நரகவாசிகள் அவலட்சணமுள்ள பசாசுகளைக் கண்டு, இடைவிடாமல் நடுங்கிப் பயப்படுவார்கள். மேலும் அந்தப் பசாசுகள் அவர்களை ஓயாமல் நிந்தித்து, சபித்து, அடித்து, கொடூரமாய் வாதித்து வருவதால், பாவிகள் சொல்லிலடங்காத வேதனை அனுபவிப்பார்கள். நரகப் பாவிகளைத் துன்புறுத்துவது பசாசுகளுக்கு உரியதென்று வேதாகமம் சொல்கிறது (சர். பிர. 39:33, 34).
சர்வேசுரனைப் பகைக்கும் இந்த நீச அரூபிகள், அவர்பேரில் தங்கள் கோபமும் பகையும் செல்லாதென்று கண்டு, அவருடைய சாயலாயிருக்கும் மனிதன்பேரில் தங்கள் பகையைக் காட்டும்.
ஒரேயொரு பசாசைக் கண்ட அர்ச். சியெனா கத்தரீனம்மாள், "அந்தச் சமயத்தில் சர்வேசுரன் அற்புதமாய் என் உயிரைக் காப்பாற்றியிராவிட்டால், நான் பயத்தினால் தப்பாமல் இறந்து போயிருப்பேன்" என்று எழுதினாள் என்றால், கோடிக்கணக்கான பசாசுக்களின் மத்தியில் தொடர்ந்து இறந்து கொண்டும், அதன்பின் துன்பப்படுவதற்காகவே மீண்டும் உயிர் பெற்றுக் கொண்டுமிருக்கிற சபிக்கப்பட்ட பாவியின் நிலை என்னவாயிருக்கும்!
அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் தொடர்ந்து, “நரகத்தை நாம் காண்பதாகக் கற்பனை செய்து கொள்வோம். உங்களால் முடிந்தவரை அதிக பயங்கரமான காரியங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்: ஒரு பயங்கரம் நிறைந்த, இருண்ட தீச்சுவாலைகள் நிரம்பிய குகை. கந்தகம், பசாசுக்கள், பறவை நாகங்கள், நெருப்பு, வாள்கள், அம்புகள், புழுக்கள், தாங்க முடியாத அவநம்பிக்கையோடு அலறித் துடிக்கும் சபிக்கப்பட்ட ஆன்மாக்கள் என்று எல்லாவற்றையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்: “இதெல்லாம் உண்மையான நரகத்திற்கு முன் ஒன்றுமேயில்லை” என்று சொல்லிக்கொள்ளுங்கள்...
அந்தத் திகில் நிறைந்த பூமிக்கடியிலுள்ள குகையில் உலகின் அசுத்தங்கள் எல்லாம் ஒன்றுகூட்டப்பட்டு, நிரப்பப்பட்டுள்ளன, காற்று வர இடமில்லை. இந்தக் காட்சியின் கடுமையைப் பசாசுக்களின் தோற்றம் இன்னும் அதிகரிக்கிறது; ஒரு பரிசுத்த துறவி ஒரு முறை ஒரு மனிதனின் இறப்பின்போது, இரண்டு இராட்சதப் பசாசுக்களைக் கண்டு எந்த அளவுக்கு நடுங்கிப் போனார் என்றால், மீண்டும் அவற்றைக் காண்பதற்குப் பதிலாக, பொதுத் தீர்வையின் நாள் வரை, உருகிய உலோகத்தாலும், கந்தகத்தாலும் ஆன நெருப்பின் மீது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினார்” என்கிறார்.
பாப்பரசரான அர்ச். பெரிய கிரகோரியார் பின்வரும் வரலாற்றை விவரிக்கிறார்: “க்றீசோரியோஸ் என்னும் பிரசித்தி பெற்ற ஒரு மனிதன் இருந்தான். இவன் பெரும் செல்வந்தனாகவும், தன் இழிவான ஆசாபாசங்களை எப்போதும் திருப்தி செய்யத் தேடுபவனாகவும் இருந்தான். ஆடம்பரமாக விருந்தாடுவான். ஏழைகளுக்கு உதவ மாட் டான். தன் சரீர இச்சையைத் தீர்த்துக் கொள்வதில் எந்த மனவுறுத்தலுக்கும் இடம் தந்ததில்லை. பிறர் பொருளை அபகரிக்க எப்போதும் பேராசை கொண்டு திரிந்தான். தேவசிநேகமும், பிறர்சிநேகமும் அவனிடம் ஒரு போதும் இருந்ததேயில்லை.
