அதிகாரம் 01
1 தாவீதின் மகனும் யெருசலேம் மன்னனுமாகிய சங்கப் போதகனின் வாக்கியங்களாவன:
2 வீணிலும் வீண் என்று உரைத்தான் சங்கப் போதகன். வீணிலும் வீண், எல்லாமே வீண் என்கிறான்.
3 சூரியன் முகத்தே மனிதன் உழைத்து மேற்கொள்ளும் எல்லா முயற்சியினாலும் அவனுக்கு வரும் பயன் என்ன?
4 ஒரு தலைமுறை போகிறது; மறு தலைமுறை வருகிறது. பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கின்றது.
5 சூரியன் உதிக்கிறது; பின்னர் மறைந்து, தான் உதித்த இடத்திற்கே திரும்பச் சென்று, அங்கிருந்து மறுபடியும் உதயமாகி,
6 தெற்கே சாய்ந்து வடக்கே ஏறிப்போகும். காற்று சுழன்று சுழன்று அடித்துத் தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வருகிறது.
7 எல்லா ஆறுகளும் கடலில் ஓடி விழுந்தும் கடல் நிரம்பிக் கரைபுரளாது; ஆறுகள் தாங்கள் உற்பத்தியான இடத்திற்கு மறுபடி திரும்பி ஓடும்.
8 எல்லாக் காரியங்களும் கண்டுபிடிக்க அரியனவாய் இருக்கின்றன. அவை எத்தகையன என்று மனிதரால் சொல்ல முடியாது. காண்கிறதனால் கண் நிறைவடைவதுமில்லை; கேட்கிறதனால் செவி நிறைவு பெறுவதுமில்லை.
9 முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்.
10 சூரியன் முகத்தே புதியது ஒன்றும் இல்லை. இதைப் பார்; இது நவீனம் என்று எவனும் சொல்ல இயலாது. ஏனென்றால், அது நமக்கு முன் சென்ற பழங்காலங்களிலும் இருந்தது.
11 முன் இருந்தவைகளின் ஞாபகம் இப்பொழுது இல்லை. அப்படியே பின்வரும் காரியங்களைப் பற்றியும் இனி இறுதிக் காலத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
12 சங்கப் போதகனாகிய நான் யெருசலேமில் இஸ்ராயேலின் அரசனாய் இருந்தேன்.
13 அப்போது சூரியன் முகத்தே நிகழ்கின்றவற்றையெல்லாம் ஞானமுடன் விசாரித்து ஆராய எனக்குள் தீர்மானித்தேன். மனுமக்கள் இந்தக்கடும் தொல்லையில் அலுவலாய் இருப்பதற்குக் கடவுள் அதை மனிதர்களுக்கு நியமித்திருக்கிறார்.
14 சூரியன் முகத்தே உண்டாகின்ற காரியங்களை யெல்லாம் கவனித்துப் பார்த்தேன். இதோ, எல்லாம் விழலும் மனத்துக்குத் துயரமுமாய் இருக்கின்றன.
15 அக்கிரமிகள் மனந் திரும்புதல் அரிது. அறிவில்லாதவர்களுடைய கணக்கு எண்ணில் அடங்காதது.
16 நான் என் உள்ளத்திலே சொல்லிக் கொண்டது என்ன வென்றால்: இதோ, நான் பெரியவனானேன்; எனக்குமுன் யெருசலேமில் இருந்த எல்லாரையும்விட ஞானத்திலே தேர்ச்சி அடைந்தேன்; எத்தனையோ காரியங்களை ஆராய்ந்து பார்த்தேன்; எத்தனையோ கண்டுபிடித்தேன்;
17 இறுதியில், ஞானத்தையும் அறிவுக் கலையையும் மதியீனத்தையும் அறிய வேண்டுமென்று முயன்றேன்; ஆனால், அதுவும் வீண் தொல்லையும் மனத்துயரமுமாய் இருக்கின்றதென்று கண்டேன்.
18 ஏனென்றால், அதிக ஞானத்தால் அதிகச் சலிப்பு உண்டாகும். படிக்கப் படிக்கத் தொல்லையும் அதிகரிக்கும்.
அதிகாரம் 02
1 வா, பற்பல வித இன்பங்களை நாடி எல்லா நன்மைகளின் தேனையும் உண்டு களிப்போம் என்று என் உள்ளத்தில் தீர்மானித்தேன். ஆனால், அவைகளிலும் பயனில்லை என்று கண்டேன்.
2 சிரிப்பது தவறென்று உணர்ந்தேன். களிப்பைக் குறித்து: சீ! ஏமாந்துபோகிறாய் என்றேன்.
3 மனுமக்கள் உயிரோடிருக்கும் நாள்வரையிலும்பெற்று நுகரத்தக்கது இன்னதென்று நான் அறியுமட்டும், மதியீனத்தைவிட்டு விலகி ஞானத்திலே என் சிந்தையைச் செலுத்த வேண்டுமென்று, மதுபானங்களை விட்டு என் உடலை ஒறுக்கத் தீர்மானித்தேன்.
4 எனவே நான் மாபெரும் வேலைகளைச் செய்தேன். எனக்காக வீடுகளைக் கட்டினேன்; கொடிமுந்திரித் தோட்டங்களையும் நட்டேன்;
5 எனக்காகப் பூஞ்சோலைகளையும் தோப்புகளையும் உண்டாக்கி, அவைகளில் எல்லா வகைக் கனி மரங்களையும் நட்டேன்.
6 பின் மரங்கள் பயிராகும் சோலைக்கு நீர் பாய்ச்சக் குளங்களை அமைத்தேன்;
7 ஊழியக்காரர்களையும் ஊழியக்காரிகளையும் கொண்டிருந்தேன். என் வீட்டிலே பிறந்த அடிமைகளும் மாட்டுமந்தை, ஆட்டுமந்தைகளும் எவ்வளவென்றால், எனக்குமுன் யெருசலேமிலிருந்த எல்லாருக்கும் இருந்ததைக் காட்டிலும் அவை அதிகத்திரளாய் இருந்தன.
8 வெள்ளியையும் பொன்னையும், அரசர் ஈட்டிய செல்வத்தையும், மாநிலங்களின் பொருட்களையும் சேகரித்துக்கொண்டேன்; இசைச் செல்வர்களையும் செல்விகளையும் மனுமக்கள் நாடும் பலவித இன்பங்களையும், மதுபானம் அருந்தத்தக்க பாத்திரங்களையும் பெற்றிருந்தேன்.
9 எனக்குமுன் யெருசலேமில் இருந்த எல்லாரையும்விட நான் செல்வன் ஆனேன். (அவ்வாறு செய்தும்) ஞானம் என்னோடு நிலைக்கொண்டது.
10 என் கண்கள் நாட்டம் கொண்ட எதையும் நான் அவைகளுக்குத் தடை செய்திலேன்; என் இதயம் விரும்பிய சிற்றின்பங்களில் ஒன்றையும் நான் வேண்டாமென்று தள்ளியதும், ஈட்டிய பொருட்களை அனுபவிக்கமால் ஒதுக்கி விட்டதும் இல்லை. நான் முயற்சி செய்து பெற்ற பொருட்களை அனுபவிப்பது நியாயம் என்றிருந்தேன்.
11 பின்னர், என் கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட வீணான தொல்லைகளையும் கண்முன் கொண்டு சிந்தித்தபோது, இதோ, எல்லாம் விழலும் மனத் துயரமுமாய் இருக்கின்றனவென்றும், வானத்தில் கீழ் உள்ளவை எல்லாம் நிலையற்றனவென்றும் கண்டேன்.
