அதிகாரம் 01
1 யாக்கோபோடு எகிப்தில் குடியேறிய இஸ்ராயேல் புதல்வரின் பெயர்களாவன: தத்தம் குடும்பத்தாரோடு அந்நாட்டில் குடியேறினவர்கள்,
2 ரூபன், சிமையோன்,
3 லேவி, யூதா, இசக்கார், சாபுலோன், பெஞ்சமின், தான், நெப்தலி,
4 காத், ஆசேர் முதலியோராம்.
5 ஆதலால், யாக்கோபிற்குப் பிறந்த யாவரும் எழுபது பேர். சூசையோ ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
6 இவனும், இவனுடைய சகோதரர், அவர்கள் தலைமுறையார் எல்லாரும் இறந்த பின்னர்,
7 இஸ்ராயேல் மக்கள் பலுகி, பெரும் திரளாய்ப் பெருகி, மிகவும் வலிமை படைத்தவர்களாய் அந்நாட்டை நிரப்பினர்.
8 இதற்கிடையில் புதிய அரசன் ஒருவன் எகிப்தை ஆள எழுந்தான். இவனோ சூசையை அறியாதவன்.
9 எனவே தன் மக்களை நோக்கி: இதோ, இஸ்ராயேல் புதல்வராகிய மக்கள் பெரும் திரளாய், நம்மிலும் வல்லவராய் இருக்கிறார்கள்.
10 வாருங்கள், அவர்கள் பெருகாதபடி நாம் அவர்களைத் தந்திரமாய் வதைக்க வேண்டும். இல்லாவிடில், ஏதேனும் போர் நேரிடும் காலத்தில் அவர்கள் நம் பகைவரோடு கூடி நம்மை வென்று நாட்டை விட்டுப் புறப்பட்டுப் போகக் கூடும் என்றான்.
11 அப்படியே அவன், சுமை சுமக்கும் கடின வேலையினால் அவர்களைத் துன்புறுத்தச் சொல்லி, வேலை வாங்கும் மேற்பார்வையாளரை நியமித்தான். அப்பொழுது அவர்கள் பாரவோனுக்குக் களஞ்சிய நகரங்களாகிய பிட்டோமையும் இராம்சேசையும் கட்டி எழுப்பினார்கள்.
12 ஆயினும், அவர்களை எவ்வளவுக்கு வருத்தினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் பெருகிப் பலுகினார்கள்.
13 எகிப்தியர் இஸ்ராயேல் மக்களைப் பகைத்துப் பழித்துத் துன்புறுத்தினர்.
14 சாந்து, செங்கல் சம்பந்தமான கொடிய வேலைகளாலும், மண் தொழில்களுக்குரிய பல வகைப் பணிவிடைகளாலும் அவர்களைக் கொடுமைப் படுத்தியதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையே கசப்பாகும்படி செய்தனர்.
15 அன்றியும், எகிப்து மன்னன், எபிரேயருக்குள் மருத்துவம் பார்த்து வந்த செவொறாள், பூவாள் என்பவர்களை நோக்கி:
16 நீங்கள் எபிரேயப் பெண்களுக்கு மருத்துவம் பார்க்கையில் பேறுகாலமாகும்போது ஆண்பிள்ளையானால் கொல்லுங்கள்; பெண்ணானால் காப்பாற்றுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
17 மருத்துவச்சிகளோ, கடவுளுக்குப் பயந்திருந்தமையால், எகிப்து மன்னனின் கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.
18 மன்னன் அவர்களைத் தன்னிடம் அழைப்பித்து: நீங்கள் என்ன காரணத்தின் பொருட்டு ஆண் குழந்தைகளைக் காப்பாற்றினீர்கள் என்று கேட்டான்.
19 அவர்கள்: எபிரேய மாதர்கள் எகிப்திய மாதர்களைப் போல் அல்லவே; அவர்கள் மருத்துவத் தொழிலை அறிவார்களாதலால், நாங்கள் அவர்களிடம் போய்ச்சேரு முன்பே பிள்ளை பிறந்து விடுகிறது என்று பதில் கூறினர்.
20 இதன் பொருட்டு கடவுள் மருத்துவச்சிகட்கு நன்மை புரிந்தார். மக்களோ, விருத்தி அடைந்து அதிக வல்லமையுற்றனர்.
21 மருத்துவச்சிகள் கடவுளுக்குப் பயந்து நடந்தமையால் அவர், அவர்களுடைய குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
22 அதன் பின், பாரவோன்: பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் ஆற்றில் எறிந்து விடுங்கள்; பெண் குழந்தைகளையெல்லாம் காப்பாற்றுங்கள் என்று தனது மக்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.
அதிகாரம் 02
1 அதன் பிறகு லேவி கோத்திரத்து மனிதன் ஒருவன் தனது கோத்திரத்துப் பெண்ணைக் கொண்டான்.
2 இவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். அவன் வடிவழகு உள்ளவனென்று கண்டு, அவனை மூன்று மாதமாய் ஒளித்து வைத்திருந்தாள்.
3 பிறகு குழந்தையை ஒளிக்க இயலாமையால், அவள் ஒரு நாணல் கூடையை எடுத்து, அதைக் களிமண்ணாலும் தாராலும் பூசி, அதனுள்ளே குழந்தையை வைத்து, ஆற்றங்கரைக் கோரைக்குள்ளே அதைப் போட்டுவிட்டாள்.
4 பிள்ளையின் சகோதரியோ என்ன நிகழுமோ என்று, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
5 அப்பொழுது பாரவோனின் புதல்வி நீராட வந்து ஆற்றிலே இறங்கினாள். அவளுடைய பணிப் பெண்கள் கரையோரத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அவள் கோரைகளுக்குள் கூடையைக் கண்டு, தன் பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பி, அதைக் கொண்டு வரச்செய்தாள்.
6 அதைத் திறந்தபோது, அதனுள் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையைக் கண்டாள். உடனே அதன் மீது இரக்கம் கொண்டாள். எபிரேயருடைய குழந்தைகளில் இது ஒன்றாகும் என்றாள்.
7 அந்நேரத்திலே குழந்தையின் சகோதரி அவளை நோக்கி: குழந்தைக்குப் பாலுட்டும்படி எபிரேயப் பெண்களில் ஒருத்தியை உம்மிடம் அழைத்துக் கொண்டு வரட்டுமா என்றாள்.
8 அவள்: ஆம், அழைத்து வா என்று பதில் கூறவே, சிறுமி போய்த் தன் தாயை அழைத்து வந்தாள்.
9 பாரவோன் புதல்வி அவளை நோக்கி: நீ இச்சிறுவனை எடுத்து எனக்காக வளர்த்திடுவாய். நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன் என்று வாக்களித்தாள். அந்தப் பெண், சிறுவனை ஏற்றுக் கொண்டு வளர்த்தாள். பிறகு, பிள்ளை பெரிதான போது,
10 அதைப் பாரவோன் புதல்வியிடம் கொண்டுபோய் விட்டாள். இவளோ, அவனைச் சொந்தப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு: அவனை நான் தண்ணீரினின்று எடுத்தேன் என்று கூறி, அவனுக்கு மோயீசன் என்று பெயரிட்டாள்.
11 மோயீசன் பெரியவனான காலத்தில் தன் சகோதரரிடம் போய், அவர்கள் கடும் துன்பம் அனுபவிப்பதையும், எபிரேயராகிய தன் சகோதரரில் ஒருவனை ஒர் எகிப்தியன் அடிப்பதையும் கண்டான்.
12 அவன் இங்கும் அங்கும் சுற்றிப் பார்த்து ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி வீழ்த்தி மண்ணில் புதைத்துவிட்டான்.
13 அவன் மறுநாளும் வெளியே போகையில் எபிரேய மனிதர் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவன் அநியாயம் செய்தவனை நோக்கி: நீ உன் அயலானை அடிப்பதென்ன என்று கேட்டான்.
14 அதற்கு அவன்: எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும் நடுவராகவும் நியமித்தவன் யார்? நேற்று நீ எகிப்தியனைக் கொன்றது போல் என்னையும் கொன்று விட நினைக்கிறாயோ என்று பதில் சொன்னான். அதைக் கேட்ட மோயீசன்: அச்செய்தி எவ்வாறு வெளிப்பட்டது என்று அச்சம் கொண்டான்.
15 பாரவோனும் இச்செய்தியைக் கேட்டு அறியவே, மோயீசனைக் கொலை செய்ய வழி தேடினான். இவனோ, அவன் முன்னிலையினின்று ஓடிப் போய், மதியான் நாட்டிலே தங்கி, ஒரு கிணற்றருகே உட்கார்ந்தான்.
16 மதியான் நாட்டுக் குருவுக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் தண்ணீர் முகந்து வந்து, தொட்டிகளை நிரப்பி, தங்கள் தந்தையின் மந்தைகட்குத் தண்ணீர் காட்டவிருக்கையில்,
17 ஆயர்கள் திடீரென வந்து அவர்களைத் துரத்தினர். மோயீசனோ, எழுந்து சென்று பெண்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
18 அவர்கள் தங்கள் தந்தையாகிய இராகுவேலிடம் திரும்பி வந்த போது, அவன்: நீங்கள் இவ்வளவு விரைவில் வந்ததென்ன என்று கேட்டான்.
19 அவர்கள்: எகிப்தியன் ஒருவன் எங்களை ஆயர்கள் கையினின்று காப்பாற்றினான். மேலும், அவன் எங்களுடன் தண்ணீர் முகந்து நம் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் என்றனர்.
20 அதற்கு அவர்: அம்மனிதன் எங்கே இருக்கிறான்? அவனை நீங்கள் விட்டு வந்ததென்ன? உணவு உண்ண அவனை அழைத்து வாருங்கள் என்றார்.
21 மோயீசன் வந்து, தான் அவரோடு தங்கியிருப்பதாக உறுதி கூறினான்; பின்னர் அவர் மகள் செப்பொறாளை மணந்து கொண்டான்.
22 இவள் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். மோயீசன்: நான் வெளிநாட்டில் அந்நியனாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனை யேற்சம் என்று அழைத்தான். பிறகு அவள் மற்றொரு மகனைப் பெற்றாள். அவன்: உண்மையாகவே என் தந்தையின் கடவுள் எனக்கு உதவி புரிந்து என்னைப் பாரவோன் கையினின்று காப்பாற்றினர் என்று சொல்லி, அவனுக்கு எலியேசேர் என்று பெயரிட்டான்.
23 நெடுநாள் சென்றபின், எகிப்து மன்னன் இறந்தான். இஸ்ராயேல் மக்கள், வேலைகளின் பொருட்டுத் துயரப்பட்டுப் பெரும் கூக்குரலிட்டனர். அவர்கள் முறைப்பாடு, அவர்கள் வேலை செய்த இடத்தினின்று இறைவனுக்கு எட்டியது.
24 கடவுள் அவர்களுடைய புலம்பலைக் கேட்டு, தாம் ஆபிராகம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25 பின் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்கள் நிலையும் அவர் அறிந்திருந்தார்.
அதிகாரம் 03
1 மோயீசன் மதியான் நாட்டுக் குருவாகிய யெத்திரோ என்னும் தன் மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், மந்தையைப் பாலைநிலத்தின் உட்புறமாய் ஒட்டிக் கொண்டு, தெய்வ (காட்சி) மலை எனப்படும் ஒரேபு மலைவரை வந்தான்.
2 ஆண்டவரோ, ஒரு முட்செடியின் நடுவினின்று, நெருப்புக் கொழுந்து உருவத்தில் அவனுக்குக் காட்சியளித்தார். அவன், முட்செடி வெந்து போகாமலே எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
3 ஆகவே, மோயீசன்: நான் போய், முட்செடி வெந்துபோகாமல் எரிகிற இந்த அதிசயக் காட்சியைப் பார்ப்பேன் என்றான்.
4 ஆனால், அவன் உற்றுப் பார்க்க வருவதை ஆண்டவர் கண்டு, முட்செடியின் நடுவினின்று: மோயீசா, மோயீசா என்று அவனை அழைக்க, அவன்: இதோ இருக்கிறேன் என்று மறுமொழி கூறினான்.
5 அவர்: அணுகி வராதே! உன் காலணிகளைக் கழற்றி விடு. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
6 மீண்டும் அவர்: உன் தந்தையின் கடவுள், ஆபிராகமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நாமே என்றருளினார். மோயீசன், கடவுளை உற்றுப் பார்க்கத் துணியாது தன் முகத்தை மூடிக் கொண்டான்.
7 ஆண்டவர் அவனை நோக்கி: எகிப்தில் நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளைக் கண்ணுற்றோம். வேலை வாங்கும் மேற்பார்வையாளரின் கொடுமையின் பொருட்டு அவர்கள் இடுகிற கூக்குரலையும் கேள்வியுற்றோம்.
8 நாம் அவர்கள் துயரத்தை அறிந்தமையால், அவர்களை எகிப்தியர் கைகளினின்று விடுவித்துக் காப்பாற்றவும், இந்த நாட்டிலிருந்து நல்ல பரந்த நாட்டிலே, பாலும் தேனும் பொழியும் பூமியிலே, கானானையர், ஏத்தையர், ஆமோறையர், பாரேசையர், ஏவையர், யெபுசேயர் வாழும் இடங்களிலே, அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கி வந்தோம்.
9 இஸ்ராயேல் மக்களின் அழுகுரல் நம்மை எட்டியது. அவர்கள் எகிப்தியரால் வதைக்கப்படும் தொல்லையையும் கண்டுள்ளோம்.
10 ஆனால், நீ வா; இஸ்ராயேல் மக்களாகிய நம் மக்கள் எகிப்தினின்று புறப்படும் பொருட்டு உன்னைப் பாரவோனிடம் அனுப்புவோம் என்றார்.
11 மோயீசனோ, கடவுளை நோக்கி: பாரவோனிடம் போகவும், இஸ்ராயேல் மக்களை எகிப்தினின்று அழைத்து வரவும் நான் எம்மாத்திரம் என்றான்.
12 அவர்: நாமே உன்னோடு இருப்போம். அதுவுமன்றி, நீ நம் மக்களை எகிப்தினின்று வெளியேறச் செய்த பின்னர், இம்மலையின் மீதே கடவுளுக்குப் பலி இடுவாய். நாம் உன்னை அனுப்பினோம் என்பதற்கு இதுவே அடையாளமாகும் என்று அருளினார்.
13 மோயீசன் கடவுளை நோக்கி: இதோ நான் இஸ்ராயேல் மக்களிடம் போய்: உங்கள் முன்னோரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார் என்று நான் சொல்லும்போது, அவர்கள்: அவருடைய பெயர் என்ன என்று என்னைக் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் என்றான்.
14 கடவுள் மோயீசனைநோக்கி: இருக்கிறவர் நாமே. (ஆதலால்,) நீ இஸ்ராயேல் மக்களிடம் போய்: இருக்கிறவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்லுவாய் என்றார்.
15 மீண்டும் கடவுள் மோயீசனை நோக்கி: உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளாய் இருக்கிறவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்லுவாய். என்றும் நமது பெயரும் இதுவே; தலைமுறை தலைமுறையாக நமது நினைவுச் சின்னமும் இதுவே.
16 நீ போய், இஸ்ராயேலரில் பெரியோர்களைக் கூட்டி அவர்கட்குச் சொல்லுவாய்: உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் எனக்குக் காட்சி கொடுத்துத் திருவாக்கருளினதாவது: நாம் உங்களைச் சந்திக்க வந்தோம்; உங்களுக்கு எகிப்திலே நேரிட்ட யாவையும் கண்டு கொண்டோம்;
17 ஆதலால், நாம் உங்களை எகிப்தின் துன்ப துயரத்தினின்று விடுவித்து, கானானையர், ஏத்தையர், ஆமோறையர் பாரேசையர், ஏவையர், யெபுசேயர் வாழும் நாட்டிற்கு, பாலும் தேனும் பொழியும் பூமிக்கு, கூட்டிக் கொண்டு போகத் திருவுளம் கொண்டோம்.
18 அவர்கள் உன் சொல்லுக்குச் செவி கொடுப்பார்கள். பின், நீ இஸ்ராயேலின் பெரியோர்களோடு எகிப்து மன்னனிடம் போய்: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களை அழைத்திருக்கிறார். நாங்கள் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டும் என்று அவனுக்குச் சொல்லுவாய்.
19 ஆனால், எகிப்து மன்னன் (நம்) கை வல்லமை கண்டாலொழிய உங்களைப் போகவிடமாட்டான் என்று அறிவோம்.
20 ஆதலால், நாம் கையை நீட்டி எகிப்தியரிடையே பல வகை அற்புதங்களையும் செய்து அவர்களைத் தண்டிப்போம். அதன்பின், அவன் உங்களைப் போகவிடுவான்.
21 மேலும், நாம் இம்மக்களுக்கு எகிப்தியர் கண்களில் தயவு கிடைக்கச் செய்வதால், நீங்கள் புறப்டும் பொழுது வெறுமையாய்ப் போவதில்லை.
22 எவ்வாறு என்றால், ஒவ்வொரு பெண்ணும் தன்தன் அயல் வீட்டுக்காரியிடமும், பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் ஆடைகளையும் கேட்டு வாங்குவாள். நீங்களோ, அவற்றை உங்கள் புதல்வர், புதல்வியர்களுக்கு அணிவித்து, எகிப்தைக் கொள்ளையிட்டுப் போவீர்கள் என்று அருளினார்.
அதிகாரம் 04
1 அப்பொழுது மோயீசன் (ஆண்டவரை நோக்கி): அவர்கள் என்னை நம்பவும் மாட்டார்கள்; என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவும் மாட்டார்கள்: ஆண்டவர் உனக்குக் காட்சி தரவில்லை என்று சொல்வார்களே என்று பதில் கூறினான்.
2 அவர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். அவன்: அது ஒரு கோல் என்று பதில் சொல்ல,
3 ஆண்டவர்: அதைத் தரையிலே போடு என்றார். அவன் போடவே, அது பாம்பாக மாறிப் போயிற்று. அது கண்டு மோயீசன் விலகி ஓடினான்.
4 அப்பொழுது ஆண்டவர்: உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடி என்று சொன்னார். அவன் பிடிக்கவே, அது அவன் கையிலே கோலாயிற்று.
5 ஆண்டவர்: உன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளாய் இருக்கிறவரே உனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர்கள் நம்பும் பொருட்டு (இதுவே அடையாளம்) என்றார்.
6 மீண்டும் ஆண்டவர்: உன் கையை உன் மடியிலே வை என, அவன் மடியிலே வைத்து எடுத்த போது, அது உறை பனிபோல வெண் தொழுநோய் பிடித்து இருந்தது.
7 அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே வை என, அவன் திரும்ப வைத்து எடுத்துப் பார்க்க, அது மற்ற சதையைப் போல் ஆயிற்று.
8 அப்பொழுது ஆண்டவர்: சிலவேளை அவர்கள் முந்தின அடையாளத்தைக் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், பிந்தின அடையாளத்தைக் கண்டு உன்னை நம்புவார்கள்.
9 அவர்கள் இவ்விரண்டு அற்புதங்களையும் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், அப்பொழுது ஆற்று நீரை முகந்து அதைத் தரையிலே ஊற்று. ஆற்றில் முகந்த நீர் எல்லாம் இரத்தமாக மாறிப்போம் என்றார்.
10 மோயீசன்: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேளும்: நேற்றும் நேற்று முன்தினமும் நான் பேச்சுத் திறன் உள்ளவன் அல்லேன். சிறப்பாக, நீர் அடியேனுக்குத் திருவாக்கு அருளினது முதல், நான் திக்கு வாயனும் மந்த நாவு உள்ளவனும் ஆனேன் என்றான்.
11 ஆண்டவர் அவனை நோக்கி: மனிதனின் வாயை உண்டாக்கினவர் யார்? அன்றியும், ஊமையனையும் செவிடனையும், கண்பார்வை உள்ளவனையும் பார்வையற்ற குருடனையும் படைத்தவர் யார்?
12 நாம் அல்லவா? ஆகையால், நீ போ. நாம் உன் வாயோடு இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குச் சொல்லிக் கொடுப்போம் என்றார்.
13 அதற்கு அவன்: ஆண்டவரே! கெஞ்சிக் கேட்கிறேன், எவனை அனுப்ப வேண்டுமோ அவனை அனுப்பியருளும் என்று சொல்லக் கேட்டு,
14 ஆண்டவர் மோயீசன்மீது சினம் கொண்டவராய்: லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் சொற்றிறம் மிக்கவன் என்று அறிந்திருக்கிறோம். அதோ, அவன் உனக்கு எதிர்கொண்டு வருகிறான். உன்னைக் கண்டதும் அவன் மனமகிழ்வான்.
15 நீ அவனோடு பேசி, நம் வாக்குக்களை அவன் வாயிலே இடு. நாமோ, உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்துகொண்டு, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவோம்.
16 அவன் உனக்குப் பதிலாய் மக்களிடம் பேசி, உனக்கு வாயாக இருப்பான். நீயோ, கடவுளுக்கு அடுத்தவைகளில் அவனுக்குக் குருவாய் இருப்பாய்.
17 இந்தக் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. அதைக்கொண்டே அற்புதங்களைச் செய்துவருவாய் என்று அருளினார்.
18 மோயீசன் திரும்பிப் போய்த் தன் மாமனாகிய யெத்திரோவிடம் வந்து: எகிப்தில் இருக்கிற என் சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்த்து வரும்படி நான் போய் வருகிறேன் என்று அவருக்குச் சொல்ல, யெத்திரோ: சமாதானமாய்ப் போய் வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
19 ஆண்டவர் மதியானிலே மோயீசனை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போகலாம். ஏனென்றால், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லாரும் இறந்து போனார்கள் என்று உரைத்தார்.
20 அப்பொழுது மோயீசன் தன் மனைவியையும் புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு, அவர்களைக் கழுதையின்மீது ஏற்றி, கடவுள் தந்த கோலைத் தன் கையில் எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் பயணமானான்.
21 எகிப்திற்குத் திரும்பிச் செல்லுகையில் ஆண்டவர் அவனை நோக்கி: நாம் உன் கையில் வைத்துக் கொடுத்த எல்லா அற்புதங்களையும் பாரவோன் முன்னிலையில் செய்து காட்டக் கவனமாய் இரு. நாம் அவன் மனத்தைக் கடினமாக்கி விடுவோமாதலால், அவன் மக்களைப் போக விடான்.
22 அப்போது நீ அவனுக்குச் சொல்ல வேண்டியது என்ன என்றால்: ஆண்டவர் சொல்லுவதாவது: இஸ்ராயேல் நம் மூத்த புதல்வன்.
23 நமக்கு ஆராதனை செய்யும்படி நம் புதல்வனை அனுப்பி விடு என்று நாம் உனக்குக் கட்டளை இட்டிருந்தும், நீ அவனை அனுப்பிவிட மாட்டேன் என்றாய். ஆதலால், இதோ நாம் உன் மூத்த மகனைக் கொல்ல இருக்கின்றோம் என்பாய் என்றார்.
24 மேலும், மோயீசன் வழியே சென்றுகொண்டிருக்கையில், ஆண்டவர் ஒரு சாவடியில் அவனைச் சந்தித்து, அவனைக் கொல்ல எண்ணியிருந்தார்.
25 உடனே செப்போறாள் மிகக் கூர்மையான ஒரு கல்லை எடுத்துத் தன் புதல்வனின் நுனித்தோலை வெட்டி, பின் அவன் கால்களைத் தொட்டு: நீர் எனக்கு இரத்தப் பழியின் கணவர் என்றாள்.
26 விருத்த சேதனத்தைப் பற்றி: இரத்தப் பழியின் கணவர் என்று அவள் சொன்ன உடனே ஆண்டவர் அவனை விட்டு விலகினார்.
27 இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி: பாலைவனத்திலே மோயீசனுக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார். தெய்வ மலைப் பக்கம் அவனுக்கு எதிர்கொண்டு சென்ற, அவனை முத்தமிட்டான்.
28 அப்பொழுது மோயீசன் தன்னை அனுப்பிய ஆண்டவரின் எல்லா வார்த்தைகளையும், அவர் கட்டளையிட்ட அற்புதங்களையும் ஆரோனுக்கு விளக்கிச் சொன்னான்.
29 பின், இருவரும் சேர்ந்து போய், இஸ்ராயேல் மக்களில் பெரியோர் அனைவரையும் கூட்டினர்.
30 அப்போது, ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் சொல்லி, மக்களுக்கு முன்பாக அற்புதங்களையும் செய்தான்.
31 மக்களும் நம்பினார்கள். ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய தொல்லைகளைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும் அவர்கள் அந்நேரம் அறிந்து கொண்டு, நெடுங்கிடையாய் விழுந்து தொழுதனர்.
அதிகாரம் 05
1 அதற்குப் பின் மோயீசனும் ஆரோனும் பாரவோனிடம் போய்: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்: பாலைவனத்திலே நமக்கு வழிபாடு செய்யும்படி நம் மக்களைப் போக விடு என்கிறார் என்றனர்.
2 அதற்கு அவன்: நான் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு இஸ்ராயேலரைப் போக விட வேண்டிய தென்ன? அந்த ஆண்டவர் யார்? நான் ஆண்டவரையும் அறியேன்; இஸ்ராயேலரைப் போக விடவும் மாட்டேன் என்றான்.
3 அதற்கு அவர்கள்: எபிரேயரின் கடவுள் எங்களை அழைத்து, பாலைவனத்தில் மூன்று நாள் பயணம் செய்து கடவுளாகிய எமது ஆண்டவருக்குப் பலி செலுத்தும்படி திருவுளமானார். நாங்கள் போகாவிடில், கொள்ளை நோயும் வாளும் எங்கள்மேல் வரக்கூடும் என்றனர்.
4 அதற்கு எகிப்து மன்னன்: மோயீசா, ஆரோனே, தங்கள் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் மக்களைக் குழப்பி விடுவதென்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.
5 மீண்டும் பாரவோன்: (உங்கள்) இனத்தார் நாட்டில் மிகுந்து போயிருக்கிறார்கள். ஒருவரும் கவனியாமையால், அவர்கள் பெரும் திரளாய்ப் பெருகிப் பலுகியிருக்கிறார்கள் என்று உங்களுக்குச் சலுகை காட்டினால், மேன்மேலும் விருத்தி அடைவார்களே என்றான்.
6 அதே நாளில், அவன் வேலை வாங்கும் விசாரணைக்காரர்களுக்கும் ஊர்த் தலையாரிகளுக்கும் கட்டளை இட்டதாவது:
7 செங்கல் வேலை செய்வதற்காக நீங்கள் அந்த இனத்தாருக்கு முன்போல வைக்கோல் கொடுக்க வேண்டாம். அவர்களே போய் வைக்கோலைச் சேர்த்து வரட்டும்.
8 மேலும், அவர்கள் முன்பு செய்து கொடுத்த கணக்குக்குச் சரியாகச் செங்கல் அறுத்துக் கொடுக்கக் கடவார்கள். அதிலே நீங்கள் சிறிதும் குறைக்க வேண்டாம். அவர்கள் சோம்பேறியாய் இருப்பதால் அல்லவா, நாங்கள் போய் எங்கள் கடவுளுக்குப் பலியிடுவோம் என்று கூச்சலிட்டிருக்கின்றார்கள்?
9 அவர்களின் பொருளற்ற எவ்விதப் பேச்சுக்களுக்கும் செவி கொடாமல், நீங்கள் அவர்களுக்குத் தாளாத வேலை இட்டு வாருங்கள். அவர்களும் அதைக் கண்டிப்பாய்ச் செய்து முடிக்கக் கடவர்.
10 ஆகையால், வேலைவாங்கும் மேற்பார்வையாளரும் ஊர்த் தலையாரிகளும் புறப்பட்டுச் சென்று, மக்களை நோக்கி: பாரவோன் சொல்லுவதாவது: உங்களுக்கு நாம் வைக்கோல் கொடோம்.
11 நீங்களே போய், எங்கேயாவது தேடிக் கொள்ளுங்கள். உங்கள் வேலையோ சிறிதுகூடக் குறைக்கப்படாது என்றனர்.
12 ஆதலால், மக்கள் வைக்கோல் சேகரிக்கும்படி எகிப்து நாட்டின் நான்கு திக்கிலும் அலைந்து திரிந்தனர்.
13 மீண்டும் வேலைவாங்கும் மேற்பார்வையாளர் அவர்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்பட்டு வந்த நாட்களில் நீங்கள் எந்தக் கணக்கின்படி செய்து வந்தீர்களோ, இப்போதும் அந்தக் கணக்குப்படி நாள் தோறும் வேலை செய்து முடிக்க வேண்டும் எள்று வலியுறுத்திச் சொன்னார்கள்.
14 பாரவோன் நியமித்திருந்த தலையாரிகள் இஸ்ராயேல் மக்கள்மேல் நியமித்திருந்த கண்காணிப்பாளரை நோக்கி: செங்கல் வேலையிலே பழைய கணக்குப்படி நீங்கள் நேற்றும் இன்றும் ஏன் செய்து முடிக்கவில்லை என்று சொல்லி, அவர்களைக் கசையால் அடித்து வந்தனர்.
15 அப்போது இஸ்ராயேல் மக்கள் மேல் கண்காணிப்பாளராய் இருந்தவர்கள் வந்து, பாரவோனை நோக்கிக் கூச்சலிட்டு: நீர் அடியோர்களை இப்படி விரோதித்துச் செய்வதென்ன?
16 வைக்கோலோ எங்களுக்குத் தரப்படுவதில்லை. செங்கல்களை முன் போல அறுத்துத்தீர வேண்டியிருக்கிறதே! இதோ, அடியோர்கள் கசைகளால் அடிபடுகிறோம். உம் மக்களுக்கு அநீதி செய்யப்பட்டு வருகிறதே! (என்றனர்).
17 அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாய் இருப்பதனால் அல்லவா, ஆண்டவருக்குப் பலியிடப் போவோம் என்கிறீர்கள்? நல்லது.
18 போய் வேலையைச் செய்யுங்கள். வைக்கோலும் உங்களுக்குத் தரப்படா; வாடிக்கையான செங்கற் கணக்கை நீங்கள் செலுத்தியாகவும் வேண்டும் என்றான்.
19 அப்போது, இஸ்ராயேல் மக்களின் கண்காணிப்பாளர்கள்: நீங்கள் ஒவ்வொரு நாளும் அறுத்துத் தீரவேண்டிய செங்கற் கணக்கிலே ஒன்றும் குறைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டதைப் பற்றித் தங்களுக்கு இக்கட்டு நேரிட்டிருப்பது கண்டு, பாரவோன் முன்னிலையினின்று புறப்பட்டு வந்தனர்.
20 அப்பொழுது, வழியிலே நின்றுகொண்டிருந்த மோயீசனையும் ஆரோனையும் சந்தித்து, அவர்களை நோக்கி:
21 ஆண்டவர் உங்களை விசாரித்துத் தீர்வையிடக் கடவாராக. ஏனென்றால், நீங்கள் பாரவோனுக்கும் அவன் ஊழியருக்கும் முன்பாக, எங்கள் நறுமணத்தை நாற்றமாக மாற்றி, அவர்கள் எங்களைக் கொல்லும்படியான வாளை, அவர்கள் கையிலே கொடுத்திருக்கிறீர்களே என்று முறையிட்டனர்.
22 அப்பொழுது மோயீசன் ஆண்டவரிடம் திரும்பிப் போய்: ஆண்டவரே, நீர் இந்த மக்களுக்குத் துன்பம் வருவித்ததென்ன?
23 அடியேனை ஏன் அனுப்பினீர்? இதோ, நான் உம்முடையை பெயரைச் சொல்லிப் பாரவோனிடம் சென்று பேசினது முதல், அவன் உம் மக்களைத் தொல்லைப் படுத்தி வருகிறான். நீர் அவர்களை விடுதலையாக்கவில்லையோ என்றார்.
அதிகாரம் 06
1 அப்போது, ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் பாரவோனுக்குச் செய்வதை நீ இப்பொழுதே காணப்பெறுவாய். உண்மையிலே அவன் (நமது) வலுத்த கையைக் கண்டே அவர்களைப் போகவிட்டு, வற்புறுத்தித் தன் நாட்டிலிருந்து புறப்படும்படி, தானே அவர்களை மன்றாடுவான் என்று அருளினார்.
2 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் ஆண்டவர்.
3 நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எல்லாம் வல்ல கடவுளாய்க் காட்சியளித்தவர். ஆயினும், அதோனாயி என்னும் நமது பெயரை அவர்களுக்குத் தெரிவித்தோமில்லை.
4 அவர்கள் அந்நியர்களாய் அலைந்து திரிந்த கானான் நாட்டை அவர்களுக்கு அளிப்பதாக அவர்களோடு உடன்படிக்கை செய்தோம்.
5 எகிப்தியர் அவர்களை வதைத்ததின் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் விட்ட பெருமுச்சைக் கேட்டு, நமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தோம்.
6 ஆகையால், நீ நம் பெயராலே இஸ்ராயேல் மக்களை நோக்கி: ஆண்டவராகிய நாமே எகிப்தியருடைய சிறையினின்றும் உங்களை விடுதலையாக்கி, அடிமைத்தனத்தினின்றும் மீட்டு, ஓங்கிய கையாலும் பெரும் தண்டனைகளினாலும் உங்கனை நாம் ஈடேற்றுவோம்.
7 மேலும், உங்களை நம் சொந்த மக்களாகத் தெரிந்து கொள்வோம். அஃதோடு, உங்கள் கடவுளாகவும் இருப்போம். பிறகு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமென்று அறிவீர்கள். எந்த அடையாளத்தினால் என்று கேட்டால், உங்களை நாம் எகிப்தியருடைய சிறையினின்று விடுவித்து,
8 ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுக்கு நாம் கொடுப்பதாக ஆணையிட்டு வாக்களித்த நாட்டிலே உங்களைக் குடியேறச் செய்வதனாலே தான். உண்மையில், ஆண்டவராகிய நாம் அதை உங்களுக்கு உடைமையாய்க் கொடுப்போம் என்று சொல்லுவாய் என்றார்.
9 அவ்வண்ணமே மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார். அவர்களோ, மன வருத்தத்தையும் தாளாத வேலையையும் முன்னிட்டு, அவருக்குச் செவிகொடுக்கவில்லை.
10 அதன் பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
11 நீ எகிப்திய மன்னன் பாரவோனிடம் சென்று, அவன் இஸ்ராயேல் மக்களைத் தன் நாட்டினின்று அனுப்பி விடுமாறு சொல் என்றார்.
12 மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்றுகொண்டு: இஸ்ராயேல் மக்களே என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவில்லை; பாரவோன் எப்படிச் செவி கொடுப்பான்? அதிலும் நான் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையவன் அல்லவா என்றார்.
13 ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் அவ்வண்ணமே பேசினார். இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று போக வேண்டிய காரியத்தைப் பற்றி, அந்த மக்களிடத்திலும் எகிப்திய மன்னன் பாரவோனிடத்திலும் அவர் சொன்ன கட்டளைகள் அவையேயாம்.
14 குடும்ப வரிசைப்படி கோத்திரத் தலைவர்களாவன: இஸ்ராயேலின் மூத்த புதல்வனான ரூபனின் புதல்வர்கள்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மீ ஆகியோர். இவர்களே ரூபனின் கோத்திரத்தார்.
15 சிமையோனின் மக்கள்: ஜமுவேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோவார், கானானையப் பெண்ணின் மகன் சவூல் முதலியோர். இவர்களே சிமையோனின் கோத்திரத்தார்.
16 வம்ச வரிசைப்படி லேவியின் மக்கள்: யெற்சோன், காவாத், மெராரி இவர்களேயாம். லேவியின் வாழ்நாளோ, நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகளாம்.
17 யேற்சோனின் மக்கள், தங்கள் வம்ச வரிசைப்படி: லோப்னி, சேமையி ஆகியோர்.
18 காவாத்தின் மக்கள்: அம்ராம், இசார், எபிரோன், ஒசியேல் ஆவர். காவாத் நூற்று முப்பத்து மூன்று ஆண்டுகாலம் வாழ்ந்தான்.
19 மெராரியின் மக்கள் மொகோலியும் மூசியுமாம். இவர்களே வம்ச வரிசைப்படி லேவியின் வழித்தோன்றல்கள்.
20 அம்ராம் தன் தந்தையின் சகோதரன் மகளாகிய யொக்காபேத்தை மணந்து கொண்டான். அவனுக்கு அவள் வயிற்றில் மோயீசனும் ஆரோனும் பிறந்தனர். அம்ராம் வாழ்ந்த ஆண்டுகள் நூற்றுமுப்பத்தேழு.
21 இசாரின் மக்களோ, கோரையும் நெபேகும் செக்கிரியுமாம்.
22 ஒசியேலின் மக்களோ மிசயேலும் எலிசபானும் செத்திரியுமாம்.
23 ஆரோன் அமினதாபின் மகளும் நாகசோனின் சகோதரியுமான எலிசபெத்தை மணந்து கொண்டான். இவள் அவனுக்கு நதாப், அபியு, எலியெசார், இத்தமார் என்பவர்களைப் பெற்றாள்.
24 கோரையின் மக்களோ, ஆசேரும் எல்கானாவும் அபியசாபுமாம். இவர்கள் கோரையின் வழித்தோன்றல்களாம்.
25 ஆரோனின் மகனான எலியெசார், புத்தியேலின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டான். இவள் அவனுக்குப் பினேஸ் என்பவனைப் பெற்றாள். வம்ச வரிசைப்படி லேவி கோத்திரத்தாரின் தலைவர் இவர்களே.
26 இஸ்ராயேல் மக்களை அணியணியாக எகிப்து நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று ஆண்டவரால் கட்டளை பெற்ற மோயீசனும் ஆரோனும் இவர்களே.
27 எகிப்தினின்று இஸ்ராயேல் மக்களைக் கூட்டிக்கொண்டு போகும் பொருட்டு, எகிப்து மன்னன் பாரவோனோடு பேசின மோயீசனும் ஆரோனும் இவர்களே.
