ஓ என் சர்வேசுரா, என்னுடையதைப் போல இவ்வளவு அலட்சியமுள்ள ஒரு ஜீவியத்தால் உம்மை மகிழ்விக்க முடியாது என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். என் அசமந்தத்தினால், தேவரீர் என்மீது பொழிந்தருள ஆசிக்கிற வரப்பிரசாதங்களின் கதலை நான் அடைத்திருக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஓ என் சர்வேசுரா, நான் தகுதியற்றவனாயிருந்தாலும், தேவரீர் என்னைத் தள்ளி விடாமல், தொடர்ந்து என் மேல் இரக்கமாயிரும். இந்த என்னுடைய பரிதாப நிலையைத் திருத்தவும், அதிலிருந்து எழுந்திருக்கவும் மிகுந்த முயற்சிகளை நான் மேற்கொள்வேன். வருங்காலத்தில் என் ஆசாபாசங்களை வெல்லவும், உமது இனிய தூண்டுதல்களைப் பின்செல்லவும் அதிகக் கவனமாயிருப்பேன். இனி ஒருபோதும் என் சோம்பலின் காரணமாக என் கடமைகளை விட்டு நான் விலகாமல், அதிக விழிப்போடும், பிரமாணிக்கத்தோடும் அவற்றை நிறைவேற்றப் பாடுபடுவேன். சுருங்கச் சொன்னால், இந்நேர முதல், உம்மைப் பிரியப்படுத்த என்னால் முடிந்த சகலத்தையும் செய்வேன். உமக்கு சந்தோஷம் வருவிப்பதாக நான் அறிந்திருக்கிற எதையும் நான் அசட்டை செய்ய மாட்டேன்.
ஓ என் சேசுவே, தேவரீர் உமது வரப்பிரசாதங்களை என் மீது பொழிவதில் வெகு தாராளமாய் இருந்திருக்கிறீர்; உமது திரு இரத்தத்தையும், உமது உயிரையும் கூட எனக்காகக் கையளிக்கத் திருவுளமானீர். சகல மகத்துவத்திற்கும், நேசத்திற்கும் பாத்திரமாயிருக்கிற உம் மட்டில் இவ்வளவு குறைவான நேசங் காண்பித்ததற்காக வருந்துகிறேன். ஆயினும், ஓ என் சேசுவே, என் பலவீனத்தைத் தேவரீர் அறிந்திருக்கிறீர். உமது வல்லமையுள்ள வரப்பிரசாதத்தால் எனக்கு உதவியருளும். உம்மில் என் நம்பிக்கையை வைக்கிறேன்.
ஓ அமலோற்பவக் கன்னி மரியாயே, என்னையே நான் மேற்கொள்ளவும், ஒரு அர்ச்சியசிஷ்டவனாக ஆகவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.