கப்படும் போது, உன்னில் காயம் பட்டவர்கள் பயங்கரமாய் அலறி ஒலமிடும் ஒசையால் தீவுகள் அதிருமல்லவா?
16 கடற்கரை வாசிகளின் தரைவர்கள் அனைவரும், தங்கள் இருக்கைகளை விட்டிறங்கித் தங்கள் மகிமையின் அடையாளமான ஆடைகளைக் கழற்றி விட்டுச் சித்திர உடைகளை உரிந்து போடுவார்கள்; திகில் பிடித்தவர்களாய் மயங்குவார்; தரையிலே உட்கார்ந்து, நீ திடீரென வீழ்ச்சியுற்றதை எண்ணி எண்ணி வியப்படைவார்கள்.
17 அவர்கள் புலம்பி அழுது உனக்குச் சொல்வார்கள்: 'பேர்பெற்ற பட்டினமே, கடலின் அரசியே, நீயும் உன் குடிகளும் கடலில் வலிமை காட்டி, கடற்கரை நாடுகளுகெல்லாம் அச்சம் தந்தாயே, நீ இப்படி வீழ்ச்சியுற்றது எவ்வாறு?
18 நீ வீழ்ச்சியுற்ற நாளாகிய இன்று, தீவுகள் திகில் கொள்ளுகின்றன; ஆம், நீ மறைந்து போவதைக் கண்டு கடலின் தீவெல்லாம் கலங்கித் திடுக்கிடும்.'
19 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் உன்னைக் குடியற்ற பட்டணம் போலப் பாழ்படுத்தி, உன் மேல் புயலை எழுப்பிக் கடல் நீரால் உன்னை மூழ்கடித்து,
20 ஆழ்ந்த பாதாளத்தில் இறங்கிய பண்டைய மக்களுடன் உன்னையும் தள்ளி, அங்கே அந்தப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நீயும் பாழடைந்த படுகுழியிலே வாழச் செய்வோம்; உன்னில் மக்கள் வாழமாட்டார்கள்; வாழ்வோர் நாட்டில் உனக்கு இடமிருக்காது.
21 கொடிய முடிவுக்கு உன்னைக் கொண்டு வருவோம்; நீ இனி இருக்கமாட்டாய்; உன்னைத் தேடுவார்கள்; நீ காணப்படமாட்டாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 27
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, இப்போது நீ தீர் நகரின் மேல் புலம்பு;
3 கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு, பல்வேறு கடற்கரை நாட்டு மக்களுடன் வாணிகம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "தீர் நகரே, 'நான் பேரழகி' என்று உன்னைப் பற்றிப் போற்றிக் கொள்ளுகிறாய்.
4 கடலின் நடுவில் உன்னைக் கட்டியவர்கள், உன்னை அழகுபடுத்த எவ்வளவோ முயன்றார்கள்!
5 சானிரிலிருந்து வந்த சப்பினி மரங்களால் உன் கப்பலையும் அதன் மேல்தட்டுகளையும் கட்டினார்கள்; லீபானின் கேதுரு மரத்தைக் கொண்டு உன் பாய்மரத்தைச் செய்தார்கள்.
6 பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால் கப்பல் துடுப்புகளைச் செய்தார்கள்; சிப்ருஸ் தீவுகளின் சவுக்குகளில் யானைத் தந்தங்களைப் பொருத்திக் கப்பலின் மேல்தளத்தை அமைத்தார்கள்.
7 எகிப்திலிருந்து வந்த சித்திரச் சணல் நூலாடை பாய்மரத்தில் பறக்கும் கொடியாயிற்று; எலிசா தீவிலிருந்து கிடைத்த நீலத்துணியும், சிவப்புத் துணியும் விதானமாயின.
8 சீதோன், அர்வாத் ஊர்களின் மக்கள் உன் கப்பல்களில் தண்டு வலித்தார்கள்; தீர் நகரே, உன்னிலிருந்த ஞானிகள் மாலுமிகளாய் இருந்தார்கள்.
9 கேபால் நகரத்து மூப்பரும் ஞானிகளும் பழுதுபார்க்கும் வேலை செய்தார்கள்; கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும் கடலோடிகளும் உன் வணிக விருத்தியில் சிரத்தை கொண்டார்கள்.
10 பேர்சியர், லீதியர், லீபியர் முதலியோர் உன் படையில் வீரராய் இருந்தார்கள்; கேடயங்களையும் தலைச்சீராக்களையும் பூண்டு உனக்கு அணிகலனாய் இருந்தார்கள்.
11 அர்வாத்திரர் உன் படைவீரர்களுடன் உன் மதில்கள் மேல் சுற்றிலும் நின்றார்கள். பிக்மேயித்தார் உன் கோபுரங்களின் மேல் தங்கள் அம்பறாத்தூணிகளைத் தொங்க விட்டு உன் அழகை நிறைவு செய்தார்கள்.
12 கார்த்தேஜ; நகரத்து வியாபாரிகள் உன்னோடு வாணிகம் செய்தனர்; வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், காரீயம், இன்னும் பல திரண்ட செல்வங்களையும் கொண்டு வந்து உன் சந்தைகளில் விற்றார்கள்.
13 கிரேசியா, தூபால், மொசோக் என்னும் இனத்தார் உன்னுடன் வணிகம் நடத்தினர்; உன் குடிகளுக்கு அடிமைகளையும் வெண்கலப் பாத்திரங்களையும் கொடுத்துச் சென்றனர்.
14 தோகொர்மோ நகரத்தினின்று குதிரைகள், குதிரைக் காரர்கள், கோவேறு கழுதைகள் உன் சந்தைக்கு வந்தனர்.
15 தேதான் மக்கள் உன்னுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; பல் தீவுகளின் வாணிகம் உன் கையில் இருந்தது; உன் பொருட்களுக்குப் பண்டமாற்றாக யானைத்தந்தங்களும் கருங்காலி மரங்களும் உனக்குக் கிடைத்தன.
16 சீரியரும் உன்னிடமிருந்த திரண்ட பொருட்களை முன்னிட்டு உன்னோடு வியாபாரம் செய்தனர்; சிவப்புக்கற்கள், சிவப்புப் பட்டாடைகள், சித்திரத் தையலாடைகள், விலையுயர்ந்த சணல்நூற் புடவைகள், பட்டுப்பட்டாவளிகள் எல்லாம் உன் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டன.
17 யூதரும் இஸ்ராயேலரும் உன்னுடன் வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டனர்; நல்ல கோதுமை, தைலங்கள், தேன், எண்ணைய், பிசின் முதலிய வாசனைப் பொருட்கள் ஆகியவற்றை உன் சந்தைகளுக்குக் கொண்டு வந்தார்கள்.
18 தமஸ்கு ஊரார் உன்னிடமிருந்த திரளான பொருட்களுக்குப் பதிலாகப் பலவகைச் சரக்குகளையும், கெல்போனின் திராட்சை இரசத்தையும், வெள்ளை ஆட்டு மயிரையும் உனக்குக் கொண்டு வந்தார்கள்.
19 தாண், கிரேசியா, மொசெல் ஆகியவையும் உன்னுடன் வாணிகம் நடத்தின; துலக்கப்பட்ட இரும்பு, நறுமணப் பொருட்கள் ஆகியற்றை உன் கடைகளில் குவித்தார்கள்;
20 தேதான் நாட்டினர் குதிரைச் சேணங்களைக் கொடுத்தார்கள்.
21 அரேபியா, கேதார் ஆகிய நாட்டுக் தலைவர்கள் அனைவரும் உன்னுடன் வியாபாரம் செய்து ஆட்டுக் குட்டிகளையும் கடாக்களையும் வெள்ளாடுகளையும் உனக்கு விற்றார்கள்.
22 சாபா, இரேமா பட்டணங்களின் வாணிகர் மிக அருமையான வாசனைப் பொருட்களையும் சிறந்த தைலங்களையும் இரத்தினக் கற்களையும் பொன்னையும் உனக்கு விற்றார்கள்.
23 ஆரான், ஷுனே, ஏதேன் பட்டணத்தாரும், சாபா, அசூர், கெல்மாத்து நாட்டாரும் உன்னுடன் வியாபாரம் செய்து பலவகைப் பொருட்களை உனக்கு விற்றார்கள்.
24 நீலப்பட்டாடைகள், சித்திரத் தையலாடைகள், பலவண்ணக் கயிறுகளால் பின்னிய கம்பளங்கள் ஆகியவற்றை உனக்குக் கொண்டு வந்து விற்றார்கள்.
25 தர்சீஸ் பட்டணத்துக் கப்பல்கள் உனக்காக வாணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றன. "கடல் நடுவில் மகிமையடைந்து திரண்ட செல்வத்தால் நிறைந்திருந்தாய்.
26 தண்டுவலிப்பவர்கள் உன்னை ஆழ்கடலில் கொண்டு விட, கீழைக்காற்று எழும்பி உன்னை ஆழ்கடலில் உடைத்தது.
27 நீ அழிவுறும் நாளில், உன் செல்வங்களும் கருவூலங்களும், கணக்கற்ற பல்வேறு பொருட்களும், கடலோடிகளும் மாலுமிகளும், பழுது பார்ப்போரும் வாணிகம் செய்வோரும், உன் படைவீரர்களும் குடிமக்களும், எல்லாரும் உன்னோடு நடுக்கடலில் வீழ்ந்து மடிவார்கள்.
28 உன் மாலுமிகள் ஓலமிட்டலறும் சத்தம் சுற்றுப்புறத்து வயல்வெளிகளை அதிரச் செய்யும்.
29 மரக்கலங்களிலே தண்டுவலிப்பவர்கள், கடலோடித் தலைவர்கள், மாலுமிகள், அனைவரும் கப்பலை விட்டிறங்கிக் கரையிலே நிற்பார்கள்.
30 நீ இழந்தவற்றைக் குறித்துச் சத்தமாய்ப் புலம்புவார்கள், கவலைப்பட்டு அழுவார்கள்; தலை மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரண்டழுவர்;
31 தலைகளை மொட்டையடித்து, மயிரொட்டியாணம் உடுத்து, மனங்கசந்து ஓலமிட்டு அழுவார்கள், விம்முவார்கள்.
32 உன்மீது துக்கம் கொண்டாடிப் புலம்புவர்; 'கடலில் புதையுண்ட தீர் நகருக்குச் சரியொத்த நகருண்டோ?' என்றழுவர்.
33 உன் கடல் வாணிகப் பொருட்களால் பலநாட்டு மக்களை நிறைவு செய்தாய்; உன் திரளான செல்வத்தாலும் வணிகப் பொருட்களாலும், உலகத்தின் அரசர்களைச் செல்வர்களாக்கினாய்.
34 இப்பொழுதோ, கடல் உன்னை நொறுக்கிவிட்டது; உன் செல்வங்களெல்லாம் ஆழ்கடலில் மூழ்கிப் போயின; உன்னுடைய மக்களும் மாலுமிகளும் மாய்ந்தனர்.
35 கடற்கரையில் வாழும் மக்கள் அனைவரும் உன் முடிவைக்கண்டு, திகைப்புற்றார்கள்; அரசர்கள் அஞ்சி நடுங்கினார்கள்; அவர்கள் முகம் ஒளியிழந்து கலங்குகிறது.
36 புறவினத்தாரின் வணிகர்கள் உன்னைப் பழித்துரைக்கிறார்கள்; நீயோ கொடிய முடிவை அடைந்தாய்; இனி நீ வாழவே மாட்டாய்."
அதிகாரம் 28
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, தீர் நகரத்துத் தலைவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் இதயம் செருக்குற்று, ' நானே கடவுள்; நடுக்கடலில் தெய்வங்களின் இருக்கையில் வீற்றிருக்கிறேன்' என்று நீ சொன்னாய்; நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணினாலும், நீ மனிதன் தான்.
3 நீ தானியேலை விட அறிவாளி தான், நீ அறியாத மறைபொருள் ஒன்றுமில்லை;
4 உன் ஞானத்தாலும் அறிவாலும், செல்வமும் வல்லமையும் பெற்றாய்; பொன்னும் வெள்ளியும் சேர்த்து உன்னுடைய கருவூலத்தை நிரப்பினாய்.
5 வாணிகத்தில் உள்ள உன் சிறந்த ஞானம், இருந்த செல்வத்தை மிகுதிப்படுத்திற்று; வல்லமை வளர்ந்தது; திறமை மிகுதியால் உன்னுடைய இதயம் செருக்குக் கொண்டது.
6 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ கடவுளைப்போல் அறிவாளியாய் இருப்பதாக நினைப்பதால்,
7 வேற்று நாட்டவருள் மிகக் கொடியவர்களான அந்நியர்களை உனக்கெதிராய் எழுப்புவோம்; அவர்கள் கையிலேந்திய வாளோடு வருவர்; வந்து உன் ஞானத்தின் பெருமையைப் போக்குவர்; அதனுடைய பேரழகைக் கெடுப்பார்கள்.
8 உன்னைக் கொன்று அரியணையிலிருந்து தள்ளுவர்; கடலில் கொலையுண்டவர்கள் நடுவில் அழிவாய்.
9 நீ மனிதன் தான்; கடவுள் அல்லவே; உன்னைக் கொல்ல வருகின்றவர்களிடம், 'நான் கடவுள்' என்று சொல்வாயோ?
10 விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல், அந்நிய நாட்டினர் கையால் சாவாய்; ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
11 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: "மனிதா, நீ தீர் நாட்டு அரசனைக் குறித்துப் புலம்பு:
12 நீ அவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ கடவுள் சாயலின் முத்திரையாய் இருந்தாய்; ஞானத்தில் நிறைந்திருந்தாய்; அழகில் சிறந்திருந்தாய்;
13 கடவுளின் சோலையில், இன்பத் தோட்டத்தில் இருந்தாய்; விலையுயர்ந்த கற்களால் அழகு பெற்றிருந்தாய்; பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்குக் கல், கோமேதகம், படிகப்பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் முதலியவற்றை அணிந்திருந்தாய்; பொன்னான உன் உடுபாவனை உன் அழகை வெளிக்காட்டிற்று; நீ பிறந்த அன்றே இவை தயாரிக்கப்பட்டன.
14 தன் இறக்கையை விரித்துக் காக்கும் கெரூபை உனக்குக் காவலாக வைத்தோம். கடவுளின் பரிசுத்த மலை மேல் உன்னை நாட்டினோம்; விலையுயர்ந்த கற்களின் நடுவில் உலவினாய்.
15 நீ உண்டாக்கப்பட்ட நாளிலிருந்து உன் வழிகளில் குற்றமற்றிருந்தாய்; ஆனால் இறுதியில் உன்னில் குற்றம் காணப்பட்டது;
16 வியாபார மிகுதியால் உன்னில் அக்கிரமம் நிறைந்தது; நீ பாவத்தைச் செய்தாய்; ஆகையால் கடவுளின் மலையிலிருந்து அசுத்தமாயிருந்த உன்னைத் தள்ளினோம், காப்பாற்றும் கெரூபு உன்னை அக்கினி மயமான இரத்தினங்களின் நடுவினின்று வெளியேற்றியது.
17 நீ உன் அழகின் காரணமாய்ச் செருக்குற்றாய், உன் மாட்சியை முன்னிட்டு உன் ஞானத்தைக் கெடுத்தாய். உன்னைத் தரையில் குப்புறத் தள்ளினோம்; மன்னர்கள் முன் வைத்து அவர்கள் உன்னைப் பார்த்துப் பரிகசிக்கச் செய்தோம்.
18 உன் அக்கிரமங்களின் மிகுதியினாலும், வியாபாரத்தில் செய்த அநீதியாலும் உன் பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினாய்; ஆகையால் உன் நடுவிலிருந்தே அக்கினியை வரப் பண்ணினோம்; அது உன்னைச் சுட்டெரித்தது. உன்னைப் பார்த்தவர்களின் கண்கள் காண, முற்றிலும் உன்னைச் சாம்பலாக்கினோம்.
19 உன்னைக் கண்டிருந்த மக்களெல்லாம், இப்பொழுது பார்த்துப் பயந்து வியக்கிறார்கள்; கொடியதொரு முடிவை நீ அடைந்தாய்; இனி என்றென்றும் இருக்க மாட்டாய்."
20 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
21 மனிதா, சீதோன் நகரின் பக்கமாய் உன் முகத்தைத் திருப்பி, அதற்கு எதிராக இறைவாக்குக் கூறு:
22 நீ அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "சீதோனே, இதோ, நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; உன் நடுவில் நமது மகிமையை வெளிப்படுத்துவோம்; அதன் நடுவில் வந்து நீதித் தீர்ப்பு வழங்கும் போது, நம்முடைய பரிசுத்தத்தை அங்கே காண்பிக்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
23 நாம் அதில் கொள்ளைநோயை அனுப்புவோம், தெருக்களில் இரத்த வெள்ளம் ஓடச் செய்வோம்; நாற்புறமும் வாளால் வெட்டப்படுவார்கள்; வெட்டுண்டவர்கள் அதன் நடுவில் செத்து வீழ்வார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
24 "இஸ்ராயேல் நாட்டார்க்கு, அவர்கள் நிந்தித்து நடத்திய எதிரி நாட்டார்கள் காலில் குத்துகிற முள்ளாகவும், தைத்து நோவு கொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இனி மேல் இருக்க மாட்டார்கள் அப்போது நாமே இறைவன் என்பதை அறிவார்கள்.
25 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரை நாம் அவர்கள் சிதறிவாழும் நாடுகளிலிருந்து சேர்த்துக் கொண்டு வந்து, அவர்கள் வழியாய்ப் புறவினத்தார் முன் நம் பரிசுத்தத்தை விளங்கச் செய்யும் போது, நாம் நம் அடியான் யாக்கோபுக்குக் கொடுத்திருந்த அவர்களுடைய சொந்த நாட்டில் வாழ்வார்கள்.
26 அவர்கள் அதில் அச்சமின்றிக் குடியிருப்பார்கள்; வீடுகள் கட்டுவார்கள்; திராட்சைத் தோட்டங்கள் அமைப்பார்கள். அவர்களைச் சூழ்ந்திருந்து அவர்களை இழிவாக நடத்தியவர்கள் மீது நாம் நீதித்தீர்ப்புச் செலுத்திய பிறகு, அச்சமின்றி வாழ்வார்கள்; அப்பொழுது, நாமே அவர்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
அதிகாரம் 29
1 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, நீ எகிப்து அரசனாகிய பார்வோனுக்கு எதிராய் உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து நாடனைத்துக்கும் எதிராக இறைவாக்குக் கூறு:
3 நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "எகிப்துக்கு அரசனாகிய பார்வோனே, ஆறுகளின் நடுவிலே படுத்துக் கொண்டு, 'நைல் என்னுடைய ஆறு, நானே அதை எனக்கென உண்டாக்கினேன் ' என்று இறுமாந்து சொல்லும் பெரிய முதலையே, இதோ, நாம் உனக்கு எதிராளியாய் இருக்கிறோம்.
4 உன் வாயிலே தூண்டில்களை மாட்டி, உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வோம்; உன் செதிள்களில் ஒட்டியிருக்கும் மீன்களோடு ஆறுகளின் நடுவினின்று உன்னை இழுத்துப் போடுவோம்.
5 உன்னையும் உன்னில் ஒட்டியுள்ள மீன்களையும் பாலை நிலத்தில் வீசி எறிவோம்; கட்டாந் தரையிலே விழுந்து சாவாய்; உன்னை வாரி எடுத்துப் புதைப்பார் யாரும் இருக்க மாட்டார்; பூமியின் மிருகங்களுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உணவாக உன்னைத் தந்தோம்.
6 அப்போது எகிப்து நாட்டின் குடிகள் எல்லாம், நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். இஸ்ராயேல் வீட்டாருக்கு நாணல் கோலாய் நீ இருந்தாய்;
7 உன்னை அவர்கள் பற்றிப் பிடித்த போது, நீ முறிந்தாய், அவர்கள் தோளைக் கிழித்தாய், ஊன்றுகோலாகிய உன்மேல் சாய்ந்த போது, நீ துண்டு துண்டாய் ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கச் செய்தாய்.
8 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் உனக்கு எதிராய் வாளை எழுப்புவோம்; உன் மக்களையும், மிருகங்களையும் கொன்றொழிப்போம்.
9 எகிப்து நாடு பாழடைந்த பாலை நிலமாகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள் ஏனெனில், 'நைல் என்னுடைய ஆறு, நானே அதை உண்டாக்கினேன்' என்று சொன்னாய்.
10 ஆகையால், இதோ, நாம் உனக்கும் உன் ஆறுகளுக்கும் எதிராய் வருவோம்; வந்து மிக்தோல் முதல் சினேயே வரை எத்தியோப்பியா எல்லை முடிய எகிப்து நாட்டை அழித்துப் பாலையாக்குவோம்.
11 மனிதர்களும் மிருகங்களும் அதில் நடமாட மாட்டா. நாற்பது ஆண்டுகளுக்கு அது குடியற்றுப் போகும்.
12 பாழான நாடுகள் நடுவில் பாழடைந்த நாடாய் எகிப்தை ஆக்குவோம்; அழிந்து போன பட்டணங்களின் நடுவில் அழிந்து போன பட்டணங்களாக அதன் பட்டணங்களை ஆக்குவோம்; நாற்பது ஆண்டுகளுக்குப் பாலையாயிருக்கும்; எகிப்து நாட்டினரை வேற்றினத்தார் நடுவில் சிதறடித்து, பல்வேறு நாடுகளுக்கு விரட்டி விடுவோம்.
13 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்தியரை அவர்கள் சிதறி வாழும் மக்கள் நடுவிலிருந்து கூட்டிச்சேர்ப்போம்;
14 எகிப்தின் செல்வங்களைத் திரும்பக் கொடுப்போம்; அவர்களுடைய பிறந்த நாடாகிய பாத்துரேஸ் என்னும் நாட்டுக்கு அவர்களைக் கொணர்ந்து நிலைநாட்டுவோம்; அங்கே அவர்கள் ஒரு சிற்றரசாய் இருப்பார்கள்.
15 மற்ற அரசுகளை விட அதுவே சிறியதாய் இருக்கும்; வேற்றினத்தாரை விடத் தன்னையே உயர்வாகக் கருதமாட்டாது; வேற்றினத்தார் மேல் அதிகாரம் செலுத்த முடியாதபடி அவர்களை மிகவும் சிறிய அரசாக்குவோம்.
16 இனி எகிப்தியர் இஸ்ராயேல் வீட்டார்க்கு ஆதரவாகவோ நம்பிக்கையாகவோ இருக்க மாட்டார்கள்; அவர்களிடம் உதவி கோரி தங்கள் பழைய அக்கிரமத்தை நினைப்பூட்ட மாட்டார்கள். அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவார்கள்."
