அதிகாரம் 01
1 இஸ்ராயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலமோனின் பழமொழிகள்.
2 ஞானத்தையும் ஒழுக்கத்தையும் அறியவும், பிரித்தறியும் ஆற்றலை அளிக்கவும், உண்மைக் கோட்பாட்டை அறியவும்,
3 நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் அடையவும்.
4 சிறுவர்க்கு அறிவுக் கூர்மையும், வாலிபர்க்கு அறியவும் அறிவாற்றலும் தரவும் (உதவும்).
5 ஞானமுள்ளவன் அவற்றைக் கேட்டு மிகுந்த ஞானியானவன். அறிவுடையோன் அவற்றைக் கையாளும் வகை தெரிவான்.
6 அவன் பழமொழியையும் அதன் விளக்கத்தையும் ஞானிகளுடைய வார்த்தைகளையும் அவர்களுடைய மறைமொழிகளையும் நிதானித்து அறிவான்.
7 தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம். மதியீனரோ ஞானத்தையும் போதனையையும் புறக்கணிக்கின்றனர்.
8 என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேள்; உன் தாயின் கட்டளையைக் கைநெகிழாதே.
9 (அவை) உன் தலைக்கு அருளும், உன் கழுத்துக்கு அணியும்போல் இருக்கும்.
10 என் மகனே, பாவிகள் உன்னைப் புகழ்ந்து ஏமாற்றப் பார்த்தாலும் நீ அவர்களுக்கு இணங்காதே.
11 அவர்கள் சொல்லுவதாவது: நீ எங்களோடு வா. நாம் தந்திரமாய்க் கொலை செய்வோம். குற்றமற்றவனுக்கு விரோதமாய்க் கண்ணி வைப்போம்.
12 குழியில் இறங்கினவனை நரக பாதாளம் (விழுங்குவது) போல், நாம் அவனை உயிருடன் விழுங்கி விடுவோம்.
13 அவனது ஏராளமான விலைமதிக்க முடியாத சொத்தும் உடைமையும் எங்களுடையன ஆகும். அவைகளால் எங்கள் வீடுகள் நிரம்பும்.
14 (ஆதலால்) நீயும் எங்களுடன் பங்குக்கு நில். நம் அனைவருடைய பையும் ஒன்றாய் இருக்கட்டும்;
15 (என்றாலும்), என் மகனே நீ அவர்களோடு நடவாமல், அவர்களுடைய வழிகளில் நின்று உன் கால்களை விலக்கு.
16 ஏனென்றால், அவர்களுடைய கால்கள் தீமையை நோக்கி ஓடி, இரத்தத்தைச் சிந்த விரைகின்றன.
17 ஆனால், இறகுள்ள பறவைகளின் கண்முன் வலை விரிப்பது வீண்.
18 அவர்கள் தங்கள் உயிருக்கே உலை வைப்பதுமன்றி, தங்கள் ஆன்மாவுக்கு விரோதமாய் வஞ்சனையையும் ஏற்படுத்துகிறார்கள்.
19 பேராசைக்காரர் எல்லாருடைய வழிகளும் அவ்விதமானவை. அவை பொருளாசை கொண்டவர்களின் ஆன்மாக்களைக் கவர்கின்றன.
20 ஞானம் வெளியில் முழங்குகின்றது; தெருக்களில் தன் குரலை எழுப்புகின்றது;
21 மக்கட் சமுதாயத்தின் தலையில் கூவுகின்றது. நகரத்தின் வாயில்களில் அது தன் வசனங்களை எடுத்துரைப்பதாவது:
22 சிறுவர்களே, எதுவரையிலும் சிறுபிள்ளைத்தனத்தை நேசிப்பீர்கள் ? அறிவிலிகள் எதுவரைக்கும் தங்களுக்குக் கேடானவைகளை நாடுவார்கள் ? விவேகமற்றவர்கள் எதுவரையிலும் அறிவைப் பகைத்து வருவார்கள் ?
23 என் கண்டன வார்த்தைகளைக் கேட்டுத் திரும்புங்கள். இதோ என் (ஏவுதலை) உங்களுக்குத் தோற்றுவிப்பேன்; என் வார்த்தைகளையும் உங்களுக்குக் காண்பிப்பேன்.
24 நான் கூப்பிட்டேன்; நீங்கள், கேட்க மாட்டோம் என மறுத்தீர்கள். நான் என் கையை நீட்டினேன்; அதை உற்றுப்பார்த்தவன் ஒருவனும் இல்லை.
25 நீங்கள் என் ஆலோசனை அனைத்தையும் இகழ்ந்தீர்கள்; என் கண்டனங்களையும் கைவிட்டு விட்டீர்கள்.
26 நீங்கள் இறக்குந்தறுவாயில் இருக்கிறபோது நான் நகைப்பேன். நீங்கள் (அதற்குப்) பயந்திருக்கிறீர்கள்; அது உங்களுக்கு நேரிடுகையில் நான் உங்களைக் கேலி செய்வேன்.
27 திடீர் ஆபத்து உங்கள்மேல் விழுகையில், புயலைப்போல் சாவு தாக்குகையில், தொல்லையும் துன்பமும் உங்கள்மீது வருகையில்,
28 அப்போது என்னைக் கூவி அழைப்பீர்கள்; நானோ கேளேன். அவர்கள் அதிகாலையில் எழுந்திருப்பார்கள்; ஆனால், என்னைக் காணவுமாட்டார்கள்.
29 ஏனென்றால், அவர்கள் என் போதகத்தை மிகப் பகைத்ததுமன்றி, தெய்வ பயத்தையும் கைக்கொள்ளவில்லை.
30 என் ஆலோசனைக்கு அமையாததுமன்றி, என் கண்டனம் அனைத்தையும் புறக்கணித்தும் விட்டார்கள்.
31 அதன் நிமித்தம் அவர்கள் தங்கள் ஆலோசனைகளில் நிறைவு காண்பார்கள்.
32 சிறுவரின் அருவருப்பு அவர்களைக் கொல்லும்; அறிவிலிகளின் செல்வாக்கு அவர்களை நாசமாக்கும்.
33 ஆனால், எனக்குச் செவி கொடுப்பவன் அச்சமின்றி இளைப்பாறுவான்; தீமைகளிலும் அச்சமற்றவனாய்ப் பெருஞ் செல்வத்தில் திளைத்திருப்பான்.
அதிகாரம் 02
1 என் மகனே, நீ என் வாக்கியங்களை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னகத்து மறைத்து வைப்பாயானால் (பயனடைவாய்).
2 ஞானத்திற்குச் செவிசாய்த்து, விவேகத்தின்பால் உன் இதயத்தைத் திருப்புவாயாக.
3 ஏனென்றால், ஞானத்தைக் கெஞ்சி மன்றாடி, உன் இதயத்தின் விவேகத்தின் வழி திருப்புவாயானால்,
4 பணத்தைப்போல அதைத் தேடி புதையலைப்போல அதைத் தோண்டி எடுப்பாயானால், நீ தெய்வ பயத்தை உணர்வாய்;
5 கடவுளுடைய போதகத்தையும் கண்டுபிடிப்பாய். ஏனென்றால், ஞானத்தைத் தருகிறவர் ஆண்டவரே.
6 அவருடைய வாயினின்றே விவேகமும் அறிவும் புறப்படுகின்றன.
7 அவர் நேர்மையுடையோரைக் காப்பாற்றுகிறார்.
8 நீதியின் வழிகளிலும், மாசற்றவரின் நெறிகளிலும் அவர்களை நிலைப்பெறச் செய்வார்.
9 அப்போதன்றோ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நன்னெறி அனைத்தையும் நீ கண்டு பிடிப்பாய் ?
10 ஞானம் உன் மனத்திற்குள் நுழைந்து, தெய்வ போதகத்தை உன் ஆன்மா விரும்பினால்,
11 அறிவுரை உன்னை ஆதரிக்கும்; விவேகம் உன்னைக் காக்கும்.
12 அதனால், தீய வழியினின்றும், அக்கிரமங்களைப் பேசுகிற மனிதர்களினின்றும், நீ காப்பாற்றப்படுவாய்.
13 இவர்கள் செவ்வழியை விட்டு, இருள் நெறிகளில் உலாவுகிறார்கள்.
14 தீமை செய்யுங்கால் மகிழ்கின்றார்கள்; மிகத் தீய செயல்களில் அக்களிக்கிறார்கள்.
15 இவர்களுடைய வழிகள் தீயவையும், இவர்களுடைய அடிச்சுவடுகள் அவமானத்துக்குரியனவுமாய் இருக்கின்றன.
16 நீயோ (ஞானத்தைப் பெற்று) பிற பெண்ணினின்றும், இனிய சொற்களைப் பகரும் அன்னிய பெண்ணினின்றும் உன்னைத் தப்புவித்துக் கொள்வாய்.
17 அவ்வித மாதர் தங்கள் இளமையின் காவலனைக் கைநெகிழ்ந்தார்கள்;
18 தாங்கள் கடவுளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் மறந்து விட்டார்கள். ஆகையால், அவர்களுடைய வீடு சாவைத் தரும். அவர்களுடைய காலடிகள் பாதாளங்களுக்குக் கூட்டிக் கொண்டு போகும்.
19 அவர்களிடம் செல்கின்ற அனைவரும் திரும்பமாட்டார்கள் என்பது மட்டுமின்றி, வாழ்வுப் பாதைகளையும் கண்டுபிடியார்கள்.
20 நீ நன்னெறியில் நடந்து, நீதிமான்களுடைய நெறிகளைக் காக்கக் கடவாய்.
21 ஏனென்றால், நேர்மையுள்ளோர் பூமியில் வாழ்வார்கள். உண்மையுள்ளோர் அதில் நிலையாய் இருப்பார்கள்.
22 பாவிகளோ பூமியினின்று அழிக்கப்படுவார்கள். அநீதி செய்வோரும் அதினின்று அகற்றப்படுவார்கள்.
அதிகாரம் 03
1 என் மகனே, என் சட்டத்தை மறக்க வேண்டாம்; என் கட்டளைகளையும் உன் இதயத்தில் காப்பாயாக.
2 ஏனென்றால், அவை உனக்கு நீடிய ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் சமாதானத்தையும் தரும்.
3 இரக்கமும் உண்மையும் உன்னை விட்டு அகலாதிருக்கட்டும். அவற்றை உன் கழுத்துக்கு (ஆரமாய்ச்) சூடுவாய்; உன் இதயத்தில் அவற்றைப் பதிய வைப்பாய்.
4 அப்போது நீ கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக அருளையும் நல்லறிவையும் கண்டடைவாய்.
5 நீ உன் விவேகத்திலேயே ஊன்றி நில்லாமல், உன் முழு இதயத்துடனே ஆண்டவர்மேல் நம்பிக்கை வை.
6 உன் வழிகள் அனைவற்றிலும் அவரை நினைப்பாயாகில், அவர் உன்னை வழி நடத்துவார்.
7 உனக்கு நீயே ஞானியாய் இராதே. கடவுளுக்குப் பயந்து தீமையினின்று விலகு.
8 அப்பொழுது நீ உடல் நலனுடன் இருப்பாய். உன் எலும்புகளும் நன்னீரால் நிறைக்கப்படும்.
9 உன் சொத்தைக் கொண்டு ஆண்டவரை வணங்கு. உன் எல்லா விளைவுகளின் முதற்பலன்களையும் அவருக்கு ஒப்புக்கொடு.
10 அப்போது உன் களஞ்சியங்கள் தானியத்தால் நிறையும். உன் கொடி முந்தரிப் பழ ஆலைகளும் சாற்றால் நிரப்பப்படும்.
11 ஆண்டவருடைய கண்டனத்தை, என் மகனே, நீ தள்ளிவிடாதே. அவரால் கண்டிக்கப்படுகையிலும் சோர்ந்து போகாதே.
12 ஏனென்றால், ஆண்டவர் தாம் நேசிப்பவனைக் கண்டிக்கிறார். தந்தை தன் மகனைப்பற்றி மகிழ்வதுபோல் அவரும் மகிழ்கிறார்.
13 ஞானத்தைக் கண்டுபிடித்து விவேகத்தால் நிறைந்திருக்கும் மனிதனே பேறு பெற்றவன்.
14 அதன் நற்பயன் வெள்ளி வியாபாரத்தைக் காட்டிலும், அதன் கனிகள் முதல் தரமான தூய தங்கத்தைக் காட்டிலும் மேம்பட்டனவாம்.
15 (ஞானம்) சொத்துகள் அனைத்திலும் அதிக விலையுள்ளது. விரும்பத் தக்கவையெல்லாம் அதற்கு இணைகூறத் தக்கனவல்ல.
16 அதன் வலப்பக்கத்தில் நாட்களின் நீட்சியும், இடப்பக்கத்தில் செல்வமும் மகிமையும் உண்டு.
17 அதன் வழிகள் அழகானவையும், அதன் அடிச்சுவடுகளெல்லாம் சமாதானமானவையுமாம்.
18 தன்னைக் கைக்கொள்பவர்களுக்கு அது வாழ்வு தரும் மரமாம். அதைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் பேறு பெற்றவன்.
19 ஆண்டவர் ஞானத்தால் உலகிற்கு அடித்தளமிட்டு, விவேகத்தால் வானங்களை நிறுவினார்.
20 (ஏனென்றால்) கடலினின்று நீர்த்தாரைகள் கிளம்புவதும், நீராவிகள் மேகங்களாகிப் பனியைப் பொழிவதும் அவருடைய ஞானத்தாலேயே.
21 என் மகனே, இவை உன் கண்களினின்று மறையாதிருக்க நீ கட்டளையையும் ஆலோசனையையும் கைக்கொண்டு நிறைவேற்று.
22 அவை உன் ஆன்மாவுக்கு உயிராகவும், உன் கழுத்திற்கு அணியாகவும் இருக்கும்.
23 அப்போது நீ நம்பிக்கையுடன் உன் வழியில் நடப்பாய்; உன் காலும் இடறமாட்டாது.
24 நீ உறங்கும்போது பயப்பட மாட்டாய்; இளைப்பாறுவாய். உன் உறக்கம் இன்பமாய் இருக்குமேயன்றி,
25 திடீர்ப் பயங்கரத்தாலும் உன்மேல் தாக்கும் தீயோருடைய வலிமையாலும் நீ பயப்பட மாட்டாய்.
26 ஏனென்றால் ஆண்டவர் உன் பக்கத்தில் இருப்பார். அவரே நீ சிக்கிக் கொள்ளாதபடி உன்னைக் காப்பார்.
27 நன்மை புரிய முயல்கிறவனை நீ விலக்காதே. உன்னால் இயலுமானால், நீயும் நன்மை செய்.
28 நீ அந்நேரமே தருமம் செய்யக் கூடியவனாய் இருக்கையில், போய்த் திரும்பி வா; உனக்கு நாளை தருவேன் என்று உன் நண்பனுக்குச் சொல்லாதே.
29 உன்பால் தன் நம்பிக்கையை வைத்திருக்கும் நண்பனுக்குத் தீமை புரியக் கருதாதே.
30 ஒருவன் உனக்கு யாதொரு தீங்கும் புதியாதிருக்கையில், அம் மனிதனுக்கு விரோதமாய் வீணே வழக்காடாதே.
31 அநீதனைக் கண்டுபாவியாதே. அவன் வழிகளையும் பின்பற்றாதே.
32 ஏனென்றால், சூதுள்ளவன் எவனோ அவன் ஆண்டவருக்கு அருவருப்பாய் இருக்கிறான். நேர்மையாளரோடுதான் அவர் உரையாடுவார்.
33 அக்கிரமியின் வீட்டிற்கு அவர் வறுமையை அனுப்புவார். நீதிமான்களின் உறைவிடங்களை ஆசீர்வதிப்பார்.
34 கபடமுள்ளோரைப் புறக்கணித்து, சாந்தமுடையோர்க்குத் (தம்முடைய) அருளைத் தந்தருள்வார்.
35 ஞானிகள் மகிமை பெறுவார்கள். அறிவிலிகளின் உயர்வோ இழிவேயாம்.
அதிகாரம் 04
1 மக்களே, (உங்கள்) தந்தையின் போதனையைக் கேளுங்கள், விவேகத்தை அறியும்படி கவனமாய் இருங்கள்.
2 நான் உங்களுக்கு நற்கொடையைக் கொடுப்பேன். என் சட்டத்தைக் கைநெகிழாதீர்கள்.
3 ஏனென்றால், நான் என் தந்தைக்கு ஓர் இளைய மகனாகவும், என் தாயின் முன்பாக ஒரே புதல்வனாகவும் இருந்தேன்.
4 அவர் எனக்குப் படிப்பித்து உரைத்ததாவது: உன் இதயம் என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதாக. என் கட்டளைகளைக் கைக் கொண்டு ஒழுகு. அப்படிச் செய்தால்தான் வாழ்வு பெறுவாய்.
5 ஞானமுள்ளவனும் விவேகமுள்ளவனுமாய் இரு. என் வாயின் வார்த்தைகளை மறக்கவும் வேண்டாம்; விட்டு விலகவும் வேண்டாம்.
6 அவற்றைக் கைநெகிழாதே; அவை உன்னைக் காக்கும். அவற்றை நேசி; அவை உன்னை ஆதரிக்கும்.
7 ஞானத்தைத் தேடுவதே ஞானத்தின் தொடக்கமாம். உன் சொத்து அனைத்தையும் காட்டிலும் விவேகத்தையே அடைய முயற்சி செய்.
8 நீ அதைப் பற்றிக்கொள்; அது உன்னை உயர்த்தும். நீ அதைத் தழுவிக்கொண்டாயாகில், அதனால் மகிமை பெறுவாய்.
9 அது உன் தலைக்கு மிக்க அழகைத் தந்து, மகிமை பொருந்திய முடியால் உன்னைக் காக்கும்.
10 கேள், என் மகனே, உன் வாழ்நாள் மிகும்படியாக என் வார்த்தைகளைக் கைக்கொள்.
11 நான் உனக்கு ஞானத்தின் நெறியைக் காண்பிப்பேன்; நேர்மையின் நெறிகளில் உன்னை நடத்துவேன்.
12 அவற்றுள் நீ நுழைந்தால், உன் அடிகள் நெருக்குறுவன அல்ல; ஓடினாலும் உனக்கு இடறல் இராது.
13 போதகத்தைக் கடைப்பிடி. அதை விட்டுவிடாதே. அதுவே உன் வாழ்வாய் இருப்பதனால் அதைக் கைவிடாதே.
14 அக்கிரமிகளின் நெறிகளில் மகிழ்வோடு பின்தொடராதே. தீயோரின் வழியில் விரும்பிப் போகாதே.
15 அதனின்று ஓடி விலகு. அதன் வழியாயும் கடந்து செல்லாதே. அதைவிட்டு விலகு.
16 தீங்கு செய்தால் அல்லாமல் அவர்கள் தூங்குவதில்லை. ஒருவனை வஞ்சியாவிடில் அவர்களுக்கு உறக்கம் வராது.
17 அவர்கள் அக்கிரமமாகிய அப்பத்தை உண்டு, அநீதமாகிய பழச்சாற்றைக் குடிக்கின்றனர்.
18 நீதிமான்களுடைய நெறியோ ஒளி வீசும் வெளிச்சம்போல் உதித்து, நாள் முழுவதும் வளர்ந்தே துலங்குகின்றது.
19 அக்கிரமிகளின் வழி இருளுள்ளது. தாங்கள் வீழ்ந்து மடிவது எங்கேயென்று அவர்கள் அறியார்கள்.
20 என் மகனே, என் வார்த்தைகளைச் செவியுற்றுக் கேள். என் வாய் மொழிகளுக்கும் செவிகொடு.
21 அவை உன் கண்களினின்று அகலாதிருக்கடவன. உன் இதயத்திற்குள்ளேயே அவற்றைக் கட்டிக் காத்து வைத்திரு.
22 ஏனென்றால், அவற்றைக் கண்டுபிடிப்பவனுக்கு வாழ்வும், அவனது உடல் முழுவதற்கும் நலமாய் இருக்கும்.
23 உன் இதயத்தை எவ்வித எச்சரிக்கையுடனும் பாதுகாத்துக் கொள்; ஏனென்றால், வாழ்வே அதனின்றுதான் புறப்படுகின்றது.
24 அடாத வாயை உன்னிடமிருந்து அகற்று. அவதூறு பேசும் உதடுகளும் உன்னைவிட்டு அகல இருக்கக்கடவன.
25 உன் கண்கள் நேரானவற்றை நோக்கக்கடவன. உன் கண் இமைகளும் உன் அடிச் சுவடுகளுக்குமுன் செல்லக்கடவன.
26 உன் கால்களுக்குப் பாதையைச் செவ்வையாக்கு; உன் வழிகளெல்லாம் நிலைப்படுத்தப்படும்.
27 வலத்திலும் இடத்திலும் திரும்பாதே. உன் காலையும் தீமையினின்று விலக்கு. ஏனென்றால், வலத்தில் இருக்கின்ற வழிகளை ஆண்டவர் அறிகிறார்; இடத்தில் இருக்கின்றவையோ பொல்லாதவைகளாய் இருக்கின்றன. ஆனால், அவர் உன் நடைகளைச் செவ்வையாக்குவார்; உன்னைச் சமாதானத்தில் நடத்துவார்.
அதிகாரம் 05
1 என் மகனே, நான் உனக்குக் கற்றுக் கொடுக்கிற ஞானத்தைக் கவனி. என் ஞானம் நிறை வார்த்தைகளுக்கும் செவி கொடு.
2 அவ்வாறு செய்தால்தான் நீ உன் நினைவுகளைக் காக்கவும், உன் உதடுகள் என் போதனையை மதிக்கவுங் கூடும். பெண்ணின் பசப்புக்கு இணங்காதே.
3 வேசியின் உதடுகள் தேனைவிடத் துளிக்கின்றதாயும், அவள் தொண்டை தைலத்தைவிட மிக மென்மையானதுமாயும் இருக்கின்றன.