28 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளிய நாளிலே,
29 ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாமே ஆண்டவர். நாம் உன்னோடு பேசுகிற எல்லாவற்றையும் எகிப்து மன்னன் பாரவோனுக்குச் சொல்லுவாய் என்ற போது,
30 மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்று கொண்டு: அடியேன் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையனாய் இருக்க பாரவோன் எனக்கு எப்படிச் செவி கொடுப்பான் என்றார்.
அதிகாரம் 07
1 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ, உன்னை நாம் பாரவோனுக்குத் தெய்வமாக நியமித்திருக்கிறோம். உன் சகோதரனாகிய ஆரோனோ, உனக்காகப் பேசுபவனாய் இருப்பான்.
2 நாம் உனக்குத் தெரிவிக்கும் யாவற்றையும் நீ அவனுக்குச் சொல்ல வேண்டும். அவனோ, பாரவோனை நோக்கி, அவன் தன் நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை அனுப்பிவிடுமாறு சொல்வான்.
3 ஆனால், நாம் பாரவோனுடைய இதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து நாட்டிலே நம் அருங்குறிகளையும் அற்புதங்களையும் மிகுதியாகக் காட்டுவோம்.
4 ஆயினும், அவன் உங்களுக்குச் செவி கொடுக்க மாட்டானாதலால், நாம் எகிப்துக்கு விரோதமாய் நமது கையை ஓங்கி, மகத்தான தண்டனைகள் மூலம் நம் படைகளும் குடிகளுமாகிய இஸ்ராயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்வோம்.
5 நாம் எகிப்தின் மீது நமது கையை நீட்டி, இஸ்ராயேல் மக்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச் செய்யும் போது, நாமே ஆண்டவர் என்று எகிப்தியர் அறிந்து கொள்வார்கள் என்றார்.
6 ஆகையால் மோயீசனும் ஆரோனும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்து, அவ்விதமே நடந்தனர்.
7 அவர்கள் பாரவோனிடம் போய்ப் பேசின போது, மோயீசனுக்கு வயது எண்பதும் ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்றுமாம்.
8 மீண்டும், ஆண்டவர் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளி:
9 அற்புதங்களைக் காட்டுங்கள் என்று பாரவோன் உங்களுக்குச் சொல்லும் பொழுது, நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து, பாரவோனுக்கு முன்பாகப் போடு என்பாய்; அது பாம்பாய் மாறிவிடும் என்றார்.
10 அவ்வாறே, மோயீசனும் ஆரோனும் பாரவோனிடம் போய், ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தனர். அதாவது, ஆரோன் பாரவோனுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கோலை எடுத்து எறிய, அது பாம்பாக மாறியது.
11 பாரவோனோ, ஞானிகளையும் மந்திரவாதிகளையும் வரவழைத்தான். இவர்களோ, எகிப்தில் வழங்கிய மந்திரங்களைக் கொண்டும், பல இரகசிய தந்திரங்களைக் கொண்டும் அவ்வண்ணமே செய்து காட்டினர்.
12 அதாவது, அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் கோலைப் போட்டதும், அவையெல்லாம் பாம்புகளாக மாறின. ஆயினும், ஆரோன் கோல் அவர்களுடைய கோல்களையெல்லாம் விழுங்கிவிட்டது.
13 ஆதலால், பாரவோனின் இதயம் கடினமாகிவிட்டது. ஆண்டவர் சொல்லியிருந்தபடியே, அவன் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் செவி கொடுக்கவில்லை.
14 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: பாரவோனின் இதயம் கடினமாகி விட்டது. மக்களை அனுப்பிவிட அவனுக்கு மனமில்லை.
15 நீ காலையில் அவனிடம் போ. அப்பொழுது அவன் ஆற்றை நாடி வந்து கொண்டிருப்பான். நீ ஆற்றங் கரையிலே அவனுக்கு எதிராகச் சென்று, பாம்பாய் மாறிய கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, பாரவோனை நோக்கி:
16 பாலைநிலத்தில் நமக்கு வழிபாடு செய்யும்படி நமது மக்களை அனுப்பி வை என்று சொல்லச் சொல்லி, எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பினாராயினும், இதுவரையிலும் நீர் கேளாமல் போனீர்.
17 ஆதலால், ஆண்டவர் சொல்லுவதாவது: நாம் ஆண்டவரென்று எதனால் அறிவாய் என்றால், இதோ என் கையிலிருக்கிற கோலினால் ஆற்றிலுள்ள தண்ணீரின்மேல் அடிப்பேன்; அடிக்கவே, தண்ணீர் இரத்தமாய் மாறிப்போகும்;
18 ஆற்றிலுள்ள மீன்கள் மாண்டு போக, தண்ணீர் நாறிப் போகுமாதலால், எகிப்தியர் ஆற்று நீரைக் குடித்துத் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்லுவாய் என்றார்.
19 பிறகு ஆண்டவர் மோயீசனை நோக்கி: ஆரோனுக்கு நீ சொல்ல வேண்டியதாவது: எகிப்தின் எவ்விடத்தும் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், அருவிகள், குளம் குட்டைகள், ஏரி முதலியவை எல்லாம் இரத்தமாய் மாறத்தக்கதாகவும், எகிப்தில் எங்கும் மரப்பாத்திரங்களும் கற்பாத்திரங்களும் இரத்தத்தால் நிறைந்திருக்கத் தக்கதாகவும், நீ கோலை எடுத்து உன் கையை நீட்டுவாயாக என்பதாம் என்றார்.
20 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோயீசனும் ஆரோனும் செய்தனர். மோயீசன் கோலை எடுத்து, பாரவோனுக்கும் அவன் ஊழியர்க்கும் முன்பாக ஆற்று நீரின்மேல் அடித்தார். அடிக்கவே, தண்ணீர் இரத்தமாய் மாறிப் போயிற்று.
21 அன்றியும், ஆற்றிலுள்ள மீன்களும் மடிய, ஆறும் நாற்றம் எடுத்தது. எனவே, எகிப்தியர் ஆற்று நீரைக் குடிக்க இயலாது போயிற்று. எகிப்து நாடெங்குமே இரத்த மயமாய் இருந்தது.
22 பின்பு எகிப்தியருடைய மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினாலே அவ்வண்ணமே செய்து காட்டினர். அது கண்டு பாரவோனின் இதயம் கடினமாகியது. ஆண்டவர் கட்டளைப்படி அவர்கட்குச் செவி கொடாது இருந்தான்.
23 அவன், முதுகைத் திருப்பிக் கொண்டு தன் வீட்டினுள் புகுந்து கொண்டானேயன்றி, இம் முறையும் அவன் மனம் இணங்கவேயில்லை.
24 ஆனால், ஆற்று நீர் குடிக்க உதவாமையால், குடிநீருக்காக எகிப்தியர் ஆற்றோரம் நெடுக ஊற்றுத் தோண்டினர்.
25 ஆண்டவர் ஆற்றை அடித்தது தொடங்கி எழு நாட்கள் கடந்துபோயின.
அதிகாரம் 08
1 மீண்டும், ஆண்டவர் மோயீசனைப் பார்த்து: நீ பாரவோனிடம் சென்று, அவனை நோக்கி: ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நமக்கு வழிபாடு செய்யும்படி நமது மக்களை அனுப்பிவிடு.
2 நீ, அனுப்பிவிட மாட்டேன் என்று சொன்னால், இதோ உன் எல்லை முழுதும் தவளைகளால் வதைத்துக் கண்டிப்போம்.
3 ஆறு, கொப்புளித்தாற்போலத் தவளைகளைப் பிறப்பிக்கும். அவை புறப்பட்டு வந்து, உன் வீட்டிலும், உன் படுக்கை அறையிலும், உன் படுக்கையின் மீதும், உன் ஊழியர்களின் வீடுகளிலும், உன் மக்களிடத்திலும், உன் அடுப்புக்களிலும், நீ உண்டு கழித்த எச்சில்களிலும் வந்து ஏறும்.
4 அவ்வாறே தவளைகள் உன்னிடத்திலும், உன் மக்களிடத்திலும், உன் ஊழியர் எல்லாரிடத்திலும் நுழையும் என்று ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லுவாய் என்றார்.
5 மேலும், ஆண்டவர் மோயீசனிடம்: நீ ஆரோனை நோக்கி: ஆறுகளின் மீதும், அருவிகள், சதுப்பு நிலங்கள் மேலும் உன் கையை நீட்டி, எகிப்து நாட்டின் மீது தவளைகள் எழும்பும்படி செய் என்று சொல் என்றார்.
6 அப்படியே ஆரோன், எகிப்தின் நீர் மீதெல்லாம் கையை நீட்டவே, தவளைகள் வெளிப்பட்டு எகிப்து நாட்டை மூடிக் கொண்டன.
7 மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினாலே அவ்வண்ணமே செய்து, எகிப்து நாட்டின்மேல் தவளைகள் வரும்படி செய்தனர்.
8 பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: இந்தத் தவளைகள் என்னையும் என் மக்களையும் விட்டு நீங்கும்படி ஆண்டவரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள். நானோ, ஆண்டவருக்குப் பலி செலுத்த மக்களை அனுப்பிவைப்பேன் என்றான். அதற்கு மோயீசன்:
9 தவளைகள் உம்மிடத்திலும் உம் வீட்டிலும் உம் ஊழியர்களிடத்திலும் உம் மக்களிடத்திலும் இல்லாமல் ஒழிந்து போய், ஆற்றிலே மட்டும் இருக்கும்படி, நான் உமக்காகவும் உம் ஊழியர்களுக்காகவும் உம் மக்களுக்காகவும் மன்றாட வேண்டிய காலத்தை நீர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்.
10 அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது மோயீசன்: எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகரானவர் இல்லை என்று நீர் அறிந்து கொள்ளும் பொருட்டு, நான் உமது வார்த்தையின் படியே செய்வேன்.
11 தவளைகள் உம்மையும் உம் வீட்டையும் உம் ஊழியர்களையும் உம் மக்களையும் விட்டு நீங்கும். ஆற்றிலே மட்டும் அவை இருக்கும் என்றார்.
12 மோயீசனும் ஆரோனும் பாரவோனை விட்டு அகன்றனர். பின் மோயீசன், தவளைகளை முன்னிட்டுப் பாரவோனுக்குக் கொடுத்திருந்த வாக்கின்படி ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
13 ஆண்டவர், மோயீசன் சொற்படி செய்தருளவே, தவளைகள் வீடுகளிலும் ஊர்களிலும் நிலங்களிலும் மாய்ந்து போயின.
14 மக்கள் அவற்றைப் பெரும் குவியல்களாகச் சேர்த்து வைத்தனர். அதனாலே அந்நாடெங்கும் நாற்றம் எடுத்தது.
15 அதன் பின்னும் பாரவோன், (தவளைகளின் தொல்லை) குறைந்து விட்டது கண்டு, தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டானேயன்றி, ஆண்டவர் திருவுளப்படி அவர்களுக்குச் செவி கொடுத்தானில்லை.
16 அப்பொழுது ஆண்டவர் மோயீசனிடம்: நீ ஆரோனைப் பார்த்து: உன் கையை நீட்டிப் பூமியின் புழுதிமேல் அடி; எகிப்து நாடெங்கும் கொசுக்கள் உண்டாகும் என்பாய் என்றார்.
17 அவர்கள் அப்படியே செய்தனர். ஆரோன் கோலைப் பிடித்தவனாய்க் கையை நீட்டிப் பூமியின் புழுதி மேல் அடிக்கவே, மனிதர்களிடமும் விலங்குகளிடமும் கொசுக்கள் உண்டாகி, எகிப்து நாடெங்கும் பூமியின் புழுதியெல்லாம் கொசு மயமாயிற்று.
18 மந்திரவாதிகள் தங்கள் மந்திர வித்தையினாலே கொசுக்கள் உண்டாகும்படி செய்ய முயன்றனர்; ஆனால் அவர்களால் இயலாது போயிற்று. கொசுக்களோ, மனிதர் மீதும் விலங்குகள் மீதும் நிலைத்திருந்தன.
19 மந்திரவாதிகள் பாரவோனை நோக்கி: இதிலே கடவுளுடைய விரலின் ஆற்றல் இருக்கிறது என்றனர். ஆயினும், பாரவோன் இதயம் கடினமாகவே இருந்தது. ஆண்டவர் கட்டளைப்படி அவன் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
20 மீண்டும் கடவுள் மோயீசனுக்குச் சொல்லுவார்: நாளை அதிகாலையில் நீ எழுந்து, பாரவோன் ஆற்றுக்குப் புறப்பட்டு வரும் நேரத்தில் அவனுக்கு முன் நின்று, ஆண்டவர் இவ்வாறு சொல்லுகிறார்: நமக்கு வழிபாடு செய்யும்படி நம்முடைய மக்களைப் போகவிடு;
21 நமது மக்களைப் போக அனுமதியாவிடில், இதோ நாம் உன் மேலும், உன் ஊழியர்கள் மேலும், உன் மக்களின் மேலும், உன் வீடுகளின் மேலும் எல்லா வித ஈக்களையும் ஏவி விடுவோம். பல வித ஈக்களினால் எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நாடு முழுவதும் நிரப்பப்படும்.
22 அப்படியிருந்தும், அப்பொழுது நமது மக்கள் குடியிருக்கிற யேசேன் பகுதியை அற்புத நிலமாக்கி, அதிலே யாதோர் ஈயும் இல்லாதிருக்கச் செய்வோம். அதன்மூலம் பூமியின் நடுவில் நாமே ஆண்டவரென்று நீயும் அறிந்துகொள்வாய்.
23 இவ்வாறு, நமது மக்களுக்கும் உனது மக்களுக்கும் வேற்றுமை காட்டுவோம். இவ்வேற்றுமை, நாளையே நடக்கும் என்று சொல்லுவாய் என்றார்.
24 ஆண்டவர் அவ்விதமே செய்தார். மிகக் கொடிய ஈக்கள் பாரவோனின் வீடுகளிலும், அவன் ஊழியரின் வீடுகளிலும், எகிப்து நாடெங்கும் உண்டாயின. அத்தகைய ஈக்களால் நாடு கெட்டுப் போயிற்று.
25 அப்பொழுது பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து நீங்கள் இங்கேயே உங்கள் கடவுளுக்கு வழிபாடு செய்யுங்கள் என்று அவர்களுக்குச் சொல்ல, மோயீசன்: அவ்வாறு செய்யத் தகாது. ஏனென்றால், எகிப்தியர் வெறுப்பனவற்றைக் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலி செலுத்த வேண்டும்.
26 எகிப்தியர் வழிபட்டு வருவனவற்றை அவர்கள் முன்னிலையிலேயே நாங்கள் அடிப்போமாயின், அவர்கள் எங்களைக் கல்லால் எறிவார்கள் அன்றோ?
27 நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாள் பயணம் செய்து, ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டபடி அவருக்குப் பலி செலுத்துவோம் என்றார்.
28 அப்பொழுது பாரவோன்: உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாலைவனத்திலே பலி செலுத்தும்படி நான் உங்களைப்போக விடுவேன். ஆயினும், நீங்கள் அதிகத்தூரம் போகாதீர்கள். எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் என்றான்.
29 அதற்கு மோயீசன்: நான் உம்மை விட்டுப் புறப்பட்ட உடனே ஆண்டவரை மன்றாடுவேன். நாளை ஈக்கள் பாரவோனையும் அவர் ஊழியர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும். ஆனால், நீர் இனிமேலும் ஆண்டவருக்குப் பலியிட மக்களைப் போக விடாமல் என்னை வஞ்சிக்க வேண்டாம் என்றார்.
30 பிறகு மோயீசன் பாரவோனிடமிருந்து புறப்பட்டுச் சென்று ஆண்டவரை மன்றாடினார்.
31 ஆண்டவர் அவர் சொற்படி அருள்கூர்ந்து, ஈக்கள் பாரவோனையும் அவன் ஊழியரையும் அவன் மக்களையும் விட்டு நீங்கச் செய்தார். அவற்றுள் ஒன்றேனும் மீதியாய் இருக்கவில்லை.
32 ஆயினும், பாரவோன் இதயம் கடினமாய் இருந்ததனால், இம்முறையும் அவன் மக்களைப் போக விடவில்லை.
அதிகாரம் 09
1 பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ பாரவோனிடம் போய் அவனுக்குச் செல்லுவாய்: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுவதாவது: நமக்குப் பலி செலுத்தும்படி நமது மக்களைப் போக விடு;
2 நீ: அவர்களைப் போக விடேன் என்று இன்னும் நிறுத்தி வைப்பாய் ஆயின்,
3 உன் வயல்களின் மேலும், உன் குதிரைகளின் மேலும், ஒட்டகங்களின் மேலும், ஆடுமாடுகளின் மேலும் மிகக் கொடியதொரு கொள்ளை நோய் உண்டாகும்.
4 அப்பொழுது ஆண்டவர் இஸ்ராயேலின் சொத்துக்களுக்கும் எகிப்தியரின் சொத்துக்களுக்கும் வேற்றுமை விளங்கும்படி ஓர் அதிசயத்தைச் செய்வார். இஸ்ராயேல் மக்களுக்கு உரியவற்றில் ஒன்றாகிலும் அழிந்து போகாது.
5 மேலும், ஆண்டவர் அதற்கென்று ஒரு நேரத்தைக் குறித்து வைத்திருக்கிறார். நாளையே அச்செயலைச் செய்து முடிப்பார் என்பாய் என்றார்.
6 ஆண்டவர் மறுநாள் அந்த வார்த்தையின்படி அவ்விதமே செய்து முடித்தார். அப்பொழுது எகிப்தியருக்குச் சொந்தமாயிருந்த மிருகங்கள் எல்லாம் மடிந்தன. இஸ்ராயேல் மக்களுக்கு உரியவற்றில் யாதொன்றும் சாகவில்லை.
7 பாரவோன் அதைப்பற்றி விசாரித்தான். இஸ்ராயேலுக்கு உரியவற்றில் ஒன்றேனும் சாகவில்லை. பாரவோனின் மனம் கடினமாகிவிட்டது. அவன் மக்களைப் போக விடவில்லை.
8 அப்பொழுது ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் அடுப்பிலிருந்து இரு கை நிறையச் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள். மோயீசன் அதைப் பாரவோன் முன்னிலையிலே வானத்தில் தூற்றக் கடவான்.
9 அது எகிப்து நாட்டின்மேல் எவ்விடத்தும் விழக் கடவது. அதனால் எகிப்து நாடெங்கும் மனிதர்களிடமும் மிருகங்களிடமும் புண்ணும் சீழ்க்கட்டிக் கொப்புளங்களும் உண்டாகும் என்றார்.
10 அப்படியே அவர்கள் அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துக் கொண்டு போய்ப் பாரவோனுக்குமுன் நின்ற போது, மோயீசன் அதனை வானத்தில் தூற்றினார். தூற்றவே, மனிதர்களிடமும் மிருகங்களிடமும் புண்ணும் சீழ்க்கட்டிக் கொப்புளங்களும் உண்டாயின.
11 எகிப்து நாடெங்கும் காணப்பட்ட புண்கள் மந்திரவாதிகளிடத்துமே உண்டாயினமையால், அவர்கள் மோயீசன் முன் வந்து நிற்கக் கூடாமல் போயிற்று.
12 ஆயினும், ஆண்டவர் பாரவோனின் இதயத்தைக் கடினப்படுத்தினமையால், அவர் மோயீசனிடம் சொல்லியிருந்தபடியே, பாரவோன் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
13 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ நாளைக் காலையில் எழுந்துசென்று பாரவோன்முன் நின்று கொண்டு: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுவது ஏதென்றால்: நம்முடைய மக்களை நமக்குப் பலி செலுத்தும்படி போகவிடு.
14 இல்லையேல், பூமி எங்கும் நமக்கு நிகரானவர் இல்லை என்பதை நீ அறியும் பொருட்டு, இம்முறை நாம் எல்லாவித வாதைகளையும் உன் இதயத்தின் மீதும் உன் ஊழியர் மேலும் உன் மக்கள் மேலும் வரச் செய்வோம்.
15 அதாவது, நீ பூமியில் இராமல் அழிந்து போகும்படி, நாம் கையை நீட்டிக் கொள்ளை நோயினால் அடித்து வதைப்போம்.
16 நமது வல்லமை உன்னிடம் விளங்கும் படியாகவும், நமது திருப்பெயர் எவ்விடங்களிலும் வெளிப்படும் படியாகவும் அல்லவோ நாம் உன்னை நிலைநிறுத்தி வைத்தோம்?
17 நீ நம்முடைய மக்களைப் போகவிடாமல் இன்னும் நிறுத்தி வைத்திருக்கிறாய் அன்றோ?
18 இதோ! எகிப்து தோன்றிய நாள் முதல் இன்று வரை ஒருக்காலும் அதில் பெய்திராத மிகவும் கொடிய கல் மழையை நாளை இந்நேரமே பெய்விப்போம்.
19 ஆகையால், நீ இந்நேரமே ஆளனுப்பி, உன் மிருகங்களையும் வெளியில் உனக்கிருக்கிற யாவற்றையும் சேர்த்துப் பாதுகாக்கும்படி சொல். ஏனென்றால், வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியில் இருக்கும் மனிதர்களோடு மிருகம் முதலிய யாவும் கல்மழை பட்டால் செத்துப் போகும் என்று சொல் என்றார்.
20 பாரவோனின் ஊழியர்களிலே இறை வார்த்தைக்கு அஞ்சியிருந்தவன் தன் வேலைக்காரரையும் தன் கால்நடைகளையும் வீடுகளுக்கு ஓட்டிவரக் கட்டளையிட்டான்.
21 ஆனால், ஆண்டவருடைய வார்த்தையை மதியாதவன் தன் வேலைக்காரரையும் கால்நடைகளையும் வெளியிலே விட்டு வைத்திருந்தான்.
22 பிறகு ஆண்டவர் மோயீசனை நோக்கி: எகிப்து நாடெங்கும் மனிதர் மேலும் மிருகங்கள் மேலும் எகிப்திலுள்ள எல்லாப் பயிர்வகைகள் மேலும் ஆலங்கட்டி மழை பெய்யும்படி உன் கையை வானத்தை நோக்கி நீட்டு என்றார்.
23 மோயீசன் அவ்விதமே செய்ய, ஆண்டவர் நாட்டின் மீது இடிமுழக்கங்களையும், ஆலங்கட்டிகளையும், தரையின் மேல் இங்குமங்கும் ஓடி மின்னும் மின்னல்களையும் கட்டளையிட்டார். இவ்வாறு ஆண்டவர் எகிப்து நாட்டின் மேல் ஆலங்கட்டி பொழியச் செய்தார்.
24 நெருப்பும் ஆலங்கட்டியும் கலந்தே விழுந்தன. அவை எவ்வளவு பருமனுள்ளன என்றால், எகிப்தியர் தோன்றிய நாள் முதல் அது போன்ற கல்மழை ஒரு போதும் பெய்ததில்லை.
25 எகிப்து நாடெங்கும் பெய்த ஆலங்கட்டிகளாலே மனிதன் முதல் மிருகங்கள் ஈறாக வெளியிலே இருந்தவை யாவும் அழிக்கப்பட்டன. வயல் வெளிகளிலே வளர்ந்திருந்த எல்லா விதப் பயிர் வகைகளும் கல்மழையினாலே அழிந்ததுமன்றி, நாட்டிலுள்ள மரங்களும் முறிந்தன.
26 இஸ்ராயேல் மக்கள் இருந்த யேசேன் பகுதியிலே மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவில்லை.
27 அப்போது பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: இம்முறையும் நான் பாவம் செய்தேன். ஆண்டவர் நீதியுள்ளவர். நானும் என் மக்களும் தீயவர்கள்.
28 நீங்கள் இனிமேல் இந்நாட்டில் இராவண்ணம் நான் உங்களைப் போக விடும்படி, இடி முழக்கங்களும் ஆலங்கட்டிகளும் ஒழிய வேண்டுமென்று ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
29 அதற்கு மோயீசன்: பூமி ஆண்டவருடையது என்று நீர் அறியும்படி, நான் நகரை விட்டுப் புறப்பட்டவுடனே ஆண்டவரை நோக்கி என் கைகளை உயர்த்துவேன். அதனால் இடிமுழக்கங்களும் ஒழியும்; ஆலங்கட்டி மழையும் நின்று போகும்.
30 ஆனால், நீரும் உம் ஊழியர்களும் கடவுளாகிய ஆண்டவருக்கு இன்னும் அஞ்சுகிறதில்லேயென்று நான் அறிந்திருக்கிறேன் என்றார்.
31 ஆகையால், ஆளிவிதைப் பயிரும் வாற்கோதுமைப் பயிரும் அழிந்து போயின. ஏனென்றால், வாற்கோதுமை கதிர்வாங்கியிருந்தது; ஆளிவிதைப் பூண்டோ முதல் தளிர் விட்டிருந்தது.
32 ஆனால், கோதுமை முதலிய தானியங்களுக்கு அழிவு ஒன்றும் ஏற்படவில்லை. ஏனென்றால், அவை பின்பருவத்துப் பயிர்கள்.
33 மோயீசன் பாரவோனை விட்டு நகரிலிருந்து புறப்பட்டு ஆண்டவரை நோக்கிக் கைகளை உயர்த்தினார். அந்நேரமே இடிமுழக்கமும் ஆலங்கட்டியும் ஒழிந்தன; மழையும் நின்று போயிற்று.
34 மழையும் ஆலங்கட்டியும் இடிமுழக்கமும் ஒழிந்ததைக் கண்ட பாரவோன், முன்னிலும் அதிகப் பாவியானான்.
35 அவன் மனமும் அவன் ஊழியருடைய இதயமும் இறுகி அதிகக் கடினமாய்ப் போனதேயன்றி, ஆண்டவர் மோயீசனைக் கொண்டு திருவுளம் பற்றியிருந்தபடி அவன் இஸ்ராயேல் மக்களைப் போக விட்டானில்லை.
அதிகாரம் 10
1 பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ பாரவோனிடம் போ. ஏனென்றால், நாம் அவன்பால் நமது வலிமையின் அடையாளங்களைச் செய்துகாட்டத் தக்கதாகவும்,
2 நாம் இத்தனை முறை எகிப்தியரை நொறுங்க அடித்து அவர்கள் நடுவே நமது அற்புதங்களைச் செய்த வரலாற்றை நீ உன் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் விவரித்துச் சொல்லத் தக்கதாகவும், நீங்கள் நம்மை ஆண்டவரென்று கண்டுகொள்ளத் தக்கதாகவுமே நாம் பாரவோனுடைய மனத்தையும் அவன் ஊழியர்களின் இதயத்தையும் கடினப்படுத்தினோம் என்றருளினார்.
3 ஆகையால், மோயீசனும் ஆரோனும் பாரவோனிடம் போய், அவனை நோக்கி: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: நீ எதுவரை நமக்குக் கீழ்ப்படிய மாட்டாய்? நமக்குப் பலியிடும்படி நம் மக்களைப் போகவிடு.
4 நீ முரண்கொண்டு: மக்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், இதோ, நாம் நாளை உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச் செய்வோம்.
5 தரையே தெரியாதபடி அவை பூமியின் முகத்தை மூடி, ஆலங்கட்டி மழைக்குத் தப்பினவற்றையெல்லாம் தின்றுவிடும். உண்மையில், அவை வெளியே தளிர் காட்டும் மரங்களையெல்லாம் தின்று விடும்.
6 அன்றியும், உன் வீடுகளும் உன் ஊழியரின் வீடுகளும் எகிப்தியரின் எல்லா வீடுகளுமே அவற்றால் நிரம்பும். உன் மூதாதையரும் முன்னோர்களும் பூமியில் தோன்றின நாள் முதல் இந்நாள் வரை அப்படிப்பட்டவற்றைக் கண்டதில்லை என்று கூறினர். பின் மோயீசன் திரும்பிப் பாரவோனை விட்டுப் புறப்பட்டார்.
7 அப்பொழுது பாரவோனின் ஊழியர்கள் அவனை நோக்கி: நாம் எதுவரை இந்தத் தொந்தரவைச் சகிக்க வேண்டும்! தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிட அந்த மனிதர்களைப் போக விடும். எகிப்துநாடு அழிந்து போயிற்றென்று நீர் இன்னும் உணரவில்லையா என்றனர்.
8 பின் மோயீசனையும் ஆரோனையும் மீண்டும் பாரவோனிடம் அழைத்து வந்தனர். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுங்கள். ஆனால், போக இருக்கிறவர்கள் யார் யாரென்று சொல்லுங்கள் என்றான்.
9 அதற்கு மோயீசன்: எங்கள் இளைஞரோடும் முதியவரோடும் புதல்வர் புதல்வியரோடும் எங்கள் ஆடுமாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம். ஏனென்றால், நாங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு விழா கொண்டாட வேண்டும் என்றார்.
10 பாரவோன் அதற்கு மறுமொழியாக: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் போகவிட்டால்! ஆண்டவரும் உங்களோடு போவாராக! நீங்கள் மிகவும் கெட்ட எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பது பற்றி ஐயுறுவார் யார்?
11 அது நடக்காது. ஆனால், பெரிய மனிதராகிய நீங்கள் மட்டும் போய் ஆண்டவருக்குப் பலியிடுங்கள். நீங்கள் விரும்பிக் கேட்டது இதுதான் அன்றோ என்றான். அவர்கள் அந்நேரமே பாரவோன் முன்னிலையினின்று துரத்திவிடப்பட்டனர்.
12 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டின் மேல் வந்து, ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய எவ்வகைப் புல்லையும் பயிரையும் தின்னும் படி, நீ எகிப்து நாட்டின் மேல் உன் கையை நீட்டு என்றார்.
13 அப்படியே மோயீசன் எகிப்து நாட்டின்மீது தன் கோலை நீட்டினார். அப்பொழுது ஆண்டவர் அன்று பகலும் இரவும் மிக வெப்பமான காற்று அடிக்கச் செய்தார். அவ்விதக் காற்று விடியற் காலையில் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.
14 அவை எகிப்தியர் எல்லைகளுக்குள் எவ்விடத்திலும் ஏராளமாய் வந்திறங்கி, எகிப்து நாடெங்கும் பரவின. அவ்வளவு வெட்டுக்கிளிகள் இதற்கு முன் இருந்ததும் இல்லை; இனிமேல் இருக்கப் போவதும் இல்லை.
15 அவை பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடி, எல்லாவற்றையும் அழித்து, புற்பூண்டு பயிர்களையும் ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய மரங்களின் கனிகளையும் தின்றன. எகிப்து நாடெங்குமுள்ள மரங்களிலோ நிலப் புற்பூண்டுகளிலோ ஒரு பச்சிலையும் மிஞ்சவில்லை.
16 இதன் பொருட்டு, பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் விரைவில் வரவழைத்து: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும் உங்களுக்கும் விரோதமாய்ப் பாவஞ் செய்தேன்.
17 ஆயினும், நீங்கள் இம்முறையும் என் குற்றத்தை மன்னித்து, இந்த மரண வேதனையினின்று என்னைக் காப்பாற்றும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுங்கள் என்றான்.
18 மோயீசன் பாரவோன் முன்னிலையினின்று புறப்பட்டு போய், ஆண்டவரை மன்றாடினார்.
19 அவர் மிக்க வேகமான மேற்காற்று வீசச் செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிச் செங்கடலில் தள்ளிவிட்டது. எகிப்தியரின் எல்லையுளெல்லாம் ஒன்றேனும் நிற்கவில்லை.
20 ஆயினும் ஆண்டவர் பாரவோனின் நெஞ்சைக் கடினப் படுத்தியமையால், அவன் இஸ்ராயேல் மக்களை அனுப்பிவிட்டானில்லை.
21 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: உன் கையை வானத்தை நோக்கி உயர்த்துவாயாக. அதனால், தொட்டுணரத் தக்க இருள் எகிப்து நாட்டிலே உண்டாகக் கடவது என்றருளினார்.
22 அவ்விதமே மோயீசன் வானத்தை நோக்கிக் கையை நீட்ட, எகிப்து நாடு முழுவதும் மூன்று நாளாய் அகோரமான காரிருள் உண்டாயிற்று.
23 ஒருவனும் தன் சகோதரனைக் காண முடியவில்லை. தான் இருந்த இடத்தினின்று எவனும் அசையவுமில்லை. ஆனால் இஸ்ராயேல் மக்கள் குடியிருந்த உறைவிடங்களிலெல்லாம் ஒளி இருந்தது.
24 அப்பொழுது பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: நீங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிடுங்கள். உங்கள் ஆடுமாடுகள் மட்டும் நிற்கட்டும். உங்கள் குழந்தைகளும் உங்களோடு போகலாம் என்று சொன்னான்.
25 மோயீசன்: நாங்கள் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிகளாகவும் தகனப்பலிகளாகவும் படைக்க வேண்டிய விலங்குகளையும் எங்களுக்கு நீர் தரவேண்டும்.
26 எல்லா மந்தைகளும் எங்களோடு கூடவே வரும். அவற்றில் ஒரு குளம்பு முதலாய்ப் பிறகாலே நிற்காது. அவை எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் ஆராதனைக்கு அவசியம். அன்றியும், நாங்கள் அவ்விடம் சேருமட்டும் இன்னதைப் பலியிட வேண்டுமென்று அறியோம் என்றார்.
27 ஆனால், ஆண்டவர் பாரவோன் நெஞ்சைக் கடினப் படுத்தியிருந்தமையால், அவன் அவர்களைப் போகவிட இசையவில்லை.
28 அப்போது பாரவோன் மோயீசனை நோக்கி: நீ என்னை விட்டு அகன்று போ. இனி என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாய். இரு. நீ என் கண்ணுக்குத் தென்படும் நாளிலேயே சாவாய் என்றான்.
29 மோயீசன்: நீர் சொன்னபடியே ஆகட்டும். இனி நான் உமது முகத்தைக் காண்பதில்லை என்றார்.
அதிகாரம் 11
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் இன்னும் ஒரு கொள்ளைநோயைப் பாரவோன் மேலும் எகிப்தின் மேலும் வரச் செய்வோம். பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போக விடுவதுமன்றி, உங்களைத் துரத்தியும் விடுவான்.
2 ஆகையால், நீ மக்களையெல்லாம் நோக்கி: ஆடவன் ஒவ்வொருவனும் தன்தன் நண்பனிடத்திலும், ஒவ்வொரு பெண்ணும் தன்தன் அண்டை வீட்டுக் காரியிடத்திலும், பொன் வெள்ளி உடமைகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளச் சொல் என்றார்.
3 அவ்விதமே எகிப்தியரின் கண்களிலே தயவு கிடைக்கும்படி ஆண்டவர் செய்தருளினார். உண்மையில் எகிப்து நாட்டில் பாரவோன் ஊழியர்களின் பார்வையிலும் எல்லா மக்களின் பார்வையிலும் மோயீசன் மிகமிகப் பெரிய மனிதனாக எண்ணப்பட்டிருந்தார்.
4 அப்பொழுது மோயீசன் (பாரவோனை நோக்கி): ஆண்டவர் சொல்லுவதேதென்றால்: நள்ளிரவில் நாம் எகிப்து நாட்டைச் சந்திக்க வருவோம்.
5 அப்பொழுது அரியணையில் அமர்ந்திருக்கும் பாரவோனின் தலைச்சன் பிள்ளைமுதல் எந்திரக் கல்லைச் சுழற்றும் அடிமைப் பெண்ணின் தலைப்பிள்ளை வரையிலும் எகிப்து நாட்டிலிருக்கும் முதற்பேறு அனைத்தும் மிருகங்களின் தலையீற்று அனைத்துமே சாகும்.
6 அதனால் எகிப்து நாடெங்கும் இதற்கு முன்னும் பின்னும் இருந்திராப் பெரும் கூக்குரல் உண்டாகும்.
7 ஆயினும், இஸ்ராயேல் மக்கள் அனைவரிடையேயும், மனிதர் முதல் மிருகங்கள் வரை யாரை நோக்கியும் ஒரு நாய் முதலாய்க் குரைப்பதில்லை. அவ்வித அதிசய அடையாளத்தின் மூலம், ஆண்டவர் எகிப்தியருக்கும் இஸ்ராயேலருக்குமிடையே வேறுபாடு காட்டுறாரென்று நீங்கள் அறிந்து கொள்வீகள்.
8 அப்போது உம்முடைய ஊழியராகிய இவர்கள் எல்லாரும் என்னிடம் வந்து பணிந்து: நீயும் உனக்குக் கீழ்ப்படிவோர் யாவரும் புறப்பட்டுப் போங்கள் என்று சொல்வார்கள். அதன் பிறகே நாங்கள் புறப்படுவோம் என்று சொல்லி, பொங்கிய சினத்தோடு மோயீசன் பாரவோனைவிட்டுப் புறப்பட்டார்.
9 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: எகிப்து நாட்டில் இன்னும் பல அதிசயங்கள் நடக்கும்படி அல்லவோ பாரவோன்: உங்கள் விண்ணப்பத்திற்குச் செவி கொடுக்க மாட்டேன் என்றான் என்றார்.
10 எழுதப்பட்டுள்ள மேற்சொன்ன அதிசயங்களையெல்லாம் மோயீசனும் ஆரோனும் பாரவோன் முன்னிலையில் செய்தனர். ஆனால், ஆண்டவர் பாரவோன் மனத்தைக் கடினப்படுத்தினமையால், அவன், நாட்டைவிட்டுப் போகும்படி இஸ்ராயேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை.
அதிகாரம் 12
1 ஆண்டவர் மேலும் எகிப்து நாட்டிலே மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளியதாவது:
2 இம்மாதமே உங்களுக்கு மாதங்களின் தொடக்கமாம். இதுவே ஆண்டின் மாதங்களில் முதல் மாதமாம்.
3 நீங்கள் இஸ்ராயேல் மக்களின் கூட்டத்தார் யாவரையும் அழைத்துச் சொல்ல வேண்டியதாவது: இம்மாதத்தின் பத்தாம் நாள் குடும்பத்திற்கும் வீட்டிற்குமாக ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆட்டுக் குட்டியை தெரிந்தெடுக்கக்கடவர்.