17 இருபத்தேழாம் ஆண்டின் முதல் மாதத்தில் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
18 மனிதா, பபிலோன் மன்னாகிய நபுக்கோதனசார் தீர் பட்டண முற்றுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் எல்லாம் மொட்டையாயின; தோள்கள் யாவும் நொறுங்கின; ஆனால், தீர் பட்டணத்தில் அவனும், அவன் படைகளும் நமக்குச் செய்த முயற்சிக்கு யாதொரு கைம்மாறும் பெறவில்லை.
19 ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் மன்னனாகிய நபுக்கோதனசாருக்கு எகிப்து நாட்டைக் கொடுப்போம்; அதன் செல்வங்களையெல்லாம் அவன் கைப்பற்றிக் கொள்ளையிட்டு, அந்தக் கொள்ளைப் பொருட்களைப் பங்கிடுவான்; அது அவன் சேனைக்குப் பலனும் கூலியுமாகும்.
20 தீர் பட்டணத்தில் அவன் செய்த முயற்சிக்காக எகிப்து நாட்டை அவனுக்குக் கொடுத்தோம். ஏனெனில் நமக்காக அவன் வேலை செய்தான், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
21 அந்நாளில் இஸ்ராயேல் வீட்டாருக்கு ஒரு கொம்பு முளைக்கச் செய்வோம்; அவர்கள் நடுவில் உன் வாயைத் திறப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
அதிகாரம் 30
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, நீ இறைவாக்குரைத்துச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: 'ஆபத்தான நாள்' என்று அலறி அழுங்கள்.
3 ஏனெனில் அந்த நாள் வருகிறது, ஆண்டவரின் நாள் வந்துவிட்டது; அந்த நாள் இருண்ட நாளாகும், புறவினத்தார்க்கு அழிவின் நாளாகும்;
4 எகிப்தின் மேலே வாளொன்று விழும்; எகிப்திலே கொலையுண்டு வீழ்ந்தார்கள், அதன் செல்வமெல்லாம் பறிபோயிற்று, அதன் அடிப்படைகள் அழிந்து போயின என்று எத்தியோப்பியர் கேட்டுத் திகைத்து மயங்குவர்.
5 எத்தியோப்பியரும் பூத்தியரும் லீதியரும், அராபியர் யாவரும், கூபியரும், உடன்படிக்கை செய்து கொண்ட மக்கள் யாவரும் அவர்களோடு கூட வாளுக்கு இரையாவார்கள்.
6 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எகிப்தை ஆதரித்தவர்கள் வீழ்ச்சி அடைவார்கள், அதன் வல்லமையின் செருக்கு தாழ்ந்து நாசமாகும்; மிக்தோல் முதல் சியேனே வரை வாழ்பவர்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய இறைவன்.
7 பாழாகப் போன நாடுகளின் நடுவிலே அது பாழாகப் போன ஒரு நாடாகும்; அழிக்கப்பட்ட நகரங்களின் நடுவிலே, அதன் நகரங்கள் அழிந்து போன நகரங்கள் ஆகும்;
8 எகிப்துக்கு நாம் தீ வைத்து, அதற்குத் துணையாயிருந்தவர்கள் யாவரும் தோற்கடிக்கப்படும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
9 அந்நாளில் எத்தியோப்பியர்களுடைய இறுமாப்பை அழிக்க நாம் தூதர்களை அனுப்புவோம்; அப்பொழுது அவர்கள், எகிப்தின் அழிவு நாள் வந்தது, தங்களுக்கும் அது வந்தே தீரும்" எனக் கண்டு அஞ்சித் திகைப்பார்கள்.
10 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் மன்னனாகிய நபுக்கோதனசாரைக் கொண்டு நாம் எகிப்து மக்களை அழிக்கப்போகிறோம்.
11 வேற்றினத்தாரில் மிகக் கொடுமையான அவனையும் அவன் சேனைகளையும் கொண்டு வந்து, எகிப்து நாட்டை அழிக்கச் செய்வோம்; அவர்கள் தங்கள் வாளை உருவி, எகிப்தியர் மேல் பாய்ந்து கொன்று, கொலையுண்ட உடல்களால் நாட்டை நிரப்புவார்கள்.
12 நைல் நதியை வற்றச் செய்வோம்; கொடியவர் கையில் நாட்டை விற்போம்; அந்நியர்களின் கையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் பாழாக்குவோம்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்.
13 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் சிலைகளை அழிப்போம்; மெம்பீஸ் நகரத்தில் இருக்கும் படிமங்களை ஒழிப்போம்; இனி எகிப்து நாட்டில் தலைவன் இரான்; எகிப்து நாட்டில் திகில் பரவி இருக்கும்.
14 பாத்துரேஸ் நாட்டைப் பாழாக்குவோம்; தப்னீஸ் நகருக்குத் தீ வைப்போம்; அலெக்சாந்திரியா நகரத்தாரை ஆக்கினைக்கு உள்ளாக்குவோம்.
15 எகிப்திற்கு அரணாக விளங்கும் பெலுஸ் நகரத்தின் மீது நமது ஆத்திரத்தைக் காட்டுவோம்; அலெக்சாந்திரியா பட்டணத்தின் கணக்கிலடங்கா மக்களைக் கொன்றொழிப்போம்.
16 எகிப்துக்குத் தீ வைப்போம். பிரசவிக்கும் பெண்ணைப் போலப் பெலுஸ் நகரம் மிகுந்த வேதனைப்படும்; அலெக்சாந்திரியா நகரம் பாழாகும்; மெம்பீஸ் நகருக்கு நாடோறும் நெருக்கமிருக்கும்.
17 எலியோப்பொலி நகரத்து வாலிபர்களும், புபாஸ்தி நகரத்தின் இளைஞர்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர்; அவ்வூர்ப் பெண்களும் அடிமைகளாய்ச் சிறைப்படுத்திக் கொண்டுபோகப்படுவர்;
18 தப்னீஸ் நகரத்திலே எகிப்தின் அதிகாரத்தை முறித்து, அதன் செருக்கெல்லாம் அற்றுப்போக நாம் செய்யும் போது, அங்கே கதிரவன் மங்கிப்போகும்; அழகிய வானமும் இருண்டு போகும்; பெண்கள் அடிமைகளாக்கப்படுவர்.
19 இங்ஙனம் நாம் எகிப்தைத் தண்டிக்கும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."
20 பதினோராம் ஆண்டின் முதல் மாதத்தில் ஏழாம் நாள் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது;
21 மனிதா, எகிப்தின் அரசனான பார்வோனின் புயத்தை நாம் முறித்துவிட்டோம்; ஆனால் அது நலமடையும்படி காயத்துக்கு வேண்டிய மருத்துவம் செய்வாரில்லை; அவன் வாளேந்த சக்தி பெறும்படி புயத்திற்குத் துணி சுற்றி நாடாவால் கட்டுப்போடவுமில்லை.
22 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் எகிப்தின் அரசனான பார்வோனுக்கு எதிராகச் செல்வோம்; சென்று அவனது நன்றாயிருக்கும் கையையும், ஏற்கெனவே முறிந்த கையையும் முற்றிலும் ஒடித்து, அவன் கையிலிருக்கும் வாளை விழச் செய்வோம்;
23 மேலும் எகிப்தியரை வேற்றினத்தார் நடுவில் சிதறடிப்போம்; பல்வேறு நாடுகளுக்கு அவர்களை விரட்டியடிப்போம்;
24 பபிலோன் மன்னனின் புயங்களை நாம் பலப்படுத்தி, அவன் கையிலே நம் வாளைக் கொடுப்போம்; பார்வோனின் புயங்களை முறிப்போம்; அப்பொழுது குற்றுயிராய்க் கிடப்பவன்போல், அவன் முன் கிடந்து தவிப்பான்.
25 நாம் பபிலோன் அரசனின் புயங்களை வலுப்படுத்துவோம்; பார்வோனின் புயங்கள் வலுவற்று வீழும்; நமது வாளைப் பபிலோன் அரசனின் கையில் கொடுத்தால், அவன் அதை எகிப்து நாட்டின்மேல் நீட்டுவான்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
26 எகிப்தியரை வேற்றினத்தார் நடுவில் சிதறடிப்போம்; பல்வேறு நாடுகளுக்கு அவர்களை விரட்டியடிப்போம்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
அதிகாரம் 31
1 பதினோராம் ஆண்டின் மூன்றாம் மாதத்தில் முதல்நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, எகிப்து நாட்டின் அரசன் பார்வோனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் சொல்: "நீ உன் மகிமையில் யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்;
3 இதோ லீபானில் உள்ள கேதுரு மரத்துக்கு நீ ஒப்பாவாய்; அதில் அழகிய கிளைகள் உண்டு; அடர்ந்த நிழலுண்டு; அது ஓங்கிய உயரமுள்ளது; உச்சி மேகத்தைத் தொடுகிறது;
4 தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது; மிகுதியான நீர் அதனை உயர்ந்து வளரச் செய்தது; ஆறுகள் அடிமரத்தைச் சுற்றி ஓடுகின்றன; அதிலிருந்து ஓடும் அருவிகள் காட்டிலுள்ள மரங்களுக்கு எல்லாம் பாய்கின்றன.
5 ஆகையால் அந்தக் கேதுரு மரம் காட்டிலுள்ள மற்றெல்லா மரங்களை விட உயர்ந்து வளர்ந்தது; அதன் தளிர்கள் பலுகின; மிகுந்த ஈரத்தால் கொம்புகளும் கிளைகளும் வளர்ந்தோங்கின.
6 அது தன் நிழலைச் சுற்றிலும் பரவச் செய்தது; வானத்துப் பறவைகள் அதன் கொம்புகளில் தத்தம் கூடுகளைக் கட்டிக் கொண்டன. வயல் வெளி மிருகங்கள் அதன் கிளைகளின் கீழ் தங்கள் குட்டிகளைப் போட்டன; பல நாட்டு மக்கள் அதன் நிழலிலே குடிகொண்டார்கள்.
7 அதன் வேர்கள் ஆழ்ந்த தண்ணீருக்குள் இருந்ததால் அதன் கிளைகள் படர்ந்திருந்தன; பசுங்கொழுந்துகள் மிகுந்திருந்தன; மரம் மிகவும் அழகாய் இருந்தது.
8 கடவுளின் சோலையிலுள்ள கேதுரு மரங்கள் இதை விடச் செழித்தவை அல்ல; தேவதாரு மரங்கள் இதைவிட உயரமல்ல; பிலத்தான் மரங்கள் இதைப் போலத் தழைத்ததில்லை, கடவுளின் சோலையிலுள்ள எந்த மரமும் இதற்கு நிகரில்லை; அழகிலே இதற்கு இணையில்லை.
9 ஏனெனில் அடர்ந்த கிளைகளாலும், செறிந்த தழைகளாலும் அதனை நாம் அழகு செய்தோம்; கடவுளின் சோலையிலுள்ள அழகிய மரங்களெல்லாம் அதைக் கண்டு பொறாமை கொண்டன.
10 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அது தன் உயரத்தைக் கண்டு செருக்குற்றதாலும், தன் செறிந்த கிளைகளின் மிகுதியான தழைப்பசுமையைப் பெருமிதமாய்க் காட்டி இறுமாந்ததாலும்,
11 நாம் அதைப் புறவினத்தாருள் மிகுத்த வலிமையுள்ளவனுடைய கையில் ஒப்படைப்போம்; அவன் அதன் அக்கிரமத்திற்கு ஏற்ப தான் விரும்புவதை அதற்குச் செய்வான்; நாமும் அதைத் தள்ளிப்போட்டோம்.
12 வேற்று நாட்டவருள் மிகக் கொடிய அந்நியர் வந்து, அதனை வெட்டிப் போடுவார்கள்; அதன் கிளைகள் எல்லாம் மலைகளிலும் கணவாய்களிலும் வீழும்: அதன் கொழுந்துகள் சுற்றிலுமுள்ள நீரோடைகளில் விழுந்து சிதைந்து போகும்: பூமியிலுள்ள மக்கள் அனைவரும் அதன் நிழலை விட்டகலுவார்கள்.
13 பாழ்பட்ட அம்மரத்திலே வானத்துப் பறவைகள் வாசம் செய்யும்; அதன் கிளைகளினிடையில் பூமியின் மிருகங்கள் யாவும் பதுங்கி ஒடுங்கும்.
14 இனிமேல் நீரினருகே நடப்பட்ட மரங்கள் தங்கள் உயரத்தை முன்னிட்டுச் செருக்கடைதலாகாது; மேகம் வரை வளரக் கூடாது; நீர் நிலைகளுக்கருகில் வாழும் மரங்கள் அவற்றைப் போல் உயரமாய் வளருதலாகாது; ஏனெனில் அவையெல்லாம் செத்துப் போகும்; ஆழ்குழிக்குள் செல்லும் மனிதர்களோடு கீழுலகுக்குத் தள்ளப்படும்.
15 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தக் கேதுரு மரம் பாதாளத்தில் இறங்கும் அந்நாளில் அங்கே இழவு கொண்டாடச் செய்வோம்; அதனைப் பாதாளத்தால் மூடிவிடுவோம்; தண்ணீரையும் ஆறுகளையும் அடைத்து விடுவோம்; அதன் இழவை முன்னிட்டு லீபான் மலை புலம்பியழும்; காட்டு மரங்கள் யாவும் திகிலடையும்.
16 ஆழ்குழியில் இறங்குகிறவர்களோடு நாம் அதனைப் பாதாளத்தில் வீழ்த்தும் போது, அதன் வீழ்ச்சியின் ஓசையால் பூமியின் மக்கள் அனைவரும் நடுங்குவார்கள். அப்போது, சோலைவனமாகிய லீபானில் எஞ்சியுள்ள சிறந்த மரங்களும், அழகான தருக்களும், தண்ணீர் பாயும் மரங்களும் யாவும் பூமியின் ஆழத்தில் ஆறுதல் அடையும்.
17 ஆனால் இவையும் அதைப் போலச் செத்தவர்களோடு பாதாளத்தில் இறங்க வேண்டியிருக்கும்; ஆம், அதன் நிழலை அணுகி வாழ்ந்த புறவினத்தாரும் அழிவார்கள்.
18 அழகிலும் மகிமையிலும், சிங்காரச் சோலையின் மரங்கள் யாவற்றிலும் சிறந்திருந்த கேதுரு மரமே, நீ எதற்கு ஒப்பாயிருக்கிறாய்? மற்ற மரங்களோடு நீயும் ஆழ்குழியில் வீழ்த்தப்படுவாய்; வாளால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாப் புறவினத்தாரோடு கிடப்பாய்; அங்ஙனமே பார்வோனுக்கும், அவன் நாட்டு மக்கள் அனைவருக்கும் நடக்கும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 32
1 பன்னிரண்டாம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதத்தில் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, எகிப்து நாட்டின் அரசனாகிய பார்வோனைக் குறித்து நீ ஒரு புலம்பல் தொடங்கி அவனுக்குச் சொல்: "உலக மக்களுள் நீ ஒரு சிங்கம் என உன்னைப்பற்றிக் கருதுகிறாய்; ஆனால் நீ கடலில் உலவும் மகர மீனுக்கு ஒப்பானவன்; நீ உன் கடலில் கிளர்ந்தெழுந்து தண்ணீரை உன் கால்களின் ஆட்டத்தால் கலக்கிக் குழப்பிக் கொண்டிருக்கிறாய்.
3 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார். மாபெரும் மக்கட் கூட்டத்தோடு வந்து உன் மேல் நமது வலையை வீசுவோம்; அதிலே உன்னைப் பிடித்துக் கொள்வோம்;
4 உன்னைக் கரைக்கு இழுத்துத் தரையில் எறிவோம்; வானத்துப் பறவையெல்லாம் உன்மேல் உட்காரச் செய்வோம்; பூமியின் மிருகங்களையெல்லாம் உன்னைக் கொண்டு நிறைவு செய்வோம்;
5 உன் சதைத் துண்டுகளை மலைகளின் மேல் போடுவோம்; உன் அழுகின உடலால் பள்ளத்தாக்குகளை நிரப்புவோம்.
6 நாற்றமடிக்கும் உன் குருதியால் பூமியைப் பாய்ச்சுவோம்; மலைகள் வரை பாயச் செய்வோம்; பள்ளத்தாக்குகளை நிரப்புவோம்;
7 உன்னை அழித்த பிறகு வானத்தை மூடுவோம்; விண்மீன்களை இருளச் செய்வோம்; கதிரவனை மேகத்தால் மூடி மறைப்போம்; சந்திரன் தன்னொளி தராதிருக்கச் செய்வோம்;
8 வானத்தின் ஒளி விளக்குகள் யாவும் உன் மேல் இருண்டு போகச் செய்வோம்; உன் நாட்டை இருள் மூடிக் கொள்ளச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
9 உன்னை நாம் பல்வேறு இனத்தாருக்கும், நீ அறியாத நாட்டினருக்கும் கைதியாகக் கொணர்ந்து மக்களின் இதயங்களைக் கலங்கச் செய்வோம்.
10 பல்வேறு இனத்தார் உன்னைக் கண்டு திகைத்துக் கலங்கும்படி செய்வோம்; அவர்களுடைய அரசர்கள் நமது வாள் தங்கள் முன் மின்னல் போலப் பளிச்சிடுவதைக் கண்டு திகிலடைவார்கள்; நீ அழியும் நாளில் அவர்கள் தத்தம் உயிருக்குப் பயந்து திடுக்கிட்டு மயங்குவார்கள்.
11 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் அரசனுடைய வாள் உன் மேல் விழப் போகிறது;
12 வலிமை மிக்கவர்களின் வாளால் உன் திரளான மக்களை வெட்டி வீழ்த்துவோம்; நாடுகளில் எல்லாம் அவர்கள் மிகவும் கொடியவர்கள்: "எகிப்தின் செருக்கை அறவே ஒழிப்பார்கள், எகிப்தின் ஏராளமான படையை முறியடிப்பார்கள்;
13 மிகுதியான கால்வாய்களின் கரையில் இருக்கும் அதன் மிருகங்கள் அனைத்தையும் அழிப்போம்; இனி மனிதர்களின் கால்கள் அங்கே நடமாடுவதில்லை; மிருகங்களின் குளம்புகள் அவ்விடத்தை மிதிக்கவுமாட்டா.
14 பின்னர் நாம் ஆறுகளின் நீரைத் தெளியச் செய்வோம்; தண்ணீரை எண்ணெய் போல தெளிந்தோடச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 எகிப்து நாட்டை நாம் பாழாக்கும் போது, அதன் திரண்ட செல்வங்களை நாம் அழிக்கும் போது, அதில் வாழ்கின்ற அனைவரையும் கொலை செய்யும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
16 அழ வேண்டிய காலம் வந்திருக்கிறது; எகிப்து நாட்டின்மேல் புலம்பல் கேட்கும்; பல நாட்டுப் பெண்கள் ஒப்பாரி பாடி எகிப்தைக் குறித்தும், அதில் வாழும் மக்களைக் குறித்தும் புலம்பி அழுவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
17 பாதாளத்தில் பார்வோன்: பன்னிரண்டாம் ஆண்டின் முதல் மாதத்தில் பதினைந்தாம் நாள், ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
18 மனிதா, எகிப்து நாட்டின் ஏராளமான மக்களைக் குறித்துப் புலம்பி அழு; எகிப்து என்னும் மங்கையையும், மகிமை மிகுந்த மற்ற நாடுகளாகிய அதன் புதல்வியரையும், ஆழ்குழியில் இறங்குகிறவர்களோடு கீழுலகுக்குத் தள்ளு:
19 'எகிப்து மாதே! மற்றவர்களை விட நீ மட்டும் அழகிலே சிறந்தவளா? கீழுலகுக்கு இறங்கு; அங்கே விருத்தசேதனமில்லாதவர்களுடன் உறங்கு.'
20 அந்நாட்டு மக்கள் வாளுக்கு இரையான மக்கள் நடுவில் வெட்டுண்டு வீழ்வார்கள்: அதுவும், அதனைச் சார்ந்த எல்லா மக்களும் வெட்டுண்டு படுகுழியில் தள்ளப்படுவார்கள்.
21 படுகுழியின் நடுவிலிருந்து வல்லமை மிகுந்த தலைவர்கள் தங்களுக்குத் துணை செய்தவர்களுடன் சேர்ந்து, 'விருத்தசேதனம் செய்யாதவர்கள் வாளால் வெட்டுண்டு படுகுழியில் வீழ்ந்தனர்; வீழ்ந்து அங்கேயே கிடக்கின்றனர்' என்று குரலுயர்த்திக் கூவுவார்கள்.
22 அசூரும், அவனைச் சார்ந்தவர்களும் அங்கே கிடக்கிறார்கள்; இவர்களுடைய பிணக்குழிகள் அவனது கல்லறையைச் சூழ்ந்துள்ளன; விருத்தசேதனம் செய்து கொள்ளாத அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டவர்கள்.
23 இவர்களுடைய பிணக்குழிகள் பாதாளத்தின் ஆழத்தில் இருக்கின்றன; அசூருடைய கல்லறைக்கு நாற்புறமும் புதைக்கப்பட்டனர்; வாளால் வெட்டுண்டு செத்து வீழ்ந்த இவர்கள் எல்லாரும் முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தவர்கள்.
24 ஏலாமும், ஏலாமின் கூட்டத்தார் அனைவரும் அங்கே கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லாரும் வாளால் வெட்டுண்டு விழுந்தனர்; விருந்தசேதனம் செய்து கொள்ளாமல் பாதாளத்தில் இறங்கினார்கள்; முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தார்கள்; இப்பொழுது குழியில் இறங்கினவர்களோடு இழிவாகச் செத்தார்கள்;
25 வெட்டுண்டு விழுந்த குடிமக்களோடு ஏலாம் அரசனைக் கிடத்தினார்கள்; அவன் குடிகளின் கல்லறை அவன் கல்லறைக்கு நாற்புறமும் சூழ்ந்துள்ளது; விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் எல்லாரும் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகிச் செத்துக் குழியில் இறங்கினார்கள்; தங்கள் இழிவைச் சுமந்து கொண்டு, கொலை செய்யப்பட்டவர்களோடு சேர்ந்தார்கள்.
26 அங்கே மொசோக்கும் தூபாலும் கிடக்கிறார்கள்; அவர்களுடைய திரளான ஆட்களும் அவர்கள் இருவரின் கல்லறையைச் சுற்றிப் புதைக்கப்பட்டார்கள்; விருத்தசேதனம் செய்து கொள்ளாத இவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சம் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகி மாண்டார்கள்.