4 ஆனால், அவளுடைய முடிவுகள் மருக்கொழுந்துபோல் கசப்பானவையும், இருபுறமும் துவைந்த வாள்போல் கூரானவையுமாம்.
5 அவள் கால்கள் மரணத்துக்கு இறங்குகின்றன. அவளுடைய காலடிகளும் பாதாளமட்டும் ஊடுருவிச் செல்கின்றன.
6 வாழ்வு நெறியில் அவை நடப்பதில்லை. அவள் அடிகள் நிலையற்றனவும் ஆராய்ச்சிக்கு எட்டாதனவுமாய் இருக்கின்றன.
7 இப்படியிருக்க, என் மகனே, இப்போது எனக்குச் செவி கொடு. உன் வாயின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதே.
8 உன் வழியை அவளை விட்டுத் தூரமாக்கு, அவளுடைய வீட்டு வாயிலுக்கும் அண்மையில் போகாதே.
9 உன் மானத்தை அன்னியருக்கும், உன் வாழ்நாட்களைக் கொடியவருக்கும் கொடாதே.
10 கொடுத்தால், அன்னியர் உன்னாலே ஆற்றலுள்ளவராகக்கூடும். மேலும், உன் உழைப்பின் பலன் அவர்கள் வீட்டில் போய்ச் சேரும்.
11 அப்பொழுது உன் மாமிசத்தையும் உன் உடம்பையும் அழித்துக் கெடுத்த பின்பு, கடைசியில், நீ பெருமூச்செறிந்து புலம்பி:
12 ஐயோ! நான் அறிவுரையைப் பழித்ததும், என் இதயம் கண்டனங்களுக்கு அமையாததும் ஏன் ?
13 நான் எனக்கு அறிவுறுத்தியவர்களுடைய வாக்கைக் கேட்கவுமில்லை; என் ஆசிரியர்களுக்குச் செவி சாய்க்கவுமில்லை.
14 (ஆதலால்), ஏறக்குறைய எல்லாத் தீமைகளும் சபையிலும் சங்கத்தின் மத்தியிலும் என்மேல் விழுந்தன என்பாய்.
15 நீ உன் சொந்தக் கேணியின் நீரையும், உன் சொந்த ஊற்றின் தண்ணீரையும் குடி.
16 உன் தெருக்களில் உன் தண்ணீரைப் பாய்ச்சிப் பகிர்ந்து கொள்.
17 நீ (மட்டும்) தனியனாய் அவற்றைக் கொண்டிரு; அன்னியர் அக்காரியத்திலே உன் பங்காளிகளாய் இருத்தல் தகாது.
18 உன் ஊற்று ஆசி பெறுவதாக. உன் இளமையின் மனைவியோடு மகிழ்ந்திரு.
19 அவள் உனக்கு மிகவும் அன்பிக்குரிய பெண்மானும், மிகப்பிரியமுள்ள மான் குட்டியும்போல் இருக்கக்கடவாள். அவள் கொங்கைகள் உன்னை எப்போதும் இன்பத்தால் நிறைப்பன. இடைவிடாமல் அவளுடைய அன்பில் இன்பம் துய்ப்பாயாக.
20 என் மகனே, அன்னிய பெண்ணால் நீ மயங்கப் படுவது ஏன் ?
21 ஆண்டவர் மனிதனுடைய வழிகளை உற்றுப் பார்த்து, அவனுடைய காலடிகள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
22 அக்கிரமிகள் தங்கள் சொந்த அநீதங்களாகிய கண்ணிக்குள்ளே சிக்கிப்போய், பாவக் கயிறுகளாலேயே கட்டவும் படுகிறார்கள்.
23 அக்கிரமி கண்டனத்தை ஏற்றுக் கொள்ளாததனால் (தன் அக்கிரமத்தில்) மடிவான். அவன் தன் மிகுதியான அறிவீனத்தால் ஏமாற்றப்படுவான்.
அதிகாரம் 06
1 என் மகனே, நீ உன் நண்பனுக்குப் பிணையாளி யாகிவிட்டால் அன்னியனிடம் உன் கையைச் சிக்க வைத்து விட்டாய்.
2 உன் வாயின் வார்த்தைகளாலேயே வலையில் உட்பட்டும், உன் சொந்தச் சொற்களாலேயே பிடிபட்டும் போனாய்.
3 ஆகையால், நான் சொல்வதைக் கேட்டு, என் மகனே, உன்னை நீயே விடுவித்துக்கொள். உன் அயலானின் கையில் விழுந்து விட்டாய். ஆகையால், தப்பியோடத் துரிதப்படு.
4 உன் நண்பனைத் தூண்டி விடு. உன் கண்களுக்கு உறக்கத்தைத் தராதே. உன் கண்களும் தூங்குவன அல்ல.
5 வேடன் கையினின்று பறவையைப் போலவும், அவன் கையினின்று மான்குட்டியைப் போலவும் தப்பித்துக் கொள்ளப்பார்.
6 ஓ சோம்பேறியே, எறும்பினிடம் போய், அதன் வழிகளைக் கவனித்துப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்.
7 அதற்குக் தலைவனும் ஆசானும் அரசனும் இல்லாதிருந்தும்,
8 அது கோடைக்காலத்தில் தன் உணவை விரும்பி, பிற்காலத்திற்கு வேண்டியதை அறுப்புக் காலத்தில்தானே சேகரிக்கின்றது.
9 சோம்பேறியே, எதுவரை தூங்குவாய் ? உன் தூக்கதினின்று எப்போது எழுந்திருப்பாய் ? கொஞ்சம் தூங்குவேன்;
10 சற்றுநேரம் உறங்குவேன்; தூங்கும் பொருட்டுக் கொஞ்சம் கைகளை மடக்குவேன் என்கிறாய்.
11 அதற்குள்ளே எளிமை பிரயாணியைப் போலவும், வறுமை ஆயுதம் தாங்கியவனைப் போலவும் உனக்கு வந்து விடும். நீ சுறுசுறுப்புள்ளவனாய் இருந்தால் உன் விளைச்சல் நீரூற்றைப் போல் சுரக்க, வறுமை உன்னை விட்டு அகன்றோடிப் போகும்.
12 உண்மையை (மறுதலித்த) துரோகி ஒன்றுக்கும் உதவாத மனிதன். அவன் வாயினின்று பொல்லாத வாக்கு புறப்படும்.
13 அவன் கண்களால் சைகை காட்டி, காலால் தரையைத் தேய்த்து, கைச் சைக்கினையாய்ப் பேசுகிறான்.
14 அவன் தன் தீய இதயத்தில் தீமையையே சிந்தித்து, என்றும் அவன் சச்சரவுகளையே விதைக்கிறான்.
15 திடீரென அவனுக்குக் கேடே வந்து சேரும்; திடீரென நசுக்கவும் படுவான். அதற்குமேல் அவனுக்கு மருந்தும் இராது.
16 ஆண்டவருக்கு வெறுப்பைத்தரும் காரியங்கள் ஆறு. ஏழாவது காரியம்கூட அவருடைய மதிப்புக்கு வெறுப்புள்ளதாய் இருக்கும்.
17 (அவைகள் என்னவென்றால்): பெருமை கொண்ட கண்களும், பொய் பகரும் நாவும், மாசற்ற குருதியைச் சிந்தும் கைகளும்,
18 மிகக் கொடிய சிந்தனைகளைக் கருதுகின்ற இதயமும், தீமையில் ஓட விரையும் கால்களும், பொய்களைச் சொல்லுகின்ற கள்ளச் சாட்சியும்,
19 தன் சகோதரருக்குள் பிளவுகளை விதைக்கின்றவனுமேயாம்.
20 என் மகனே, உன் தந்தையின் கட்டளையை அனுசரி; உன் தாயின் சட்டத்தையும் கைநெகிழாதே.
21 இடைவிடாமல் அவற்றை உன் இதயத்தில் பதித்து உன் கழுத்தைச் சுற்றி வைத்துக் கொள்.
22 நீ உலாவும்போது அவை உன்னுடன் நடப்பனவாக; உறங்கும்போது உன்னைக் காப்பனவாக; விழித்தெழும்போது அவற்றுடன் பேசுவாயாக.
23 ஏனென்றால், கட்டளை விளக்காகவும், சட்டம் ஒளியாகவும், அறிவுரையின் கண்டனம் வாழ்க்கைக்குப் பாதையுமாம்.
24 அவற்றைக் கைக்கொண்டால், தீய பெண்ணினின்றும் அன்னிய பெண்ணின் இச்சக நாவினின்றும் காப்பாற்றப்படுவாய்.
25 உன் இதயம் அவளுடைய அழகை இச்சியாமல் இருக்கும். அவளுடைய சைக்கினைகளிலும் நீ சிக்கிக்கொள்ள மாட்டாய்.
26 ஏனென்றால், வேசியின் விலை அற்பமேயெனினும், அப்படிப்பட்ட பெண் ஆடவரின் அருமையான ஆன்மாவையே கவர்கின்றாள்.
27 தன் ஆடைகள் வேகாமல் மனிதன் தன் நெஞ்சத்து நெருப்பை ஒழிக்கக் கூடுமோ ?
28 அல்லது தன் உள்ளங்கால் வேகாமல் அனலை மிதிக்கக் கூடுமோ ?
29 அப்படியே தன் அயலானின் பெண்ணிடம் போய் அவளைத் தீண்டி விட்டவன் எவனோ, அவன் சுத்தமாய் இரான்.
30 ஒருவன் திருடி விட்டாலும் குற்றம் பெரிதன்று. ஏனென்றால், பசியால் வருந்தியதால் உயிரைக் காப்பாற்ற அவன் (திருடுகிறான்).
31 அவன் பிடிப்பட்டாலோ ஏழு மடங்கு கொடுத்து உத்தரிப்பான்; மேலும் தன் வீட்டின் பொருள் முழுவதுங்கூடக் கையளிப்பான்.
32 விபச்சாரக்காரனோ மதியீனத்தால் தன் ஆன்மாவையே இழக்கிறான்.
33 அவனே தனக்கு வெட்கத்தையும் ஈனத்தையும் தேடிக்கொள்கிறான். அவனுடைய அவமானம் ஒருபோதும் அழியாது.
34 ஏனென்றால், அந்த (விபச்சாரியினுடைய) கணவனின் பொறாமையும் எரிச்சலும் பழி நாளில் விபசாரனை மன்னிக்கமாட்டா.
35 அவன் எவனுடைய வேண்டுகோளுக்கும் இணங்கான்; பரிகாரமாக ஏராளமான கொடைகளையும் ஏற்றுக் கொள்ளான்.
அதிகாரம் 07
1 என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொண்டு ஒழுகு.
2 என் கட்டளைகளையும் உன் மனத்திலே (செல்வம்போல்) கட்டிக் காத்துவை. உன் கட்டளைகளை உன் கண் விழியைப் போல் காத்துக்கொள். என் சட்டத்தை அனுசரித்து வந்தால் வாழ்வு பெறுவாய்.
3 அதை உன் விரல்களிலும் கட்டு; பலகைகளில் (எழுதி வைத்தாற்போல்) அதை உன் இதயத்திலும் எழுதி வை.
4 ஞானத்தை நோக்கி: நீ என் சகோதரி என்று சொல்.
5 விவேகத்தை உன் தோழியென்று அழை. அவை நயமாயும் இனிமையாயும் பேசுகிற அன்னிய பெண்ணினின்று உன்னைக் காக்கும்.
6 ஏனென்றால், என் வீட்டுப் பலகணி வழியாய் நான் வெளியே பார்த்தேன்.
7 சில வாலிபர்களையும் அவர்களிடையே ஒரு மதிகெட்ட இளைஞனையும் கண்டேன்.
8 அவன் மூலையோரமாய்த் தெருவில் சென்று ஒருத்தியுடைய வீட்டு வழியாய் நடக்கிறான்.
9 பொழது சாய்ந்து, மாலை மயங்கி, இரவு வந்து காரிருள் கவிகிற நேரமாயிற்று.
10 இதோ, தாசியின் கோலம் பூண்டு ஆன்மாக்களைக் கவர ஆயத்தமான ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்படுகிறாள். (அவள்) வாயாடியும், எங்கும் போகிறவளும், அடக்கமும் பொறுமையும் அற்றவளும்,
11 கால் வைத்துத் தன் வீட்டில் தங்கமாட்டாதவளுமாம்.
12 அவள் மாறி மாறி வீட்டுக்கு வெளியேயும் தெருவிலும் மூலையோரங்களிலும் பதிவிருப்பவள்.
13 அவள் அவ்விளஞனைக் கட்டிப் பிடித்து, முத்தமிட்டு, நாணமற்ற முகத்தோடு கொஞ்சிச் சொல்வதாவது:
14 என் எண்ணம் நிறைவேறும்படி நான் பலியை நேர்ந்து, இன்றுதானே என் நேர்ச்சைகளைச் செலுத்தினேன்.
15 ஆகையால் உன்னைக் காண ஆசைப்பட்டே நான் புறப்பட்டு உனக்கு எதிர் கொண்டு வந்தபோது, இதோ உன்னைக் கண்டு பிடித்தேன்.
16 என் கட்டிலைக் கயிறு கொண்டு பின்னியுள்ளேன். எகிப்தினின்று கொண்டு வரப்பட்ட சித்திர இரத்தினக் கம்பளத்தால் அதை மூடியுள்ளேன்.
17 என் படுக்கையை வெள்ளைப்போளம், கரியபோளம், இலவங்கம் முதலியவற்றின் தைலத்தாலும் தெளித்துள்ளேன்.
18 வா, பொழுது புலருமட்டும் கொங்கைகளின் இன்பம் நுகர்ந்து, ஆசைதீர அள்ளி அணைத்துக் களித்திருப்போம்.
19 ஏனென்றால், என் கணவன் வீட்டில் இல்லை; நெடு நாளையப் பயணம் சென்றுள்ளான்.
20 அவன் பணப்பையைத் தன்னுடன் கொண்டுபோயிருக்கிறான். அவன் பௌர்ணமியன்றுதான் வீட்டுக்குத் திரும்பி வருவான்.
21 (இவ்வாறு) அவள் மாயப் பேச்சுகளால் அவனைச் சிக்கவைத்து, தன் உதடுகளின் கொஞ்சல்களால் அவனை இழுத்துக்கொண்டாள்.
22 பலிக்காகக் கூட்டிக்கொண்டு போகப்படும் எருதுபோலும், மோக வெறியால் குதித்து நிற்கும் செம்மறிக்கிடாயைப் போலும், மதியீனனான அவன், தான் சங்கிலி இடப்பட இழுத்துக்கொண்டு போகப்படுகிறான் என்று அறியாமல், உடனே அவளைப் பின்செல்கிறான்.
23 தன் உயிர் சேதமாகப் போகிறதென்று அறியாத பறவை வலைக்குள் வேகமாகப் பறந்தோடுவதுபோல் அவனும் போகிறான். ஈட்டி அவனுடைய ஈரலைக் குத்தி ஊடுருவுமட்டும் (காரியத்தைக் கண்டுபிடித்து அறியமாட்டான்).
24 ஆகையினால், என் மகனே, என்னைக் கேள்.
25 என் வாயின் வார்த்தைகளைக் கவனி. உன் மனம் அவளுடைய வழிகளில் இழுக்கப்படாதிருப்பதாக; அவளுடைய அடிச்சுவடுகளால் வஞ்சிக்கப்படாதிருப்பதாக.
26 ஏனென்றால், அவள் பலரைக் காயப்படுத்தி விழத்தாட்டியுள்ளாள். மிக வல்லர்களுங்கூட அவளால் கொல்லப்பட்டார்கள்.
27 அவளுடைய வீடு சாவின் அந்தரங்கம்வரைக்கும் ஊடுருவிச் செல்கின்ற நரக வாயிலேயாம்.
அதிகாரம் 08
1 ஞானம் கூக்குரலிடுகிறதில்லையோ ? விவேகம் தன் ஓசையை வெளிப்படுத்துகிறதில்லையோ ?
2 அது வழியின்மேல் உயர்ந்த மலைகளிலும் நடுவழிகளிலும் நின்று கொண்டு,
3 நகரின் கதவுகள் அண்மையிலும் வாயில்களிலும் நின்று பேசிச் சொல்வதாவது:
4 ஓ மனிதரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன். என் குரலோசை மனித மக்களை நோக்கி ஒலிக்கிறது.
5 சிறுவர்களே, சூட்சத்தை அடையுங்கள். ஞானமற்றோரே, சிந்தித்து உணர்வு பெறுங்கள்.
6 நான் மேலான காரியங்களைக் குறித்துப் பேசப்போகிறபடியால், கேளுங்கள். நேர்மையானவர்களைப் போதிப்பதற்காக உன் உதடுகள் திறக்கப்படும்.
7 என் வாய் உண்மையைக் கற்பிக்கும். என் உதடுகள் அக்கிரமத்தை வெறுக்கும்.
8 என் உரைகள் யாவும் நீதியானவை. அவற்றில் தீங்கும் பொல்லாப்பு முள்ளது எதுவுமே கிடையாது.
9 அவை அறிவுடையோர்க்கு நேர்மையானவையும், அறிவால் கண்டுபிடிப்பவர்களுக்கு நீதியானவையுமாய் இருக்கின்றன.
10 பணத்தையன்று, என் போதகத்தையே பெற்றுக்கொள்ளுங்கள். பசும் பொன்னைவிட என் படிப்பினையையே அதிகமாய் விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.
11 ஞானம் மிக விலை யுயர்ந்தது, அனைத்திலும் அதிக உத்தமமானது. நாடத்தக்கது எதுவும் அதற்கு இணையாகக் கூடியதன்று.
12 ஞானம் என்னும் நான் இறைவனின் திட்டத்தில் வாழ்கின்றேன்; கற்றறிந்த சிந்தனைகளின் இடையிலும் இருக்கின்றேன்.
13 தெய்வ பயம் தீமையைப் பகைக்கின்றது. நானும் அகந்தையையும் வீம்பையும் தீயவழியையும், இரு பொருள்பட மொழியும் நாவையும் வெறுக்கிறேன்.
14 ஆலோசனையும் நடுநீதியும் என்னுடையவை; விவேகமும் என்னுடையது; வலிமையும் என்னுடையதே.
15 அரசர் ஆள்வதும், சட்டங்கள் செய்வோர் நியாயமானவைகளைக் கற்பிப்பதும் என்னாலேதான்.
16 என்னாலேயே தலைவர்கள் கட்டளையிட்டும், வல்லவர்கள் நீதியை விதித்தும் வருகிறார்கள்.
17 என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன். என்னை நோக்கிய வண்ணம் அதிகாலையில் விழிப்பவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
18 சொத்தும் மகிமையும் மேலான செல்வமும் நீதியும் என்னோடு இருக்கின்றன.
19 ஏனென்றால், என் கனி பொன்னையும் இரத்தினக் கல்லையும்விட அருமையானதும், என் தளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளியை விட அதிக நலமுமாய் இருக்கின்றன.
20 நான் நீதியின் பாதைகளிலும் நியாய வழிகள் மத்தியிலும் உலாவுகின்றேன்.
21 இவை அனைத்தும் என்னை நேசிக்கின்றவர்களைச் செல்வராக்கவும் அவர்களுடைய செல்வங்களை நிறைக்கும்படியாகவுமே.
22 ஆண்டவர் தம் வழிகளின் தொடக்கத்திலேயே, ஆதியில் எதையும் படைக்குமுன்னரே, என்னை உரிமை கொண்டிருந்தார்.
23 ஆதியில், பூமி உண்டாகு முன்னமே, நித்தியம் தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்.
24 பாதாளங்கள் இன்னமும் இருக்கவில்லை; நானோ ஏற்கெனவே கருத்தரிக்கப்பட்டிருந்தேன். நீரூற்றுகள் இன்னும் புறப்படலில்லை;
25 பாரச் சுமையுள்ள மலைகளும் இன்னும் உண்டாகவில்லை; நானோ குன்றுகளுக்கு முன்னமே பிறப்பிக்கப்பட்டிருந்தேன்.
26 இன்னும் நிலத்தையும் ஆறுகளையும் உலகின் துருவங்களையும் (கடவுள்) படைக்கவில்லை.
27 அவர் வான மண்டலங்களை நிறுவ நினைக்கையிலும் நான் கூடவிருந்தேன். அவர் நிச்சயமான சட்டத்தாலும் எல்லைகளாலும் பாதாளங்களைச் சுற்றி அடைக்கையிலும்,
28 அவர் மேலே வானத்தை உறுதிப்படுத்தி நீர்த்திரள்களை முறையாக நிறுத்தி வைக்கையிலும், கடலுக்குக் கோடி கட்டித் தன் எல்லையைக் கடக்காதபடி நீருக்குச் சட்டம் அமைக்கையிலும்,
29 கடலுக்குக் கோடி கட்டித் தன் எல்லையைக் கடக்காதபடி நீருக்குச் சட்டம் அமைக்கையிலும், பூமியின் அடித்தளங்களை நிறுத்திடுகையிலும்,
30 அவரோடுதானே நான் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தேன். நாள்தோறும் மகிழ்ந்துகொண்டும், எக்காலத்தும் அவர்முன்பாக விளையாடிக் கொண்டும்,
31 எல்லா உலகத்திலும் விளையாடிக் கொண்டும், இருந்தேன். என் மகிழ்ச்சியோ மனித மக்களுடன் இருத்தலேயாம்.
32 ஆகையால், என் மக்களே, இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள். என் வழிகளைக் காப்பவர் எவரோ அவரே பேறுபெற்றோர்.
33 என் படிப்பினையைக் கேட்டு ஞானிகளாய் இருங்கள்; அதை இகழ்ந்து தள்ளி விடாதீர்கள்.
34 நான் சொல்வதைக் கேட்டு, நாள்தோறும் என் வாயிலண்டை விழித்திருந்து, என் கதவு நிலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பவனே பேறுபேற்றவன்.
