அதிகாரம் 01
1 பாரசீக அரசனான சீருசின் முதல் ஆண்டில் எரெமியாசு வழியாக ஆண்டவர் சொல்லியிருந்தது நிறைவேறும்படி, பாரசீக அரசன் சீருசின் மனத்தை ஆண்டவர் தூண்டிவிட்டார். அதனால், அவன் தன் நாடெங்கும் ஓர் ஆணை பிறப்பித்து அதை எழுத்து மூலமும் வெளியிட்டான்.
2 பாரசீக அரசனான சீருஸ் சொல்லுவதாவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணிலுள்ள எல்லா அரசுகளையும் எனக்கு அடிமைப்படுத்தியுள்ளார்; மேலும், யூதேயாவிலுள்ள யெருசலேமில் தமக்கு ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் எனக்குக் கட்டளையிட்டுள்ளார்.
3 உங்கள் நடுவே அவருடைய மக்கள் யாரேனும் உண்டா? அவர்களோடு அவர்களின் கடவுள் இருப்பாராக! அவர்கள் யூதாவிலுள்ள யெருசலேமுக்குப் போய் இஸ்ராயேலரின் கடவுளான ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக. யெருசலேமில் எழுந்தருளியிருக்கும் கடவுளே உண்மைக் கடவுள்.
4 அக்குலத்தார் எங்கெங்கு வாழ்ந்துவரினும் அவர்கள் யெருசலேமிலுள்ள தங்கள் கடவுளுடைய ஆலயத்திற்குக் காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதோடு, பொன்னும் வெள்ளியும், ஏனைய பொருட்களும், ஆடுமாடுகளும் அவர்களுக்குக் கொடுத்து உதவுவார்களாக" என்பதே அக்கட்டளை.
5 அப்போது யெருசலேமிலிருந்த ஆண்டவரின் ஆலயத்தைத்த திரும்பவும் கட்டி எழுப்புவதற்காக யூதா, பென்யமீன் குலத்தலைவர்களும் குருக்களும் லேவியரும் கடவுளின் ஆவியால் ஏவப்பட்டிருந்த அனைவரும் முன் வந்தனர்.
6 சுற்றிலுமுள்ள ஊர்களில் வாழ்ந்து வந்த அனைவரும் காணிக்கையாகக் கொடுத்திருந்தவற்றைத் தவிர, பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் மற்றப் பொருட்களையும் மிருகங்களையும் தட்டுமுட்டுகளையும் அவர்களுக்குக் கொடுத்து உதவினர்.
7 மேலும் நபுக்கோதனசார் யெருசலேமிலிருந்து எடுத்து வந்து தன் கடவுளின் கோவிலில் வைத்திருந்த ஆண்டவரின் ஆலயப் பாத்திரங்களைச் சீருஸ் திருப்பிக் கொடுத்து விட்டான்.
8 அவற்றைப் பாரசீக அரசனான சீருஸ், கஸ்பாரின் மகன் மித்திரீ தாத்திசின் மூலம் யூதாவின் தலைவனான சஸ்பசாரிடம் கொடுத்தான்.
9 அவையாவன: பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது, பொற் கிண்ணங்கள் முப்பது;
10 வேறு வகை வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம்,
11 பொன் வெள்ளிப் பாத்திரங்கள் ஐயாயிரத்து நானூறு. இவற்றை எல்லாம் சஸ்பசாரும், பபிலோன் அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமுக்குத் திரும்பின யூதர்களும் கொண்டு வந்திருந்தனர்.
அதிகாரம் 02
1 பபிலோனிய அரசன் நபுக்கோதனசார் பபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றவர்களுள் அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமுக்கும் யூதேயாவிலுள்ள தத்தம் ஊருக்கும் திரும்பிவந்த யூதர்களின் எண்ணிக்கையாவது:
2 எரோபாபெலோடு வந்தவர்கள்: யோசுவா, நெகேமியா, சராயியா, ரகேலகியா, மர்தோக்கே, பெல்சான், மெஸ்பார், பெகெயி, ரேகும், பானா ஆகியோர்.
3 இஸ்ராயேல் மக்களுள் ஆடவரின் கணக்காவது: பாரோசின் சந்ததியார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டு பேர்;
4 செப்பாத்தியாவின் சந்ததியார் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்;
5 ஆரேயாவின் சந்ததியார் எழு நூற்று எழுபத்தைந்து பேர்;
6 யோசுவா, யோவாபின் வழிவந்த பாகத்மோவாபின் சந்ததியார் இரண்டாயிரத்து எண்ணுற்றுப் பன்னிரண்டு பேர்;
7 ஏலாமின் சந்ததியார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்;
8 ஜெத்துவாவின் சந்ததியார் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்;
9 சக்காயீயின் சந்ததியார் எழுநூற்று அறுபது பேர்;
10 பானியின் சந்ததியார் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்;
11 பேபாயின் சந்ததியார் அறுநூற்று இருபத்து மூன்று பேர்;
12 அஜ;காத்தின் சந்ததியார் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்;
13 அதோனிக்காமின் சந்ததியார் அறுநூற்று அறுபத்தாறு பேர்;
14 பெகாயியின் சந்ததியார் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்;
15 ஆதினின் சந்ததியார் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்;
16 எசெக்கியாவின் மகன் ஆத்தேரின் சந்ததியார் தொண்ணுற்றெட்டு பேர்;
17 பெசாயியின் சந்ததியார் முந்நூற்று இருபத்து மூன்று பேர்;
18 யோராவின் சந்ததியார் நூற்றுப் பன்னிரண்டு பேர்;
19 ஹசுமின் சந்ததியார் இருநூற்று இருபத்துமூன்று பேர்;
20 கெப்பாரின் சந்ததியார் தொண்ணுற்றைந்து பேர்;
21 பெத்லெகேமில் வாழ்ந்தவருள் நூற்று இருபத்துமூன்று பேர்;
22 நெதுபாவில் வாழ்ந்தவருள் ஐம்பத்தாறு பேர்;
23 அநத்தோத்தில் வாழ்ந்தவருள் நூற்றிருபத்தெட்டுப் பேர்;
24 அஸ்மவேத்தில் வாழ்ந்தவருள் நாற்பத்திரண்டு பேர்;
25 கரியாத்தியாரின், செபிரா, பெரோத் நகரத்தார் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்;
26 ராமா, காபாவா நகரத்தார் அறுநூற்று இருபத்தொரு பேர்;
27 மக்மாசு நகரத்தார் நூற்று இருபத்திரண்டு பேர்;
28 பேத்தேல், ஹாயி நகரத்தார் இருநூற்று இருபத்து மூன்று பேர்;
29 நெபோவின் மக்களிலே ஐம்பத்திரண்டு பேர்;
30 மெக்பீசின் மக்களிலே நூற்றைம்பத்தாறு பேர்;
31 மற்றொரு ஏலாமின் மக்களிலே ஆயிரத்து இருநூற்றைம்பத்து நான்கு பேர்;
32 ஹரீமின் மக்களிலே முந்நூற்றிருபது பேர்;
33 லோத், ஹதித், ஒநோ நகரத்தார் எழுநூற்றிருபத்தைந்து பேர்;
34 எரிக்கோ நகரத்தார் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்;
35 செனாவா நகரத்தார் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்;
36 குருக்களிலே: யோசுவா குலத்துச் சதாயியாவின் மக்களில் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்;
37 எம்மோரின் மக்களிலே ஆயிரத்தைம்பத்திரண்டு பேர்;
38 பெசூரின் மக்களிலே ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்;
39 ஹரீமின் மக்களிலே ஆயிரத்துப் பதினேழு பேர்.
40 லேவியர்களிலே: ஒதோவியாவின் புதல்வரான யோசுவா, கெத்மிகேல் என்பவர்களின் மக்களிலே எழுபத்து நான்கு பேர்;
41 பாடகர்களுள் அசாப் மக்களிலே நூற்றிருபத்தெட்டுப் பேர்;
42 வாயிற்காவலரின் மக்களான செல்லும், ஆதேர், தேல்மோன், ஆக்கூப், ஹத்திதா, சோபாயி முதலியோரின் மக்களிலே மொத்தம் நூற்று முப்பத்துதொன்பது பேர்.