12 அடுத்து, ஞானத்தையும் பைத்தியத்தையும் மதியீனத்தையும் பார்த்து அறியும்படி திரும்பினேன்: தன்னைப் படைத்த அரசர்க்கரசரைப் பின்பற்ற மனிதன் யார் என்றேன்.
13 அப்பொழுது என் கண்கள் திறந்தன. இருளைக் காட்டிலும் ஒளி எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு மதியீனத்தைவிட ஞானம் சிறந்ததென்று கண்டேன்.
14 ஞானியின் கண்கள் அவன் தலையிலே இருக்கின்றன. மூடனோ இருளில் நடக்கிறான். ஆயினும் இருவருமே சாக வேண்டும் என்றும் கண்டேன்.
15 அப்பொழுது நான் சிந்திக்கத் தொடங்கி: மூடனுக்கும் சாவு நேரிடும், எனக்கும் நேரிடும் என்றால், நான் அதிகமாய்ப் படித்திருப்பதினால் பயன் என்ன என்று யோசித்து, அதுவும் வீண்தான் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
16 உள்ளபடி, மூடனும்சரி ஞானியும் சரி- அவர்களுடைய நினைவு என்றைக்கும் நிலை நிற்காது; காலச்சக்கரம் சுழலச் சுழல இருவரும் மறக்கப்படுவார்கள்; கல்வி கற்றவனும் கல்லாதவனும் ஒரே விதமாய்த்தான் சாவார்கள்.
17 ஆதலால், சூரியன் முகத்தே இத்தனை தீமைகள் உண்டென்றும், எல்லாம் விழலும் மனத்துயரமுமாய் இருக்கிறதென்றும் கண்டு என் உயிரையும் வெறுத்தேன்.
18 சூரியன் முகத்தே நான் உழைத்த எல்லா உழைப்பையும், எனக்குப் பிறகு எனக்கு உரிமையாளியான ஒரு மகனை அடைவதற்கு நான் கொண்டிருந்த எண்ணத்தையும் வெறுத்தேன்.
19 அவன் ஞானியாய் இருப்பானோ அறிவற்றவனாய் இருப்பானோ என்று அறியேன். ஆயினும், நான் வேர்த்துக் கவலைப்பட்டு ஈட்டின என் எல்லாப் பொருட்களுக்கும் அவன் தலைவன் ஆவான். இவ்வளவு வீணானது வேறு ஏதாவது உண்டோ?
20 அதைப்பற்றி நான் சோர்வடைந்தது மட்டுமன்றி, சூரியன் முகத்தே நான் இனி உழைப்பதன் மேலுள்ள ஆசையையும் விட்டுவிட்டேன்.
21 உள்ளபடி ஒருவன் ஞானத்தையும் கல்வியையும் ஆவலாய்த் தேடி உழைத்த பின்பு, தான் ஈட்டியவற்றை உழைக்காதிருந்த வேறொருவனுக்கு விட்டு விடுகிறான். இதுவன்றோ வீணும் பெரிய தீமையுமாய் இருக்கிறது?
22 மனிதன் சூரியன் முகத்தே பட்ட எல்லாத் தொல்லையினாலேயும் வதைக்கப்பட்ட மனத்துயரத்தினாலேயும் அவனுக்கு என்ன இலாபம் இருக்கும்?
23 அவன் நாட்களிலெல்லாம் அலுப்பும் அலைச்சலும் உள்ளன. இரவில் முதலாய் அவனுக்கு ஓய்வு இல்லை. இதுவும் வீணேயன்றோ?
24 அதைவிட மனிதன் உண்டு குடித்துத் தன் உழைப்பின் பயனைத் தன் ஆன்மாவுக்குக் காண்பிக்கிறது நலம். அது கடவுள் கையிலிருந்து வருகிறது.
25 என்னைப்போல் நிறைவாய் விருந்தாடி இன்பங்களில் மூழ்கியிருக்கிறவன் யார்?
26 கடவுள் தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் தந்தருள்கிறார். பாவிக்கோ அவர் கொடுத்தது என்ன? தமக்கு விருப்பமாயிருக்கிறவனிடம் விட்டுக் கொடுக்கும் பொருட்டுச் செல்வங்களைச் சேர்த்துக் குவித்து வைக்கும் தொல்லையையும் வீண் கவலையையும்தான் கொடுத்தார். அது வீண் வேலையும் வீண் நாட்டமும் அன்றோ?
அதிகாரம் 03
1 ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின்கீழ் நிகழ்வனவெல்லாம் அதற்குக் குறிக்கப்பட்ட கெடுவின்படி நடக்கின்றன. பிறக்க ஒரு காலமுண்டு;
2 இறக்க ஒரு காலமுண்டு. நடுவதற்கு ஒரு காலமுண்டு; நட்டதைப் பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு.
3 கொல்ல ஒரு காலமுண்டு; குணமாக்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு; கட்ட ஒரு காலமுண்டு.
4 கண்ணீர்விட ஒரு காலமுண்டு; சிரிக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு; கூத்தாட ஒரு காலமுண்டு.
5 கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு; கற்களைச் சேர்ப்பதற்கு ஒரு காலமுண்டு. தழுவுவதற்கு ஒரு காலமுண்டு; தழுவாதிருப்பதற்கு ஒரு காலமுண்டு.
6 பொருட்களைத் தேட ஒரு காலமுண்டு; இழக்க ஒரு காலமுண்டு. காப்பாற்ற ஒரு காலமுண்டு; எறிந்துவிட ஒரு காலமுண்டு.
7 கிழிக்க ஒரு காலமுண்டு; தைக்க ஒரு காலமுண்டு. மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு; பேச ஒரு காலமுண்டு.
8 அன்பு செய்ய ஒரு காலமுண்டு; பகைக்க ஒரு காலமுண்டு. போர்புரிய ஒரு காலமுண்டு; சமாதானம் செய்ய ஒரு காலமுண்டு.
9 வருந்தி உழைப்பதனால் மனிதனுக்குப் பயன் என்ன?
10 மனுமக்கள் பாடுபட்டுப் பரிசோதிக்கப்படும்படி கடவுள் அவர்களுக்கு நியமித்துள்ள தொல்லையைக் கண்டேன்.
11 அவர் எல்லாவற்றையும் அதனதன் காலத்திலே நல்லதாய் இருக்கும்படி செய்திருக்கிறார். உலகத்தையோ அதைக் குறித்து அவர்கள் விவாதிப்பதற்கு விட்டுவிட்டார். உண்மையில் கடவுளுடைய செயலெல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து முடியும் வரையிலும் கண்டுபிடிக்கிற மனிதன் ஒருவனுமில்லை.
12 என் வாழ்நாட்களில் மகிழ்வதையும் நன்மை செய்வதையும்விட நலமானது ஒன்றுமில்லை என்று அறிந்தேன்.
13 ஏனென்றால், ஒருவன் உண்டு குடித்துத் தன் உழைப்பால் உண்டான நன்மையைப் பார்ப்பது அவனுக்குக் கடவுள் தந்த வரம்.
14 கடவுள் செய்த செயலெல்லாம் என்றைக்கும் நிலைத்திருக்குமென்று அறிவேன். மனிதர் தமக்கு அஞ்சும்படி கடவுள் செய்தது எதுவோ, அதனோடு நாம் ஒன்றும் குறைக்கவும் இயலாது.