35 என்னைக் கண்டுபிடிப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரிடமிருந்து மீட்பையும் பெற்றுக்கொள்வான்.
36 ஆனால் எனக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்பவன் தன் ஆன்மாவைக் காயப்படுத்துவான். என்னைப் பகைக்கின்ற அனைவரும் சாவை நேசிக்கின்றார்கள்.
அதிகாரம் 09
1 ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டி, ஏழு தூண்களையும் அறுத்து நிறுத்தினது;
2 தன் பலி மிருகங்களையும் கொன்று, பழச் சாற்றையும் கலந்து வார்த்து விருந்து செய்தது.
3 அது தன் ஊழியக்காரிகளைக் கோட்டைக்கும், நகரத்தின் மதில்களுக்கும் அனுப்பி,
4 சிறுவனாய் இருப்பவன் எவனும் என்னிடம் வருவானாக என்று சொன்னது. விவேக மில்லாதவர்களுக்கு உரைத்ததாவது: வாருங்கள்; என் அப்பத்தை உண்டு,
5 உங்களுக்காக நான் கலந்து வைத்திருக்கும் பழச்சாற்றையும் குடியுங்கள்.
6 சிறுபிள்ளைத் தனத்தை விட்டுவிட்டு வாழுங்கள். விவேகத்தின் வழிகளில் நடந்து செல்லுங்கள்.
7 கேலி செய்பவனைக் கண்டிக்கிறவன் தனக்குத்தானே தீமை செய்கிறான். கொடியவனைக் கண்டிக்கிறவன் தனக்கே தீங்கு விளைவிக்கிறான்.
8 கேலி செய்பவனைக் கண்டியாதே; கண்டித்தால் உன்னைப் பகைப்பான். ஞானியைக் கடிந்து கொண்டாலோ அவன் உனக்கு அன்பு செய்வான்.
9 ஞானிக்கு வாய்ப்பு அளி; அவனுக்கு ஞானம் சேரும். நீதிமானைப் படிப்பி; அவனும் (படிப்பைப்) பெற்றுக்கொள்ள விரைவான்.
10 தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். விவேகமே தூயவர்களின் அறிவாம்.
11 ஏனென்றால், என்னால் உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும்; நீடிய ஆயுளும் கிடைக்கும்.
12 நீ ஞானியாயிருந்தால் அது உனக்கே இலாபம். நீ கேலி செய்பவனாயிருந்தாலோ நீயே தீமையைச் சுமப்பாய்.
13 மதி கெட்டவளும் சண்டைக்காரியும் பசப்பால் நிறைந்தவளும் வேறொன்றும் அறியாதவளுமான ஒரு பெண்,
14 நகரத்தின் ஓர் உயர்ந்த இடத்திலிருந்து இறங்கி, தன் வீட்டு வாயிலில் ஓர் ஆசனத்திலே அமர்ந்தாள்.
15 வழி கடந்து செல்கின்றவர்களையும், தங்கள் பாதையில் செல்கின்றவர்களையும் அழைத்து,
16 இளைஞனாய் இருப்பவன் என்னிடம் திரும்புவானாக என்றாள்;
17 அறிவில்லாதவனையும் பார்த்து, திருடின பழச்சாறு அதிக இனிமையானதும், திருடின அப்பம் அதிகச் சுவையுள்ளதுமாம் என்றாள்.
18 ஆனால், அங்கே அரக்கர்கள் இருக்கிறார்களென்றும், அவளுடைய விருந்தினர் நரக பாதாளங்களில் விழப்போகிறார்களென்றும் (அறிவில்லாதவர்) அறிகிறதில்லை.
அதிகாரம் 10
1 ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விக்கிறான். மதிகெட்ட மகனோ தன் தாய்க்குத் துன்பம் வருவிக்கிறான்.
2 அநியாயமாய்ச் சேர்த்த செல்வங்கள் யாதொரு பயனையுந் தராது. நீதியோ சாவினின்று விடுவிக்கும்.
3 நீதிமானின் ஆன்மாவை ஆண்டவர் பசியால் வருத்தார். தீயோரின் கண்ணிகளை அவர் அழித்துவிடுவார்.
4 சோம்பேறியின் கை வறுமையை உண்டாக்கினது. வல்லவரின் கையோ செல்வத்தைச் சேகரிக்கிறது. பொய்யானதை ஆதரவாகக்கொள்பவன் காற்றைத் தின்கிறவனைப்போலும், பறக்கும் பறவைகளைப் பிடிக்க முயல்கிறவனைப்போலும் ஏமாறுவான்.
5 அறுவடைக்காலத்தில் சேகரித்து வைக்கும் மகன் ஞானமுள்ளவன். ஆனால், கோடைக்காலத்தில் குறட்டைவிட்டு உறங்குகிற மகன் வெட்கத்தைத் தேடிக்கொள்வான்.
6 நீதிமானின் தலைமேல் ஆண்டவருடைய ஆசி தங்கும். அக்கிரமிகளின் வாயில் அநீதி மறைந்திருக்கிறது.
7 நீதிமானின் பெயர் புகழப்படும். அக்கிரமிகளின் பெயரோ இகழப்படும்.
8 இதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளைக் கைக்கொள்கிறான். மதிகெட்டவனோ வாயால் அடிபடுகிறான்.
9 நேர்மையாய் நடக்கிறவன் நம்பிக்கையாய் நடக்கிறான். தன் வழிகளைக் கெடுக்கிறவனோ வெளிப்படுத்தப்படுவான்.
10 கண்சாடை காட்டுகிறவன் துன்பத்தைக் கொடுப்பான். மதியீனனோ வாயால் அடிபடுவான்.
11 நீதிமானின் வாய் வாழ்வின் ஊற்று. அக்கிரமிகளின் வாயில் அநீதி மறைந்திருக்கிறது.
12 பகை சச்சரவுகளை எழுப்புகின்றது. நட்போ எல்லாப் பிழைகளையும் மூடுகின்றது.
13 ஞானியின் உதடுகளில் ஞானம் காணப்படும். இதயமற்ற மதியீனரின் முதுகிலோ பிரம்பு காணப்படும்.
14 ஞானிகள் தங்கள் மேலான அறிவைப் பாராட்டாமல் இருக்கிறார்கள். மதியீனனின் வாயோ அவமானத்திற்கு அடுத்திருக்கின்றது.
15 செல்வனின் பொருள் அவனுக்கு அரணுள்ள நகரமாம். ஏழையின் வறுமை அவன் அஞ்சுவதற்குக் காராணமாய் இருக்கும்.
16 நீதிமானின் செய்கை வாழ்விற்கு வழியாம். அக்கிரமியின் வினைகளோ பாவத்திற்கு வழியாம்.
17 அறிவுரையை அனுசரிப்பவன் வாழ்வுப் பாதையிலே நடக்கிறான். கண்டனங்களைக் கைநெகிழ்பவனோ அலைந்து திரிகிறான்.
18 பொய்யான உதடுகளில் பகை மறைந்திருக்கின்றது. நிந்தையைச் சொல்கிறவன் மதி கெட்டவன்.
19 நீண்ட பேச்சில் பாவம் இராமற் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனோ பெரிய விவேகி.
20 நீதிமானின் நாவு தூய்மைப்படுத்தப்பெற்ற வெள்ளியாம். அக்கிரமிகளின் இதயமோ ஒரு காசும் பெறாது.
21 நீதிமானின் உதடுகள் பலரைப் படிப்பிக்கின்றன. ஆனால், கற்றறியாதார் இதய அறியாமையால் இறப்பார்கள்.
22 கடவுளின் ஆசியால் மனிதர் பொருள்வளமுள்ளவராவர். துன்பமும் அவர்களைச் சேராது.
23 மதிக்கெட்டவன் விளையாட்டுத்தனமாய் அக்கிரமத்தைச் செய்கிறான். ஆனால் ஞானத்தால் மனிதன் திறமையுள்ளவனாவான்.
24 அக்கிரமி எதற்கு அஞ்சுகிறானோ அதுவே அவனை வந்தடையும். நீதிமான்களோ தாங்கள் நாடிய நன்மைகளை அடைவார்கள்.
25 கடந்து போகிற புயலைப்போல் அக்கிரமி (நிலையாய்) இரான். நீதிமானோ நித்திய அடித்தளம் போல் (இருப்பான்).
26 பற்களுக்குப் புளிப்பும் கண்களுக்குப் புகையும் எப்படியோ, அப்படியே சோம்பேறி தன்னை அனுப்பினவர்களுக்கு அமைவான்.
27 தெய்வ பயம் நாட்களை நீடிக்கச் செய்யும். அக்கிரமிகளுக்கு ஆண்டுகளும் குறைக்கப்படும்.
28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சி தரும். அக்கிரமிகளின் எண்ணமோ நாசமடையும்.
29 ஆண்டவருடைய வழி நேர்மையாளனுக்குத் திடனாகவும், தீமையைச் செய்கின்றவர்களுக்குத் திகிலாகவும் அமையும்.
30 நீதிமான் நித்தியத்துக்கும் நிலைப்பெறுவான். அக்கிரமிகளோ பூமியின்மேல் தங்கமாட்டார்கள்.
31 நீதிமானின் வாய் ஞானத்தைப் பிறப்பிக்கும். தீயோரின் நாவு நாசமடையும்.
32 நீதிமானின் உதடுகள் விருப்பமானவற்றையும், அக்கிரமிகளின் வாய் பொல்லாதவற்றையும் கவனிக்கின்றன.
அதிகாரம் 11
1 கள்ளத்தராசு ஆண்டவருக்கு அருவருப்பானது. சரி நிறையே அவருடைய திருவுளமாம்.
2 அகந்தை எங்கே இருக்கின்றதோ அங்கே அவமானமும், தாழ்ச்சி எங்கேயோ அங்கே ஞானமும் (உண்டு).
3 நீதிமான்களின் நேர்மை அவர்களை நடத்தும். தீயோரின் சதியோ அவர்களையே நாசமாக்கும்.
4 (கடவுள்) பழிவாங்கும் நாளில் செல்வம் பயன்படாது. நீதியோ சாவினின்று விடுவிக்கும்.
5 நேர்மையாளனின் நீதி அவன் நெறியைக் காக்கும். அக்கிரமி தன் அக்கிரமத்தில் வீழ்ந்து மடிவான்.
6 செவ்வையானோரின் நீதி அவர்களை விடுவிக்கும். தீயோர் தங்கள் சதிகளிலே சிக்கிக் கொள்வார்கள்.
7 தீய மனிதன் சாக, பின் யாதொரு நம்பிக்கையும் இராது. பெருமையை நாடுவோரின் எண்ணமும் அழிந்துபோகும்.
8 நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான். அக்கிரமியோ அவனுக்குப் பதிலாகக் கையளிக்கப்படுவான்.
9 கபடன் தன் நண்பனை வாயால் ஏய்க்கிறான். நீதிமான்களோ நன்மையான போதகத்தால் காப்பாற்றப்படுவார்கள்.
10 நீதிமான்களின் பேற்றைக் கண்டு நரகம் களிகூரும். அக்கிரமிகளின் அழிவைப் பார்த்து (மக்கள்) மங்களம் கூறுவார்கள்.
11 நீதிமான்களின் ஆசியாலே நகரம் செழித்தோங்கும். தீயோரின் வாக்கால் அழியும்.
12 தன் நண்பனை இகழ்பவன் எவனோ அவன் மதியீனன். ஆனால், விவேகமுள்ள மனிதன் (இகழ்ந்து) பேசான்.
13 வஞ்சனையாய் நடக்கிறவன் இரகசியங்களை வெளியாக்குகிறான். பிரமாணிக்கமுள்ளவனோ தன் நண்பனின் இரகசியத்தை மறைக்கிறான்.
14 ஆள்பவன் இல்லாத நாட்டில் குடி மக்கள் அழிந்து கெடுவர். ஆனால், மிக்க ஆலோசனைக்காரர் எவ்விடமோ அவ்விடம் குடி மக்கள் வாழ்வார்கள்.
15 அன்னியனுடன் பிணையாகிறவன் துன்பத்தால் வருந்துவான். வஞ்சனைகளுக்குத் தப்பித்துக் கொள்பவனோ நலமுடன் இருப்பான்.
16 நாணமுள்ள பெண் மகிமை பெறுவாள். வலியாரோ செல்வங்களை அடைவார்கள்.
17 இரக்கமுள்ள மனிதன் தன் ஆன்மாவுக்கு நன்மை செய்கிறான். கொடியவனோ தன் சுற்றத்தாரைப் புறக்கணிக்கிறான்.
18 அக்கிரமி செய்த வேலை நிலைகொள்ளாது. நீதியை விதைப்பவனோ உண்மையான ஊதியம் பெறுவான்.
19 சாந்தம் வாழ்வையும், தீமை செய்தல் மரணத்தையும் விளைவிக்கின்றன.
20 தீய இதயத்தோரை ஆண்டவர் வெறுக்கிறார். நேர்மையாய் நடக்கிறவர்களை அவர் விரும்புகிறார்.
21 கைக்குள் கை வைத்தாலும் தீயோன் குற்றமற்றவனாய் இரான். நீதிமான்களின் சந்ததியோ காப்பாற்றப்படும்.
22 மதியில்லாப் பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள பொன் வளையம் போலிருக்கும்.
23 நீதிமான்களின் ஆசை எல்லா நன்மையையும் பற்றியது. அக்கிரமிகளின் நம்பிக்கையோ கோபவெறியாம்.
24 சிலர் தங்கள் சொத்துகளைப் பகிர்ந்தும் பெரும் செல்வராகிறார்கள். சிலர் தங்களுக்குச் சொந்தமல்லாதவைகளைக் கவர்ந்தும் எப்போதுமே வறுமையில் உழல்கிறார்கள்.
25 நன்மையை நாடுகிற ஆன்மா நிறைவுபெறும். (மற்றவர்களைப்) பூரிக்கச் செய்கிறவன் தானும் பூரிப்படைவான்.
26 தானியத்தை மறைத்து வைக்கிறவன் குடிகளால் சபிக்கப்படுவான். ஆனால் விற்கிறவர்களுடைய தலைமேலோ கடவுளின் ஆசி இருக்கும்.
27 நன்மையைச் செய்யத் தேடுகிறவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். ஆனால் தீமையைத் தேடித் திரிகிறவன் அவைகளாலேயே நசுக்கப் படுவான்.
28 தன் சொத்தில் நம்பிக்கை வைக்கிறவன் வீழ்ந்தழிவான். நீதிமான்களோ பசுந்தளிரைப்போலத் தழைப்பார்கள்.
29 தன் இல்லத்தைக் குழப்புகிறவன் காற்றை உரிமையாகக் கொண்டிருப்பான். மதியீனனோ ஞானிக்குப் பணிவிடை புரிவான்.
30 நீதிமானுடைய கனி வாழ்வு தரும் மரமாம். ஆன்மாக்களைத் தனதாக்கிக் கொள்கிறவன் ஞானியாய் இருக்கிறான்.
31 நீதிமானே இவ்வுலகில் தண்டனை பெறுவானாயின், அக்கிரமியும் பாவியும் எவ்வளவு அதிகமாய்ப் (பெறுவார்கள்)!
அதிகாரம் 12
1 போதனையை நேசிக்கிறவன் அறிவை நேசிக்கிறான். கண்டனங்களைப் புறக்கணிக்கிறவனே ஞானமற்றவனும்.
2 நல்லவன் ஆண்டவரிடமிருந்து அருளைப் பெறுவான். தன் சொந்த எண்ணங்களில் ஊன்றியிருக்கிறவனோ அக்கிரமாய் நடக்கிறான்.
3 அக்கிரமத்தால் மனிதன் திடம் பெற மாட்டான். நீதிமான்களுடைய வேரும் அசைக்கப்படாது.
4 சுறுசுறுப்புள்ள மனைவி தன் கணவனுக்கு ஒரு முடியாம். அவமானத்துக்குரிய காரியங்களைச் செய்கிறவளோ அவனுடைய எலும்புகள் அழுகிப்போகும்படி செய்வாள்.
5 நீதிமானின் சிந்தனைகள் நீதியுள்ளன. அக்கிரமிகளின் ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளனவாம்.
6 அக்கிரமிகளின் வார்த்தைகள் பிறர் இரத்தத்தைச் சிந்துகின்றன. நீதிமான்களுடைய வாக்கியமோ அவர்களை விடுவிக்கும்.
7 அக்கிரமிகளைப் புரட்டி விட்டால் அவர்கள் இரார்கள். நீதிமான்களுடைய வீடோ நிலைபெற்றிருக்கும்.
8 மனிதன் தன் போதகத்தால் அறியப்படுவான். வீணனாகவும் மூடனாகவும் இருக்கிறவனோ அவமானத்துக்கு உட்படுவான்.
9 தனக்குத் தேவையானவைகளைத் தேடிக் கொள்கிற ஏழை, பெருமைக்காரனான உணவில்லாதவனைவிட மிகவும் நல்லவன்.
10 நீதிமான் தன் மிருகங்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறான். அக்கிரமிகளுடைய குடல்கள் கொடுமையுள்ளன.
11 தன் நிலத்தை உழுபவன் அப்பத்தால் நிறைவு காண்பான். இளைப்பாற்றியைத் தேடுகிறவன் மிகவும் மதி கெட்டவன். மதுபானம் குடிப்பதில் காலம் கழித்து மகிழ்கிறவன் நிந்தையைத் தன் கொத்தளங்களில் மீத்து வைக்கிறான்.
12 அக்கிரமியின் ஆசையே மிகக் கொடியவருடைய ஆதரவாம். நீதிமான்களுடையவரோ தழைத்து வரும்.
13 வாய்ப் பாவங்கள் நிமித்தமே தீயோனுக்கு நாசம் அணுகுகின்றது. நீதிமானோ இக்கட்டினின்று தப்பித்துக்கொள்வான்.
14 அவனவன் தன் சொந்த வாக்கின் கனியாகிய நலத்தால் றிரப்பப்படுவான். தன் கைகளின் செய்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குத் திருப்பித் தரப்படும்.
15 மதியீனன் கண்களுக்குத் தன் வழியே நல்ல வழியாகத் (தோன்றும்). ஞானமுள்ளவனோ ஆலோசனைகளைக் கேட்கிறேன்.
16 மதிகெட்டவன் தன் கோபத்தை உடனே காட்டுகிறான். பொல்லாப்பைப் பொருட்படுத்தாதவன் ஞானியாம்.
17 தான் அறிந்ததைப் பேசுகிறவன் நியாயத்துக்குச் சாட்சியாய் இருக்கின்றான். பொய் சொல்கிறவனோ வஞ்சகத்திற்கு சாட்சியாயிருக்கிறான்.
18 வாக்குறுதியை கொடுக்கிறவன் தன் மனசாட்சியால் கத்திபோல் குத்தப்படுகிறான். விவேகிகளின் நாவோ சுகமாய் இருக்கின்றது.
19 உண்மையை உரைக்கும் உதடு என்றென்றும் நிலையாய் இருக்கும். படபடத்த சாட்சியோ பொய்க்கு (தன்) நாவை இசைக்கிறான்.
20 தீங்கு நினைப்போரின் இதயம் வஞ்சனையானது. ஆனால், சமாதான ஆலோசனைகள் செய்கிறவர்களை மகிழ்ச்சி பின்தொடர்கின்றது.
21 நீதிமானுக்கு யாது நேரிட்டாலும் அது அவனைத் துன்புறுத்தாது. அக்கிரமிகளோ தீமையால் நிரப்பப்படுவார்கள்.
22 பொய்யர்களை ஆண்டவர் வெறுக்கின்றார். உண்மையாய் நடக்கிறவர்களை அவர் விரும்புகின்றார்.
23 கற்றவன் தன் அறிவைப் பாராட்டாமல் மறைக்கிறான். மதியீனரின் இதயமோ அறிவீனத்தை வெளிகாட்டுகின்றது.
24 வல்லவர்களின் கை ஆட்சி செலுத்தும். சோம்பலுள்ள கையோ கப்பங் கட்டிப் பணிவிடை புரியும்.
25 மனிதன் இதயத்தில் (உள்ள) துயரம் அவனைத் தாழ்த்தும். நல்ல வார்த்தையால் அவன் மகிழ்ச்சி அடைவான்.
26 தன் நண்பனைப்பற்றி நட்டத்தைக் கவனியாதவன் நீதிமானாய் இருக்கிறான். தீயவரின் பாதையோ அவர்களையே வஞ்சிக்கும்.
27 வஞ்சகன் இலாபத்தைக் காணான். (நீதிமானான) மனிதனின் பொருள் பொன்போல் விலைபெறும்.
28 நீதிநெறியில் வாழ்வு (உண்டு). முறையற்ற வழியோ சாவிற்குக் கூட்டிச்செல்கின்றது.
அதிகாரம் 13
1 ஞானமுள்ள மகன் தன் தந்தையின் போதகத்தைக் (கைக்கொண்டு நடக்கிறான்). கேலி செய்பவனோ கண்டிக்கப்படுகையில் செவிகொடான்.
2 தன் வாயின் கனியால் மனிதன் திருப்தி அடைவான். துரோகிகளுடைய ஆன்மாவோ தீயதாம்.
3 தன் நாவைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால், பேச்சில் கவனமில்லாதிருப்பவன் தீமையைச் சுமக்கிறான்.
4 வேண்டும், வேண்டாம் என்கிறவன் சோம்பேறி. உழைப்போரின் ஆன்மாவோ நிறைவுபெறும்.
5 நீதிமான் பொய் வார்த்தையை வெறுக்கிறான். அக்கிரமியோ அதை ஆதரிக்கிறான்; தானும் அவமானப்படுவான்.
6 நீதி மாசற்றவனின் வழியைக் காக்கும். அக்கிரமமோ பாவியை விழத்தாட்டுகின்றது.
7 இல்லாதவன் ஒருவன் (ஒரு சமயம்) செல்வன்போல் இருக்கிறான். செல்வன் ஒரு சமயம் வறியவன்போல் இருக்கிறான்.