43 ஆலய ஊழியர்களிலே: சீகாவின் மக்கள், கசுவாவின் மக்கள், தாப்பவோத்தின் மக்கள்,
44 செரோசின் மக்கள், சியாவின் மக்கள்,
45 பதோனின் மக்கள், லெபெனாவின் மக்கள்,
46 ஹகபாவின் மக்கள், ஆக்கூப் மக்கள், ஹக்காப்பின் மக்கள், செம்லாயின் மக்கள், ஹானானின் மக்கள்,
47 காத்தேலின் மக்கள், காஹேரின் மக்கள்,
48 ராவயியாவின் மக்கள், ராசீனின் மக்கள், நெகொதாவின் மக்கள், கசாமின் மக்கள்,
49 ஆசாவின் மக்கள், பசேயியாவின் மக்கள், பெசெயேயின் மக்கள்,
50 ஆசேனாவின் மக்கள், முனீமின் மக்கள், நெபுசீமின் மக்கள்,
51 பக்பூகின் மக்கள், ககூபாவின் மக்கள், ஹாரூரின் மக்கள்,
52 பெசுலூத்தின் மக்கள், மகீதாவின் மக்கள்,
53 ஹர்சாவின் மக்கள், தேமாவின் மக்கள்,
54 நாசியாவின் மக்கள், ஹாதிபாவின் மக்கள்.
55 சாலமோனின் ஊழியர்களுடைய மக்களிலே: சொத்தாயீன் மக்கள், சொபெரேத்தின் மக்கள்,
56 பருதாபின் மக்கள், யாலாவின் மக்கள், தெர்கோனின் மக்கள், கெத்தேலின் மக்கள்,
57 சப்பாத்தியாவின் மக்கள், ஹாதீலின் மக்கள், அசேபெயீம் வழிவந்த பொகெரேத்தின் மக்கள், அமீயின் மக்கள் ஆகியோர்.
58 இவ்வாறு எல்லா ஆலய ஊழியர்களும் சாலமோனின் ஊழியர்களுடைய மக்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொன்ணுற்றிரண்டு பேர்.
59 மேலும் தெல்மலா, தேலார்சா, கெரூப், அதோன், எமேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களில் தாங்கள் இஸ்ராயேலின் வழிவந்தவர் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தவர்களுள்:
60 தலாயியாவின் மக்களும், தொபியாசின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
61 இதுவுமன்றி, குருக்களின் மக்களான ஹோபியாவின் மக்களும், அக்கோசின் மக்களும், கலாத் ஊரானான பேர்செலாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டதனால் அவர்கள் பெயரால் அழைக்கப்பட்ட பேர் செலாயின் மக்களும்,
62 ஆகிய இவர்கள் தங்கள் தலைமுறை அட்டவணையைத் தேடியும் அடையாததால் அவர்கள் குருத்துவப் பணியினின்று நீக்கப்பட்டனர்.
63 அதேர்சதா அவர்களைப் பார்த்து, "அறிஞனும் உத்தமனுமான ஒரு குரு தோன்றும்வரை, நீங்கள் உள்தூயகப் பொருட்களில் எதையும் உண்ணக்கூடாது" என்று சொன்னான்.
64 முன் சொல்லப்பட்டோர் அனைவரும் சேர்ந்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபது பேர்.
65 அவர்களைத் தவிர, அவர்களின் ஊழியர்களில் ஆணும் பெண்ணுமாய் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தெழு பேர் இருந்தனர். இவர்களிடையே பாடகரும் பாடகிகளும் இருநூறு பேர்.
66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து;
67 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்றிருபது.
68 குலத்தலைவர்களுள் சிலர் யெருசலேமில் உள்ள ஆண்டவரின் ஆலயத்தை அடைந்த போது, ஆலயத்தை அதன் பழைய இடத்திலேயே கட்டி எழுப்பும்படி மனமுவந்து காணிக்கைகளைக் கொடுத்தனர்.
69 அவர்கள் தத்தம் வசதிக்கேற்ப வேலைச் செலவுக்கு அறுபத்தோராயிரம் பொற்கட்டிகளையும், ஐயாயிரம் ராத்தல் வெள்ளியையும், குருக்களுக்கு நூறு உடைகளையும் கொடுத்தனர்.
70 குருக்களும் லேவியர்களும், மக்களில் பலரும் பாடகரும் வாயிற்காவலரும் ஆலய ஊழியரும் தத்தம் நகர்களிலும், இஸ்ராயேலர்கள் யாவரும் தத்தம் நகர்களிலும் குடியேறினார்கள்.
அதிகாரம் 03
1 தத்தம் நகரங்களிலே வாழ்ந்து வந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஏழாம் மாதத்திலே யெருசலேமில் ஒன்று கூடினர்.
2 அப்பொழுது யோசதேக்கின் மகன் யோசுவாவும் அவர் உடன் குருக்களும், சலாத்தியேலின் மகன் ஜெரோபாபேலும், அவர் சகோதரர்களும் சேர்ந்து, கடவுளின் மனிதரான மோயீசனின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளவாறு தகனப் பலிகளை ஒப்புக்கொடுக்கும்படி இஸ்ராயேலின் கடவுளுக்கு ஒரு பீடம் எழுப்பினார்கள்.
3 அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்கள் அவர்களை அச்சுறுத்தியும், அவர்கள் கடவுளுடைய பீடத்தை அது முன்பு இருந்த இடத்திலேயே அமைத்தனர்; அதன் மேல் காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்குத் தகனப்பலி செலுத்தி வந்தனர்.
4 (திருச்சட்டநூலில்) எழுதியள்ளவாறு அவர்கள் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடினர்; அன்றாடக் கடமைகளை முறைப்படி நிறைவேற்றி, நாளும் தகனப்பலி செலுத்தி வந்தனர்.
5 அதற்குப் பிறகு, ஆண்டவரின் திருநாட்களான அமாவசை நாட்களிலும், மற்றக் கொண்டாட்டங்களின் போதும் தகனப்பலிகள் செலுத்தப்பட்டன; அத்தோடு காணிக்கைகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
6 ஏழாவது மாதத்தின் முதல் நாளிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலியை ஒப்புக்கொடுத்து வந்தார்கள். ஆனால் கடவுளுடைய ஆலயத்திற்கு இன்னும் அடிக்கல் நாட்டப் படவில்லை.
7 அப்பொழுது பாரசீக அரசன் சீருசின் கட்டளைப்படி, அவர்கள் கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். மேலும், லீபானிலிருந்து யோப்பேக் கடலுக்குக் கேதுரு மரங்களைக் கொண்டு வரும்படி சீதோன், தீர் நகரத்தாருக்கு உணவு, பானம், எண்ணெய் முதலியன கொடுத்தனர்.
8 அவர்கள் யெருசலேமில் உள்ள கடவுளின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் சலாத்தியேலின் மகன் ஜெரோபாபேலும், யோசதேக்கின் மகன் யோசுவாவும், அவர்களுடைய உடன்குருக்களும், லேவியர்களும், அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமிற்குத் திரும்பி வந்திருந்த எல்லாருமே ஆண்டவருடைய ஆலய வேலையைத் தொடங்கினர். இவ்வேலையை விரைவில் முடிக்க இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதினரான லேவியர்களை நியமித்தனர்.
9 மேலும் ஆலய வேலை செய்து வந்தவர்களை ஊக்குவிப்பதற்காக யோசுவாவும் அவன் புதல்வரும் சகோதரர்களும், கேத்மிகேலும் அவனுடைய புதல்வரும் சகோதரர்களும், கேத்மிகேலும் அவனுடைய புதல்வரும், யூதாவின் புதல்வர்களும் முன்வந்தனர்; கெனாதாத்தின் புதல்வர்களும் அவர்களுடைய சகோதரர்களான லேவியர்களும் அவ்விதமே முன் வந்தனர்.
10 கொத்தர்கள் ஆண்டவருடைய ஆலயத்திற்கு அடித்தளம் இட்டபின் இஸ்ராயேல் அரசர் தாவீது கட்டளை இட்டிருந்தவாறு, கடவுளைப் புகழ்வதற்காக, அணி செய்யப்பட்ட ஆடைகளை உடுத்தியிருந்த குருக்கள் எக்காளங்களோடும், ஆசாப்பின் மக்களான லேவியர்கள் தாளங்களோடும், அங்கு வந்து நின்றனர்.
11 அவர்கள் பாடல்களைப் பாடி, "ஆண்டவர் நல்லவர்; ஏனெனில் அவரது இரக்கம் இஸ்ராயேல் மீது என்றென்றும் உள்ளது" என்று ஆண்டவரை போற்றிப் புகழ்ந்தனர். மக்கள் எல்லாரும் அவரைப் புகழ்ந்து ஆண்டவரின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை எண்ணி, மகிழ்ச்சி கொண்டாடினர்.
12 பழைய ஆலயத்தைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மக்களின் மூப்பர் ஆகியோரில் பலர், புது ஆலயத்திற்குப் போடப்பட்டிருந்த அடித்தளத்தைக் கண்டு உரத்த குரலில் அழுதனர். வேறு பலரோ மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர்.