27 விருத்தசேதனமில்லாதவர்களுள் வல்லமை மிக்கவர் சிலர் படைக்கலந் தாங்கியவர்களாய் விழுந்து பாதாளத்தில் இறங்கினார்கள்; இவர்கள் தங்கள் வாளைத் தலையணையாக வைத்துத் தூங்குகிறார்கள்; ஏனெனில் இவர்கள் வாழ்வோரின் நாட்டை அச்சத்தால் கலங்கச் செய்தார்கள்; மொசோக்கும் தூபாலும் இவர்களோடு இல்லை.
28 மொசோக்கே, தூபாலே, நீங்கள் இருவரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள் நடுவில் நொறுக்கப்பட்டு வாளால் கொலை செய்யப்பட்டவர்களோடு கிடக்கக் கடவீர்கள்.
29 இதுமேய மன்னர்களும், அதன் தலைவர்களும், மக்களும் அங்கே கிடக்கிறார்கள்; வல்லவர்களாய் இருந்தாலும் வாளால் கொல்லப்பட்டவர்களோடு புதைக்கப்பட்டனர்; படுகுழிக்குள் இறங்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களோடு கிடக்கிறார்கள்.
30 வட நாட்டு மன்னர்களும் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; தங்கள் வல்லமையால் அச்சத்தைக் கொடுத்ததினால் வெட்டுண்டு செத்து தங்கள் இழிவைத் தாங்கியவர்களாய்ப் படுகுழியில் இறங்கினார்கள்; விருத்தசேதனமில்லாதவர்களாய் வாளால் கொலையுண்டவர்களோடு கிடக்கிறார்கள்; படுகுழிக்குள் இறங்குகிறவர்களோடு தங்கள் இழிவைத் தாங்குகிறார்கள்.
31 பார்வோன் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தன் ஏராளமான மக்களைப் பற்றிய துயரம் ஆறியிருப்பான்; அவனோடு அவன் சேனைகள் யாவும் தேறியிருப்பர், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
32 ஏனெனில் அவன் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தான் ஆகவே, விருத்தசேதனம் இல்லாதவர்களாய் வாளால் வெட்டுண்டவர்களோடு பார்வோனும் அவன் மக்களும் கிடப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 33
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, உன் இனத்தார்க்குக் கூறு: நாம் ஒரு நாட்டின் மீது வாளை வரச் செய்கையில், அந்நாட்டு மக்கள் தங்களுக்குள் ஒருவனை அழைத்து அவனைத் தங்களுக்காகக் காவல் காரனாய் ஏற்படுத்தியிருக்க,
3 இவன் அந்நாட்டின் மேல் வாள் வருவதைக் கண்டு, எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கைப்படுத்தும் போது,
4 மக்களுள் எக்காளத்தின் ஒலியைக் கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் ஒருவன் இருப்பானாயின், வாள் அவன் மேல் வந்து அவனை வீழ்த்தும்;
5 அவன் இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும். ஏனெனில், அவன் எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும், அவன் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை; அவனது இரத்தப்பழி அவன் மேலே இருக்கும்; ஆனால் எச்சரிக்கைக்குச் செவிசாய்த்திருந்தால், தன்னையே காத்துக்கொண்டிருப்பான்.
6 அதற்கு மாறாக, காவல்காரன் வாள் வருவதைக் கண்டு, எக்காளம் ஊதி மக்களுக்கு எச்சரிக்கை தராமல் இருந்து, அதனால் எச்சரிக்கையாய் இல்லாத ஒருவன் வாளால் வெட்டுண்டு இறந்தால், அம் மனிதன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆயினும் அவனது இரத்தப்பழியைக் காவல்காரனின் மேல் சாற்றுவோம்.
7 அவ்வாறே, மனிதா, உன்னை நாம் இஸ்ராயேல் வீட்டாருக்குச் சாமக் காவலனாக வைத்திருக்கிறோம்; ஆதலால் நீ நம் வாயினின்று புறப்படும் வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் அதைச் சொல்லி, அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
8 தீயவன் ஒருவனிடம், 'நீ கண்டிப்பாய்ச் சாவாய்' என்று நாம் சொல்ல, அவன் தன் தீய வழியினின்று திரும்பும்படி அவனுக்கு நீ எச்சரிக்கை செய்யாமல் விடுவாயாகில், அந்தத் தீயவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் அவனது இரத்தப் பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
9 அதற்கு மாறாக, தீயவன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்ப வேண்டுமென்று நீ அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தும், அவன் தன் தீய வழியிலிருந்து திரும்பாமல் இருப்பானாயின், அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் உன்னையே நீ காத்துக் கொள்வாய்.
10 "நீயோ, மனிதா, இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: நீங்கள், 'எங்கள் அக்கிரமங்களும் பாவங்களும் எங்கள் மேல் இருக்கின்றன, அவற்றினால் நாங்கள் சோர்ந்து போகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படி? 'என்று சொல்லுகிறீர்கள்.
11 நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! தீயவன் சாக வேண்டும் என்பது நம் விருப்பமன்று; ஆனால் அவன் தன் தீய வழியை விட்டுத் திரும்பி வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம். 'இஸ்ராயேல் வீட்டாரே, மனந்திரும்புங்கள்; உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்?' (என்று சொல்.)
12 நீயோ, மனிதா, உன் இனத்தார்க்குக் கூறு: நீதிமான் பாவஞ் செய்தால், அவனுடைய நீதி அவனை மீட்காது; தீயவன் தன் அக்கிரமத்தை விட்டு மனந்திரும்பினால் அவ்வக்கிரமத்தினால் அவனுக்குப் பொல்லாப்பு ஒன்றும் வராது; நீதிமான் பாவஞ் செய்யும் போது, தன் நீதியால் வாழ்வதில்லை.
13 கண்டிப்பாய்ப் பிழைப்பான் என்று நாம் நீதிமானுக்குச் சொல்லியிருந்தாலும், அவன் தன் நீதியை நம்பிப் பாவத்தில் விழுந்தானாயின் அவனுடைய முன்னைய புண்ணியங்களையெல்லாம் நினைக்கமாட்டோம்; அவன் தான் செய்த அக்கிரமத்திலேயே சாவான்.
14 ஆனால் கண்டிப்பாய்ச் சாவான் என்று தீயவனுக்கு நாம் சொல்லியிருந்தாலும், அவன் தான் செய்த அக்கிரமத்திற்காக மனம் வருந்திச் சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்தால்,
15 தான் வாங்கின அடைமானத்தையும், கொள்ளையடித்த பொருளையும் திருப்பிக் கொடுத்து விட்டு, இனி அநியாயம் ஏதும் செய்யாமல், வாழ்வளிக்கும் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், அவன் கண்டிப்பாய்ப் பிழைப்பான்.
16 அவன் முன்பு செய்த பாவமொன்றும் இனி அவனுக்கு எதிராய் நினைக்கப்படாது; சட்டம் சொல்வதையும் சரியானதையும் அவன் செய்ததால், அவன் கண்டிப்பாய் வாழ்வான்.
17 ஆனால் உன் இனத்தார், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று சொல்லுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய வழி தான் நீதியானதில்லை.
18 நீதிமான் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமம் செய்தானாயின், அவன் அதனால் சாவான்.
19 தீயவன் தன் அக்கிரமத்தை விட்டுச் சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின், அவன் அதனால் பிழைப்பான்.
20 இருப்பினும், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுள் ஒவ்வொருவனையும் அவனவன் நடத்தைக்குத் தக்கபடியே நாம் தீர்ப்பிடுவோம்."
21 சிறைவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதம் ஐந்தாம் நாள் யெருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னை அணுகி, 'நகரம் பிடிபட்டது' என்றான்.
22 தப்பினவன் வருவதற்கு முந்தின நாள் மாலையிலேயே ஆண்டவரின் கரம் என் மேல் இருந்ததால், அந்த மனிதன் என்னைக் காலையில் வந்து காணுமுன்பே ஆண்டவர் என் வாயைத் திறந்துவிட்டிருந்தார்; என் வாய் திறக்கப்பட்டது; ஆகவே நான் இனி ஊமையில்லை.
23 அப்போது ஆண்டவர் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
24 மனிதா, இஸ்ராயேல் நாட்டின் பாழான இடங்களில் வாழ்பவர்கள், 'ஆபிரகாம் ஒருவனாயிருந்தும், நாட்டைச் சொந்தமாக்கிக் கொண்டான்; ஆனால் நாங்கள் பலராயிருக்கிறோம்; எங்களுக்கு இந்த நாடு சொந்தமாய்க் கொடுக்கப்பட்டது தானே' என்கிறார்கள்.
25 ஆகையால் நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இறைச்சியை இரத்தத்தோடு தின்கிறீர்கள், உங்கள் அருவருப்பான சிலைகளை ஏறெடுத்துப் பார்க்கிறீர்கள், இரத்தத்தைச் சிந்துகிறீர்கள், நீங்களா நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளப்போகிறீர்கள்?
26 நீங்கள் உங்கள் வாளின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள்; அருவருப்பானவற்றைச் செய்கிறீர்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நீங்கள் நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்வீர்களோ?
27 அவர்களுக்கு நீ இதைச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! பாழான இடங்களில் இருக்கிறவர்கள் வாளுக்கு இரையாகிச் சாவார்கள்; வயல் வெளிகளில் இருப்பவர்களைக் கொடிய மிருகங்களுக்கு இரையாகக் கொடுப்போம்; கோட்டைகளிலும் குகைகளிலும் வாழ்பவர்கள் கொள்ளை நோயால் செத்துப் போவார்கள்.
28 அதன் பின்னர், நாம் நாட்டைப் பாழாக்குவோம்; அதனுடைய வல்லமையின் பெருமை ஒழிந்துபோம்; இஸ்ராயேல் மலைகளும் பாழாய்ப்போகும்; அவ்வழியில் மனித நடமாட்டமே இருக்காது;
29 அவர்கள் செய்த எல்லா அருவருப்புகளின் காரணமாய் நாம் நாட்டைப் பாழும் பாலை நிலமாக்கி விடுவோம்; அப்போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
30 "மனிதா, சுவர்களின் ஓரத்திலும், வீட்டு வாசற்படிகளிலும் உன்னைக் குறித்து உன் இனத்தார் தங்களுக்குள், 'ஆண்டவரிடமிருந்து புறப்பட்ட வாக்கியம் என்ன என்று போய்க் கேட்போம்' என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு,
31 மக்கள் கூட்டமாய்க் கூடி உன்னிடத்தில் வந்து உன் முன்னால் நம் மக்கள் போல் உட்கார்ந்து நீ சொல்வதைக் கேட்கிறார்கள்; கேட்டும் அதன்படி நடக்கமாட்டார்கள்; தங்கள் வாயினால் அதிக அன்பு காட்டுகிறார்கள்; அவர்கள் இதயமோ பொருளாசையில் ஆழ்ந்திருக்கிறது.
32 இனிய குரலெடுத்துக் காதற் பாட்டுகள் பாடுகிறவன் போலவும், இசைக் கருவியை வாசிப்பவன் போலவும் நீ இருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொல்லுகிறபடி அவர்கள் நடப்பதில்லை.
33 இதோ, இறைவாக்கு நிறைவேறும்; கண்டிப்பாய் நிறைவேறும், அப்போது தான் தங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினர் இருந்து வந்தார் என்பதை அறிவார்கள்.
அதிகாரம் 34
1 ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, இஸ்ராயேலின் மேய்ப்பர்களுக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து அவர்களைப் பார்த்துச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேலின் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் தங்களையே மேய்த்துக் கொள்கிறார்கள். மேய்ப்பர்கள் மந்தையை அல்லவா மேய்க்க வேண்டும்?
3 கொழுப்பானதை நீங்கள் உண்டு, ஆட்டு மயிரை ஆடையாக்கி உடுத்தினீர்கள்; கொழுத்து வளர்ந்த ஆட்டை அடித்துச் சாப்பிட்டீர்கள்; ஆனால் ஆடுகளையோ நீங்கள் மேய்க்கவில்லை.
4 வலிமையற்ற ஆடுகளை நீங்கள் தேறும்படி செய்யவில்லை; பிணியுற்றவற்றை நீஙக்ள் பராமரிக்கவில்லை; எலும்பு முறிந்தவற்றுக்குக் கட்டுப்போடவில்லை; வழிதவறியவற்றைத் திரும்பக் கொண்டுவரவில்லை; காணாமற்போனவற்றைத் தேடவில்லை; ஆனால் அவற்றைக் கண்டிப்புடணும் கடுமையாகவும் நடத்தினீர்கள்.
5 மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் சிதறுண்டு போயின; சிதறியவை கொடிய மிருகங்களுக்கு இரையாகி மடிந்தன.
6 நம்முடைய ஆடுகள் சிதறிப் போய் மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன; பூமியின் எல்லாப் பக்கத்திலும் நம்முடைய ஆடுகள் சிதறுண்டு திரிந்தன; அவற்றைத் தேடவோ, தேடிக் கண்டுபிடிக்கவோ அக்கறையுள்ளவர் யாருமில்லை.
7 ஆதலால் மேய்ப்பர்களே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
8 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் கொள்ளையிடப்பட்டன, காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின; நம் ஆயர்களோ நமது மந்தையைக் கண்காணிக்கவில்லை; மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்டார்கள்.
9 ஆகையால் மேய்ப்பர்களே, ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்:
10 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய மேய்ப்பர்களுக்கு எதிராக வந்து, நமது மந்தையை அவர்கள் கையிலிருந்து மீட்டுக் கொண்டு, ஆடுகளை மேய்க்கும் வேலையிலிருந்து அவர்களை நீக்கிவிடுவோம்; அவர்கள் இனி மேல் தங்களையே மேய்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் வாயினின்று நம்முடைய ஆடுகளை மீட்போம்; அவை இனி அவர்களுக்கு இரையாகா.
11 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாமே இனி நம்முடைய ஆடுகளைத் தேடிப்போவோம்; ஆர்வத்தோடு தேடுவோம்.
12 மேய்ப்பன் தன் ஆடுகளுள் சில சிதறுண்டு போனால் எவ்வாறு அவற்றைத் தேடுவானோ, அவ்வாறே நாமும் நம்முடைய ஆடுகளைத் தேடுவோம். மப்பும் மந்தாரமுமான நாளில் அவை சிதறுண்டிருக்கும் எல்லா இடங்களிலுமிருந்து அவற்றை நாம் மீட்டுக்கொண்டு வருவோம்;
13 வேற்றினத்தாரிடமிருந்து வெளிநடத்தி, வெளிநாடுகளிலிருந்து கூட்டி வந்து தங்களுடைய சொந்த நாட்டுக்கு அவற்றைத் திரும்பிக் கொண்டு வருவோம்; இஸ்ராயேலின் மலைகளிலும், நீரூற்றுகளின் ஓரத்திலும், நாட்டில் மக்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் அவற்றை மேய்ப்போம்.
14 வளமான புல்வெளியில் அவற்றை மேய்ப்போம்; இஸ்ராயேலில் மலையுச்சிகளில் அவை மேய்ச்சலுக்குப் போகும்; அங்கே செழிப்பான புல் தரையில் அவை படுத்திருக்கும்; இஸ்ராயேலின் மலைகளில் உள்ள வளமான புல்லை அவை மேயும்.
15 நம்முடைய ஆடுகளுக்கு நாமே மேய்ப்பனாய் இருப்போம்; அவற்றை நாமே இளைப்பாறச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
16 காணாமற் போனதைத் தேடுவோம்; வழி தவறியதைத் திரும்பக் கொண்டு வருவோம்; எலும்பு முறிந்ததற்குக் கட்டுப் போடுவோம்; வலுவில்லாததைத் தேறும்படி செய்வோம்; கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் கண்காணிப்போம் நமது நீதி விளங்கும் வகையில் அவற்றை மேய்ப்போம்.
17 நமது மந்தையே, ஆண்டவராகிய இறைவன் உங்களுக்குக் கூறுகிறார்: இதோ, ஆடுகளிலிருந்து ஆடுகளையும், ஆட்டுக் கடாக்களிலிருந்து வெள்ளாட்டுக் கடாக்களையும் நாமே நடுவராய் இருந்து தீர்ப்பிடுவோம்;
18 நல்ல மேய்ச்சலை மேய்வதோடு நில்லாமல், மேய்ச்சலில் எஞ்சியவற்றைக் காலால் மிதிக்கலாமோ? தெளிந்த நீரைக் குடிப்பதோடு நில்லாமல், எஞ்சிய நீரைக் காலால் கலக்கிக் குழப்பலாமோ?
19 உங்கள் கால்களால் மிதித்ததை நம்முடைய ஆடுகள் குடிக்க வேண்டுமோ? உங்கள் கால்களால் கலக்கிக் குழப்பியதை நம்முடைய ஆடுகள் குடிக்கவேண்டுமோ?
20 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் அவற்றுக்குக் கூறுகிறார்: இதோ, கொழுத்த ஆடுகளுக்கும், இளைத்த ஆடுகளுக்கும் இடையில் நாமே நடுவராய் இருந்து தீர்ப்பிடுவோம்.
21 வலுவற்ற ஆடுகளை நீங்கள் விலாப் பக்கத்தாலும் தோள் பட்டையாலும் இடித்து, இவற்றைப் பலவிடங்களிலும் சிதறடிக்கும் வரை கொம்புகளால் முட்டித் தள்ளிக் கொண்டு போனதால், நமது மந்தையை நாமே மீட்போம்;
22 இனிமேல் அவை பறிபோகமாட்டா; ஆடுகளுக்கிடையில் நாமே நடுநின்று தீர்ப்பிடுவோம்.
23 அவற்றை மேய்க்கும்படி நம் ஊழியனாகிய தாவீதென்னும் ஒரே மேய்ப்பனை ஏற்படுத்துவோம்; அவனே அவற்றை மேய்ப்பான்; அவனே அவற்றுக்கு மேய்ப்பனாய் இருந்து அவற்றை மேய்த்துக் கண்காணிப்பான்.
24 அப்போது ஆண்டவராகிய நாமே அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்; நம் ஊழியனாகிய தாவீது அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்.
25 நாம் அவற்றுடன் சமாதான உடன்படிக்கை செய்வோம்; கொடிய மிருகங்களை நாட்டினின்றே விரட்டி விடுவோம்; இனி இவை பாலை நிலத்தில் அச்சமின்றி வாழும்; காடுகளில் கவலையற்று உறங்கும்.
26 அவற்றையும், நமது குன்றின் சுற்றுப் புறங்களையும் ஆசீர்வதிப்போம்; தகுந்த காலத்தில் மழை பொழிவோம்; அவை ஆசீர்வாதத்தின் பொழிவாய் இருக்கும்.
27 வயல் வெளியில் உள்ள மரங்கள் தங்கள் கனிகளைக் கொடுக்கும்; பூமி தன் விளைவைத் தரும்; அவர்கள் தங்கள் நாட்டில் நலமாக இருப்பார்கள். அவர்களின் நுகத்தடிகளை முறித்து, அவர்களை அடிமையாக்கினவர்களின் கைகளினின்று அவர்களை விடுவிக்கும் போது,
28 நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள். இனி மேல் வேற்றினத்தார்க்கு அவர்கள் இரையாகமாட்டார்கள்; நாட்டில் வாழும் கொடிய மிருகங்கள் அவர்களை அடித்துத் தின்னமாட்டா; அவர்கள் அச்சமின்றி வாழ்வார்கள்; அவர்களை மிரட்டுவார் யாரும் இருக்க மாட்டார்கள்.
29 மேலும் செழிப்பான பண்ணை ஒன்றை அவர்களுக்குக் கொடுப்போம்; இனி அவர்கள் பட்டினியால் நாட்டில் மடியமாட்டார்கள்; புறவினத்தாரின் நிந்தைக்கும் ஆளாகமாட்டார்கள்.
30 அப்பொழுது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நாம் அவர்களோடு இருக்கிறோம் என்பதையும், இஸ்ராயேல் வீட்டாராகிய அவர்கள் நம் மக்களாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
31 நீங்களே நம்முடைய ஆடுகள்- நமது மேய்ச்சலின் ஆடுகள்; நாமே உங்கள் கடவுள் என்கிறார், ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 35
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, நீ செயீர் மலைக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கு எதிராக இறைவாக்குக் கூறு:
3 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: செயீர் மலையே, இதோ நாம் உனக்கு எதிராக வருவோம்; உனக்கு விரோதமாக நமது கையை நீட்டி உன்னைப் பாழும் பாலைநிலமாக்குவோம்:
4 உன் பட்டணங்களை அழிக்கப்போகிறோம்; மனித நடமாட்டம் இல்லாத நிலமாவாய்; நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்.
5 நீடித்த பகைமையை நீ விரும்பினாய் அன்றோ? இஸ்ராயேல் மக்களை அவர்களுடைய துன்ப நாட்களில்- அவர்கள் கொடிய தண்டனை அடைந்த நாட்களில்- நீ வாளின் வலிமைக்குக் கையளித்தாய்;
6 ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்; நம் உயிர்மேல் ஆணை! நாம் உன்னை இரத்தப்பழிக்கு உட்படுத்துவோம்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும்; நீ இரத்தம் சிந்திக் குற்றம் செய்ததால், இரத்தப்பழி உன்னைவிடாது தொடரும்.
7 நாம் செயீர் மலையைப் பாழும் பாலை நிலமாக்குவோம்; அதில் போவார் வருவார் இல்லாதபடி செய்வோம்.
8 உன்னுடைய மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவோம்; குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் கணவாய்களிலும் வாளால் வெட்டுண்டவர்கள் வீழ்வார்கள்.
9 உன்னை என்றென்றும் பாழ்வெளியாய் இருக்கச் செய்வோம்; உன் பட்டணங்கள் குடியற்றுப் போகும்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வாய்.
10 ஆண்டவர் அங்கே குடியிருந்ததை அறிந்திருந்தும், நீ, 'இந்த இரண்டு இனத்தாரும், இரண்டு நாடுகளும் எனக்கு உரித்தாகும்; இவ்விரண்டையும் நானே உரிமையாக்கிக் கொள்வேன்' என்று சொல்லத் துணிந்தாய்;
11 ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராக வர்மம் கொண்டு அவர்கள் மேல் கோபமும் பொறாமையும் காட்டி நடத்தியது போலவே நாமும் உன்னை நடத்துவோம்; உன் மீது தீர்ப்புச் செலுத்தும் போது நாம் யாரென்பதை உன் நடுவில் வெளிப்படுத்துவோம்.
12 இஸ்ராயேல் மலைகளுக்கு எதிராக, 'அவை பாழாக்கப்பட்டன, ஆதலால் அவை எங்களுக்கு இரையாகத் தரப்பட்டன' என்று நீ சொன்ன இழிச்சொற்களையெல்லாம் ஆண்டவராகிய நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம் என்பதை அப்போது நீ அறிந்து கொள்வாய்.