4 ஆனால், ஒருவன் வீட்டில் இருக்கிறவர்கள் ஆட்டுக் குட்டியை உண்பதற்குப் போதுமானவர்களாய் இராமற்போனால், அவன், தன் அயல் வீட்டாரில் ஆட்டுக் குட்டியை உண்பதற்குத் தேவையான பேரை அழைத்து வருவான்.
5 ஆட்டுக் குட்டியோ, மறுவற்றதும் ஆண்பாலானதும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் அந்த முறைப்படியே தெரிந்து கொள்ளவேண்டும்.
6 அதனை இம்மாதத்தின் பதினான்காம் நாள்வரை வைத்திருந்து, இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு கூட்டத்தாரும் மாலையில் அதனை அறுத்து,
7 அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஆட்டை உண்ணும் வீட்டு வாயில் நிலைக்கால் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும்.
8 பின், அன்று இரவிலே, அடுப்பில் சுட்ட இறைச்சியைக் காட்டுக் கீரைகளோடும் புளியாத அப்பங்களோடும் உண்பார்கள்.
9 பச்சையாயும் நீரில் அவிக்கப்பட்டதாயும் உள்ள இறைச்சியில் ஒன்றும் உண்ணாமல், அடுப்பிலே பொரித்த கறியை மட்டும் உண்ணவேண்டும். (ஆட்டின்) தலை, கால், குடல் முதலிய எல்லாவற்றையும் உண்பீர்களாக.
10 அதிலே எதையும் விடியற்காலை வரை மீதி வைக்க வேண்டாம். ஏதும் எஞ்சி இருந்தால் அதை நெருப்பில் சுட்டெரிக்கக் கடவீர்கள்.
11 அதனை உண்ணவேண்டிய முறையாவது: நீங்கள் இடுப்பிலே கச்சை கட்டிக் காலிலே செருப்பு அணிந்தவர்களாயும், கையிலே கோலைப் பிடித்தவர்களாயும், அதனை விரைந்து உண்ணக் கடவீர்கள். ஏனென்றால் அது ஆண்டவருடைய பாஸ்கா (அதாவது: ஆண்டவருடைய கடத்தல்).
12 உண்மையில் அந்த இரவிலே நாம் எகிப்து நாடெங்கும் கடந்து போய், எகிப்திலுள்ள மனிதன் முதல் விலங்கு வரை தலைப் பேறானவை யெல்லாம் கொன்று, எகிப்தியத் தேவதைகளின் மீது நீதியைச் செலுத்துவோம்.
13 நாமே ஆண்டவர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்கு அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தைக் காணவே, உங்களை நாம் கடந்து போவோம். இவ்வாறு, நாம் எகிப்து நாட்டைத் தண்டிக்கும்போது, கொள்ளைநோய் உங்கள்மேல் வந்து அழிக்காதிருக்கும்.
14 நீங்களோ, அந்நாளை நினைவுகூர வேண்டிய நாளாகக் கொண்டு, அதை உங்கள் தலைமுறை தோறும் ஆண்டவருடைய திருவிழா என்று எக்காலமும் கொண்டாடி வரக் கடவீர்கள்.
15 (அது எவ்வித மென்றால்,) புளியாத அப்பங்களை ஏழு நாள்வரை உண்பீர்கள். முதல் நாளில் புளித்த மாவு வீட்டில் இருக்கக்கூடாது. முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரை புளித்த அப்பம் உண்பவன் இஸ்ராயேல் சமூகத்தினின்று விலக்கப்படுவான்.
16 முதல் நாள், பரிசுத்த நாளும் சிறப்பாய்க் கொண்டாட வேண்டிய திருவிழாவும் ஆகும். ஏழாம் நாளும் அதுபோலவே வணக்கத்துக்குரியதாய் இருக்கும். அவற்றில் வேலையொன்றும் செய்யலாகாது. நீங்கள் உண்பதற்குத் தேவையான வேலையை மட்டும் செய்யலாம்.
17 புளியாத அப்பத்தின் அந்தத் திருவிழாவைக் கொண்டாடுவீர்களாக. ஏனென்றால், அந்நாளிலே நாம் உங்கள் படையை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்வோம். நீங்களும், உங்கள் தலைமுறை தோறும் நித்திய நியமமாய் அந்த நாளைக் கொண்டாடக் கடவீர்கள்.
18 (அதாவது,) முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை முதல் அம்மாதத்தின் இருபத்தோராம் நாள் மாலை வரை புளியாத அப்பத்தை உண்பீர்கள்.
19 ஏழு நாள் வரை புளிப்பு உங்கள் வீடுகளில் இல்லாதிருக்கக் கடவது. அந்நியரிலாவது குடிமக்களிலாவது எவனேனும் புளிப்புள்ளதை உண்டிருப்பானேல், அவன் இஸ்ராயேல் சமூகத்தினின்று விலக்குண்டு போவான்.
20 நீங்கள் புளிப்புள்ள யாதொன்றையும் உண்ணாமல், புளியாத அப்பத்தை உண்பீர்கள் (என்றருளினார்).
21 மோயீசனோ, இஸ்ராயேல் மக்களில் பெரியோர்களான யாவரையும் வரவழைத்து: நீங்கள் ஒவ்வொருவரும் போய், உங்கள் குடும்பத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வோர் ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்து, பாஸ்காவைப் பலியிடுங்கள்.
22 பின் ஈசோப்புக் கொழுந்துக் கொத்து எடுத்து வந்து, அதைக் கிண்ணியிலுள்ள இரத்தத்தில் தோய்த்து, வாயில் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள். விடியற்காலை வரை உங்களில் ஒருவரும் வீட்டுவாயிலைக் கடக்கக் கூடாது.
23 ஏனென்றால், ஆண்டவர் எகிப்தியரை அழிப்பதற்குக் கடந்து வரும்போது, கதவுநிலையின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தம் இருப்பதைக் காணும்போது, அழிப்போனை உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்கவிடாமல், வாயிற்படியை விலகிக் கடந்து போவார்.
24 இவ்வார்த்தையை நீயும் உன் புதல்வர்களும் நித்திய கட்டளையாகக் கைக்கொள்ளக் கடவீர்கள்.
25 மேலும், ஆண்டவர் தாம் சொன்னபடி உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிலே நீங்கள் போய்ச் சேர்ந்தபோதும், இச்சடங்கு முறைகளை அனுசரிக்கக் கடவீர்கள்.
26 அப்போது உங்கள் பிள்ளைகள்: இந்தச் சடங்கு முறையின் பொருள் என்ன என்று உங்களை வினவுகையில்,
27 நீங்கள்: இது ஆண்டவருடைய கடத்தற்கு உரிய பலியாம்; அவர் எகிப்தியரை அழித்த போது, எகிப்திலுள்ள இஸ்ராயேல் மக்களின் வீடுகளைக் கடந்துபோய், நமது வீடுகளைக் காத்தருளினார் என்று அவர்களுக்குச் சொல்வீர்கள் என்றார். (இதைக் கேட்ட) மக்கள் தலைவணங்கித் தொழுதனர்.
28 இஸ்ராயேல் மக்கள் போய், மேயீசனுக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே செய்தனர்.
29 பிறகு நிகழ்ந்தது என்னவென்றால், நள்ளிரவில் அரியணையில் வீற்றிருந்த பாரவோனின் தலைப் பிள்ளை முதல் சிறையில் அடைபட்டிருந்த அடிமைப்பெண்ணின் தலைப் பிள்ளை வரை எகிப்து நாட்டிலிருந்த முதற் பேறு அனைத்தையும் மிருகங்களில் தலையீற்று அனைத்தையும் ஆண்டவர் அழித்தார்.
30 பாரவோனும் அவன் ஊழியர்கள் அனைவரும் எகிப்தியர் யாவரும் இரவில் எழுந்தனர். எகிப்திலே பெரிய கூக்குரல் உண்டாயிற்று. ஏனென்றால், சாவு இல்லாத வீடே இல்லை.
31 இரவிலே பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: நீங்களும் இஸ்ராயேல் மக்களும் எழுந்து என் மக்களை விட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்குப் பலியிடுங்கள்.
32 நீங்கள் கேட்டபடி உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டு புறப்பட்டுப் போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
33 எகிப்தியர்களோ: நாங்கள் எல்லாரும் சாகப் போகிறோமே என்று சொல்லி, இஸ்ராயேல் மக்கள் விரைவில் நாட்டைவிட்டுப் புறப்படும் படி அவர்களைத் துரிதப்படுத்தினர்.
34 ஆகையால், அவர்கள் பிசைந்த மாவு புளிக்குமுன் எடுத்து, அதைப் போர்வைகளில் கட்டித் தங்கள் தோள் மேல் வைத்துக் கொண்டனர்.
35 மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி இஸ்ராயேல் மக்கள், எகிப்தியரிடம் பொன் வெள்ளி ஆபரணங்களையும் பற்பல ஆடைகளையும் கேட்டனர்.
36 ஆண்டவர் அவர்களுக்கு எகிப்தியர் கண்களில் தயவு கிடைக்கச் செய்தமையால், அவர்கள் கேட்டதை இவர்கள் கொடுக்க, இஸ்ராயேலர் எகிப்தியரைக் கொள்ளையிட்டனர்.
37 இஸ்ராயேல் மக்கள் இராம்சேசை விட்டுச் சொக்கோட்டுக்குப் போயினர். அவர்கள், பிள்ளைகளைத் தவிர்த்து, சுமார் ஆறுலட்சம் பேர் நடக்கக்கூடியவர் இருந்தனர்.
38 கணக்கிலடங்காத இன்னும் பெரிய கூட்டம் இவர்களோடு சேர்ந்து புறப்பட்டுப் போனதுமன்றி, மிகுதியான ஆடு மாடுகளும் பலவகை விலங்குகளும் போயின.
39 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்த மாவைப் புளியாத அப்பங்களாகச் சுட்டனர். அவை புளியாத அப்பங்களாய் இருந்தன. ஏனென்றால், எகிப்தியர் அவர்களைத் தாமதிக்கவிடாமல் விரைவில் புறப்பட்டுப் போகக் கட்டாயப் படுத்தினதினாலே, அவர்கள் பயணத்திற்கென்று தங்களுக்கு ஒன்றும் தயாரித்துக்கொள்ளவில்லை.
40 இஸ்ராயேல் மக்கள் எகிப்திலே குடியேறி வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்.
41 அந்த நானூற்று முப்பது ஆண்டுகள் நிறைவெய்திய அதே நாளில் ஆண்டவருடைய படைகளெல்லாம் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டன.
42 ஆண்டவர் அவர்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த அந்த இரவு பெரிய திருநாள் ஆயிற்று. இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் தலைமுறை தோறும் அதனை அனுசரிக்கக் கடமைப்பட்டனர்.
43 ஆண்டவர் மீண்டும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளினதாவது: பாஸ்காவின் சட்டதிட்டம் இதுவே: அந்நியரில் ஒருவனும் அதனை உண்ண வேண்டாம்
44 ஆனால் விலைக்குக் கொள்ளப்பட்ட அடிமை எவனும், விருத்தசேதனம் செய்யப்பட்ட பிறகு அதை உண்ணலாம்.
45 அந்நியனும் கூலியாளும் அதை உண்ண வேண்டாம்.
46 அதை ஒரு வீட்டினுள்ளே உண்ண வேண்டுமேயன்றி, அந்த இறைச்சியில் சிறிதுகூட வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக்கூடாது. அதன் ஒர் எலும்பையும் முறிக்கக்கூடாது.
47 இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரும் அதை அனுசரிக்கக் கடவார்கள்.
48 அந்நியன் ஒருவன் உங்களிடம் வந்து குடியேற மனம்கொண்டு பாஸ்காவை அனுசரிக்கக் கேட்டால், முதன் முதல் அவனைச் சேர்ந்த ஆண்களெல்லாம் விருத்தசேதனம் செய்யப் படுவார்கள். பின் அவன் (அதைச்) சட்டப்படி கொண்டாடக் கடவான். அவன் அப்போது அந்நாட்டுக் குடிமகன் போலிருப்பான். ஆனால், விருத்த சேதனமில்லாத எவனும் அதை உண்ண வேண்டாம்.
49 உங்களிடத்தில் வந்து குடியேறின அந்நியனுக்கும் குடிமகனுக்கும் ஒரே சட்டம் இருக்கும் (என்றார்).
50 ஆண்டவர் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் செய்தனர்.
51 ஆண்டவர் அன்றே இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் அணியணியாக எகிப்து நாட்டிலிருந்து புறப்படச்செய்தார்.
அதிகாரம் 13
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 இஸ்ராயேல் மக்களுக்குள் மனிதரிடையேயும் மிருகங்களிடையேயும் கருப்பையைத் திறந்து பிறக்கும் தலைப்பேறு அனைத்தையும் நமக்கு நேர்ச்சை செய்வாயாக. ஏனென்றால், எல்லாமே நம்முடையது என்றார்.
3 ஆகையால், மோயீசன் மக்களை நோக்கி: நீங்கள் எகிப்தினின்றும் அதன் அடிமைத்தனத்தினின்றும் விடுதலை அடைந்த இந்நாளை நினைவில் கொள்ளுங்கள். ஆண்டவர் தமது வலிய கையைக் கொண்டு உங்களை அவ்விடத்தினின்று வெளியேற்றினார் அல்லவா? ஆதலால், நீங்கள் புளித்த அப்பத்தை உண்ணாதிருக்கக் கடவீர்கள்.
4 அறுவடை மாதத்தில் இன்றுதானே நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள்.
5 (ஆண்டவர்:) உனக்குக் கொடுப்போம் என்று உன் முன்னோர்க்கு ஆணையிட்டருளியதும், கானானையர், ஏத்தையர், ஆமோறையர், ஏவையர், யெபுசேயர் ஆகியோரின் நாடுமாகிய பாலும் தேனும் பொழியும் நாட்டில் நீ புகுந்தபின் இந்தத்திருச் சடங்கை அனுசரித்துக் கொண்டாடி வருவாய்.
6 அதாவது, ஏழு நாள் புளியாத அப்பத்தை உண்பாய். ஏழாம் நாளோ ஆண்டவரின் திருவிழாவாம்.
7 ஏழு நாளும் புளியாத அப்பத்தை உண்பீர்கள். உன் வீட்டிலோ உன் எல்லைகளிலோ புளித்தது யாதொன்றும் காணப்படலாகாது.
8 அந்நாளிலே உன் மகனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்பட்ட போது ஆண்டவர் எனக்குச் செய்தது இன்னது என்று அவனுக்கு விவரித்துச் சொல்வாய்.
9 ஆண்டவர் வலிய கையினால் உன்னை எகிப்தினின்று புறப்படச் செய்ததினால், அவருடைய திருக் கட்டளைகள் எக்காலமும் உன் வாயில் இருக்கும் என்பதற்கு அந்தத் திருவிழா உன் கையிலுள்ள ஓர் அடையாளம் போலவும், உன் கண்களுக்கு முன் நிற்கும் ஒரு நினைவுச் சின்னம் போலவும் இருக்கும்.
10 நீ ஆண்டு தோறும் குறித்த காலத்தில் இவ்விதச் சடங்கை அனுசரிக்கக் கடவாய்.
11 மேலும், ஆண்டவர் உனக்கும் உன் முன்னோர்களுக்கும் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த கானானையர் நாட்டினுள்ளே புகச்செய்து அந்த நாட்டை உனக்குக் கொடுத்த பின் கருப்பையைத் திறந்து பிறக்கும் அனைத்தையும்,
12 மிருகங்களின் முதலீற்று அனைத்தையும் ஆண்டவருடையவை என்று அவருக்காகப் பிரித்து வைப்பாய். அவற்றிலுள்ள ஆண்கள் அனைவற்றையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பாயாக.
13 கழுதையின் தலையீற்றுக்குப் பதிலாக ஒர் ஆட்டைக் கொடுப்பாய். மீட்கக் கூடாதாயின் சாகடிப்பாய். ஆனால், மனிதனுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் தலைச்சன் மகனைப் பணம் கொடுத்து மீட்டுக் கொள்ளக்கடவாய்.
14 பிற்காலத்தில் உன் புதல்வன்: இது என்ன என்று வினவுங்கால், நீ அவனை நோக்கி: ஆண்டவர் வலிய கையால் எங்களை எகிப்து நாட்டினின்றும் அதன் அடிமைத்தனத்தினின்றும் விடுதலையாக்கினார்.
15 உண்மையில் பாரவோன் எங்களைப்போக விடாமல் முரண் செய்து கல் நெஞ்சன் ஆனதைக் கண்டு, ஆண்டவர் மனிதனுடைய தலைச்சன் மகன் முதற்கொண்டு மிருகங்களின் தலையீற்று வரை எகிப்திலுள்ள முதற்பேறானவை யெல்லாம் சாகடித்தார். அதைக்குறித்து, நானும் கருப்பையைத் திறந்து பிறக்கும் ஆணை யெல்லாம் ஆண்டவருக்குப் பலியிட்டு, என் புதல்வர்களில் முதற்பேறானவனை மீட்டுக் கொண்டும் வருகின்றேன் என்பாய்.
16 ஆகையால், இஃது உன் கையிலே ஓர் அடையாளமாகவும், உன் கண்களுக்குமுன் நிற்கும் ஒரு நினைவுச் சின்னமாகவும் இருக்கக் கடவது. ஏனென்றால், ஆண்டவர் வலிய கையினால் எங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்தார் என்று மோயீசன் சொன்னார்.
17 பாரவோன் மக்களைப் போகவிட்ட பின், போரைக் கண்டால் அவர்கள் மனமுடைந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று கடவுள் எண்ணி, அவர்களைப் பிலிஸ்தியரின் நாட்டுக்குறுக்கு வழியாய்க் கொண்டு போகாமல்,
18 செங்கடல் ஓரத்தில் இருக்கும் பாலைநிலம் வழியே சுற்றிச் சுற்றிப் போகச் செய்தார். இஸ்ராயேல் மக்கள் ஆயுதம் அணிந்தவர்களாய் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டுப் போனார்கள்.
19 அன்றியும், மோயீசன் சூசையின் எலும்புகளைத் தம்மோடு எடுத்துக் கொண்டு போனார். ஏனென்றால்: கடவுள் உங்களைச் சந்திப்பார். (அப்பொழுது) நீங்கள் இவ்விடத்தினின்று என் எலும்புகளை உங்களோடு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லி, சூசை இஸ்ராயேல் மக்களை ஆணையிட்டு வாக்குறுதி கொடுக்கச் செய்திருந்தார்.
20 அவர்கள் சொக்கோட்டிலிருந்து புறப்பட்டு, பாலைநிலத்தின் ஓரமாய் உள்ள ஏத்தாமிலே தங்கினர்.
21 அவர்களுக்கு வழி காண்பிக்கத் தக்கதாக ஆண்டவர் பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் அவர்களுக்கு வழித்துணையாய் இருந்தார்.
22 பகலில் மேகத் தூணும் இரவில் நெருப்புத்தூணும் மக்களைவிட்டு ஒரு நாளும் விலகிப்போனதில்லை.
அதிகாரம் 14
1 ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களிடம் சென்று அவர்கள் திரும்பி மக்தலமுக்கும் கடலுக்கும் நடுவிலும், பேல்செப்போனுக்கு அண்மையிலும் உள்ள பிகாயிரோட்டுக்கு எதிரே பாளையம் இறங்கும்படி சொல்லுவாய். அதன் அருகே, கடலோரத்தில் பாளையம் இறங்குவீர்கள்.
3 ஏனென்றால், பாரவோன் இஸ்ராயேல் மக்களைக்குறித்து: இவர்கள் கரையாலே நெருக்கப்பட்டிருக்கிறார்களே; பாலைவனமும் இவர்களை அடைத்திருக்கிறதே என்று சொல்லுவான்.
4 நாமோ அவன் மனத்தைக் கடினப் படுத்துவோமாதலால், அவன் உங்களைப் பின்தொடர்வான். அப்பொழுது நாம் அவனாலும், அவனுடைய எல்லாப் படைகளாலும் மாட்சி அடைவோம். அதனால், நாமே ஆண்டவரென்று எகிப்தியர் அறிவர் என்று திருவுளம்பற்றினார். (இஸ்ராயேலரும்) அவ்விதமே செய்தார்கள்.
5 அப்படியிருக்க, மக்கள் ஓடிப் போய்விட்டார்களென்று பாரவோன் அரசன் அறியவந்தான். உடனே, அவர்களுக்கு விரோதமாய்ப் பாரவோனுக்கும் அவனுடைய ஊழியக்காரர்களுக்கும் மனம் மாறுபட்டுப் போயிற்று. அவர்கள்: நம் வேலைகளைக் செய்யாதபடி நாம் அவர்களைப் போகவிட்டது தவறல்லவா என்றார்கள்.
6 அவ்வாறு சொல்லி, தன் தேரைப் பூட்டி, தன் படைவீரர் எல்லாரையும் தன்னோடே கூட்டி, நல்ல முதல் தரமான அறுநூறு தேர்களையும்,
7 எகிப்திலிருந்த பலவித வண்டிகளையும் தயார்ப்படுத்தி, எல்லாப் படைத் தளபதிகளையும் சேர்த்துக் கொண்டான்.
8 அதன்பின் ஆண்டவர் எகிப்து மன்னனான பாரவோனின் மனத்தைக் கடினப்படுத்தியமையால், அவன் இஸ்ராயேல் மக்களைப் பின்தொடர்ந்தான். அவர்களோ மிக வலுவுள்ள கையால் ஆதரிக்கப்பட்டுப் புறப்பட்டிருந்தார்கள்.
9 எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து போய், அவர்கள் கடலோரமாய்ப் பாளையம் இறங்கினதைக் கண்டு கொண்டார்கள். பாரவோனின் குதிரைகளும் தேர்களும் படைகள் எல்லாமே பேல்செப்போனுக்கு எதிரேயுள்ள பிகாயிரோட்டிலே நின்று கொண்டன.
10 பாரவோன் அணுகி வரவே, இஸ்ராயேல் மக்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தங்களுக்குப் பிறகாலே எகிப்தியர் இருக்கக் கண்டு, மிகவும் பயந்து, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினர்.
11 பின் மோயீசனை நோக்கி: எகிப்தில் கல்லறைகள் இல்லாதிருந்ததனாலோ நீர் பாலைவனத்திலே சாகும்படி எங்களைக் கூட்டி வந்தீர்? என்ன செய்யக் கருதி எங்களை எகிப்தினின்று புறப்படச்செய்தீர்?
12 நாங்கள் எகிப்திலே உமக்குச் சொன்ன சொல் இதுவே அன்றோ? எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுப்போம் என்று சொன்னோம் அல்லவா? பாலைநிலத்தில் சாவதைக் காட்டிலும் அவர்களுக்கு வேலை செய்வது எங்களுக்கு நலமாய் இருக்குமே என்றார்கள்.
13 அப்போது மோயீசன் மக்களை நோக்கி: அஞ்ச வேண்டாம். நீங்கள் நின்று கொண்டே இன்று ஆண்டவர் செய்யப்போகிற மகத்துவங்களைப் பாருங்கள். உண்மையிலே நீங்கள் இப்போது காண்கிற இந்த எகிப்தியைரை இனி எந்தக் காலத்திலுமே காணப்போவதில்லை.
14 ஆண்டவர் உங்களுக்காகப் போராடுவார். நீங்கள் பேசாதிருங்கள் (என்றுரைத்தார்).
15 பிறகு, ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ நம்மிடம் முறையிடுகிற தென்ன? இஸ்ராயேல் மக்களைப் புறப்பட்டுப் போகச் சொல்.
16 நீயோ உன் கோலை ஓங்கி, உன் கையைக் கடலின் மேல் நீட்டிக் கடலைப் பிரித்துவிடு. இஸ்ராயேல் மக்கள் அதன் நடுவிலே கால் நனையாமல் நடந்து போவார்கள்.
17 உங்களைப் பின் தொடரும்படி நாம் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவோம். அதனால், பாரவோனாலும், அவன் படைகளாலும், அவனது தேர், குதிரைகளினாலும் நாம் மாட்சி அடைவோம்.
18 இப்படி நாம் பாரவோனாலும், அவனுடைய தேர்களாலும், குதிரைகளினாலும் மாட்சி அடையும் போது, ஆண்டவர் நாமே என்று எகிப்தியர் அறிந்து கொள்வார்கள் என்றருளினார்.
19 அப்போது, இஸ்ராயேல் பாளையத்தின் முன் நடந்து கொண்டிருந்த கடவுளுடைய தூதர் பெயர்ந்து அவர்களுக்குப் பின் நடந்தார். அவரோடுகூட மேகத் தூணும் விலகி அவர்கள் பின்னால் காணப்பட்டது.
20 அது எகிப்தியரின் படைக்கும் இஸ்ராயேலரின் படைக்கும் இடையில் நின்று கொண்டது. அம்மேகம் இருளுள்ளதும், இரவிலே ஒளி வீசுகிறதுமாய் இருந்தமையால், இஸ்ராயேல் படையும் எகிப்தியர் படையும், இரவு முழுவதும் ஒன்று சேரக் கூடாமல் போயிற்று.
21 அப்போது, மோயீசன் கடலின்மேல் கையை நீட்டினார். நீட்டவே, ஆண்டவர் இரவு முழுவதும் மிகக் கொடிய வெப்பக்காற்று வீசச் செய்து, கடலை வாரிக் கட்டாந்தரையாக மாற்றினார். நீர் இரு பிரிவாகிவிட்டது.
22 இஸ்ராயேல் மக்களும் வறண்டுகிடந்த கடலின் நடுவே நடந்தனர். ஏனென்றால், அவர்களுக்கு வலப் புறத்திலும் இடப் புறத்திலும் நீர், மதிலைப் போல் நின்று கொண்டிருந்தது.
23 பின் தொடர்ந்து வந்த எகிப்தியர்களும், பாரவோனுடைய தேர்களோடு குதிரை வீரர்களும் அவர்களுக்குப் பின்னால் கடலின் நடுவே புகுந்தனர்.
24 காலை நேரத்திலே ஆண்டவர் நெருப்பும் மேகமுமான தூணுக்குள் இருந்து, எகிப்தியரின் படைகள் மீது நோக்கம் வைத்து, அவர்களுடைய படைகளை அழித்தொழித்தார்.
25 அதாவது, தேர்களின் உருளைகள் கழலவே, அவை கவிழ்ந்து மிக ஆழமான இடத்தினுள் அமிழ்ந்து போயின. அதனால் எகிப்தியர்: இஸ்ராயேலை விட்டு ஓடிப் போவோமாக: இதோ ஆண்டவர் நம்மை எதிர்த்து அவர்கள் சார்பாய் நின்று போராடுகின்றார் என்றார்கள். அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
26 கடலின் மேலே கையை நீட்டு. நீட்டினால், நீர்த்திரள் திரும்பி, எகிப்தியர் மேலும் அவர்களுடைய தேர்குதிரைகள் மேலும் வந்து விழும் என்றார்.
27 மோயீசன் கடல் மீது கையை நீட்டினார். நீட்டவே, விடியற் காலையில், கடல் வேகமாய்த் திரும்பி வந்தது. எகிப்தியர் ஓடிப் போகையில், நீர்த்திரள் அவர்களுக்கு எதிராக வந்தமையால், ஆண்டவர் அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திவிட்டார்.
28 இவ்வாறு நீர்த்திரள் திரும்பி வந்து, தொடர்ந்து கடலில் புகுந்திருந்த பாரவோனின் எல்லாப் படைகளையும் தேர்குதிரைகளையும் மூடிக்கொண்டது.
29 அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. இஸ்ராயேல் மக்களோ வறண்டுபோன கடலின் நடுவே நடந்து வரும்போது அவர்களுடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலும் நீர்த்திரள் மதில்போல் நின்று கொண்டிருந்தது.
30 இவ்வாறு ஆண்டவர் அன்று இஸ்ராயேலரை எகிப்தியருடைய கைகளினின்று காப்பாற்றினார்.
31 பின் அவர்கள் கடற்கரையில் எகிப்தியரின் சடலங்களைக் கண்டபோதும், ஆண்டவர் அவர்களைக் கண்டித்துக் காண்பித்த வல்லமையைக் கண்டுணர்ந்த போதும் ஆண்டவருக்குப் பயந்து, அவர்மீதும் அவருடைய ஊழியனான மோயீசன் மீதும் நம்பிக்கை வைத்தார்கள்.
அதிகாரம் 15
1 அப்பொழுது மோயீசன் இஸ்ராயேல் மக்களோடுகூட ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய சங்கீதமாவது: ஆண்டவருக்குப் பாட்டுப் பாடுவோம். ஏனென்றால் அவர் பெரும்புகழோடு வெற்றியில் சிறந்தார்; குதிரையையும் அதன்மேல் ஏறியிருந்த வீரனையும் கடலிலே வீழ்த்தினார்.
2 ஆண்டவர் என் வலிமையும் என் போற்றுரைகளுக்குத் தகுதி வாய்ந்தவருமாய் இருக்கிறார். அவர் எனக்கு மீட்பைத் தந்தார். அவர் என் கடவுளாகையால் அவரை நான் மேன்மைப் படுத்துவேன். அவர் என் தந்தையின் கடவுளென்று போற்றிப் புகழ்வேன்,
3 ஆண்டவர் போர்வீரனைப் போன்றவர். அவர் எல்லாம் வல்லவர் என்று அழைக்கப்படுகின்றார்.
4 அவர் பாரவோனின் தேர்களையும் படைகளையும் கடலிலே வீழ்த்தினார். கடல் அவர்களை மூடினது.
5 அவர்கள் கல்லைப்போல் ஆழத்திலே வீழ்ந்தனர்.
6 ஆண்டவரே, உம்முடைய வலக்கை வலிமையால் பெரும் சிறப்பு எய்துகிறது. உமது வலக்கை பகைவரை நொறுக்கியது. உம்முடைய எதிரிகளை உமது மிகுந்த மாட்சிமையினால் அழித்தொழித்தீர்.
7 நீர் உம்முடைய கோப நெருப்பை அனுப்ப, அது அவர்களைத் துரும்பென எரித்தது. உமது கடும் கோபப் புயலால் நீர்த்திரள்கள் குவிந்தன.
8 வெள்ளம் தடுக்கப்பட்டு, நடுக்கடலில் ஆழப் பாதாளங்கள் அடுக்கப்பட்டன.
9 பகைவன்: அவர்களை நான் தொடர்வேன்; பிடிப்பேன்; கொள்ளையிடப் பட்டவைகளைப் பங்கிடுவேன்; என் ஆசை நிறைவுறச் செய்வேன்; என் கத்தியை உருவி என் கையாலே அவர்களைக் குத்துவேன் என்று சொன்னவுடனேயே, உமது காற்றை வீசச் செய்தீர்.
10 அந்நேரமே கடல் அவர்களை மூடிக்கொண்டதனால், அவர்கள் ஓலமிடும் வெள்ளத்தில் ஈயக் குண்டுபோல் அமிழ்ந்தனர்.
11 ஆண்டவரே, வல்லவர்களில் உமக்கு நிகரானவர் யார்? பரிசுத்ததனத்தில் உம்மைப் போல இருக்கிறவர் யார்? மகத்துவமுள்ளவரும், பயங்கரத்துக்குரியவரும், புகழ்ச்சிக்கு உரியவரும் அற்புதங்களைச் செய்கிறவருமான உமக்கு ஒப்பானவர் எவரேனும் உண்டோ?
12 உம்முடைய கையை நீட்டினீர். நீட்டவே, பூமி அவர்களை விழுங்கிற்று.
13 நீர் மீட்டு இரட்சித்த மக்களுக்குத் தயவோடு வழிகாட்டியானீர். உம்முடைய வல்லமையுள்ள கையால் அவர்களைத் தூக்கித் திருவுறைவிடத்தில் அவர்களை நிலைநிறுத்தினீர்.
14 மக்கள் எழும்பிச் சினந்தனர். பிலிஸ்தியாவில் வாழ்பவர்களும் நொந்துபோயினர்.
15 அப்பொழுது ஏதோமின் தலைவர்கள் மனம் கலங்கினர். மோவாபின் வீரர்கள் நடுக்கமுற்றனர். கானான் நாட்டுக் குடிகளெல்லாரும் திகிலடைந்து வாடி வதங்கினர்.
16 உம்முடைய விசாலமான புயத்தின் மகத்துவத்தால் அவர்கள் மீது ஏக்கமும் திகிலும் வரக்கடவன. உம்முடைய மக்கள் அக்கரை போய்ச் சேருமட்டும் அவர்கள் பாறை போல் அசைவற்று நிற்கக்கடவர். ஆம், உம்முடைய மக்கள் கடந்து போகுமட்டும் அவர்கள் அசையாதிருக்கக்கடவர்.
17 நீர் அவர்களைக் கொண்டுபோய் மலைமீதும், ஆண்டவராகிய நீர் அமைத்துள்ள அசையாத உறைவிடத்திலும் அவர்களை நாட்டுவீர். அது உமது கையாலே நிலைநிறுத்தப்பட்ட உம்முடைய திருவுறைவிடமாம்.
18 ஆண்டவர் என்றென்றும் செங்கோல் ஓச்சுவாராக.
19 ஏனென்றால், பாரவோன் குதிரை வீரனாய்த்தன் தேர்களோடும் குதிரை வீரரோடும் கடலில் புகுந்தான். ஆண்டவர், கடல் அலைகளை அவர்கள்மேல் திரும்பச் செய்தார். இஸ்ராயேல் மக்களோ கடலின் நடுவில் கால் நனையாமல் நடந்து போயினர்.
20 அதற்குள்ளே, ஆரோனின் சகோதரியான மரியாம் என்னும் இறைவாக்குரைப்பவள் தன் கையிலே மத்தளம் பிடித்துக் கொண்டாள். அதைக் கண்டு மற்றுமுள்ள பெண்களெல்லாம் தங்கள் மத்தளங்களையும் எடுத்துக் கொண்டு, பாடியும் ஆடியும் வெளியே போனார்கள்.
21 மரியாம் இராகமெடுத்து: ஆண்டவருக்குப் பண்ணிசைப்போம். ஏனென்றால், அவர் பெரும் புகழோடு வெற்றியில் சிறந்தார்; குதிரையையும் அதன்மேல் ஏறியிருந்த வீரனையும் கடலிலே வீழ்த்தினார் என்று பாட்டுப்பாடினாள்.
22 மோயீசன் இஸ்ராயேல் மக்களைச் செங்கடலிலிருந்து வழிநடத்தின போது அவர்கள் சூர் என்னும் பாலைவனத்தில் புகுந்து, மூன்று நாட்களாய் ஆள்நடமாட்டமில்லாத வழியில் நடந்தனர். அவர்களுக்குத் தண்ணீர் அகப்படாமற் போயிற்று.
23 இறுதியில், அவர்கள் மாராவை அடைந்தனர். அவ்விடத்தில் தண்ணீர் கிடைத்தும், அது கசப்பாயிருந்ததால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை. ஆதலால், மோயீசன் அவ்விடத்திற்கு மாரா--அதாவது, கசப்பு--என்று அதற்குத் தக்க பெயரிட்டார்.
24 மக்கள் மோயீசனுக்கு விரோதமாய் முறுமுறுத்து: எதைக் குடிப்போம் என்று முறையிட,
25 மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டார். அவர் ஒரு மரத்தை அவருக்குக் காண்பித்தார். மோயீசன் அதைத் தண்ணீரில் போட்டவுடனே அது இனிமையான நன்னீராயிற்று. ஆண்டவர் அவ்விடத்திலே சிற்சில கட்டளைகளையும் நீதி நெறிகளையும் அவருக்குக் கொடுத்து, அங்கே மக்களைச் சோதித்து:
26 நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, அவருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, அவருடைய சட்டங்கள் யாவையும் கைக்கொண்டு நடப்பீர்களாயின், எகிப்தியருக்கு நாம் வருவித்த வாதைகளில் ஒன்றையும் உங்கள்மேல் வரவிட மாட்டோம். ஏனென்றால், நாம் உங்களைக் குணப்படுத்தும் ஆண்டவர் என்றார்.
27 இஸ்ராயேல் மக்கள் ஏலிம் வந்துசேர்ந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பனை மரங்களும் இருந்தன. அவர்கள் நீர்ச்சுனைகளின் அண்மையிலே பாளையம் இறங்கினர்.
அதிகாரம் 16
1 பின் இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் ஏலிமை விட்டுப் பயணமாகி, எகிப்து நாட்டினின்று புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஏலிமுக்கும் சீனாயிக்கும் நடுவிலிருக்கும் சின் என்னும் பாலைவனம் வந்து சேர்ந்தனர்.
2 அந்தப் பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்களின் கூட்டத்தார் எல்லாரும் மோயீசனையும் ஆரோனையும் பகைத்து முறுமுறுத்துப் பேசினர். இஸ்ராயேல் மக்கள் அவர்களை நோக்கி,
3 நாங்கள் எகிப்து நாட்டிலேயே ஆண்டவருடைய கையாலே செத்துப் போயிருப்போமாயின் தாவிளை. அவ்விடத்திலே நாங்கள் இறைச்சி நிறைந்த பாத்திரங்களைண்டை உட்கார்ந்து, வயிறார அப்பம் சாப்பிட்டு வருவோம். இந்த மக்களெல்லாரையும் பட்டினிபோட்டுக் கொல்லவேண்டுமென்று அல்லவோ நீங்கள் எங்களை ஆள் நடமாட்டமில்லாத இந்த இடத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்று சொன்னார்கள்.
4 ஆண்டவர் (அதனைக்) கேட்டு மோயீசனை நோக்கி: இதோ நாம் உங்களுக்கு வானத்தினின்று அப்பங்கள் பொழிவிப்போம். மக்கள் வெளியே போய், ஒவ்வொரு நாளும் அந்நாளுக்குப் போதுமானதை மட்டும் சேகரிக்கட்டும். அதன்மூலம் அவர்கள் நமது நியாயச்சட்டப்படி நடப்பார்களோ அல்லவோ என்று அவர்களைச் சோதித்துப் பார்ப்போம்.
