சர்வேசுரனைக் கண்டு தரிசிக்கும் பாக்கியத்தை இழந்து போவதுதான் சபிக்கப்பட்டவர்கள் நரகத்தில் அனுபவிக்கும் சகல தண்டனைகளிலும் அதிக அகோரமான தண்டனையாக இருக்கிறது.
மனித ஆன்மா சர்வேசுரனால் உண்டாக்கப்படுகிறது. அது அவரிடமிருந்தே பிறக்கிறது. சர்வேசுரனாகிய அந்தப் பெருங்கடலில் அது ஒரு துளியாக இருக்கிறது. மனிதக் கருவோடு இணைக்கப்படும் வரை, அது தன்னைப் படைத்தவரை முழுமையாக அறிந்திருக்கிறது. அவரே தன் இறுதிக் கதி என்பதையும் அது நன்றாக உணர்ந்திருக்கிறது.
ஆனால் மனிதக் கருவோடு அது இணைக்கப்படும் கணத்தில், ஜென்மப் பாவத்தின் கொடூர நஞ்சு அதைத் தீண்டுவதால், அது வரை தான் கொண்டிருந்த நித்திய நன்மையானவரைப் பற்றிய அறிவையும், காட்சியையும் ஆத்துமம் முழுமையாக இழந்து போகிறது. ஜென்மப் பாவ தோஷங்களில் ஒன்றாகிய இருட்டடிக்கப்பட்ட அறிவு, கடவுளை ஆத்துமம் “மறந்து போகச்” செய்கிறது. ஞானஸ்நானத்தின் மூலம் இந்த ஜென்மப் பாவம் ஆன்மாவிலிருந்து கழுவி அகற்றப்பட்ட பிறகும், ஜென்மப் பாவ தோஷம் அதை விட்டு விலகாதிருப்பதால், சாதாரணமாக, தொடக்கத்தில் தான் கொண்டிருந்த கடவுளைப் பற்றிய துலக்கமான அறிவை ஆத்துமமானது உடலை விட்டுப் பிரியும் வரை மீண்டும் பெற்றுக் கொள்வதில்லை.
இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. ஓர் ஆத்துமம் எந்த அளவுக்கு, சர்வேசுரனை அறிந்து, நேசித்து, அவருக்கு ஊழியம் செய்து அவரை நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு அது கடவுளை அதிகமாக ஞாபகப்படுகிறது, கடவுளின் கண நேர, கடந்து போகிற ஒரு காட்சியும் கூட அவ்வப்போது அர்ச்சியசிஷ்ட தனமுள்ள ஆன்மாவுக்கு அருளப்படுகிறது. எனினும், எந்த விதமான மூடுதிரையுமின்றி, ஆன்மா கடவுளை முழுமையாக, மீண்டும் அறிந்து கொள்வதற்கு, மரணத்தின் மூலம் அது தன் உடலிலிருந்து பிரிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் தன் சகல பாவங்களுக்கும் முழுமையாக மன்னிப்புப் பெற்று, அவற்றிற்குரிய பரிகாரங்களையும் முழுமையாக நிறைவேற்றி விட்ட நிலையில், தன் சரீரத்தை விட்டுப் பிரிந்து நித்தியத்திற்குள் நுழைகிற ஆன்மா மெய்யாகவே பாக்கியம் பெற்றது! மரணம் அதற்கு நித்தியப் பேரின்பத்தின் வாசலாக இருக்கிறது!
இதோ, அந்தப் பரிசுத்தமான மனிதன் இறந்த இடத்திலேயே கிறீஸ்து நாதர் அவனுக்குக் காட்சியளித்து, “நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக்காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி... என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவனே! வா. உலகமுண்டானது முதல் உனக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்” என்று அவனை வரவேற்பார்.
அந்த ஆத்துமத்தின் கண்கள் திறக்கப்படும்! ஆதியில் இருந்தபடியே அது தன் சர்வேசுரனை மீண்டும் அவர் இருக்கிறபடி கண்டுகொள்ளும்! அந்தக் காட்சியே அதன் நித்தியப் பேரின்பமாக இருக்கும். இதோ அந்த ஆன்மாவின் மகா பரிசுத்த திருமாதா மகிழ்ச்சியோடு அதை வரவேற்க, சம்மனசுக்களின் படையணிகளோடு இறங்கி வருகிறார்கள்! மோட்சத்தின் கதவுகள் திறக்கின்றன! இனி நித்திய காலமும், சர்வேசுரனோடும், தன் மகா பரிசுத்த அன்னையுடனும், அனைத்து தேவதூதர்கள், புனிதர்களோடும் பேரின்ப பாக்கியத்தை அனுபவிக்கும்படி இந்த பாக்கியம் பெற்ற ஆன்மா மோட்சத்திற்குள் நுழைகிறது!
“இதோ, மனிதரோடு சர்வேசுரன் வசிக்கும் ஸ்தலம். அவர்களோடு அவர் வாசம்பண்ணுவார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். சர்வேசுரன்தாமே அவர்களுடைய தெய்வமாக அவர்களோடு இருப்பார். சர்வேசுரன் அவர்களுடைய கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமே இராது: இனி துக்கமும், அழுகைச் சத்தமும் துயரமும் கிடையாது. முந்தின வைகள் ஒழிந்து போயின” (காட்சி (திருவெளி.) 21:3, 4).