8 மனிதனின் செல்வம் அவனுடைய உயிரின் மீட்பாம். ஏழையாயிருக்கிறவனோ துன்பத்தைச் சகிப்பதில்லை.
9 நீதிமான்களின் ஒளி மகிழ்ச்சிக்குரியது. தீயோரின் விளக்கோ அவிந்துபோகும்.
10 அகங்காரிகளுக்குள் எப்போதும் சச்சரவுகள் இருக்கின்றன. ஆனால், ஆலோசனையோடு எல்லாவற்றையும் செய்கிறவர்கள் ஞானத்தால் நடத்தப்படுகிறார்கள்.
11 திடீரென்று சேர்த்த செல்வம் குறைந்துபோகும். மெதுவாய்க் கையில் சேர்ந்ததோ மிகுந்து வரும்.
12 தாமதிக்கப்படுகிற நம்பிக்கை ஆன்மாவை வருத்துகிறது. நிறைவேறுகிற ஆசை வாழ்வு தரும் மரமாம்.
13 ஒரு காரியத்தைப் புறக்கணிக்கிறவன் எதிர் காலத்திற்குத் தன்னைக் கடமைக்கு உட்படுத்துகிறவன். கட்டளைக்குப் பயப்படுகிறவனோ சமாதானத்தில் நிலைத்திருப்பான். வஞ்சனையுள்ள ஆன்மாக்கள் பாவங்களில் உழல்கின்றன. நீதிமான்களோ இரக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; இரக்கமும் புரிகிறார்கள்.
14 மரண நாசத்தினின்று விலகுவதற்குரிய வாழ்வுச் சுனையாக ஞானியின் கட்டளை அமைகின்றது.
15 நற்போதகம் நற்புகழைத் தரும். அதனைப் புறக்கணிக்கிறவர்களின் பாதையிலோ கேடு விளையும்.
16 விவேகமுடையோன் ஆலோசனையோடு அனைத்தையும் செய்கிறான். பேதையோ தன் பேதமையைத் திறந்து காட்டுகிறான்.
17 தீய தூதன் தீமையில் விழுவான். பிரமாணிக்கமுள்ள பிரதிநிதிக்கோ நலம் கிட்டும்.
18 படிப்பினையைக் கைநெகிழ்பவனுக்கு வறுமையும் சிறுமையும் நேரிடும். தன்னைக் கண்டிக்கிறவனுக்கு இணங்குகிறவனோ மகிமை அடைவான்.
19 ஆசை நிறைவேறும் பொழுது ஆன்மா அக்களிக்கின்றது. ஆதலால், தீமையை விட்டொழிக்கின்றவர்களைப் பேதைகள் வெறுக்கிறார்கள்.
20 ஞானிகளுடன் நடக்கிறவன் ஞானியாவான். மதியீனரின் நண்பன் (அவர்களைப் போலாவான்).
21 பொல்லாப்பு பாவிகளைப் பின்தொடர்கிறது. நீதிமான்களுக்கு நன்மையே நித்திய வாழ்வு.
22 நல்லவன் தன் மக்களையும் பேரப்பிள்ளைகளையும் உரிமைக்காரராக விடுகிறான். பாவியின் செல்வமும் நீதிமானுக்காகக் காப்பாற்றி வைக்கப்படுகிறது.
23 தந்தையரின் நிலங்களில் ஏராளமான உணவு (உண்டு). அவையும் தீர்வையின்றியே மற்றவர்களுக்காகச் சேகரிக்கப்படுகின்றன.
24 பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான். அவனை நேசிக்கிறவனோ கட்டாயமாய்க் கற்பிக்கிறான்.
25 நீதிமான் தன் ஆன்மாவை நிறைவு கொள்ளச் செய்கிறான். அக்கிரமிகளின் வயிறோ நிறையாதாம்.
அதிகாரம் 14
1 ஞானமுள்ள பெண் தன் வீட்டைக் கட்டுகிறாள். ஞானமற்றவளோ கட்டினதையுங்கூடக் கைகளால் அழிப்பாள்.
2 நேரான நெறியில் நடந்து கடவுளுக்கு அஞ்சுகிறவன் அக்கிரம வழியில் நடக்கிறவனால் இகழப்படுகிறான்.
3 மதிகெட்டவனின் வாயில் அகங்காரக் கோல் அமைந்துள்ளது. ஞானிகளின் வாய் அவர்களைக் காக்கும்.
4 எங்கே மாடுகள் இல்லையோ (அங்கே) தொழுவம் இல்லை. வெள்ளாண்மை எங்கே மிகுதியோ அங்கே மாட்டின் பலம் வெளியாகின்றது.
5 உண்மையுள்ள சாட்சி பொய் சொல்லமாட்டான். வஞ்சகச் சாட்சியோ பொய் சொல்கிறான்.
6 கேலி செய்பவன் ஞானத்தைத் தேடினும் கண்டுபிடியான். விவேகிகளுக்கோ போதகம் எளிதாம்.
7 மதியீனனுடன் தர்க்கம் செய்தால் அவன் விவேக வாக்கியங்களைக் கண்டுபிடியான்.
8 தம் நெறியை அறிதல் விவேகமுள்ளவர்களின் ஞானமாம். மதியீனரின் அவிவேகம் அலைதலாம்.
9 மதியீனன் பாவத்தைக் கேலி செய்கிறான். பரிசுத்தமோ நீதிமான்களிடம் நிலைகொள்ளும்.
10 எவன் தன் ஆன்மாவின் துயரத்தைக் கண்டு பிடித்தானோ, அவன் இதயத்தின் மகிழ்ச்சியிலே அன்னியன் கலந்துகொள்ள மாட்டான்.
11 அக்கிரமிகளின் வீடு அழிக்கப்படும். நீதிமான்களின் கூடாரங்களோ மேலோங்கி வளரும்.
12 மனிதனுக்குச் சரியெனக் காணப்படுகிற பழி உண்டு. அதன் முடிவுகளோ மரணத்துக்குக் கூட்டிச் செல்கின்றன.
13 சிரிப்பு துன்பத்துடன் கலந்திருக்கும். மகிழ்ச்சி அற்றுப் போகவே அழுகை வரும்.
14 மதியீனன் தன் (அக்கிரமச்) செயல்களால் நிறைவு கொள்வான். நீதிமான் அவனைக் காட்டிலும் அதிக நிறைவு கொள்வான்.
15 கபடமற்றவன் எவ்வார்த்தையையும் நம்புகிறான். விவேகமுள்ளவனோ தன் அடிச்சுவடுகளைக் கவனிக்கிறான். வஞ்சகனான மகன் எதிலும் விருத்தி அடையான். ஞானமுள்ள அடிமைக்கோ (தன்) செயல்கள் அனுகூலமாயிருக்கும். வழியும் சீராகும்.
16 ஞானி பயந்து தீமையினின்று விலகுகிறான். மதியீனனோ (தன்னை) நம்பிக்கொண்டு (தீமையைப்) புறக்கணிக்கிறான்.
17 பொறுமையில்லாதவன் மதியீனமாய் நடப்பான். கபடமுள்ள மனிதனோ பகைக்கப்படுவான்.
18 சிற்றறிவுடையோர் மதியீனத்தை உரிமை கொள்வார்கள். விவேகமுடையோர் அறிவுக் கலையை எதிர்கொள்வார்கள்.
19 தீயோர் நல்லோர் முன்னும், அக்கிரமிகள் நீதிமான்களுடைய வாயிற்படியின் முன்னும் வீழ்ந்து கிடப்பார்கள்.
20 வறியவன் தன் உறவினர்களால் (முதலாய்ப்) பகைக்கப்படுவான். செல்வர்க்கு நண்பர் பலராம்.
21 தன் அயலானைப் புறக்கணிக்கிறவன் பாவம் செய்கிறான். ஏழைக்கு இரங்குகிறவன் பேறு பெற்றவன் ஆவான். ஆண்டவர்பால் நம்பிக்கையாய் இருக்கிறவன் இரக்கத்தை நேசிக்கிறான்.
22 தீமையைச் செய்கிறவர்கள் தவறிப்போகிறார்கள். இரக்கமும் உண்மையும் நலங்களை விளைவிக்கின்றன.
23 எவ்வகைத் தொழிலும் செல்வம் உண்டு. மிகு பேச்சு எங்கேயோ அங்கே பெரும்பாலும் வறுமை உண்டாகும்.
24 ஞானிகளுடைய செல்வமே அவர்களுடைய மகுடமாம். மூடரின் பைத்தியம் அவிவேகமாம்.
25 உண்மையுள்ள சாட்சியம் ஆன்மாக்களை விடுவிக்கிறது. வஞ்சகமுள்ளவன் அபத்தத்தைக் கக்குகிறான்.
26 ஆண்டவர்பாலுள்ள அச்சம் வலிமையின் நம்பிக்கையாம். அவனுடைய புதல்வருக்கும் அந்த நம்பிக்கை இருக்கும்.
27 (ஏனென்றால்), ஆண்டவர்பாலுள்ள அச்சம் மரண நாசத்தினின்று விடுதலை செய்யும் வாழ்வின் ஊற்றாம்.
28 குடிகளின் மிகுதியில் அரசனின் மேன்மை. குடிககளின் குறைவில் அரசனின் வீழ்ச்சி.
29 பொறுமையாய் இருக்கிறவன் மிகுந்த விவேகத்தைக் காட்டுகிறான். பொறுமையற்றவனோ தன் மதியீனத்தை எடுத்துக் காட்டுகிறான்.
30 மனத்தூய்மை உடலுக்கு நலமாம். பொறாமையோ எலும்புகளை அழுகச் செய்யும்.
31 எளியவனை வருத்துகிறவன் அவனைப் படைத்தவரை அவமானப்படுத்துகிறான். ஏழைக்கு இரங்குகிறவனோ அவரை மகிமைப்படுத்துகிறான்.
32 அக்கிரமி தன் அக்கிரமத்திலேயே தள்ளப்படுவான். நீதிமானோ தன் மரணத்திலே நம்பியிருக்கிறான்.
33 விவேகியின் இதயத்தில் ஞானம் தங்குகிறது. அவனே அறிவில்லாதவர்கள் அனைவரையும் படிப்பிப்பான்.
34 நீதி மனிதனை உயர்த்துகிறது. பாவமோ அவனுக்குக் கேடு விளைவிக்கிறது.
35 அறிவுள்ள அமைச்சன் அரசனால் விரும்பப்படுகிறான். பயணற்றவன் அவனுடைய கோபத்திற்கு உள்ளாவான்.
அதிகாரம் 15
1 சாந்தமான பதில் கோபத்தை அடக்கும். கடுஞ் சொல் கோபத்தை மூட்டும்.
2 ஞானிகளுடைய நாவு அறிவுக்கலையை அலங்கரிக்கும். அறிவிலியின் வாய் அறிவீனத்தைக் கக்கும்.
3 ஆண்டவருடைய கண்கள் நல்லோரையும் தீயோரையும் எவ்விடத்திலும் நோக்குகின்றன.
4 சமாதான வாக்கு வாழ்வு தரும் மரமாம். அடக்கப்படாத வாய் உயிரை நசுக்கும்.
5 அறிவிலி தன் தந்தையின் கண்டனத்தை நகைக்கிறான். ஆனால், கண்டனங்களை ஏற்றுக் கொள்கிறவன் மிக விவேகியாவான். நீதி எவ்வளவு மிகுமோ அவ்வளவாக அதிக மனத்திடன் உண்டாகும். அக்கிரமிகளின் சிந்தனைகளோ வேருடன் கலைக்கப்படும்.
6 நீதிமான்களின் வீட்டில் ஏராளமான துணிவு உண்டு. அக்கிரமியின் செயல்களின் கலக்கமேயாம்.
7 ஞானிகளின் வாய்கள் அறிவை விதைக்கின்றன. மதிக்கெட்டோரின் இதயம் மாறுபாடுடைத்து.
8 அக்கிரமிகளின் பலிகளை ஆண்டவர் வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களின் நேர்ச்சைகளையோ ஏற்றுக்கொள்கிறார்.
9 அக்கிரமியின் வழியை ஆண்டவர் வெறுக்கிறார். நீதியைப் பின்பற்றி நடக்கிறவனுக்கு அவர் அன்பு செய்கிறார்.
10 வாழ்வு தரும் வழியை விட்டு விலகினவனுக்குப் போதனை கடுமையானதாய் இருக்கும். கண்டனங்களைப் பகைக்கிறவன் சாவான்.
11 நரகமும் நாசமும் (எப்பொழுதும்) ஆண்டவர் முன்னிலையில் (இருப்பது போல்), மனு மக்களின் இதயங்களும் அப்படியே அவற்றையும்விட (அவர் முன்னிலையில்) இருக்கின்றன.
12 தீயவன் தன்னைக் கண்டிக்கிறவனுக்கு அன்பு செய்கிறதுமில்லை; ஞானிகளிடம் போகிறதுமில்லை.
13 இதயத்திலுள்ள மகிழ்ச்சி முகத்தில் தெரியும். மனச் சஞ்சலம் ஆன்மாவை வதைக்கும். மனச் சஞ்சலத்தில் ஆன்மா குன்றிப்போகிறது.
14 ஞானியின் இதயம் போதகத்தைக் தேடுகின்றது. மதிகெட்டோரின் வாய் அறிவீனத்தால் ஊட்டப்படுகின்றது.
15 வறியவனின் நாட்கள் எல்லாம் தீயன. கவலையற்ற மனமோ இடைவிடாத விருந்து போலாம்.
16 தெய்வ பயத்துடன் கூடிய சொற்பப் பொருள் நிறைவு தராத மிகுந்த செல்வங்களை விட அதிக நலம் பயக்கும்.
17 கொழுத்த கன்றுக்குட்டி (விருந்துக்குப்) பகையுடன் அழைக்கப் படுவதைவிட, வெறுங்கீரை (விருந்துக்கு) நட்புடன் அழைக்கப்பட்டிருத்தல் நன்று.
18 கோபமுள்ள மனிதன் சண்டையை மூட்டுகிறான். பொறுமையுள்ளவன் மூண்டதையும் தணிக்கிறான்.
19 சோம்பேறிகளுடைய வழி முள்வேலி போலாம். நீதிமான்களுடைய பாதை இடறல் இல்லாததாம்.
20 ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விக்கிறான். மதிகெட்ட மனிதன் தன் தாயை இகழ்கிறான்.
21 மதிகெட்டவனுக்குத் (தன்) மதிகேடே மகிழ்ச்சி. விவேகமுள்ள மனிதன் தன் அடிகளைச் செவ்வையாக்குகிறான்.
22 ஆலோசனை எங்கே இல்லையோ அங்கே சிந்தனைகள் சிதைந்துபோகின்றன. சிந்திப்போர் எங்கே அதிகமோ அங்கே (சிந்தனைகள்) வலுப்படுகின்றன.
23 மனிதன் தன் வாயின் வாக்கில் மகிழ்கிறான். காலத்துக்கேற்ற உரையே சிறந்ததாம்.
24 அடி நரகத்தினின்று விலகும்படி வாழ்வு தரும் பாதை கற்றவன்முன் உள்ளது.
25 அகங்காரிகளின் வீட்டை ஆண்டவர் இடித்தழிப்பார்; விதவையின் காணி எல்லைகளையும் உறுதிப்படுத்துவார்.
26 தீய சிந்தனைகளை ஆண்டவர் வெறுக்கிறார். தூய்மையும் மிக்க அழகும் உள்ள பேச்சு அவரால் உறுதிப்படுத்தப்படும்.
27 கஞ்சத்தனத்தைப் பின்பற்றுகிறவன் தன் வீட்டைக் குழப்புகிறான். செல்வங்களைப் புறக்கணிக்கிறவனோ வாழ்வான். இரக்கத்தாலும் விசுவாசத்தாலும் பாவங்கள் நிவாரணமாகின்றன. தெய்வ பயத்தாலோ எவனும் தீமையினின்று விலகுவான்.
28 நீதிமானின் மனம் (கீழ்ப்படிதலைத்) தியானிக்கின்றது. அக்கிரமிகளின் வாய் தீமைகளால் நிறைந்து வழிகின்றது.
29 ஆண்டவர் அக்கிரமிகளுக்குத் தூர விலகி இருக்கின்றார். நீதிமான்களுடைய வேண்டுதல்களைக் கேட்டருள்கிறார்.
30 கண்ணொளி ஆன்மாவை மகிழ்விக்கின்றது. நற்புகழ் எலும்புகளைக் கொழுப்பிக்கின்றது.
31 வாழ்க்கையின் கண்டனங்களைக் கேட்கச் செவியுள்ளவன் ஞானிகள் நடுவே குடியிருப்பான்.
32 போதனையை இகழ்பவன் தன் ஆன்மாவைப் புறக்கணிக்கிறான். கண்டனங்களுக்கு இணங்குகிறவனோ தன் இதயத்தை ஆண்டுகொள்வான்.
33 தெய்வ பயமே ஞான போதினி. தாழ்மை மகிமைக்குமுன் செல்லுகிறது.
அதிகாரம் 16
1 ஆன்மாவில் கருத்துக் கொள்தல் மனிதனுடையது. அவனது நாவை ஆள்வது கடவுளுடையது.
2 மனிதனுடைய செயல்கள் யாவும் அவன்தன் கண்களுக்கு நன்றாயிருக்கின்றன. (ஆனால்) அவன் உள்ளத்தைப் (பரிசோதித்து) நிறுக்கிறவர் ஆண்டவரே.
3 உன் செயல்களை ஆண்டவருக்குத் திறந்து காட்டினால் உன் சிந்தனைகள் சீர்ப்படுத்தப்படும்.
4 ஆண்டவர் எல்லாவற்றையும் தமக்காகவே செய்திருக்கிறார். அக்கிரமையையுங்கூடத் தண்டனை நாளுக்காகத்தான்.
5 அகங்காரிகள் அனைவரையும் ஆண்டவர் வெறுக்கிறார். அவர் உதவியாக அவன் கைக்குள் (தம்) கையை வைத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பிக்கொள்ளான். அறநெறியின் தொடக்கம் நீதியைச் செய்தலாம். அதுவே பலிகளைப் படைப்பதைவிடக் கடவுளுக்கு அதிக விருப்பமானது.
6 இரக்கமும் உண்மையும் அக்கிரமத்தை நிவர்த்தி செய்யும். ஆண்டவர்பால் பயம் இருந்தால் பாவத்தை விட்டு விலக முடியும்.
7 ஒரு மனிதனின் வழிகள் ஆண்டவருக்கு விருப்பமாய் இருக்குமாயின், இம்மனிதன் தன் பகைவர்களையுஙள்கூடச் சமாதானப் படுத்துவான்.
8 அக்கிரமத்தோடு நிறைவு கொண்டிருப்பதைவிட நீதியோடு வறுமையுற்றிருப்பது நன்று.
9 மனிதனுடைய இதயம் தன் வழியைச் சீர்ப்படுத்துகின்றது. ஆனால், கடவுள்தாமே அவனுடைய அடிச் சுவடுகளை நடத்துகிறவர்.
10 அரசனின் வார்த்தை கடவுளின் வார்த்தையாம். அவனுடைய வாயும் நீதித் தீர்வையில் தவறாது.
11 ஆண்டவருடைய தீர்ப்புகள் நியாயமான நிறையும் தராசுமாம். அவருடைய செயல்களெல்லாம் சாக்கிலுள்ள நிறைகற்களாம்.
12 அக்கிரமஞ் செய்வோரை அரசன் வெறுக்கிறான். ஏனென்றால், நீதியாலே (அவன்) அரியணை நிலைப்பெறுகின்றது.
13 உண்மையை உரைக்கும் உதடுகளே அரசனுக்கு விருப்பமானவை. நேர்மையானவற்றைப் பேசுகிறவன் நேசிக்கப்படுவான்.
14 அரசனின் கோபமே சாவின் தூதன். ஞானமுள்ள மனிதன் இக் கோபத்தை அமர்த்துவான்.
15 அரசனுடைய முக மலர்ச்சியில் வாழ்வு. அவனுடைய சாந்தம் வசந்த காலத்து மழை போலாம்.
16 பொன்னைவிட மேலானதாய் இருக்கிற ஞானத்தைக் கொண்டிரு. வெள்ளியிலும் விலையுயர்ந்ததாய் இருக்கிற விவேகத்தை அடைந்துகொள்.
17 நீதிமான்களுடைய பாதை தீமையை விலக்குகின்றது. தன் ஆன்மாவை எவன் காக்கிறானோ அவன் தன் வழியைக் காக்கிறான்.
18 அகங்காரம் முன்னும் அழிவு பின்னும் வருமுன்னே மனம் செருக்குறும்.
19 அகங்காரிகளுடன் கொள்ளைப் பொருட்களைப் பங்கிடுவதைவிடச் சாந்தமுள்ளவர்களுடன் சிறுமைப்படுவது அதிக நல்லது.
20 வார்த்தையில் கவனமுள்ளவன் நன்மையைக் கடைப்பிடிப்பான். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவனே பெறு பெற்றோன்.
21 இதயத்தில் ஞானமுடையோன் விவேகியென்று அழைக்கப்படுவான். வாய்ப்பேச்சில் இனிமை உள்ளவனோ மேலானவற்றைப் பெறுவான்.
22 ஞானத்தைக் கற்று அறிகிறவனுக்கு (அது) வாழ்வின் ஊற்றாம். மதிகெட்டோரின் படிப்பினை பைத்தியமாம்.
23 ஞானியின் இதயம் அவன் வாயைப் படிப்பிக்கும். அவன் வாயின் வார்த்தையால் ஞானம் பெருகிவரும்.
24 நல்ல வார்த்தைகள் தேனைப்போல் (இன்பமாய் இருக்கும்). உடல் நலமும் ஆன்மாவின் இனிமையாய் இருக்கும்.
25 நேர்மையானதென்று மனிதனுக்குத் தோன்றுகிற நெறி உண்டு. ஆனால், அதன் கடைசி எல்லைகள் சாவிற்குக் கூட்டிச் செல்கின்றன.