5 ஆறாம் நாளில், அவர்கள் நாள்தோறும் சேகரிப்பதைப் போல் இரண்டு மடங்கு அதிகமாய்ச் சேகரித்து, அதனை ஆயத்தப்படுத்தி வைக்கக் கடவார்கள் என்றார்.
6 இவ்வாறு மோயீசனும் ஆரோனும் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் நோக்கி: ஆண்டவரே எகிப்து நாட்டினின்று உங்களை விடுவித்தார் என்று இன்று மாலை அறிந்து கொள்வீர்கள்.
7 மேலும், நாளை விடியற்காலை ஆண்டவருடைய மாட்சியைக் காண்பீர்கள். உண்மையிலேயே அவருக்கு விரோதமாய் நீங்கள் காட்டிய முறுமுறுப்புக்களை ஆண்டவர் கேட்டிருக்கின்றார். நீங்கள் எங்கள் மேல் முறுமுறுத்துப் பேச நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
8 மீண்டும் மோயீசன்: மாலையில் நீங்கள் உண்பதற்கென்று ஆண்டவர் உங்களுக்கு இறைச்சிகளையும், நாளை விடியற்காலை நீங்கள் (உண்டு) திருப்தி அடைவதற்கென்று அப்பங்களையும் கொடுப்பார். நீங்கள் முறுமுறுத்து அவருக்கு விரோதமாய்ச் சொன்ன குறையெல்லாம் அவர் செவிக்கு எட்டிற்று. நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறைப்பாடு, எங்களுக்கு அல்ல, ஆண்டவருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.
9 மேலும், மோயீசன் ஆரோனை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் பார்த்து: நீங்கள் ஆண்டவருடைய சந்நிதிக்கு வாருங்கள்: உங்கள் முறுமுறுப்புக்களை அவர் கேட்பார் என்று சொல்லுவாய் என்றார்.
10 ஆரோன் இஸ்ராயேல் மக்கள் அனைவரோடும் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலைவனப் பக்கம் திரும்பிப் பார்த்தனர். அந்நிமிடமே ஆண்டவருடைய மாட்சி மேகத்திலே காணப்பட்டது.
11 ஆண்டவர் மோயீசனை நோக்கி:
12 நாம் இஸ்ராயேல் மக்களின் முறுமுறுப்புக்களைக் கேட்டுக்கொண்டோம். நீ அவர்களை நோக்கி, மாலையில் இறைச்சிகளை உண்பீர்கள்; விடியற்காலையில் அப்பங்களைத் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13 அவ்வாறே மாலையில் காடைகள் வந்து விழுந்து பாளையத்தை மூடிக்கொண்டன. விடியற்காலையில் பாளையத்தைச் சுற்றிலும் பனி பெய்திருந்தது. பூமியை மூடிக்கொண்டபின்னர்,
14 பாலைவனத்தில் உரலிலே குத்தப்பட்டதும் உறைந்த பனிக்கட்டியைப் போன்றதுமான ஒரு பொருள் காணப்பட்டது.
15 இஸ்ராயேல் மக்கள் அதைக் கண்டு, அது இன்னதென்று அறியாமையால் ஒருவரை ஒருவர் நோக்கி: மன்னு?-- அதாவது, இது யாதோ?- என்று சொன்னார்கள். அப்பொழுது மோயீசன் அவர்களைப் பார்த்து: இது ஆண்டவர் உங்களுக்கு உண்ணத் தந்தருளிய அப்பம்.
16 ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறது என்னவென்றால்: அவரவர் உண்ணும் அளவுக்குத் தக்கபடி அவரவர் எடுத்துச் சேர்த்துக் கொள்ளக்கடவர். உங்கள் கூடாரத்தில் எத்தனை பேர் குடியிருக்கிறார்களோ (அத்தனை) ஆளுக்கு ஒவ்வொரு கொமோர் எடுத்து, அத்தனையும் சேர்த்து வருவீர்கள் என்றார்.
17 இஸ்ராயேல் மக்கள் அவ்வாறு செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேகரித்த பின், அதைக் கொமோரால் அளந்தனர்.
18 மிகுதியாய்ச் சேகரித்தவனுக்கு அதிகம் இருந்ததும் இல்லை; கொஞ்சமாய்ச் சேகரித்தவனுக்குக் குறைவாய் இருந்ததும் இல்லை. ஒவ்வொருவரும் தாங்கள் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.
19 பிறகு மோயீசன்: ஒருவனும் விடியற்காலை வரை அதிலே ஒன்றும் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது என்று சொன்னார்.
20 இருந்தும் மோயீசன் சொல்லைக் கேளாமல் சிலர் அதில் சிறிது விடியற்காலை வரை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் அது பூச்சி பிடித்தது. பிறகு மக்கிப் போயிற்று. மோயீசன் அவர்கள் மீது கோபம் கொண்டார்.
21 அவர்கள் அதை விடியற்காலை தோறும் அவரவர் உண்ணும் அளவுக்குத் தக்கதாய் அவரவர் சேகரிப்பர். வெயில் ஏறவே அது உருகிப் போகும்.
22 ஆறாம் நாளிலோ அவர்கள் ஆள் ஒன்றுக்கு இரண்டு கொமோர் வீதம் இருமடங்கு உணவு சேகரித்தனர். பின் சபையின் தலைவர் எல்லாரும் மோயீசனிடம் வந்து அதனை அறிவித்தனர்.
23 அவர் அவர்களை நோக்கி: நாளை ஆண்டவருக்குக் காணிக்கையான ஓய்வு நாளாம். செய்ய வேண்டியதை எல்லாம் இன்று செய்யுங்கள்; சமைக்க வேண்டியதையும் சமைத்துக் கொள்ளுங்கள்; பின் மீதியாய் இருப்பதையெல்லாம் நாளைக் காலைவரை வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் சொன்ன வாக்கு இதுவே என்றார்.
24 அவர்கள் மோயீசன் கட்டளையிட்டபடியே செய்ய, அது நாறவும் இல்லை; பூச்சி பிடிக்கவும் இல்லை.
25 அப்போது மோயீசன்: இன்று ஆண்டவருடைய சபாத்தாகையால், அதைச் சாப்பிடுங்கள். இன்று நீங்கள் அதனை வெளியிலே காணப் போகிறதில்லை.
26 ஆறு நாளும் அதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏழாம் நாள் ஆண்டவருடைய ஓய்வு நாளானதால் அன்று அது அகப்படாது (என்றார்).
27 ஏழாம் நாளில் மக்களுள் சிலர் அதைச் சேகரிக்கும்படி வெளியே சென்றார்கள். ஆனால் ஒன்றையும் காணவில்லை.
28 ஆண்டவர் மோயீசனை நோக்கி: நம்முடைய கட்டளைகளையும் சட்டங்களையும் அனுசரிக்க எதுவரையிலும் மனமில்லாமல் இருப்பீர்கள்?
29 பாருங்கள், ஆண்டவர் சபாத் நாளை உங்களுக்கு அருளினதனால் அல்லவோ ஆறாம் நாளிலே உங்களுக்கு இருமடங்கு உணவு தந்தருளினார்? ஏழாம் நாளிலே உங்களில் எவனும் தன் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே இருக்கவேண்டும் (என்றார்).
30 அவ்வாறே மக்கள் ஏழாம் நாளில் ஓய்வு கொண்டாடினர்.
31 அவ்வுணவிற்கு இஸ்ராயேல் மக்கள் மன்னா என்று பெயரிட்டனர். அது கொத்தமல்லி போல் வெண்ணிறம் உள்ளதாய் இருந்தது. மாவும் தேனும் கலந்தால் எவ்விதமான சுவை இருக்குமோ அவ்விதமான சுவையே அதற்கு இருந்தது.
32 அப்போது மோயீசன்: ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: உங்களை நாம் எகிப்து நாட்டினின்று மீட்டு வந்த போது பாலைநிலத்திலே எவ்வித உணவு உங்களுக்கு அருளினோமென்று உங்கள் சந்ததியார் கண்டறியத்தக்கதாக, மன்னா என்னும் அவ்வுணவில் ஒரு கொமோர் எடுத்து அவர்களுக்காக அதைப் பாதுகாத்து வரவேண்டும் என்று சொன்னார் என்றார்.
33 பின் மோயீசன் ஆரோனை நோக்கி: நீ ஒரு கலயத்தை எடுத்து மன்னாவிலே ஒரு கொமோர் அதிலே போட்டு, உங்கள் தலைமுறைதோறும் காப்பாற்றுவதற்கு ஆண்டவர் திருமுன் வைக்கக்கடவாய் என்றார்.
34 இதுவே ஆண்டவர் மோயீசனுக்குக் கொடுத்த கட்டளையாகும். பின் ஆரோன் அந்தக் கலயத்தைப் பிற்காலத்துக்கென்று ஆண்டவர் சந்நிதியிருக்கும் கூடாரத்திலே வைத்தார்.
35 அதன் பின் இஸ்ராயேல் மக்கள் தாங்கள் குடியேற வேண்டிய நாட்டிற்கு வரும் வரை நாற்பது ஆண்டு அளவாய் மன்னாவை உண்டனர். அவர்கள் கானான் நாட்டு எல்லையில் காலெடுத்து வைக்குமட்டும் அந்த உணவை உண்டுவந்தனர்.
36 ஒரு கொமோர் என்பது ஏப்பியிலே பத்தில் ஒரு பங்கு.
அதிகாரம் 17
1 பின் இஸ்ராயேல் மக்களின் சபை முழுவதுமே சின் என்னும் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, ஆண்டவருடைய கட்டளையின் படியே பற்பல இடங்களிலே தங்கிய பின்னர், இராப்பிதிம் என்னும் இடத்திற்கு வந்து பாளையம் இறங்கினர். அங்கு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை.
2 அப்பொழுது அவர்கள் மோயீசனோடு வாதாடி: நீர் எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றனர். மோயீசன்: நீங்கள் என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள்? ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள் என்றார்.
3 உண்மையிலே அவ்விடத்தில் தண்ணீர் இல்லாமையினால் தாக வேதனைப்பட்ட மக்கள் மோயீசனுக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும், ஆடு, மாடு முதலிய பிராணிகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுவிடத்தானோ எகிப்திலிருந்து அழைத்து வந்தீர் என்று குறை சொல்லக் கேட்டு,
4 மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: அடியேன் இம்மக்களுக்கு என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சத்தில் என்னைக் கல்லால் எறிவார்களே என்றார்.
5 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ மக்கள் முன் சென்று, இஸ்ராயேல் பெரியோர் சிலரை உன்னுடன் அழைத்துக் கொண்டு, ஆற்றை அடித்த கோலை உன் கையில் ஏந்தி நடந்து போவாய்.
6 அதோ நாம் அவ்விடத்திலே ஒரேப் என்னும் பாறைமீது உன்முன் நிற்போம். நீ அந்தப் பாறையை அடி. அடிக்கவே, மக்கள் குடிக்கத் தண்ணீர் வெளிப்படும் என்றார்.
7 மோயீசன் இஸ்ராயேல் பெரியோர்கள் கண்முன் அவ்விதமே செய்தார். இஸ்ராயேல் மக்கள் வாதாடியதுமன்றி ஆண்டவர் தங்களோடு இருக்கிறாரோ இல்லையோ என்று அவர்கள் ஆண்டவரையும் சோதனை செய்த காரணத்தால் மோயீசன் இந்த இடத்திற்குச் சோதனை என்று பெயரிட்டார்.
8 அப்படியிருக்க, அமலேசித்தார் வந்து இராப்பிதிமிலே இஸ்ராயேலரோடு போர் புரிந்தனர்.
9 அப்போது மோயீசன் யோசுவாவை நோக்கி: நீ (வேண்டிய) வீரர்களைத் தெரிந்துகொண்டு, அமலேசித்தாரோடு போராடு. நாளை நான் பாறை உச்சியிலே, கடவுள் கொடுத்த கோலை என் கையிலே பிடித்துக் கொண்டு நிற்பேன் (என்றார்).
10 யோசுவா மோயீசன் சொன்னபடியே அமலேசித்தாரோடு போர் புரிந்தான். மோயீசன், ஆரோன், ஊர் ஆகியோர் மலை உச்சிக்கு ஏறிப் போனார்கள்.
11 மோயீசன் தம் கையை உயர்த்தியிருக்கையில் இஸ்ராயேலர் வெற்றி பெறுவர். அவர் சிறிதேனும் தம் கையைத் தாழவிட்டாலோ, அந் நேரத்தில் அமலேசித்தார் வெற்றி கொள்வர்.
12 ஆனால், மோயீசனின் கைகள் அசந்து போயின என்று கண்டு, அவர்கள் ஒரு கல்லைக் கொண்டு வந்து அவருக்குக் கீழே வைத்தனர். அவர் அதன் மேல் உட்கார்ந்த பின், ஆரோனும் ஊரும் இரு பக்கமும் அவர் கைகளைத் தாங்கிக் கொண்டனர். அதனால் சூரியன் மறையு மட்டும் அவர் கைகள் அசந்து போகவில்லை.
13 யோசுவா அமலேக்கையும் அவன் மக்களையும் வாளின் கருக்கினாலே வெட்டிச் சிதறடித்தான்.
14 ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதை நினைவில் வைத்துக்கொள்ளும்படி ஒரு நூலில் எழுதி, அதை யோசுவா கேட்கும்படி வாசிப்பாய். ஏனென்றால், நாம் அமலேக்கைப் பற்றிய நினைவுகூட அறவே அழித்து வானத்தின்கீழ் எங்கும் இல்லாதபடி செய்வோம் என்று திருவுளம்பற்றினார்.
15 அப்பொழுது மோயீசன் ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, கடவுள் என்னை உயர்த்தினார் என்று அதற்குப் பெயரிட்டு,
16 ஆண்டவருடைய அரியணையின் வல்லமையும் அவருடைய பகையும் தலைமுறை தலைமுறையாக அமலேசித்தாரை விரோதிக்கும் என்று சொன்னார்.
அதிகாரம் 18
1 அப்படியிருக்க, கடவுள் மோயீசனுக்கும் தம் மக்களாம் இஸ்ராயேலருக்கும் செய்தயாவையும், ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்திலிருந்து புறப்படச் செய்ததையும், மதியானில் குருவாயிருந்தவனும் மோயீசனின் உறவினனும் ஆகிய யெத்திரோ கேள்விப்பட்டு,
2 மோயீசனாலே வீட்டுக்கு அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி செப்பொறாளையும் அவனுடைய இரண்டு புதல்வர்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்.
3 நான் அயல் நாட்டிலே அகதியாயினேன் என்று தகப்பன் சொல்லி, ஒரு மகனுக்கு யேற்சம் என்று பெயரிட்டிருந்தான்.
4 என் தந்தையின் கடவுள் எனக்குத் துணையாகி, என்னைப் பாரவோனுடைய வாளினின்று காப்பாற்றியருளினார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பெயரிட்டிருந்தான்.
5 ஆகையால் மோயீசனின் உறவினராகிய யெத்திரோ அவன் புதல்வர்களோடும் மனைவியோடும் பாலைவனத்திற்கு வந்து, மருமகன் பாளையம் இறங்கியிருந்த தெய்வமலையின் அடிவாரத்தை அடைந்து மோயீசனுக்குக் செய்தி அனுப்பி:
6 யெத்திரோ என்னும் உம்முடைய உறவினனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடுகூட அவளுடைய இரண்டு புதல்வர்களும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று சொல்லச் சொன்னான்.
7 அப்பொழுது, மோயீசன் தன் உறவினருக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு வணக்கம் செலுத்தி, அவனை முத்தமிட்ட பின், இருவரும் உபசார மொழிகளால் ஒருவரை ஒருவர் வாழ்த்தினர். பின், யெத்திரோ கூடாரத்தினுள் புகுந்த போது,
8 மோயீசன், இஸ்ராயேலின்பொருட்டு பாரவோனுக்கும் எகிப்தியருக்கும் ஆண்டவர் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட வருத்தங்கள் எல்லாவற்றையும், ஆண்டவர் தங்களை விடுவித்துக் காப்பாற்றியதையும் மாமனுக்கு விவரித்துச் சொன்னார்.
9 ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து அவர்களுக்குச் செய்த எல்லா உபகாரங்களையும் குறித்து யெத்திரோ மகிழ்ச்சியுற்றுச் சொன்னதாவது:
10 உங்களை எகிப்தியருடைய கைக்கும் பாரவோனுடைய கொடுங்கோலுக்கும் தப்புவித்து, எகிப்தின் சிறையினின்று தம் (மக்களை) விடுவித்த ஆண்டவர் வாழ்த்தப்படக் கடவாராக.
11 எல்லாத் தேவர்களைக் காட்டிலும் ஆண்டவர் மகத்தானவர் என்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் (மக்களுக்கு) அநியாயமன்றோ செய்தார்கள் (என்றார்).
12 மேலும், மோயீசனின் மாமனாகிய யெத்திரோ கடவுளுக்குத் தகனப்பலி முதலிய பலிகளையும் படைத்தார். பின், ஆரோனும் இஸ்ராயேலரின் மூத்தோரான அனைவரும் வந்து, கடவுள் முன்னிலையில் அவரோடுகூட உணவருந்தினர்.
13 மறுநாள், மோயீசன் மக்களுக்கு நியாய விசாரணை செய்ய உட்கார்ந்தார். மக்கள் காலை முதல் மாலை வரை மோயீசன் முன் நின்று கொண்டிருந்தனர்.
14 மோயீசன் இவ்வாறு மக்களுக்கு ஆதரவாய்ச் செய்துவந்த யாவையும் கண்ட யெத்திரோ: மக்களை முன்னிட்டு நீர் ஏன் இவ்வாறு செய்கிறீர்? நீர் மட்டும் உட்கார்ந்திருக்கிறதும், காலை முதல் மாலை வரை மக்கள் காத்திருக்கிறதும், சரி தானோ என்றார்.
15 மோயீசன் மறுமொழியாக: மக்கள் கடவுளின் தீர்ப்பை நாடியே என்னிடம் வருகின்றனர்.
16 அதாவது, அவர்களுக்குள் யாதொரு வழக்கு உண்டானால், நான் அவர்களுக்குள் நடுவனாய் இருந்து, கடவுளின் கட்டளைகளையும் அவருடைய நீதி நெறிச் சட்டங்களையும் தெரிவிக்கும்படி என்னிடம் வருகின்றனர் என்றார்.
17 அவரோ: நீர் இவ்வாறு செய்வது நல்லது அன்று.
18 இத்தகைய விவேகமற்ற வேலையால் நீரும் (களைப்புற்றுப்) போகிறீர்; உம்மோடு இருக்கிற மக்களும் வீணாய்த் தொல்லைப்பட்டு வருகின்றனர். இது உமக்குத் தாளாத வேலை. அதன் பாரத்தை ஒருவராய் நின்று தாங்க உம்மால் முடியாது.
19 இப்போது நான் சொல்லும் வார்த்தைகளையும் ஆலோசனைகளையும் கேட்பீராயின், கடவுள் உம்மோடு இருப்பார். கடவுளைச் சார்ந்த காரியங்களில் நீர் கடவுள் முன்னிலையிலிருந்து அவர்களுக்காகப் பேசும்.
20 (மக்களுக்குச்) சடங்குகளையும், ஆராதனை முறைமையையும், அவர்கள் செல்ல வேண்டிய வழியையும் அவர்கள் செய்யவேண்டிய செயல்களையும் நீரே கற்பித்துக் காட்டக்கடவீர்.
21 மேலும், மக்கள் அனைவருள்ளும் செல்வாக்கு, தெய்வபயம், உண்மைமொழி, தாராள குணம் உடையோரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம் பேருக்கோ நூறு பேருக்கோ ஐம்பது அல்லது பத்துப் பேருக்கோ தலைவர்களாக ஏற்படுத்தும்.
22 இவர்களே எப்பொழுதும் நீதி வழங்குவார்கள். பெரிய வழக்குகள் யாவையும் உம்மிடம் கொண்டு வரவும், சிறிய வழக்குகளை அவர்களே தீர்க்கவும் கடவர். இப்படி அவர்கள் உம்மோடு கூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், அது உமக்கு இலகுவாய் இருக்கும்.
23 இவ்வாறு செய்வீராயின், கடவுள் உமக்குக் கற்பித்த கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய சட்டதிட்டங்களை உம்மாலே நிறைவேற்றக் கூடும். அதனால் மக்கள் எல்லாரும் நிறைவுடன் வீடு எய்துவர் என்றார்.
24 இந்த அறிவுரையை மோயீசன் உற்றுக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் நடந்தார்.
25 இஸ்ராயேல் மக்கள் அனைவருள்ளும் செல்வாக்குள்ளவர்களைத் தெரிந்து எடுத்து, அவர்களை மக்கள் தலைவராக்கி, சிலரை ஆயிரம் பேருக்கும், வேறு சிலரை நூறு பேருக்கும், இன்னும் சிலரை ஐம்பது அல்லது பத்துப் பேருக்கும் தலைவர்களாக நியமித்தார்.
26 அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கிவந்தனர். பெரிய வழக்குகளை மோயீசனிடம் கொண்டு வருவர்; சாதாரண வழக்குகளை அவர்களே தீர்த்து வைப்பர்.
27 பின் மோயீசன் தம் மாமனை அனுப்பிவிட, அவர் திரும்பத் தம் நாடு திரும்பினார்.
அதிகாரம் 19
1 இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வந்த மூன்றாம் மாதத்தின் மூன்றாம் நாள் சீனாய்ப் பாலைவனத்தை அடைந்தனர்.
2 அவர்கள் இராப்பிதிம் என்னும் இடத்திலிருந்து பயணமாகிச் சீனாய்ப் பாலைவனம் சேர்ந்து, அவ்விடத்திலேயே பாளையம் இறங்கினர். அங்கே இஸ்ராயேல் மக்கள் மலைக்கு எதிரே கூடாரம் அடித்தனர்.
3 மலையிலிருந்து கடவுள் தம்மைக் கூப்பிடுவதை மோயீசன் கேட்டு அவருடைய மலையில் ஏறின போது, ஆண்டவர் அவரை நோக்கி: நீ யாக்கோபு வம்சத்தாராகிய இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியதாவது:
4 நாம் எகிப்தியருக்குச் செய்தவைகளையும், உங்களை நாம் கழுகுகளின் இறக்கைகள்மேல் சுமந்து நமக்குச் சொந்தமாய் ஏற்றுக் கொண்ட விதத்தையும் நீங்களே கண்டிருக்கிறீர்கள்.
5 ஆகையால், நீங்கள் நமது வாக்கைக் கேட்டு, நமது உடன்படிக்கையைக் கைக்கொண்டு அனுசரிப்பீர்களேயாகில், எல்லா மக்களிலும் நீங்களே நமது உடைமையாய் இருப்பீர்கள். ஏனென்றால், பூமியெல்லாம் நம்முடையது.
6 அன்றியும், நீங்கள் நமக்கு இராஜரீக ஆசாரியக் கூட்டமும் பரிசுத்த சனமுமாய் இருப்பீர்கள். இவை நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டிய வார்த்தைகளாம் என்றார்.
7 மோயீசன் வந்து, மக்களுள் பெரியோரை அழைத்து, ஆண்டவர் தமக்குச் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு விவரமாய்ச் சொல்ல,
8 மக்கள் எல்லாரும் ஒன்றாகச்சேர்ந்து மறுமொழி சொல்லி: ஆண்டவர் சொன்னவையெல்லாம் செய்வோம் என்றனர். பிறகு மக்களின் மறுமொழியை மோயீசன் ஆண்டவரிடம் தெரிவித்த போது,
9 ஆண்டவர் அவரை நோக்கி: நாம் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டால், அவர்கள் என்றும் உன்னை நம்புவார்கள். அதன்பொருட்டு நாம் இனிமேல் கார்மேகத்திலிருந்து வருவோம் என்றார். மக்களின் வார்த்தைகளை மோயீசன் ஆண்டவருக்குத் தெரிவித்த போது,
10 அவர் அவரை நோக்கி: நீ போய் இன்றும் நாளையும் மக்களைத் தூய்மைப்படுத்து. அவர்கள் தங்கள் ஆடைகளைக் கழுவி,
11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தமாய் இருக்கக் கடவார்கள்; ஏனென்றால், மூன்றாம் நாளிலே ஆண்டவர் எல்லா மக்களுக்கும் முன் சீனாய் மலை மேல் இறங்குவார்.
12 மலையைச் சுற்றிலும் மக்கள் மீறிக் கடக்கக் கூடாத எல்லைக் கல்லை நாட்டி: நீங்கள் மலைமேல் ஏற வேண்டாம்; அதன் அடிவாரத்தை முதலாய்த் தொடவேண்டாம்; எச்சரிக்கையாய் இருங்கள் என்றும்; மலையைத் தொடுபவன் சாகவே சாவான் என்றும்;
13 அப்படிப்பட்டவனை யாரும் தொடக் கூடாது; அவன் கல்லால் எறியப்பட்டோ, வேலால் குத்தப்பட்டோ சாகவேண்டும். அது மனிதனானாலும் சரி, மிருகமானாலும் சரி, உயிரோடே வைக்கப்படல் ஆகாது; ஆனால், எக்காள முழக்கம் ஒலிக்கத் தொடங்கும் நேரம் மக்கள் மலைமேல் ஏறக்கடவார்கள், (என்றும் சொல்வாய்) என்றருளினார்.
14 மோயீசன் மலையிலிருந்து இறங்கி மக்களிடம் வந்து அவர்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்கள் தங்கள் ஆடைகளைத் தோய்த்த பின், அவர்களை நோக்கி:
15 மூன்றாம் நாளுக்கு ஆயத்தமாய் இருங்கள். உங்கள் மனைவிகளைச் சேராதிருங்கள் என்றார்.
16 மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் இதோ பேரிடி முழங்கியது; மின்னல் வெட்டியது; மலையின் மேல் கார்மேகம் வந்து கவிழ்ந்தது; எக்காளம் பேரொலி எழுப்பியது. அதனால் பாளையத்திலிருந்த மக்கள் அனைவரும் அச்சமுற்றனர்.
17 அப்பொழுது மக்கள் ஆண்டவருக்கு எதிர் கொண்டு போக, மோயீசன் அவர்களைப் பாளையம் இருந்த இடத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார். அவர்கள் மலையின் அடிவாரத்திலே நின்றனர்.
18 ஆண்டவர் சீனாய் மலைமீது நெருப்பில் இறங்கியபடியாலும், சூளையிலிருந்து புகை புறப்படுவது போல் மலையினின்று புகை எழும்பியதாலும், அந்தச் சீனாய் மலை புகைக் காடாகிப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது.
19 எக்காளமும் வர வரப் பேரொலி எழுப்பி நெடுநேரம் முழங்கிக் கொண்டிருந்தது. அவ்வேளை மோயீசன் கடவுளோடு பேசிக் கொண்டிருந்தார்; ஆண்டவரும் அவருக்கு மறு மொழி சொல்லிய வண்ணம் இருந்தார்.
20 பின் ஆண்டவர் சீனாய் மலையின் சிகரத்தில் இறங்கி, மோயீசனை அங்கு வரச் சொல்லி அழைத்தார். அவர் அங்கு ஏறின போது, அவர் மேயீசனை நோக்கி:
21 மக்கள் ஆண்டவரைப் பார்க்க வேண்டி எல்லைகளைக் கடந்து வரத் துணியாதபடியும், அதனால் அவர்களில் பற்பலர் அழிந்து போகாதபடியும், நீ இறங்கிப் போய் அவர்களை எச்சரித்து வை.
22 மேலும், ஆண்டவர் திருமுன் வருகிற குருக்களும் தங்களைத் தூய்மைப் படுத்தக் கவனமுள்ளவர்களாய் இருக்கச் சொல். இல்லாவிட்டால், ஆண்டவர் அவர்களை அழித்து விடுவார் (என்றார்).
23 அதற்கு மோயீசன்: ஆண்டவரே, மலையைச் சுற்றிலும் எல்லைக்கல்லை வைக்கச் சொல்லி, மக்களைத் தூய்மைப் படுத்த நீரே கட்டளையிட்டிருக்கிறீர். ஆகையால், மக்கள் சீனாய் மலை மேல் ஏறி வர மாட்டார்கள் என்றார்.
24 ஆண்டவர் அவரை நோக்கி: நீ இறங்கிப் போ. பின் ஆரோனுடன் திரும்பி ஏறி வா. மீண்டும், ஆண்டவர் அழித்தொழிப்பார் என்று சொல்லி, குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வரும்படி எல்லைகளைக் கடக்க வேண்டாம் என்று எச்சரிக்கையாய் இருக்கச் சொல் என்றார்.
25 அப்படியே மோயீசன் இறங்கி மக்களிடம் போய், அவையெல்லாம் அவர்களுக்கு அறிவித்தார்.
அதிகாரம் 20
1 பிறகு ஆண்டவர் திருவுளம் பற்றிய எல்லா வாக்கியங்களுமாவன:
2 எகிப்து நாட்டிலிருந்தும் அடிமை வாழ்வினின்றும் உன்னை விடுவித்த ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.
3 நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.
4 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.
5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவராய் இருக்கிற நாம் வல்லவரும் எரிச்சல் உள்ளவருமாய் இருக்கிறோம்; நம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்து, தந்தையரின் அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரித்து வருகிறவராய் இருக்கிறோம்.
6 நம்மிடம் அன்பு கூர்ந்து, நம் கட்டளைகளைக் கைக்கொண்டு ஒழுகிவருகிறவர்களுக்கோ, ஆயிரமாயிரம் தடவையும் தயவு காட்டுவோம்.
7 உன் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரை வீணாய்ச்சொல்ல வேண்டாம். ஏனென்றால், ஆண்டவர் தம்முடைய பெயரை வீணில் சொல்பவனைத் தண்டியாமல் விடமாட்டார்.
8 ஒய்வு நாளைப் பரிசுத்தமாய்க் கொண்டாட நினைவு கூர்வாயாக.
9 ஆறு நாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த காரியங்களை எல்லாம் நடத்துவாயாக.
10 எழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவரின் ஓய்வு நாளாய் இருப்பதனால், அன்று நீயாவது, உன் மகன் மகளாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாவது, உன் மிருகங்கள் அல்லது உன் வாயில்களில் இருக்கிற அந்நியனாவது யாதொரு வேலையும் செய்ய வெண்டாம்.
11 ஏனென்றால், ஆண்டவர் ஆறு நாளில் விண்ணையும் மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து, ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டமையால், ஆண்டவர் ஓய்வு நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.
12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப் போகிற நாட்டிலே நீ நெடுநாள் வாழும் பொருட்டு உன் தந்தையையும் தாயையும் மதித்து நடப்பாயாக.
13 கொலை செய்யாதிருப்பாயாக.
14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.
15 களவு செய்யாதிருப்பாயாக.
16 உன் அயலானுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
17 உன் அயலான் வீட்டை விரும்பாதே: அவனுடைய மனைவியையாவது, வேலைக்காரனையாவது, வேலைக்காரியையாவது, மாட்டையாவது, கழுதையையாவது, மேலும் அவனுக்குக் கிடைத்த யாதொன்றையாவது விரும்பாதிருப்பாயாக என்றருளினார்.
18 மக்கள் அனைவரும் இடி, மின்னலையும் எக்காள ஒலியையும் புகைந்து கொண்டிருந்த மலையையும் கண்டு அச்சமுற்றுத் திடுக்கிட்டவர்களாய்த் தூரத்திலே அசைவற்று நின்றனர்.
19 மோயீசனை நோக்கி: நீர் எங்களோடு பேசும்; நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேச வேண்டாம்; பேசினால், நாங்கள் சாவோம் என்றனர்.
20 அதற்கு மோயீசன்: அஞ்ச வேண்டாம். உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் அவருக்குப் பயந்து பாவம் செய்யாமல் இருப்பதற்காகவும் கடவுள் இவ்வாறு எழுந்தருளி வந்தார் என்றார். மக்கள் தூரத்திலே நின்று கொண்டிருந்தனர்.
21 மோயீசனோ கடவுள் இருந்த காரிருளுள் அண்டை சென்றார்.
22 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: நாம் வானத்திலிருந்து உங்களோடு பேசினதாக உங்களுக்குத் தெரியும்.
23 நீங்கள் வெள்ளியாலேனும் பொன்னாலேனும் விக்கிரகங்களை உங்களுக்கு உண்டாக்கிக்கொள்ள வேண்டாம்.
24 நம்முடைய பெயர் கொண்டாடப்படும் இடத்தில் நீங்கள் மண்ணாலே ஒரு பலிப்பீடத்தைக் கட்டி எழுப்பி அதன்மேல் தகனப் பலியாகவும் சமாதானப் பலியாகவும் உங்கள் ஆடுமாடு முதலியவற்றைச் சமர்ப்பித்து வாருங்கள். நாம் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்போம். சில வேளை கல்லினாலே பலிப்பீடத்தை நமக்குக் கட்டுவீர்களாயின்,
25 கொத்தி வெட்டப்பட்ட கல்லாலே அதைச் செய்யாதீர்கள். ஏனென்றால், அதன்மேல் உன் உளி பட்டாலே அது தீட்டாகி விடும்.
26 மேலும், உன் நிருவாணம் காணப்படாதபடிக்குப் படிகளால் நம்முடைய பலிப்பீடத்தின் மேல் ஏற வேண்டாம்.
அதிகாரம் 21
1 நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டிய நீதி நெறிகளாவன: எபிரேய அடிமை ஒருவனை நீ விலைக்கு வாங்கினால்,
2 அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் ஊழியம் செய்து, ஏழாம் ஆண்டிலே ஒன்றும் கொடாமல் விடுதலை பெறுவான்.
3 அவன் வந்த ஆடையோடு செல்லக்கடவான். அவன் திருமணமானவனாய் இருந்தால் அவன் மனைவியும் அவனோடு போகக்கடவாள்.
4 ஆனால், அவன் தலைவன் அவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுத்து அவள் அவனுக்கு ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் பெற்றிருப்பாளாயின், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் தலைவனுக்கே சொந்தம்.
5 அடிமையானவன்: என் தலைவனுக்கும், என் மனைவிமக்களுக்கும் அன்பு செய்கிறேன்; விடுதலை பெற்றுப் போக எனக்கு விருப்பமில்லை என்று சொன்னால்,
6 அவன் தலைவன் அவனை மக்கட் தலைவர்களிடம் அழைத்துச் சென்று, அவனைக் கதவின் அருகேயாவது அல்லது கதவு நிலைகளின் அருகேயாவது இருத்தி, அவன் காதைக் கம்பியினாலே குத்துவான். அதன் பின் அவன் என்றென்றும் அவனுக்குப் பணிவிடை செய்யக் கடவான்.
7 ஒருவன், தன் மகளை வேலைக்காரியாக விற்றுவிட்டானாயின், வேலைக்காரர்கள் விடுதலை பெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது. அவளை வாங்கின தலைவனுக்கு அவள் பிடிக்கவில்லையென்றால் அவன் அவளைப் போக விடுவான்.
8 ஆனால், அவளை அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளை அந்நியர் கையில் விற்று விட அவனுக்கு அதிகாரமில்லை.
9 விரும்பின், தன் மகனுக்கு அவளை மண ஒப்பந்தம் செய்யலாம். அவ்வாறெனில் தன் புதல்வியரைப் போல் அவளையும் நடத்தக்கடவான்.
10 பிறகு அவன் அவளுக்குப் பதிலாக வேறொரு மனைவியைத் தன் மகனுக்குக் கொடுப்பானாயின், மேற்சொன்ன பெண்ணுக்கு உணவும் உடையும், வேறொரு திருமணத்திற்குச் செலவும், அவள் கன்னிமை நட்டத்துக்குப் பரிகாரப் பணமும் ஆகிய இவற்றில் குறைவு செய்யாமல் கொடுக்கக்கடவான்.
11 அவன் இம்மூன்றையும் அவளுக்குச் செய்யாவிடின், அவள் பணமொன்றும் கொடாமலே விடுதலையாய்ப் போவாள்.
12 வேண்டுமென்று ஒரு மனிதனைக் கொல்பவன் கொலை செய்யப்படக் கடவான்.
13 பகையோ கெட்ட எண்ணமோ இன்றித் தற்செயலாய் ஒருவனைக் கொன்றவன் நாம் பின்னர் நியமிக்கப் போகிற இடத்தில் சரணடைவான்.
14 ஒருவன் வேண்டுமென்று ஒளிந்திருந்து தன் பிறனைக் கொன்றிருப்பானாயின், அவனை நமது பீடத்தினின்றே அகற்றிக் கொல்லக்கடவாய்.
15 தன் தந்தையையோ தாயையோ அடிப்பவன் சாகவே சாவான்.
16 ஒரு மனிதனைக் கடத்திச்சென்று விற்றிருப்பவன், குற்றவாளியென்று தெளிவானவுடன் சாகவே சாவான்.
17 தன் தந்தையையோ தாயையோ சபிப்பவன் சாகவே சாவான்.
18 இருவர் சண்டை செய்யும்போது, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலோ கையால் குத்தியதினாலே அவன் சாகாமல், படுக்கையாய்க் கிடந்து,
19 பிறகு எழுந்திருந்து தன் கோலை ஊன்றி வெளியே நடமாடினால், அடித்தவன் அவனுக்கு உண்டான மானக்கேட்டைப் பற்றியும் நட்டத்திற்குப் பரிகாரம் செய்தால் குற்றமில்லாதவனாய் இருப்பான்.
20 ஒருவன் தன் அடிமையை--ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி--தடியால் அடித்திருக்க, அவர்கள் அவன் கையாலே இறந்து போனால் அவன் தண்டனை பெறுவான்.
21 ஆனால், (அடியுண்டோர்) ஒருநாளேனும் இரண்டு நாளேனும் உயிரோடு இருந்தால், அவர்கள் தலைவனின் உடைமையாகையால், அவனுக்குத் தண்டனை கிடையாது.
22 மனிதர்சண்டையிலே ஒருவன் கருத்தாங்கிய ஒரு பெண்ணை அடித்ததனால் கருவிழுந்திருந்த போதிலும் அவள் உயிர் பிழைத்துக் கொண்டாளாயின், அவளுடைய கணவன் கேட்டபடி நீதிபதிகள் விதிக்கும் தண்டத்தைச் செலுத்தக்கடவான்.