13 ஆனால், மகிழ்ச்சிக் குரலையும் அழுகைக் குரலையும் பிரித்துணர எவராலும் முடியவில்லை; ஏனெனில், வெகுதூரம் கேட்கும்படி மக்கள் பெரும் கூச்சலிட்டனர்.
அதிகாரம் 04
1 அடிமைத்தனத்தினின்று திரும்பியிருந்த மக்கள் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருக்கு ஆலயம் கட்டி வந்ததை யூதா, பென்யமீன் குலத்தாரின் பகைவர் அறிய வந்தனர்.
2 எனவே அவர்கள், ஜெரோபாபேலிடமும் குலத்தலைவர்களிடமும் வந்து, "உங்களோடு சேர்ந்து நாங்களும் வேலை செய்வோம். ஏனெனில், நீங்கள் வழிபட்டுவரும் கடவுளையே நாங்களும் வழிபட்டு வருகிறோம். அசீரிய அரசன் ஆசோர் தத்தான் எங்களை இங்கு கொண்டு வந்த நாள் முதல், நாங்கள் அவருக்கே பலி செலுத்தி வருகிறோம்" என்று சொன்னார்கள்.
3 ஆனால் ஜெரோபாபேலும் யோசுவாவும் இஸ்ராயேலின் குலத்தலைவர்களான மற்றவர்களும் அவர்களைப் பார்த்து, "உங்களோடு சேர்ந்து நாங்கள் எங்கள் கடவுளுக்கு ஆலயம் கட்டுவது முறையன்று; மாறாக, பாரசீக அரசனான சீருஸ் கட்டளையிட்டுள்ளவாறு, நாங்கள் மட்டுமே எங்கள் கடவுளான ஆண்டவருக்கு ஆலயம் எழுப்புவோம்" என்று மறுமொழி கூறினர்.
4 ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்கள் செய்து வந்த ஆலய வேலையைத் தடுக்கவும், அதற்கு இடையூறாய் நிற்கவும் தொடங்கினர்.
5 மேலும் இவர்கள், பாரசீக அரசன் சீருசின் ஆட்சிக்காலம் முழுவதும், பாரசீக அரசனான தாரியுஸ் ஆட்சிக்கு வருமளவும், அவர்களின் திட்டங்களைச் சீர்குலைக்கும் வண்ணம், சிலரைத் தூண்டிவிட்டு, அவர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து வந்தனர்.
6 அசுவேருஸ் அரியணை ஏறிய போது, யூதாவிலும் யெருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றம் சாட்டினர்.
7 அரசன் அர்தக்சேர்செகின் ஆட்சியின் போது, பெசலாமும் மித்திரீ தாத்தும் தபெயேலும் இவர்களைச் சேர்ந்த மற்றவர்களும், பாரசீக அரசன் அர்தக்சேர்செசுக்கு ஒரு மனு எழுதினர். அது சீரியா மொழியிலும் சீரியா எழுத்திலும் எழுதப்பட்டிருந்தது.
8 ரேகும் பேயெல்தேயெமும், எழுத்தன் சம்சாயியும் யெருசலேமிலிருந்து அரசன் அர்தக்சேர்செசுக்குச் கீழ்கண்டவாறு ஒரு மனு எழுதினர்.
9 ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி, அவர்களைச் சேர்ந்தவர்களாகிய தீனெயர், அபற்சதாக்கேயர், தெற்பாலையர், அபற்சேயர், அர்க்கேவியர், பபிலோனியர், சூசங்கியர், தெகாவியர், எலாமியர் ஆகிய அனைவரும்,
10 மாட்சிமையும் மேன்மையும் பொருந்திய அசேனபார் கூட்டி வந்து, சமாரியாவின் நகரங்களிலும் நதியின் அக்கரையிலுள்ள மற்ற நாடுகளிலும் சமாதானத்தோடு குடியேறி வாழச்செய்திருந்த மற்ற மக்களுமே அம்மனுவை எழுதினர்.
11 அவர்கள் அர்தக்சேர்செஸ் மன்னனுக்கு எழுதி அனுப்பிய மனு வருமாறு: "அரசர் அர்தக்சேர்செஸ் அவர்களுக்கு நதிக்கு அக்கரையில் வாழும் உம் ஊழியர் நாங்கள் வாழ்த்துக் கூறுகிறோம்.
12 அரசர் அறியவேண்டியதாவது: உம்மிடமிருந்து எங்களிடம் வந்துள்ள யூதர்கள், கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த நகரான யெருசலேமில் கூடி, அதன் மதில்களைத் திரும்பக் கட்டி வருகிறார்கள்.
13 இவ்வாறு, இந்நகரும் அதன் மதில்களும் கட்டப்படுமானால், அவர்கள் இனி உமக்குத் திறை செலுத்தமாட்டார்கள்; வரி, தீர்வை முதலியவற்றையும் கொடுக்கமாட்டார்கள். அதனால், அரசருக்குரிய வருமானம் குறையும் என்பதையும் அரசருக்கு அறிவிக்க விரும்புகின்றோம்.
14 நாங்களோ உமது அரண்மனையில் உண்ட உப்பை நினைவில் கொண்டிருப்பதாலும், அரசருக்குத் தீங்கு இழைப்பது பெருங்குற்றம் என்று எண்ணுவதாலும், நாங்கள் இம்மனுமூலம் அரசருக்கு இதைத் தெரியப் படுத்தியிருக்கின்றோம்.
15 எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், இந்நகர் அரசர்களுக்கும் நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய, கலகக்கார நகர் என்றும், அதில் தொன்றுதொட்டுப் போர்கள் நிகழ்ந்து வந்துள்ளன என்றும், அதன்பொருட்டே அது அழிவுற்றது என்றும் அதில் படித்து அறியலாம்.
16 ஆகையால், இந்நகர் எழுப்பப்பட்டு, அதன் மதில்கள் கட்டப்படுமாயின், நதிக்கு அக்கரையில் உள்ள நாடுகள் உமக்குச் சொந்தமாகா என்பதை அரசருக்குத் தெரிவிக்கின்றோம்".
17 அப்பொழுது, ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி ஆகியோருக்கும், சமாரியாவில் வாழ்ந்து வந்த இவர்கள் கூட்டத்தாருக்கும், நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வந்த மற்றவர்களுக்கும், வணக்கமும் சமாதானமும் கூறி, அரசன் எழுதி அனுப்பிய மறுமொழியாவது:
18 நீங்கள் அனுப்பிய மனு எம் முன்னிலையில் தெளிவாய் வாசிக்கப்பட்டது.
19 எனவே, (வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும்படி) கட்டளையிட்டோம். அப்பொழுது தொன்றுதொட்டு அந்நகர் அரசர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வந்துள்ளது என்றும், அதிலே குழுப்பங்களும் போர்களும் இருந்து வந்துள்ளன என்றும் அறிய வந்தோம்.
20 மேலும் யெருசலேமில் மிக்க ஆற்றல் படைத்த அரசர்கள் இருந்திருக்கின்றனர்; இவர்கள் நதிக்கு அக்கரையிலுள்ள நாடுகளை எல்லாம் அடிமைப்படுத்தி, அவற்றினின்று திறை, வரி, தீர்வை முதலியவற்றை வாங்கிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிகிறது.
21 எனவே, இப்போது நமது முடிவைக் கேளுங்கள்: எம்மிடமிருந்து மறுகட்டளை பிறக்கும் வரை அந்த மனிதர்கள் அந்நகரைக் கட்டி எழுப்பாதபடி அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்.
22 இக்கட்டளையை நிறைவேற்றுவதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. இல்லாவிட்டால், அரசர்களுக்கு எதிராகத் தீய சக்திகள் சிறிது சிறிதாக வளரும்."
23 அர்தக்சேர்செஸ் அரசனின் கட்டளையானது ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி ஆகியோருக்கும் இவர்களுடைய கூட்டத்தாருக்கும் முன்பாக வாசிக்கப்பட்டது. அவர்கள் யெருசலேமிலிருந்த யூதர்களிடம் விரைந்து சென்று, தங்கள் ஆயுத பலத்தால் அவர்கள் வேலை செய்யாதபடி தடுத்தனர்.
24 எனவே, யெருசலேமில் கடவுளின் ஆலயவேலை தடைபட்டது. பாரசீக அரசன் தாரியுஸ் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு வரை இந்நிலை நீடித்தது.
அதிகாரம் 05
1 ஆயினும், இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோவின் மகன் சக்கரியாசும் யூதாவிலும் யெருசலேமிலுமிருந்த யூதர்களிடம் இஸ்ராயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.
2 அப்போது ஜெரோபாபேலின் மகன் சலாத்தியேலும், யோசதேக்கின் மகன் யோசுவாவும் யெருசலேமில் கடவுளின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத் தொடங்கினர். இறைவாக்கினரும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர்.
