அதிகாரம் 01
1 நினிவே நகரத்தைப்பற்றிய இறைவாக்கு. எல்கோஷ் என்னும் ஊரினராகிய நாகும் கண்ட காட்சியடங்கிய நூல்.
2 ஆலேஃப்: ஆண்டவர் பொறாமையுள்ள கடவுள், பழிவாங்குபவர்; ஆண்டவர் பழிவாங்குபவர், வெகுண்டெழுபவர். ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்குகிறவர், தம் பகைவர் மீது கோபம் பாராட்டுகிறவர்.
3 ஆண்டவர் விரைவில் கோபம் கொள்ளார், மிகுந்த ஆற்றலுள்ளவர்; ஆண்டவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் தண்டிக்காமல் விடமாட்டார். பேத்: சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அவர் வழி நடக்கிறார், மேகங்கள், அவர் நடக்கும் போது எழும் புழுதிப்படலம்.
4 கீமேல்: கடலை அதட்டுகிறார், அதை வற்றச்செய்கிறார்; ஆறுகளையெல்லாம் உலர்ந்துபோகச் செய்கிறார். தாலேத்: பாசானும் கர்மேலும் வதங்கிப்போகின்றன, லீபானின் மலர்கள் வாடிப் போகின்றன.
5 ஹே: மலைகள் அவர் முன்னிலையில் அதிர்கின்றன, குன்றுகள் அவர்முன் கரைகின்றன. வெள: நிலமும் உலகமும் அதிலுள்ள யாவும் அவர் முகங்கண்டு நடுங்குகின்றன.
6 ஸாயின்: அவர் கடுஞ்சினத்தை எதிர்த்துநிற்கக் கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் வெப்பத்தைத் தாங்குபவன் எவன்? ஹேத்: தீயைப்போல் அவர் கோபம் கொட்டுகிறது, பாறைகளும் அவர்முன் வெடிக்கின்றன.
7 தேத்: ஆண்டவர் நல்லவர், துன்ப காலத்தில் காவலரண் போல் இருக்கிறார்;
8 காஃப்: தம்மை அவமதிப்போரைப் பொங்கியெழும் வெள்ளத்தால் அழித்திடுவார், தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார்.
9 ஆண்டவருக்கு எதிராய் நீங்கள் போடும் திட்டமென்ன? அழிவு கொணர்பவர் அவரே, கொடுமை மறுபடி தலைகாட்டாது.
10 பின்னிக் கிடக்கும் முட்புதர் போலும், காய்ந்த சருகு போலும் முற்றிலும் எரிந்து போவார்கள்.
11 அசீரியாவுக்கு ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டும் தீய சிந்தனையாளன் உன்னிடமிருந்தன்றோ தோன்றினான்?
12 யூதாவுக்கு ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் வல்லவர்களாயினும், பெருந்தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்து போவார்கள்; உன்னை நாம் இது வரை துன்புறுத்தியிருந்தாலும், இனி மேல் உன்னைத் துன்புறுத்தமாட்டோம்.
13 இப்பொழுதே, உன் மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை நாம் தறித்துவிடுவோம்." நினிவே அரசனுக்கு
14 ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட தீர்ப்பு இதுவே: "உன் பெயரைத் தாங்கும் சந்ததியே இல்லாமற் போகும்; உன் தெய்வங்களின் இல்லத்திலிருந்து செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்போம். நாமே உனக்குக் குழிவெட்டுவோம், ஏனெனில் நீ வெறுக்கத் தக்கவன்."
15 யூதாவுக்கு இதோ, சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியைக் கொண்டு வருகிறவனின் கால்கள் மலைகளின் மேல் நடந்து வருகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு, உன் நேர்ச்சிக் கடன்களை நிறைவேற்று; ஏனெனில் பெலியால் உன் நடுவில் இனி வரவே மாட்டான், அவன் முற்றிலும் அழிந்து போனான்.
அதிகாரம் 02
1 உன்னைச் சிதறடிக்கிறவன் உனக்கெதிராய் வருகிறான்; கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து, வழிகளில் காவல் வீரர்களை இருக்கச் செய்; உன் இடைகளை விரிந்து கட்டிக்கொள், உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.
