புனித சைமன் ஸ்டாக்கிற்கு அன்னையின் காட்சி

1241 ஆம் ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபுவான தே கிரே பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த சிலுவைப் போரில் பங்கெடுத்து தாய் நாட்டிற்கு திரும்பி வந்த பொழுது, தன்னுடன் பரிசுத்த கார்மல் மலையிலிருந்த துறவிகள் குழுவினரை அழைத்து வந்தார். இங்கிலாந்தை அடைந்தவுடன் அய்ல்ஸ்போர்ட் (Aylesford) நகரத்தில் இருந்த தனது பண்ணை வீட்டினை அத்துறவிகளுக்கு பெருந்தன்மையுடன் பரிசாக அளித்தார்.

இது நிகழ்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வீட்டில் தான், அன்னை இவ்வுலக மாந்தரின் உதவிக்காக அளித்த உத்தரியாமானது புனித சைமன் ஸ்டாக்கிற்கு அருளப்பட்டது. பரிசுத்த கன்னி மாமரி பழுப்பு நிற கம்பளியாலான மேலாடையினை புனித சைமன் ஸ்டாக்கின் கரங்களில் கொடுத்தவாறு,

”மகனே, இது உனக்கும், அனைத்து கார்மல் சபையின் துறவிகளுக்கும் நான் வழங்கும் சிறப்பான சலுகை. இதனை அணிந்து கொண்டு இறக்கும் எவரும் நித்திய நெருப்பினில் துன்புற மாட்டார்கள்”

என்று உறுதியளித்தார்கள். பிற்காலத்தில் அன்னையின் உன்னதமான இச்சலுகையினை, கார்மல் சபையின் பழுப்பு நிற உத்தரியத்தினை எப்பொழுதும் பக்தியோடு அணிந்து கொண்டு, பரிசுத்த தேவதாயாருக்கு தங்களை அர்ப்பணிக்க விரும்பும் அனைத்து பொதுநிலையினருக்கும் ( அதுவும் மாதா வழங்கியதே ) வழங்கி மகிழ்வுற்றது.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள், தங்களது புதுநன்மை நாளில் பழுப்பு நிற உத்தரியத்தினை அணிந்து கொள்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் அதன் சிறப்பினை அறியாமல் மிக விரைவில் அன்னையின் மிகச் சிறந்த இப்பக்தி முயற்சியினை கைவிட்டு விடுகின்றனர். புதிதாக கத்தோலிக்க திருச்சபையில் சேரும் அன்பர்கள், தங்களது விசுவாசத்தினை அறிக்கையிடும் பொழுது (திருமுழுக்கு பெறும் பொழுது) உத்தரியத்தினை அணிந்து கொள்கின்றனர்.

தேவ தாயாரின் இந்த பழுப்பு நிற கம்பளியாலான இரக்கத்தின் ஆடையின் மகத்துவத்தை உணர்ந்து, குருவானவர்

“பரிசுத்தமான இந்த மேலாடையினை அணிந்து கொண்டு, மிகவும் பரிசுத்தமான கன்னி மாமரியின் பேறுபலன்களினால், இதனை எவ்வித பாவ மாசுபடாமல் அணிந்திருக்கவும், உம்மை எல்லாவித கேட்டினின்றும் பாதுகாத்து, அன்னையே உம்மை நித்திய வாழ்விற்கு வழிநடத்தவும் மன்றாடுவீராக.”  என கூறியபடியே அதனை அவர்களுக்கு அணிவிக்கின்றார்.

*****பாவத்தில் வாழ்ந்த மனிதனை அவனது இறப்பின் வேளையில் மனமாற்றம் அடைய உதவிய அன்னையின் உத்தரியம்*******

அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் தனது வாழ்வில் நிகழ்ந்த இப்புதுமையை பதிவு செய்துள்ளார்.

ஒருநாள் அருகிலிருந்த ஊரில் மரணத் தருவாயிலிருந்த மனிதருக்கு, அவனது கடைசி நேரத்தில் உதவுவதற்காக அக்குருவானவர் அழைக்கப்பட்டார். அம்மனிதன் பல வருடங்களாக திருவருட்சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை. மேலும் அம்மனிதன் அவரைப் பார்க்கவோ, பேசவோ விரும்பவில்லை.

அப்பொழுது அக்குருவானவர், அம்மனிதனிடம், தனது கரங்களில் ஏந்தி கொண்டிருந்த உத்தரியத்தினைக் காட்டி, “ நான் இதனை உனக்கு அணிவித்தால் ஏற்றுக்கொள்வாயா? இதனைத் தவிர வேறொன்றும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன்” என வினவினார். அவனும் அதற்குச் சம்மதித்து உத்தரியத்தினை அணிந்துகொண்டான்.

அவ்வாறு அவன் அணிந்து கொண்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மனம் வருந்தி நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து தன்னை கடவுளுக்கு உகந்தவனாக மாற்றிக்கொண்டான்.

மேலும் இந்நிகழ்வு தனக்கு எவ்வித வியப்பையும் அளிக்கவில்லை என்றும், ஏனென்றால் நமதன்னை, இச்சலுகையினை மாந்தருக்கு அளித்த நாள் முதல் இந்நாள் வரை உத்தரியத்தின் வாயிலாக இது போன்ற எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தியுள்ளர்கள் என அக்குருவானவர் பதிவு செய்துள்ளார்.

*****சிந்தனை***** 

பாதுகாப்பு கவசமானது எவ்வாறு போர்வீரர்களை ஆபத்திலிருந்து பாது காக்கின்றதோ, அவ்வாறே நமதன்னையின் இரக்கத்தின் ஆடையான உத்தரியமானது, நமது ஆன்ம போராட்டத்தில் சாத்தானின் சூழ்சிகளை வீழ்த்தும் கேடயமாக திகழ்கின்றது.

இதனை அணிந்திருக்கும் ஒவ்வொருவரையும் அன்னை தனது கண்ணின் மணிபோல பாதுகாத்து, பாவத்தினால் அவரது மகனிடம் இருந்து விலகிச் செல்லும் பாவிகளான நம்மை மனந்திருப்பி அவரிடம் திரும்ப கூடிச் சேர்க்கின்றார்.

இப்பாதுகாப்பினை நாம் விடாமுயற்சியோடு அணிந்திருக்கும் பொழுது, இதனை கைவிடும் பல சூழல்களை சாத்தான் நமக்கு ஏற்படுத்துவான். ஆனாலும் மனம்தளராமல் அன்னையின் இப்பாதுகாப்பினை பக்தியோடு நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது, அன்னையும் இதற்கு பிரதிபலனாக, நமக்காக தமத்திருத்துவத்திடம் மன்றாடி பாவ மன்னிப்பையும், அவர்களது இரக்கத்தினையும் பெற்றுத் தருகின்றார்கள்.

அன்னையின் பாதுகாப்பினை ஏற்றுக்கொள்ளலாமா????

இயேசுவுக்கே புகழ்!!!! மாமரித்தாயே வாழ்க!!!!

நன்றி : சகோ. ஜெரால்ட்