✠
அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் எழுதிய
இரண்டாம் நிருபம்
அர்ச். அருளப்பர் எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 01
எலெக்த்தா அம்மாளையும் அவள் பிள்ளைகளையும் விசுவாசத்திலும் பரம அன்பிலும் உறுதிப்படுத்துகிறார்.
1. மூத்தோனாகிய நான் எலெக்த்தா அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுவது: உங்களை நான் மெய்யாகவே சிநேகித்துவருகிறேன். நான்மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்த சகலரும்,
1. மூத்தோன்:- அர்ச். அருளப்பர் தம்மையே மூத்தோன் என்கிறார். எலெக்த்தா:- ஒரு புண்ணிய ஸ்திரீயின் பெயர். சிலர் இதை ஒரு குடும்பத்தின் அல்லது சபையின் பேராயிருக்கலாமென்றும் நினைக்கிறார்கள்.
2. நம்மில் நிலைத்திருக்கிறதும், என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம் (உங்களைச் சிநேகிக்கிறார்கள்).
3. பிதாவாகிய சர்வேசுரனாலும், பிதாவின் சுதனாகிய சேசுக்கிறீஸ்துவி னாலும் வரப்பிரசாதமும் கிருபையும் சமாதானமும் சத்தியத்திலும் பரம அன்பிலும் உங்களோடு இருப்பதாக.
4. பிதாவினிடத்தில் நாம் பெற்றுக்கொண்ட கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதைக் கண்டு நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
5. இப்பொழுது நாயகி, நாம் ஒருவரையொருவர் சிநேகிக்கவேண்டுமென்று உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்குண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை மன்றாடுகிறேன். (அரு. 13:34; 15:12.)
6. நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு. நீங்கள் ஆதிமுதல் கேட்டதெப்படியோ அப்படி நடந்துகொள்வதே அந்தக் கற்பனை. (1 அரு. 5:3.)
7. ஏனெனில், இப்போது உலகத்தில் மோசக்காரர் அநேகர் நடமாடுகிறார்கள். இவர்கள், சேசுக்கிறீஸ்துநாதர் மாம்சத்தில் வந்தாரென்று ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. இப்படிப்பட்டவனே மோசக்காரனும், அந்திக்கிறீஸ்துவுமாயிருக்கிறான். ( 1 அரு. 4:3.)
8. நீங்கள் செய்த வேலையை இழக்காமல், அதன் பூரண சம்பாவனையைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு எச்சரிக்கை யாயிருங்கள். (அரு. 8:31.)
9. கிறீஸ்துவின் போதகத்தில் நிலை கொள்ளாமல், அதைவிட்டு விலகுகிற எவனும் சர்வேசுரனை உடையவனல்ல. அந்தப் போதகத்தில் நிலைகொள்ளு கிறவனே பிதாவையும் சுதனையும் உடையவன்.
10. உங்களிடத்தில் வருகிற எவனும் இந்தப் போதகத்தைக்கொண்டு வராதிருந்தால், அவனை வீட்டில் ஏற்றுக்கொள்ளவும், அவனை நோக்கி: வாழ்க என்றுஞ் சொல்லவும் வேண்டாம். (உரோ. 16:17.)
* 10. இந்த வாக்கியத்தினால் மெய்யான விசுவாசத்தைவிட்டுப் பிரிந்தவர்களோடு சிநேகப் பழக்கத்தால் உண்டாகிற தின்மைகள் முதலிய ஆபத்துகளுக்கு விரோதமாய் எச்சரிக்கிறாரொழிய எல்லா மனிதர்மட்டிலும் நமக்கு இருக்கவேண்டியது சிநேகத்தையாவது, அவர்களுக்குச் செய்யவேண்டிய மகிமை ஆசாரங்களையாவது செய்யவேண்டாமென்று விலக்குகிறதில்லை.
11. ஏனெனில் அவனை நோக்கி: வாழ்க என்பவன் அவனுடைய துர்க் கிரியைகளுக்குப் பங்காளியாகிறான்.
12. உங்களுக்கு இன்னும் எழுத வேண்டிய காரியங்கள் அநேகமுண்டு. என்றாலும், அவைகளைக் காகிதத்தில் மையைக்கொண்டு எழுத எனக்குப் பிரியப்படவில்லை. நானே உங்களிடம் வந்து, உங்கள் சந்தோஷம் பூரணமாகும்படி முகமுகமாய்ப் பேசலாமென்று நம்புகிறேன். (அரு. 15:11; 17:13.)
13. உம்முடைய சகோதரி எலெக்த் தா அம்மாளின் பிள்ளைகள் உமக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள்.
அருளப்பர் 2-ம் நிருபம் முற்றிற்று.