2 (இஸ்ராயேலின் மாட்சிமை போலவே யாக்கோபின் மாட்சிமையை ஆண்டவர் மறுபடி நிலை நாட்டுகிறார்; கொள்ளைக்காரர்கள் அவற்றைக் கொள்ளையடித்தனர், அவற்றின் கிளைகளை அவர்கள் முறித்துப் போட்டனர்.)
3 அவனுடைய வலிய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை, அவனுடைய போர்வீரர்கள் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்; போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கிறது, குதிரை வீரர்கள் போருக்குத் துடிக்கின்றனர்.
4 தேர்கள் தெருக்களில் மூர்க்கமாய்த் தாக்குகின்றன, பொதுவிடங்களில் அவை அங்குமிங்கும் ஓடுகின்றன; தீப்பந்தங்களைப் போலச் சுடர் விடுகின்றன, மின்னலைப் போலப் பாய்கின்றன.
5 போர்த்திறம் வாய்ந்த வீரர்களைக் கூப்பிடுகிறான், போகும் போது இடறுகிறார்கள்; கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றனர், காப்புக் கருவி அமைத்தாயிற்று.
6 ஆற்றோரத்து வாயிற் கதவுகள் திறக்கப்பட்டன, அரண்மனை எங்கும் ஒரே திகில்.
7 அரண்மனைத் தலைவி சிறைப்பட்டாள், நாடு கடத்தப்படுகிறாள், அவளுடைய பணிப்பெண்கள் புலம்புகிறார்கள்; புறாக்களைப் போலப் பெருமூச்செறிந்து தங்கள் மார்பில் அறைந்து கொள்ளுகிறார்கள்.
8 தண்ணீர் தேங்கி நிற்காமல் ஓடிவிடும் குளத்துக்கு ஒப்பாயிற்று நினிவே நகரம்; "நில்லுங்கள், நில்லுங்கள்!" எனக் கூவுகிறார்கள், ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.
9 வெள்ளியைக் கொள்ளையடியுங்கள், பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்; கருவூலங்களுக்கு அளவேயில்லை, விலையுயர்ந்த பொருட்களும் குவிந்து கிடக்கின்றன.
10 கொள்ளை! கொலை! கொடுமை! உள்ளம் சோர்ந்து விட்டது, தொடைகள் நடுங்குகின்றன. திகில் அனைவரின் அடிவயிற்றையும் கலக்குகிறது, முகங்கள் எல்லாம் வெளிறிப் போகின்றன.
11 சிங்கங்களின் குகை எங்கே இருக்கிறது? சிங்கக்குட்டிகளின் உறைவிடம் எங்கே? சிங்கம் வெளியேறும் போது, பெண் சிங்கமும் குட்டிகளும் யாருடைய தொந்திரவுமின்றி அங்கே இருந்தன.
12 தன் குட்டிகளுக்கும், பெண் சிங்கங்களுக்கும் தேவையான அளவு இரையை பீறிக்கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் சிங்கம் நிரப்பிற்று.
13 சேனைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேள்: இதோ, உனக்கெதிராக நாம் எழும்புவோம், உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவோம், உன் இளஞ் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும், உனக்கு நாட்டில் இரை இல்லாதபடி செய்வோம், உன் தூதர்களின் குரல் இனிக் கேட்கப்பட மாட்டாது.
அதிகாரம் 03
1 இரத்தக்கறை படிந்த நகரத்துக்கு ஐயோ கேடு! அதில் பொய்களும் கொள்ளைப் பொருளும் நிறைந்துள்ளன, சூறையாடல் அங்கே ஓயாமல் நடக்கிறது.
2 இதோ சாட்டைகளின் ஓசை, சக்கரங்களின் கிறீச்சொலி, தாவிப்பாயும் குதிரைகள், உருண்டு வரும் தேர்கள்! 3 சீறித் தாக்கும் குதிரை வீரர்கள், மின்னும் வாள், பளபளக்கும் ஈட்டி, வெட்டுண்டவர்களின் கூட்டம், பிணங்களின் குவியல், செத்தவர்களுக்குக் கணக்கில்லை- பிணங்களின்மேல் இடறி விழுகின்றனர்!