3 அக்காலத்தில் நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் வந்து, "இவ்வாலயத்தைக் கட்டவும், இதன் சுவர்களை எழுப்பவும், உங்களுக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்?" என்று கேட்டனர்.
4 அதற்கு நாங்கள் இவ்வாலயத்தை எழுப்பக் காரணமாயிருந்தோரின் பெயர்களை அவர்களுக்குக் கூறினோம்.
5 கடவுளின் அருள் யூதமக்களின் மூப்பரோடு இருந்ததால், அவர்களை வேலை செய்யாதவாறு தடுக்க ஒருவராலும் முடியவில்லை. ஆயினும் இக்காரியம் தாரியுசுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் யூதர்கள் தங்கள் நியாயங்களை அவரிடத்திலேயே சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
6 நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த அற்பசாக்கேயரும் அரசன் தாரியுசுக்கு எழுதி அனுப்பிய கடிதம் வருமாறு:
7 தாரியுஸ் அரசருக்கு வணக்கம்! அரசர் அறிய வேண்டியதாவது:
8 நாங்கள் யூதேயா நாட்டிலுள்ள பெரும் கடவுளின் ஆலயத்திற்குப் போனோம். அது பொளியப்படாத கற்களால் கட்டப்பட்டு வருகிறது. அவற்றின் மேல் உத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேலை நுணுநுணுக்கமாகவும் விரைவாகவும் நடந்து கொண்டிருக்கிறது.
9 நாங்கள் அவர்களுடைய மூப்பர்களை நோக்கி, 'இவ்வாலயத்தைக் கட்டவும், இச்சுவர்களை எழுப்பவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்?' என்று கேட்டோம்.
10 மேலும், தங்களுக்கு அறிவிக்கும் எண்ணத்துடன், அவர்களுடைய பெயர்களையும் கேட்டோம். அவர்களுள் பெரியோராய்த் திகழ்வோரின் பெயர்களையும் எழுதிக் கொண்டோம்.
11 அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது: 'நாங்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள். பல ஆண்டுகளுக்கு முன், இஸ்ராயேலின் மாமன்னர் ஒருவரால் கட்டப்பட்ட ஆலயத்தைத் திரும்பவும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
12 எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குக் கோபம் மூட்டினதால், அவர் அவர்களைப் பபிலோனிய அரசனும் கல்தேயனுமான நபுக்கோதனசாருடைய கைகளில் ஒப்புவித்தார். அவர் இவ்வாலயத்தை அழித்து மக்களைப் பபிலோனுக்குச் சிறைப்படுத்திச் சென்றார்.
13 ஆனால் பபிலோனிய அரசர் சீருஸ் தம் ஆட்சியின் முதல் ஆண்டில் இவ்வாலயத்தைக் கட்டி எழுப்பும்படி ஓர் ஆணை பிறப்பித்தார்.
14 மேலும் யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோன் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை அரசர் சீருசே பபிலோன் கோவிலிலிருந்து எடுத்துக் கொடுத்தார். சாஸ்பசாரை இந்நாட்டின் ஆளுநராக அவரே நியமித்து, அவரின் கைகளில் அவற்றை ஒப்படைத்தார்.
15 அரசர் அவரைப் பார்த்து: நீ இப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் யெருசலேமிலுள்ள ஆலயத்தில் வை. கடவுளின் ஆலயம் அது முன்பு இருந்த இடத்திலேயே எழுப்பப்படட்டும்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.
16 எனவே அந்தச் சாஸ்பசார் யெருசலேமிற்கு வந்து கடவுளுடைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அன்று முதல் இன்று வரை அது கட்டப்பட்டு வந்தாலும், அது இன்னும் முடிவடையவில்லை' என்றார்கள்.
17 ஆகவே, இப்போது அரசர் விரும்பினால், பபிலோனிலுள்ள அரசரது நூல்நிலையத்தில் தேடிப்பார்த்து, யெருசலேமில் கடவுளின் ஆலயம் எழுப்பப் படும்படியாகச் சீரூஸ் அரசர் ஆணை விடுத்தது உண்மைதானா என்று பார்க்கவும், இதுபற்றி அரசரின் விருப்பம் என்ன என்று எங்களுக்குத் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்."
அதிகாரம் 06
1 தாரியுஸ் அரசன் கட்டளையிடவே, பபிலோனிலுள்ள நூல் நிலையத்தைத் துருவிப் பார்க்கத் தொடங்கினர்.
2 மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான் என்ற அரண்மனையில் ஒரு நூல் அகப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது"
3 சீருஸ் அரசர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டில், அரசர் சீருஸ் பிறப்பித்த ஆணையாவது: யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயம், பலிகள் செலுத்தப் பெறுவதற்குத் தகுந்த ஓர் இடத்திலே கட்டப்பட வேண்டும். அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாய் இருக்க வேண்டும். எனவே, அதற்கேற்றபடி அடிப்படை உறுதியாயிருக்க வேண்டும்.
4 அது மூன்று வரிசை பொளியப்படாத கற்களாலும், மூன்று வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்பட வேண்டும். அதற்கு வேண்டிய செலவு அரசரின் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும்.
5 மேலும், யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோனுக்குக் கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிப்பாத்திரங்கள் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்."
6 எனவே, தாரியுஸ் கட்டளைக் கடிதம் ஒன்று எழுதினான்: "நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழும் தத்தானாயியும் ஸ்தார்புஜனாயிமாகிய நீங்களும், நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வரும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்த அபற்சக்கேயராகிய யாவரும் யூதர்களை விட்டு அகன்று போக வேண்டும்.
7 யூதர்களின் ஆளுநரும் அவர்களின் மூப்பர்களும் இக் கடவுளின் ஆலயத்தை அது முன்பு இருந்த இடத்திலேயே கட்டும்படியாக விட்டு விடுங்கள்.
8 மேலும், கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்கு யூதர்களின் மூப்பர்கள் செய்ய வேண்டியதைக்குறித்து, நாம் இடும் கட்டளையாவது: வேலை தடை படாமலிருக்கும் பொருட்டு, நதிக்கு அக்கரையில் உள்ள நாட்டினின்று அரசனுக்கு வரும் கப்பத்திலிருந்து அம்மனிதர்களுக்கு வேண்டியதையெல்லாம் தவறாது கொடுக்க வேண்டும்.
9 மேலும், தேவைக்குத் தகுந்தபடி விண்ணகக் கடவுளுக்குத் தகனப் பலிகளைச் செலுத்துவதற்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், வெள்ளாட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றை யெருசலேமிலுள்ள குருக்களின் சொற்படியே நாள்தோறும் தவறாது கொடுக்க வேண்டும்.
10 குருக்கள் விண்ணகக் கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தி, அரசரும் அவருடைய புதல்வரும் நீடூழி வாழுமாறு அவர்களுக்காக மன்றாட வேண்டும்.
11 இக்கடளையை நாமே பிறப்பித்தோம். எவனும் இக்கட்டளையை மீறினால், அவன் வீட்டிலிருந்து ஓர் உத்திரத்தை எடுத்து நாட்டி, அதில் அவன் அறையப்பட வேண்டும்; அவனது வீடு பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
12 மேலும், இக்கட்டளையை மாற்றவோ, யெருசலேமிலுள்ள ஆலயத்தை அழிக்கவோ, அரசர்களிலேனும் மக்களிலேனும் யாராவது முயன்றால், கடவுள் தம் திருப்பெயர் விளங்கும்படி அவ்விடத்திலேயே அவர்கள் எல்லாரையும் அழிப்பாராக! தாரியுஸ் ஆகிய நாமே இக்கட்டளையைக் கொடுத்தோம். இது கவனமாய் அனுசரிக்கப்பட வேண்டும்."
13 நதிக்கு அக்கரையில், ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தத்தானாயியும் ஸ்தார்புஜனாயியும் அவர்களின் கூட்டத்தாரும் அரசன் தாரியுசின் கட்டளையைக் கவனத்துடன் நிறைவேற்றி வந்தனர்.
14 யூதர்களின் மூப்பர்கள், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தனர்; இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோ மகன் சக்கரியாசும் உரைத்திருந்தபடி கட்டட வேலை முன்னேறியது. அவர்கள் இஸ்ராயேலின் கடவுளின் கட்டளைப்படியும், பாரசீக அரசர்களான சீருஸ், தாரியுஸ், அர்தக்சேர்செஸ் ஆகியோரின் கட்டளைப்படியும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.
15 அரசன் தாரியுசுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டு, ஆதார் மாதம் மூன்றாம் நாள் ஆலய வேலை முடிவுற்றது.