26 உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான். ஏனென்றால், அவன் வாயே அவனைக் கட்டாயப் படுத்துகின்றது.
27 தீய மனிதன் தீமையைச் செய்ய முயற்சி செய்கிறான். அவனுடைய உதடுகளிலும் நெருப்பு பற்றி எரியும்.
28 கெட்டுப்போன மனிதன் சச்சரவை மூட்டுகிறான். வாயாடி அரசர்களைப் பிரிக்கிறான்.
29 அநீதனான மனிதன் தன் அயலானை ஏமாற்றி, அவனைத் தீய வழியில் கூட்டிச் செல்கிறான்.
30 தன் கண்களை மூடிக்கொண்டு உதடுகளைக் கடித்துக்கோண்டு தீங்கு நினைப்பவன் அதையே செய்வான்.
31 நீதி நெறிகளில் காணப்படும் முதுமையே மகிமையின் முடியாம்.
32 வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்.
33 மடியில் திருவுளச்சீட்டு போடப்படும். ஆனால், திருவுளம் கடவுளால் வெளிப்படுத்தப்படும்.
அதிகாரம் 17
1 சுவையான கறி வகைகளோடு நிறைய உண்டு சண்டைபோடும் வீட்டைவிடச் சமாதானத்தோடு ஒருபிடி வெறுஞ்சோறு உண்பது அதிக நலம்.
2 ஞானமுள்ள ஊழியன் மதியீனப் பிள்ளைக்கு மேலானவன். அன்றியும், அவன் சகோதரருக்குள் சொத்தில் ஒரு பங்கும் பெறுவான்.
3 வெள்ளி நெருப்பிலும், பொன் உலையிலும் பரிசோதிக்கப்படுவதுபோல் ஆண்டவரும் இதயங்களைச் சோதித்தறிகிறார்.
4 தீயவன் வசைநாவுக்குக் கீழ்ப்படிகிறான். வஞ்சகன் பொய்யான உதடுகளுக்குப் பணிகிறான்.
5 ஏழையைப் புறக்கணிக்கின்றவன் அவனைப் படைத்தவரையே பழிக்கிறான். பிறரின் அழிவில் மகிழ்கிறவனோ தண்டனை அடையாமல் இரான்.
6 பேரப் பிள்ளைகளே முதியோரின் முடியாம். புதல்வருடைய மகிமையோ அவர்கள் தந்தையரேயாம்.
7 அலங்கார வார்த்தைகள் அறிவீனனுக்கும், பொய்யான உதடுகள் அரசனுக்கும் பொருந்துவன அல்ல.
8 எதிர்பார்த்துக்கொண்டிருப்பவனின் நம்பிக்கை மிகச் சிறந்த மாணிக்கமாம். அவன் எங்கே திரும்பினாலும் விவேகமாய்க் கண்டுபிடிப்பான்.
9 குற்றத்தை மறைக்கிறவன் நட்பைத் தேடுகிறான். கோள் சொல்கிறவனோ இணைந்திருப்பவர்களைப் பிரிக்கிறான்.
10 விவேகிக்குச் (செய்யப்பட்ட) ஒரு கண்டனம் மதிகெட்டவனுக்குச் (செய்யப்பட்ட) நூறு காயங்களைவிட அதிகம் பயன்படும்.
11 தீயவன் எப்போதும் சண்டையைத் தேடுகிறான். அவனுக்கு விரோதமாய்க் கொடிய தூதன் அனுப்பப்படுவான்.
12 தன் மதியீனத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற மடையனைப் பார்ப்பதைவிடத் தன் குட்டிகளை இழந்த பெண் கரடியைப் பார்ப்பது அதிக நல்லது.
13 நன்மைக்குத் தீமை செய்கிறவன் விட்டினின்று தீமை ஒழியவே ஒழியாது.
14 சச்சரவுக்குக் காரணமானவன் தண்ணீரைத் திறந்து விடுகிறவன் போலாம். அவன் நிந்தைப்படுமுன்பே நியாயத்தைக் கை நெகிழ்கிறான்.
15 குற்றவாளியைக் குற்றமற்றவனென்றும், குற்றமில்லாதவனைக் குற்றவாளியென்றும் தீர்ப்பிடுகிறவர்கள் கடவுளின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள்.
16 ஞானத்தை விலைக்கு வாங்கக் கூடாதிருக்கையில், மதியீனனுக்குச் செல்வமிருந்தும் பயன் என்ன? தன் வீட்டை உயரமாய்க் கட்டுகிறவன் அழிவைத் தேடுகிறான். ஞானத்தைக் கற்றுக் கொள்ள மாட்டாதவன் (தன் அறியாமையினால்) தீமைக்கு ஆளாவான்.
17 நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான்.
18 மதிகெட்ட மனிதன் தன் நண்பனுக்குப் பிணையாளியான பின்பு கைதட்டி மகிழ்வான்.
19 பிரிவினைகளைச் சிந்திக்கிறவன் சச்சரவை நேசிக்கிறான். தன் வாயிலை உயர்த்துகிறவனும் அழிவையே தேடுகிறான்.
20 தீய இதயமுள்ளோன் நன்மையைக் காணான். இரு பொருளுள்ள வார்த்தைகளைப் பேசுகிறவன் தீமையில் சிக்கிக்கொள்வான்.
21 மதியீனன் தனக்கு நிந்தையாகவே பிறந்திருக்கிறான். அன்றியும், மதியீனனைப்பற்றி அவன் தந்தையுமே மகிழ்ச்சி அடையான்.
22 மகிழ்கிற மனம் உடலை மலரச்செய்கின்றது. துயரமான மனம் எலும்புகளையுமே வற்றச் செய்கிறது.
23 நீதி நெறிகளைக் கெடுக்கத் தீயவன் இரகசியமாய் வெகுமதிகளை வாங்குகிறான்.
24 விவேகியின் முகத்தில் ஞானம் ஒளிர்கின்றது. மதியீனனின் கண்கள் பூமியின் கோடிகளில் (திரிகின்றன).
25 மதிகெட்ட மகன் தன் தந்தைக்குக் கோபமும் தன்னைப் பெற்ற தாய்க்குத் துன்பமுமாக ஆவான்.
26 நீதிமானுக்கு நட்டம் வருவித்தலும், நேர்மையானவைகளைத் தீர்ப்புச்செய்கிற அரசனை அடித்தலும் நன்றன்று.
27 மிதமிஞ்சின வார்த்தைகளைச் சொல்லாதவன் அறிஞனும் விவேகியும் ஆவான். கற்றவன் விலைமதிக்க முடியாத மனமுடையோனாம்.
28 மதியீனனுங்கூட மௌனமாயிருப்பானாயின் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாயின் அறிவுடையோனாகவும் மதிக்கப்படுவான்.
அதிகாரம் 18
1 தன் நண்பனை விட்டுப் பிரிய விரும்புகிறவன் சமயந்தேடுவான். அவன் எக்காலத்தும் நிந்தைக்குரியனாய் இருக்கிறான்.
2 மதிகெட்டவன் மனத்தின் இச்சையின்படி நீ பேசாவிடில் அவன் விவேகத்தின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளான்.
3 அக்கிரமி பாவப் பாதாளத்தின் அடியில் வந்தபின் நிந்தனைக்கு ஆளாவான். அதனால் அவமானமும் வெட்கமும் அவனைப் பின் தொடர்கின்றன.
4 மனிதனின் வாயினின்று (புறப்படுகிற) வார்த்தைகள் ஆழமான நீரைப் (போலாம்). ஞான ஊற்று பெருகிப் பாயும் அருவியைப் (போலாம்).
5 உண்மைக்கு விரோதமான தீர்ப்புச் சொல்வதற்காக, தீயவன் காரியத்திலே ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று.
6 மதிகெட்டவனின் உதடுகள் சச்சரவுகளில் ஈடுபடுகின்றன. அவன் வாயும் சண்டையை மூட்டுகின்றது.
7 மதி கெட்டவனின் பேச்சு அவனுக்கு நட்டம் விளைவிக்கும். அவன் உதடுகளால் அவனுடைய ஆன்மாவிற்கு அழிவு நேரிடும்.
8 இரட்டை நாக்குள்ளவனின் வார்த்தைகள் நேர்மையானவைபோல் தோன்றும். அவை மனத்துள்ளே நுழைந்து செல்கின்றன. சோம்பேறி துன்பத்திற்குப் பயப்படுவான். ஆண்மையற்றோர் பசி அடைவார்கள்.
9 தன் வேலையில் சோம்பலும் அசட்டையுமாய் இருக்கிறவன் தன் வேலையைக் கெடுக்கிறவனுடைய சகோதரனாம்.
10 ஆண்டவரின் திருப்பெயர் மிகவும் வலுவுள்ள கோபுரமாம். நீதிமான் அதனிடம் ஓடுகிறான். அதனால் அவன் உயர்த்தவும் படுவான்.
11 செல்வம் படைத்தோனின் பொருள் அவனுடைய பலத்தின் நகரமும், அவனைச்சுற்றிலுமுள்ள பலமான மதிலும் போலாம்.
12 தாழ்வு வருமுன் மனிதன் தன் மனத்தில் செருக்குக் கொள்வான். மகிமைக்கு முன்னே தாழ்மை வருகின்றது.
13 வினவுமுன் மறுமொழி சொல்லுகிறவன் தன்னை மதியீனனாகவும், அவமானத்திற்கு உகந்தவனாகவும் காட்டிக்கொள்கிறான்.
14 மனிதனுடைய துணிவு அவனுடைய பலவீனத்தைத் தாங்குகின்றது. ஆனால், கோபத்திற்குச் (சார்பான) மனத்தைச் சகிப்பவன் யார் ?
15 விவேகமான அறிவு ஞானத்தை அளிக்கும். ஞானிகளோ போதனைக்குச் செவி சாய்க்கிறார்கள்.
16 மனிதனின் கொடைகள் அவன் வழியை அகலமாக்கி, அரசனின் முன்பாக அவனுக்கு இடத்தை உண்டாக்குகின்றன.
17 நீதிமான் முதற்கண் தன்னையே குற்றம் சாட்டுகிறான். அவன் நண்பன் வந்து அவனைச் சோதித்தறிவான்.
18 திருவுளச்சீட்டு பிடிவாதங்களை அடக்குகின்றது. அது வல்லவர்கள் மத்தியிலுங்கூட நியாயந் தீர்க்கின்றது.
19 சகோதரனால் உதவி பெறுகிற சகோதரன் வலுப்பெற்ற நகரம் போலாம். (அவர்களுடைய) தீர்ப்புகளும் நகரவாயில்களின் தாழ்ப்பாள் போலாம்.
20 மனிதனுடைய வாயின் பலனால் அவன் வயிறு நிறையும். தன் உதடுகளிலிருந்து புறப்படும் வார்த்தைகளால் அவன் நிறைவு கொள்வான்.
21 சாவும் வாழ்வும் நாவிலிருந்தே (விளைகின்றன). அதை நேசிக்கிறவர்களே அதன் கனியை உண்பார்கள்.
22 நல்ல மனைவியைத் தள்ளிவிடுகிறவன் நன்மையைத் தள்ளிவிடுகிறான். விபசாரியை வைத்திருக்கிறவனோ அறிவிலியும் அக்கிரமியுமாய் இருக்கிறான்.
23 ஏழை தாழ்ச்சியுடன் பேசுவான். செல்வமுடையோன் கடுமையாய்க் கத்துவான்.
24 பலருக்குப் பிரியமுள்ள மனிதன் தன் சகோதரனைக்காட்டிலும் அதிகமாய் அவர்களால் நேசிக்கப்படுவான்.
அதிகாரம் 19
1 தன் உதடுகளைப் புரட்டுகிற மதிகெட்ட செல்வனைக்காட்டிலும், தன் நேர்மையில் நிலை பெறுகிற வறியவன் அதிக நல்லவனாம்.
2 ஞான அறிவில்லாத இடத்தில் நன்மை இல்லை. வேகமாய் நடக்கிறவனுடைய கால்கள் இடறும்.
3 மனிதனுடைய அறியாமை அவனைத் தடுமாறச் செய்கிறது. அவன் கடவுளுக்கு விரோதமாயும் வெறுப்பிற்குரியவனாயும் இருக்கிறான்.
4 செல்வம் மிகுதியான நண்பர்களைச் சேர்க்கும். ஏழையின் சுற்றத்தாரோ அவனைவிட்டுப் பிரிந்து போகிறார்கள்.
5 பொய்ச் சாட்சி சொல்லுகிறவன் தண்டனை அடையாமல் இரான். தவறுகளைப் பேசுகிறவனும் தப்பிக்கொள்ளான்.
6 வல்லவனை வணங்குபவர் பலர். நன்கொடை கொடுப்பவனுக்கு நண்பர் உண்டு.
7 வறியவனை அவன் சகோதரரே பகைக்கிறார்கள். அதுவுமின்றி, அவன் நண்பரும் அவனை விட்டுத் தூர அகன்று செல்வார்கள். அவன் ஆறுதலான வார்த்தையைத் தேடுவான்; ஆனால், ஒன்றும் அகப்படாது.
8 அறிவாளி தன் ஆன்மாவை நேசிக்கிறான். விவேகத்தைக் காக்கிறவனும் நன்மையைக் கண்டடைவான்.
9 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனை அடையாமல் இரான். தவறுகளைப் பேசுகிறவனும் அழிவான்.
10 மதிகெட்டவன் இன்பம் அடைதலும், அடிமை அரசரை நடத்துதலும் பொருந்தா.
11 மனிதனின் அறிவு அவன் பொறுமையால் விளங்கும். அக்கிரமங்களை விட்டொழிப்பதே அவனுடைய மகிமையாகும்.
12 சிங்கத்தின் முழக்கம் எப்படியோ அப்படியே அரசனின் கோபம். புல்லின்மேல் பனி நீர் எப்படியோ அப்படியே அவனுடைய இரக்கம்.
13 தந்தையின் துன்பமாம் மதிகெட்ட மக்கள். இடைவிடாமல் ஒழுகுகின்ற கூரை போலாம் சச்சரவுக்காரியான மனைவி.
14 வீடும் செல்வமும் தாய் தந்தையரால் தரப்படுகின்றன. ஆனால், தக்க விவேகமுள்ள மனைவி ஆண்டவராலேயே (தரப்படுகிறாள்).
15 சோம்பல் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குகிறது. உரோசமற்ற மனிதன் பசியால் வருந்துவான்.
16 கட்டளையைக் காக்கிறவன் தன் ஆன்மாவைக் காக்கிறான். ஆனால், தன் வழியை அசட்டை செய்கிறவன் வதைக்கப்படுவான்.
17 ஏழைக்கு இரங்குகிறவன் ஆண்டவருக்கு வட்டிக்குக் கொடுக்கிறான். அவரும் அவனுக்குக் கைம்மாறளிப்பார்.
18 உன் மகன் (திருந்துவான்) என்னும் நம்பிக்கையுடன் அவனைப் படிப்பி. ஆனால், அவனுக்குச் சாவு வரும்படி எதையும் செய்யத் தீர்மானியாதே.
19 பொறுமையற்றவன் நட்டமடைவான். அவனை நீ ஒரு முறை மீட்டுக் காத்தாலும் மீண்டும் அவன் நட்டமடைவான்.
20 உன் கடைசி நாள் வரையிலும் ஞானியாய் இருக்கும்படியாக ஆலோசனை கேள்; அறிவுரையையும் கைக்கொள்.
21 மனிதனின் இதயத்தில் சிந்தனைகள் பலவாம். ஆண்டவர் திருவுளமோ நிலைபெற்றிருக்கும்.
22 எளிய மனிதன் இரக்கமுள்ளவனாம். பொய்யனைவிட வறியவன் உத்தமனாம்.
23 தெய்வ பயம் வாழ்வின் வழி. அது யாதொரு தீமையும் நேரிடாமற் காத்து எப்பொழுதும் நிறைவுகொள்ளச் செய்யும்.
24 சோம்பேறி தன் கையை உண்கலத்தில் மறைக்கிறான்; அதைத் தன் வாய்க்குங்கூடக் கொண்டுபோகான்.
25 தீயவன் கசையடி படுகையில் மதியீனன் அதிக அறிவாளியாவான். ஞானியைக் கண்டித்தாலோ போதனையைக் கண்டுபிடிப்பான்.
26 தன் தந்தையை வருத்தித் தன் தாயைத் துரத்துகிறவன் நிபந்தனைக்குரியவனும் கேடுற்றவனுமாய் இருக்கிறான்.
27 போதகத்தைக் கேட்க, மகனே, நீ பின்வாங்காதே; ஞானத்தின் வார்த்தைகளையும் அறியாமல் இராதே.
28 அநியாயச் சாட்சிக்காரன் நீதியைப் புறக்கணிக்கிறான். அக்கிரமிகளின் வாயோ அநீதத்தை விழுங்குகின்றது.
29 கேலி செய்வோருக்கு நீதித் தீர்வைகளும், மதிகெட்டோரின் உடம்புகளுக்கு அடிக்கிற சம்மட்டிகளும் தயாராக்கப்பட்டிருக்கின்றன.
அதிகாரம் 20
1 மதுபானம் காமத்தைத் தூண்டக்கூடிய பொருளாம். குடிவெறி குழப்பத்தை உண்டாக்குவதாம். இவற்றில் நாட்டம் கொள்பவன் எவனும் ஞானியாய் இரான்.
2 சிங்கத்தின் முழக்கம் எப்படியோ அப்படியே அரசனது பயங்கரமும். அவனைக் கோபமூட்டுகிறவன் தன் ஆன்மாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்கிறான்.
3 சச்சரவுகளுக்கு உட்படாமல் இருப்பது மனிதனுக்கு மகிமையாம். ஆனால் மதியீனர் அனைவரும் சச்சரவுகளில் கலந்து கொள்கிறார்கள்.
4 குளிரின் நிமித்தம் சோம்பேறி உழ மாட்டான். (ஆகையால்) கோடைக் காலத்தில் அவன் பிச்சை எடுப்பான்; அவனுக்கு ஒன்றும் கொடுக்கப்படவு மாட்டாது.
5 ஆழமான நீர்போல ஞானம் மனிதனின் இதயத்தில் இருக்கின்றது. இருந்தும், அறிவுடையான் அதனைக் கண்டெடுப்பான்.
6 பல மனிதர் இரக்கமுள்ளவர்கள் எனப்படுகிறார்கள். ஆனால், பிரமாணிக்கமுள்ள மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார் ?
7 நேர்மையாய் நடக்கும் நீதிமான் தன் பிறகே பேறு பெற்ற மக்களை விட்டுப் போவான்.
8 நீதி அரியணையில் அமர்கிற அரசன் தன் பார்வையாலேயே தீமை அனைத்தையும் அகற்றுகிறான்.
9 என் இதயம் தூய்மையானது; நான் பாவத்தினின்று குற்றமற்றவனாய் இருக்கிறேன் என்று சொல்லக் கூடியவன் யார் ?
10 மாறுபாடுள்ள நிறை, குறையுள்ள அளவு ஆகிய இவ்விரண்டும் கடவுளால் வெறுக்கப்படுவனவாம்.
11 தன் செயல்கள் பரிசுத்தமும் நேர்மையுமானவையோ என்று ஒரு சிறுவன் தன் குணங்குறைகளால் அறியப்படுகிறான்.
12 கேட்கிற செவி, பார்க்கிற கண் ஆகிய இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.
13 நீ வறுமையால் வதைக்கப்படாதபடிக்கு அதிகமாய் உறங்க விரும்பாதே. விழித்திரு; (அப்போது) அப்பத்தால் நிறைவு அடைவாய்.
14 கொள்வோன் எவனும்: உதவாதது, உதவாதது என்கிறான்; ஆனால், அப்பால் அகன்றபின் அதைப் புகழ்ந்து கொள்கிறான்.
15 பொன்னும் பல முத்துகளும் இருப்பினும், ஞானியின் உதடுகளே விலை பெற்ற அணியாம்.
16 அன்னியனுக்குப் பிணையாய் நின்றவனின் ஆடையை எடுத்துக் கொள். அன்னியர்களுக்காகவும் அவனிடம் பிணையை வாங்கிக்கொள்.
17 வஞ்சகத்தின் அப்பம் மனிதனுக்குச் சுவையுள்ளதாய் இருக்கின்றது; ஆனால், பின்பு அவன் வாய் போடிக்கற்களால் நிறையும்.
18 சிந்தனைகள் ஆலோசனைகளால் உறுதிப்படுகின்றன. போர்களையும் விசாரணைக்குப் பின்னரே நடத்த வேண்டும்.
19 இரகசியத்தையும் வெளியாக்கி, வஞ்சகமாய் நடந்து, தன் உதடுகளையும் அகலத் திறக்கிறவனுடன் நீ பழக்கம் வைத்துக்கொள்ளாதே.
20 தன் தந்தையையும் தாயையும் சபிக்கிறவனுடைய விளக்கு இருளில் அவிக்கப்படும்.
21 தொடக்கத்தில் துரிதமாய்ச் சம்பாதிக்கப்படுகிற சொத்து இறுதியில் ஆசி அற்றதாகப் போகும்.
22 தீமைக்குத் தீமை செய்வேன் என்று சொல்லாதே. ஆண்டவரை நம்பிக் காத்திரு. அவரன்றோ உன்னைக் காப்பார்! 23 குறையும் எடை ஆண்டவர்பால் வெறுப்புக்குள்ளதாம். கள்ளத் தராசும் நல்லதன்று.
24 மனிதனுடைய அடிச்சுவடுகள் ஆண்டவரால் நடத்தப்படுகின்றன. ஆனால், மனிதரில் எவன் தன் கதியைக் கண்டுபிடிக்கக் கூடியவன் ?
25 பரிசுத்தவான்களை விழுங்குவதும், தன் நேர்ச்சைகளைத் தட்டிக்கழிப்பதும் மனிதனுக்கு அழிவையே தரும்.