15 உண்டாயிருந்தது எதுவோ, அதுவே இப்பொழுது இருக்கிறது; இனி உண்டாகப் போவது எதுவோ, அது ஏற்கனவே இருந்திருக்கிறது; கடந்து போனதையோ கடவுள் புதுப்பிக்கிறார்.
16 சூரியன் முகத்தே நீதிமன்றத்தில் அநீதமும் நியாய மன்றத்தில் அக்கிரமும் இருக்கக் கண்டேன்.
17 ஆதலால், கடவுள் நீதிமானையும் நெறிகெட்டவனையும் நடுத்தீர்ப்பார் என்றும், அப்பொழுது எல்லாவற்றுக்கும் காலம் முடியுமென்றும் என் மனத்தில் உணர்ந்தேன்.
18 மேலும் மனுமக்களைக் கடவுள் சோதிப்பதற்காக அவர்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்கள் என நான் மனிதருடைய நிலைமையைக் குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.
19 அதைப் பற்றியே மனிதனுக்கும் சரி, மிருகங்களுக்கும் சரி - ஒரே விதச் சாவு. அவனுக்கும் இவைகளுக்கும் ஒரே முடிவு. மனிதன் சாவது எவ்விதமோ அவ்விதமே மிருகமும் சாகும். உயிர்களுக்கெல்லாம் மூச்சு ஒன்றே. (இது காரியத்தில்) மிருகத்தைக் காட்டிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்லன். எல்லாம் வீணே.
20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகின்றன. எல்லாம் மண்ணினால் உண்டானவை; எல்லாம் மண்ணுக்குத் திரும்பும்.
21 ஆதாமின் மக்களுடைய ஆன்மா உயர ஏறுகிறதென்றும், மிருகங்களின் ஆவி தாழ இறங்குகிறதென்றும் அறிகிறவன் யார்?
22 இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன் செயல்களில் மகிழ்வுறுதல் நலமேயொழிய அவனுக்கு வேறென்ன நலமாயிருக்கும்? இதுவே மனிதனுடைய பங்கு. தனக்குப்பின் நிகழப்போவது இன்னதென்று அவன் அறியும்படி அவனைத் திரும்பி வரச் செய்ய யாராலே கூடும்?
அதிகாரம் 04
1 நான் வேறு காரியங்களையும் ஆராய்ந்து பார்த்தேன். சூரியன் முகத்தே சொல்லப்படும் புறணிகளையும், குற்றமில்லாதவர்கள் சிந்தும் கண்ணீர்களையும் கண்டேன். அவர்களைத் தேற்றுவார் இல்லை. அவர்களுக்கு உதவிசெய்வார் இல்லை. ஒடுக்குகிறவர்களுடைய பளுவைத் தடுக்க அவர்களுக்கு வலிமையும் இல்லை.
2 இதைக் கண்டு, உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைக் காட்டிலும் காலஞ்சென்று இறந்தவர்களையே பேறுபெற்றவர்கள் என்றேன்.
3 இவ்விருவகையினரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே மேல். இவன் சூரியன் முகத்தே செய்யப்படும் கொடுமையைக் காணவில்லையே!
4 பிறகு மனிதர்கள் படும் எல்லாத் துன்பங்களையும்ஆராய்ந்து சிந்தித்தபோது, அவர்களுடைய சொந்த முயற்சிகள் அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதைக் கண்டேன். இவைகளும் வீணானதாயும் பயனற்றதாயும் இருக்கின்றன அல்லவா?
5 மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன் தசையைத் தானே தின்கிறான்.
6 அவன்: உழைத்து வருந்தி இரண்டு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதைக் காட்டிலும் சும்மாவிருந்து ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே மேல் என்றான்.
7 இன்னொன்றை சிந்தித்துப் பார்த்து, சூரியன் முகத்தே வேறொரு காரியமும் வீணென்று கண்டேன்.
8 (அது என்னவென்றால்) ஒருவன் மகனுமன்றிச் சகோதரனுமின்றித் தனித்து இருக்கிறான். அப்படியிருக்க, அவன் ஓயாது வேலை செய்தாலும், அவன் கண்கள் செல்வத்தால் நிறைவு கொள்வதில்லை. அவன்: ஒரு நன்மையையும் நான் அனுபவிக்காமல் உழைப்பது யாருக்காகத்தான் என்று சிந்திக்கிறதில்லை. இதுவும் வீணானதும் பொல்லாத தொல்லையுமாய் இருக்கிறதன்றோ?
9 அப்படியிருக்க, தனித்து இருப்பதிலும் இருவராகக் கூடியிருப்பதே நலம். அவர்களுடைய கூட்டுறவினால் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
10 ஒருவன் விழுந்தால் அவன் தோழன் அவனைத் தூக்கி விடுவான். தனித்திருக்கிறவனுக்கோ அப்படியன்று; அவன் விழுந்தால், ஐயோ, அவனைத் தூக்குவாரில்லையே1
11 இரண்டு பேராய்ப் படுத்துக் கொண்டிருந்தால் ஒருவவனுக்கொருவன் சூடுண்டாக்குவான். தனித்தவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
12 ஒருவனை யாரேனும் மற்றொருவன் மேற்கொள்ளப் பார்த்தால் இருவரும் கூடி அவனுக்கு எதிர்த்து நிற்கலாம். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.
13 எதிர்காலத்துக் காரியங்களை முன்னாலே யோசிக்காத கிழவனும் மூடனுமாகிய அரசனைக் காட்டிலும் ஏழையும் ஞானமுமுள்ள இளைஞனே தாவிளை.
14 சங்கிலியால் கட்டுண்டு, சிறையிலிருந்து, அரசாளப் புறப்படுவாரும் உண்டு; அரச குடும்பத்தில் பிறந்து வறுமையில் வருந்துவாரும் உண்டு.
15 சூரியன் முகத்தே இவ்வுலகிலுள்ள யாவரும் பட்டத்துக்கு வரப்போகிற இளைஞன் பக்கம் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
16 அவனுக்கு முன்னிருந்த எல்லா மனிதர்களின் எண்ணிக்கை முடிவில்லா எண்ணிக்கை. அவனுக்குப்பின் வருபவர்கள் அவன் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். இதுவும் வீணும் மனத்துக்கமும் அன்றோ?
17 நீ கடவுளின் ஆலயத்தினுள் புகும்போது அமைதியாய் நடக்கவும், அண்மையில் போய்ச் செவி கொடுத்துக் கேட்கவும் கடவாய். தாங்கள் செய்து வருகிற பொல்லாப்பைப்பற்றி ஒரு சிறிதும் கருதா மூடர்கள் இடும் பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே சிறந்தது.
அதிகாரம் 05
1 உன் வாயினாலே துணிச்சலாய்ப் பேசாதே. கடவுளுடைய சமூகத்தில் மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாதே. ஏனென்றால், கடவுள் வானகத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய். ஆதலால், உன் வார்த்தைகள் கொஞ்சமாய் இருப்பனவாக.
2 அதிகமான கவலைகளாலே கனவுகள் பிறப்பதுபோல் அதிகமான வார்த்தைகளாலே மூடத்தனம் காணப்படும்.
3 நீ கடவளுக்கு ஒரு நேர்ச்சை செய்து கொண்டிருப்பாயாகில் அதைச் செலுத்தத் தாமதியாதே. பொய்யாய் மூடத்தனமாய்க் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அவர் வெறுக்கிறார். நீ நேர்ந்து கொண்டதைச் செய்.
4 உள்ளபடி நேர்ந்து கொண்டதைச் செய்யாமல் போவதைக்காட்டிலும் நேர்ந்து கொள்ளாமலிருப்பதே நல்லது.