16 அப்பொழுது இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த ஏனையோரும் கடவுளின் கோவில் அபிஷுகத் திருவிழாவை அக்களிப்புடன் கொண்டாடினர்.
17 கோயில் அபிஷுகத்திற்காக நூறு இளங்காளைகளும் இருநூறு செம்மறிக்கடாக்களும் நானூறு செம்மறிக் குட்டிகளும், இஸ்ராயேல் கோத்திரங்களின் கணக்குப்படி, இஸ்ராயேல் மக்கள் அனைவரின் பாவத்துக்காகப் பன்னிரு வெள்ளாட்டுக் கிடாக்களும் ஒப்புக்கொடுத்தனர்.
18 மோயீசனின் நூலில் எழுதியுள்ளவாறு, அவர்கள் யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயத்தில் திருப்பணி புரியக் குருக்களையும் லேவியர்களையும், தத்தம் பிரிவின் முறைப்படி நியமித்தனர்.
19 மேலும், அடிமைத்தனத்திதிலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்கள் முதன் மாதம் பதினான்காம் நாள், பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடினர்.
20 குருக்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டவர்களாய்த் தங்களைத் தூய்மைப் படுத்தியிருந்தனர். குருக்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லாருக்காகவும் தங்கள் உடன் குருக்களுக்காகவும் தங்களுக்காகவும் பாஸ்காவைப் பலியிட்டனர்.
21 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்களும், இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரைப் பின்பற்றுவதற்காகப் புறவினத்தாரின் தீட்டினின்று விடுபட்டு இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்துகொண்ட அனைவரும் பாஸ்காகை உண்டனர்.
22 புளியாத அப்பத் திருவிழாவை ஏழு நாளளவும் மகிழ்வோடு கொண்டாடினர். இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஆலய வேலைக்கு உதவி செய்வதற்காக அசீரிய மன்னனின் இதயத்தை மாற்றியிருந்ததை நினைந்து நினைந்து, ஆண்டவரில் அவர்கள் அக்களித்தனர்.
அதிகாரம் 07
1 பாரசீக அரசனான அர்தக்சேர்செசின் ஆட்சிக்காலத்தில், சாராயியாசின் மகன் எஸ்ரா யெருசலேமுக்கு வந்தார். சாராயியாஸ் அஜாரியாசின் மகன்; இவனோ ஹெல்கியாசின் மகன்;
2 இவன் செல்லுமின் மகன்; செல்லும் சாதோக்கின் மகன்; இவன் அக்கித்தோபின் மகன்;
3 இவன் அமாரியாசின் மகன்; அமாரியாஸ் அஜாரியாசின் மகன்; இவன் மரயோத்தின் மகன்;
4 மரயோத் ஜாராகியாசின் மகன்; ஜாராகியாஸ் ஓஜியின் மகன்;
5 இவன் பொக்சியின் மகன்; பொக்சியோ அபிசூயேயின் மகன்; இவன் பினேசின் மகன்; பினேஸ் எலியெசாரின் மகன்; இவன் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.
6 அந்த எஸ்ரா பபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்; இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் மோயீசன் மூலம் அருளியிருந்த திருச்சட்டநூலில் அவர் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவர் கேட்டதையெல்லாம் அரசன் அவருக்குக் கொடுத்து வந்தான்.
7 அவரோடு இஸ்ராயேல் மக்களான குருக்களிலும் லேவியர்களிலும் பாடகரிலும் வாயிற்காவலரிலும் ஆலய ஊழியரிலும் சிலர், அரசன் அர்தக்சேர்செசின் ஏழாம் ஆண்டில் யெருசலேமுக்குப் புறப்பட்டனர்.
8 அவர்கள் அவ்வாண்டு ஐந்தாம் மாதம் யெருசலேமை அடைந்தனர்.
9 அவ்வாண்டு முதன் மாதம் முதல் நாள் பபிலோனிலிருந்து புறப்பட்ட எஸ்ரா ஐந்தாம் மாதம் முதல் நாள் யெருசலேமுக்கு வந்து சேர்ந்தார். ஏனெனில், அவருடைய கடவுளின் அருட்கரம் அவரோடு இருந்தது.
10 அவரோ ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்றறிவதிலும் அதன்படி நடப்பதிலும், இஸ்ராயேலருக்கு அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் புகட்டுவதிலுமே ஆர்வம் கொண்டிருந்தார்.
11 இஸ்ராயேலருடைய கடவுளின் வாக்கியங்களிலும் கட்டளைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் வல்லுநரான குரு எஸ்ராவின் கையில் அரசன் அர்தக்சேர்செஸ் கொடுத்திருந்த கட்டளைக் கடிதம் வருமாறு:
12 அரசர்க்கு அரசரான அர்தக்சேர்செசான நாம் விண்ணகக் கடவுளின் திருச்சட்டநூலில் வல்லுநரான குரு எஸ்ராவுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவதாவது:
13 நமது ஆட்சிக்குட்பட்ட இஸ்ராயேல் மக்களிலும் குருக்களிலும் லேவியர்களிலும் யாருக்கு விருப்பமோ அவர்கள் உம்மோடு யெருசலேமுக்குப் போகலாம் என்று நாம் கட்டளையிடுகிறோம்.
14 ஏனெனில், உமது கையிலிருக்கிற உமது கடவுளின் திருச்சட்டத்தின்படி யூதேயாவையும் யெருசலேமையும் பார்வையிடவும்,
15 அரசரும் அவருடைய ஆலோசகரும் யெருசலேமில் வாழும் இஸ்ராயேலின் கடவுளுக்கு முழு மனத்தோடு ஒப்புக் கொடுத்த பொன்னையும் வெள்ளியையும்,
16 பபிலோன் நாடெங்கணுமிருந்து உமக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உம் மக்களும் குருக்களும் யெருசலேமிலுள்ள தங்கள் கடவுளின் ஆலயத்துக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளையும் நீர் கொண்டு போகும்படியும், நம் ஏழு ஆலோசகர்களும் நாமும் உம்மை அனுப்பி வைக்கிறோம்.
17 இப்பணத்தைக் கொண்டு காளைகளையும் ஆட்டுக்கடாக்களையும் செம்மறி ஆட்டுக்குட்டிகளையும் பலிப் பொருட்களையும் இவற்றிற்குத் தேவையான பான உணவுப் பலிகளையும் கவனமாகவும் தாராளமாகவும் வாங்கி, யெருசலேமிலிருக்கிற உங்கள் கடவுளின் ஆலயத்துப் பீடத்தின் மேல் பலியிடும்.
18 மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு, உமக்கும் உம்முடைய சகோதரருக்கும் விருப்பமானதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும்.
19 உம் கடவுளின் ஆலய வழிபாட்டுக்காக உமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை யெருசலேமில் உம் கடவுளின் திருமுன் வையும்.
20 மேலும், உம் கடவுளின் ஆலயத்திற்குத் தேவையான மற்ற யாவும், அவ்வப்பொழுது அரசனின் கருவூலத்தினின்று உமக்குக் கொடுக்கப்படும்.
21 நாமும் உமக்குக் கொடுப்போம். அர்தக்சேர்செஸ் அரசரான நாம் நதிக்கு அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்கு ஆணையிடுவதாவது: விண்ணகக் கடவுளின் திருச்சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் காலம் தாழ்த்தாது கொடுங்கள்.
22 அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு மரக்கால் கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் வரை கொடுங்கள். உப்பு வேண்டிய மட்டும் கொடுங்கள்.
23 விண்ணகக் கடவுள் நாட்டை ஆளும் அரசரின்மேலும், அரச புதல்வரின் மேலும் கோபம் கொள்ளாதபடி, விண்ணகக் கடவுளின் ஆலய வழிபாட்டுக்குத் தேவையான எல்லாம் ஒழுங்காய்க் கொடுக்கப்பட வேண்டும்.
24 மேலும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், ஆலய ஊழியர் ஆகிய இக்கடவுளின் ஆலயத் திருப்பணியாளர் அனைவர் மீதும் நீங்கள் எவ்விதத் திறையாவது வரியாவது தீர்வையாவது சுமத்த உங்களுக்கு அதிகாரமில்லை என்றும் உங்களுக்கு அறிவிக்கிறோம்.
25 எஸ்ராவே, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி, நதிக்கு அக்கரையில் வாழ்பவரும், உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவருமான மக்கள் அனைவருக்கும் நீதி வழங்க நீதிபதிகளையும் ஆளுநர்களையும் ஏற்படுத்தும். கல்லாதார்க்கும் அதைக் கற்றுக்கொடும்.