13 உன் வாயால் நமக்கு எதிராக உன்னையே நீ பெருமையாகப் பேசி, நமக்கு எதிரான வார்த்தைகளைச் சொன்னாய்; அவற்றை நாம் கேட்காமல் போகவில்லை.
14 ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உலகமெல்லாம் மகிழ உன்னை நாம் பாழாக்குவோம்.
15 இஸ்ராயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழான போது, அதைக் கண்டு நீ அக்களித்ததால் உனக்கும் அவ்வாறே நடக்கச் செய்வோம்; செயீர் மலையே, நீ பாழாவாய்; ஏதோம் முழுவதும் பாழாகும்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."
அதிகாரம் 36
1 "மனிதா, இஸ்ராயேல் நாட்டு மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்: இஸ்ராயேல் நாட்டு மலைகளே, ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்.
2 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்களைக் குறித்து உங்கள் பகைவர்கள், 'ஆகா, நன்று! பண்டைக்காலத்திய மலைகள் எங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்பட்டன' என்று சொன்னார்கள்.
3 ஆதலால் நீ இறைவாக்குக் கூறு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் மலைகளே, நீங்கள் பாழாக்கப்பட்டு, நான்கு பக்கத்திலுமுள்ள அந்நியர்களால் மிதிக்கப்பட்டு, மற்றுமுள்ள மக்களால் கைப்பற்றப்பட்டு வேற்றினத்தாரின் அவதூறுக்கும், கேவலமான பேச்சுக்கும் உள்ளானீர்கள்;
4 ஆதலால் இஸ்ராயேல் மலைகளே, ஆண்டவராகிய இறைவன் வார்த்தையைக் கேளுங்கள்: மலைகள், குன்றுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள், பாலை நிலங்கள், சுற்றிலுமுள்ள மற்ற நாடுகளுக்கு இரையாகவும் பரிகாசமாகவும் ஆகிவிட்ட குடிகளில்லாப் பட்டணங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்;
5 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் கோபத்தோடும் பொறாமையோடும் இதுமேயா முழுவதற்கும், மற்றெல்லா இனத்தார்க்கும் எதிராகப் பேசுகிறோம்: அவர்கள் நமது நாட்டைக் கைப்பற்றி உரிமையாக்கிக் கொள்ளவும், அதைக் கொள்ளையிடவும் எண்ணி நிறைந்த மகிழ்ச்சியோடு அதைத் தங்களுக்கு உரிமைச் சொத்தாகத் தாங்களே கொடுத்துக் கொண்டு நம்மை அலட்சியம் செய்தார்கள்.
6 ஆதலால் இஸ்ராயேல் நாட்டைக் குறித்து, மலைகள், குன்றுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கு இறைவாக்குரை: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் புறவினத்தாரின் வசைமொழிக்கு இலக்கானதால் இதோ, நாம் ஆத்திரத்தோடு பேசுகிறோம்
7 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்களைச் சுற்றியுள்ள புறவினத்தார் தத்தம் அவமானத்தைத் தாங்களே சுமந்து கொள்ளும்படி, நாம் அவர்களுக்கு எதிராக நமது கையுயர்த்தி ஆணையிடுகிறோம்.
8 ஆனால் இஸ்ராயேல் மலைகளே, நீங்கள் இளங்கிளைகளைப் படரவிட்டு உங்கள் கனிகளை நம் மக்களாகிய இஸ்ராயேலுக்குக் கொடுப்பீர்கள்; ஏனெனில் அவர்கள் சீக்கிரம் தாய் நாட்டுக்குத் திரும்புவார்கள்.
9 இதோ நாம் வருகின்றோம்; உங்களைப் பார்ப்போம்; நீங்கள் பண்படுத்தப்படுவீர்கள்; உங்களில் விதைகள் விதைக்கப்படும்.
10 உங்களில் வாழும் மனிதர்கள் பெருகிப் பலுகச் செய்வோம்; இஸ்ராயேல் வீட்டார் அனைவரையும் பலுகச் செய்வோம்; பட்டணங்கள் குடியிருக்கும் இடங்களாகும்; பாழடைந்த இடங்கள் புதிதாய்க் கட்டப்படும்,
11 உங்களில் மனிதர்களையும் மிருகங்களையும் அதிகமாக்குவோம்; அவர்களைப் பெருகிப் பலுகச் செய்வோம்; உங்களுடைய பண்டைய நிலைமையில் உங்களைத் திரும்பவும் நாம் நிலைநாட்டுவோம்; அதுமட்டுமன்று; முந்திய சிறப்பை விட மிகுந்த சிறப்பு உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம். அப்பொழுது, நாமே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
12 உங்களிடத்தில் நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் குடியேறச் செய்வோம்; அவர்கள் உங்களை உரிமையாக்கிக் கொள்வார்கள்; நீங்கள் அவர்களுடைய உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள்; இனி அவர்கள் உங்களை விட்டு அகலவேமாட்டார்கள்.
13 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: புறவினத்தார் உங்களைக் குறித்து, 'நீங்கள் மனிதர்களை விழுங்குகிறீர்கள், உங்கள் இனத்தாரின் பிள்ளைகளையே அழிக்கிறீர்கள்' என்று சொல்லுகிறார்கள்.
14 ஆகையால், இனிமேல் நீங்கள் மனிதர்களை விழுங்கலாகாது; உங்கள் இனத்தாரின் பிள்ளைகளைச் சாகக் கொடுத்தலாகாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 புறவினத்தாரின் பழிச் சொல்லை இனி நீங்கள் கேட்கும்படி விடமாட்டோம்; அவர்களுடைய ஏளனத்துக்கு நீங்கள் உள்ளாகாமல் பார்த்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் குடிகளை இனிமேல் இழக்கவே மாட்டீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
16 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
17 மனிதா, இஸ்ராயேல் வீட்டார் தங்கள் சொந்த நாட்டில் குடியிருந்த காலத்தில், அதைத் தங்கள் தீய நடத்தையாலும் தீய செயல்களாலும் தீட்டுப்படுத்தினார்கள்: அவர்களுடைய செயல்கள் விலக்கமான பெண்ணின் அசுத்தம் போல நம் கண்களுக்கு அசுத்தமாய் இருந்தன.
18 அவர்கள் இரத்தம் சிந்திக் குற்றம் செய்ததாலும், தங்கள் சிலைகளால் நாட்டைப் பங்கப்படுத்தியதாலும் நாம் அவர்கள் மேல் நம் கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்டி,
19 அவர்களைப் புறவினத்தார்க்குள்ளே சிதறடித்தோம்; அவர்களைப் பல நாடுகளுக்குத் துரத்திவிட்டோம்; அவர்களுடைய நடத்தைக்கும் அக்கிரமங்களுக்கும் தக்கபடி அவர்களைத் தண்டித்தோம்.
20 அவர்கள் புறவினத்தாரிடம் போன போது இந்தப் புறவினத்தார் அவர்களைக் குறித்து, 'இவர்கள் கடவுள் மக்களாம்; அப்படியிருந்தும் அவரது நாட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்ததாம்' என்று சொன்னார்கள்; அவ்வாறு அவர்கள் நமது திருப்பெயரின் பரிசுத்தம் கெடுவதற்குக் காரணமாய் இருந்தனர்;
21 ஆயினும் இஸ்ராயேல் வீட்டார் தாங்கள் வந்து சேர்ந்த புறவினத்தார்களின் நடுவில் பங்கப்படுத்திய நமது திருப்பெயரை முன்னிட்டே அவர்கள் மேல் இரக்கம் கொண்டோம்.
22 ஆதலால் இஸ்ராயேல் வீட்டாரிடம் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, உங்களை முன்னிட்டு நாம் செயலாற்ற முற்படவில்லை; ஆனால் புறவினத்தாரின் நடுவில் நீங்கள் பங்கப்படுத்திய நமது திருப்பெயரை முன்னிட்டே செயலாற்றப் போகிறோம்.
23 புறவினத்தாரின் நடுவில் நமது திருப்பெயரின் பரிசுத்தத்தை நீங்கள் பங்கப்படுத்தினீர்கள்; பங்கப்படுத்தப்பட்ட மகத்தான நமது திருப்பெயரை நாம் பரிசுத்தமாக்குவோம்; இவ்வாறு நாம் உங்கள் வழியாய் அவர்கள் கண் முன் நமது பரிசுத்தத்தை நிலைநாட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதைப் புறவினத்தார் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.
24 ஏனெனில் புறவினத்தாரிடமிருந்து நாம் உங்களை மீட்போம்; எல்லா நாடுகளிலிருந்தும் உங்களைக் கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பக் கொண்டு வருவோம்.
25 நாம் உங்கள்மேல் தூய நீரைத் தெளிப்போம்; உங்கள் அழுக்குகள் எல்லாம் போய்விட, நீங்கள் தூய்மையாய் இருப்பீர்கள்; சிலைவழிபாட்டுத் தீட்டுகளிலிருந்து உங்களைத் தூய்மையாக்குவோம்.
26 உங்களுக்குப் புதிய இதயத்தை அருளுவோம்; உங்கள் உள்ளத்தில் புதிய ஆவியை ஊட்டுவோம்; உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, உணர்ச்சியுள்ள இதயத்தை உங்களுக்குக் கொடுப்போம்.
27 உங்கள் உள்ளத்தில் நமது ஆவியை ஊட்டுவோம். நம் கற்பனைகளின்படி நடக்கவும், நம் நீதி முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருக்கவும் செய்வோம்.
28 உங்கள் தந்தையர்களுக்கு நாம் தந்த நாட்டில் நீங்கள் குடியிருப்பீர்கள்; அப்போது நீங்கள் நம் மக்களாய் இருப்பீர்கள், நாம் உங்கள் கடவுளாய் இருப்போம்.
29 உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும் உங்களை நாம் தூய்மையாக்குவோம்; தானியம் முளைக்கச் செய்து மிகுதியாக விளையச் செய்து, உங்கள் மேல் பஞ்சம் வராதபடி பார்த்துக் கொள்வோம்.
30 இனி, ஒருபோதும் புறவினத்தார் நடுவில் நீங்கள் பஞ்சத்தால் அவமானம் அடையாதபடி, நாம் மரத்தின் கனியையும் வயலின் விளைவையும் பெருகச் செய்வோம்.
31 அப்போது உங்கள் தவறான நெறிகளையும் தீயசெயல்களையும் நினைத்துப் பார்த்து உங்கள் அக்கிரமங்களுக்காகவும், அருவருப்பான செயல்களுக்காகவும் உங்களையே நீங்கள் வெறுப்பீர்கள்.
32 உங்களை முன்னிட்டு நாம் செயலாற்ற முற்படவில்லை, என்கிறார் ஆண்டவராகிய இறைவன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் தீய நெறிகளை எண்ணி வெட்கி நாணுங்கள்.
33 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் எல்லா அக்கிரமங்களினின்றும் உங்களை நாம் தூய்மையாக்கும் நாளில், நகரங்களில் மனிதர் குடியேறச் செய்வோம்; பாழான இடங்கள் திரும்பக் கட்டப்படும்.
34 பாலையாய்க் கிடந்த நிலம், அவ்வழியாய்ச் சென்றவர்கள் பார்த்தவாறே பாழ்நிலமாய்க் கிடவாமல், உழுது பயிரிடப்படும்.
35 அப்பொழுது மக்கள், 'பாலையாய்க்கிடந்த இந்த நிலம் சிங்காரச் சோலையாகி விட்டதே; இடிந்து பாழாகிக் குடிகளற்றுப் போயிருந்த இந்நகரங்கள் இப்பொழுது மக்கள் குடியிருக்கும் நகரங்களாகவும், அரண் சூழ்ந்த பட்டணங்களாகவும் ஆகிவிட்டனவே' என்று வியப்பார்கள்.
36 அப்பொழுது உங்களைச் சுற்றியுள்ள புறவினத்தார், இடிந்து, பாழாகிய இடங்களைத் திரும்பக் கட்டியவரும், பாலை நிலத்தைச் சோலையாகச் செய்தவரும் ஆண்டவராகிய நாமே என்பதை அறிவார்கள்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; இதைச் செய்தே தீருவோம்.
37 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாருக்கு இன்னுமொரு நன்மையும் நாம் செய்வதை அவர்கள் காண்பார்கள்: அதாவது மந்தை போல் அவர்களைப் பெருகச் செய்வோம்.
38 அவர்கள் பலிகளுக்காக வரும் மந்தைகள் போல- குறிப்பிட்ட திருவிழாக்களில் யெருசலேமில் கூடி வரும் மந்தைகள் போல- மனிதர்கள் பலுகி, பாழான பட்டணங்களை நிரப்புவார்கள்."
அதிகாரம் 37
1 ஆண்டவருடைய கரம் என் மேல் இருந்தது; ஆண்டவருடைய ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் விட்டது; அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.
2 அவற்றைச் சுற்றி என்னை அழைத்துச் சென்றார்; இதோ, அந்தப் பள்ளத்தாக்கில் எலும்புகள் மிகப்பல கிடந்தன; அவை முற்றும் உலர்ந்திருந்தன.
3 அவர் என்னை நோக்கி, "மனிதா, இந்த எலும்புகள் உயிர் பெறக் கூடுமோ?" என்று வினவினார். "ஆண்டவராகிய இறைவா, உமக்குத் தெரியுமே" என்று விடை பகர்ந்தேன்.
4 மீண்டும் அவர் என்னிடம், "இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரைத்து அவற்றுக்குச் சொல்: உலர்ந்த எலும்புகளே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 இந்த எலும்புகளுக்கு ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, உங்களுக்குள் ஆவி நுழையச் செய்வோம், நீங்கள் உயிர் பெற்று வாழ்வீர்கள்.
6 பின்னும், உங்கள் மேல் நரம்புகளை வைப்போம், உங்கள் மேல் சதை பிடிக்கச் செய்வோம்; உங்களைத் தோலால் மூடுவோம்; உங்களில் ஆவியை ஊட்டுவோம்; நீங்கள் உயிர் பெற்று வாழ்வீர்கள். அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்" என்று சொல் எனக் கூறினார்.
7 அவர் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குச் சொன்னேன்; அவ்வாறு நான் இறைவாக்குரைக்கும் போது, ஓர் ஒலி கேட்டது; இதோ, அசைவும் உண்டாயிற்று; ஒவ்வொரு எலும்பும் மற்றொரு எலும்பை அணுகி ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டன.
8 நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, இதோ, அவற்றின் மேல் நரம்புகள் காணப்பட்டன; அவற்றில் சதை பிடித்திருந்தது; அவற்றைத் தோல் மூடியிருந்தது; ஆயினும் அவற்றில் உயிர் இல்லை.
9 அப்பொழுது அவர் என்னை நோக்கி, "ஆவிக்கு இறைவாக்குக் கூறு, மனிதா, இறைவாக்குச் சொல்; ஆவிக்கு நீ சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஆவியே, நாற்றிசையிலிருந்தும் வா; வந்து உயிரிழந்த இவர்கள் மீது ஊதி, இவர்கள் உய்யும்படி செய்" என்றார்.
10 அவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குரைத்தேன்; அவர்களுள் ஆவி புகுந்தது; அவர்கள் உயிர் பெற்றுத் தரையில் காலூன்றி நின்றனர்; அவர்கள் மாபெரும் சேனை போல் இருந்தனர்.
11 பின்னும் அவர் என்னிடம் சொன்னார்: "மனிதா, இந்த எலும்புகள் இஸ்ராயேல் வீட்டாரனைவரும். இதோ, அவர்கள், 'எங்கள் எலும்புகள் முற்றிலும் உலர்ந்து போயின; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் முற்றிலும் அறுபட்டோம்' என்கிறார்கள்.
12 ஆகையால் நீ அவர்களுக்கு இறைவாக்குக் கூறு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எம் மக்களே, இதோ நாம் உங்கள் கல்லறைகளைத் திறப்போம்; கல்லறைகளிலிருந்து உங்களை எழுப்புவோம்; இஸ்ராயேல் நாட்டுக்கு உங்களைத் திரும்பக் கூட்டிவருவோம்.
13 எம் மக்களே, உங்கள் கல்லறைகளைத் திறந்து, அவற்றினின்று நாம் உங்களை எழுப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
14 உங்களுக்குள் நம் ஆவியைப் புகுத்துவோம்; நீங்கள் உயிர் பெறுவீர்கள். உங்கள் சொந்த நாட்டில் உங்களை வாழ வைப்போம்; அப்போது, ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம், நாமே இதைச் செய்து முடித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், என்கிறார் ஆண்டவர்."
15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
16 மனிதா, நீ ஒரு கோலை எடுத்து அதில், 'யூதாவும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்களும்' என்று எழுது; பிறகு வேறொரு கோலை எடுத்து, அதில், 'எப்பிராயீம் கோலாகிய யோசேப்பும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் வீட்டாரனைவரும்' என்று எழுது.
17 பிறகு அவ்விரு கோல்களும் உன் கையில் ஒரே கோலாகும்படி அவற்றைச் சேர்த்துப் பிடி.
18 உன் இனத்தார் உன்னிடத்தில் வந்து, 'இவற்றால் நீர் எதைக் காட்ட எண்ணினீர் என்பதை எங்களுக்கு விளக்கமாட்டீரோ?' என்று உன்னைக் கேட்கும் போது,
19 நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, எப்பிராயீமின் கையிலிருக்கும் யோசேப்பின் கோலையும், அவனோடு சேர்ந்துள்ள இஸ்ராயேல் கோத்திரங்களையும் எடுத்து, யூதாவின் கோலோடு ஒன்று சேர்த்து, அவற்றை ஒரே கோலாகச் செய்வோம்; அவை நம் கையில் ஒரே கோலாய் இருக்கும்.
20 நீ எழுதிய கோல்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக உன் கையில் இருக்கும் போது, நீ அவர்களுக்குச் சொல்:
21 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் இஸ்ராயேல் மக்களை அவர்கள் போயிருக்கும் புறவினத்தாரிடமிருந்து அழைத்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்களைச் சேர்த்து, அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவோம்;
22 இஸ்ராயேல் மலைகளின் மேல் அவர்களை அந்த நாட்டில் ஒரே இனத்தவராய் ஆக்குவோம்; அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன்தான் இருப்பான்; இனி அவர்கள் இரண்டு இனத்தவராய் இருக்கமாட்டார்கள், இரண்டு அரசுகளாய்ப் பிரிந்திருக்கமாட்டார்கள்.
23 இனி மேல் அவர்கள் தங்கள் சிலைகளாலும், அருவருப்பான பொருட்களாலும், யாதொரு குற்றத்தாலும் தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்; ஆனால் அவர்கள் நடந்துவந்த பிரமாணிக்கமில்லாத நெறியிலிருந்து அவர்களை மீட்போம்; அவர்களைத் தூய்மைப்படுத்துவோம்; அப்போது அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள்; நாம் அவர்கள் கடவுளாய் இருப்போம்.
24 நம் ஊழியனாகிய தாவீது அவர்களுக்கு அரசனாயிருப்பான்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன் தான் இருப்பான்; அவர்கள் நம் நீதிமுறைகளைப் பின்பற்றுவார்கள்; நம் கற்பனைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருப்பார்கள்.
25 நம் ஊழியனாகிய யாக்கோபுக்கு நாம் தந்ததும், உங்கள் தந்தையர் வாழ்ந்ததுமான நாட்டில் அவர்கள் வாழ்வார்கள்; அவர்களும், அவர்கள் பிள்ளைகளும், அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் அங்கே வாழ்வார்கள்; நம் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
26 நாம் அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்வோம்; அது அவர்களோடு முடிவில்லா உடன்படிக்கையாய் இருக்கும்; அவர்களை நாம் ஆசீர்வதித்துப் பலுகச் செய்வோம்; அவர்கள் நடுவில் நமது பரிசுத்த இடத்தை என்றென்றும் நிலைக்கச் செய்வோம்.
27 நம் இருப்பிடம் அவர்களுடன் இருக்கும்; நாம் அவர்கள் கடவுளாக இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பர்.
28 நமது பரிசுத்த இடம் அவர்கள் நடுவில் என்றென்றும் நிலைக்கும் போது, ஆண்டவராகிய நாமே இஸ்ராயேலைப் பரிசுத்தப்படுத்துபவர் என்பதைப் புறவினத்தார் அறிந்துகொள்வர்."
அதிகாரம் 38
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, மொசோக், தூபால் இனத்தவர்களின் தலைவனும், மாகோகு நாட்டின் அரசனுமாகிய கோகுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குரை:
3 அவனுக்கு நீ சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மொசோக், தூபால் இனத்தவர்களின் தலைவனும் முதல்வனுமாகிய கோகு அரசனே, இதோ நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்:
4 நாம் உன்னைப் பிடித்து, நம் பக்கம் திருப்பி, உன் வாயில் கடிவாளங்களைப் பூட்டி, உன்னையும் உன் சேனைகளையும் குதிரைகளையும், மார்க்கவசமணிந்த உன் குதிரை வீரர்கள் அனைவரையும், பரிசை, கேடயம், வாள் தாங்கிய திரளான பட்டாளங்களையும் வெளியில் இழுத்துவருவோம்.
5 அவர்களோடு கேடயம் ஏந்தித் தலைச்சீரா அணிந்த பேர்சியர், எத்தியோப்பியர்,
6 லீபியர் ஆகியோரையும், கோமேரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், வடநாட்டரசனாகிய தொகொர்மாவையும், அவன் படைகளையும், அவன் நாட்டு மக்கள் எல்லாரையும் உன்னோடு கூட வெளியேறச் செய்வோம்.
7 நீயும் தயாராயிரு; உன்னுடன் கூடியிருக்கும் உன் கூட்டத்தார் எல்லாரும் தயாராய் இருக்கச் சொல்.
8 பல நாட்களுக்குப் பின் நீ விசாரிக்க அழைக்கப்படுவாய்; பல இனத்தவர்களிடமிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு, பல்வேறு நாடுகளிலிருந்து திரும்பக் கூட்டிவரப்பட்டு, நெடுநாளாய்ப் பாழாய்க் கிடந்த இஸ்ராயேல் மலைகளில் கூடி, போரின் கொடுமையிலிருந்து விடுபட்டு, இப்பொழுது அச்சமின்றி அமைதியாய் வாழும் இஸ்ராயேல் மக்களுக்கு எதிராகக் கடைசி ஆண்டுகளில் நீ வருவாய்;
9 பெருங்காற்றுப் போலக் கிளம்பி வருவாய்; நீயும், உன் படைகள் யாவும், உன்னுடன் இருக்கும் கணக்கிலடங்கா மக்களும் மேகம் போல வந்து அந்நாட்டை மூடிக்கொள்ளுவீர்கள்.