5 உன் உடலைப் பாவத்துக்கு உள்ளாக்க உன் வாயைப் பேசவிடாதே. மேலும், தெய்வச் செயல் என்று ஒன்றும் இல்லை என்று வானவன்முன் சொல்லாதே. சொன்னால், சிலவேளை கடவுள் உன் வார்த்தைகளாலே கோபங் கொண்டு உன் கைகளின் செயல்கள் எல்லாவற்றையும் அழித்தாலும் அழிக்கலாம்.
6 கனவுகள் அதிகரிக்க, வியர்த்தங்களும் பேச்சுகளும் கணக்கின்றிமிகும். நீயோ கடவுளுக்கு அஞ்சியிரு.
7 ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும், நியாயமும் நீதியும் புறக்கணிக்கப்படுவதையும் நீ காண்பாயாகில் அதைப்பற்றி வியப்படையாதே. ஏனென்றால், உயர்ந்தவனுக்குமேல் அதிக உயர்ந்தவனும் உண்டு. இவர்களுக்குமேல் இன்னும் அதிக மேற்பட்டவர்களும் உண்டு.
8 கடைசியிலே உயர்ந்தவர்கள் எல்லாருக்கும் மேலாக ஓர் அரசனும் உண்டு. அவன் தன் நாடெங்கும் ஆட்சி செலுத்தி வருகிறான்.
9 கஞ்சன் பணத்தினால் நிறைவு கொள்வதில்லை. பணத்தின்மேல் ஆசையாய் இருக்கிறவன் அதனால் பலனைப் பெறுவதில்லை. அது வீண் காரியம் அன்றோ?
10 செல்வம் அதிகரிக்க, அதை உண்பவர்களும் மிகுவர். அதை உடையவனோ தன் கண்களினாலே செல்வங்களைக் காண்பதன்றி அவனுக்கு வேறென்ன பயன்?
11 வேலை செய்து உழைக்கிறவன் அதிகம் உண்டாலும் கொஞ்சம் உண்டாலும் இன்பமாய்த் தூங்குவான். செல்வனுடைய செல்வப் பெருக்கோ அவனைத் தூங்க விடாது.
12 இன்னமும் சூரியன் முகத்தே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு. அது என்னவென்றால், செல்வந்தன் தனக்குக் கேடுண்டாகத் தன் செல்வத்தைக் காப்பாற்றுவதாம்.
13 ஏனென்றால், அந்தச் செல்வம் அழிந்துபோகிறது; அழிந்து போகிறதைக் கண்டு (அவன்) மிகக் கொடிய துயரம் அடைகிறான். அவன் பெற்ற பிள்ளைக்கு ஒன்றும் இல்லை.
14 அவன் தாயின் கருவிலிருந்து அம்மணமாய் வெளிப்பட்டதுபோல் அம்மணமாய்ப் போவான். அவன் செய்த உழைப்பினால் உண்டான பொருள் ஒன்றையும் கையில் எடுத்துக் கொண்டு போவதில்லை.
15 இது மிக வருந்தத்தக்க செயலன்றோ? அவன் வந்ததுபோலவே திரும்பிப் போவான். அவன் இப்படி வீணில் உழைத்தனால், அவனுக்குப் பயன் என்ன?
16 அவன் தன் வாழ்நாளெல்லாம் இருட்டில் பல கவலையோடும் துன்ப துயரங்களோடும் கஞ்சி குடித்தானே! 17 ஆகையினால், ஒருவன் உண்டு குடித்து உயிரோடிருக்கும்படி கடவுள் அவனுக்கு அருளிய வாழ்நாள் முழுதும் (அவன்) சூரியன் முகத்தே வருந்திச் செய்த வேலையின் பயனை அனுபவிப்பது நலமென்று எனக்குத் தேன்றியது. இதுவே அவனுடைய பங்கு.
18 கடவுள் செல்வங்களையும் சொத்துகளையும் எவனுக்குத் தந்தருளினாரோ அவன் அவற்றினின்று உண்டு, தன் பங்கென்று பெற்று இன்புற்று, தன் உழைப்பிலே மகிழ்ச்சியடைந்தால், அது கடவுளுடைய அருளேயாம்.
19 கடவுள் அவனுடைய இதயத்திற்கு இன்பத்தைத் தந்தருளினபடியால் அவன் தன் வாழ்நாட்களை அதிகமாய் நினையான்.
அதிகாரம் 06
1 சூரியன் முகத்தே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு. அது மனிதருக்குள் அடிக்கடி காணப்படுகிறது.
2 அதாவது: ஒரு மனிதனுக்குக் கடவுள் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் கொடுத்திருக்கிறார். அவன் ஆன்மா விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அவைகளை அனுபவிக்கும் உரிமையைக் கடவுள் (அவனுக்குக்) கொடுக்கவில்லை. வேற்று மனிதனே அதை அனுபவித்து வருகிறான். இது மிகவும் வீணும் தொல்லையும் அன்றோ?
3 ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்றானாம்; பல்லாண்டு வாழ்ந்து கிழவன் ஆனானாம். ஆனால், அவன் ஆன்மா அவனுக்கு உண்டான நன்மைகளைப் பயன்படுத்தியதுமில்லை; அவன் இறந்தபோது அவனுக்கு இறுதிக் கடன் செய்ய அன்னியர் முதலாய் இல்லை. அவனைக்காட்டிலும் கருச்சிதைந்த பிண்டமே பாக்கியசாலியென்று நான் ஐயமின்றிச் சொல்கிறோன்.
4 ஏனென்றால், இவன் வீணே வந்தான்; இருட்டிலே போகிறான். அவன் பெயரும் மறக்கப்படும்.
5 அவன் சூரியனையும் கண்டதில்லை; நன்மைக்கும் தீமைக்கும் வேறுபாடும் அறிந்ததில்லை.
6 அவன் இரண்டாயிரம் ஆண்டு பிழைத்திருந்தாலும், நன்மைகளை நுகராதே போனான் ஆயின், எல்லாம் ஒரே இடத்துக்கு விரைகின்றதல்லவா?
7 மனிதன் படும் தொல்லையெல்லாம் அவன் வாய்க்காகத்தானே? அதனால் அவன் ஆன்மாவுக்கு நிறைவு ஒன்றுமில்லை.
8 மூடனைக் காட்டிலும் ஞானிக்கு என்ன மேன்மை? இவ்வுலகிலுள்ள மனிதர்களிடையே செவ்வையாய் நடக்கும் ஏழைக்குப் பயன் என்ன?
9 அறியாததை நாடுவதைவிட நாடியதைக் காண்பதே நலம். ஆனால், இதுவும் வீணும் மனச் செருக்கும்தானே?
10 இனிப் பிறக்கப்போகிறவன் எவனோ அவன் தோன்றுமுன்னமே பெயரிடப்பட்டவன். அவன் மனிதன் என்பதும், தன்னைவிட வலியவரோடே நீதி நியாய காரியத்திலே அவன் விவாதம் செய்ய முடியாதென்பதும் தெரிந்திருக்கின்றன.
11 பற்பல வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. (அதுவல்லாமல்), விவாதம் செய்வதில் பயனொன்றும் இல்லை.
அதிகாரம் 07
1 நிழலைப்போல் கடந்து போகும் தனது வாழ்நாட்களில் தனக்கு உதவும் காரியங்களை அறியாத மனிதனுக்குத் தன்னிலும் உயர்ந்தவைகளைத் தேடத் தேவை என்ன? அவனுக்குப் பின் சூரியனுக்குக் கீழே நிகழும் காரியம் இன்னதென்று அவனுக்கு அறிவிப்பவர் யார்?