23 ஆனால், அவள் இறந்திருந்தால் உயிருக்கு உயிரை ஈடுசெய்யக்கடவான்.
24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழிவாங்க வேண்டும்.
26 யாரேனும் ஒருவன் தன் அடிமை ஊழியனையோ ஊழியக்காரியையோ கண்ணில் அடித்ததினாலே அவர்கள் கண் குருடரானால், பழுதுபட்ட கண்ணுக்குப் பதிலாக அவர்களை விடுதலை செய்யக்கடவான்.
27 அப்படியே அவன் தன் ஊழியனுடைய பல்லோ, ஊழியக்காரியினுடைய பல்லோ உதிர அடித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யக்கடவான்.
28 ஒரு மாடு ஆடவனையோ பெண்ணையோ முட்டினதினால் அவர்கள் இறந்தால், அந்த மாடு கல்லால் எறியப்படவேண்டும். அதன் இறைச்சியை உண்ணலாகாது. ஆனால், மாட்டின் உரிமையாளன் குற்றவாளி ஆகமாட்டான்.
29 ஆயினும், தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடு என்று மக்கள் அவனுக்குத் தெரிவித்திருந்தும், அவன் அதைக் கட்டி வைக்காததினாலே அது ஓர் ஆடவனையோ பெண்ணையோ கொன்றிருந்தால், மாடும் கல்லால் எறியப்பட வேண்டும்; மாட்டின் உரிமையாளனும் கொலைசெய்யப்பட வேண்டும்.
30 ஆனால் அபராதம் கொடுக்கும்படி அவனுக்கு விதிக்கப்பட்டதாயின், அவன், தன் உயிரை மீட்டுக் கொள்ளும்படி, கேட்ட தண்டம் கொடுக்கக்கடவான்.
31 ஒருவனுடைய மகனையோ மகளையோ மாடு முட்டினால், அந்தத் தீர்ப்புப்படியே மாட்டுக்குடையவனுக்குச் செய்யப்படும்.
32 ஊழியனையோ ஊழியக்காரியையோ மாடு முட்டியிருந்தால், மாட்டுக்குடையவன் (அவர்களுடைய) தலைவனுக்கு முப்பது சீக்கல் வெள்ளி கொடுப்பான். மாடோவென்றால் கல்லால் எறியப்படவேண்டும்.
33 யாரனும் ஒருவன் ஒரு கிணறு வெட்டி, அதை மூடாமல் திறந்து போட்டிருந்ததினாலே மாடேனும் கழுதையேனும் அதில் விழுந்ததாயின்,
34 கிணற்றுக்குடையவன் மிருகம் செத்த நட்டத்திற்குப் பரிகாரமாக வேண்டிய பணம் கொடுக்க வேண்டும். செத்த மிருகமோ அவனுடையதாகும்.
35 ஒருவனுடைய மாடு மற்றொருவனுடைய மாட்டைக் காயப்படுத்தினதனாலே ஒருவேளை அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை விற்று, இருவரும் அதன் விலையைப் பங்கிட்டு, செத்த மாட்டையும் பங்கிட்டுக் கொள்ளக் கடவார்கள்.
36 ஆனால், அந்த மாடு முட்டுகிற மாடென்று, அம்மாட்டின் உரிமையாளன் முன்பே அறிந்திருந்தும் அதைக் கட்டிவைக்காதிருந்தால், மாட்டுக்கு மாடு கொடுத்து ஈடு செய்யக்கடவான். செத்த மாடோ அவனுடையது ஆக வேண்டும்.
அதிகாரம் 22
1 மாட்டையோ ஆட்டையோ திருடிக்கொன்றுவிட்டவன் அல்லது விற்றுவிட்டவன் அந்த ஒரு மாட்டுக்கு ஐந்து மாடுகளையும் ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுத்து ஈடு செய்யக்கடவான்.
2 திருடன் ஒரு வீட்டினுள் புகுமாறு கன்னமிடும் போதோ சுரங்கம் வெட்டும்போதோ கண்டுபிடிக்கப்பட்டு அடிபட்டு இறந்தால், அவன் இரத்தப்பழி அடித்தவனைச் சாராது.
3 சூரியன் உதித்தபின் அதைச் செய்திருந்தாலோ, அது கொலை பாதகமாகையினாலே, அவன் கொலை செய்யப்படுவான். திருட்டுக்கு ஈடு செய்யத் திருடன் கையில் ஒன்றுமில்லையாயின், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
4 அவன் திருடின மாடோ ஆடோ கழுதையோ உயிரோடு அவனிடம் அகப்பட்டதாயின், அவன் இருமடங்கு கொடுத்து ஈடு செய்யவேண்டும்.
5 அயலான் வயலையோ திராட்சைத் தோட்டத்தையோ அழித்து, அவற்றிலே தன் மிருகங்களை மேய விடுபவன் இழப்பிற்கு ஈடாகத் தன் சொந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் சிறந்ததைக் கொடுக்கக்கடவான்.
6 நெருப்பு எழும்பி முட்களின் மேல் விழுந்து, அதிலிருந்து தானியப் போரிலேயாவது விளைந்த பயிரிலேயாவது பற்றி எரித்து விடின், நெருப்பைக் கொளுத்தினவன் அழிவிற்கு ஈடு செய்யக்கடவான்.
7 ஒருவன் தன் நண்பனிடம் பணத்தையோ உடைமையையோ அடகு வைத்திருக்கும் போது, அது அவன் வீட்டிலிருந்து திருட்டு போனால், திருடன் அகப்பட்டால் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவான்.
8 திருடன் அகப்படாவிட்டால், வீட்டுத் தலைவன் நீதிபதியிடம் போய், தன் அயலானுடைய பொருளைத் தான் அபகரிக்கவில்லையென்று ஆணையிட்டுச் சொல்லக்கடவான்.
9 திருடுபோன மாடு, கழுதை, ஆடு, ஆடை முதலியவற்றின் நட்டத்தைப் பொறுத்தமட்டில் இருவர் நீதிபதிகளிடம் வருவார்கள். நீதிபதிகள் திருடனைக் குற்றவாளியென்று தீர்ப்புச் சொன்னால், அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாய் ஈடு கொடுக்கக்கடவான்.
10 ஒருவன் தன் கழுதை, ஆடு, மாடு, முதலிய மிருகங்களைப் பிறன் பொறுப்பில் ஒப்புவித்து விட்டிருக்கும் போது, அது இறந்தாலும், மெலிந்து போனாலும், பகைவரால் பறிபட்டுப் போனாலும், சாட்சிகள் ஒருவனும் இல்லாது போனால்,
11 சபையின் முன்பாக (பிரதிவாதி) தான் அயலானுடைய பொருளைக் கையாலே தொடவில்லையென்று ஆணையிட்டுச் சொல்வான். உரிமையாளன் அதை ஏற்கவேண்டும். மற்றவனோ ஒன்றும் அளிக்க வேண்டுவதில்லை.
12 அது திருடுபோயிற்றென்றால், அவன் அதன் உரிமையாளனுக்கு ஈடு செய்யக்கடவான்.
13 அது காட்டுவிலங்கால் உண்ணப்பட்டிருந்தால், அவன் எஞ்சியதைத் தலைவனுக்கு ஒப்புவித்துவிடின், அதற்காக ஈடு செய்ய வேண்டியதில்லை.
14 அப்படிப்பட்ட வகைகளில் எதையேனும் ஒருவன் இரவலாக வாங்கியிருப்பின், அது தலைவனுக்குத் தெரியாமல் இறந்தாவது அழிந்தாவது போயிருப்பின், அவன் அதற்கு ஈடு செய்யவேண்டும்.
15 ஆனால், உரிமையாளன் முன்னிலையில் அவன் பணம் கொடுத்து வாடகைக்கு அதை வாங்கினானாயின், அதற்கு ஈடு செய்ய வேண்டுவதில்லை.
16 மண ஒப்பந்தமாக ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கற்பழித்து அவளோடு படுத்தால், அவன் அவளுக்காகப் பரிசம் போட்டு அவளை மணந்து கொள்ளக்கடவான்.
17 கன்னியின் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க இசையாவிடின், கன்னிகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி கொடுக்கவேண்டும்.
18 சூனியக்காரரை உயிர்வாழ விடாதே.
19 விலங்கோடு புணருகிறவன் கண்டிப்பாய்க் கொல்லப்பட்டுச் சாகவேண்டும்.
20 ஆண்டவர் ஒருவருக்கேயன்றி வேறு தேவர்களுக்கு வழிபாடு செய்கிறவன் கொல்லப்படுவான்.
21 அந்நியனைத் துன்புறுத்தவும் வதைக்கவும் வேண்டாம். நீங்களும் எகிப்து நாட்டிலே அந்நியராய் இருந்தீர்களல்லவா?
22 விதவைப் பெண்ணுக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் அநீதி செய்யலாகாது.
23 அவர்களுக்கு அநீதி செய்தீர்களாயின், அவர்கள் நம்மை நோக்கிக் கூப்பிட, நாம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு,
24 கோபம் மூண்டவராய் வாளினால் உங்களைக் கொல்வோமாதலால், உங்கள் பெண்களும் விதவை ஆவார்கள்; உங்கள் பிள்ளைகளும் திக்கற்ற பிள்ளைகளாய்த் திரிவார்கள்.
25 உன்னோடு குடியிருக்கிற நம் மக்களில் ஏழையான ஒருவனுக்கு நீ கடனாகப் பணம் கொடுத்திருப்பாயாகில், அவனை நெருக்கடி செய்யவும் மிதமிஞ்சின வட்டி வாங்கவும் வேண்டாம்.
26 உன் அயலானுடைய ஆடையை ஈடாக வாங்கியிருப்பாயாகில், சூரியன் மறையுமுன் அதை அவனுக்குத் திரும்பக் கொடுப்பாயாக.
27 ஏனென்றால், அவன் தன் உடலை மூடி உடுத்துவதற்கு அது ஒன்றேயன்றி, போர்த்திப்படுத்துக் கொள்வதற்கு வேறு இல்லை. அவன் நம்மை நோக்கி முறையிடும் போது, இரக்கமுள்ளவராகிய நாம் அவனுக்குச் செவி கொடுப்போம்.
28 அதிகாரிகளைப் பழிக்கவும், மக்கட் தலைவர்களைப்பற்றி இழிவாகப் பேசவும் வேண்டாம்.
29 உன் முதற் பலனில் பத்தில் ஒரு பாகத்தைக் காணிக்கை செலுத்தத் தாமதிக்க வேண்டாம். மேலும், உன் புதல்வரில் தலைச்சன் பிள்ளையை நமக்குக் கொடுப்பாயாக.
30 உன் ஆடுமாடுகளிலும் அவ்வாறே செய்வாய். குட்டியை ஏழு நாள் தாயோடு இருக்கவிட்டு, எட்டாம் நாளிலே நமக்குச் செலுத்தி விடுவாயாக.
31 நீங்கள் நமக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட மக்களாய் இருக்கக்கடவீர்கள். கொடிய விலங்குகளால் கடியுண்ட இறைச்சியை உண்ணாமல், அதை நாய்களுக்குப் போடக்கடவீர்களாக.
அதிகாரம் 23
1 பொய் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதே. அக்கிரமிக்கு வேண்டிப் பொய்ச்சாட்சி சொல்வதற்கு அவனுக்குக் கை கொடுக்கலாகாது.
2 தீமை செய்வதில் மக்களைப் பின்பற்றாதே. நீதிமன்றத்திலே பெரும்பான்மையோரைச் சார்ந்து சத்தியச் சதி செய்யாதே.
3 நீதிமன்றத்தில் ஏழையின் முகத்தையும் பார்க்காதே.
4 உன் பகைவனின் தப்பியோடிப் போன மாடாவது கழுதையாவது காணப்பட்டால், அதை அவனிடத்தில் திரும்பக் கொண்டு போய் விடுவாய்.
5 உன் பகைவனுடைய கழுதை, சுமையோடு விழுந்து கிடக்கக் கண்டால், அப்பாலே போகாமல், அது எழுந்திருப்பதற்கு உதவி செய்வாய்.
6 ஏழையொருவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.
7 கள்ளமான காரியத்துக்கு விலகி இருப்பாயாக. குற்றமற்றவனையும் நீதிமானையும் கொலை செய்யாதே. ஏனென்றால், நாம் தீயவனை வெறுக்கிறோம்.
8 கைக்கூலி வாங்காதே. ஏனென்றால், கைக்கூலிகள் ஞானிகளையுமே குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளையும் புரளச் செய்யும்.
9 அந்நியனைத் துன்புறுத்தாதே. ஏனென்றால், நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தமையால், அந்நியரின் மனநிலையை நீங்களுமே அறிவீர்கள்.
10 ஆறாண்டுகள் நீ உன் நிலத்திலே பயிரிட்டு அதன் பலன்களைச் சேர்த்துக் கொள்வாய்.
11 ஏழாம் ஆண்டிலோ, உன் மக்களுள் எளியவர்கள் உண்ணவும், மீதியானவையெல்லாம் காட்டுப் பிராணிகள் தின்னவும் உன் நிலங்கள் சும்மா கிடக்க விட்டுவிடுவாய். உன் திராட்சைத் தோட்டத்தையும் ஒலிவத் தோட்டங்களையும் குறித்து அவ்விதமே செய்வாயாக.
12 ஆறு நாள் நீ வேலை செய்து, ஏழாம் நாளிலே உன் ஆடு, மாடு, கழுதை முதலியன இளைப்பாறத் தக்கதாகவும், உன் அடிமைப்பெண்ணின் மகனும் அந்நியனும் இளைப்பாறத் தக்கதாகவும் ஓய்வு கொள்வாயாக.
13 நாம் உங்களுக்குச் சொன்னதெல்லாம் அனுசரியுங்கள். மேலும், அந்நிய தெய்வங்களின் பெயரைக் கொண்டு ஆணையிடாதீர்கள். உங்கள் வாயினின்று அது யாராலேயும் கேட்கப்படலாகாது.
14 ஆண்டுதோறும் மும்முறை நமக்கு வணக்கமாய்த் திருவிழாக்கள் கொண்டாடுவீர்கள்.
15 (அதாவது) புளியாத அப்பத் திருவிழா நீ எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட போது புதுப் பலன்களின் மாதத்தில் ஏழு நாளளவும் புளியாத அப்பத்தை உண்ண வேண்டுமென்று நாம் உனக்குக் கட்டளையிட்டோம். நீ அவ்விதமே செய்தாய். (அன்றியும்) வெறுங்கையோடு நம் முன்னிலையில் வராதபடி கவனமாய் இருப்பாய்.
16 உன் நிலத்திலே நீ எதை விதைத்திருந்தாலும் உன் வேலையால் கிடைத்த முதற் பலன்களின் அறுப்புக் காலத் திருவிழாவையும், ஆண்டு முடிவிலே உன் நிலங்களில் விளைந்த எல்லா விளைச்சல்களையும் சேர்த்துத் தீர்ந்த போது சேர்ப்புக்காலத் திருவிழாவையும் கொண்டாடி வருவாய்.
17 உன் ஆண்மக்கள் யாவரும் ஆண்டில் மும்முறை உன் கடவுளாகிய ஆண்டவராம் நம்மிடம் வருவார்கள்.
18 நமக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளியாத அப்பத்தோடு சேர்த்துச் செலுத்தாதே. நமக்கு இடப்பட்ட பலியின் கொழுப்பையும் விடியற்காலை வரை வைத்திராதே.
19 உன் நிலத்தில் விளைந்த புதுப் பலன்களை உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்திற்குக் கொண்டு வருவாய். வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்காதிருப்பாய்.
20 உனக்கு முன் நடந்து உன் வழியில் உன்னைப் பாதுகாப்பதற்கும், நாம் உனக்குத் தயார் செய்திருக்கும் இடத்திற்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும், இதோ நாம் ஒரு தூதரை அனுப்புவோம்.
21 அவரை வணங்கவும், அவருடைய வாக்குக்குச் செவி கொடுக்கவும், அவருக்குப் பயந்து நடக்கவும் கடவாய். ஏனென்றால் உன் பாவத்தை அவர் பொறுப்பதில்லை. நமது பெயர் அவரிடம் உள்ளது.
22 நீ அவரது வாக்குக்குச் செவிகொடுத்து, நாம் திருவுளம் பற்றுகிறது எல்லாம் அனுசரிப்பாயாகில், நாம் உன் பகைவர்கட்குப் பகைவராகி உன்னை வதைப்பவர்களை வதைப்போம்.
23 நம் தூதர் உனக்கு முன்னே சென்று, ஆமோறையன், ஏத்தையன், பெறேசையன், கானானையன், ஏவையன், யெபுசேயன் ஆகியோரின் இடத்தில் உன்னைப் புகச் செய்வார். இவர்களை நாம் அழித்தொழிப்போம்.
24 நீ அவர்களுடைய தெய்வங்களை ஆராதிக்கவும் தொழவும் வேண்டாம். அவர்கள் செய்கைகளை நீங்கள் பின்பற்றாமல் அவர்களை அடியோடு அழித்து, அவர்களின் சிலைகளையும் உடைத்துப் போடுவீர்கள்.
25 உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் தொழுது வந்தால், நீங்கள் உண்ணும் அப்பத்தையும், குடிக்கும் நீரையும் நாம் ஆசீர்வதித்து நோயை உங்களிடமிருந்து விலகச் செய்வோம்.
26 உன் நாட்டிலே வறட்டு மலடிகள் இரார்; உன் வாழ்நாளை நிறைவுபடுத்தி வருவோம்.
27 என்றும் அச்சம் உங்களை ஆட்கொள்ளச் செய்வோம். எந்த நாட்டில் நீ புகுவாயோ அந்நாட்டுக் குடிகளையெல்லாம் கலங்கடித்து, நீ வரவே உன் பகைவர் எல்லாரும் புறமுதுகு காட்டச் செய்வோம்.
28 நீ அவர்களின் நாட்டிலே புகுமுன்னே நாம் பெரிய குளவிகளை அனுப்பி, ஏவையரையும் கனானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம்.
29 அந்நாடுகள் பாழாய்ப் போகாதபடிக்கும், காட்டு விலங்குகள் பலுகி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும், நாம் ஓராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்தி விடமாட்டோம்.
30 நீ பெருகி நாட்டை உரிமை கொள்ளும்வரை அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்திவிடுவோம்.
31 (மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலிஸ்தியரின் கடல் வரையிலும், பாலைவனம் தொடங்கி நதி வரையிலும் உன் எல்லைகளை விரியச் செய்வோம். நாம் அந்நாட்டுக் குடிகளை உங்கள் கையில் ஒப்புவிப்போம்.
32 அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே.
33 நமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யும்படி உன்னை அவர்கள் செய்துவிடா வண்ணம், அவர்கள் உன் நாட்டிலே குடியிருக்க வேண்டாம். நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதால், அது உனக்கு இடறுகல்லாய் இருக்கும் (என்றருளினார்).
அதிகாரம் 24
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீயும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியார்களில் எழுபது பேரும் ஆண்டவரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து ஆராதனை செய்யுங்கள்.
2 மோயீசன் மட்டும் ஆண்டவருக்கு அண்மையில் வருவார். மற்றவர்கள் கிட்ட வரவும், மக்கள் அவரோடு ஏறி வரவும் வேண்டாம் என்றார்.
3 மோயீசன் வந்து ஆண்டவருடைய எல்லா வாக்கியங்களையும் நீதிச் சட்டங்களையும் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்ட மக்கள் எல்லாரும்: ஆண்டவர் திருவுளம் பற்றின எல்லா வாக்கியங்களின் படியும் நடப்போம் என்று ஒரே குரலாய் மறுமொழி சொன்னார்கள்.
4 மோயீசனோ, ஆண்டவர் சொன்ன வாக்கியங்களையெல்லாம் எழுதி வைத்து, பின், காலையில் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு தூண்களை நிறுத்தினார்.
5 இஸ்ராயேல் மக்களில் இளைஞர்களை அனுப்பினார். அவர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளாகக் கன்றுக்குட்டிகளையும் பலியிட்டார்கள்.
6 அப்போது மோயீசன் இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துப் பாத்திரங்களில் வார்த்து, மற்றப் பாதியைப் பலிப்பீடத்தின் மேல் ஊற்றினார்.
7 பின் உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்க வாசித்தார், அவர்கள்: ஆண்டவர் சொன்னபடியெல்லாம் செய்வோம் என்றார்கள்.
8 அப்பொழுது மோயீசன் பாத்திரத்தில் வார்த்து வைத்திருந்த இரத்தத்தை மக்களின் மேல் தெளித்து: இந்த எல்லா வார்த்தைகளின் படியும் ஆண்டவர் உங்களுடன் செய்தருளிய உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று கூறினார்.
9 பின் மோயீசனும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியோரில் எழுபது பேரும் (மேலே) ஏறினார்கள்;
10 இஸ்ராயேலின் கடவுளையும் கண்டார்கள். அவருடைய கால்களின் கீழ் நீலக் கல் இழைத்த வேலைப் போலவும், தெளிந்த வானத்தின் சுடரொளி போலவும் இருந்தது.
11 இஸ்ராயேல் மக்களில் எவரெவர் அகன்று தூரத்திலிருந்தார்களோ அவர்கள் மேல் ஆண்டவர் தம்முடைய கையை நீட்டினாரில்லை. அவர்கள் கடவுளைக் கண்டபின் உண்ணவும் குடிக்கவும் தொடங்கினார்கள்.
12 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ மலையின் மேல் நம்மிடத்திற்கு ஏறி வந்து இங்கே இரு. நாம் உனக்குக் கற்பலகைளையும், நீ அவர்களுக்குக் கற்பிப்பதற்கு நாம் எழுதிய கட்டளை முதலிய சட்ட திட்டங்களையும் தருவோம் என்றருளினார்.
13 மோயீசனும் அவருக்குத் துணைவனாய் இருந்த யோசுவாவும் எழுந்திருந்து கடவுளுடைய மலையில் ஏறுகையில்,
14 மோயீசன், பெரியோர்களை நோக்கி: நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கே காத்துக் கொண்டிருங்கள். ஆரோனும் ஊரும் உங்களோடு இருக்கிறார்கள். யாதொரு வழக்கு உண்டானால் அவர்களுக்குத் தெரியப் படுத்துவீர்கள் என்று சொல்லிப் போனார்.
15 மோயீசன் ஏறிப்போனபின் ஒரு மேகம் வந்து மலையை மூடிற்று.
16 ஆண்டவருடைய மாட்சி சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. அந்த மேகம், ஆறுநாளும் மலையை மூடியிருந்தது. ஏழாம் நாளிலோ இருளின் நடுவினின்று ஆண்டவர் மோயீசனைக் கூப்பிட்டார்.
17 மலையின் சிகரத்திலே ஆண்டவருடைய மாட்சியின் காட்சி இஸ்ராயேல் மக்கள் கண்களுக்கு கொடுமையான தீயைப் போலத் தோன்றும்.
18 மோயீசன் அந்த மேகத்தின் நடுவே புகுந்து மலையின் மேல் ஏறி, அங்கே நாற்பது இரவும் நாற்பது பகலும் தங்கியிருந்தார்.
அதிகாரம் 25
1 ஆண்டவர் மோயீசனை நோக்கித் திருவாக்கருளினதாவது:
2 இஸ்ராயேல் மக்கள் நமக்குப் புதுப்பலனின் காணிக்கையைக் கொடுக்கச் சொல். மன நிறைவோடு எதைக் கொண்டு வந்தாலும் அதை நமக்காக வாங்கிகொள்.
3 நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டியவையாவன: பொன், வெள்ளி, வெண்கலம்,
4 இளநீல நூல், கருஞ்சிவப்பு நூல், இருமுறை சாயம் தோய்த்த கட்டிச் சிவப்பு நூல், மெல்லிய பஞ்சு நூல்,
5 வெள்ளாட்டு மயிர்' சிவப்பு தோய்ந்த ஆட்டுக்கிடாய்த் தோல், ஊதாவாக்கப்பட்ட தோல்,
6 சேத்தீம் மரம்' விளக்குகள், அவற்றுக்கு ஊற்ற எண்ணெய், அபிசேகத்தைலத்துக்கு ஏற்ற பரிமளங்கள், தூபத்துக்கு நறுமண வாசனைப் பொருட்கள்'
7 எப்போத் என்னும் மேலாடையிலும் இரசியோனால் என்னும் மார்ப்பதக்கத்திலும் பதித்து வைக்கும் கோமேதகக் கற்கள், இரத்தினங்கள் ஆகியவைகளேயாம்.
8 அவர்கள் நடுவிலே நாம் தங்கியிருக்க நமக்கு ஓர் ஆசாரக் கூடாரத்தை அமைக்கக்கடவார்கள்.
9 நாம் உனக்குக் காண்பிக்கும் ஆசாரக் கூடாரத்தின் மாதிரிப்படி அதை அமைக்க வேண்டும். மேலும், நாம் உனக்குக் காட்டும் எல்லாத் தட்டுமுட்டுப் பாத்திரங்களின் மாதிரிப்படி தெய்வ ஆராதனைக்கு வேண்டி பொருட்களைத் தயார் செய்வார்களாக. அதாவது,
10 சேத்தீம் மரங்களால் ஒரு பெட்டகத்தைச் செய்யுங்கள். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாய் இருக்கட்டும்.
11 அதை உள்ளும் புறமும் பசும் பொன்னால் மூடி, அதன் மேல் சுற்றிலும் இலங்கும் தங்க முடியைப் போல் செய்து வைப்பாயாக.
12 நான்கு பொன் வளையங்களைச் செய்து, பெட்டகத்தின் நான்கு மூலைகளிலும் பொருத்துவாய். பக்கத்திற்கு இரண்டாக இரு பக்கங்களிலும் அவற்றை வைப்பாய்.
13 சேத்தீம் மரங்களால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,
14 அந்தத் தண்டுகளால் பெட்டகத்தைத் தூக்கும்படி அதன் வெளியே இருக்கும் வளையங்களிலே மாட்டக்கடவாய்.
15 தண்டுகள் எப்போதும் வளையங்களில் இருக்க வேண்டுமே தவிர ஒருக்காலும் அவற்றினின்று கழற்றப்படக் கூடாது.
16 நாம் உனக்கு அறிவிக்கப் போகிற சாட்சிச் சட்டத்தைப் பெட்டகத்திலே வைப்பாய்.
17 பசும் பொன்னால் இரக்கத்தின் அரியணையையும் செய்வாய். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமுமாய் இருக்கவேண்டும்.
18 பொன் தகட்டால் இரண்டு கேருபிம் செய்து மூலத்தானத்தின் இரு புறமும் வைக்கக்கடவாய்.
19 பக்கத்திற்கு ஒன்றாக அவற்றை இருபக்கமும் வைக்கக்கடவாய்.
20 அந்தக் கேருபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையையும் கடவுள் பேசும் மூலத்தானத்தையும் மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர் முகமுள்ளவைகளுமாய் இருப்பனவாக.
21 நாம் உனக்கு அளிக்கவிருக்கிற சாட்சிச் சட்டத்தை அதிலே வைப்பாய். அங்கிருந்தே நாம் கட்டளையிடுவோம்.
22 இரக்கத்தின் அரியணை மீதும் சாட்சியப் பெட்டகத்தின் மேல் நிற்கிற இரு கேருபிம் நடுவிலும் (இருந்து) நாம் இஸ்ராயேல் மக்களுக்கான நம் கட்டளைகளையெல்லாம் உன்னிடம் சொல்வோம்.
23 மேலும், சேத்தீம் மரத்தினாலே ஒரு மேசையையும் செய்வாய். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்க வேண்டும்.
24 அதைப் பசும்பொன்னால் மூடி, அதைச் சுற்றிலும் பொன்னால் திரணை அமைத்து,
25 அதற்கு நான்கு விரற்கிடையான ஒரு சட்டத்தை வெட்டுவேலையாகச் செய்து, அதற்குமேல் பொன்னால் மற்றொரு திரணையையும் அமைப்பாய்.
26 நான்கு பொன் வளையங்களையும் செய்து, அம்மேசையின் நான்கு மூலைகளிலே ஒரு காலுக்கு ஒன்றாக அவற்றைப் பொருத்துவாய்.
27 மேசையைத் தூக்கும்படியாக மேற்சொன்ன சட்டத்துக்குக் கீழே அந்தப் பொன்வளையங்கள் தண்டுகளுக்கு நுழைவிடங்களாய் இருக்கும்.
28 மேசையைத் தூக்குவதற்குரிய அந்தத் தண்டுகளையும் சேத்தீம் மரங்களால் செய்து பொன்னால் மூடுவாய்.
29 பானப்பலிக்குத் தேவையான தட்டுக்களையும் குப்பிக் கரகங்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் பத்தரை மாற்றுப் பசும் பொன்னால் செய்யக்கடவாய்.
30 எப்பொழுதும் காணிக்கை அப்பங்களை நமது முன்னிலையில் (அம்) மேசையின் மீது வைப்பாய்.
31 மேலும், பசும்பொன் தகட்டினால் ஒரு குத்து விளக்கையும் செய்வாய். அதனின்று, கிளம்பும் தண்டும் கிளைகளும் மொக்குகளும் குமிழ்களும் லீலி மலர்களும் அப்படியே அடிப்பு வேலையாகச் செய்யப்படும்.
32 பக்கத்திற்கு மூன்றாக ஆறு கிளைகள் (அதன்) பக்கங்களினின்று கிளம்பும்.
33 ஒரு கிளையிலே வாதுமைக் கொட்டை போன்ற மூன்று மொக்குகளும் ஒரு குமிழும் ஒரு லீலி மலரும் இருக்கும். மற்ற கிளைகளிலும் அவ்விதமே இருக்க வேண்டும். விளக்குத் தண்டிலிருந்து கிளம்பும் ஆறு கிளைகளும் ஒரே மாதிரியாகச் செய்யப்படும்.
34 குத்துவிளக்கிலோ வாதுமைக் கொட்டை போன்ற நான்கு மொக்குகளும், இவை ஒவ்வொன்றிலும் ஒரு குமிழும் லீலி மலரும் இருக்கும்.
35 இரண்டு கிளைகளின் கீழே ஒவ்வொன்றிலும் மும்மூன்று குமிழ்களாக ஆறு குமிழ்களும் ஒரே தண்டிலிருந்து கிளம்பும்.
36 ஆகையால், குமிழ்களும் கிளைகளும் பத்தரை மாற்றுத் தங்கத் தகட்டினாலே செய்யப்பட்டுக் குத்துவிளக்கினினறு வெளியே வரும்.
37 ஏழு அகல்களையும் செய்து, எதிரெதிராய் எரியும்படி குத்து விளக்கின் மேல் வைப்பாய்.
38 மேலும், கத்திரிகளும், திரிச் சாம்பலை வைக்கத்தக்க கலசங்களும், மிகப் பசும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.
39 அதையும் அதற்குரிய பணிமுட்டுக்கள் யாவையும் ஒரு தாலந்துப் பசும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.
40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரிப்படியே (இவையெல்லாம்) செய்யக் கவனமாயிருப்பாயாக.
அதிகாரம் 26
1 ஆசாரக் கூடாரத்தை அமைக்க வேண்டிய மாதிரி என்னவென்றால், முறுக்கிழையான மெல்லிய சணல் நூல்களாலும், நீலநிறம், இரத்த நிறம், இரு தடவை சாயம் தோய்த்த பொன்னிறமுள்ள நூல்களாலும் நெய்யப்பட்ட புடவையைக் கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்வித்து, அவை சித்திர விசித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப்படும்.
2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாய் இருக்கும். மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாய் இருக்க வேண்டும்,
3 ஐந்து திரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும். மற்ற ஐந்தும் ஒன்றோடொன்று அதே விதமாய் இணைக்கப்படும்.
4 மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணையும்படி, அவற்றின் மேற்பக்கதிலும் ஓரங்களிலும் இளநீல நூலால் காதுகளை அமைப்பாய்.
5 ஒவ்வொரு மூடுதிரையின் இரு புறங்களிலும் ஐம்பது காதுகள் இருக்க வேண்டும். அவை ஒன்றோடொன்று இணையும்படி காதோடு காது ஒன்றுக்கொன்று நேர் நேராய் இருக்க வேண்டும்.
6 அன்றியும், ஆசாரக் கூடாரம் ஒரே உறைவிடமாய் அமையும்படி, ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளாலே இணைக்கப்பட வேண்டும்.
7 ஆசாரக் கூடாரத்தின் மேற்புறத்தை மூடுவதற்காக வெள்ளாட்டு மயிரினால் பதினொரு கம்பளிகளைச் செய்வாய்.
8 ஒவ்வொரு கம்பளியின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் இருக்கவேண்டியது. எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாய் இருக்க வேண்டும்.
9 ஐந்து கம்பளிகளை ஒன்றாகத் தனித்தனியே சேர்ப்பாய். ஆறு கம்பளிகளை ஒன்றோடொன்றாகச் சேர்த்து, ஆறாவது கம்பளியை மேற்புறத்தில் முகப்புக்கு முன் மடித்துப் போடும்படியாய்த் தைக்கக்கடவாய்.
10 இணைக்கப்பட்ட ஒரு கம்பளி மற்றொரு கம்பளியோடு சேரத்தக்கதாக, ஒவ்வொரு கம்பளியின் ஓரத்திலே ஐம்பது காதுகளை அமைத்து விடுவாயானால், அந்தக் கம்பளிகள் ஒன்றோடொன்று சேரச் செய்யக் கூடும்.
11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் செய்வாய். அந்தக் கொக்கிகளிலே கம்பளிகளின் காதுகளை ஒன்றோடொன்று மாட்டி இணையச் செய்தால், கம்பளிகளெல்லாம் ஒரே கம்பளியாய்ச் சேரும்.
12 மேற்புறத்தை மூடுவதற்குத் தயார் செய்யப்படும் கம்பளிகளிலே ஒன்று எஞ்சி இருக்குமே, அதன் ஒரு பாதிப் பாகத்தை உறைவிடத்தின் பின்புறத்தில் தொங்க விடுவாய்.
13 (கூடாரத்தின் மேற்புறத்தை மூடும் கம்பளிகளின் நீளத்திலே) ஒரு முழமளவு தென்புறத்திலும் வடப்புறத்திலும் தொங்க விடுவதுமன்றி, நீளத்திலே மீதியான கம்பளி உறைவிடத்தின் இரு பக்கங்களையும் மூடும்.
14 சிவப்பு தோய்ந்த செம்மறிக் கிடாய்த் தோல்களால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும், அதன் ளமேல் வைப்பதற்கு ஊதா தோய்ந்த தோல்களால் வேறொரு மூடியையும் அமைப்பாய்.
15 ஆசாரக் கூடாரத்தில் நட்டமே நிற்கும் பலகைகளையும் சேத்தீம் மரங்களால் செய்வாய்.
16 அவை ஒவ்வொன்றும் பத்து முழ உயரமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்க வேண்டும்.
17 ஒவ்வொரு பலகையும் அடுத்த பலகையோடு இசைந்திருக்கும்படி பலகைகளின் ஓரங்களிலே இரண்டு காடியும் கழுத்தும் அமைத்து வைப்பாய். பலகைகளெல்லாம் அவ்விதமே தயார் செய்யப்படும்.
18 அந்தப் பலகைகளில் இருபது பலகைகள் தென்திசைக்கு எதிரே நிற்கும்.
19 அவற்றின் அடியில் வைக்கும்படி நாற்பது வெள்ளிப்பாதங்களை அமைப்பாய். இருபக்கத்து ஓரத்தின் கீழே ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு பாதங்கள் இருக்கும்படி செய்வாய்.
20 ஆசாரக் கூடாரத்தின் மறுபக்கமாகிய வடப்புறத்திலே இருபது பலகைகள் இருக்க வேண்டும்.
21 அவைகளின் கீழே வைப்பதற்கும் நாற்பது வெள்ளிப் பாதங்கள் தயார் செய்யப்படும். அதாவது: ஒவ்வொரு பலகைக்கும் கீழே இரண்டு பாதம் இருக்கும்.
22 ஆசாரக் கூடாரத்தின் மேற்றிசைக்கு ஆறு பலகைகளையும்,
23 ஆசாரக் கூடாரத்தின் பின்பக்கத்து ஓரங்களிலே இரண்டு பலகைகளையும் அமைப்பாய்.
24 அவற்றைக் கீழிருந்து மேலே வரையிலும் ஒரே கூட்டு மூட்டினாலே சேர்த்து வைக்கவேண்டும். மேலும், ஓரங்களிலே வைக்க வேண்டிய இரண்டு பலகைகளிலும் அவ்விதமே செய்யவேண்டும்.
25 அவ்வாறு எட்டுப் பலகைகள் இருக்கும். ஒவ்வொரு பலகைக்குங் கீழ் இரண்டிரண்டு பாதங்கள் இருப்பதனால் மொத்தம் வெள்ளிப் பாதங்கள் பதினாறு இருக்கும்.
26 உறைவிடத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளை நிலைப்படுத்துவற்தகாகச் சேத்தீம் மரத்தால் ஐந்து தாழ்ப்பாள்களையும்,
27 மறுபக்கத்திலே ஐந்து குறுக்குச்சட்டங்களையும், உறைவிடத்தின் மேற்றிசைக்கு இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் அமைப்பாய்.
28 அவை பலகைகளின் மையத்தில் குறுக்கே வைக்கப்பட்டு, ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஊடுருவப் பாய்ச்சத் தக்கவைகளாக இருக்க வேண்டும்.
29 அந்தப் பலகைகளையும் பொன் தகட்டால் மூட வேண்டியதுமன்றி, எந்தக் குறுக்குச் சட்டங்களினால் பலகையெல்லாம் நிலைப்படுத்தப்பட்டிருக்குமோ அந்தக் குறுக்குச் சட்டங்களைப் பாய்ச்சத்தக்க வளையங்களையும் பொன்னால் அமைப்பாய். குறுக்குச் சட்டங்களைப் பொன் தகட்டாலே மூடவேண்டும்.