10 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்நாளிலே பலவகையான திட்டங்கள் உன் புத்தியில் உருவாகும்; மிகப் பொல்லாத திட்டமொன்றையும் நீ தீட்டுவாய்:
11 (அதாவது) நீ உன் உள்ளத்தில், 'நான் அரண்களில்லா நாட்டுக்கு எதிராகப் போவேன்; அச்சமின்றி அமைதியாய் வாழும் மக்களுக்கு எதிராய்ச் செல்கிறேன்; அவர்கள் மதில்கள் இல்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்கள் வீடுகளுக்குக் கதவுகளுமில்லை; கதவுகளுக்குத் தாழ்ப்பாளுமில்லை' என்று சிந்திப்பாய்.
12 அவர்களைக் கொள்ளையிடவும் சூறையாடவும் போவாய்; முன்னாளில் எல்லாராலும் கைவிடப்பட்டு, பின்னர் பல்வகை மக்கள் நடுவிலிருந்து சேர்த்துக் கொண்டு வரப்பட்டு, உலகத்தின் மையத்திலே இருக்கிற இந்த நாட்டில் குடியேறவும், செல்வம் சேர்க்கவும் தொடங்கின இஸ்ராயேல் மக்களைத் தாக்கக் கிளம்புவாய்.
13 சேபா நாட்டாரும், தேதான் மக்களும், தார்சீஸ் பட்டணத்து வணிகர்களும், அந்நாட்டின் மக்கள் அனைவரும் உன்னை நோக்கி, 'கொள்ளையிடுவதற்குத் தான் நீ இத்துணைப் பெரிய படையைச் சேர்த்தாயா? வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக் கொண்டு ஆடு மாடுகளையும் செல்வங்களையும் மிகுதியான உடைமைகளையும் திருடிக் கொள்வதற்குத் தான் இப்படிப்பட்ட திரளான வீரர்களைக் கொணர்ந்தாயா?' என்று சொல்வார்கள்.
14 ஆகையால், மனிதா, நீ இறைவாக்குரைத்து, கோகு என்பவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் மக்களாகிய இஸ்ராயேல் அமைதியாக வாழ்கின்ற நாளில்,
15 நீ கிளர்ந்தெழுந்து, நீயும், உன்னுடன் மிகுதியான மக்களும் மாபெரும் கூட்டமாய்த் திரண்டு குதிரை மேலேறிப் பலமுள்ள சேனையாய் வடநாட்டிலிருந்து வருவீர்கள்.
16 இஸ்ராயேல் என்னும் நம் மக்கள் மேல் வந்து, அவர்கள் நாட்டை மேகம் போலப் பரவி மூடுவாய்; கடைசி நாட்களில் உன்னை நமது நாட்டுக்கு எதிராகக் கொண்டு வருவோம்; கோகு மன்னனே, உன் வழியாக அவர்கள் கண் முன் நமது பரிசுத்தத்தை நிலைநாட்டும் போது, புறவினத்தார் நம்மை அறிந்து கொள்வார்கள்.
17 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உன்னைக் குறித்துத் தான் நாம் பண்டைக்காலத்தில் நம் ஊழியர்களான, இஸ்ராயேலின் இறைவாக்கினர்கள் வாயிலாய்ப் பேசினோம்; அவர்கள் அந்நாட்களில் பல்லாண்டுகள் இறைவாக்குரைத்து, நாம் உன்னை அவர்களுக்கு எதிராகக் கொண்டு வருவோம் என்று முன்னுரைத்தார்கள்.
18 ஆனால் கோகு என்பவன் இஸ்ராயேல் நாட்டுக்கு எதிராக எழுந்து வரும் அந்நாளில், நமது கோபம் தூண்டப்படும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
19 ஏனெனில் நமது ஆத்திரத்திலும் பொறி பறக்கும் கோபத்திலும் நாம் உறுதியாய்க் கூறுகிறோம்: அந்நாளில் இஸ்ராயேல் நாட்டில் ஒரு பேரதிர்ச்சி உண்டாகும்.
20 கடல் மீன்களும், வானத்துப் பறவைகளும், காட்டு மிருகங்களும், பூமியில் ஊர்ந்து செல்லும் ஊர்வன யாவும், பூமியில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் நமது திருமுன் நடுங்குவார்கள்; மலைகள் தரைமட்டமாகும், சிகரங்கள் வீழும், மதில்கள் எல்லாம் இடிந்து தரையில் விழும்.
21 நமது எல்லா மலைகளிலும் அவனுக்கு எதிராக வாளை வரவழைப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; ஒவ்வொருவன் வாளும் அவனவன் சகோதரனுக்கு எதிராய் இருக்கும்;
22 கொள்ளை நோயாலும், இரத்தப் பெருக்கினாலும் அவனை நாம் தீர்ப்பிடுவோம்; அவன் மேலும், அவன் சேனைகளின் மேலும், அவனைச் சார்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் மேலும், பெருமழையும் கல்மழையும் நெருப்பும் கந்தகமும் பெய்யச் செய்வோம்.
23 இவ்வாறு புறவினத்தார் அனைவர் முன்னிலையிலும் நமது மகிமையையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தி நம்மைக் காண்பிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
அதிகாரம் 39
1 மனிதா, நீ கோகு என்பவனுக்கு எதிராக இறைவாக்குரைத்து அவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மொசோக், தூபால் இனத்தவர்களின் தலைவனும் முதல்வனுமாகிய கோகு மன்னனே, இதோ நாம் உனக்கு விரோதமாக வருகிறோம்.
2 நாம் உன்னைச் சுற்றிச் சுழற்றி, முன்னுக்குத் தள்ளி, வடநாட்டின் பகுதியிலிருந்து புறப்படச் செய்து, இஸ்ராயேல் மலைகளுக்குக் கொண்டு வருவோம்;
3 உன் இடக்கையிலிருந்து உன் வில்லையும், வலக்கையினின்று உன் அம்புகளையும் தட்டி விட்டு விழச் செய்வோம்.
4 நீயும், உன் படைகளும், உன்னோடு கூட இருக்கும் மக்களும் இஸ்ராயேல் நாட்டு மலைகளில் விழுவீர்கள்; காட்டு மிருகங்களுக்கும், பிணந்தின்னும் எல்லா வகைப் பறவைகளுக்கும் உன்னை இரையாகக் கொடுப்போம்.
5 நீ ஒரு திறந்த வெளியில் வீழ்வாய்; இதை நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
6 மாகோகு மேலும், கடற்கரை நாடுகளில் வாழ்வோர் அனைவரின் மேலும் தீயை அனுப்புவோம்;
7 அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள். அன்றியும் நம் மக்களாகிய இஸ்ராயேல் நடுவில் நமது திருப்பெயரை விளங்கச் செய்வோம்; நமது திருப்பெயரின் பேரில் தீட்டுண்டாக இனி ஒருகாலும் விடமாட்டோம்; நாமே ஆண்டவர் என்பதையும், இஸ்ராயேலின் பரிசுத்தர் என்பதையும் புறவினத்தார் அறிந்து கொள்வார்கள்.
8 இதோ, வருகிறது; நடக்கப் போகிறது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; நாம் முன்னமே குறிப்பிட்டுச் சொன்ன நாள் இதுவே.
9 அப்போது, இஸ்ராயேல் நகரங்களில் வாழ்கிற மக்கள் வெளியே வந்து, படைக்கலங்களையும் கேடயங்களையும் பரிசைகளையும் வில்களையும் அம்புகளையும் வேல்களையும் ஈட்டிகளையும் சுட்டெரித்து, ஏழாண்டுகளுக்கு நெருப்பு உண்டாக்குவார்கள்;
10 அவர்கள் வயல்வெளிகளிலிருந்து விறகுகளையோ, காடுகளில் மரங்களையோ வெட்டத் தேவையில்லை; ஏனெனில் படைக்கலங்களையே எடுத்து எரிப்பார்கள்; தங்களைக் கொள்ளையிட்டவர்களை அவர்கள் கொள்ளையிடுவார்கள்; தங்களைச் சூறையாடினவர்களை அவர்கள் சூறையாடுவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
11 அந்நாளில் இஸ்ராயேல் நாட்டிலுள்ள 'வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கு' என்னுமிடத்தைக் கல்லறைத் தோட்டமாகக் கோகு என்பவனுக்குக் கொடுப்போம்; அது கடலுக்குக் கிழக்கே உள்ளது; வழிப்போக்கரைத் தடுத்து நிறுத்தும்; ஏனெனில் கோகு என்பவனும், அவன் சேனைகள் அனைத்தும் அங்கே புதைக்கப் பட்டிருப்பார்கள்; அவ்விடம் 'கோகு கூட்டத்தாரின் பள்ளத்தாக்கு' எனப்படும்;
12 நாட்டைத் தூய்மைப் படுத்துவற்காக இஸ்ராயேல் மக்கள் அவர்களைப் புதைப்பார்கள்; அவர்களைப் புதைத்து முடிக்க ஏழு மாதங்கள் ஆகும்.
13 நாட்டு மக்கள் யாவரும் அவர்களைப் புதைப்பார்கள்; அந்நாளிலே நாம் மகிமை பெறுவோம்; இஸ்ராயேல் மக்களுக்கும் அந்நாள் மிகச் சிறந்த நாளாகும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
14 அவர்கள் நாட்டைத் தூய்மைப் படுத்துவதற்காக, எல்லா ஊர்களுக்கும் போய் அங்குக் கிடக்கும் மற்றப் பிணங்களையும் தேடிப் புதைக்கும் பொருட்டுச் சிலரை ஏற்படுத்துவார்கள்; ஏழு மாதங்களுக்குப் பிறகு இவர்கள் தேடத் தொடங்குவார்கள்.
15 இவர்கள் நாடெல்லாம் சுற்றித் தேடும் போது, எவனாவது ஒரு பிணத்தைக் கண்டால், அதனருகில் ஓர் அடையாளத்தை நாட்டுவான்; பிறகு பிணங்களைப் புதைக்கும் ஆட்கள் வந்து அதைக் கோகு கூட்டத்தாரின் பள்ளத்தாக்கிற்குத் தூக்கிக் கொண்டு போய்ப் புதைப்பார்கள்.
16 (அந்நகருக்கு ஆமோனா எனப் பெயரிடப்படும்). இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவார்கள்.
17 மனிதா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எல்லா வகையான பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் நீ சொல்: 'நீங்கள் ஒன்று கூடி நாற்றிசையிலுமிருந்து உடனே வாருங்கள்; இஸ்ராயேல் நாட்டின் மலைகள் மேல் உங்களுக்காக நாம் ஏற்பாடு செய்திருக்கும் பெரிய வேள்வி விருந்துக்கு வாருங்கள்; உங்களுக்குத் தின்ன இறைச்சி கிடைக்கும்; குடிக்க இரத்தம் இருக்கும்; விரைந்து வாருங்கள்.
18 நீங்கள் பலசாலிகளின் உடல்களைத் தின்பீர்கள்; உலகத்தின் தலைவர்களுடைய இரத்தத்தைக் குடிப்பீர்கள்- கொழுத்த ஆட்டுக் கடாக்களையும் ஆட்டுக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் கடாக்களையும் இளங் காளைகளையும் புசிப்பீர்கள்.
19 நாம் உங்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் வேள்வி விருந்தில் நீங்கள் நிறைவடையும் வரை கொழுப்பைத் தின்பீர்கள்; வெறியாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
20 இவ்வாறு நம் பந்தியில் அமர்ந்து, குதிரைகள், குதிரை வீரர்கள், வலிமை மிக்கவர்கள், எல்லா வகையான படைவீரர்கள் உடலிறைச்சியையும் வயிறு புடைக்கத் தின்பீர்கள்' என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
21 "இவ்வாறு புறவினத்தார் நடுவில் நம் மகிமையை நிலைநாட்டுவோம்; நாம் நிறைவேற்றிய தண்டனைத் தீர்ப்பையும், அவர்கள் மேல் நீட்டிய நம் கரத்தையும் புறவினத்தார் அனைவரும் பார்ப்பார்கள்.
22 அந்நாள் முதல், இஸ்ராயேல் வீட்டார் ஆண்டவராகிய நாமே தங்கள் கடவுள் என்பதை அறிவார்கள்.
23 இஸ்ராயேல் வீட்டார் தங்கள் அக்கிரமத்தினால் தான் அடிமைகளாகக் கொண்டு போகப்பட்டார்கள், அவர்கள் நமக்குப் பிரமாணிக்கமின்றி நடந்ததால் தான் நாம் நமது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டோம், அவர்களைப் பகைவர்களின் கையில் ஒப்படைத்தோம், அவர்களெல்லாரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தனர் என்பதையெல்லாம் புறவினத்தார் அறிந்து கொள்வர்.
24 அவர்களுடைய அசுத்தத்திற்கும் அக்கிரமங்களுக்கும் தக்கவாறே நாம் அவர்களுக்குச் செய்தோம்; நமது முகத்தையும் அவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டோம்.
25 ஆகையால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இப்பொழுது யாக்கோபின் மக்களை அடிமைத் தனத்தினின்று மீட்டுக்கொண்டு வருவோம்; இஸ்ராயேல் வீட்டார் அனைவர் மேலும் இரக்கம் காட்டுவோம்; நமது திருப்பெயரை முன்னிட்டு மிகுந்த ஆர்வத்தோடு விழிப்பாய் இருப்போம்;
26 பல்வேறு இனத்தார் முன்னிலையில் அவர்கள் வழியாய் நமது பரிசுத்தத்தை நிலை நாட்டி விட்டு, அவர்களை அவர்களுடைய பகைவர்களின் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்த்து,
27 மற்ற நாட்டு மக்களிடமிருந்து நாம் அவர்களைத் திரும்பக் கொண்டு வந்த பிறகு, அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் யாருக்கும் அஞ்சாமல் அமைதியாய் வாழும் போது, தங்களுடைய அவமானத்தையும் நமக்கு எதிராய் தாங்கள் செய்த எல்லாப் பாதகங்களையும் நினைவு கூர மாட்டார்கள்.
28 அப்பொழுது, ஆண்டவராகிய நாமே தங்கள் கடவுள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்; ஏனெனில் புறவினத்தார் நடுவில் நாமே அவர்களை நாடுகடத்தினோம்; பிறகு நாமே அவர்களைச் சேர்த்து அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கூட்டிவந்தோம்; இனிமேல் அவர்களில் யாரும் புறவினத்தார் நடுவில் இருக்கவிட மாட்டோம்;
29 இஸ்ராயேல் வீட்டார் மேல் நமது ஆவியைப் பொழிவோம்; அது முதல் (அதன் பின்) அவர்களிடமிருந்து நம் முகத்தை மறைக்கமாட்டோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 40
1 எங்கள் சிறை வாழ்வின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில், மாதத்தின் பத்தாம் நாளில், யெருசலேம் நகரம் பிடிபட்ட பதினான்காம் ஆண்டின் நிறைவு நாளாகிய அன்று ஆண்டவரின் கரம் என் மேல் இருந்தது.
2 கடவுள் தந்த காட்சிகளில், அவர் என்னை இஸ்ராயேல் நாட்டுக்குக் கொணர்ந்து, மிக உயரமான ஒரு மலை மேல் நிறுத்தினார்; ஆங்கே தென்முகமாய் நோக்கும் நகரம் போன்ற ஓர் அமைப்பு இருந்தது.
3 அவர் என்னை அதனுள் அழைத்துச் சென்றார்; இதோ, அங்கே ஓரு மனிதரைக் கண்டேன். அவருடைய தோற்றம் வெண்கல மயமாய் இருந்தது; தமது கையில் சணல் பட்டுக் கயிறும், ஓர் அளவு கோலும் வைத்துக் கொண்டு வாயிலில் நின்று கொண்டிருந்தார்.
4 அவர் என்னை நோக்கி, "மனிதா, கண்ணாரப் பார், காதாரக் கேள்; நான் உனக்குக் காட்டுவதையெல்லாம் உன் மனத்தில் பதியவை; அதைப் பார்க்கும்படியே நீ இங்குக் கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ராயேல் வீட்டார்க்குத் தெரிவிக்கவேண்டும்" என்றார்.
5 அப்போது இதோ, கோயிலுக்கு வெளியில் கோயிலைச் சுற்றி ஒரு மதிலிருக்கக் கண்டேன்; அந்த மனிதர் தாம் கையில் வைத்திருந்த ஆறு முழம் நான்கு விரற்கடை நீளமுள்ள கோலால் மதிலை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதன் உயரம் ஒரு கோல்.
6 பிறகு அவர் கிழக்கு வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டுகள் வழியாக ஏறி வாயிற்படியை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதாவது வாயிற்படிக்கு இப்பக்கமும் அப்பக்கமும் ஒரு கோல் அளவு இருந்தது;
7 அவ்வாறே, பக்க அறைகளை அளந்தார்; ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தது; அவ்வறைகளுக்கு இடையில் ஐந்து முழ இடம் விடப்பட்டிருந்தது.
8 வாயிலின் மண்டபத்தினருகில் இருக்கும் வாயிற்படியின் உள்ளளவு ஒரு கோல் இருந்தது.
9 வாயிலுக்கு முன்னிருந்த முகமண்டபத்தையும் அளந்தார்; அதன் அளவு எட்டு முழம்; அதன் புடை நிலையின் அளவு இரண்டு முழம்; இந்த முகமண்டபம் உட்புறத்தை நோக்கியது.
10 கிழக்கு வாயிலின் இருபக்கமும் பக்கத்திற்கு மூன்று அறைகள் இருந்தன; மூன்றுக்கும் ஒரே அளவு; மூன்றின் புடைநிலைகளுக்கும் ஒரே அளவு.
11 பின்னர் அவர் வாசற்படியின் அகலத்தை அளந்தார்; பத்து முழம் இருந்தது; அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
12 இருபக்கமும் அறைகளுக்கு முன்னால் ஒரு முழம் இடைவெளி விட்டு ஒரு சிறிய கைபிடிச் சுவர் இருந்தது; ஆறு முழ அளவுள்ள அறைகள் இருபக்கமும் இருந்தன;
13 ஓர் அறையின் மேற்கூரையிலிருந்து மற்ற அறையின் மேற்கூரை வரையில் தாழ்வாரத்தை அளந்த போது இருபத்தைந்து முழ அகலமிருந்தது; கதவுகள் எதிரெதிராய் இருந்தன.
14 புடைநிலைகளை அளந்த போது அறுபது முழங்கள் இருந்தன; முற்புறத்து வாயிலின் முற்றமொன்று சுற்றிலுமிருந்தது.
15 நுழையும் வாயிலின் புடைநிலையிலிருந்து உட்புற வாயிலின் மண்டபத்துப் புடைநிலை வரை ஐம்பது முழமிருந்தது.
16 வாயிலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமிருந்த அறைகளுக்கும், அவற்றின் முகப்புகளுக்கும் செய்யப்பட்டிருந்த பலகணிகள் வளைந்தவை; மண்டபங்களிலும் அத்தகைய பலகணிகளே இருந்தன; உட்புறத்தில் சுற்றிலுமிருந்த பலகணிகளும் அத்தகையவையே; புடைநிலைகளின் மேல் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப் பட்டிருந்தன.
17 பின்பு அம்மனிதர் என்னை வெளிப் பிராகாரத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்; அங்குக் கருவூல அறைகளைக் கண்டேன்; பிராகாரத்தைச் சுற்றிலும் தளவரிசை கல்லால் அமைக்கப்பட்டிருந்தது; பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் முப்பது கருவூல அறைகள் இருந்தன.
18 பிராகாரத்தின் நெடுக அறைகளின் ஓரத்தில் தளவரிசை சற்றே தாழ்வாய் இருந்தது.
19 பிறகு அவர் கீழ்வாயிலின் புடைநிலை துவக்கி உட்புறத்துப் பிராகார முகப்பு வரையில் இருந்த அகலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறு முழம் இருந்தது.
20 வடக்கு வாயில்: பின்னும் வெளிப் பிராகாரத்தின் வடப்பக்கத்திற்கு எதிரில் இருந்த வாயிலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.
21 அதற்கு இருபக்கமும் மும்மூன்று அறைகள் இருந்தன; முதல் வாயிலின் அளவுக்கு இவ்வாயிலின் அளவு சரியாக இருந்தது. அதாவது: நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
22 அதன் பலகணிகளும், தாழ்வாரமும், சித்தரிக்கப்பட்ட சிற்ப வேலைகளும் கீழ்த் திசைக்கு எதிரான வாயிலின் இருந்தவற்றின் அளவுக்கு இணையாக இருந்தன; அதில் ஏறிப்போவதற்கு ஏழு படிகளிருந்தன; அதன் முன்புறத்தில் மண்டபமொன்று இருந்தது.
23 வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாயிலுக்கும் எதிராக உட்பிராகாரத்திலும் வாயில்கள் இருந்தன; அவர் ஒரு வாயில் துவக்கி மறுவாயில் வரைக்கும் அளந்தார்; நூறு முழம் இருந்தது.
24 பின்னும் அவர் என்னைத் தெற்கே கூட்டிச் சென்றார்; அங்கே தென்திசைக்கு நேர்முகமாய் இருந்த வாயிலொன்றைக் கண்டேன்; அவர் அதன் புடைநிலையையும் அதன் தாழ்வாரத்தையும் அளந்தார்; இவற்றின் அளவு முன்சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
25 பலகணிகளும் சுற்றிலுமுள்ள தாழ்வாரங்களும் மற்றவை போலவே இருந்தன; நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
26 அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன; கதவுகளுக்கு முன்பாகத் தாழ்வாரங்கள் இருந்தன; வாயிலின் புடைநிலையில் இரு புறமும் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.
27 உட்பிராகாரத்துக்கும் ஒரு வாயில் தென் திசைக்கு நேர்முகமாய் இருந்தது; அவர் தென்திசை வாயில் துவக்கி மறுவாயில் மட்டும் அளந்தார்; நூறு முழம் இருந்தது.
28 பிறகு அவர் தென்திசையின் வாயில் வழியாய் என்னை உட்பிராகாரத்துக்குள் கூட்டிச் சென்றார்; அந்த வாயிலின் அளவு முன் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
29 அதன் பக்க அறைகளையும் புடைநிலைகளையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்து பார்த்தார்; மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
30 சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தின் நீளம் இருபத்தைந்து முழம்; அகலம் ஐந்து முழம்.
31 தாழ்வாரத்தின் வழியாய் வெளிப் பிராகாரத்துக்குப் போகலாம்; புடைநிலையில் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலேறிப் போவதற்கு எட்டுப் படிகள் இருந்தன.
32 பின்னர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்திற்கு அழைத்துப் போனார்; இவ்வாயிலின் அளவும் முன் சொல்லியவற்றின் அளவும் ஒன்றே.
