இதைச் சொன்ன உடன் மாமரி அன்னை தன் கரங்களை விரிக்க அவற்றிலிருந்து பெரும் ஒளி புறப்பட்டு மேலே சூரியனை நோக்கி வீசியது. இச்சமயம் மேகக் கூட்டங்கள் திடீரெனக் கலைந்து விலகின.
தேவ அன்னை மேலே எழுந்தபோது, அவர்களின் பிம்பம் சூரியனில் காணப்பட்டது. உடனே லூஸியா “சூரியனைப் பாருங்கள்” என்று சத்தமிட்டாள். அதைக் கேட்டு எல்லோரும் மேலே சூரியனைப் பார்த்தார்கள். ஆயினும் இவ்வாறு கூறியதாக லூஸியாவுக்கு ஞாபகமில்லை. காட்சி வசப்பட்டிருந்ததே காரணம்.
அன்னையின் கரங்கள் வீசிய பேரொளியிலேயே காட்சி மறைந்தது. ஆனால் குழந்தைகள் மூவரும் உச்சி வானத்தில் சூரியனின் அதிசயத்தையும் வேறு மூன்று நிலைக் காட்சிகளையும் கண்டார்கள். ஜெபமாலையின் சந்தோஷ, துக்க, மகிமை தேவ இரகசியங்களைச் சித்தரிப்பனவாய் இருந்தன அந்நிலைக் காட்சிகள்.
முதலில் திருக்குடும்பத்தின் காட்சி. தேவதாயும், சூசையப்பரும், சேசுபாலனும் காணப்பட்டார்கள். மாதா வெண்ணுடையும், நீல முக்காடும் அணிந்திருந்தார்கள். அவர்கள் அருகில் சூசையப்பர் சேசு பாலனைக் கரத்தில் ஏந்தி நின்றார். சூசையப்பர் வெண்ணுடையும், சேசுபாலன் நல்ல சிவப்பு உடுப்பும் அணிந்திருந்தார்கள்.
அர்ச். சூசையப்பரும், சேசுபாலனும் தங்கள் கரங்களால் சிலுவை அடையாளமிட்டு உலகத்தை ஆசீர்வதித்தார்கள்.
இம்முதல் நிலைக்காட்சி மறைந்த சிறிது நேரத்தில் இரண்டாம் நிலைக்காட்சி காணப்பட்டது. அது வியாகுல அன்னையின் காட்சி. நமதாண்டவரும் வியாகுலமாதாவும் காணப்பட்டார்கள். வியாகுலத் தாயாரின் பக்கத்தில் சேசு காணப்பட்டார். அவர் சிலுவை சுமந்து போகும்போது தம் தாயைச் சந்தித்த வேதனையான தோற்றம் தெரிந்தது.
சேசுவின் முழு உருவமும் தெரியவில்லை. பாதிக்கு மேல் தான் பார்க்க முடிந்தது. சேசு தமது உயிரைக் கொடுத்து மீட்ட தம் மக்களை இரக்கத்துடன் பார்த்து, சிலுவை அடையாளத்தால் அவர்களை ஆசீர்வதித்தார். இக்காட்சியை லூஸியா மட்டுமே கண்டாள். மற்ற இருவரும் காணவில்லை.
மூன்றாம் நிலைக்காட்சி, மாதாவின் மகிமையை எடுத்துக் கூறிய கார்மெல் மாதாவின் காட்சி. தேவ அன்னை வெற்றி முடி சூடிய பரலோக பூலோக அரசியான கார்மெல் மலை மாதாவாக, திருக்குழந்தையைத் தன் மடி மீது வைத்தபடி காணப்பட்டார்கள். இக்காட்சியும் லூஸியாவுக்கு மட்டுமே தெரிந்தது.
குழந்தைகள் இவற்றைக் கண்ட அதே நேரத்தில் அங்கு குழுமியிருந்த 70,000 மக்கள் கூட்டம் சூரியனின் மாபெரும் அதிசயத்தைக் கண்டது.
எங்கள் சந்தோஷத்தினுடைய காரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.