30 இவ்விதமாய், மலையின் மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரிப்படி ஆசாரக் கூடாரத்தை அமைப்பாயாக.
31 நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல் முதலிய நூல்களை நெய்து, இவற்றால் ஒரு திரை செய்வாய். அதைச் சித்திர விசித்திரப் பின்னல் வேலைகளால் அலங்கரித்திருக்க வேண்டும்.
32 சேத்தீம் மரத்தால் செய்து பொன் தகட்டால் மூடப் பட்ட நான்கு தூண்களின் முன் புறத்தில் (அதைத்) தொங்க விடுவாய். அத்தூண்களுக்கோ நான்கு பொன் போதிகைகளும் நான்கு வெள்ளிப் பாதங்களும் இருக்கும்.
33 அந்தத் திரையை வளையங்களில் கோத்துக் கட்டிய பின் உடன்படிக்கைப் பெட்டகத்தை அதற்குள்ளே மறைத்து வைப்பாய். அந்தத் திரையோ பரிசுத்த இடத்திற்கும், பரிசுத்தத்திலும் பரிசுத்த இடத்திற்கும் நடுவில் இருக்கும்.
34 பிறகு பரிசுத்தத்திலும் பரிசுத்த இடத்தில் உடன்படிக்கைப் பெட்டகத்தின் மேலே இரக்கத்தின் அரியணையை நிறுவி வைப்பாய்.
35 திரைக்கு வெளியே மேசையையும், மேசைக்கு எதிராகக் குத்து விளக்கையும் வைக்கக் கடவாய். மேசையோ வடப்புறத்திலே வைக்கப்படும்.
36 அன்றியும், ஆசாரக் கூடாரத்தின் வாயிலில் நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல்--இவற்றை நெய்து சித்திரப் பின்னல் வேலையால் அலங்கரித்த தெந்தோரியம் என்னும் தொங்கு திரையையும் அமைப்பாயாக.
37 சேத்தீம் மரங்களால் செய்யப் பட்ட ஐந்து தூண்களையும் பொன்னால் மூடுவாய். அவற்றின் முன் மேற்சொன்ன தொங்கு திரை தொங்க வைக்கப்படும். அத்தூண்களின் பொதிகைகள் பொன்னாலும், பாதங்கள் வெள்ளியாலும் செய்யப்படும்.
அதிகாரம் 27
1 ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமான ஒரு சதுரப் பீடத்தைச் சேத்தீம் மரத்தினால் செய்வாய். அது மூன்று முழ உயரமாய் இருக்க வேண்டும்.
2 நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகள் பீடத்தினின்று புறப்படும். அவற்றை வெண்கலத் தகட்டால் மூடுவாய்.
3 பீடத்தில் உபயோகித்துக் கொள்ளும்படி (பின் வரும்) பாத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும். (அதாவது சாம்பலை எடுக்கத் தக்க சட்டிகளையும், நெருப்பைத் தூண்டும் குறடுகளையும் முள்ளுகளையும் தீச்சட்டிகளையும் தயார் செய்வாய். அவை வெண்கலத்தால் செய்யப்படும்.
4 வலைப் பின்னலைப் போன்ற ஒரு வெண்கலச் சல்லடை செய்து, அதன் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை அமைத்து,
5 அதைத் தீக் கரையின் கீழே வைப்பாய். அந்தச் சல்லடையோ பலிப் பீடத்தின் பாதி உயர மட்டும் எட்டும்.
6 பலிப் பீடத்திற்குச் சேத்தீம் மரத்தால் இரண்டு தண்டுகளையும் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடுவாய்.
7 பலிப்பீடத்தைத் தூக்குவதற்காக அந்தத் தண்டுகள் அதன் இரண்டு பக்கங்களிலுமுள்ள வளையங்களிலே மாட்டப்பட்டிருக்க வேண்டும்.
8 பலிப்பீடத்தைக் கனமானதாகச் செய்யாமல், உள்ளே கூடாய், மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதனைச் செய்யக்கடவாய்.
9 ஆசாரக் கூடாரத்திற்கு ஒரு பிராகாரத்தையும் அமைப்பாய். தென் திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்க வேண்டும். பிராகாரத்தின் ஒவ்வொரு பக்கமும் நூறுமுழ நீளமுள்ளதாகும்.
10 மேலும், வெண்கலத் தூண்கள் இருபது செய்வாய். அவைகளுக்கு இருபது வெண்கலப் பாதங்களும் இருக்கும். தூண்களின் போதிகைகளும், போதிகைகளின் பூண்களும் வெள்ளியினாலே செய்ய வேண்டும்.
11 இவ்வண்ணமே (பிராகாரத்தின்) வடப் பக்கத்திலும் நூறு முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு இருபது தூண்களும் இருபது பாதங்களும் வெண்கலத்தினாலேயும், இருபது போதிகைகளும் அவற்றிலுள்ள பூண்களும் வெள்ளியினாலேயும் செய்வாய்.
12 மேற்றிசையை நோக்கிய பிராகாரத்தின் பக்கத்திலோ ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகளின் அந்தரத்திலே பத்துத் தூண்களும் பத்துப் பாதங்களும் இருக்க வேண்டும்.
13 கீழ்த்திசையை நோக்கிய பிராகாரத்தின் அந்தரம் ஐம்பது முழ நீளமிருக்கும்.
14 இவைகளுக்குள் ஒரு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் அமைக்கப்படும்.
15 மறு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் இருக்கும்.
16 பிராகாரத்து வாயிலுக்கு இருபது முழமுள்ள தொங்கு திரை ஒன்று செய்யப்படும். அது இள நீல நிறம், கருஞ் சிவப்பு நிறம், இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம், திரித்த மெல்லிய சணல்--இவற்றாலாகிய நூல்களால் நெய்து சித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப் பட்டிருப்பதுமன்றி, அதற்கு நான்கு தூண்களும் நான்கு பாதங்களும் அமைக்கப்படும்.
17 பிராகாரத்தைச் சுற்றிலும் உள்ள தூண்களெல்லாம் வெள்ளித்தகட்டினால் மூடப்படும். ஆனால், அவற்றின் போதிகைகள் வெள்ளியும், பாதங்கள் வெண்கலமுமாய் இருக்கும்.
18 பிராகாரம் நீளத்திலே நூறு முழமும், அகலத்திலே ஐம்பது முழமும், உயரத்திலே ஐந்து முழமுமாய் இருப்பது மன்றி, அதன் தொங்கு திரைகள், திரித்த மெல்லிய சணல் நூலினாலே செய்யப்படும்.
19 ஆசாரக் கூடாரத்தின் எல்லாப் பணிவிடைகளுக்கும் சடங்குகளுக்கும் உபயோகமான எல்லாப் பணி முட்டுக்களையும், அதிலும் பிராகாரத்திலும் இருக்க வேண்டிய முளைகளையும் வெண்கலத்தால் செய்வாய்.
20 விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படி, உலக்கையால் இடித்துப் பிழிந்த மிகத் தூய்மையான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வருமாறு இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய்.
21 சாட்சியத்தின் ஆசாரக் கூடாரத்திலே சாட்சிச் சந்நிதிக்கு முன் இடப்பட்ட திரைக்கு வெளியே ஆரோனும் அவன் புதல்வர்களும் மாலைமுதல் விடியற்காலை வரை ஆண்டவர் திருமுன் அவ்விளக்கை எரிய வைக்கக்கடவார்கள். மேற்சொன்ன முறைமை இஸ்ராயேல் மக்களுக்குள்ளே தலைமுறை தலைமுறையாக நித்திய அருச்சனையாய் அனுசரிக்கப்படும்.
அதிகாரம் 28
1 மேலும், நமக்குக் குருத்துவ ஊழியம் செய்யும்படி உன் சகோதரனாகிய ஆரோனையும், அவன் புதல்வராகிய நாதாப், அபியூ, எலெயசார், இத்தமார் ஆகியோரையும் இஸ்ராயேல் மக்களிடமிருந்து பிரித்து உன்னிடம் சேர்த்துக் கொள்வாயாக.
2 உன் சகோதரனாகிய ஆரோன் மகிமையும் அலங்காரமும் உள்ளவனாய் இருக்கும் பொருட்டு அவனுக்காகத் திருவுடையைத் தயார் செய்வாய்.
3 ஆரோன் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்யத் தகுதியுடையவனாக்க அவனைப் பரிசுத்தப் படுத்தும்படி அவனுக்காகத் தயாரிக்க வேண்டிய திருவுடைகளைக் குறித்து, நமது ஞானத்தின் ஆவியை நிறைவாய்ப் பெற்று உண்மையாகவே அறிவு சான்றவராய் இருப்பவர்களோடு பேசி ஆலோசனை செய்வாய்.
4 அவர்கள் தயாரிக்க வேண்டிய திருவுடைகளாவன: (இறைவன் திருவுளத்தைக்) கணிக்க உதவும் மார்ப்பதக்கம், எப்போத் என்ற மேலாடை, நெடுஞ்சட்டை, மெல்லிய சணல் நூலால் நெய்த உட்சட்டை, கிரீடம் என்னும் பாகை, இடைக்கச்சை முதலியனவாம். உன் சகோதரனாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்யத் தக்கதாக அவர்களே தங்களுக்குத் திருவுடைகளைத் தயாரித்துக் கொள்வார்கள்.
5 அதற்காக அவர்கள் பொன், நீலம், கருஞ்சிவப்பு, இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல்கள் ஆகிய இவற்றைச் சேகரிக்கக்கடவார்கள்.
6 எப்போத் என்ற மேலாடையைப் பொன், நீலம், கருஞ்சிவப்பு, இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய சணல் நூல்கள் ஆகியவற்றாலே விசித்திர வண்ண வேலையாய்ச் செய்வார்கள்.
7 அதன் இரண்டு மேல்முனையிலும் எப்போத் (என்ற) மேலாடை ஒரே பொருளாகத் தக்க இரண்டு தோல் வார்கள் ஒன்றோடொன்று இணைக்கத் தக்கதாய் அமைந்திருக்க வேண்டும்.
8 பொன், நீலம், கருஞ்சிப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய மெல்லிய சணல் நூல்கள் ஆகியவற்றாலேயே நெசவும் வேலைப்பாடும் எல்லாம் செய்யப்படும்.
9 அன்றியும், இரண்டு கோமேதகக் கற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களைச் செதுக்குவாய்.
10 அதாவது, அவர்கள் பிறந்த வரிசையின்படியே அவர்கள் பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்க வேண்டும்.
11 இரத்தினங்களில் முத்திரைவெட்டும் வேலையைப் போல், அந்த இரண்டு கற்களிலும் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களை வெட்டி, அவற்றைப் பொன்குவளைகளிலே பதிய வைப்பாய்.
12 அவைகளை இஸ்ராயேல் புதல்வர்களின் நினைவாக எப்போத்தின் இரு பக்கத்திலும் வைப்பாய். ஆதலால், ஆரோன் ஆண்டவர் முன்னிலையில் தன் இரு புயங்களின்மேல் அவர்களுடைய பெயர்களை நினைவுச் சின்னமாகச் சுமந்து வருவான்.
13 கொக்கிகளையும் பொன்னால் செய்து,
14 ஒன்றோடொன்று இணைக்கப்படும் இரண்டு சின்னஞ்சிறிய சங்கிலிகளையும் பசும்பொன்னால் செய்து அவற்றை மேற்சொன்ன வளையங்களில் மாட்டி வைப்பாய்.
15 (இறை திருவுளத்தைக்) கணிக்க உதவும் மார்ப்பதக்கத்தையும் பல நிறமுள்ள பின்னல் வேலையாய்ச் செய்வாய். எப்போத் வேலைக்குச் சரி நிகராக நீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூல்களாலும் அதைச் செய்வாய்.
16 அது நாற்கோணமாகவும், இரட்டையாகவும், நீளத்திலும் அகலத்திலும் ஒரு சாண் அளவாகவும் இருக்கும்.
17 அதிலே நான்கு வரிசை இரத்தினங்களை அமைப்பாய். முதல் வரிசையில் பதுமராகம், புஷ்பராகம், மரகதம் முதலிய இரத்தினங்களும்,
18 இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரமும்,
19 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல் முதலியனவும்,
20 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், சமுத்திர வண்ணக் கல் ஆகிய இரத்தினங்களும் இருக்கும். அவைகளெல்லாம் அந்தந்த வரிசையிலே பொன்னினுள்ளே பதித்திருக்க வேண்டும்.
21 அவைகளிலும் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்கள், ஒரு கல்லுக்கு ஒரு பெயராகச் செதுக்கப்படும். இப்படிப் பன்னிரண்டு கோத்திரங்களின்படி பன்னிரண்டு பெயர்களும் செதுக்கப்பட்டிருக்கும்.
22 மார்ப்பதக்கத்திலே ஒன்றோடொன்று சேர்க்கப்பட்ட சங்கிலிகளையும் பசும்பொன்னால் செய்வாய்.
23 இரண்டு வளையங்களையும் (செய்து) மார்ப்பதக்கத்தின் இரண்டு மேல் முனைகளில் வைத்து,
24 பொன்னால் செய்த இரண்டு சின்னச் சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களிலுள்ள வளையங்களிலே மாட்டி,
25 மேற்சொன்ன சங்கிலிகளின் நுனிகளை மார்ப்பதக்கத்தை நோக்கும் எப்போத் (என்ற) மேலாடைக்கு இரு புறத்திலும் இருக்கும் இரண்டு கொக்கிகளிலே மாட்டுவாய்.
26 இன்னும் பொன்னால் இரண்டு வளையங்களைச் செய்து, அவற்றை எப்போத்தின் கீழ்ப்புறத்திற்கடுத்த மார்ப்பதக்கத்து ஓரங்களிலே வைத்து,
27 பிறகு வேறிரண்டு பொன் வளையங்களையும் (செய்து), எப்போத்தின் முன்புறத்துக் கீழ்ப்பக்கத்திற்குத் தாழேயுள்ள இணைப்புக்கு எதிராக வைத்து, மார்ப்பதக்கமும் எப்போத் என்னும் மேலாடையும் அவற்றாலே இணையுமாறு பார்த்து,
28 மார்ப்பதக்கமும் எப்போத்தும் ஒன்றாகி, ஒன்றைவிட்டு ஒன்று நீங்காதபடிக்கு மார்ப்பதக்கத்து வளையங்களோடு எப்போத்தின் வளையங்கள் இனையத் தக்கதாக அவ்விரண்டையும் இளநீல நாடாவினாலே கட்டவேண்டும்.
29 ஆரோன் பரிசுத்த இடத்தில் புகும்பொழுது இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்கள் ஆண்டவர் திருமுன் நித்திய நினைவுச் சின்னமாய் இருக்கத் தக்கதாக அவன் அந்தப் பெயர்களைத் தன் இதயத்தின் மீது (இறைவன் திருவுளத்தைக்) கணிக்க உதவும் மார்ப்பதக்கத்தின் மேல் அணிந்து கொள்வான்.
30 அம் மார்ப்பதக்கத்திலே 'கோட்பாடு' 'உண்மை' (என்ற) இவ்விரண்டு வார்த்தைகளைப் பதிக்கக்கடவாய். ஆரோன் ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவற்றைத் தன் இதயத்தின் மேல் அணிவான். அவன் இஸ்ராயேல் புதல்வரின் நீதி விதியை ஆண்டவர் திருமுன் என்றும் அணிந்து கொள்ளக் கடவான்.
31 எப்போத்தின் கீழ் (அணியும்) அங்கியை முழுவதும் இளநீல நூலால் செய்வாய்.
32 தலை நுழையும் துவாரம் அதன் நடுப்புறத்தில் இருக்கும். அது எளிதிலே கிழியாதபடிக்கு, மற்ற உடைகளிலே ஓரத்தை மடக்கித் தைக்கிறது போல், அதிலேயும் நெய்யப் பட்ட ஒரு நாடாவைத் துவாரத்தைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும்.
33 மேற் சொன்ன அங்கியின் கீழ் ஓரமாய் இள நீல நிறம், கருஞ்சிவப்பு, இரு முறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்டுள்ள நூல்களால் மாதுளம் பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே மணிகளையும் அதன் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்து வைக்க வேண்டும்.
34 ஒரு பொன் மணியும் ஒரு மாதுளம் பழமும், மறுபடி ஒரு பொன் மணியும் ஒரு மாதுளம் பழமுமாக இருக்க வேண்டும்.
35 ஆரோன் தன் குருத்துவ அலுவலைச் செய்ய ஆண்டவர் திருமுன் பரிசுத்த இடத்தினுள் புகும் போதும், வெளியே வரும் போதும் அவன் சாகாத படிக்கு அதன் சத்தம் கேட்கத் தக்கதாகவே அதை அணிந்து கொள்ள வேண்டும்.
36 பசும் பொன்னால் ஒரு தகட்டைச் செய்து, 'ஆண்டவருக்கு அர்ப்பணித்து ஒதுக்கப்பட்டவர்' என்கிற வார்த்தைகளை முத்திரை வெட்டும் வேலையாக (அதனில்) வெட்டி,
37 அதை இள நீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
38 அது குருவினுடைய நெற்றியின்மேல் காணப்பட வேண்டும். அதனால், இஸ்ராயேல் புதல்வர் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துச் சமர்ப்பிக்கும் எல்லாக் காணிக்கைகள் கொடைகள் சம்பந்தப்பட்ட அக்கிரமங்களை ஆரோனே சுமந்து கொள்வான். ஆண்டவர் அவர்களுக்குப் பிரசன்னமாய் இருக்கத் தக்கதாக அந்தப் பொன் தகடு எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்க வேண்டும்.
39 மெல்லிய சணல்நூலால் நெருக்கமான அங்கியையும், தலைக்கு அணியாகிய பாகையையும் செய்வாய். விசித்திர வேலையால் அலங்கரிக்கப்பட்ட கச்சையையும், அமைப்பாய்.
40 ஆரோனின் புதல்வர்களுக்கும் மகிமையும் அலங்காரமும் இருக்கத் தக்கதாக மெல்லிய சணல் நூலால் நெய்த அங்கியையும், தலைக்கு அணியாகப் பாகையையும், இடைக் கச்சையையும் தயார் செய்வாய்.
41 ஆரோனும் அவனோடு கூட அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ ஊழியம் செய்யும் பொருட்டு நீ மேற் சொன்ன ஆடைஅணிகளை எல்லாம் அவர்களுக்கு அணிவித்து, அவர்களுடைய இரு கைகளையும் அபிசேகம் செய்து பரிசுத்தப் படுத்துவாய்.
42 அவர்களுடைய நிருவாணத்தை மூடும் படிக்கு, இடுப்பு தொடங்கி முழங்கால் வரை வெட்கமானவற்றை மறைக்க மெல்லிய சணலால் நெய்த சல்லடங்களையும் தயாரிப்பாய்.
43 ஆரோனும் அவன் புதல்வர்களும் உடன்படிக்கைக் கூடாரத்திலே புகும் போதாவது, பரிசுத்த இடத்திலே பணிவிடை செய்யப் பலிப்பீடத்தண்டை போகும் போதாவது அவர்கள் அக்கிரமம் சுமந்தவர்களாய்ச் சாகாதபடிக்கு இந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். இது ஆரோனுக்கும் அவனுக்குப்பின் வரும் சந்ததியாருக்கும் நித்திய சட்டமாம்.
அதிகாரம் 29
1 மேலும் அவர்கள் நமக்குக் குருத்துவ அலுவலுக்குரிய பட்டம் பெறும் பொருட்டு நீ செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதில்லாத இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் மந்தையினின்று எடுத்துக் கொள்வாய்.
2 புளியாத அப்பங்கள், எண்ணெய் தெளித்த புளிப்பற்ற தோசை, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பேறாத பணியாரங்கள் முதலியவற்றையெல்லாம் மிருதுவான கோதுமை மாவினால் செய்யக்கடவாய்.
3 ஒரு கூடையில் வைத்து, அவற்றையும் காளையையும் இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் கொண்டு வருவாய்.
4 ஆரோனையும் அவன் புதல்வர்களையும் உடன்படிக்கைக் கூடாரத்தின் வாயில் முன்பாக வரச்செய்து,. தந்தையையும் அவன் புதல்வர்களையும் தண்ணீரால் கழுவக்கடவாய்.
5 பின் ஆரோனையும் ஆடை அணிகளை எடுத்து வந்து, மெல்லிய சணல் நூலால் நெய்த உட்சட்டையையும் கீழங்கியையும் எப்போத்தையும் மார்ப்பதக்கத்தையும் அவனுக்கு அணிவித்து மேலே விசித்திரக் கச்சையால் அவற்றைக் கட்டுவாய்.
6 அவன் தலையின் மீது கிரீடப்பாகையையும், பாகையின்மீது பரிசுத்த தகட்டையும் அணிவித்து,
7 அவன் தலையின் மேல் அபிசேகத் தைலத்தை வார்ப்பாய். இவ்வாறான சடங்குடனே அவன் அபிசேகம் செய்யப்படுவான்.
8 பிறகு அவன் புதல்வர்களையும் வரச் சொல்லி, மெல்லிய சணல் நூலால் நெய்த அங்கிகளையும் அணிவித்துக் கச்சையாலும் கட்டுவாய்.
9 இவ்வாறு ஆரோனும் அவன் புதல்வர்களும் உடுத்தப்பட்ட பின்பு அவர்களுக்குக் கிரீடங்களை அணிவிப்பாய். அவர்களும் நித்திய ஆராதனைக்காக நமக்குக் குருக்களாய் இருப்பார்கள். அவர்களுடைய கைகளையும் அபிசேகம் செய்த பின்,
10 காளையை உடன்படிக்கைக் கூடாரத்தின் முன் கொண்டு வரச் செய்வாய். ஆரோனும் அவள் புதல்வர்களும் அதன் தலையின் மீது கைகளை விரித்து வைத்தவுடனே,
11 அதனை ஆண்டவருக்கு முன்பாகச் சாட்சியக் கூடாரத்தின் வாயிலருகில் அடித்துப் பலியிடக் கடவாய்.
12 பிறகு காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்துப் பீடத்துக் கொம்புகளின் மீது உன் விரலால் தடவி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிப்பீடத்துப் பாதத்தில் ஊற்றுவாய்.
13 குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரல் பையையும், இரு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலேயுள்ள கொழுப்பையும் எடுத்துப் பீடத்தின் மீது எரித்து விட்டு,
14 காளையின் இறைச்சிகளையும் தோலையும் சாணியையும், அவைகள் பாவப் பரிகாரப் பலியாகையால், அவையெல்லாம் வெளியே பாளையத்தின் புறத்தே சுட்டெரிப்பாய்.
15 ஓர் ஆட்டுக் கிடாயைப் பிடித்துக் கொள்வாய். ஆரோனும் அவன் புதர்வர்களும் அதன் தலையின்மீது கைகளை வைத்தவுடனே,
16 அதை அடித்து, அதன் இரத்தத்தினின்று சிறிது எடுத்துப் பீடத்தைச் சுற்றிலும் ஊற்றுவாய்.
17 அவ்வாட்டுக் கிடாயையோ துண்டு துண்டாய் வெட்டி, அதன் குடல்களையும் கால்களையும் கழுவி. அவற்றைத் துண்டிக்கப்பட்ட இறைச்சிகளின் மேலும் தலையின் மீதும் வைத்து,
18 ஆட்டுக்கிடாய் முழுவதையும் பலிப்பீடத்தின் மேல் சுட்டெரித்து ஒப்புக்கொடுப்பாய். ஆண்டவருக்கு ஏற்ற பலியின் மிக்க நறுமணமே ஆண்டவருக்குக் காணிக்கையாகும்.
19 இன்னும் மற்ற ஆட்டுக் கிடாயையும் பிடித்துக் கொள்வாய். ஆரோனும் அவன் புதல்வர்களும் அதன் தலையின் மீது கைகளை வைத்த பிறகு,
20 நீ அதை அடித்துப் பலியிட்டு, அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் வலக் காது மடலிலேயும், அவர்களுடைய வலக் கையின் பெருவிரலிலேயும் தடவி, மீதியான இரத்தத்தைப் பலிப்பீடத்தின்மேல் சுற்றிலும் வார்த்து,
21 பீடத்தின் மீதிருக்கும் இரத்தத்திலும் அபிசேகத் தைலத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும், அவன் உடைகளின் மீதும், அவன் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகளின் மீதும் அதைத் தெளிப்பாய். (இவ்வாறு) அவர்களையும் அவர்கள் உடைகளையும் நீ அபிசேகம் செய்த பின்னர்,
22 அந்த ஆட்டுக்கிடாய் (ஆண்டவருக்கு) அர்ப்பணித்து ஒதுக்கப்பட்ட கிடாயாகையால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், வலப்பக்கத்து முன்னந் தொடையையும்,
23 ஆண்டவர் திருமுன் வைக்கப்பட்ட புளியாத அப்பங்களின் கூடையிலிருந்து ஓர் அப்பத் துண்டையும், எண்ணெய் தெளித்த ஒரு தோசையையும், ஒரு பணியாரத்தையும் எடுத்து,
24 அவை எல்லாவற்றையும் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் புதல்வர்களுடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளை ஆண்டவர் திருமுன் உயர்த்திப் பரிசுத்தமாக்குவாய்.
25 பின்னர். அவர்களுடைய கைகளிலிருந்து அவையெல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, ஆண்டவர் திருமுன் மிக்க நறுமணமுள்ள தகனப் பலியாகப் பலிப் பீடத்தின் மீது சுட்டெரிப்பாய். ஏனென்றால், இது அவருக்கான காணிக்கையே.
26 அன்றியும், ஆரோன் எந்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டானோ அந்தக்கிடாயிலுள்ள சிறிய மார்க் கண்டத்தை எடுத்து, அதை ஆண்டவர் முன்னிலையில் உயர்த்தி, உனக்குப் பங்கு என்று பத்திரப்படுத்துவான்.
27 அன்றியும், அருச்சித்து ஒதுக்கப்பட்ட சிறிய மார்க்கண்டத்தோடு ஆட்டுக்கிடாயிலிருந்து பிரித்தெடுத்த முன்னந் தொடையையும் பரிசுத்தப் படுத்துவாய்.
28 ஆரோனும் அவன் புதல்வர்களும் அதைக் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டமையால், (மேற்சொன்ன மார்க்கண்டமும் முன்னந் தொடையும்) ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நித்திய உரிமையான பங்கு என்று இஸ்ராயேல் மக்களால் அளிக்கப்படும். ஏனென்றால், ஆண்டவருக்கு அருச்சித்து ஒதுக்கப்பட்ட சமாதானப் பலிகளில் அவை தலைக்காணிக்கையாய் இருக்கின்றன.
29 ஆரோன் அணிந்திருக்கும் பரிசுத்த ஆடை அணிகள் அவனுக்குப்பின் அவன் புதல்வர்களைச் சேரும். அவற்றை அணிந்தே அவர்கள் அபிசேகம் செய்யப்பட்டுக் கைப்பூசுதலைப் பெறக்கடவார்கள்.
30 அவன் புதல்வர்களில் எவன் அவனுக்குப் பதிலாய்த் தலைமைக் குருவாக நியமிக்கப் பட்டுப் பரிசுத்த இடத்தில் பணிவிடை செய்ய உடன்படிக்கைக் கூடாரத்திலே புகுவானோ அவன் ஏழு நாள் வரை அவற்றை அணிந்து கொள்ளக் கடவான்.
31 மேலும், நீ அபிசேகத்தின் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வந்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கக்கடவாய்.
32 ஆரோனும் அவன் புதல்வர்களும் அவற்றை உண்பார்கள்; கூடையிலிருக்கிற அப்பங்களையும் சாட்சியக் கூடாரத்து மண்டபத்திலே உண்பார்கள்.
33 (அவை) பாவப்பரிகாரப் பலியாய் இருக்கத் தக்கதாகவும், அந்தப் பலியைச் செலுத்தியவர்களின் கைகள் பரிசுத்தமாகவும் இருக்கவேண்டும். அவை, ஆண்டவருக்குப் படைக்கப்பட்டவையாதலால், அந்நியன் அவற்றை உண்ணலாகாது.
34 ஆனால், அருச்சித்து ஒதுக்கப்பட்ட இறைச்சிகளிலேனும் அப்பங்களிலேனும் ஏதாவது மீதியிருந்தால் அவற்றை நெருப்பில் சுட்டெரிப்பாய். அவை பரிசுத்தமானவையாதலால் உண்ணப்படலாகாது.
35 நாம் உனக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றையும் நீ ஆரோனிடத்தும் அவன் புதல்வர்களிடத்தும் நிறைவேற்றுவாயாக. அதாவது, ஏழு நாள் வரை அவர்களுடைய கைகளை அபிசேகம் செய்து,
36 ஒவ்வொரு நாளும் பரிகாரப் பலியாக ஒரு காளையைப் படைக்கக்கடவாய். பாவப் பரிகாரப் பலியிட்ட பின் பலிப்பீடத்தையும் சுத்திகரிப்பதற்கு அதை எண்ணெய் பூசி அபிசேகம் செய்யக்கடவாய்.
37 ஏழு நாளும் பலிப்பீடத்தைச் சுத்திகரித்து புனிதமாக்கிய பின் அது பரிசுத்தத்திலும் பரிசுத்தமாய் இருக்குமாகையால் அதைத் தொடுபவன் பரிசுத்தன் ஆவான்.
38 பலிப்பீடத்தின் மேல் நீ பலியிட வேண்டியதாவது: இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக் குட்டிகளைப் படைத்து,
39 ஓர் ஆட்டுக் குட்டியைக் காலையிலும், மற்றொரு ஆட்டுக் குட்டியை மாலையிலும், பலியிடக்கடவாய்.
40 கின் என்னும் படியிலே காற்படி இடித்து, பிழிந்த எண்ணெயிலே எப்பி என்னும் மரக்காலிலே பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவைப் பிசைந்து, அந்த மாவையும், பானபலியாகக் காற்படித் திராட்சை இரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் ஒப்புக் கொடுக்கவேண்டும்.
41 மற்ற ஆட்டுக் குட்டியை நறுமணப் பலியாக மாலையிலே பலியிடவேண்டும். காலையிலே ஒப்புக்கொடுத்தது போலவும் மேலே சொல்லப்பட்டது போலவும் அதைப் படைக்கக்கடவாய்.
42 நீங்கள் தலைமுறை தலைமுறையாக நித்தியமாய் ஆண்டவருக்குச் செலுத்தவேண்டிய பலி இதுவே. இனி நாம் உன்னுடன் எவ்விடத்திலே பேசத் தீர்மானித்துக் கொண்டோமோ அந்த ஆண்டவருடைய சந்நிதியாகிய சாட்சியக் கூடாரத்தின் வாயிலிலேயே அதைப் படைக்க வேண்டியதாய் இருக்கும்.
43 அங்கே இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் இடுவோம். அங்கே பலிப்பீடமும் நம்முடைய மாட்சியின் பெருமையாலே பரிசுத்தமாக்கப்படும்.
44 நாம் பலிப்பீடத்தையும் சாட்சியப் பெட்டியையும் பரிசுத்தமாக்குவோம். நமக்குக் குருத்துவத் தொழிலைச் செய்யும்படி ஆரோனையும் அவன் புதல்வர்களையும் பரிசுத்தப் படுத்துவோம்.
45 அவ்விதமாய் இஸ்ராயேல் மக்களின் நடுவே நாம் வாழ்ந்து அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்.
46 அபொழுது, தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாம் என்றும், தங்களோடு கூடவாழும்படி தங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாம் என்றும் அவர்கள் அறிவார்கள்.
அதிகாரம் 30
1 மேலும், வாசனைப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு பீடத்தையும் சேத்தீம் மரத்தினால் செய்வாய்.
2 அது ஒருமுழ நீளமும் ஒருமுழ அகலமுமான சதுரமாயும், இரண்டு முழ உயரமாயும் இருக்கவேண்டும். அதன் மூலைகளில் கொம்புகள் இருக்கும்.
3 சல்லடை போல் இருக்கும் மேற்புறத்தையும், சுற்றுப் புறங்களையும், அதன் கொம்புகளையும் பசும் பொன்னால் திரணையை அமைப்பதுமன்றி,
4 விளிம்பின் கீழே பீடத்தின் இரண்டு பக்கத்திலும் இரண்டு பொன் வளையங்களையும் அமைப்பாய். அவை பீடத்தைத் தூக்குவதற்கான தண்டுகளின் நுழைவிடங்களாய் இருக்கும்.
5 அத்தண்டுகளையும் சேத்தீம் மரத்தினால் செய்து பொன்னால் மூடுவாய்.
6 பீடத்தையோ நாம் உன்னோடு பேசத் தீர்மானித்திருக்கிற சாட்சியப் பெட்டகத்தை மூடும் இரக்கத்தின் அரியணைக்கு முன்னும், சாட்சியப் பெட்டகத்திற்கு எதிரேயுள்ள தொங்கு திரைக்கு முன்பாகவும் வைக்கக்கடவாய்.
7 ஆரோன் அதன்மேல் நறுமணம் கமழும் தூபம் காட்டுவான். காலையில் விளக்குகளைத் தயார் செய்யும் நேரத்தில் தானே தூபம் காட்டுவான்.
8 மாலையில் அவற்றை ஏற்றும் நேரத்திலே உங்கள் தலைமுறை தோறும் எப்போதும் ஆண்டவர் திருமுன் வாசனைப் பொருட்களைச் சுட்டெரிக்கக்கடவான்.
9 நீங்கள் வேறு விதமாய்ச் சேர்க்கப்பட்ட நறுமண தூபங்களையேனும், காணிக்கையையேனும், பலியையேனும் அந்தப் பீடத்தின் மேல் ஒப்புக்கொடுக்கவும் வேண்டாம்; அதிலே பானப் பலிகளை ஊற்றவும் வேண்டாம்.
10 ஆண்டிற்கு ஒருமுறை ஆரோன் பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தினால் அதன் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்வான். உங்கள் தலைமுறைதோறும் அதன்மேல் பரிகாரம் செய்வான். அது ஆண்டவருக்குப் பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதாம் என்றருளினார்.
11 ஆண்டவர் மேலும் மோயீசனுக்குத் திருவுளம்பற்றினதாவது:
12 நீ இஸ்ராயேல் மக்களின் தொகையைக் கணக்கெடுக்கும் போது, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் வேளையிலே தன் தன் உயிரைக் குறித்து ஆண்டவருக்கு மீட்புப் பணத்தைக் கொடுப்பான். அவர்கள் எண்ணப்படும் போது அவர்களுக்கு ஒரு வாதையும் உண்டாகாது.
13 எண்ணப்படுகிறவர்களில் ஒவ்வொருவனும் பரிசுத்த இடத்துச் சீக்கல் கணக்கின்படி அரைச்சீக்கல் செலுத்தக்கடவான். ஒரு சீக்கலுக்கு இருபது ஒபோல். ஆண்டவருக்குச் செலுத்தப்படுவது அரைச்சீக்கலே.
14 முதலில் எண்ணப்படுகிறவர்களுள் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் அதை ஆண்டவருக்குச் செலுத்தக்கடவார்கள்.
15 செல்வம் படைத்தவன் அரைச்சீக்கலுக்கு அதிகமாயும், வறியவன் அதற்குக் குறைவாயும் செலுத்தவேண்டாம்.
16 நீயோ இஸ்ராயேல் மக்களிடத்திலே அந்தப் பணத்தை வாங்கி, ஆண்டவர் திருமுன் அவர்கள் நினைவு இருக்கும் பொருட்டும், அவர்கள் ஆன்மாக்களுக்குப் பாவப்பரிகாரமாகவும் அதை ஆசாரக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாய் என்றார்.
17 ஆண்டவர் மேலும் மோயீசனை நோக்கி:
18 கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும் அதன் பாதத்தையும் செய்து, ஆசாரக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் நடுவே வைத்து அதில் தண்ணீர் வார்த்த பிறகு,
19 அதினின்று ஆரோனும் அவன் புதல்வர்களும் தங்கள் கைகால்களைக் கழுவக் கடவார்கள்.
20 அவர்கள் சாட்சியக் கூடாரத்திற்குள் புகும் போதும், ஆண்டவருக்குத் தூப வகைகளை ஒப்புக் கொடுக்கும்படி பலிப்பீடத்திற்கு வரும் போதும் கைகால்களை அவ்விதமே கழுவாவிட்டால்,
21 ஒருவேளை சாவார்கள். இது தலைமுறை தோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியாருக்கும் நித்திய சட்டமே என்றருளினார்.
22 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
23 சிறந்த பரிமள வகைகளாகிய முதல் தரத்துத் தூய வெள்ளைப் போளத்தில் ஜந்நூறு சீக்கல் எடையும், கருவாப் பட்டையில் அதில் பாதியாகிய இருநூற்றைம்பது சீக்கல் எடையும், நறுமண வசம்பிலே இருநூற்றைம்பது சீக்கல் எடையும்,
24 இலவங்கப் பட்டையிலே பரிசுத்த இடத்து நிறையின்படி ஜந்நூறு சீக்கல் எடையும், கின் என்னும் படிக்கு ஒருபடி ஒலிவ எண்ணெயும் எடுத்து,
25 அவற்றால் நறுமண எண்ணைய் தயாரிப்போர் செய்வது போல், நீ திரு அபிசேகத்திற்குரிய கூட்டுத் தைலம் தயாரிக்கக்கடவாய்.
26 அதைக்கொண்டு சாட்சியக் கூடாரத்தையும், உடன்படிக்கைப் பெட்டகத்தையும்,
27 மேசையையும், பாத்திரங்களையும், குத்துவிளக்கையும், அதைச் சார்ந்த பணிமுட்டுக்களையும், தூப வகைகளின் பீடத்தையும், தகனப் பலிப்பீடத்தையும்,
28 அவைகளுக்கடுத்த எல்லாத் தட்டு முட்டுக்களையும் அபிசேகம் செய்து,
29 அவை எல்லாவற்றையும் பரிசுத்தப் படுத்துவாய். அவை அனைத்தும் அவ்வாறே மிகப் பரிசுத்த பொருட்களானபடியால் அவைகளைத் தொடுவோர் பரிசுத்தமாவார்.
