வேதாகமங்களில் இப்படிக் கூறப்பட்டுள்ள எச்சரிப்புகள் உலகப் பொதுவாகக் கூறப்பட்டுள்ளன - இவை யார் யாருக்கோ என்ற எண்ணம்தான் பெரும்பாலும் மக்களுக்கு ஏற்படுகிறது.
ஆனால் இவை எனக்கே கூறப்பட்டுள்ளன. நான் இதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. அது சரியல்ல.
ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு உலகமாயிருக்கிறது. நம் அனைவருக்காகவும், நம் ஒவ்வொருவருக்காகவும் இவை கூறப்பட்டுள்ளன என்று நாம் நினைக்க வேண்டும். ஏனென்றால் வேதாகமம் நம் ஒவ்வொருவருக்காகவுமே எழுதப்பட்டுள்ளது.
வேதாகம் முன்னறிவிப்புகளின் விளக்கமாக, பல நூற்றாண்டுகளாக, பலப்பல தனி வெளிப்படுத்தல்களையும் ஆண்டவர் கொடுத்து வந்திருக்கிறார்.
விசேஷமாக நாம் வாழும் இவ்விறுதிக் காலங்களின் சுத்திகரத் தண்டனையின் அடையாளங்களைப் பற்றி, அநேக அர்ச்சியசிஷ்டவர்கள், பக்திமான்களின் வழியாக ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிறார்.
திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் பல உள்ளன. திருச்சபை ஆராய்ந்து இன்னும் அங்கீகரிக்காத அறிவிப்புகளும் அநேகம் இருக்கின்றன.
திருச்சபையின் முழு அங்கீகாரம் பெற்ற முன்னறிவிப்புகளில் முக்கியமானவை இரண்டு : சலேத் மாதா காட்சியும், பாத்திமா மாதா காட்சியும்.
இந்த அறிவிப்புகள் எவ்வளவு முக்கியமானவை என்று காட்ட இவற்றைத் தம்முடைய திருத்தாயார் வழியாகவே ஆண்டவர் அறிவித்தார்.
சலேத் காட்சியில் : (19 செப்டம்பர் 1846) "பருவ காலங்கள் மாறும். பூமி கெட்ட கனிகளையே கொடுக்கும். விண்வெளிக் கோளங்கள் தங்கள் பயண ஒழுங்கை இழக்கும்.... நீரும், நெருப்பும், பூமி உருண்டைக்கு வலிப்பு அசைவுகளைக் கொடுக்கும். அதனால் மலைகள், நகரங்கள் விழுங்கப்படும். உரோமாபுரி விசுவாசத்தை இழக்கும். அது அந்திக்கிறீஸ்துவின் ஆசனமாகும். ஆகாயத்தில் பசாசுக்கள் அந்திக்கிறீஸ்துவுடன் சேர்ந்து பூமியிலும் ஆகாயத்திலும் பெரிய அதிசயங்களைச் செய்வார்கள். மனிதர்கள் மேலும் மேலும் கெட்டுப் போவார்கள். கடவுள் தமது பிரமாணிக்கமுள்ள ஊழியர்களைக் கவனித்துக் கொள்வார்...'' என்று மாதாசலேத் காட்சி பெற்ற மெலானியிடம் கூறினார்கள்.
பாத்திமா காட்சியில்: (3-ம் காட்சி: ஜூலை 13, 1917) மாதா மூன்று குழந்தைகளுக்கும் பூமியைத் திறந்து நரகத்தைக் காட்டிய பின், பாவிகளை நரகத்தில் விழாமல் காப்பாற்றவும், உலகில் போர் மூளாமல் தடுக்கவும் முதல் சனிக்கிழமைப் பரிகார பக்தியை அனுசரிக்கும்படி கேட்டார்கள்.
அவர்களின் இவ்விருப்பம் நிறைவேற்றப்பட்டால், "ரஷ்யா மனந்திரும்பும். உலகில் சமாதானம் ஏற்படும். அல்லாவிடில் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும். யுத்தங்களையும் திருச்சபையில் கலாபனைகளையும் எழுப்பி விடும். நல்லவர்கள் வேதசாட்சியமடைவார்கள். பாப்பரசர் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும். பல நாடுகள் நிர்மூலமாக்கப்படும்" என்று கூறினார்கள்.