பிதாவே உம்முடைய கரங்களிலே என் ஆத்துமத்தைக் கையளிக்கிறேன்

"பிதாவே உம்முடைய கரங்களிலே என் ஆத்துமத்தைக் கையளிக்கிறேன்" என்று சொல்லி எனக்காக பிராணனைக் கொடுத்தீரே சுவாமி!

நான் உம்முடைய பாவனையாக உம்முடைய பிதாவாகிய சர்வேசுரன் கையில் என்னுடைய ஆவியை முழுதும் ஒப்புக்கொடுக்கிறேன்.

என்னை உண்டாக்கினவருமாய் இரட்சிக்கிறவருமாயிருக்கிற என் அன்புள்ள சேசுவே! தேவரீரல்லாமல் மற்றதெல்லாம் என்னை இரட்சிக்கக்கூடுமோ? உம்மை விட்டுப் பிரிந்திருப்பேனேயாகில் மற்றதெல்லாம் எனக்குத் தின்மையாயிருக்கும்.

நான் உம்முடைய பாதத்திற் சேராதிருந்தால் பசாசுகள் என்னை நரகத்திலே தள்ளும். ஆனால் இப்படி நரகத்தில் விழுகிறதற்கு நான் முன்னே பாத்திரமாயிருந்தாலும், அடியேன் பேரில் இரக்கமாயிருந்து பொறுத்தலைக் கொடுத்தருளும்.

தேவரீரிடத்தில் சேருகிறதற்கு இன்னும் யாதொரு விக்கினம் எனக்குண்டாயிருந்தால் அதை முழுதும் தள்ளி நீக்கும்படி மன்றாடுகிறேன். என்னை இரக்ஷிக்கும் பொருட்டாக கடினமான மரணத்தை அடைந்தீரென்று நினைத்தருளும்.

உம்முடைய திரு மரணத்தின் பலனுக்குப் பங்காளியாகி, உம்மிடத்தில் வருகிறதற்குத் தாழ்ச்சியோடேயும், நம்பிக்கையோடேயும், பக்தியோடேயும், வணக்கத்தோடேயும் உம்மை மன்றாடுகிறேன்.

என் அடைக்கல மாகிய சேசுவே! இந்த இக்கட்டிலே என்னைத் தள்ளாமல் தயாபரராய் என்னைக் கை தூக்கி இரட்சியும். நான் செய்த பாவங்களினாலே உமக்குத் தூரமாய்ப் போனேனென்பது மெய்தான். இப்படி உமக்கு நன்றி கெட்ட துரோகியான நான் மறுபடி உத்தம மனஸ்தாபத்தினாலேயும் தேவ சிநேகத்தினாலேயும் உம்முடைய பாதத்தை அண்டி வருகிறேன்.

என் நல்ல பிதாவே! என் திவ்விய இரட்சகரே, மிகவும் மதுரமான சேசுவே, இந்த ஆபத்துள்ள வேளையில் என்னை இரட்சியும். இந்த அவஸ்தை நேரத்திலே பசாசுகளுடைய சோதனைகளிலே நான் அகப்படாத படிக்குக் கிருபை செய்தருளும்.

அடியேன் உமக்கு அருகில் வந்து முடிவில்லாத காலம் உம்மைத் தரிசித்து, சிநேகித்து, துதிப்பதற்கு என்னை அழைத்துக் கொள்ளும். அதினிமித்தம் எனக்காகச் சிலுவையிலே அறையுண்ட உம்முடைய திருக் கையினாலே அடியேனுக்கு உமது பரிபூரண ஆசிர்வாதத்தைத் தந்தருளும் சுவாமீ

ஆமென்.