அதிகாரம் 01
1 இஸ்ராயேலர் யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்திலே பாலைவனத்தில் செங்கடலை நோக்கும் ஒரு சமவெளியில், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும், மிகுதியான பொன்விளையும் அசெரோட்டுக்கும் நடுப்புறத்திலுள்ள ஓர் இடத்தில் இருக்கும் போது, மோயீசன் அவர்களுடைய முழுச் சபையையும் நோக்கிப் பேசிய வார்த்தைகள் பின்வருமாறு.
2 மேற்படி இடம் காதேஸ் பார்னேயிலிருந்து செயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் போகிறவர்களுக்குப் பதினோரு நாள் பயணத் தொலைவில் இருக்கிறது.
3 அப்பொழுது ( பாலைவனப் பயணத்தின் ) நாற்பதாம் ஆண்டு, பதினோராம் மாதம், முதல் நாள். அந்நாளில் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களிடம் சொல்லுமாறு தனக்குக் கட்டளையிட்ட வார்த்தைகளை மோயீசன் சொல்லலானார்.
4 அதற்குமுன் அவர் எசெபோனில் குடியிருந்த அமோறையருடைய அரசனாகிய செகோனையும், அசெரோட்டிலும் எதிராயிலும் வாழ்ந்துவந்த பாசானின் அரசனாகிய ஓகையையும் முறியடித்திருந்தார்.
5 யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்தில் மோவாப் நாட்டில் அது நடந்தது. மோயீசன் (ஆண்டவருடைய) நியாய விதிகளை மக்களுக்குத் தெளிவித்துக் காட்டத் தொடங்கினார். எப்படியென்றால்:
6 ஓரேபில் நம்முடைய கடவுள் திருவுளம்பற்றினதாவது: நீங்கள் இந்த மலையருகில் இருந்தது போதும்.
7 நீங்கள் புறப்பட்டு அமோறையர் மலையையும் அதைச் சுற்றிலுமிருக்கிற மற்ற இடங்களையும், தென் புறமாயுள்ள சமவெளியையும் மலைக்கணவாய்களையும், கடற்கரையோரமாய்க் கானான், லாபான் நாடுகளையும், யூப்பிராத்து என்ற பெரிய நதியையும் சென்றடைவீர்கள்.
8 இதோ ( அவற்றை ) உங்கள் உடைமையாக்கினோம். நீங்கள் போய், ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோப்புக்கும், அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்னாரே, அந்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.
9 அக்காலத்தில் நான் உங்களை நோக்கி:
10 நான் ஒருவனாய் உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாதவனாய் இருக்கிறேன். ஏனென்றால், உங்கள் கடவுள் உங்களைப் பெருகச் செய்தார். நீங்கள் இப்பொழுது விண்மீன்களைப்போல் அளவற்றுப் பெருகி இருக்கிறீர்கள்.
11 உங்கள் தந்தையரின் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் உங்களை இன்னும் ஆயிர மடங்காகும்படி செய்து, தாம் சொல்லிய வார்த்தையின்படியே உங்களுக்கு ஆசீர் அளிப்பாராக.
12 உங்கள் குறைகளையும் துன்பங்களையும் வழக்குகளையும் நான் ஒருவனாகத் தாங்குவது இயலாத காரியம்.
13 ஆதலால், உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் நன்னடத்தையுமுள்ள ஆடவர்களை நீங்கள் தெரிந்து கொண்டால் நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன் என்று நான் உங்களுக்குச் சொல்ல, நீங்கள் மறுமொழியாக:
14 தாங்கள் செய்யக் கருதினது நல்லது என்று எனக்குச் சொன்னீர்கள்.
15 ஆதலால், நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் மதிப்பும் பொருந்திய ஆடவர்களைத் தெரிந்துகொண்டு உங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தலைவர்களாகவும் ஆயிரவர்க்கும் ஐந்நூற்றுவர்க்கும் நூற்றுவர்க்கும் ஐம்பதின்மர்க்கும் தலைவராகவும் ஏற்படுத்தி வைத்தேன்.
16 பிறகு நான் அவர்களை நோக்கி: மக்களுடைய வழக்குகளைக் கேட்டு, அவர்கள் சகோதரரானாலும் அந்நியரானாலும், நீதிப்படி தீர்ப்புச் சொல்லுங்கள்.
17 நீதியிலே ஒருதலைச் சார்பில்லாமல், பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரியாகச் செவி கொடுப்பீர்கள். நடுநிலை தவறவே கூடாது. அதுவே இறை நீதி. உங்களுக்குக் கடினமாய்த் தோன்றும் காரியத்தை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதைக் கேட்டுத் தீர்ப்புச் சொல்வேன் என்று கட்டளையிட்டேன்.
18 நீங்கள் செய்ய வேண்டியன எல்லாவற்றையும் கட்டளையிட்டேன்.
19 அதன்பின், நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்கள் கண்ட பயங்கரமான பெரும் பரப்புள்ள பாலையைக் கடந்து, அமோறையரின் மலை வழியாய்ச் சென்று காதேசுக்கு வந்துசேர்ந்தோம்.
20 அப்பொழுது, நான் உங்களை நோக்கி: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கிற அமோறையரின் மலைநாடு வரையிலும் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.
21 இதோ உன் கடவுள் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைப் பார். நம் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி நீ போய் அதை உரிமையாக்கிக்கொள். அஞ்சவும் வேண்டாம், கலங்கவும் வேண்டாம் என்றேன்.
22 அப்பொழுது நீங்கள் என்னிடம் வந்து: அந்த நாட்டை ஆராய்ந்து பார்க்கவும், நாம் எவ்வழியாகச் சென்று எந்தெந்த நகரங்களுக்குப் போகலாமென்று சொல்லவும், தக்கவர்களான மனிதர்களை அனுப்புவது நலம் என்றீர்கள்.
23 நான் ( உங்கள் ) சொல்லை ஏற்றுக்கொண்டு, உங்கள் கோத்திரங்களுக்கு ஒவ்வொருவராகப் பன்னிரண்டு மனிதர்களை அனுப்பினேன்.
24 அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறிக் கொடிமுந்திரிப் பழப் பள்ளத்தாக்கு வரையிலும் போய் நாட்டை நன்றாகப் பார்த்ததுமல்லாமல்,
25 நாட்டின் செழுமைக்கு அடையாளமாக அதன் பழங்களில் சிலவற்றை எடுத்து நம்மிடம் கொண்டுவந்து: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் நாடு நல்ல நாடு என்று சொன்னார்கள்.
26 நீங்களோ: போகமாட்டோம் என்று நம் கடவுளின் வார்த்தையை நம்பாதவர்களாய்,
27 உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தீர்கள். ஆண்டவர் நம்மை வெறுத்திருக்கிறார். ஆகையால், அவர் அமோறையர் கையில் நம்மை ஒப்புவித்து நம்மை அழித்துவிடுவதற்காகவே, எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
28 நாம் போவது எவ்வாறு ? அந்த மக்கள் கணக்கில்லாதவர்களும் நம்மைவிட நெட்டையர்களுமாவர் என்றும், அவர்களுடைய நகரங்கள் பெரியவைகளும் வானளாவிய கோபுரங்கள் கொண்டவைகளுமாய் இருக்கின்றன என்றும், அவ்விடத்தில் ஏனோக்கின் புதல்வர்களையும் கண்டோம் என்றும், போய்ப் பார்த்தவர்கள் சொல்லி அச்சுறுத்தினார்களே என்று சொன்னீர்கள்.
29 அதைக்கேட்ட நான்: அஞ்சாதீர்கள்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.
30 உங்களை நடத்துகின்ற கடவுளாகிய ஆண்டவர் உங்களை ஆதரித்து, எகிப்து நாட்டிலே உங்கள் கண்களுக்கு முன்பாக அவர் எப்படி உங்களோடிருந்து போர்புரிந்தாரோ, அப்படியே செய்வார்.
31 பாலைவனத்தில் அவர் செய்ததும் உங்களுக்குத் தெரியுமன்றோ ? ஒரு மனிதன் தன் குழந்தையை ஏந்திக் கொள்வதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ( உங்களைப் பேணி ) நீங்கள் இவ்விடம் வந்து சேரும்வரையில் நடந்துவந்த வழிதோறும் உங்களை ஏந்திக்கொண்டாரன்றோ ?
32 ஆனால் நீங்கள் அப்பொழுதுமுதலாய்,
33 உங்களுக்கு முன் வழியைத் திறந்து நீங்கள் பாளையம் இறங்கவேண்டிய இடத்தை அளந்து கொடுத்தவரும், உங்கள் வழிகாட்டியாக இரவில் நெருப்புத்தூணிலும் பகலில் மேகத்தூணிலும் உங்களுக்கு முன்சென்றவரும் உங்கள் கடவுளுமாகிய ஆண்டவரை நம்பினீர்களோ ? இல்லை.
34 ஆகையால், ஆண்டவர் உங்கள் வார்த்தைகளின் குரலைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்டு:
35 உங்கள் மூதாதையருக்குக் கொடுப்போமென்று நாம் ஆணையிட்டுச் சொல்லிய அந்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட மக்களில் ஒருவனும் காணப்போவதில்லை என்றும்;
36 ஜெப்போனேயின் புதல்வனாகிய காலேப் ஆண்டவரைப் பின்பற்றி நடந்தான்; ஆதலால், அவன் அதைக் காண்பான் என்றும்; அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் அவன் மிதித்து வந்த நாட்டைத் தருவோம் என்றும் சொன்னார்.
37 அவர் இப்படி ( மக்கள்மீது ) கோபம் கொண்டதில் வியப்பு என்ன ? உங்கள் பொருட்டு அவர் என்மேலும் கோபம் கொண்டு: நீயும் அதில் புகுவதில்லை.
38 ஆனால், உன் ஊழியனாய் இருக்கிற நூனின் புதல்னாகிய யோசுவா அதில் உனக்குப் பதிலாய்ப் புகுவான். அவனுக்கு நீ அறிவுரை சொல்லி அவனைத் திடப்படுத்து. ஏனென்றால், அவனே திருவுளச் சீட்டுப்போட்டு அதை இஸ்ராயேலுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான்.
39 சிறையாய்க் கொண்டுபோகப்படுவார்களென்று நீங்கள் சொன்ன உங்கள் சிறுவர்களும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத ( உங்கள் ) பிள்ளைகளும், அந்நாட்டில் புகுவார்கள். அவர்களுக்கே அதைக் கொடுப்போம். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
40 நீங்களோ திரும்பிச் சென்று, செங்கடல் வழியாய்ப் பாலைவனத்திற்குப் புறப்பட்டுச் செல்லுங்கள் என்றருளினார் என்றேன்.
41 அப்பொழுது நீங்கள் என்னை நோக்கி: நாங்கள் ஆண்டவருக்குத் துரோகம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி இதோ போய்ப் போர் புரிவோம் எனப் பதில் கூறினீர்கள். ஆயுதம் தாங்கியவர்களாய் மலைமேல் ஏறத் தயாராய் இருக்கையில், ஆண்டவர் என்னை நோக்கி:
42 நீங்கள் உங்கள் பகைவர் முன்பாக முறிந்துபோவீர்கள். ஆதலால், நீங்கள் போகவும் போர்புரியவும் வேண்டாம். நாம் உங்கள் நடுவே இருக்கமாட்டோம் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
43 நான் அப்படியே உங்களுக்குச் சொன்னேன். ஆனால், நீங்கள் செவிகொடாமல் ஆண்டவருடைய கட்டளையை மீறி, செருக்குற்றோராய் மலைமேல் ஏறத்துணிந்தமையால்,
44 அந்த மலைகளில் குடியிருந்த அமோறையர் உங்களை எதிர்க்கப் புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துவதுபோல உங்களைத் துரத்தி, செயீர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தார்கள்.
45 அப்பொழுது நீங்கள் திரும்பி வந்து ஆண்டவருடைய முன்னிலையிலே அழுதபோது, அவர் உங்களுக்குச் செவிகொடுக்கவுமில்லை; உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவுமில்லை.
46 ஆகையால் நீங்கள் காதேஸ் பர்னேயில் நீண்ட நாட்கள் தங்கினீர்கள்.
அதிகாரம் 02
1 பின்னும் ஆண்டவர் எனக்குச் சொல்லியவாறு நாம் அங்கிருந்து புறப்பட்டுச் செங்கடலுக்குப் போகும்வழியே பாலைவனத்தில் பயணம் செய்து நெடுநாள் செயீர் மலை நாட்டைச் சுற்றித் திரிந்தோம்.
2 அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி:
3 நீங்கள் இம்மலை நாட்டைச் சுற்றி அலைந்தது போதும். இப்போது வடக்கே திரும்புங்கள்.
4 மக்களைப் பார்த்து நீ கட்டளையிட வேண்டியது என்னவென்றால்: செயீரிலே குடியிருக்கிற, எசாயூவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லைகளின் வழியாய்ச் செல்லப் போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள்.
5 ஆகையால், நீங்கள் அவர்களோடு போராடாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். நாம் எசாயூவுக்குச் செயீர் மலையை உடைமையாகக் கொடுத்துள்ளமையால், அவர்கள் நாட்டிலே ஓர் அடி நிலம்கூட உங்களுக்குக் கொடோம்.
6 தின்னும் பண்டங்களை விலைக்கு வாங்கி உண்பீர்கள். தண்ணீரையும் அவர்கள் கையில் பணம் கொடுத்து மொண்டு குடிப்பீர்கள்.
7 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் செயல்களிலெல்லாம் உனக்கு ஆசீர் அளித்துவந்தார். நீ செல்லும் வழியையும் அறிந்திருக்கிறார். இந்தப் பெரிய பாலையை நீ கடந்த விதத்தையும் அறிந்திருக்கிறார். உன் கடவுளாகிய ஆண்டவர் நாற்பதாண்டு உன்னோடு வாழ்ந்ததனால், உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்றருளினார்.
8 அப்படியே நாம் செயீரில் குடியிருக்கிற நம்முடைய சகோதரர்களாகிய எசாயூ புதல்வரின் நாட்டைக் கடந்த பின்பு திறந்த வெளிவழியாய் ஏலாத்மீதும் ஆசியொங்கபர்மீதும் சென்று மோவாப் பாலைவனத்திற்கு வந்துசேர்ந்தபோது,
9 ஆண்டவர் என்னை நோக்கி: நீ மோவாபியரைத் துன்புறுத்தவும் வேண்டாம்; அவர்களோடு போராடவும் வேண்டாம். ஏனென்றால், நாம் லோத்தின் புதல்வருக்கு ஆர் என்னும் நகரத்தைக் கொண்டுள்ள நாட்டை உரிமையாகக் கொடுத்தோம். அதில் உனக்கு ஒன்றும் கொடோம் என்றார்.
10 எம்மியர் அதன் முதல் குடிகளாய் இருந்தனர். அவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால், வலிமை மிக்க இனத்தவரும் நெடிய ஆட்களுமாய் அவர்கள் இருந்ததனால்,
11 அவர்களும் அரக்கர்களும் ஏனாக்கீமின் என்று எண்ணப்பட்டார்கள். சிறப்பாக, அவர்கள் ஏனாக்கீமியர்களை ஒத்தவர்கள். மோவாபியர்களோ அவர்களை எமிம் என்று சொல்வார்கள்.
12 செயீரிலே ஓறையர்கள் முதன் முதல் குடியிருந்தார்கள். ஆனால், ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி நாட்டில் இஸ்ராயேலர் எப்படிக் குடியேறினார்களோ, அப்படியே எசாயூவின் புதல்வர் மேற்சொல்லிய ஓறையர்களைத் துரத்தியும் வெட்டியும் அவர்கள் நாட்டில் குடியேறினார்கள்.
13 நிற்க, நாம் ஜாரேத் என்ற ஓடையைக் கடக்க அதன் அண்மையில் வந்தோம்.
14 நாம் காதேஸ் பர்னேயை விட்டுப் புறப்பட்ட நாள் தொடங்கி, ஜாரேத் என்னும் ஓடையைக் கடந்த நாள் வரையிலும் சென்ற காலம் முப்பத்தெட்டு ஆண்டு. அதற்குள் அந்தச் சந்ததியைச் சார்ந்த போர்வீரர் எல்லாரும் ஆண்டவருடைய ஆணையின்படி பாளையத்தின் நடுவிலிருந்து அழிக்கப்பட்டார்கள்.
15 உள்ளபடி அவர்கள் பாளையநடுவினின்று மாண்டு அழியும்படியாய் ஆண்டவருடைய கை அவர்களுக்கு விரோதமாய் இருந்தது.
16 அந்தப் போர்வீரர் எல்லாரும் மாண்டு போனபின்பு,
17 ஆண்டவர் என்னை நோக்கி:
18 நீ இன்று மோவாப் எல்லைகளையும் ஆர் என்ற நகரையும் தாண்டிப்போவாய்.
19 பின்பு அம்மோனின் புதல்வர் குடியிருக்கிற நாட்டில் சேரும்போது, நீ அவர்களைத் துன்புறுத்தவும் போருக்கு அழைக்கவும் வேண்டாம்; எச்சரிக்கை! அவர்களின் நாட்டை நாம் லோத்தின் புதல்வருக்கு உரிமையாகத் தந்தோம். அதில் ஒன்றும் உனக்கு உரிமையாகக் கொடோம்.
20 அது அரக்கருடைய நாடென்று எண்ணப்பட்டது. ஏனென்றால், முற்காலத்தில் அரக்கர் அதிலே குடியிருந்தனர். அம்மோனியர் அவர்களை ஸொம்ஸொம்மீம் என்று அழைக்கிறார்கள்.
21 அந்த மக்களோ வலிமை மிக்க இனம்; ஏனாக்கீமியரைப் போல் நெடியர்; ஆண்டவர் அம்மோனியருக்குமுன்பாக அவர்களை அழித்து, அம்மோனியரை அவர்களுடைய இடத்தில் குடியிருக்கச் செய்தார்.
22 அதற்குமுன் அவர் செயீரில் குடியிருக்கிற எசாயூ புதல்வருக்கு அவ்விதமாகவே உதவியாய் இருந்து, ஓறையரை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்குக் கொடுத்தார். இந்நாள் வரையிலும் ( எசாயூவின் புதல்வர் ) அதிலே குடியிருக்கிறார்கள்.
23 அவ்வாறே, ஆசேரீம் தொடங்கிக் காஜாவரையிலும் குடியிருந்த ஏவையர் கப்பதொசியராலே துரத்தப்பட்டார்கள். இவர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வந்து, அவர்களை அழித்து, அவர்களுடைய இடத்திலே குடியேறினார்கள்.
24 நீங்கள் எழுந்து, அரனோன் என்கிற ஓடையைக் கடந்து போங்கள். இதோ நாம் அமோறையனான எஸெபோனின் மன்னன் செகோனை உன் கையில் ஒப்படைத்தோம். அவன் நாட்டை நீ உரிமையாக்கிக் கொள்வதற்கு அவனோடு போராடு.
25 வானத்தின் கீழ் எங்குமுள்ள மக்கள் உன் பெயரைச் சொல்லக்கேட்டு அச்சமுற்று, பிள்ளை பெறும் பெண்களைப்போல் வேதனைப்பட்டுக் கலங்கத்தக்கதாக, இதோ நாம் அவர்களுக்குத் திகிலும் அச்சமும் உண்டாகும்படி இன்று செய்யத் தொடங்குவோம் என்று திருவுளம் பற்றினார்.
26 அப்பொழுது நான் கதேமாத் பாலையிலிருந்து எஸெபோனின் அரசனான செகோனிடம் சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி பிரதிநிதிகளை அனுப்பி:
27 நாங்கள் உம்முடைய நாட்டைக் கடந்து போகவேண்டும். வலப்புறமும் இடப்புறமும் சாயாமல் நெடுஞ்சாலை வழியாகவே நாங்கள் நடப்போம்.
28 எங்களுக்கு உண்ண உணவு வகைகளையும் குடிக்கத் தண்ணீரையும் நீர் விலைக்குத் தரவேண்டும். நாங்கள் கடந்து போக உத்தரவு மட்டும் கொடும்.
29 நாங்கள் யோர்தானை அடைந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நாங்கள் புகும் வரையிலும், செயீரில் வாழ்கிற எசாயூ புதல்வரும் ஆரிலே குடியிருக்கிற மோவாபியரும் உத்தரவு கொடுத்ததுபோல், நீரும் உத்தரவு கொடும் என்று சொல்லி அனுப்பினேன்.
30 ஆனால் தன் நாட்டைக் கடந்து போகும்படி எஸெபோனின் அரசனாகிய செகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை. ஏனென்றால், இப்போது நீயே காண்பதுபோல், உன் கடவுளாகிய ஆண்டவர் அவனை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் பொருட்டு அவன் மனத்தையும் கடினப்படுத்தி அவன் இதயத்தையும் அடைத்துவிட்டிருந்தார்.
31 அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி: இதோ செகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கத் தொடங்கினோம். நீ அவன் நாட்டைக் கைப்பற்றத் தொடங்கலாம் என்றார்.
32 செகோனோ தன் மக்கள் அனைவரோடும் நம்முடன் போர் தொடுக்கப் புறப்பட்டு யாசாவுக்கு வந்தான்.
33 நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நமது கையில் ஒப்படைத்தார். ஆதலால் நாம் அவனையும், அவன் புதல்வர்களையும், அவனுடைய மக்கள் அனைவரையும் முறியடித்தோம்.
34 அத்தருணம் நாம் அவன் நகரங்களையெல்லாம் பிடித்து, அவற்றில் குடியிருந்த பெண்களையும் ஆடவர்களையும் பிள்ளைகளையும் அழித்து, எதையும் மீதி வைக்காமல் எல்லாவற்றையும் அழித்துவிட்டோம்.
35 மிருக உயிர்களும், நாம் பிடித்த நகரங்களில் கொள்ளையடித்த பொருட்களும் மட்டும் யார் யார் கையில் அகப்பட்டனவோ அவற்றை அவரவர் வைத்துக் கொண்டார்கள்.
36 பள்ளத்தாக்கிலுள்ள அர்னோன் ஓடைக் கரையிலிருக்கிற அரோயோ நகர் தொடங்கிக் கலாத்வரையிலும் நாம் பிடிக்காத அரணுள்ள நகரமும் ஊரும் ஒன்றேனும் இல்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் அவை எல்லாவற்றையும் நம்முடைய கையிலே ஒப்படைத்தார்.
37 அம்மோன் புதல்வருடைய நாட்டையும், ஜெபோக் என்கிற ஓடைக்கடுத்த ஊர்களையும், மலைகளிலுள்ள நகர்கள் முதிலிய இடங்களையும் மட்டும் சேராமல் விலகிப்போனோம். ஏனென்றால், நம் கடவுளாகிய ஆண்டவர் அவற்றையெல்லாம் பிடிக்காதபடி விலக்கியிருந்தார்.
அதிகாரம் 03
1 பின்பு நாம் திரும்பிப் பாஸானுக்குப் போகும்வழியே செல்லுகையில், பாஸானின் அரசனாகிய ஓக் என்பவன் தன்னுடைய குடிகள் எல்லாரோடும் புறப்பட்டு நம்மோடு எதிர்த்துப் போர் செய்யும்படி எதிராய்க்கு வந்தான்.
2 அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி: நீ அவனுக்கு அஞ்சாதே. அவனையும் அவன் குடிகள் அனைவரையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்படைத்தோம். எஸெபோனிலே குடியிருந்த அமோறையருடைய அரசனாகிய செகோனுக்கு நீ செய்தது போல இவனுக்கும் செய்வாய் என்றருளினார்.
3 அவ்வாறே நம் கடவுளாகிய ஆண்டவர் பாஸானின் அரசனாகிய ஓக்கையும் அவனுடைய குடிகள் எல்லாரையும் நமது கையில் ஒப்படைத்தமையால், நாம் அவர்களெல்லாரையும் வெட்டி வீழ்த்தினோம்.
4 ஒரே காலத்தில் அவனுடைய நகரங்களையெல்லாம் பிடித்து அழித்துவிட்டோம். அவற்றில் நாம் பிடிக்காத நகரம் ஒன்றும் இல்லை. பாஸானிலிருந்த ஓக்கின் ஆட்சிக்குட்பட்ட அறுபது நகர்களையும் பிடித்து, அர்கோப் நாடு முழுவதையும் காடாக்கிவிட்டோம்.
5 அந்த நகர்களெல்லாம் மிகவும் உயர்ந்த மதில்களாலும் வாயில்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. அன்றியும், மதில்கள் இல்லாத நகர்களும் பல இருந்தன.
6 நாம் எஸெபோனின் அரசனான செகோனுக்குச் செய்தது போலவே, அந்த நகர்களையும் அழித்து, அவற்றிலுள்ள பெண்களையும் ஆடவர்களையும் பிள்ளைகளையும் கொன்றொழித்தோம்.
7 ஆனால், ஆடுமாடுகளையும் நகர்களில் அகப்பட்ட சொத்துக்களையும் பறித்துக் கொண்டு போனோம்.
8 இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற அர்னோன் ஓடை தொடங்கி ஏர்மோன் மலைவரையிலும் அமோறையருடைய இரண்டு அரசர்களின் நாட்டைப் பிடித்தோம்.
9 அந்த ஏர்மோன் மலையை, சிதோனியர் சரியோன் என்றும், அமோறையர் சனீர் என்றும் அழைக்கிறார்கள்.
10 சமவெளியிலுள்ள எல்லா நகர்களையும், பாஸான் அரசனான ஓக் என்பவனுடைய நகர்களாகிய செல்கா, எதிராயிவரையிலுமுள்ள கலாத் நாடு பாஸான் நாடு முழுவதையும் ( பிடித்தோம் ).
11 ஏனென்றால், அரக்கவம்சத்தாருக்குள்ளே பாஸான் அரசனாகிய ஓக் என்பவன் மட்டுமே இருந்தான். அம்மோன் புதல்வரைச் சார்ந்த ரப்பாத் என்ற நகரிலே இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில் இருக்கிறது: அது மனிதனுடைய கைமுழத்தின் அளவுப்படி ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் உள்ளது.
12 நாம் அக்காலத்திலே உரிமையாக்கிக் கொண்ட நாடு அர்னோன் ஓடைக் கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கிக் கலாத்மலை நாட்டில் பாதிவரையிலும் பரந்து கிடக்கும். அதிலிருந்த நகர்களை ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.
13 கலாத்தின் மற்றப்பாகத்தையும், ஓக்கின் நாடாயிருந்த பாஸான் நாடு முழுவதையும், அர்கோப் நாடு முழுவதையும் மனாஸேயுடைய பாதிக்கோத்திரத்திற்கு ஒப்புவித்துவிட்டேன். பாஸான் முழுவதுமே அரக்கர் நாடு என்று அழைக்கப்படுகின்றது.
14 மனாஸேயின் புதல்வனாகிய ஜயீர் என்பவன் அர்கோப் நாடு முழுவதையும், ஜெசூரிமாக்காத்தி எல்லைகள் வரையிலும் உரிமையாக்கிக் கொண்டு, பாஸானைத் தன் பெயரைக் கொண்டே ஆவோட் ஜயீர் என்று அழைத்தான். ஆவோட் ஜயீர் என்றால் ஜயீருடைய நகர் என்பதாம். இந்தப் பெயர் இந்நாள் வரையிலும் வழக்கிலிருந்து வருகிறது.
15 மக்கீருக்கும் கலாதைக் கொடுத்தேன்.
16 ஆனால், அர்னோன் ஓடைவரையிலுமுள்ள கலாத் நாட்டின் ஒரு பகுதியையும், அர்னோன் நடுஓடையும் அதன் அருகேயுள்ள நாடும் தொடங்கி, அம்மோன் புதல்வருடைய எல்லையாகிய ஜாபோக் ஓடைவரைக்கும் விரிந்து கிடக்கும் நாட்டையும்,
17 பாழ்வெளியையும், யோர்தானையும், உவர்மிக்க செங்கடல் வரையிலுமுள்ள கெனெரேட்டின் எல்லைகளையும், கீழ்த்திசையை நோக்கும் பிஸ்கா மலைக்கடுத்த நாட்டையும் ரூபன் கோத்திரத்தாருக்கும் காத்கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.
18 அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு இந்த நாட்டை உரிமையாகத் தருகிறார். போருக்குத் தகுந்த ஆடவராகிய நீங்கள் அனைவரும் ஆயுதம் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ராயேல் மக்களுக்கு முன்னே நடந்து போங்கள்.
19 உங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் ( உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்று அறிவேன் ) ஆடுமாடுகளையும் நான் உங்களுக்குக் கொடுத்துள்ள நகர்களிலே இருக்கவிட்டு,
20 ஆண்டவர் உங்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தது போல் அவர் உங்கள் சகோதரரையும் இளைப்பாறச் செய்து, அவர்களுக்கு யோர்தானின் அப்புறத்தில் கொடுக்கவிருக்கிற நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும்வரையிலும் நீங்கள் ( பாளையத்தில் ) இருந்து, பிறகு நான் கொடுத்துள்ள உரிமைப் பாகத்திற்கு அவரவர் திரும்பிச் செல்வீர்கள் என்று கட்டளை கொடுத்தேன்.
21 அக்காலத்திலேயும் நான் யோசுவாவை நோக்கி: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ உன் கண்ணாரக் கண்டாயன்றோ ? நீ போய்ச் சேரவேண்டிய எல்லா நாடுகளுக்கும் அவர் அவ்விதமே செய்வாராகையால், நீ அவர்களுக்கு அஞ்சாதே,
22 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் பக்கமாய் நின்று போர்புரிவார் என்றேன்.
23 அக்காலத்தில் நான் ஆண்டவரை நோக்கி:
24 கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் எல்லாம் வல்ல கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீரே! நீர் செய்து முடித்த செயல்களுக்கும் காண்பித்த வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யக் கூடிய வேறு கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை.
25 நான் யோர்தானைக் கடந்து அப்புறத்திலுள்ள அந்த நாட்டையும், அழகிய மலையையும், லிபான் மலையையும் கண்ணாரக் கண்டு மகிழ்வேனாக என்று வேண்டிக் கொண்டேன்.
26 ஆண்டவரோ உங்களால் என்மேல் சினந்தவராய், என் விண்ணப்பத்தைக் கேட்கவில்லை. அவர் என்னை நோக்கி: போதும்; இனி இந்தக் காரியத்தைக் குறித்து நம்மோடு பேசவேண்டாம்.
27 நீ பஸ்கா மலையின் கொடுமுடியில் ஏறி உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் திருப்பிப் பார். ஏனென்றால், நீ யோர்தான் நதியைக் கடந்து போவதில்லை.
28 நீ யோசுவாவுக்கு அறிவுரை கூறி அவனைத் திடப்படுத்துவாயாக. அவனே இந்த மக்களுக்குத் தலைவனாகி, நீ காணவிருக்கும் நாட்டை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான் என்றருளினார்.
29 பின்பு போகோர் என்னும் ஆலயத்துக்கு எதிரான பள்ளத்தாக்கிலே நாம் தங்கியிருந்தோம்.
அதிகாரம் 04
1 இப்பொழுது, ஓ இஸ்ராயேலரே! நீங்கள் பிழைத்திருக்கும் படிக்கும், உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டிலே நீங்கள் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளவும், உங்களுக்கு நான் சொல்லி வருகிற கட்டளைகளையும் நீதிகளையும் கூர்ந்து கேளுங்கள்.
2 நான் உங்களுக்குச் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றையும் கூட்டவும் குறைக்கவும் வேண்டாம். நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளை நீங்கள் கைக்கொண்டு ஒழுகக்கடவீர்கள்.
3 பெல்பெகோரின் காரியத்திலே ஆண்டவர் செய்தவற்றையெல்லாம் நீங்கள் கண்ணாலே கண்டீர்கள். அவர் பெல்பெகோரைக் கும்பிடுகிறவர்களை உங்கள் நடுவில் இராதபடிக்கு அழித்து விட்டாரன்றோ ?
4 உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மேல் பற்றுதலுள்ள நீங்களோ இந்நாள் வரையிலும் உயிரோடிருக்கிறீர்கள்.
5 என் கடவுளாகிய ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நீதிமுறைகளையும் கற்பித்தேனென்று அறிவீர்கள். ஆகையால், நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டில் அவற்றை அனுசரிக்க வேண்டியிருக்கும்.
6 நீங்கள் அவற்றை ஏற்றுக் கொள்வதோடல்லாமல், அவற்றின்படி நடந்து கொள்ளவும் வேண்டும். உங்கள் ஞானமும் விவேகமும் மக்களின்முன்பாக எவ்வாறு விளங்கும் ? அவர்கள் உங்களுடைய எல்லாச் சட்டங்களையும்பற்றி நீங்கள் சொல்லக்கேட்டு: ஆ! இவர்கள் பெரிய இனத்தவர்; ஞானிகளும் அறிவாளிகளுமாய் இருக்கிறார்கள் என்று சொன்னால்மட்டுமேயன்றோ ?
