விண்ணுலகிலிருந்து பல உண்மைகளை பாத்திமா காட்சி பெற்ற குழந்தைகள் உணர்த்தப்பட்டார்கள். அவற்றுள் சிலவற்றை இரகசியமாக வைத்திருக்கும்படி கட்டளையும் பெற்றார்கள். தங்கள் பெற்றோரிடம் கூட அந்த இரகசியங்களை அக்குழந்தைகள் வெளியிடவில்லை. உயிருக்கே ஆபத்து என உணர்ந்த போதும் கூட அவர்கள் தங்கள் உயிரை இழக்கத் துணிந்தார்களேயன்றி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரகசியங்களை வெளியிடவில்லை.
இத்தனை பத்திரமாகக் காக்கப்பட்ட பாத்திமாவின் இரகசியங்கள் கடவுளின் சித்தப்படி ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன.
இரகசியங்கள் என்றால் அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை: அவற்றை அறிய வருகிறவர்கள் அவற்றைக் கேட்டபின் அதன்படி நடக்க வேண்டும் என்ற கடமையைச் சுமத்தக் கூடியவை.
முதல் இரகசியம்
லூஸியாவின் வார்த்தைகளையே இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். ஜூன் மாதம் (1917) 13-ம் நாள் நடந்த இரண்டாம் காட்சி பற்றி லூஸியா இவ்வாறு கூறியுள்ளாள்:
“தேவ அன்னை தன் கரங்களை விரித்து, அவர்களைச் சூழ்ந்திருந்த அந்தப் பேரொளியை இரண்டாம் தடவையாக எங்களுக்குள் பாயவிட்டார்கள். அந்த ஒளியில் நாங்கள் சர்வேசுரனுக்குள் மூழ்கியிருக்கக் கண்டோம்.
ஜஸிந்தாவும், பிரான்சிஸும் விண் நோக்கிச் சென்ற ஒளியிலும், பூமியின் மீது பாய்ந்த ஒளியில் நானும் இருந்தோம். நம் அன்னையின் வலது உள்ளங்கையின் முன் முட்களால் சூழப்பட்ட ஒரு இருதயம் இருந்தது. அம்முட்கள் அவ்விருதயத்தை ஊடுருவிச் சென்றன.
மனுக்குலத்தின் பாவங்களால் நிந்திக்கப்படும் மரியாயின் மாசற்ற இருதயம் அது என்றும், இவற்றிற்குப் பரிகாரம் செய்யப்பட அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் உணர்ந்தோம்.
ஜூன் மாதம் மாதா ஒரு இரகசியம் கூறியுள்ளார்கள் என்று நாங்கள் கூறியது இதைப் பற்றித்தான். அச்சந்தர்ப்பத்தில் இதை இரகசியமாக வைத்திருக்கும்படி மாதா எங்களுக்குக் கட்டளை தரவில்லை. ஆனால் இதை இரகசியமாக வைத்திருக்கும்படி சர்வேசுரனால் ஏவப்பட்டதை உணர்ந்தோம்.”
இரண்டாம் இரகசியம்
ஜூலை மாதக் காட்சியில்தான் இரண்டாம், மூன்றாம் இரகசியங்கள் கூறப்பட்டன. இரண்டாம் இரகசியம் நரகக் காட்சியையும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ரஷ்யாவை ஒப்புக் கொடுத்தலையும், முதல் சனிக்கிழமை பரிகார நன்மை வாங்கி நிந்தைப் பரிகாரம் செய்தலையும் உள்ளடக்கியுள்ளது.
இவ்விரு இரகசியங்களையும் பரலோக உத்தரவு பெற்று, ஞான அதிகாரிகளின் கட்டளைக்கு இணங்க, லூஸியா வெளியிட்டுள்ளாள். எனவே இவற்றை அறிய வந்துள்ளோம்.