4 இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? பேரழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மக்களினங்களையும், தன் மயக்கும் கவர்ச்சியால் கோத்திரங்களையும், விற்றுப்போடுகிற அந்த விலைமகளின் கணக்கிலடங்காத வேசித்தனங்களே காரணம்.
5 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, நாம் உனக்கெதிராக இருக்கிறோம் உன் முகத்துக்கு மேலாக உன் உள்ளாடையைத் தூக்குவோம்; மக்களினங்கள் உன் அவமானத்தையும், அரசுகள் உன் ஈனத்தையும் பார்க்கும்படி செய்வோம்;
6 அருவருப்பானவற்றை உன்மீது எறிவோம், உன்னை வெறுப்புடன் நடத்திப் பகடிப்பொருள் ஆக்குவோம்;
7 உன்னை ஏறெடுத்துப் பார்ப்பவரெல்லாம் பின்வாங்கி, ' நினிவே பாழாய்ப் போய்விட்டது' என்று சொல்லுவார்கள்; உனக்காக இரங்குவோர் உண்டோ? உனக்கு ஆறுதல் சொல்வாரை எங்கே தேடுவோம்?
8 நைல் நதியின் கரையருகில் நீரால் சூழ்ந்து, கடலை நீரரணாகவும், தண்ணீரை மதிலாகவும் கொண்ட நோ-அமோனை விட நீ சிறப்புற்றாயோ?
9 எத்தியோப்பியாவும் எகிப்தும் அதன் வலிமையாயிருந்தன, அந்த வலிமைக்கு எல்லையில்லை; ஆப்பிரிக்காவும் லிபியும் உதவியாய் இருந்தன.
10 இருந்தும் அந்நாட்டு மக்கள் சிறை பிடிக்கப்பட்டனர், அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்; அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் நசுக்கப் பட்டனர், அதன் பெருங்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது, அந்நாட்டின் பெரிய மனிதர்கள் அனைவரும் சங்கிலிகளால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர்.
11 நீயும் குடிவெறியேறிக் கிடப்பாய், அனைவரும் உன் மேல் அருவருப்புக் கொள்வர்; நீயும் உன் பகைவனிடமிருந்து தப்பப் புகலிடம் தேடியலைய நேரிடும்.
12 உன் அரண்கள் யாவும் முன்பே பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை; மரங்களைப் பிடித்து உலுக்கினால், பழங்கள் தின்பவன் வாயில் விழும்.
13 இதோ, உன்னிடத்தில் இருக்கும் போர் வீரர்கள் உன்னிடமுள்ள பெண்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்க்குப் பரக்கத் திறந்துள்ளன, உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.
14 முற்றுகை நாட்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை, உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து; களி மண்ணைப் பிசைந்துச் சேறாக்கு, செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு.
15 ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும், வாளால் நீ வெட்டுண்டு மடிவாய், வெட்டுக்கிளி போல் உன்னை விழுங்கி விடும். வெட்டுக்கிளிகள் பறந்தோடுகின்றன: வெட்டுக்கிளி போல நீங்கள் பலுகுங்கள், பச்சைக்கிளி போல நீங்கள் பெருகுங்கள்;
16 விண்மீன்களை விட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச்செய்தாய்; வெட்டுக்கிளி இறக்கையை விரித்துப் பறந்தோடி விடுகிறது.
17 உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும், உன் அரசியல் அலுவலர்கள் வெட்டுக்கிளி கூட்டத்திற்கும் நிகர்; குளிர்ந்த நாளில் வேலிகள் மேல் உட்கார்ந்திருக்கின்றன, கதிரவன் எழுந்ததும் பறந்தோடி விடுகின்றன; அதன் பின் எங்கிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
18 அசீரிய அரசனே, உன் மேய்ப்பர்கள் துயில் கொண்டனர், உன் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர், கூட்டுவாரின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப்போயினர்.
19 உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது; உன்னைப் பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்; ஏனெனில் உன் இடைவிடாக் கொடுமையால் துன்புறாதவர் உண்டோ?