7 நம் கடவுளாகிய ஆண்டவரை நாம் மன்றாடுகிறபோதெல்லாம் அவர் நமது அண்டையில் தானே இருக்கிறார். ஆ! நம் கடவுளுக்கும் நமக்கும் இடையே இருக்கிற நெருங்கிய உறவு, வேறு எந்தப் புகழ்பெற்ற இனத்தவருக்கும் அவர்களுடைய தேவர்களுக்கும் இடையே உண்டோ ? இல்லை.
8 உள்ளபடியே இந்நாளில் நான் உங்களுக்கு விவரித்துத் தெளிவிக்கும் சடங்கு முறைகளையும், நீதியுள்ள கட்டளைகளையும், நியாயச் சட்டங்களையும் பெற்றிருக்கிற வேறு சிறந்த மக்கள் யார் ?
9 ஆதலால், நீ உன்னையும் உன் ஆன்மாவையும் கவனமாய்க் காக்கக்கடவாய். நீ கண்களால் கண்டவைகளை மறவாதே. உன் வாழ்நாளெல்லாம் அவை உன் இதயத்தை விட்டு நீங்காதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. அவற்றை உன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
10 ஓரேப் ( மலையில் ) ஆண்டவர் என்னை நோக்கி: மக்களை நம்மிடம் கூடி வரச் செய். அவர்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேட்டுத் தாங்கள் பூமியில் உயிரோடிருக்குமட்டும் நமக்கு அஞ்சும்படியாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொல்லும்படியாகவும், நாம் அவர்களோடு பேசுவோம் என்று சொன்னார். அந்நாளில் நீங்கள் ஆண்டவருடைய முன்னிலையில் வந்து,
11 மலையின் அடிவாரத்தில் சேர்ந்து நின்றுகொண்டிருந்தபோது, அந்த மலை வானமட்டும் எரிந்து கொண்டிருந்ததையும், மலையின் கொடுமுடியில் இருளும் மேகமும் வீற்றிருந்ததையும் கண்டீர்கள்.
12 அப்பொழுது ஆண்டவர் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசினார். அவருடைய வார்த்தைகளின் குரலை நீங்கள் கேட்டீர்களேயன்றி, ஓர் உருவத்தையேனும் நீங்கள் கண்டீர்களோ ? இல்லை.
13 அந்நேரத்தில் அவர் தமது உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, அதை அனுசரிக்கக் கட்டளையிட்டதுமன்றி, இரண்டு கற்பலகைகளில் தாம் எழுதிய பத்து வாக்கியங்களையும் தந்தார்.
14 அன்றியும், நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப்போகிற நாட்டிலே நீங்கள் அனுசரிக்க வேண்டிய திரு ஆசாரங்களையும் நீதிக் கட்டளைகளையும் உங்களுக்குப் படிப்பிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டார்.
15 ஆகையால், உங்கள் ஆன்மாக்களைக் கவனமாய்க் காத்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் ஓரேபிலே நெருப்பின் நடுவில் நின்று உங்களோடு பேசின நாளில் நீங்கள் ஓர் உருவத்தையும் காணவில்லை.
16 ஏனென்று கேட்டால், ஒருவேளை நீங்கள் அறிவு மயங்கி, கொத்துவேலை உருவத்தையாவது, ஆண் உருவம்,
17 பெண் உருவம், பூமியில் இருக்கிற யாதொரு மிருகத்தின் உருவம், வானத்தின் கீழ்ப் பறக்கிற பறவைகளின் உருவம், தரையில் ஊர்வனவற்றின் உருவம்,
18 பூமியின் கீழுள்ள நீரில் நீந்தும் மீன்களின் உருவம் முதலிய உருவங்களையாவது நீங்கள் செய்து தொழுது ஆராதிப்பீர்களென்றும்,
19 கண்களை வானத்துக்கு ஏறெடுத்துச் சூரியன், சந்திரன், விண்மீன்களை நீங்கள் காணும்போது, அறிவு தவறி அவற்றை ஆராதித்து உன் கடவுளாகிய ஆண்டவர் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களுக்கும் உபயோகமாய் இருக்கும்படி உண்டாக்கினவைகளுக்கு ஒத்த விக்கிரகத்தை உனக்கென்று ஏற்படுத்திக் கொண்டு தொழுவாயென்றும் எண்ணி, ஆண்டவர் அவ்வாறு செய்தார்.
20 இந்நாளில் இருக்கிறதுபோல் நீங்கள் தமக்கு உரிமையான மக்களாயிருக்கும்படி ஆண்டவர் உன்னைத் தேர்ந்துகொண்டு, எகிப்தென்னும் நெருப்புக் காள வாயிலிருந்து உங்களைப் புறப்படச் செய்தார்.
21 ஆனால், ஆண்டவர் உங்கள் பேச்சுகளின் பொருட்டு என்மேல் கோபம் கொண்டு நான் யோர்தானைக் கடந்து போவதில்லையென்றும் அவர் உங்களுக்குக் கொடுக்கப்போகிற நல்ல நாட்டில் நான் புகுவதில்லை யென்றும் ஆணையிட்டார்.
22 ஆதலால், இந்த இடத்திலே நான் சாகப்போகிறேன்; யோர்தானைக் கடந்து போவதில்லை: நீங்களோ அதைக் கடந்துபோய், அந்த நல்ல நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
23 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நீ மறந்து, வேண்டாமென்று ஆண்டவர் விலக்கியுள்ளவற்றில் எவ்விதச் சாயலான உருவத்தையும் நீ செய்து கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
24 உள்ளபடி உன் கடவுளாகிய ஆண்டவர் எரித்து உண்கிற நெருப்பாம். அவர் எரிச்சலுள்ள கடவுள்.
25 நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று அந்த நாட்டில் நீண்டநாள் இருந்த பின்பு, நீங்கள் அறிவு கெட்டு, உங்களுக்கு யாதொரு உருவத்தையும் செய்து, கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபமுண்டாகுமாறு அவர் பார்வைக்கு அக்கிரமமானதைச் செய்தால்,
26 யோர்தானைக் கடந்து நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப்போகிற நாட்டில் இராமல் விரைவிலே முற்றிலும் அழிந்து போவீர்களென்று நான் இந்நேரம் விண்ணையும் மண்ணையும் சாட்சி வைக்கிறேன். உங்களை அவர் அழித்தொழித்துவிடுவார்.
27 புற இனத்துவருக்குள்ளே சிதறஅடிப்பார். ஆண்டவர் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் மக்களுக்குள்ளே நீங்கள் கொஞ்சம் பேர்களாக இருப்பீர்கள்.
28 அங்கே மனிதர் கைவேலையான தேவர்களைத் தொழுவீர்கள். அத்தேவர்களோ காணாமலும் கேளாமலும் உண்ணாமலும் நுகராமலும் இருக்கிற கல்லும் மரமுமான தேவர்களே.
29 ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவரை நீ அங்கே தேடுவாய். அவரை உன் முழு இதயத்தோடும் வருத்தம் நிறைந்த ஆன்மாவோடும் விரும்பித் தேடுவாயானால், அவர் உனக்கு அகப்படுவார்.
30 ஏனென்றால், முன் சொல்லப்பட்ட இவையெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடித்த பின்பு, கடைசி நாட்களில் நீ உன் ஆண்டவரிடம் திரும்பி, அவருடைய குரலொலிக்குச் செவி கொடுப்பாய்.
31 உள்ளபடி உன் கடவுளாகிய ஆண்டவர் இரக்கமுள்ள கடவுள். அவர் உன்னைக் கைவிடவுமாட்டார்; முற்றிலும் அழிக்கவுமாட்டார்; உன் தந்தையருக்குத் தாம் ஆணையிட்டுச் செய்து கொண்ட உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
32 கடவுள் உலகிலே மனிதனைப் படைத்த நாள்முதல் உனக்கு முற்பட்ட பழையநாட்களில், வானத்தின் ஒரு கடைசி எல்லை தொடங்கி மறு எல்லை வரையிலுமுள்ள எவ்விடத்திலேனும், இப்படிப்பட்ட காரியம் நடந்ததுண்டோ அல்லது எப்போதேனும் கேள்விப்பட்டதுண்டோ என்று விசாரித்துக் கேள்.
33 நெருப்பின் நடுவிலிருந்து பேசின கடவுளின் குரலொலியை நீ சாகாமல் கேட்டதுபோல யாதொரு மக்களேனும் கேட்டதுண்டோ ?
34 அல்லது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம், கடவுள் மற்ற மக்களுக்குள்ளே ஓர் இனத்தைத் தமக்கென்று, சோதனைகளாலும் அடையாளங்களாலும் அற்புதங்களாலும் போரினாலும் வலிமையினாலும் ஓங்கிய கையாலும் மிகவும் பயங்கரமான காட்சிகளாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள, வகை செய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
35 ஆண்டவரே கடவுள்; அவரைத்தவிர வேறே கடவுள் இல்லையென்பதை நீ அறியும்படியன்றோ ( அவர் அவையெல்லாம் செய்தார் ) ?
36 உனக்குக் கற்பிக்கக் கருதி, அவர் வானத்தினின்று தமது குரலொலியை உனக்குக் கேட்கச் செய்து, பூமியிலே தமது கொடிய நெருப்பை உனக்குக் காண்பித்தார். நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவருடைய வார்த்தைகளை நீயே கேட்டாய்.
37 உன் தந்தையரை நேசித்ததனாலும், அவர்களுக்குப்பின் அவர்கள் சந்ததியைத் தேர்ந்துகொண்டதனாலும், அவர் தமது மிகுந்த வல்லபத்துடன் உனக்குமுன் நடந்து எகிப்திலிருந்து உன்னைப் புறப்படச் செய்தார்.
38 உன்னிலும் வலிமை மிக்க இனத்தவரை அடியோடு அழிக்கும்படி உன்னை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய நாட்டிலே உன்னைப் புகுவித்து, அந்த நாட்டை உனக்கு உரிமையாகக் கொடுத்தார். இது இந்நாளில் நடக்கிற காரியம்தானே ?
39 ஆகையால், மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் கடவுளாகிய ஆண்டவரே கடவுள்; அவரைத் தவிர வேறொருவருமில்லை என்பதை நீ இன்று அறிந்து உன் இதயத்தில் சிந்திக்கக் கடவாய்.
40 உனக்கும், உனக்குப்பின் உன் புதல்வருக்கும் நன்மையாகும் பொருட்டும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ நெடுங்காலம் வாழும் பொருட்டும், நான் உனக்குக் கற்பிக்கிற அவரது கட்டளையையும் சட்டங்களையும் கைக்கொண்டு ஒழுகக்கடவாய் என்றார்.
41 அப்போது மோயீசன் யோர்தானுக்கு இப்புறம் கீழ்த்திசையில் மூன்று அடைக்கல நகரங்களை நியமித்தார்.
42 ( இரண்டொரு நாளும் ) முன்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்ற யாரேனும் ஓடிப்போய் மேற்படி நகரங்களிலே ஒரு நகரத்தைச் சரணடைந்தால், அதில் தப்பிப் பிழைத்திருக்கும்படி அவைகளை ஏற்படுத்தினார்.
43 அவை எவையென்றால்: ரூபன் கோத்திரத்தாரைச் சேர்ந்த சமவெளியாகிய பாலைவனத்தில் இருக்கிற பொசோர் நகரமும், காத் கோத்திரத்தாரைச் சேர்ந்த கலாத் நாட்டில் இருக்கிற இராமொட் நகரமும், மனாஸே வம்சத்தாரைச் சேர்ந்த பாஸான் நாட்டுக் கோலான் நகரமும் ஆகிய இந்த மூன்றுமேயாம்.
44 மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்கு விதித்துத் தெளிவித்த சட்டம் இதுவே.
45 எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ராயேல் மக்களுக்கு அவர் கற்பித்த கட்டளைகளும், நீதி முறைகளும், நீதி நியாயங்களும் இவைகளே.
46 அப்பொழுது இஸ்ராயேலர் யோர்தான் நதிக்கு இப்புறத்திலே, போகோர் கோவிலுக்கு எதிரிலே எஸெபோனில் குடியிருந்து, மோயீசனால் தோற்கடிக்கப்பட்ட அமோறையரின் அரசனான செகோனுடைய நாட்டில் இருந்தார்கள். எகிப்திலிருந்து வந்த இஸ்ராயேல் மக்கள்,
47 யோர்தானுக்கு, இப்புறத்தில், சூரியன் உதிக்கும் திசையில், அவனுக்கும் பாஸான் அரசனான ஓக்குக்கும் உரி நாட்டைப் பிடித்தார்கள்.
48 அர்னோன் ஓடைக்கரைக்கு அடுத்த அறோயேர் தொடங்கி எர்மோன் என்னும் சியோன் மலை வரையிலும் அது பரந்து கிடக்கும்.
49 அன்றியும், யோர்தானுக்கு இப்புறத்தில் கீழ்த்திசை தொடங்கிப் பாலைவனக் கடலும் பஸ்கா மலை அடிவாரம் வரையிலுமுள்ள சமவெளிகளும் ( அதில் அடங்கியுள்ளன ).
அதிகாரம் 05
1 அப்பொழுது மோயீசன் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: இஸ்ராயேலரே, நான் இன்று உங்கள் காது கேட்கச் சொல்லப் போகிற சமயச் சடங்குகளையும் நீதி முறைகளையும் கேளுங்கள்; அவற்றைக் கற்றுக்கொண்டு செயலில் நிறைவேற்றுங்கள்.
2 நம் கடவுளாகிய ஆண்டவர் ஒரேபிலே நம்மோடு உடன்படிக்கை செய்தார்.
3 அவர் நம் தந்தையரோடு அந்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் முடனேயே அதைச் செய்துகொண்டார்.
4 மலையிலே நெருப்பு நடுவினின்று நம்மோடு முகமுகமாய்ப் பேசியருளினார்.
5 அவருடைய வார்த்தைகளை உங்களுக்கு அறிவிக்கும்படி அக்காலத்தில் நானே ஆண்டவருக்கும் உங்களுக்குமிடையே கொண்டுகூறுபவனாகவும் நடுவனாகவும் இருந்தேன். ஏனென்றால், நீங்கள் நெருப்புக்கு அஞ்சியவர்களாய் மலையில் ஏறவில்லை. அப்போது அவர் திருவுளம்பற்றியது என்னவென்றால்:
6 உன்னை எகிப்து நாடாகிய அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படச் செய்த கடவுளாகிய ஆண்டவர் நாமே.
7 நமக்கு முன்பாக வேறு கடவுளர்கள் உனக்கு இல்லாது போவார்களாக.
8 மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் மண்ணின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பாக ஒரு விக்கிரகத்தையேனும் ஓர் உருவத்தையேனும் உனக்கு ஆக்கிக்கோள்ளாதே;
9 அவற்றை ஆராதிக்கவும் வணங்கவும் துணியாதே. ஏனென்றால் உன் கடவுளாகிய ஆண்டவர் நாம் பொறாமை கொண்ட கடவுளாய், நம்மைப் பகைக்கிறவர்களின் பொருட்டுத் தந்தையரின் அக்கிரமத்தை மூன்றாம் நான்காம் தலைமுறை வரையிலும் அவர்களுடைய புதல்வரிடம் திருப்பிச் சாட்டுகிறவரும்,
10 நம்மிடம் அன்புகூர்ந்து நம் கட்டளைகளைக் கைக்கொள்பவர்களுக்கோ பல்லாயிரம் தலைமுறைகள்வரையிலும் இரக்கம் காட்டுகிறவருமாய் இருக்கிறோம்.
11 உன் கடவுளாகிய ஆண்டவருடைய பெயரை வீணாய்ச் சொல்லாதே. ஏனென்றால், வீணான காரியத்திற்காக அவருடைய பெயரைச் சொல்பவன் தண்டனை அடையாது போகான்.
12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாளைப் புனிதமுள்ளதாக நினைக்கக்கடவாய்.
13 ஆறுநாளும் உழைத்து உன் வேலையெல்லாம் செய்வாய்.
14 ஏழாம் நாளோ சாபத்; அதாவது: உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஓய்வு நாளாம். அதிலே நீயேனும், உன் புதல்வன் புதல்வியேனும், வேலைக்காரன் வேலைக்காரியேனும், மாடு கழுதை வேறெந்த மிருகமேனும், உன் வாயிலின் உள்ளேயிருக்கிற அந்நியனேனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ இளைப்பாறுவதுபோல் உன் வேலைக்காரனும் வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும்.
15 நீயும் எகிப்திலே அடிமையாய் இருந்தாயென்றும், அங்கிருந்து உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வலுத்தகையாலும் ஓங்கிய புயத்தாலும் புறப்படச் செய்தாரென்றும் நினைத்துக்கொள். அது பற்றியே ஓய்வு நாளை அனுசரிக்கும்படி உனக்குக் கட்டளையிட்டார்.
16 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கவிருக்கும் நாட்டில் நீ நெடுங்காலமாயும் நலமாயும் வாழ்ந்திருக்கும் பொருட்டு, ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தந்தையையும் தாயையும் மதித்துப் பேணக்கடவாய்.
17 கொலை செய்யாதிருப்பாயாக.
18 விபசாரம் செய்யாதிருப்பாயாக.
19 களவு செய்யாதிருப்பாயாக.
20 உன் பிறனுக்கு எதிராய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
21 உன் பிறனுடைய மனைவியையும், வீடு நிலங்களையும், ஊழியன் ஊழியக்காரிகளையும், மாடு கழுதைகளையும், அவனுக்கு உண்டானவைகளில் யாதொன்றையும் ஆசியாதிருப்பாயாக என்றருளினார்.
22 இவ்வார்த்தைகளை ஆண்டவர், மலையிலே நெருப்பு, மேகம், காரிருள்களின் நடுவிலிருந்து, உங்கள் சபையார் எல்லாரும் கேட்க உரத்த குரலில் சொன்னாரேயன்றி, வேறொன்றையும் கூட்டிச் சொல்லவில்லை. மேலும், அந்த வார்த்தைகளை அவர் இரண்டு கற்பலகைகளிலும் எழுதி எனக்குத் தந்தருளினார்.
23 நீங்களோ இருளின் நடுவிலிருந்து உண்டான அவருடைய குரலொலியையுங் கேட்டு, மலை எரிவதையும் கண்ட பின்னர், உங்களில் கோத்திரத் தலைவர்களும், வயது முதிர்ந்தவர்களுமாகிய எல்லாரும் என்னிடம் வந்து, என்னை நோக்கி:
24 இதோ நம்முடய கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் தம்முடைய மகிமையையும் பெருமையையும் காண்பித்திருக்கிறார். நெருப்பின் நடுவிலிருந்து உண்டான அவருடைய குரலொலியைக் கேட்டோம். கடவுள் மனிதனோடு பேசியிருந்தும் மனிதன் உயிர் பிழைத்திருக்கிறதை இந்நாளிலே அறியலானோம்.
25 ஆகையால், நாங்கள் சாவானேன் ? இந்தப் பெரிய நெருப்பு எங்களை விழுங்குவானேன் ? நாங்கள் இனியும் நம் கடவுளாகிய ஆண்டவரின் வாக்கைக் கேட்போமாயின் சாவோமே!
26 மாமிசம் கொண்டுள்ளன எல்லாம் எம்மாத்திரம் ? நெருப்பின் நடுவிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டதுபோல் கேட்டு (மற்ற யாரேனும்) பிழைக்கக்கூடுமோ ?
27 நாங்கள் கேட்கச் சொல்வதைவிட, நீரே அணுகிப்போய், நம் கடவுளாகிய ஆண்டவர் உமக்குச் சொல்வதெல்லாம் கேட்டு, நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும். நாங்கள் கேட்டு, அதன்படியே செய்வோம்.
28 ஆண்டவர் இதைக்கேட்டு, என்னை நோக்கி: அவர்கள் உன்னோடு பேசுகையில் அவர்கள் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டோம். அவர்கள் சொன்னதெல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.
29 அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் நலமாகும் பொருட்டு அவர்கள் எக்காலமும் நமக்கு அஞ்சி, நம்முடைய கட்டளைகளனைத்தையும் கடைப்பிடிக்க ஏற்ற மனம் அவர்களுக்கு இருப்பதே முக்கியம்.
30 நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள் என்று அவர்களுக்குச் சொல். நீயோ இங்கே நம்மோடு நில்.
31 நாம் அவர்களுக்கு உரிமையாய்க் கொடுக்கும் நாட்டில் அவர்கள் அனுசரிக்க வேண்டிய எல்லாக் கட்டளைகளையும், சமயச் சடங்குகளையும், நீதி நியாயங்களையும் நாம் உனக்குச் சொல்லுவோம். அவைகளை நீ அவர்களுக்குப் போதிப்பாய் என்று திருவுளம்பற்றினார்.
32 ஆகையால், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளை நீங்கள் கைக்கொண்டு அவற்றின்படி செய்யுங்கள். வலப்புறத்திலேனும் இடப்புறத்திலேனும் சாயாதீர்கள்.
33 ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கற்பித்த வழியிலேயே நடங்கள். அப்போது வாழ்வீர்கள். அது உங்களுக்கு நன்மையும் பயக்கும். நீங்கள் உரிமைகொள்ளும் நாட்டிலே உங்கள் நாட்களும் நீடித்திருக்கும்.
அதிகாரம் 06
1 நான் உங்களுக்குப் படிப்பிக்க வேண்டுமென்றும், நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளவிருக்கும் நாட்டிலே கடைப்பிடிக்க வேண்டுமென்றும், ஆண்டவர் கற்பித்தருளிய கட்டளைகளையும் சமயச் சடங்குகளையும் நீதிமுறைமைகளையும் இதோ (தெரிவிக்கப்போகிறேன்).
2 (ஆண்டவருடைய திருவுளம் என்னவெனில்: ) உன் வாழ்நாள் நீடிக்கும் பொருட்டு, நான் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் பேரர்களுக்கும் விதிக்கிற கடவுளின் கட்டளை சட்டங்களையேல்லாம் நீ கைக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி உயிருள்ளவரை நிறைவேற்றவேண்டும் என்பதேயாம்.
3 இஸ்ராயேலே, செவிகொடு. உன் தந்தையரின் கடவுளாகிய ஆண்டவர் பாலும் தேனும் பொழியும் நாட்டை உனக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்ததினால், நீ ஆண்டவர் கட்டளையிட்டபடி நடக்கக் கவனமாயிருப்பாயானால் நன்மையையும் பெறுவாய்; அதனோடு மேன்மேலும் பெருகுவாய்.
4 இஸ்ராயேலே, உற்றுக்கேள். நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
5 உன் முழு இதயத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அன்பு செய்வாயாக.
6 இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த வார்த்தைகள் உன் இதயத்திலே பதியக்கடவன.
7 நீ அவைகளை உன் புதல்வர்களுக்கு விவரித்துச் சொல்லவும், நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போதும் வழியில் நடந்து போகும்போதும் தூங்கும்வேளையிலும் விழித்தெழுந்திருக்கையிலும் அவைகளைத் தியானிக்கவும் கடவாய்.
8 அவற்றை உன்கையிலே அடையாளம்போல் கட்டுவாய். அவைகளை உன் கண்களுக்கு நடுவே தொங்கியாடும்படி வைக்கவும்,
9 உன் வீட்டின் வாயிற்படியிலும் கதவின் நிலைகளிலும் அவைகளை எழுதவும் கடவாய்.
10 பின்னும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுப்போம் என்று ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களாகிய உன் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் உன்னைப் புகச் செய்யும் போதும், நீ ஏற்படுத்தாத வசதியான பெரிய நகரங்களையும்,
11 நீ கட்டாத, எல்லாச் செல்வங்களாலும் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத கிணறுகளையும், நீ நடாத கொடிமுந்திரித் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும்,
12 நீ உண்டு நிறைவு கொண்ட பின்னர்,
13 உன்னை எகிப்து நாட்டினின்றும் அடிமை வாழ்வினின்றும் புறப்படச் செய்த ஆண்டவரை மறவாத படிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருப்பாயாக. நீ உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதபடிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருப்பாயாக. நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவரொருவருக்கே பணிந்து, அவருடைய பெயரைக் கொண்டு ஆணையிடுவாயாக.
14 உங்களுக்கு நாற்புறத்திலுமிருக்கிற பிற மக்களின் கடவுளரைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
15 பின்பற்றினால், உன் நடுவிலிருக்கிற கடவுளாகிய ஆண்டவர் பொறாமையுள்ள கடவுளாகையால், ஒருவேளை உன் கடவுளாகிய ஆண்டவருடைய கோபம் உன்மேல் பொங்கி, உன்னைப் பூமியின் முகத்திலிருந்து அழித்து விட்டாலும் விடலாம்.
16 சோதனை என்னப்பட்ட இடத்திலே நீ சோதித்தது போல உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதனை செய்யாதிருப்பாயாக.
17 உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளையும், அவர் உனக்கு கற்பித்த நீதிச் சட்டங்களையும், சடங்கு முறைகளையும் அனுசரிக்கக் கடவாயாக.
18 நீ ஆண்டவருடைய பார்வைக்கு நலமும் இதமுமாயிருக்கின்றதையே செய்வாயானால் உனக்கு நன்மை உண்டாகும். ஆண்டவர் உன் முன்னோருக்கு ஆணையிட்டுக் கொடுத்த சிறந்த நாட்டிலே நீ புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்வதுமன்றி,
19 அவர் திருவுளம்பற்றினபடி உன் பகைவரையெல்லாம் அவரே உன் முன்னிலையில் அழித்தொழிப்பார்.
20 நாளைக்கு உன் புதல்வன் உன்னை நோக்கி: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கற்பித்த இந்தச் சடங்குகளுக்கும் ஆசாரங்களுக்கும் நீதிமுறைகளுக்கும் உட்கருத்து என்ன என்று கேட்கும்போது, நீ அவனை நோக்கி:
21 நாங்கள் எகிப்திலே பரவோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆண்டவரோ எகிப்திலிருந்து எங்களைத் தமது வலிய கையினாலே புறப்படச் செய்தார் என்றும்:
22 எகிப்து நாட்டிலே அவர் எங்கள் கண்களுக்கு முன்பாகப் பரவோன்மேலும் அவனுடைய எல்லா வீட்டார்மேலும் அடையாளங்களையும் செய்தார் என்றும்:
23 நம் முன்னோருக்கு அவர் ஆணையிட்டுக் கொடுத்த நாட்டிற்கு எங்களை அழைத்துக் கொண்டு போய், அதை நமக்குக்கொடுக்கும்படியாகவே எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச் செய்தார் என்றும்:
24 ஆகையால் நமக்கு இந்நாளில் இருக்கிறது போல் நமது வாழ்நாளெல்லாம் நன்றாகும் பொருட்டு இவ்வெல்லாக் கட்டளைச் சட்டங்களையும் அனுசரித்து, நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவேண்டுமென்று ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார் என்றும்:
25 கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடி நாம் அவர் முன்னிலையில் இந்தக் கட்டளைகளையெல்லாம் காத்துக் கடைப்பிடித்து வருவோமாயின், அவர் நமது பேரில் தயவாய் இருப்பார் என்றும் சொல்லுவாய் என்றார்.
அதிகாரம் 07
1 மேலும், நீ உரிமையாக்கிக் கொள்ளவிருக்கும் நாட்டிலே உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து உன்னைக் காட்டிலும் மிகப் பெரிய, வலிமைமிக்க இனத்தாராகிய ஏத்தையார் ஜெற்கேசையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசையர் என்னப்பட்ட ஏழு இனங்களையும் உனக்கு முன்பாக அழித்து,
2 உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கைவயப்படுத்திய பின்பு நீ அவர்களை முறியடித்து அடியோடு அழிக்கக்கடவாய். அவர்களோடு நீ உடன்படிக்கை செய்துகொள்ளவும் வேண்டாம்; அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
3 நீ அவர்களோடு மணவுறவு கொள்ளாதே. உன் புதல்வியை அவன் புதல்வனுக்குக் கொடுக்காமலும், உன் புதல்வனுக்கு அவன் புதல்வியைக் கொள்ளாமலும் இருப்பாயாக.
4 ஏனென்றால், நீ நம்மைப் பின்பற்றாமல் பிற கடவுளருக்குப் பணி செய்யும்படி அந்தப் பெண்கள் உன் புதல்வர்களைத் தீய போதனையால் கெடுத்து விடுவார்கள். அதனாலே ஆண்டவர் கோபம் கொண்டு விரைவில் உன்னை அழித்துவிடுவார்.
5 ஆதலால், நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களையும் இடித்து, அவர்களுடைய சிலைகளையும் உடைத்து, அவர்களுடைய சோலைகளையும் வெட்டி, கொத்து வேலையாகிய அவர்களுடைய விக்கிரகங்களையும் சுட்டெரிக்கக் கடவீர்கள்.
6 உள்ளபடி நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட குடியாய் இருக்கிறாய். மண்ணிலுள்ள எல்லா மக்களிலும் உன்னைக் கடவுளாகிய ஆண்டவர் தம் சொந்த மக்களாகத் தேர்ந்துகொண்டார்.
7 மக்கள் அனைவரிலும் நீங்கள் திரளான மக்கள் என்பதற்காக ஆண்டவர் உங்களோடு சேர்ந்துகொண்டு உங்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. உள்ளபடி நீங்கள் மற்றுமுள்ள எல்லா மக்களிலும் கொஞ்சமாகவே இருக்கிறீர்கள்.
8 அவர் உங்கள்மேல் அன்புகூர்ந்து, உங்கள் மூதாதையர்களுக்குத் தாம் இட்ட ஆணையைக் காக்க வேண்டுமென்பதை முன்னிட்டு தமது வலுத்த கையால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனான பரவோனுடைய கையினின்றும் உன்னை மீட்டுக் கொண்டார்.
9 ஆதலால், உன் கடவுளாகிய ஆண்டவர் வலிமையும் உண்மையும் பொருந்திய கடவுளென்றும், அவர் தமக்கு அன்பு செய்து தம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆயிரம் தலைமுறைகள்வரையிலும் தமது உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காக்கிறவரென்றும்,
10 தம்மைப் பகைக்கிறவர்கள்மேல் அவர் உடனே பழிவாங்கி, அவர்களுடைய தகுதிக்கு ஏற்றபடி அவர்களுக்குச் சரியான தண்டனை வழங்கச் சற்றும் தாமதியாமல் அந்நேரமே அவர்களை அழிக்கிற கடவுளென்றும் அறியக்கடவாய் ஆகையால்,
11 நீ அனுசரிக்கும் பொருட்டு இன்று நான் உனக்குக் கருத்தாய்க் கற்பிக்கின்ற சட்ட ஒழுங்குகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் கைக்கொண்டு ஒழுகக்கடவாய்.
12 இந்த நீதி நியாயங்களை நீ கேட்டு அவற்றைக் கைக்கொண்டு அனுசரிப்பாயாயின், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையையும் காப்பார்; தமது இரக்கத்தையும் உன்மேல் வைப்பார்.
13 அவர் உன்னை நேசித்து, உனக்கு அளிக்கப்படுமென்று உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டிலே உன்னைப் பெருகச்செய்து, உன் பிள்ளைகளையும் உன் நிலத்தின் கனியாகிய தானியங்களையும் கொடி முந்திரிப் பழச் சாற்றையும் எண்ணெயையும் ஆட்டு மந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
14 மற்றுமுள்ள மக்கள் அனைவரையும்விட நீ ஆசீர் பெற்றவனாய் இருப்பாய். உங்களுக்குள்ளேயும் உங்கள் மிருகவுயிர்களுக்குள்ளேயும், ஆணிலேனும் பெண்ணிலேனும் மலடு இராது.
15 ஆண்டவர், நோயெல்லாம் உன்னை விட்டு நீங்கச்செய்வார். உனக்குத் தெரிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் உன் பகைவருக்கு வருமேயன்றி உனக்கு வரா.
16 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைவயப்படுத்த இருக்கும் எல்லா மக்களையும் அழிக்கக்கடவாய். உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக, அவர்கள் வணங்கும் கடவுளரை நீ வணங்காதே, வணங்கினால் கெட்டுப்பொவாய்.