2 விலையுயர்ந்த நறுமணத் தைலங்களைக் காட்டிலும் நற்புகழே நல்லது. பிறந்த நாளைக் காட்டிலும் இறந்த நாள் நல்லது.
3 விருந்து வீட்டிற்குப் போவதைவிடத் துக்க வீட்டுக்குப் போவது நல்லது. ஏனென்றால், இழவு வீட்டிலே எல்லா மனிதருக்கும் முடிவு உண்டென்று காணப்படுவதால், உயிரோடிருக்கிறவன் தனக்கு நிகழவிருப்பதைச் சிந்திப்பான்.
4 சிரிப்பதைக் காட்டிலும் வருத்தமுற்றிருப்பதே நல்லது. ஏனென்றால், முகவாட்டத்தால் பாவிகளுடைய இதயம் திருத்தப்படும்.
5 துக்கம் எங்கேயோ, அங்கேயே ஞானிகளின் இதயமும். மகிழ்ச்சி எங்கேயோ, அங்கேயே மூடனுடைய இதயமும்.
6 மூடர்களின் இச்சக வர்த்தைகளால் ஏய்க்கப்படுவதைக் காட்டிலும் ஞானிகளின் வார்த்தைகளால் கண்டிக்கப்படுவதே நலம்.
7 ஏனென்றால், பானையின் கீழ்ப் படபடவென்று எரியும் முட்களின் ஓசை எப்படியோ அப்படியே அறிவில்லாதவனுடைய சிரிப்பும். ஆனால், இதுவும் வீண்தான்.
8 அவதூற்றால் ஞானி வருத்தப்படுவதுடன் அவனுடைய மனநிலையும் குலைந்துபோகிறது.
9 காரியத்தைத் தொடங்குகிறதைவிட அதை முடிப்பது நலம். செருக்குள்ள மனிதனைக் காட்டிலும் பொறுமையுள்ளவனே சிறந்தவன்.
10 விரைவில் கோபங் கொள்ள வேண்டாம். மூடர்களுடைய இதயம் கோபத்தின் இருப்பிடம்.
11 நிகழ் காலத்தைக் காட்டிலும் கடந்த காலமே நலமாய் இருந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்க வேண்டாம். இப்படிக் கேட்பது மூடத்தனமே.
12 செல்வத்தோடு கூடிய ஞானம் அதிகப் பயனுடையதும், சூரியனைப் பார்க்கிறவர்களுக்கு அதிகப் பயனுள்ளது மரம்.
13 ஏனென்றால், ஞானமும் கேடயம்; பணமும் கேடயம். ஆனால், ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; அறிவும் வாழ்வு தரும்; பணமோ அதைத் தராது.
14 கடவுளுடைய செயல்களைக் கவனித்துப் பார். அவர் எவனை வெறுத்துத் தள்ளிவிட்டாரோ அவன் அவன் சீர்ப்படவே மாட்டான்.
15 வாழ்வு நாளில் நன்மைகளை அனுபவித்துக்கொண்டு, தாழ்வு நாளுக்கு உன்னைத் தயார்படுத்துவாயாக. உண்மையிலே கடவுளே வாழ்வு நாளையும் செய்தார்; தாழ்வு நாளையும் செய்தார். இதைப் பற்றிக் கடவுளுக்கு விரோதமாய் ஒன்றும் சொல்லக்கூடாது.
16 மேலும், என் வீணான நாட்களில் நான் கண்டது என்ன வென்றால்: நீதியாய் நடக்கிற நீதிமான் துன்பத்தில் இருப்பதைக் கண்டேன்; அக்கிரமமாய் நடக்கிற பாவி வெகுநாள் வாழ்வதைக் கண்டேன்.
17 நீதியிலே கூட அளவுக்கு மிஞ்சி நீதிமானாய் இருக்க வேண்டாம். ஞானத்திலும் அளவோடே ஞானியாய் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மூடனாவாய்.
18 கடவுளுக்குத் துரோகம் செய்யாதே; அதிகப் பேதையாய் இராதே; இல்லாவிடில் உன் காலத்துக்கு முன்னே சாவாய்.
19 நீதிமானை ஆதரிப்பதே சிறந்ததே; ஆயினும், பாவியைக் கைவிடலாகாது. கடவுளுக்குப் பயப்படுகிறவன் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்க வண்டும்.
20 நகரத்துப் பத்து அதிகாரிகளைக் காட்டிலும் ஞானமே ஞானியை வலியவனாக்கும்.
21 ஏனென்றால், நன்மை செய்தும், பாவம் செய்யாத நீதிமான் இவ்வுலகத்தில் இல்லை.
22 சொல்லப்படும் எல்லாப் பேச்சுகளையும் கவனிக்க வேண்டாம்; சிலவேளை உன் சொந்த வேலைக்காரனே உன்னைக்குறித்துக் கோள் சொல்வதைக் கேட்பாய்.
23 உள்ளபடி பலமுறை நீயே மற்றவர்களைக் குறித்துக் கோள் சொன்னாயென்று உன் மனச்சாட்சிக்குத் தெரியும்.
24 ஞானத்தை அடைவதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்தேன். எப்படியும் ஞானியாவேனென்று தீர்மானித்திருந்தும், ஞானம் எனக்குத் தூரமாய்ப் போயிற்று;
25 முன்னிலும் அதிக தூரம் போயிற்று. ஞானத்தின் ஆழம் மிகவும் பெரிது. அதைச் சோதித்துப் பார்க்க யாராலே கூடும்?
26 அறியவும், ஆராயவும், ஞானத்தை அடையவும், காரியங்களின் காரணங்களைத் தேடவும், அறிவில்லாதவருடைய அக்கிரமத்தைக் கண்டுபிடிக்கவும், அவிவேகிகளுடைய தவறுகளை வெளிப்படுத்தவும் நான் என் மனத்தைச் செலுத்தினேன்.
27 இப்படித் தேடினபோது, பெண்கள் சாவைக் காட்டிலும் கசப்புள்ளவர்களென்றும், அவர்கள் நெஞ்சம் வேடர்களின் கண்ணியும் வலையும் போன்றதென்றும், அவர்கள் கைகள் சங்கிலிகளென்றும் கண்டேன். கடவுளுக்கு முன்பாக நீதிமானாய் உள்ளவன் அவர்களிடம் சிக்கிக் கொள்ள மாட்டான். பாவிகளோ அவர்கள் கையில் அகப்படுவார்கள்.
28 சங்கப்போதகன் சொல்லுகிறதாவது: அதன் காரணம் அறியும்படி நான் பல காரியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தேன்.
29 ஒப்பிட்டுப் பார்த்தும், அந்த காரணத்தை நான் கண்டுபிடியாமல், ஒரு காரியத்தை மட்டும் நிச்சயமென்று கண்டேன். அது என்ன வென்றார்: ஆயிரம் பேருக்குள்ளே ஒரு (நல்ல) ஆடவனைக் கண்டேன்; எல்லாப் பெண்களுக்குள்ளேயும் ஒரு (நல்ல) பெண்ணை நான் காணவில்லை.
30 இதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அதாவது: கடவுள் மனிதனை நேர்மை உள்ளவனாகவே படைத்தார். மனிதனோ பலப்பல காரியங்கள் ஆராய முற்பட்டு, அவைகளில் தானே தனக்கு விலங்கிட்டுக் கொண்டான். இதைக் கண்டுபிடிக்கத் தக்க ஞானியும் எங்கே? இந்த வாக்கின் விளக்கம் சொல்லத் தக்க (அறிஞனும்) எங்கே?
