பாவங்களிலிருந்து விடுவிக்கப்படும்படியாக ஜெபம்

யாரையும் தள்ளி விடாதவரும், உமது கனிவுள்ள இரக்கத்தில், மிகப் பெரும் பாவிகளின் மனந்திரும்புதலால் சினம் தணிகிறவருமாயிருக்கிற சர்வேசுரா, எங்கள் தாழ்மையான ஜெபங்களைத் தயவோடு ஏற்றுக் கொண்டு, உமது கற்பனைகளை நிறைவேற்ற எங்களால் இயலும்படியாக, எங்கள் இருதயங்களை ஒளிர்வித்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக. ஆமென்.


சர்வேசுரன் அறிந்திருக்கிறார்
சேசுவே, மிகக் கடினமான வேளையில், 
சரீரம் சோர்ந்திருக்கும் போது,
மனம் மேகங்களால் சூழப் பட்டிருக்கும்போது, 
ஆத்துமம் குழப்பம் அடைந்திருக்கிற போது,
எனக்கே நான் பெரும் சுமையாய் இருக்கும்போது,
மற்றவர்களுக்கு நான் துர்மாதிரிகையாய் இருக்கும்போது,
என் மிகச் சிறந்த நண்பர்கள் எனக்கு எதிராக இருப்பதாகத் தோன்றும் போது,
ஒவ்வொரு கதவும் மூடப் படும் போது:

அப்போது என்னையே நான் நினைவுகூரச் செய்யும்,
நான் யார், என் தகுதி என்ன,
மிதிக்கப்பட மட்டுமே தகுதியுள்ள என் ஒன்றுமில்லாமை,
சற்றும் நம்பத் தகாத என் நிலையற்ற சுபாவம்,
மேலதிகத் தண்டனைக்குப் பாத்திரமான என் பாவத் தன்மை, 
தன்னையே எப்போதும் தேடுகிற என் சுய நேசம்,
சம அந்தஸ்திலுள்ள மற்றவர்கள் மட்டில் என் கொடூர குணம்,
இவை அனைத்திலும் உமது திருக்கரத்தை நான் காணச் செய்தருளும்.

நீர் யார், உமக்குரிய தகுதி என்ன,
ஆயினும் பிரதியுபகாரமாக எதை நீர் பெற்றிருக்கிறீர் என்று
உம்மைப் பற்றி நான் நினைவுகூரச் செய்யும்.
உம்மில் பாவமுண்டென எவனும் குற்றஞ்சாட்ட இயலாது.
ஆயினும் அநேகருக்கு இடறலாய் நீர் இருக்கக் கண்டீர்.
நீர் நெரிந்த நாணலை முறியாதவர்.
ஆயினும் உம் ஆத்துமம் மரணமட்டும் துக்கமாயிருந்தது.
எனக்காக அவமானங்களை ஏற்றுக் கொண்டு,
சிலுவையை அனுபவித்தீர்.

பிரமாணிக்கமுள்ளவரும்,
என்னால் தாங்க இயல்கிற அளவுக்கு மேல் என்னைச் சோதியாதவரும்,
ஒருகோடி முனை முதல் மறு கோடி முனை வரை வல்லமையோடு ஆட்சி புரிகிறவரும்,
சகலத்தையும் இனிமையாக நடத்தி முடிக்கிறவரும், 
தீமையிலிருந்து நன்மை விளையச் செய்கிறவரும், இனியவரும், மென்மையானவரும், 
தம்மை நேசிக்கிற சகலருக்கும் மிகுந்த இரக்கம் 

காண்பிக்கிறவருமாகிய
என் பிதாவை நான் நினைவுகூர்வேனாக.


--அதிமேற்றிராணியார் கூடியர், சே.ச.