17 நீ: அந்த இனத்தவர் என்னைக் காட்டிலும் பலமுள்ளவராய் இருக்கிறார்களே; அவர்களை அழிக்க என்னால் எப்படி முடியும் என்று மனத்தில் சொல்லிக்கொண்டாயாயின்
18 உன் ஆண்டவர் பரவோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் செய்ததையும்,
19 உன் கண்களே கண்ட கொடிய வாதைகளையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புறப்படச் செய்யக் காண்பித்த அடையாளங்களையும் அற்புதங்களையும், அவரது வலுத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நினைத்துக்கொள். நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா மக்களுக்கும் அவர் அவ்வண்ணமே செய்வார்; பயப்படாதே.
20 மேலும், அவர்களில் யார் யார் உனக்குத் தப்பி ஒளிந்து கொண்டிருப்பார்களோ, அவர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் வேரோடு அழித்தொழிக்கும் நாள் வரையிலும் அவர் செங்குளவிகளை அனுப்பி, அவர்களை வதைத்துத் துன்புறுத்துவார்.
21 அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவிலே இருக்கிறார். அவரோ மகத்துவமும் பயங்கரமுமுள்ள கடவுள்.
22 அவரே உன் முன்னிலையில் அந்த மக்கள் மெதுவாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் அழிந்துபோகச் செய்வார். உள்ளபடி அந்த இனத்தவரை ஒருமிக்க அழிப்பதாயிருந்தால் காட்டு மிருகங்கள் உன் பக்கம் பெருகிப்போகும்.
23 உன் கடவுளாகிய ஆண்டவரோ அவர்களை உன் முன்னிலையில் விட்டுவைத்து, அவர்கள் முற்றிலும் அழியும் வரையிலும் அவர்களைச் சாகடித்துக் கொண்டே வருவார்.
24 அவர்களுடைய அரசர்களையும் உன் கைவயப்படுத்துவார். நீ அவர்களுடைய பெயர் முதலாய் வானத்தின் கீழ் இராதபடிக்கு, அவர்களை அழிக்கக்கடவாய். நீ அவர்களை அழித்துத் தீரும் வரையிலும் ஒருவரும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.
25 அவர்களுடைய சித்திரவேலைப்பாடுள்ள விக்கிரகங்களை நெருப்பால் சுட்டெரிக்கக்கடவாய். அவைகள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவைகளாகையால், நீ படுகுழியில் விழாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் விரும்பாமலும், அவற்றில் கொஞ்சமேனும் எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக.
26 அந்த விக்கிரகங்களைப் போல் நீ சாபத்துக்கு உள்ளாகாதபடிக்கு, அவைகளில் யாதொன்றையும் உன் வீட்டிற்குக் கொண்டு போகத் துணியாதே. அது சாபத்துக்கேற்ற பொருளாதலால், நீ விக்கிரகத்தை அசுத்தமென்றும், தீட்டுள்ள அழுகலென்றும் வெறுத்து, அருவருத்துப் புக்கணிக்கக்கடவாய்.
அதிகாரம் 08
1 நீங்கள் வாழ்ந்து பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற கட்டளைகளையெல்லாம் அனுசரிக்கக் கவனமாய் இருப்பீர்களாக.
2 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் படைத்து, உன்னைப் பரிசோதித்து, தம்முடைய கட்டளைகளை நீ அனுசரிப்பாயோ அனுசரிக்க மாட்டாயோவென்று உன் இதயத்திலுள்ளதை நீயே அறியும்படியாக, நாற்பதாண்டளவாய் பாலைவனத்திலே உன்னை நடத்திவந்த எல்லா வழிகளையும் நினைப்பாயாக.
3 (உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் முன்னோரும் அறிந்திராத மன்னாவை உனக்கு அளித்தார். அதனால்: மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்று உனக்குக் காண்பித்தருளினார்.
4 இந்த நாற்பதாண்டும் நீ உடுத்தியிருந்த ஆடை பழையதாகிக் கிழியவுமில்லை; உன் காலடி காயமுறவுமில்லை.
5 ஆதலால் ஒருவன் தன் மகனுக்குக் கற்பிப்பதுபோல், கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்தாரென்று நீ உன் இதயத்தில் உணர்ந்து அறிந்துகொள்வாயாக.
6 நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்து, அவருக்கு அஞ்சும்படியன்றோ (அவர் அவ்வாறு உன்னைப் படைத்தார்).
7 ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை நல்ல நிலத்திலே புகச்செய்வார். அது ஆறு, ஏரி, ஊற்றுகள் மிகுந்த நாடு. அதிலுள்ள பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பல நதிகள் புறப்படுகின்றன.
8 கோதுமை வாற்கோதுமை முந்திரிக்கொடிகளும், அத்திமரம் ஒலிவமரம் மாதுளஞ் செடிகளும் அதிலே வளரும். அவ்விடத்தில் எண்ணெயும் தேனும் மிகுதியாக உண்டு.
9 அது எக்காலமும் நிறைவாக (நீ) அப்பம் உண்ணத்தக்கதும், ஒன்றும் உனக்குக் குறைவு வைக்காததுமான நாடு. அதில் கற்கள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் செம்பு வெட்டியெடுக்கப்படுகிறது.
10 ஆகையால், நீ உண்டு நிறைவு கொண்டபோது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த சிறந்த நாட்டிற்காக அவரைப் போற்றக் கடவாய்.
11 நீ ஒருபோதும் உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதே. நான் இன்று உனக்கு விதிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதிமுறைகளையும் அசட்டை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்பாயாக.
12 இல்லாவிட்டால், நீ உண்டு நிறைவு கொண்டு அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், ஆட்டுமந்தைகளையும்
13 மாட்டுமந்தைகளையும் சம்பாதித்துப் பொன்னையும் வெள்ளியையும் மிகுதியாய்க் கைக்கொண்டிருக்கும் போதும், ஒருவேளை நீ செருக்குற்றவனாய்,
14 உன்னை எகிப்திலும் அடிமைத்தன வீட்டிலுமிருந்து புறப்படச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தாலும் மறக்கலாம்.
15 (அவரை மறவாதே.) அவரன்றோ கொள்ளிவாய்ப் பாம்புகளும் திப்சாஸ் என்னும் நச்சுப் பாம்புகளும் தேள்களும் உள்ள, பயங்கரமான பெரிய நீரில்லாப் பாலைவழியாய் உன்னை நடத்தி அழைத்து வருகையில், மிகக் கடினமான கல் மலையிலிருந்து நீரருவிகள் புறப்படச் செய்து,
16 உன் முன்னோர்கள் அறிந்திராத மன்னாவைக் கொண்டு உன்னை உண்பித்து, உன்னைத் தாழ்த்திப் பரிசோதித்த பின்பு, இறுதியில் உன்மீது இரக்கமுள்ளவராய் இருந்தார்?
17 ( அவர் இப்படியெல்லாம் செய்ததன் உட்கருத்து ஏதென்றால்: ) என் திறமையினாலேயும், என் புய வலிமையினாலேயும் நான் அந்தச் செல்வமெல்லாம் சம்பாதித்தேன் என்று உன் இதயத்திலே நீ சொல்லாமல்,
18 உன் கடவுளாகிய ஆண்டவரை நினைத்து, அவரே செல்வத்தைச் சம்பாதிப்பதற்கான ஆற்றலை உனக்குக் கொடுத்திருக்கிறாரென்று நீ அறியும்படியாகவேயாம். அவர் உன் முன்னோருக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று, அப்படிச் செய்தார். இந்நாளிலே (நடக்கிறது) அதற்குச் சான்று பகரும்.
19 ஆனால், நீ உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தவனாய், பிற கடவுளரைப் பின்பற்றி அவர்களை வணங்கித்தொழுது வருவாயாயின், நீ முற்றிலும் அழிந்து போவாயென்று இக்கணமே உனக்கு அறிவிக்கிறேன்.
20 உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் போனால், உங்களுக்கு முன்பாக ஆண்டவர் அழித்த மக்களை போல் நீங்களும் அழிந்து போவீர்கள்.
அதிகாரம் 09
1 இஸ்ராயேலே, கேள். நீ இன்று யோர்தானைக் கடந்து, உன்னிலும் மக்கள் நிறைந்த வலிய இனத்தாரையும் வானளாவிய மதில் சூழ்ந்த நகர்களையும் வயப்படுத்தப் போகிறாய்.
2 அவர்கள் ஏனாக்கின் புதல்வர்; வலுத்த இனம்; நெடிய ஆட்கள்; நீ அவர்களைக் கண்டிருக்கிறாய். அவர்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்கத்தக்கவர் ஒருவருமில்லையென்று நீ கேள்விப்பட்டிருக்கிறாய்.
3 அப்படியிருக்க, உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன்பாக நடப்பாரென்பதை இன்று நீ கண்டறிவாய். அவர் எரிக்கும் நெருப்பைப்போல் அவர்களை அடித்து மடக்கி விரைவில் அழித்துவிடுவார். அவர் உனக்கு முன்சொல்லியிருப்பது போல், உன் கண்களுக்கு முன்பாகவே அவர்களை அழித்தொழிப்பார்.
4 உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் முன்னிலையில் அழித்த பின்னரோ, நீ: ஆ! இந்த மக்கள் தங்கள் அக்கிரமத்தின் பொருட்டு அழிவுண்டமையால், நான் நீதிமானென்று ஆண்டவர் இந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி என்னை அழைத்து வந்தார் என்று உன் இதயத்தில் நினைக்காதே.
5 உள்ளபடி நீ அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகுந்தது உன்னுடைய புண்ணியத்தாலும் அன்று; நேர்மையாலும் அன்று. அவ்வினத்தாருடைய அக்கிரமத்தைப் பற்றியும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகிய உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியதை முன்னிட்டுமே, அவர்கள் உன் கண்களுக்குமுன் அழிக்கப்பட்டார்கள்.
6 நீ வணங்காக் கழுத்துள்ள குடியாய் இருக்க, உன் கடவுளாகிய ஆண்டவர் அந்த நல்ல நாட்டை உனக்கு உரிமையாய்க் கொடுத்தது உன் புண்ணியத்தைப் பற்றி அன்று.
7 பாலைவனத்திலே உன் கடவுளாகிய ஆண்டவருக்குக் கடும் கோபம் உண்டாக நீ காரணமாய் இருந்ததை நினை. எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இவ்விடம் சேரும் வரையிலும் நீ எப்பொழுதும் கடவுளை எதிர்த்து முரண்டிக் கொண்டேயிருந்தாய்.
8 ஓரேபில் முதலாய் நீ அவருக்குக் கோபம் உண்டாக்க, அவர் கோபம் கொண்டு உன்னை அழிக்க நினைத்தார்.
9 ஆண்டவர் உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை கற்பலகைகளை வாங்கிக்கொள்ளும் பொருட்டு நான் மலையில் ஏறினபோது, அப்பம் உண்ணாமலும் தண்ணீர் குடியாமலும் நாற்பது நாள் இரவும் பகலும் மலையில் தங்கியிருந்தேன்.
10 அப்பொழுது கடவுளுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் கொடுத்தார். சபை கூடியிருந்த நாளில் அவர் மலையிலே நெருப்பின் நடுவில் இருந்து உங்களோடு பேசிய எல்லா வாக்கியங்களும் அவைகளில் எழுதப்பட்டிருந்தன.
11 நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின்பு, உடன்படிக்கைப் பலகைகளாகிய இரண்டு கற்பலகைகளையும் எனக்குக் கொடுத்தபோது, அவர் என்னை நோக்கி:
12 நீ எழுந்து விரைவில் இவ்விடம் விட்டு இறங்கிப்போ. ஏனென்றால், நீ எகிப்தினின்று புறப்படச் செய்த உன் மக்கள் நீ காட்டிய நெறியை விட்டு விலகி, வார்க்கப்பட்ட ஓர் உருவத்தைத் தங்களுக்கு உண்டாக்கிக் கொண்டார்கள் என்றார்.
13 மறுபடியும் ஆண்டவர் என்னை நோக்கி: இந்த மக்களைப் பார்த்தேன். அது வணங்காக் கழுத்துள்ள இனம்.
14 நம்மை விட்டுவிடு. அவர்களை நாம் அழித்து அவர்கள் பெயரை வானத்தின் கீழிருந்து நீக்கிவிட்டு, அவர்களைக்காட்டிலும் மக்கள் நிறைந்ததும் வலிமையுள்ளதுமான இன்னொரு இனத்திற்கு உன்னைத் தலைவனாக்குவோம் என்றார்.
15 பிறகு நான் எரிகிற மலையிலிருந்து உடன்படிக்கையின் இரண்டு பலகைகளையும் என் இருகைகளில் பிடித்துக்கொண்டு இறங்கிவந்து, பார்த்தேன்
16 நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவத்தில் விழுந்து, வார்க்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைச் செய்து, அவர் உங்களுக்குக் காட்டின நெறியை அவ்வளவு விரைவில் விட்டுவிலகினீர்களென்று நான் கண்டபோது,
17 என் கையிலிருந்த பலகைகளை எறிந்து, உங்கள் முன்னிலையில் அவற்றை உடைத்தேன்.
18 பிறகு, நீங்கள் ஆண்டவருக்குக் கோபமுண்டாகுமாறு அவருக்கு எதிராகக் கட்டிக்கொண்ட பாவமனைத்திற்கும் நான் முன்போல ஆண்டவருடைய முன்னிலையில் விழுந்து, இரவு பகல் நாற்பது நாளும் அப்பம் உண்ணாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
19 ஏனென்றால், உங்களை அழிக்கும்படி அவர் கொண்டிருந்த கோபநெருப்பிற்கும் சினத்திற்கும் நான் அஞ்சினேன். ஆண்டவரோ அம்முறையும் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
20 ஆரோன்மீதும் அவர் மிகவும் சினம் கொண்டு அவனை அழிக்க மனம் கொண்டிருந்தார். நானோ பரிந்து பேசி ஆரோனையும் காத்தேன்.
21 உங்கள் பாவப்பொருளாகிய அந்தக் கன்றுக் குட்டியையோ நான் எடுத்து உடைத்து நொறுக்கித் தூளாக்கி நெருப்பில் எரித்து மலையினின்று இறங்கும் அருவியில் எறிந்து விட்டேன்.
22 நீங்கள், எரிச்சல் இடத்திலும் சோதனை இடத்திலும், ஆசைகோரி என்னும் இடத்திலும் ஆண்டவருக்குக் கோப மூட்டினீர்கள்.
23 இன்னும் அவர் உங்களைக் காதேஸ் பர்னேயிலிருந்து அனுப்பி: நீங்கள் போய், நாம் உங்களுக்குக் கொடுத்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டபோது, நீங்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்பாமலும், அவருடைய குரலொலிக்குச் செவிக்கொடாமலும், அவர் இட்ட கட்டளையை மீறி நடந்தீர்கள்.
24 நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் இவ்விதமே மூர்க்கத்தனமாய்க் கலகம் செய்கிறவர்களாகவே இருந்தீர்கள்.
25 ஆண்டவர் உங்களை அழிப்போமென்று சொல்லியமையால், நான் இரவு பகல் நாற்பது நாளும் அவர் திருமுன் பணிந்திருந்து, அவர் உங்களை அழிக்க வேண்டாமென்று கெஞ்சி விண்ணப்பம் செய்து, அவரை நோக்கி:
26 கடவுளாகிய ஆண்டவரே, நீர் உமது மகத்துவத்தால் மீட்டு வலியகையால் எகிப்திலிருந்து கொண்டு வந்த உம்முடைய மக்களையும் உடைமையையும் அழிக்காதிருப்பீராக.
27 ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்ற உம் ஊழியர்களை நினைத்தருளும். இம்மக்களின் மூர்க்கத்தனத்தையும் அக்கிரமத்தையும் பாதகத்தையும் பாராதீர்.
28 (அவர்களை அழித்தால்) நீர் எங்களை மீட்டுப் புறப்படச் செய்த நாட்டில் வாழ்வோர் நிந்தையாய்ப் பேசி; ஓகோ! ஆண்டவர் அவர்களுக்கு வாக்குறுதி செய்திருந்த நாட்டில் அவர்களைப் புகுவிக்க இயலாமற் போனபடியாலும், அவர்களை வெறுத்துப் பகைத்ததனாலும் அன்றோ, பாலைவனத்தில் அவர்களைக் கொன்றுபோடுமாறு எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்று சொல்லுவார்கள்.
29 ஆண்டவரே, உமது மிகுந்த வலிமையினாலும் ஓங்கிய கையாலும் புறப்படச் செய்த இவர்கள் உம்முடைய மக்களும் உடைமையுமாய் இருக்கிறார்கள் என்று (விண்ணப்பம் செய்தேன். )
அதிகாரம் 10
1 அக்காலத்தில் ஆண்டவர் என்னை நோக்கி: முந்தினவைகளைப்போல் நீ இரண்டு கற்பலகைகளைச் செதுக்கிக் கொண்டு மலையில் ஏறி நம்மிடம் வருவாய். ஒரு மரப்பெட்டகத்தையும் செய்வாயாக.
2 நீ முன் உடைத்துப் போட்ட பலகைகளில் எழுதியிருந்த வார்த்தைகளை நாம் இந்தப் பலகைகளிலும் எழுதுவோம். நீ அவைகளைப் பெட்டகத்திலே வைப்பாய் என்றார்.
3 அப்படியே நான் சேத்தீம் மரத்தால் ஒரு பெட்டகத்தைச் செய்து, முந்தினவைகளின் வடிவமாக இரண்டு பலகைகளை வெட்டிச் செதுக்கி அவைகளைக் கையிலே ஏந்திக்கொண்டு மலையில் ஏறினேன்.
4 மக்கள் சபை கூடியிருந்த நாளில் ஆண்டவர் மலையிலே நெருப்பின் நடுவில் நின்று உங்களுக்குத் திருவாக்கருளிய பத்துக் கட்டளைகளையும் தாம் முன்பு எழுதிய வண்ணமே இந்தப் பலகைகளிலும் எழுதி, அவைகளை என்னிடம் தந்தார்.
5 அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கி, பலகைகளை நான் செய்திருந்த பெட்டகத்தில் வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை இன்னும் அதிலே இருக்கின்றன.
6 அதன்பின் இஸ்ராயேல் மக்கள் ஜக்கான் புதல்வரைச் சேர்ந்த பெரோத்திலிருந்து பாளையம் பெயர்ந்து மோசராவுக்கு வந்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் புதல்வனாகிய எலெயஸார் அவருக்குப் பதிலாகத் தலைமைக்குரு ஆனார்.
7 அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டுக் காற்காதுக்கும், காற்காதிலிருந்து ஆறுகளும் வெள்ளங்களுமுள்ள நாடாகிய ஜெத்தெபத்தாவுக்கும் வந்து பாளையம் இறங்கினர்.
8 அக்காலத்தில் ஆண்டவருடைய உடன் படிக்கைக் கூடாரத்தைச் சுமப்பதற்கும், இந்நாள் வரையிலும் நடந்து வருவதுபோல் ஆண்டவர் திருமுன் நின்று அலுவலைச் செய்வதற்கும், அவருடைய பெயரால் ஆசீர் அளிப்பதற்கும் ஆண்டவர் லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
9 அக்காரணத்தால் லேவிக்குத் தன் சகோதரர்களோடு பங்குமில்லை; உரிமையுமில்லை. ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் அவனுக்குச் சொல்லியுள்ளபடி, ஆண்டவரே அவன் உடைமை.
10 நானோ முன்போல் நாற்பது நாளும் இரவு பகலாய் மலையிலே இருந்தேன். ஆண்டவர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டருளி உன்னை அழிக்காமல் விட்டார்.
11 அவர் என்னை நோக்கி: நாம் மக்களுக்கு அளிப்போமென்று அவர்களுடைய மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில், அவர்கள் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறு நீ போய் மக்களுக்கு முன்பாகச் சொல்வாய் என்று எனக்குத் திருவுளம்பற்றினார்.
12 இப்பொழுது, இஸ்ராயலே, நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய நெறியில் ஒழுகி, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொண்டு, உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் அவருக்கு ஊழியம் செய்து,
13 உனக்கு நன்மை பயக்கும் பொருட்டு நான் இன்று உனக்குக் கற்பிக்கிற ஆண்டவருடைய கட்டளைகளையும் ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டுமென்பதேயல்லாது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் வேறு எதனைக் கேட்கிறார் ?
14 இதோ வானமும், வானங்களின் வானமும், பூமியும் அதிலடங்கிய அனைத்தும் உன் கடவுளாகிய ஆண்டவரின் உடைமைகளே.
15 ஆயினும், ஆண்டவர் உன் மூதாதையரோடு ஒன்றித்து அவர்களை நேசித்தமையால், அவர்களுடைய சந்ததியாகிய உங்களை எல்லா மக்கள் கூட்டங்களுக்குள் தேர்ந்து கொண்டார். இது இந்நாளிலே எண்பிக்கப்பட்டதன்றோ ?
16 ஆகையால், நீங்கள் உங்கள் இதயத்தின் மிஞ்சின (ஆசை என்னும்) நுனித்தோலை விருத்தசேதனம் செய்து, உங்கள் தலையையும் இனி கடினப்படுத்தாதீர்கள்.
17 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்தாமே கடவுளர்க்கெல்லாம் கடவுளும், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரும், மகத்துவரும் வல்லவரும் பயங்கரமுள்ளவருமான கடவுளாய் இருக்கிறார். அவர் ஒருதலைச் சார்பாய் இருப்பவருமல்லர்; கையூட்டு வாங்குபவருமல்லர்.
18 அவர் அநாதைப் பிள்ளைக்கும் விதவைக்கும் நீதி நியாயம் வழங்குபவரும், அகதியை நேசித்து அவனுக்கு உணவும் உடையும் தந்தருளுபவருமாய் இருக்கிறார்.
19 நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியர்களாய் இருந்தீர்கள் அல்லவா ? ஆகையால், அகதிகளுக்கு அன்பு செய்யுங்கள்.
20 உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பயந்து, அவருக்கே பணிசெய்து, அவரோடு ஒன்றித்திருந்து, அவருடைய பெயரைக் கைக்கொண்டு ஆணையிடுவாயாக.
21 உன் புகழும் அவரே; உன் கடவுளும் அவரே; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை நடத்தினவரும் அவரே.
22 உன் மூதாதையர் எழுபது ஆட்களாய் எகிப்துக்குப் போனார்கள். ஆனால் இதோ கடவுளாகிய ஆண்டவர் உன்னை விண்மீன்களைப் போல் பெருகச் செய்துள்ளார்.
அதிகாரம் 11
1 ஆகையால், நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அன்பு செய்து, அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைகளையும் சட்டங்களையும் எக்காலமும் அனுசரிக்கக்கடவாய்.
2 உங்கள் புதல்வர்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய கண்டனைகளையும், அவருடைய மகத்துவங்களையும் வலுத்த கையையும், ஓங்கிய புயத்தையும் கண்டிராமையால், அவர்கள் அறியாதவைகளை நீங்களாவது இன்று ஆராய்ந்துபாருங்கள்.
3 அவர் எகிப்தின் நடுவிலே பரவோன் மன்னனுக்கும் அவனுடைய நாடு அனைத்திற்கும் செய்த அற்புத அதிசயங்களையும்,
4 எகிப்தியரின் படை அனைத்தும் குதிரைகளும் தேர்களும் உங்களைப் பின்தொடர்ந்து வந்தபோது செங்கடலின் திரைகள் எழும்பி அவர்களை அமிழ்த்தியதையும், இந்நாள்வரை ஆண்டவர் அவர்களை அழித்ததையும்,
5 நீங்கள் இவ்விடத்திற்கு வருமட்டும் அவர் உங்களுக்காகப் பாலைவனத்திலே செய்து வந்ததையும், நிலம் தன் வாயைத்திறந்து,
6 ரூபனின் மகனான எலியாபின் புதல்வர்களாகிய தாத்தான், அபிரோன் என்பவர்களையும், அவர்களுடைய வீட்டாரையும் கூடாரங்களையும் இஸ்ராயேல் நடுவில் அவர்களுக்கு உண்டாயிருந்த பொருட்கள் அனைத்தையும் விழுங்கினதையும்,
7 ஆண்டவர் செய்த இவை போன்ற மகத்தான செயல்கள் யாவையும் நீங்கள் கண்ணாலே கண்டிருக்கிறீர்கள் அல்லவா ?
8 (ஏன் அவ்வாறு செய்தாரென்றால்) நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற எல்லாச் சட்டங்களையும் நீங்கள் கைக்கொண்டொழுகவும், அதன்வழி நீங்கள் புகவிருக்கும் நாட்டை அடையவும் உரிமையாக்கிக் கொள்ளவும்,
9 ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் கொடுப்போமென்று ஆணையிட்டு, பாலும் தேனும் பொழியும் நாட்டில் நீங்கள் நீடித்து வாழும்படியாகவுமே அன்றோ ?
10 உண்மையிலே உரிமையாக்கிக் கொள்ளும்படி நீ புகவிருக்கும் நாடு நீ விட்டுவந்த எகிப்து நாட்டைப்போல் அன்று. அங்கே விதை விதைத்த பின்பு தோட்டங்களுக்கு வாய்க்கால்கள் வழியாய் நீர்பாய்ச்சுவது வழக்கம்.
11 இந்த நாடோ மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள நாடு. அதற்கு வானத்தின் மழையே வேண்டும்.
12 அதை உன் கடவுளாகிய ஆண்டவர் எப்பொழுதும் கவனித்து வருகிறார். ஆண்டின் தொடக்க முதல் இறுதிவரை அவருடைய கண்கள் அதன்மேல் வைக்கப்பட்டிருக்கின்றன.
13 ஆதலால், நான் உங்களுக்கு இன்று கற்பிக்கின்ற கட்டளைகட்கு நீங்கள் பணிந்தவர்களாய், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உங்கள் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் நேசித்து ஊழியம் செய்வீர்களாயின்,
14 அவர் உங்கள் நாட்டில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச் செய்வதனால், நீங்கள் தானியத்தையும் கொடிமுந்திரிப் பழச்சாற்றையும் எண்ணெயையும்,
15 மிருகவுயிர்களுக்காக உங்கள் வெளிகளில் புல்லையும் சம்பாதித்துக்கொண்டு, உண்டு நிறைவு கொள்வீர்கள்.
16 உங்கள் இதயம் வஞ்சிக்கப்பட்டு, நீங்கள் ஆண்டவருக்கு முதுகைக் காட்டிப் பிற தேவர்களுக்குப் பணிந்து ஆராதனை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்.
17 இல்லாவிடில் ஆண்டவர் கோபம் கொண்டு வானத்தை அடைத்து விட்டாலும் விடலாம். அப்பொழுது மாரி பெய்யாமலும் நிலம் பலன்தராமலும் இருக்க, ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் சிறந்த நாட்டிலிருந்து நீங்கள் விரைவில் அழிந்து போனாலும் போவீர்கள்.
18 நீங்கள் இவ்வாக்கியங்களை உங்கள் இதயங்களிலும் ஆன்மாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கைகளிலும் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவிலும் தொங்கவிடுங்கள்.
19 நீங்கள் வீட்டில் இருக்கையிலும் வழியில் நடக்கையிலும் படுக்கையிலும் எழும்புகையிலும் அவற்றைத் தியானிக்கச் சொல்லி, உங்கள் புதல்வர்களுக்குக் கற்பியுங்கள்.
20 அவற்றை உன் வீட்டு நிலைகளிலும் கதவுகளிலும் எழுதுவாயாக.
21 அவ்வாறு செய்து வந்தால், வானம் நிலத்தின்மேல் இருக்குந்தனையும் நீயும் உன் புதல்வர்களும், ஆண்டவர் உன் மூதாதையருக்குக் கொடுப்போமென்று ஆணையிட்டுச் சொல்லிய நாட்டில் நெடுநாள் வாழ்ந்திருப்பீர்கள்.
22 உள்ளபடி நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அன்பு செய்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்தொழுகி, அவரோடு ஒன்றித்து, நான் உங்களுக்குக் கற்பிக்கிற கட்டளைகளைக் கைக்கொண்டு அனுசரித்து வருவீர்களாயின்,
23 ஆண்டவர் உங்கள் முன்னிலையில் இந்த இனத்தாரையெல்லாம் சிதறடிப்பார். அப்போது நீங்கள் உங்களிலும் பெருத்த மக்களையும் பலத்த இனத்தாரையும் வயப்படுத்துவீர்கள்.
24 உங்கள் கால்கள் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாய் இருக்கும். பாலைவனமும் லீபானும் யுப்பிரத்தேஸ் மாநதியும் தொடங்கி மேற்கிலுள்ள கடல் வரைக்கும் உங்கள் எல்லைகள் விரியும்.
25 உங்களுக்கு முன் எதிர்த்து நிற்பார் ஒருவருமில்லை. கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தபடியே, உங்களால் உண்டாகும் அச்சத்தையும் திகிலையும், நீங்கள் காலாலே மிதக்கும் நாடெல்லாம், அவர் பரவச் செய்வார்.
26 இதோ இன்று நான் ஆசீரையும் சாபத்தையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன்.
27 இன்று உங்களுக்குக் கற்பிக்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவீர்களாயின் (உங்களுக்கு) ஆசீர் (வரும்).
28 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், இப்போது நான் உங்களுக்குக் காண்பிக்கிற வழியை விட்டு விலகி, நீங்கள் முன் அறிந்திராத பிற தேவர்களைப் பின்பற்றுவிர்களாயின், (உங்களுக்குச்) சாபம் (வரும்).
29 நீ குடியிருக்கப் போகிற நாட்டிலே ஆண்டவர் உன்னைப் புகுவித்த பிற்பாடு கரிஸிம் மலையின்மேல் ஆசீரையும் எபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.
30 அவை யோர்தானுக்கு அப்புறத்தில், சூரியன் மறையும் திசைக்குத் திரும்பும் வழிக்கு அப்பால், கானானையர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கல்கலாவுக்கு எதிரே இருக்கின்றன. கல்கலாவோ நெடுந்தூரம் பரந்து கிடக்கின்ற ஒரு பள்ளத்தாக்கின் புகுமுகத்தில் இருக்கிறது.
31 நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டிலே புகுந்து அதனை உரிமையாக்கிக்கொள்ளும் வண்ணம் யோர்தான் நதியைக் கடந்து போவீர்கள்; அதைக் கைப்பற்றி அதிலே குடியிருப்பீர்கள்.
32 இன்று நான் உங்கள் முன்னிலையில் எவ்விதச் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைகளையும் ஏற்படுத்துவேனோ அவைகளை நீங்கள் கைக்கொண்டு நிறைவேற்ற எச்சரிக்கையாய் இருக்கக் கடவீர்களாக.
அதிகாரம் 12
1 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில், நீங்கள் மண்ணில் வாழும் நாளெல்லாம் அதை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டு, நீங்கள் அனுசரிக்க வேண்டிய கட்டளைகளும் நீதிமுறைகளுமாவன:
2 நீங்கள் கைப்பற்றவிருக்கும் மக்கள் உயர்ந்த மலைகளின் மேலும் குன்றுகளின் மேலும் தழைத்திருக்கிற மரங்களின் கீழும் தங்கள் தேவர்களைத் தொழுதுவரும் இடங்களையெல்லாம் அழித்து,
3 அவர்களின் பலிபீடங்களையும் இடித்து, அவர்களின் விக்கிரகங்களையும் தகர்த்து சோலைகளையும் நெருப்பினால் சுட்டெரித்து, அவர்கள் சிலைகளையும் நொறுக்கி, அவ்விடங்களின் பெயர் முதலாய் இராமல் அவைகளை முற்றிலும் அழித்து விடுங்கள்.
4 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் காரியத்திலே (நீங்கள்) அவ்விதமாய்ச் செய்யாமல்,
5 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம்முடைய திருப்பெயர் விளங்கவும் தாம் தங்கியிருக்கவும் உங்கள் கோத்திரங்கள் எல்லாவற்றிலும் எந்த இடத்தைத் தேர்ந்து கொண்டிருப்பாரோ அந்த இடத்தையே நீங்கள் நாடியடைந்து,
6 அந்த இடத்திலேயே உங்கள் தகனம் முதலிய பலிகளையும், பத்திலொரு பகுதிகளையும், கைகளின் புதுப்பலன்களையும், நேர்ச்சிகளையும், காணிக்கைளையும், ஆடு மாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து செலுத்தி,
7 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் உண்டு, நீங்களும் உங்கள் வீட்டாரும் கையால் செய்தனவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு ஆசீர் அளித்த எல்லாவற்றிற்காகவும் அகமகிழ்வீர்கள்.
8 இங்கே இந்நாளில் நம்முள் அவனவன் தன் தன் பார்வைக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறதுபோல அங்கே நீங்கள் செய்யலாகாது.
9 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் இளைப்பாற்றியிலும் உரிமையிலும் நீங்கள் இன்னும் நுழையவில்லை.