30 ஆரோனும் அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்யும்படிக்கு நீ அவர்களை அபிசேகம் செய்து பரிசுத்தப் படுத்துவாயாக.
31 அன்றியும், இஸ்ராயேல் மக்களோடு பேசி: இது உங்கள் தலைமுறைதோறும் நமக்கு உரித்தான பரிசுத்த அபிசேகத் தைலமாய் இருக்கும் என்பாய்.
32 இது மனிதன் உடலின்மேல் பூசப்படவும், இது கூட்டப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும் கூடாது. ஏனென்றால், இது பரிசுத்தமானது; உங்களுக்கும் பரிசுத்த பொருள் ஆகவேண்டும்.
33 இதற்குச் சரிநிகரான தைலத்தைக் கூட்டுபவன் அல்லது அதிலிருந்து எடுத்து அந்நியனுக்குக் கொடுப்பவன் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான் என்றார்.
34 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: பரிமள வகைகளாகிய வெள்ளைப்போளத்தையும், குங்கிலியத்தையும், நல்ல மணமுள்ள கல்பான் பிசினையும், மிகத் தூய்மையான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,
35 தைலக்காரர் வேலை செய்யும் முறையின்படி மேற்படிப் பொருட்களைக் கவனத்துடன் கூட்டித் திருப் பொருளாவதற்குரிய தூய தூப வகைகளைச் செய்யக்கடவாய்.
36 அதில் சிறிது எடுத்துப் பொடிப் பொடியாக இடித்து, நாம் உனக்குக் காட்சியளிக்கும் இடமாகிய சாட்சியக் கூடாரத்துக்கு முன் வைக்கக் கடவாய். அது உங்களுக்கு மிகப் பரிசுத்த பரிமளமாகும்.
37 உங்கள் செலவுக்கென்று இதற்கு ஒப்பானதை நீங்கள் செய்து கொள்ளலாகாது. ஏனென்றால், ஆண்டவருக்கென்றே அது கூட்டப்பட்டது.
38 அதன் மணத்தை முகரும் பொருட்டு அதற்கு ஒப்பானதைச் செய்திருப்பவன் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான் என்றார்.
அதிகாரம் 31
1 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 இதோ நாம் யூதா கோத்திரத்தில் ஊர் என்பவனுடைய புதல்வனான உறியின் மகன் பெசெலேயலைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறோம்.
3 அவனுக்கு ஞானமும் புத்தியும் அறிவும் உண்டாக இறை ஆவியினாலே அவனை நிரப்பி,
4 பொன், வெள்ளி, வெண்கலத்திலும்,
5 பளிங்குக் கல்லிலும், இரத்தினங்களிலும், பலவகை மரங்களிலும் செய்யக்கூடிய எல்லா வேலையையும் திட்டமிட்டுச் செய்வதற்கு வேண்டிய நுட்பத்தைத் தந்தருளினோம்.
6 தான் கோத்திரத்தில் உதித்த அக்கிசமேக்கின் புதல்வன் ஒலியாவை நாம் அவனுக்குத் துணையாகத் தெரிந்தெடுத்ததுமன்றி, நாம் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் செய்யும்படி திறமையுள்ளவர்களின் இதயத்திலும் ஞானத்தைத் தந்தருளினோம்.
7 உடன்படிக்கைக் கூடாரம், சாட்சியப் பெட்டகம், இதன்மேல் இருக்கும் இரக்கத்தின் அரியணை, இவை முதலிய ஆசாரக் கூடாரத்தின்
8 எல்லாத் தட்டுமுட்டுக்களும் மேசையும் அதன் பாத்திரங்களும், மிகப் பரிசுத்தக் குத்து விளக்கும், அதன் கருவிகளும்,
9 வாசனைப் பொருளின் பீடமும், தகனப் பலிப் பீடமும், இவைகளைச் சேர்ந்த எல்லாப் பணிமுட்டுக்களும் தொட்டியும் அதன் பாதமும்,
10 குருவாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் திருக் கோலமாய் அணிந்து தங்கள் குருத்துவத் தொழில் செய்வதற்கான உடைகளும், அபிசேகத் தைலம்,
11 பரிசுத்த இடத்திற்குரிய வாசனைத் திரவிய தூபம் ஆக நாம் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் அமைப்பார்கள் என்றருளினார்.
12 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
13 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் நம்முடைய ஓய்வுநாளை அனுசரிப்பதில் கருத்தாய் இருங்கள். ஏனென்றால், உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற ஆண்டவர் நாம் என்று நீங்கள் அறியும்படி அது உங்கள் தலைமுறை தோறும் நமக்கும் உங்களுக்குமுள்ள அடையாளமாம்.
14 நம்முடைய ஒய்வுநாளை அனுசரியுங்கள். ஏனென்றால், அது உங்களுக்குப் பரிசுத்தமானது. அதை மீறி நடப்பவன் கொலை செய்யப்படுவான். அன்று வேலை செய்பவன் தன் இனத்தாரினின்று விலக்குண்டு போவான்.
15 ஆறு நாளும் வேலை செய்வீர்கள். ஏழாம் நாளோ ஆண்டவருக்குப் பரிசுத்தமான ஓய்வு நாளாகிய சாபத் நாள். அந்நாளிலே வேலை செய்யவன் எவனும் கொலை செய்யப்படுவான்.
16 இஸ்ராயேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை ஆசாரத்தோடு கொண்டாடக் கடவார்கள். அது என்றென்றைக்கும்,
17 நமக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உடன்படிக்கையும் அடையாளமுமாய் இருக்கும். ஏனென்றால், ஆண்டவர் விண்ணையும் மண்ணையும் ஆறுநாளில் படைத்து ஏழாம் நாளில் வேலையை நிறுத்தி ஓய்ந்திருந்தார் எனச்சொல்வாய் என்றார்.
18 இப்படி, சீனாய் மலையில் ஆண்டவர் மோயீசனோடு பேசி முடித்தபின், தெய்வக் கையால் எழுதப்பட்ட சாட்சியக் கற்பலகைகளாகிய இரண்டு பலகைகளையும் அவரிடம் கொடுத்தார்.
அதிகாரம் 32
1 மோயீசன் மலையிலிருந்து இறங்கி வரத் தாமதிப்பதைக் கண்டு மக்கள் ஆரோனுக்கு விரோதமாய்க் கூட்டம் கூடி, அவரை நோக்கி: நீர் எழுந்து, எங்களை வழிநடத்தும் தேவதைகளை எங்களுக்குச் செய்து கொடும். ஏனென்றால், எகிப்து நாட்டினின்று, எங்களை விடுவித்த மோயீசனுக்கு என்ன நேர்ந்ததோ, அறியோம் என்றார்கள்.
2 அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள், புதல்வர், புதல்வியருடைய காதுகளினின்று பொன்னணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்.
3 மக்கள் ஆரோனின் கட்டளைப்படி காதணிகளைக் கொண்டு வந்தார்கள்.
4 அவர், ( அவற்றை ) வாங்கி உருக்கி வார்ப்பு வேலையாலான கன்றுக்குட்டி ஒன்று செய்தார். அவர்களோ: இஸ்ராயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உன் தேவர்கள் இவர்களேயாம் என்றனர்.
5 ஆரோன் இதைக் கண்டு, அதற்கு முன்பாக ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, நாளை ஆண்டவருடைய திருவிழா கொண்டாடப்படும் எனக் கட்டியக் காரனைக் கொண்டு கூறச் செய்தார்.
6 அவர்கள் காலையில் எழுந்து, தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள். பிறகு மக்கள் உண்ணவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்தார்கள்.
7 ஆண்டவரோ மோயீசனுக்குத் திருவாக்கருளி: இறங்கிப்போ. நீ எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உன் மக்கள் பாவம் செய்தார்கள்.
8 நீ அவர்களுக்குக் காண்பித்த வழியை அவர்கள் எவ்வளவு விரைவாய் விட்டு விலகி, தங்களுக்கு வார்ப்பினால் கன்றுக்குட்டியொன்றைச் செய்து ஆராதித்து, பின் அதற்குப் பலியிட்டு: இஸ்ராயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உன் தேவர்கள் இவர்களேயாம் என்று சொன்னார்கள் என்றார்.
9 மீண்டும் ஆண்டவர் மோயீசனோடு பேசி: இந்த மக்களைப் பார்த்தோம். அவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் ஆகையால்,
10 நீ நம்மை விட்டுவிடு, நமது கோபம் அவர்கள் மேல் மூண்டு அவர்களை அழித் தொழிக்கும். உன்னை ஒரு பெரிய இனத்திற்குத் தலைவனாக்குவோம் என்றார்.
11 மோயீசனோ தம் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடி ஆண்டவரே! நீர் மகத்தான பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உம் மக்கள் மேல் ஏன் உமது கோபம் மூள வேண்டும்?
12 மலைகளில் அவர்களைக் கொன்று போட்டுப் பூமியினின்று அவர்களை அழித்தொழிக்க அல்லவோ கடவுள் அவர்களைக் கபடமாய் எகிப்து நாட்டிலிருந்து அழைத்துப் போனார் என்று எகிப்தியர் சொல்வார்களே. அது வேண்டாம். உமது கோபத்தின் உக்கிரம் அமரக்கடவது. தீய மக்கள் மேல் நீர் இரக்கம் கொள்ள வேண்டுமென மன்றாடுகிறேன்.
13 நீர் ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் ஆகிய உம் ஊழியர்களை நினைத்தருளும். அவர்களை நோக்கி: உங்கள் சந்ததியை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்து, நாம் சொன்ன இந்த நாடு முழுவதையும் நீங்களும் உங்கள் சந்ததியாரும் என்றென்றும் உரிமையாகக் கொள்ளும்படிக்குத் தந்தருள்வோம் என்று உமது பேரில் ஆணையிட்டுத் திருவுளம்பற்றினீரன்றோ என்று மன்றாடினார்.
14 அப்பொழுது ஆண்டவருக்குக் கோபம் தணிய, தாம் மக்களுக்கு எவ்விதக்கேடும் செய்வதாகச் சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டு விட்டார்.
15 பின் மோயீசன் மலையிலிருந்து இறங்கி வந்தார், சாட்சியப் பலகை இரண்டும் அவர் கையில் இருந்தன. அவை இருபக்கமும் எழுதப் பட்டிருந்தன.
16 அந்தப் பலகைகள் கடவுளால் செய்யப்பட்டிருந்ததுமன்றி, அவைகளிலே பதித்திருந்த எழுத்துக்களும் கடவுளுடைய கையெழுத்தாய் இருந்தன.
17 மக்கள் ஆரவாரம் செய்வதை யோசுவா கேட்டு, மோயீசனை நோக்கி: பாளையத்திலே சண்டை போடப் போகிறாப்போலே இரைச்சல் கேட்கிறது என்றார். அதற்கு மோயீசன்: இது போருக்குப் பயன்படுத்தும் ஆர்ப்பரிப்பும் அன்று;
18 பகைவர்களை விரட்டும் தொனியும் அன்று. பாடலின் ஒசைதான் எனக்குக் கேட்கிறது என்றார்.
19 அவர் பாளையத்தை அணுகி வரவே, கன்றுக்குட்டியையும் ஆடல் பாடல்களையும் கண்டார். மிகவும் கோபமடைந்து தம் கையிலிருந்த இரு பலகைகளையும் மலையின் அடியில் எறிந்து துண்டு துண்டாய் உடைத்தார்.
20 அவர்கள் செய்திருந்த கன்றுக்கட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்துத் தவிடு பொடியாக்கி, அப்பொடியைத் தண்ணீரோடு கலந்து, இஸ்ராயேல் மக்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
21 பின் அவர் ஆரோனை நோக்கி: நீ இந்த மக்கள்மேல் அந்தப் பெரும் பாவத்தை வருவிப்பதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றார்.
22 அதற்கு ஆரோன்: என் தலைவருக்குக் கோபம் வேண்டாம். இவர்கள் பொல்லாத மக்கள், தீமையை நாடும் மக்களென்று நீர் அறிந்திருக்கிறீர்.
23 அவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னின்று நடத்தும் பொருட்டுத் தெய்வங்களை எங்களுக்குச் செய்து கொடும். எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்துக் கொண்டு வந்த அந்த மோயீசனுக்கு என்ன நேர்ந்ததோ, அறியோம் என்றார்கள்.
24 அப்பொழுது நான்: உங்களில் யார் யாரிடம் பொன் இருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் பொன்னைக் கொணர்ந்து என்னிடம் ஒப்புவித்தார்கள். நான் அதை நெருப்பில் போட்டேன். அதிலிருந்து அந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது என்று பதில் சொன்னார்.
25 இந்த வெட்கத்துக்குரிய அக்கிரமத்தின் பொருட்டு ஆரோன் மக்களைக் கொள்ளையிட்டு அவர்களைப் பகைவருக்கு முன் நிருவாணமாக்கினதைக் கண்ட மோயீசன்,
26 பாளையத்தின் வாயிலிலே நின்று: ஆண்டவருடைய பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வந்து சேரக் கடவார்கள் என்றார். அப்பொழுது லேவியின் புதல்வர் எல்லாரும் அவரிடம் கூடி வந்தனர்.
27 மோயீசன் அவர்களை நோக்கி: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருடைய வாக்கு ஏதென்றால்: உங்களில் ஒவ்வொருவனும் தன் வாளைத் தன் இடையிலே கட்டிக்கொண்டு பாளையத்தைக் கடந்து, ஒரு வாயிலிலிருந்து மற்றொரு வாயில்வரை போய், நடுவிலே சகோதரனோ, நண்பனோ, அயலானோ - (யாரைக் கண்டாலும்) -கொன்று போடுங்கள் என்றார்.
28 லேவியின் புதல்வர் மோயீசன் சொன்னபடியே செய்தனர். அன்று ஏறக்குறைய இருபத்து மூவாயிரம் பேர் உயிர் இழந்தனர்.
29 அப்போது மோயீசன் அவர்களை நோக்கி: கடவுளின் ஆசீர் உங்களுக்குக் கிடைக்கும்படி இன்று உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் மகனையும் சகோதரனையும் பழிவாங்கினமையால், ஆண்டவருக்கு உங்கள் கைகளை அர்ப்பணம் செய்தீர்கள் என்றார்.
30 மறுநாள் மோயீசன் மக்களை நோக்கி: நீங்கள் பெரிய பாதகத்தைச் செய்திருக்கிறீர்கள். நானோ உங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்யக் கூடுமோவென்று இயன்ற வரையில் மன்றாடும் பொருட்டு, ஆண்டவருடைய சந்நிதிக்கு ஏறிப் போகிறேன் என்றார்.
31 அப்படியே மோயீசன் ஆண்டவரிடம் திரும்பிப் போய்: இந்த மக்கள் மிகப் பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார்கள். பொன்னால் தங்களுக்குத் தெய்வங்களைச் செய்து கொண்டார்கள். ஒன்றில், நீர் இந்தப் பாவத்தை மன்னிக்க வேண்டும்.
32 அல்லது நீர் எழுதிய உமது புத்தகத்திலிருந்து என் பெயரையும் அழித்து விடும் என்று மன்றாடினார்.
33 ஆண்டவர் அவருக்கு மறுமொழியாக: நமக்கு விரோதமாய்த் துரோகம் செய்பவன் பெயரை நம்முடைய புத்தகத்திலிருந்து அழித்து விடுவோம்.
34 நீயோ நாம் உனக்குச் சொன்ன இடத்திற்கு இந்த மக்களை அழைத்துக் கொண்டு போ. நம் தூதர் உனக்கு முன் செல்வார். ஆயினும் நாம், பழிவாங்கும் நாளில் அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்போம் என்றார்.
35 அப்படியே, ஆரோன் செய்து கொடுத்திருந்த கன்றுக்குட்டியின் காரியத்திலே மக்கள் செய்த அக்கிரமத்தைப் பற்றி ஆண்டவர் அவர்களைத் தண்டித்தார்.
அதிகாரம் 33
1 பின் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளி: நீயும், எகிப்து நாட்டினின்று நீ அழைத்துக் கொண்டு வந்த உன் மக்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்போம் என்று ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு ஆகியோருக்கு நாம் ஆணையிட்டு வாக்குறுதி அருளிய நாட்டிற்குப் போங்கள்.
2 நாம் ஒரு தூதரை உனக்கு முன் அனுப்பி, கானானையனையும் ஆமோறையனையும் ஏத்தையனையும் பாரேசையனையும் ஏவையனையும் யெபுசேயனையும் நீக்கி,
3 பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டிலே நீ புகும்படி செய்வோம். ஆயினும், வழியிலே நாம் உங்களை அழித்தொழிக்காதபடிக்கு நாம் உங்கள் நடுவே போக மாட்டோம். உண்மையிலே உன் மக்கள் வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்றார்.
4 மக்கள் மிகத் துக்கமான இவ்வார்த்தைகளைக் கேட்ட போது கண்ணீர் விட்டழுது, அவர்களில் ஒருவரும் தம் வழக்கமான ஆடையாபரணங்களை அணிந்து கொள்ளவில்லை.
5 ஆண்டவர் மோயீசனை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்: நீங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள். உங்கள் நடுவில் நாம் ஒருவேளை வருவோமாயின், உங்களை அழித்தொழிக்க வேண்டியதாயிருக்கும். (ஆகையால்) நீங்கள் அணிந்திருக்கிற ஆபரணங்களைக் கழற்றிப் போட்டால், நாம் உங்களுக்குச் செய்ய வேண்டியதை அறிவோம் என்றருளினார்.
6 ஆகையால், இஸ்ராயேல் மக்கள் ஒரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போட்டார்கள்.
7 பின்னர் மோயீசன் ஆசாரக் கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளையத்துக்கு வெளியே தூரத்தில் நிறுவினார்; அதன் பெயரை உடன்படிக்கைக் கூடாரம் என்று அழைத்தார். அது முதல் யாதொரு வழக்கு உண்டானால், மக்களெல்லாம் பாளையத்துக்கு வெளியே உடன்படிக்கைக் கூடாரத்துக்குப் போவார்கள்.
8 மோயீசன் வெளிப்பட்டுக் கூடாரத்துக்குப் போகும் போது, மக்களெல்லாரும் எழுந்திருந்து தத்தம் கூடார வாயிலிலே நின்று, மோயீசன் உடன்படிக்கைக் கூடாரத்தில் நுழையுமட்டும் அவர் முதுகைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
9 அவர் உடன்படிக்கைக் கூடாரத்தில் நுழைந்த பின்னரோ மேகத்தூண் வாயிலில் இறங்கி நிற்கும். அப்பொழுது ஆண்டவர் மோயீசனோடு பேசுவார்.
10 மேகத்தூண் கூடார வாயிலே நின்று கொண்டிருப்பதை யாவரும் காண்பார்கள். மக்களும் எழுந்து தத்தம் கூடார வாயிலிலே பணிந்து வணக்கம் புரிவர்.
11 ஒருவன் தன் நண்பனோடு பேசுவதுபோல ஆண்டவர் மோயீசனோடு நேரிலே உரையாடிக் கொண்டிருப்பார். பிறகு அவர் பாளையத்துக்குத் திரும்பிப் போகும் போது, நூனின் புதல்வனும் இளைஞனுமான யோசுவா என்னும் அவனுடைய சீடன் திருக் கூடாரத்தை விட்டு விலகாதிருந்தான்.
12 மோயீசன் ஆண்டவரை நோக்கி: நீர் இந்த மக்களை அழைத்துக் கொண்டு போ என்று கட்டளையிடுகிறீர். ஆயினும், என்னோடு கூட இன்னாரை அனுப்புவீர் என்பதை எனக்கு அறிவிக்கவில்லை. சிறப்பாக, நீர் என்னை நோக்கி: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்து அறிந்திருக்கிறோம் என்றும், நமக்கு நீ விருப்பமுள்ளவன் ஆனாய் என்றும் திருவுளம்பற்றியிருந்தீரே.
13 உமது திருமுன் அடியேன் அருள் அடைந்தேனாயின், நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் இரக்கம் பெறுவதற்கும் உமது திருமுகத்தை எனக்குக் காண்பித்தருள்வீர். உம் குடிகளாகிய இம்மக்களையும் நோக்கியருள்வீர் என்றார்.
14 அதற்கு ஆண்டவர்: நாமே உனக்கு முன்பாகச் செல்வோம். உனக்கு இளைப்பாற்றியைத் தருவோம் என்று சொன்னார்.
15 மீண்டும் மோயீசன்: நீரே எங்களுக்கு முன் செல்லாதிருப்பீராயின், எங்களை இவ்விடத்திலிருந்து புறப்படச் செய்யவேண்டாம்.
16 ஏனென்றால், பூமியின் மீது வாழ்கின்ற எல்லா மக்களாலும் நாங்கள் மாட்சிபெறும் பொருட்டு நீர் எங்களுடன் எழுந்தருளாவிடின், அடியேனுக்கும் உம் குடிகளுக்கும் உம்முடைய கண்களில் இரக்கம் கிடைத்ததென்று நாங்கள் எதனால் அறிவோம் என்றார்.
17 ஆண்டவர்: இதோ நீ சொன்ன இவ்வார்த்தைப்படி செய்வோம். ஏனென்றால், நம்முடைய கண்களில் உனக்கு இரக்கம் கிடைத்தது. உன்னைப் பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறோம் என்று மறுமொழி சொன்னார். அதற்கு,
18 அவர்: உம்முடைய மாட்சியை எனக்குக் காண்பித்தருளும் என்றார்.
19 அப்பொழுது அவர்: நாம் உனக்கு முழு நன்மையைக் காண்பிப்போம். அன்றியும், நாம் உனக்கு முன் ஆண்டவருடைய (திருப்) பெயரைக் கூறுவோம். எவனிடம் பிரசன்னமாயிருப்போமோ அவன் மட்டில் இரங்குவோம். எவன் மீது இரக்கமாய் இருக்கத் திருவுளம் கொள்வோமோ அவன் மேல் இரக்கம் வைப்போம் என்றருளினார்.
20 மீளவும்: ஆனால், ஒரு மனிதனும் நம்மைக் கண்டபின் உயிரோடிருக்க இயலாதாகையால், நீ நம்முடைய முகத்தைப் பார்க்க மாட்டாய் என்றார்.
21 திரும்பவும் ஆண்டவர்: இதோ நமதண்டையில் ஓர் இடமுண்டு. நீ பாறையின் மேல் நிற்பாய். பிறகு நமது மாட்சிகடந்து போகும் பொழுது,
22 நாம் உன்னைப் பாறைக் குகையில் இருத்தி நாம் அப்பாற் போகுமட்டும் நம்முடைய வலக்கையால் உன்னை மூடுவோம்.
23 பிறகு, நாம் கையை எடுத்து விடும் போது நீ நமது பின்புறத்தைக் காண்பாய். நம் முகத்தையோ நீ காணமாட்டாய் என்றார்.
அதிகாரம் 34
1 ஆண்டவர் மீண்டும் மோயீசனை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒப்பான வேறு இரண்டு கற்பலகைகளை நீ வெட்டு. உன்னால் உடைக்கப்பட்ட பலகைகளில் இருந்த வார்த்தைகளை இவற்றிலும் எழுதுவோம்.
2 விடியும் நேரத்தில் நீ சீனாய் மலை மேல் ஏறத் தயாராய் இரு. அங்கு மலையின் உச்சியில் நம்மோடு கூடத் தங்கியிருப்பாய்.
3 உன்னுடன் ஒருவனும் வரவும் கூடாது; மலையில் எவ்விடத்திலும் காணப்படவும் கூடாது; ஆடு மாடுகள் முதலாய் எதிர்ப் பாறையில் மேயவும் கூடாது என்றார்.
4 அப்படியே ( மோயீசன் ) முந்தின பலகைகளைப் போல் வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி, அதிகாலையில் எழுந்திருந்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே பலகைகளைத் தம்முடன் எடுத்துக் கொண்டு சீனாய் மலையில் ஏறினார்.
5 ஆண்டவர் மேகத்தில் இறங்கின போது, மோயீசன் ஆண்டவருடைய ( திருப் ) பெயரைக் கூவியழைத்து, அவரோடு நின்று கொண்டார்.
6 அவர் தம் முன் கடந்து போகையில் மோயீசன் அவரை நோக்கி: எல்லா அதிகாரமும் கொண்டுள்ள ஆண்டவராகிய கடவுளே, அருள் நோக்கும் தயவும் பொறுமையும் அளவில்லாத இரக்கமும் பொருந்திய கடவுளே,
7 ஆயிரம் படைப்புக்களுக்கும் இரக்கம் புரிகிறவரே, அக்கிரமத்தையும் பாதகங்களையும் பாவங்களையும் போக்குபவரே, உமது முன்னிலையில் தன் சுபாவ இயல்பினால் மாசில்லாதவன் ஒருவனும் இல்லை. தந்தையர் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும் பேரப்பிள்ளைகளிடத்திலும், மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிக்கிறவரே என்று கூறி,
8 மோயீசன் விரைந்து, பணிந்து, குப்புறவிழுந்து தொழுது:
9 ஆண்டவரே, உமது முன்னிலையில் அடியேனுக்கு அருள் கிடைத்ததாயின், ( இம் மக்கள் வணங்காக் கழுத்துடையவர்களாகையால் ) நீர் எங்களுடன் எழுந்தருளவும், எங்கள் அக்கிரமங்களையும் பாவங்களையும் போக்கவும், அடியோர்களை உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் என்றார்.
10 ஆண்டவர் மறுமொழியாக: மக்கள் எல்லாருக்கும் முன் நாம் ஒர் உடன்படிக்கை செய்வோம். உன்னோடு கூட இருக்கிற இந்த மக்கள் நாம் செய்யப்போகிற ஆண்டவருக்குரிய பயங்கரமான செய்கைகளைக் காணும்படி, பூமி எங்கும் எந்த இனமும் எந்த மக்களும் காணாத அற்புதங்களைக் காட்டுவோம்.
11 இன்றும் நாம் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அனுசரித்துக்கொள். ஆமோறையனையும் கானானையனையும் ஏத்தையனையும் பாரேசையனையும் ஏவையனையும் யெபுசேயனையும் உனக்குமுன் நாம் இதோ துரத்தி விடுவோம்.
12 நீ அந்நாட்டுக் குடிகளுடன் ஒருக்காலும் உறவு வைத்துக் கொள்ளாதே. கொண்டால், அது உனக்குக் கேடாய் முடியும், எச்சரிக்கை!
13 ஆனால், அவர்களுடைய பலிப்பீடங்களையும் இடித்து, விக்கிரகங்களையும் உடைத்து, திருச்சோலைகளையும் வெட்டிவிடக்கடவாய்.
14 அந்நிய தெய்வத்திற்கு ஆராதனை செலுத்தாதே. ஆண்டவருடைய திருப்பெயர்: பொறாதவர்.
15 ஆகையால், அவர் எரிச்சலுள்ள கடவுள். நீ அந்நாட்டாரோடு உடன்படிக்கை செய்யாதே. செய்தால், அவர்கள் ஒருவேளை தங்கள் தெய்வங்களைக் கள்ள வழியிலே பின்பற்றி நடந்து தங்கள் விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்த பின் அவர்களில் ஒருவன் உன்னை அழைத்து, விக்கிரகங்களுக்குப் படைக்கப் பட்ட இறைச்சியில் சிறிது உண்ணச் சொல்வான், எச்சரிக்கை!
16 அவர்கள் புதல்வியரிடையே உன் புதல்வர்களுக்குப் பெண்கொள்ளாதே. கொண்டால், இவர்கள் ஒருவேளை தங்கள் தெய்வங்களைக் கள்ள வழியிலே பின்பற்றி நடந்த பின் உன் புதல்வர்களையும் தங்கள் தெய்வங்களைப் பின்பற்றி நடக்கச் செய்வார்கள், எச்சரிக்கை!
17 உனக்கு வார்ப்பினால் விக்கிரங்களைச் செய்யாதே.
18 புளியாத அப்பத் திருவிழாவை நீ அனுசரிக்கக்கடவாய். நாம் உனக்குக் கட்டளையிட்டபடியே, புதுப் பலன்களின் மாதத்திலே ஏழு நாளும் புளியாத அப்பங்களை உண்ணுவாய். ஏனென்றால், நீ வசந்த காலத்து முதல் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தாய்.
19 கருத்தரித்துப் பிறக்கும் ஆண்கள் யாவும் நமக்குச் சொந்தமாம். ஆடு மாடு முதலிய எல்லா உயிரினங்களின் தலையீற்று யாவும் அப்படியே நமக்குச் சொந்தமாகும்.
20 கழுதையின் தலையீற்றை ஓர் ஆட்டைக் கொடுத்து மீட்டுக் கொள்வாய். அதன் விலையை முதலாய்க் கொடுக்க உனக்கு வசதி இல்லாது போனால், அது கொல்லப்படும். உன் பிள்ளைகளில் மூத்த மகனை மீட்டுக்கொள்வாய். வெறுங் கையோடு நம்முடைய சந்நிதிக்கு வரக்கூடாது.
21 ஆறு நாளும் வேலை செய்து, ஏழாம் நாளிலே உழவையும் அறுப்பையும் நிறுத்தி ஓய்ந்திருப்பாய்.
22 உன் கோதுமையறுப்பின் முதற்பலனை ஆண்டவருக்குச் செலுத்தும் கிழமைத் திருவிழாவையும், ஆண்டு முடிவிலே பலனையெல்லாம் சேர்க்கும் திருவிழாவையும் கொண்டாடுவாய்.
23 ஆண்டில் மும்முறை உன் ஆண் மக்கள் எல்லாரும் இஸ்ராயேலின் கடவுளாகிய எல்லாம் வல்ல ஆண்டவர் திருமுன் வரக்கடவார்கள்.
24 ஏனென்றால், நாம் அந்நியரை உன் முன்னின்று துரத்திவிட்டு உன் எல்லைகளையும் விரிவுபடுத்திய கடவுளின் சந்நிதிக்கு வந்து உன்னைக் காண்பித்தால், எவரும் உன் நாட்டைப்பிடிக்கும்படி முயற்சிசெய்ய மாட்டார்கள்.
25 நீ நமக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவோடு படைக்காதே. பாஸ்காத் திருவிழாப் பலியில் எதையேனும் விடியற்காலை வரை வைக்கவும் கூடாது.
26 உன் நிலத்திலே விளைந்த முதற்பலன்களை உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்தில் ஒப்புக்கொடுப்பாய். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம் என்று சொன்னார்.
27 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: எந்த வார்த்தைகளைச் சொல்லி நாம் உன்னோடும் இஸ்ராயேலரோடும் உடன்படிக்கை செய்தோமோ அந்த வார்த்தைகளை நீ உனக்காக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
28 ஆகையால், மோயீசன் அவ்விடத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவுமாய் ஆண்டவரோடு தங்கி, உண்ணாமலும் குடியாமலும் இருந்தார். ஆண்டவரும் உடன்படிக்கையின் பத்து வாக்கியங்களையும் கற்பலகைகளில் எழுதியருளினார்.
29 பின், மோயீசன் சீனாய் மலையிலிருந்து இறங்கும் போது இரண்டு சாட்சியப் பலகைகளையும் தம் கையில் எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால், தம்மோடு ஆண்டவர் பேசியதினாலே தம் முகம் ஒளிவீசிக் கொண்டிருப்பதை அறியாதிருந்தார்.
30 அப்பொழுது ஆரோனும் இஸ்ராயேல் மக்களும், மோயீசனின் முகம் இரண்டு கொம்புகளைப் போல் சுடர் விட்டு எரிவதைக் கண்டு, அவர் அருகில் வர அஞ்சினார்கள்.
31 அவர் அவர்களை வரச் சொன்னார். அப்பொழுது ஆரோனும் மக்கள் தலைவர்களும் மோயீசனிடம் திரும்பி வந்த போது, அவர் அவர்களோடு பேசினார்.
32 பின் இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். அவர் சீனாய் மலையில் ஆண்டவர் தம்மோடு பேசின காரியங்களையெல்லாம் அவர்களுக்குத் தெரிவித்தார்.
33 அவர்களுடன் பேசி முடிந்தபின் மோயீசன் தம் முகத்தின் மேல் முக்காடு போட்டார்.
34 மோயீசன் ஆண்டவர் திருமுன் அவரோடு பேசும்படி போகையில், உள்ளே புகுந்தது முதல் வெளியே புறப்பட்டு வரும் வரை முக்காட்டை நீக்கி விடுவார். பின் அவர் வெளியே வந்து, தனக்குத் தெரிவிக்கப் பட்டவையெல்லாம் இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்லுவார்.
35 மோயீசன் வெளியே வரும் போது அவர் முகம் சுடர் விட்டெரிவதை அவர்கள் காண்பார்கள். ஆனால், அவர் எதையேனும் அவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தால், திரும்பவும் முக்காட்டைத் தம் முகத்தின் மேல் போட்டுக் கொள்வார்.
அதிகாரம் 35
1 மீண்டும் இஸ்ராயேல் மக்களாகிய சபையாரெல்லாரும் கூடியிருக்கையிலே மோயீசன் அவர்களை நோக்கி: ஆண்டவர் செய்யக் கட்டளையிட்டவையாவன:
2 நீங்கள் ஆறு நாள் வேலை செய்வீர்கள். ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாளாகும். அது ஆண்டவருடைய ஒய்வு நாளாகிய சாபத்; அன்று வேலை செய்பவன் கொலை செய்யப்படுவான்.
3 ஒய்வு நாளிலே உங்கள் உறைவிடங்கள் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்கள் என்றார்.
4 மேலும் மோயீசன் இஸ்ராயேல் மக்களாகிய சபையாரெல்லாரையும் நோக்கி: ஆண்டவர் திருவாக்கருளித் தெரிவித்த கட்டளையாவது:
5 (உங்கள் நிலங்களில் விளைந்த) முதற் பலன்களை ஆண்டவருக்காக உங்களிடம் தனிப்பட வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொருவனும் வலிய நிறைமனத்துடன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவான். (அவை எவையென்றால்) பொன் வெள்ளி வெண்கலங்கள்,
6 நீலநிறம், கருஞ்சிவப்பு நிறம், இருமுறை சாயந் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல்,
7 வெள்ளாட்டு மயிர், சிவப்புச் சாயந் தோய்ந்த ஆட்டுக் கிடாய்த் தோல்கள், சேத்தீம் மரங்கள்,
8 விளக்குகளை ஏற்றுவதற்கு எண்ணெய், தைலம் கூட்டுவதற்கு எண்ணெய், மிக்க நறுமணமுள்ள வாசனைப் பொருட்கள்,
9 ( குருவின் ) எப்போத் என்னும் மேலாடையிலும் மார்ப் பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதக்கற்கள், இரத்தினம் முதலியன.
10 உங்களில் திறமையுள்ளவன் வந்து ஆண்டவர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்யக்கடவான்.
11 அவையாவன ( ஆசாரக் ) கூடாரம், அதன் மேற்கட்டு, மேல்மூடிகள், வளையங்கள், தண்டுகள், பலகைகள், தூண்கள், இவற்றின் பாதங்கள்,
12 பெட்டகம், தண்டுகள், அதன் இரக்கத்தின் அரியணை, அதன் முன் தொங்கும் திரை,
13 மேசை, அதன் தண்டுகள், பாத்திரங்கள், காணிக்கை அப்பங்கள்,
14 விளக்குகளைத் தாங்கும் விளக்குத் தண்டு, அதன் கருவிகள்,
15 வெளிச்சத்திற்கு எண்ணைய், வாசனைப் பொருட்களின் பீடம், அதன் தண்டுகள், அபிசேகத் தைலம், தூபப் பொருட்கள், கூடார வாயிலுக்குத் தொங்கு திரைகள்.
16 தகனப் பலிப்பீடம், அதன் வெண்கலச் சல்லடை, அதன் தண்டுகள், பணிமுட்டுக்கள் தொட்டி, அதன் பாதம்,
17 பிராகாரத்தில் இருக்கும் தொங்கு திரைகள், அவைகளின் தூண்கள், பாதங்கள், மண்டப வாயிலின் மூடுதிரை,
18 கூடாரத்திற்கும் மண்டபத்திற்கும் சம்பந்தப்பட்ட கயிறுகள்,
19 குருவாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்வதற்குரிய ஆடை அணிகள், பரிசுத்த இடத்து ஊழியத்தில் உபயோகப் படும் உடைகள் ஆகிய இவைகளேயாம் என்றார்.
20 அப்பொழுது இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரும் மோயீசனை விட்டுப் புறப்பட்டுப் போய்,
21 சாட்சியக் கூடாரத்தின் வேலையைச் செய்து முடிப்பதற்கும், அதன் திருவூழியத்திற்குத் தேவையான பரிசுத்த உடைகளைத் தயாரிப்பதற்கும் வேண்டிய காணிக்கைகளைப் பக்தியோடும் மனநிறைவோடும் ஆண்டவருக்குக் கொண்டு வந்தார்கள்.
22 மகளிர், ஆடவர் யாவரும் காப்பு, காதணி, மோதிரம், கைக்கடகம் முதலியவற்றை ஒப்புக்கொடுத்தனர். அவற்றிலிருந்த பொன் உடைமைகளையெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாய்ப் பாதுகாத்தனர்.
23 நீலநிறம் கருஞ்சிவப்புநிறம், இருமுறை சாயந் தோய்த்த இரத்தநிறம், கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல்கள், வெள்ளாட்டு உரோமம், சிவப்புச்சாயம் தேய்த்த ஆட்டுக் கிடாய்த் தோல்கள்,
24 வெள்ளி, வெண்கலம், பலவித வேலைக்கேற்ற சேத்தீம் மரம் முதலியவற்றை வைத்திருந்தவன் ஆண்டவருக்கு அவற்றை ஒப்புக் கொடுத்தான்.
25 அன்றியும், திறமை உடைய பெண்களும் தாங்களே நெய்திருந்த நீலம், கருஞ்சிவப்பு, இரத்தநிறம் கொண்ட திரைகள் மெல்லிய சணற்புடவைகள்,
26 வெள்ளாட்டு உரோமம் முதலியவற்றை மனநிறைவோடு கொண்டுவந்தனர்.