26 ஞானமுள்ள அரசன் தீயோருக்குத் தண்டனை விதிக்கிறான். (தண்டனையாகத்) தன் தேரின் கீழே அவர்களை நசுக்கி விடுவான்.
27 மனிதனிடமுள்ள ஆன்மா அவனுடைய உள்ளத்தின் இரகசியங்களை யெல்லாம் சோதிப்பதற்கு ஆண்டவரால் படைக்கப்பட்ட விளக்காம்.
28 இரக்கமும் உண்மையும் அரசனைப் பாதுகாக்கின்றன. அவன் அரியணையும் சாந்தத்தால் உறுதிப்படுகின்றது.
29 வாலிபர்களின் மகிழ்ச்சியே அவர்களுடைய பலமாம். கிழவர்களுடைய மகிமை அவர்களுடைய நரைத் தலையேயாம்.
30 காயத்தின் தழும்பு தீமைகளை அகற்றும். கசையடி உள் உயிரைக் குணப்படுத்தும்.
அதிகாரம் 21
1 நீரோடைகள் எவ்வாறோ அவ்வாறே ஆண்டவர் கையில் அரசனின் இதயம். அவர் தம் விருப்பப்படி அதைச் சாய்ப்பார்.
2 மனிதனுடைய நெறியெல்லாம் அவனுக்கு முறையானவையாய்த் தோன்றுகின்றன. ஆனால், ஆண்டவர் இதயங்களை எடைபோடுகிறார்.
3 இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடித்தல் பலிகளைவிட ஆண்டவருக்கு அதிக விருப்பமாம்.
4 பார்வையின் பெருமிதமே மனத்தின் அகந்தையாம். அக்கிரமிகளிடம் பிறக்கிறதெல்லாம் பாவமாம்.
5 சுறுசுறுப்புள்ளவனின் சிந்தைகள் எப்போதும் சுகத்தைத் தரும். ஆனால், சோம்பேறி எவனும் எப்போதும் வறுமையால் வருத்தப்படுவான்.
6 பொய் சொல்வதின் மூலம் செல்வத்தைச் சேகரிக்கிறவன் வீணனும் மூடனுமாம். அவன் சாவுக் கண்ணிகளில் சிக்கிக்கொள்வான்.
7 நீதியின்படி நடக்க மனமில்லாத அக்கிரமிகள் பறித்துக்கொண்ட பொருட்கள் அவர்களுக்கே இழப்பாய் முடியும்.
8 தீயவன் தீய நெறியில் செல்கிறான். தூயவனாய் இருக்கிறவனோ நேர்மையான செயலைச் செய்கிறான்.
9 சண்டைக்காரியுடன் பொதுவீட்டில் இருப்பதைவிட மொட்டை மாடியின் மூலையில் இருப்பது அதிக நல்லதாம்.
10 அக்கிரமியின் ஆன்மா தீமையை நாடுகின்றது. தன் அயலானுக்கும் அவன் இரங்கமாட்டான்.
11 தீயவன் தண்டிக்கப்படுவதன்மூலம் நேர்மையாளன் அதிக ஞானமுள்ளவனாவான். ஞானியை அவன் பின்தொடர்வானானால் அறிவையும் பெறுவான்.
12 அக்கிரமிகளைத் தீமையினின்று அகற்றும் பொருட்டு நீதிமான் அக்கிரமியின் வீட்டைத் (திருத்த) முயல்கிறான்.
13 ஏழையின் கூக்குரலுக்குத் தன் காதை இறுக மூடுகிறவன் தானும் கூக்குரலிட்டுக் கூப்பிடுவான்; கேட்கப்படவும் மாட்டான்.
14 இரகசியமாய்ச் செய்த நன்கொடை கோபத்தையும், மடியில் இடப்பட்ட கொடை மிகுந்த கோப வெறியையும் தணிக்கின்றன.
15 புண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே நீதிமானுக்கு மகிழ்ச்சி. அநீதத்தைச் செய்கின்றவர்களுக்குத் திகிலேயாம்.
16 போதகத்தின் நெறியினின்று தவறி நடந்த மனிதன் இறந்தவரின் கூட்டத்தில் குடியிருப்பான்.
17 பேருண்டியை நாடுகிறவன் எளிமையில் இருப்பான். மதுபானத்தையும் கொழுத்தவற்றையும் நாடுகிறவன் செல்வனாகமாட்டான்.
18 நீதிமானுக்குப் பதிலாய் அநீதனும், நேர்மையாளனுக்குப் பதிலாய்த் தீயவனும் விடுவிக்கப்படுகின்றான்.
19 வாதாடியும் கோபியுமான மனைவியோடு வாழ்வதைவிடப் பாலைவனத்தில் (வாழ்வதே) அதிக நல்லதாம்.
20 விரும்பத் தக்க செல்வமும் எண்ணெயும் நீதிமானின் உறைவிடத்தில் இருக்கும். மதிகெட்ட மனிதன் அவற்றைச் சிதறடிப்பான்.
21 நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுகிறவன் வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
22 ஞானமுள்ளவன் வல்லவர்களின் நகருக்குள் நுழைந்து, அவர்கள் நம்பியிருந்த மதிற்சுவரை அழித்தான்.
23 தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் இடுக்கணில் நின்று தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான்.
24 தன் கோபத்தில் அகந்தையைக் காட்டுகிறவன் மூடனும் அகங்காரியும் எனப் பெயர் பெறுவான்.
25 சோம்பேறி தன் ஆசைகளால் வருத்தப்படுவான். ஏனென்றால், அவன் கைகள் எந்த வேலைக்கும் உதவமாட்டா.
26 அவன் நாள் முழுதும் ஆவலோடு இச்சிக்கிறான். ஆனால், நீதிமானாய் இருக்கிறவன் கொடுப்பான்; ஓயாமல் கொடுப்பான்.
27 தீமையின் மூலமாய் ஒப்புக்கொடுக்கிற தீயவருடைய பலிகள் அருவருப்புக்குரியன.
28 பொய்ச்சாட்சி சொல்பவன் அழிவான். கீழ்ப்படிகின்ற மனிதன் வெற்றி அடைவான்.
29 அக்கிரமி வெட்கமின்றியே தன் முகத்தைக் காட்டுகிறான். நேர்மையானவனோ தன் நெறியைத் திருத்துகிறான்.
30 ஆண்டவருக்கு விரோதமாய் ஞானமுமில்லை; விவேகமுமில்லை; அறிவுரையும் இல்லையாம்.
31 போர்நாளுக்காகக் குதிரை பழக்கப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பைத் தருகிறவர் ஆண்டவரே.
அதிகாரம் 22
1 நற்புகழ் அளவற்ற திரவியத்தைக் காட்டிலும் நல்லதாம். நன்கு மதிக்கப்பெறுவது வெள்ளியையும் பொன்னையும்விட மேலானதாம்.
2 செல்வந்தனும் வறியவனும் எதிர்ப்பட்ட வராயினும் ஆண்டவரே அவ்விருவரையும் படைத்தார்.
3 நுண்ணறிவு உள்ளவன் தீமையைக் கண்டு ஒளிந்துகொள்கிறான். கபடில்லாதவன் கடந்து செல்லவே அழிவுக்கு உள்ளாகுகிறான்.
4 அடக்க ஒடுக்கத்தினால் வரும் உயர்பேறு தெய்வபயம், செல்வம், மகிமை, வாழ்வு ஆகியவையாம்.
5 அக்கிரமியின் வழியில் படையணிகளும் வாழுமாம். தன் ஆன்மாவைக் காக்கிறவனோ அவற்றினின்று அகன்று போகிறான்.
6 இளைஞன் தன் வாலிப நாட்களில் சென்ற நெறியைத் தன் முதுமையிலும் விடான் என்பது பழமொழி.
7 செல்வந்தன் வறியவர்களுக்கு அரசனாய் இருக்கிறான். கடன் வாங்குகிறவனோ கடன் கொடுக்கிறவனுக்கு அடிமையாகிறான்.
8 அக்கிரமத்தை விதைக்கிறவன் தீமையை அறுப்பான்; தன் கோபக் கொடுமையால் நசுக்கப்படுவான்.
9 இரக்கத்துக்குச் சார்பாய் இருக்கிறவன் ஆசி பெறுவான். ஏனென்றால், அவன் தன் அப்பங்களினின்றும் ஏழைக்குத் தந்தான். வெகுமதிகளைத் தருகிறவன் வெற்றியும் மகிமையும் அடைவான். ஏனென்றால், வாங்குகிறவர்களுடைய ஆன்மாவை அவன் தன் வயப்படுத்துகிறான்.
10 கேலி செய்பவனைத் துரத்து. அவன் ஓடிப்போனபின் சண்டையும் ஒழியும்; வழக்குகளும் நிந்தைகளும் ஒழிந்துபோம்.
11 இதயத் தூய்மையை நேசிக்கிறவன் தன் உதடுகளின் நயத்தால் அரசனையும் நண்பனாக்கிக் கொள்கிறான்.
12 ஆண்டவருடைய கண்கள் அறிவுக்கலையைக் காக்கின்றன. அக்கிரமியின் வார்த்தைகள் தள்ளிவிடப்படுகின்றன.
13 சிங்கம் வெளியே இருக்கின்றது; நான் (வெளி வந்தால்) தெருக்களின் நடுவில் கொல்லப்படுவேன் என்கிறான் சோம்பேறி.
14 அன்னிய பெண்ணின் வாய் ஆழமான குழியாம். ஆண்டவர் எவன்மேல் கோபமாய் இருக்கிறாரோ அவன் அதில் விழுவான்.
15 சிறுவனின் இதயத்தில் மடமை கட்டப்பட்டிருக்கிறது. போதகக் கோலோ அதனை ஓட்டி விடும்.
16 தன் செல்வத்தைப் பெருக்கும்படி ஏழையை வஞ்சிப்பவன், தன்னிலும் அதிகச் செல்வனுக்குத் தன் சொத்துகளைக் கொடுத்து விட்டுப் பிச்சையும் எடுப்பான்.
17 செவி கொடுத்து ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேள். என் போதகத்துக்கும் உன் இதயத்தைத் திருப்பு.
18 அதை உன் இதயத்தில் காக்கும்போது உனக்கு அது அழகுள்ளதாய் இருப்பதுமின்றி, உன் உதடுகளிலும் பொழியும்.
19 உன் நம்பிக்கை ஆண்டவர்பால் இருக்கும் படியாகவே, நான் இன்று அதை உனக்குக் காண்பித்தேன்.
20 ஆலோசித்துத் தெளிவாய் அதை மூன்று விதமாய் உனக்கு விரித்துரைத்தேன்.
21 உன்னை அனுப்பினவர்களுக்கு உண்மையான வார்த்தையைப் பதிலாக உரைக்கும்படி உறுதியும் உண்மையுமான வாக்கியங்களை உனக்குக் கற்றுக் கொடுத்தேன்.
22 ஏழையை வலுவந்தம் செய்யாதே. ஏனென்றால், அவன் ஏழையாய் இருக்கிறான். எளியவனையும் வாசலில் நசுக்காதே.
23 ஏனென்றால், ஆண்டவரே அவனுடைய வழக்கைத் தீர்த்து, அவனுடைய ஆன்மாவைக் குத்தினவர்களைக் குத்துவார்.
24 கோபியான மனிதனின் நண்பனாய் இராதே. கோபவெறியுள்ள மனிதனோடு பழகாதே.
25 ஏனென்றால், அவன் வழிகளை நீயும் ஒரு வேளை கற்றுக் கொள்ளவும், உன் ஆன்மாவுக்கு இடறலைத் தேடிக் கொள்ளவும் கூடுமன்றோ ?
26 தங்கள் கைகளைக் கட்டுகிறவர்களோடும், கடனுக்குத் தங்களை உத்தரவாதிகளாக ஒப்புக் கொடுக்கிறவர்களோடும் இராதே.
27 ஏனென்றால், ஈடு செய்ய உனக்கு வகையில்லாதபோது உன் கட்டிலின் மூடு துணியை அவன் எடுத்துக் கொண்டு போவதற்குக் காரணம் ஏது ?
28 உன் முன்னோர் முன்னாளில் நட்டின எல்லைக் கற்களைப் பெயர்க்காதே.
29 தன் அலுவலில் சுறுசுறுப்புள்ள மனிதனைக் கண்டாயோ ? அவன் அரசனின்முன் நிற்பானேயன்றிக் கீழ் மக்களிடத்தில் இரான்.
அதிகாரம் 23
1 அரசனுடன் உணவருந்த நீ அமர்ந்திருக்கும்பொழுது உனக்கு முன்னே வைக்கப்பட்ட பொருட்களை நுணுக்கமாய்க் கவனி.
2 உன் நாட்டத்தை உன்னால் கட்டுப்படுத்த முடியுமாயின் உன் நாவை அடக்கு.
3 எவன் உணவுகளில் வஞ்சகத்தின் அப்பம் இருக்கிறதோ அவனோடு நீ எதையும் உண்ண விரும்பாதே.
4 நீ செல்வந்தனாகும் நோக்கத்தோடு உழைக்காதே. ஆனால், உன் கவலைக்கு ஓர் எல்லை இடு.
5 நீ அடைய முடியாத செல்வங்களின் மீது உன் கண்களை ஏறெடுக்காதே. ஏனென்றால், அவை கழுகுகளைப்போல் தங்களுக்குச் சிறகுகளை உண்டாக்கிக்கொண்டு வானில் பறந்துவிடும்.
6 பொறாமையுள்ள மனிதனோடு உண்ணவும் வேண்டாம்; அவனுடைய உணவுகளை விரும்பவும் வேண்டாம்.
7 ஏனென்றால், அவன் குறி சொல்பவனையும் சோதிடனையும்போல் தான் அறியாததை நிதானிக்கிறான்: உண், குடி என்பான் உன்னோடு. ஆனால், அவனது மனமோ உன்னோடு இருப்பதில்லை.
8 நீ உண்ட உணவுகளையும் கக்குவாய்; அவனது உபசார வார்த்தைகளுக்கும் பயன் இராது.
9 மதியீனரின் செவிகளில் பேசாதே. ஏனென்றால், அவர்கள் உன் சொற்றிறத்தின் போதனையைப் புறக்கணிப்பார்கள்.
10 ஏழையின் வயற் கற்களைத் தொடாதே. அனாதைகளின் வயலிலும் நுழையாதே.
11 ஏனென்றால், அவர்களுடைய சுற்றத்தான் வல்லவனாய் இருக்கிறான். அவன் அவர்களுடைய வழக்கை உனக்கு விரோதமாய்த் தீர்ப்பான்.
12 உன் செவிகள் அறிவுச் சொற்களிலும், உன் இதயம் போதகத்திலும் பழகிக் கொள்ளக்கடவன.
13 சிறுவனைக் கண்டிக்க மறக்காதே. அவனை நீ பிரம்பால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
14 நீ அவனைப் பிரம்பால் அடிப்பாய்; அவன் ஆன்மாவை நரகத்தினின்று மீட்கவும் செய்வாய்.
15 என் மகனே, உன் மனம் ஞானமுள்ளதாயிருந்தால் என் இதயம் உன்னுடன் மகிழும்.
16 உன் உதடுகள் நேர்மையானவற்றைப் பேசினால் என் மனம் அக்களிக்கும்.
17 உன் இதயம் பாவிகளை கண்டுபாவித்தலாகாது. ஆனால், நாள் முழுவதும் பயத்தில் நிலைகொள்.
18 ஏனென்றால், கடைசி நாளில் நம்பிக்கையுடனிருப்பாய்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.
19 கேள், என் மகனே, ஞானமுள்ளவனாய் இரு. உன் மனத்தையும் (நல்) வழியில் நடத்து.
20 குடியருடைய விருந்துகளிலும் இறைச்சி உண்கின்றவர்களுடைய பெரும் விருந்துகளிலும் நீ இராதே.
21 ஏனென்றால், குடிவெறியில் காலம் கழிக்கிறவர்களும் உண்டிப் பிரியர்களும் சோம்பலின் மயக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள். அவர்கள் கந்தைகளை உடுத்திக்கொள்வார்கள்.
22 உன்னைப் பெற்ற உன் தந்தைக்குச் செவி கொடு. உன் தாயும் முதுமை அடைந்திருக்கையில் நீ (அவளைப்) புறக்கணியாதே.
23 உண்மையை விலைக்கு வாங்கு. ஞானத்தையும் போதகத்தையும் அறிவையும் விற்க வேண்டாம்.
24 நீதிமானின் தந்தை மிகுதியாக அக மகிழ்கிறான். ஞானியைப் பெற்றவன் அவனைப் பற்றி மகிழ்கிறான்.
25 உன் தந்தையும் உன் தாயும் மகிழ்வார்களாக. உன்னைப் பெற்றவள் அக்களிப்பாளாக.
26 உன் இதயத்தை, என் மகனே, எனக்குக் கொடு. உன் கண்களும் என் வழியைக் காக்கக்கடவன.
27 ஏனென்றால், வேசி படுகுழியாம்; அன்னிய பெண் நெருக்கமான கிணறாம்.
28 அவள் திருடனைப்போல் வழியில் ஒளிந்திருந்து, யார் யார் எச்சரிக்கையற்றவர்கள் என்று கண்டாளோ அவர்களை அழித்தொழிப்பாள்.
29 எவனுக்குக் கேடு ? எவன் தந்தைக்குக் கேடு ? எவனுக்குச் சண்டை ? எவனுக்குப் படுகுழிகள் ? காரணமில்லாத காயம் எவனுக்கு ? கண் வீக்கம் எவனுக்கு ?
30 இவையனைத்தும் மதுபானத்தில் காலம் போக்கி, பாத்திரங்களை முழுதும் குடிக்கும் அலுவலாய் இருப்பவனுக்கே அல்லவா ?
31 மதுபானம் தெளிவாய் இருக்கிறதையும், பளிங்குப் பாத்திரத்தில் வார்த்து அதில் துலங்குகிறதையும் உற்று நோக்காதே.
32 ஏனென்றால், கடைசியில் அது நாகப்பாம்பைப்போல் கடித்தும், பசிலிஸ்க் பாம்பைப்போல் நஞ்சைப் பரப்பியும் விடும்.
33 உன் கண்கள் அன்னிய பெண்களை நோக்கும்; உன் இதயம் அக்கிரமானவைகளைப் பேசும்.
34 நீ நடுக்கடலில் உறங்குகிறவனைப்போலும், தூக்கத்தால் மெய்மறந்து சுக்கான் இழந்த மாலுதியைப்போலும் இருப்பாய்.
35 அன்றியும், என்னை அடித்தார்கள்; ஆயினும் எனக்கு நோகவில்லை. என்னை இழுத்தார்கள்; நான் உணரவில்லை. நான் எழுந்திருப்பதும், மதுபானங்களை மீண்டும் கண்டு குடிப்பதும் எப்போது என்பாய்.
அதிகாரம் 24
1 தீய மனிதர்களைக் கண்டு பொறாமைப்படாதே. அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.
2 ஏனென்றால், அவர்கள் மனம் கொள்ளையைச் சிந்திக்கின்றது. அவர்களுடைய உதடுகளும் வஞ்சனைகளைப் பேசுகின்றன.
3 ஞானத்தால் வீடு கட்டப்படுகிறது. விவேகத்தால் அது உறுதிப்படுத்தப்படும்.
4 அறிவினால் அவ்வீட்டின் அறைகள் விலை உயர்ந்தனவும், மிகவும் அலங்காரமுள்ளனவுமான எவ்விதப் பொருளாலும் நிறைக்கப்படும்.
5 ஞானமுள்ள மனிதன் வல்லவனாய் இருக்கிறான். கற்றறிந்த மனிதன் துணிவும் பேராற்றலும் வாய்ந்தவனாக இருக்கிறான்.
6 ஏனென்றால், அவன் ஒழுங்குடன் போரை நடத்துவான். எங்கே அதிக யோசனைகள் உண்டோ அங்கே பாதுகாப்பும் உண்டு.
7 மதியீனனுக்கு ஞானம் எட்டா உயரமானது. சபை வாயிலில் அவன் வாயைத் திறவான்.
8 தீமையைச் செய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் எனப்படுவான்.
9 மதியீனனின் சிந்தனை பாவமாகும். புறங்கூறுபவன் மனிதருக்கு வெறுப்பைத் தருவான்.
10 துயர நாளில் சோர்ந்துபோய் அவ நம்பிக்கை கொள்வாயானால் உன் திடன் குறைந்துபோகும்.
11 சாவுக்குக் கூட்டிப்போகப் படுகிறவர்களை விடுவி. நரகத்திற்கு இழுக்கப்படுகிறவர்களை மீட்கவும் நீ பின்வாங்காதே.
12 எனக்கு ஆற்றல் போதாது என்று நீ சொல்வாயானால், இதயத்திலுள்ளதைக் காண்கிறவர் அறிகிறார்; உன் ஆன்மாவின் காவலரை ஒன்றும் ஏமாற்றுவதில்லை. அவர் அவனவன் செயல்களுக்குத் தக்கபடி பதிலளிக்கிறார்.
13 என் மகனே, தேன் உன் வாய்க்கு இனிப்பாய் இருக்கிறது; அதை உண். தேனென்றால் உன் தொண்டைக்கு மிகவும் இனிமையாம்.
14 அவ்வாறே உன் ஆன்மாவுக்கு ஞானத்தின் போதகமுமாம். அதை நீ கண்டுபிடித்தால், (உன்) முடிவில் உனக்கு நம்பிக்கை உண்டாகும்; உன் நம்பிக்கையும் வீணாகாது.
15 ஓ தீயவனே, நீதிமானின் வீட்டில் கண்ணிவையாதே; அவனுடைய இளைப்பாற்றியை நீ குலையாதே.
16 ஏனென்றால், நீதிமான் ஏழு முறை விழுந்தாலும் எழுந்திருப்பான். அக்கிரமிகளோ தீமையில் விழுந்து அழிவார்கள்.