10 ஆனால், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீங்கள் குடியேறின பின்பு, சுற்றிலுமிருக்கிற உங்கள் பகைவர்களின் தொல்லையற்று, யாதொரு அச்சமுமின்றி அந்த நாட்டில் வாழ்ந்திருப்பீர்கள்.
11 அப்பொழுது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு நீங்கள் போய், நான் உங்களுக்குக் கற்பித்துள்ளபடி உங்கள் முழுத்தகனங்களையும் பலிகளையும் பத்திலொரு பகுதிகளையும், உங்கள் கைகளின் புதுப்பலன்களையும், நீங்கள் ஆண்டவருக்கு நேர்ந்துகொள்ளும் காணிக்கைகளில் சிறந்த பகுதியையும் கொண்டுவந்து படைக்கக்கடவீர்கள்.
12 அங்கே நீங்களும், உங்கள் புதல்வர் புதல்வியர்களும், ஊழியர் ஊழியக்காரிகளும், உங்கள் நகரங்களில் குடியிருக்கிறவர்களும் உங்களுக்குள் வேறு பங்கும் உரிமையும் கொண்டிராதவர்களுமாகிய லேவியர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் விருந்துண்டு களிப்பீர்கள்.
13 நீ கண்ட இடமெல்லாம் முழுத் தகனப்பலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
14 ஆனால் உன் கோத்திரங்களுள் ஒன்றில், ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் மட்டுமே, உன் முழுத் தகனப்பலிகளை இட்டு, நான் உனக்குக் கட்டளையிடுகிற யாவையும் அங்கே செய்வாய்.
15 விருந்தாடுவதற்கு இறைச்சி உண்ண விரும்புவாயாயின், கடவுளாகிய உன் ஆண்டவர் உன் நகரங்களில் உனக்கு அருளியிருக்கும் ஆசீரின்படி நீ அடித்து உண்ணலாம். அந்த மிருகவுயிர் மாசுள்ளதாய் அல்லது ஊனமானதாயிருந்து தீட்டுப்பட்டதானாலும் சரி, பழுதற்ற அங்க நிறைவுள்ள தீட்டில்லா மிருகமானாலும் சரி, காட்டாட்டையும் கலைமானையும் உண்பதுபோல் அதை உண்ணலாம்.
16 இரத்தத்தை மட்டும் உண்ண வேண்டாம். அதைத் தண்ணீரைப்போலத் தரையில் ஊற்றிவிடக்கடவாய்.
17 உன் தானியத்திலும் கொடிமுந்திரிப் பழச்சாற்றிலும் எண்ணெயிலும் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகத்தையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நேர்ந்து கொள்ளும் எல்லா நேர்ச்சிகளையும், மனமொத்த காணிக்கைகளையும், உன் கைகளின் புதுப்பலன்களையும் நீ உன் நகரங்களில் உண்ணாமல்,
18 உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வனும் புதல்வியும், வேலைக்காரன் வேலைக்காரியும், நகரங்களிலிருக்கிற லேவியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அவற்றை உண்டு, நீ கையால் செய்யும் எல்லாவற்றைப் பற்றியும் உன் கடவுளாகிய ஆண்டவரின் பார்வையிலே மகிழ்ச்சி கொள்வாய்.
19 நீ மண்ணில் வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
20 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி உன் எல்லைகளை விரிவாக்கிய பின்னர், உன் மன விருப்பப்படி நீ இறைச்சியை உண்ண விரும்பும்போது,
21 உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்ட இடம் உனக்கு மிகத்தூரமாயிருந்தால், நான் உனக்குக் கற்பித்தவாறு உனக்குள்ள ஆடு மாடு முதலியவற்றில் எதையேனும் நீ அடித்து உன் நகரங்களிலேயே உன் விருப்பப்படி உண்ணலாம்.
22 காட்டு வெள்ளாட்டையும் கலைமானையும் உண்பதுபோல நீ அதனை உண்ணலாம். தீட்டுப் பட்டவனும் தீட்டுப்படாதவனும் சேர்ந்து அதை உண்ணலாம்.
23 இரத்தத்தை மட்டும் உண்ணாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. ஏனென்றால், மிருகவுயிரில் இரத்தம் உயிர்க்குப் பதிலாக இருப்பதனால், இறைச்சியோடு இரத்தத்தையும் உண்ணலாகாது.
24 ஆதலால், அதை நீ தண்ணீரைப் போலத் தரையில் ஊற்றக்கடவாய்.
25 நீ ஆண்டவருடைய முன்னிலையில் செம்மையானதைச் செய்வாயாகில், நீயும் உனக்குப் பின்வரும் பிள்ளைகளும் நன்றாய் இருப்பீர்கள்.
26 நீ ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த பொருட்களையும், நேர்ந்து கொண்ட நேர்ச்சிகளையும், ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்திற்குக் கொண்டுவந்து,
27 உன் காணிக்கைகளாகிய இறைச்சியையும் இரத்தத்தையும் உன் கடவுளாகிய ஆண்டவருடைய பலிபீடத்தின்மீது ஒப்புக்கொடுத்து பலிப்பிராணிகளின் இரத்தத்தைப் பீடத்தின்மேல் ஊற்றிவிட்டபின் இறைச்சியை உண்பாய்.
28 நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய பார்வைக்கு நலமும் விருப்பமுமானதைச் செய்திருப்பதனால் உனக்கும், உனக்குப்பின் வரும் உன் புதல்வருக்கும் எப்போதும் நன்றாயிருக்கும்பொருட்டு, இன்று உனக்கு நான் கற்பிக்கின்ற எல்லாவற்றையும் உற்றுக் கேட்டு அனுசரிக்கக்கடவாய்.
29 உரிமையாக்கிக் கொள்ளும்படி நீ புகவிருக்கிற நாட்டு மக்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கண்களுக்குமுன் அழித்து விடும் போதும், நீ அவர்களுடைய நாட்டைப் பிடித்து அதிலே குடியேறியிருக்கும் போதும்,
30 அம்மக்கள் உன் வருகையால்தானே அழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து நீ அவர்களைப் போல நடக்காதபடிக்கும்; அவர்கள் தங்கள் தேவர்களுக்குப் பணிவிடை செய்ததுபோல் நானும் செய்வேன் என்று சொல்லி அவர்களுடைய சமயச் சடங்குகள் எப்படிப் பட்டவை என்று விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாய் இருக்கக்கடவாய்.
31 அப்படிப் பட்ட சடங்குகளைச் செய்து நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஆராதனையில் உபயோகிக்காதே. ஏனென்றால், ஆண்டவருக்கு வெறுப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் புதல்வர்களையும் புதல்வியர்களையும் படைத்து நெருப்பிலே அவர்களைச் சுட்டெரித்தார்கள்.
32 நான் உனக்கு விதிக்கிற யாவையும் நீ ஆண்டவருக்காக செய். அதிலே கூட்டவேண்டியதோ குறைக்கவேண்டியதோ ஒன்றுமில்லை.
அதிகாரம் 13
1 உங்களுக்குள்ளே தீர்க்கதரிசியேனும் தான் கனவு கண்டதாகச் சாதிக்கிறவனேனும் தோன்றி, உங்களுக்கு யாதொரு அடையாளத்தை அல்லது அற்புதமான சில காரியத்தை முன்னறிவிக்கலாம்.
2 பிறகு அவன் சொல்லியபடி நடந்ததென்றால், அவன்: வா; நீ அறியாத வேறு தேவர்களைப் பின்பற்றி அவர்களுக்குப் பணி செய்வோம் என உனக்குச் சொல்லலாம்.
3 நீ அப்படிப்பட்ட தீர்க்கதரிசியேனும் கனவுக்காரனேனும் சொல்லுகிற பேச்சுக்களைக் கேளாதே. ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் நேசிக்கிறீர்களோ அல்லவோவென்று வெளிப்படையாய்த் தெரியும்படி அவர் உங்களைச் சோதிக்கிறார்.
4 நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே பின்பற்றி, அவருக்கு அஞ்சுகிறவர்களுமாய் அவருடைய கட்டளைகளை அனுசரிக்கிறவர்களுமாய், அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்கிறவர்களுமாய், அவருக்கு மட்டுமே ஊழியம் செய்து, அவரோடு ஒன்றித்திருக்கக் கடவீர்கள்.
5 அந்தத் தீர்க்கதரிசி அல்லது கனவுக்காரன் கொலை செய்யப்படக் கடவான். ஏனென்றால், உங்களை எகிப்து நாட்டிலிருந்து விடுதலை செய்தவரும், அடிமை வாழ்வினின்று மீட்டவருமாகிய உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து உன்னை நீக்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்த நெறியினின்று உன்னை வழுவச் செய்யவும் கருதி அவன் பிதற்றினவனாகையால், நீங்கள் அப்படிப்பட்ட தீமையினின்று விலகக்கடவீர்கள்.
6 உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனனேனும், உன் புதல்வன் புதல்வியேனும், உன் மார்புக்குரிய உன் மனைவியேனும், உன் ஆன்மாவைப்போல் நேசிக்கிற உன் நண்பனேனும் மறைவாய் வந்து: நீ வா; நீயும் உன் முன்னோரும் அறிந்திராத தேவர்களைத் தொழுவோம்.
7 அந்தத் தேவர்களே கிட்டத்திலும் தூரத்திலும் எங்கே பார்த்தாலும் நாட்டின் ஒரு முனைதொடங்கி மறு முனைமட்டும் எல்லா மக்களுக்கும் தேவர்கள் என்று சொல்லி (உன்னை அழைத்தாலும்),
8 நீ அவனுக்கு இணங்காதே; அவன் பேச்சுக்குச் செவிகொடுக்காதே; அவனைக் கருணைக் கண்ணாலே பார்த்து அவனைக் காக்க வேண்டுமென்று அவன்மேல் இரக்கம் வைக்காதே.
9 உடனே அவனைக் கொன்றுவிடு. முதலில் உன்கையும், பின்பு மக்களனைவரின் கைகளும் அவன் மேல் படவேண்டும்.
10 கல்லால் எறியப்பட்டு அவன் சாகக்கடவான். ஏனென்றால், அடிமை வாழ்வாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னை விடுதலை செய்த உன் கடவுளாகிய ஆண்டவரை நீ விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவப்பார்த்தான்.
11 அதனாலே இஸ்ராயேலர் யாவரும் அதைக் கேள்வியுற்று அஞ்சி இனிமேல் இப்படிப்பட்ட கொடுமையைச் செய்யாதிருப்பார்கள்.
12 உன் கடவுளாகிய ஆண்டவர் நீ வாழும்படி உனக்குக் கொடுக்கவிருக்கும் நகரங்கள் யாதொன்றில்,
13 பேலியாலின் மக்கள் புறப்பட்டுத் தங்கள் நகரத்தின் குடிகளை நோக்கி: நீங்கள் அறியாத வேறு தேவர்களுக்குப் பணிவிடை செய்யப்போகிறோம்; நீங்களும் வாருங்கள் என்று சொல்லி மேற்கூறிய நகரத்தாரை வஞ்சித்ததாக நீ கேள்விப்படுவாயேயாகில்,
14 நீ கவனத்தோடும் சுறுசுறுப்போடும் அதை விசாரித்துக் கேட்டு ஆராய்ந்த பிற்பாடு, அந்தச் செய்தி உண்மைதானென்றும், வெறுக்கத்தக்க அந்தச் செயல் உன் நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமுமானதென்றும் நீ காண்பாயாயின்,
15 உடனே நீ அந்த நகரத்துக் குடிகளைக் கருக்கு வாளினால் வெட்டி, அந்நகரத்தையும் அழித்து, அதிலுள்ள யாவற்றையும் அதில் இருக்கிற மிருகவுயிர்களையும் அழித்து,
16 (அதில் கொள்ளையிடப்பட்ட) சாமான் தட்டுமுட்டு முதலியவற்றை நடு வீதியிலே கூட்டிக் குவித்து, அவற்ளையும் நகரத்தையும்கூட சுட்டெரித்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக முழுவதும் நெருப்புக்கு இரையாகும்படியாகவும், அது இனி ஒருகாலும் கட்டப்படாமல் நித்திய கல்மேடாய் இருக்கும்படியாகவும் செய்யக்கடவாய்.
17 சபிக்கப்பட்ட பொருட்களில் யாதொன்றையும் நீ கையில் எடுக்காதே. அப்போதுதான் ஆண்டவர் தமது கடுங்கோபத்தைவிட்டு, உன்மேல் இரங்கி, உன் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொல்லியபடி உன்னை விருத்தியடையச் செய்வார்.
18 (இந்த வார்த்தை நிறைவேறுவதற்கு) நீ உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலிக்குச் செவி கொடுத்து, அவருடைய கட்டளைகளையெல்லாம் நீ கைக்கொண்டு அனுசரிக்க வேண்டும். உன் கடவுளாகிய ஆண்டவருடைய பார்வைக்கு விருப்பமானதை நீ செய்யும்படியாகவே நான் இன்று மேற்கூறிய கட்டளைகளை உனக்கு விதித்திருக்கிறேன்.
அதிகாரம் 14
1 நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய பிள்ளைகளாய் இருங்கள். ஒருவன் இறந்ததை முன்னிட்டு உங்கள் உடலை வெட்டவும் வேண்டாம்; தலைமயிரைச் சவரம் செய்யவும் வேண்டாம்.
2 ஏனென்றால், நீங்கள் கடவுளாகிய ஆண்டவரின் புனித மக்கள். உலகெங்குமுள்ள எல்லா இனத்திலும் உங்களையே ஆண்டவர் தமக்குச் சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார்.
3 தீட்டுள்ளதொன்றையும் நீங்கள் உண்ணலாகாது.
4 நீங்கள் உண்ணத்தகும் மிருகங்கள் எவையென்றால்: மாடு, செம்மறியாடு, வெள்ளாடு, மான்,
5 காட்டு வெள்ளாடு, கவரிமான், வருடைமான், பிகார்கு, ஒரிக்ஸ், ஒட்டைச்சிவிங்கி,
6 விரிகுளம்புள்ளனவும் அசைபோடுவனவுமான எல்லா மிருகங்களுமாகும்.
7 அசைபோடுவனவற்றிலும் இரண்டாகப் பிரிந்திராத குளம்புள்ள மிருகங்களை, உதாரணமாக: ஒட்டகம், முயல், கொகிலில் முதலியவற்றை நீங்கள் உண்ண வேண்டாம். அவை அசை போடுவது மெய்யே. ஆனால், அவைகளுக்கு விரிகுளம்பில்லையாதலால் அவைகள் உங்களுக்கு அசுத்தமாய் இருக்கும்.
8 பன்றிக்கு விரிகுளம்புள்ளதாயினும், அது அசை போடுவதில்லை. ஆதலால், பன்றி உங்களுக்கு அசுத்தமானது. அதன் இறைச்சியை உண்ணவும் கூடாது; அதன் செத்தவுடலைத் தொடவும் கூடாது.
9 தண்ணீரில் வாழ்கிற எல்லாவற்றிலும் எவற்றை நீங்கள் உண்ணலாமென்றால், சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம்.
10 சிறகுகளும் செதில்களும் இல்லாதவை அசுத்தமானவையாதலால் அவற்றை உண்ணலாகாது.
11 சுத்தமான எல்லாப் பறவைகளையும் நீங்கள் உண்ணலாம்.
12 அசுத்தமான பறவைகளையோ நீங்கள் உண்ணலாகாது. அவையாவன: ஆகிலப் புள், கிரீப்பென் என்னும் கமுகு,
13 கடலுராஞ்சி, இக்சியோன், இராசாளி, எல்லாவிதப் பருந்துகள்.,
14 எல்லாவிதக் காக்கைகள், தீப்பறவை, கூகை, வாருஸ்,
15 வல்லூறு முதலியவைகளும்,
16 கொக்கு, அன்னம், ஈபிஸ்,
17 மீன்கொத்தி, பொர்ப்பிரியன், ஆந்தை, எல்லா வித நாரைகளும் புலுவியர்களும்,
18 கொண்டலாத்தி, வெளவால் ஆகிய இவைகளுமேயாம்.
19 பறப்பனபற்றில் ஊர்வனயாவும் உங்களுக்கு அசுத்தமாய் இருக்கும்.
20 அவற்றை உண்ணலாகாது. சுத்தமான (பறவைகள்) யாவையும் நீங்கள் உண்ணலாம்.
21 தானாய் செத்த எதையும் உண்ணலாகாது. அதை உங்கள் வாயிலில் இருக்கிற அகதிக்குக் கொடுக்கலாம் அல்லது அவனுக்கு விற்கலாம். ஏனென்றால், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் புனித மக்கள். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்.
22 ஒவ்வொரு ஆண்டும் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு,
23 உன் கடவுளாகிய ஆண்டவர் பெயர் புகழப்படும்படிதான் தேர்ந்து கொண்டுள்ள இடத்திலே உன் தானியத்திலும் கொடி முந்திரிப்பழச் சாற்றிலும் எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவரது திருமுன் உண்டு, அதனால் எக்காலமும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக்கொள்.
24 ஆனால் (ஒருவேளை) உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடம் அதிகத் தூரமாயிருந்தாலும் இருக்கும்; அப்படியிருந்தால் அவர் உனக்கு ஆசீரளித்துத் தந்தருளிய பொருட்களையெல்லாம் கொண்டுபோவது கூடாத காரியமாயிருக்கும்.
25 எனவே, நீ எல்லாவற்றையும் விற்றுப் பணமாக்கி, அந்தப் பணத்தை உன்கையில் எடுத்துக் கொண்டு உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திற்குப் போய்,
26 அங்கே அந்தப் பணத்தைக் கொண்டு உன் விருப்பப்படி ஆடு மாடு முதலிய இறைச்சி வகையையும், கொடிமுந்திரிப் பழச்சாறு முதலிய மதுபானத்தையும், உன் ஆன்மா விரும்புகிற எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி, உன் வீட்டாரோடு உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையிலே விருந்தாடுவாய்.
27 உன் நகரத்தில் இருக்கிற லேவியனுக்கு உன்னோடு பங்கும் உரிமையும் இல்லாததனால், அவனை மறந்து விடாதே, எச்சரிக்கை!
28 மூன்றாம் ஆண்டுதோறும் அக்காலத்தில் உனக்கு வருகிற பலன் எல்லாவற்றிலும் வேறோரு பத்திலொரு பாகத்தைப் பிரித்து, அதை உன் வாயில்களில் பத்திரமாய் வைக்கக்கடவாய்.
29 அப்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கை செய்யும் வேலைகளிலெல்லாம் உனக்கு ஆசீரளிக்கும்படி, உன்னோடு பங்கும் உரிமையுமில்லாத லேவியனும், உன் வாயில்களில் இருக்கிற அகதியும் திக்கற்றவனும் விதவையும் வந்து உண்டு நிறைவு கொள்வார்கள்.
அதிகாரம் 15
1 ஏழாம் ஆண்டிலே (பொது) மன்னிப்பை அளிப்பாயாக. அதன் விவரமாவது:
2 தன் நண்பனுக்கு அல்லது அயலானுக்கு அல்லது சகோதரனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும் அந்தக் கடனைத் தண்டாமல் விட்டுவிடக் கடவான். ஏனென்றால், அது ஆண்டவர் ஏற்படுத்திய மன்னிப்பு ஆண்டு.
3 அகதியிடத்திலும் அந்நியனிடத்திலும் நீ கடனைத் தண்டலாம். ஆனால், உன் ஊரான் கையிலும், உன் உறவினர் கையிலும் அதைத் தண்ட உனக்கு அதிகாரம் இல்லை.
4 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குச் சொந்தமாய் அளிக்கவிருக்கும் நாட்டிலே உனக்கு ஆசீர் கிடைக்கும்படி உங்களுக்குள்ளே ஏழையும் இரந்துண்பவனும் இருத்தலாகாது.
5 ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, அவர் கற்பித்தனவும், நான் உனக்கு விதித்தனவுமாகிய எல்லாவற்றையும் நிறைவேற்றக்கடவாய். அப்பொழுது தாம் சொல்லியபடி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.
6 நீ பல மக்களுக்கும் கடன் கொடுப்பாயேயன்றி, எவனிடத்திலும் நீ கடன் வாங்கலாகாது. பல இனத்தாரையும் நீ ஆள்வாயேயன்றி, உன்னை எவனும் ஆளான்.
7 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கவிருக்கும் நாட்டில் உன் நகர வாயிலுக்குள்ளே வாழும் உன் சகோதரர்களில் ஒருவன் ஏழையாய்ப் போனால், நீ அவன் மட்டில் உன் இதயத்தைக் கடினப்படுத்தாமலும் உன் கையைச் சுருக்கிக் கொள்ளாமலும்,
8 அதை ஏழைக்குத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய தேவைக்கு ஏற்றாற்போல் கடன் கொடுப்பாயாக.
9 நெறிகெட்ட ஒரு நினைவு முதலாய் உன்னிடத்தே புகாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. அது என்னவென்றால்: மன்னிப்பு ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையிலுள்ளது என்று கருதி ஏழையான உன் சகோதரனுக்கு நீ கடன் கொடுக்க மறுத்தால், அவன் உன்னைக் குறித்து ஆண்டவரிடம் முறையிடுவான் என்றும், அதனால் உனக்குப் பாவம் வருமென்றும் நெஞ்சிலே எண்ணுவதும், அவனுக்குக் கடன் கொடுக்க உனக்கு மனமில்லாதபடியால் அவனுடைய தேவையைக் கண்டறிந்திருந்தும் அறியாதவன்போல் பாசாங்கு செய்வதுமாம். (இப்படிப்பட்ட நினைவை மனத்தில் கொண்டிராதே.)
10 அவனுக்குக் கண்டிப்பாய்க் கொடுக்கவேண்டும். நீ கையால் செய்வன எல்லாற்றிலும் எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை ஆசீர்வதிக்கத் தக்கதாக நீ உன் சகோதரனுடைய நெருக்கிடையில் செய்யும் உதவியைக் கபடமில்லாமல் செய்யக்கடவாய்.
11 நீ வாழும் நாட்டிலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை. ஆகையால், உன் நாட்டிலே வறுமையுற்றவனும் ஏழையுமாகிய உன் சகோதரனுக்குத் தாராளமாய்க் கை திறக்க வேண்டுமென்று நான் உனக்குக் கற்பிக்கிறேன்.
12 உன் சகோதரனாகிய எபிரேய ஆடவனேனும் எபிரேய பெண்ணேனும் உனக்கு விலைப்பட்டார்களாயின், அவர்கள் ஆறாண்டு உன்னிடம் வேலை செய்து பிற்பாடு ஏழாம் ஆண்டில் அவர்களை விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும்.
13 இப்படி விடுதலை செய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பாமல்,
14 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்தளித்த உன் மந்தையிலும் களத்திலும் ஆலையிலுமிருந்து கொஞ்சம் எடுத்து வழிச் செலவுக்கு இனாமாகக் கொடுத்தனுப்ப வேண்டும்.
15 நீயும் எகிப்து நாட்டிலே அடிமையாய் இருந்தாயெனும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை மீட்டாரென்றும் நினைத்துக்கொள். ஆதலால் நான் இன்று இந்தக் கட்டளையை உனக்கு விதிக்கிறேன்.
16 ஆனால், அவன் உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதனாலும், உன்னிடத்தில் இருப்பது தனக்கு நன்றென்று உணர்வதனாலும்: உன்னை விட்டுப் போகேன் என்பானாயின்,
17 நீ ஒரு குத்தூசியை எடுத்து உன் வீட்டு வாயிலில் நின்று கொண்டு அவனுடைய காதைக் குத்துவாய். பின்பு அவன் என்றுமே உனக்கு ஊழியனாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்வாய்.
18 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கை வேலைகளிலெல்லாம் உனக்கு ஆசீரளிக்குமாறு அப்படிப் பட்டவர்களை நீ விடுதலை செய்து அனுப்பி விட்ட பின்பு: அவர்கள் ஆறாண்டும் கூலிவாங்க என்ன வேலை செய்தார்கள் என்று அவர்களை அவமதித்து விலக்க வேண்டாம்.
19 உன் ஆடுமாடுகளின் ஆண் தலையீற்றையெல்லாம் உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புனிதமாக்குவாய். உன் மாட்டின் தலையீற்றை வேலைக்கு வைக்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்திரியாமலும் இருப்பாயாக.
20 ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திலே ஆண்டுதோறும், நீயும் உன் குடும்பத்தாருமாய் உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மேற்கூறியவற்றை உண்ணக்கடவீர்கள்.
21 ஆனால், தலையீற்றுக்கு யாதொரு பழுது இருக்குமாயின், (உதாரணமாக) அது முடம் அல்லது குருடு அல்லது எதிலேயும் உருச்சிதைவுள்ளதாய் இருந்தால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அதைப் பலியிட வேண்டாம்.
22 அப்படிப்பட்டதை உன் நகர வாயில்களினுள்ளே, வெளிமான் கலைமான்களை உண்பது போல் உண்ணக் கடவாய். தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் இதை உண்ணலாம். ஆயினும்,
23 அவற்றின் இரத்தத்தை உண்ணாமல், தண்ணீரைப்போல் அதைத் தரையில் ஊற்றி விடக்கடவாய்.
அதிகாரம் 16
1 இளவேனிற் காலத்து முதல் மாதமாகிய முதற்பலன்களின் மாதத்தைக் கவனக்தோடு கொண்டாடக்கடவாய். அதில் உன் ஆண்டவருக்குப் புகழ்ச்சியாகப் பாஸ்காவைக் கொண்டாடுவாய். ஏனென்றால் இந்த மாதத்தின் இரவு வேளையில்தான் ஆண்டவர் உன்னை எகிப்தினின்று புறப்படச் செய்தார்.
2 அப்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் தம்முடைய பெயர் விளங்கும்படி தாம் தேர்ந்துகொண்ட இடத்திலே உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்காவுக்கடுத்த பலிகளாகிய ஆடுமாடுகளைச் செலுத்துவாயாக.
3 நீ எகிப்து நாட்டிலிருந்து பயங்கரத்துடன் புறப்பட்டபடியால் நீ எகிப்தை விட்ட நாளை உன் வாழ்நாளெல்லாம் மறவாமல் நினைக்கும்படி, அந்தத் திருவிழாவில் புளித்த அப்பத்தை உண்ணாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரையிலும் உண்ணக்கடவாய்.
4 ஏழுநாள் வரையிலும் உன் எல்லா எல்லைகளுக்குள்ளேயும் புளிப்பு காணப்படலாகாது. நீ முதல்நாள் மாலையில் ஒப்புக்கொடுத்த பலியின் இறைச்சியில் ஏதேனும் காலைவரையில் வைக்கவும் வேண்டாம்.
5 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நகரங்களிலெல்லாம் நீ பாஸ்காவை அடிக்காமல்,
6 உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய மாலை நேரத்தில்மட்டும் அதை அடிக்கக் கடவாய்.
7 உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திலே அதைச் சமைத்து உண்டு, விடியற்காலத்தில் எழுந்து உன் கூடாரங்களுக்குத் திரும்பிப் போவாய்.
8 ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பங்களை உண்பாய். ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாகச் சபை கூடும் திருநாளாகையால், அன்று (விலக்கபட்ட) வேலை செய்யலாகாது.
9 விளைச்சலில் அரிவாளை வைத்த நாள் முதற்கொண்டு நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொண்டு,
10 அவை முடிந்த பின்பு உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாகக் கிழமைகள் என்னும் திருவழாவைக் கொண்டாடி, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசீர் அளிக்கும்வண்ணம் உன் கைக்கு நேர்ந்த பொருளை அவருக்கு மனமொத்த காணிக்கையாகப் படைக்கக்டவாய்.
11 உன் கடுவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திலே நீயும், உன் புதல்வன் புதல்வியும், உன் வேலைக்காரன் வேலைக்காரியும், உன் ஊரினுள் இருக்கிற லேவியரும், உன்னுடன் வாழ்ந்துவரும் அகதியும் திக்கற்றவனும், விதவைகளும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னியில் விருந்துண்டு,
12 நீ எகிப்திலே அடிமையாய் இருந்ததை நினைவுகூர்ந்து, கற்பிக்கபட்ட கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவாய்.
13 நீ உன் களத்தின் பலன்களையும் ஆலையின் பலன்களையும் ஆலையின் பலன்கைளையும் சேகரித்தபின் கூடாரத் திருவிழாவை ஏழுநாள் வரையிலும் கொண்டாடி,
14 திருவிழாவில் நீயும், உன் புதல்வன் புதல்வியும், உன் வேலைக்காரன் வேலைக்காரியும், உன் வாயில்களில் இருக்கிற லேவியனும் அகதியும், தாயில்லாப் பிள்ளையும், விதவைகளும் அகமகிழ்ந்து விருந்தாடுவீர்கள்.
15 ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திலே உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக ஏழுநாள் திருவிழாவைக் கொண்டாடுவாய். அப்படிச் செய்வாயாயின், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலங்களிலும் உன் கைவேலைகள் அனைத்திலும் உனக்கு ஆசீர் அளிப்பார். ஆதலால் நீ வளமாய் வாழ்வாய்.
16 ஆண்டில் மூன்று முறை, அதாவது: புளிப்பில்லா அப்பத் திருவிழாவிலும், கிழமைகளின் திருவிழாவிலும், கூடாரத் திருவிழாவிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கெண்டிருக்கும் இடத்திலே அவருடைய முன்னிலையில் வந்து நிற்கக்கடவார்கள். அவர்கள் வெறுங்கையோடு அவருடைய முன்னிலையில் வராமல்,
17 கடவுளாகிய ஆண்டவர் அருளிய ஆசீருக்கு ஏற்ப, அவனவன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கை கொண்டுவரக்கடவான்.
18 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கோத்திரந்தோறும் உனக்குக் கொடுக்கவிருக்கும் எல்லா நகரவாயில்களிலும், நீதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்தக்கடவாய். அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நீதித்தீர்ப்புச் செய்யக் கடவார்கள்.
19 அவர்கள் ஒருதலைச் சார்பு கொள்ளாதிருப்பார்களாக. கண்ணோட்டம் கொள்ளாமலும் கையூட்டு வாங்காமலும் இருப்பார்களாக. கையூட்டு ஞானிகளுடைய கண்களைக் குருடாக்கி, நீதிமான்களுடைய வார்த்தைகளையும் புரட்டிவிடும்.
20 நீ வாழும் படியாகவும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படியாகவும் நீதியை நியாயமாய்ப் பின்பற்றுவாயாக.
21 உன் கடவுளாகிய ஆண்டவருடைய பீடத்தண்டையில் யாதொரு சோலையையும் அமைக்காதே. யாதொரு மரத்தையும் நடாதே.
22 (உனக்கு) விக்கிரகத்தைச் செய்யவும் நிறுத்தவும் துணியாதே. அவ்விதமான காரியங்களை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
அதிகாரம் 17
1 உருச்சிதைவும் யாதொரு பழுதுமுள்ள ஆட்டையேனும் மாட்டையேனும் உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடலாகாது. அது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு வெறுப்பைத் தரும்.
2 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நகரங்களின் வாயில்களுள் யாதொன்றில், ஓர் ஆடவனேனும் பெண்ணேனும் உன் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் அக்கிரமம் செய்து அவருடைய உடன்படிக்கையை மீறி,
3 என் கட்டளைக்கு விரோதமாய்ச் சென்று பிற தேவர்களையேனும், சந்திரன் சூரியன் முதலிய வானசேனைகளையேனும் ஆராதிக்கிறதாகக் கண்டுபிடிக்கப்பட்டால்,
4 அது உனக்கு அறிவிக்கப்பட்டபோது நீ கவனமாய்க் கேட்டு விசாரிக்கக்கடவாய். பிறகு, அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ராயேலில் நடந்தேறியது மெய்யென்றும் நீ கண்டாயானால்,
5 மிகப்பாதகமான அக்கிரமத்தைக் கட்டிக்கொண்ட அந்த ஆடவனையேனும் பெண்ணையேனும் உன் நகர வாயில்களுக்கு (வெளியே) கூட்டிக்கொண்டு போவாய். அப்படிப்பட்டவர்கள் கல்லால் எறியப்படுவார்கள்.
6 சாவுக்கு உரியவனானவனுடைய குற்றம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் தெளிவிக்கப்பட்டபின்னரே, அவன் கொலை செய்யப்படக்கடவான். ஒரே சாட்சியுடைய வாக்கினாலே எவனும் கொலை செய்யப்படலாகாது.