மூன்றாம் இரகசியம்
இரண்டாம் இரகசியம் கூறப்பட்டபோதே மூன்றாம் இரகசியமும் அக்குழந்தைகளிடம் கூறப்பட்டது. அதை வெளியிட இன்னமும் கடவுளுக்குச் சித்தமாகவில்லை. அது எங்கே உள்ளது என்பது பற்றி கர்தினால் ஒட்டாவியானி 1967, பெப்ருவரி 11-ம் நாள் பாத்திமா காட்சியின் 50-வது ஆண்டு ஜூபிலியின் போது கூறியதை இங்கு அப்படியே அவருடைய வார்த்தைகளில் தருகிறோம்:
“பாப்பரசரிடம் தெரிவிக்கும்படி தேவதாய் லூஸியாவிடம் கூறியதை அவள் ஒரு தாளில் போர்த்துக்கீசிய மொழியில் எழுதி யுள்ளாள்.
...பாத்திமா இரகசியம் அடங்கிய உறை லெயிரியா மேற்றிராணியார் கையில் கொடுக்கப்பட்டது. அதை அவர் வாசிக்கலாம் என்று லூஸியா கூறியிருந்தாள். ஆயினும் அவர் அப்படிச் செய்ய வில்லை. அந்த இரகசியத்தை மரியாதையுடன் காப்பாற்ற அவர் விரும்பினார். ஒரு வேளை பாப்பரசர் மீதுள்ள மரியாதையின் அடையாளமாக அவர் அவ்வாறு நடந்திருக்கலாம்.
அவர் அதை அப்போது பாப்பரசரின் ஸ்தானாதிபதியாயிருந்த அதி சங். சென்டோவிடம் ஒப்படைத்தார். அதி சங். சென்டோ அதைக் கவனமுடன் உரோமை விசுவாச சத்தியங்களின் சங்கத்திற்கு அனுப்பினார். அந்த உறை எப்போதும் மூடப்பட்டே இருந்தது. பின்னர் அது பாப்பு 23-ம் அருளப்பரிடம் கொடுக்கப்பட்டது. பாப்பரசர் உறையைத் திறந்தார், படித்தார், அது போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அதை முழுவதும் தாம் கண்டுபிடித்ததாக பாப்பரசர் என்னிடம் கூறினார்.
பின் பாப்பு அதை தாமே இன்னொரு உறைக்குள் போட்டு, அதை முத்திரையிட்டு, உள்ளே யாரும் எதையும் காண முடியாத அளவு கிணறு போல் இருண்ட இரகசிய பீரோக்களில் ஒன்றினுள் சேமித்து விட்டார். எனவே பாத்திமா இரகசியம் இப்பொழுது எங்கே இருக்கிறது என்று கூறுவது மிகக் கடினம்.
ஆனால் இதில் முக்கியமானது அவ்விரகசியத்திலிருந்து நாம் உணர வேண்டிய செய்திதான். இந்த இரகசியம் பாப்பரசரைச் சார்ந்தது. அவருக்கே அது கூறப்பட்டது. அவருக்குத்தான் அந்த இரகசியம் முகவரி பெற்றிருந்தது.
“இரகசியத்தை உலகிற்கு அறிவிக்கும் தருணம் இதோ வந்துள்ளது” என்று முகவரி பெற்ற பாப்பரசர் தீர்மானிக்காத வரையிலும், அவருடைய ஞானத்தின்படி அது இன்னும் இரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விருப்பத்தை நாமும் திருப்தியோடு ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் நான் முன்பு கூறியது போல், லூஸியா அந்த இரகசியத்தைப் பாப்பரசருக்குக் கூறும்படி கட்டளை பெற்றது போலவே உலகத்திற்குப் பொதுவான, செபம், தவம் என்னும் இரு சொற்களிலும் அடக்கியுள்ள செய்தியைக் கூறும்படியும் உத்தரவு பெற்றாளாதலால், இந்தச் செய்தியின் கருத்துப்படி நம்முடைய வாழ்வையும் நம் செயல்களையும், நம் செயல்களையும் அமைத்துக் கொள்ள நாம் முன்வருவதே காரியமாகும்.”
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.