17 உன் பகைவன் விழும்போது நீ மகிழ வேண்டாம். அவன் அழிவுறும்போது நீ மனத்தில் அக்களிக்க வேண்டாம்.
18 (ஏனென்றால்) ஆண்டவர் அதைக்கண்டு, உன்மீது வருத்தமுற்று, அவன்மேல் வைத்த கோபத்தை அகற்றி, அதை உன்மேல் திருப்பினாலும் திருப்புவார்.
19 மகா தீயவரோடு பிடிவாதம் செய்யாதே. அக்கிரமிகள்மேல் பொறாமை கொள்ளாதே.
20 ஏனென்றால், எதிர்காலத்தில் தீயோருக்கு நம்பிக்கை இராது. அக்கிரமிகளுடைய விளக்கும் அவிக்கப்படும்.
21 என் மகனே, ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சியிரு. புறங்கூறுபவர்களுடன் கலந்து கொள்ளாதே.
22 ஏனென்றால், திடீரென அவர்களுக்குக் கேடு நேரிடும். இவருடைய அழிவையும் அறிந்தவன் யார் ?
23 இதுவும் ஞானிகள் கற்றுக் கொடுப்பார்கள். அதாவது: நியாயத் தீர்ப்பில் ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று.
24 அக்கிரமியை நோக்கி: நீ நீதிமான் என்று (தவறாய்ச்) சொல்கிறவர்கள் மக்களால் சபிக்கப்படுவார்கள்; அவன் குலத்தினர் அவர்களை வெறுப்பார்கள்.
25 அவனைக் கண்டிக்கிறவர்கள் புகழப்படுவார்கள்; அவர்கள்மேல் ஆசியும் வரும்.
26 நேர்மையான சொற்களை மொழிகிறவனுடைய உதடுகளை (மக்கள்) முத்தமிடுகிறார்கள்.
27 நீ வெளியில் உன் வேலையைத் தயாராக்கி உன் வயலையும் பண்படுத்து. பின்பு நீ உன் வீட்டைக் கட்டலாம்.
28 அக்கிரமமாய் நீ உன் அயலானுக்கு விரோதச் சாட்சியாய் இராதே. எவனையும் உன் உதடுகளால் ஏமாற்றாதே.
29 எனக்குச் செய்ததுபோல் அவனுக்கும் செய்வேன் என்று கூறாதே. அவனவன் செயலுக்குத் தக்கபடியே (நான்) பதிலளிப்பேன்.
30 சோம்பேறியான மனிதனின் வயல் வழியாயும், மதிகெட்ட மனிதனின் கொடி முந்திரித் தோட்டத்தின் வழியாயும் நடந்து சென்றேன்.
31 இதோ, எங்கே பார்த்தாலும் காஞ்சொறி நிறைந்து முட்கள் செறிந்து மூடியிருந்தன. அன்றியும், கற்சுவரும் அழிந்து போயிருந்தது.
32 நான் அதைக் கண்டபோது என் இதயத்தில் பதித்து, உதாரணத்தால் படிப்பினையை அடைந்து கொண்டேன்.
33 கொஞ்சம் தூங்குவேன்; சிறிது தூங்கி விழுவேன்; இனைப்பாறச் சற்றே கைகட்டுவேன் என்பாயோ ?
34 அப்போது வறுமை ஓட்டக்காரன் போலும், பிச்சை ஆயுதம் தாங்கிய மனிதன் போலும் உன்னிடம் வரும்.
அதிகாரம் 25
1 யூதாவின் அரசனான எசெக்கியாசின் மன்னன் சேகரித்து வைத்த இவைகளுங்கூடச் சாலமோனின் பழமொழிகளேயாம்:
2 வார்த்தையை மறைப்பது கடவுளின் மகிமையாம். வார்த்தையைக் கண்டறிதல் அரசனின் மகிமையாம்.
3 மேலே வானமும் கீழே பூமியும், அரசனின் இதயமும் ஆராய்ந்து அறியக்கூடாதனவாம்.
4 வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அதிலிருந்து தூய்மையான பாத்திரம் வெளிப்படும்.
5 அரசனுடைய முகத்தினின்று அநீதத்தை அகற்றினால் நீதியால் அவன் அரியனை நிலைப்படும்.
6 அரசன் முன்பாகப் பெருமை பாராட்டாதே. பெரியோர்களுக்கு உரிய இடத்திலும் நில்லாதே.
7 ஏனென்றால், அரசன் முன்பாகத் தாழ்த்தப்படுவதைவிட, இங்கு ஏறிவா என்று உனக்குச் சொல்லப்படுவது அதிக நலமாம்.
8 உன் கண்கள் கண்டதை வழக்கில் உடனே வெளியாக்காதே. வெளிப்படுத்தி, நீ உன் நண்பனைப் அவமானப்படுத்தியிருந்தால் பின் அதனைப் பரிகரிக்க உன்னாலே கூடாதுபோகும்.
9 உன் காரியத்தை உன் நண்பனோடு சேர்ந்து செய். பிறருடைய இரகசியத்தை வெளிபடுத்தாதே.
10 ஏனென்றால், அவன் அதனைக் கேட்டுக் கொண்ட பிறகு ஒருவேளை உன்னை அவமானப்படுத்திக் கடிந்துகொள்வதை விடமாட்டான். இரக்கமும் அன்பும் மீட்கின்றன; நீ அவமதிக்கப்படாதபடி அவற்றை உனக்குக் காப்பாற்றிவை.
11 வார்த்தையைத் தக்க காலத்தில் பேசுகிறவன் வெள்ளிக் கட்டில்களில் (உள்ள) தங்க மாதுளம் பழங்கள் (போலாம்).
12 கீழ்ப்படியும் செவியுள்ளவனைக் கடிந்து கொள்கிற ஞானி பொற்குண்டலமும், இலங்குகின்ற முத்தும் போலாவான்.
13 அறுவடை நாளில் பனிக்கட்டியின் குளிர்ச்சி எப்படியோ அப்படியாம். பிரமாணிக்கமுள்ள பிரதிநிதி தன்னை அனுப்பினவனுக்கு. அவன் தன் தலைவனின் மனத்தை மகிழ்விக்கிறான்; அவனை இளைப்பாறச் செய்கிறான்.
14 தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பெருமிதமுள்ள மனிதனின் மழையைப் பின்தொடரச் செய்யாத மேகமும் காற்றும் போலாவான்.
15 பொறுமையால் நடுவன் சாந்தமாவான். நயமுள்ள நாவே கடுமையைத் தகர்க்கும்.
16 தேனைக் கண்டால் உனக்குப் போதுமானதை மட்டுமே சாப்பிடு. ஏனென்றால், அதிகமாய்ச் சாப்பிட்டால் ஒருவேளை தெவிட்டுதல் அடைந்து அதைக் கக்குவாய்.
17 ஒருவேளை அயலான் சலிப்புற்று உன்னைப் பகைக்காதபடி நீ அவனுடைய வீட்டினின்று உன் காலை விலக்கு.
18 தன் அயலானுக்கு விரோதமாய்ப் பொய்ச் சாட்சி சொல்பவன் எத்தன்மையனென்றால், எறிபடையும் வாளும் கூர்மையான அம்பும் போலாம்.
19 துயர நாளில் அயோக்கியனை நம்புவது புழுத்த பல்லையும் களைத்த காலையும் நம்புவது போலும், குளிர் காலத்தில் மேற்போர்வை இல்லாமலிருப்பது போலுமாம்.
20 தீய மனத்தோர்க்குப் பாட்டுப் பாடுகிறவன் வெடியுப்பில் (வார்த்த) காடியாம். ஆடையை அந்தும், மரத்தைப் புழுவும் அரிப்பதுபோல மனிதனின் துயரம் இதயத்தை நோகச் செய்யும்.
21 உன் பகைவன் பசியாயிருந்தால் அவனுக்கு உணவு கொடு. அவன் தாகமுற்றிருந்தால் அவனுக்குத் தண்ணீரும் கொடு.
22 அவ்வாறே செய்வதானால் நீ அவன் தலைமேல் நெருப்புத் தணலைக் குவிப்பாய். ஆண்டவரும் உனக்குக் கைம்மாறளிப்பார்.
23 வாடைக் காற்று மழையையும், துக்கமுகம் புறணி பேசும் நாவையும் சிதறடித்துவிடும்.
24 நடுவீட்டில் வாயாடிப் பெண்ணுடன் இருப்பதைக்காட்டிலும் மொட்டை மாடியின் ஒரு மூலையிலிருப்பது மிகவும் நல்லது.
25 தூர நாட்டினின்று (வருகிற) நல்ல செய்தி தாகங்கொண்ட ஆன்மாவுக்குத் தண்ணீர் போலாகும்.
26 அக்கிரமியின்முன் விழும் நீதிமான், காலாலே கலக்கப்பட்ட சுணையும் கெட்டுப் போன நீரூற்றும் (போலாவான்).
27 தேனை மிகுதியாய்ச் சாப்பிடுகிறவனுக்கு எப்படி அது நல்லதன்றோ, அப்படியே (தெய்வ) மகத்துவத்தை ஆராய்பவன் அவருடைய மகிமையால் நசுக்கப்படுவான்.
28 சுற்று மதிலின்றித் திறந்து கிடக்கும் நரகம் எவ்வாறோ, அவ்வாறாம் பேசுகையில் தன்னை அடக்க மாட்டாத மனிதன்.
அதிகாரம் 26
1 கோடைக்காலத்தில் பனியும் அறுவடைக் காலத்தில் மழையும் எப்படியோ, அப்படியே பேதைக்கு மகிமை தகாது.
2 வேறிடம் போகப் பறக்கும் பறவையும், விருப்பப்படி பறக்கும் அடைக்கலானும் எப்படியோ, அப்படியே வீணாய்ச் சொல்லப்பட்ட சாபம் ஒருவன்மேலும் விழாது.
3 குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மதியீனரின் முதுக்குத் தடியும் (தக்கன).
4 மதிகெட்டவனுக்குச் சமானமாய் நீயும் ஆகாதபடி அவனுடைய மதிகேட்டிற்கு ஏற்க அவனுக்கு மறுமொழி சொல்லாதே.
5 பேதை தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றாதவண்ணம், அவனுடைய பேதமைக்கு ஏற்க அவனுக்கு மறுமொழி சொல்.
6 மதியற்ற தூதன் வழியாய்த் தன் வார்த்தைகளைச் சொல்லி அனுப்புகிறவன், காலில்லா முடவனும் அக்கிரமத்தைக் குடிக்கிறவனுமாம்.
7 முடவனுக்கு அழகான கால்கள் இருந்தாலும் எப்படி வீணோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.
8 புதன் விண்கோள் நோக்கிக்கல் எறிகிறவனைப்போலாம் பேதையை மதிப்பவன்.
9 குடிகாரனின் கையில் தைத்த முள் எப்படியோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.
10 நியாயத்தீர்ப்பு வழக்குகளை முடிக்கின்றதுபோல் மதியீனனுக்கு மௌனத்தைக் காட்டுகிறவன் கோபவெறிகளை அமர்த்துகிறான்.
11 மதியீனத்தை மீண்டும் செய்யும் அவிவேகி, தான் கக்கினதற்கு மீண்டும் வரும் நாய்க்கு ஒப்பாவான்.
12 தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றும் மனிதனைக் கண்டிருக்கிறாயோ ? இவனைக்காட்டிலும் மதியீனனே அதிக நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான்.
13 வழியில் ஆண் சிங்கமும் பாதைகளில் பெண் சிங்கமும் இருக்கின்றன என்பான் சோம்பேறி.
14 கதவு தன் முளையாணியில் சுழல்வது எப்படியோ, அப்படியாம் சோம்பேறியும் தன் கட்டிலிலே.
15 சோம்பேறி கிண்ணத்தில் தன் கையை வைப்பான்; (ஆனால்) தன் வாய்வரையிலும் அதைத் தூக்கவும் தொல்லைப்படுவான்.
16 நியாயங்களைப் பேசுகிற ஏழு ஆடவரைக்காட்டிலும் சோம்பேறி தனக்குத்தானே அதிக ஞானியாய்த் தோன்றுகிறான்.
17 பொறுமையற்ற வழிப்போக்கன், தன்னைச் சாராத சண்டையில் கலக்கிறவன் (ஆகியோர்) நாயைக் காதால் பிடிக்கிறவனுக்கு ஒப்பாவர்.
18 அம்புகளையும் ஈட்டியையும் பாய்ச்சுகிறவன் எப்படிச் சாவுக்குரிய குற்றவாளியாய் இருக்கிறானோ,
19 அப்படியே தன் நண்பனுக்குக் கபடமாய்த் தீங்கு செய்கிற மனிதனும். அவன் அகப்பட்டுக்கொள்கையில்: விளையாட்டுக்குச் செய்தேன் என்கிறான்.
20 விறகு குறைந்துபோனால் நெருப்பும் அவியும். கோள் சொல்லுகிறவனை அகற்றி விட்டால் சச்சரவுகளும் அமரும்.
21 கரி தணலுக்கும் விறகு நெருப்புக்கும் எப்படியோ, அப்படியே கோபியான மனிதன் சண்டைகளை மூட்டுகிறான்.
22 புறங்கூறுபவனுடைய வார்த்தைகள் நேர்மையானவைபோலத் தோன்றும். ஆனால் (உண்மையில்) இவை மனத்துள்ளே சென்று வாதிக்கும்.
23 மண்பாண்டத்தை அசுத்த வெள்ளியால் அலங்கரிக்க விரும்புதல் எப்படியோ, அப்படியே மிகவும் கெட்ட இதயத்துடன்கூடிய அகந்தையுள்ள உதடுகளும்.
24 இதயத்தில் வஞ்சனைகளைக் கருதியிருக்கையில் பகைவன் தன் வார்த்தையால் தானே அறியப்படுகிறான்.
25 அவன் தன் குரலைத் தாழ்த்தினாலும் அவனை நீ நம்பாதே. ஏனென்றால், ஏழு தீய குணங்களும் அவன் இதயத்தில் இருக்கின்றன.
26 வஞ்சகமாய்ப் பகையை மறைக்கிறவனுடைய அக்கிரமம் சபையில் வெளியாகிவிடும்.
27 குழியைத் தோண்டுகிறவன் தானே அதில் விழுவான். கல்லைப் புரட்டுகிறவனிடமே அது திரும்பிவரும்.
28 பொய்மையுள்ள நாவு உண்மையை நேசிப்பதில்லை. இச்சகம் பேசும் வாயோ கேடுகளை உண்டாக்குகிறது.
அதிகாரம் 27
1 நாளை என்ன பிறப்பிக்குமென்று அறியாமலிருப்பதால், மறுநாளைப்பற்றி நீ பெருமை பாராட்ட வேண்டாம்.
2 உன் வாயல்ல, வேறோருவனே - உன் உதடுகளல்ல, அன்னியனே - உன்னைப் புகழ்வானாக.
3 பாறை கனமாயும், மணல் பாரமாயும் இருக்கின்றன. ஆனால், மதியீனரின் கோபமோ இவ்விரண்டையும்விட அதிகக் கனமானது.
4 சினமும், பொங்குகின்ற கோபவேறியும் இரக்கமற்றவை. கோப வெறியனுடைய கோபத்தின் கொடுமையைப் பொறுக்கக் கூடியவன் யார் ?
5 உள்ளரங்க நேசத்தைவிட வெளியரங்கக் கண்டனமே அதிக நல்லது.
6 பகைவனின் வஞ்சக முத்தங்களைக் காட்டிலும் நண்பன் தரும் காயங்களே அதிக நலமானவை.
7 பசியாற உண்டவன் தேனையும் காலால் மிதிப்பான். பசியால் வருந்துகின்றவன் கசப்பானதையும் இனிப்பென்று அருந்துவான்.
8 தன் கூட்டை விட்டகன்று பறக்கும் பறவை எவ்வாறோ, அவ்வாறே தன் இடத்தை விட்டொழித்த மனிதனும்.
9 நறுமணத் தைலத்தாலும் வெவ்வேறு நறுமணப் பொருட்களாலும் இதயம் அக்களிக்கின்றது. ஆன்மாவோ நண்பனின் நல்லாலோசனைகளால் அக்களிக்கின்றது.
10 உன் நண்பனையும் உன் தந்தையின் நண்பனையும் கைவிடாதே. உன் துயர நாளில் உன் சகோதரன் வீட்டில் நுழையாதே. தூரமாயிருக்கிற சகோதரனைவிட அருகிலுள்ள அயலானே தாவிளை.
11 உன்னைக் கண்டிக்கிறவனுக்கு மறுமொழி சொல்லும்படியாக, என் மகனே, ஞானத்தைப் படித்து என் இதயத்தை மகிழ்வி.
12 விவேகமுள்ளவன் தீமையைக் கண்டு மறைந்து கொண்டான். அதைக் கவனியாமையால் (மற்றவர்கள்) துன்பங்களை அனுபவித்தார்கள்.
13 அன்னியனுக்குப் பிணையானவனுடைய ஆடையையும் நீ எடுத்துக்கொள். பிறருக்காக அவனிடம் பிணையையும் வாங்கு.
14 விடியற்காலை உரத்த குரலில் தன் அயலானை ஆசீர்வதிக்கிறவன், இரவில் எழுந்து அவனைச் சபிக்கிறவனுக்குச் சரியொத்தவனாய் இருக்கிறான்.
15 குளிர் நாளில் ஒழுகும் கூரையும், சண்டைக்காரியான மனைவியும் சமானமாம்.
16 அவளை அடக்குகிறவன் காற்றைப் பிடிக்கிறவனுக்குச் சமானம். அவன் அதனைத் தன் வலக்கைத் தைலமென்றே அழைப்பான்.
17 இரும்பு இரும்பால் தீட்டப்படுகின்றது. மனிதனோ தன் நண்பனால் தூண்டப்படுவான்.
18 அத்தி மரத்தைப் பேணி வளர்ப்பவன் அதன் கனிகளை உண்பான். தன் ஆண்டவரின் பாதுகாவலில் இருப்பவன் எவனோ, அவன் மகிமைப்படுத்தப் பெறுவான்.
19 நீரில் பார்க்கிறவர்களுடைய முகம் எவ்வாறு துலங்குகின்றதோ, அவ்வாறே மனிதர்களுடைய இதயங்கள் விவேகிகளுக்கு வெளியரங்கமாய் இருக்கின்றன.
20 நரகமும் அழிவும் ஒருகாலும் நிறைவு பெறுவதில்லை. அவ்வாறே மனிதருடைய கண்களும் நிறைவு பெறாதனவாம்.
21 உலைக்களத்தில் வெள்ளியும் உலையில் பொன்னும் பரிசோதிக்கப்படுவதுபோல, மனிதன் தன்னைப் புகழ்கின்றவனுடைய வாயால் பரிசோதிக்கப்படுகிறான். அக்கிரமியின் இதயம் தீமையைத் தேடுகின்றது. நேர்மையான இதயமோ அறிவைத் தேடுகின்றது.
22 வாற்கோதுமையை உலக்கையால் இடிப்பது போல் மதியீனனை உரலில் (இட்டுக்) குத்தினாலும் அவனுடைய மதியீனம் அவனிடமிருந்து பிரிக்கப்படமாட்டாது.
23 உன் ஆடுகளின் முகத்தையும் நன்றாய்க் கவனித்து அறி; உன் மந்தைகளையும் ஆராய்ந்து பார்.
24 ஏனென்றால், நீ எப்போதும் நலமுடையவனாய் இராய். மேலும், தலைமுறை தலைமுறையாய் கிரீடம் கொடுக்கப்படவு மாட்டாது.
25 புல் தரையில் புல் முளைத்திருக்கின்றது. பசுமை நிறை பூண்டுகள் காணப்படுகின்றன. மலைகளினின்று காய்ந்த புல்லும் சேகரிக்கப்பட்டிருக்கின்றது.
26 செம்மறியாடுகள் உன் ஆடைக்கும், வெள்ளாடுகள் வயலின் விலைக்கும்,
27 வெள்ளாடுகளின் பால் உன் உணவுகளுக்கும், உன் விட்டின் தேவைகளுக்கும், உன் ஊழியரின் உணவுக்கும் போதியனவாய் இருக்கட்டும்.
அதிகாரம் 28
1 எவனும் துரத்தாமலே அக்கிரமி ஓடுகின்றான். நீதிமானோ திடமுள்ள சிங்கம்போல் அச்சமின்றி இருப்பான்.
2 குடிகளின் பாவங்களை முன்னிட்டே அதிகாரிகள் பெருகி வருகின்றனர். ஆனால் ஒருவனுடைய அறிவின் நிமித்தமாகவும், அவன் பேசுகிற நியாயமுள்ள வார்த்தைகளின் நிமித்தமாகவும் (நாட்டில்) ஒழுங்கு நிலையாய் இருக்கும்.
3 ஏழைகளைத் துன்புறுத்தும் ஏழை பஞ்சத்தை வருவிக்கும் கடுமழைக்கு ஒப்பாயிருக்கிறான்.
4 (தெய்வ) கட்டளையைக் கைநெகிழ்கிறவர்கள் அக்கிரமியைப் புகழ்கிறார்கள். (அதைக்) காக்கின்றவர்களோ அவன்மேல் மிகவும் எரிச்சல் கொள்கிறார்கள்.
5 தீய மனிதர் ஒழுங்கானதைச் சிந்திக்கிறதில்லை. ஆனால், ஆண்டவரைத் தேடுகிறவர்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள்.
6 தீய வழிகளில் (நடக்கும்) செல்வனைவிட நேர்மையாய் நடக்கும் ஏழையே உத்தமன்.
7 கட்டளையைக் கைக்கொண்டொழுகுபவன் ஞானமுள்ள மகனாய் இருக்கிறான். ஆனால், பேருண்டியாளரைப் பேணுகிறவன் தன் தந்தையை மானபங்கப் படுத்துகிறான்.