33 அதன் அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார். மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
34 தாழ்வாரத்தின் வழியாய் வெளிப் பிராகாரத்திற்குப் போகலாம்; புடைநிலையில் பேரீச்ச மரங்கள் இருபுறமும் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலேறிப் போக எட்டுப் படிகள் இருந்தன.
35 அடுத்து அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்றார்; வாயில் முன் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
36 அதன் பக்க அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார்; மேற் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதாவது நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
37 அதன் தாழ்வாரம் வெளிப் பிராகாரத்துக்கு நேர்முகமாயிருந்தது; இருபுறமும் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலே ஏற எட்டுப் படிகள் இருந்தன.
38 கருவூல அறைகளில் எல்லாம் வாயில்களின் புடைநிலைகளுக்கு நேராக ஒரு கதவு இருந்தது; அங்கே தகனப் பலிகளைக் கழுவுவார்கள்.
39 வாயில் மண்டபத்தின் இரு புறமும் இரண்டிரண்டு பீடங்கள் உண்டு; அவற்றின் மேல் தகனப் பலிகளும், பாவப் பரிகாரப் பலிகளும், குற்றப் பரிகாரப் பலிகளும் செலுத்தப்படும்.
40 வடக்கு வாயிலுக்குச் செல்ல ஏறிப்போகும் வெளிப்புறத்தில் இரண்டு பீடங்கள் உண்டு; வாயில் மண்டபத்து முன்னாலிருக்கும் மறுபுறத்தில் இரண்டு பீடங்கள் உள்ளன.
41 வாயிலுக்கு அருகில் இரு பக்கமும் நந்நான்கு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன; அவற்றின் மேல் பலிகள் செலுத்தப்படும்.
42 தகனப் பலிக்குரிய நான்கு பீடங்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன; அவற்றின் அளவு: நீளம் ஒன்றரை முழம்; அகலம் ஒன்றரை முழம்; உயரம் ஒரு முழம்; அவற்றின் மேல் தகனப் பலிகளையும், சாதாரண பலிகளையும் இடுவதற்கான கருவிகள் வைக்கப்படும்.
43 ஒரு சாண் அளவாகிய அவற்றின் விளிம்பு உட்புறத்தின் சுற்றிலும் வளைந்திருந்தது; அப்பீடங்களின் மீது பலி இறைச்சித் துண்டுகள் வைக்கப்படும்.
44 உட்புறத்து வாயிலுக்குப் புறம்பே உட்பிராகாரத்தில் சங்கீதம் பாடுபவரின் அறைகள் இருந்தன; அந்த உட்பிராகாரம் வடதிசையை நோக்கும் வாயிலின் பக்கமாகவே இருந்தது; அறைகளோ தென் திசைக்கு எதிர் முகமாய் இருந்தன; கீழ்வாயிலின் பக்கத்திலிருந்த அறையொன்று வடக்கை நோக்கியிருந்தது.
45 அப்பொழுது அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தெற்கு நோக்கியிருக்கும் இந்த அறை கோயிலைக் காவல் காக்கும் அர்ச்சகர்களின் அறை;
46 வடக்கு நோக்கியிருக்கும் அறை பலி பலிபீடத்தைக் காவல்காக்கும் அர்ச்சகர்களின் அறை; லேவியின் வழிவந்த சதோக்கின் புதல்வர்களான இவர்கள் ஆண்டவருக்கு வழிபாடு செய்ய வருவார்கள்" என்றார்.
47 பிறகு அவர் பிராகாரத்தின் அளவு பார்த்தார்; அது சதுரமானது; அதன் நீளம் நூறு முழம்; அகலம் நூறு முழம்; கோயிலுக்கு எதிரிலுள்ள பீடத்தையும் அளந்தார்.
48 அப்பொழுது அவர் என்னைக் கோயில் மண்டபத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அம்மண்டபத்தின் புடைநிலைகளை அளந்தார்; அவற்றின் அளவு இருபக்கமும் அவ்வைந்து முழம் இருந்தது; வாயிலின் அகலம் மும்மூன்று முழம் இருந்தது.
49 மண்டபத்தின நீளம் இருபது முழம்; அகலம் பதினொரு முழம் இருந்தது; ஏறிப்போக எட்டுப்படிகள் உள்ளன; புடைநிலைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இரு தூண்கள் இருந்தன.
அதிகாரம் 41
1 பின்னர் அவர் என்னைத் திருக்கோயிலுக்குள் கூட்டிச்சென்று கோயில் கூடத்தின் புடைநிலைகளை அளந்தார்; அவை பக்கத்திற்கு ஆறு முழம் இருந்தன; அதுவே கூடாரத்தின் அளவாகும்.
2 வாயில் நடையின் அகலம் பத்து முழம்; அதன் பக்கங்கள் இந்தப் புறத்தில் ஐந்து முழமும், அந்தப் புறத்தில் ஐந்து முழமும் இருந்தன; அதன் நீளத்தை அளந்தார்; நாற்பது முழம் இருந்தது; அதன் அகலத்தை அளந்தார்; இருபது முழம் இருந்தது.
3 அவர் இன்னும் உள்ளே போய் வாயிலின் கட்டையை அளந்தார்; அது இரண்டு முழமும், நடை ஆறு முழமும், இதன் அகலம் ஏழு முழமும் இருந்தன.
4 பிறகு அவர் கோயிலின் உள்ளறையை அளந்தார்; அதன் நீளம் இருபது முழம், அகலம் இருபது முழம்; அதை எனக்குக் காண்பித்து; "இது திருத்தூயகம்" என்று சொன்னார்.
5 அடுத்து அவர் கோயிலின் சுவரை அளந்தார்; அதன் கனம் ஆறு முழம்; கோயிலைச் சுற்றிலுமிருந்த சுற்றுக் கட்டினுடைய அகலம் நான்கு முழம் இருந்தது.
6 இந்தச் சுற்றுக் கட்டுகள் மூன்றடுக்கு மெத்தையாக முப்பது அறைகளைக் கொண்டிருந்தன; இந்த அறைகள் கோயில் சுவரின் மேல் ஊன்றியிராமல், இரு புறத்திலுமுள்ள சுற்றுக்கட்டுகளில் அமைந்திருந்த வரம்புகளின் மேல் ஊன்றியிருந்தன;
7 ஒரு மெத்தையிலிருந்து இன்னொரு மெத்தைக்குச் செல்ல அகலமான ஒரு சுற்று வழியுமிருந்தது; அதில் படிக்கட்டொன்று சுற்றிப் போய் மிக உச்சியிலுள்ள அறைக்குச் செல்லும்; ஆகவே மேலே போகப் போக கோயில் குறுகியில்லாமல் அகன்றிருக்கும்; அவ்வாறே கீழ்நிலையிலிருந்து மேல்நிலையின் மைய இடத்திற்கு ஏறிப்போகக் கூடுமாயிருக்கும்.
8 கோயிலைச் சுற்றிலும் உயரமான வரம்பைக் கண்டேன்; சுற்றுக்கட்டுகளின் அடிப்படைகளை அளவு கோலால் அளந்த போது, ஆறு முழங்கள் இடையில் இருந்தன.
9 புறம்பே சுற்றுக்கட்டிற்கு இருந்த சுவரின் அகலமோ ஐந்து முழம்; உள்கோயில் சுற்றிலும் வேறே கட்டுக் கோப்புகளால் சூழப்பட்டிருந்தது.
10 அறைக்கும் அறைக்கும் நடுவில் கோயிலின் நான்கு பக்கத்திலும் இருபது முழ அகலமான வெற்றிடம் விட்டிருக்கிறது;
11 ஒவ்வொரு அறையின் கதவும் செபக்கூடத்தை நோக்கியிருந்தது; ஒன்று வடக்கேயும், மற்றொன்று தெற்கேயும் இருந்தன; செபக் கூடத்தின் அகலம் ஐந்து முழம்.
12 மேற்குப் பக்கத்தை நோக்கியிருந்த தனிக் கட்டடத்தின் நீளம் எழுபது முழம்; அதன் சுற்றுச்சுவரின் அகலம் ஐந்து முழம்; இதன் நீளம் தொண்ணுறு முழம்.
13 அவர் கோயிலை நூறு முழ நீளமாகவும், தனியாக ஒதுக்கப்பட்ட கட்டடத்தை நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
14 கோயிலின் முகப்புக்கும், கிழக்கே கட்டப்பட்ட தனிக் கட்டடத்திற்கும் இடையிலிருந்த முற்றம் நூறு முழ அகலம் கொண்டது;
15 பின்னும் அவர் பின்புறத்தில் தனியாய் இருந்த கட்டடத்திற்கு எதிரேயுள்ள வீட்டின் நீளத்தையும் அளந்தார்; அது இரு பக்கத்திலுமிருந்த தாழ்வாரங்கள், உள்கோயில், பிராகாரத்தின் மண்டபம் எல்லாம் உட்பட நூறு முழமிருந்தது.
16 மீண்டும் அவர் வாயிற்படிகளையும், வளைந்த பலகணிகளையும், மூன்று பக்கத்திலுமிருந்த நடைப் பந்தல்களையும் அளந்தார்; ஒவ்வொன்றின் வாயிற்படிக்கு எதிரே நடைப்பந்தலைச் சுற்றிலும் மரப்பலகைகள் பொருத்தியிருந்தன; இவை தரையிலிருந்து பலகணிகள் வரை எட்டும்; பலகணிகளோ மூடியிருந்தன.
17 உள் மாளிகை உட்பட நடைப்பந்தலான வெளிச்சுவரில் உள்ளும் புறமுமாய் இருந்த பலகணியாவற்றுக்கும் அவ்வாறே இருந்தது; யாவும் தன்தன் அளவின்படி இருந்தது.
18 அவற்றின் முகப்பில் கெருபீம்களும், பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன; ஒரு கெருபீமுக்கும் மற்றொரு கெருபீமுக்கும் நடுவில் ஒரு பேரீச்ச மரம் இருந்தது; ஒவ்வொரு கெருபீமுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன.
19 இப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் மனித முகமாயும், அப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் சிங்க முகமாயும் இருந்தன; கோயிலைச் சுற்றிலும் அவ்வாறே இருந்தது.
20 தரையிலிருந்து வாயிற் கதவின் மேற்புறம் வரை அவ்வகைக் கெருபீம்களும் பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன.
21 கோயிலின் தூண்கள் சதுரமானவை. தூயகத்தின் முகப்பும் கோயிலின் முகப்பும் ஒன்றுக் கொன்று எதிரெதிரே இருந்தன.
22 மரத்தினால் அமைக்கப்பட்ட பலி பீடத்தின் உயரம் மூன்று முழம்; நீளம் இரண்டு முழம்; அகலம் இரண்டு முழம்; அதன் கோணங்களும் விளிம்புகளும் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அவர் என்னை நோக்கி: "இது ஆண்டவரின் திருமுன் இருக்கிற பீடம்" என்றார்.
23 கோயிலுக்கும் தூயகத்துக்கும் இரண்டு வாயில்கள் இருந்தன.
24 இவ்விரண்டு வாயில்களிலும் இருபுறத்துக் கதவுகளும் ஒன்றின் மேலொன்று மடங்கும் இரட்டைக் கதவுகளாய் இருந்தன; வாயிலின் இந்தப் புறத்துக்கும் அந்தப் புறத்துக்கும் இரட்டையான கதவுகள் தான் இருந்தன.
25 கோயிற்சுவரின் சித்திரிக்கப்பட்டிருந்தவாறே, கோயிலின் வாயிற் கதவுகளிலும் கெருபீம்களும் பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன; ஆதலால் வெளி மண்டபத்தின் கதவுமரங்கள் அதிகக் கனமானவை.
26 அவற்றின்மேல் வளைந்த பலகணிகள் காணப்பட்டன; மண்டபத்தின் பக்கங்களில் இரு பக்கமும் மாளிகையின் நெடுஞ்சுவர்களின் அகலத்தில் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.
அதிகாரம் 42
1 பின்னும் அவர் என்னை வடதிசை வழியாக வெளிப்பிராகாரத்துக்கு அழைத்து வந்து, தனிப்பட இருந்த மாளிகைக்கு எதிரிலிருந்த கருவூல அறைகளில் நுழையச் சொன்னார்.
2 இந்தக் கட்டடம் வடக்கு வாயிலிருந்து நீளத்தில் நூறு முழமும், அகலத்தில் ஐம்பது முழமும் இருந்தது.
3 அதன் ஒரு பக்கத்தில் இருபது முழமுள்ள ஒரு அந்தரமான இடம் உட்பிராகாரத்திற்கும், மற்றொரு பக்கத்தில் கல்லால் செய்யப்பட்ட தளவரிசை வெளிப் பிராகாரத்திற்கும் இருந்தன; அங்கே மூன்று நடைப் பந்தல்களையுடைய தாழ்வாரம் ஒன்றிருந்தது.
4 கருவூல அறைகளின் முன் பத்து முழ அளவாகிய நடைவழி ஒன்றிலிருந்தது; அது நூறு முழ நீளமாய் இருந்தது. வாயில்கள் வடக்கு நோக்கியிருந்தன.
5 அதன் அறைகளுள் மேல்மாடியிலுள்ளவை கீழ்மாடியிலுள்ளவற்றினும் குறைந்த அகலமுள்ளவை; ஏனெனில் மேல்அறைகளுக்கு முன் நடைப்பந்தல்கள் அதிக இடம் கொண்டன; கீழ் அறைகளுக்கும் நடு அறைகளுக்கும் முன் அவ்வளவு இடங்கொள்ளவில்லை.
6 அவை மூன்றடுக்காய் இருந்தன. அங்குள்ள தூண்கள் பிராகாரத்திலுள்ள தூண்கள் போலல்ல; இவை கீழும் நடுவீட்டிலும் உள்ள தூண்களை விட ஒடுங்கி இருந்தன.
7 வெளிப்பக்கம், அறைகளின் ஓரமாய் வெளிப்பிராகாரத் திசையாக ஒரு மதில் இருந்தது; அறைகளின் முன்பாக அதன் நீளம் ஐம்பது முழம்.
8 ஏனெனில், வெளிப் பிராகாரத்தை நோக்கிய அறைகளின் நீளம் ஐம்பது முழம்; கோவிலுக்கு எதிரே இருந்தவற்றின் நீளமோ நூறு முழம்.
9 வெளிப் பிராகாரத்திலிருந்து அவ்வறைகளுக்கு வருகிற மக்களுக்கென ஒரு வழி கிழக்கே அடிஅறையில் இருந்தது.
10 கீழ்த்திசை வழிக்கு எதிராகவும், தனிப்படையாய் இருந்த மாளிகைக்கு நேர் முன்பாகவும் மதிலின் அகலத்தில் அறைகள் இருந்தன.
11 இவற்றின் முன்னேயும் ஒரு நடைபாதை இருந்தது; வடபக்கத்திலுள்ள அறைகளுக்கு முன்னிருந்த பாதையைப் போன்றது; நீளமும் அகலமும் ஒன்றே; வாயிற்படிகள், சிற்ப வேலைகள், கதவுகள் யாவும் அப்பக்கத்தில் இருப்பவற்றைப் போன்றவையே.
12 தென்திசை அறைகளுக்கு வாயில் இருந்தது போலவே, இப்பக்கத்திலும் ஒருவாயில் இருந்தது; இது தனிப்பட்டதாய் இருந்த மண்டபத்துக்கு எதிரே இருந்தது; கீழ்த்திசையிலிருந்து வருபவர்களுக்கு இது உதவியாயிருந்தது.
13 அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தனியாய்ப் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் மாளிகைக்கு முன்னால் இருக்கும் வடபுற அறைகளும், தென்புற அறைகளும் பரிசுத்த அறைகள்; ஆண்டவருடைய திருத்தூயகத்துள் சென்று ஆண்டவர் திருமுன் பணிபுரியும் அர்ச்சகர்கள் பரிசுத்த காணிக்கைகளை உண்ணும் இடங்கள் அவை; அவர்கள் மிகவும் பரிசுத்தமானவற்றையும் பாவப்பரிகாரப் பலியையும், குற்றப் பரிகாரக் காணிக்கைகளையும் அங்கே வைக்கிறார்கள்; ஏனெனில் அந்த இடம் பரிசுத்தமான இடம்.
14 அர்ச்சகர்கள் இவ்வாறு நுழைந்த பின்னர் பரிசுத்த இடங்களிலிருந்து வெளிப் பிராகாரத்துக்கு வரக்கூடாது; பணிபுரியும் போது அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் பரிசுத்தமானவை; ஆகையால் அவற்றை அங்கேயே கழற்றி வைத்து விட்டு வேறு உடைகளை உடுத்திக் கொண்டு தான் பொது மக்களுக்குரிய இடத்திற்குப் போவார்கள்" என்று சொன்னார்.
15 உட்புறத்து மாளிகையை அளந்து முடித்தபின், அவர் என்னைக் கிழக்கு வழியை நோக்கும் வாயில் வழியாய் வெளியே அழைத்துக் கொண்டு போய், முற்றத்தை முழுதும் அளக்கத் தொடங்கினார்:
16 கீழ்த்திசைப் புறத்தை அளவு கோலால் அளந்தார்; அந்த அளவு கோலின்படி ஐந்நூறு கோல் இருந்தது;
17 வடதிசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது;
18 தென்திசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது;
19 மேற்றிசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது.
20 நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் போய்ச் சுவர்களை அளந்தார்; தூயகத்திற்கும் பொதுமக்கள் முற்றத்திற்கும் உள்ள அந்தச் சுவரின் நீளம் ஐந்நூறு முழம்; அகலம் ஐந்நூறு முழம்.
அதிகாரம் 43
1 பின்னர் அந்த மனிதர் கீழ்த்திசையை நோக்கியிருக்கும் வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
2 இதோ, இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை கிழக்கிலிருந்து வந்தது; அவருடைய வருகையின் பேரொலி வெள்ளப் பெருக்கின் இரைச்சல் போலக் கேட்டது; அவருடைய மகிமையால் மண்ணுலகம் ஒளிவீசிற்று.
3 நான் பார்த்த காட்சி, அவர் நகரத்தை அழிப்பதற்காக வந்த போது நான் கண்ட காட்சியைப் போலவும், கேபார் நதியருகில் முன்பு நான் கண்ட காட்சியைப் போலவும் இருந்தது; நானோ தரையில் முகங்குப்புற விழுந்தேன்.
4 ஆண்டவருடைய மகிமை கீழ்த்திசையை நோக்கியிருக்கும் வாயில் வழியாய்த் திருக்கோயிலுக்குள் நுழைந்தது;
5 அப்பொழுது, ஆவி என்னைப் பிடித்துக் தூக்கி, உள் முற்றத்துக்குக் கொண்டு வந்து விட்டது; இதோ, ஆண்டவருடைய மகிமை திருக்கோயிலை நிரப்பிற்று.
6 அந்த மனிதர் என்னருகில் இன்னும் நின்று கொண்டிருந்தார்; அப்போது திருக்கோயிலுக்குள்ளிருந்து யாரோ என்னிடம் பேசும் குரல் கேட்டது:
7 அவர் எனக்குச் சொன்னார்: "மனிதா, இது நமது அரியணைக்குரிய இடம்; இது நமது கால்மணைக்கான இடம்; இங்கே இஸ்ராயேல் மக்கள் நடுவில் நாம் என்றென்றைக்கும் குடியிருப்போம். இஸ்ராயேல் வீட்டாரோ, அவர்களுடைய அரசர்களோ நமது பரிசுத்தப் பெயரைத் தங்கள் வேசித்தனத்தாலும், தங்கள் அரசர்களின் கல்லறைகளாலும் இனி ஒருகாலும் தீட்டுப்படுத்தமாட்டார்கள்.
8 ஒரு சுவர் மட்டும் அவர்களுக்கும் நமக்கும் இடையிலிருக்க, தங்கள் வாயிற்படியை நமது வாயிற்படிக்கு எதிரிலோ, தங்கள் கதவுநிலைகளை நமது கதவுநிலைகளுக்கு எதிரிலோ வைப்பதால் தீட்டுப்படுத்த மாட்டார்கள்; அவர்கள் கட்டிக்கொண்ட அருவருப்பான செயல்களால் முன்பு நமது திருப்பெயரைப் பங்கப்படுத்தினார்கள்; அதற்காக நாம் நமது கோபத்தில் அவர்களை அழித்தோம்.
9 இப்பொழுதோ அவர்கள் தங்கள் சிலை வழிபாட்டையும், தங்கள் அரசர்களின் கல்லறைகளையும் நம் திருமுன்னிருந்து தள்ளி விடட்டும்; நாம் அவர்கள் நடுவில் என்றென்றைக்கும் குடியிருப்போம்.
10 மனிதா, இஸ்ராயேல் வீட்டாருக்கு நீ இக்கோயிலைக் காண்பி; அவர்கள் இதைக் கண்டு தங்கள் அக்கிரமங்களுக்காக வெட்கப்படட்டும்; இதன் அளவை அவர்கள் அளந்து பார்க்கட்டும்.
11 அவர்கள் தாங்கள் செய்தவற்றுக்கெல்லாம் வெட்கப்பட்டால், அப்போது நீ அவர்களுக்குத் திருக்கோயிலின் வரைபடத்தையும் கட்டடப் பாணியையும், முன் வாயில்களையும் பின்வாயில்களையும், அதன் ஒழுங்குகளையும் எல்லாக் கட்டளைகளையும், முறைமைகளையும் சட்டங்களையும் விளக்கிக் காட்டி, அவர்கள் முன்பாக எழுதி, அவர்கள் அந்த முறைமைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கும்படி சொல்.
12 திருக்கோயிலின் சட்டம் இதுவே: மலையுச்சியில் சுற்றியிருக்கும் திடல் முழுவதும் மிகவும் பரிசுத்தமான இடம்: இதோ, திருக்கோயிலின் சட்டம் இதுவே.
13 பீடம்: "முழத்தின் அளவுக்கேற்பப் பீடத்தின் அளவுகள் பின்வருமாறு: (ஒரு முழம் என்பது கைமுழம் ஒன்றும் நான்கு விரற்கடையும் கொண்டது.) பீடத்தின் அடிப்பாகம் ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமுமானது; சுற்றுப்புறத்தில் அதன் ஓரத்தில் ஒரு சாண் விளிம்பு இருக்கும்; பீடத்தின் அளவு இருக்க வேண்டியது இவ்வாறு:
14 தரையிலிருக்கும் அடிப்பாகம் துவக்கி, ஆதாரத்தின் கீழ்நிலை வரை இரண்டு முழமும், அகலம் ஒரு முழமும், சிறிய விளிம்பு முதல் பெரிய விளிம்பு வரை நான்கு முழமும், அகலம் ஒரு முழமும் இருத்தல் வேண்டும்.