7 அவனை கொலை செய்யும்போது சாட்சிகளுடைய கை முன்னும், மற்றுமுள்ள மக்களுடைய கைபின்னும், அவன்மேல் இருக்கவேண்டும். இப்படிச் செய்தே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
8 இரத்தப் பழிகளைக் குறித்தும், வழக்குகளைக் குறித்தும், தொழு நோயைக் குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயம் தீர்க்க வேண்டிய கடினமான காரியத்தில் உனக்குச் சந்தேகம் உண்டென்றும், நீதிபதிகளுடைய எண்ணங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவென்றும் கண்டால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய்,
9 லேவி சந்ததியாராகிய குருக்களிடமும் அக்காலத்தில் உள்ள நீதிபதிகளிடமும் வந்து அவர்களுடைய ஆலோசனையைக் கேட்கக்கடவாய். அவர்கள் நியாயமான தீர்பை உனக்கு உணர்த்துவார்கள்.
10 ஆண்டவர் தேர்ந்து தந்திருக்கும் பதவியிலே வீற்றிருக்கும் தலைவர்கள் கடவுளின் சட்டப்படி உனக்குச் சொல்லி உணர்த்தும்வண்ணமே நீ கேட்டு, அந்தப்படியெல்லாம் செய்து,
11 அவர்களுடைய ஆலோசனைக்கிணங்கி, வலப்புறம் இடப்புறம் சாயாமல் நடக்கக்கடவாய்.
12 செருக்குற்று உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அக்காலம் ஊழியம் செய்யும் குருவினுடைய கட்டளைக்கும் தலைவனுடைய தீர்புக்கும் அடங்காமல் மீறுகிறவன் சாகக்கடவான். இப்படித்தீமையை இஸ்ராயேலிலிருந்து விலக்கக்கடவாய்.
13 அப்பொழுது மக்கள் எல்லாரும் கேள்வியுற்றுப் பயப்டுவதால், இனி இடும்பு செய்ய ஒருவனும் துணியமாட்டான்.
14 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ புகுந்து அதை உரிமையாக்கிக் கொண்டு அதில் குடியேறின பின்பு, நீ: உன்னைச் சுற்றிலும் இருக்கிற எல்லா இனத்தாரையும்போல நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பாயாகில்,
15 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரரிலிருந்து தேர்ந்தெடுப்பவனை நியமிக்கக்கடவாய். உன் சகோதரருக்குள் ஒருவனை நீ அரசனாக வைக்கலாமேயொழிய அந்நியனைக் கண்டிப்பாய் வைக்கலாகாது.
16 அவன் அரியணை ஏறின பின்பு, பல குதிரைகளைச் சம்பாதித்ததனாலும், திரளான குதிரை வீரரைச் சேர்த்ததனாலும் செருக்குற்று, மக்களை எகிப்துக்குத் திருப்பிக் கொண்டுபோகவே கூடாது. ஏனென்றால்: வந்த வழியாய் நீங்கள் ஒருகாலும் திரும்பிப் போகவேண்டாம் என்று ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
17 அரசன் தன் மனத்தைக் கவரத் தக்க பல பெண்களைக் கொண்டிருக்கவும் வேண்டாம். வெள்ளியும் பொன்னும் அளவு மீறிச் சேர்க்கவும் வேண்டாம்.
18 அவன் தன் அரியணையின் மேல் வீற்றிருக்கும்போது உப ஆகமம் என்னும் இந்த நீதி நூலின் ஒரு பிரதியை லேவி கோத்திரத்தாராகிய குருக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரதி தானே எழுதக்கடவான்.
19 அந்தப் பிரதியை, அவன் தன்னிடத்தே வைத்துக்கெண்டு, கடவுளாகிய தன் ஆண்டவருக்கு அஞ்சவும், மறையில் கற்பிக்கப்பட்ட அவருடைய நீதி வாக்கியங்களையும் சடங்கு முறைகளையும் அனுசரிக்கவும் வேண்டுமென்று கண்டுணர்ந்து, மேற்படி நூலை நாள்தோறும் வாசிக்கக்கடவான்.
20 அவன் இறுமாப்படைந்து தன் சகோதரருக்கு மேலாகத்தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், வலப்புறம் இடப்புறம் சாயாமலும் இருப்பானாயின், இஸ்ராயேலின் நடுவே அவனும் அவன் புதல்வர்களும் நெடுநாள் ஆட்சிபுரிவார்கள்.
அதிகாரம் 18
1 குருக்களுக்கும் லேவியர்களுக்கும் இவர்களுடைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்ராயேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லை. ஏனென்றால், ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளையும் காணிக்கைகளையுமே அவர்கள் உண்ண வேண்டும்.
2 அவர்கள் தங்கள் சகோதரருடைய உரிமைகளில் வேறுயாதொன்றையும் அடையார்கள். உள்ளபடி, ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லிய வண்ணம், ஆண்டவரே அவர்களுடைய உடைமை.
3 மக்களும் பலியைச் செலுத்த வருபவர்களும் குருக்களுக்குக் கொடுக்க வேண்டிய பகுதி என்னவென்றால்: அவர்கள் பலியிடும் ஆடுமாடுகளின் முன்னந் தொடையையும் இரைப்பையையும் குருவுக்குக் கொடுப்பார்கள்.
4 தானியத்திலும் கொடிமுந்திரிப் பழச் சாற்றிலும் எண்ணெயிலும் முதற்பலன்களையும், கத்தரித்த ஆட்டுமயிரில் ஒரு பாகத்தையும் அவர்களுக்குச் செலுத்துவார்கள்.
5 ஏனென்றால், அவனும் அவன் புதல்வர்களும் என்றும் ஆண்டவருடைய பெயராலே அவருடைய முன்னிலையில் நின்று இறைபணி செய்யும்படி, அவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவரால் எல்லாக் கோத்திரங்களுக்குள்ளேயும் தேர்ந்து கொள்ளப்பட்டார்கள்.
6 இஸ்ராயேலின் எவ்விடத்திலுமுள்ள உங்கள் நகரங்களுள் யாதொன்றிலே குடியிருந்த ஒரு லேவியன் அவ்வூரை விட்டு, ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு இசைவோடு வருவானாயின்,
7 அங்கே அக்காலம் ஆண்டவருடைய முன்னிலையில் இறைபணி செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல அவனும் கடவுளாகிய ஆண்டவருடைய பெயராலே இறைபணி செய்வான்.
8 தன் ஊரிலே தந்தையின் சொத்தில் வரவேண்டியதை அவன் அனுபவிப்பதுமன்றி, மற்றவரைப்போல் உணவிற்காகத் தன் பாகத்தையும் சரியாகப் பெற்றுக் கொள்வான்.
9 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ புகுந்த பின்பு, அந்த மக்களுடைய வெறுக்கத்தக்க நடத்தைகைளைப் பின்பற்றத் துணியாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
10 தன் புதல்வனையேனும் புதல்வியையேனும் சுத்திகரிப்புக்கென்று தீயைக்கடக்கச் செய்பவனும், குறி சொல்லுகிறவர்களிடம் அறிவுரை கேட்பவனும், கனவுகளையும் சகுனங்களையும் நம்புகிறவனும், சூனியக்காரனும் உங்களுக்குள்ளே இருத்தலாகாது.
11 மந்திரவாதியும் சன்னதக்காரனும் மாயவித்தைகாரனும், இறந்தவர்களிடம் குறி கேட்கிறவனும் (உங்களுக்குள்ளே) இருத்தலாகாது.
12 ஏனென்றால் ஆண்டவர் இவற்றையெல்லாம் வெறுக்கிறார். இப்படிப்பட்ட பாதகங்களின் பொருட்டு அவர் உன் முன்னிலையில் அவர்களை அழித்தொழிப்பார்.
13 உன் கடவுளாகிய ஆண்டவருக்குமுன் நீ குற்றமில்லாத உத்தமனாய் இருக்கக்கடவாய்.
14 நீ யாருடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இருக்கிறாயோ அவர்கள் சகுனம் பார்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் நம்புகிறவர்கள். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவரால் வேறு விதமான கல்வி கற்றிருக்கிறாய்.
15 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் இனத்தினின்றும் உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப்போல் இறைவாக்கினரை உனக்காக ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவி கொடுப்பாயாக.
16 ஓரேபிலே சபைக் கூட்டம் கூடிய நாளில் நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்து: நான் சாகாதபடிக்கு என் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலியை இனி நான் கேளாமலும் இந்தப் பெரிய நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று வேண்டிக்கொண்டபோது,
17 ஆண்டவர் என்னை நோக்கி: இவர்கள் சொன்னதெல்லாம் சரியே.
18 உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரரின் நடுவிலிருந்து தோன்றச் செய்து, நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்போம். நாம் கற்பிப்பதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார்.
19 நமது பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நாம் தண்டிப்போம்.
20 ஆனால், நாம் சொல்லும்படி கட்டளையிடாத வார்த்தைகளை நமது பெயராலே எந்தத் தீர்க்கதரியாவது சாதித்துச் சொல்லத்துணிவானாகில் அல்லது வேறு தேவர்களின் பெயராலே பேசுவானாகில் சாகக்கடவான் என்று திருவுளம்பற்றினார்.
21 நீயோ: ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எதன் மூலம் அறிவேன் என்று உன் மனத்துள்ளே சொல்லலாம்.
22 இதை அடையாளமாக வைத்துக்கொள். ஒரு தீர்க்கதரிசி ஆண்டவருடைய பெயராலே ஒரு காரியம் சொல்கிறான்; அது நிறைவேறாமல் போனால், அதை ஆண்டவர் சொல்லவில்லை; அந்தத் தீர்க்கதரிசி தன் அகந்தையினாலே அதைத் தானே உண்டாக்கிச் சொன்னான். ஆதலால், அதை நீ (கவனிக்கவும் வேண்டாம்;) அதற்கு அஞ்சவும் வேண்டாம்.
அதிகாரம் 19
1 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டின் மக்களைத் துரத்தி விட்டு, நீ அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டு அவர்களுடைய நகரங்களிலும் வீடுகளிலும் குடியேறும்போது,
2 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாக்கிக் கொள்ளும்படி கொடுத்த நாட்டின் நடுவில் உனக்காக மூன்று நகரங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்.
3 கொலை செய்தவன் சுற்றுப்புறத்திலிருந்து தப்பியோடிப்போய்ச் சரணடையத்தக்கதாக (ஆண்டவர் உனக்கு உரிமையாக அளிக்கும்) நாட்டை மூன்று பாகங்களாகப் பிரிக்கக்கடவாய். மேலும் (அந்த அடைக்கல நகரங்களுக்கு) வழியை அமைக்கக் கவனமாய் இரு.
4 கொலை செய்து அங்கே ஓடிப்போய் தன் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டியவன் யாரெனில்: நேற்றும் முந்தின நாளும் பகைத்திராத பிறனை அறியாமல் கொன்று விட்டவனாம்.
5 (உதாரணமாக) ஒருவன் யாதொரு கபடுமில்லாமல் மற்றொருவனோடுகூட விறகு வெட்டக்காட்டில் போய் மரத்தை வெட்டும்பொழுது கோடாரி கை நழுவியாவது, இரும்புக்கம்பை விட்டுக் கழன்றாவது துணைவன்மேல் பட்டதனால் அவன் இறந்து போனால், இப்படிக் கொலை செய்தவன் அந்த நகரங்களுள் ஒன்றில் ஓடிப்போய்த் தன் உயிரைக் காப்பாற்றுவான்.
6 இல்லா விட்டால், கொலை செய்யப்பட்டவனுடைய உறவினன் வயிற்றெரிச்சல் கொண்டு (பழிவாங்க) அவனைப் பின்தொடரும்போது வழி அதிகத் தூரமாய் இருக்கும்மாயின் அவனைப் பிடித்துக் கொன்றுவிடுவான். உள்ளபடி அவன் இறந்தவனை முன்னே பகைக்கவில்லை என்பது தெளிவாகையால், அவன்மேல் சாவுக்கு உகந்த குற்றம் ஒன்றும் இல்லை.
7 இதனால் அந்த மூன்று நகரங்களும் ஒன்றுக்கொன்று சரிசமமான தொலைவில் இருக்க வேண்டுமென்று நாம் உனக்குக் கட்டளையிடுகிறோம்.
8 நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அனுசரித்து, இன்று நாம் உனக்குக் கற்பிக்கிற கட்டளைகளின்படி நடந்து, ஆண்டவரிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளில் எந்நாளும் நடந்து ஒழுகுவாயாக.
9 எனின், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டபடி உன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொடுப்போம் என்று அவர்களுக்குச் சொல்லிய நாடு முழுவதையும் உனக்குத் தந்தருள்வார். பிறகு முன்குறிக்கப்பட்ட மூன்று நகரங்களோடு இன்னும் மூன்று நகரங்களைச் சேர்த்து, அடைக்கல நகரங்களின் எண்ணிக்கையை இருமடங்காக்கு.
10 அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாகக் கொடுக்கும் மண்ணில் குற்றமில்லா இரத்தம் சிந்தப்படாதிருக்கும். எனவே இரத்தப்பழி உன்னைச் சாராது.
11 ஆனால், ஒருவன் தன் அயலானைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கியிருந்து, எழும்பி அவன்மேல் விழுந்து சாகடித்த பின்பு, அவன் முன்சொல்லப்பட்ட நகரங்களுள் ஒன்றில் ஒதுங்கினால்,
12 அவனுடைய நகரத்துப் பெரியோர்கள் அவனை அடைக்கல நகரத்தினின்று பிடித்து வரும்படி ஆள் அனுப்பி, அவன் சாகும்படிக்குக் கொலை செய்யப்பட்டவனுடைய உறவினன் கையில் அவனை ஒப்புவிப்பார்கள். இவன் அவனைச் சாகடிப்பான்.
13 உனது நன்மைக்காக நீ அவனுக்கு இரங்க வேண்டாம். குற்றமில்லாத இரத்தப் பழி இஸ்ராயேலில் இல்லாதபடிக்கு அவ்விதம் செய்யக்கடவாய்.
14 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய்க் கொடுக்கும் நாட்டில் உனக்குக் கிடைக்கும் சொத்திலே முன்னோர்கள் வைத்த எல்லைக்குறிக் கற்களை நீ எடுக்கவும் ஒதுக்கிப் போடவும் ஆகாது.
15 ஒருவன் எவ்விதக் குற்றமோ தீச்செயலோ செய்திருப்பினும், ஒரே சாட்சியைக் கேட்டு நியாயம் தீர்க்கக்கூடாது. ஆனால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கினாலே காரியம் தெளிவாக வேண்டும்.
16 ஒருவன்மேல் குற்றம் சாட்ட ஒரு பொய்ச் சாட்சி வந்து அவனுக்கு விரோதமாய்க் குற்றம் சுமத்தினால்,
17 வழக்காடுகிற இருவரும் அந்நாளில் இருக்கும் குருக்களுடையவும் நடுவர்களுடையவும் முன்னிலையில் ஆண்டவர் முன்னிலையில் வந்து நிற்பார்களாக.
18 அப்பொழுது நடுவர்கள் நன்றாய் விசாரணை செய்த பின்பு, பொய்ச்சாட்சி தன் சகோதரன் மீது சொல்லியது பொய் என்று கண்டுபிடித்தார்களாயின்,
19 அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தவண்ணமே அவனுக்குச் செய்யக் கடவார்கள். அவ்விதமாய் உன் நடுவிலிருந்து தீமையை விலக்குவாயாக.
20 மற்றவர்களும், அதைக் கேள்விப்பட்டு அஞ்சி அப்படிப்பட்ட தீச்செயல்களைச் செய்யத் துணியார்கள்.
21 நீ அவனுக்கு இரங்கவேண்டாம். ஆனால், உயிருக்கு உயிரையும், கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும் பழிவாங்கு.
அதிகாரம் 20
1 உன் பகைவர்களுக்கு எதிராக நீ போருக்குப் போகும்போது, அவர்களுடைய குதிரைகளையும் தேர்களையும் உன்னிலும் பெரிய கூட்டமாகிய போர்வீரர்களையும் கண்டாலும் அவர்களுக்கு அஞ்சாதே. ஏனென்றால், உன்னை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
2 மேலும், போர் தொடங்கு முன் குரு படை முகத்தில் வந்து நின்று மக்களை நோக்கி:
3 இஸ்ராயேலரே, கேளுங்கள். இன்று உங்கள் பகைவர்களுடன் போர் செய்ய இருக்கிறீர்கள். உங்கள் இதயம் சோரவும் வேண்டாம்; அவர்களைப் பார்த்து நீங்கள் அஞ்சவும் முதுகு காட்டவும் மனம் கலங்கவும் வேண்டாம்.
4 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் நடுவில் இருக்கிறார். அவரே உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி உங்களோடு நின்று உங்கள் பக்கத்தில் போராடுவார் என்பார்.
5 அன்றியும் படைத்தலைவர்கள் தத்தம் படை முகத்திலே நின்று உரத்த குரலில் போர்வீரர்களை நோக்கி: புது வீட்டைக் கட்டி அதை நேர்ச்சி செய்யாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான். ஏனென்றால், அவன் போர்க்களத்திலே விழுந்து இறந்தால் வேறொருவன் அவன் வீட்டை நேர்ச்சி செய்ய வேண்டியதாகும்.
6 கொடிமுந்திரித் தோட்டத்தை நட்டு அதன் பழங்களை யாரும் உண்ணத்தக்கதாகத் தான் செய்யவேண்டியதை இன்னும் செய்யாதவன் ஒருவேளை போர்க்களத்திலே இறந்தால் வேறொருவன் அவனுக்குப் பதிலாக அந்த வேலையைச் செய்யவேண்டியதாகும். (அதனால் மேற்சொல்லிய தோட்டத்திற்கு உரியவன்) தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவன்.
7 ஒரு பெண்ணுக்குப் பரிசம் கொடுத்து இன்னும் அவளை மணந்து கொள்ளாதவன் போரில் இறந்தால் வேறொருவன் அவளை மணந்துகொள்ள வேண்டியதாகும்; (அதனால்) அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான் என்றும்,
8 இவைகளைச் சொல்லிய பிற்பாடு படைத்தலைவர்கள் மீண்டும் அவர்களை நோக்கி: உங்களுள் பயந்தவனும் திடமற்றவனுமாய் இருக்கிறவன் தன் சகோதரர்களுடைய மனவூக்கம் சோர்ந்து போவதற்கு ஒருவேளை காரணமாய் இருக்கலாம். (அதனால்) அவனும் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான் என்றும் சொல்லக்கடவார்கள்.
9 படைத்தலைவர்கள் மக்களோடு பேசி முடிந்த பிற்பாடு தத்தம் படைவீரர்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துவார்கள்.
10 நீ ஒரு நகரத்தின்மீது போர் தொடுக்க நெருங்கும்போது முதல் அந்த நகரத்தாருக்கு (ஆளனுப்பிச்) சமாதானம் கூற வேண்டும்.
11 அவர்கள் உடன்பட்டுத் தங்கள் வாயிலைத் திறந்தார்களாயின், அதிலுள்ள மக்ககௌல்லாரும் அடைக்கலம் பெறுவார்கள். ஆயினும், அவர்கள் உனக்குத் திறை கொடுப்பவர்களாகி உனக்கு ஊழியம் செய்யக்கடவார்கள்.
12 அவர்கள் உன்னோடு சமாதானம் செய்துகொள்ள இசையாமல் உன்னோடு போர் புரியத் தொடங்கினால், நீ அந்நகரை முற்றுகையிட்டு,
13 உன் கடவுளாகிய ஆண்டவர் அதை உன் கைவயமாக்கிய பின்பு அதிலுள்ள ஆடவர் எல்லாரையும் கருக்குவாளினால் வெட்டி,
14 பெண்களையும் குழந்தைகளையும் மிருகவுயிர்களையும் மட்டும் உயிரோடு வைத்து, நகரத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, அவற்றை உன் போர்வீரருக்குள்ளே பங்கிட்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த பகைவருடைய சொத்துகளை அனுபவிப்பாய்.
15 நீ உரிமையாக்கிக் கொள்ளவேண்டிய நகரங்கள் தவிர உனக்கு வெகு தூரத்திலிருக்கிற எல்லா நகரங்களுக்கும் இவ்விதமே செய்வாய்.
16 உனக்கு உரிமையாகக் கொடுக்கப்படும் நகரங்களிலோ ஒருவரையும் உயிரோடு விட்டு வைக்காமல்,
17 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்தபடியே, ஏத்தையர், அமோறையர் கானானையர், பெறேசையர், ஏவையர், ஜெபுசேயர் என்பவர்களையும் கருக்குவாளினால் வெட்டக்கடவாய்.
18 (இப்படிச் செய்யவேண்டிய காரணம் என்னவென்றால்) அவர்களை உயிரோடிருக்க விட்டால், அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து வந்த பற்பலவித வெறுப்புக்குள்ளான செயல்களை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள்; அதனாலே நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு விரோதமாய்க் குற்றவாளிகளாவீர்கள்.
19 நீ ஒரு நகரத்தை நெடுநாளாய் முற்றுகையிட்டு, அதைப் பிடிக்கும் பொருட்டுச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்போது, நீ கோடரியை ஓங்கிப் பழமரங்களை வெட்டவும் வேண்டாம்; சுற்றுப்புறத்திலுள்ள பலவகை மரங்களை அழிக்கவும் வேண்டாம். அது மரமேயொழிய வேறன்று. அது உன் பகைவரோடு சேர்ந்துகொண்டு உன்மீது போருக்கு வராதன்றோ ?
20 ஆனால், உண்ணத்தக்க கனிதராத காட்டு மரங்களோ, அவை பற்பல விதமாகப் பயன்படக் கூடுமென்று காண்பாயேல், அவற்றை வெட்டிப் போர்க் கருவிகளைச் செய்து, உனக்கு அடங்காமல் எதிராக நிற்கும் அந்த நகரம் பிடிபடுமட்டும் அந்த போர்க் கருவிகளைப் பயன்படுத்துவாய்.
அதிகாரம் 21
1 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டில் கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனுடைய பிணம் வெளியிலே கிடக்கக் கண்டு, கொலை செய்தவன் இன்னனென்று தெரியாத விடத்து,
2 பெரியோர்களும் நீதிபதிகளும் வந்து, பிணம் கிடக்கிற இடத்துக்கும், சுற்றிலுமுள்ள அந்தந்த நகரங்களுக்கும் எவ்வளவு தூரமென்று அளப்பார்களாக.
3 இப்படி அளந்து, எந்த நகரம் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மிக அண்மை என்று நிச்சயித்துக் கொண்டார்களோ அந்த நகரத்துப் பெரியோர்கள், நுகத்தடியில் இன்னும் பிணைக்கப்படாததும் கலப்பையால் நிலத்தை உழாததுமான ஒரு கிடாரியை மந்தையிலிருந்து தேர்ந்து கொண்டு,
4 உழுது விதையாத கல்லும் கரடுமான ஒரு பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோய் அதன் தலையை அங்கே வெட்டக்கடவார்கள்.
5 அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் தமக்குப் பணி புரியவும், தமது பெயரால் ஆசிமொழி சொல்லவும், எல்லா வழக்கையும் சுத்தம் அசுத்தம் முதலிய யாவையும் தங்கள் வாக்கினாலே தீர்ப்பிடவும் தாமே தேர்ந்துகொண்ட அந்த லேவி புதல்வராகிய குருக்கள் அவ்விடம் வருவார்கள்.
6 (அவர்களோடு கூட) அந்நகரத்துப் பெரியார்களும் கொல்லப்பட்டவன் அருகில் வந்து, பள்ளத்தாக்கிலே கழுத்து அறுக்கப்பட்ட கிடாரியின் மீது தங்கள் கைளைக் கழுவி:
7 எங்கள் கைகள் இவ்விரத்தத்தைச் சிந்தினதுமில்லை; எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.
8 ஆண்டவரே, நீர் மீட்டுக் காப்பாற்றிய இஸ்ராயேலர் ஆகிய உம் மக்கள்மீது இரக்கமாயிரும். இஸ்ராயேலர் ஆகிய உம்மக்கள் நடுவில் குற்றமில்லா இரத்தப் பழியைச் சுமத்தாதேயும் என்று வேண்டக்கடவார்கள். அப்பொழுது இரத்தப் பழி அவர்கள் மீது இராமல் நீங்கிவிடும்.
9 நீயோ ஆண்டவருடைய கட்டளைப்படி செய்த பின்பு, குற்றமற்றவனுடைய இரத்தப்பழிக்கு உட்படாதவனாய் இருப்பாய்.
10 நீ உன் பகைவர்களோடு போர் செய்யப் போயிருக்க, உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கைவயப்படுத்தியதனால் அவர்களை நீ சிறைப்பிடித்து வந்து,
11 சிறைப்பட்டவர்களில் வடிவழகியான ஒரு பெண்ணைக் கண்டு அவள்மீது காதல் கொண்டு அவளை மணந்துகொள்ள விரும்புவாயாயின்,
12 அவளை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம். அவளோ தன் தலைமயிரைக் கத்தரித்துத் தன் நகரங்களையும் களைந்து,
13 தான் பிடிபட்டபோது அணிந்திருந்த ஆடையை நீக்கி, உன் வீட்டில் உட்கார்ந்தவளாய் ஒருமாதம் வரையிலும் தன் தாய் தந்தையரை நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். பிறகு நீ அவளோடு படுத்துக்கொண்டபின் அவளை உனக்கு மனைவி ஆக்கிக் கொள்வாய்.
14 அதன் பின்பு நீ அவள்மேல் வைத்திருந்த அன்பு அற்றுப்போகுமாயின், அவளைத் தன்னுரிமையோடு போகவிடு. நீ அவளைத் தாழ்வுபடுத்தினபடியால், அவளை விலைக்கு விற்கவும் வேண்டாம்; உன் அதிகாரத்தால் அவளைத் துன்புறத்துதலும் ஆகாது.
15 இரண்டு மனைவிகளையுடையவன் ஒருத்தியின் மேல் விருப்பமாகவும் மற்றொருத்தியின்மேல் வெறுப்பாகவும் இருக்கிறான். இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள். வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் மூத்த மகனாய் இருப்பானாயின்,
16 அவன் தனக்குண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிட வேண்டிய நாளில், வெறுக்கப்பட்டவளுடைய புதல்வனுக்கு மூத்த மகனுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்ட மனைவியின் புதல்வனுக்கு அதைக் கண்டிப்பாய்க் கொடுக்கலாகாது.
17 அவன் வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த புதல்வனையே தன் மூத்த மகனாகக்கொண்டு, தன் சொத்துகளிலெல்லாம் இரட்டையான பாகம் அவனுக்குக் கொடுக்கவேண்டு. உள்ளபடி அவன் தந்தைக்கு முதற்புதல்வனாயிருக்கிறதனால் மூத்த மகனுக்குள்ள உரிமை அவனுக்கே உரியதாம்.
18 தாய் தந்தையர் சொல்லைக் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும் அவர்களுக்கு அடங்காமலும் போகிற முரடனும் அகந்தையுள்ளவனுமான ஒரு பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
19 தாயும் தந்தையும் அவனைப் பிடித்து, அந்த நகரத்தின் பெரியோரிடத்தில் நீதி மன்றத்திற்குக் கூட்டிக்கொண்டு போய்:
20 எங்கள் மகனாகிய இவன் குறும்பும் அகந்தையுமுள்ளவனாய் எங்கள் அறிவுரைகளைக் கேளாமல் தள்ளிக் கெட்ட நடத்தையுள்ளவனாயிருக்கிறான்; பேருண்டிக்காரனும் குடியனுமாய் இருக்கிறான் என்று சொல்வார்கள்.
21 அப்பொழுது அவன் சாகும்படி அந்நகரத்தில் வாழ்வோர் எல்லாரும் அவன்மேல் கல்லெறிவார்கள். இப்படியே தீமையை உங்கள் நடுவிலே நின்று விலக்கிவிடவே, இஸ்ராயேலர் எல்லாரும் அதைக் கேள்வியுற்று அஞ்சுவார்கள்.
22 ஒரு மனிதன் சாவுக்கு உரிய பாவத்தைக் கட்டிக் கொண்டான்: அவன் கொலை செய்யப்படவேண்டுமென்று தீர்ப்பு உண்டாகித் தூக்குமரத்திலே தூக்கப்பட்ட பிற்பாடு,
23 இரவிலே அவன் பிணம் மரத்திலே தொங்கி நிற்கக் கூடாது. அதே நாளில் அவனை அடக்கம் செய்யவேண்டும். ஏனென்றால், மரத்திலே தொங்குகிறவன் கடவுளாலே சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கும் நாட்டைத் தீட்டுப்படுத்துதல் கண்டிப்பாய் ஆகாது.
அதிகாரம் 22
1 உன் சகோதரனுடைய ஆடேனும் மாடேனும் வழிதப்பி அலைவதை நீ கண்டால், அப்பால் செல்லாமல் அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
2 உன் சகோதரன் உன் உறவு முறையானாய் இராமலும், அறிமுகமாய் இராமலும் இருந்தபோதிலும் நீ அவற்றை உன் வீட்டுக்குக் கொண்டுபோய், அவற்றை உன் சகோதரன் தேடி வருமட்டும் உன்னிடத்திலே வைத்திருந்து அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
3 அப்படியே அவன் கழுதையைக் குறித்தும், ஆடையைக் குறித்தும், அவனிடத்திலிருந்து காணாமற்போன எந்தப் பொருளைக் குறித்தும் செய்யக் கடவாய். நீ அவைகளில் எதையேனும் கண்டுபிடிப்பாயாயின், காணாதவன் போல்: எனக்கென்ன என்று அதை விட்டுப்போகலாகாது.
4 உன் சகோதரனுடைய கழுதையேனும் மாடேனும் வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டாயாயின், அதைக் காணாதவன் போல் விட்டுப்போகாமல், அவனோடு சேர்ந்து அதைத் தூக்கி எடுக்கக்கடவாய்.
5 ஆடவரின் உடைகளைப் பெண்களும் பெண்களின் உடைகளை ஆடவரும் அணியலாகாது. அப்படிச் செய்கிறவர்களைக் கடவுள் வெறுக்கிறார்.
6 நீ வழியில் நடந்துபோக, ஒரு மரத்திலேனும் தரையிலேனும் ஒரு குருவிக்கூடு தென்பட்டது. அப்பபொழுது குஞ்சுகளின் மேல் அல்லது முட்டைகளின் மேல் தாய் அடைகாத்துக் கொண்டு இருக்குமாயின், நீ குஞ்சுகளோடு தாயையும் பிடிக்கலாகாது.
7 ஆனால், தாயைப் போகவிட்டுக் குஞ்சுகளை முட்டும் எடுத்துக்கொண்டு போகலாம். அப்படிச் செய்தால் நீ நன்றாய் இருப்பாய்; உன் வாழ்நாட்களும் நீடித்திருக்கும்.
8 நீ புது வீட்டை கட்டினால், சிலவேளை ஒருவன் மேல்மாடியிலிருந்து கால் நழுவிக் கீழே விழுந்தால், இரத்தப்பழி உன் வீட்டையே சாரும். அப்படி நிகழாவண்ணம், உன்மேல் பாவம் வராதபடிக்கு வீட்டு மாடியைச் சுற்றிலும் கைபிடிச்சுவரைக் கட்டவேண்டும்.
9 உன் கொடிமுந்திரித் தோட்டத்திலே வேறு விதையை விதைக்காதே. விதைத்தால், நீ விதைத்தவைகளின் பயிரும் கொடிமுந்திரித் தோட்டத்தின், பயிரும் கடவுளுக்கே நேர்ச்சி செய்ய வேண்டியதாகும்.
10 மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது,
11 ஆட்டுமயிரும் சணல்நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்திக் கொள்ளலாகாது.
12 நீ அணிந்து கொள்கிற உன் மேற்போர்வையின் நான்கு விளிம்புகளிலும் தொங்கல்களை அமைத்துக் கொள்வாயாக.
13 ஒரு பெண்ணை மணந்து கொண்ட ஒருவன் பிறகு அவளை வெறுத்து:
14 நான் அந்தப் பெண்ணை மணம் புரிந்து அவளிடம் மணவுறவு கொண்டபோது அவள் கன்னியல்லள் என்று கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அவள்மீது பொல்லாத அவதூறான காரியங்களைத் தூற்றி அவளைத் தள்ளிவைக்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பானாயின்,
15 அவளுடைய தந்தையும் தாயும் நகரவாயிலிலுள்ள பெரியோர்களிடம் அவளைக் கூட்டிக்கொண்டுபோய், அவளுடைய கன்னிமையின் அடையாளங்களைக் காண்பிக்க ஆயத்தமாய் இருப்பார்கள்.
16 என் மகளை இவனுக்கு மனைவியாகக் கொடுத்தேன். இவன் அவள்மேல் வெறுப்புக் கொண்டமையால்:
17 நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் மிகக்கேடான அவதூறு சாற்றியிருக்கிறான். என் மகளுடைய கன்னிமையின் சான்று இங்கே இருக்கிறது, பாருங்கள் என்று சொல்லி, (அவளுடைய) ஆடையை நகரப் பெரியார்களின் முன்பாக விரித்துக் காட்டுவான்.