26 மேலும் உம் கடவுளின் திருச்சட்டத்தையோ அரச கட்டளைகளையோ கவனமாய்க் கடைப்பிடிக்காதவன் எவனும் மரண தண்டனைக்கு உள்ளாவான்; அல்லது நாடு கடத்தப்படுவான்; அல்லது அவனுடைய சொத்து பறிமுதல் செய்யப்படும்; இல்லை, அவன் சிறைத் தண்டனை பெறுவான்."
27 யெருசலேமிலுள்ள ஆண்டவரின் ஆலயத்தை மகிமைப் படுத்தும்படி அரசனைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக!
28 அவரே அரசன் முன்னும் அவனுடைய ஆலோசகர் முன்னும் அரச அலுவலருள் ஆற்றல் படைத்தோர் முன்னும் எனக்கு இரக்கம் கிடைக்கச் செய்தார். என் கடவுளான ஆண்டவரின் அருட்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ராயேல் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு கூட்டி வந்தேன்.
அதிகாரம் 08
1 அரசன் அர்தக்சேர்செசின் ஆட்சியின் போது என்னோடு பபிலோனிலிருந்து வந்த குலத்தலைவர்களும் அவர்களது தலைமுறை அட்டவணையுமாவது:
2 பினேஸ் மக்களில் கெர்சோம்; ஈத்தமார் மக்களில் தானியேல்;
3 தாவீதின் மக்களில் ஆத்தூஸ்; பாரோசின் சந்ததியைச் சேர்ந்த செக்கெனியாசின் மகன் சக்காரியாசும், மற்றும் நூற்றைம்பது ஆடவரும்;
4 பாஹாத்மோவாப் மக்களில் ஜரெகேயின் மகன் ஏலியோனாயியும், அவரோடு இருநூறு ஆடவரும்;
5 செக்கெனியாசின் மக்களில் எசெக்சியேலின் மகனும், அவரோடு முந்நூறு ஆடவரும்;
6 ஆதான் மக்களில் யோனாத்தாசின் மகன் ஆபேத்தும், அவரோடு ஐம்பது ஆடவரும்;
7 அலாமின் மக்களில் அத்தாலியாசின் மகன் இசயாசும், அவரோடு எழுபது ஆடவரும்;
8 சபாத்தியாவின் மக்களில் மிக்காயேலின் மகன் ஜெபெதியாவும், மற்றும் எண்பது ஆடவரும்;
9 யோவாபின் மக்களில் யாகியேலின் மகன் ஒபெதியாவும், மற்றும் இருநூற்றுப் பதினெட்டு ஆடவரும்;
10 செலோமித்தின் மக்களில் யொஸ்பியாவின் மகனும், மற்றும் நூற்றறுபது ஆடவரும்;
11 பேபாயின் மக்களில் பேபாயின் மகன் சக்காரியாசும், மற்றும் இருபத்தெட்டு ஆடவரும்;
12 ஆஸ்காத்தின் மக்களில் எக்சேத்தானின் மகன் யோகனானும், அவரோடு நூற்றுப்பத்து ஆடவரும்;
13 அதோனிக்காமின் மக்களில் கடைசிப் புதல்வரான ஏலிபெலேத், யெகியேல், சமாயாஸ் என்பவர்களும், இவர்களோடு அறுபது ஆடவரும்;
14 பெகுயின் மக்களில் உத்தாயியும், ஜக்கூரும் மற்றும் எழுபது ஆடவருமே.
15 அஹாவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள் நாங்கள் தங்கியிருந்தோம். அவர்களுள் குருக்கள், பொதுமக்களே அன்றி லேவியர் ஒருவரும் இல்லை.
16 ஆகையால் எலியெசார், ஆறியேல், செமேயியா, எல்நாத்தான், யாரீபு, வேறொரு எல்நாத்தான், நாத்தான், சக்காரியாஸ், மொசொல்லாம் ஆகிய மக்கள் தலைவர்களையும் ஞானிகளாகிய யொயியாரீபு, எல்நாத்தான் ஆகியோரையும் என்னிடம் அழைத்தேன்;
17 கஸ்பியா மாநிலத் தலைவன் எதோனிடம் அவர்களை அனுப்பி வைத்தேன். நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்கென ஆட்களை அனுப்பி வைக்குமாறு, கஸ்பியாவில் வாழ்ந்து வந்த எதோனையும் அவன் சகோதரரான ஆலய ஊழியரையும் கேட்கும்படி அவர்கள் மூலம் செய்தி அனுப்பினேன்.
18 அவர்களும் சென்றனர். நம் கடவுளின் அருட்கரம் நம்மோடு இருந்ததால், இஸ்ராயேலுக்குப் பிறந்த லேவியின் மகன் மொகோலியின் மக்களிலே மிகவும் கற்றறிந்த ஒருவனையும் சராபியாவையும் அவனுடைய புதல்வரும் சகோதரருமான பதினெட்டுப் பேரையும்;
19 ஹசபியாவையும், அவனோடு மெராரி மகன் இசயாசையும், இவனுடைய சகோதரரும் மக்களுமான இருபது பேரையும்,
20 லேவியருக்கு உதவி செய்யும் பொருட்டுத் தாவீதும் அவர் அலுவலரும் நியமித்திருந்த ஆலய ஊழியர்களில் இரு நூற்றிருபது பேரையும் நம்மிடம் கூட்டிக் கொண்டு வந்தனர். இவர்கள் எல்லாரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
21 நான் அஹாவா ஆற்றருகே இருந்தபோது, நம் கடவுளான ஆண்டவர் திருமுன் எங்களையே தாழ்த்தி, நானும் நம் மக்களும் நம் உடைமைகளோடு நல்லமுறையிலே (யெருசலேம்) போய்ச் சேரும்படியாக ஆண்டவரை வேண்டிக் கொண்டதோடு, அனைவரும் நோன்பு காக்கக் கட்டளையிட்டேன்.
22 ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட் படையினரையும் குதிரைப் படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு அரசனிடம் கேட்க எனக்கு வெட்கமாய் இருந்தது. இதற்குக் காரணம்: நாங்கள் அரசரை நோக்கி, "எங்கள் கடவுளின் அருட்கரம் தம்மை நேர்மையுடன் தேடுகிற அனைவர் மீதும் இருக்கிறது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும் கோபத்துக்கும் ஆளாவார்கள்" என்றும் சொல்லியிருந்தோம்.
23 எனவே நாங்கள் நோன்பு காத்து, எங்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.
24 பின்னர், தலைமைக் குருக்கள் பன்னிருவரையும் சறாபியா, ஹசபியா ஆகியோரோடு அவர்கள் சகோதரர்களில் பத்துப்பேரையும் தேர்ந்தெடுத்தோம்.
25 அரசரும் அவருடைய ஆலோசகரும் மக்கள் தலைவர்களும் அங்கு இருந்த இஸ்ராயேலர் அனைவரும் ஒப்புகொடுத்திருந்த வெள்ளியையும் பொன்னையும் எங்கள் கடவுளின் ஆலயத்திற்கென அர்ப்பணிக்கப் பட்டிருந்த பாத்திரங்களையும் அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தேன்.
26 நான் அவர்கள் கையில் நிறுத்துக் கொடுத்தது அறுநூற்றைம்பது தாலந்து நிறையுள்ள வெள்ளி, நூறு வெள்ளிப் பாத்திரங்கள், நூறு தாலந்து நிறையுள்ள பொன்,
27 ஆயிரம் பொற்கட்டி நிறையுள்ள இருபது பொற்கிண்ணங்கள், பொன் போன்ற இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய இவையே.
28 பின் அவர்களைப் பார்த்து, "நீங்கள் ஆண்டவரின் பரிசுத்தர். இப்பாத்திரங்களும் இவ்வெள்ளியும் இப் பொன்னும் நம் முன்னோரின் கடவுளான ஆண்டவருக்கு விரும்பி ஒப்புக்கொடுக்கப்பட்டதாகையால், அவையும் பரிசுத்தமானவையே.
29 நீங்கள் குருக்கள், லேவியர்களின் தலைவர்கள் முன்பாகவும், இஸ்ராயேல் குலத்தலைவர்கள் முன்பாகவும், ஆண்டவரின் ஆலயக் கருவூலத்திற்கு இவற்றைக் கொடுக்கும் வரை, பத்திரமாய்ப் பாதுகாத்து வாருங்கள்" என்று சொன்னேன்.
30 ஆகையால், குருக்களும் லேவியர்களும் நிறுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் பாத்திரங்களையும் யெருசலேமிலுள்ள நம் கடவுளின் ஆலயத்திற்குக் கொண்டு போகும்படி பெற்றுக் கொண்டனர்.
31 பிறகு முதன் மாதம் பன்னிரண்டாம் நாள், அஹாவா ஆற்றை விட்டு யெருசலேமுக்குப் புறப்பட்டோம். போகும் வழியில் நம் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.
