“நீல அணி”
கடவுளுக்கெதிரான பாவம் என்று வந்ததோ, அன்று முதல் உலகம் அமைதியை இழந்தது. ஆபேலின் கொலை முதல் அணு குண்டின் அழிவு வரை எல்லாம் பாவத்தின் தண்டனையே. இக்காலத்தில் பாவம் தொகையிலும், வகையிலும் மிதமிஞ்சி விட்டது. இதன் விளைவுதான் கம்யூனிசம். கம்யூனிசம் மனந்திரும்பும் வரை உலகில் சமாதானம் இராது. மரியாயின் மாசற்ற இருதயத்தைக் கொண்டு பாவத்தைக் குறைத்து ஜெப தவத்தால் கம்யூனிஸத்தை மனந்திருப்பி, சமாதானத்தை உலகிற்கு அளிப்பதே பாத்திமா செய்தி. அதனை நிறைவேற்றவே நீல அணி எழுந்தது.
நீல அணி உலக சமாதானத்துக்கான பரலோகத்திட்டம். இத்திட்டம் மிக எளியது. எவ்வளவு எளியதென்றால், பலர் அதை “இவ்வளவுதானா?” என்று விட்டு விடுகின்றனர். ஆனால் நீல அணித் திட்டம் எண்ணற்ற ஞானப் பலன்களை ஆன்மாவிற்கு அளிப்பதோடு மன அமைதியையும் கொடுத்தது. கம்யூனிஸ்ட் ரஷ்யாவை மனந் திருப்பி உலக சமாதானத்தைக் கொடுக்கக் கூடிய சக்தி நீல அணி யிடம் இருந்தது.
பாத்திமா நீல அணி ஓர் அழைப்பு; ஓர் அறைகூவல்; அதை சிறுமி ஜஸிந்தா இவ்வாறு கூறினாள்: (லூஸியாவைப் பார்த்து:)
“நீ எல்லோரிடமும் சொல்: மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக கடவுள் வரப்பிரசாதங்களைக் கொடுக்கிறார் என்று. மரியாயிடம் வரப்பிரசாதங்களைக் கேட்கும்படி கூறு. சேசு, தம் திரு இருதயத்துக்கு இணையாக மாமரியின் மாசற்ற இருதயமும் வணங்கப்பட வேண்டும் என விரும்புகிறார். மரியாயின் மாசற்ற இருதயத்திடம் சமாதானத்திற்காக மன்றாடும்படிச் சொல். ஏனென்றால் மாமரியிடமே உலக சமாதானத்தை ஆண்டவர் ஒப்படைத்துள்ளார்.”
உரோமைக் கர்தினால் கொன்ஸ்தாந்தினி என்பவர், “நீல அணி யின் இந்த அழைப்பை உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களுக்கும் விரிவு படுத்துவது கிறீஸ்துவின் வெற்றிக்கு அவசியம்” என்று கூறியுள்ளார்.