15 பலிபீடத்தின் சிகரம் நான்கு முழ உயரமானது; அதிலிருந்து முளைத்தாற் போல் ஒரு முழ உயரமுள்ள கொம்புகள் நான்கு இருந்தன.
16 பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் உள்ள ஒரு சதுரம்;
17 அதன் நாற்புறமும் உள்ள நீள் விளிம்பு பதினான்கு முழ நீளமும், பதினான்கு முழ அகலமும் உடையது; அதன் கனம் சுற்றிலும் அரை முழமும், அதன் அடிப்பாகம் சுற்றிலும் ஒரு முழமுமாய் இருந்தது; அதன் படிகளோ கிழக்கு நோக்கியிருந்தன."
18 அவர் இன்னும் தொடர்ந்து பேசினார்: "மனிதா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பீடத்தைப்பற்றிய ஒழுங்கு முறைமைகளாவன: தகனப்பலிகளையும் இரத்ததாரைப் பலிகளையும் தருவதற்காக இப்பீடத்தைக் கட்டுகிற அந்த நாளில்,
19 இந்தப் பீடத்தில் நமக்குப் பணி செய்ய வரும் சாதோக்கின் வழி வந்த அர்ச்சகர்களுக்கும் லேவியர்களுக்கும் பாவப் பரிகாரப் பலிக்கென ஒரு காளையை நீங்கள் கொடுக்க வேண்டும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
20 பிறகு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பீடத்தின் நான்கு கொம்புகளிலும், நீள்விளிம்பின் நான்கு கோடிகளிலும், சுற்றிலுமிருக்கும் விளிம்பிலும் பூசிப் பீடத்தைத் தூய்மைப்படுத்திப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும்.
21 பாவப் பரிகாரத்துக்காகப் படைக்கப்பட்ட காளையைக் கொண்டு போய், கோயிலின் தனிப்பட்ட கட்டடத்தில் தூயகத்திற்கு வெளியில் சுட்டெரிக்க வேண்டும்.
22 இரண்டாம் நாள் பாவப் பரிகாரத்துக்கெனப் பழுதற்ற வெள்ளாட்டுக் கடா ஒன்றை ஒப்புக்கொடுக்க வேண்டும்; இளங்காளையினாலே தூய்மைப்படுத்தியது போல, பீடத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
23 தூய்மைப்படுத்தி முடிந்ததும், மாசற்ற காளையொன்றும், பழுதற்ற ஆட்டுக் கடா ஒன்றும் மந்தையிலிருந்து கொண்டுவந்து பலியிட வேண்டும்.
24 அவற்றை ஆண்டவரின் திருமுன் ஒப்புக்கொடுப்பீர்களாக; அர்ச்சகர்கள் அவற்றின் மேல் உப்புத் தூவி அவற்றை ஆண்டவருக்குத் தகனப் பலியிடுவார்கள்.
25 ஏழு நாள் வரைக்கும் நாடோறும் பாவப்பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பலியிட்டு, மற்றும் மாசற்ற காளையொன்றும், பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றும் மற்தையிலிருந்து கொணர்ந்து பலியிடுவார்களாக.
26 ஏழு நாளளவும் பலிபீடத்தைத் தூய்மைப்படுத்தி, அதற்காகப் பாவப்பரிகாரம் செய்து அபிஷுகம் செய்வார்கள்;
27 அந்நாட்களுக்குப் பின் எட்டாம் நாள் முதற் கொண்டு அர்ச்சகர்கள் பலி பீடத்தின் மேல் உங்கள் தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பார்கள்; அப்பொழுது நாம் உங்களை ஏற்றுக் கொள்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
அதிகாரம் 44
1 பின்னர் அவர் கீழ்த்திசையை நோக்கியுள்ள தூயகத்தின் புறவாயிலுக்கு என்னைத் திரும்பவும் கூட்டி வந்தார்; அந்த வாயில் பூட்டப்பட்டிருந்தது.
2 அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்; திறக்கப்படாது; யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்; ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்;
3 தலைவன் மட்டும் ஆண்டவரின் திருமுன்னிலையில் அப்பம் உண்பதற்காக அங்கே வந்து உட்காரலாம்; அவன் கூட மண்டபத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, அவ்வழியாகவே வெளியேற வேண்டும்" என்று சொன்னார்.
4 பின்பு அவர் வடக்கு வாயில் வழியாய் என்னைத் திருக்கோயிலின் முன்னிடத்திற்குக் கூட்டிவந்தார்; கண் திறந்து பார்த்தேன்; ஆண்டவருடைய மகிமை ஆண்டவரின் திருக்கோயிலை நிரப்பிற்று; அதைக் கண்டு நான் தரையில் குப்புற விழுந்தேன்.
5 அப்போது ஆண்டவர் எனக்குக் கூறினார்: "மனிதா, ஆண்டவரின் திருக்கோயிலைப்பற்றிய எல்லா ஒழுங்குமுறைமைகளையும் சட்டங்களையும் உனக்குச் சொல்லப் போகிறோம், கூர்ந்து கவனி; கண்ணால் நன்றாகப் பார்; காதால் கவனமாய்க் கேள். கோயிலுக்குள் நுழையக் கூடியவர்களையும், தூயகத்தில் நுழையத் தகாதவர்களையும் நன்றாய்க் கவனி.
6 பிறகு கலகக்காரராகிய இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, போதும்; நீங்கள் செய்து வந்த அருவருப்பான செயல்களை எல்லாம் விடுங்கள்;
7 நீங்கள் நமக்குக் காணிக்கை அப்பங்களும் கொழுப்பும் இரத்தமும் ஒப்புக் கொடுக்கும் போது, உள்ளத்திலும் உடலிலும் விருத்தசேதனம் செய்யப்படாத அந்நியர்களை, நமது தூயகத்திற்கு வந்து அதை அவசங்கைப்படுத்த அழைப்பித்தீர்கள்; உங்கள் பாதகங்களால் நம் உடன்படிக்கையை முறித்தீர்கள்.
8 மேலும் நம் பரிசுத்த பொருட்களை நீங்கள் காத்துக் கண்காணிக்காமல், அந்தப் பொறுப்பை அந்நியர்களுக்குக் கொடுத்து, நமது தூயகத்தில் காவல் செய்யக் சொன்னீர்கள்.
9 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழ்கின்ற அந்நியர்களிலோ, வேறெந்த அந்நியர்களிலோ உள்ளத்திலும் உடலிலும் விருத்தசேதனம் செய்து கொள்ளாத எவனும் நமது தூயகத்துள் நுழையக் கூடாது.
10 "ஆனால், இஸ்ராயேல் வழி தவறிய போது, நம்மை விட்டு அகன்று, வழி தவறித் தங்கள் சிலைகளைப் பின்பற்றிய லேவியர்களும் தண்டனை பெறுவார்கள்.
11 ஆயினும், அவர்கள் திருக்கோயில் வாயில்களைக் காப்பதும், வாயிற்படியில் நிற்பதும், தகனப் பலிகளுக்குரிய மிருகங்களையும், மக்களுக்காகத் தரப்படும் பலி மிருகங்களையும் வெட்டுவதும், மக்களுக்கு முன்பாக நின்று அவர்களுக்குப் பணிசெய்வதுமாகிய அலுவல்களைச் செய்யும் ஊழியர்களாய் நமது தூயகத்தில் இருப்பார்கள்.
12 அவர்கள் சிலைகளுக்கு முன்பாக நின்று, மக்களுக்கு வேலைக்காரர்களாய் இருந்து, இஸ்ராயேல் வீட்டார் அக்கிரமத்தில் விழக் காரணமாய் இருந்ததால், அவர்கள் தண்டனை பெறுவார்கள் என்று அவர்களுக்கு எதிராய் ஆணையிட்டோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
13 அப்படிப்பட்டவர்கள் நமது திருமுன்னிலையில் அர்ச்சகரின் பணியைச் செய்யவும், நமக்கருகில் வரவும், மிகவும் பரிசுத்தமான இடத்திற்கு அருகிலுள்ள இடங்களில் நுழையவும் கூடாது; அவர்கள் தங்கள் வெட்கத்தையும், தாங்கள் செய்த அக்கிரமத்தின் சுமையையும் தாங்குவார்கள்.
14 ஆயினும் கோயிலில் செய்யவேண்டிய வேலைகளையும் அலுவல்களையும், வாயிற்படி காவலையும் செய்யுமாறு அவர்களை ஏற்படுத்துவோம்.
15 "ஆனால், இஸ்ராயேல் வீட்டார் நம்மை விட்டு வழி தவறிப் போன போது நமது தூயகத்துக்கடுத்த சடங்குகளைச் சரியாய்க் கடைப்பிடித்த சாதோக்கின் மக்களாகிய அர்ச்சகர்களும், லேவியருமே நமது திருமுன் வந்து தங்கள் அலுவலைச் செய்வார்கள்; அவர்களே நமது திருமுன் நின்று பலி மிருகங்களின் கொழுப்பையும் இரத்தத்தையும் நமக்கு ஒப்புக்கொடுப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
16 அவர்கள் தான் நமது பரிசுத்த இடத்தில் நுழைவார்கள்; அவர்கள் தான் நமக்கு ஊழியம் செய்ய நம் பீடத்தின் அருகே வந்து செய்ய வேண்டிய சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.
17 அவர்கள் உட்பிராகாரத்தின் வாயிலுக்குள் நுழையும் போது, மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட ஆடைகளை உடுத்திக் கொள்வார்கள்; அவர்கள் உட்பிராகாரத்தின் வாயில்களிலும், உட்புறத்திலும் ஊழியம் செய்கையில் ஆட்டு மயிரால் செய்யப்பட்ட ஆடையொன்றும் அணியக் கூடாது;
18 அவர்கள் தலையில் சணல் நூல் தலைப்பாகைகளும், இடுப்பில் சணல் நூல் ஆடையும் அணிவார்கள்; வேர்வை உண்டாக்கக் கூடியது எதையும் இடையில் உடுத்தக் கூடாது.
19 மக்களிருக்கும் வெளிப்பிராகாரத்துக்கு வருமுன், அவர்கள் வழிபாட்டுக்கு உடுத்தியிருந்த ஆடைகளைக் கழற்றிக் கோயிலின் அறையில் வைத்து விட்டு, வேறு ஆடைகளை அனிந்து கொள்ள வேண்டும்; தங்கள் உடை வழியே பரிசுத்தத்தைப் பொது மக்களிடையே கொண்டு வரலாகாது.
20 அவர்கள் தங்கள் தலையை மழிக்கவோ தலை மயிரை நீளமாய் வளர்க்கவோ வேண்டாம்; அடிக்கடி தலை மயிரைக் கத்தரிக்கட்டும்.
21 உட்பிராகாரத்தில் நுழையும் நாட்களில் அர்ச்சகன் மது அருந்தக் கூடாது;
22 அர்ச்சகர்கள் கைம்பெண்ணையோ தள்ளப்பட்டவளையோ மணக்கக் கூடாது; இஸ்ராயேல் இனத்தவளான கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்; ஆனாலும் முன்பு அர்ச்சகனின் மனைவியாய் இருந்த கைம்பெண்ணை மணப்பதற்குத் தடையில்லை.
23 அவர்கள் பரிசுத்தமானவற்றையும் பரிசுத்தமல்லாதவற்றையும், தீட்டுள்ளவற்றையும் தீட்டில்லாதவற்றையும் நம் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து, வேறுபாட்டைக் காட்ட வேண்டும்.
24 வழக்குகள் வந்தால், நம் சட்டங்களுக்கேற்ப நீதி செலுத்தவும் தீர்ப்புச் சொல்லவும் ஆயத்தமாய் இருப்பார்கள்; நம் திருநாட்களில் எல்லாம் நம் கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடிப்பார்கள்; நமது ஒய்வு நாளைப் பரிசுத்தமாய் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
25 செத்தவரை அணுகிப் போய்த் தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது; ஆயினும், தந்தையோ தாயோ மகனோ மகளோ சகோதரனோ, மணமாகாத சகோதரியோ இறந்து போனால் அவர்களின் உடலருகில் போகலாம்.
26 அவர்களுள் யாராவது தீட்டுப்பட்டால், ஏழு நாட்களுக்குப் பிறகு சுத்தமாவான்; ஏழு நாட்களுக்குப்பின்,
27 அவன் கோயிலில் வழிபாடு செய்யும்படி உட்பிராகாரத்துக்குள் நுழைகிற அன்றைக்குத் தனக்காகப் பாவப் பரிகாரப் பலி செலுத்த வேண்டும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
28 அவர்களுக்குச் சொத்துரிமை ஏதும் இல்லை; நாமே அவர்களின் சொத்துரிமை; அவர்களுக்கு இஸ்ராயேலில் யாதொரு உடைமையும் தராதீர்கள்; நாமே அவர்களின் உடைமை.
29 பாவப் பரிகாரப்பலி, குற்றப் பரிகாரப்பலி இறைச்சியை அவர்களே புசிப்பார்கள்; அன்றியும் இஸ்ராயேலில் நேர்ச்சையாய் ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளெல்லாம் அவர்களுக்கே உரியவை.
30 நீங்கள் ஒப்புக்கொடுக்கும் எல்லா மிருகங்களின் முதற் பேறும், காணிக்கையாக ஒப்புக் கொடுப்பவற்றுள் முதற் பாகம் எல்லாம் அர்ச்சகர்களுக்கே சொந்தமாகும்; வீட்டில் நீங்கள் புசிப்பவற்றில் முதல் பாகத்தை அவர்களுக்குக் கொடுங்கள்; அப்போது ஆசீர்வாதம் உங்கள் வீட்டின் மேல் இருக்கும்.
31 பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததையோ, மிருகங்கள் பீறியதால் செத்ததையோ அர்ச்சகர் உண்ணலாகாது.
அதிகாரம் 45
1 "நீங்கள் சீட்டுப்போட்டு நாட்டைப் பங்கிடும் போது, நாட்டில் ஒரு பங்கை முதற் கண் பிரித்து வையுங்கள்; இருபத்தையாயிரம் கோல் நீளமும் பதினாயிரம் கோல் அகலமும் இருக்கட்டும்; அது பரிசுத்தமான பங்கு; அதை ஆண்டவருக்கெனக் கொடுத்து விடுங்கள்; அந்தப் பரப்புள்ள இடம் முழுவதும் பரிசத்தமானதாய் இருக்கும்;
2 அதிலே பரிசுத்த இடத்துக்கென ஐந்நூறு கோல் சதுரமான நிலப்பரப்பு அளக்கப்படும்; அதைச் சுற்றிலும் ஐம்பது கோல் அளவுள்ள வெளியிடம் விடப்படும்.
3 இந்தக் கோலால் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரம் கோல் அகலமுமுள்ள நிலப்பரப்பில் பரிசுத்த இடமும், திருத்தூயகமும் இருக்கும்.
4 நாட்டின் பரிசுத்த பங்காகிய அது, ஆண்டவரின் திருமுன் வந்து இறைவழிபாடு செய்யும் கோயில் அர்ச்சகர்களின் பங்காய் இருக்கும்; அதிலே அவர்களின் வீடுகளுக்குரிய இடமும், பரிசுத்த இடத்துக்கான நிலப்பகுதியும் இருக்கும்.
5 பின்னும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங் கோல் அகலமுமான இடம் கோயிலில் பணிவிடை செய்யும் லேவியருக்குக் கொடுக்கப்படும்; அங்கே அவர்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வார்கள்.
6 பரிசுத்த இடத்துக்கென்று ஒதுக்கப்பட்ட வெளியிடத்திற்கு எதிராக ஐயாயிரங் கோல் அகலமும், இருபத்தையாயிரம் கோல் நீளமும் அளந்து நகரத்துக்கென விடுவீர்கள்; இது இஸ்ராயேல் வீட்டாரனைவர்க்குமே சொந்தமாயிருக்கும்.
7 "பரிசுத்த இடத்துக்கும் நகரத்துக்கும் என ஒதுக்கப்பட்ட இடத்துக்கு இருபுறத்திலும் தலைவனின் பங்கு குறிக்கப்படவேண்டும்; அது கோயிலின் நிலத்துக்கும் நகரத்தின் நிலத்துக்கும் முன்னால் இருக்கும்; அது அவற்றிற்குக் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கும் நாட்டின் கிழக்கு எல்லை முதல் மேற்கு எல்லை வரை பரவியிருக்கும்; அவனது நிலம் ஒவ்வொரு கோத்திரப் பங்குகளின் நிலத்திற்கும் சமமாயிருக்க வேண்டும்.
8 இஸ்ராயேலில் காணிபூமி இருப்பதால், தலைவர்கள் இனி நம் மக்களை ஒடுக்கலாகாது; இஸ்ராயேல் மக்களுக்கு அவரவர் கோத்திரத்துக்குத் தக்கவாறு நாட்டிலே பங்கு விடவேண்டும்.
9 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேலின் தலைவர்களே, நீங்கள் செய்த அநீதிகள் போதும்; இனி நீங்கள் கொடுமையையும் கொள்ளையையும் ஒழித்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; நம் மக்களுக்குச் சொந்தமான பூமியினின்று அவர்களைத் துரத்தாதேயுங்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
10 உண்மையான எடை காட்டும் தராசும், சரியான அளவுள்ள மரக்காலும் பாத்திரமும் உங்களுக்கு இருக்க வேண்டும்;
11 மரக்காலும் பாத்திரமும் ஒரே அளவுள்ளதாயிருக்க வேண்டும்; மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவு பாத்திரம் கலத்தில் பத்தில் ஒரு பங்கும் கொண்டவை; கலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே இவற்றின் அளவும் வரையறுக்கப்படும்.
12 ஷூக்கெல் என்பது இருபது கேரா; ஒரு மீனாவில் பதினைந்து அல்லது இருபது அல்லது இருபத்தைந்து ஷூக்கெல் இருக்கிறது.
13 "நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கைகள் இதுவே: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் எடுத்துப் படைக்க வேண்டும்.
14 எண்ணெயின் அளவு ஓர் அளவு பாத்திரமாகும்; அளவு பாத்திரத்தின் கொள்ளளவு ஒரு கலம் பிடிக்கும் குடத்தில் பத்தில் ஒரு பங்கு.
15 இஸ்ராயேலர் தங்கள் பரிகாரத்துக்காகத் தகனப்பலியோ சாதாரண பலியோ சமாதானப் பலியோ செலுத்த வேண்டுமானால், இருநூறு ஆடுகள் கொண்ட மந்தையில் ஓர் ஆட்டுக் கடாவை ஒப்புக்கொடுப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
16 நாட்டு மக்கள் யாவரும் இஸ்ராயேலின் தலைவனுக்கு இந்தச் சந்திப்புத் தரக்கடவார்கள்.
17 ஆனால் இஸ்ராயேல் வீட்டாரின் கடன் திருநாட்களிலும், மாதப் பிறப்பு ஆகிய பண்டிகைகளிலும், ஓய்வு நாட்களிலும், மற்றுமுள்ள இஸ்ராயேலின் திருவிழாக்களிலும் தலைவனே அவர்கள் செலுத்த வேண்டிய சாதாரண பலிகளையும் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளான்; அவன் இஸ்ராயேல் இனத்தார்க்காகப் பாவப் பரிகாரப் பலியும் தகனப் பலியும் சமாதானப் பலியும் பரிகாரத்துக்கென ஒப்புக் கொடுக்க வேண்டும்.
18 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: முதல் மாதத்தில் முதல் நாள், நீ பழுதற்ற ஒரு காளையை தெரிந்தெடுத்துக் கொண்டு வந்து, பரிசுத்த இடத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்;
19 பாவப் பரிகாரப் பலியான மிருகத்தின் இரத்தத்தில் அர்ச்சகர் கொஞ்சம் எடுத்துக் கோயிலின் கதவு நிலைகளிலும், பலி பீடத்து நீள் விளிம்பின் நான்கு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் கதவு நிலைகளிலும் பூசக்கடவார்.
20 அறியாமையால் தவறு செய்தவர்களுக்காகவும், தப்பறையில் விழுந்து குற்றம் புரிந்தவர்களுக்காகவும் பரிகாரமாக மேற்சொன்னவாறு மாதத்தின் ஏழாம் நாளிலும் செய்து, கோயிலைத் தூய்மைப் படுத்துவாய்.
21 முதல் மாதத்தின் பதினான்காம் நாள் பாஸ்கா என்னும் திருவிழா கொண்டாடப்படும்; ஏழு நாட்கள் புளிக்காத அப்பங்களைப் புசிக்க வேண்டும்.
22 அந்நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டு மக்கள் எல்லாருக்காகவும், ஒரு காளையைப் பரிகாரப் பலியாகப் படைப்பான்.
23 விழா ஏழு நாட்கள் நீடிக்கும்; அந்த ஏழு நாளும் அவன் நாடோறும் ஆண்டவருக்குத் தகனப் பலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும், மாசில்லாத ஏழு ஆட்டுக்கடாக்களையும் படைக்கக்கடவான்; மேலும் நாடோறும் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தருவான்.
24 அன்றியும் உணவுப் பலியாக, ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணையும் ஒப்புக் கொடுக்கக் கடவான்.
25 "ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாள் தொடங்கும் பண்டிகையிலும் அவ்வாறே அவன் ஏழு நாட்களும் பாவப் பரிகாரப்பலியும் தகனப்பலியும் உணவுப்பலியும் தரவேண்டும்.
அதிகாரம் 46
1 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உட்பிராகாரத்தின் கிழக்கு நோக்கிய வாயில் வேலை செய்யும் ஆறு நாட்களும் மூடப்பட்டிருக்கும்; ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறக்கப்படும்.
2 இந்நாட்களில் தலைவன் வெளிவாயில் மண்டபத்தின் வழியாய் உள்ளே நுழைந்து வாயிற்படி அருகில் நிற்பான். அப்பொழுது அர்ச்சகர்கள் அவனுடைய தகனப் பலியையும் சமாதானப் பலியையும் செலுத்துவார்கள்; அவனோ வாயிலருகிலேயே நின்று வழிபாடு செய்து விட்டுப் போவான்; அவ்வாயில் அன்று மாலை வரை திறந்தே கிடக்கும்.
3 நாட்டு மக்களும், ஓய்வு நாட்களிலும் அமாவாசை நாட்களிலும் அவ்வாறே வாயிலருகில் நின்று ஆண்டவரின் திருமுன் அவருக்கு வழிபாடு செலுத்துவர்.
4 ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குத் தகனப் பலியாக மாசற்ற ஆட்டுக்குட்டிகள் ஆறும், பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றும் ஒப்புக் கொடுப்பான்;
5 அவற்றோடு உணவுப் பலியும் தருவான்; ஒவ்வொரு ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளுடன் தனக்கு விருப்பமான அளவு மாவும், ஒவ்வொரு மரக்கால் மாவுக்கும் ஒரு படி எண்ணெயும் படைக்க வேண்டும்.