அதிகாரம் 08
1 மனிதனுடைய ஞானம் அவன் முகத்திலே ஒளிர்கின்றது. எல்லாம் வல்லவரே அவனுடைய முகத்தின் சாயலை மாற்றி வருகிறார்.
2 நான் அரசனின் வாயைக் கவனித்துப் பார்க்கிறேன்; கடவுள் ஆணையிட்டுக் கற்பித்த கட்டளைகளையும் கடைப்பிடித்து வருகிறேன்.
3 அவரது முகத்தை விட்டு விலகத் துரிதப்படாதே. பொல்லாத காரியத்திலே நிற்காதே. ஏனென்றால், அவர் தமக்கு விருப்பமான தெல்லாம் செய்யத்தக்கவர்.
4 அவருடைய வார்த்தை வல்லமை நிறைந்தது. ஏன் இபபடிச் செய்தீர் என்று அவரை வினவ எவனாலும் இயலாது.
5 அவருடைய கட்டளையைக் கைக்கொண்டு ஒழுகுகிறவனுக்கு எந்தத் தீங்கும் வராது. காலம், மறுமொழி ஆகியவற்றை ஞானிகள் கண்டறிவார்கள்.
6 எல்லாக் காரியத்துக்கும் காலமும் நேரமும் உண்டு. மனிதனுக்கு நேரிடும் இக்கட்டுகளோ பல உண்டு.
7 ஏனென்றால், முன்னே நிகழ்ந்த காரியங்களை அவன் அறியான்; இனி நடக்கப்போகும் காரியங்களையோ எந்த வானவனும் வந்து சொல்ல மாட்டான்.
8 தன் கடைசி மூச்சை நிறுத்த மனிதனுக்கு அதிகாரம் இல்லை; சாவின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லை. போர் நடக்கும்போது அவன் இளைப்பாறக் கூடாது. அக்கிரமம் அக்கிரமியை மீட்க மாட்டாது.
9 நான் இவையெல்லாம் ஆராய்ந்து, சூரியன் முகத்தே நடக்கிற எல்லாக் காரியங்கள்மீதும் மனமாரச் சிந்தித்தேன். சிலவேளை ஒரு மனிதன் தனக்கே கேடுண்டாகும் அளவுக்கு வேறோரு மனிதனை ஆள்கிறதும் உண்டு.
10 அடக்கம் செய்யப்பட்ட அக்கிரமிகளையும் கண்டேன். அவர்கள் உயிரோடிருக்கையில் பரிசுத்த இடத்தில் அலுவலாயிருந்தார்கள். நீதி ஒழுக்கம் உடையவர்களைப்போல் நகரத்தில் புகழப்பட்டார்கள். ஆனால், இதுவும் வீணே.
11 உள்ளபடி தீயவர்கள் விரைவில் அழிக்கப்படாமையால் மனுமக்கள் அச்சமில்லமால் பாவத்தில் விழுகிறார்கள்.
12 ஆனால், நூறுமுறை பாவம் செய்த பாவியைக் (கடவுள்) தண்டித்துக்கொண்டு வருகிற காரியத்திலே நான் கண்டுபிடித்தது என்னவென்றால்: அவருக்குப் பயந்து, அவருடைய திருமுகத்திற்கு அஞ்சி நடக்கிறவர்களே பேறுபெற்றவராய் இருப்பர்.
13 தீயவனோ பேறுபெற்றவனாய் இல்லாதிருப்பானாக. எவன் கடவுளுக்குப் பயப்படாமலும் அவருடைய திருமுகத்திற்கு அஞ்சாமலும் இருக்கிறானோ, அவன் நிழலைப்போல் கடந்து போகக் கடவானாக.
14 பூமியின்மேல் இன்னொரு வேறுபாடும் உண்டு. அதாவது: புண்ணியவான், தான் அக்கிரமம் செய்ததுபோல், அக்கிரமிக்கு வரும் வாதையை அனுபவிக்கிறான்; அக்கிரமியோ, தான் புண்ணியம் செய்தது போல், நீதிமானுக்கு இருக்கும் அமைதியான வாழ்வை அனுபவிக்கிறான். ஆனால், இது வெளித்தோற்றம் என்று கருதுகிறேன்.
15 அதைப்பற்றிச் சூரியன் முகத்தே உண்டு குடித்து இன்பமாய் இருப்பதைவிட, மனிதனுக்கு வேறு நன்மை இல்லையெனக் கொள்ளும் மகிழ்வை நான் புகழ்ந்தேன். உள்ளபடி சூரியனுக்குக் கீழே கடவுள் அவனுக்குக் கொடுத்த வாழ் நாட்களில் அவன் பட்டதொல்லையின் பயன் அதுவேயன்றி (இவ்வுலகத்தில்) வேறென்னதான் இருக்கிறது?
16 நான் ஞானத்தை அறியவும், மனிதர்கள் வருந்தி நாடும் கதி இன்னதென்று கண்டுபிடிக்கவும் நான் தீர்மானித்திருந்தேன். மனுமக்களிலே சிலர் இரவு பகல் தூக்கமில்லாது ஓயாமல் உழைத்துவருகிறார்கள்.
17 இறுதியாக, சூரியன் முகத்தே கடவுள் செய்து வருகிற செயல்களின் காரணங்களை மனிதன் கண்டுபிடித்தல் இயலாதென்றும், மனிதன் அதைக் கண்டுபிடிக்க எவ்வளவுக்கு முயல்வானோ அவ்வளவுக்குக் கண்டுபிடிக்கா திருக்கிறான் என்றும் கண்டேன். அது எனக்குத் தெரியும் என்று ஞானி சாதித்தாலும், அவனும் கண்டு பிடிக்க மாட்டானென்று கண்டேன்.
அதிகாரம் 09
1 நான் இவை எல்லாவற்றையும் மனத்தில் சிந்தித்துச் சுறுசுறுப்பாய்க் கண்டுபிடிக்க முயன்றேன். நீதிமான்களும் ஞானிகளும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் கடவுளுடைய கையில் இருக்கின்றன. ஆனாலும், தான் கடவுளுடைய விருப்புக்கு உகந்தவனோ, வெறுப்புக்கு உகந்தவனோ என்று மனிதன் அறியமாட்டான்.
2 இக்காலம் நன்னெறியாளனுக்கும் தீ நெறியாளனுக்கும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும், சுத்தனுக்கும் அசுத்தனுக்கும், பலிகளைப் படைக்கிறவனுக்கும் பலிகளை இகழ்பவனுக்கும் அனைத்தும் ஒரேவிதமாய் நடக்கின்றன. நல்லவனுக்கு எப்படியோ அப்படியே கெட்டவனுக்கும். ஆணையிட்டப்படி நிறைவேற்றுகிறவனுக்கும் ஆணையை மீறி நடக்கிறவனுக்கும் சமமாய் நிகழும். வருங்காலமட்டும் அனைத்தும் சந்தேகத்தில் இருக்கும்.
3 இப்படி எல்லாருக்கும் ஒரேவிதமாய் நிகழ்கிறதே, அது இந்த உலகத்திலிருக்கிற துயரங்களிலே தலையான துயரமாம். அதுபற்றியன்றோ மனுமக்களின் இதயம் தீமையால் நிறைய, அவர்கள் ஆணவம் மிஞ்சி நடந்த பின்னர் நரகத்தில் வீழ்வார்கள்?
