தாராள குணம், ஈகைக் குணம், இரக்கம், தயை ஆகியவற்றைக் கொண்டு உலோபித்தனத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும். “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத். 5:7).
உதாரகுணம் இருதயத்தின் ஆரோக்கிய நிலையை வெளிப்படுத்துகிறது. அது அதிகமான தேவ சிநேகத்திற்கும், மன சமாதானத்திற்கும், பிறரைப் பற்றிய சிந்தனைக்குமான கதவை விரியத் திறந்து வைக்கிறது. “வாங்குகிறதை விடக் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். நட. 20:35) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
நாம் செல்வமுள்ளவர்களாய் இல்லாதிருக்கும்போது கூட, ஏழைகளுக்கும், வேதபோதகப் பணிக்கும், மற்ற பிறர்சிநேகப் பணிகளுக்கும் நம்மால் முடிந்ததைத் தரும்படியாக, நம் இருதயங்களை உலகப் பொருட்களிடமிருந்து திருப்பி, நமக்கான செலவுகளைக் குறைத்துக் கொள்ள நம்மால் முடியும். உலகப் பொருட்களின் மீது அதீத பற்றுள்ளவர்களாய் நாம் ஆகாதிருக்க, பிறர் சிநேகத்தையும், பற்றின்மையையும் அனுசரிப்பது நமக்குத் தேவையாயிருக்கிறது. இந்த உலகக் கவலைகளும், அதன் செல்வங்களும், அதன் மாயையான மகிமைகளும், அதன் கடந்து போகிற நிலையற்ற இன்பங்களும், வரவிருக்கும் ஜீவியத்தின் மெய்யான செல்வ வளங்களைத் தேடுவதிலிருந்து நம்மைத் தடுத்து விடவோ, திசைதிருப்பி விடவோ நாம் அவற்றை அனுமதிக்கக் கூடாது.
முடிவாக, நம் பக்தி முயற்சிகளில், நாம் நமக்கென ஞான மகிழ்ச்சியை மட்டுமே தேடும் போது, அவற்றில் உலோபித்தனத்திற்கு எதிரான ஒரு ஞான நன்மை இருப்பதைக் காணலாம் என்பதை இங்கு கூறுவதும் சிறப்பானதாகும். நம் தேவசிநேகத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும், இவ்வுலகில் நம் ஜீவியத்தின் நோக்கமாக நம் ஞானோபதேசத்தின் முதற் பாடத்திலேயே நாம் அறிந்து கொண்டபடி, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையோடு நாம் இந்தப் பக்தி முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.