18 அப்பொழுது அந்நகரப் பெரியார்கள் அந்த மனிதனைப் பிடித்துக் கசையால் அடிப்பார்கள்.
19 அவன் இஸ்ராயேலில் ஒரு கன்னியை மிகக்கேடான அவதூறு செய்தமையால், பெரியோர்களின் தீர்ப்புப்படி அவன் பெண்ணின் தந்தைக்கு நூறு சீக்கில் வெள்ளியை அபராதம் செலுத்த வேண்டியது மன்றி, அவளைத் தன் மனைவியாகவே வைத்துக்கொண்டு, தன் உயிருள்ளளவும் அவளைத் தள்ளிவிடவும் கூடாது.
20 ஆனால், அந்தப் பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்னும் காரியம் மெய்யானால்,
21 (பெரியோர்கள்) அந்தப் பெண்ணைத் தன் தந்தையின் வீட்டு வாயிலினின்று துரத்திவிட, அவள் தன் தந்தையின் வீட்டிலே விபசாரம் செய்ததனால் இஸ்ராயேலில் மதிகெட்ட அக்கிரமஞ்செய்தாளென்று அந்நகர மனிதர் அவளைக் கல்லாலெறிந்து கொல்லக்கடவார்கள். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு மணஉறவு கொண்டால், விபசாரனும் விபசாரியுமாகிய அவ்விருவரும் சாவார்கள். இப்படியே தீமையை இஸ்ராயேலினின்று விலக்கக்கடவாய்.
23 கன்னிப்பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு அவளோடு உறவு கொண்டால்,
24 அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிட்டுக் கூப்பிடாததனாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கெடுத்ததனாலும், இருவரும் அந்த நகரத்து வாயிலுக்கு முன் கொண்டுபோகப்பட்ட பின்பு கால்லாலெறியப்பட்டுச் சாகக்கடவார்கள். இப்படியே நீ தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாய்.
25 ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை மற்றொருவன் வெளியே கண்டு வலுவந்தமாய்ப் பிடித்து அவளோடு உறவு கொண்டால் இவன் மட்டும் சாகக்கடவான்.
26 அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்யலாகாது. அவள்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை. உள்ளபடி ஒரு பாதகன் தன் சகோதரன்மேல் விழுந்து அவனுடைய உயிரை வாங்கினால் எவ்விதமோ, அவ்விதமே இந்தப் பெண்ணுக்கும் நேர்ந்தது.
27 அவள் வெளியே துணையில்லாமல் இருந்தாள். அவள் கூக்குரலிட்டும், அவளை விடுவிப்பார் ஒருவருமில்லை.
28 ஒருவருக்கும் நியமிக்கப்படாத கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு வலுவந்தமாய்ப் பிடித்து அவளோடு உறவுகொண்டான். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, காரியம் வழக்குக்கு வந்தால்,
29 அவளோடு உறவுகொண்ட மனிதன் ஐம்பது சீக்கல் வெள்ளியைப் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கக்கடவான். அவன் அவளைக் கெடுத்தனால், அவளை மனைவியாகக் கொண்டு, உயிர் உள்ளளவும் அவளைத் தள்ளி விடலாகாது.
30 ஒருவனும் தன் தந்தையின் மனைவியைச் சேரலாகாது, அவளுடைய மறைவிடத்தை வெளிப்படுத்தலும் ஆகாது.
அதிகாரம் 23
1 விதை அடிக்கப்பட்டவனும், கோசம் அறுக்கப்பட்டவனும், சிசினம் சேதிக்கப்பட்டவனும் ஆண்டவருடைய சபையில் புகுதலாகாது.
2 மம்ஸர் என்னப்பட்ட வேசி மகனும் பத்தாம் தலைமுறை வரை அவன் சந்ததியும் ஆண்டவருடைய சபையிலே புகுதலாகாது.
3 அம்மோனியனும் மோவாபியனும் பத்தாம் தலைமுறைக்குப் பிறகு முதலாய் என்றுமே ஆண்டவருடைய சபையினுள் வரக்கூடாது.
4 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அவர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் கொணர்ந்து உங்களுக்கு எதிர்கொண்டுவரவில்லை. மேலும், அவர்கள் உன்னைச் சபிக்கும்படி சீரிய மெசொப்பொத்தாமியாவின் ஊரானும் பேயோரின் புதல்வனுமான பாலாம் என்பவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அவனை வருவித்தார்கள்.
5 உன் கடவுளாகிய ஆண்டவரோ பாலாமுக்குச் செவிகொடுக்க மனமின்றி உன்மேல் அன்பாய் இருந்து, அந்தச் சாபத்தை உனக்கு ஆசீராக மாற்றிவிட்டார்.
6 நீ உன் வாழ்நாள் முழுவதும் என்றென்றும் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டாம்; அவர்களுடைய நன்மையைத் தேடவும் வேண்டாம்.
7 உன் சகோதரனாய் இருப்பதினாலே ஏதோமியனை நீ வெறுக்கலாகாது. நீ எகிப்து நாட்டில் அகதியாய் இருந்ததை நினைத்து, எகிப்தியனை வெறுக்கவேண்டாம்.
8 அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் மூன்றாந் தலைமுறையில் ஆண்டவருடைய சபைக்கு உட்படலாம்.
9 நீ உன் பகைவருக்கு விரோதமாய்ப் போர் செய்யப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகி இருப்பாயாக.
10 இரவில் வரும் கெட்ட கனவினாலே தீட்டுப்பட்ட ஒருவன் உங்களிடையே இருந்தால், அவன் பாளையத்துக்கு வெளியே போய்,
11 மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறைந்த பின்பு மட்டுமே பாளையத்துக்குள் வரக்கடவான்.
12 மலம் கழிக்கத்தக்க ஓர் இடம் பாளையத்திற்குப் புறம்பே உனக்கு இருக்கவேண்டும்.
13 கச்சையில் ஒரு சிறுகோலை வைத்திருக்கக்கடவாய். அதைக் கொண்டு வட்டமாக மண்ணைத் தோண்டி மலசலங்கழித்து, பிறகு உன்னிடமிருந்து கழிந்துபோனதை அந்த மண்ணினாலே மூடிவிடக்கடவாய்.
14 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காப்பாற்றுவதற்கும், உன் பகைவர்களை உன் கைவயப்படுத்துவதற்கும் பாளையத்தினுள் உலாவுகின்றமையால், அவர் உன் பாளையத்தில் யாதொரு அசுத்தமும் காணாதபடிக்குத் தூய்மையாகவே இருக்கவேண்டும். இல்லாவிடில், அவர் உன்னை விட்டுப் போனாலும் போகலாம்.
15 உன் அடைக்கலத்தைத் தேடிவந்த அடிமையை அவனுடைய தலைவன் கையில் ஒப்புவியாதே.
16 அவன் உனக்குள்ள இடங்களில் தனக்கு வசதியான ஒன்றைத் தேர்ந்து கொண்டு, உன் நகரங்களுள் ஒன்றிலே உன்னோடு இருப்பான். நீ அவனைத் துன்புறுத்தாதே.
17 இஸ்ராயேலின் புதல்வியரிலே விலைமகளேனும், புதல்வரிலே விலைமகனேனும் இருத்தலாகாது.
18 வேசிகள் வாங்கின வேசிப் பணத்தையும் நாயை விற்று வாங்கின பணத்தையும், எவ்வித நேர்ச்சியினாலும் உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஆலயத்திலே நீ ஒப்புக்கொடாதே. அவை இரண்டையும் உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
19 கடனாகக் கொடுத்த பணத்துக்கும் தானியத்துக்கும் வேறு எந்தப் பொருளுக்கும் உன் சகோதரன் கையில் வட்டி வாங்கக் கூடாது.
20 அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். நீ உரிமையாக்கிக் கௌ;ளவிருக்கும் நாட்டிலே உன் கடவுளாகிய ஆண்டவர் உன் வேலையிலெல்லாம் உனக்கு ஆசீர் அளிக்கும் வண்ணம், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காமல், தேவையானவைகளை அவனுக்குக் கடனாகக் கொடுப்பாயாக.
21 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சி செய்திருப்பாயாயின், அதனைச் செலுத்தத் தாமதியாதே. ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் அதை நிச்சயமாய் உன்னிடம் கேட்பார். தாமதம் செய்தால் அது உனக்குப் பாவமாகும்.
22 நீ நேர்ச்சி செய்யாதிருந்தால், அப்பொழுது உன்மேல் பாவம் இல்லை.
23 ஆனால், நீ வாயினால் சொன்னதை எப்படியும் நிறைவேற்ற வேண்டும். உன் கடவுளாகிய ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுத்தபடியே செய்யவேண்டும். ஏனேன்றால் நீ உன் விருப்பப்படியல்லவா நேர்ச்சி செய்து கொண்டாய் ?
24 நீ பிறனுடைய கொடிமுந்திரித் தோட்டத்திலே புகுந்தபின்பு உன் ஆசை தீரப் பழங்களை உண்ணலாம். ஆனால், அவற்றில் ஒன்றும் எடுத்துக்கொண்டு போகலாகாது.
25 உன் நண்பனுடைய விளைநிலத்தில் புகுந்தால் நீ கதிர்களைக் கொய்து கையால் கசக்கி உண்ணலாம். ஆனால், கதிர்களை அரிவாள் கொண்டு அறுக்கக்கூடாது.
அதிகாரம் 24
1 ஒரு மனிதன் ஒரு பெண்ணை மணம்புரிந்து கொண்டபின்பு, அவளிடம் வெட்கத்திற்குரிய தீயகுணத்தைக் கண்டு அவளை வெறுத்தால், அவன் தள்ளுதலின் பத்திரம் எழுதி அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனப்பி விடலாம்.
2 அவள் அப்படி வெளியே போனபின்பு வேறொருவனுக்கு மனைவியானாள்.
3 இவனும் அவளை வெறுத்துத் தள்ளுபடிப் பத்திரம் எழுதி அவளை அனுப்பி விட்டாலாவது, தானே இறந்துபோனாலாவது,
4 முதல் கணவன் அவளைத் திரும்பவும் மனைவியாகச் சேர்ந்துக் கொள்ளலாகாது. காரணம்: அவள் தீட்டுப்பட்டு, ஆண்டவருடைய முன்னிலையில் அருவருப்புக்குரியவள். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய்க் கொடுக்கவிருக்கும் நாட்டின் மேல் பாவம் வரச் செய்யலாகாது.
5 ஒரு மனிதன் ஒரு பெண்ணைப் புதிதாய் மணந்திருந்தால், அவன் போருக்குப் போகாமலும், யாதொரு பொது வேலையில் ஈடுபடாமலும் ஓராண்டளவு வீட்டில் சுதந்திரமாக தன் மனைவியோடு மகிழ்ந்திருப்பானாக.
6 நீ திரிகையின் மேற் கல்லையாவது அடிக்கல்லையாவது ஈடாக வாங்கலாகாது. அது அவன் உயிரை ஈடாக வாங்குவதுபோலாகும்.
7 தன் சகோதரராகிய இஸ்ராயேல் மக்களில் ஒருவனை ஏமாற்றிப் பணத்துக்கு விற்று அந்த விலையை வாங்கினவன் கையும் பணமுமாகப் பிடிபட்டால், அவன் கொலை செய்யப்பட வேண்டும். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விவக்கக்கடவாய்.
8 (தொற்று நோயாகிய) தொழு நோய்க்கு உள்ளாகாதபடிக்கு நீ எச்சரிக்கையாய் இரு. லேவி வம்சத்தாராகிய குருக்கள் என் கட்டளைப்படி உனக்கு எவ்வித அறிவுரை சொல்லுவார்களோ அவ்விதமாய் நடக்க நீ கருத்தாய் இரு.
9 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே ஆண்டவர் மரியாளுக்குச் செய்ததை நினைத்துக் கொள்ளுங்கள்.
10 பிறனுக்கு நீ ஏதேனும் கடனாகக் கொடுத்ததைத் திரும்பக் கேட்கும்போது, ஈடு வாங்கி எடுத்துக்கொள்ளும்படி வீட்டினுள் புக வேண்டாம். நீ வெளியே நிற்பாய்.
11 அவன் தனக்குண்டான அடகை வெளியே உன்னிடம் கொண்டு வருவானாக.
12 அவன் வறியவனாயின் நீ அவனது அடகை வாங்கி இரவில் வைத்துக் கொள்ளாமல்,
13 சூரியன் மறையுமுன்னே அதை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும். அதனால் அவன் தன் ஆடையை விரித்துப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிபான். அப்படிச் செய்வது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முன்பாக உனக்கு நலமாய் இருக்கும்.
14 உன் சகோதரரிலும் உன் நாட்டு வாயில்களிலுள்ள அந்நியரிலும் ஏழை எளியவனான கூலிக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காமல் ஒடுக்காதே.
15 அவன் வேலை செய்த நாளில்தானே சூரியன் மறையுமுன்னே அவனது கூலியை அவனுக்குச் செலுத்திவிடக் கடவாய். ஏனென்றால், அவன் ஏழையாய் இருப்பதனால், அது அவன் பிழைப்புக்குத் தேவையாயிருக்கிறது. நீ அதைக் கொடாத நிலையில் அவன் உன்னைக் குறித்து ஆண்டவரை நோக்கி முறையிடுவான். அது உனக்குப் பாவமாகவே அமையும்.
16 மக்களுக்குப் பதிலாய்ப் பெற்றோர்களேனும், பெற்றோர்களுக்குப் பதிலாய் மக்களேனும் கொலை செய்யப்பட வேண்டாம். அவனவன் செய்த பாவத்திற்காக அவனவனே கொலை செய்யப்டுவான்.
17 அந்நியனுடைய நியாயத்தையும் தாய் தந்தையரில்லாத பிள்ளையின் நியாயத்தையும் நீ புரட்டாமலும், விதவையின் ஆடையை ஈடாக வாங்காமலும் இருப்பாய்.
18 நீ எகிப்தில் அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அவ்விடத்தினின்று விடுதலை செய்ததையும் நினைத்துக் கொள். இதுகாரியத்தில் நீ செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுவது என்னவென்றால்:
19 உன் விளைச்சலை அறுவடை செய்யும்போது உன் வயலிலே ஓர் அரிக்கட்டை மறதியாய் விட்டு வந்திருப்பாயேல், நீ அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைப் பாடுகளிலெல்லாம் உனக்கு ஆசீர் அளிக்கும் பொருட்டு அதை அகதிக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டு வைக்கக்கடவாய்.
20 நீ ஒலிவ மரங்களை உலுப்பிக் கொட்டைகளை எடுத்துக்கொண்டு போன பிற்பாடு உதிராமல் நிற்பவற்றைப் பறிக்கும்படி நீ திரும்பப்போக வேண்டாம். அவற்றை அகதிக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டு வைக்கக்கடவாய்.
21 உன் கொடிமுந்திரிப் பழங்களை வெட்டிய பிறகு மிஞ்சி நிற்கும் பழங்களை வெட்டிவரும்படி திரும்பப் போகாதே. அவற்றை அகதிக்கும் தாய் தந்தயரில்லாத பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டுவைப்பாயாக.
22 நீயும் எகிப்திலே அடிமையாய் இருந்தாயென்று நினைத்துக்கொள். அதுபற்றி இவ்விதமாய்ச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
அதிகாரம் 25
1 சிலருக்குள் வழக்கு உண்டாகி அவர்கள் நடுவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தால், நடுவர்கள் எவனை நீதிமானென்று கண்டு பிடித்தார்களோ அவன் பக்கமாய்த் தீர்ப்புச் சொல்லவும், எவனைத் தீயவனென்று கண்டுபிடித்தார்களோ அவனைக் குற்றவாளியென்று தண்டிக்கவும் கடவார்கள்.
2 குற்றவாளி அடிபட வேண்டுமென்று தீர்ப்பளிப்பார்களாயின் நடுவர்கள் அவனை முகம் குப்புறப்படுக்கவைத்துத் தங்கள் முன்பாகவே அடிக்கச் செய்வார்கள். குற்றம் எவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கு அடிக்கச் செய்வார்கள்.
3 ஆயினும், உன் சகோதரன் உன் கண்களுக்கு முன் கொடுமையாய்க் காயப்பட்டுப்போகாதபடிக்கு நாற்பது அடிக்கு மேல் அவனை அடிக்கக்கூடாதென்று அறிந்துகொள்.
4 களத்தில் போரடிக்கிற மாட்டுக்கு வாயைக் கட்டலாகாது.
5 இரண்டு சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கையில், இருவரில் ஒருவன் மகப்பேறு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவிவேறொருவனை மணந்து கொள்ள வேண்டாம். கணவனுடைய சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, தன் சகோதரனுக்கு மகப்பேறு பிறப்பித்து,
6 இறந்தவனுடைய பெயர் இஸ்ராயேலில் மறைந்து போகாதபடிக்கு அவன் பெயரையே அவள் பெறும் தலைபிள்ளைக்குச் சூட்டக்கடவான்.
7 ஆனால், தன் சகோதரனுடைய மனைவி சட்டப்படி தனக்கே மனைவியாக வேண்டுமென்றிருந்தும், ஒரு வேளை அவன் அவளை மணந்து கொள்ளமனமில்லாதிருந்தால், அந்த விதவை நகரவாயிலில் கூடிய பெரியோர்களிடம் போய்: என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயர் இஸ்ராயேலில் நிலைக்கும்படி என்னை மனைவியாக வைத்துக் கொள்ள மனமில்லாதிருக்கிறான் என்று முறையிடுவாள்.
8 அப்போது அவர்கள் உடனே அவனை வரவழைத்து: ஏன் என்று கேட்கையில், அவன்: அவளை மணந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என்று மறுமொழி சொன்னால்,
9 அப்பெண் பெரியோர்கள் முன்பாக அவனருகில் வந்து, அவன் காலிலிருக்கிற செருப்பைக் கழற்றி, அவன் முகத்திலே உமிழ்ந்து: தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்பட வேண்டும் என்று சொல்லக்கடவாள்.
10 மேலும், இஸ்ராயேலில் அப்படிப்பட்டவனுடைய வீடு: செருப்பு கழற்றப்பட்டவனுடைய வீடு என்று அழைக்கப்படும்.
11 இரு ஆடவர் ஒருவரோடொருவர் வாயாடி, சண்டை போட ஆரம்பித்திருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, கையை நீட்டி அடிக்கிறவனுடைய மானத்தைப் பிடிக்கத் துணிவாளாயின்,
12 நீ அவள்மேல் அணுவளவேனும் இரங்காமல் அவளுடைய கையைத் துண்டிக்கக்கடவாய்.
13 உன் பையில் பெரிதும் சிறிதுமான பல எடைக் கற்களையும்,
14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான மரக்கால்களையும் வைத்திருக்க வேண்டாம்.
15 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்க விருக்கும் நாட்டில் நீ நெடுங்காலம் வாழும் பொருட்டு, உண்மையும் நேர்மையுமான எடைக் கல்லும் மரக்காலும் உன்னிடம் இருக்கவேண்டும்.
16 ஏனென்றால், இவ்வாறு செய்பவனைக் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார். அக்கிரமமானதை அவர் வெறுக்கிறார்.
17 நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அமலேக் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள்.
18 அவன் உனக்கு எதிராய்ப் படையெடுத்து, நீ களைத்து விடாய்த்திருக்கையிலே அவன் உன் பாளையத்தின் படை வீரர்கள் பலவீனப்பட்டு நின்று கொண்டு இருந்ததைக் கண்டு, கடவுளுக்கு அஞ்சாமல் அவன் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.
19 ஆகையால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை இளைப்பாறச் செய்து, நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு அவர் உனக்குக் கொடுக்கப்போகிற நாட்டின் சுற்றுப் புறத்தாராகிய இனத்தாரையெல்லாம் உனக்குக் கீழ்ப்படுத்தியபின், நீ அமலேக்கின் பெயரை மண்ணில் இராதபடிக்கு அழிக்கக்கடவாய். இதை மறவாதே, எச்சரிக்கை! அதிகாரம் 26
அதிகாரம் 26
1 பின் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கவிருக்கும் நாட்டில் நீ போய்ச் சேர்ந்து, அதனைக் கட்டியெழுப்பி அதில் குடியிருக்கும் நாளில்,
2 பயிரிடும் நிலத்தின் பற்பல விதக் கனிகளின் புதுப்பலனை எடுத்து ஒரு கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்டிருக்கும் திருவிடத்திற்கு போ.
3 அங்கு இருக்கும் குருவை அணுகி: ஆண்டவர் எந்த நாட்டை எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டருளியிருந்தாரோ அதனுள் நான் புகுந்துள்ளேனென்று உம் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் இன்று அறிக்கையிடுகிறேன் என்று சொல்வாய்.
4 பின் குரு அந்தக் கூடையை உன் கையினின்று வாங்கி உன் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவான்.
5 நீயோ உன் ஆண்டவருடைய முன்னிலையில் வாய்விட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: சீரிய நாட்டினன் ஒருவன் என் தந்தையைத் துன்புறுத்தியதினால் அவர் கொஞ்ச மக்களோடு எகிப்துக்குப் போய், அங்கே பெரிய பலத்த கணக்கிட முடியாத இனமானார்.
6 அப்பொழுது எகிப்தியர் நம்மை ஒடுக்கித் துன்புறுத்தி, சுமக்க முடியாச் சுமைகளை நம்மேல் சுமத்தினபோது,
7 நாம் நம் மூதாததையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட, அவர் நம்முடைய மன்றாட்டைக் கேட்டருளி, நமது சிறுமையையும் துன்பத்தையும் அவதியையும் பார்த்து,
8 வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் மிகப் பயங்கரத்திற்குரிய அடையாள அற்புத அதிசயங்களைக் காட்டி நம்மை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
9 இவ்விடத்திற்கு நம்மை அழைத்து வந்து, பாலும் தேனும் பொழியும் இந்த நாட்டை நமக்குக் கொடுத்தார்.
10 அதனால் ஆண்டவர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய புதுப்பலனை நான் ஒப்புக்கொடுக்க வந்தேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவருடைய முன்னிலையில் வைத்து அவரைப் பணிந்து தொழக்கடவாய்.
11 பின்னர் நீயும் லேவியனும் உன்னோடிருக்கிற அந்நியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டுக்கும் அருளிய எல்லா நன்மைகளையும் உபயோகித்து விருந்தாடுவாயாக.
12 புதுப்பலனைக் கொடுத்த மூன்றாம் ஆண்டாகிய பத்திலொரு பாகம் செலுத்தவேண்டிய ஆண்டு முடிந்த பின்னர், லேவியன், அகதி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்கள் உன் வாயில்களில் உண்டு நிறைவு கொள்ளும்படி பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கக்கடவாய்.
13 அப்பொழுது, நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய முன்னிலையில் போய் அவரை நோக்கி: நீர் எனக்குக் கற்பித்தபடி நான் புனிதமானவையெல்லாம் என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும் அகதிகளுக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்தேன். உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவுமில்லை, மறந்து போகவுமில்லை.
14 நான் துக்கம் கொண்டாடின போது அதை உண்ணவுமில்லை, உலகியல் காரியத்திற்கு அதில் ஒன்றையும் உபயோகிக்கவுமில்லை, அவைகளை இழவுக்காகச் செலவழித்ததுமில்லை. என் கடவுளுடைய திருவார்த்தைக்கு நான் கீழ்ப்படிந்து நீர் கற்பித்தபடி எல்லாவற்றையும் செய்தேன்.
15 ஆண்டவரே உம்முடைய புனித இடமாகிய விண்ணகமிருந்து கண்ணோக்கிப் பார்த்து, உன் மக்களாகிய இஸ்ராயேலரும், நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் பொழிகிற நாடும், ஆசீர் பெற அருளவேண்டும் என்று மன்றாடுபாய்.
16 இந்தக் கட்டளைகளையும் இந்த நீதி நியாயங்களையும் நீ கைக்கொண்டு, உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் அனுசரித்து நிறைவேற்ற வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
17 ஆண்டவர் எனக்குக் கடவுளாக இருப்பார் என்றும்; நான் அவர் வழிகளில் நடந்து அவருடைய சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் நியாயங்களையும் கைக்கொண்டு அனுசரிப்பேன் என்றும்; அவர் கற்பித்தபடி நடப்பேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தாய்.
18 ஆண்டவரும்: நீ நம்முடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு அனுசரிப்பாயாயின், நாம் முன்சொல்லியவண்ணமே உன்னைச் சொந்த மக்களாக வைத்துக் கொள்கிறோம் என்றும்;
19 நாம் நம்முடைய புகழ்ச்சி கீர்த்தி மகிமைக்காகப் படைத்த எல்லா இனத்தவரைக் காட்டிலும் உன்னை உயர்ந்த இனமாய் இருக்கும்படி செய்வோம் என்றும்; நாம் சொல்லியபடியே நீ ஆண்டவருடைய புனித மக்களாய் இருப்பாய் என்றும், அவர் இன்று உனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார் என்றார்.
அதிகாரம் 27
1 அன்றியும், இஸ்ராயலின் பெரியோர்கள் சூழ மோயீசன் மக்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதக்கின்ற கட்டளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
2 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிற்குப் போக யோர்தானைக் கடந்த பின்பு, நீ பெரிய கற்களை நாட்டி அவைகளுக்குச் சாந்து பூசுவாய்.
3 ஏனேன்றால் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குள் புகும்படி நீ யோர்தானைக் கடந்த பின்பு, இந்த நீதிச்சட்டங்கள் யாவையும் மேற்படிக் கற்களில் எழுதக்கடவாய்.
4 ஆகையால், நீங்கள் யோர்தானைக் கடந்தவுடனே, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்ட கற்களை ஏபால் என்ற மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சுண்ணாம்புக் காரை இடுவாய்.
5 பிறகு அவ்விடத்திலே இருப்பாயுதம் படாதகற்களாலே உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்புவாய்.
6 கொத்தாத கற்களாலே நீ அதைக்கட்டி, அதன் மீது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழுத்தகனப் பலிகளை ஒப்புக்கொடுப்பதுமன்றி,
7 சமாதானப் பலிகளையும் கொடுத்த பின்பு, அங்கே உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வாய்.
8 இந்த நீதிச் சட்டங்களையெல்லாம் வழுவில்லாமலும் தெளிவாகவும் எழுதக்கடவாய் என்றார்.
9 பிறகு மோயீசனும் லேவி புதல்வர்களாகிய குருக்குளும், இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயலே, கவனித்துக் கேட்பாயாக. நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவருடைய இனமானாய்.
10 அவருடைய குரலொலிக்குச் செவிகொடுக்வும், நாங்கள் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் நீதிமுறைகளையும் நிறைவேற்றவும் கடவாயாக என்றார்கள்.
11 மேலும், அதே நாளில் மோயீசன் மக்களை நோக்கி:
12 யோர்தனைக் கடந்த பின்பு மக்களுக்கு ஆசீர் அளிக்குமாறு சிமையோன், லேவி, யூதா, இஸாக்கார், சூசை, பெஞ்சமின் கோத்திரத்தார்கள் கரிஸீம் என்னும் மலையில் நிற்பார்கள்.
13 இவர்களுக்கு எதிரிடையாக, சாபங்கூற ரூபன், காத், ஆஸேர், ஸாபுலோன், தான், நேப்தலி கோத்திரத்தார்கள் ஏபால் மலையில் நிற்பார்கள்.
14 அப்பொழுது லேவியர்கள் உரத்த குரலில் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் நோக்கி:
15 ஆண்டவருக்கு வெறுப் பூட்டும் காரியமாகிய விக்கிரகத்தை, உளியால் கல்லைக் கொத்தியாவது மாதிரியில் வெண்கலத்தை வார்த்தாவது தன் கையால் செய்து, அதை மறைவிடத்தில் வைத்திருக்கிற தொழிலாளிமேல் சாபம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக மக்களெல்லாரும்: ஆமென் என்று சொல்லக் கடவார்கள்.
16 தன் தாய் தந்தையரை மதித்து நடவாதவன்மேலே சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
17 பிறனுடைய எல்லைக் கல்லைப் புரட்டி ஒற்றிப் போடுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
18 குருடனை வழிதப்பச் செய்கிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
19 அகதி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நீதியைப் புரட்டுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
20 தன் தந்தையின் மனைவியோடு தகாத உறவு கொள்பவன் அல்லது அவளுடைய படுக்கையின் மேல்மூடியைத் திறப்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
21 யாதொரு மிருகத்தோடு கூடுபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
22 தன் தந்தைக்கேனும் தாய்கேனும் பிறந்த புதல்வியாகிய தன் சகோதரியோடு தகாத உறவு கொள்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
23 தன் மாமியோடு தகாத உறவு கொள்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
24 தன் பிறனை மறைவிடத்திலே சாகடிப்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
25 குற்றமற்றவனைக் கொலை செய்யும்படி கையூட்டு வாங்குபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
26 இந்த நீதிச் சட்டங்களைக் கைக்கொண்டு நடவாதவன் அல்லது தன் செயலிலே நிறைவேற்றாதவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
அதிகாரம் 28
1 ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலிக்கு நீ செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு ஒழுகுவாயாகில், உன் கடவுளாகிய ஆண்டவருடைய பூமியிலுள்ள எல்லா இனத்தாரைக்காட்டிலும் உன்னை மேன்மைப்படுத்துவார்.
2 நீ அவருடைய கட்டளைகளுக்கு அடங்கி நடந்தால் (இப்பொழுது சொல்லப் படும்) இந்த ஆசீர்களெல்லாம் உன்மேல் வந்து உன்னைவிட்டு நீங்கமாட்டா.
3 நீ நகரத்திலும் ஆசீர் பெற்றிருப்பாய்; வெளியிலும் ஆசீர் பெற்றிருப்பாய்.
4 உன் கருவின் கனியும், உன் நிலத்தின் பலனும், உன் மிருகவுயிர்களின் பெருக்கமும், உன் மாட்டு மந்தைகளும், உன் ஆட்டு மந்தைகளும் ஆசீர் பெற்றிருக்கும்.
5 உன் களஞ்சியங்களும், உனக்கு மிஞ்சிக்கிடக்கும் பொருடகளும் ஆசீர் பெற்றிருக்கும்.
6 நீ வருகையிலும் ஆசீர் பெறுவாய்; போகையிலும் ஆசீர் பெறுவாய்.
7 உனக்கு விரோதமாய் எழும் உன் பகைபார்கள் உனக்குமுன்பாக நிற்கமாட்டாமல் புறமுதுகு காட்டி ஓடும்படி ஆண்டவர் செய்வார். அவர்கள் ஒரு வழியாய் உனக்கு எதிராக வருவார்கள்; ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன் ஓடிப்போவார்கள்.
8 ஆண்டவர் உன் கொடிமுந்திரிப் பழச்சாற்றுக் கிடங்குகளிலும், நீ கையால் செய்யும் எல்லா வேலைகளிலும் உனக்கு ஆசீர் அளிப்பார். உனக்கு அளிக்கப்படும் நாட்டிலும் உனக்கு ஆசீர் அளிப்பார்.
9 நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அனுசரித்து அவருடைய வழிகளில் நடப்பாயாயின், அவர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்குப் புனித இனமாக ஏற்படுத்துவார்.
10 அப்பொழுது ஆண்டவருடைய திருப்பெயர் உன்மேல் உள்ளதென்று உலகிலுள்ள மக்களெல்லாரும் கண்டு உனக்கு அஞ்சுவார்கள்.
11 உனக்குக் கொடுப்போம் என்று ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொல்லிய நாட்டில் உன் கருவின கனியிலும், உன் மிருகவுயிர்களின் பெருக்கத்திலும், உன் நிலத்தின் பலனிலும் பற்பலவித நன்மைகளும் உனக்கு நிறைவாய் இருக்கச் செய்வார்.
12 தகுந்த காலத்தில் மழைபெய்யும்படிக்கு ஆண்டவர் தமது சிறந்த செல்வமாகிய வானத்தைத் திறப்பார். நீ செய்யும் கைவேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பார். நீ பல இனத்தாருக்குக் நீ கடன் கொடுத்து, எவர் கையிலும் நீ கடன் வாங்காதிருப்பாய்.