ஆனால், மரிக்கும்போது பாவசங்கீர்த்தனம், அவஸ்தைப் பூசுதல் போன்ற தேவத்திரவிய அனுமானங்களால் சாவான பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருந்தாலும், இன்னமும் தன் பாவங்களுக்காக முழுமையாகப் பரிகாரம் செய்யாத ஆன்மா தனது தெய்வீக நடுவராகிய சேசுநாதரால் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குத் தீர்ப்பிடப்படுகிறது. தன் பாவங்களுக்கு உத்தரித்து, முழுமையாகப் பரிகாரம் செய்யும் வரைக்கும் அது கடவுளைக் காண முடியாததாயிருக்கிறது. பரிசுத்தமில்லாத எதுவும் கடவுளின் இராச்சியத்தில் பிரவேசிக்க முடியாது என்பதுதான் இதன் காரணம். மகா கொடூரமான உத்தரிக்கிற நெருப்பின் வேதனையையும் தாண்டி, கடவுளைக் காண வேண்டும் என்ற அந்த ஆன்மாவின் துடிப்பும், வேதனையுமே உத்தரிக்கிற ஸ்தலத்தில் அதன் மிகப் பெரிய வாதையாக இருக்கிறது.
ஆனால் தன் சாவான பாவங்களுக்கு தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் இன்னும் மன்னிப்புப் பெறாத நிலையில் மரிக்கிற மனிதனின் நிலை எவ்வளவு பயங்கரத் துக்குரியது, எவ்வளவு அவலமானது! அவனுடைய உடலிலிருந்து ஆன்மா பிரிந்த அதே கணத்தில், அதே இடத்தில், அவனுடைய நித்திய நடுவர் அவனுக்குத் தோன்றுகிறார்! இந்த ஆத்துமத்தின் கண்களும் திறக்கப்படுகின்றன. இந்தக் கணத்தில், தன்னை ஈன்றெடுத்தவரும், தனது இறுதிக் கதியுமான சர்வேசுரனை அந்த ஈன ஆன்மா மீண்டும் கண்டு கொள்கிறது! ஆனால் இதோ, அதன் முன்பாக இருக்கிற இந்த தெய்வீக நடுவரின் காட்சியோ அதனால் தாங்க இயலாததாக இருக்கிறது!
எந்த பயங்கரமுள்ள சர்வேசுரனுடைய பிரசன்னம் இஸ்ராயேலின் பாளையத்திலிருந்த இலட்சக்கணக்கான மக்களை நடுநடுங்கச் செய்ததோ (யாத். 19:16), யாருடைய தெய்வீகப் பிரசன்னத்தால் மக்கள் அனைவரும் குரல்களையும் சுடரொளிகளையும், எக்காளத்தின் ஒலியையும், புகைந்து கொண்டிருந்த (சீனாய்) மலையையும் தரிசித்து, அச்சமுற்றுத் திடுக்கிட்டு, மோயீசனை நோக்கி: “நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடு பேச வேண்டாம், பேசினால் உயிர் போய்விடும்” (யாத். 20:18,19) என்றார்களோ, அந்த வல்லமை மிக்க, பாவத்தை வெறுத்துப் பகைக்கிற எரிச்சலுள்ள தேவனுக்கு முன்பாக, இதோ இந்த ஆன்மா தன்னந்தனியாக நிற்கிறது!
ஓ, ஒவ்வொரு மனிதனும் இதை நினைவில் கொள்ளட்டும்! இந்நிலையிலிருந்து தப்ப எவனாலும் முடியாது! நீ மரிக்கும் போது உன் ஆன்மாவில் சாவான பாவம் இருக்குமானால், இந்த நீதியுள்ள சர்வேசுரனுக்கு முன்பாக நீயும் தன்னந் தனியாக நிற்க வேண்டியிருப்பது உனக்கு எப்பேர்ப்பட்ட பயங்கரமாக இருக்கும்!
ஓ, ஒவ்வொரு மனிதனும் இதை நினைவில் கொள்ளட்டும்! இந்நிலையிலிருந்து தப்ப எவனாலும் முடியாது! நீ மரிக்கும் போது உன் ஆன்மாவில் சாவான பாவம் இருக்குமானால், இந்த நீதியுள்ள சர்வேசுரனுக்கு முன்பாக நீயும் தன்னந் தனியாக நிற்க வேண்டியிருப்பது உனக்கு எப்பேர்ப்பட்ட பயங்கரமாக இருக்கும்!
இதோ, அவர் தீர்ப்பிடுகிறார்! “சபிக்கப்பட்டவனே! என்னை விட்டகன்று, பசாசுக்கும் அதன் தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போ... பிரயோஜனமற்ற இந்த ஊழியனைப் புறம்பான இருளிலே தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டா யிருக்கும்” (மத்.25:41,30).
பாவி இந்த பயங்கரமுள்ள தீர்ப்பைக் கேட்டு நடுங்குகிறான்! பதைபதைத்துத் துடிக்கிறான்! எப்படியாவது இந்த தீர்ப்பு மாற்றப்படலாகாதா என்று தவித்துச் சோர்ந்து போகிறான்! இதோ, இந்தத் தீர்ப்புக்காகவே காத்துக் கொண்டிருந்த பசாசுக்கள் நெருப்பாலான சங்கிலிகளால் அவனைப் பிணைத்து இழுத்துக் கொண்டு நரகத்தினுள் போய் விழுகின்றன! எல்லாம் முடிந்து போயிற்று!
தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...