32 நாங்கள் யெருசலேமை அடைந்து அங்கு மூன்று நாட்கள் தங்கினோம்.
33 நான்காம் நாள் நம் கடவுளின் ஆலயத்தில், குரு உறியாவின் மகன் மெறெமோத்துடைய கையால் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டன. பினேயெசின் மகன் எலியெசாரும், லேவியரான யோசுவாவின் மகன் யோசபாத்தும், பென்னோயின் மகன் நோவதியாவும் அங்கு இருந்தனர்.
34 அவை ஒவ்வொன்றையும் நிறுத்து அவற்றின் எண்ணிக்கையையும் எடையையும் அன்று அவர்கள் குறித்து வைத்துக் கொண்டனர்.
35 அப்பொழுது, அடிமைத்தனத்தினின்று திரும்பியிருந்தோர் இஸ்ராயேலின் கடவுளுக்குத் தகனப்பலிகளைச் செலுத்தினர். இஸ்ராயேலின் எல்லா மக்களுக்காகவும், பன்னிரு இளங்காளைகளையும் தொண்ணுற்றாறு செம்மறியாட்டுக் கடாக்களையும் எழுபத்தேழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பாவத்திற்காகப் பன்னிரு வெள்ளாட்டுக் கடாக்களையும் ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
36 மேலும் அரசரின் ஆணையைச் சிற்றரசர்களுக்கும் நதிக்கு அக்கரையில் இருந்த ஆளுநர்களுக்கும் அறிவித்தனர். ஆணையைக் கேட்ட அவர்களோ கடவுளின் மக்களுக்கும் ஆலய வேலைக்கும் மிகவும் உறுதுணையாய் இருந்து வந்தனர்.
அதிகாரம் 09
1 பின்னர் மக்கள் தலைவர்கள் என்னிடம் வந்து, "இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் கானானியர், ஏத்தையர், பெறேசையர், யெபுசெயர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அமோறையர் முதலிய நாட்டினரோடு சேர்ந்து, அவர்களுடைய வெறுக்கத்தக்க செயல்களில் பங்கு கொண்டனர்.
2 அதாவது, அவர்களின் புதல்வியரைத் தங்களுக்கும் தங்கள் மக்களுக்கும் மனைவியராகக் கொண்டனர். இவ்வாறு அர்ச்சிக்கப்பட்ட இனத்தவரான இஸ்ராயேலர் புறவினத்தாரோடு ஒன்றாகக் கலந்து விட்டனர். மக்கள் தலைவர்களும் ஆளுநர்களுமே இதற்கு வழிகாட்டிகள்" என்று சொன்னார்கள்.
3 இதைக் கேட்டவுடன், நான் என் ஆடையையும் போர்வையையும் கிழித்து, என் தலையிலும் தாடியிலுமிருந்த மயிரைப் பிடுங்கிக் கொண்டு கவலை நிறைந்தவனாய் உட்கார்ந்தேன்.
4 இஸ்ராயேலுடைய கடிவுளின் சொல்லுக்கு அஞ்சிய யாவரும் அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவர்களின் குற்றத்தைக்குறித்துப் பேச என்னிடம் கூடி வந்தனர். நானோ மாலைப்பலி நேரம் வரை அந்தத் துயரோடு உட்கார்ந்திருந்தேன்.
5 மாலைப்பலி நேரத்திலே என் துயரை விடுத்து, கிழிந்த போர்வையோடும் அங்கியோடும் முழந்தாளிட்டு என் கடவுளான ஆண்டவரை நோக்கி, என் கைகளை விரித்தேன்.
6 என் கடவுளே, நான் உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எம் பாவங்கள் எம் தலைக்கு மேல் பெருகிற்று. எம் அக்கிரமங்கள் விண்ணைத் தொட்டு விட்டன.
7 எம் முன்னோர் காலந்தொட்டு இன்றுவரை நாங்கள் பெரும் பாவங்களைச் செய்துள்ளோம். எங்கள் பாவங்களின் பொருட்டல்லோ நாங்களும் எம் அரசர்களும் குருக்களும், புறவின அரசர்களின் கைக்கும் வாளுக்கும் அடிமைத்தனத்துக்கும் கொள்ளைக்கும் வெட்கக்கேட்டுக்கும் கையளிக்கப்பட்டோம்! இன்னும் எங்களுக்கு அதே நிலை தானே!
8 ஆனால் இப்பொழுது எம் கடவுளான ஆண்டவர் எம்மில் சிலரை மீதியாக வைக்கவும், தமது திருவிடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தரவும், எம் கண்களுக்கு ஒளியை அருளவும், எம் அடிமைத்தனத்தினின்று எங்களுக்குச் சிறிது மீட்பு அளிக்கவும் வேண்டி எம் கடவுளை நோக்கிச் சற்று மன்றாடினோம்.
9 நாங்கள் அடிமைகளாயிருந்தும் எம் கடவுள் எம்மைக் கைவிட்டு விடவில்லை. மாறாக, நாங்கள் உயிர் பிழைக்கவும், பாழடைந்து கிடந்த எங்கள் கடவுளின் ஆலயத்தைத் திரும்பக் கட்டி எழுப்பவும், யூதாவிலும் யெருசலேமிலும் எங்களுக்குத் தக்க பாதுகாப்பை அளிக்கவும், பாரசீக அரசர் முன் எமக்குத் தயை கிடைக்கவும் செய்தருளினார்.
10 எம் இறைவா, இப்பொழுது எங்களால் என்ன சொல்ல முடியும்? ஏனெனில், நாங்கள் உமது கட்டளையைப் புறக்கணித்து விட்டோம்.
11 நீர் உம் ஊழியரான இறைவாக்கினர் மூலம் கட்டளையிட்டவற்றை மீறிவிட்டோம்; நீர் அவ்விறைவாக்கினர் மூலம் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் குடியேறவிருக்கிற நாடானது புறவினத்தாரின் அசுத்தத்தினாலும் பிறநாடுகளின் அசுத்தத்தினாலும் அந்நாட்டை ஒரு முனை தொடங்கி மறு முனை வரை மாசுபடுத்தியுள்ள மக்களின் அருவருப்புகளினாலும் தீட்டுபட்டிருக்கிறது.
12 ஆதலால் நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும் அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக விட்டுச்செல்லவும் வேண்டுமாயின், உங்களுக்கு இடையே பெண் கொள்வதும் கொடுப்பது இருக்கக்கூடாது; அன்றியும், அவர்களது சமாதானத்தையும் நலத்தையும் ஒருகாலும் நீங்கள் நாடக்கூடாது' என்றீரே.
13 இதோ உம் தீச்செயல்களினாலும் எம் பெரும் பாவத்தாலும் இவையெல்லம் எமக்கு நிகழ்ந்தும், எங்கள் கடவுளான நீர் எங்கள் அக்கிரமத்தினின்று எங்களை விடுவித்துள்ளீர்.
14 நாங்கள் உம் கட்டளைகளை மீறாதபடிக்கும், இந்த அருவருப்புக்குரிய மக்களோடு மணவுறவு கொள்ளாதபடிக்கும் அன்றோ நீர் அவற்றையெல்லாம் செய்தருளினீர்? எஞ்சியிருக்கும் நாங்களும் அழிந்து போகும்படி நீர் எம்மீது கோபமாய் இருக்கிறீரோ?
15 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் இன்னும் உம்மால் மீட்படையக்கூடிய நிலையில் ஒரு சிறு தொகையினர் நாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ பாவக் கறை படிந்தவர்களாய் நாங்கள் உம் திருமுன் நின்று கொண்டிருக்கிறோம்! இந்நிலையில் எவனும் உம் திருமுன் உயிரோடு இருக்க முடியாது" என்று மன்றாடினேன்.
அதிகாரம் 10
1 எஸ்ரா இவ்வாறு கடவுளின் ஆலயத்தின் முன் விழுந்து அழுது இறைவனை இறைஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த இஸ்ராயேலின் ஆண், பெண், சிறுவர் யாவரும் பெருந்திரளாய் அங்குக் கூடி வருந்தி அழுதனர்.
2 அப்பொழுது ஏலாமின் புதல்வரில் ஒருவனான யேகியேலின் மகன் செக்கேனியாஸ் எஸ்ராவை நோக்கி, "நாங்கள் புறவினத்தாரிடமிருந்து பெண் கொண்டதால், நம் கடவுளுக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். ஆயினும், இக்காரியத்தின் மட்டில் இஸ்ராயேலருக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.