ஆனால் இந்த மனிதனின் பல பாவங்களுக்கு ஒரு முடிவு கட்ட கடவுள் சித்தங்கொண்டார். ஆகவே உயிருக்கு ஆபத்தான நோய் ஒன்றை அவர் அவனுக்கு அனுப்பினார். அவனுடைய வாழ்வில் கடைசி நேரம் வந்தபோது, அவனுடைய கண்கள் இன்னும் அகலத் திறந்திருக்க, அவன் தன் முன்பாக அச்சமூட்டும், இருண்ட முகமுள்ள அசுத்த அரூபிகளைக் கண்டான். அவை அவனை நரக வாசலுக்கு இழுத்துச் செல்லத் தயாராக அங்கு வந்திருந்தன. அவற்றைக் கண்டு அவன் நடுங்கத் தொடங்கினான். வியர்வை வெள்ளமாகப் பொங்கி வழிய, முதல் தடவையாக அவன் கடவுளை நோக்கி, தனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தருமாறு ஜெபித்தான்.
அதன்பின் அவன் மாக்ஸிமோஸ் என்ற தன் மகனை அழைத்தான். (இந்த மாக்ஸிமோஸ் பிற்காலத்தில் என்னைப் போலவே ஒரு துறவியாக இருந்தார் என்று எனக்குத் தெரியும்.) “மாக்ஸிமோஸ், என் மகனே, என்னிடம் வா. நான் ஒருபோதும் உனக்குத் தீமை செய்ததில்லை. இப்போது உன் விசுவாசத்தின் பலத்தைக் கொண்டு எனக்கு உதவு” என்றான்.
அங்கிருந்தவர்களில் யாரும் அந்தத் தீய அரூபிகளைக் காண முடியவில்லை என்றாலும், அந்த மனிதன் நடுக்கத் தோடு தன் தலையை இடமும் வலமுமாகத் திருப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவை அங்கே இருந்தன என்று நம்பினார்கள். அவன் எங்கே திரும்பினாலும், அங்கே அவை அவன் முன்பாக வந்து நின்றன.
ஆகவே அவற்றிடமிருந்து தப்பிக்க எந்த வாய்ப்பு மில்லை என்று அவநம்பிக்கைக்கு உள்ளான அந்த மனிதன், “குறைந்தபட்சம் நாளைக் காலை வரையிலாவது எனக்குத் தாருங்கள்” என்று அலறினான். இந்த அலறல்களோடேயே அவனுடைய ஆத்துமம் உடலை விட்டுப் பிரிந்தது.
அவன் கண்டதெல்லாம் அவனுடைய நன்மைக்காக அல்ல, நம் நன்மைக்காகவே என்பது தெளிவு.”
நம் மரணத்தின்போது நம்மை அழைத்துச் செல்ல வரப் போவது நம் ஆண்டவரும், தேவமாதாவுமா, அல்லது பசாசுக்களா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது!
‘பத்திச்சுவாலகக் கன்னிகையின் உரையாடல்” (The Dialogue of Seraphic Virgin) என்ற நூலில் எழுதியுள்ள படி கடவுள் அர்ச். சியெனா கத்தரீனம்மாளிடம் கூறிய வார்த்தை களைக் கேளுங்கள்:
‘பசாசு பாவிகளிடம், “மரணத் தண்ணீருக்காகத் தாகமாயிருக்கிறவன் என்னிடம் வரட்டும், நான் அதை அவனுக்குத் தருவேன்” என்கிறது!
மிகவும் அன்புள்ள மகளே, மிகக் கொடிய விதமாய் என்னை நோகடிக்கிற ஆன்மாக்களை வாதிப்பதற்கு பசாசு என் நீதியின் கருவியாக இருக்கிறது. இவ்வாழ்வில் என் சிருஷ்டிகளை சோதிக்கவும், அவர்களைத் தாக்கவும் நான் அவனை நியமித்திருக்கிறேன். இதை நான் செய்துள்ளது அவர்கள் வெல்லப்பட வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் சாத்தானின் மீது வெற்றி கொண்டு, தங்கள் புண்ணிய நடத்தையை எண்பித்து, என்னிடமிருந்து வெற்றியின் மகிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
அவன் உன்னை சோதிக்க, வெறுப்பினால் அல்ல, அன்பினாலேயே நான் அனுமதிக்கிறேன்... ஆகவே அவன் நரகத்தில் சபிக்கப்பட்டவர்களை வாதிப்பதிலும், இவ்வுல கில், ஆத்துமத்தில் புண்ணியப் பயிற்சிக்கு ஆன்மாக்களைத் தூண்டவும் எனக்கு ஊழியனாக இருக்கிறான் என்பதை நீ காண்கிறாய். உன்னிலுள்ள புண்ணியத்தை எண்பிப்பது அவனது நோக்கமல்ல, ஏனெனில் அவனிடம் அன்பு என்பது அணுவளவும் இல்லை. மாறாக உன்னிடமிருந்து அதை அகற்றவே அவன் போராடுகிறான். ஆனால் நீ அவனோடு ஒத்துழைக்காத வரைக்கும், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற அவனால் முடியாது. (நீ சற்றும் விட்டுக் கொடுக்காமல் என் பலத்தைக் கொண்டு அவனை எதிர்த்து நின்றால், அவன் உன்மீது வெற்றி பெற வாய்ப்பேயில்லை).”
தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...