4 பூமியில் எப்பொழுதும் வாழ்வாரும் இல்லை; வாழ்வோம் என்று நம்புவாரும் இல்லை. செத்த சிங்கத்திலும் உயிருள்ள நாயே மேல்.
5 உயிரோடிருக்கிறவர்கள் தங்களுக்குச் சாவு வருமென்று அறிந்திருக்கிறார்கள். இறந்தவர்களோ இனி ஒன்றும் அறியார்கள். அவர்கள் பெயர் முதலாய் மறக்கப்பட்டிருக்கின்றமையால், இனி ஞானப் பலனை அடைவது அவர்களால் இயலாது.
6 அவர்கள் ஒழிந்ததுபோல அன்பும் பகையும் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயின. சூரியன் முகத்தே செய்யப்படுவதொன்றிலும் உலகத்திலும் அவர்களுக்கு உரிமை இல்லை.
7 உன் செயல்கள் கடவுளுக்கு விருப்பமானவைகளாய் இருக்குமாயின், நீ போய் உன் அப்பத்தை மகிழ்வோடு உண்டு, உன் பானத்தையும் களிப்போடு அருந்துவாயாக.
8 உன் ஆடைகள் எப்பொழுதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறைவற்றும் இருப்பனவாக.
9 சூரியனுக்குக்கீழே கடவுள் நியமித்திருக்கிற கடந்துபோகும் நாட்களிலும், நிலையற்ற ஆயுட்காலத்திலும் நீ உன் அன்புடைய மனைவியோடே வாழ். இந்த வாழ்க்கையிலும் நீ இந்த உலகத்தில் செய்கிற உழைப்பிலும் உன் பங்கு இதுவே.
10 உன் கை செய்ய வேண்டிய வேலையைச் சுறுக்காய்ச் செய். ஏனென்றால், நீ போகவிருக்கிற கல்லறையிலே செயலுமில்லை; அறிவுமில்லை; ஞானமுமில்லை; கல்வியுமில்லை.
11 நான் திரும்பி நோக்குகையில் சூரியனுக்குக்கீழே நான் கண்டது என்னவென்றால்: இவ்வுலகில் ஓடுவதற்குப் பரிசு வேகமுள்ளவர்கள் பெறுகிறதுமில்லை; போரிலே பேராற்றலுள்ளோர் (வெற்றி) கொள்ளுகிறதுமில்லை; ஞானிகள் உணவு அடைகிறதுமில்லை; புலவர்கள் பணம் சேர்ப்பதுமில்லை; திறமையுள்ள வேலைக்காரர் (மக்களின்) நன்மதிப்பை அடைகிறதுமில்லை. எல்லாவற்றிற்கும் நல்ல நேரமும் வேண்டும்; தெய்வச் செயலும் வேண்டும்.
12 மனிதன் தன் முடிவை அறியான். மீன்கள் தூண்டிலில் அகப்படுவதுபோலவும், பறவைகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், பொல்லாத காலம் வரவே மனிதர்கள் திடீரென ஆபத்தில் விழுவார்கள்.
13 புகழுக்குரியதும் மிகுந்த ஞானமுள்ளதுமான ஒரு காரியத்தைக் கண்டேன். அது என்னவென்றால்:
14 சிறியதொரு நகரம் இருந்தது. அதிலுள்ள குடிகள் சிலரே. பெரிய அரசன் ஒருவன் அதைக் கைப்பற்ற எண்ணி அவ்விடம் வந்து, நகரத்தை வளைத்துச் சுற்றிலும் அதற்கு எதிராகப் பலத்த கொத்தளங்களைக் கட்டி முற்றுகையிட்டான்.
15 இந்நகரத்தில் சிறந்த ஞானியாகிய ஏழை ஒருவன் இருந்தான். அவன் தன் ஞானத்தினாலே அந்த நகரத்தை விடுவித்தான். ஆயினும் அந்த நகரத்தை விடுவித்தான். ஆயினும், அந்த ஏழை மனிதனை நினைப்பார் ஒருவருமில்லை.
16 (அதைக் கண்டு) நான்: திறமையினும் ஞானமே நல்லது என்று கருதினேன். அது உண்மையென்றால், ஏழையின் ஞானம் அசட்டை செய்யப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமல் போனதென்ன ?
17 மூடர்களிடையே தலைவன் இடும் கூக்குரலைவிட மௌனத்தில் ஞானிகள் கூறும் வார்த்தைகள் அதிகமாகக் கேட்கப்படுகின்றன.
18 போர்க்கருவிகளினும் ஞானமே சிறந்தது. ஒரே பாவத்தினாலே மனிதன் அநேக நன்மைகளை இழப்பான்.
அதிகாரம் 10
1 செத்த ஈக்களால் பரிமளத் தைலத்தின் நறுமணம் அழிவதுபோவவே, சிறியதும் தற்காலத்துள்ளதுமான அறிவீனத்தால் விலையுயர்ந்த ஞானமும் புகழும் (அழிக்கப்படும்).
2 ஞானியின் இதயம் அவன் வலக்கையிலும், மூடனின் இதயமோ அவன் இடக்கையிலும் இருக்கின்றனவாம்.
3 நீதியற்ற நெறியில் செல்லுகிற ஞானமற்ற மனிதன், தான் மதிகெட்டவனாய் இருக்கிறதனால், எல்லாரையும் மதியீனரென்று எண்ணுகிறானாம்.
4 அதிகாரியின் கோபம் உன்மேல் எழும்பினால் நீ அமைதியை இழந்துவிடாதே. ஏனென்றால், சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திவிடும்.
5 சூரியன் முகத்தே நான் கண்ட ஒரு தீங்கு உண்டு. அது அதிகாரியின் (பொய்யான) எண்ணத்தால் நேரிட்ட தவறு.
6 (அதாவது: ) மதியீனன் உயர்ந்த நிலையிலே வைக்கப்பட்டுதலும், செல்வனோ தாழ்ந்த நிலையில் அமர்திருத்தலுமாம்.
7 வேலைக்காரர் குதிரைமேல் ஏறிப் போகிறதையும், பிரபுக்கள் சாதாரண மனிதரைப் போல் நடந்து போகிறதையும் கண்டேன்.
8 படு குழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான். வேலியைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
9 கற்களை எடுக்கிறவன் அவற்றால் காயப்படுவான். விறகு வெட்டுகிறவன் அதனால் அடிபடுவான்.
10 இரும்புக் கருவியை முன்போல் இராமல் மழுங்கலாய்க் கிடக்கவிட்டால், பிறகு அதைக் கூராக்குவது மிகவும் கடினம். அதுபோல் வருந்தித்தான் ஞானத்தை அடையக்கூடும்.
11 மறைவாய்க் கோள் சொல்லுகிறவன் சத்தம் போடாமல் கடிக்கும் பாம்பை ஒத்தவன்.
12 ஞானியின் வாய்மொழிகள் இனிமையாய் இருக்கின்றன. மூடனுடைய உதடுகளோ அவனைத் தாழ விழத்தாட்டும்.
13 அவனுடைய வாக்குகளின் தொடக்கம் மதியீனமும், அதன் முடிவோ மிகக் கேடான பைத்தியமுமாம்.
14 மதியீனன் பேச்சை வளர்க்கிறான். மனிதன் தனக்குமுன் நடந்ததை அறியான்; தனக்குப்பின் நடக்கப் போவதையும் அறியான். அவனுக்கு அதை அறிவிப்பவன் யார்?
15 ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியான். ஆதலால், அவன் தொல்லையே அவனை வாதிக்கும்.