8 வட்டிகளாலும் ஊதியத்தாலும் செல்வத்தைக் குவிக்கிறவன் ஏழைகள்மேல் இரக்கமுள்ளவனுக்கே அவற்றைச் சேகரிக்கிறான்.
9 கட்டளையைக் கேளாதபடி தன் காதுகளைத் திருப்புகிறவனுடைய மன்றாட்டு வெறுப்புள்ளதாய் இருக்கும்.
10 நீதிமான்களை ஏமாற்றித் தீய நெறியில் திருப்புகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுந்து மடிவான். நேர்மையுடையோரோ நலம் அடைவார்கள்.
11 செல்வன் தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றுகிறான். ஆனால், விவேகமுள்ள ஏழை அவன் (ஞானத்தைச்) சோதித்தறிவான்.
12 நீதிமான்களின் நன்மதிப்பிலே பலருக்கும் பெருமை. அக்கிரமிகளின் ஆட்சியிலே பலருக்கும் அழிவு.
13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழவே மாட்டான். ஆனால், அவைகளை அறிக்கை செய்து, விட்டுவிடுகிறவன் இரக்கத்தைப் பெறுவான்.
14 எப்போதும் அச்சம் கொண்டிருக்கிறவன் பேறு பெற்றோன். கல்நெஞ்சன் தீமையில் விழுந்து மடிவான்.
15 இரக்கமற்ற அரசன் ஏழைக் குடிகளுக்கு முழங்குகின்ற சிங்கமும், பசித்திருக்கிற கரடியும் (போலாவான்).
16 விவேகமற்ற பிரபு பொய்க் குற்றம் சாட்டுதலால் பலரை அழிவுக்கு ஆளாக்குகிறான். பேராசையைப் பகைக்கிறவனுடைய நாட்களோ நீடியவையாய் இருக்கும்.
17 மாசற்ற இரத்தத்தைச் சிந்தின மனிதன் குழியில் விழமட்டும் ஓடினாலும் அவனைத் தடுக்காதீர்கள்.
18 நேர்மையாய் நடக்கிறவன் பத்திரமாய் இருப்பான். தீய நெறிகளில் நடக்கிறவன் திடீரென விழுவான்.
19 தன் நிலத்தை உழுகிறவன் அப்பத்தால் நிறைவு காண்பான். ஓய்வை விரும்புகிறவன் வறுமையால் வருத்தப்படுவான்.
20 உண்மையுள்ளவன் மிகவும் புகழப்படுவான். செல்வம் சேர்க்கும் பேராசையால் பீடிக்கப்பட்டவன் மாசற்றவனாய் இரான்.
21 நீதித் தீர்வையில் ஒருதலைச் சார்பு காட்டுகிறவன் நன்றாய்ச் செய்வதில்லை. அவன் ஒருவாய் உணவுக்காக உண்மையைக் கைவிடுகிறான்.
22 மற்றவர்கள்மேல் பொறாமைப்பட்டுத் தானே செல்வனாக முயலும் மனிதன் தனக்கே வறுமை வருமென்பதை அறியான்.
23 நாவின் இச்சகத்தால் ஒருவனை ஏய்க்கிறவனைவிட, இவனைக் கண்டிக்கிற மனிதன் இவனுக்கு அதிக விருப்பமுள்ளவனாய் இருப்பான்.
24 தன் தாய் தந்தையரிடமிருந்து யாதொன்றை அபகரித்தும் அது பாவம் இல்லை என்கிறவன், கொலைபாதகத்தின் பங்காளியாய் இருக்கிறான்.
25 தன்னைத்தானே வீம்பு பாராட்டி அதில் பெருமைப்படுகிறவன் சச்சரவுகளைக் கிளப்புகிறான். ஆனால், ஆண்டவர்பால் நம்பிக்கையாய் இருக்கிறான் நிறைவு அடைவான்.
26 தன் மன வலிமையில் ஊன்றி நம்பிக்கையாய் இருக்கிறவன் மதியீனனாய் இருக்கிறான். ஆனால், விவேகமாய் நடக்கிறவன் காப்பாற்றப்படுவான்,
27 ஏழைக்குத் (தர்மம்) கொடுக்கிறவன் ஏழையாய் இரான். பிச்சை கேட்கிறவனை நிந்திப்பவன் வறுமையை அனுபவிப்பான்.
28 அக்கிரமிகள் எழுந்திருக்கையில் மனிதர்கள் மறைந்து கொள்வார்கள். (ஆனால்) அவர்கள் அழிவுறும்போது நீதிமான்கள் பெருகுவார்கள்.
அதிகாரம் 29
1 தன்னைத் திருத்துகிறவனை இகழும் பிடிவாதக்காரன்மீது திடீர் அழிவு வந்து சேரும். நலமும் அவனைத் தொடரமாட்டாது.
2 நீதிமான்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் குடிகள் மகிழ்வார்கள். அக்கிரமிகள் ஆட்சியைக் கைப்பற்றுகையில் மக்கள் புலம்பி அழுவார்கள்.
3 ஞானத்தை நேசிக்கும் மனிதன் தன் தந்தையை மகிழச் செய்கிறான். வேசிகளைப் பேணுகிறவனோ தன் பொருளை இழப்பான்.
4 நீதியுள்ள அரசன் நாட்டைச் செழிப்பிக்கிறான். பேராசை சொண்ட அரசன் அதை நாசமாக்குகிறான்.
5 தன் நண்பனுக்கு இச்சகமும் கபடமுமுள்ள வார்த்தைகளை எவன் பேசுகிறானோ, அவன் அவனுடைய கால்களுக்கு வலையையே விரிக்கிறான்.
6 பாவம் செய்கின்ற அக்கிரமியான மனிதன் பாவ வலையிலேயே சிக்கிக் கொள்வான். நீதிமானோ இன்புற்று மகிழ்வான்.
7 நீதிமான் ஏழைகளின் நிலைமையை அறிகிறான். அக்கிரமி அதை அறியான்.
8 கேடு கெட்ட மனிதர்கள் நகரத்தைக் குலைக்கிறார்கள். ஞானிகளோ கோப வெறியை அகற்றுகிறார்கள்.
9 ஞானி மதியீனனுடன் விவாதிக்கையில், கோபித்தாலும் நகைத்தாலும் அவர்கள் (இருவரும்) உடன்பட மாட்டார்கள்.
10 இரத்த வெறியுள்ள மனிதர் நேர்மையாளனைப் பகைப்பர். நீதிமான்களோ அவனுடைய உயிரைக் (காப்பாற்றத்) தேடுகிறார்கள்.
11 மதி கெட்டவன் தன் திறமையையெல்லாம் வெளிக்காட்டுகிறான். ஞானி மதிப்பைத் தேடாமல் அதை மறைக்கிறான்.
12 பொய் வார்த்தைகளை மனம் விரும்பிக் கேட்கிற அரசன் (தன்) ஊழியர்கள் அனைவரையும் தீயோரென்று எண்ணுகிறான்.
13 ஏழையும் கடன்காரனும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டனர். இருவரையும் ஒளிரச் செய்பவர் ஆண்டவரே.
14 ஏழைகளை உண்மையின்படி தீர்ப்பிடுகின்ற அரசனின் அரியணை என்றும் நிலைபெறும்.
15 பிரம்பும் கண்டனமும் ஞானத்தைத் தருகின்றன. தன் மனம்போல் விடப்படுகிற பையனோ தன் தாயை அவமதிக்கிறான்.
16 அக்கிரமிகள் பெருக, அக்கிரமங்களும் பெருகும். நீதிமான்களோ அவர்களுக்கு வரப்போகும் அழிவைக் காண்பார்கள்.
17 உன் மகனை (அறநெறியில்) படிப்பித்தால், அவன் உனக்கு ஆறுதலாய் இருப்பான்; உன் ஆன்மாவுக்கும் இன்பத்தைத் தருவான்.
18 இறைவாக்கு அற்றுப் போகையில் குடிகள் நிலைகுலைந்து போவார்கள். ஆனால், கடவுளின் கட்டளையைக் கைக்கொண்டொழுகுகிறவன் பேறு பெற்றவனாம்.
19 அடிமையை வார்த்தைகளால் கண்டிக்கக் கூடாது. ஏனென்றால், அவன் நீ சொல்வதைக் கண்டுபிடித்தாலும் மறுமொழி சொல்லத் தயங்குவான்.
20 பேசத் துடிக்கும் மனிதனைக் கண்டாயோ ? அவனுடைய திருந்துதலைவிட மதியீனத்தையே அதிகமாய் நம்ப வேண்டும்.
21 இளமை தொட்டு அடிமையைச் செல்லமுடன் பேணுகிறவன் பிற்காலத்தில் அவன் அவமதிப்பவன் என்று கண்டறிவான்.
22 கோபம் கொள்ளும் மனிதன் சச்சரவுகளைக் கிளப்புகிறான். எளிதாய்ச் சினம் கொள்பவன் பாவம் செய்ய அதிகச் சார்புள்ளவனாய் இருக்கிறான்.
23 அகங்காரியைத் தாழ்வு பின்தொடர்கின்றது. மனத்தாழ்ச்சியுடையோன் மகிமை அடைவான்.
24 திருடனுடன் பங்கு பெறுகிறவன் தன் ஆன்மாவைப் பகைக்கிறான். அவன் ஆணையிடுகிறதைக் கேட்டும் தான் (அவனைக்) காட்டிக் கொடுப்பதில்லை.
25 மனிதனுக்கு அஞ்சுகிறவன் விரைவில் மடிவான். ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவன் உயர்த்தப்படுவான்.
26 அரசனின் சமூகத்தைத் தேடுகிறவர்கள் பலராம். ஆனால், ஒவ்வொருவருடைய நீதித் தீர்ப்பும் ஆண்டவரிடமிருந்து புறப்படுகின்றது.
27 நீதிமான்கள் அக்கிரமியான மனிதனை வெறுக்கிறார்கள். அக்கிரமிகளோ நன்னெறியில் ஒழுகுகிறவர்களை வெறுக்கிறார்கள். வார்த்தையைக் காக்கிறவன் அழிவிற்கு ஆளாகவே மாட்டான்.
அதிகாரம் 30
1 கக்குகின்றவனின் புதல்வனான சேகரிப்போனின் வார்த்தைகளாவன: கடவுள் தன்னுடன் இருக்க, தன்னோடு தங்கியிருக்கின்ற கடவுளால் திடப்படுத்தப்பட்ட மனிதன் உரைத்த காட்சி சொன்னதாவது:
2 நான் மனிதரில் மிகவும் மதிகேடனாய் இருக்கிறேன். மனிதருடைய ஞானம் என்னோடு இல்லை.
3 நான் ஞானத்தைக் கற்கவுமில்லை, நீதிமான்களின் அறிவுக் கலையை அறியவுமில்லை.
4 வான மண்டலத்தில் ஏறி இறங்கினவன் எவன் ? தன் கைகளில் காற்றை அடக்கினவன் எவன் ? ஆடையில் (கூட்டுவதுபோல்) நீர்த்திரளைக் கூட்டினவன் எவன் ? பூமியின் சகல எல்லைகளையும் எழுப்பி உறுதிப்படுத்தினவன் எவன் ? அவன் பெயர் என்ன ? அவன் மக்களின் பெயரும் என்ன, தெரியுமா ?
5 கடவுளின் வார்த்தை நெருப்பினால் (பரிசுத்தப்) பட்டது. அதை நம்பி இருக்கின்றவர்களுக்கு (அது) கேடயமாம்.
6 நீ கண்டிக்கப்பட்டுப் பொய்யனாய்ப் போகாதபடி அவருடைய வார்த்தைகளோடு யாதொன்றையும் சேர்க்காதே.
7 இரண்டு (காரியங்களை) நான் உம்மிடம் கேட்கிறேன்; நான் இறக்குமுன் (அவற்றை) நீர் எனக்கு மறுத்துவிடாதீர்.
8 வீணானதையும் பொய்யான சொற்களையும் என்னைவிட்டு அகன்றிருக்கச் செய்யும்; வறுமையையேனும் செல்வத்தையேனும் எனக்குக் கட்டளையிடாமல் என் வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் எனக்குக் கொடும்.
9 (ஏனென்றால்), நான் ஒரு ஒருவேளை நிறைவினால் தூண்டப்பட்டு: ஆண்டவர் யார் என்று மறுத்துச் சொல்வேன்; அல்லது, வறுமையின் கொடுமையினால் திருடி, என் கடவுள் பெயரால் பொய்யாணை யிடுவேன்.
10 ஓர் அடிமையைப்பற்றி அவன் தலைவனிடம் குற்றம் சாட்டாதே. ஒருவேளை அவன் உன்னைத் தூற்றுவான்.
11 (தூற்றினால்) நீ அழிவாயன்றோ ? தன் தந்தையைத் தூற்றி, தாயை வாழ்த்தாத ஒரு சந்ததி உண்டு.
12 தன் கறைகளினின்று கழுவப்படாமலே தனக்குச் சுத்தமானதாகத் தோன்றுகின்ற ஒரு சந்ததி உண்டு.
13 தன் கண்களை நிமிர்த்தி வைத்து, தன் இமைகளை உயர எழுப்புகின்ற ஒரு சந்ததி உண்டு.
14 பூமியினின்று எளியவர்களையும் மனிதரினின்று ஏழைகளையும் விழுங்கும் பொருட்டு, தன் பற்களுக்குப் பதிலாய்க் கத்திகளை உடையதும் தன் கடைவாய்ப் பற்களால் அரைக்கிறதுமான ஒரு சந்ததி உண்டு.
15 அட்டைக்கு இரண்டு புதல்விகள் உண்டு. இவை, கொண்டு வா, கொண்டு வா என்கின்றன. நிறைவு அடையாதன மூன்று உண்டாம்; போதும் என்று சொல்ல அறியாத நான்காவதொன்றும் உண்டு.
16 அவை எவையென்றால்: பாதாளமும், யோனிவாயும், தண்ணீரால் நிறைவு அடையாத பூமியுமாம்; நெருப்போ, போதும் என்று ஒருகாலும் சொல்வதில்லை.
17 தன் தந்தையையும் இகழ்ந்து தன் தாயின் பிரசவ வேதனைகளையும் புறக்கணிக்கிறவனின் கண்ணை நீரோட்டத்திலுள்ள காக்கைகள் பிடுங்கவும், கழுகின் குஞ்சுகள் அவனைத் தின்னவுங் கடவன.
18 எனக்குக் கடினமானவை மூன்று உண்டு; நான்காவதையோ சிறிதேனும் அறியேன்.
19 வானவெளியில் கழுகின் வழியையும், பாறையின்மேல் பாம்பின் வழியையும், நடுக்கடலில் மரக்கலத்தின் வழியையும் (அறிவது கடினம்); இளமையில் மனிதன் வழியையும் (அறியேன்).
20 தின்றபின் தன் வாயைத் துடைத்துக் கொண்டு: நான் தீவினை செய்யவில்லை என்கிற விபசாரப் பெண்ணின் வழியும் அதற்குச் சமானம்.
21 பூமி மூன்றினால் குலைக்கப் படுகின்றது; நான்காவதையோ அது தாங்க மாட்டாது.
22 அரசாள்கின்ற அடிமையாலும், அப்பத்தால் நிறைவு கொண்டிருக்கின்ற மதிகேடனாலும்,
23 திருமணத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பகைக்குரிய பெண்ணாலும் (பூமி குலைக்கப்படுகிறது); தன் தலைவியின் உரிமைக்காரியாகின்ற அடிமையையோ (அது) தாளமாட்டாது.
24 பூமியில் அற்பமானவை நான்கு உண்டு. ஆனால் அவையே ஞானிகளிலும் அதிக ஞானமுள்ளவை.
25 (அவை: ) அறுவடைக் காலத்தில் தமக்கு உணவைச் சேகரிக்கின்ற அற்பப் பொருளாகிய எறும்புகளும்,
26 பாறையின்மேல் தன் படுக்கையை அமைக்கின்ற பலமற்ற பிராணியாகிய முயற் குட்டியும்,
27 அரசனில்லாமலே அனைத்தும் கூட்டம் கூட்டமாய்ப் புறப்படுகின்ற வெட்டுக்கிளியும்,
28 கையால் பிடிக்கக் கூடுமானதும், அரசனுடைய வீடுகளிலுமே வாழ்ந்திருப்பதுமான பல்லியுமாம்.
29 நன்றாய் நடக்கிற மூன்றும், பாக்கியமாய் நடக்கிற நான்காவதொன்றும் உண்டு.
30 யாருடைய எதிர்ப்புக்கும் அஞ்சாத மிருகங்களில் மிக வலிமையுள்ள சிங்கமும்,
31 இடைக் கட்டப்பட்ட சேவலும், செம்மறிக்கிடாயும், எவரும் எதிர்க்கக்கூடாத அரசனுமாம்.
32 மேன்மையாய் உயர்த்தப்பட்டபின் மதியீனனாய்க் காணப்பட்டவன் உண்டு. ஏனென்றால், அவன் அறிவுடையவனாய் இருந்திருப்பானாயின் தன் வாயில் கை வைத்திருப்பான்.
33 பால் கறக்கும்படி மடியைப் பலமாய் அமுக்குகிறவன் வெண்ணெயைப் பிழிகிறான்; வலுவந்தமாய் மூக்கைச் சிந்துகிறவன் இரத்தத்தை வருவிக்கிறான்; கோபத்தை மூட்டுகிறவனோ பிளவுகளை விளைவிக்கிறான்.
அதிகாரம் 31
1 லாமுவேல் என்ற அரசனின் வார்த்தைகள். அவன் தாய் அவனுக்குக் கற்பித்த காட்சியாவது:
2 என் அன்பனே, என்ன ? என் வயிற்றின் நேசனே, என்ன ? என் ஆசைகளின் இனியனே, என்ன ?
3 உன் பொருளைப் பெண்களுக்கும், அரசரை அழிக்கும்படியாக உன் செல்வத்தையும் தராதே.
4 அரசருக்கு வேண்டாம், ஓ லாமுவேல்! அரசருக்குக் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் கொடுக்கவேண்டாம். ஏனென்றால், குடிமயக்கம் ஆள்கின்ற இடத்தில் இரகசியமே கிடையாது.
5 அவர்கள் மதுபானம் அருந்தினால் ஒருவேளை நீதித்தீர்ப்புகளையும் மறந்து, ஏழையின் மக்களுடைய வழக்கையும் மாற்றுவார்கள்.
6 சஞ்சலமுள்ளவர்களுக்கு மதுபானத்தையும், துயர மனமுடையோருக்குக் கொடிமுந்திரிப் பழச் சாற்றையும் கொடுங்கள்.
7 அவர்கள் குடித்துத் தங்கள் கேட்டினை மறந்தும், தங்கள் துன்பத்தை இனி நினையாமலும் இருப்பார்களாக.
8 ஊமைக்காகவும், உன்னிடம் வருகிற கைவிடப்பட்டவர்களுக்காகவும் உன் வாயைத்திற.
9 உன் வாயைத்திறந்து நீதியானதைக் கற்பி; இல்லாதவனையும் ஏழையையும் நியாயந்தீர்.
10 வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்.
11 அவள் கணவனின் இதயம் அவள்பால் நம்பிக்கை கொள்கின்றது. கொள்ளைப் பொருட்களும் அவனுக்குக் குறைவுபடா.
12 அவள் அவனுக்குத் தன் வாழ்நாட்கள் அனைத்தும் தீமையை அல்ல, நன்மையையே அளிப்பாள்.
13 அவள் ஆட்டு மயிரையும் சணல் நூலையும் தேர்ந்தெடுத்துத் தன் கைத் திறமையால் வேலை செய்தாள்.
14 தூரத்தினின்று அப்பத்தைக் கொண்டு வருகிற கப்பல் போலானாள்.
15 இரவிலே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும், தன் ஊழியக்காரிகளுக்கு உணவு வகைகளையும் தந்தாள்.
16 வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள். தன் கைகளின் பலத்தால் கொடிமுந்திரித் தோட்டத்தையும் நட்டாள்.
17 திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புயத்தையும் பலப்படுத்தினாள்.
18 அவள் சுவை பார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது.
19 வன்மையான காரியங்களுக்குத் தன் கைகளை உபயோகித்தாள். அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன.
20 வகையில்லாதவனுக்குத் தன் கைகளைத் திறந்தாள். தன் உள்ளங்கைகளை ஏழைக்கு நீட்டினாள்.
21 பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றி அஞ்சமாட்டாள். ஏனென்றால், அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப் பட்டிருக்கிறார்கள்.
22 கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறான். மெல்லிய சணலும் கருஞ் சிவப்பு ஆடையும் அவளுடைய போர்வையாம்.
23 அவள் கணவன் பூமியின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் நியாய வாயிலில் மகிமை பெறுவான்.
24 அவள் முக்காட்டுத் துணியும் செய்து விற்றாள். கனானேயனுக்கு இடைக் கச்சையையும் கொடுத்து விட்டாள்.
25 வலிமையும் அழகும் அவளுக்கு உடை(யாம்). கடைசி நாளிலும் அவள் நகைப்பாள்.
26 ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள். அவளுடைய நாவில் சாந்தத்தின் நீதிமுறை உள்ளதாம்.
27 அவள் தன் இல்லத்தின் வழிகளை உற்றுப்பார்த்தாள்; சோம்பலாய்த் தன் அப்பத்தை உண்ணாள்.
28 அவளுடைய புதல்வர் எழுந்து அவளைப் பேறுடையாள் என்று முழங்கினார்கள். அவள் கணவனும் அவளைப் புகழ்ந்தான்.
29 பல மகளிர் செல்வங்களைச் சேகரித்தார்கள்; நீயோ அனைவரையும் கடந்து மேலானவள் ஆனாய்.
30 அழகு பொய்யும், எழில் வீணுமாம். ஆண்டவருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
31 அவளுடைய கைகளினின்று பெறும் பலனை அவளுக்கே கொடுங்கள். அவளுடைய செயல்களே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.