நரகத்தில் நெருப்பின் வேதனை மட்டுமல்ல, கடுங்குளிரும் ஆன்மாக்களை வாதிக்கிறது என்பது பெரும்பாலான கத்தோலிக்கர்கள் கூட அறியாத விஷயம்.
அர்ச். பீட் என்பவர் பின்வரும் சரித்திரத்தைக் கூறுகிறார்:
த்ரிதெல்முஸ் என்னும் பேருள்ள ஒரு மனிதன் இருந்தான். இவன் ஒருமுறை கடும் நோயுற்று இறந்து போனதாக எண்ணப்பட்டான். ஆனால் சகலரும் வியக்கும் வண்ணம் மறுநாள் காலையில் அவன் தன் நோய்ப் படுக்கையினின்று எழுந்து நின்று, தான் முன்பு நடத்தின ஜீவியத்திலிருந்து வேறுபட்ட ஒரு ஜீவியத்தை நடத்தும்படி கடவுள் தன் வாழ்நாளை அதிகரித்துத் தந்தருளினார் என்று அறிவித்தான்.
அதன்பின் தன் சொத்து முழுவதையும் தன் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தான். இவ்வாறு தன்னையே வெறுமையாக்கிக் கொண்டான். அதன்பின் முற்றிலும் வேறான ஒரு ஜீவியத்தைத் தொடங்கினான்.
ஓர் ஆற்றங்கரையில் ஒரு சிறு கூடாரத்தில் தன்னை வைத்து அடைத்துக் கொண்டான். குளிர்காலத்தில் ஆற்றின் பனிக்குளிர்ச்சியுள்ள தண்ணீரில் கழுத்தளவு ஆழத்தில் இரவு முழுவதும் நிற்பான். உடல் நடுங்கி, முழுவதும் மரத்துப் போகும். உடனே கொதிக்கிற நீரில் தன்னை அமிழ்த்திக் கொண்டு, அது தரும் வேதனையால் கதறித்துடிப்பான்.
ஏன் இப்படிச் செய்கிறான் என்று மற்றவர்கள் கேட்ட போது அவன் பதிலளித்தான்: "மறு உலகத்தில் ஆத்துமங்கள் உக்கிரமாய் எரிகிற அக்கினியிலிருந்து எடுக்கப்பட்டு, பனிக் குளிருக்குள் வீசியெறியப் படுகிறார்கள், அதன்பின் அவர்கள் மீண்டும் அங்கிருந்து சுட்டெரிக்கும் சுவாலைகளுக்குள் வீசப்படுவதை நான் பார்த்தேன்.
மனித கற்பனைக்குள் அடங்காத பயங்கரம் இது. அவர்கள் தாங்க வேண்டியிருந்த வேதனையோடு ஒப்பிடும்போது என் வேதனை ஒன்றுமேயில்லை!"
தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...