16 அரசன் சிறு பிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலையில் உண்கிறவர்களுமாய் இருக்கப் பெற்ற நாடே உனக்குக் கேடாம்.
17 அரசன் மேன்குல மகனுமாய், பிரபுக்கள் பேருண்டியாய் இன்பத்திற்காக உண்ணாமல், வலிமை கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாய் இருக்கப்பெற்ற நாடே உனக்குப் பேறு.
18 சோம்பலினால் வீட்டு மச்சுக்கட்டைகள் விழும். கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
19 களித்திருப்பதற்கு அப்பத்தையும் மதுபானத்தையும் உபயோகித்து மனிதர் விருந்தாடுவார்கள்: பணமோ எல்லாவற்றையும் படியச் செய்யும்.
20 அரசனை உன் மனத்திலும் இகழாதே. செல்வம் படைத்தவனை உள் அந்தரங்கத்திலும் இகழாதே. ஏனென்றால், வானவெளியில் பறக்கிற பறவைகளுங்கூட உன் வார்த்தைகளைக் கொண்டுபோய், நீ சொன்னதையெல்லாம் அவர்களுக்கு அறிவிக்கும்.
அதிகாரம் 11
1 ஓடும் தண்ணீரின்மேல் உன் அப்பத்தை விடு. ஏனென்றால், நெடுங் காலத்துக்குப்பின் அதைக் கண்டெடுப்பாய்.
2 அதை ஏழு பேருக்கும், எட்டுப் பேருக்கும் பங்கிட்டுக் கொடு. ஏனென்றால், வருங்காலத்தில் உனக்கு என்ன தீங்கு நேரிடுமோ, உனக்குத் தெரியாது.
3 கார்மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் மழை பெய்யும். மரம் தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
4 காற்றைக் கவனிக்கிறவன் விதை விதைக்கிறதுமில்லை; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுவடை செய்கிறதுமில்லை.
5 உயிர் உண்டாகும் விதம் இன்னதென்றும், கருவுற்றவளின் வயிற்றிலே எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே, எல்லாவற்றையும் உண்டாக்கின கடவுளின் செயல்களையும் நீ அறிவாய்.
6 விதையைக் காலையிலே விதை; மாலையிலேயும் கை சலிக்காமல் விதை; ஏனென்றால், இதுவோ அதுவோ எது வாய்க்குமென்று உனக்குத் தெரியாது. இரண்டும் வாய்க்குமானாலும் தாவிளை.
7 வெளிச்சம் இன்பமாயும் சூரியனைக் காண்பது விருப்பமாயும் இருக்கின்றன.
8 ஒரு மனிதன் பல ஆண்டு வாழ்ந்து அவைகளிலெல்லாம் களித்திருந்தாலும், அவன் இருளின் நாட்களை நினைக்க வேண்டியதுமன்றி, கணக்கற்ற நாட்களையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அவைகளால் அல்லவோ நிகழ்ந்த காலமெல்லாம் வீணென்று தெளிவாகும்!
9 ஆகையால், இளைஞனே, உன் இளமையிலே மகிழ்ச்சியாய் இரு; உன் வாலிப நாட்களில் உன் இதயம் மகிழட்டும்; உன் மனமும் கண்களும் போன வழியே நட. ஆனால், இந்த எல்லாக் காரியத்திலும் கணக்குச் சொல்லக் கடவுள் உன்னை நீதியாசனத்தின்முன் அழைத்துக்கொண்டு போய் நிறுத்துவாரென்பதை மறவாதே.
10 உன் இதயத்தினின்று கோபத்தையும், உன் உடலினின்று கெட்டவையாவையும் நீ விலக்கக்கடவாய். ஏனென்றால், இளமையும் வீண்; சிற்றின்பமும் வீணே.
அதிகாரம் 12
1 துயர நாட்கள் வருமுன்னே, உன் வாலிப நாட்களில் உன்னைப் படைத்த கடவுளை நினை. ஏனென்றால்: நல்லதன்று என்று நீ சொல்லப் போகிற காலம் அண்மையில் இருக்கும்.
2 சூரியனும் சந்திரனும் வெளிச்சமும் விண்மீன்களும் இருண்டு போகுமுன்னும், மழைக்குப் பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வருமே - அதற்கு முன்னும் (கடவுளை நினை).
3 வீட்டுக் காவலாட்கள் சோர்வடைந்து, பேராற்றல் உடையவர்கள் தள்ளாடி, இயந்திரம் சுழற்றும் பெண்கள் சிலருமாய் வேலை செய்யாதவர்களுமாய் ஓய்வதற்கு முன்னும்; பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்களின் கண்கள் இருண்டு போவதற்கு முன்னும்;
4 இயந்திரக்கல் சுழலும் ஒலி மெலிந்துபோக, தெரு வாயிற் கதவுகள் அடைபட்டு, பறவைகள் கூவ, மனிதர் எழுந்து, இசைக்கருவி இயக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழக்குமுன்னும்;
5 மேட்டுக்குப் பயந்து வழியிலே திகில் உண்டாக்கி, வாதுமை மரம் பூத்து, வெட்டுக் கிளி பெருத்து, கப்பாரீச் செடியின் தழைகள் உதிருமுன்னும்; மனிதன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதனால் தூங்குகிறவர்கள் வீதியிலே திரியுமுன்னும்;
6 வெள்ளிக்கயிறு அறுந்துபோய், பொன் (தெப்பம்) அவிழ்க்கப் பட்டு, ஊற்றினருகே குடம் உடைந்து, கேணியண்டையில் அதன் கப்பி உடைந்து போகு முன்னும்;
7 மண்ணால் ஆனது தான் தோன்றின பூமிக்கே மறுபடியும் போகுமுன்னும்; ஆவி அதனை அளித்த கடவுளிடம் திரும்பிச் சேருமுன்னும் - நீ உன்னைப் படைத்தவரை (நினைக்கக் கடவாய்).
8 வீணிலும் வீண் என்கிறான் (சங்கப் போதகன்); எல்லம் வீணே.
9 அன்றியும், சங்கப் போதகன் மிக்க ஞானமுள்ளவனாதலால், அவன் மக்களுக்கு அறிவு வழங்கி, தான் செய்ததையெல்லாம் அவர்களுக்கு விவரித்து சொல்லியதுமன்றி, கவனமாய்க் கேட்டு ஆராய்ந்து பல நீதி மொழிகளையும் எழுதினான்.
10 அவன் பயனுள்ள வார்த்தைகளைச் சொல்ல வகை தேடினான்; செவ்வையும் உண்மையுமான பல நூல்களை இயற்றினான்.
11 ஞானிகளின் கூற்றுகள் தாற்றுக் கோல்கள் போலவும், (சுவரில்) அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கின்றன. அவை பல அறிஞரின் ஆலோசனைப்படி ஒரே மேய்ப்பனால் அளிக்கப் பட்டன.
12 என் மகனே, இவை உனக்குப் போதும். பல நூல்களை இயற்றுவதிலும் முடிவு இல்லை; அதிகம் ஆலோசிப்பதிலும் உடலுக்கு நலம் இல்லை.
13 இப்போதகத்தின் இறுதிப் பகுதியை எல்லாரும் கவனித்துக் கேட்கக் கடவோம்: கடவுளுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வருவதே மனிதர் யாவர்மேலும் சுமந்த கடமை;
14 மனிதர் செய்து வருகிற புண்ணிய பாவமோ தவறோ எவ்விதமானாலும், அவைகளையெல்லாம் கடவுள் நீதி நியாயத்தின்படி தீர்ப்புச் செய்வார்.