6 அமாவாசைப் பண்டிகை நாளில் மந்தையிலிருந்து மாசில்லாத காளையொன்றும், மாசற்ற ஆட்டுக்குட்டிகள் ஆறும், பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றும் பலியாக ஒப்புக்கொடுப்பான்.
7 ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஒவ்வொரு ஆட்டுக் கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளுடன் தனக்கு விருப்பமான அளவு மாவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணெயும் படைக்கக்கடவான்.
8 "தலைவன் உள்ளே வருகிற போது, வாயில் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அதே வழியாய் வெளியேற வேண்டும்.
9 பொதுமக்கள் திருநாட்களின் காலத்தில் ஆண்டவருடைய திருமுன்னிலைக்கு வருகிற போது, வழிபாடு செய்ய வடக்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் தெற்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தெற்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் வடக்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தான் உள்ளே வந்த வாயில் வழியாய்த் திரும்பிப் போகாமல், அதற்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும் வாயில் வழியாய்த் தான் வெளியேற வேண்டும்.
10 தலைவன் பொது மக்களுடன் வரும் போது, உள்ளே போகிறவர்களோடு சேர்ந்து உள்ளே போய், வெளியேறுகிறவர்களோடு வெளியேறுவான்.
11 விழாக்களிலும் பண்டிகை நாட்களிலும் கொடுக்கும் உணவுப்பலி: இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவும், கடாவோடு ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளோடு அவனவன் விருப்பத்திற்கேற்ற அளவு மாவும், ஒரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணெயும் ஒப்புக் கொடுத்தல் வேண்டும்.
12 தலைவன் தகனப் பலியையோ சமாதானப் பலிகளையோ ஆண்டவருக்கு விருப்பப் பலியாகச் செலுத்த வரும் போது, கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலை அவனுக்குத் திறந்து விட வேண்டும்; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்வது போலத் தகனப் பலியையோ சமாதானப் பலிகளையோ ஒப்புக் கொடுப்பான்; அவன் வெளியே போனதும் அவ்வாயில் மூடப்படும்.
13 அவன் நாடோறும் ஓராண்டு வயதுள்ள மாசற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை ஆண்டவருக்குத் தகனப் பலியாகத் தரவேண்டும்; அப்பலி காலை நேரத்தில் தான் செலுத்தப்படும்.
14 இவ்வாட்டுக் குட்டியுடன் நாடோறும் காலையில் ஒரு மரக்கால் மாவில் ஆறிலொரு பங்கையும், மாவோடு பிசைய ஒரு படி எண்ணெயில் மூன்றிலொரு பங்கையும் உணவுப் பலியாகப் படைக்கவேண்டும்; இது நாடோறும் ஆண்டவருக்கு என்றென்றைக்கும் ஒப்புக்கொடுக்க வேண்டிய பலியாகும்.
15 இவ்வாறு நாடோறும் காலையில் தகனப்பலியும், உணவுப்பலியாக மாவும் எண்ணெயும் ஒப்புக் கொடுக்கப் படல் வேண்டும்.
16 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தலைவன் தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு ஏதேனும் அன்பளிப்புத் தந்தால், அவனுடைய புதல்வர்களுக்கு அது சொந்தமாகும்; இவர்கள் உரிமைச் சொத்தாக அதனைக் கையாளுவர்.
17 ஆனால் தலைவன் தன் சொத்திலிருந்து எதையாவது தன் ஊழியனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தால், அது விடுதலையாண்டு வரையில் அவ்வூழியனுக்குச் சொந்தமாயிருக்கும்; பிறகு திரும்பத் தலைவனுக்குச் சொந்தமாகும்; அவனுடைய புதல்வர்கள் மட்டுமே தந்தையின் சொத்திலிருந்து பெற்ற அன்பளிப்பைத் தங்களுக்கே வைத்துக் கொள்ளலாம்.
18 தலைவன் குடிமக்களின் சொத்திலிருந்து எதையும் எடுக்கலாகாது; அவர்களுடைய உரிமையைப் பறிமுதல்செய்து எடுக்கலாகாது; நம் மக்களுள் எவனும் தன் உரிமையான சொத்துக்குப் புறம்பாக்கப்பட்டு இழக்காதிருக்க தலைவன் தன் புதல்வர்களுக்குத் தன் சொத்திலிருந்தே சொத்துரிமை கொடுக்கவேண்டும்."
19 பின் அந்த மனிதர் வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக, அர்ச்சகர்களின் அறைகள் இருந்த வடக்கு வரிசைக்கு என்னைக் கூட்டிவந்தார்; அவற்றின் மேற்குக் கோடியில் ஓர் இடம் இருந்தது.
20 அவர் என்னை நோக்கி: "பாவப் பரிகாரப்பலி, குற்றப் பரிகாரப்பலி, சாதாரண பலிப்பொருட்கள் ஆகியவற்றை அர்ச்சகர்கள் சமைக்கும் இடம் இதுவே; அவர்கள் அவற்றை வெளிப்பிராகாரத்திற்குக் கொண்டு போய்ப் பரிசுத்தத்தைப் பொதுமக்களுக்குக் கொடுத்துவிடலாகாது" என்றார்.
21 பிறகு அவர் என்னை வெளிப்பிராகாரத்திற்கு அழைத்துக் கொண்டுபோய், பிராகாரத்தின் நான்கு மூலைகளையும் சுற்றி வரச் சொன்னார்; பிராகாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சிறிய பிராகாரம் இருந்தது;
22 பிராகாரத்தின் நான்கு மூலையிலும் இருந்த சிறிய பிராகாரங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமும் உள்ளவை; நான்கும் ஒரே அளவானவை.
23 இந்தச் சிறிய பிராகாரங்கள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் ஒரு சுற்றுக்கட்டுச் சுவர் இருந்தது; அந்தச் சுவரின் அடியில் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தன.
24 அவர் என்னைப்பார்த்து: "பொதுமக்கள் இடும் பலிமிருகங்களின் இறைச்சியை ஆண்டவருடைய கோயிலில் ஊழியஞ் செய்வோர் சமைக்கின்ற சமையற்கட்டு இதுவே" என்றார்.
அதிகாரம் 47
1 அப்பொழுது அவர் என்னைக் கோயிலின் வாயிலுக்குத் திரும்பக் கூட்டி வந்தார்; இதோ, வாயிற்படியின் கீழிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துக் கிழக்கே ஓடிக்கொண்டிருந்தது; (ஏனெனில் கோயிலின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது). அந்தத் தண்ணீர் கோயிலுக்குத் தென்புறமாய்ப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.
2 பின்னர் அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் வெளியே கொண்டு போய், கிழக்கே நோக்கியிருக்கும் வெளி வாயில் வரை என்னைச் சுற்றி நடத்திக் கொண்டு வந்தார்; ஆங்கே, தண்ணீர் தென்புறத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
3 அவர் தமது கையில் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்குப் பக்கமாய் நடந்து ஆயிரம் முழம் அளந்தார்; பிறகு என்னைத் தண்ணீர் வழியாய் நடத்திச் சென்றார்; தண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது.
4 மறுபடியும் அவர் ஆயிரம் முழம் அளந்தார்; பிறகு தண்ணீரைக் கடக்கும்படி எனக்குச் சொன்னார்; அங்குத் தண்ணீர் முழங்கால் அளவு ஓடிற்று.
5 மீண்டும் அவர் ஆயிரம் முழம் அளந்தார்; தண்ணீரைக் கடக்கும்படி கூறினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவு இருந்தது; இன்னும் ஆயிரம் முழம் அளந்தார்; அங்கே என்னால் கடக்க முடியாத பெரு வெள்ளமாய் இருந்தது; ஏனெனில் வெள்ளம் பெருகி இருந்தது; நீந்திப்போகுமளவுக்கு வெள்ளம் ஓடிற்று; ஆனால் யாரும் அதை நடந்து கடக்க முடியாது.
6 அவர் என்னை நோக்கி, "மனிதா, இதைக் கண்டாயா?" என்றார்; பின் ஆற்றங்கரையோரமாய் என்னைத் திரும்ப நடத்திச் சென்றார்.
7 நான் திரும்பிப் போன போது, ஆற்றின் இரு கரைகளிலும் மிகத் திரளான மரங்களைக் கண்டேன்;
8 அவர் என்னை நோக்கி, "இந்தத் தண்ணீர் கிழக்குப் பகுதி நோக்கிப் பாய்ந்து, அராபா சமவெளிக்கு ஓடிச்சேரும்; கடலிலுள்ள நீரோடு இது போய்க் கலக்கும்போது, தண்ணீர் நல்ல தண்ணீராகத் தெளியும்.
9 இந்த ஆறு எங்கெல்லாம் பாய்கிறதோ அங்கெல்லாம் ஊர்வன யாவும் பிழைத்திருக்கும்; அங்கே திரளான மீன்கள் இருக்கும்; ஏனெனில் கடல் நீர் தெளிந்து நல்ல நீராகும்படியே இந்த நீர் அங்கே பாய்கிறது; ஆகவே இந்த ஆறு ஓடிப்பாயும் இடங்களில் எல்லாம் உயிர்கள் வாழும்.
10 இந்த ஆற்றிலே செம்படவர் வந்து மீன் பிடிப்பார்கள்; என்காதி என்னும் ஊர் துவக்கி என்காலீம் என்னும் ஊர் வரையில் வலைகள் உலர்த்தப்படும் இடமாயிருக்கும்; பெருங்கடலிலுள்ளவற்றைப் போலப் பற்பல வகையான மீன்கள் இந்தத் தண்ணீரில் இருக்கும்.
11 ஆயினும் அதைச் சார்ந்த உளையான பள்ளங்களிலும், சதுப்புப் பகுதிகளிலும் தண்ணீர் தெளியாது; ஏனெனில் அங்கே உப்பளங்கள் கட்டப்படும்.
12 வெள்ளத்தின் ஓரமாய், அதன் இருபுறத்துக் கரைகளிலும் எல்லா வகையான பழ மரங்களும் வளரும்; அவற்றின் இலைகள் உதிர்ந்துபோகா; கனிகள் அற்றுப்போகா; அவற்றுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த இடத்திலிருந்து புறப்பட்டு வருவதால், அம்மரங்கள் மாதந்தோறும் புதிய கனிகளைக் கொடுக்கும்; அவற்றின் பழங்கள் உணவாகவும், இலைகள் மருந்தாகவும் பயன்படும்."
13 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீங்கள் இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த நாட்டைப் பிரிந்து உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
14 உங்கள் தந்தையர்க்குக் கொடுப்பதாக நாம் ஆணையிட்டு வாக்களித்த நாடு இதுவே; இது உங்களுக்கு உரிமைச் சொத்தாய்க் கிடைக்கும்; நீங்கள் இதனைச் சரிபங்காகப் பிரித்து உரிமையாக்கிக் கொள்வீர்கள்.
15 நாட்டின் எல்லைகளாவன: வடக்கே பெருங்கடல் துவக்கி எத்தாலோன் வழியாய்ச் சேதாதா ஊருக்கு வரும் வரைக்கும்,
16 ஏமாத், பெரோத்தா, தமஸ்குவின் எல்லைக்கும் ஏமாத் எல்லைக்கும் இடைப்பட்ட சபாரீம், ஆவுரானின் எல்லைக்கடுத்த திக்கோனின் வரைக்குமாகும்.
17 அவ்வாறே கடலிலிருந்து ஏனோன் வரை- இது தமஸ்குவின் எல்லையில் உள்ளது- அதன் எல்லை உள்ளது; ஏமாத்தே வடக்கு எல்லையாகும்; இதுவே வடபாகம்.
18 கிழக்கு மாநிலமானது ஆவுரான் நடுவிலிருந்தும் தமஸ்கு நடுவிலிருந்தும் காலாத் நடுவிலிருந்தும் இஸ்ராயேல் நாட்டினின்றும் புறப்பட்டுக் கிழக்குக் கடலில் கலக்கும் யோர்தான் நதி வரையில் பரவியிருக்கும்; கீழ்க்கடலோரத்தையும் சேர்த்து அளந்து கொள்ளுங்கள்.
19 தெற்கு மாநிலமானது: ஒரு பக்கத்தில் தாமாரிலிருந்து சச்சரவு நீர் எனப் பொருள்படும் காதேஸ் என்னும் இடம் வரையிலும், மறுபக்கத்தில் எகிப்து நதி முதல் பெருங்கடல் வரையிலும் பரவியிருக்கும்; இதுவே தென்பகுதி.
20 மேற்கு மாநிலமானது: பெருங்கடல் துவக்கி நேர் வழியாய் ஏமாத்துக்குச் சேருமட்டும் இடைப்பட்ட நிலமாகும்; இதுவே மேற்குப் பகுதி.
21 இஸ்ராயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த நாட்டை உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வீர்கள்.
22 உங்களுக்கும், உங்கள் நடுவில் குடியேறி மனைவி மக்களோடு வாழும் அந்நியர்களுக்கும் இந்த நாட்டை உரிமைச் சொத்தாகப் பிரித்துக்கொள்வீர்கள்; அவர்களை, பிறப்பால் இஸ்ராயேல் இனத்தவராய் இருப்பவர்களுக்கு நிகராகக் கருதுங்கள்; இஸ்ராயேல் கோத்திரங்களின் நடுவில் உங்களோடு சொத்துரிமை பாராட்டும் பங்காளிகளாய் இருப்பார்கள்.
23 அந்நியன் எந்தக் கோத்திரத்தாரோடு வாழ்கிறானோ, அந்தக் கோத்திரத்தின் பாகத்தில் அவனுக்குப் பங்கு கொடுக்கக் கடவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
அதிகாரம் 48
1 "கோத்திரங்களின் பெயர்கள் இவையே: வடக்கு எல்லை துவக்கி ஆமாத்துக்குப் போகும் வழிப்போக்கில் எத்தாலோன் வழி ஓரத்துக்கும், ஏனால் எல்லையிலிருந்து ஏமாத்துக்குப் போகும் திசையில் வடக்கிலிருக்கும் தமஸ்குவின் எல்லைக்கும் இடைப்பட்ட நாடு, கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் தாண் கோத்திரத்துக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
2 தாணின் எல்லையருகே கிழக்கு முதல் கடல் வரையில் உள்ள நாடு ஆசேருக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
3 ஆசேருடைய எல்லையருகே கிழக்கு முனை தொடங்கிக் கடல் முனை மட்டும் உள்ள நாடு நெப்தலி கோத்திரத்துக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
4 நெப்தலி எல்லையருகே கிழக்கு முனை முதல் கடல் முனை வரை உள்ள நாடு மனாசே கோத்திரத்துக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
5 மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை முனை தொடங்கிக் கடல் வரை உள்ள நாடு எப்பிராயீமுக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
6 எப்பிராயீமின் எல்லைக்கடுத்தாற் போலக் கீழ்த்திசை முதல் கடல் நாடு வரை உள்ள நாடு ரூபனுக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
7 ரூபனுடைய எல்லையருகே கிழக்கு முனை முதல் கடலோரம் வரை உள்ள நாடு யூதாவுக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
8 யூதாவின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கிக் கடலோரம் வரைக்கும் உள்ள நாடு நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டிய பகுதி; அது மற்ற ஒவ்வொரு பங்கு போலக் கடலோரம் வரை நீளத்திலும் அகலத்திலும் இருபத்தையாயிரம் கோலாக இருக்கும்; பரிசுத்த இடம் அதன் நடுவில் இருக்கும்.
9 ஆண்டவருக்கு நீங்கள் ஒதுக்கிக் கொடுக்கவேண்டிய பாகம் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரம் கோல் அகலமும் உள்ளதாயிருக்கும்.
10 இந்தப் பரிசுத்த பங்கு- அதாவது வடக்கே இருபத்தையாயிரம் கோல் நீளம், மேற்கே பதினாயிரம் கோல் அகலம், கிழக்கே பதினாயிரம் கோல் அகலம், தெற்கே இருபத்தையாயிரம் கோல் நீளம் கொண்ட அந்த நிலம் பரிசுத்த இடத்தின் அர்ச்சகர்களுக்கு உரியது; ஆண்டவருடைய பரிசுத்த இடம் அதன் நடுவில் இருக்கும்.
11 இஸ்ராயேல் மக்கள் வழிதவறி நடந்தபோதும், லேவியர் கூட நெறி தவறி நடந்த போதும், வழி தவறாமல் நம்முடைய நீதி முறைமைகளைக் கடைப்பிடித்திருந்த அர்ச்சிக்கப்பட்ட குருக்களாகிய சாதோக்கின் மக்களுக்கு இந்தப் பகுதி உரியதாகும்,
12 நாட்டின் பகுதிகளிலெல்லாம் சிறந்த பகுதியான இந்தப் பரிசுத்த இடமே அவர்கள் பங்காகும்; இது லேவியர்களின் எல்லையருகே இருக்கும்.
13 அர்ச்சகர்களுடைய எல்லைக்கு அடுத்தாற்போல லேவியர்களுக்கு இருக்க வேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பதினாயிரங் கோல் அகலமும் இருக்கும்; முழு நீளம் இருபத்தையாயிரம் கோலும், முழு அகலம் பதினாயிரம் கோலும் இருக்க வேண்டும்.
14 அவர்கள் அந்நிலத்திலே ஒன்றையும் விற்கலாகாது; ஒன்றையும் மாற்றலாகாது; ஒன்றையும் மற்றவர்களுக்குக் கொடுக்கலாகாது; ஏனெனில் அவை அனைத்தும் ஆண்டவருக்குப் பரிசுத்தமானவை என அர்ப்பணிக்கப்பட்டவை.
15 இருபத்தையாயிரம் கோல் நீளமும், ஐயாயிரம் கோல் அகலமும் உள்ள மீதி இடம் பொதுவானது; நகரத்தின் குடியிருப்புக்கும், இதன் வெளி நிலம் தோட்டங்களுக்கும் விடப்படும்; நகரம் அதன் நடுவில் கட்டப்படும்.
16 அதன் அளவுகள்: வடக்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், தெற்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், கிழக்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், மேற்கே நாலாயிரத்து ஐந்நூறு கோலாக இருக்கும்.
17 நகரத்தின் வெளி நிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாய் இருக்க வேண்டும்.
18 பரிசுத்த நிலத்துக்கு எதிரே மீதியாயிருக்கும் நீளத்தில் கிழக்கே பதினாயிரம் கோலும், மேற்கே பதினாயிரம் கோலுமான பகுதி பரிசுத்த நிலத்தோடு ஒட்டியிருக்கும்; அதன் வருமானம் நகரத்தில் ஊழியம் செய்வோரின் உணவுக்காகும்.
19 நகரத்தில் ஊழியம் செய்ய வேண்டியவர்கள் எல்லா கோத்திரங்களிலிருந்தும் நியமிக்கப்படுவார்கள்.
20 மானிய நிலமனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும் இருபத்தையாயிரம் கோல் அகலமுமாய் இருக்க வேண்டும்; அதிலே பரிசுத்த இடத்தின் பங்கும், நகரத்துக்குரிய பங்கும், இவ்விரு பங்குகளாகப் பிரிக்கப்படும்.
21 பரிசுத்த இடத்திற்கும் நகரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கின் நான்கு புறத்திலும்- கீழ்த்திசை முனை வரையில் இருபத்தையாயிரம் கோலும், கடல் திசையில் கடல் முனை வரையில் உள்ள இருபத்தையாயிரம் கோலும் போக, மீதியான இடமெல்லாம் தலைவன் பங்காகும்; பரிசுத்த இடத்தின் பங்கும், கோயிலின் தூயகமும் அதன் நடுவிலிருக்கும்.
22 தலைவன் பங்கின் நடுவிலிருக்கும் லேவியர்களின் பகுதியும், நகரத்துக்குக் குறிக்கப்பட்ட பகுதியும் போக, யூதா, பென்யமீன் இவர்களுடைய எல்லைகளுக்குட்பட்ட நிலங்கள் தலைவனுக்குச் சேர வேண்டும்.
23 மற்ற கோத்திரங்களின் பங்குகளாவன: கீழ்த்திசை துவக்கி மேற்றிசை வரை பென்யமீனுக்கு ஒரு பங்கு;
24 பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை வரையில் சிமியோனுக்கு ஒரு பங்கு;
25 சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை முதல் மேற்றிசை மட்டும் இசக்காருக்கு ஒரு பங்கு;
26 இசக்காரின் எல்லையருகே கிழக்கு முதல் மேற்குவரை சாபுலோனுக்கு ஒரு பங்கு;
27 சாபுலோன் எல்லையருகே கிழக்கு முதல் கடலோரம் ஈறாக காத் என்பவனுக்கு ஒரு பங்கு;
28 காத் என்பவனுடைய பங்கின் தெற்கு எல்லை தாமாரிலிருந்து காதேசில் உள்ள மெரிபா தண்ணீர் வரையிலும், பெருங்கடல் வரையிலும் போகும்.
29 இவ்வாறு தான் இந்த நாட்டில் உங்களுக்குரிய பங்குகளை இஸ்ராயேல் கோத்திரங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
30 "நகரத்தினின்று வெளியேறும் வழிகள்: நாலாயிரத்து ஐநூறு கோல் உள்ள வடபுறத்தில்,
31 நகரத்தின் வாயில்கள் மூன்று உள்ளன. இவை இஸ்ராயேல் கோத்திரங்களின் பெயர்களையே பெறும்: ரூபனின் வாயில் ஒன்று, யூதாவின் வாயில் ஒன்று, லேவியின் வாயில் ஒன்று.
32 நாலாயிரத்து ஐநூறு கோல் உள்ள கீழ்த்திசையில் மூன்று வாயில்கள்: யோசேப்பின் வாயில் ஒன்று, பென்யமீன் வாயில் ஒன்று, தாண் வாயில் ஒன்று.
33 நாலாயிரத்து ஐநூறு கோல் அளவுள்ள தென்திசையில் மூன்று வாயில்கள்: சிமியோனின் வாயில் ஒன்று, இசக்காரின் வாயில் ஒன்று, சாபுலோன் வாயில் ஒன்று.
34 நாலாயிரத்து ஐநூறு கோல் அளவுள்ள மேற்றிசையில் மூன்று வாயில்கள்: காத் வாயில் ஒன்று, ஆசேர் வாயில் ஒன்று, நெப்தலி வாயில் ஒன்று.
35 அந்நகரின் சுற்றளவு பதினெண்ணாயிரம் கோல். அந்நாள் முதல் நகரம் 'ஆண்டவர் அங்கே இருக்கிறார்' என்றே பெயர் பெறும்."