3 ஆகவே ஆண்டவரின் திருவுளத்திற்கும், அவர் கட்டளைகளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு அப்பெண்கள் அனைவரையும், அவர்கள் வயிற்றில் பிறந்த மக்களையும் அகற்றிப் போடுவோம் என்று நம் கடவுளாகிய ஆண்டவரோடு உடன்படிக்கை செய்வோம்; திருச்சட்டத்திற்கு ஏற்ற முறையில் நடப்போம்.
4 எழுந்திரும்; இதுபற்றித் தீர்மானிப்பது உம் கடமையே; நாங்கள் உமக்கு ஆதரவளிப்போம். நீர் தைரியத்துடன் இதைச் செய்யும்" என்று சொன்னான்.
5 அதைக் கேட்டு எஸ்ரா எழுந்து, குருக்களுக்கும் லேவியர்களுக்கும் இஸ்ராயேலர் அனைவருக்கும் தலைவராய் இருந்தோர் அவ்வாறே செய்யுமாறு ஆணையிடச் செய்தார். அவர்களும் அவ்வாறே ஆணையிட்டனர்.
6 பின் எஸ்ரா கோவில் முகப்பினின்று எழுந்து எலியாசிபின் மகன் யோகனானின் அறைக்குள் புகுந்தார். அங்கு அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோருடைய பாவத்தின் பொருட்டு அழுது புலம்பி, உண்ணாமலும் குடியாமலும் இருந்தார்.
7 அப்போது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் யெருசலேமில் ஒன்றுகூட வேண்டும் என்றும்,
8 அவர்களில் எவனாவது மூன்று நாட்களுக்குள் வராமலிருந்தால், மக்கள் தலைவர்கள், மூப்பர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி அவனுடைய உடைமை எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்தவர்களின் கூட்டத்தினின்று விலக்கி வைக்கப்படுவான் என்றும் யூதாவிலும் யெருசலேமிலும் அறிக்கை விடுத்தனர்.
9 ஆகவே யூதா, பென்யமீன் குலத்தார் அனைவரும் மூன்று நாளுக்குள் யெருசலேமில் கூடினார்கள். ஒன்பதாம் மாதம் இருபதாம் நாள் மக்கள் எல்லாரும் கடவுளுடைய ஆலய வளாகத்தில் தங்கள் பாவத்தின் காரணமாகவும் அஞ்சி நடுங்கிக் கொண்டு நின்றனர்.
10 குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்து, "புறவினப் பெண்களை மணந்து கடவுளின் கட்டளையை மீறியதால், நீங்கள் இஸ்ராயேலின் பாவங்களை அதிகரித்துள்ளீர்கள்.
11 இப்போதோ நீங்கள் உங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவர் திருவுளப்படி நடங்கள். மேலும் புறவினத்தாரையும் அவர்கள் நடுவினின்று நீங்கள் கொண்ட மனைவியரையும் விட்டு விலகியிருங்கள்" என்றார்.
12 அப்பொழுது கூடியிருந்த அனைவரும் உரத்த குரலில், "நீர் சொன்னவாறே நடக்கட்டும்.
13 ஆயினும், மக்களின் எண்ணிக்கை மிகுதியானதாலும், இது மாரிக்காலமானதால் வெளியே நிற்க எங்களால் கூடாததினாலும், நாங்கள் கட்டிக்கொண்ட பாவம் பெரும்பாவமாய் இருப்பதாலும், இது ஓரிரு நாளில் முடியக் கூடிய வேலை அன்று.
14 எனவே மக்கள் அனைவருள்ளும் சிலரைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும். புறவினப் பெண்களைக் கொண்டவர் அனைவரும் தத்தம் நகரப் பெரியோர் முன்னும் நீதிபதிகள் முன்னும் குறித்த நேரத்தில் நீதி விசாரணைக்கு வர வேண்டும். இப்பாவத்தின் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக் கனல் நம்மை விட்டு விலகும் வரை விசாரணை நடக்க வேண்டும்" என்றனர்.
15 அவர்களது விண்ணப்பத்திற்கு ஏற்றபடி அசாயேலின் மகன் யோனத்தானும், தேக்குவேயின் மகன் யாவாசியாவும் இதற்காக நியமிக்கப்பட்டனர். லேவியரான மெசொல்லாமும் செபெதாயியும் அவர்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்டனர்.
16 அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோர் இவ்வாறே செய்து வந்தனர். குரு எஸ்ராவும் குலத் தலைவர்களும் தங்கள் முன்னோரின் குடும்ப வரிசைப்படியும் பெயர் வரிசைப்படியும் பத்தாம் மாதம் முதல் நாள் விசாரணைக்காக அமர்ந்தனர்.
17 புறவினப் பெண்களைக் கொண்டவர்களுடைய பெயர்களை எழுத வேண்டிய வேலை முதன் மாதம் முதல் நாளிலேயே முடிந்து விட்டது.
18 குருக்கள் புதல்வரிலே புறவினப் பெண்களைக் கொண்டவர்கள் பெயர் வருமாறு: யோசுவா மக்களில் யோசெதேக் புதல்வரும் சகோதரருமான மாவாசியா, எலியெசேர், யாரீப், கொதொலியா ஆகியோர்.
19 இவர்கள் தங்கள் மனைவியரைத் தள்ளிவிடவும் தங்கள் பாவத்துக்காக ஒரு செம்மறி ஆட்டுக் கடாவைப் பலியிடவும் ஒப்புக் கொண்டனர்.
20 எம்மரின் மக்களிலே ஹனானியும் ஜெபெதியாவும்;
21 ஹாரிமின் மக்களில் மாவாசியா, எலியா, செமெயியா, யேகியேல், ஓசியாஸ் ஆகியோர்;
22 பெசூருடைய மக்களில் எலியோனாயி, மாவாசிய, இஸ்மாயேல், நத்தானியேல், யோசபாத், எலாசா ஆகியோர்;
23 லேவியர் புதல்வர்களிலே யோசபாத், செமேயி, கலித்தா என்ற செலாயியா, பாத்தாயியா, யூதா, எலியெசெர் ஆகியோர்;
24 பாடகர்களிலே எலியாசிப்; வாயிற்காவலரிலே செல்லும், தேலம், உரீ ஆகியோர்;
25 மற்ற இஸ்ராயேலருக்குள்ளே பாரோசின் மக்களில் ரெமெயியா, யெசியா, மெல்கியா, மியாமின், எலியெசேர், மெல்கியா, பானேயா ஆகியோர்;
26 ஏலாமின் மக்களில் மத்தானியா, சக்காரியாஸ், யேகியேல், ஆப்தி, யெரிமோத், எலியா ஆகியோர்;
27 ஜெத்துவாவின் மக்களில் எலியோனாயி, எலியாசிப், மத்தானியா, யெரிமூத், ஜாபத், அசிசா ஆகியோர்;
28 பெபாயின் மக்களில் யோகனான், ஹனானியா, ஜபாயி, அத்தலாயி ஆகியோர்;
29 பானியின் மக்களில் மொசொல்லாம், மெல்லூக், அதாயியா, யாசூப், சாவால், ராமோத் ஆகியோர்;
30 பாகாத்மோவாபின் மக்களில் எத்னா, கெலால், பனாயியாஸ், மவாசியாஸ், மத்தானியாஸ், பெசேலெயேல், பென்னுயி, மனாசே ஆகியோர்;
31 ஹெறமின் மக்களில் எலியெசேர், யோசுவே, மெல்கியாஸ், செமேயியாஸ், சிமெயோன்,
32 பென்யமீன், மலோக், சமாரியாஸ் ஆகியோர்;
33 ஹாசோமின் மக்களில் மத்தானாயி, மத்தத்தா, ஜாபத், எலிப்பெலேத், யெர்மாயி, மனாசே, செமேயி ஆகியோர்;
34 பானியின் மக்களில் மாவாதி, அம்ராம், வேல்,
35 பானையாஸ், பதாயியாஸ், கேலியாவு, வானியா,
36 மேரேமோத், எலியாசிப், மத்தானியாஸ்,
37 மத்தானாயி, யாசி, பானி,
38 பென்னுயி, செமேயி,
39 சால்மியாஸ், நாத்தான்,
40 அதாயியாஸ், மெக்னெதெபாயி, சிசாயி, சாறாயி,
41 எஸ்ரேல், செலேமியா, செமேரியா,
42 செல்லும், அமாரியா, யோசேப்பு ஆகியோர்;
43 நெபோவின் மக்களில் யேகியேல், மத்தத்தியாஸ், ஜாபேர், ஜபீனா, யெது, யோவேல், பானாயியா ஆகியோர்.
44 இவர்கள் எல்லாரும் புறவினப் பெண்களை மணந்திருந்தவர்கள். இவர்களுள் சிலருக்குப் பிள்ளைகளும் இருந்தனர்.