13 ஆண்டவர் உன்னைக் கடைசியாக வைக்காமல் முதன்மையாகவே உன்னை நியமிக்கவும், நீ ஒருகாலும் கீழாகாமல் எப்போதும் மேற்பட்டவனாய் இருக்கவும் விரும்புவாயாகில், நான் இன்று உனக்கு விதிக்கிற உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளுக்கு நீ செவி கொடுக்கவும், அவைகளைக் கைக்கொண்டு நிறைவேற்ற வேண்டியதுமன்றி,
14 அவைகளை விட்டு விலகி வலப்புறம் இடப்புறம் சாயாமலிருக்கவும், பிற தேவர்களைப் பின்பற்றி வணங்காமல் இருக்கவும் கடவாய்.
15 இன்று நான் உனக்கு விதிக்கின்ற உன் கடவுளாகிய ஆண்டவருடைய எல்லாக் கட்டளைகளின்படியும், ஆசாரமுறைகளின் படியும் நடக்கும்படியாக நீ ஆண்டவருடைய குரலுக்குச் செவி கொடாதிருப்பாயாகில், (பின்வரும்) சாபங்கள் உன்மேல் வந்து உன்னைவிட்டு நீங்காமல் இருக்கும்.
16 நகரத்திலும் உனக்குச் சாபம் இருக்கும்; வெளியிலும் உனக்குச் சாபம் இருக்கும்.
17 உன் களஞ்சியத்திலும், உனக்குண்டான செல்வத்திலும் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
18 உன் கருவின் கனியிலும், நிலத்தின் பலனிலும், உன் மாட்டுமந்தையிலும், ஆட்டு மந்தையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
19 நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்; போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
20 நீ ஆண்டவரை விட்டுவிடக் கருதிச் செய்திருக்கும் வெறுப்பூட்டும் உன் செயல்களின் பொருட்டு நீ விரைவில் கெட்டு அழியுமட்டும், ஆண்டவர் வறுமையையும் பசி வேதனையையும் உன்மீது வரச்செய்து, நீ கையிட்டுச் செய்துவரும் எல்லாவற்றையும் கெட்டுப் போகச் செய்வார்.
21 நீ உரிமையாக்கிக் கொள்ளும்படி புகவிருக்கும் நாட்டில் ஆண்டவர் உன்னை முற்றிலும் வேரறுக்குமட்டும் உன்னைக் கொள்ளை நோயாலே வதைப்பார்.
22 நீ அழியுமட்டும் ஆண்டவர் உன்னை வறியவனாக்கி, காய்ச்சலாலும் கடுங்குளிராலும் கொடிய வெப்பத்தாலும் நச்சுக்காற்றாலும் கருக்கு வாளினாலும் உன்னைத் துன்புறுத்தி வதைப்பார்.
23 உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உன் காலின் கீழுள்ள நிலம் இரும்பும் ஆகும்.
24 நீ அழியுமட்டும் உன் நிலங்களுக்கு மழையாகப் புழுதி பெய்யவும், வானத்திலிருந்து உன்மேல் சாம்பல் இறங்கவும் ஆண்டவர் கட்டளையிடுவார்.
25 உன் பகைவர்களுக்கு முன்பாக நீ முறியடிக்கப்பட்டு, ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ, ஏழு வழியாய் ஓடிப்போய், உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் சிதறுண்டு போகும்படி ஆண்டவர் செய்வார்.
26 உன் பிணம் வானத்து எல்லாப் பறவைகளுக்கும் மண்ணின் மிருகங்களுக்கும் இரையாகும். இவைகளை விரட்டி அகற்றுவார் இல்லாது போகும்.
27 எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலம் முதலிய மெல்லிய இடங்களின் புண்களினாலும், சிரங்கு முதலிய சொறிகளினாலும் நீ குணமடையாதபடிக்கு அவர் உன்னை வதைப்பார். பைத்தியத்தினாலும்,
28 குருட்டுக் தன்மையாலும், அறிவு மயக்கத்தினாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.
29 குருடன் இருளிலே தடவித் தடவிக் திரிகிறது போல, நீ பட்டப்பகலிலே வழி தெரியாமல் தடவித் திரிவாய். நீ எந்நாளும் மனிதர்களுடைய கோள் குண்டணிகளுக்கு உட்பட்டவனாயும், உதவி செய்வாரில்லாமல் அவர்களுடைய கடுமை முதலிய வல்லடிக்கு இலக்காயும் இருப்பாய்.
30 நீ மணந்து கொண்ட பெண்ணை மற்றொருவன் அனுபவிப்பான். நீ கட்டின வீட்டிலே குடியேறக் கூடாமற் போவாய். நீ நட்டிய கொடி முந்திரித்தோட்டத்துப் பலனை நீ அனுபவிக்க மாட்டாய்.
31 உன் மாடு உன் கண்ணுக்கு முன்பாக அடிபடும். நீ அதில் ஒன்றும் உண்ணக் கூடாமற் போவாய். உன் கழுதை உன் கண் பார்வைக்குமுன் கொள்ளையிடப்பட்டும், அது உனக்குத் திரும்பக்கொடுக்கவும் படாது. உன் ஆடுகள் உன் பகைவருக்குக் கொடுக்கப்பட்டு, அவைகளை விடுவிப்பார் ஒருவரும் இருக்க மாட்டார்.
32 நீ பார்க்க, உன் புதல்வர்களும் புதல்வியரும் புற மக்களுக்குக் கையளிக்கப்படுவார்கள். நாள் முழுதும் அவர்களைப் பார்த்து பார்த்து உன் கண்கள் பூத்துப் போகும். உன் கையும் சோர்ந்து பலனில்லாது போகும்.
33 உன் நிலத்தின் கனிகளையும், உழைப்பின் பலனையும் நீ அறியாத மக்கள் உண்பார். நீ எந்நாளும் ஒடுக்கப்பட்டுக் கோள் குண்டணிகளால் நொறுக்கப்படுவாய்.
34 உன் கண்கள் காணும் பயங்கரமான காரியங்களினால் நீ மதிமயங்கிப் போவாய்.
35 உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை வரையிலும் உன் முழங்கால்களிலும் தொடைகளிலும் உண்டான கெட்டபுண்ணாலே, நீ குணமாகாதபடிக்கு ஆண்டவர் உன்னை வதைப்பார்.
36 உனக்கும் உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் உன்னையும் உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட உன் அரசனையும் போகச் செய்வார். அங்கே நீ மரமும் கல்லுமான தேவர்களை வணங்கி ஆராதிப்பாய்.
37 ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா மக்களுக்குள், நீ பழமொழியாயும் கேலிப்பொருளாகவும் அமைந்து கெட்டுப் போவாய்.
38 நிலத்தில் மிகுதியான விதை விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய். வெட்டுக்கிளிகள் எல்லாவற்றையும் தின்றொழித்து விடும்.
39 கொடிமுந்திரித் தோட்டத்தை நட்டுப் பயிரிடுவாய். ஆனால் கொடி முந்திரிப் பழச்சாற்றைக் குடிக்கவுமாட்டாய்; பழங்களைச் சேர்க்கவுமாட்டாய். பூச்சி அதைத் தின்றொழிக்கும்.
40 ஒலிவ மரங்கள் உன் எல்லைகளில் எங்கும் இருக்கும். ஆனால் நீ எண்ணெய் பூசிக் கொள்ளமாட்டாய். உன் ஒலிவம் பிஞ்சுகள் உதிர்ந்து நாசமாகும்.
41 நீ புதல்வர்களையும் புதல்வியரையும் பெறுவாய். ஆயினும், அவர்களால் உனக்கு யாதொரு பயனும் இராது. அவர்கள் சிறைப்படுத்தப் படுவார்கள்.
42 உன் மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் கனிகளையும் பூச்சிகள் தின்றொழிக்கும்.
43 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்படுவான். அவன் உன்னைவிட வலிமையுள்ளவனாவான். நீயோ தாழ்த்தப்பட்டு அவனுக்குக் கீழாவாய்.
44 அவன் உன்னிடம் கடன்படான். நீதான் அவனிடம் கடன்பட்டு வட்டிகொடுப்பாய். அவன் தலையாய் இருக்க, நீ வாலாய் இருப்பாய்.
45 நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய சொல்லைக் கேளாமலும், அவர் உனக்கு கற்பித்த கட்டளைகளையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு அனுசரியாமலும் போனதால் அந்தச் சாபமெல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் கொடர்ந்து வதைக்கும்.
46 அவைகள் உன்னிடமும் உன் சந்தியிடமும் என்றும் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கும்.
47 எல்லாம் மிகுதியாகி மன மகிழ்ச்சியுடனும் இதயக் களிப்புடனும் நீ இருக்கையிலே உன் கடவுளாகிய ஆண்டவருக்கு பணிவிடை செய்யாமல் போனதால்,
48 பசி தாகம் நிர்வாணம் முதலிய எல்லாக் குறையும் வெறுமையும் அனுபவித்து, ஆண்டவர் உனக்கு விரோதமாய் அனுப்பும் பகைவர்களுக்குப் பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழிக்குமட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தின் மேல் வைப்பார்கள்,
49 கிழவன் என்று முகம் பாராமலும், சிறுவர் என்று இரங்காமலும் இருக்கும் அகந்தை கொண்டதும்,
50 உனக்குக் தெரியாத மொழியைப் பேசுகிறதும், வேகமாய்ப் பறக்கிற கழுகுக்கு நிகரானதுமான ஓர் இனத்தை மிகத் தொலைவிலுள்ள நாட்டின் கடைக் கோடியிலிருந்து ஆண்டவர் உன்மேல் வரச் செய்வார்.
51 நீ அழிந்து போகுமட்டும் அந்த இனத்தான் உன் மிருகவுயிர்களின் பலனையும் உன் நிலத்தின் பலனையும் உண்டு வருவான். அவன் உன்னை அழித்தொழிக்கு மட்டும் உன் தானியத்தையும், பழச்சாற்றையும் எண்ணெயையும், ஆட்டு மாட்டு மந்தைகளையும் ஒன்றும் மிதியாக விட்டு விடாமல் தின்று தீர்ப்பான்.
52 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ கட்டி எழுப்பும் உயரமும் பாதுகாப்புமுள்ள மதில்கள் தரையிலே விழுமட்டும் அந்த இனத்தான் உன் நகரங்களிலே உன் வலிமை குன்ற உன்னை நெருக்கி, உன் வாயில்களுக்கு உட்புறத்திலேயே உன்னை முற்றுகையிடுவான்.
53 உன் பகைவர்களால் உனக்கு உண்டாகும் வெறுமையும் அவதியும் எவ்வளவென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளித்துள்ள உன் கருவின் கனியான புதல்வர் புதல்வியருடைய இறைச்சியை நீ உண்பாய்.
54 அவர்கள் உன் வாயில்களில் உன்னை முற்றுகையிட்டு நெருக்கித் துன்புறுத்தும் காலத்தில் உனக்கு உணவு இல்லாமையால்,
55 உங்களிடையே மெல்லியல்பும் இன்பவெறியும் உள்ளவன் தன் சகோதரனுக்கேனும் தன் நெஞ்சுக்குகந்த மனைவிக்கேனும் தன் துன்பத்தினிடையே தான் உண்ணும் தன் பிள்ளையின் இறைச்சியில் கொஞ்சமேனும் கொடுக்கமாட்டான்.
56 இன்பவெறியும் மெல்லியல்புமுள்ள பெண்ணும் அவ்விதமே செய்வாள். எவள் தன் மிதமிஞ்சின மெல்லியல்பைப்பற்றித் தரையிலே உள்ளங்காலை ஊன்றி நடக்க மாட்டாதிருப்ளோ, அவள் அப்பொழுது தன் நெஞ்சுக்குகந்த கணவனுக்குக்கூடத் தன் புதல்வன் அல்லது புதல்வியுடைய இறைச்சியில் பங்கு கொடுக்க உடன்படாள்.
57 அன்றியும், உன் பகைவர்கள் முற்றுகையிட்டு உன் வாயில்களுக்குள்ளே உன்னை நெருக்கி எல்லாவற்றையும் அழித்து விடுவதனால், பெண்கள் அந் நேரத்தில் பிறந்த குழந்தையையும் வயிற்றிலிருந்து வெளிவரும் கசுமாலங்களையும் மறைவிலே உண்பார்கள்.
58 நீ இந்நூலில் எழுதப்பட்டுள்ள எல்லா நீதிச் சட்டங்களையும் கைக்கொண்டு அனுசரிக்காமல், உன் கடவுளாகிய ஆண்டவருடைய மகிமையும் பயங்கரமுமுள்ள திருப்பெயருக்கு அஞ்சாமல் போவாயாகில்,
59 ஆண்டவர் நீங்காத பெரிய வாதைகளாலும் மிகக்கொடிய தீராத நோய்களாலும் உன்னையும் உன் சந்ததியாரையும் கடினமாகத் தண்டிப்பார்.
60 நீ பயத்தோடு எகிப்திலே கண்ட எல்லா நோய் துயரங்களையும் திரும்ப உன்மேல் வரச்செய்வார். அவை உன்னை விடாமல் பிடித்துக்கொள்ளும். அன்றியும்,
61 இந்த நீதிச் சட்ட நூலிலே எழுதாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழியுமட்டும் ஆண்டவர் உன்மேல் வருவிப்பார்.
62 (அதுவுமின்றி) கணக்கிலே விண்மீன்களைப்போல் இருந்த நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலிக்குச் செவி கொடாமற் போனதினால், கொஞ்ச மக்களாய்க் குறைந்து சிறுத்துப் போவீர்கள்.
63 முன்னே ஆண்டவர் உங்களுக்கு நன்மை செய்வதிலும் உங்களைப் பெருகச் செய்வதிலும் எப்படி விருப்பம் கொண்டிருந்தாரோ, அப்படியே நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டிலிருந்து பிடுங்கப்படுமட்டும், உங்களைக் கெடுப்பதிலும் அழிப்பதிலும் விருப்பம் கொண்டிருப்பார்.
64 மண்ணின் ஒருமுனை தொடங்கி மறுமுனை வரையிலுமிருக்கிற எல்லா மக்களுக்குள்ளேயும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கே நீயும் உன் மூதாதையரும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைத் தொழுவாய்.
65 அமம்க்களுக்கிடையே இளைப்பாறுதலும் உனக்கு இராது; உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது. ஏனென்றால், அங்கே ஆண்டவர் உனக்குத் தள்ளாடித் தத்தளிக்கும் இதயத்தையும், பூத்தப்போகும் கண்களையும், சஞ்சலத்தால் குன்றிய மனத்தையும் உனக்குக் கட்டளையிடுவார்.
66 உன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்குமாகையால், நீ உன் உயிரின்மீது தீரா ஐயங்கொண்டு, இரவு பகலாய்த் திகில்கொண்டிருப்பாய்.
67 மனத்தில் குடிகொண்டிருக்கும் அச்ச நடுக்கத்தாலும் உன் கண்கள் காணும் பயங்கரக் காட்சிகளாலும் நீ வெருண்டு, பொழுது விடிய: மாலைவேளை எப்போது வருமோ என்றும், சூரியன் மறைய: பொழுது எப்பொழுது விடியுமோ என்றும் சொல்வாய்.
68 ஆண்டவர்: நீ ஒருகாலும் காணாதிருப்பாய் என்று எவ்வழியைக் குறித்து உனக்குச் சொன்னாரோ, அவ்வழியாகவே உன்னைக் கப்பல்களில் ஏற்றி எகிப்துக்குக் திரும்பவும் கொண்டு போவார். அங்கே நீங்கள் அடிமைகளாகவும் வேலைக்காரிகளாகவும் உங்கள் பகைவர் கையில் விலைக்கு விற்கப்படுவீர்கள். அப்பொழுதுகூட உங்களை விலைக்கு வாங்க ஒருவரும் இரார் என்றார்.
அதிகாரம் 29
1 ஓரேபிலே இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மோவாபியர் நாட்டிலே அவர்களோடு உடன்படிக்கை செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டார். அது பின்வருமாறு:
2 மோயீசன் இஸ்ராயேலர் எல்லாரையும் அழைத்து அவர்களை நோக்கி: எகிப்து நாட்டில் உங்கள் கண்களுக்கு எல்லா ஊழியர்களுக்கும் அவனுடைய நாடு முழுவதற்கும்,
3 ஆண்டவர் செய்த பெரிய சோதனைகளையும், காண்பித்த மகத்தான அடையாளம் முதலிய அற்புத அதிசயங்களையும் கண்டீர்களே.
4 ஆயினும், உணரத்தக்க இதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க செவிகளையும் ஆண்டவர் இந்நாள் வரையிலும் உங்களுக்குத் தந்தாரில்லை.
5 ( அவர் உங்களை நேக்கி: ) நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரென்று நீங்கள் அறியும்வண்ணம் நாற்பது ஆண்டளவும் உங்களைப் பாலைவனத்தில் நடத்தி வந்தோம்.
6 அப்பொழுது உங்கள் ஆடைகள் பழையதாய்ப் போனதுமில்லை; உங்கள் காலணிகள் பழுதாய்ப் போனதுமில்லை. நீங்கம் அப்பம் உண்டதுமில்லை; கொடிமுந்திரிப் பழச்சாறு முதலிய மதுவைக் குடித்ததுமில்லை.
7 பிறகு நீங்கள் இவ்விடம் வந்து சேர்ந்தபோது எஸெபோன் அரசனான செகோனும், பாசான் அரசனான ஓகும் நம்மோடு போர்புரியப் புறப்பட்டார்கள். நாமும் அவர்களை முறியடித்து,
8 அவர்களுடைய நாட்டைப் பிடித்து, ரூபன், காத் கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் உரிமையாகக் கொடுத்தோம்.
9 ஆகையால், நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்து செய்யும்படியாக இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, அவைகளின்படி நடக்கக் கடவீர்களாக (என்றார்).
10 இன்று உங்கள் கோத்திரத் தலைவர்களும் உங்கள் வம்சங்களும் பெரியோர்களும் அறிஞர்களும், இஸ்ராயேலின் ஆடவர் அனைவரும்,
11 உங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் விறகுக்காரனும் தண்ணீர்காரனும் நீங்கலாக, உங்கள் பாளையத்திற்குள் இருக்கிற அந்நியனுமாகிய எல்லா மக்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
12 (எதற்கென்றால்) நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய உடன்படிக்கைக்கும், இன்று அவர் உன்னோடு செய்கிற அவருடைய ஆணை உறுதிக்கும் நீ உட்படுவதற்காகவும்,
13 அவர் உனக்குச் சொன்னபடியும் உன் மூதாதையராகிய ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்பவர்களுக்கு ஆணையிட்டருளியபடியும் உன்னைத் தம் மக்களாக ஏற்படுத்தித் தாம் உனக்குக் கடவுளாக இருப்பதற்காகவுமேயாம்.
14 நான் இவ்வுடன் படிக்கையையும் இந்த ஆணையின் உறுதியையும் உங்களோடு மட்டுமல்ல;
15 இவ்விடத்தில் வந்திருக்கிற அனைவரோடும் இங்கே நம்மோடு இராதவர்களோடேயும் அதைச் செய்கிறோம்.
16 உள்ளபடி நாம் எகிப்து நாட்டில் குடியிருந்ததையும் நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த மக்களின் நடுவில் நடந்து வந்ததையும், அப்பொழுது,
17 அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்கள் கும்பிட்டு ஆராதிக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமாகிய நரகலான விக்கிரகங்களையும் நீங்கள் கண்ணாலே கண்டீர்கள்.
18 ஆகையால் அந்த மக்களின் தேவர்களை கும்பிடத் தக்கவர்களென்று மதித்து, நம் கடவுளாகிய ஆண்டவரை விட்டு மறுதலிக்கும் மனத்தையுடைய ஓர் ஆடவனேனும் ஒரு பெண்ணேனும் குடும்பமேனும் வம்சமேனும் உங்களிடையே இராதபடிக்கும், உங்களுக்குள்ளே பித்தையும் கைப்பையும் விளைவிக்கத்தக்க வேர் போன்றவர்கள் இராதபடிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
19 சிலவேளை அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டபிற்பாடு தன்னைத்தானே நோக்கி: நான் என் மன விருப்பப்படி அக்கிரம வழியில் எவ்வளவு தூரம் நடந்தாலும் எனக்கு இனிப் பயமில்லை என்று வீண் எண்ணம் கொண்டு சொன்னாலும் சொல்லலாம். இது மழைநீரைக் குடிக்க விரும்பும் வேர். வெறிக்கக் குடித்த வேராலே உண்ணப்படுவதற்கு ஒப்பாகும்.
20 அப்படிப் பட்டவன்மேல் ஆண்டவர் இரங்கமாட்டார். அவருடைய கோபமும் எரிச்சலும் அவன்மேல் மிகக் கரிய புகையைப் புகைக்கும். இந்நுலில் எழுதப்பட்ட எல்லாச் சாபங்களும் அவன்மேல் விழும். ஆண்டவர் அவனுடைய பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவார்.
21 இந்தத் திருச்சட்ட நூலிலும் உடன்படிக்கையிலும் எழுதியிருக்கிற சாபங்களின்படியே (ஆண்டவர்) அவனை இஸ்ராயேலின் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் புறம்பாக்கி விடுவார்.
22 அப்பொழுது உங்களுக்குப் பின் வரும் தலைமுறைப் பிள்ளைகளும், இவர்களிடம் காலப்போக்கிலே பிறக்கும் சந்ததியார்களும் தொலைநாட்டிலிருந்து வரும் அந்நியர்களும் ஆண்டவர் இந்த நாட்டுக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் கண்டு,
23 ஆண்டவர் தம் கோப்த்தின் கடுமையிலே சோதோம், கொமோர், ஆதமா, செபோயீங் என்ற நகரங்களை அழித்துக் கவிழ்த்தது போல், இந்நாட்டின் நிலங்கள் விதைப்பும் விளைவும் இல்லாதிருக்கும்படி அவற்றின்மேல் கந்தகத்தையும் உப்பையும் பெய்வித்துப் பாழாக்கியிருப்பதையும் கண்டு, மக்களனைவரும்:
24 ஆண்டவர் இந்நாட்டை ஏன் இப்படித் தண்டித்தார் ? மிகவும் எரிச்சலான இந்தக் கோபம் அவருக்கு ஏன் வந்தது என்று வினவ,
25 அதற்கு மறுமொழியாக: ஆண்டவர் தங்களை எகிப்து நாட்டினின்று மீட்டபோது தங்கள் மூதாதையரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,
26 தாங்கள் அறிந்திராத, தங்களுக்கு உரிமையில்லாத புற தேவர்களுக்குப் பணிசெய்து அவர்களைத் தொழுதார்கள்.
27 அதனால் ஆண்டவர் கோபம் கொண்டு, இந்நூலிலே எழுதப்பட்டுள்ள சாபங்கள் எல்லாவற்றையும் இந்நாட்டின்மேல் வரச்செய்தார்.
28 அவர் தம்முடைய கோபத்தினாலும் சீற்றத்தினாலும் எரிச்சலினாலும் அவர்களைத் தங்கள் நாட்டினின்று துரத்திவிட்டு, இந்நாளில் அமைந்திருப்பதுபோல், அவர்களை வெளிநாட்டில் எடுத்தெறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.
29 மறைவான காரியங்கள் நம்முடைய கடவுளாகிய ஆண்டவருக்கே உரியவை. வெளிப்படுத்தப்பட்டவைகைளோ நாம் இந்நீதி முறைப்படியெல்லாம் நடந்துகொள்ளுமாறு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.
அதிகாரம் 30
1 ஆகையால், நான் உன் கண்களுக்குமுன் எடுத்துக் காட்டிய ஆசீருக்கு அல்லது சாபத்திற்கு அடுத்த இந்தக் காரியங்ளெல்லாம் உன்பால் நிறைவேறிய பின்பு, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்த எல்லா இனத்தாரிடையேயும் இருந்து நீ உன் இதயத்தில் வருந்தி,
2 அவர் பக்கமாய்த் திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடி நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் அவருடைய கட்டளைகளை அனுசரித்து நிறைவேற்றுவீர்களாயின்,
3 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிறையின்று விடுதலையாக்குவார். அவர் உனக்கு இறங்கி, உன்னைச் சிதறடித்துள்ள எல்லா இனத்தவர்களிடயேயுமிருந்து உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்வார்.
4 நீ வானத்தின் கடையெல்லைகள் வரையிலும் சிதறுண்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர் அங்கேயிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வருவார்.
5 அவர் உன்னை எடுத்து, உன் மூதாதையர் உரிமையாக்கிக் கொண்ட நாட்டில் உன்னைச் சேர்த்து நீ அதை உரிமையாக்கிக் கொள்ளச் செய்து, தம் ஆசீரால் உன் மூதாதையரைக் காட்டிலும் உன்னை அதிகமாய்ப் பெருகச் செய்வார்.
6 மேலும், நீ வாழ்வு பெறும் பொருட்டு உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவேடும் அன்புசெய்யும்படியாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன் இதயத்தையும் உன் சந்ததியாரின் இதயத்தையும் விருத்தசேதனம் செய்து,
7 இந்தச் சாபங்களையெல்லாம் உன் எதிரிகள்மேலும் உன்னைப் பழித்து வதைத்த உன் பகைவர்கள் மேலும் விழச்செய்வார். நீயோ மனந்திரும்பியவனாய்,
8 உன் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலியைக் கேட்டு, இன்று நான் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகளின்படியெல்லாம் நடப்பாய்.
9 அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும் உன் கருவின் கனிகளிலும் உன் மிருகவுயிர்களின் பலன்களிலும் உன் நிலத்தின் விளைச்சல்கள் முதலிய எல்லா நன்மைகளிலும் உனக்கு முழுநிறைவு உண்டாகச் செய்வார். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் மீது மகிழ்வு கொண்டது போல் உன் மீதும் விருப்பம் கொண்டு, எல்லா நன்மைகளையும் ஏராளமாய் உனக்கு அருளும்படி திரும்பி வருவார்.
10 ஆனால், நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலிக்குச் செவிகொடுத்து, இந்த நூலில் எழுதப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளையும் சடங்குமுறைகளையும் கைக்கொண்டு அனுசரித்து, உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடமாய்த் திரும்பினால் மட்டுமே (முன் குறிக்கப்பட்ட நன்மைகளைப் பெறுவாய்).
11 இன்று நான் உனக்குக் கற்பிக்கின்ற இக்கட்டளை உன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதும் அன்று. உனக்குத் தூரமானதும் அன்று.
12 நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதன்படி செய்யும்பொருட்டு, எங்களுக்காக வானத்தில் ஏறிக்கொண்டு வரத்தக்கவன் யார் என்னறு நீ சொல்லும்படிக்கு, (அந்தக் கட்டளை) வானத்தில் வைக்கப்பட்டதும் அன்று;
13 நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதன்படி நடக்கும்பொருட்டு, எங்களுக்காகக் கடலைத் தாண்டிகொண்டு வரத்தக்கவன் யார் என்று நீ சாக்குப்போக்குச் சொல்லும்படிக்கு, (அந்தக் கட்டளை) கடலுக்கு அப்பால் வைக்கப்பட்டதும் அன்று, நீ அந்தக் கட்டளையின்படி நடக்கும்பொருட்டு,
14 அது உனக்கு மிகவும் அண்மையிலேயே இருக்கிறது. அது உன் வாயிலும் உன் இதயத்திலும் உள்ளது.
15 இன்று நான் ஒரு பக்கத்திலே வாழ்வையும் நன்மையையும், மற்றொரு பக்கத்திலே சாவையும் தீமையையும் வைத்து உனக்குக் காண்பித்தேன் என்பதைச் சிந்தித்துப்பார்.
16 நீ வாழ்ந்து பெருகவும், நீ உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசீர் அளிக்கும்படிக்கும் நீ அவர் பால் அன்புகொள்ளவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும் சட்டங்களையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு அனுசரிக்கவும் கடவாய்.
17 ஆனால், உன் இதயம் பேதலித்து, நீ உன் காதை அடைத்து மதிமயங்கிப் பொய்யைப் பின்பற்றிப் பிற தேவர்களுக்குப் பணிபுரிவாயாகில், நீ அழிந்து போவாயென்றும்,
18 யோர்தானைக் கடந்து நீ உரிமைகொள்ளப் புகவிருக்கும் நாட்டிலே கொஞ்சக் காலத்தில் மடிவாயென்றும் இன்று நான் உனக்கு முன்னறிவித்துச் சொல்கிறேன்.
19 நான் வாழ்வையும் சாவையும், ஆசீரையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைத்துக் காட்டினேன் என்பதற்கு விண்ணையும் மண்ணையும் இன்று சாட்சியாய் வைக்கிறேன். ஆதலால், நீயும் உன் சந்ததியும் வாழ்வு பெறவும்,
20 உன் உயிரும் நிடிய வாழ்வுமான ஆண்டவர், ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டுச் சொல்லிய நாட்டிலே நீ குடியேறவும், நீ உயிரைத் தேர்ந்துகொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர்பால் அன்புகூர்ந்து, அவருடைய திருவுளத்துக்கு அமைந்து, அவரைப் பற்றிக்கொள்வாய் என்றார்.
அதிகாரம் 31
1 பின்னும் மோயீசன் போய், இஸ்ராயேலர் எல்லாருக்கும் பின்வருவனவற்றை யெல்லாம் சொன்னார்.
2 அவர் அவர்களை நோக்கி: இன்று எனக்கு வயது நூற்றிருபது. இனி என்னால் போகவர இயலாது. சிறப்பாக, இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லை என்று ஆண்டவர் எனக்குச் சொல்லியிருக்கிறார்.
3 உன் கடவுளாகிய ஆண்டவரே உன் முன்பாக நடந்துபோவார். அவரே உனக்கு முன்நின்று அந்த இனத்தவரையெல்லாம் அழித்கொழிக்க, நீ அவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வாய். ஆண்டவர் சொன்னபடியே, இங்கே இருக்கிற யோசுவா உன் முன்பாக நடப்பான்.
4 ஆண்டவரோ ஏற்கெனவே அமோறையரின் அரசர்களான செகோன், ஓக் என்பவர்களுக்கும் அவர்களின் நாட்டிற்கும் தாம் செய்ததுபோல் இவர்களுக்கும் செய்து, இவர்களையும் அழிப்பார்.
5 ஆகையால், ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளித்த பின், நான் உங்களுக்கு விதித்த கட்டளையின்படியே நீங்கள் அவர்களுக்குச் செய்யக்கடவீர்கள்.
6 துணிவு கொண்டு மனத்தைரியமாய் இருங்கள். அவர்களைப் பார்த்து அஞ்சவும் திகைக்கவும் வேண்டாம். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை நடத்துபவர். அவர் உன்னை விட்டு நீங்கப்போவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை என்றார்.
7 பிறகு மோயீசன் யோசுவாவை அழைத்து, இஸ்ராயேலர் எல்லாரும் பார்க்க அவனை நோக்கி: நீ வலிமை கொண்டு மனத்திடனாய் இரு. இவர்களுக்குக் கொடுப்போம் என்று ஆண்டவர் இவர்களுடைய மூதாதையருக்கு ஆணையிட்ட நாட்டிற்கு, நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய்த் திருவுளச் சீட்டுப்போட்டு அதை அவர்களுக்குள்ளே பங்கிடுவாய்.
8 உங்களை நடத்துபவராகிய ஆண்டவர் உன்னோடு இருப்பாரல்லது, அவர் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டாராகையால், நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றார்.
9 பிறகு மோயீசன் இந்த நீதிச் சட்டத்தை எழுதி, அதை ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டகத்தைச் சுமக்கிற லேவி புதல்வரான குருக்களுக்கும் இஸ்ராயேலரிலுள்ள பெரியோர்கள் எல்லாருக்கும் ஒப்புவித்து,
10 அவர்களை நோக்கி: ஒவ்வொரு ஏழாம் ஆண்டிற்குப் பின்வரும் மன்னிப்பு ஆண்டில் கூடாரத் திருவிழாவிலே,
11 உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்தில் இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஆண்டவருடைய முன்னிலைக்கு வரும்போது, நீ அவர்கள் கேட்க, அவர்களுக்கு முன்பாக இந்த நீதிச் சட்டத்தை வாசிக்கக்கடவாய்.
12 ஆடவர்களும் பெண்களும் பிள்ளைகளும் உன் வாயில்களில் இருக்கும் அந்நியர்களுமாகிய மக்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடிக் கேட்டுக் கற்றுக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இந்த நீதிச் சட்ட வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு அவற்றின்படி நடக்கத்தக்கதாகவும்,
13 அவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக் கொள்ளபோகிற நாட்டில் வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சத்தக்கதாகவும் (மக்களைக் கூட்டி அதை வாசிக்கக் கடவாய் என்றார்.)
14 பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ உன் மரணநாள் அடுத்துள்ளது. நாம் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி அவனை அழைத்துக் கொண்டு நீங்கள் இருவரும் ஆசாரக் கூடாரத்திலே வந்து நில்லுங்கள் என்றார். அப்படியே மோயீசனும் யோசுவாவும் போய் ஆசாரக் கூடாரத்தில் நின்றார்கள்.