27 மக்கள் தலைவர்கள் மார்ப்பதக்கத்தில் பதிக்கவேண்டிய கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
28 பரிமள வகைகளையும், விளக்குகளுக்கும் தைலக்கூட்டுதலுக்கும் நறுமணவகைத் தூபத்துக்கும் எண்ணெயையும் தந்தனர்.
29 மகளிர் ஆடவர் எல்லாரும், ஆண்டவர் மோயீசன் மூலமாகக் கட்டளையிட்டிருந்த வேலைகள் நிறைவேறும் பொருட்டுப் பக்தியுள்ள மனத்தோடு அன்பளிப்புக்கள் கொண்டுவந்தனர். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மன உற்சாகத்துடன் காணிக்கைகளை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.
30 அப்போது மோயீசன் இஸ்ராயேல் மக்களை நோக்கி: இதோ ஆண்டவர் யூதா கோத்திரத்திலே கூறு என்பவனுடைய மகனான ஊரியின் மகன் பெசெலேயலை அவன் பெயர் சொல்லி அழைத்து,
31 அவனை இறை ஆவியினாலும் ஞானத்தினாலும் விவேகத்தினாலும், அறிவுக் கூர்மையினாலும், கல்வி, கலை முதலிய எல்லாவற்றினாலும் நிரப்பி,
32 பொன், வெள்ளி வெண்கல வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடிக்கவும்,
33 இரத்தினங்களை வெட்டிப் பதிக்கவும் தச்சுளியால் செய்யக் கூடுமான வியப்புக்குரிய வேலைகளைச் செய்யவும்,
34 அவனுக்கு வரம் தந்தருளினார். அன்றியும், தான் கோத்திரத்திலே அக்கிசமேக்கின் மகனான ஒலியாப் என்பவனையும் (ஆண்டவர் அழைத்திருந்தார்)
35 மரத்திலே சித்திர வேலைகளையும், புதுவகைத் திரைகளையும், நீலநிறம், கருஞ்சிவப்பு நிறம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல், மெல்லிய சணல் நூல் இவைகளைக் கொண்டு பலவகை நிறமுள்ள வியப்பூட்டும் பின்னல் வேலை, நெசவு வேலை, புதிதான வினோத வேலை முதலியன வெல்லாம் செய்து முடிப்பதற்கு இருவருக்கும் திறமையைத் தந்தருளினார் என்று சொன்னார்
அதிகாரம் 36
1 அப்பொழுது பரிசுத்த இடத்துத் திருப் பணிகளுக்கடுத்த தட்டுமுட்டுக்களையும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்த மற்ற யாவற்றையும் சிற்பக்கலை முறைப்படி செய்வதற்கு ஆண்டவர் எவரெவர்க்கு ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் தந்தருளியிருந்தாரோ அவர்கள் -- அதாவது, பெசெலேயல், ஒலியாப் முதலிய தொழில் நுணுக்கம் படைத்த அனைவரும் -- மேற்சொன்ன வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.
2 அவர்கள் இருவரையும், அவர்களோடு ஆண்டவரால் திறமையைப் பெற்றுக்கொண்டு வேலைகளைச் செய்துவரும்படி மன உற்சாகம் மேற்கொண்டிருந்த விவேகிகள் எல்லாரையும் மோயீசன் வரவழைத்து,
3 இஸ்ராயேல் மக்கள் கொடுத்திருந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம் கொடுத்தார். பின் அவர்கள் முழுமனத்தோடு வேலை செய்து வருகையில் மக்கள் காலை தோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
4 ஆகையினால், வேலைசெய்யும் அந்த மனிதர்கள் கட்டாயமாய்
5 மோயீசனிடம் வந்து: ஐயா, வேலைக்கு வேண்டியதை மட்டுமல்ல, அதற்கு அதிகமான பொருட்களையும் மக்கள் கொடுத்து வருகிறார்கள் என்றனர்.
6 அதை கேட்டு மோயீசன்: இனி ஆடவரோ மகளிரோ பரிசுத்த இடத்துத் திருப்பணிக்கு வேறொரு காணிக்கையும் செலுத்த வெண்டாம் என்று பாளையமெங்கும் கட்டியக்காரன் கூறும்படி கட்டளையிட்டார். மக்கள் கொடைகளைக் கொண்டு வருதல் இவ்விதமாய் நிறுத்தப்பட்டது.
7 உண்மையிலே ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்கள் செய்யவேண்டிய வேலைகளுக்கெல்லாம் போதுமானதாய் இருந்ததுமன்றி, அதிகமாயும் இருந்தன.
8 வேலை செய்யும் மனம் படைத்தோர் யாவரும் திருஉறைவிடத்தை அமைப்பதற்குத் திரித்த மெல்லிய சணல்நூலாலும், நீல நூலாலும், கருஞ்சிவப்பு நூலாலும், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிற நூலாலும், பல நிறமுள்ள வினோத நெசவுக் கலை முறைப்படி பத்து மூடுதிரைகளை அமைத்தனர்.
9 அவற்றில் ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாய் இருந்தது. எல்லா மூடுதிரைகளும் ஒரே அளவாய் இருந்தன.
10 பெசெலேயல் ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்துச் சேர்த்தான்.
11 மேலும், ஒரு மூடுதிரையின் இரு ஒரங்களிலும் இளநீலக் கயிறுகளால் வளையங்கள் அமைத்து, பின்பு அப்படியே மற்ற மூடுதிரையின் ஓரங்களிலும் செய்தான்.
12 அவ் வளையங்கள் ஒன்றோடொன்று நேர் நேராக அமைந்திருந்ததனால், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படத் தக்கனவாய் இருந்தன.
13 பின் ஐம்பது பொன்கொக்கிகளால் மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு கூடாரமாய்ச் சேரும்படி செய்தான்.
14 திருஉறைவிடத்தின் மேல்தட்டை மூடும்படி ஆட்டுமயிரால் நெசவுசெய்யப்பட்ட பதினொரு கம்பளிகளையும் அமைத்தான்.
15 ஒவ்வொரு கம்பளியும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் இருந்தது. எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாய் இருந்தன.
16 அவற்றில் ஐந்து கம்பளிகளை ஒன்றாகவும் மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாகவும் இணைத்தான்.
17 அவை ஒன்றோடொன்று சேரத்தக்கதாக, ஒரு கம்பளியின் ஒரத்திலே ஐம்பது காதுகளையும், மற்றக் கம்பளியின் ஒரத்திலே ஐம்பது காதுகளையும் அமைத்தான்.
18 அன்றியும், கூடாரத்தின் மேல்தட்டைக் கட்ட, எல்லாக் கம்பளிகளும் ஒரே கம்பளியாய் இருக்கத் தக்கதாக ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் செய்தான்.
19 மேலும், சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக் கிடாய்த் தோல்களால் கூடாரத்துக்கு இன்னொரு மூடியையும், அதன் மேல் வைக்கத்தக்க ஊதாத் தோல்களால் ஆன வேறொரு மூடியையும் செய்தான்.
20 கூடாரத்திற்கு நட்டமாய் நிற்கும் பலகைகளைச் சேத்தீம் மரத்தினால் செய்தான்.
21 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருந்தது.
22 ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு காடிகளும் இரண்டு கழுத்துக்களும் இருந்தன. அதனால் ஒரு பலகை மற்ற பலகையோடு சேரக்கூடும். உறைவிடத்தின் பலகைகளுக்கெல்லாம் அவ்வாறே அமைத்தான்.
23 அவற்றில் தென் திசையை நோக்கும் இருபது பலகைகளும்,
24 நாற்பது வெள்ளிப் பாதங்களும் இருந்தன. பக்கங்களின் காடி கழுத்துகள் சேரும் இடத்திலே மூலைகளின் இரு பக்கத்திலும் ஒவ்வொரு பலகைக்கும் கீழே இரண்டு பாதங்கள் வைக்கப்பட்டிருந்தன.
25 வடதிசையை நோக்கிய கூடாரப் பக்கத்துக்கு இருபது பலகைகள் இருந்தன.
26 ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு பாதங்கள் இருந்ததனால், நாற்பது வெள்ளிப் பாதங்களும் இருந்தன.
27 மேற்புறத்திலும் அதாவது, கடலை நோக்கிய கூடாரப் பக்கத்திற்கும் ஆறு பலகைகளைச் செய்தான்.
28 கூடாரத்தின் பின் புறத்து ஒவ்வொரு மூலைக்கும் வேறு இரண்டு பலகைகளையும் வைத்தான்.
29 அவை கீழிருந்து மேல்வரை இணைக்கப்படிருந்தமையால், ஒரே கட்டுக்கோப்பாய் இருக்கும். இரு பக்கத்து மூலைகளிலும் அவ்வாறே செய்தான்.
30 அப்படியே எட்டுப் பலகைகளும், ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருந்தன.
31 திரு உறைவிடத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளை உறுதிப்படுத்துவதற்காகச் சேத்தீம் மரத்தால் ஐந்து குறுக்குச் சட்டங்களையும்,
32 மறு பக்கத்துப் பலகைகளைச் சேர்ப்பதற்காக வேறு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், அவை தவிர, கடலை நோக்கிய கூடார மேற்குப் புறத்திற்கு இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் அவன் செய்தான்.
33 அன்றியும், பலகைகளின் மையத்தில் ஒரு முனை தொடங்கி மறுமுனை வரை பாயும்படி மற்றொரு குறுக்குச் சட்டத்தையும் செய்தான்.
34 அப்பலகைகளுக்குப் பொன் தகடு பொதிந்து அவற்றின் வெள்ளிப் பாதங்களையும் வார்த்து வைத்தான். குறுக்குச் சட்டம் எந்த வளையங்களில் ஊடுருவப் பாயுமோ அந்த வளையங்களையும் பொன் தகட்டால் மூடினான்.
35 நீல நிறம், கருஞ்சிவப்பு நிறம், இரத்த நிறம் கொண்ட நூல்கள், திரித்த மெல்லிய சணல் நூல்கள் இவற்றால் நெசவு செய்து, அழகான பின்னல் வேலைகளோடும் பற்பல நிறங்களோடும் சிறந்த ஒரு திரையை அமைத்தான்.
36 சேத்தீம் மரத்தால் நான்கு தூண்களைச் ( செய்து ), அவற்றையும் அவற்றின் போதிகைகளையும் பொன் தகட்டால் மூடினான். அவற்றின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாலானதாம்.
37 கூடார வாயிலுக்காக நீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய மெல்லிய சணல்நூல் இவற்றால் நெசவு செய்து விசித்திரப் பின்னல் வேலையுடைய ஒரு தொங்கு திரையையும்,
38 பொன்தகட்டால் மூடிய ஐந்து தூண்களையும், அவற்றின் போதிகைகளையும் செய்தான். அவற்றின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாய் இருந்தன.
அதிகாரம் 37
1 மீண்டும் பெசெலேயல் சேத்தீம் மரத்தால் பெட்டகத்தையும் செய்தான். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாம்.
2 அதனை உள்ளும் புறமும் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் அதற்குத் தங்கத்திறணையை அமைத்து,
3 அதன் நான்கு மூலைகளுக்கும் நான்கு பொன் வளையங்களை வார்த்து, பக்கத்திற்கு இரண்டாக அவற்றை இருபக்கங்களிலும் பொருத்தி,
4 சேத்தீம் மரத்தினால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,
5 பெட்டகத்தைத் தூக்கிக்கொண்டு செல்வதற்காக அதன் பக்கங்களிலுள்ள வளையங்களில் அவைகளை நுழைத்தான்.
6 மூலத்தானம் எனப்படும் இரக்கத்தின் அரியணையையும் பசும் பொன்னால் செய்தான். அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருந்தது.
7 தங்கத் தகட்டினால் இரண்டு கொரூபிம்களையும் செய்து, இரக்கத்தின் அரியணைக்கு இரு புறத்திலும் வைத்தான்.
8 இரக்கத்தின் அரியணையினுடைய இரு பக்கத்து ஓரங்களிலும் வைக்கப்பட்ட
9 அக்கெரூபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையை நிழலிட்டவைகளாய், ஒன்றுக் கொன்று எதிர்முகமுள்ளவைகளாய், அதை நோக்கிக்கொண்டிருந்தன.
10 அவன் மேசையையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருந்தது.
11 அதைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பு அமைத்து,
12 அதைச் சுற்றிலும் நான்கு விரற்கிடையான ஒரு திரணையையும் அதன்மேல் வேறொரு திரணையையும் அமைத்தான்.
13 நான்கு பொன் வளையங்களையும் வார்த்து, அவற்றை மேசையின் நான்கு காலுக்கிருக்கும் நான்கு மூலைகளிலும்,
14 திரணைக்கருகில் பொருத்தி மேசையைத் தூக்கும்படி தண்டுகளை அவற்றில் நுழைத்தான்.
15 இந்தத் தண்டுகளையும் சேத்தீம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடி,
16 மேசையில் பற்பல விதமாய் உபயோகப்படும் பணிமுட்டுக்களையும் தட்டுக்களையும் குப்பிகளையும் தூபக் கலசங்களையும், பான பலிப் பாத்திரங்களையும் பசும்பொன்னால் செய்தான்.
17 அவன் பசும் பொன்னைத் தகடாக்கிக் குத்துவிளக்கையும் செய்தான். அதன் தண்டினின்று கிளைகளும், மொக்குகளும், குமிழ்களும், லீலிமலர்களும், புறப்பட்டிருந்தன.
18 அதாவது; பக்கத்திற்கு மூன்றாக இருபக்கமும் ஆறு கிளைகள் இருந்தன.
19 ஒரு கிளையில் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தன. மறுகிளையிலும் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தமையால், குத்துவிளக்குத் தண்டினின்று புறப்பட்ட ஆறு கிளைகளிலும் ஒரேவித வேலைப்பாடு அமைந்திருந்தது.
20 விளக்குத் தண்டில் வாதுமைக் கொட்டைபோன்ற நான்கு மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தன.
21 இரண்டு கிளைகளின் கீழே மூன்று இடங்களில் குமிழ்கள் இருந்தன. ஆகையால், ஒரே தண்டினின்று ஆறு கிளைகளும் புறப்பட்டன.
22 குமிழ்கள் கிளைகள் எல்லாம் பசும் பொன்னால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டிருந்தன.
23 மேலும், பசும் பொன்னால் ஏழு அகல்களையும், கரிந்ததிரியை வெட்டக் கத்திரிகளையும், எரிந்த திரியை வைக்கத் தட்டுக்களையும் செய்தான்.
24 குத்துவிளக்கும், அதன் எல்லாக் கருவிகளும், தட்டுமுட்டுக்களும் ஒரு தாலந்து நிறையுள்ள பொன்னால் ஆனவை.
25 பரிமள வகைகளின் பீடத்தையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது நீளத்திலும் அகலத்திலும் ஒரு முழச் சதுரமாகவும், இரண்டு முழ உயரமுள்ளதாகவும் இருந்தது. அதன் மூலைகளிலே நான்கு கொம்புகள் புறப்பட்டன. அவன் அதையும், அதன் சல்லடையையும், அதன் சுற்றுப் புறங்களையும்,
26 அதன் கொம்புகளையும் பசும் பொன்னால் செய்து,
27 அதைச் சுற்றிலும் பொன்னாலான திரணையை அமைத்து, திரணைக்குக் கீழுள்ள பக்கங்களிலே பீடத்தைத் தூக்கிச்செல்லப் பயன்படும் தண்டுகளை நுழைக்கும்படியான இரண்டு பொன் வளையங்களையும் அமைத்தான்.
28 அத்தண்டுகளையும் சேத்தீம் மரத்தாற் செய்து, அவைகளைப் பொன் தகட்டினாலே மூடினான்.
29 அபிசேகத் தைலத்துக்கு எண்ணெயையும், மிகப் பரிசுத்த நறுமணப்பொருள்களைக் கூட்டிப் பரிமளத்தையும் தைலக்காரர் செய்முறைப்படி செய்து அமைத்தான்.
அதிகாரம் 38
1 அவன் தகனப் பலிப்பீடத்தையும் சேத்தீன் மரத்தினாலே செய்தான். அது நீளத்திலும் அகலத்திலும் ஐந்து முழச் சதுரமாகவும், உயரத்திலே மூன்று முழமாகவும் இருந்தது.
2 அதன் மூலைகளிலே கொம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதையும் வெண்கலத்தகடுகளால் மூடி,
3 அதன் உபயோகத்திற்கு வேண்டிய பற்பல பணிமுட்டுக்களாகிய சாம்பற் சட்டிகளையும் குறடுகளையும் சூலங்களையும் துறட்டிகளையும், நெருப்புச் சட்டிகளையும் வெண்கலத்தால் செய்தான்.
4 அதற்கு வலைப் பின்னலைப் போன்ற வெண்கலச் சல்லடையையும், அதன்கீழே பீடத்தின் நடுவில் அடுப்பையும் அமைத்து,
5 அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் பலிப்பீடத்தைத் தூக்க உதவும் தண்டுகளை நுழைப்பதற்கான நான்கு வளையங்களையும் அமைத்தான்.
6 இந்நான்கு தண்டுகளையும்கூடச் சேத்தீம் மரத்தினால் செய்து வெண்கலத் தகடுகளால் மூடி,
7 பீடத்தின் பக்கங்களின் மேலுள்ள வளையங்களில் அந்தத் தண்டுகளை நுழைத்தான். அந்தப் பலிப்பீடமோ கெட்டிமரம் அன்று; உள்ளே கூடாகக் குடைந்த பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.
8 ஆசாரக் கூடாரத்து வாயிலிலே காத்துக் கொண்டிருந்த பெண்களின் முகக்கண்ணாடிகளைக் கொண்டு வெண்கலத் தொட்டியையும் அதன் பாதத்தையும் செய்து அதன் பின் பிராகாரத்தையும் அமைத்தான்.
9 அதன் தென்திசைக்கு எதிரே, திரித்த மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட நூறு முழ அகலமான தொங்கு திரைகளை அமைத்திருந்தான்.
10 அவற்றின் தூண்கள் இருபதும், இவற்றின் பாதங்கள் இருபதும் வெண்கலத்தால் செய்யப்பட்டவை. தூண்களின் போதிகைகளும், இவற்றின் பூண்களும் வெள்ளியாலானவை.
11 தென்புறத்தில் இருந்தது போன்று வடப்புறத்திலும் செய்யப்பட்டிருந்தது. தொங்கு திரைகள், தூண்கள், இவற்றின் பாதங்கள் போதிகை முதலியன ஒரே விதமான அளவும் வேலைப்பாடும் மூலப்பொருளுமாய் இருந்தன.
12 மேற்புறத்திலோ தொங்கு திரைகள் ஐம்பது முழம். அவற்றின் தூண்களும் பாதங்களும் வெண்கலத்தாலானவை. பத்துத் தூண்களின் போதிகைகளும் பூண்களும் வெள்ளியாலானவை.
13 கீழ்த்திசையிலோ ஐம்பது முழமுள்ள தொங்குதிரைகள் இருந்தன.
14 இந்த ஐம்பது முழமுள்ள தொங்குதிரையிலே, மூன்று தூண்களையும் அவற்றின் மூன்று பாதங்களையும் கொண்டிருந்த ஒரு புறத்தே, பதினைந்து முழம் வாயிலாய் உபயோகித்துக்கொள்ளப்படும்.
15 மறுபுறத்தே (ஏனென்றால், பிராகாரவாயில் அதற்கும் இதற்கும் நடுவே இருந்தது) மூன்று தூண்களும் அவற்றின் முன்று பாதங்களும் கொண்டிருந்த இடத்திலே, வேறு பதினைந்து முழம் ( அவ்வாறான ) உபயோகத்தில் இருந்தன.
16 பிராகாரத்திலிருந்த தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்டிருந்தன.
17 தூண்களின் பாதங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் போதிகைகளும் பூண்களும் வெள்ளியாலானவை. பிராகாரத்திலுள்ள தூண்களை வெள்ளியாலே மூடினான்.
18 அதன் வாயிலிலே இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்தநிறம் கொண்ட நூலாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் நெய்யப்பட்ட தொங்கு திரையை விசித்திரப் பின்னல் வேலையாய்ச் செய்து அமைத்தான். பிராகாரத்தின் எல்லாத் தொங்கு திரைகளையும் போல், அதுவும் இருபது முழம் நீளமுள்ளதாய் இருந்தது. ஆனால், உயரம் ஐந்து முழமே.
19 அவற்றின் தூண்கள் நான்கும், இவற்றின் பாதங்கள் நான்கும் வெண்கலத்தாலும், அவற்றில் போதிகைகளும் போதிகைகளின் பூண்களும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன.
20 திருவுறைவிடத்திற்கும் பிராகாரத்திற்கும் சுற்றிலுமிருந்த முனைகளெல்லாம் வெண்கலத்தாலானவை.
21 மோயீசன் கட்டளைப்படி. குருவாகிய ஆரோனின் புதல்வன் இத்தாமார், லேலியர்களின் பணிவிடைக்கென்று எண்ணி எழுதிய சாட்சியக் கூடாரத்துப் பொருட்களின் தொகை இதுவேயாம்.
22 மோயீசன்மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்த அவற்றை யூதாவின் கோத்திரத்துக் கூறு என்பவளின் மகனான ஊரியின் மகன் பெசேலேயலே செய்தான்.
23 அவனோடு கூட வேலை செய்தவன் தான் கோத்திரத்து அக்கிசாமேக்கின் மகனான ஒகொலியாப். இவன் மரவேலைகளில் மிகவும் கைதேர்ந்தவனாய் இருந்ததுமன்றி, பற்பல வண்ணச்சீலை நெய்யும் வேலையிலும் இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் வினோதப் பின்னல் வேலைகளிலும் மிக்க திறமையுள்ளவன்.
24 ஆலயத்தின் வேலைகளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டுச் செலவான பொன் எல்லாம் ஆலயத்து நிறைப்படி இருபத்தொன்பது தாலந்து, எழுநூற்று முப்பது சீக்கல் எடையாய் இருந்தது.
25 அந்தப் பொன் கொடுத்தவர்கள் யாரென்றால், இருபது வயதும் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்றைம்பது பேர்களாவர். இவர்களே (இஸ்ராயேல் சபையின் ) மக்கட் தொகைக் கணக்கில் உள்ளவர்கள்.
26 அன்றியும், நூறு தாலந்து எடை வெள்ளியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அந்த வெள்ளியாலேயே பரிசுத்த இடத்துத் தூண்களின் பாதங்களும், வாயிலிலுள்ள தொங்கு திரைத்தூண்களின் பாதங்களும் செய்யப்பட்டன.
27 ஒவ்வொரு பாதத்திற்கு ஒரு தாலந்தாக நூறு பாதங்களுக்கு நூறு தாலந்துகள் செலவாயின.
28 ஆயிரத்தெழுநூற்றெழுபத்தைந்து ( சீக்கல் வெள்ளியிலே ) தூண்களின் போதிகைகள் செய்யப்பட்டதுமன்றி, அத்தூண்கள் வெள்ளித் தகட்டால் மூடவும்பட்டன.
29 மேலும் வெண்கலத்திலே எழுபத்தீராயிரம் தாலந்தும் நானூறு சீக்கலும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
30 அதைக் கொண்டு சாட்சியக்கூடார வாயிலிலுள்ள தூண்களின் பாதங்களும், வெண்கலப் பலிப்பீடத்தில் உபயோகிக்கப்படும் எல்லாப் பாத்திரங்களும், பிராகாரத்திற்குச் சுற்றிலும் அதன் வாயிலிலும் இருந்த தூண்களின் பாதங்களும்,
31 திருவுறைவிடக் கூடாரத்து முளைகளும், பிராகாரத்துச் சுற்றிலுமுள்ள முளைகளும் செய்யப்பட்டன.
அதிகாரம் 39
1 மேலும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியே பெசெலேயல், திருப்பணி செய்யும் போது ஆரோன் அணியவேண்டிய ஆடைகளை இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்தநிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் நெய்தான்.
2 முதலில் ஏப்போத்தைப் பொன் நூல், இளநீலம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல் முதலியவற்றால்
3 பல வண்ண நெசவு வேலையாய்ச் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால், பொன்னை மெல்லிய தகடாய் அடித்து அதனைச் சரிகையாக்கி; மேற்கூறின பலவண்ணச் சீலையின் நூலோடு சேர்த்து முறுக்கினான்.
4 இரண்டு தோள்களின் மேலும் உள்ள ஏப்போத்தின் முனைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன.
5 கச்சையையும் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி பல வண்ணமுடையதாய்ச் (செய்தான்).
6 மேலும், மணி வெட்டும் தலைமுறைப்படி இரண்டு கோமேதகக் கற்களை வெட்டி, அவற்றைப் பொன் குவளைகளில் கெட்டியாய்ப் பதிய வைத்து, அவைகளின் மேல் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களைப் பொறித்தான்.
7 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அவைகளை இஸ்ராயேல் புதல்வர்களின் நினைவுச் சின்னமாக ஏப்போத் ( என்னும் மேலாடையின் ) புறங்களிலே வைத்தான்.
8 மேலும், மார்ப்பதக்கத்தை ( மேலாடையாகிய ) ஏப்போத்தின் வேலைப்பாட்டிற்கு ஒப்பாக விசித்திர வேலையாய்ச் செய்து, பொற்சரிகை, இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம்தோய்த்த இரத்த நிற நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் வினோதமாய்ச் செய்தான்.
9 அதைச் சதுரமும் இரட்டையுமாய் ஒரு சாண் அளவாய் இருக்கும்படி செய்தான்.
10 அதனில் இரத்தினங்களை நான்கு வரிசையில் பதித்தான். முதல் வரிசையில் பதுமராகமும், புஷ்பராகமும், மரகதமும்,
11 இரண்டாம் வரிசையில் மாணிக்கமும்,
12 நீலமணியும், வைரமும், மூன்றாம் வரிசையில் கெம்பும், வைடூரியமும், செவ்வந்திக் கல்லும்,
13 நான்காம் வரிசையில் சமுத்திர வண்ணக்கல்லும் கோமேதகமும், படிகப் பச்சைக் கல்லும் ஆகியவற்றைத் தம் வரிசைகளின்படி பொற்குவளைகளிலே பதித்து வைத்தான்.
14 அந்தப் பன்னிரண்டு கற்களிலும் இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களை வெட்டினான். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் எழுதியிருக்கும்.
15 மார்ப்பதக்கத்தில் ஒன்றோடொன்று சேரும் சிறு சங்கிலிகளையும் அவர்கள் பசும் பொன்னால் செய்தார்கள்.
16 அதன் பின் இரண்டு கொக்கிகளையும் இரண்டு வளையங்களையும் பொன்னால் அமைத்தார்கள். மேற்சொன்ன வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரு பக்கத்திலும் பொருத்தினார்கள்.
17 இவைகளினின்று இரண்டு பொற்சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தச் சங்கிலிகளை ஏப்போத்தின் முனையிலுள்ள வளையங்களிலே மாட்டினார்கள்.
18 அவை சரியாகப் பொருந்தும்படி செய்தால் ஏப்போத்தும் மார்ப்பதக்கமும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
19 அவ்விரண்டும் ஏப்போத்திற்கு எதிராக இறுகியவைகளுமாய் தளராதபடி நீல நாடா பொருத்திய வளையங்களால் பலமாய்ச் சேர்க்கப்பட்டவைகளுமாய் இருந்தன. அதனால், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி, அவ்விரண்டும் ஒன்றை ஒன்று அகலவே கூடாது.
20 அன்றியும், ஏப்போத்துக்கடுத்த அங்கியை முழுவதும் இளநீல நூலால் செய்து,
21 அதன் மேற்பக்கத்து மையத்திலே தலையை நுழைப்பதற்கு ஏற்ற ஒரு துவாரத்தை அமைத்து, அதன் ஓரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவைத் தைத்தனர்.
22 அங்கியின் கீழ் ஒரத்திலே இளநீலம், கருஞ்சிவப்பு இரத்த நிறம் கொண்ட நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் செய்த மாதுளம் பழங்களைச் சித்திரப் பின்னல் வேலையாய்ச் செய்து,
23 பசும் பொன்னாலான மணிகளையும் மாதுளம் பழங்களையும் இடையிடையே வைத்து அங்கியின் கீழ் ஒரத்தைச் சுற்றிலும் அலங்கரித்தார்கள்.
24 ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம் பழமுமாக ( வைத்தார்கள் ). ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்த படியே, கடவுளுக்கு ஆராதனை செலுத்தப் போகும் போது பெரிய குரு மேற்சொன்ன அங்கியை அணிந்து கொள்ளக்கடவார்.
25 அவர்கள் ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நெடுஞ்சட்டைகளையும் மெல்லிய சணல் நூலால் செய்ததும் தவிர,
26 சிறிய முடிகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகளையும் மெல்லிய சணல் நூலாலே அமைத்து,
27 மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட சல்லடைகளையும் அமைத்து,
28 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, திரித்த மெல்லிய சணல் நூலாலும், இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிற நூல்களாலும் வினோதப் பின்னல் வேலையாய் இடைக் கச்சையையும் அமைத்தார்கள்.
29 மிகவும் பரிசுத்தமாகிய நெற்றிப் பட்டத்தைத் தூய பொன்னால் செய்து ஆண்டவருக்காக அர்ப்பணித்து ஒதுக்கப்பட்டவர் என்னும் வார்த்தைகளை அதிலே பொறித்தார்கள்.
30 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே அதனை அலங்காரத் தலைப்பாகையோடு இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
31 இவ்வாறு உடன்படிக்கைக் கூடாரத்தின் வேலையையும் அதன் மேற்கட்டு வேலையையும் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் செய்து முடித்தனர்.
32 அவர்களே திருவுறைவிடத்தையும், அதன் மேற்கட்டையும், எல்லாப் பணிமுட்டுக்களையும் வளையங்களையும் பலகைகளையும் தண்டுகளையும் தூண்களையும் அதன் பாதங்களையும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
33 சிவப்புத் தோய்த்த ஆட்டுத் தோல்களை மேல் மூடியாகவும், ஊதா தோய்த்த தோல்களை அதற்கு மூடியாகவும் ஒப்புக்கொடுத்தார்கள்.
34 திரையையும் திருப்பெட்டகத்தையும் இரக்கத்தின் அரியணையையும்
35 மேசையையும், மேசைக்கடுத்த பாத்திரங்களையும், காணிக்கை அப்பங்களையும்,
36 குத்துவிளக்கையும், அதன் அகல்களையும், அவற்றின் கருவிகளையும் எண்ணெயையும்
37 பொற்பீடத்தையும், ( அபிசேகத் ) தைலத்தையும், நறுமணத் தூபவகைகளையும் கூடார வாயிலின் தொங்கு திரையையும்,
38 வெண்கலப் பீடத்தையும்,
39 அதன் சல்லடையையும் தண்டுகளையும் எல்லாத் தட்டுமுட்டுக்களையும் தொட்டியையும் அதன் பாதத்தையும், பிராகாரத்துத் தொங்கு திரையையும், தூண்களையும்,
40 அவற்றின் பாதங்களையும், மண்டப வாயிலின் தொங்கு திரையையும் அதன் கயிறுகளையும் முளைகளையும் கொடுத்தார்கள். ஆசாரக்கூடாரத்துப் பணிவிடைக்கும், சாட்சியக் கூடாரத்து ஆராதனை வழிபாட்டிற்கும் ஆண்டவர் கட்டளையிட்டவைகளிலெல்லாம் ( ஒன்றும் ) குறையவில்லை.
41 மேலும் பரிசுத்த இடத்தில் குருவாகிய ஆரோனும் அவர் புதல்வர்களும் அணிந்துகொள்ள வேண்டிய திருவுடைகளையும்,
42 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இஸ்ராயேல் மக்கள் கொண்டுவந்து ஒப்புக்கொடுத்தார்கள்.
43 மோயீசன் அவையெல்லாம் நிறைவேறின என்று கண்டு, அவைகளை ஆசீர்வதித்தார்.
அதிகாரம் 40
1 பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ முதல் மாதத்தின் முதல் நாளன்று உடன்படிக்கைக் கூடாரத்தை நிறுவனம் செய்து,
3 அதில் பெட்டகத்தை வைத்து அதைத் திரையினால் மறைத்து,
4 மேசையையும் கொண்டு வந்து அதன் மீது கட்டளையிடப்பட்டவற்றை முறைப்படி வைத்து, குத்துவிளக்கையும் அதன் அகல்களையும் ஏற்றி,
5 பொன் தூபப் பீடத்தைச் சாட்சியப் பெட்டகத்திற்கு முன் நிறுத்திவைப்பாய். கூடார வாயிலிலே திரையையும் தொங்க விடுவாய்.
6 பின், இதற்கு முன்பாகத் தகனப் பலிப்பீடத்தை நிறுவி,
7 பீடத்துக்கும் கூடாரத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, அதில் நிறையத் தண்ணீர் வார்ப்பாய்.
8 மேலும், பிராகாரத்துக்கும் அதன் வாயிலுக்கும் முன் தொங்கு திரைகளைச் சுற்றிலும் அமைப்பாய்.
9 பின் அபிசேகத் தைலத்தை எடுத்துப் பூசிக் கூடாரத்தையும் அதன் பாத்திரங்களையும் பரிசுத்தப்படுத்துவாய்.
10 தகனப் பலிப் பீடத்தையும் அதன் எல்லாப் பாத்திரங்களையும்,
11 தொட்டியையும் அதன் பாதத்தையும், அவைகளெல்லாம் மிகவும் பரிசுத்தமான பொருட்களாகும்படி அபிசேகத் தைலத்தால் பூசுவாய்.
12 அதன்பின் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் உடன்படிக்கைக் கூடார வாயிலுக்கு அழைத்து அவர்களைத் தண்ணீரிலே குளிப்பாட்டி
13 அவர்கள் நமக்கு ஊழியம் செய்யும் படிக்கும், அவர்களின் ( அபிசேகப் ) பூசுதல் நித்திய குருத்துவத்திற்குச் செல்லும்படிக்கும், அவர்களுக்குத் திருவுடைகளை அணிவிப்பாய் என்றருளினார்.
14 ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் மோயீசன் செய்தார்.
15 ஆகையால், இரண்டாம் ஆண்டின் முதல் மாதம் முதல் நாளன்று ஆசாரக் கூடாரம் நிறுவனம் செய்தாயிற்று.
16 மோயீசனே அதை நிறுவினார். பலகைகளையும் பாதங்களையும் தண்டுகளையும் வைத்துத் தூண்களையும் நிறுத்தி,
17 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி கூடாரத்தின் மீது திரையையும் விரித்து, அதன் மேலே மூடியையும் பரப்பினார்.
18 சாட்சியப் ( பலகைகளைப் ) பெட்டகத்தினுள் வைத்து, அதன் கீழே தண்டுகளையும், அதன் மேலே இரக்கத்தின் அரியணையையும் அமைத்தார்.
19 பெட்டகத்தைக் கூடாரத்தினுள்ளே கொண்டுவந்த பின், ஆண்டவருடைய கட்டளையை நிறைவேற்றும்படி, அதன்முன் திரையைக் கட்டித் தொங்கவிட்டார்.
20 சாட்சியக் கூடாரத்திற்கு வடப்புறத்தில் திரைக்கு வெளியே மேசையை வைத்து,
21 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, காணிக்கை அப்பங்களையும் ( அவர் முன்னிலையில் ) ஒழுங்காய் வைத்தார்.
22 உடன்படிக்கைக் கூடாரத்திலே தென்புறமாக மேசைக்கு எதிரே குத்துவிளக்கையும் வைத்து,
23 ஆண்டவருடைய கட்டளைப்படி அகல்களையும் வரிசைப்படி அமைத்து ஏற்றினார்.
24 உடன்படிக்கைக் கூடாரத்தினுள் திரைக்கு எதிராகத் தங்கப் பீடத்தையும் நிறுவி,
25 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே அதன் மீது நறுமணத் தூபத்தையும் காட்டினார்.
26 சாட்சியக் கூடாரத்தின் வாயிலிலே தொங்கு திரையைத் தூக்கி வைத்தார்.
27 அன்றியும், ஆண்டவர் கட்டளையிட்டபடி, சாட்சிய மண்டபத்திலே தகனப் பலிப்பீடத்தை நிறுவி, அதன்மேல் தகனப் பலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தினார்.
28 பின் சாட்சியக் கூடாரத்துக்கும் ( அந்தப் பீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, அதிலே நிறையத் தண்ணீர் வார்த்தார்.
29 அவ்விடத்திலே மோயீசனும், ஆரோனும் அவன் புதல்வர்களும் கைகால்களைக் கழுவுவார்கள்.
30 அவர்கள் கூடாரத்துக்குள்ளே புகும்போதும், பலிப்பீடத்தண்டை வரும் போதும், ( அவ்வாறே, கழுவிக் கொள்ள வேண்டுமென்று ) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
31 பின் ( மோயீசன் ) உடன்படிக்கைக் கூடாரத்தையும் பீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, அதன் வாயிலிலே தொங்கு திரையைத் தொங்க விட்டார்.
32 இவையெல்லாம் முடிந்த போது ஒரு மேகம் சாட்சியக் கூடாரத்தை மூடினதுமன்றி, ஆண்டவருடைய மாட்சியும் அதனை நிரப்பிற்று.
33 மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஆண்டவருடைய மாட்சி மின்னி எரிந்ததினாலே, மோயீசன், உடன்படிக்கைக் கூடாரத்திற்குள்ளே நுழைய இயலாதிருந்தார். ஏனென்றால், அம்மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்தது.
34 திருவுறைவிடத்திலிருந்து மேகம் எழும்பும்போது இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போவார்கள்.
35 மேகம் எழும்பாமல் மேலே தங்கியிருக்கும் போதோ, அவர்கள் பயணம் செய்யாமல் அவ்விடத்திலேயே இருப்பார்கள்.
36 ஏனென்றால், இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் தங்கள் இல்லிடங்களிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, பகலிலே ஆண்டவருடைய மேகமும் இரவிலே நெருப்புச் சுடரும் உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தன.