திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளது கிரீட தாரணத்தின் போது பாடிய பதினான்கு சீரிரட்டை ஆசிரிய விருத்தம்

வானாடு செல்வமே, வரையாடு தீபமே
வான்மக ராஜேஸ்வரியே,
வற்றாத கேணியே, பரலோக ஏணியே
வாடாத நறிய பூவே.
மறையவர் இன்பம் நீ மறைக்கொரு பிம்பம் நீ
மாசிலா வடிவம் நீயே.
மன்னவர் மகுடம் நீ மகிதல சிகரம் நீ
மகத்துவ சொரூபம் நீயே.

தேனாடு மலரடி திருமந்த்ர நகரினைக்
திருக்கோவில் கொண்ட நாளாய்
செய்தமா நன்மையை எழுதவோ நினைக்கவோ
செப்பவோ முடியாதம்மா
செய்ந்நன்றி கொன்றவர் சிறுதொழில் வஞ்சகர்
தீயவர் நினக்கிழைத்த
செயலரும் நிந்தையை நினைக்கவுந் துடிக்குதே
திருவுளம் சகித்த தென்னோ.


மானாடு நின்விழா நிறைவுற்ற தினமாறு
மதிக்குமா வணி நாள் பத்து
வளரிருட் போதுநிற் பதமுறை யலகையின்
வலைப்படு கயவ ரந்தோ
வல்லபீ நினதுடுச் சிரமிசை துலங்குமா
மணிமுடி கவர்ந்து செல்ல
மைந்தரும் மாதரும் மனமொடிந் திருகணீர்
வடித்தவர் தொழுதல் கண்டு.

மீனாடு நின்முடி அலையோரங் காணவே
மிகு புதுமை செய்த தாயே
மிளிர்வடி விழந்ததை யியல்வரை திருத்தியுன்
வியன் சிர ஸமைக்க வேண்டி
விதித்தமா மகுடமிது விருப்பமுட னேற்றருள்
விரிமழை பொழிவா யம்மா
மிகுமந்த்ர நகர்தந்த திருமந்த்ர முறைசந்த
மரிய தஸ்நேவி ஸனையே.