15 ஆண்டவர் கூடார நுழைவிடத்தில் தங்கிய மேகத்தூணில் தரிசனமானார்.
16 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ நீ உன் மூதாதையரோடு (மரணத்) துயில்கொள்ளப் போகிறாய். இந்த மக்கள் போய்த் தங்கள் குடியேறும்படி புகவிருக்கிற நாட்டில் அவர்கள் அந்நிய தேவர்களைக் கள்ள வழியிலே பின்பற்றி, அங்கே அவர்கள் நம்மை விட்டுவிட்டு அவர்களோடு நாம் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவார்கள்.
17 ஆகையால், அந்நாளில் நமது கோபம் அவர்கள்மேல் மூண்டு, நாம் அவர்களைக் கைவிட்டு நம்முடைய முகத்தை அவர்களுக்கு மறைப்போமாதலால், அவர்கள் அழிந்து போவார்கள். பல தீங்குகளும் இன்னல்களும் அவர்களைத் தொடரும். அந்நாளிலே அவர்கள்: கடவுள் எங்களோடு இராததனாலன்றோ இத்தனைத் தீங்குகள் எங்களைப் பீடித்தன என்பார்கள்.
18 அவர்கள் அந்நிய தேவர்களைப் பின்பற்றிக் கட்டிக்கொண்ட எல்லா அக்கிரமங்களின் பொருட்டு, நாம் அந்நாளிலே நமது முகத்தை ஒளித்து மறைப்போம்.
19 இப்பொழுது நீங்கள் பின்வரும் சங்கீதத்தை எழுதிக்கொண்டு, அதை இஸ்ராயேல் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவர்கள் அதை மனப்பாடமாய்க் கற்றுக்கொண்டு தங்கள் வாயால் பாடட்டும், இந்தச் சங்கீதமே இஸ்ராயேல் மக்களுக்குள் நமக்குச் சாட்சியாமாய் இருக்கக்கடவது.
20 உள்ளபடி அவர்கள் மூதாதையருக்கு நாம் ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் பொழியும் நாட்டிலே அவர்களைப் புகச் செய்த பிற்பாடு, அவர்கள் உண்டு குடித்து நிறைவு கொண்டு கொழுத்துப் போயிருக்கும்போது, அவர்கள் அந்நியதேவர்களிடமாய்த் திரும்பி அவர்களைத் தொழுது, நம்மை நிந்தித்து, நமது உடன்படிக்கையை வீணாக்குவார்கள்.
21 ஆதலால், பல தீமைகளும் இன்னல்களும் அவர்களைத் தொடர்ந்து வதைத்த பிற்பாடு, அவர்களுடைய சந்ததியாரின் வாயில் மறந்து போகாதிருக்கும் இந்தச் சங்கீதமே அவர்களுக்குச் சாட்சி மொழியாய் இருக்கும். ஏனென்றால், நாம் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் அவர்களை உட்படுத்துவதற்குமுன், இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கிற எண்ணங்கள் இன்னதென்றும், அவர்கள் செய்யப் போகிறது இன்னதென்றும் நமக்கு நன்றாய்த் தெரியும் என்றருளினார்.
22 ஆகையால் மோயீசன் சங்கீதத்தை எழுதி இஸ்ராயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
23 பிறகு ஆண்டவர் நூனின் புதல்வனாகிய யோசுவாவை நோக்கி: நீ வீரம் கொண்டு மனத்துணிவுடன் இரு. ஏனென்றால் நீதான் இஸ்ராயேல் மக்களுக்கு நாம் கொடுப்போம் என்று சொல்லிய நாட்டிற்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவாய்; நாம் உன்னுடன் இருப்போம் என்றார்.
24 மோயீசனோ இந்தத் திருச்சட்டத்தின் வாக்கியங்களை ஒரு நூலில் எழுதி முடித்தபின்பு,
25 ஆண்டவருடைய உடன்படிக்கையின் பெட்டகத்தைச் சுமக்கிற லேவியர்களை நோக்கி:
26 நீங்கள் இந்த நீதி நூலை வாங்கிக் கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய பெட்டகத்தின் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அங்கே உனக்கு எதிரான சாட்சியாய் இருக்கும்.
27 ஏனென்றால், நான் உன் பிடிவாத குணத்தையும் உன் வணங்காக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன். இன்று நான் உயிரோடிருந்து உங்களோடு அலைந்து திரியும்போது நீங்கள் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தீர்களே; நான் இறந்த பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம் செய்வீர்கள்! 28 உங்கள் கோத்திரங்களின்படியே எல்லாப் பெரியோர்களையும் அறிஞர்களையும் கூட்டிவாருங்கள், நான் அவர்கள் கேட்க இவ்வாக்கியங்களை எடுத்துரைத்து, அவர்களுக்கு விரோதமாய் விண்ணையும் மண்ணையும் சாட்சியாய் வைப்பேன்.
29 ஏனென்றால், என் இறப்பிற்குப் பிற்பாடு நீங்கள் விரைவில் அக்கிரமமாய் நடப்பீர்களென்றும், நான் உங்களுக்குக் கற்பித்துவந்துள்ள நெறியை விட்டு விலகுவீர்களென்றும், நீங்கள் ஆண்டவருடைய முன்னிலையில் பொல்லாததைச் செய்து உங்கள் கைச் செயலினாலே ஆண்டவருக்குக் கோபம் வருவிக்கும்போது, கடைசி நாட்களில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடுமென்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று சொன்னார்.
30 ஆகையால், இஸ்ராயேல் சபையார் எல்லாரும் கேட்க மோயீசன் இந்தச் சங்கீதத்தின் வாக்கியங்களை முடிவு வரையிலும் சொல்லத் தொடங்கினார்.
அதிகாரம் 32
1 நான் பேசபோகிறேன்; வானங்களே, செவி கொடுங்கள். பூவுலகே, என் வாய்மொழியை உற்றுக்கேட்பாயாக.
2 (வானத்து) மழை ஏராளமாய்ப் பொழிவதுபோல் என் அறிவுரை மேன்மேலும் பொழிவதாக. பனித்துளிகள் புல்லின் மேலும், மழைத்துளிகள் சமவெளிகளின் மேலும் இறங்குவதுபோல என் வாக்கியங்கள் இறங்குவனவாக.
3 நான் ஆண்டவருடைய திருப்பெயரைப் போற்றிப் புகழ்ந்து வருவதனால் நம்முடைய கடவுளை மேன்மைப்படுத்திப் பாராட்டக்கடவீர்கள்.
4 அவர் செய்யும் செயல்கள் உத்தமமானவை. அவருடைய வழிகளெல்லாம் நேர்மையானவை. கடவுள் பிரமாணிக்கமுள்ளவர். அவர்பால் யாதொரு பழுதுமில்லை. அவர் நீதி நிதானமுள்ள கடவுள்.
5 அவர்களோ அவருக்கு விரோதமாய்ப் பாவத்தைக் கட்டிக்கொண்டார்கள். அவர்கள் தீட்டுள்ளவர்களாயிருக்கையிலே அவருடைய பிள்ளைகளாயிராமல் கொடிய தீய மக்களாய் இருந்ததார்கள். மதிகெட்ட மூடமக்களே,
6 ஆண்டவருக்கு இப்படியா நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் ? உன்னை ஆட்கொண்ட தந்தை அவர் அல்லரோ ? உன்னைப் படைத்து, உருவாக்கித் தமதாக்கினவர் அவர் அல்லரோ ?
7 ஆரம்ப நாட்களை நினைத்துப்பார்; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற ஆண்டுகளைக் கவனித்துப்பார். உன் தந்தையைக் கேள்; அவன் உனக்கு அறிவிப்பான். உன் பெரியோர்களைக் கேள்; அவர்கள் உனக்கு மறுமொழி சொல்வார்கள்.
8 மிகவும் உன்னதமானவர் வெவ்வேறு இனத்தவருக்கு வெவ்வேறு உரிமைகளைப் பங்கிட்டு ஆதாமின் புதல்வரை வெவ்வேறாகப் பிரித்தபொழுது, இஸ்ராயேலின் புதல்வருடைய கோத்திரத் தொகைக்குத் தக்கதாகவே எல்லா இனத்தாரின் எல்லைகளையும் திட்டம் செய்தார்.
9 ஆண்டவருடைய மக்களோ அவருடைய உரிமை; யாக்கோபோ அவருடைய உடைமையின் சங்கிலியாம்.
10 அவர் பாழான நாட்டிலும் பயங்கரத்துக்குரிய ஆளற்ற பரந்த இடத்திலும் அவர்களைக் கண்டுபிடித்தார். அவர் சுற்று வழியாய் அவர்களை நடத்தி, உணர்த்தி, தமது கண்மணியைப்போல் காத்தருளினார்.
11 கழுகு தன் குஞ்சுகளின்மேல் பறந்து அவைகளைப் பறக்கும்படி தூண்டுவது போலவும், தன் இறக்கைகளை விரித்துக் குஞ்சுகளை அவற்றின்மேல் வைத்துச் சுமப்பது போலவும்,
12 ஆண்டவர் ஒருவரே அவர்களை நடத்தினார். அந்நிய கடவுள் அவர்களோடு இருந்ததேயில்லை.
13 அவர் உயர்ந்த இடத்தன்மேல் அவர்களை வைத்து, வயலில் விளையும் பலன்களை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். கல்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவர்கள் உண்ணும்படி செய்தார்.
14 பசுவின் வெண்ணெயையும் ஆடுகளின் பாலையும், பாசானின் புதல்வர்களுடைய ஆட்டுக்குட்டி, ஆட்டுக்கிடாய்களுடைய கொழுப்பையும், கொழுத்த வெள்ளாடுகளையும், சிறந்த கோதுமையையும் உண்ணவும், இரத்தம் போன்ற தன்னியல்பான கொடிமுந்திரிப் பழச்சாற்றைக் குடிக்கவும் அவர்களுக்குத் தந்தருளினார்.
15 அன்பு செய்யப்பட்ட ( மகன் ) கொழுத்துப் போய் உதைக்கத் தொடங்கினான். அவன் கொழுத்துப் பருத்தபோது, தன்னைக் காக்கும் கடவுளுக்கு முதுகைக் காட்டி விலகினான்.
16 அந்நிய தேவர்களை வணங்கியதனாலே அவர்கள் அவருக்கு எரிச்சலை மூட்டி, அருவருப்பானவைகளால் அவரது கோபத்தைத் தூண்டி விட்டார்கள்.
17 அவர்கள் கடவுளுக்குப் பலியிடுவதை விட்டு, தாங்கள் அறியாத தேவார்களாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். புதிதாய்த் தோன்றிய, தங்கள் மூதாதையர் கும்பிடாத, புதுத் தெய்வங்களுக்கே (வழிபாடு செய்தார்கள்).
18 உன்னைப் பெற்ற கடவுளை விட்டு, உன்னை உருவாக்கிய ஆண்டவரை மறந்து விட்டாயே! 19 ஆண்டவர் அதனைக் கண்டார். தம்முடைய புதல்வரும் புதல்வியரும் தமது கோபத்தை மூட்டியதினால் அவர் குரோதமுள்ளவராகிக் கூறினார்:
20 ஆ! இவர்கள் கெட்டார்கள்; வஞ்சனையுள்ள புதல்வரானார்கள்; ஆதலால், நம் முகத்தை அவர்களுக்கு மறைத்து, அவர்களுடைய முடிவு எப்படிப்பட்டதாய் இருக்குமோவென்று பார்போம்.
21 அவர்கள் தெய்வமல்லாதவைகளாலும் நமக்கு எரிச்சல் வருவித்து, தங்கள் வீணான தீச் செயல்களாலும் நமக்கு முடிவு உண்டாகச் செய்தார்களே; இதோ நம் மக்களென்று மதிக்கப்படாதவர்கள் மூலமாய் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட இனத்தவர்களாலேயே அவர்களுக்குக் கோபம் உண்டாகச் செய்வோம்.
22 நம்முடைய கோபத்தின் நெருப்பு மூண்டது. அது நாகத்தின் அடிவரையிலும் எரியும். அது நிலத்தையும் அதன் விளைச்சலையும் எரித்து விடுவதுமன்றி, மலைகளின் அடித்தளங்களையும் வேகச் செய்யும்.
23 நாம் பற்பல தீங்குகளை அவர்கள்மீது குவியச் செய்து, நம்முடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் எய்து தீர்போம்.
24 அவர்கள் பசி மிகுதியால் வாடி மடிந்து போவார்கள். பறவைகள் தங்கள் கொடிய அலகினால் அவர்களைக் கொத்தித் தின்னும். அவர்களை வதைக்கக் கூரிய பற்களையுடைய கொடிய உயிரினங்களையும், பாம்புகளையும் அவர்கள்பால் ஏவுவோம்.
25 வெளியே வாளும் உள்ளே மிக்க அச்சமும், இளைஞளையும் கன்னியையும் பாலுண்ணும் குழந்தையையும் கிழவனையும் அழிக்கும்.
26 நாம்: அவர்கள் எங்கே என்றோம். மனிதருக்குள் அவர்கள் பெயர் முதலாய் மறைந்து போகும்படி செய்வோம்.
27 ஆனால், அவர்களுடைய பகைவர்களின் குரோதத்தைப் பற்றி நாம் பொறுத்துக் கொண்டோம். ஒரு வேளை அவர்கள் அகங்காரம் கொண்டு: நாங்கள் இந்தக் காரியங்களை எல்லாம் எங்கள் வலுவுள்ள சொந்தக் கையினால் செய்தோமேயன்றி ஆண்டவர் அவற்றைச் செய்தாரல்லர் என்று வீம்பு பேசக்கூடும்.
28 அவர்கள் மதிகெட்ட விவேகமற்ற மக்களல்லரோ ?
29 ஆ! அவர்கள் ஞானத்தை அடைவது எப்போது ? அவர்களுக்கு எப்போதுதான் அறிவு உண்டாகும் ? தங்களுக்கு என்னகதி வரப் போகிறதென்று அவர்கள் யோசிக்காதிருக்கிற தென்ன ?
30 ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவது இயலுமோ ? இரண்டுபேர் பதினாயிரம் வீரரைத் தோற்கடிப்பது கூடுமானதோ ? தங்கள் கடவுள் அவர்களை ஒப்புக்கொடுப்பதினாலும் ஆண்டவர் அவர்களை அடைப்பதினாலும் தானே அது நிகழக்கூடும் ?
31 அவர்களுடைய கடவுளைப் போலன்று நம்முடைய கடவுள், இது உண்மையென நம் பகைவர்களே சாட்சியாயிருக்கின்றனர்.
32 அவர்களுடைய கொடிமுந்திரி சோதோமிலும் கொமோரா வயல்வெளிகளிலும் பயிராகிவிட்டது. அவர்களுடைய கொடிமுந்திரிப் பழம் பிஞ்சுப்பழமே; அவர்களுடைய கொடிமுந்திரிக் குலைகள் கைப்பும் கசப்பும் உள்ளவைகளே.
33 அவர்களுடைய கொடிமுந்திரிப் பழச்சாறு வேதாளங்களின் பித்தமும் நச்சுப் பாம்புகளின் கொடிய நஞ்சும் போன்றது.
34 இது நம்மிடத்தில் சேமிக்கப்பட்டு நம் கருவூலங்களில் வைத்து முத்திரை போடப்பட்டிருக்கிறதன்றோ ?
35 பழிக்குப் பழி வாங்குவதும், ஏற்ற காலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடச் செய்து, பதிலுக்குப் பதில் அளிப்பதும் நம்முடைய தொழிலே. அவர்களுடைய அழிவு நாள் இதோ நெருங்கியிருக்கிறது, குறிக்கப்பட்ட காலங்கள் ஓடி வருகின்றன.
36 ஆண்டவர் தம் மக்களை நியாயந் தீர்த்து, தமக்கு அன்பு செய்து பணி புரிவோர்மேல் மனம் இறங்குவார்; அவர்களுக்குக் கை தளர்ந்ததென்றும், அடைக்கப்பட்டவர்கள் முதலாய்ச் சோர்ந்து போனார்களென்றும், மீதியானவர்கள் சோகமுற்றுச் சிதைந்தார்களென்றும் காண்பார்.
37 அப்பொழுது அவர்: அவர்கள் நம்பியிருந்த தேவர்கள் எங்கே ?
38 இவர்களுக்கு தாங்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பை அவர்கள் தின்றார்களே; பானப் பலிகளின் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் குடித்தார்களே. இப்போது (அந்தத் தேவர்கள்) வந்து துன்பத்தில் அகப்பட்ட அவர்களுக்கு உதவி செய்யட்டும் (பார்ப்போம்) சிந்தித்துப் பாருங்கள். நாம் மட்டுமே இருக்கிறவர்.
39 நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. நாம் மட்டுமே கொல்லுகிறோம். உயிர்ப்பிக்கிறோம். நாம் மட்டுமே காயப்படுத்தி, காயப்பட்டவனைக் குணமாக்குகிறோம். நம் கையில் அகப்பட்டோரைத் தப்புவிப்பார் இல்லை.
40 நம் கையை மேலே உயர்த்தி: இதோ நாம் நித்திய காலமாய் வாழ்கிறவர் என்போம்.
41 நாம் மின்னலைப்போல் நமது வாளைக் கூராக்கி நம் கையில் நியாயத்தைப் பிடித்துக்கொண்டு வருவோமாயின், நம் பகைவரிடம் பழிவாங்கி, நம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்போமன்றோ ?
42 கொலையுண்டவர்களின் இரத்தத்திற்காகவும் சிறைப்பட்ட தலையில் கவசமில்லாப் பகைவரின் இரத்தத்திற்காகவும் நம் அம்புகளை இரத்தவெறி கொள்ளச் செய்து, நம் வாள் இறைச்சியை உண்ணச் செய்வோம் என்பார்.
43 மக்களே, அவருடைய குடிகளைப் போற்றிப் புகழுங்கள். எனென்றால், அவர் தம் ஊழியர்களின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, அவர்களுடைய பகைவர்களுக்குப் பதிலளித்து, தம் குடிகளுடைய நாட்டின்மேல் இரக்கம் உள்ளவராவார் என்றார்.
44 மோயீசனும் நூனின் புதல்வன் யோசுவாவும் வந்து, இந்தச் சங்கீதத்தின் வாக்கியங்களையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொல்லத்தொடங்கினார்கள்.
45 பேசி முடித்த பின் மோயீசன் இஸ்ராயேல் சபையார் எல்லாரையும் நோக்கி:
46 இந்தத் திருச்சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் கவனமாய்க் கற்றுக்கொள்ளக்கடவீர்கள். உங்கள் பிள்ளைகளும் அவைகளைக் கைக்கொண்டு அனுசரிக்கும்படி கவனமாயிருக்கச் சொல்லுங்கள். இந்தத் திருச்சட்டத்தின் எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளின்படியும் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குக் கற்பிக்கக்கடவீர்கள். அவை உண்மையானவை என்று நானே உறுதியளிக்கிறேன்.
47 அவை உங்களுக்குக் கற்பிக்கப்பட்டது வீணாய் அன்று; உங்களுக்கு அவை வாழ்வாய் இருக்கும்படியாகவும், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகவிருக்கிற நாட்டில் நீடூழி வாழும்படியாகவுமே (அந்தச் சட்டத்தின் கட்டளைகள் விதிக்கப்பட்டன) என்று சொல்லிப் பேச்சை முடித்தார்.
48 அந்த நாளிலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
49 நீ எரிக்கோ (நகரத்திற்கு) எதிரான மோவாப் நாட்டிலுள்ள இந்த அபரிம் -- அதாவது: கடத்தல் -- என்னப்பட்ட மலைகளில் நெபோ மலையின்மேல் ஏறி, நாம் இஸ்ராயேல் மக்களுக்கு உடைமையாகக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டைப் பார்த்துவிட்டு, அவ்விடத்தில்தானே உயிரை விடுவாய்.
50 உள்ளபடி நீயும் ஆரோனும் - நீங்கள் இருவருமே -சீன்பாலைவனத்லுள்ள காதேஸில் வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்திலே நமக்கு விரோதமாய் நடந்து, இஸ்ராயேல் மக்களுக்குள்ளே நம்மைப் பரிசுத்தம் செய்யாமல் நமது கட்டளையை மீறினீர்கள்.
51 எனவே, உன் சகோதரனாகிய ஆரோன் ஓர்ப் என்னும் மலையிலே இறந்து தன் முன்னோரிடம் சேர்க்கப்பட்டதுபோல, நீ ஏறப்போகிற இந்த மலையில் ஏறிப்போய் இறந்து உன் முன்னோருடன் சேர்க்கப்படுவாய்.
52 நான் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற நாட்டை நீ பார்ப்பாய்; பார்த்தாலும், அதற்குள் நீ புகுவதில்லை என்று திருவுளம்பற்றினார்.
அதிகாரம் 33
1 கடவுளின் ஊழியனாகிய மோயீசன் இறக்குமுன் இஸ்ராயேல் மக்களுக்கு ஆசீரளித்துக் கூறிய ஆசிமொழியாவது:
2 ஆண்டவர் சீனாயினின்று வந்து செயீரிலிருந்து நமக்குள்ளே எழுந்தருளினார். அவர் பாரான் மலையிலிருந்து ஆயிரமாயிரம் புனிதர்கள் சூழத் தரிசனமானார். அவருடைய வலக்கையில் நெருப்புமயமான சட்டம் இருந்தது. அவர் மக்களை நேசித்தார்.
3 புனிதர்கள் யாவரும் அவருடைய கையில் இருக்கின்றனர். அவருடைய மலரடியினை அண்டி வருகிறவர்கள் அவருடைய (வார்த்தையினால்) போதனை பெறுவார்கள்.
4 மோயீசன் நமக்கு ஒரு நீதிச் சட்டத்தைக் கொடுத்தார். அது யாக்கோப் சந்ததியாரின் மரபுரிமையாகும்.
5 இஸ்ராயேலின் தலைவர்களும் கோத்திரங்களும் கூட்டமாய்க் கூடிய மிகவும் புனித இனத்துக்கு அவர் அரசர். ரூபன் சாகாமல் வாழ்வான்.
6 ஆனால், அவன் மக்கள் கொஞ்சமாய் இருப்பார்கள்.
7 யூதாவைக் குறித்த ஆசீராவது: யூதாவின் குரலொலியைக் கேளும், ஆண்டவரே. அவனைத் தன் மக்களோடு சேர்ந்திருக்கச் செய்யும். அவன் புயம் இஸ்ராயேலுக்கு உதவியாகப் போராடும்; பகைவருடைய கையினின்று அவனை விடுதலையாகக் உதவியாய் இருக்கும் என்றார்.
8 பிறகு லேவியை நோக்கி: (ஆண்டவரே, ) உம்முடைய முழு நிறைவான புண்ணிய மேன்மையும் ஞானமும் நீர் தேர்ந்துகொண்ட உமது புனித ஊழியனுக்கு உண்டு. நீர் அவனை ஒரு சோதனையில் பரிசோதித்து, வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்தில் அவன்மேல் தீர்ப்புச் சொன்னீர்.
9 அவன் தன் தந்தைக்கும் தாய்க்கும்: நான் உங்களை அறியேன் என்றும், தன் சகோதரருக்கு: நீங்கள் யாரோ என்றும் சொன்னான். (லேவியர்கள்) தங்கள் பிள்ளைகளையும் பாராமல், உம் வார்த்தைகளைக் கைக்கொண்டு உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்கள்.
10 அவர்கள் யாக்கோபே, உன் நீதிச்சட்டத்ததையும், இஸ்ராயேலே, உன் கட்டளைகளையும் (கைக்கொண்டு அனுசரித்தோம் என்கிறார்கள்.) ஆண்டவரே, நீர் கோபமாயிருக்கும்போது அவர்கள் உமக்குத் தூபம் காட்டி, உம்முடைய பலிபீடத்திலே முழுத்தகனப் பலியை இடுவார்கள்.
11 ஆண்டவரே, (லேவியுடைய) வல்லமையை ஆசீர்வதியும்; அவன் கைச் செயல்களுடன் (இரும்). அவன் பகைவர்களின் முதுகுகளை நொறுக்கிவிடும்; அவன் எதிரிகள் எழுந்திராதபடி செய்யும் என்றார். அப்பால் பெஞ்சமினை நோக்கி:
12 இவன் ஆண்டவரால் அதிகமாய் நேசிக்கப்பட்டவனாகையால், அவரோடு நம்பிக்கையாய் வாழ்வான். அவன் அவரோடு படுத்துக்கொண்டு, அவருடைய இரு கைகளின் நடுவே தூங்குவான் என்றார்.
13 பிறகு சூசையை நோக்கி: இவனுடைய நிலம் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்படுவதாக: அது வானத்து வரங்களின் கனி மிகுதியினாலும், பனியின் பலன்களினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளின் பலன்களினாலும்,
14 சூரிய சந்திரன் பக்குவப்படுத்தும் பலன்களினாலும்,
15 பழமையான மலைகளில் உண்டாகும் செல்வத்தினாலும், நித்திய குன்றுகளில் அகப்படும் அரும் பழங்களினாலும்,
16 நிலத்தின் பலன்களினாலும் அதன் முழு நிறைவான விளைச்சலினாலும் செல்வத்தை அடையக்கடவது. முட்செடியில் தரிசனமானவருடைய ஆசீர் சூசை தலையின்மேலும் அவன் சகேதரருள் சிறந்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வரக்கடவதாக.
17 இவனழகு பசுவின் தலையீற்றுக்காளையின் அழகைப் போலாம். இவன் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகளை ஒத்தனவாம். அவைகளாலே மக்களை நாட்டின் கடைக் கோடிவரையிலும் அவன் முட்டித் துரத்துவான் என்றார். எபிராயீமின் படைகளும் மனாஸேயின் படைவீரார்களும் அவ்வாறே இருப்பார்கள் என்றார்.
18 ஸபுலோனை நோக்கி: ஸபுலோவே, உன் ஏற்றுத் துறைகளிலும், இஸாக்காரே, உன் கூடாரங்களிலும் மகிழக்கடவீர்கள்.
19 இவர்கள் மக்களை மலைகளிடம் அழைப்பார்கள்; அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள். கடற் செல்கங்களையும் மணலில் மறைத்து கிடக்கும் செல்வங்களையும் பாலைப்போல் உறிஞ்சுவார்கள் என்றார்.
20 காத்தை நோக்கி: காத் தன் பரந்த நாட்டில் ஆசீர் பெற்றுச் சிங்கம்போல் இளைப்பாறி, ஒரு புயத்தையும் ஒரு தலையையும் பீறினான்.
21 அவன் தன் உரிமையிலே சட்ட வல்லுநன் ஒருவனைக் கொண்டிருத்தலாகிய சிறந்த மகிமையைக் கண்டு மகிழ்ந்தான். அந்தச் சட்ட வல்லுநன் மக்களின் தலைவர்களுடன் இருந்து, ஆண்டவருக்கடுத்த நீதிச் சட்டங்களையும் விதித்து, இஸ்ராயேலரிடையே நீதித்தலைவனாய் இருந்தான் என்றார்.
22 தானை நோக்கி: தான் என்கிறவன் சிங்கக்குட்டியாம். அவன் பாசானிலிருந்து (பாய்ந்து) தூரமாய்ப் பரவுவான் என்றார்.
23 நெப்தலியை நோக்கி: நெப்தலி செல்வம் உடையவனாய் நிறைவு கொண்டிருப்பான். அவன் ஆண்டவருடைய ஆசீரால் நிறைந்திருப்பான். அவன் கடற் திசையையும் தென்திசையையும் உரிமையாக்கிக் கொள்வான் என்றார்.
24 ஆஸேரை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குள் ஆஸேர் ஆசீர் பெற்றவன். அவன் தன் சகோதரருக்கு விருப்பமாய் இருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
25 இரும்பும் செம்பும் அவனுக்குக் காலணியாம். நீ உன் இளமையில் இருந்ததுபோல முதுமையிலும் இருப்பாய்.
26 மாபெரும் நீதிபதியான மக்களின் கடவுளுக்கு நிகரான இறைவன் ஒருவரும் இல்லை. வானத்தின்மேல் ஏறிப்போகிறவரே உனக்கு உதவியாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் மேன்மையைக் கண்டு மேகங்கள் அஞ்சிச் சிதறிப்போகும்.
27 அவருடைய உறைவிடமோ உன்னதத்தில் உள்ளது. அவருடைய நித்திய கையோ கீழே வீற்றிருக்கின்றது. அவர் உன் முன்பாக நின்று உன் பகைவனைத் தள்ளிவிட்டு: நெருங்கக்கடவாய் என்பார்.
28 இஸ்ராயேல் ஆபத்திற்கு அஞ்சாமல் தனித்து வாழ்ந்திருக்கும். யாக்கோபு கொடி முந்திரிப் பழச்சாற்றையும் கோதுமையையும் விளைவிக்கிற நிலத்தை நோக்குவான். பனி மிகுதியால் வானம் மங்கிப்போகும்.
29 இஸ்ராயேலே, நீ பேறுபெற்றவன். ஆண்டவரால் மீட்கப்பட்ட இனமே, உனக்கு நிகர் யார் ? ஆண்டவர் உனக்குக் குதிரையும் கேடயமும் உன் மகிமையைக் காக்கும் வாளுமாய் இருக்கிறார். உன் பகைவர்கள் உன்னை நிந்திப்பார்கள். நீயோ அவர்களுடைய கழுத்தை மிதித்து முறித்து விடுவாய் என்றார்.
அதிகாரம் 34
1 இதன்பிறகு மோயீசன் மோவாபின் வெளிகளிலிருந்து எரிக்கோவுக்கு எதிராயுள்ள நேபோ மலையிலிருக்கும் பஸ்காக் கொடுமுடியில் ஏறினார். அப்போழுது ஆண்டவர் தான் வரையிலுமுள்ள கலாத் நாடு அனைத்தையும், நெப்தலி நாடு முழுவதையும்,
2 எபிராயீம் மனாஸே என்பவர்களின் நாட்டையும், கடைக்கோடிக் கடல் வரையுள்ள யூதா நாடு அனைத்தையும்,
3 தென்னாடுகளையும், சேகோர் வரையிலுள்ள பனைமர நகரமாகிய எரிக்கோவின் வெளிகளையும் காண்பித்தார்.
4 பின்பு ஆண்டவர் மோயீசனை நோக்கி: உங்கள் சந்ததிக்குக் கொடுப்போம் என்று நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுச் சொல்லிய நாடு இதுவே. நீ அதைக் கண்ணாலே கண்டாய். அனால், நீ அதனுள் புகுவதில்லை என்றார்.
5 ஆண்டவரின் ஊழியனாகிய மோயீசன் மோவாப் நாடான அவ்விடத்தில்தானே ஆண்டவருடைய கட்டளைப்படி இறந்ததார்.
6 ஆண்டவர்தாமே அவரைப் பொகோருக்கு எதிராக மோவாபின் பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தமையால், இந்நாள் வரையிலும் ஒருவனும் அவருடைய கல்லறையை அறியான்.
7 மோயீசன் இறந்தபோது அவருக்கு வயது நூற்றிருபது. ஆயினும், அவருடைய கண் மங்கினதுமில்லை; பற்கள் உதிர்ந்ததுமில்லை.
8 இஸ்ராயேல் மக்கள் மோயீசனுக்காக முப்பது நாட்கள் மோவாப் வெளிகளில் அழுத பின்பு, மோயீசனுக்காக இழவு கொண்டாடினவர்களுடைய துக்கம் முடிவுபெற்றது.
9 மோயீசன் நூனின் புதல்வனான யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்திருந்தமையால், இவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். இஸ்ராயேல் மக்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து, ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து வந்தார்கள்.
10 ஆண்டவரை முகமுகமாய்க் கண்டறிந்த மோயீசனுக்கு நிகரான வேறொரு இறைவாக்கினர் இஸ்ராயேலரிடையே அவருக்குப்பின் உதித்ததேயில்லை.
11 ஆண்டவர் அவர் வழியாய் எகிப்து நாட்டிலே பரவோனுக்கும் பரவோனின் ஊழியர்களுக்கும் பரவோனின் நாடு அனைத்திற்கும் விரோதமாய்ச் செய்து காண்பித்த எல்லா அடையாளம் முதலிய அற்புத அதிசயங்களிலிருந்தும்,
12 மோயீசனே இஸ்ராயேல் சபையார் எல்லாருக்கும் முன்பாகச் செய்து வந்த வல்லமை பொருந்திய நிகழ்ச்சிகள், ஆச்சரியமான செயல்களிலிருந்தும் மோயீசன் நிகரில்லாதவர் என்பது உறுதி.