தாங்களாகவே தெரிந்தெடுத்துச் செய்த தவ முயற்சிகளுடன் பிறரால் ஏற்பட்ட துன்பம் இப்போது முன்னை விட அதிகரித்து வந்தது.
பலர் இக்குழந்தைகளை வசை பேசி ஏளனம் செய்தார்கள். குறிப்பாக அல்யுஸ்திரலில் ஒரு பெண் இக்குழந்தைகளை மொத்தமாகவோ, அல்லது தனியாகவோ எங்கே கண்டாலும் வசை மாரி பேசுவாள். பொய்காரப் பிள்ளைகள், இதுகள் பிள்ளைகளா, நன்றாக ஏமாற்றி நடித்துக் கொண்டு திரியும் விஷமிகள் என்று அவள் பேசாத பேச்சில்லை.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பதில் பேசாமல் போய்விடுவார்கள் மூவரும். அவர்களுக்கு இந்த வசையும் திட்டும் பெரிதாகப் படவில்லை. “நாம் நம் அம்மாவிடம் இப்பெண்ணை மனந்திருப்பும்படி கேட்க வேண்டும். இவளிடம் இத்தனை பாவங்கள் உள்ளனவே! பாவசங்கீர்த்தனம் செய்யாமல் இறந்தால், இவள் நரகத்துக்கல்லவா போவாள்!” என்று அனுதாபப்பட்டார்கள்.
இவ்வாறு இக்குழந்தைகளைப் பகைத்தவர்களிடமிருந்து வந்த துன்பங்களுடன், காட்சிகளை நம்பிய பெருங்கூட்டமான மக்களிடமிருந்து ஏற்பட்ட துன்பங்கள் குறைந்தவை அல்ல. இம்மக்களின் எண்ணம் நல்ல எண்ணம்தான். ஆனால் அவர்கள் இரவு பகல் பாராமல் குழந்தைகளின் வீடுகளைச் சுற்றி மொய்த்துக் கொண்டும், ஆயிரம் கேள்விகளை ஓயாமல் கேட்டுக் கொண்டும், ஓயவும், எதையும் செய்யவும் விடாமல், வீட்டிலுள்ளவர்களுக்கு உபத்திரவம் கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.
எனக்காக மன்றாடு, என் கணவனுக்கு ஒரு வேலை கேள், என் மகனுக்கு சம்பள உயர்வு வாங்கிக் கொடு, என் குடும்ப வறுமையைப் போக்கும்படி வேண்டிக்கொள் என்று என்னென்ன விண்ணப்பமெல்லாமோ அவ்வீடுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கும்.
நோயாளிகளைக் கொண்டு வந்து காத்திருக்கும் கூட்டமும், தூர இடங்களிலுள்ள நோய்ப்பட்டவர்களுக்காக மன்றாடும்படி கெஞ்சும் கும்பலும் இக்குழந்தைகளுக்கு மிகவும் உபத்திரவமாகவும், அவர்கள் வீடுகளில் ஒரு நேரமாவது ஓய்வில்லாத இடைஞ்சலாகவும் இருந்தன.
இதே வேளையில் ஆட்சி பீடத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் வந்த துன்பங்கள் பல. அவர்களுடன் சேர்ந்து இக்காட்சிகளில் அவநம்பிக்கைப்பட்ட சில நல்ல கிறீஸ்தவர்களும் குருக்களும் கூட இச்சிறுவர்களுக்கு மிகப் பெரும் சிலுவையாக அமைந்தனர்.
வேத விரோதிகளின் கேலிச் சிரிப்பும் நிந்தையும் ஒரு அளவில் நிற்கவில்லை. நல்ல வேளை, கல்வியறிவில்லாத அல்யுஸ்திரலில் இவர்கள் எழுதி வெளியிட்ட கேலியும் எதிர்ப்பும் வெறுப்பும் நிரம்பிய பிரசுரங்கள் வந்து எட்டவில்லை. அந்த அளவுக்கு உபத்திரவம் குறைவு.
ஜோஸே தோயலே என்ற ஒரு பத்திரிகை நிருபர், “O Mundo” (உலகம்) என்ற தன் பத்திரிகையில் பாத்திமா காட்சிகளைப் பற்றி அபத்தமாக எழுதிய நிந்தையும், பொய்யும் கலந்த கட்டுரைகள் பல! அவர் எழுதிய துண்டுப் பிரசுரங்கள் யாரையும் அவநம்பிக்கைப்படச் செய்யப் போதுமானவை.